மதன மாளிகையில் 13

“ஒரு முடிவுக்கு வந்துட்டியா?” என்றவனை தலை நிமிர்த்திப் பார்த்தாள். கண்களின் அலைப்புறுதல் அவளின் அகத்தை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டியது அவனுக்கு. 

“ஒரு முடிவுக்கு வந்துட்டா,‌ வாய்ல இருந்து அந்த விரலை எடுத்துறேன். ப்ளீஸ்! ஒரு கைல ஐஞ்சு விரல்தான்.” இப்பொழுது அவள் வாயில் அகப்பட்டிருந்தது கடைசியாக சுண்டுவிரல். 

கண்களைச் சுருக்கி சிரிக்காமல் கெஞ்சும் பாவனையில் சொல்ல, பட்டென கையை இறக்கிக் கொண்டாள். அவள் மண்டைக்குள் எது தீவிரமாகப் பிராண்டுகிறது என அவள் நகம் கடிக்கும் வேகத்தை வைத்தே கண்டுகொண்டான். இருவரின் தனிமை அவளைப் பயமுறுத்துகிறது. 

திடுமென படிப்பை நிறுத்தி, திடுதிப்பென திருமணமும் நடத்தி, அதுவும் காதல், திருட்டுக் கல்யாணம் என பழி சுமத்தி, இதோ தாலிகட்டிய ஒரே உரிமையில் அவளுடன், அவள் அறையில், ஒரு ஆண் என்பதை அவள் ‌நிலையில் இருந்து நினைக்கையில் அவனாலேயே அதை ஜீரணிக்க முடியவில்லை. அவளது மனநிலை எப்படியிருக்கும். திருமணம் என்றவுடன்… வாழ்நாள் முழுவதும் தன்னோடு கரம் கோர்ப்பவனைப் பற்றிய எதிர்பார்ப்பு மனதளவில் தோன்ற வேண்டாமா? திருமணத்தின் மீதும், திருமண‌பந்தத்தின் மீதும் ஆசை எழவேண்டும். அப்பொழுதுதானே உள்ளம் பூரிக்க, உடல் நாண, மங்கையவள் மண் பார்க்க, மன்னவன் பெண் பார்க்க எத்தனை அழகாய் பூ மலர்தல் போல, ஒரு கவிதையின் அரங்கேற்றம் போல அரங்கேற வேண்டிய சம்பவம், ஒருவரின் அவசரப்புத்தி, ஆண் எனும் அதிகாரத்துவத்தால் அள்ளித் தெளித்த அலங்கோலமாகிவிட்டது. அதை குழந்தை கலைத்த வண்ணக்கோலமாக மாற்ற வேண்டிய நிலையில் இருப்பது புரிந்தது அவனுக்கும். 

அவன் நிழல் உணர்ந்து 

நிஜம்‌ உணர்வதற்குள்

தாலி சிறை

முதலிரவு தண்டனை…

என்றோ, எங்கோ படித்த கவிதை நினைவிற்கு வந்தது. 

எதுவாக இருந்தாலும் அவளே ஒரு முடிவுக்கு வரட்டும் என இவ்வளவு நேரமாக அவளைத்தான் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். 

புதுப் பெண்ணிற்கான எந்த ஒரு‌ உணர்வுகளையும் அவள்‌‌ முகத்தில் இதுவரை அவன் படித்ததில்லை. அதிகமாக அவள்‌ முகத்தில் அவன்‌ படித்தது வெறுமை, மற்றும் கோபம் மட்டுமே.‌ அம்மா வீடு வந்தபிறகுதான் சற்றே சகஜமாகப் பேசுகிறாள். அதுவும் அவன் மதியம் அவள் அத்தை, மாமா முன் பெயர் கூடத் தெரியாமல் அசடு வழிந்ததால் வந்த கரிசணையில். 

இரவு உடையான பைஜாமாவில் தான் இருந்தாள். ஆனால், எப்பொழுதும் கல்யாணத்திற்கு முன்பெல்லாம் அள்ளி முடிந்து கிளிப்பில் அடங்கியிருக்கும் கூந்தல், இன்று  சடைப்பின்னி சாதிமல்லிச்சரம் தோள் வழிந்தது பூங்கோதை கட்டாயத்தில். பிறைநுதலில் சிறிய மெரூன் கலர் ஸ்டிக்கர். அதற்கு மேல் மெலிதாக விபூதிக்கீற்று. வகிட்டில் குங்குமம். அதுவும் பூங்கோதை கட்டாயத்தில். காதில் ஊஞ்சலாடும் முத்துக்குடை ஜிமிக்கி. ஜிமிக்கியை சீண்டிப் பார்த்து இவனை வெறுப்பேற்றும் கன்னத்தோரம் மின்னும் பூனை‌முடி. செதுக்கிய கூர் நாசியில், நட்சத்திர மின்னலாய் ஒற்றைக்கல் மூக்குத்தி. கழுத்தில் தடித்த புது மஞ்சள் கயிறு. இவள் உன்னவள் ‌என உரிமைப் பத்திரம் வாசித்தது. பற்களின் நுனியில் அவள் நகம் கடிக்கும் நாசுக்கில் மூச்சுக் காற்றுத் தடுமாற, பார்வை கழுத்திலிருந்து கீழிறங்க, தடுமாறிய மூச்சுத் தடம்‌ மாறியது. தன் பார்வை எல்லை மீறுவதை உணர்ந்தவன், சட்டென பார்வையை கீழிறக்கினான். புதுமணப் பெண்ணிற்குரிய அடையாளமாக, கை நிறைய கண்ணாடி வளையல்களுடன், இன்னும் பொலிவு மங்காத கல்யாண மெஹந்தி முழங்கை வரை. ஒரு கை வாயில் என்றால், மறுகரம் பூச்சரத்தை விரலில் சுழற்றிக் கொண்டிருந்தது. காதிற்கும் தாடைக்கும் இடையில் குட்டியாய் கருப்பு மச்சம். மச்சம் நம்பர் ட்டூ… எண்ணிக்கொண்டவனுக்கு, முதல் மச்சம்‌ பார்த்தது நினைவிற்கு வர, மூச்சுக் காற்றில் தட்பவெப்பநிலை மாற்றம். 

பலத்த யோசனையில் இருந்தவளுக்கும், கழுத்தோரம் புருபுருக்க, முகத்தை நிமிர்த்தாமல், ஓரக்கண்ணால் அவனைப் பார்த்தாள். அவனது பார்வையோ நேர்கொண்ட பார்வையாக அவள்‌ மீதுதான். கைவிரல் கோர்த்து அமரந்தவாக்கில், புன்னகை மாறாமல் அவளையே பார்க்க, சாதாரண பார்வைதான்‌. அதற்கே அடிவயிற்றில் பயம் கப்பென அப்பிக் கொண்டது. முகம் சிவப்பதற்கு பதிலாக பயத்தில் வெளுத்துவிட்டது. 

அவள் முகம் காட்டிய பாவனைகளில், அடிப்பெண்ணே… பொன்னூஞ்சல் ஆடும் இளமை எனும் பாடும் வேளையில், அய்யோ பொண்ணே… எனத்தான் பாடத் தோன்றியது அவனுக்கும். 

அறையில் ஏசியின் மெல்லிய ரீங்காரம்‌ மட்டுமே. அதையும் விஞ்சி முரசு கொட்டியது அவளது இதய மத்தளம். மேஜை மீது சாய்ந்து நின்றவள், படபடப்பை மறைக்க இன்னும் கொஞ்சம் சுவற்றோடு‌ ஒன்றினாள். ஏசியின் சில்லிப்பையும் விஞ்சி மேலுதட்டில் அரும்பு கட்டிய வியர்வை முத்துக்கள்.   

இதுவரை சகஜமாக பேசும் பொழுது இல்லாத பயமும், பதட்டமும், இருவரின் அமைதியில் வந்து தொலைத்தது. அந்த நிசப்தமே அவளை நிலைகுலையச் செய்வது‌ புரிந்தது. சற்றே அவன் அசைந்தால் கூட உடல் விரைத்து, மூச்சுக்குத் தவிப்பது கண்கூடாகத் தெரிந்தது. தனது அண்மை சிலிர்ப்பூட்டுவதற்குப் பதிலாக, ஒரு‌‌ பெண்ணை பயத்தில் சில்லிப்பூட்டுகிறது. அதை நினைக்கையில் மனதளவில் தயாராகாத ஒருத்தியை இம்சிப்பதாய், இவனுக்குள்ளும் ஒரு‌ இனம்புரியா வலி

இப்படியே விட்டா மூச்சடைச்சு மயங்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என, “சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்துட்டா படுக்கலாம்!” என்றதும் பட்டென நிமிர்ந்தவள்,

“என்ன… என்ன… முடிவு?” என்றவள் குரலில் அத்தனை பதட்டம். அவனுக்கே தர்மசங்கடமாகிவிட்டது. பேசினால் ஓரளவிற்கு சகஜமாவாள் எனப் புரிய, 

“எனக்கெப்படித் தெரியும்? நீதானே தீவிரமா யோசனை பண்ணிட்டிருந்த?” அவளது பதட்டத்தின் காரணம் புரிந்தும் தெரியாதது போல், தன் உணர்வுகளை மறைத்துக் கொண்டு சாதாரணம் போல் கேட்க,

“யார் மேல படுக்கறது, யார் கீழ படுக்கறதுன்னு யோசிச்சுட்டு இருந்தேன். நான் மேல படுத்தா உங்களுக்கு சௌகர்யப்படாதே.” அவள் அப்படி சொன்னதும், சூழ்நிலை மறந்து தன்னையும் மீறிவந்த சிரிப்பை இதழுக்குள் அடக்கிக் கொண்டு, 

“எதுக்கு இப்படி ஒரு சந்தேகம்? அதது, அவங்கவங்க விருப்பத்தைப் பொறுத்தது!” கள்ளப்புன்னகையோடு‌ அவன் சொன்னதன் அர்த்தம் அனா, ஆவன்னா கூடப் புரியாமல் மலங்க மலங்க விழித்தவளைப் பார்த்தவன், அச்சோவென அடக்கமாட்டாமல் சிரித்தே விட்டான். 

“எதுக்கு, சும்மா சும்மா சிரிக்கிறீங்க? நான்‌ என்ன அப்படி‌ கேட்டுட்டேன்?” சிறுபிள்ளை போல் முகத்தைச் சுண்டி கேட்க, 

“அதைவிடு… அதை அப்பறம் பாக்கலாம். வழக்கமா நான் தானே கீழ. நீ எப்பவும் கட்டில்ல தானே?” பேச்சை மாற்றினான். 

“இல்லயில்ல… நீங்க விருந்தாளி. உங்க வீட்ல நீங்க தானே கீழ படுத்தீங்க… அப்போ எங்க வீட்ல நான் கீழ படுக்கறதுதானே நியாயம்? உங்களுக்கும் கால்ல வேற அடிபட்டிருக்கு!” தனக்குள் தோன்றியதை எல்லாம் படபடவென ஒப்பிக்க,

“கரெக்ட்… கரெக்ட்… அதுதான் நியாயமும் கூட!” தலையை நாலாபக்கமும் உருட்டினான் சிரிப்பது தெரிந்துவிடக்கூடாதென.

 “அப்போ நீங்க மேல படுங்க. நான் கீழ படுத்துக்கறேன்!” அவசரமாக சொல்லிவிட்டு, எங்கே மறுப்பு சொல்லி விடுவானோ என தலையணை, போர்வை எடுக்க வந்தவளிடம், 

“ஆனா… நான் உன்னை எங்க வீட்டு விருந்தாளியா‌ நினைக்கலயே! உங்க வீடு, எங்க வீடுன்னும் பிரிச்சுப் பேசலியே. நம்ம வீடுன்னு சொன்னதாத்தான் ஞாபகம்!” சற்றே அழுத்தம் தோய்ந்த குரலில் கூற, அப்படியே நின்றுவிட்டாள். 

நமக்கு ஏன் இந்த எண்ணம், இன்னும் வரவில்லை என அடுத்த யோசனையில் மண்டைக்குள் எலியோடியது. நாமதான்‌ இன்னும் கல்யாண கான்செப்ட்டுக்குள்ளேயே வரலியே? அப்பறம் எப்படி அந்த எண்ணம் வரும். ஆனா… இவங்களுக்கும் அதே தானே. இவங்க மட்டும் எப்படி நம்ம வீடுன்னு‌ சட்டுன்னு அந்த வீட்ல ஒருத்தரா நம்மையும் சேத்துட்டாங்க. 

யாருகிட்டயும் அவ்வளவு சீக்கிரம் போகாத தம்பி கூட, இன்னைக்கி வெளியே கூட்டிப்போய் வந்ததிலிருந்து மாமா, மாமான்னு‌ இவங்களையே சுத்தி, சுத்தி வர்றான். ராகினி கூட ஒரே நாள்ல சகஜமா கிண்டல் பண்ற அளவுக்கு வந்துட்டா. நமக்குதான் ஒட்ட முடியலியோ? எத்தனை திட்டு, வசவு, அடின்னு இந்த வீட்ல வாங்கியிருப்போம். கடைசியில நம்மை நம்பாம, வீட்டைவிட்டு துரத்தாத குறையாக, கல்யாணம்ங்கற பெயரில் விரட்டினாலும், அப்பவும் இதுதான் நம்ம வீடுன்னு நினைக்கத் தோணுது. அம்மா வீடு போகணும்னு சொன்னதும் விடிய விடிய தூக்கம்கூட வரல. ஆனா இவங்க மட்டும் அங்கேயும், இங்கேயும் ஒரே‌ மாதிரி தான் இருக்காங்க. அவங்க அதே வீட்ல இருக்கறதால நம்மை சேத்துக்கறது ஈஸியாப் போச்சுபோல. நமக்குதான் பிறந்த வீட்டை விட்டுப் பிரியணுமேங்குற எண்ணம் அங்க ஒட்டமாட்டேங்குதோ?” மறுபடியும் வாயருகே விரலைக் கொண்டு போக, பட்டென எட்டிப் பிடித்துக் கொண்டான். அவளுக்கு தான் அந்த ஒரு நொடியில் உடல் வெளவெளத்துவிட்டது. அவளது கரம் ‌பற்றியவனுக்கும் அவளது தடுமாற்றம் கடத்தப்பட்டது, நடுங்கும் அவளது கரத்தின் வழியாக. அவளது அதிர்வை அறிந்தவன், பிடியைத் தளர்த்தினானே ஒழிய, விடவில்லை. விடும் எண்ணமும் இல்லை. 

“விட்ரு… இன்னைக்கி இவ்வளவு போதும். இருக்கறதே கொஞ்சம்! அதையும் ரொம்ப கஷ்ட்டப்படுத்தாதே! ப்ளீஸ்!” 

“எது கொஞ்சம்? எதை கஷ்ட்டப்படுத்துக் கூடாது?” என்றாள் விழிகளில் வினாத்தொடுத்து. 

“மூளையைத்தான்…”

“கொஞ்சூண்டு மூளைய வச்சுத்தான் இவ்ளோ மெடலும், சர்ட்டிபிகேட்டும் வாங்கி வச்சிருக்கேனா?” கண்களை உருட்டிக் கேட்டவளிடம், இவ்வளவு நேரமாக இருந்த பதட்டத்தையும், முந்திக் கொண்டு ரோஷம் எட்டிப் பார்த்தது பேச்சில்.

அவளது ரோஷத்தில் சிரிப்பு வர, “அதான் இருந்த கொஞ்சமும் இதெல்லாம் வாங்கினதுல மேல் மாடி காலி ஆயிடுச்சு போலயே?” என்றவனை முறைக்க மட்டுமே முடிந்தது தற்போதைக்கு. 

அவளையே பார்த்திருக்க, பார்வையைக் கொஞ்சம்  மாற்றேன் எனக் கெஞ்சியது பாவையின் பார்வை. கை இன்னும் அவனது பிடியில். சில்லிட்டுவிட்டது உள்ளங்கை வியர்வையில். 

“எனக்கு கீழ படுக்கறது ஒன்னும்‌ சிரமம் இல்ல… படுத்துப் பழக்கம்‌ தான்.”

“உங்களுக்குதான் கால்ல அடிபட்டிருக்கே. எங்கேயாவது மறுபடியும் தட்டிக்கிட்டா, எங்கம்மாகிட்ட என்னால வசவு வாங்க முடியாது. காதுல ரெத்தம் வரும்!” மருந்து எடுக்கப் போன பொழுது பூங்கோதையின் பதட்டத்தை பார்த்தாள் தானே. இதுவே மகளாக இருந்திருந்தால், “எரும மாடாட்டம் வளந்துருக்க. கண்ணை என்ன பொடனியிலயா வச்சுருந்த? வயசுப்பிள்ளைக்கு நடக்கையில கவனம்‌ வேண்டாம். மிதந்துகிட்டே நடந்தா இப்படித்தான்…” அடிபட்டதே தேவலாம் என நொந்து நூடுல்ஸாக வைத்திருப்பார். இதுவே மருமகன் என்றதும் டிபிக்கல் மாமியாராக அப்படியொரு கரிசணை. 

“அப்போ…‌உனக்காத் தோணல! உங்க அம்மாவுக்காகத்தான். அப்படித்தானே?” அவளை உறுத்துப் பார்த்துக் கேட்க,

“அப்படியெல்லாம் இல்லை” என சமாளிப்பாக குரல் உள்ளிறங்கியது.

“இவ்ளோ நேரமும் மாத்தி மாத்தி சாரி கேட்டதுலேயே டைம் போயிருச்சு. அடுத்து யார் மேல, கீழன்னு ஆர்க்யூமென்ட்ல போகுது. இன்னைக்கித் தூங்கின மாதிரிதான். உனக்கும் வேண்டாம், எனக்கும் வேண்டாம். அதான் கட்டில் பெருசாத்தானே இருக்கு. ரெண்டு பேரும் படுத்துக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல.” 

“அச்சோ… இல்ல… இல்ல… நீங்க கீழயே படுங்க. நான் மேலயே படுத்துக்கறேன்.” சட்டென சமாதான உடன்படிக்கைக்கு வந்துவிட்டாள். 

“ரிலாக்ஸ்… இப்படி வந்து உக்கார்!” என கட்டிலில் தன் அருகில் அமரச் சொல்லி கண் காண்பிக்க, தயக்கத்தோடு கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தாள். 

இவன் ஒரு காலை மடித்து, கட்டிலில் அவளைப் பார்த்து நேராக அமர்ந்தான். இன்னும் அவளது கரம் அவனது பிடிக்குள் தான். இப்பொழுது தனது இரண்டு கரங்களையும் சேர்த்துவைத்து அவளது கரத்தை பூப்போல பொதிந்து கொண்டான். ரோஷம் வந்ததாலோ என்னவோ பதட்டம் தணிந்திருந்து.  

“முதல்ல ஒன்னு புரிஞ்சுக்கணும். இன்னும் உன்னால இந்த கல்யாணத்தை அக்செப்ட் பண்ண முடியல… அப்படித்தானே?” எனக் கேட்க, ஆமாம் என்பது போல் அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் தலையாட்டியவள் கண்கள் சிவந்து விட, அதை அவனிடம்‌ காட்ட விரும்பாமல் தலையை தாழ்த்திக் கொண்டாள். 

“எல்லாரையும் போல முதலிரவுல வச்சு என்னைப் பிடிச்சுருக்கான்னு, அபத்தமா கேக்குற மாதிரி நான் கேட்கப் போறதில்ல. இந்த கல்யாணம் ரெண்டு பேருக்குமே விருப்பமில்லாம, கட்டாயத்துல நடந்த கல்யாணம் தான். உனக்கு கல்யாணம் என்பதாவது தெரியும். எனக்கு முதல் நாள் மதியம் வரைக்கும் அது கூடத் தெரியாது. அதனால முதல்ல இந்த கல்யாணத்தை மனசுல பதிய வைப்போம். போற போக்குல நான் உன் மனசுல பதியறேனான்னு பாக்கலாம்” என்றவனை விழி உயர்த்திப் பார்த்தாள். 

“என்ன… பிடிக்கலைனா பிரிஞ்சறலாம்னு சினிமா டயலாக் பேசுவேன்னு எதிர்பாத்திருப்ப போல?” எனக் கேட்டவனை, அப்படித்தான் என்பது போல் பார்க்க,

“அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல… உன் மனசுல இடம்பிடிக்கறது எப்படின்னு‌தான் யோசிப்பேனே ஒழிய, எங்கிருந்தாலும் வாழ்க டைப் ‌நானில்ல. பெரியவங்க பாத்து வைக்கிற கல்யாணத்துல பெரும்பாலும் நம்மை மாதிரிதான். போகப் போகத்தான் பழகணும். நாமும் பழகுவோம். காதல் திருமணத்துல எனக்கு ஆரம்பத்துல இருந்தே நம்பிக்கை இல்லை. அதுக்காக காதல் தப்புன்னும் சொல்லல. பவியும், ஜெகன் மாமாவும் கூட விரும்பித்தான் கல்யாணம் பண்ணினாங்க. பெத்து வளத்தவங்கள பகைச்சுக்கிட்டு, அவங்க வயித்தெரிச்சல சாபமா வாங்கிகட்டிக்கிட்டு, நம்ம நல்லா இருந்துற‌ முடியாதுங்கறதை அனுபவப்பூர்வமா பார்த்தவன்” என்றவனை இது என்ன புதுக்கதை என்பது போல் புருவம் சுருக்கிப் ‌பார்த்தாள். அவள் பார்வையின் அர்த்தம் புரிய, “அது பழைய கதை. இப்போதைக்கு வேண்டாம்” என்றவன் குரலும், முகமும் பொலிவிழந்து சடுதியில் தெளிந்தது. பெற்றவர்கள் நினைப்புவர நெஞ்சை அடைத்தது. பத்து வயதில் அவர்கள் இறந்தது கூடத் தெரியாமல், ஒரு வாரத்திற்கு‌ மேலாகத் தானும் சுயநினைவின்றி, யாருமில்லாத அனாதையாக, மருத்துவமனையில் உயிருக்குப் போராடிய கருப்பு தினங்கள் அவை. பெற்றவர்கள் இறுதிச் சடங்கை கூடப் பார்க்கவில்லை. நினைவுகள் அவனைப் பின்னோக்கி இழுத்துச் செல்ல, “அப்பு… எந்திரி கண்ணு… கண்ண முழிச்சுப் பாரு சாமி… ஆத்தா வந்திருக்குறேன்! நீயும் ஏமாத்திப்புடாதப்பு” தொண்டை கமறும், பெரிய நாயகி குரல் காதோரம் ஒலிக்க, நெஞ்சம் படபடத்தது. பழைய நினைவுகள் தொண்டையை கவ்விப்பிடித்தது. இப்பொழுதும் அந்த வலி ரணமாய் உணவுக்குழாய் வழியாக. 

சட்டெனத் தன்னை மீட்டுக் கொண்டவன், ஆழ்ந்து மூச்செடுத்தான். இவன் முகத்தையே பார்த்திருந்நவள், அதில் தெரிந்த மாற்றத்தில், மிரண்டு விழிப்பதைப் பார்த்தவன், மீண்டும் பேச்சை தடைபட்ட இடத்திலிருந்து தொடங்கினான். இப்பொழுது தன்னை மீட்டுக் கொள்ளவேண்டி.

“கல்யாணத்தைப் பொறுத்தவரை எதுவாயிருந்தாலும் பெரியவங்க சொல்றதுதான்ங்கறதுல ரொம்பத் தீவிரமா இருந்தேன். அதனாலயே என்னவோ  இந்தக் கல்யாணத்தையும், உன்னையும் அக்செப்ட் பண்றது ஒன்னும் எனக்குப் பெரிய விஷயமில்லை. அதுவுமில்லாம இப்படி ஒரு பொண்ணு, வலிய கிடைச்சு வேண்டாம்னு சொன்னா அவன் குருடனாத்தான் இருக்கணும். நானெல்லாம் கண்ண மூடிட்டுத் தாலிகட்டுவேன்!” தன்னையும் மீட்டுக் கொள்ளவேண்டி, விளையாட்டுப் பேச்சிற்குத் தாவியவனை, அவள் பார்த்த பார்வையே கேட்டது, அதான் அன்னைக்கே தாலி கட்டவந்தாயா என. பார்வையின் அர்த்தம் புரிந்தவனும் சிரித்துவிட, அவளுக்கும் இலேசாக இதழ் பிரிந்தது. காரிகையின் கைநடுக்கமும் முற்றிலும் குறைந்திருந்தது.  

“நமக்குள்ள கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுதோ இல்லையோ, உங்களுக்கும் எங்க அப்பாவுக்கும் நல்லா கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்ணு தோணுது. அவருக்கும் காதல்னா‌ பிடிக்காது.” 

“காதல் பிடிக்காதுன்னு எப்ப சொன்னேன். கட்டிக்கிட்டவளை ஆசை தீர லவ் பண்ணுவேன்.” கண்கள்‌ மின்ன‌ சொன்னவனிடம்,‌

“அது எப்படி லவ் ஆகும். அது கட்டாயத்துல வர்றது. கடமையேனு வாழ்றது. இப்ப நமக்குள்ளேயே பாருங்க? வேற வழியே இல்லைல? லவ் வருதோ இல்லையோ வாழ்ந்து தானே ஆகணும்” எனக் கேட்க, அவனுக்கும் சற்று முன் அதுதானே‌ தோன்றியது.

“அப்படியும் வச்சுக்கலாம். ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்க்கை எப்பொழுதுமே பிரிக்கப்படாத கிஃப்ட் பாக்ஸ் மாதிரிதான். உள்ள‌ என்ன இருக்குன்னு பிரிச்சுப் பாக்குற வரைக்கும் தெரியாது. நாம எதிர்பார்த்ததே இருக்கலாம். எதிர் பார்ப்பை மிஞ்சி சர்ப்ரைஸ் பண்ணலாம். சில சமயங்கள்ல இதை வச்சு என்னடா பண்றதுங்கற மாதிரியான தேவையற்ற பொருளாக்கூட இருக்கலாம். சில சமயங்கள்ல, நமக்குப் பிடிச்சவங்க, நம்மல ஏமாத்த விளையாட்டா‌ சுருட்டிவச்ச வெறும் பேப்பர் பண்டலாக்கூட இருக்கலாம்.‌ ஆனா, கண்டிப்பா ஏதோ ஒன்னு இருக்கும்! வாழ்க்கையும் அது போலத்தான். எவ்ளோ பெரிய பரிசா இருந்தாலும் பிரிச்சவுடனே‌ அந்த ஆர்வம் தன்னால குறைஞ்சுரும்தானே.” 

“இப்ப நம்ம பொறுத்தவரை உனக்கு நானும், எனக்கு நீயும் பிரிக்கப்படாத அந்த கிஃப்ட் பாக்ஸ் மாதிரி தான். எதிர் பார்த்த கிஃப்ட்டே இருந்தாலும், இதுதான் இருக்கும்னு நெனச்சேன்னு சப்புனு‌ போகும். ஆனா, ஆர்வமா ஒவ்வொன்னாப் பிரிச்சு, உள்ளுக்குள்ள ஒன்னுமே இல்லாம ஏமாந்து போற எம்ப்டி பாக்ஸ் கூட அந்நேரத்திற்கு, நம்மை சிரிக்க வைக்கும். யார் பார்த்த வேலை இதுன்னு நெனச்சு செல்லமாத் திட்டினாலும், அந்நேரத்துக்கு அசட்டுத்தனமா சிரிச்சு சந்தோஷப்படுவோமா இல்லையா? என்னைப் பொறுத்தவரை, அந்த நேரத்து சில நிமிடமிருந்த சந்தோஷமும், சிரிப்பும்‌ தான் அந்த பாக்ஸுக்குள்ள கிஃப்ட். ஆக… ஏமாற்றம் கூட சில நேரங்கள்ல சந்தோஷத்தைக் கொடுக்கும். எந்த சூழ்நிலையா இருந்தாலும் அங்க என்னைப் பொருத்திப் போகப் பழகிட்டேன். எனக்குன்னு ஒரு கிஃப்ட் பாக்ஸ் ஓபன் பண்ணாம வச்சுருக்கேன். அதுதான் என்னோட எதிர்காலம். அந்த பாக்ஸுக்குள்ள என்ன போட்டு வைக்கணும்னு நான் தான் தீர்மானம் பண்ணனும்.‌ வெறும்‌ பேப்பர்‌ பண்டல் சுத்தி வச்சிருந்தாலும் மீ வெரி ஹேப்பி மச்சிதான்! ஒரு‌ முடிவை எடுத்துட்டு அது சரியா, தப்பான்னு யோசிக்கிறதைவிட, எடுத்த முடிவை எப்படி சக்ஸஸ் பண்ணணும்னுதான் யோசிப்பேனே தவிர பின்வாங்கமாட்டேன்” என்றவனை கண் சிமிட்டாமல் பார்த்தவள், சட்டென…

“அச்சச்சோ!” என்றாள் ‌பதட்டமாக.

“என்னாச்சு” அவளது பதட்டம் அவனையும் தொற்ற,

“எங்க ஆஷ்ரமம் வச்சுருக்கீங்க. சிஷ்ய கோடிகள் எல்லாம் எங்க. இல்ல… வெறும் சிஷ்யை கேடிகளா?” என சிரிக்காமல், விழியகலக் கேட்க,‌ முகம் மலர வாய்விட்டு சிரித்துவிட்டான். அவன் அகம்நிறைந்து சிரிக்கும் பொழுது‌ சிவக்கும் கன்னக் கதுப்புகளையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவளுக்கு, தங்கை, தம்பியெல்லாம் இவனிடம் மயங்கியது பெரிய விஷயமேயில்லை. சந்தேகமே இல்லாமல் இவன் ஆள் மயக்கியேதான் எனத் தோன்றியது இப்போதைக்கு பெயரளவில் மதன்கைலாஷில் அடங்கிய  மாதங்கிக்கும். 

“என்ன… பழகிப் பாக்கலாமா?” என்றான் புருவம் உயர்த்தி. 

ஒரு திணுசாகத் தலையை உருட்டினாள். இப்போதைக்கு இது போதும் என நினைத்தவனும்,

“முதல்ல கட்டில்ல இருந்தே ஆரம்பிப்போம்” என்றவனை கண்களில் மிரட்சியோடு பார்க்க, 

செல்லமாகக் தலையில் தட்டியவன், “இந்த மாதிரி நேரத்துல நீ தான் சௌகர்யமா தூங்கணும்” என மறைமுகமாகச் சொல்ல, இப்பொழுதுதான் ஏன் தனக்கு மேல் மாடி காலியென கேலி செய்தான் என்பதே புரிந்தது. இருந்த பதட்டத்தில் தன் நிலையை அவள் உணரவே இல்லை. இன்றைக்கு தானே இரண்டாம்‌ நாள். அப்பறம் எதற்கு இந்த தேவையில்லாத பதட்டமும், பயமும் என்பதைத்தான் அப்படி சொல்லியிருக்கிறான். 

ஆனால், அதன் பிறகு என நினைத்தவளுக்கும், கண்டிப்பாக தன்னை மீறி எதுவும் நடக்காது என்ற தைரியம் அவனது பேச்சில். 

விளக்கை அணைத்துப் படுத்த பிறகு அவளே, அவனது அடிபட்ட காலைத் தூக்கி, தலையணை வைத்து வசதி செய்து கொடுத்தாள். 

மதன், “குறுக்கால தலையணை மாதிரி ஏதாவது” என இழுக்க, அது அவனை நம்பாமல் இழிவு படுத்துவது மாதிரி எனத்தோன்ற, வேண்டாம் என மறுத்துவிட்டாள். 

அவன் ஆவலாக பிரித்துப் பார்க்க காத்திருக்கும், என்றுமே சுவாரஸ்யம் குறையாத  முதல் பரிசுப் பொருள் அவள் தான் என்பதை அறியாமல். 

அவள் படுக்கும் கோலம் நினைத்துப் பார்த்தவனுக்கும், இப்பொழுதே பரிசுப் பெட்டகத்தின், வண்ண ரிப்பனை பிரிக்கும் சுவாரஸ்யம் வந்து ஒட்டிக்கொண்டது, மீசைக்கடியில் குறும்பு கலந்த கள்ளப்புன்னகையோடு.

‘ரொம்ப நல்லவன்னு நம்புறாளே! இதுல எல்லாம் ரொம்ப நாளைக்கு நல்லவன் வேஷம் போட முடியாதே! சீக்கிரம் ரீல் அந்து போகுமேடா? சத்திய சோதனைடா‌ மதனா… என்ஜாய்!’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top