5
“ஏன்டா! இன்னைக்கி என்ன நாளுன்னு தெரியுமா?” கைபேசியில் அதிகாரமாக பெரியநாயகி குரல் ஓங்கி ஒலிக்க, அந்த அமைதியான இரவு வேளையில் அவர் பேசுவது நன்கு கேட்டது அனைவருக்கும். நண்பர்கள் வாய்மூடி சிரிக்க, அவர்களை முறைத்து விட்டு,
‘மறக்குறமாதிரி சம்பவமா நடந்திருக்கு’ என தனக்குத்தானே மனதிற்குள் கவுண்ட்டர் கொடுத்துக் கொண்டவன்,
“பெரியநாயகிஈஈ…” என அப்பத்தாவின் பெயரை இங்கிருந்தே வீட்டில் இருப்பவர்க்கு கேட்கும் அளவிற்கு ஏலம் விட்டான்.
“ஏன்டா கழுதையா கத்துற? என் காதே போச்சு!”
“காரியமானதும் அப்பு, கண்ணு, சாமியெல்லாம் மலையேறிருச்சு போல?” என்றான் எகத்தாளமாக.
“காரியமாகணும்னா கழுதை காலக்கூடப் புடிக்கலாம்னு சொல்லியிருக்காங்கடா?”
“பெரியநாயகி… அப்போ… நான் கழுதையா?”
“ச்சே… ச்சே… அது எப்பேற்பட்ட ஜீவராசி. அதையெல்லாம் நம்மகூட இணைசேர்க்கக் கூடாதுப்பு. அப்புறம் கழுதை கோவிச்சுக்கும்!”
“இதுவும் பேசுவீங்க… இதுக்கு மேலேயும் பேசுவீங்க. உங்க காரியம் முடிஞ்சுதுல்ல.”
“இப்பதான்டா ஆரம்பிச்சிருக்கு. இன்னும் எம்புட்டோ இருக்கு. நீ மட்டும் என்னவாம்… அப்பத்தா போயி இப்போ பெரியநாயகிதானே வந்து நிக்கிது!”
“உங்க பேரு அதுதானே? எங்கே, அதே மாதிரி எம்பேரச் சொல்லி கூப்பிடுங்க பாப்போம்?”
“ஏன் கூப்பிட மாட்டேனா? மதனுதானடா உம்பேரு!”
“நான் எப்படி முழுப்பேரு சொல்லிக் கூப்பிட்டே? அதே மாதிரி நீங்களும் முழுப்பேரு சொல்லணும்!” சட்டமாகக் கூற, இவன் பெயரில் கணவர் பெயர் சேர்ந்திருப்பதால், அவர் உயிரோடிருந்த வரைக்கும் பேரனை பாதிப்பெயர் சொல்லிக் கூட கூப்பிட்டதில்லை.
ஆனால் இவன் மட்டும் அவன் தாத்தா அழைப்பது போல் பெரியநாயகி என்றுதான் அழைப்பது. அதுவும் தாத்தா குரலிலேயே மிமிக்ரி செய்து வேறு அழைப்பான். நிறைய நேரங்களில் பெரியநாயகி ஏமாந்திருக்கிறார்.
நடந்த கல்யாண கலாட்டாவில அந்த அழைப்பு நேற்றிலிருந்து விடுபட்டிருக்க, இப்பொழுது மீண்டும் இருவரும் வழமைக்குத் திரும்பியிருந்தனர்.
“போடா படவா! சீக்கிரம் வீட்டுக்கு வாடா! இன்னைக்கும் தோப்பே கதின்னு இருக்காதே!” பேரனை செல்லமாக அதட்டினார்.
“வந்துர்றேன் பெரியநாயகி! நீங்க சாப்பிட்டுப் படுங்க. எனக்காக வெயிட் பண்ணவேண்டாம்!”
“எனக்கென்ன வேண்டுதலா? இனிமே நானெதுக்குடா காத்திருக்கப்போறேன். அதுக்குன்னு ஒருத்தி வந்தாச்சுல்ல?” என்று சொல்ல, முகம் சடுதியில் மாறியது.
மனம் மாலையிட்டவளை நினைத்து, பெருமூச்சுவிட்டது. இன்று முழுவதும் அவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் ஒன்று கண்ணீரோடு பார்க்கிறான். இல்லையெனில் அவள் இவனை தீப்பார்வை பார்க்கிறாள்.
‘ஆஹா… நீரும், நெருப்பும்!’ என்றது மனம்.
ரொம்ப முக்கியம் என நொடித்துக் கொள்ள,
“தென்னமரமெல்லாம் எங்கேயும் ஓடிப் போகாது. எங்கடா உங்கூட இருக்கற ஆகாவலிக. புத்திமதி சொல்லி சீக்கிரம் அனுப்பி வைக்கக் கூடாதா? எவனுக்காவது கல்யாணமாகி குடும்பம், குட்டினு இருந்தா தானே தெரியும்? எல்லாம் மொட்டுக்கட்டையா திரியுறானுங்க. அவனுக கூடச் சேந்தா நீ எப்படி உருப்படுவ.”
சாதாரணமாகவே பெரிய தொண்டை பெரியநாயகிக்கு. இப்பொழுது இன்னும் சத்தமாகப் பேச, அமைதியான அந்தகார இரவு வேளையில் அட்சர சுத்தமாக அனைவர் காதிலும் விழுந்தது.
“டேய்… இதெல்லாம் நல்லாயில்ல! திண்ணையில கிடந்தவன திடுக்குனு எழுப்பி கல்யாணத்தப் பண்ணிவச்சுட்டு, உங்க அப்பத்தா பேசுற பேச்சப் பாருடா? கல்யாணமானாத்தான் அடுத்து என்னானு தெரியுமா? இல்லேன்னா தெரியாதா? நாங்களும் வயசுக்கு வந்துட்டோம்.”
ஃபோனை வேகமாக கைவைத்து மூடிக்கொண்டே, “டேய்… லைன்ல அப்பத்தாடா!” என்றான் அடக்கிய குரலில்.
அதற்குள் எதிர்ப்பக்கம் கேட்டுவிட,
“டேய்… பாப்பாத்தி மகனே! வேணும்னா தாய்மாமன வச்சு குச்சுகட்டி, புட்டு சுத்தச் சொல்லுவோமாடா?” எகத்தாளமாகக் கேட்க, வேகமாக அழைப்பைத் துண்டித்தான்.
“சொன்னா கேட்டீங்களாடா? மானக்கேடா பேசப்போறாங்க!”
“நீ கெளம்புடாப்பா! இன்னும் கொஞ்சம் இருந்தா இங்கேயே வந்து மானத்த வாங்கிருவாங்க!”
எப்படியும் போய்த்தானே ஆகவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நேரம் கடத்த முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு நேரம் கடத்திப்பார்த்தான். அங்குதான் கையில் சிலம்பில்லாத கண்ணகியாக ஒருத்தி காத்திருக்கிறாளே! ஆனால் வீட்டிற்குப் போனால் என்ன நடக்கும் எனத் தெரியும்.
சாஸ்த்திரம், சம்பிரதாயமென பெரிசுகள் கூடி என்ன செய்து வைத்திருப்பார்கள் என்ற உத்தேசத்தில் தானே வீட்டிற்குப் போகாமல் நேரத்தை கடத்திக் கொண்டு இருக்கிறான்.
நேற்று மதியம் வரை நினைத்தாவது பார்த்திருப்பானா? இன்று இரவு இப்படியொரு இக்கட்டில் மாட்டுவோம் என்று. சூழ்நிலையை எதிர் கொள்ள முடியாமல் தானே நேரத்தை நெட்டித்தள்ளிக் கொண்டிருக்கிறான். தனியறையில் ஒரு பெண்ணை எதிர்கொள்வதை நினைத்தாலே மூச்சு முட்டியது.
நமக்கே இப்படி என்றால் புது இடம், புது மனிதர்கள், புது சூழல் அவளுக்கு எப்படி இருக்கும். காலையில் தாலி கட்டி திடீர் மனைவியானவளை நினைத்தும் கரிசனம் பிறந்தது. சுமூகமாக எல்லாம் நடந்திருந்தால் நிலைமையே வேறு.
என்ன பேசுவாள்? என்ன கேட்பாள்? உங்க அண்ணன் மாதிரி நீயும் எங்கேயாவது போக வேண்டியதுதானே என சண்டை பிடிப்பாளா? அவளிடம் நாம் என்ன பேசுவது? அவன் பேசிப் பழகிய ஒரே பெண் பவித்ராதான். அதுவும் வீட்டில். மற்றபடி பழக்க வழக்கம் எல்லாம் ஆண்களுடனே. இதை எல்லாம் நினைத்தாலே கழுத்தை நெறித்தது.
பெரும்பாலும் லோடு அனுப்பும் பொழுது தோப்பிலேயே தங்கிக் கொள்வான். அதை எண்ணித் தான் பெரிய நாயகி அவனை அழைத்தது.
“இந்த லோடு அனுப்பிட்டு போறேன்டா!” என்றான் விசிராந்தையாய்.
“அடேயப்பா… நீயில்லாம நாங்க லோடு அனுப்பினதில்லையாக்கும்! அதெல்லாம் கணக்கு கரெக்டா இருக்கும். ஒரு பைசா மிஸ்ஸாகாது!”
அது தெரியாதா என்ன அவனுக்கு? தேங்காய் உரிப்பது, கணக்குப் பார்த்து லோடு ஏற்றுவது, வருபவர்களுக்கு சம்பளக் கணக்கு என, இவன் இல்லாவிட்டாலும் எல்லாமே தன்னால் நடக்கும். அனைவரும் சேர்ந்து தான் பார்ப்பது.
எல்லாரும் இவனை விட ஒன்றிரண்டு வயதுதான் மூத்தவர்கள். இதில் சங்கர் ஒருத்தனுக்கு தான் திருமணம் முடிந்து, குழந்தையிருக்கிறது.
பெரியப்பா தனசேகரன் போர்வை, ஜமுக்காளமென மாமனது கார்மென்ட்ஸ் தொழிலை கையில் எடுத்துக் கொள்ள, படிப்பை முடிக்காத காரணத்தால் விவசாயத்தை கையில் எடுக்கவேண்டி வந்தது மதனுக்கு. தோப்பும் இவன் மேற்பார்வைக்கு வந்தது. அதுவரை எல்லாம் பொது சொத்தாகத்தான் இருந்தது. இன்னும் சொல்லப்போனால் மதனுக்கு சொத்தே கிடையாது.
வேற்று சாதிப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால், சொத்தில் பங்கில்லை என அப்பொழுதே ஊர்ப் பெரியவர்கள் முன்னிலையில், எனக்கும் சொத்திற்கும், குடும்பத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமில்லை என குணசேகரிடம் விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டார் சிவகைலாசம்.
அப்படியாவது மகன் தன் பேச்சை கேட்பான் என மிரட்டிப் பார்த்தார். காதலுக்கு முன் சொத்தெல்லாம் துட்சமாகத் தெரிந்தது அப்பொழுது குணசேகரனுக்கு.
காதலுக்காக மன்னர் பதவியையே விட்டெறிந்தவர்கள் எத்தனையோ பேர். (ஏன்… எலிசபெத் மகாராணி ஆனது கூட அவரது பெரியப்பா காதல் பின் சென்றதால் தான். அவரது அப்பாவிற்கு மன்னர் பதவி கிடைத்து அது வழியாக இவர் மாகாராணியானார்.)
ராஜ்யமே வேண்டாம் எனும்பொழுது சொத்தெல்லாம் எம்மாத்திரம். அப்பொழுது அப்படித்தான் தோன்றியது குணசேகரனுக்கும். எனக்கு எதுவும் தேவையில்லை என வீராப்பாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். தன் மீது சிறுவயதிலிருந்தே ஆசை வைத்திருந்த தாய்மாமன் மகள், பெற்றவர்கள், குடும்ப பாரம்பரியம், சொத்து எதுவும் வேண்டாமென உதறிவிட்டுப் போனார்.
நான்கு வழிச்சாலை இவர்கள் நிலத்தின் குறுக்கே வரும்வரை இந்தத் தோப்பு மதன் கைலாஷ் பெயரில் இருக்கிறதென்பது யாருக்குமே தெரியாது. பெரியநாயகி உட்பட.
நூற்றுக்கணக்கான ஏக்கரில், பல ஏக்கர் நிலம் சாலை போடுவதற்கென அரசாங்கம் கைவசம் சென்றுவிட்டது. அதில் பெரும்பான்மையானது மூத்தவர் என்பதால் சாலையோரமாக இருந்த தனசேகரன் பங்கு. அப்படி எடுத்தும் அவருக்கொன்றும் குறைந்துவிடவில்லை. தேசிய நெடுஞ்சாலையோரமாக ஏக்கரின் விலை மதிப்பு இன்னும் பன்மடங்கு கூடித் தான் போனது.
அதில் மதன் பங்கு மட்டும் எவ்வித கையகப்படுத்தலும் இல்லாமல் அப்படியே தங்கிவிட்டது. ஏற்கனவே இவனைக் கண்டால் ஆகாது வாசுகிக்கு. இப்பொழுது சொல்லவும் வேண்டுமா?
“அதெப்படி, அவன் அப்பா வேண்டாம்னு கையெழுத்துப் போட்ட சொத்து அவனுக்கு மறுபடியும் வந்தது. என்ன இருந்தாலும் நீங்க எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னு. நாங்க வேற தானே? வாழ்க்கை போனது என் தங்கச்சிக்கு தானே” மேலும் வன்மம் அதிகரித்தது இவன் மேல்.
பிரச்சினை இங்கு சொத்து இல்லை. தங்கை வாழ்க்கை சீரோடும் சிறப்போடும் மணப்பட்டிருந்தால் கூட இதெல்லாம் அவருக்குப் பெரிதாகத் தெரிந்திருக்காது.
அவன் சொத்து அவனுக்கு என்றிருந்திருப்பார்.
குணசேகரன், சீதாலட்சுமியை வேண்டாம் என்று சொல்லிவிட, நிச்சயம் வரை வந்து, அத்தை மகனே வேண்டாம் என்ற பெண் என பெயர் வாங்கிவிட, ஆகாது என்று சொன்ன மாமன் மகனையே வலிய சென்று கேட்க வேண்டிய நிலமை இவர்களைப் பெற்றவருக்கு.
இப்பவே சொத்தை பிரித்துக் கொடுத்தால் கல்யாணத்திற்கு சம்மதம் என அவர்கள் வீம்பு பிடிக்க, சீதாலட்சுமி பெயரில் சொத்தைப் பிரித்து கொடுத்த பிறகுதான் திருமணமே நடந்தது. அடாவடிக்காரனை கட்டி சீதாலட்சுமி பட்ட கஷ்ட்டம் கொஞ்சநஞ்சமில்லை.
“அவன் நெனப்புல தானே எங்கூட குடும்பம் நடத்துற?” எனக் கேட்டே வார்த்தைகளால் வறுத்தெடுத்தான். போதாக்குறைக்கு குடிவேறு.
முதலில் இவர்கள் பெண் கேட்ட பொழுதே, “உன் கையால் தாலி கட்டிக்கறதுக்குப் பதிலா ஒரு முழ கயித்துல தொங்கலாம்.” அத்தை மகன் மீது கொண்ட ஆசையில் மாமன் மகனிடம் எடுத்தெறிந்து பேசியதன் பின்விளைவு, பெண் கொடுக்க மறுத்த கோபம் எல்லாம் சேர்ந்து சீதாலட்சுமி மீதுதான் இறங்கியது.
சொத்தை எல்லாம் இழந்து, கைம்பெண்ணாக, கைக்குழந்தையோடு பெற்றவர் வீட்டில் அடைக்கலமானார். அதே கவலையிலேயே இவர்களைப் பெற்றவர் சிவலோக பதவி அடைந்துவிட, சிறிது நாட்களிலேயே கணவன் அடியொற்றி இவர்களது தாயும் சென்றுவிட்டார்.
எல்லாம் யாராலே? இவனைப் பெற்றவனால் தானே என்ற கோபம். அதோடு மகனின் இறப்பிற்கும் இவன் தானே காரணம் என்ற எண்ணம் உள்ளுக்குள் அணையாமல் தீயாய் எரிந்து கொண்டிருக்கிறது.
“நாளப்பின்ன அண்ணன், தம்பிக சேந்து நம்ம பிள்ளைகளுக்கு ஒத்தாசையா இருப்பாங்கனு தானே எங்கப்பா அக்கா மகனுகளுக்கே எங்களக் கொடுக்க முடிவு பண்ணினாங்க. என் தங்கச்சி வாழ்க்கை சீரழிஞ்சும், நீரடிச்சு நீர் விலகாதுங்கற மாதிரி நீங்க எல்லாம் ஒன்னு கூடிக்கிட்டீங்கல்ல! இவன் காலடி வச்ச நேரம் எம் மகன் உசுர எடுத்துட்டான். இப்ப சொத்தும் போச்சு” என ஆதங்கத்தை விஷமாக வார்த்தைகளில் கொட்டித் தீர்த்தார்.
நிலம் கையகப்படுத்தியளவுக்கு அரசாங்கம் பணம் கொடுத்தது தான். தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இவர்கள் நிலத்தின் மதிப்பும் பலமடங்கு உயர்ந்து விட்டதுதான். அதெல்லாம் அவருக்குப் பெரிதாகத் தெரியவில்லை.
தனக்கு கூடத் தெரியாமல் சொத்தை மதன் பெயருக்கு பிரித்தெழுதிவிட்டு, உண்மையை மறைத்துவிட்டது தான் அவரை வெகுவாகப் பாதித்தது. தனக்கும் தெரியாதென பெரியநாயகி எவ்வளவோ சொல்லியும் வாசுகி, தன் அத்தையைக்கூட நம்பவில்லை.
உண்மை தெரிந்த ஒரே ஆள் தனசேகரன் மட்டுமே. அவருக்கு மட்டுமே சொத்தை சிவகைலாசம் மகன்கள் இருவர் பெயரிலும் பிரித்து உயில் எழுதியது தெரியும்.
அதுவும் பேரன் பெற்றவர்களை இழந்து, யாருமில்லாமல், அநாதரவாக தங்களிடம் வந்த சேர்ந்த பிறகு தான் செய்தார். அதுவரை அவரும் சின்ன மகன் மீது கோபமாகத்தான் இருந்தார்.
இதில் இவர்கள் இருந்த தோப்பு வீடும் மதன் பங்கில் சேர்ந்துவிட, “இந்த வீட்டில் இருக்க மாட்டேன்… புருஷனில்லாத என் தங்கச்சிக்கு நான் தான் துணை. உங்களுக்கு எப்படி உங்க தம்பியும், தம்பி மகனும் பெருசோ, அப்படித்தான் எனக்கு என் தங்கச்சி” என பிடிவாதமாக சின்ன மகனை அழைத்துக் கொண்டு பிறந்த வீட்டிற்கே வந்துவிட்டார்.
பெரியநாயகியும் வயதான காலத்தில், மகனை விட்டு இருக்கு முடியாமல் இவர்களுடனே வரவேண்டியதாய்ப் போயிற்று.
அப்பொழுதும் மதன் வரக்கூடாதென்றார் வாசுகி. அவனை ஏதாவது ஹாஸ்ட்டலில் விடச் சொன்னார்.
“இது உனக்கு மட்டும் பிறந்த வீடில்ல! எனக்கும் தான் சொந்தம்! ஆம்பளப்பைய இல்லாததால தானே உங்களுக்கு உரிமை. அதே உரிமை எனக்கும் இருக்குல்ல. எம் பேரன் எங்கூடத்தான் இருப்பான்.” பெரியநாயகியும் பெண்ணுரிமைச் சட்டம் பேச, வாசுகியால் ஒன்றும் பேசமுடியவில்லை.
சிறுவயதில் இவர்களுக்குள் வாக்குவாதம் நடக்கும் பொழுதெல்லாம் ஒன்றும் புரியாமல் வேடிக்கை மட்டுமே பார்ப்பான். ஆனால் சண்டை நம்மால் தான் என்றளவில் மட்டும் மதனுக்குப் புரிந்தது.
இவன் மீது வாசுகி வெறுப்பைக் கொட்டினாலும், அதே வீட்டில் இருந்த சீதாலட்சுமி மதனை ஆதரித்துக் கொண்டார். பவித்ராவிற்கும், மதனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயது. பெரியம்மா மகன் கிரிதரனைவிட, மதனோடு ஒட்டுதல் அதிகம் பவித்ராவிற்கு.
தனசேகரனும் பிள்ளையைப் பறிகொடுத்தவள் மனது. இப்படித்தான் கண்டவாக்கில் அலைக்கழியும் என மனைவி போக்கிற்கே விட்டுவிட்டார். அது இன்னும் வாசுகிக்கு வசதியாகப் போயிற்று.
மாமன் எதை நினைத்து பெண் கொடுத்தாரோ, அந்த நம்பிக்கையை தனசேகரன் வீணாக்கவில்லை. பிரித்துக் கொடுத்த சொத்தையெல்லாம் தொலைத்துவிட்டு, கைம்பெண்ணாக, கைப்பிள்ளையோடு வந்து, பிறந்த வீட்டோடு தங்கிவிட்ட சீதாலட்சுமியையும் தகப்பன் ஸ்தானத்தில் தாங்கிக் கொண்டார். வாசுகி பங்கு வியாபாரத்தில் மீண்டும் சீதாலட்சுமியை சமபங்குதாரராக இணைத்துக் கொண்டார். மகள் பவித்ராவை, தங்கை மகன் ஜெகனுக்கே மனம் முடித்தும் வைத்தார்.
விவசாயத்தை மதனின் முழுப் பொறுப்பில் விட்டுவிட்டார். இவர் பங்கு குத்தகை சரியாக வந்துவிடும். வாங்கியவர்களிடமும் சரி, கொடுக்க வேண்டியவர்களிடமும் சரி… பணம் விஷயத்தில் கறாராக நடந்து கொள்வான்.
இந்தத் தோப்பில் காய் இறக்க, மட்டை கழிக்க, உரம் வைக்க, நிலம் சீர்படுத்த என வேலைக்கு வந்தவர்கள்தான் மற்ற நால்வரும். சகவயது இவர்களை தோழமை ஆக்கியது. தோப்பு இவன் கைக்கு வந்த பிறகு, தேங்காய் மொத்த வியாபாரம் ஆரம்பிக்க, அவர்களை நிரந்தரமாக வேலைக்கு வைத்துக் கொண்டான்.
சங்கர் தவிர மற்ற நால்வரும் பெரும்பாலும் இங்கேயே தங்கிக் கொள்வர். லோடு இரவு தான் ஏற்றி அனுப்பப்படும்.
இன்றும் லாரி வந்துவிட, சீக்கிரம் வந்துவிடுவதாக அப்பத்தாவிடம் சொல்லிவிட்டு தான் வந்தான். கிட்டத்தட்ட எதிலிருந்தோ தப்பிவந்தது போல ஓடி வந்துவிட்டான்.
திருமணம் முடிந்து இவர்கள் வழக்கப்படி மதியமே சம்பந்தி விருந்து மாப்பிள்ளை வீட்டார் சார்பில், மண்டபத்திலேயே ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கே மணி நான்காகிவிட்டது. மீண்டும் பெண் வீடு சென்றுவர நேரமாகிவிடும். விளக்கு வைத்து அழைத்து வருவதும் முறையல்ல. எனவே மறு வீடு, மூன்றாம் நாளைக்கு ஒத்தி போடப்பட்டது. மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கே திரும்பினர்.
பவித்ரா ஆரத்தி எடுக்க, தங்கை முறையில் இருந்தவர்கள் எல்லாம் சூழ்ந்து கொண்டனர். அவர்கள் கேட்ட தொகையை கொடுத்தால் தான் உள்ளே விடுவோம் என வாசலை மறித்து நிற்க, பாக்கெட்டைத் துழாவி காசை எடுத்துப் போட்டுவிட்டு,
“நல்ல பிள்ளைகளா, சண்டை போடாம, சமத்தா பிரிச்சு எடுத்துக்கோங்கனு” அறிவுரை வேறு… வெறும் பத்து ரூபாயை தட்டில் போட்டுவிட்டு.
அவனைச் சுற்றி நிற்பதுவோ, பத்துப்பதினைந்து டிக்கெட்டுகளுக்கு மேல்.
“ஏன்டா… எப்புர்றா இம்பூட்டு காசு பாக்கெட்ல வச்சுருந்த?” அத்தை மகன் ஜெகன் தான் ஆச்சர்யமாகக் கேட்டது.
“பேங்க்ல போடலாம்னு வச்சுருந்தேன் மாமா. நம்ம தங்கச்சிகளுக்கில்லாததான்னு இங்க போட்டுட்டே” என்றவனை, இந்த சூழ்நிலையிலும் இவனால் எப்படி கேலி, கிண்டல் என பேச முடிகிறது என யோசித்தவாக்கில், சூழ்நிலையோடு ஒட்ட முடியாமல், தவிப்போடு தத்தளித்து நின்றாள் ஒருத்தி.
“நல்ல வேளைடா! இதக் கொண்டுக்கிட்டு நீ பேங்குக்குப் போகல. இல்லைனா இதவைக்க புதுசா ஒரு லாக்கர் வாங்கவேண்டி வந்திருக்கும்.” ஜெகனின் கிண்டலில் அந்த இடம் கலகலத்தது.
“பாக்கெட்ல இல்ல!” மதன் சட்டைப் பாக்கெட்டைப் பிதுக்கிக் காண்பித்தான்.
“இவன் பாக்கெட்ல பத்து ரூபா வச்சுருந்ததே அதிசயம்! நீங்க என்னதான் தலைகீழா நின்னாலும் தம்புடி தேறாது! நல்ல நாள்லயே நாழிப்பால் கறப்பான். இப்ப குடும்பஸ்த்தன் வேற ஆகிட்டான். வாய்ப்பே இல்ல. எல்லாரும் போய் வேலையப் பாருங்க!” ஜெகன் மதனைப் பற்றிய உண்மை நிவவரம் வாசிக்க, வாங்காமல் நகரமாட்டோம் என சமத்துக்குனாலும் வீம்பு பிடித்தனர் அனைவரும்.
“எம் பேராண்டி எல்லாருக்கும் ஃபோன்ல காசு போட்டுவிடுவான். இப்ப வழிய விடுங்க!” ஜம்பமாக பெரியநாயகி வாக்கு கொடுத்து அவனை இக்கட்டில் மாட்டிவிட,
“கஞ்சப்பைய வசமா மாட்டிக்கிட்டான்! உன் பாசமலர் என்ன பண்றான்னு பாக்கலாம்!” மனைவியிடம் காது கடித்தான். ஜெகனுக்கு மாமன் மகன் அவஸ்த்தையில் ஒரு குதூகலம்.
“பெரியநாயகிஈஈ” என பல்லைக் கடித்தான். அவர் தான் இவன் பக்கம் திரும்பவே இல்லையே.
பக்கத்தில் ஒருத்தி அவஸ்த்தையாக முகம் சுழிப்பதை கண்ணுற்றவன், இனியும் சமாளிக்க முடியாதென, பவித்ரா எண்ணிற்கு ஜி.பே செய்தான். எல்லாருக்கும் பிரித்து கொடுக்கச் சொல்லிவிட்டு உள்ளே போக எத்தனிக்க, அவன் அனுப்பிய தொகையைப் பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை. தலையை எண்ணி ஆளுக்கு இரண்டாயிரம் அனுப்பியிருந்தான்.
மனைவியின் அதிர்ந்த முகம் பார்த்து அப்படி எம்புட்டு அனுப்பியிருக்கான் என ஃபோனை எட்டிப் பார்த்தவன், “பய, அவசரத்துல ரெண்டு ஜீரோவ மறந்தவாக்குல அழுத்திட்டான் போல!” என்றான் நம்பமாட்டாமல்.
வழக்கமான பால் பழம் சம்பிரதாயம் முடிந்தது.
மகளோடு வந்து, அவள் துணைக்கு அத்தையை விட்டுவிட்டு பெற்றவர்கள் கிளம்பிவிட்டனர்.
ராகினி, அக்காவை அணைத்து கண்ணீர்விட, அவர்கள் கிளம்பும் பொழுதும் அம்மாவை நினைத்து தான் அதிகமாக அழுதாள் மாதங்கி.
மண்டபத்திலேயே கை நீட்டியிருக்கிறார். வீட்டிற்கு சென்று இன்னும் சண்டையை பெரிதாக்குவார் எனத் தெரியும். எதை, எப்படிச் சொன்னாலும் நம்பப் போவதில்லை. பூனை கண்ணை மூடிய கதைதான்.
வாசுதேவனும் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு, கடமை முடிந்ததென, எதிலும் பட்டுக்கொள்ளாமல் செல்ல, மாப்பிள்ளை மாறிய கோபம் போலும் என்று தான் தெரிந்தது மற்றவர்களுக்கு. போகப் போக சரியாகிவிடும் என்று நினைத்து கொண்டனர்.
*****
அறையை அலங்கரிக்கும் பொழுதே, “பவி, இம்புட்டு வேலை பார்த்து வேஸ்ட்டாப் போகப் போகுதுடீ. பேசாம நாம இங்க ஷிஃப்ட் ஆகிக்குவோமா?” என்றான் மனைவியிடம்.
“உங்களுக்கு வேற வேலையில்லை. என்னமோ இன்னைக்கு தான் கல்யாணமான மாதிரி!” என்றாள் மல்லிச்சரத்தை கட்டிலுக்கு நடுவில் இதயவடிவில் போட்டுக் கொண்டே. அதன் நடுவில் சிவந்த ரோஜா இதழ்களைப் பரப்பினாள்.
“ஏன்டீ… எந்த சூழ்நிலையில இந்த கல்யாணம் நடந்துருக்கு. பெரியவங்களுக்கு கொஞ்சம் கூட வெவஸ்த்தையே இல்ல.”
“அதெல்லாம் பெரியவங்க யோசிச்சுருப்பாங்க. நாம பண்ணவேண்டியதப் பண்ணுவோம். அவங்க வாழ்க்கைய எப்ப வேணா தொடங்கட்டும்!”
“ம்கூம்ம்… இம்புட்டும் வீணாப்போகுமே…” மீண்டும் அலுத்துக் கொள்ள,
“நீங்க கண்டீங்களா… வீணாப்போகும்னு!”
“உன்னவிட உன் பாசமலர எனக்கு நல்லாத் தெரியும்” என்றவன் முகத்திலும் கவலைக் கோடுகள்.
“போகப் போக சரியாகுங்க!” என்றவள் குரலிலும் சுரத்தையில்லை.
“சரியானா சரி. பாலக் காய்ச்சும் போது நமக்கும் சேத்து காய்ச்சு. நெல்லுக்குப் பாயுறது அப்படியே புல்லுக்கும் பாயட்டும். சஷ்ட்டிக்கும் ரெண்டு வயசு முடியப்போகுதுல்ல!”
திரும்பி முறைத்து நின்றவளைப் பார்த்து சரசமாய் கண்சிமிட்ட,
“இந்த ரணகளத்துலயும், உங்களுக்கு குதூகலம் கேக்குதுல்ல. ஆமா… நேத்து உங்கம்மா ஏதோ சொன்னாங்களே?” என்றாள் யோசனையாக.
அத்தை என்பதை விடுத்து உங்கம்மா என்றாலே ஏதோ வில்லங்கம் வரப்போகுது என அபாய மணி அடிக்க, “பேச்சுவாக்குல ஏதாவது சொல்லிருப்பாங்க” என்றான் சமாளிப்பாக.
நேத்து நடந்த கலவரத்தில் பரிமளம் என்ன சொன்னார் என்பது சுத்தமாக மறந்து போயிற்று.
“மறந்துருச்சா… நான் வேணா ஞாபகப்படுத்தவா? நீங்க கூட என்னம்மா, பவித்ராவுக்கு ஏதோ வாழ்க்கை கொடுத்த மாதிரி பேசறீங்க. அவள ஆசப்பட்டு கல்யாணம் பண்ணிருக்கறதா சொன்னீங்க!” என்று எடுத்துக் கொடுக்க,
‘கிராதகி… காதுல விழாதமாதிரி இருந்தியே? பாலா காய்ச்ச சொல்ற? ரூமுக்கு போ! பாலே ஊத்துவா!’ என்றது ஜெகனின் மைன்ட் வாய்ஸ்.
“எம்பொறகாலயே சுத்துனதெல்லாம் மறந்துருச்சுல்ல!” கண்களை உருட்டி, இடுப்பில் கைவைத்து அவள் கேட்ட தோரணையில்,
“அம்மா தாயே! பரதேவதை!” என கையெடுத்தே கும்பிட்டவன்,
“எல்லாம் எங்கெரகம்!” என நெஞ்சில் அடித்துக் கொண்டான்.
இது அவர்களுக்குள் வழமைதான். மகன் தன்னோடு இல்லை என்ற ஆதங்கத்தில் பரிமளம் ஏதாவது சொல்ல, இவள் அதற்கு பதில் கொடுக்க இருவருக்கும் இடையில் மாட்டிய மத்தளம் தான் ஜெகன்.
சட்டை கிழியாமல் குடும்பம் நடத்துவது எப்படி? அவனும் கூகுள் ஆண்டவர் முதற்கொண்டு கேட்டுப் பார்த்தான். அதுவும் அவனை கைவிட்டு விட்டது.
***
அனைவரும் படுக்க சென்ற பிறகு வீடு திரும்பியவன், தன் அறைக்கு கூட போகாமல், வெளியில் இருந்த பொது குளியலறையிலேயே குளித்து வந்தான்.
பெரியநாயகியும், சீதாலட்சுமியும் ஹாலில் விழித்திருக்க, “படுக்க வேண்டியதுதானே சித்தி!” கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.
“நீ சாப்பிடு. நாங்க போறோம்!” என்றனர். சாப்பாட்டு மேஜை மீது அனைத்தும் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல் அவனே வந்து போட்டு சாப்பிட்டுக் கொள்வான். இன்று இருவரும் விழித்திருந்தனர்.
மறுத்தாலும் விடமாட்டார்கள் எனத் தெரியும். சாப்பிட மாட்டான் எனத் தெரிந்து தானே இருவரும் உட்கார்ந்திருக்கிறார்கள்.
“அவ சாப்பிட்டாளா?” என்றான் தட்டை எடுத்து தன் முன் வைத்துக் கொண்டே. சாப்பிடாமல் விட்டிருக்க மாட்டார்கள் என்று தெரியும். தெரிந்தும் கேட்டான்.
“அவளா… யார்றா அது புதுசா?” பெரியநாயகி தெரியாத மாதிரி கேட்க,
“உங்க புது பேத்தி!” என்றான்.
“அவ்ளோ அக்கறையிருக்கவன் காலா காலத்துல வீட்டுக்கு வந்திருக்கோணும்!” அவனுக்கே குட்டுவைக்க, அதற்கு மேல் பேசாமல் சாப்பிட்டான்.
பசியில்லை என்றாலும் அவர்களுக்காக சாப்பிட்டேன் என பெயர் பண்ணிக்கொண்டு எழுந்துவிட்டான்.
கை கழுவி வந்தவனிடம், “சாமியக் கும்பிட்டு போ சாமி!” பெரிய நாயகி தன்மையாய் சொல்ல,
“இப்ப மட்டும் சாமி எங்கிருந்து வந்துச்சு? அடுத்து என்ன காரியம் நடக்கணும்!” புடவை முந்தானையில் கையைத் துடைத்துக் கொண்டே, புருவம் தூக்கி கேட்க,
“கொள்ளுப் பேரனப் பாக்கோணும்ல!” என்றார் இழுவையாக அசராமல். அவனையும் மீறி வாய்விட்டு சிரித்துவிட்டான் அவர் அடிக்கும் லூட்டியில். சீதாலட்சுமி இடத்தைவிட்டு நகர்ந்து விட்டார்.
“இப்படியே சிரிச்ச முகமா இருடா! பாக்க எவ்ளோ நல்லாருக்கு!” பேரனின் தாடை தடவி முத்தம் வைத்தவர் கண்கலங்க,
“பெரியநாயகி!” தாத்தா குரலில் ஆதுரமாக அழைத்தவன், தோளோடு அணைத்தும் கொள்ள,
“போடா…படவா!” என்றார் கண்ணீரைத் துடைத்தபடி.
புன்னகை பூசிய முகமாக அறையை நோக்கிச் செல்ல, “பன்னாரியம்மா… என் குலம் தழைக்கணும்” என்றது பெரியநாயகியின் வாய் தன்னைப்போல்.
*****
அவன் உள்ளே வர, விடிவிளக்கின் ஒளியில் மாதங்கி முதுகு காட்டிப் படுத்திருப்பது தெரிந்தது. விளக்கைப் போடாமல், கட்டிலிலிருந்த போர்வை. தலையணை எடுத்து சத்தமில்லாமல் படுக்கையை கீழே போட்டவன், படுத்து கையை தலைமேல் வைத்து, கண் மூடிவிட, மனம் மட்டும் விழித்துக் கொண்டு தூங்க விடாமல் அழிச்சாட்டியம் பண்ணியது. தூங்கிட்டாளா… தூங்குறமாதிரி நடிக்கிறாளா? இன்னைக்கி நம்ம இடத்துல நமக்கே தூக்கம் வருமான்னு தெரியல. அவளுக்கோ இடம் புதுசு. எல்லாமே புதுசு. அதுக்குள்ள எப்படி தூங்கிருப்பா?’ என்ற சிந்தனை வலை பின்ன, அதற்கேற்றார்போல் தான் அவளும் கண்களை இறுக மூடி அசையாமல் படுத்திருந்தாள்.
“நிலவைப் பார்த்து வானம் சொன்னது
என்னைத் தொடாதே…
நிழலைப் பார்த்து பூமி சொன்னது
என்னைத் தொடாதே!”
‘ச்சே! அப்பத்தாகூட சேந்து எப்பப் பாரு பழைய பாட்டே மண்டைக்குள்ள ஓடுது. இந்த சிச்சுவேஷனுக்கு ஏத்த சாங் மன்றம் வந்த தென்றலுக்கு
மஞ்சம் வர எண்ணமில்லையா…
அன்பே… என் அன்பே… ம்ம்ம் இதுதான் கரெக்ட்.’ வாய் மெதுவாக முனுமுனுக்க, பல்லைக் கடித்துப் படுத்திருந்தாள் மாதங்கி.
‘எப்புர்றா மதனு… இப்பவும் உன்னால இப்படியெல்லாம் யோசிக்க முடியுது. என்னமோ போடா.’ மனசாட்சி கேலிசெய்ய,
‘நான் அழறதா இருந்தா இந்த ஒரு வாழ்க்கை பத்தாது. துன்பம் வரும் வேளையில சிரிக்க சொல்லியிருக்கார்ல நம்ம வள்ளுவப் பெருந்தகை. அதனாலதான் எனக்கு அடிக்கடி சிரிக்கறதுக்கு வாய்ப்பு கிடைக்குது போல’ என்று நினைத்தவன் முகம் இப்பொழுது வெறுமையைப் பூசிக் கொண்டது. இதழ் விரக்தியில் நெழிந்தது. எப்பொழுது தூங்கினான் என்று அவனுக்கே தெரியாது.
வழக்கம் போல் நான்கு மணிக்கே முழிப்பு வந்துவிட, படுக்கை விட்டு எழுந்தவன் கைகளை பரபரவென தேய்த்து, முகத்தை துடைத்துக் கொண்டான். அரையிருட்டிலேயே படுக்கையை மடித்து கட்டிலின் ஓரம் வைத்தவன் விளக்கைப் போடாமலே, குளியலறை சென்று முகம் கழுவி வந்தான். முகம் துடைக்க துண்டைத் தேட, அது வழக்கமான இடத்தில் இல்லை.
அதுசரி… நேற்று அறையே வழக்கத்திற்கு மாறாகத்தானே இருந்தது! விளக்கைப் போட்டுத் திரும்பியவன் பார்வை கட்டிலில் விழ, குப்பென முகம் வியர்த்து விட்டது. பட்டென விளக்கை அணைத்து விட்டான்.
