“இங்க பாருப்பா… நாங்கொன்னும் எங்க பயலுக்காகப் பேசல… உன்ற பொண்ணுக்காகத்தான் பாக்குறோம்! மண்டபம் வரைக்கும் பொண்ணு வந்துட்டு கல்யாணம் தடைபட்டுப் போனா அது எவ்வளவு அசிங்கம்னு எங்களுக்கும் தெரியும். நாங்களும் இதை அனுபவிச்சுருக்கோம்.”
“ஓ… அப்ப இதுதான் உங்க குடும்ப வழக்கம்போலத் தெரியுது!” வாசுதேவன் பேச்சில் இளக்காரம் எள்ளிநகையாடியது. பெரியநாயகி வருத்தத்தோடு மகனின் முகத்தைப் பார்த்தார். தனசேகரன் அவமானத்தில் அமைதிகாக்க,
“இன்னும் எந்தக் காலத்துல இருக்கீங்க. கல்யாணம் நிக்கறதும் உடனே வேறொரு மாப்பிள்ளைய அவசரத்துக்குப் புடிச்சு கட்டிவைக்கிறதும்னு. எங்க பிள்ள வாழ்க்கையப் பாத்துக்க எங்களுக்குத் தெரியும். ஏன், எங்கதுல அவசரத்துக்கு மாப்பிள்ளை கிடைக்க மாட்டானா? வாசுவோட அக்கா மகனே இருக்கான். தம்பி மகளுக்கு ஒன்னுன்னா அக்கா பாத்துட்டிருக்குமா? அதுக்கு முன்னாடி போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து செலவு பண்ண காசுக்கெல்லாம் நஷ்ட்ட ஈடு வாங்காம விடமாட்டோம். நீ என்னம்மா சொல்ற? உன் தம்பிக்கு ஒரு கஷ்ட்டம்னா சும்மா விட்டுறுவியா?” பெரியப்பா முறையில் இருந்தவர், வாசுதேவன் அக்கா
சுகந்தியைப் பார்த்து நேரிடையாகவே கேட்க, அவரோ பதட்டமாக கணவரையும், மகனையும் பார்த்தார். அவர்கள் முகமே தங்களது விருப்பமின்மையைத் தெரிவித்தது. இரண்டு பக்கமும் பேசமுடியாமல் விழி பிதுங்கி நின்றார்.
“இதுல நான் சட்டுனு முடிவு சொல்லமுடியாது பெரியப்பா. அவனோட முடிவும் முக்கியம்ல. வாழப்போறது அவன்தானே” என மகனின் விருப்பத்தை முன்னிறுத்தி மென்று முழுங்க, இதைப் பார்த்ததும் வாசுதேவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டு தன் அம்மாவை திரும்பிப் பார்த்தார். மகனின் பார்வையில் கப்பென மூச்சடைத்தது ஜெகதாம்பாளுக்கு. மகன் வீட்டில் நடப்பதையெல்லாம் உடனுக்குடன் ஃபோனில் மகளிடம் அப்டேட் செய்ததன் விளைவு மகனின் இந்த தீய்க்கும் பார்வை.
முதலில் மாதங்கிக்கு வாசுதேவன் தன் அக்கா மகனைத் தான் கேட்டுவிட்டார். பெண் வீட்டார் வலிய மாப்பிள்ளை வீட்டைத் தேடிச்செல்வது வழக்கமில்லை என்றாலும் தன் தகுதியை விட்டு இறங்கிப்போனார்.
“மாதங்கி படிப்பைக் கூட முடிக்கவிடாம அப்படி என்னம்மா அவசரம். இதுல ஏதோ வில்லங்கம் இருக்கும்மா” என அக்கா மகன் தட்டிக் கழித்துவிட்டான்.
“ஏம்ப்பா… வெளியவே தெரியாம விஷயத்த முடிக்க நினைக்கிறோம். நீங்க என்னடான்னா ஊரே கேளு, நாடே கேளுன்னு சோஷியல் மீடியா வரைக்கும் இழுத்து விட்டுறுவீங்க போலயே? காசுதான் உங்களுக்குப் பெருசாப் போச்சா? பிள்ள வாழ்க்கை என்னாகறது? நாளப்பின்ன நீங்க மாப்பிள்ளை தேடினாலும் முதல்ல ஏற்பாடு செஞ்ச கல்யாணம் ஏன் நின்னுச்சு, எதுக்கு நின்னுச்சுன்னு பேச்சு வராதா? தப்பு எங்க பய மேலதான். அதுக்கு தான் எங்க தப்ப நாங்களே சரிபண்ண பாக்குறோம்.” பேசியது பெரியநாயகியே தான்.
ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். வாசுதேவன் எதுவும் பேசாமல் யோசனையாகவே நின்றார். ஜெகதாம்பாள் மகனைத் தனியாக அழைத்தார்.
“ஏங்க… எதுனாலும் யோசனை பண்ணி முடிவெடுங்க? அண்ணனுக்கு நிச்சயம் பண்ணின பொண்ண, அதே வீட்ல தம்பிக்கு எப்படீங்க கொடுக்கறது. ஒரே வீட்ல ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பாக்கவேண்டி வரும்.”
குரல் வந்த திசைக்கு அனைவர் கவனமும் செல்ல, இப்பொழுதுதான் அப்படி ஒரு ஜீவன் அங்கிருப்பதே மற்றவர்கள் கவனத்திற்கு வந்தது. இவ்வளவு நேரமாக அமைதியாக நின்றிருந்த பூங்கோதை இனியும் வாளாவிருந்தால் மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என தைரியத்தை ஒன்றுதிரட்டி மெதுவாக கூறினார். அம்மாவும், மகனும் ஆலோசனைக்கூட்டம் நடத்தினால் அம்மா பேச்சுதான் எடுபடும். இத்தனை வருட திருமண வாழ்க்கையில் அவர் கற்றுக்கொண்ட பாடம்.
“அதென்ன… பெரியவங்க பேசும் போது ஊடால நீ நாயம் வளக்குறது? எம் பையனுக்கு தெரியாதது உனக்குத் தெரியுமோ?” ஜெகதாம்பாள் நறுக்கென கேட்க, பதில்பேச முடியாமல் அமைதியாகிவிட்டார் பூங்கோதை.
புதியவர்கள் முன், அதுவும் சம்பந்தம் பேசியவர்கள் முன் மருமகளை இப்படி பேசுகிறோம் என்ற இங்கிதம் சிறிதும் இன்றி ஜெகதாம்பாள் பேச, பூங்கோதை முகம் அவமானத்தில் சுண்டிப்போயிற்று. கண்கள் கலங்குவது போல் இருக்க, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த மகனை எழுப்புவது போல் திரும்பிக் கொண்டார்.
இது அவருக்கு வழக்கம் தான் என்றாலும், சம்பந்தம் பேசியவர்கள் முன் எனும்போது தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“அம்மத்தா… அந்தம்மாவைப் பாருங்க! மருமகள எப்படி அடக்கி கைக்குள்ள வச்சிருக்குன்னு. நீங்களும்தான் இருக்கீங்களே? இன்னும் மருமக பேச்சுக்க தலையாட்டிகிட்டு.” ஜெகன் மெதுவாக பெரியநாயகியிடம் கிசுகிசுத்தான்.
திருமணப் பேச்சு ஆரம்பித்ததிலிருந்து பெற்றவளாகிய தன்னையோ, மகளையோ ஒரு வார்த்தை கலந்து கொள்ளவில்லை. சொல்லப்போனால் மாப்பிள்ளை ஃபோட்டோ கூட காட்டவில்லை. நிச்சயத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்றால் அதற்கும் மாப்பிள்ளையை அழைத்துவரவில்லை. வெளிநாடு சென்றிருப்பதாக கூறிவிட்டனர். மாப்பிள்ளை நிச்சயத்திற்கு வருவது நம்ம பழக்கமில்லை எனவும் கூறப்பட, அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. பெண் வாழ்க்கை என்னாகுமோ என்ற பயம் ஒருபக்கம் அவரை அரித்தெடுத்தது.
“ஏங்க… ஃபோட்டோவாவது மதிகிட்ட காட்டலாம்ல. வாழப்போறது அவதானே. அவளுக்கும் புடிக்க வேண்டாமா?” வாழ்க்கையில் முதன்முறையாக தன் அபிப்பிராயத்தை கணவரிடம் மகளுக்காக முன் வைக்க,
“எதுக்கு… எப்படியும் பிடிக்கலைனுதானே சொல்லப்போறா? அதுக்கு எதுக்கு பாக்கணும். அதெல்லாம் கல்யாணத்துல பாத்துக்கலாம்! கல்யாணம் வரைக்கும் அவள எந்தத் தகிடுதத்தமும் பண்ணாம இருக்கச் சொல்லு! அதையும் மீறி நடந்தா என்ன நடக்கும்னு தெரியும்ல?”
அதை அவர் சொல்லவே வேண்டாம். என்ன நடக்கும் என பிள்ளைகள் மூவருக்கும் தெரியும். தப்பு யார் செய்தாலும் தண்டனை அம்மாவிற்கு தான். அதுவும், வயதிற்கு வந்த பெண்கள் மீது கைவைக்கக் கூடாது என்பதற்காகத்தான். அதற்கு முன்பெல்லாம் பிள்ளைகள் தவறு செய்தால், வாய் பேசுவதற்கு முன் வாசுதேவனுக்கு கைதான் பேசும். அடி உதவுவது மாதிரி அண்ணன் தம்பிகூட உதவமாட்டான் என்ற பழமொழியை அடியொற்றி நடப்பவர்.
திருமணமான புதிதில் மனைவியை கோவிலுக்கு அழைத்துச் சென்றார் வாசுதேவன். அவருக்கு முன், பேச்சு சுவாரஸ்யத்தில் பூங்கோதை முன்னே நடந்துவிட்டார். அதுவும் நாத்தனார் சுகந்தியுடன்தான். அங்கேயே நிற்கவைத்து, “அதென்ன, பொது எடத்துல நாலுபேர் திரும்பிப் பாக்குறமாதிரி சிரிச்சுப் பேசிட்டு நடக்கிறது” என சரமாரியாகப் பேசி திருப்பி அழைத்து வந்துவிட்டார். புதுப்பெண்ணாக நகையும், பட்டுமாக பூரித்த முகத்தோடு கடை வீதியில் சென்றவர்களை சிலர் ஆர்வமாகத் திரும்பி பார்த்ததன் விளைவு. வீட்டிற்கு வந்து அடியும் கூட. என்னை மீறி நீ எப்படி முன்னே போகலாம் என. அறியா வயதில் அன்று பயந்து ஒடுங்கியவர் தான் பூங்கோதை. இன்றுவரை தொடர்கிறது.
வீட்டில் வாசுதேவன் வைத்ததே சட்டம், வட்டம், கட்டமெல்லாம். வாங்கிப் போடறத ஆக்கிப் போடுறவளுக்கு, வெளி உலகம் என்ன தெரியும் என்பதே அவரது தலையாய கருத்து. எந்த ஒரு விஷயத்திலும் மனைவியை இதுவரை கலந்து கொண்டதில்லை.
ஜெகதாம்பாள் அழைக்க, அவர் பின்னாலே சென்றார்.
“வாசு… அவங்க சொன்ன மாதிரியே முடிச்சர்லாம். உங்க அக்காவே மாப்பிள்ளை கேட்டா மேலும் கீழும் பாக்குறா. வெளி எடத்துல சொல்லவா வேணும்? இவள வீட்ல வச்சுக்கிட்டு எவன்கூட ஓடிப்போவான்னு காவக்காத்திட்டு இருக்க முடியாது. சாதி சனம் முன்னாடி அசிங்கமாப் போயிறுஞ்சாமி. பங்காளி கும்பிடுல்ல நம்மல ஒதுக்கி வச்சுருவாங்கப்பா.” ஜெகதாம்பாள் மகனுக்கு யார் காதிலும் விழாமல் மந்திரம் ஓத, விரைப்பாக நின்றவர், சிறு தலையாட்டல் மூலம் தாய் சொல்வதை சரியென ஆமோதித்தார்.
வாசுதேவனுக்கு இந்த தலைமுறை பிள்ளைகள் மீது நம்பிக்கை இல்லை. பெரியவர்கள் பேச்சை கேட்கமாட்டார்கள். தான்தோன்றித்தனமாக முடிவெடுப்பவர்கள். எல்லாம் திமிறெடுத்த கழுதைகள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனாலேயே தன் பிள்ளைகளிடம் சர்க்கஸில் விலங்குகளை அடக்கும் ரிங்மாஸ்ட்டர் மாதிரிதான் நடந்து கொள்வார். பொழுது விடிந்ததில் இருந்து பொழுது அடையும் வரை வீட்டில் அட்டவணை போட்டு தான் எல்லாம் நடக்கும்.
எத்தனையோ காதல் திருமணங்களை, நடத்தி வைப்பவர். அதனாலேயே இந்தத் தலைமுறை பிள்ளைகள் மீது அந்தளவிற்கு அசைக்க முடியாத நம்பிக்கை. ஆமாங்க… பதிவுத் துறையில் சார் பதிவாளராக பணிபுரிகிறார். எத்தனையோ திருட்டுக் கல்யாணங்களையும், விஷயம் தெரிந்து அரக்கப்பறக்க ஓடிவந்த பெற்றவர்களின் ஆத்திரத்தையும், மனக்கொந்தளிப்பையும் தெனாவட்டாக பார்த்து நின்ற பிள்ளைகளை கண்முன்னே கண்டவர். அதனாலேயே அதே கண்ணோட்டத்தில் தன் பிள்ளைகளை கட்டுக்கோப்பாக வளர்க்க நினைத்து, அதை செயல்படுத்தியவர்.
இருவரும் ஆலோசனை நடத்திவிட்டு வந்தனர். தங்கள் முடிவை பெரியப்பாவிடம் சொல்ல,
“இங்க பாருங்க! நாங்க பேசின மாப்பிள்ளைக்கு வேலை, சம்பளமெல்லாம் பாத்து தான் சம்மதிச்சோம். ஆனா, நீங்க இப்ப ஒரு மாப்பிள்ளைய கூட்டி வந்துருக்கீங்க. அவன் எப்படிப்பட்டவன், என்ன வேலை பாக்குறான் எதுவும் தெரியாது. அவன நம்பி எப்படி பொண்ண கொடுக்கறது. ஒன்னுக்கு நாலு எடத்துல விசாரிச்சதே நட்டாத்துல நிக்கிது.” பொது மனிதராக பெரியப்பாவே சற்று பொறுப்பாகப் பேசினார். வாசுதேவன் பெற்றவராக இதையெல்லாம் யோசித்தாரா எனத் தெரியாது.
“இவனும் எங்க பயதாங்க. என் சின்னப் பேரன். ஸ்கூல் முடிச்சுருக்கான். தேங்காய் மொத்த ஏவாரம் பண்றான். அது எண்ணமோ சொல்வாங்களே… என்னடாயிது?” என பக்கத்தில் நின்ற ஜெகனை பெரியநாயகி பேச்சில் உள்ளிழுத்துவிட்டார்.
“கோக்கனட் எக்ஸ்போர்ட் பண்றானுங்க. படிக்கலைனு நினைக்காதீங்க. அதனால தான் சின்ன வயசுலயே தொழில ஆரம்புச்சுட்டான். நல்லா சம்பாதிக்கிறான். நீங்க அவனோட ஜி.எஸ்.டி பாத்துட்டு கூட முடிவு பண்ணலாம். தாராளமா இவனுக்கு பொண்ணு கொடுக்கலாம். மாமன் மகன்கறதுக்காகச் சொல்லல. அநாவசியமா ஒத்தப்பைசா செலவு பண்ணமாட்டான். கொட்டாங்குச்சியக் கூட வீணடிக்காம காசாக்குவான்னா பாத்துக்கோங்க” என அவர்களுக்கு மாமன் மகனைப் பற்றிய கன்டாக்ட் சர்டிபிகேட் கொடுத்தவன், கஞ்சப்பயங்கறத எத்தனை நாசுக்கா சொல்லவேண்டியிருக்கு என மனதிற்குள் நொடித்தும் கொண்டான்.
வேண்டா வெறுப்பாக சம்மதிக்க, பூங்கோதைக்குதான் இப்படியே இந்த திருமணம் தடை பட்டிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் என்றுதான் தோன்றியது. இதை காரணம் காட்டி மகளை மீண்டும் படிக்க அனுப்பி இருக்கலாம். கொஞ்சம் ஆரப்போட்டு நன்கு படித்த மாப்பிள்ளை பார்த்திருக்கலாம் என மனம் அடித்துக் கொண்டது. ஆனால், அவர் சொல்தான் அம்பலம் என்ன… அடுப்படிகூட தாண்டாதே?
“அக்கா… அப்பா கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாங்க.” மாதங்கிக்கு இது பெரிய அதிர்ச்சி இல்லை போலும். தங்கை கொடுத்த தகவலை அமைதியாக கேட்டுக் கொண்டாள்.
ராகினி பக்கத்து அறையில் நடப்பதை இங்கு கடத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவள் கவலை. உள்ளுக்குள் ஒரு பயம். என்ன முடிவெடுப்பார்கள் எனத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம். மாப்பிள்ளை வரவில்லை என கேள்விப் பட்டவுடன், அடுத்த யோசனை என்னவாக இருக்கும் என்ற நினைவில் இவளுக்கு தான் முதலில் பயம் கவ்வியது. அதனாலே தன் கவனம் முழுவதும் அங்கேயே வைத்திருந்தாள்.
“அவருக்கு மாப்பிள்ளையாடி முக்கியம். எனக்கு கல்யாணம் பண்ணனும். அதுதான் முக்கியம்!”
“ஆமா… கல்யாணத்துக்குப் பின்னாடி நீ ஓடிப்போனா என்னக்கா பண்ணுவாங்க?” என கேட்ட தங்கையை முறைத்துப் பார்த்தாள்.
“இல்லக்கா… இப்ப எல்லாம் இதுவும் சகஜம் தானே? எத்தனை பாக்குறோம் நியூஸ்ல?”
“அப்ப வாசுதேவன் மகள் ஓடிப் போயிட்டதா சொல்ல மாட்டாங்க. இன்னாரு மனைவி ஓடிப்போனதாத்தான் சொல்லுவாங்க!”
“ஓ… நீ அப்படி சொல்றியா? அப்ப நம்ம குடும்ப மானம் போகாதா?” எனக் கேட்டாள்.
சட்டென விரலில் சொடுக்கியவள்,
“அக்கா ஒரு ஐடியா! இப்பவே போய் அந்த மாலையிட்ட மன்னவன் இவங்கதான்னு அப்பாட்ட சொல்லிட்டா அவரே கல்யாணத்த நிறுத்திருவார்லக்கா! அவருக்கு நீ யாரையோ லவ் பண்றது தானே பிடிக்கல? அந்த வவ்வரே இவங்கதான்னு சொன்னா…” என்றாள் கண்கள் விரிய.
“யாரு… நானு… லவ்வு… நீ பாத்த?”
“அப்பாவுக்கு வந்த தகவல்படி அப்படித்தானேக்கா? நீயும் சும்மா வாய வச்சுட்டு இருக்க மாட்டாம, லவ் மேரேஜ் தான் பண்ணுவே, அதுவும் அப்பா முன்னாடியே அவர் ஆஃபிஸ்லயே பண்ணுவேன்னு அப்பத்தாகிட்ட சவால் விட்ட?”
“எங்கெரகம்… அன்னைக்கி என் நாக்குல சனி. பின்ன என்னடீ… எத்தனை நாளைக்கு தான் அம்மா அடிவாங்குறதப் பாக்குறது? அந்த ஆத்திரத்துல சொன்னே. அப்பத்தா கூனிக்கு ஒரு நாள் இருக்குடீ” என்றவள் கண்கள் கலங்க, அலங்காரப் பெண் டிஷ்யூ எடுத்து கொடுத்தாள்.
இப்பொழுதுதான் மற்றவர் முன் தன் குடும்ப விஷயத்தைப் பேசுகிறோம் என்ற சுமரணை வந்தது இருவருக்கும்.
மகனை எழுப்பி குளிக்க வைத்து உடை மாற்றி அழைத்து வந்தார் பூங்கோதை. வந்தவுடன் அக்கா மடியில் ஏறி அமர்ந்து கொண்டான். கண்கள் சிவந்திருந்த மகளைப் பார்க்க பெற்ற மனம் பரிதவித்தது. செய்யாத தப்புக்கு யாரவது தண்டனை அனுபவிப்பார்களா? இதோ மகள் அனுபவிக்கிறாளே? கட்டின மனைவி, பெற்ற பிள்ளைகள் மீது நம்பிக்கை இல்லாத மனுஷனெல்லாம் என்ன பிறவி என வெறுப்பு மூண்டது உள்ளுக்குள்.
“நான் யாரையும் விரும்பலப்பா. இந்த வருடம் கடைசி வருஷம்ப்பா. லாஸ்ட் செமஸ்டட்ர் மட்டும் முடிச்சுக்கறேன். அதுக்கப்பறம் நீங்க யாரை கை காட்டினாலும் எனக்கு ஓகே ப்பா” என எத்தனை அழுதிருப்பாள் மகள்.
மனம் கனக்க, “பட்டுச்சேலை கசங்கப் போகுது மிதுன். கீழ இறங்குடா” என்றார் பூங்கோதை.
“விடுங்கம்மா… இருக்கட்டும்!” என்ற அக்காவை எதிரிலிருந்த கண்ணாடி வழியாகப் பார்த்தான் சிறுவன்.
“அக்கா… சோஓஓஓ… க்யூட் க்கா” என்றான் சிறுவன். அக்காவை அலங்காரத்தில் பார்த்ததில் அவனுக்கு ஏக குஷி. ஏதோ விசேஷம் என்றளவில் மட்டும் புரிந்தது. கல்லூரி படிக்கும் அக்காள்களுக்கு ஐந்து வயதில் செல்லத் தம்பி.
தம்பியின் முகத்தைத் திருப்பி கன்னத்தில் அழுந்த முத்தம் வைத்தாள் தன் மன உளைச்சலை மறந்து.
“பொண்ண அழச்சுட்டு வரச்சொன்னாங்க” என பவித்ரா உறவுப் பெண்களோடு உள்ளே வந்தாள்.
மகளை இறுக்கி அணைத்து கன்னத்தில் அழுந்தப் பதித்த முத்தத்தோடும், கண்ணீரோடும் பூங்கோதை வழியனுப்ப, ராகினியும் அக்காவோடு சென்றாள்.
மணப்பெண்ணிற்கு இணையான அலங்காரத்தில், லெஹெங்கா உடையில் அக்காவோடு சென்றவள், அத்தை மகனை ஓரப்பார்வை வீசிச் செல்ல, ராகினியை வைத்த கண் வாங்காமல் ரசனையாகப் பார்த்து நின்றான் அத்தை மகன் விகாஷ்.
*****
“என்ன… வாசுசார்! எப்படியோ லவ் மேரேஜ அரேன்ஞ்ச்டு மேரேஜா மாத்திட்டீங்க போல. இப்ப இதெல்லாம் சாதாரணமாப் போச்சு. பிள்ளைக லவ் பண்றதும், பெத்தவங்க வெளிய தெரியாம அரேன்ஜ்டா மாத்துறதும்! அன்னைக்கி கோயில்ல பாத்தப்பவே நல்ல ஜோடிப்பொறுத்தம்னு நெனச்சேன்.” போறபோக்கில் திரியை கொளுத்திவிட்டுப் போக, வெடிக்க காத்திருந்தார் வாசுதேவன்.
