“எந்திரி, வாசுகி. நாமதான் சம்பந்தம் கலக்கணும்!” கடைசி வரிசையில், ஓரத்து இருக்கையில், ஒதுங்கி அமர்ந்திருந்த வாசுகியை தனசேகரன் தேடிவந்து அழைக்க, முகத்தில் சுரத்தையின்றி அமர்ந்திருந்தார். மறுக்கவும் முடியவில்லை. எழுந்து செல்லவும் மனம் வரவில்லை.
இதுவே மேடையில் அமர்ந்திருப்பது மகனாக இருந்திருந்தால் இந்நேரம் கால் வலியெல்லாம் ஒரு பொருட்டாகவே இருந்திருக்காது. இப்பொழுது உடம்போடு சேர்ந்து மனமும் அல்லவா நொந்து கிடக்கிறது.
தனசேகரன் வந்து அழைத்தும் அசையாமல் இருக்க, முன்னிருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சிலரது தலை தன்னால் திரும்பிப் பார்த்தது. மற்றவர்கள் திரும்பாவிட்டாலும் காதை இங்குதான் தீட்டி வைத்திருந்தனர். அவர்களுக்கு இங்கு நடப்பதெல்லாம் ஒரு சுவாரஸ்யமான திரைப்படம் பார்ப்பதுபோல.
மொய் வைத்துவிட்டு, அடுத்த கல்யாணத்திற்கு செல்ல வேண்டும் என வந்தவர்கள் கூட. அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலில் பந்தி மறந்து வேடிக்கை பார்க்க அமர்ந்திருந்தனர். முட்டையிடும் கோழிக்கு தானே வலியும், வேதனையும். ஆம்லெட் சாப்பிடுபவர்களுக்கு என்ன வந்தது?
“மதன் நம்ம வீட்டுப் பிள்ளைனோ, என் தம்பி மகன்னோ நெனச்சு நீ வரவேண்டாம். உன் பெரிய மகனா நெனச்சு வா! நீ தானே, அடிக்கடி மதன் உடம்புல ஒட்டிட்டிருக்கிறது எம்மகனோட உசுருன்னு சொல்லுவ. அவன் தான் அல்பாயுசல போயிட்டான். இவனாவது குடும்பம், குழந்தைனு நல்லா இருக்க வேண்டாமா?” எங்கு தட்டினால் கனி விழும் என தெரிந்து தட்ட அது கொஞ்சம் வாசுகியிடம் வேலை செய்தது.
பெரிய மகனை நினைவூட்ட உள்ளுக்குள் உடைந்து போனார் வாசுகி. தனசேகரனுக்கும் அவனை நினைவூட்ட வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் பெரிய மகனின் நினைவு வாசுகிக்கு வரக்கூடாது என்பதற்காகத்தான், மனமாற்றத்திற்காக இடமாற்றமே நடந்தது.
காலம் காலமாக வாழ்ந்த பூர்வீக ஊரைவிட்டு வாசுகியின் பிறந்த வீட்டிற்கு புலம் பெயர்ந்தனர். பெற்றவர்கள் இல்லாதவன் என்று கூட மதன் மீது வாசுகிக்கு எப்பொழுதும் கரிசனம் வந்ததில்லை. ஆனால் பெரியமகன் என்றதும் மலையிறங்கினார்.
இன்னும் மறுத்தால் சொந்த பந்தங்கள் முன் வேடிக்கைக்கு ஆளாக வேண்டிவரும் என எண்ணியவர், மெதுவாக எழுந்தார். எழுந்து நிற்க ஒத்தாசைக்கு கை பிடிக்கவந்த தங்கைக்கு கூட கையைக் கொடுக்கவில்லை.
மகன் செய்த காரியம், அதனால் வந்த அவமானம், கோபம், வெறுப்பு எல்லாம் சேர்ந்து எனக்கு யாரும் தேவையில்லை என்ற வீம்பு வந்தது.
வந்தவர்கள் எல்லாம் அரசல் புரசலாக மாப்பிள்ளை மாறிய விஷயத்தை தான் பந்திக்கு, அப்பளமாய் நொறுக்கிக் கொண்டிருந்தனர். இதில் தானும் வீம்பு புடித்து தனசேகரன் கோபத்தை அதிகப்படுத்த விரும்பவில்லை.
பெற்றவர்கள் இல்லாதவனுக்கு, பெற்றவர்கள் ஸ்தானத்தில் தனசேகரனும், வாசுகியும் மேடை ஏறினர். அவரால் வெகுநேரம் நிற்க முடியாது என்பதற்காக மதன் நண்பர்களிடம் கண்ணைக் காட்ட, நரேன் ஒரு சேரை எடுத்து வந்து மேடையில் போட்டான்.
தனசேகரன் நிற்க, வாசுகி அமர்ந்தவாக்கிலேயே இருவருக்கும் பாதபூஜை செய்தான். நட்பு வட்டம் தாண்டி பெரும்பாலும் வந்தவர்கள் எல்லாம் சொந்தங்களே. ஒன்றுக்குள் ஒன்றாக கொண்டு, கொடுத்து எடுத்தவர்கள். சொந்தங்கள் சிலர் நேரிடையாகவே பெரியநாயகியிடமும், சீதாலட்சுமியிடமும் மாப்பிள்ளை மாறிய விவகாரத்தை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.
இந்தக் குடும்பத்துக்கு இது வழக்கமானது தானே என சிலர் இவர்கள் காது படவே சாடை பேசினர். நல்லபடியா ஒரு விசேஷம் நடந்தாலே, சீர்வரிசைல குறை கண்டுபிடிக்கலாமா, சாப்பாட்டுல குறை கண்டுபிடிக்கலாமா, பொண்ணு, மாப்பிள்ளை ஜோடிப் பொறுத்தத்துல குறை கண்டுபிடிக்கலாமா என உற்றுப் பார்க்கும் சொந்தங்களுக்கு, லட்டு மாதிரி ஒரு விஷயம் சிக்கியிருக்க, அதை உதிர்த்து பூந்தியாக்கி, பகிர்ந்து எல்லார் வாயிலும் இனிப்பாகப் போட்டுக் கொண்டனர்.
கஷ்ட்டப்படும்பொழுது கை கொடுப்பவர்களை விட, கைகொட்டி சிரிப்பவர்கள் தானே அதிகம். இதையெல்லாம் எதிர் பார்த்தது போல் பெரியநாயகி எதையும் காதில் வாங்காமல் பேரனின் மணக்கோலத்தை முதல் வரிசையில் அமர்ந்து கண்ணார கண்டு களித்தார்.
பட்டு, வேட்டி சட்டையில் ஐயர் சொல்லியவற்றை ஒவ்வொன்றாக செய்து கொண்டிருந்தவனைப் பார்க்கையில், திடீரென இப்படி ஒரு இக்கட்டில் பேரனை நிற்கவைத்ததை எண்ணி அவரையும் மீறி கண்கள் கலங்கியது. வாழ்க்கையில் இன்னும் ஸ்திரமாக வேரூன்றவில்லை.
சிறுவயது இல்லை எனினும் இந்தக்காலத்தில் கல்யாணத்திற்கான வயதும் இல்லை. அதற்குள் திருமணம் என்பது அவன் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று.
பேரனின் நினைவில் முந்தானை எடுத்து கலங்கிய கண்களை துடைத்தவரை மேடையில் இருந்தவாறே மதன் முறைத்துப் பார்த்தான். என்றுமே தன் விருப்பு, வெறுப்பை மதன்கைலாஷ் முன்னிறுத்தியதில்லை.
குடும்பம் தான் முதலில். மற்றதெல்லாம் அதன் பிறகு தான். அது தெரிந்து தானே பெரியநாயகியும் துணிந்து இந்த முடிவை எடுத்தார். சின்ன பேரனும் அவர் நம்பிக்கையை வீணாக்கவில்லை. முதலில் அதிர்ந்து தயங்கியனை, “அப்பு… குடும்ப மானம் சாமி!” என்று மட்டும்தான் சொன்னார்.
சீதாலட்சுமியும், “அவசரத்துக்கு யாரையாவது புடிச்சு கட்டிவச்சுட்டா என்ன கண்ணு செய்யறது… அவன் நல்லவனாயிருந்துட்டா ஒரு தொல்லையுமில்ல. ஒரு பொண்ணோட வாழ்க்கை கண்ணு” என்றும் சொல்ல, சீதாலட்சுமியை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தான்.
தனக்கு நடந்த மாதிரி இன்னொரு பெண்ணிற்கும் நடந்து விடுமோ என்ற பதட்டம் அவர் கண்களில். அதையும் மீறி ஒரு பெண்ணை நல்லபடியாக கொண்டு செலுத்துவான் என தன் மீது அவர்கள் வைத்த நம்பிக்கையை உடைக்க விரும்பவில்லை.
இருவரையும் பார்த்தவன், அதற்கு மேல் எதையும் யோசிக்கவில்லை. “உங்க இஷ்ட்டம் அப்பத்தா!” என்று விட்டான்.
பொண்ணு கருப்பா, சிவப்பா, படிப்பு என்ன, ஏன்… பெயரென்ன என்று கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை.
நம்ம வீட்டு விசேஷம் தானே, நேரம் காலமெல்லாம் தெரிந்ததுதானே என பத்திரிக்கையை மேலோட்டமாகப் பார்த்தவனுக்கு, லேட் என அடிக்கோடிட்டிருந்த பெற்றவர்கள் பெயரைப் பார்க்க, கண்ணீர் கண்களை மறைக்க அதற்கு மேல் மதன் பத்திரிக்கையை பார்க்கவில்லை.
மணப்பெண் பெயர் என்னவென்பது கூட நினைவில் இல்லை. இந்த ஒரு வாரமாகவே தேங்காய் லோடு அனுப்பும் வேலையில் மும்முரமாக இருந்தான். கூடவே பெரியப்பாவோடு சேர்ந்து கல்யாண வேலைகளும். பொள்ளாச்சியிலிருந்து வரவேண்டிய தேங்காய் லோடு வரத்தாமதமானது. இதுவரை உள்நாட்டு வியாபாரம் மட்டும் பார்த்துக் கொண்டிருந்தவன், இந்த ஒரு வருட அளவில் தான் ஏற்றுமதியும் செய்கிறான்.
தென்னங்கன்று முதல், கொட்டாங்குச்சி வரை அத்தனையிலும் காசு பார்க்கிறான். தென்னைமரத்தில் காய்ப்பது எதுவும் விரயமாகாது. மொத்தமாக தேங்காய்களை வாங்கி, மாற்றி விடுவதும் உண்டு. உரித்து, உடைத்து உலர வைத்து எண்ணெய் வித்தாக மாற்றி விற்பதும் உண்டு. தேங்காய் மஞ்சி கூட காசுதான். முழு கொப்பரைகளும் விற்பனை செய்வதுண்டு.
மண்டபம் முதற்கொண்டு எல்லா ஏற்பாடுகளும் நீங்களே உங்கள் விருப்பம் போல் பார்த்துக் கொள்ளுங்கள். பணம் தந்து விடுகிறோம் என பெண் வீட்டார் சொல்லிவிட்டனர். மண்டபம், அலங்காரம், மாலை, ஐயர், கேட்டரிங் என ஒவ்வொன்றுக்கும் அலைந்தது மதன் தான்.
வீட்டுப் பெண்களின் ஷாப்பிங்கிற்கும் இவன் தான். ஜெகன் வருவதாக வலிய வந்தும், “எதுக்கு… நீங்க சேலையெடுத்தா போர்வை, ஜமுக்காளம் மாதிரிதான் எடுப்பீங்க. சுடிதார் எடுத்தா தலையணை உறை மாதிரி இருக்கும். மதன் மாதிரி உங்களால செலக்ட் பண்ணமுடியாது! அப்படியே கூடவந்தாலும் சும்மா இருக்க மாட்டாம பல்லி மாதிரி நொச்சு நொச்சீம்பீங்க!” என அப்பத்தா முதற் கொண்டு அனைவரும் சொல்லி ஜெகனின் டெபாசிட்டை காலி செய்தனர். வாசுகி தவிர.
அவருக்கும் தெரியும் மதனின் செலக்ஷன் பற்றி. ஆனால் சொல்ல மனசு வராது. அலைய முடியாதவருக்கும் நல்ல நாள், பெரிய நாள் என்றால் மதன் தானே மற்றவர்களோடு சென்று துணிமணி எடுத்து வருவான்.
எனவே மணமக்களுக்கு சேலை முதல் மாலை வரை எல்லாம் மதன் தேர்வுதான். ஆனால் நிச்சயத்திற்கு கூட இவனை அழைத்துச் செல்லவில்லை வாசுகி.
மாப்பிள்ளையே வராத பொழுது இவன் எதற்கு என்று கூறிவிட்டார். ஒருவேளை இவனை மாப்பிள்ளையாக எண்ணிவிடுவார்களோ என பயந்தார் போலும்.
அன்று, தன் பேச்சை தட்டிச்சென்ற சின்ன மகனை எண்ணி கண்கலங்கிய பெரியநாயகி, இன்று ஒரே வார்த்தையில் மறுபேச்சு பேசாத பேரனை எண்ணி பூரித்துப் போனார்.
அவன் முறைத்துப் பார்த்தும், பெரியநாயகி அழுவதைப் பார்த்தவன், பக்கத்திலிருந்த சீதாலட்சுமிக்கு மேடையில் இருந்தவாறே கண்சாடை காட்ட, திரும்பிப் பார்த்தார். அத்தையின் கண்கள் கலங்குவதைக் கண்டு, அவரது கையை ஆதரவாகப் பற்றிக் கொண்டார்.
அவருக்குத் தெரியும் சின்ன மகன் நினைவு வந்திருக்கும் என்று. மதன்தான் வேட்டி சட்டையில் அப்படியே அவன் அப்பா குணசேகரனை உரித்து வைத்திருந்தானே? சீதாலஷ்மிக்குமே அந்த நினைவுதான்.
பக்கத்தில் வந்து மணப்பெண் அமர்ந்ததைக்கூட கவனத்தில் கொள்ளாமல் ஐயர் சொன்ன சாங்கியங்களை செவ்வனே செய்து கொண்டிருந்தான். மதன் அப்படித்தான். ஒரு விஷயம் பிடிக்குதோ இல்லையோ, பொறுப்பை ஏற்றுக் கொண்டால் முழுவீச்சில் இறங்கிவிடுவான்.
இப்பொழுதும் அப்படித்தான். கல்யாணம் எவ்வளவு பெரிய முடிவு. அப்பத்தா சொன்னதும் யோசித்தானே ஒழிய, இதோ மாப்பிள்ளையாக வந்து அமர்ந்த பிறகு எந்தவித ஊசலாட்டமும் அவனிடம் இல்லை. இனி இதுதான் என மனதில் பதிந்துவிட்டான்.
புகை வேறு கண்ணை மறைத்திருக்க, “இந்தாங்கோ…நங்கையா யாரு? பொண்ணோட கழுத்துல இந்த மாலையைப் போடுங்கோ!” ஐயர் அழைத்த பிறகே சட்டென திரும்பி பக்கத்தில் பார்த்தான். அதே எரிக்கும் பார்வை இன்றும் மாதங்கியிடம்.
எல்லாம் உன்னால் தான் என்பது போல் அவள் முறைத்துப் பார்க்க, ‘ப்பா…’ என்ன பொண்ணுடா என்ற வியக்கும் பார்வைதான் மதனிடம்.
அவளை முதன் முதலாக கோவிலில் பார்த்த பொழுதும், ‘இதென்னடா கலர். முத்தாத மக்காச்சோளம் மாதிரி மஞ்சளாவும் இல்லாம, வெளுப்புமில்லாம வெடிச்ச தென்னம்பாலை மாதிரி இருக்கா’ என்று தான் நினைத்தான்.
இப்பொழுதும் அவன் தேர்ந்தெடுத்த அரக்குப் பச்சையில், தங்கக் கலரில் கை வேலைப்பாடு செய்த பட்டுப்புவையில் அவளைப் பார்த்தவனுக்கும், இருக்கும் பிரச்சினை மறந்து அதேதான் தோன்றியது.
சற்றுமுன் அம்மாவை அணைத்து கண்ணீர்விட்டதால் கண்கள் சிவந்து, மெலிதாக ஒப்பனை கலைந்து, முகம் சற்றே கசங்கியிருக்க, அது அவளின் விருப்பமின்மையை அவனுக்குப் பறைசாற்றுவது போல் தோன்றியது.
குடும்ப மானம், மரியாதை என யோசித்து ஒரு பெண்ணின் மனதை நோகடிக்கிறோமோ என்றுகூடத் தோன்றியது. வாசுதேவனும், பூங்கோதையும் மேடையேற அப்பொழுதுதான் இருவரையும் பார்த்தான். ‘
இவ அவங்க அம்மா மாதிரி’ என்ற நினைப்பு ஓடியது. பின்னாலே பூங்கோதையின் முந்தானை பிடித்து நின்றான் மிதுன். ராகினி தம்பியைத் தூக்க வர, கூட்டம் அவனுக்குப் புதிது என்பதால் அம்மாவை விட்டு நகரமறுத்தான்.
“தூக்கிட்டுப் போ!” கடுமையாக ஒலித்தது போல் இருந்தது வாசுதேவன் குரல். ராகினி வலுக்கட்டாயமாகத் தம்பியை தூக்கிச் சென்று பின்னால் நின்று கொண்டாள்.
மகளை தாரைவார்த்து கொடுக்கும் பொழுது ஐந்து வயதில் மகன் பக்கத்தில் இருப்பது சங்கட்டமாக இருந்தது போலும். மிதுன் அழுது கொண்டே செல்ல, அதைப் பார்த்தவன், அஜயை தலையாட்டி அழைத்தான்.
அவன் அருகே வர, அவனிடம் ஏதோ சொல்ல, ஐஸ்க்ரீம் இருக்குமிடம் சென்றவன் ஒரு கப்பை எடுத்து வந்து மிதுனிடம் கொடுக்க, அழுகை நிறுத்தி வாங்கிக் கொண்டான். அதன் பின் என்ன நடந்தது என்று இருவருக்கும் நினைவில்லை.
மளமளவென அடுத்தடுத்து சடங்கு, சம்பிரதாயங்கள். சாங்கியங்கள் என முழுமையாக அவர்களை இழுத்துக் கொண்டது. எதுவும் நினைவில் தங்கவில்லை. இயந்திர கதியில் நடந்தேறியது.
பவித்ரா மாங்கல்யத்தை அனைவரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வந்தாள். சங்கிலியில் மாங்கல்யத்தை கோர்த்துப் போடுவதுதான் அவர்கள் வழக்கம். ஆனால், தாலி மஞ்சள் கயிற்றில் தான் கோர்க்கப்பட்டிருந்தது.
வாசுகி மருமகளுக்கென பத்து பவுனில் எடுத்து வைத்திருக்கிறார் தான். ஆனால், அது வேண்டாம் என சொல்லி விட்டான்.
“அப்பு… அந்தப் பிள்ளைக்குனு எடுத்ததுதானப்பு? நம்ம குடும்பத்துல போடுற வழக்கம்தானே? அவன் சம்பாத்தியத்துல எடுக்கல சாமி!”
பெரியநாயகி எவ்வளவோ மன்றாடியும், “ஆனா… அது எடுக்கும் போது எனக்கு வரப்போறவளுக்காகனு எடுத்து இல்லைல அப்பத்தா? அவன் மனைவிக்குனு எடுத்தது தானே? எனக்கு வர்றவளுக்கு நான் தான் அப்பத்தா செய்யணும்!” என்று விட்டான்.
எந்தளவிற்கு குடும்பத்திற்காக வளைந்து கொடுப்பானோ, அதே அளவிற்கு சுய கௌரவத்திற்காக நிமிர்ந்தும் நிற்பான். யாராலும் அசைக்க முடியாது.
அவனைப் பொறுத்தவரை அது வாசுகி மருமகளுக்காக எடுத்தது. பெண் மாறவில்லை தான். ஆனால் முறை மாறி விட்டதல்லவா? நேற்றுவரை எப்படியோ? இன்று மனைவி ஸ்தானம்.
அவன் மனைவிக்கு அவன் தான் எடுக்க வேண்டும். ஆனால் அதற்கான அவகாசம் தான் இல்லை. நேரமிருக்கிறது, ஆனால் அவசரத்திற்கு கைவசம் கையிருப்பு இல்லை. இருந்ததை தோப்புக்காரவர்களுக்கு முன் பணமாக கொடுத்துவிட்டான்.
“எப்படியும் தாலி பெருக்குற சடங்கு இருக்குல்ல அப்பத்தா. அதுக்குள்ள தாலிக்கொடி செஞ்சுறலாம்?” என்றவனிடம் என்ன பேச என பெரியநாயகியும் அமைதியாகிவிட்டார்.
ஏற்கனவே அவன் திருமணத்திற்கு சம்மதித்ததே போதும் என்றிருக்க, நகை பற்றிப் பேசி மேலும் அவனை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அதையேதான் சீதாலட்சுமியும் அவரிடம் சொன்னார்.
“விடுங்கத்தை… அவன் பொண்டாட்டிக்கி அவன் தான் செய்யணும்னு நினைக்கிறான். அவன் விருப்பப்படியே செய்யட்டும்!”
‘என் விருப்பமா… அது எங்கிருக்கிறது?’ என்றுதான் அவனுக்கு அப்பொழுது தோன்றியது.
ஆனால் மாதங்கியைப் பார்த்த பிறகு அவனையுமறியாமல் ஒரு ஆர்வம் அவனுக்குள் துளிர்விடத்தான் செய்தது. ஆனால் அவளது அழுத முகம் பார்த்ததும் அவனுக்குள் ஏதோ ஒரு வெறுமை படர்வதை தடுக்க முடியவில்லை.
என்னதான் கல்யாணம் என வந்து, மேடையேறிய பிறகு தனக்கானவள் என்ற உரிமை வந்தது போல், அவளுக்கும் வர வேண்டுமே? அதற்கு மேல் யோசனை செல்லவில்லை. அதற்குள் தாலி அவன் கைக்கு வர, மந்திரம் ஒலிக்க, அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே தான் மூன்று முடிச்சுகளையும் போட்டான். பவித்ராவிடம் கூட மூன்றாம் முடிச்சிற்காக கொடுக்கவில்லை. பவித்ரா சாஸ்த்திரத்திற்கு கைவைத்து எடுத்துக் கொண்டாள்.
மாதங்கி எதையும் கவனத்தில் கொள்ளாமல் அவனை முறைத்த வண்ணமிருக்க, காரணம் தான் இவனுக்குப் புரியவில்லை. ‘அப்படியென்ன பெரிய கொலைக்குத்தமா பண்ணிட்டேன். தெரியாம நடந்து போச்சு. யாராவாது வேணும்னே வயசுப்புள்ள கழுத்துல மாலை போடுவாங்களா? அதுக்குன்னு பாக்குறப்ப எல்லாம் மொறச்சா எப்படீ? எனக்கும் தான் இந்தக் கல்யாணம் ஷாக்கா இருக்கு. அதுக்குன்னு நானென்ன பாக்குறவங்களையெல்லாம் முறைச்சுட்டா திரியுறேன்’ அவனுக்குள் சிந்தனை ஓட,
‘அடப்பாவி சண்டாளா?… வயசுப்புள்ள கழுத்துல மாலைபோட்டது சாதாரணமாடா? மாலை மட்டுமா போட்ட? கையில தாலியும் வாங்கின? கொஞ்சம் விட்டிருந்தா இன்னைக்கி கட்டினத, அன்னைக்கே கட்டியிருப்ப! இதெல்லாம் உனக்கு சாதாரணமா?’’ மனசாட்சி குட்டுவைக்க, மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டான்.
தாரை வார்த்து, திருப்பூட்டு முடிந்து, மேடையைவிட்டு கீழிறங்கிய வாசுதேவனிடம்தான், அன்று கோவிலில் மதனையும், மாதங்கியையும் மாலையும் கழுதுமாகப் பார்த்தவர், நல்ல ஜோடிப் பொறுத்தம் என கொளுத்திப் போட்டுவிட்டுப் போனார்.
மச்சான் முறைசெய்ய வந்த பொழுதுதான் மிதுனையே பார்த்தான். அதுவரை ஏதோ சொந்தக்காரவங்க மகன் போல என்றுதான் நினைத்தான்.
‘தாலி கட்டியாச்சு. இன்னும் குடும்பத்துல உள்ளவங்க யார் யார்னு தெரியல. என்னடா மதன் இதெல்லாம்? உன் வாழ்க்கை போற போக்கு உனக்கே புரியல? என்னமோ போடா!’ என உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“எவ்ளோ பெரிய மச்சான்டா உனக்கு!” என நண்பர்கள் மதனை கேலி செய்ய, வாசுதேவன் முகம் கோணியது.
இப்பொழுது வாசுதேவனும் மதனை கடுகடுவெனப் பார்த்தார். ஏதோ அடக்கிய கோபம் அவரது பார்வையில்.
‘இப்ப இவர் எதுக்கு நம்மல லவ்வாங்கியாப் பாக்குறார்னு தெரியலியே? மக பாத்தா அதுல ஒரு நியாயாம் இருக்கு. இவரும் முறைக்கிறாரே?’ என்ற யோசனையோடு, மிதுன் வளத்திக்கு இடுப்பை வளைத்து குனிந்து கொடுத்தும், மாப்பிள்ளை கழுத்தில் சங்கிலி போட மிதுன் எக்கிக் கொண்டிருக்க, விசுக்கென கையில் தூக்கிக் கொண்டான்.
“இப்ப போடுங்க மச்சான்!” என்று சொல்ல மணமேடை இவ்வளவு நேரமிருந்த இறுக்கம் தளர்ந்து சற்றே கலகலத்தது.
தம்பியை வாங்க வந்த அம்மாவை மாதங்கி கவனித்தாள். கண்கள் சிவந்திருந்தது. கண்கள் மட்டுமல்ல கன்னமும். நன்கு தெரியும். இது அப்பாவின் கைங்கர்யம்தான் என்று. மகள் உற்றுப் பார்ப்பதை அறிந்தவர், மகனைத் தூக்கிக் கொண்டு வேகமாக இடத்தைவிட்டு அகன்றுவிட்டார்.
‘அதுதான் எல்லாம் அவர் விருப்பப்படி நடந்து முடிந்து விட்டதே. இன்னும் என்ன?’ என்ற யோசனையோடு தங்கையைத் திரும்பிப் பார்த்தாள். பேசும் சூழ்நிலை இல்லை. அதற்குள் ஒவ்வொருவராக மேடையேற, புகைப்படக்காரர் ஆட்டி வைக்கும் பொம்மையாகிப் போயினர் மணமக்கள்.
அவர் நொடிக்கொரு முறை ஸ்மைல் ப்ளீஸ் சொல்லியும் இருவர் முகமும் கல்லென இருக்க, அதற்கு மேல் அவரும் விட்டுவிட்டார். அவருக்கும் தான் நடந்த கலவரம் தெரியுமே? அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
*****
“அக்கா… அப்பா அம்மாவ அடிச்சுட்டாருக்கா!”
ஃபோட்டோவிற்கு அக்கா பக்கத்தில் நின்றவள் மெதுவாக கிசுகிசுக்க, இது புதிதில்லை என்றாலும் அதிர்ந்து திரும்பிப் பார்த்தாள்.
வீட்டில் என்றால் கூடப் பரவாயில்லை. இங்குவைத்து சொந்தங்கள் கூடியிருக்கும் பொழுது, அடிப்பதென்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. பெற்றவர் மீது ஆத்திரமாக வந்தது. அதற்குள் அடுத்தவர்கள் ஃபோட்டோ எடுக்க வந்துவிட, ராகினியால் பேசமுடியவில்லை.
ஓரளவிற்கு எல்லாம் சற்று ஓய்ந்து, மணமக்களை பந்திக்கு அழைக்க, ரெஸ்ட் ரூம் செல்வதாகச் சொல்லிவிட்டு, தங்கையை இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றாள்.
“ஏன்டீ… அதான் அவர் நெனச்ச மாதிரி எல்லாம் முடிஞ்சதே. இன்னும் என்ன?” என்றாள் கோபமும், எரிச்சலுமாக.
“அதில்லக்கா…” என்று ரோகினி அழுதவாக்கிலே சொன்ன தகவலை கேட்டவளுக்கு, எங்கு சென்று முட்டுவது எனத் தெரியவில்லை.
“இதெல்லாம் திட்டம் போட்டு நீயும், மாமாவும் அவரை ஏமாத்திட்டதா நெனச்சுட்டிருக்காருக்கா! அதனாலதான் அந்த மாப்பிள்ளை வரலியாம். அம்மாவும் அதுக்கு உடந்தைனு அடிச்சுட்டார்க்கா.”
“மாமாவா… அது யாருடீ?”
“மதன் மாமா! இப்ப உனக்கு தாலி கட்டினாருல்லக்கா?”
“அவன் பேரு மதனா?”
“மதன்கைலாஷ்க்கா!”
“இப்ப பேருதான் ரொம்ப முக்கியம். இவரு என்ன லூசாடீ. இவரால் மட்டும் தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியும்!”
ஒன்றுமில்லாத விஷயத்தை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை நாளைக்கு தங்களை இவர் வதைப்பார் என்று எண்ணியவளுக்கு அழுகையும், ஆத்திரமாக பொங்கிக் கொண்டு வந்தது.
கதவைத் திறந்து உள்ளே வந்தவன் பார்வையில் அவளது அழுத கோலம் விழ, திருமணம் முடிந்ததும், தனியே வந்து அவள் அழுகிறாள் என்றால் துளியும் இதில் இவளுக்கு விருப்பமில்லை போல என்றுதானே அர்த்தம். அவனுக்கும் அப்படித்தான் தோன்றியது.
