மதன மாளிகையில் 10

10

“என்னங்க அப்பத்தா?” தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்த பெரியநாயகியிடம், சட்டையை முழங்கை வரை மடித்து விட்டுக்கொண்டே கேட்டான் மதன்.‌ மறு வீடு செல்ல கிளம்பி வெளிவந்த பேரனைத்தான் கண்குளிரப் பார்த்தார் பெரியநாயகி. 

மாதங்கியின் மாமவும், அத்தையும் வீட்டில் கிளம்பியதும் ஃபோனில் அழைத்து, கிளம்பியதாகச் சொல்லிவிட்டனர். அவர்கள் வந்தவுடன் நல்ல நேரத்தில் கிளம்ப வேண்டும் என இவர்களைத் தயாராகச் சொல்லிவிட்டார் பெரியநாயகி‌. 

பெண் பார்த்து, கல்யாணம் பேசி, நிச்சயம் பண்ணினால் தான் கல்யாணக்கலை வரவேண்டுமா என்ன? எம்பேரனுக்கு எப்பவும் மாப்பிள்ளை கலைதான். இதோ தன் முன் ஆறடியை மிஞ்சி, வாலிபம்‌ திமிர நிற்கும் பேரனின் முகத்தில் தெரியும் கம்பீரம் அவருக்கு சின்னமகனின் நினைவுகளைத் தட்டியெழுப்பியது. 

உடை விஷயத்தில் கவனம் வைத்துத் தேர்ந்தெடுப்பானா, அல்லது எது போட்டாலும் இவனுக்கு எடுப்பாக இருக்குமா எனத்தெரியாது. எந்த உடையாக இருந்தாலும் பக்காவாகப் பொருந்திப்போகும்.

க்ரே கலர் ஜீன்ஸூம், பாட்டில் க்ரீன் ஸ்லிம் ஃபிட் முழுக்கைச் சட்டையுமாக, தன் முன் நிமிர்ந்து நிற்பவனைப் பார்த்தவருக்கு, நெஞ்சம் பூரித்து விம்மியது பேரனின் தோற்றத்தில். கண்ணுபோடக் கூடாது. தன்னைத்தானே கடிந்து கொண்டார். நீண்ட ஆயுளோட நல்லா இருக்கணும். மனதிற்குள்ளே வாழ்த்தினார்.

 நல்லாருப்பான். இரண்டு முறை மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்டவனாயிற்றே என நினைக்கையிலேயே தொண்டை அடைத்தது பெரியநாயகிக்கு. 

ஒரே சம்பவம் சந்தோஷமும் துக்கமும் ஒரு சேரக் கொடுக்குமா? கொடுத்ததே… ஒரு பேரன் பிழைத்ததை நினைத்து சந்தோஷப்படவும் முடியவில்லை. அதே நேரம் மற்றொரு பேரன் தங்களை விட்டு குறுத்திலேயே கறுகிவிட்டானே. அந்த ஆதங்கம் தானே வாசுகிக்கு. பெற்ற பிள்ளையை பறிகொடுத்த பரிதவிப்பு. என்ன செய்வது நானும், அவளும் வாங்கி வந்த வரம் அப்படி. பெற்றவர்கள் உயிரோடிருக்கும் பொழுதே, பெற்ற பிள்ளைகளின் மரணத்தைப் பார்க்க வேண்டும் என்பது.

 படுக்கையில் கிடந்து, நோயில் போனான் என்றால் கூட விதி அவ்வளவுதான் என மனது மேவியிருக்கும். அரும்பு மீசை அறும்பும்‌ வயதில் உயிரோடு இழந்ததின் வலி, தீக்கங்கு சாம்பல் மேவியது போல் தெரிந்தாலும் உள்ளுக்குள் கனன்று கொண்டு தானிருக்கிறது. அந்தக் கவலை தான் வாசுகியை உருக்குலைத்து, ஒரே இடத்தில் உட்காரவைத்து விட்டது. அதனால் தானே தம்பி மகளை விட்டுக் கொடுக்க முடியவில்லை பெரியநாயகிக்கும். 

அங்கு அமர்ந்திருந்த வாசுகி கூட ஒரு கணம் கண்ணெடுக்காமல் மதனையே பார்த்தார். ‘இவங்க அப்பனைப் போலவே ஆள்மயக்கி.’ வைதாரோ, வஞ்சப்புகழ்ச்சி செய்தாரோ அவருக்கே வெளிச்சம். அவருக்குள்ளும் தாய்மை உயிர்ப்போடுதானே இருக்கிறது. 

பெற்றவர்கள் எல்லாரும் ஒன்றுக்குள் ஒன்று‌ என்பதலாயோ என்னவோ, கிட்டத்தட்ட பிள்ளைகள் எல்லாரது சாடையும்‌ ஒரே மாதிரி தான் இருக்கும். அத்தை மகனான ஜெகன்கூட கிட்டத்தட்ட இவர்கள் சாடையிலேதான் இருப்பான்.

 பெரிய‌ மகன்‌ உயிரோடிருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பான் என்ற எண்ணம் எழ, வாசுகிக்கும் அடிவயிறு குழைந்தது. ஜாடை ஒன்றுபோல் என்றாலும் கூட சின்னவன் கிரிதரனும், ஜெகனும் கொஞ்சம் வளர்த்தியில் மட்டம்.‌ இறந்து போன அருணகிரியும், மதனிடமும் அப்பொழுதே வயதிற்கு மீறிய வளர்ச்சி இருவரிடமும். 

“அப்படியே உங்கப்பனாட்டம்!” பெரியநாயகி குரல் தழுதழுத்தது. கண்கள் கசிய, வாஞ்சையாய் தாவாய் பிடித்து பேரனைக் கொஞ்ச, அவரது எண்ணவோட்டம் புரிந்தது பேரனுக்கு. 

தன் பேச்சை மீறி, குடும்பத்தார்க்கு உற்றார் முன்னும், ஊரார் முன்னும் தலைகுனிவை ஏற்படுத்திச் சென்ற மகனென்றாலும் பெத்த பாசம் விட்டுப் போகுமா என்ன? பெற்ற மனம் எப்பொழுதும் பித்து தானே? 

மகனை நினைத்து தான் மருகுகிறார் எனத் தெரிந்தது. சற்று முன் சாப்பிடும்பொழுதும் வாசுகி குணசேகரைப் பற்றிப் பேசி, சாம்பல் மேவி நீற்றுப்போயிருந்த நினைவுகளை மீண்டும் விசிறி விட்டார் தானே. அதன் தவிப்பு அடங்குமுன், மகன் உருவத்தில் பேரனைப் பார்த்தவருக்கு கண்கள் கலங்கி மின்னியது. அதைப் பார்த்தவனுக்கும்‌ மனது பிசைந்தது.

அப்பத்தாவை உறுத்துப்‌ பார்த்தவன், “பெரியநாயகிஈஈ… இப்பதான், கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னையாட்டம்னு சொன்ன? இப்ப மகனாட்டம்னு சொல்ற?” தாத்தன் குரலில் பேசி அப்பத்தாவின் மனவோட்டத்தை மாற்ற முயற்சி செய்தான் பேரன். 

“போடா படவா! இந்த லொள்ளு பேசும்போது மட்டும், தாத்தானாட்டமே தான்டா!” செல்லமாகத் தோளில் தட்ட, குனிந்து கொடுத்தான் பேரன். அவன் செயலில் சிரிப்புவர, முந்தானை கொண்டு கண்களை துடைத்துக் கொண்டார்.

“எங்கடா பேத்தி?” என்றார்.‌ 

இவன் உடை மாற்றும் வரை அவள் அறைக்குள் வரவில்லை. பவித்ரா பிள்ளையோடு வெளியே வாசலில் தான் இருந்தாள். 

சட்டையின் முன்கையை மடக்கி விட்டுக்கொண்டே தேர்ந்த மாடல்போல் நடந்து வெளியே வந்தவனைப் பார்த்தவளுக்கும், அவன் மீது விழுந்த பார்வையை எடுக்க முடியவில்லை. அளவாகக் காத்தரித்த மீசையும், க்ளீன் ஷேவ் செய்யாமல் மில்லி மீட்டர் அளவிற்கு ட்ரிம் செய்திருந்த தாடியும், ஈரமாக இருந்த முடியை வாரி சீவியிருந்ததால்‌ இப்போதைக்கு அடங்கிப் போகிறேன்‌ என சமத்துப் பிள்ளை போல் அடங்கிப் படிந்திருந்த முன்னுச்சி முடியுமாக அவனது தோற்றத்தை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே கடந்து சென்றவளை இவனும் பார்த்துக் கொண்டே தான் வந்தான். 

கண்ணோரம் குறும்பு கசிய, “நிமிர்ந்து நல்லாவே பாக்கலாம்! அந்த உரிமை உனக்கும் இருக்கு!” தன்னைக் கடக்கையில் மெலிதாகக் கூற, சட்டென நிமிர்ந்து பார்த்தாள்.

இதழடக்கிய சிரிப்போடு ஒற்றைப் புருவத்தை ஏற்றியிறக்க, வேகமாக உள்ளே சென்று விட்டாள். அதை நினைத்தவன் முகத்தில் புன்னகை படற,

“இப்பதானே உங்க பேத்தி உள்ள போனா… பொம்பளைங்க கிளம்ப எவ்வளவு நேரமாகும்னு தெரியாதா அப்பத்தா? அதென்ன அவளுக்குப் பேரில்லையா? பேர் சொல்லி கூப்பிடவேண்டியது தானே?” பேர் தெரிந்து கொள்ளும் ஆவலில் அப்பத்தாவிடம் போட்டு வாங்க, அதற்குள் கொலுசு சப்தம் கேட்டது. 

திரும்பிப் பார்த்தவனுக்கும் கண்களில் மின்னல்‌ வெட்ட, மெலிதாக விசிலடிக்கத் தோன்றியது. முயன்று அடக்கிக் கொண்டான். ‘வயசுக்கோளாறுடா மதனா… அடங்குடா!’ என்றது உள்மனம். 

பீஜ்(beige)கலர் டஸ்ஸர் சில்க் புடவைக்கு, மெஜன்டா கலர் பார்டர், அதே மெஜன்டா பிங்க் வண்ணத்தில் டிசைனர் ப்ளவுஸ் அணிந்திருந்தாள். ஆடைக்கு மேட்சாக ரூபி கல் செட் நகை கழுத்திலும், காதிலும். சீராக வெட்டப்பட்டு இடை வரை இருந்த கூந்தலை காதோரமாக, இரு பக்கமும் முடியெடுத்து, நடுவில் கிளிப்பில் அடக்கி, விரித்து விட்டிருந்தாள். கைவளை குலுங்க, குனிந்து சேலை மடிப்பை உதறி, சரிசெய்து கொண்டே வந்தவள் நிமிர்ந்து பார்க்க மதன் தன்னையே பார்ப்பது தெரிந்தது. 

அவனையும் மீறி கண்களில் ஒரு சுவாரஸ்யம். மதனின் பார்வையில் ரசனை‌மின்ன என்ன இது பார்வை என்பது போல் முகம் சுருக்கினாள். சற்றுமுன் தானும் அவனை அப்படித்தான் பார்த்தோம் என்பது மறந்துவிட்டது. அவன்‌ மீதான வெறுப்பு படலம் விலகாமலிருக்க, அதற்கு மேல் அவளை யோசிக்க விடவில்லை. 

பெரியநாயகி, “பவி… பூவ எடுத்துட்டு வா!” என்றார் இவளைப் பார்த்ததும்.‌ ஃப்ரிட்ஜில் இருந்த பிச்சிப்பூவை பவித்ரா எடுத்து வர, 

“உன்‌ நங்கையாளுக்கு நீயே‌ வச்சுவிடு!” என்றார். 

இரண்டு சரமாக பூவை எடுக்க, “கொஞ்சமா வைங்க அண்ணி. தலை வலிக்கும்!” என்றாள்.‌

“புதுப்பொண்ணு, தலை நிறைய‌ வச்சாதான் நல்லாருக்கும். நீ வை பவி!” என சீதாலட்சுமியும், ஹேர்‌பின்னோடு வர, மறுக்க முடியவில்லை அவளால்.‌ பவித்ரா பூவை வைத்துவிட, 

“இப்ப எப்படியிருக்கு!” அவளது தோற்றத்தை மெச்சியவர் கன்னம்‌ வழித்து நெட்டி முறித்தார்.‌

இவள் வெளியே வருவதற்கும், வாசலில் கார் சப்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது. 

அவளது மாமாவும், அத்தையும் வந்துவிட்டனர். வந்தவர்களை வரவேற்று, காஃபி, சிற்றுண்டி உபசரிப்பு நடந்தது. 

தாம்பூலத்தில் தேங்காய், பூ, பழம் வைத்து முறைப்படி பெரியவர்கள் கையில் கொடுத்து அழைக்க, பெரியநாயகி தனசேகரனையும், வாசுகியையும் அழைத்தார். 

வீட்டிற்கு பெரிய மருமகளாய் வந்து கடமையை நிறைவேற்றினார் வாசுகி. 

அப்பொழுது தனசேகரன் கைபேசி அழைக்க, எடுத்துப் பார்த்தவர் முகம் யோசனையில் சுருங்கியது. அழைப்பை ஏற்காமல் இவர்களை அனுப்புவதில் கவனமாக, அதே நேரம் அடுக்களையில் இருந்த, சீதாலட்சுமியின் அலைபேசியும் அழைத்தது. எடுப்பதற்கு அவர் உள்ளே சென்றார்.

மீண்டும் தனசேகரனுக்கு அழைப்பு வர “எடுங்க பெரியப்பா… முக்கியமான கால்லா இருக்கப் போகுது” என்றான். 

கைபேசியோடு உள்ளே சென்றார். சில நிமிடங்களில் வெளியே வந்துவிட்டார். முகம் சரியில்லை. 

“நேரங்காலத்தோடு கிளம்புங்க!” என்றார். 

பெரியவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப, சீதாலட்சுமியைத் தேடினான். 

“சித்தி…” என குரல் கொடுக்க, வெளியே வந்தவர் முகத்தில் மெலிதாக கலவரப் படலம். மதனுக்குத் துல்லியமாகத் தெரிந்தது.

“என்ன சித்தி? யார் ஃபேன்ல?” என்றான் எதையும் காட்டிக்கொள்ளாமல். 

“ஒன்னுமில்லப்பா… ஏதோ லோனு வேணுமான்னு கேக்குறாங்க. எனக்கு ஃபோன் பண்றவங்க எல்லாம் இங்க தானே இருக்கீங்க? எனக்கு யாரு கூப்பிடப் போறா?” படபடப்பாகப் பேசுவதிலேயே ஏதோ மறைக்கிறார் எனப் புரிந்தது. 

சீதாலட்சுமி, தனசேகரைப் பார்க்க, கண்களை‌ மூடித்திறந்தார். கிளம்பட்டும், பிறகு பேசிக் கொள்ளலாம் என்பது போல் தெரிந்தது மதனுக்கு. 

தனசேகரன், “நல்ல காரியத்துக்கு கிளம்பிட்டு, தேங்கி நிக்கக்கூடாது. சீக்கிரம் கிளம்புங்க! நாளைக்கு நம்ம காரை அனுப்புறேன்!” அவசரப் படுத்த, மதன் அவரை சந்தேகமாகப் பார்த்தான். 

ஃபோன் வந்ததிலிருந்து இருவரது முகமும் சரியில்லை. ஏதோ மறைப்பதாகப் பட்டது. மாதங்கியின் மாமா, அத்தை முன் அழுத்தி கேட்கவும் முடியாது. 

“நாளைக்கா?” என்றான்‌ புருவம் சுருக்கி.

“ஆமாடா… மூனு‌ நாள் கழிச்சு மொதமொதன்னு போறீங்க. அந்தப் பிள்ளைக்கும் அம்மா வீட்ல இருக்கணும்னு ஆசையிருக்கும்ல. உடனேவா கிளம்ப முடியும்!” என்றார்.

அவளது ஆவலாதியைத்தான் விடிந்ததிலிருந்து பார்க்கிறானே. 

இருந்தாலும், இது அவனை அங்கே தங்க வைக்க எடுக்கும் முயற்சி போல் தெரிந்தது. மறுக்கமாட்டாமல் கிளம்பினான்.‌ 

“மாமா… நானு!” பவியிடம் இருந்த சஷ்ட்டிகா இவன்‌ வெளியே கிளம்புவது தெரிந்து கையை நீட்டித் தாவிக் கொண்டு வந்தாள். வழக்கமாக வெளியே கிளம்பும்போது, வண்டியில் முன் வைத்து வாசலை ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு தான் செல்வான். இன்றும் கைநீட்ட, 

பவித்ரா, “நாளைக்கிடி தங்கம்… இன்னைக்கு மாமா வேற வேலையா போறாங்க” என்றவாறே மாமனிடம் தாவிய மகளை இழுத்துப் பிடிக்க, 

“நீ எடுக்க வேண்டியதெல்லாம் கார்ல எடுத்து வை. அதுக்குள்ள நானும்‌ என் கேர்ள் ஃப்ரெண்டும்‌ வண்டியில ஒரு ரவுன்ட்‌ போய்ட்டு வர்றோம்” என மாதங்கியிடம் சொல்லிவிட்டு, கைநீட்டிய குழந்தையை வாங்கிக் கொண்டான். அப்படியே விட்டுப் போனால் வீடு ரெண்டுபடும்‌ எனத் தெரியும். 

வெளியே வந்தவன், ஃபோனில்‌ ஜெகனை அழைத்தான். 

மாதங்கி வீட்டார் மறுவீடழைக்க வருவதால், குணசேகரன் கார்மென்ட்ஸ் செல்லவில்லை. ஜெகன் சீக்கிரமாகவே கிளம்பியிருந்தான். அவனிடம் ஏதோ கூற, ஜெகன் சரி என ஒப்புதல் அளித்தான். 

ஃபோனை அணைத்துவிட்டு, தங்கை மகளை புல்லட்டின் முன் அமரவைக்க, மாமன்காரன் சாவி போட்டு வண்டியை முடுக்குவதற்குள் ஹேன்ட் பாரை‌ பிடித்தவள், அவள்‌ வாயிலேயே‌, “புர்ர்ர்…” என வண்டியோட்ட ஆரம்பித்துவிட்டாள்.

 புன்னகை முகமாக, வாசலைச் சுற்றி இரண்டு சுற்று சுற்றியவன், உள்ளே தூக்கி வந்தான். அதற்குள் தேங்காய், மாங்காய் என பெரியநாயகி கட்டி வைத்திருந்த மூட்டைகளை காரில் ஏற்ற,

“எதுக்கு அம்மத்தா… இவ்வளவு?” என்றாள் விழி விரித்து. 

“அங்கயும் காசு போட்டுதானே வாங்கோணும். நம்ம தோப்பு காய்தான்!” என்றார். 

“அதுக்குனு இம்பூட்டா. கடையா வைக்கப் போறோம்!” இதே மாதிரி ஒரு மூட்டை நேற்று பரிமளம் வண்டியிலும் ஏற்றியதைப் பார்த்தாள். 

“உங்க மாமா வீடு, அத்தை வீடுன்னு இருக்காங்கல்ல. அவங்களுக்கும் கொடுத்து விடுங்க. நேரமாகுது… வண்டியில ஏறு!” என அதட்ட பின் சீட்டில் இருவரும் ஏறிக் கொண்டனர். 

“பவி… எதுக்கால வா!” என்றார். வாசல் கேட்வரை சென்றவள் எதிரே வர, கார் கிளம்பியது. 

அவர்களை அனுப்பிவிட்டு உள்ளே வந்த தனசேகரன் பெரியநாயகியிடம் தகவல் சொல்ல, “பெரிய சாவாச்சே. எல்லாரும் போகணுமே சேகரா!” என்றார்.

“நல்லவேளை சேகரா… அவனிருக்கும் போது சொல்லல. தெரிஞ்சிருந்தா மறு வீடே போயிருக்க மாட்டான். அங்க போனா பவிகிட்ட ஏதாவது ஏழரையக் கூட்டுவானுகளே.” 

கவலை முலாம் பூசிக் கொண்டது பெரியநாயகி முகம். இறந்தது வாசுகி, சீதாலட்சுமியின் தாய்மாமன். சீதாலட்சுமிக்கு மாமனாரும் கூட. 

“அதாம்மா சொல்றேன். தலையக் காட்டிட்டு வந்துருவோம். எடுக்குற வரைக்கும் இருந்தா தானே பிரச்சினை?”

“எப்படி சேகரா… சீதாவுக்கு மாமனாராச்சே? இவங்க ரெண்டு பேருக்கும் தாய்‌மாமான் வேற. பவித்ரா மகன் வழி பேத்தியாச்சே? தாத்தனுக்கு பேத்தி முறைக்கு அவ செய்றத செய்ய வேண்டாமா? எடுக்காம எப்படி வரமுடியும் சொல்லு!” பெரியநாயகி வழமையைச் சொல்ல, தனசேகரும் யோசனை செய்தார். 

சீதாலட்சுமியின் கணவன் புருஷோத்தமன் உயிரோடிருந்தால் அவன் தானே கொள்ளி போடும் கடைசி மகன் என்ற யோசனையும் தனசேகரனுக்கு வந்தது. 

சீதாலட்சுமியின் தாய்மாமனுக்கு மூன்றும் ஆண் வாரிசுகள். பெண் வாரிசு இல்லை. கடைசி வாரிசுதான் சீதாலட்சுமியின் கணவன். அவன் ஊதாரித்தனமாக அழித்ததெல்லாம் சீதாலட்சுமி வழியாக வந்த சொத்துகளைத்தான். 

அவர்கள் சொத்து இன்னும் பிரிக்கப்படவில்லை. பூதம் புதையலைக் காப்பது போல், நான் சாகும் வரை சொத்து பிரியக்கூடாதென இத்தனை நாட்களாக, பெரியவர் கட்டிக்காத்து வந்தார். இப்பொழுது சொத்து பிரித்தால், அண்ணன் தம்பிகள் மூவர் கணக்கிற்கு, மூன்றில் ஒரு பங்கு பவித்ராவிற்கும்‌ வரவேண்டும். 

மூத்தவர்கள் இருவருக்கும் தலா ஆண் ஒன்று‌, பெண் ஒன்று என மொத்தம் நான்கு வாரிசுகள். பவித்ரா மட்டும் தான் ஒற்றை பெண்ணாகப் போனாள். 

பவித்ராவிற்கு சொத்து கொடுத்தால் எங்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டுமென மற்ற இரண்டு‌ மகன்களின் பெண் வாரிசுகளும் பங்கு கேட்கின்றனர். அவர்கள் சகோதரர்களுக்கு அதில் ஒப்புதல் இல்லை. சீரும் செய்து, பங்கும் கொடுக்க வேண்டுமா என்பது அவர்கள் தரப்பு வாதம். 

பெரியநாயகியிடம், “அப்ப… எது பேசினாலும் கண்டுக்காம வரணும்மா!” தனசேகரன் கூற,

“கல்யாணத்தப்பவே ஏழரையக் கூட்டினானுக. எழவு வீட்ல சும்மாவா இருப்பானுக. மொதல்ல கிளம்புவோம். பரிமளாவுக்கும் தகவல் சொல்லிரு. அவளுக்கும் பொண்ணெடுத்த சம்பந்த வழியாச்சே! வந்து தலையக் காட்டிட்டுப் போகட்டும்!” பெரியநாயகி சொல்ல, தங்கைக்கு அழைத்தவர் விஷயத்தை கூறினார். 

அவரும், “மதன் வரலைல அண்ணே!” என்றுதான் முதலில் கேட்டார். 

“அவங்க மறு வீடு போய்ட்டாங்க பரிமளா.‌ அவனுக்கு விஷயமே தெரியாது!” என்றார். 

“நல்லதாப் போச்சு. நீங்க வாங்க. நாங்களும் வந்துர்றோம்!” என்றவர் அழைப்பைத் துண்டித்தார். 

பவித்ராவை ஜெகனுக்கு பேசும் பொழுதே, எங்களுக்கும் உரிமை‌ இருக்கு என பெண்ணிற்காக மல்லுக்கட்டியவர்கள். அவர்கள் உரிமை கொண்டாடியது பவித்ரா வழி சொத்து வெளியே போய்விடக் கூடாது என்பதற்காகத்தான். இவர்களால் திருமணத்தில் பிரச்சினை வரலாம் என்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்களை இரண்டு நாட்கள் காவல் நிலைய கண்காணிப்பில் வைத்துவிட்டு தான் பவித்ரா, ஜெகன் திருமணமே நடந்தது. 

அப்பொழுது மதன் கையால் செமத்தியாக வாங்கிக் கட்டிய கூட்டம் ஒன்று அங்கு இருக்கிறது, வன்மத்தோடு சந்தர்ப்பம் எதிர்பார்த்து.‌

பார்க்கலாம் இரண்டு முறை மரணத்தின் விளிம்பைத் தொட்டு மீண்டவன் மூன்றாவது‌ முறையும் மீள்வானா என்று! 

*****

“ஏங்க… அவங்க வந்துட்டாங்க… வந்து வாங்கணு கேளுங்க!” பூங்கோதை வந்து அழைக்கும் வரை வெளியே வரவில்லை வாசுதேவன். 

முதன்‌ முதலாக பிறந்த வீடு வந்த அக்காவையும், மச்சானையும் ஆரத்தி எடுத்து வரவேற்றாள் ராகிணி. காரில் இருந்து இறங்கிய மாமனைப் பார்த்ததுமே, ஆரத்தி தட்டோடு வந்தவள் ‘வாவ்…’ என்றாள் மனதிற்குள். 

அக்காவைப் பார்த்ததில் அப்படியொரு சந்தோஷம் அவள் முகத்தில். ஆரத்தியை வீதியில் கொட்டிவிட்டு வந்து அக்காவைக் கட்டிக் கொண்டவள், கைபிடித்து அழைத்துச் செல்ல, மாதங்கியும் தங்கையோடு போய்விட்டாள். பின்தங்கியவன் தனித்து விடப்பட்டான். 

மிதுனும் ஓடி வந்து அக்காவைக் கட்டிக் கொள்ள, அவனைத் தூக்கிக் கொண்டாள். “டூ‌ டேசா எங்கக்கா போன?” என்றான் அவளைக் காணாத ஏக்கத்தில் கழுத்தைக் கட்டிக் கொண்டு. 

“இந்த பூச்சாண்டி தான் உன்னப் புடிச்சுட்டுப் போனாங்களா? நீ சாப்பிடவும்‌ கூட்டியாந்தாங்களா?” பின்னால் நின்றவனைப் பார்த்து கேட்டதில், மாதங்கி அரண்டு விழித்தாள் என்றால்,

ராகினி, ‘அச்சச்சோ மானத்தை வாங்குறானே!’ உள்ளுக்குள் பதறினாள்.  

அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள்.‌ தம்பி கேட்டதில் கோபப்படுகிறானா என பயத்தோடு மதனின் முகத்தை உற்றுக் கவனித்தாள். 

இரண்டு நாட்களாக அக்கா எங்கே என கேட்டு நச்சரித்த தம்பி, சாப்பிடவும் அடம்பிடிக்க… “அக்கா சாப்பிட முரண்டு‌ பண்ணியதாலதான் அந்த பூச்சாண்டி பிடிச்சுட்டு போயிட்டாங்க.‌ நீயும் சாப்பிட அடம் பண்ணின, உன்னையும்‌ புடிச்சுட்டுப் போயிருவாங்க” என்றிருந்தாள். 

“வாங்க மாமா!” எனக் கேட்டுக் கொண்டே ராகிணி அசடு வழிய சிரிக்க, 

“மச்சினிச்சி வரவேற்பு பலமா இருக்குமா. அதுக்கு மேல இருக்கு மச்சானோட வரவேற்பு!” சிரித்துக் கொண்டே கேட்க,  

“சாரி மாமா!” அசடு வழியச் சிரத்தாள். 

“சிரிக்காதேம்மா… நான் பூச்சாண்டியா?” என்றான் வந்ததும் வராததுமாக மச்சான் கொடுத்த பல்பில். 

அக்கா, தங்கை இருவருக்கும் என்ன சொல்வதென்று புரியவில்லை. எப்படி எடுத்துக் கொள்வானோ என்ற பயம் அவர்கள் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. 

“ச்சே… ச்ச்சே…‌ எந்த ஊர்ல மாமா, பூச்சாண்டி இவ்ளோ ஹேன்ட்சம்மா, ஸ்டைலிஷ்ஷா இருக்கு!” என்றாள் அவன் தோற்றத்தை மெச்சி. 

“நல்லா சமாளிக்கிற!” என்றான் புன்னகை முகமாகவே.

“வாங்க தம்பி! ஏன் ரெண்டு பேரும் வழிய மறிச்சு நிக்கறீங்க!” 

அரண்டு நின்ற மகள்களை அதட்டி விட்டு, சிரித்த முகத்தோடு வரவேற்றார் பூங்கோதை. இப்பொழுது தான் மருமகனை நன்றாகப் பார்க்கிறார். அவனது தோற்றத்தை மனதில் மெச்சிக் கொண்டார். மகளோடு சேர்த்து வைத்துப் பார்க்க ஜோடிப் பொருத்தம் கண் நிறைத்தது. 

“அதொன்னுமில்லைங்க அத்தை… இன்னும் ஆரத்தி காசு போடல. அதனால உங்க சின்னபொண்ணு வழி மறிச்சு நிக்குறா!” அவனே ஒரு காரணத்தை சொல்ல நின்ற மூச்சு இப்பொழுதுதான் வந்தது சகோதரிகள் இருவருக்கும்.‌

“அதுவா முக்கியம். முதல்ல உள்ள வாங்க தம்பி!” என்றவர்,

அதன் பிறகுதான், அண்ணனையும், அண்ணியையும் வரவேற்க, “மகளைப் பாத்த சந்தோஷத்துல உங்க தங்கச்சிக்கு கையும் ஓடல. காலும் ஓடல போல!” 

தங்களை கண்டு கொள்ளாததையே பூங்கோதை அண்ணியார் சாடையாகப் பேச,‌

“இருக்காதா…. நாளைக்கு நம்ம பிள்ளைய கட்டிக் கொடுத்துட்டு நீயும், அவங்க வந்தாங்கனா இப்படித்தான் பரபரன்னு நிப்ப!” தங்களுக்கும் கல்யாண வயதில் பெண் இருப்பதை மனைவிக்கு நினைவூட்டி, தங்கையை விட்டுக் கொடுக்காமல் பேசினார் பூங்கோதையின் அண்ணன்.‌ 

வாசுதேவன் இவர்களிடம் முறைப்படி, மகளை மறு வீட்டிற்கு அழைத்து வரச் சொல்லவில்லை என்ற கோபம் பூங்கோதையின் அண்ணிக்கு. அதையே தன் பேச்சிலும் வெளிப்படுத்தினார். 

“நீங்க வாங்கண்ணி. வந்து உக்காருங்க!” அவர்களையும் வரவேற்று உட்கார வைத்துவிட்டுதான் கணவனை அழைக்கச் சென்றார். 

வெளியே வந்த வாசுதேவன், அனைவரையும் வரவேற்றார்.‌ முகம் அதே இஞ்சி தின்ற குரங்குதான்.

”எப்படி தான் உங்க தங்கச்சி இந்த முசுடுகிட்ட குடும்பம் நடத்துறாங்களோ? மருமகன் வந்தும் மாறல!” பூங்கோதையின் அண்ணி கணவரிடம் கிசுகிசுத்தார். 

“என்ன பண்றது… எங்க அம்மா பெத்த பிள்ளைக எல்லாம் முசுடோட குடும்பம் நடத்துணும்கறது நாங்க வாங்கி வந்த வரம்” என பதில் கொடுக்க, முறைத்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டார். இனி வீடு போகும் வரை வாய்திறக்க மாட்டார். இப்போதைக்கு அது போதும் பூங்கோதை அண்ணனுக்கு. 

மதனைப் பொறுத்தவரையில், அவர் பார்த்த மாப்பிள்ளை நான் இல்லை. அவசரத்துக்கு கிண்டப்பட்ட உப்புமா‌ போலத்தான் நான் அவருக்கு. தன்னைப் பிடிக்காததால் தான் வேண்டா வெறுப்பாக வரவேற்பதாக எண்ணிக்கொண்டான்.‌ அவரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அப்போதைக்கு அவனால் அதற்கு மேல் யோசிக்கவும் தோண்றவில்லை. அவனுக்கு பெரியப்பா மற்றும்‌ சித்தி முகத்தில் தெரிந்த மாற்றமே உள்ளுக்குள்‌ நெருடிக் கொண்டிருக்க, இப்போதைக்கு வாசுதேவனை கவனிக்கும் எண்ணமும்‌ அவனிடம் இல்லை. 

அக்காவைப் பார்த்த சந்தோஷத்தில் அவளை கைபிடித்து தங்கள் அறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டாள் ராகினி. அவளும் வீட்டில் இரண்டு நாட்களாக என்ன நடந்தது என விசாரிக்க தங்கை‌ பின்னாலே சென்றுவிட்டாள்.‌ 

மதன் அங்கே அவளது அத்தை, மாமாவோடு தனித்துவிடப்பட்டான். அவர்களிடம்‌ என்ன பேசுவதென்று‌ தெரியவில்லை.‌ வீட்டை ஒரு‌முறை அமர்ந்த இடத்திலேயே பிள்ளையாராய் வலம் வந்தன கண்கள். ஹாலில் கூட சென்ரலைஸ்டு ஏசி போட்டு வைத்திருந்தார் மாமனார்.‌ 

வந்தவர்களுக்கு காஃபி கொடுக்க, “ராகினி!” என சின்ன மகளை அடுப்படியில் இருந்து பூங்கோதை அழைத்தார். 

அம்மா அழைக்க, “நான் போய் அம்மாவைப்‌ பாக்குறேன்!” என மாதங்கி எழுந்து வெளியே வந்தாள். 

பெரிய மகளைப் பார்த்தவர், “நீ ஏன் வந்த? அவ எங்க? அங்க மாப்பிள்ளை தனியா உக்காந்திருப்பாங்க. கூடப் போய் உக்காரு!” 

“ம்மா… இதெல்லாம் ஓவர். என்னை மட்டும் பலவருஷம் பழகின வீட்லயா விட்டு வந்தீங்க. எனக்கும் யாரும் தெரியாது. நானும் இப்படித்தான் வெட்டு‌வெட்டுனு உக்காந்திருந்தேன். எனக்கொரு நியாயம். உங்க மருமகனுக்கு ஒரு நியாயாமா? அவரை யாரும் ஏன் இப்படி தனியா விட்டுப் போனன்னு கேக்கல?”

“விதன்டாவாதம் பேசாதே. அவருக்கு நம்ம வீடு புதுசு. நீதானே அவரைப் பாத்துக்கோணும்! இந்தா காஃபியக் கொண்டு போய் கொடு!”

“உங்கள மாதிரியே என்னையும் ட்யூன் பண்ணாதீங்கம்மா!” என்றாள்‌ எரிச்சலாக. 

அம்மா வீடு என ஆசையாக வந்தாள் இங்கு வந்தும் அவனைக் கவனி என பூங்கோதை விரட்ட, அவன் என்ன சின்னப் பிள்ளையா… அவன் பின்னாடியே‌‌ நான் அலைவதற்கு என்ற எண்ணம் தான் மேலோங்கி வந்தது.

அம்மாவைப் பார்த்து பார்த்து, நாம இப்படி இருக்கக் கூடாது என உருவேற்றி வைத்திருந்தவள்‌ மனம், மனைவி என்ற வரம்புக்குள் அடங்க மறுக்கிறது 2k கிட்டான மாதங்கிக்கு. 

தங்கையைப் பெயரிட்டு அழைக்க, அக்கா எழுந்து வெளிவந்ததில், ‘இவ பேரு ராகினியா?’ ஒருவழியாக பொண்டாட்டி பெயரைத் தெரிந்து கொண்ட மந்தகாசம் மதன் முகத்தில்.😉

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top