மல்லி 28

“இளாஆஆ!”

 வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக பாய்ந்து வந்தவள் வேந்தன் சுதாரிக்கும் முன், அவன் மீதே விழ, தாங்கிப் பிடித்தவன், அவள் விழுந்த வேகத்திற்கு இரண்டெட்டு பின்னால் நகர்ந்து காலை தரையில் அழுத்தி ஊன்றி சமாளித்து நின்றான்.

ராஜாளி போல் கைகளை விரித்து அவளை அடக்கிக் கொண்டவனும், அடங்கியவளை எலும்புகள் நொருங்கும் அளவிற்கு இறுக்கியணைத்தவன் அணைப்பு, 

‘உன் இளா மாமன் பத்திரமா வந்துட்டேன்டி’ என சொல்லாமல் சொல்வது போல் இருந்தது.

அடக்கப்பட்ட உணர்வுகளின் பிரவாகம் மொத்தமாக அழுகையாக வெடித்து கிளம்பியது அவளுக்கு. ஒரு நாளும் இப்படி அழுததில்லை. பயம், தவிப்பு, ஏக்கம், ஏமாற்றம், உதாசீனம், எதிர்பார்ப்பு, ஆற்றாமை, கழிவிரக்கம் என இத்தனை வருட மன அழுத்தமும், புது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பை கூளம்போல, ஆங்காரமாக வெடித்து அப்படியொரு அழுகை, சிறுபிள்ளைபோல் அவனது கழுத்தைக் கட்டிக்கொண்டு, நெஞ்சே வெடித்து விடுவது போல். 

என்னதான் சூழ்நிலையில் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டாலும் மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்ததன் அறிகுறி அவனிடமும். அவளை இறுக்கி அணைத்து ஆறுதல் தேடிக்கொண்டான் எனத்தான் சொல்ல வேண்டும். அவன் கண்களும் கலங்கித்தான் இருந்தது. 

விபத்தைத் தொட்டு மீண்டவனை வாசலில் நிறுத்தி திருஷ்டி போக ஆர்த்தி எடுத்து உள்ளே அழைத்து வந்திருந்தார் தாமரை.‌ எவ்வித உடல்சேதம், உயிர்ச்சேதமுமில்லாமல் வீடுவந்த மகனைப் பார்த்து அவர் ஒருபக்கம் கண்ணீர் வடிக்க, இவ்வளவு நேரமாக ஆண் என்ற போர்வைக்குள் மனதை கல்லாக்கிக் கொண்டிருந்த அம்மையப்பனுக்கும், கணபதிக்குமே கண்கள் கலங்கிவிட்டது. உடனிருந்த மதியழகனும், செழியனுமே ஒருவரை ஒருவர் புன்னகையோடு பார்த்துக் கொண்டாலும் அவர்கள் கண்களுமே சிவந்திருந்தது. 

ஒரு நாள் முழுக்க அவள் தவித்த தவிப்பை பார்த்தவர்களாயிற்றே. 

வளைகாப்பிற்கு தேதி குறிக்க, ஐந்து பேராக திவ்யா வீட்டிற்கு கிளம்ப, பெரியவர்கள் மூவரும் பின்னால் அமர்ந்து கொள்ள, வேந்தன் காரை ஓட்ட பக்கத்தில் மங்கை. அலங்காரச் சிலையாக பக்கத்தில் இருந்தவளை அடிக்கடி அவன் பார்வை பக்கவாட்டில் திரும்பிப்பார்த்து தொட்டு மீண்டது. 

பின்னால் அமர்ந்திருந்தவர்கள் மும்மரமாக விசேஷத்தைப் பற்றி ஆலோசனை செய்துகொண்டு வர, மெலிதாக பாடலை காரில் ஒலிக்கவிட்டான்.‌

என் கண்ணுக்கொரு நிலவா 

உன்னை படைச்சான்

உன் நெஞ்சுக்கொரு உறவா 

என்னை படைச்சான்

ஒரு தாயாட்டம் உன்னை நான் 

தாலாட்டுவேன்

தினம் ஆராரோ ஆரிரோ

நான் பாடுவேன்

இப்பவும் எப்பவும் சீராட்டுவேன்

உச்சி வெய்யில் வேளை நீ நடக்க

பிச்சிப் பூவ நானும் பாய் விரிக்க

உச்சி முதல் பாதம் நான் சிலிர்க்க

உள்ளத்திலே ஆசை ஊற்றெடுக்க

முக்குளிக்க நானும் ஏங்கறேன்

முத்தெடுக்க நேரம் பார்க்குறேன்

கொஞ்சம் பொறு இரவாகட்டும்

வெக்கமது விலகி ஓடட்டும்

எப்பம்மா எப்பம்மா காத்திருக்கேன்

மொட்டுத்தான் விட்டு தான் பூத்திருக்கேன்…

பாடலின் ஒவ்வொரு வரிகளுக்கும் அவனின் கள்ளப் பார்வை அவளைத் தொட்டு சீண்ட, அவஸ்த்தையாய் நெளிந்தவள்,

ரோட்டைப் பார்த்து ஓட்டுமாறு ஜாடை செய்தாள். புருவத்தை உயர்த்தி, செல்லமாய்  கண்களை உருட்டி மிரட்டி, அவள் காட்டிய கண்ஜாடை அவனை கொக்கி போட, ஒரு கணம் சொக்கித்தான் போனான். சட்டென இதழ் குவித்து முத்தமொன்றை காற்றில் அனுப்ப, பின்னால் பெரியவர்கள் இருக்க, 

அடுத்து திவ்யா வீடு செல்லும் வரை அவன் பக்கம் மறந்தும் பார்வையைத் திருப்பவேயில்லை மங்கை. இருவர் முகத்திலும் இதழ்விரிந்த புன்னகை அப்பிக்கிடந்தது. 

சம்பந்தி வீடு வர, வரவேற்பு தடபுடலாக இருந்தது. பெண் கொடுத்த சம்பந்தி மட்டுமில்லை. பெண் எடுக்கப்போகும் சம்பந்தமாயிற்றே. மகள் வாழப்போகும் வீட்டார். 

இவர்கள் வருவது தெரிந்து மதியழகன் வீட்டில் இருந்தான். மாணிக்கம் மட்டும் மதியம் சாப்பாட்டு நேரத்திற்கு வருவதாக கடைக்கு சென்றிருந்தார். ஏழாம்மாதம் இறுதியில் பிள்ளை வயிற்றோடு மகளைப் பார்த்தவர்களுக்கு சந்தோஷமும் பூரிப்பும். பாக்கியமும், முத்துவும் சமையலை கவனித்தனர். 

திவ்யாவும் உதவிக்கு வர, “வந்தவங்களோட பேசிட்டுரு” என மருமகளை அனுப்பிவிட்டார். 

மாணிக்கமும் வந்துவிட ஏற்கனவே குறித்து வாங்கிவந்திருந்த இரண்டு, மூன்று தேதிகளில் தங்களுக்குத் தோதான தேதியை இரண்டு குடும்பமும் கலந்தாலோசித்து, மாதக்கணக்கிற்கு ஒன்பதாம் மாதம் தொடங்கும் தேதியை தேர்வு செய்தனர். இடையில் ஒரு மாதமிருக்க, அதற்குள் மண்டபம், மற்ற ஏற்பாடுகளை கவனிக்க சரியாக இருக்கும். 

மனமும், வயிறும் திருப்தியாக மதிய விருந்தும் முடிந்தது. 

சாப்பிட்டு முடித்தவர்கள், பெரியவர்கள் ஒருபுறமும், முத்துப்பேச்சி, திவ்யா, மங்கை என பெண்கள் ஒருபுறமுமாக அரட்டைக்கச்சேரி நடந்தது. 

மாணிக்கம் வீடு வந்துவிட்டதால் மதியழகன் கடைக்கு கிளம்ப, ஒரே இடத்தில் உட்கார முடியாமல் வேந்தனும் உடன் கிளம்பிவிட்டான்.‌ 

ஆர்த்தியும், மங்கை வருவது தெரிந்து அவளைப் பார்க்க திவ்யா வீட்டிற்கே வந்துவிட்டாள். பெண்கள் திவ்யா அறைக்குள்தான் முகாமிட்டிருந்தனர். இடுப்பிற்கு இலகுவாக தலையணை வைத்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. 

“ஆர்த்தி, அடுத்து என்னடி?” மங்கை கேட்க,

“என்ன… என்னடி?”

“மேல படிக்கப்போறீயா, வேலைக்கு போகப்போறீயா?”

“ஏன்டி! நீ போனதாலதான என்னைய எங்க வீட்லயும் காலேஜ் அனுப்புனாங்க. நூடுல்ஸ் மாதிரி உங்களுக்கெல்லாம் ரெடிமேட் மாப்பிள்ளை கெடச்சுருச்சு. எங்க வீட்ல இப்பதான் தேடவே ஆரம்புச்சுருக்காங்கப்பா.” படிப்பு முடிந்ததால் அவள் வீட்டிலும் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். 

“அப்ப கூடிய சீக்கிரம் டும்டும் தான்னு சொல்லு.”

“எங்க, எங்கம்மா போடுற கண்டிஷனெல்லாம் பாத்தா இப்போதைக்கு ஆகாதுடி.”

“ஏன்டி அப்படி சொல்ற?”

“எங்கம்மா கல்யாணத்துக்கு போடாமவிட்ட கண்டிஷனெல்லாம் என் கல்யாணத்துக்கு போடுறாங்கடி. கேக்கறவங்க தலதெறிக்க ஓடுறாங்கப்பா. இவங்கெல்லாம் கல்யாணம் பண்ணி என்னத்த வாழ்ந்துட்டாங்கனு நமக்கும் மாப்ள தேடுறாங்கனு புரியல. வேண்டாம்னு சொன்னாலும் விடப்போறதில்ல. அதனால மெதுவா பாக்கட்டும்னு நானும் கண்டுக்கல.” சலித்துக் கொண்டவளைப் பார்த்து மூவரும் சிரித்தனர்.

செக்கு மாடு போல வீடே உலகம் என ஒரு வட்டத்தில் சுற்றிய, போன தலைமுறை அம்மாக்களின் ஆதங்கமும், அவர்களைப் பார்த்து வளர்ந்தததாலோ என்னவோ இந்தத் தலைமுறை பிள்ளைகளின் திருமணவாழ்க்கை இந்தளவிற்கு சிக்கலாகி நிற்கிறதோ எனத் தோன்றுகிறது.

ஆண் என்பது மட்டுமே கல்யாணத்திற்கான தகுதியாக இருந்தது ஒரு காலகட்டம். ஒரு வீட்டில் இரண்டிற்கும் மேற்பட்ட பெண்பிள்ளைகள் இருக்கும் பொழுது அடுத்தடுத்து வெளியேற்ற வேண்டிய கட்டாயம், பொறுப்பு பெண்களைப் பெற்றவர்களுக்கு.‌ 

குடும்பம் பரவாயில்லையா? சம்பாத்தியம் இருக்கா இல்லையா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம், மாப்பிள்ளைக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லையா… அதுநாள்வரை வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி அவர்கள் சேர்த்து வைத்ததெல்லாம் போட்டு, பிடி பெண்ணை என கட்டிக்கொடுத்த காலகட்டம் அது. விருந்து, போக்குவரத்து என ஒரு வருடம் போட்ட நகைகள் கழுத்தில் தாக்குப்பிடிப்பதே அரிது. அடுத்து நகைகளை கண்ணால் பார்க்க வேண்டும் என்றால் கல்யாண ஆல்பத்தில் பார்த்துக் கொண்டால்தான் உண்டு. 

தொழில், பிள்ளைகள் படிப்பு, இடம், வீடு என அது மீண்டும் பீரோவை எட்டிப்பார்ப்பதுகூட கிடையாது. பெற்றவர்கள் சிறுகச்சிறுக சேர்த்து போட்டதை பெண்பிள்ளைகள் என்றுமே கழுத்தில் போட்டு அழகு பார்த்ததில்லை. 

அடுத்து இவர்களும் முதலிருந்து வாயைக் கட்டி, வயித்தைக்கட்டி கூட்டத்தில் நாலுபேரோடு நாமும் ஒன்னு சேரணுமே என, இங்கு ஆட்களோடு சேரவேண்டும் என்பது கூட்டத்தோடு சேரவேண்டும் என்று அர்த்தம் இல்லை. அந்தக் கூட்டத்தில் தனித்து தெரியும் நாலு பேரோடு நாமும் சேரவேண்டும் என்பது. தொழில், பிள்ளைகள் படிப்பு, கல்யாணத்திற்கு சேமிப்பு, சொந்தமாய் ஒரு வீடு என ஒவ்வொன்றையும் அடித்தளத்தில் இருந்து ஆரம்பித்து, உருவாக்கித் திரும்பிப் பார்த்தால் காலமும், இளமையும் போன வேகமும், மாயமும் தெரியாது. 

கதைகளில், முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறினான் என ஒருவரியில் சொல்லிவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து… என கட் பண்ணி ஓபன் பண்ணுவது போலவோ, சினிமாக்களில் ஒரே பாட்டில் முன்னேறுவது போலவோ நிதர்சனம் ஒன்றும் அத்தனை எளிதல்லவே. 

என்ன வாழ்ந்தோம் என நாற்பதுகளில் நின்று மூச்சு வாங்கி திரும்பிப் பார்த்தால், தேவைகள் நம்மை துரத்த ஓடிய ஓட்டம் தவிர ஒன்றுகூட நினைவில் இருக்காது. இந்த வெறுமையும்,‌ சலிப்பும், தங்கள் மனக்குமுறலுக்கான வடிகாலாகவும்தான் இன்றைய கல்யாணச்சந்தையில் பெண்கள் தராசு மேலோங்கி ஆண்கள் தராசு கீழிறங்கி நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. 

அன்று வெளிஉலகத் தொடர்பும் பெண்களுக்கு அரிது. வீட்டில் பெரியவர்கள் சொன்னதுதான் சரி. எழுபது, எண்பதுகளில் எந்தவொரு மேற்கத்திய நாகரீகமும், பழக்கவழக்கமும் இந்தியா வந்து மும்பை தொட்டு, சென்னை வந்து ட்ரென்ட் ஆவதற்கே குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் ஆகியிருக்கும். அதற்குள் அங்கு அது பழசாகியிருக்கும். கடைக்கோடி கிராமங்களில் அது எட்டிக்கூட பார்த்திருக்காது. அதற்கான ஒரே ஊடகமும் சினிமா மட்டுமே. (நமக்கெல்லாம் நதியானு ஒரு நடிகை வரலைனா மாடர்ன் ட்ரெஸ்களோட பேரு கூட தெரிஞ்சிருக்காது. சுடிதாரே மாடர்ன் ட்ரெஸ்னு போடவிட்டதில்ல.) 

ஆனால் இன்று காலம் அப்படியல்லவே. உலகின் எந்த மூலையிலும், காலையில் ஒன்று ட்ரென்டில் வந்தால் மாலைக்குள் உலகம் முழுதும் மூலைமுடுக்கெல்லாம் பரவி பழசாகிப்போகிறது. அந்தளவிற்கு பெண்களுக்கும் இன்று வெளி உலகம் தெரிகிறது.‌ 

நகர்ப்புற ஆண்களைத் தவிர, இன்னும் கிராமப்புற ஆண்பிள்ளைகளின் கல்வித்தரம் பெரும்பாலும் பள்ளியைத் தாண்டி மேலோங்கவில்லை. ஆனால் பெண்பிள்ளைகள் கல்வித்தரம் ஒரு டிகிரி என்றளவிலாவது மேலோங்கிவிட்டது. இதுவும் ஒரு முக்கிய காரணம் ஆண்பிள்ளைகள் கல்யாணச் சந்தையில் பின்தங்கிப் போவதற்கு. அன்று போல் இன்று வரிசையில் பிடித்துத்தள்ள வீட்டில் பின்னால் பெண்பிள்ளைகள் இருப்பதில்லை. பெரும்பாலான வீடுகளில் ஒரு பெண்பிள்ளைதான். 

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் விலங்குகள், பறவைகள் தன் இணையைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியைப் பார்த்தால் ஒன்று புரியும். 

இரண்டு ஆண் விலங்குகள் தன் பலத்தை சண்டையிட்டு நிரூபித்த பிறகுதான் பெண் விலங்கு ஆண்விலங்கை தேர்ந்தெடுக்கும். பறவைகள் கூட அழகாக கூடுகட்டி அதை பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து, குட்டிக்கர்ணம் அடிக்காத குறையாக பல வித்தைகள் காட்டிய பிறகுதான் பெண் பறவை அதை திரும்பியே பார்க்கும். நம்ம வீட்டு அடுப்படி சன்னல்வழியாக (பெரும்பாலும் நாம இருக்கறது அங்கதான) தோட்டத்து அணில்களைப் பார்த்தால் தெரியும். எந்தளவிற்கு வாலை பெரிதாக்கி உயர்த்தி, சப்தமாக குரல் எழுப்புகிறதோ அதைப்பார்த்துதான் பெண் அணில் நெருங்கி வரும். 

ஏன்… தெரு நாய்கள் கூட எந்தளவிற்கு உயரமாக போஸ்ட் கம்பத்தில் சிறுநீர் கழிக்கிறதோ அதை வைத்துதான் பெண் நாய்கள் ஈர்க்கப்படும். இது எங்க ஏரியா உள்ள வராதே என அடுத்த தெரு நாய்களை எச்சரிக்கை செய்ய சிறுநீர் கழிப்பதற்கும், பெண் நாய்களை ஈர்ப்பதற்கும் நிறைய வித்யாசம் உண்டு. 

நாமும் கூட ஒரு காலத்தில் சுயம்வரம், கல்யாணக்கல், ஏறுதழுவுதல் என ஆண்களுக்கு வீர விளையாட்டுகள் வைத்து ஆண்களை தேர்ந்தெடுத்தவர்கள்தானே. உடல் உழைப்பு மட்டுமே பிரதானமாக இருந்த காலக்கட்டங்கள் என்பதால் உடல்பலம் காட்டப்பட்டது. தனக்கான ஆணைத் தேர்ந்தெடுப்பதில் புள்ளினம் முதல் ஆறறிவு மனிதன் வரை பெண்கள் கையில்தான் இருந்தது. வேட்டையாட, எதிரி குழுக்களிடமிருந்து தங்களை காக்க, காலமாற்றத்தில் போர்புரிய வேண்டி அடுத்து திடகாத்திரமான வம்சாவளியை உருவாக்க வேண்டிய அவசியம் பெண்ணிற்கு இருந்தது. 

ஆறடி உயரத்தில், படிக்கட்டு தேகம், ஆல் இன் ஒன் அழகுராஜா என கெத்து காட்டும் ஆன்டி ஹீரோஸ் கதைகள் பெண்களை ஈர்ப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். (என்னதான் வாய் பெண்ணியம் பேசினாலும் சில விஷயங்கள் நம் மரபணுவில் ஊறிப்போனது)

இன்று அப்படியில்லை. காலப்போக்கில் வரதட்சணையின் அடிப்படையில் ஆண்கள், பெண்களை தேர்ந்தெடுக்கும் காலம் வந்தது. ஆண்கள் கை ஓங்கியிருந்த காலகட்டமது. 

பரிசப்பணம் என்பதே பெண்ணிற்கு ஆண் வீட்டார் கொடுப்பதுதான். இன்று அது சடங்களவில் நின்றுவிட்டது. இன்றளவும் மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை வட்டாரங்களில் பெண்ணழைப்பிலிருந்து திருமணச்செலவு முழுதும் ஆண்வீட்டார் திருமணம்தான். (சென்னை வந்தபின்னாடிதாங்க கல்யாணமும் பெண் வீட்டார் செலவுலதான் பண்ணுவாங்கனே எனக்கு தெரியும். நமக்கு அந்தளவுக்குதான் வெளி உலக விபரம்.)

ஒருபுறம்… இத்தனையும் பார்த்து, அனுபவித்து, நிராசையோடு சலித்த மூத்த தலைமுறை அம்மாக்கள், இன்று கல்யாணத்திற்கு பல எதிர்பார்ப்புகளை பெண் வீட்டார் சார்பில் வைக்கிறார்கள் என்றால், 

மறுபுறம்… என்னதான் ஹவுஸ் வொய்ஃப் என்பது ஹோம் மேக்கர் என வார்த்தைஜாலம் பெற்றாலும் போன தலைமுறை அம்மாக்களைப் பார்த்து, சலித்த இன்றைய தலைமுறைப் பெண்கள் எதற்கு கல்யாணம் என்ற மைன்ட் செட்டிற்கும் வந்துள்ளனர்.‌ ஆக மொத்தம் மாற்றங்கள் இரண்டு தலைமுறைகளிலும் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது. அது ஆரோக்கியமானதா என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம். 

இது ஒரு பக்கம் என்றால் எங்களுக்கு எந்த கமிட்மென்ட்ஸும் வேண்டாம், நாங்கள் சுதந்திர பறவைகள் என லிவ் இன் ரிலேஷன்ஷிப் கலாச்சாரத்துக்கு ஒரு கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது. நாடோடிகளாக, விலங்குகளோடு விலங்குகளாகத் திரிந்தவர்களை குடும்பம், உறவு, சமூகம் என்றொரு கட்டமைப்பிற்குள் கொண்டு வந்தது திருமணங்களே. ஒரு கட்டமைப்பிற்குள் அடங்காமல் தான்தோன்றித்தனமாக என் வாழ்க்கை என் இஷ்ட்டம் எனத்திரியும் சமூகம் விரைவில் கெட்டுச் சீரழியும் என்பது கண்கூடாக நாம் பார்க்கும் உண்மை. 

“உங்கம்மா அனுபவம் பேசுது போல?” என முத்துப்பேச்சி கேலி பண்ண, பெண்கள் மூவரிடையே சிரிப்பு மட்டுமே. 

“அதென்னமோ உண்மை தாம்ப்பா. என்னைப்போல எம்பொண்ணும் கஷ்ட்டப்படக்கூடாதுனு சொல்லியே வர்ற சாதகமெல்லாம் தட்டிக்கழிக்கிறாங்க.” 

“விடுடி! கூடிய சீக்கிரம் உன் மனசுக்குப்புடிச்ச, நீ எதிர்பார்த்த மாதிரி, இல்ல… இல்ல… உங்கம்மா எதிர்பார்த்த மாதிரி நல்லா படிச்ச, நல்ல வேலையில இருக்க, கார், வீட்டோட வசதியான, எங்கு தேடினாலும் கிடைக்காத நல்ல வரன் அமைய வாழ்த்துக்கள்”  காலயாணமாலை ஸ்டைலில் மங்கை வாழ்த்த,

“சரிங்க பெரிய மனுஷி. எங்க தேடினாலும் கிடைக்காதவன்னா… திருட்டுப்பயலா?” 

ஆர்த்தி கேட்க, குலுக்கிப் போட்ட சோழியாய் பெண்கள் சிரிப்பு சத்தம் அறைமுழுதும். சாப்பிட்டு நேரமாகியிருக்க, திவ்யாவிற்கு ஜுஸ் போட்டவள், அப்படியே எல்லாருக்கும் எடுத்துவந்தாள் முத்துப்பேச்சி. 

சற்று நேரம் பேசிவிட்டு கிளம்பியவள், போகும் பொழுது.

“மங்கா! கார்த்திகா நேத்து வயசுக்கு வந்துட்டாடி.” 

போர போக்கில் ஆர்த்தி தகவல் சொல்லிச் சென்றாள். அதைக் கேட்டவுடன் மங்கைக்கும் அவளைப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது. சிறுவயதிலிருந்து ஒன்றாக வளர்ந்தவள் ஆயிற்றே. தாய்மாமன் மகளும் கூட. கேட்டால் இவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கம். இவ்வளவு தூரம் வந்துவிட்டு அம்மாச்சியையும் பார்க்காமல் செல்ல முடியாது. 

ஆர்த்தியை வழியனுப்ப வாசல்வரை வந்தவள், வேந்தனும், மதியழகனும் வர, இவள் அவனைப் பார்த்து ஏதோ கேட்க தயங்கி நிற்பதைப் பார்த்தான்.‌ மதியழகன் உள்ளே செல்ல, 

“என்ன?” என இவளருகே வந்தான்.‌

“அம்மாச்சியப் பாக்கணும்” என்றாள்.

“போலாம், இத கேக்க ஏன் இவ்வளவு தயக்கம்? இங்க வரைக்கும் வந்துட்டு பாக்காம போனா நல்லாருக்காது.”

“அது மட்டுமில்ல, கார்த்திகா வயசுக்கு வந்துட்டாளாம். நமக்கு சொல்லாம எப்படி போறதுன்னு?”  தயக்கத்தோடு இழுக்க, 

அவனுமே யோசித்தான். மாமா வீட்டிற்கு என்றால் சாதாரணமாக போய் பார்த்துவிட்டு வரலாம். விசேஷம் எனும் பொழுது சொல்லாமல் போக முடியாதே.‌ கெட்டதுக்குதான் சொல்லாமலே போகவேண்டும். நல்ல காரியம் எனில் அழைக்காமல் போகமுடியாது.

“வேணும்னா நீ மட்டும் போய்ட்டு வர்றியா?” 

வேந்தன் கேட்க முகம் உம்மென ஆயிற்று.‌ தேவையில்லாத அத்தையின் பேச்சுக்கு வழிவகுக்கும். உன்னைக் கட்டிக்க என் அக்கா மகனை விட்டால் யார் வருவாங்க என எத்தனை பேசியிருப்பார். அவர் முன் ஜோடியாக போய் நிற்கவே ஆசைப்பட்டாள்.‌ அவள் முகத்தை பார்த்தவன்,

“கொஞ்சம் பொறு! பெரியவங்ககிட்ட கேட்டுட்டு போலாம்“ என்றவன் தாமரையிடம் விபரத்தை கூற, 

“நமக்கு சொல்லலைனா என்னடா, அவ அம்மாச்சிய பாக்க வேண்டாமா? கூட்டிப் போயிட்டு வா! ஆனா கை நனைக்க வேண்டாம். விசேஷத்துக்குனு சொன்னா பாத்துக்கலாம்” என்றார். 

பூ, பழம், இனிப்பு வாங்கிக் கொண்டு ரெங்கநாதன் வீட்டிற்கு வந்தனர். திடீரென புருஷனோடு வீட்டிற்கு வந்த பேத்தியைக்கண்டு மாரியம்மாளுக்கு அப்படியொரு பூரிப்பு முகத்தில். கன்னம் வளித்து கொஞ்சினார். கடமைக்கு வரவேற்றார் தமிழ்ச்செல்வி. என்னைக்கும் கண்ட குருநாதன்தானே என கண்டுகொள்ளவில்லை. செல்வராணியும் அங்குதான் இருந்தார். முன்தினம் தங்கை மகள் வயசுக்கு வந்ததிலிருந்து அங்குதான் இருக்கிறார். இவர்களைக் கண்டதும் வீட்டிற்கு கிளம்பிவிட்டார். 

பேத்தி வந்ததும் விருந்திற்கு ஏற்பாடு செய்ய மாரியம்மாள் பரபரத்தார். மங்கை மறுக்க, பங்காளிளுக்குள்ள தீட்டு இல்லை என கூற, இதுதான் சாக்கென செல்வியும் தண்ணீர் கொடுத்ததோடு சரி.‌ 

“இல்ல அம்மாச்சி. நேரமாகுது. நாங்க கெளம்பறோம். விசேஷத்துக்கு சொன்னா பாக்கலாம்.” 

மறைமுகமாக விசேஷத்திற்கு அழைப்பு விடுக்கச்சொல்லியவள், வாங்கி வந்ததை கார்த்திகாவிடம் கொடுத்துவிட்டு கிளம்பினர். தாய்மாமன் உறவாயிற்றே. விட்டுக்கொடுக்க மனமில்லை. 

“இன்னும் யாருக்கும் சொல்லல மங்கா. நேத்துதானே வந்தா. நல்லநாள் பாத்து, முறைப்படி தாய்மாமன் வீட்டுக்கு சொல்லிட்டுதானே எல்லாருக்கும் சொல்லணும். தண்ணி ஊத்தயில மாமா சொல்லுவான். கண்டிப்பா வரணும்!” என முன்கூட்டியே பேத்திக்கு அழைப்பு விடுத்தவர், முறைப்படி அழைப்பதாக வேந்தனிடமும் கூறினார்.

திவ்யா வீடு வந்தவர்கள் சொல்லிக்கொண்டு தேனி கிளம்பினர். மாலையாகிவிட்டது. வரும் வழியில் பஸ் கம்பெனி வரை சென்றுவருவதாக வத்தலக்குண்டிலேயே காரை நிறுத்தி வேந்தன் இறங்கிக் கொண்டான். 

இவர்கள் ஆஃபிஸ் அருகே காரை நிறுத்த, அம்மையப்பனும், கணபதியும் டீ குடிக்க இறங்கினர். இவ்வளவு நேரம் உட்கார்ந்து வந்தது முழங்கால் வலிக்க தாமரையும் இறங்கிக் கொண்டார்.‌ அருகில் இருந்த கடையில் எல்லாருக்கும் டீ சொன்னான். 

பக்கத்தில் இருந்த பூக்கடையில் மல்லிகைப் பூ வாங்கியவன், காரில் அமர்ந்திருந்தவளிடம் கொடுத்தான். 

“தலையில இருக்கறது வாடிருச்சு. போனவுடனே சேலைய மாத்திறாத. சீக்கிரமா வந்துர்றேன்.” 

குனிந்து ரகசியமாக கண்சிமிட்டி சொல்ல நாணச்சிரிப்போடு கண்களில் காதல் பொங்க, வைத்த கண் வாங்காமல் கன்னம் சிவக்க பெண்ணவள் பார்த்த பார்வையும், அது சொன்ன சேதியும் முற்றிலும் புதிது வேந்தனுக்கு. அப்படியே கண்களில் நிரப்பிக் கொண்டான். 

டீ குடித்துவிட்டு கணபதி முன்னுக்கு வந்து காரை எடுத்தார். மகன் வீடு வரவும் கிளம்பலாமென தாமரையும் அம்மையப்பனும் மீண்டும் பெரியகுளத்திற்கே வந்தனர்.  வெகுநாட்கள் கழித்து அன்று தாமரை தாய் வீட்டில் தங்கினார். பெற்றவள் இருக்கும் வரைக்கும்தான் தாய்வீட்டு சீராட்டென கனகத்திற்கு பிறகு தாமரை அதிகம் வந்ததில்லை. கனகத்தின் குணமறிந்து அம்மையப்பனும் தாமரையை அதிகம் பிறந்த வீட்டிற்கு வரவிட்டதில்லை. 

காலையில் வைத்த குழம்பு இருக்க, எடுத்து சூடு செய்து வைத்துவிட்டு, தேங்காய் சட்னி மட்டும் அரைத்து தோசை ஊற்றிக் கொள்ளலாம் என மாமியாரும், மருமகளும் முடிவு செய்தனர். தாமரை டிவியின் முன் அமர்ந்துவிட, ஆண்களுக்கு அரசியல் பேசுபொருளாக, சற்று நேரத்தில் வேந்தன் கணபதிக்கு அழைத்தான்.‌

அவன் சொன்னதைக் கேட்டவர்,‌ “வேற யாரும் இல்லையாடா?” என,

“இருக்காங்க மாமா. ஆனா இந்த ரூட்ல செக்கிங் போயும் ரொம்ப நாளாச்சு மாமா” என்றான். 

எப்பவும் திடீரென பயணிகளோடு பயணியாக ஏதாவதொரு ரூட்டில் இவனோ, கணபதியோ, இல்லை வேறு யாராவதோ பயணிப்பது வழக்கம்தான். 

கொடைக்கானலிலிருந்து இறங்கிவந்து கொண்டிருந்த சென்னை செல்ல வேண்டிய பஸ் ஓட்டுனரின் அம்மா, தவறிவிட்டதாக தகவல் வந்தது. பஸ் இன்னும் வத்தலக்குண்டு வந்து சேரவில்லை. மாற்று ஓட்டுனருக்குப் பதிலாக இவனே செல்ல முடிவெடுத்தான். கல்யாணம் முடிந்ததில் இருந்து எந்த ரூட்டிலும் செக்கிங் செல்லவில்லை. தன்னுடைய வெள்ளை பேன்ட் சட்டையை ஏதாவதொரு பஸ்ஸில் கொடுத்துவிடச் சொல்லி மங்கைக்கும் ஃபோன் செய்தான். 

‘கடமை கண்ணாயிரம்’ என நொந்து கொண்டவள் பையில் ட்ரெஸ்ஸை எடுத்துப்போட்டு கணபதியிடம் கொடுத்துவிட்டாள். 

தாமரை சொல்லியும் கூட இவ்வளவு நேரமாக சேலையை மாற்றாமல்தான் இருந்தாள். சோர்வாக கண்ணாடி முன் வந்தாள். தலையிலிருந்த வாடிய மல்லியை எடுத்து வீசி எறிந்தாள். ஏனோ காரணமேயில்லாமல் கோபமும், எரிச்சலும் போட்டி போட்டு வந்தது. போகும் போது அவசரமாக கழட்டிப்போட்ட துப்பட்டா கட்டிலில்  கிடக்க, எடுத்து சுருட்டியவள், எதிரில் சுவற்றில் மாட்டியிருந்த கல்யாண போட்டோவில் அவன் மீது கோபமாக விட்டெறிந்தாள். 

இன்று செல்பவன் வர இன்னும் இரண்டு நாட்களாகும். இன்று இரவு செல்பவன், மறுநாள் பகல் முழுதும் ஓய்வு, நாளை இரவுதான் அங்கிருந்து பஸ் கிளம்பும். மறுநாள் காலைதான் வந்து சேருவான். 

இத்தனை நாட்களாக உடன் இருந்த பொழுது வராத ஏக்கமும், தவிப்பும் இப்பொழுது மனம் முழுக்க வியாபித்து அவளை அவஸ்த்தையாய் இம்சித்தது. அவனில்லாத தனியறை வெறுமை கூட்ட, இப்பொழுதும் அவன் சொல்லிச் சென்றதே காதில் ஒலித்தது.

கிளம்புமுன் அழைத்தவனிடம், நெடுந்தொலைவு செல்பவனிடம் கோபத்தை காட்ட முடியாமல், “நான் சொல்லல?” என்றாள் நக்கல் கலந்து. 

“என்னடி சொன்ன?”

“மொசப் புடிச்சுட்டாலும்” என இழுக்க,‌

“அடியேய்!” என வாய்விட்டு சிரித்தவன், 

“வந்து வச்சுக்கரேன்டி. வாய் ஓவரா பேசுது.” மலர்ந்த சிரிப்போடு வைத்துவிட்டான். இவளுக்குதான் ஆயாசமாக வந்தது. ஃபோனை கட்டிலில் வீசியவள், பொத்தென கட்டிலில் குப்புற விழுந்தாள்.‌ அவனில்லாத அறையின் அமைதியும், தனிமையும் அவளை கொல்லாமல் கொன்றது. 

மலரின் மெல்லிய காமம் என‌ சொன்ன அதே வள்ளுவர் தான், 

தொடிற்சுடின் அல்லது காமநோய் என 

நெருப்பை போலல்லாமல் தொடாமலே சுடவல்லது காமநோய் என்கிறார்.‌ விரகதாபம் மெல்லிய மலரையும் பொசுக்கவல்லதாயிற்றே.

என்னுள்ளே என்னுள்ளே பல

மின்னல் எழும் நேரம்

எங்கெங்கோ எங்கெங்கோ என்

எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற

ஓர் வார்த்தை இல்லை கூற

எதுவோ ஓர் மோகம் 

கண்ணிரண்டில் நூறு 

வெண்ணிலாக்கள் தோன்றும்

ஆனாலும் அனல் பாயும்

நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்

ஆனாலும் என்ன தாகம்

மெய் சிலிர்க்கும் வண்ணம் 

தீ வளர்த்ததென்ன

தூபம் போடும் நேரம் 

தூண்டிலிட்டதென்ன

என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

என்னுள்ளே என்னுள்ளே பல

மின்னல் எழும் நேரம்

எங்கெங்கோ எங்கெங்கோ என்

எண்ணம் போகும் தூரம்…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top