வாசக அன்பர்களுக்கு வணக்கம்!
கதை நடக்கும் காலகட்டம் எழுபது, எண்பதுகளின் காலகட்டம் மக்களே! அழகான கிராமத்துக்கு காதல் கதை. இன்டெர் நெட், இ மெயில், கை பேசி, கால் பேசி மறந்து… சித்தநாதன், அழகம்மையோடு பயணிப்போம் வாருங்கள் மக்களே!
வேலுண்டு வினையில்லை…
செந்தூர் முருகன் கோவிலிலே ஒரு
சேதியை நான் கேட்டேன் கேட்டேன்
சேவல் கூவும் காலை நேரம்
பாடலை நான் கேட்டேன்
பாடலை நான் கேட்டேன்…
“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!”
“அங்க என்னத்தடி வேடிக்கை பாக்குறீங்க? முகூர்த்த நேரம் முடியப் போகுது. பொண்ண கூட்டியாங்கடி!” அதிகாரம் செய்தாள் ஒருத்தி.
அரச மரமும், வேப்ப மரமும் சேர்ந்து வளர்ந்த, குளத்தங்கரை பிள்ளையார் கோவில்மேடை. வெள்ளிக்கிழமையென போற பேக்கில் அருகம்புல்லும், ஆவாரம்பூவும் பிடிங்கிப் போட்டு, கையெடுத்து கும்பிட்டுவிட்டு, தன் கையே தனக்குதவியென, காட்டு வேலைக்கு சென்றுவிடும் ஊர்மக்கள். அதுவே அதிகப்படி. நின்று கும்பிட நேரமில்லை என்பதைவிட அவர்கள் வேண்டுதல் அவ்வளவுதான். காடுகரை விளைய நல்ல மழைதண்ணியக்கொடு. எங்க சொத்து உடம்புதான். அதனால கைகால் சுகத்தைக்கொடு அம்புட்டுதான்.
சுற்றிலும் வெயில்சட்டையணிந்த எரிக்கும் பொட்டல் காடு. வேரில் மட்டுமே உயிர்பிடித்து வாழும் கருவேல மரங்கள் குளக்கரையெங்கும். ஊர்ப்பெயர் மட்டும் ஆவாரம்பட்டி. அடையாளத்திற்கு கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை தெரியவில்லை. அந்த வறண்ட நிலத்திலும் வேறு வழியின்றி கடனே என காய்ந்த புற்களை ஆடு, மாடுகள் புல்லின் அடித்தூரைக்கூட விடாமல் மேய்ந்து கொண்டிருந்தன.
உள்ளங்கைத்தண்ணீராய் குளம் வற்றி குட்டையாகிப்போக, இந்த வருடமும் ஐப்பசியும், கார்த்திகையும் கைவிரித்து விட, பூமிப்பந்தின் முதுகெங்கும் மின்னல் மின்னலாய் வெடித்துக் கிடக்க, சிப்பிகளாய் கரம்பை மண் ஏடு பெயர்ந்து கிடந்தது.
ஒரு காலத்தில் குளம் பெருகி, ஊருக்குள் தண்ணீர்வந்த கதையும் உண்டு. மீன்பிடி திருவிழாவிற்கென்றே சுற்றுவட்டார ஊர்ச்சனம் மொத்தமும் கால் வைக்க இடமில்லாமல் வளைத்துநின்ற குளம் இன்று கேட்பாரற்று கிடக்கிறது.
ஊருன்னு ஒன்னு இருந்தா, ஒன்னு… குளத்தை நம்பியிருக்கனும். இல்ல, ஆத்தை (ஆறு) நம்பியிருக்கனுங்கறது நாட்டு வழமை. ஆவாரம்பட்டி குளத்தை நம்பிய ஊர். குளம் வற்றிப் போனால், தாய்ப்பால் வற்றிய குழந்தையாய் அடுத்தகட்டமாக கிணற்று நீரும் வற்றிப் போகும். எந்தச்சாமி புண்ணியமோ போனால் போகுதென்று ஒன்றிரண்டு கிணறுகள் பாவம் பார்த்து நீர் சுரக்க, அதிலும் ஒரு சில மவராசன்கள் தொட்டித் தண்ணீரில் ஊர்மக்கள் நீர் எடுக்க முடியாதபடி சாணியை கரைத்துவிட்டு புண்ணியம் கட்டிக்கொள்வதும் உண்டு.
வானம் பார்த்த பூமிதான். அந்த வானமும் ஆகாத மருமகளாய் சில வருடங்களாக பூமியைப் பார்க்க மறுக்க, ஆடு, மாடுகளோடு மனிதர்களுக்கும் குடிதண்ணீர்க்கே பஞ்சமாகிப்போக இதில் பிள்ளையாருக்கு எங்கே போவது. அவரும் பஞ்சத்தில் அடிபட்ட பாவப்பட்ட ஜீவனாகிப்போனார். குடிதண்ணீர் பாடே இந்தப்பாடென்றால், கஞ்சிப்பாடு கேட்கவே வேண்டாம். கருமாயப்பட்ட பொழப்புதான்
அங்குதான் அந்த திருமண வைபவம். குளக்கரை பிள்ளையார் கோவில் மேடையில் மணமகனாய் திருநீலன் அமர்ந்திருந்தான். தலையைக் குணிந்து நாணிக்கோணி பெண் வந்து அருகில் அமரப்போக,
“நில்லு!” அதிகாரமாய் ஒலித்த குரல்,
“நான் கேட்ட நகை, பணம் கொடுக்காம கல்யாணம் நடக்காது. எம்மகன் எப்படி தாலிகட்றானு நானும் பாக்குறேன்!” என சிலிர்த்து நின்றது.
“க்க்கும்… உம்மகனுக்கு பொண்ணு கொடுக்கறதே பெருசு. இதுல உனக்கு பவுனு கேக்குதோ?” கழுத்தை வெட்டி நொடிப்பாய் ஒரு குரல் பதில் சொல்ல,
“ஏய் அழுக்கி!” என அதட்டியது மற்றொரு குரல். அதட்டியவனை மயிலென வெடுக்கென திரும்பிப்பார்த்தாள்.
“இப்படி பேசக்கூடாது! எப்படியாவது நீங்க கேட்ட நகைய தலைய அடகுவச்சாவது போட்டுர்றோம். கல்யாணம் நின்னுச்சுனா எங்குடும்ப மானமே போயிறும். ஊருக்குள்ள தலைகாட்ட முடியாது. தாலிகட்டச் சொல்லுங்கனு கெஞ்சனும்.” வசனத்தை எடுத்துக் கொடுக்க,
“போடா ஓட்டப்பல்லா! நானெல்லாம் கெஞ்சமாட்டேன்!” போட்டிருந்த இரட்டைச் சடையில் அரைச்சடைக்கு அவிழ்ந்து தொங்கிய ஒரு சடையை, சிவப்புக் கலர் ரிப்பனோடு, பின்னால் தூக்கி வீசிவிட்டு சிலிப்பிக் கொண்டாள்.
“இவள யார்றா இதுல சேத்தது?”
“சேக்கலைனா ஆட்டைய கலச்சு விட்ருவாடா.”
“இப்பவும் அதத்தானடா பண்றா” என இருவரும் தங்களுக்குள் கிசுகிசுக்க,
“அந்தப் படத்துல அப்படித்தான கெஞ்சுனாங்க. கால்ல கூட விழுவாங்களே?” என்றாள் மற்றொருத்தி.
“அதுக்காக என்ன கால்ல விழச்சொல்றியா? அது சினிமா.”
“இதுவும் என்ன, விளையாட்டுத்தான?”
“விளையாட்டுக்குக் கூட நான் யார்கிட்டேயும் கெஞ்ச மாட்டேன். போடா!”
“டேய் ஓட்டப்பல்லா! அவ எதுக்கு இப்படி அழுகுனி ஆட்டம் ஆடுறான்னு தெரியாதாடா?”
“எதுக்குடா?”
“இவள கல்யாணப் பொண்ணா உக்கார வைக்கலைங்கற காமாரம்டா.”
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல.” முகத்தை முகட்டுக்கு தூக்கினாலும் அப்படித்தான் என்றிருந்தது அவளது செய்கை.
“அப்ப நாங்க சொன்னமாதிரி கேக்க வேண்டியதுதான?”
“அதெல்லாம் முடியாது! எனக்கெதுக்கு பொண்ணுக்கு அம்மா வேஷம் கொடுத்த? அதனால நீ எது சென்னாலும் நான் கேக்கமாட்டேன்!”
“நெட்டைக்காலன மாப்பிள்ளையாக்கிட்டு, கட்டச்சிய பொண்ணா உக்காரவச்ச கோபம்டா. நீ எது சொன்னாலும் அவ கேக்கமாட்டா.”
“அவங்க ரெண்டு பேரும்தானடா மொறைமை. அதனால உக்கார வச்சேன். அதென்னடா… அவன்னா மட்டும் அம்பூட்டு ஒசத்தி?” அவன் பேச்சில் பொறாமை வேலி ஓணானாய் தலை தூக்கிப் பார்த்தது.
“அத அவகிட்டதான் கேக்கணும்” என விவாதம் நடந்துகொண்டிருக்க,
அவளுக்கே கேட்டால் காரணம் தெரியாது. ஏன் இவன் மீது மட்டும் இத்தனை உரிமையென்று!
ஒன்பது வயது சிறுமிக்கு பத்து வயது சிறுவன்மீது எதைக்கொண்டு ஈர்ப்பு வந்திருக்கும். அழகைக் கண்டு மயங்கப்போகிறாளா? ஆஸ்த்தியைக் கண்டு ஆசைப்படப் போகிறாளா? ஆனால் ஒருவித உரிமை இருவருக்கும், இருவர் மீதும்.
இருவரது அம்மாக்களும் ஒரே ஊரில் பிறந்து, ஒரே ஊருக்கு வாக்கப்பட்டு வந்தவர்கள். “இதோ… இதோ… என் நெஞ்சிலே ஒரே பாடல்” என சுற்றித்திரிந்தவர்கள். அது வாக்கப்பட்டு வந்த ஊரிலும் தொடர, இங்கு வைத்த கறிக்கொழம்பு அங்கு செல்லும். அங்க அவிச்ச இட்லி, தோசை இங்கு வரும். நல்லது பொல்லது மட்டுமல்ல, அவசியத் தேவை, அவசரத் தேவைக்கு கைமாற்றிக் கொள்வதும் உண்டு.
அழகியின் அம்மா இரண்டாவது பிரசவத்திற்கு இடுப்புவலி கண்டுகிடக்க, அம்மாவை விட்டு நகரமாட்டேன் என அடம்பிடித்தவளை, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, “சித்தா விளையாட பாப்பா வந்திருக்குடா… பாப்பாவ பத்திரமா பாத்துக்கோடா” என நான்கு வயதில், ஆவுடை தன் மகனிடம் சொல்லியதை இன்றளவும் கடைபிடிக்கிறான். அப்பொழுதிலிருந்தே இருவருக்குள்ளும் ஒரு இன்ம்புரியா பந்தம். இவர்களது பெற்றவர்களுக்கிடையேயான தோழமை பிள்ளைகளுக்கிடையேயும் ஒருவித பாசத்தையும் தாண்டி உரிமையை உண்டாக்கிவிட்டது. நெருங்கிய உறவுமுறை இல்லை எனினும், ஒரே ஊருக்குள் எனும்போது சுற்றிவளைத்து உறவு மாமன், மச்சான் முறைதான் இரண்டு குடும்பமும்.
அடுத்தடுத்த தெருவில்தான் வீடு. இருக்கறது நாலே தெரு. நாலுவகை சாதி. நூறிலிருந்து நூற்றைம்பதுக்குள்தான் வீடுகள். அதிலிருக்கும் எண்ணி நாலு காரைவீடுகளில் அவனது வீடும் ஒன்று.
ஒருகாலத்தில் அந்த ஊரின் முக்கால்வாசி சொத்து அவர்களுடையதுதான். இப்பொழுது கால்வாசி என்ன, கையகல இடம் கூட கையிருப்பு இல்லை வீட்டைத்தவிர.
மூன்று தலைமுறைக்கு வாழ்ந்த குடும்பமும் இல்லை, மூன்று தலைமுறைக்கு கெட்ட குடும்பமும் இல்லைனு சொல்லுவாங்க. போன தலைமுறை வரைக்கும் வாழ்ந்த குடும்பம். தற்சமயம் வாழ்ந்துகெட்ட குடும்பம். மழைதண்ணி இல்லாத காலத்துல வெறும் காடுகரைய வச்சுமட்டும் என்ன செய்யமுடியும்?
பிள்ளையார் கோவில் மேடையில் அரைக்கால்ச்சட்டையோடும், மேல் பட்டன் இரண்டு இல்லாத மேல்சட்டையோடும், என்னை முடிந்தால் அடக்கிப்பார் என சிலிர்த்து நின்ற தலைகொள்ளா முடியோடும், மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனையே வெறித்து நின்றாள் அழகம்மை. பூவுக்குள் பூகம்பம் போல புசுபுசுவென கோபத்தில் மூக்குவிடைக்க, தன் பொம்மை வேறொருவர் கைக்கு சென்றுவிட்டதை, எப்படியாவது பிடிங்கி எடுத்துக்கொள்ள வேண்டுமெனும் ஆத்திரம் அவள் கண்களில்.
அவளால் விட்டுக்கொடுக்க முடியவில்லை. தன்னுடைய பெற்றோர் மற்றொருவர் குழந்தையை கொஞ்சினால் வருமே அந்த சிறுபிள்ளை பொறாமை அவளிடம். சிறுபிள்ளைக்கே உரிய என்னுடையது எனும் உரிமை அவள் கண்களில் விடாப்பிடியாகத் தெரிந்தது. அவன் பக்கத்தில் தான்மட்டுமே அமர வேண்டும் என்ற எண்ணம். தங்களுக்குள் விவாதம் முடித்துவிட்டு,
“சரி… நீயே போயி பொண்ணா உக்காந்து தொல” எனச்சொல்ல, வீம்பாக முகத்தைத் தூக்கிக் கொண்டு,
“அப்படியொன்னும் போனா போகுதுன்னு நீ சொல்ல வேண்டாம்.” இறங்கி வரவும் மனமில்லை.
“டேய் சித்தா! வேடிக்கை பாத்துட்டிருக்கியே? ஏதாவது சொல்லேன்டா?” இவளிடம் ஆகாதென அவனிடம் தஞ்சமடைந்தான், ஓட்டைப்பல்லன் என பட்டப்பெயர் சூட்டப்பெற்ற முருகேசன்.
“அழகி, இங்க வா!”
அவன் அழைக்க, இவ்வளவு நேரமாக முறுக்கிக் கொண்டு நின்றவள், மந்திரத்திற்கு கட்டுப்பட்டவளாக அருகே போய் நின்றாள். ஆனால் முகத்தில் கடுகடுப்பு மட்டும் மாறவில்லை.
“அழுக்கிக்குப் போய் அழகின்னு பேரு வச்சுருக்குடா இவளோட அம்மா.”
“டேய், மெதுவா பேசுடா! இருக்குற கோவத்துல ஆட்டுக்குட்டிய எல்லாம் எங்கிட்டாவது பத்திவிட்டுறுவா. அப்புறம் நீதான் உங்க ஆத்தாகிட்ட ஏத்து வாங்கணும். அவன் கூப்ட்டதும் எப்படி போறா பாரு?” என கண்காமிக்க,
அவளையே பார்த்தவன், அருகில் நின்றவளை தள்ளச்சொல்லிவிட்டு, அவளை அமரச்சொல்ல மகுடிக்கு மயங்கிய பாம்பாய் அமர்ந்து கொண்டாள்.
“இப்பவாவது கல்யாணம் நடத்தலாமா? அப்ப, அம்மாவா யார்டா?” மீண்டும் அவர்களுக்குள் ஆலோசனை தொடங்க,
“அம்மாவே வேண்டாம்டா! அந்த தாலிய எடுத்துக் கொடுங்கடா, கட்டட்டும்!” என சலிப்போடு சடுதியில் அம்மா காதாபாத்திரத்தை கத்தறித்தனர்.
பிள்ளையார் முன்னிருந்த ஆவாரம்பூ முடிந்த வாழைநாரை, சித்தநாதனிடம் எடுத்துக் கொடுக்க, அவன் அழகம்மை கழுத்தில் கட்ட, டும்… டும்… டும்… என, வாயில் மேளம் வாசிக்க, கையில் வைத்திருந்த மஞ்சள் ஆவாரம்பூக்களை அட்சதையாகத் தூவ,
“டேய்! வாத்தியார் வர்றாருடாஆஆஆ!” என ஓங்கி ஒரு குரல் ஒலிக்க, அனைவரும் பின்னங்கால் பிடறி தட்ட ஆளுக்கொரு மூலையில் ஓடிப்பதுங்கினர். அப்படியிருந்தும் எண்ணிக்கொண்டே மூன்று முடிச்சுகளையும் போட்டுவிட்டுத்தான் கையை எடுத்தான் சித்தன். அவன் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அழகம்மை.
பெயருக்கேற்றாற்போல உண்மையாகவே அழகிதான். இவள் பிறந்து சுத்தம்செய்து மருத்துவச்சி கையில் கொடுத்தவுடன், வாங்கிய பொன்னுத்தாயி, ஒரு கணமும் யோசிக்காமல் ஆசையாக அழகம்மை என உடனே பெயர் சூட்டிவிட்டார்.
தண்ணீர் தடாகத்தில் பூக்க வேண்டிய தாமரை, தடம்மாறி கரிசல் காட்டில் பூத்திருந்தது.
குழந்தை முகத்தோடு குண்டு குண்டு கன்னங்கள், கோலிகுண்டு கண்கள், இழுத்து கொஞ்ச சொல்லும் கிளிமூக்கு. குட்டி சைஸில் எடுத்துவைத்த ஆரஞ்சு சுளை உதடுகள் அவன் தாலியாக வாழைநாரை முடிந்ததும் குழந்தைத் தனத்தோடு சட்டென மலர்ந்து சிரித்தது.
நேற்றிரவு பக்கத்து ஊர் திருவிழாவில், மந்தையில் திரைகட்டி ஓட்டிய சினிமா காட்சியைத்தான் இவ்வளவு நேரமாக தங்களுக்குள் ஓட்டிப்பார்த்து விளையாடிக் கொண்டிருந்தனர் அந்த கரிசல்காட்டு சிட்டுக்கள்.
முந்தின இரவு சினிமாப்பார்க்க அனுப்பவே அவளது அம்மா பொன்னுத்தாயி மறுத்துவிட்டாள். அவளாலும் மகளை அழைத்துச்செல்ல முடியாத நிலமை. பொண்டாட்டியை தனியேவிட்டு தங்கராசுவும் போகமுடியாது.
சட்டென சின்னவள் பூமுகம் வாடிப்போயிற்று. அதைப் பொறுக்கமாட்டாமல், தன் வீட்டு ஆட்கள் உடன்வருவதாகவும், தான் அவளைப் பார்த்துக் கொள்வதாகவும் மல்லுக்கட்டி அழைத்துச் சென்றான்.
ஆவுடைக்கு இந்த மாதிரி நாடகம், சினிமா என்றால் கொள்ளைப் பிரியம். காசு கொடுத்து சினிமா கொட்டகை போகமுடியாது. கல்யாணம் முடித்துவந்த புதிதில், கீற்றுக் கொட்டகையில் மணல் குவித்து அமர்ந்து பாலும் பழமும் படம் பார்த்தது. அதன் பிறகு கொட்டகை எந்தத்திசை என்று கூட மறந்து போயிற்று. ஆனால் கூத்து, நாடகம் என அக்கம்பக்கம் எங்கு நடந்தாலும்
அக்கம்பக்கத்து சிறுசுகளும், பெருசுகளும் கோணிப்பை, பழைய பாய் சகிதமாக கும்பல் சேர்ந்து கிளம்பிவிடுவர்.
விடிஞ்சா காடு, அடஞ்சா வீடு என இருக்கும் சனங்களுக்கு, திருவிழா நேரங்களில் ஊர்மந்தையில் போடும் நாடகமும், கூத்தும், கரகாட்டமும், திரைகட்டி காட்டும் திரைப்படங்களும்தானே பொழுதுபோக்கு. முதல் படம் எப்படியும் சாமி படமாகத்தானிருக்கும். திருவிளையாடலோ, சரஸ்வதி சபதமோ இரண்டில் ஒன்று நிச்சயம். இரண்டாவது படம் எம்.ஜி.ஆர் படமோ, சிவாஜி படமோ. அதற்குள் விடிந்துவிடும். முதல்படம் முடிவதற்குள்ளேயே பாதிபேர் தலை குடைசாய்ந்து படுத்துவிடும்.
இவன் போகிறான் என கூடவே அடம்பிடித்து வந்துவிட்டாளே ஒழிய, முதல் படம் திருவிளையாடலில் டிஷ்… டிஷ்… என மறைந்து தோன்றும் மாயாஜாலத்தை ஆர்வமாகப் பார்த்தவள், இரண்டாம் படம் போட்டதும் தலை சாமியாட ஆரம்பித்துவிட்டது அழகம்மைக்கு. விழப்போனவளின் தலையை தாங்கிப்பிடித்து விரித்திருந்த கோணிச்சாக்கில் சாய்த்துவிட்டவன், அவள் தலையைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டான். விடிந்தபின் தான் எழுப்பி கூட்டிவந்தான்.
“படம் முடிஞ்சுருச்சா?” எழுந்து கண்ணைக் கசக்கியவளை,
புனிதா, “நீ வீட்லயே தூங்கியிருக்கலாம் அழகி. இப்படி வந்து வீதியில படுக்கணுமா?” என,
“சித்தன் வந்தானுதான் வந்தேன் அத்தாச்சி. எனக்கு படம்பாக்க புடிக்கல.”
“தூக்கம் முழிக்க முடியலைனு சொல்லு. இவ சரியான தூங்குமூஞ்சிக்கா.” கிண்டல் செய்து சிரித்தாலும், இன்னும் தூக்கச்சடவோடு தள்ளாடி நடந்தவளை, கைத்தாங்கலாகத்தான் அழைத்துவந்தான்.
வீடுவரை இவளோடு வந்த ஆவுடை, “என்னடி… ஒடம்பு எப்படியிருக்கு? கண்ணெல்லாம் குழிவிழுந்து வட்டக்கண்ணு பட்டுருச்சு. விலாக்கடையெல்லாம் நல்லா எறங்கிருச்சு போல.” பொன்னுத்தாயை நலம் விசாரிக்க,
“ஒருவடியாத்தான்டி இருக்கு” என்றாள் சோர்ந்த முகமாக.
“கஞ்சி என்ன காச்சுன?”
“நேத்து பொழுதுசாய கம்பு இடிச்சுப்போட்டே ஆவடை. அதுவே இருக்கு. வெஞ்சனம் மட்டும் பாத்தா போதும்.”
“இதோட கம்பு இடிக்காட்டி என்னடி? நான் அரிசி கொடுத்துவிடுறே. பிள்ளைகளுக்கு காச்சி ஊத்து!”
“வேண்டாம் ஆவுடை. அங்க மட்டும் வெளையுதா என்ன?”
“போனமாசம் நெல்லறுக்கப் போன கூலிதான்டி! எதுனா ஒன்னுனா சொல்லிவிடுடி. ஒத்தையில கெடந்து அல்லாடாத!” என சொல்லிவிட்டு போனாள்.
இன்று ஆடுமேய்க்க வந்த இடத்தில் இரவு பார்த்த படத்தை தங்களுக்குள் ஓட்டிப்பார்த்து விளையாடினர்.
“மொளச்சு மூனு எலவிடல. அதுக்குள்ள கல்யாணம் கேக்குதோ? பள்ளிக்கூடம் வரமட்டும் கசக்குதா?” பின்னாலிருந்து வாத்தியார் காதைத் திருகிப்பிடித்து சித்தநாதனைத் தூக்கினார்.
“சார்! சார்…! வலிக்குது சார்! விட்ருங்க சார்!” என கத்திக்கொண்டே கையோடு காதைக் கொண்டு போனான்.
“பள்ளிக்கூடத்துக்கு வாங்கடி! நொச்சிக்குச்சி ஒடிச்சு வச்சுருக்கேன். இன்னைக்கு முதுகுல டின்னு கட்டுறே!”
கைக்கு சிக்கியவர்களை இழுத்துக் கொண்டு வாத்தியார் பள்ளிக்கூடம் செல்ல, சத்துணவு கணக்கர், மற்றும் இன்னொரு வாத்தியாரும் சேர்ந்து தங்களுக்கு சிக்கியவர்களை இழுத்து வந்தனர்.
அது ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே இருக்கும் ஆரம்பப் பள்ளி. இரண்டே ஆசிரியர்கள் தான். ஒன்றாவது, இரண்டாவதுக்கு ஒரு ஆசிரியர், மூனு, நான்கு, ஐந்து வகுப்புகளுக்கு ஒரு ஆசிரியர், அவரே தலைமை ஆசிரியரும் கூட. கைக்கு சிக்கியவர்களை வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஒரே இடத்தில் அமரவைத்தனர். இனிமேல்தான் எந்தெந்த வகுப்பென பிரிக்கவேண்டும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்து ஒருவாரமாகமாகியும், பள்ளி வராத பிள்ளைகளை, காடுகரையென ஆடுமாடு மேய்த்துக் கொண்டிருக்க, தேடிப்பிடித்து இழுத்து வந்தனர்.
அழகம்மை இன்னும் கழுத்தில் தொங்கிய பூ முடிந்த வாழைநாரோடுதான் அமர்ந்திருந்தாள். திருநீலனைவிட்டு விலகவில்லை.
தலைக்கு எண்ணெய் வைத்து, படிய தலைவாரி, முகத்திற்கு பவுடரை அப்பி, இருப்பதிலேயே கிழியாத உடுப்பை எடுத்துப் போட்டு, புதிதாக சேர்க்கவந்த பிள்ளைகள் வரிசையாக நிற்க, கையைக்கொண்டு தலையைச் சுற்றிவளைத்து காதைத் தொடச்சொல்லி, பள்ளி சேர்க்கும் வயது வந்துவிட்டதா என ஆராய்ந்தார் தலைமை ஆசிரியர்.
காதைத் தொடமுடியாதவர்களை அடுத்த வருடம் வந்து சேர்க்கச்சொல்ல, இந்த வருடமே சேர்த்துக் கொள்ளச்சொல்லி கேட்டுக் கொண்டிருந்தனர், ஒரு வேளைச்சோறை எதிர்பார்த்து பள்ளியில் சேர்க்கவந்த பெற்றோர்.
“சேத்துக்கோங்க வாத்தியாரே. வீட்ல வச்சு சமாளிக்க முடியல?” என்றவளை நிமிர்ந்து பார்த்தார்.
“வெள்ளச்சாமி பொண்டாட்டிதான?”
“ஆமா வாத்தியாரே! என்ன… தெரியாத மாதிரி கேக்குறீங்க?” அந்த சிறிய ஊருக்குள் இன்னார் வீட்டு ஆடு, மாடு என்பது கூட அனைவருக்கும் நல்ல பரிச்சயம்.
“ஒனக்கு எத்தனை பிள்ளைக?” வாத்தியார் கேட்க,
“வீட்ல இருக்கறதையும் சேத்து பொறந்தது ஏழு வாத்தியாரே. அதுல ரெண்டு குழிப்பிள்ளையாப் போச்சு. அது போக, மீதி அஞ்சு இருக்கு வாத்தியாரே.” எண்ணிப்பார்த்து கணக்கை கணக்காய் சொல்ல,
“நீதானே குடும்பக்கட்டுப்பாட்டுக்கு ஆள் சேர்க்க வந்த அம்மாவ அடிக்காத குறையா வெரட்டியடிச்சது?”
“பின்ன என்ன வாத்தியாரே! சாமி வரம் கொடுக்குது. நாங்க பெத்துக்கறோம். நாங்க வளக்குறோம். அந்தம்மா வந்து பிள்ள பெத்துக்காதீங்கனு கட்டுப்பாடு பண்ணக்கூப்புடுது. அதுவும் கொஞ்சங்கூட கூச்சநாச்சமேயில்லாம, ஒரு பொம்பள… கூட்டம்போட்டு ஆம்பள, பொம்பள எல்லாரையும் ஒன்னா கூட்டிவச்சு என்னென்னமோ பேசுது.”
இப்படி பேசுபவளை களையெடுக்கும் காட்டிலோ, கதிரறுக்கும் வயலிலோ பேசும்போது பார்க்கவேண்டும். பேச்சில் பச்சைவாடை தூக்கியடிக்கும்.
“ஏழு பெத்துக்கும்போது வராத வெக்கம் அந்தம்மா பேசுனதுல வந்துருச்சாக்கும். உங்களையெல்லாம் திருத்த முடியாது.” தலையில் தட்டிக்கொண்டு பெயரை பதிவேட்டில் எழுதினார்.
புதிதாக சேர்ந்த பிள்ளைகள் எல்லோருக்கும் ஆரஞ்சுமிட்டாய் கொடுக்க, தனக்குக் கிடைத்ததையும், அழகம்மை கையில் கொடுத்தான் திருநீலன்.
“உனக்கு?” என்றவளிடம், அடுத்து தருவதை வாங்கிக்கொள்வதாக கூறினான். தனக்குக் கிடைத்ததை மடியில் போட்டுக்கொண்டு, அவன் கொடுத்ததை கடைவாயில் அதக்கியவள் பளிச்சென சிரித்தாள். கலகலக்காத ஆனால், முகமும் கண்களும் மலர்ந்த சிரிப்பு. அவள் அப்படி சிரிக்கையில் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்ப்பான். அவளது அந்தக் குழந்தைத்தன சிரிப்பு அவ்வளவு பிடிக்கும் அவனுக்கு. திருநீலனுக்கு ஒரு அக்காவும், தங்கையும். அடுத்து இரண்டு பெண் பிறந்து இறந்துவிட்டது. இப்பொழுது ஒன்னு ஆவுடை வயிற்றில்.
“வாத்தியாரய்யா!” வெளியிலிருந்து குரல் கேட்க, நின்றிருந்தவர்களை விலகச்சொல்லி தலைநீட்டி எட்டிப்பார்த்தார்.
“ஆடுமாடு மேச்ச புள்ளைகள எல்லாம் புடுச்சுட்டு வந்தீங்களாம்ல?”
“என்னமோ புள்ளபுடிச்சுட்டு வந்ததாட்டம் கேக்குறதப்பாரு. தண்ணியில்லா காட்டுக்கு தூக்கிப்போட்டு உசுர வாங்குறாங்க.” தன்னால் புலம்பிக் கொண்டார்.
“அதுல நம்ம பொன்னுத்தாயி மக அழகி இருக்காளா?” என விசாரிக்க,
பிள்ளையைச் சேர்க்க நின்றிருந்தவர்களில் ஒருத்தி, உட்கார்ந்திருந்த பிள்ளைகளை பார்வையால் அலசி, “ஆமாக்கா… இருக்கா! என்ன சேதி?”
“அவ ஆத்தாளுக்கு புள்ள பொறந்திருக்கு. அவள வீட்டுக்கு போகச்சொல்லு!”
“பொறந்திருச்சா! எங்கிட்டோ சித்திரையத் தள்ளிட்டா போ. சித்திரையில ஆம்பளப்புள்ள பொறந்திருமோன்னு பயந்துட்டே இருந்தா. என்ன பிள்ளக்கா?”
“இதுவும் பொட்டப்புள்ளதான்டி. எப்ப அந்த சங்கிலிக்கருப்பன் கண்ணத்தொறப்பாரோ தெரியல?” ஐந்தாவதும் பெண்ணாய்ப்போன அங்கலாய்ப்பில் போறபேக்கில் சேதி சொல்லிச் சென்றுவிட்டார். வயிற்றுப் பாடுதான் பஞ்சப்பாடே ஒழிய, ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைச்செல்வங்கள் மட்டும் ஏழெட்டுக்கு குறையாது.
ஆறிலிருந்து அறுபது வரை படத்துல ரஜினி ஒரு கேள்வி கேப்பாரு. நம்ம நாட்ல ஏன் இவ்வளவு ஜனத்தொகை தெரியுமா? ஏழைக்கிருக்குற ஒரே பொழுதுபோக்கு இதுமட்டும்தான்னு பதிலும் சொல்லுவாரு.
அஞ்சு பிறந்தால் அரசனும் ஆண்டினு சொல்லுவாங்க. அழகம்மையின் அப்பா சாதாரண குமாஸ்த்தாகூட கிடையாது. பத்து, இருபது வெள்ளாடுகளை நம்பித்தான் ஜீவிதமே.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே, கருவேல நெற்றை, சரடில் தொடுத்து, காலில் கட்டியிருந்த சலங்கைச் சத்தம் ஒலிக்க, வேகமாக எழுந்து ஓடினாள் அழகம்மை. மடியில் வைத்திருந்த ஆரஞ்சு மிட்டாய்கள் மண்ணில் தெறித்து விழுந்திருந்தது.
‘நல்லா படிக்கிற புள்ள’ என வாத்தியார் பரிதாபமாகப் பார்த்தார். பள்ளிக்கூடம் வரப்போவதே உள்ளூரில் இருக்கும் ஐந்தாம் வகுப்புவரைதான். அடுத்து வெளியூருக்கெல்லாம் அனுப்பி படிக்கவைக்கப் போவதில்லை எனத்தெரியும்.
அவளையே ஏக்கமாகப் பார்த்தன சித்தநாதனின் கண்கள். இனி அவள் பள்ளிவர ஒரு மாதமேனும் ஆகும். தெருவில் விளையாடக்கூட வரமாட்டாள். வீட்டு வேலையெல்லாம் அவள்தான்.
முதல் பிரசவம்தான் தாய்வீடு. அடுத்தடுத்த பிரசவமெல்லாம கால் முளைத்த பெண் பிள்ளைகள் தலையில்தான். அதுவும் தலைநாளில் பெண்ணாகப் பிறந்துவிட்டால் அடுத்தடுத்த பிள்ளைகளுக்கெல்லாம் பெறாத தாய் அவர்கள்தான். அதனால் வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், பொறுப்பும், பேச்சும் தன்னால் வந்துவிடுகிறது. அழகம்மை என அறிந்துதான் பெயர் வைத்தாளோ என்னவோ?
“பிள்ள தூக்கியே குறுக்கு செத்துப்போச்சு இந்தப் பிள்ளைக்கி.” தாவாயில் கைவைத்து அங்கலாய்த்தாள் ஓடுபவளையே பார்த்துக் கொண்டிருந்த அத்தை முறையிலிருந்து அந்தப்பெண்.
*****
“ஷ்ஷ்ஷ்… ம்ப்ச்ச்… மொதல்ல இந்த மொகரக்கட்டைய வழிய்யா. அருகங்கட்டையா குத்துது.”
“ரவைக்கெல்லாம் சிணுங்குனவ. இப்ப மட்டும் குத்துதாக்கும்” என்றவன் கைகள் மலைப்பாம்பாய் வளைத்துச்சுருட்டி இழுத்து, தாவாயை கன்னத்தில் வைத்து தேய்க்க,
“பொசகெட்ட மனுஷா! எரியுது, தள்ளிப்போ அங்கிட்டு! காலங்காத்தால வேற வேலையில்ல. எந்திரிச்சுப்போயி பொழப்பு பாரு!” கைவைத்து தள்ள,
“இதுவும் என் பொழப்புதான்டி!” மீண்டும் மூச்சுமுட்ட பிடி இறுக, அதற்குள் பிள்ளையின் அழுகைச் சத்தத்தில் படுக்கை உதறி சட்டென எழுந்தாள் அழகம்மை.
[views]

Nirmala vandhachu 😍😍😍
Congratulations ma 🤗 🤗 🤗
Best wishes for your story ma 💐💐💐
Welcome dear 🥰🍫
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Superb Writerji
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫