“என்னடி, பிள்ள என்ன சொல்லுச்சு?” வெற்றிலையில் சுண்ணாம்பு தடவிக்கொண்டே மனைவியிடம் பேச்சுக் கொடுத்து நோட்டம் பார்க்க,
“யாரக் கேக்குறீங்க?” என்றார் படுக்கையை தட்டி போட்டுக் கொண்டே, பட்டுக்கொள்ளாமல்.
“ஏன்டி! ஏழெட்டா வீட்டுக்கு வந்துருக்கு? ஒன்னே ஒன்னு கட்டிக்கொடுத்து மொத மொதன்னு பொறந்த வீட்டுக்கு வந்திருக்கு.”
“இப்ப ரெண்டு பிள்ளைக வீட்ல இருக்கே. யாரக் கேக்குறீங்கனு தெரிய வேண்டாமா?” சடவாய் நீட்டி முழக்க,
“பாப்பாவத்தான் கேக்குறேன். அங்க மாமியார் வீட்ல என்ன… ஏது… எப்படின்னு… விசாரணை பண்ணியிருப்பியே?
“அத எதுக்கு பண்ணிக்கிட்டு. அதான் உங்க புள்ள மூஞ்சியே சொல்லுதே.”
“இருந்தாலும் விசாரிச்சுருப்பியே?” அவருக்கும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் தான் திரும்ப திரும்ப கேட்கிறார் எனத் தெரிந்தே தான் அம்மையப்பனை சுற்றலில் விட்டார் தாமரை.
மகளின் முகப்பொலிவும், பேச்சிலிருந்த துள்ளலும், முகம் கொள்ளா சிரிப்பும் கேள்விக்கே இடமில்லை என அகத்தை முகமே காட்டியது. சாப்பிடும் போதும் கணவனின் முகம் பார்த்துப் பார்த்து பரிமாறியதிலேயே மகளை புரிந்து கொண்டது தாய்மனம். எனினும் வாய் வார்த்தையாக கேட்கவும் செய்தார்.
“நான் பயந்தளவுக்கு எங்க மாமியார் இல்லம்மா. முத்துகிட்ட எப்படி நடந்துக்கறாங்களோ அப்படித்தான் எங்கிட்டயும் நடந்துக்கறாங்க. அவங்களும் உங்கள மாதிரித்தான். கொஞ்சம் கறார் பேர்வழி.”
என்னை மகள் மாதிரிதான் பாக்குறாங்க எனவும், உன்னைப் போலத்தான் அவர்கள் எனக்கும் என்பதை மறைமுகமாக இரு பொருள்படக் கூறிய மகளை மெச்சாமல் இருக்க முடியவில்லை.
“எம்மகளாச்சே” மீசையை நீவிக் கொண்டார் அம்மையப்பன்.
ஆரம்பத்தில் சொந்தபந்தங்கள் வீட்டிற்கு வரும்பொழுது கல்யாணத்தன்று நடந்த பஞ்சாயத்தை இழுத்துவச்சு பேசுவார்கள்தான். அவர்கள் சென்றபிறகு பாக்கியத்தின் பேச்சிலும் அது சாடைமாடையாக வெளிப்பட்டது தான். பிரச்சினை சூடு தணிய கொஞ்ச நாள் எடுக்கும் என திவ்யா பெரிது படுத்திக் கொள்ளமாட்டாள். பத்துப் பதினைந்து நாட்களிலேயே அந்தப் பேச்சும் தன்னால் நீர்த்துவிட்டது மகனின் முகம் காட்டிய சந்தோஷப் பூரிப்பில். நம்ம வீட்டுப் பிள்ளைக சந்தோஷம் தான் முக்கியம். யார் என்ன பேசினால் என்ன என போகப்போக பாக்கியம் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
அதையெல்லாம் அம்மாவிடம் சொல்லவில்லை. புகுந்த வீட்டில் நடப்பதை எல்லாம் அப்படியே பிறந்த வீட்டில் ஒப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சொல்ல வேண்டியவற்றை சொல்ல வேண்டும். மறைக்க வேண்டியவற்றை மறைக்க வேண்டும்.
இன்று எந்த ஒரு விஷயமும் ஆறப்போட்டு யோசிப்பதில்லை. உடனுக்குடன் சூட்டோடு சூடாக ஃபோனில் பரிமாறப்படுகிறது. குடும்பப் பிரச்சினைகள் பற்றிக் கொண்டு எரிவதற்கும் அதுதான் முழுமுதல் காரணம்.
“மொதல்ல உங்க காலடி மண்ணெடுத்து புள்ளைகளுக்கு சுத்திப் போடணும். பிள்ளைக பேசையில அப்படி பாக்குறீங்க.”
பிறந்த வீடு வந்த மகளையும், மருமகனையும், தங்களுக்குள் விட்டுக்கொடுக்காமல் பேசிய அண்ணன், தம்பிகளையும் பெருமிதம் பொங்க அவர் பார்த்தது எவ்வளவு மறைத்தும் தாமரை பார்வைக்கு தப்பவில்லை. கணவனை கடிந்து கொண்டார்.
“ஆமாடி, ஒருத்தொருக்கொருத்தன விட்டுக் கொடுக்காம எப்படி பேசுறானுக பாத்தியா? இன்னைக்கி பிள்ளைகளால வீடும், மனசும் நெறஞ்சுருக்குடி.”
பிள்ளைக சந்தோஷம், ஒற்றுமை இதுக்கு மேல வேறென்ன வேணும் என ஆரோக்யா பால் விளம்பர தந்தையாக சிலாகித்தார் அம்மையப்பன்.
“இதுக்கு தான் சொல்றது. பெத்தவங்க கண்ணுதான் ரொம்ப மோசம்.”
“அதெல்லாம் இல்ல. பிள்ளைகளப் பாத்து பெத்தவங்க சந்தோஷப்படாம வேற யாரு சந்தோஷப்படவா? மத்தவங்க கண்ணுதான் பொறாமையா பாக்கும். மொதல்ல உன் தங்கச்சி காலடி மண்ணெடுத்து சுத்திப் போடு.”
“அதானே? எம்பொறந்த வீட்ட இழுக்காட்டி தின்ன சோறு செமிக்காதே உமக்கு” என எப்பவும் போல கணவரின் சீண்டலில் முகம் திருப்ப,
“சரி, சரி, உடனே மூஞ்சிய தூக்காத. மாப்ள பேசுனத கவனிச்சியா?” எனக் கேட்க,
“நானே அதப்பத்தி பேசணும்னு நெனச்சே” என அம்மையப்பனை நேருக்கு நேராகப் பார்த்து திரும்பி அமர்ந்தார். ஏதோ வாக்குவாதத்திற்கு தயாராவது புரிந்தது.
*சின்னவன் காசு இல்லைங்கறான். பாத்துட்டு சும்மா இருக்கீங்க. என் நகையெல்லாம் சும்மாதான லாக்கர்ல தூங்குது. எம்பேர்ல எதுக்கு அத்தன லட்சம் வெட்டியாக்கெடக்கு. அதெல்லாம் எடுத்தாலே ரெண்டு பேரும் இப்படி மருகி நிக்க மாட்டானுகள்ல?”
“எல்லாத்துக்கும் தலை கொடுக்கக் கூடாது தாமரை. தொழில வளத்துவிட்டாச்சு. அவிங்களும் முட்டி மோதி வரட்டுமே. நம்மகிட்ட இருக்கறது எனக்குத் தெரியாமையா இருக்கு?”
“இப்ப பாருங்க மாப்ள தர்றேனு வர்றாரு. என்னமோ நம்மகிட்ட இல்லாத மாதிரி.”
“ஆதாயமில்லாம செட்டியாரு ஆத்தக்கட்டி அழ மாட்டாருடி.” ஒவ்வொரு வெற்றிலையாகச் சுருட்டி கடைவாய்ப் பல்லிற்கு கொடுத்துக் கொண்டே கேட்க,
“இப்ப செட்டியாருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம்?”
“நமக்கு ஒரு சம்பந்தமுமில்ல. ஆனா மாப்பிள்ளை இன்னைக்கு பேசுனதுல சம்பந்தம் இருக்கு” என்றவரை புரியாமல் கேள்வியாகப் பார்க்க,
“அடுப்படியே கெதின்னு கெடக்கக் கூடாது. நம்மல சுத்தியும் என்ன நடக்குதுனு பாக்கணும்.”
“நான் பாத்தளவுக்கு போதும். நீங்க என்ன பாத்தீங்கனு சொல்லுங்க.”
“கணபதி பெரியவனுக்கு எதுக்கு காசு தர்றேனு சொன்னான்?”
“ஒன்னு… கொண்டவன் தாங்கணும். இல்ல… கொடுத்தவன் தாங்கணும்னு சொல்லுவாங்க. நாளைக்கி அவன் பொண்ணு கொடுக்கப்போறான். அதனால பெரியவனுக்கு கொடுத்து தாங்குறான்.”
“மாப்பிள்ளையும் அதுக்குதான்டி அடி போடுறாப்ல.”
“என்ன, நாளைக்கு அவருக்கும் ஒரு பங்குனு காசு கொடுக்க முன்னுக்கு வர்றார்னு சொல்றீங்களா?” தாமரை யோசனை மகளைக் கொண்டு மட்டுமே யோசித்தது.
“சுத்த கூறு கெட்டவடி நீ. கணபதி பொண்ணுக்காக கொடுத்தா, மாப்பிள்ளை சின்னவனுக்கு அடி போடுறாருங்கறே. அங்கேயும் ஒரு பொண்ணு இருக்குல்ல.” மனைவிக்கு விளக்கிச் சொல்ல, அம்மையப்பன் சொன்னதை கூட்டிக் கழித்துப் பார்த்த தாமரை,
“யாரு முத்துப்பேச்சியவா சொல்றீங்க?”
“ஆமணக்கு, ஒனக்கு எல்லாம் புளி போட்டு வெளக்கணும். கூடிய சீக்கிரம் இந்த பேச்ச எடுப்பாங்கனு தோணுது.”
“புள்ள நல்ல பிள்ளைதான். ஆனா” என இழுக்க,
“என்ன” என அம்மையப்பன் பார்த்தார்.
“பொண்ணு கொடுத்து பொண்ணெடுக்கறது சரிப்படுமா? பேசாம நாமலே நகையெல்லாம் வச்சு பணம் ஏற்பாடு பண்ணுவோம். நாளைக்கு இப்படி ஒரு பேச்சு வந்தா மருகி நிக்கணும்.”
“வந்தா என்ன, நல்ல சம்பந்தம்தான.? எம் பிள்ளைகளைத் தேடி வலிய சம்பந்தம் வர்றதுலயே தெரியுதுடி, பிள்ளைகள எப்படி வளத்திருக்கேன்னு.” பேச்சில் பெருமிதம் அபரிமிதமாகப் பொங்கி வழிந்தது அம்மையப்பனுக்கு.
“ரொம்ப பீத்திக்காதீங்க, இப்ப தான் சொன்னேன். கண்ணு வக்காதீங்கனு. ரெண்டு பேருக்கும் நீங்களே பணம் ஏற்பாடு பண்ணுங்க. நம்ம பயலுக வெளில வாங்கறது எனக்கு ஒப்பல.”
நம்மகிட்ட இருக்கும் பொழுது மகன்கள் ஏன் வெளியே வாங்க வேண்டுமென கௌரவக் குறைச்சலாகப் பட்டது பெற்றவளுக்கு. அவர்களும் கொஞ்சம் முட்டி மோதி முயற்சி பண்ணட்டுமே, கிணற்றுக்குள் தள்ளிவிட்டால் தானே நீச்சல் பழக முடியும் என்பது பெற்றவர் எண்ணம்.
“உம்பேர்ல இருக்குற பணமும், நகையும் நம்ம காலத்துக்குப் பின்னாலதான் பிள்ளைகளுக்கு. நம்ப பயலுகள நான் குறை சொல்லல. நாளைக்கி வாழவர்ற பொண்ணுக எப்படின்னும் தெரியாது. உன் தம்பி மகளா இருந்தாலும் தான். நம்ம ரெண்டு பேர்ல எண்ணெய் முந்துதா, திரி முந்துதான்னு யாருக்குத் தெரியும். எனக்குப் பின்னாடி உன் கையில நாலு காசு இருந்தாதான் உனக்கு மரியாதை.”
அம்மையப்பன் நடைமுறை நிதர்சனம் பேச, தாமரைக்கு சட்டென வந்ததே கோபம். அவருக்கு பின்னாடி என அவரால் யோசிக்க கூட முடியவில்லை.
“என்ன வாயிய்யா உம்ம வாயி? போயி வாயக் கழுவும். நல்ல பேச்சு பேசையில இப்படி நாராசமா பேசுறீரே?” கோபமும், ஆத்திரமுமாக தாமரையின் கண்கள் கலங்கிவிட,
“எவடி இவ, நெருப்புனு சொன்னா வாயா வெந்து போகும்? உன் கையில காசிருந்தாதான் பேரன், பேத்திகன்னு வந்தா என்னையக்கூட எதிர்பாக்காம உன்னால கை குளிரச் செய்யமுடியும். அதச் சொன்னா உடனே கண்ணக்கசக்குற?”
எச்சரிக்கையாக பேரன்பேத்திகள் என பேச்சை மாற்றி மனைவியின் மனதை திசை திருப்பினார். இல்லையென்றால் இதை வைத்துப் பேசியே இன்று பொழுது விடிந்துவிடும் என்ற பயம் அவருக்கு.
பிள்ளைகளுக்கு எப்படி எதிர்காலத்திட்டம் வகுத்தாரோ அதன்படி மனைவிக்கும் செய்து வைத்திருக்கிறார். அதை இப்பொழுதே மகன்களுக்கு எடுத்துக் கொடுப்பதில் அம்மையப்பனுக்கு உடன்பாடில்லை. அது மனைவிக்கானது. அவருக்கே பணமுடை வந்தாலும் அதில் கைவைக்க மாட்டார்.
“இப்பதான் கண்ணுவைக்காதீங்கனு சொன்னேன். அதுக்குள்ள என்னைய அழவச்சாச்சு.” இன்னும் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டே கூற, அதைப் பொறுக்க மாட்டாமல்,
“தாமரை” என ஆதரவாக கையைப் பிடித்தவர்,
“எனக்கு ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கா?” என்றார்.
“இது ஒன்னு பத்தாதா. வந்து உக்காந்த நேரத்துக்குள்ள, ஒரு கவுளி வெத்தலைய ஒருமிக்க மென்னாச்சு.” அத்தனை ஆதங்கத்திலும் கணவரது வெற்றிலை பழக்கத்தை நக்கலாக இடித்துரைக்க தவறவில்லை தாமரை. அவரது பேச்சு சிரிப்பூட்ட,
“இது கெட்டபழக்கமா?” என்றார்.
“நம்மல அடிமைப்படுத்துற எதுவும் கெட்ட பழக்கம்தான். போதை தான்.”
“அப்படிப் பாத்தா என்னோட முதல் போதை நீதான்டி” என கலகலத்து சிரிக்க,
“கூறுகெட்ட மனுஷா, மெதுவாச் சிரியும். பிள்ளைகளும், மருமகனும் வெளிய இருக்காங்க. அந்த நெனப்பிருக்கட்டும்.” என அடக்கிய குரலில் அதட்ட,
“அடுத்த போதை என் குடும்பம்தான்டி. அவங்க சந்தோஷத்துக்காக என்ன வேணாலும் செய்வேன். என்னோட பலமும் அதுதான். என்னோட பலவீனமும் அதுதான்.”
“இன்னைக்கி உம்ம பெருமை ரொம்ப எல்லை மீறித்தான் போகுது. பேசாமப் படும்.”
பிள்ளைகளைப் பற்றி பெருமை பேச, எந்த தாய்க்குதான் கேட்க சந்தோஷமாக இருக்காது. இருந்தாலும் பெத்தவுக கண்ணுதான் பெருங்கண்ணு என பெற்ற மனம் எச்சரிக்க, அம்மையப்பனை அடக்கினார்.
எந்த ஒரு சின்ன விஷயமும் மனைவி, பிள்ளைகள் என தங்களை முன்னிறுத்தியே நடத்திக் கொடுக்கும் கணவனை நினைத்து அவருக்கும் உள்ளுக்குள் பெருமைதான். இரண்டு மகன்களையும் தொழிலில் ஸ்த்திரமாக நிற்க வைக்கும் வரைக்குமே பஸ் கம்பெனி, பாத்திரக்கடை என நிற்காத ஓட்டம் தான் அம்மையப்பனுக்கு. விடியும் முன் பஸ் கம்பெனி செல்பவர், இரவு பாத்திரக்கடை அடைத்துதான் திரும்புவார். அவரைப் புரிந்ததால் எந்த எதிர்பார்ப்பும் வைத்துக் கொண்டதில்லை தாமரையும். மூன்று பிள்ளைகளும் அவரது நேரத்தையும்தான் சேர்த்து எடுத்துக் கொண்டனரே.
வேந்தன் தலையெடுத்த பிறகுதான் சற்று மூச்சுவிட்டார் அம்மையப்பன். அதுவரை மகன்களுக்கு மூக்கணாங்கயிறாக இருந்தவர் இப்பொழுது பிடியைத் தளர்த்திவிட்டு முளைக்குச்சியாய் மட்டுமே நிற்கிறார். அதுவும் சின்ன மகனுக்கு மட்டும்தான். செழியனிடம் இன்னும் கொஞ்சம் சிறுபிள்ளைத்தனம் இருப்பதாக அவர் நினைப்பு.
இப்படி மனைவியிடம் உட்கார்ந்து பேசியது கூட இல்லை. அதற்கெல்லாம் சேர்த்துவைத்து இப்பொழுது ஈடு கட்டுவது போல் நடந்து கொள்ள, தாமரையும் அவரது இழுவைக்கு ஈடு கொடுக்க, நடுத்தர வயதைக் கடந்த நிலையிலும் கரைகாணாத காதல்தான் இருவருக்குள்ளும். காய் ஒருவகை சுவை என்றால் கனிந்துவிட்டால் இன்னும் சுவை கூடுமல்லவா? வேம்பாக இருந்தாலும்.
தானாகக் கனியும் வரை பொறுமையில்லை இன்றைய தலைமுறைக்கு. தடியாலடித்து கனிய வைக்க முயற்சி செய்ய வெம்பிப் போகிறது தாம்பத்யம்.
“நீ வெத்தல போடல?” என வெற்றிலைப் பெட்டியை மனைவியிடம் நீட்ட,
“என்னைய என்னைக்கி தனியா வெத்தல போட விட்டீரு. அதான் சேத்து நீரே போட்டுருக்கீறே. அதுவே போதும்.” என முகத்தைத் திருப்பிக் கொள்ள, அதக்கிய கள்ளச்சிரிப்புதான் இருவருக்குள்ளும்.
*****
தேய்பிறை இரவில் நிலவின் ஆதிக்கம் குறைந்திருக்க, விண்மீன்கள் ஆதிக்கம் வானம் முழுதும் உதிரி மல்லியாய் கொட்டிக் கிடக்க…
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம். சற்று முன்தான் பெய்த மழையின் சில்லிப்பு ஈரமாய் காற்றோடு கைகோர்த்திருக்க, அந்த சிலுசிலுப்பு உடலெங்கும் வியாபித்திருக்க, அதை ரசித்து அனுபவித்தவாறே மொட்டைமாடியில், ஆழ்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான் வேந்தன். ஆரம்ப காலத்தில், இரவு நேரத்தில் பேருந்து ஓட்டும்போது தொற்றிக் கொண்டது புகைப்பழக்கம். விட முடியவில்லை. எண்ணிக்கையை மட்டும் குறைத்துக் கொண்டு வருகிறான்.
நேரம் நடுநிசி.
கேலியும், கலாட்டாவாகவும் சென்ற சீட்டுக் கச்சேரி, மதியழகன், திவ்யாவைப் பார்த்து அடிக்கடி காமித்த கண் ஜாடையில், திவ்யா தர்மசங்கடத்தில் நெளிய, இவன் தம்பிக்கு கண் காமிக்க, நாசுக்காக அனைவரும் தூக்கம் வருவதாக எழுந்து கொண்டனர்.
“அண்ணனுக முன்னாடி மானத்தை வாங்குறீங்களே?” உள்ளே சென்று திவ்யா அர்ச்சனையை ஆரம்பிக்க,
“ரெண்டும் கட்ட பிரம்மச்சாரியா இருந்துக்கிட்டு புதுசா கல்யாணமானவன் அவஸ்த்தை புரியுதா அவங்களுக்கு?” மதியழகன் காரியத்தில் மட்டுமே கண்ணாக அர்த்த ஜாம பூஜையை ஆரம்பித்திருந்தான்.
வேந்தன் தனதறைக்கு சென்றவன், தலையணை, போர்வையை எடுத்துக் கொண்டு, புதிதாக ஒன்றை மங்கைக்கு எடுத்துப் போட்டுவிட்டு சிகரெட்டோடு மாடிக்கு வந்தான். அவனது சிந்தனை முழுதும் இப்பொழுது அரசிதான் ஆட்சி செய்து கொண்டிருந்தாள். அவள் ஆழ்மன எண்ணங்களை எப்படி வெளிக்கொண்டு வருவது என யோசித்துக் கொண்டிருக்க, அவனை அதிகம் யோசிக்கவிடாமல் மெலிதாக கொலுசொலி கேட்க, திரும்பிப் பார்த்தான்.
அவளும் அவனை அந்நேரத்திற்கு அங்கு எதிர்பார்க்கவில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. முகம் தெரியா இருட்டில் ஏதோ உருவம் தெரிய, முதலில் பதறியவள், இந்த வீட்டு ஆட்களாகத்தானே இருக்கவேண்டும் என நிதானித்து கவனிக்க, வேந்தன் எனத்தெளிந்தாள்.
நெஞ்சில் கை வைத்து, “நீங்கதானா?” என இழுத்து மூச்சுவாங்கி ஆசுவாசப்பட்டாள்.
“இருட்டுல தனியா மாடிக்கு வந்திருக்க. பயமாயில்லயா?” அவனுக்கு பழக்கமானதால் மாடிப்படி லைட்டைக்கூட போடாமல் வந்திருந்தான்.
“எனக்கு இருட்டும், தனிமையும் புதுசில்ல. பயமுமில்ல. மனுஷங்கதான் பயம்” என்றாள் கைபிடி சுவற்றில் சாய்ந்துகொண்டு.
விண்மீன்கள் மட்டும் கண் சிமிட்டும் ஒளியில், மொட்டை மாடிக்கு குடை பிடித்த தென்னைமர இருளின் பின்னணியில், தேர்ந்த ஓவியனின் சித்திரப்பாவையாய்த் தெரிந்தாள்.
அவளுக்கும் அந்த குளுமையும், இரவும், ஏகாந்தமும் மனதை இலேசாக்க, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டாள். மெலிதாக காற்று வீச, குளிறெடுத்தது. துப்பட்டாவை எடுத்து தோளோடு போர்த்திக்கொண்டாள்.
“உங்க ஊரு சூப்பரா இருக்கு. நல்ல கிளைமேட்.” ரசனை அவளது பேச்சில்.
“மலையடிவாரம்ல, அப்படித்தான் இருக்கும்.”
“ம்ம்ம்” என்றவள்,
“நீங்கல்லாம் ரொம்ப லக்கி” என்றாள் உள்ளார்ந்து.
“எது, மலையடிவாரத்துல வீடு இருக்கறதா?” மெல்லிய சிரிப்பு அவனிடத்தில்.
“நான் இதமட்டும் சொல்லல. உங்க வீடு, அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாம் சொன்னேன்.”
அவள் முகம் மென்மை பூசியிருப்பதிலேயே, மனம் இளகியிருப்பது புரிய, மெதுவாக பேச்சுக் கொடுத்து அவளை மெள்ள வெளிக்கொண்டு வர நினைத்தவன்,
“நீயும்தான் அதுல சேர்த்தி” என்றான். மாடியில் கைப்பிடி சுவர் மீது வேந்தன் அமர்ந்திருக்க, அவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள். இப்பொழுது இருட்டிற்கு கண்கள் பழகிவிட்டது.
“எப்ப இருந்து?” என்றாள்.
அவளது கேள்வி அவனுக்கு புரியவில்லை. அவன் பார்வையே அதை அவளுக்கு சொல்லியது. நேருக்கு நேராக பார்த்து நின்றாள்.
“நானும் இதுல சேர்த்தினு சொன்னீங்களே? நான் பிறந்ததிலிருந்தா, இல்ல, இங்க வந்ததிலிருந்தா?” எனக் கேட்க, இதென்ன கேள்வி எனத்தான் தோன்றியது. (இங்கு என மங்கை கேட்பது கணபதி வீட்டைக் குறிக்கிறது மக்களே.)
‘அவளுக்கும் உரிமை என்றால் அவள் பிறந்ததில் இருந்து தானே? இதென்ன இடையில் வந்த உரிமையா?’ என வேந்தன் குழம்பி நிற்க,
“புரியலையா? நீங்க, உங்க தங்கச்சி கல்யாணத்துக்குனு வந்தீங்களா? இல்ல, அங்க மாமன்மக ஒருத்தி இருக்கா. அவளுக்கு இப்படியொரு கஷ்ட்டம் வரப்போகுது. அவள காப்பாத்தி இங்க கூட்டிவரணும்னு வந்தீங்களா?” என கேட்க, அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்பதைவிட பதில் சொல்லத் தெரியவில்லை என்பதே உண்மையும் கூட.
“உங்கள விடுங்க,. உங்க மாமாதான், நமக்கு ஒரு பொண்ணு அங்க இருக்கு. நம்ப பிள்ளைய கையோட கூட்டிட்டு வரணும்னு வந்தாரா? இல்ல, அக்கா மக கல்யாணத்துக்குனு வந்தாரா?” எனக் கேட்க அவனிடம் அதற்கும் பதில் இல்லை.
“எங்க அத்தை பிரச்சினை பண்ணலைனா என்ன பண்ணியிருப்பீங்க? வந்த வேலை முடிஞ்சதும் கிளம்பியிருப்பீங்க தானே? என்னைத் தேடியா வரப்போறீங்க?” என கேட்க, முகத்தில் அறைந்தது அவள் வார்த்தைகள்.
தமிழ்ச்செல்வி பஞ்சாயத்தை கூட்டவில்லை என்றால் பிரச்சினை எதற்கு வரப்போகிறது? விமல் எதற்கு தாலி கட்டப்போகிறான்? இவர்களுக்கும் ரெங்கநாதன் வீட்டில் என்ன வேலை? அவள் கேட்க வருவது மெல்ல புரிந்தது வேந்தனுக்கு. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“உங்கள விட விமல் எவ்வளவோ தேவலாம். சின்ன வயசுலருந்து சித்தி வீட்டுக்கு வந்து போயிட்டிருக்கான். சும்மா பாப்பானே ஒழிய ஒருநாளும் அத்து மீறினதில்ல. நான் அவனுக்கு கிடைக்கமாட்டேனு தெரிஞ்சவுடனேதான் என்னைய விடமுடியாம தாலி கட்டவந்தான். இத்தனைக்கும் அவன் மீது எனக்கு விருப்பமில்லைங்கறது அவனுக்கு நல்லாவே தெரியும். ஆனா, நீங்க என்ன பண்ணீங்க? நீங்களா என்னைத் தேடி வரல. அவன் வந்ததால வந்தீங்க.”
அவள் பேசப் பேச அவள் முகம் மாறியதை கவனித்தவனுக்கு, ஏதோ ஒன்று பெரிதாக வெடிக்கப் போவதாக குடுகுடுப்பை அடிக்க உள்ளுக்குள்ளும் குளிர் பரவியது.
“…”
“அப்படியிருந்தும் நீங்களும், உங்க மாமாவும் கூப்பிட்ட உடனே சூடு, சுரணையில்லாம, மானங்கெட்டுப் போயி உங்க பின்னாடி வந்தேன். ஏன் தெரியுமா?” என சற்று இடைவெளி விட, அவளே பேசட்டும் என அமைதி காத்தான். குமுறிக் கொண்டிருக்கும் பூகம்பம் வெடிக்கப் போவது தெரியாமல்.
“எங்க அத்தை அடிக்கடி எங்கிட்ட போக்கிடமத்த கழுதைனு சொல்லும். ஒன்ட வந்தவ, வீட்டவிட்டு வெளிய போனா தெருவுலதான் நிக்கணும். அரிசின்னு அள்ளிப்பாப்பாரும் இல்ல. உமின்னு ஊதிப்பாப்பாரும் இல்லைனு ரைமிங்கா பேசும். எனக்குனு உரிமையா ஒரு இடம் வேணும். எலி வளைனாலும் தனி வளையா, எனக்குப் பிடிக்குதோ, பிடிக்கலையோ அங்க இருந்து என்னைய யாரும் வெளிய போனு சொல்ல முடியாதபடி, எனக்குனு சொந்தமா ஒரு கூடு வேணும். அதுக்காக மட்டும்தான் உங்ககூட கிளம்பி வந்தேன்.”
கூடு, கூண்டு ஒரே எழுத்துதான் வித்யாசம். ஆனால் அர்த்தங்கள் ஆயிரம். நமக்கு ஒரு இடமென உரிமையோடு வந்து அடைவது கூடு. அடைபட்டுக் கிடப்பது கூண்டு.
“இன்னைக்கி அத்தைய கவனிச்சேன். மக, மருமகன் வர்றாங்கனு எத்தன தடவ வாசலப் பாத்தாங்க தெரியுமா? தெருவுல ஏதாவது வண்டிச் சத்தம் கேட்டாலே தன்னால தலை எட்டிப் பாக்கும். அவங்க வர்றவரைக்கும் எல்லாரும் சாப்பிடாம வெய்ட் பண்ணீங்க. நாளைக்கு சமையலுக்கு எத்தனை லிஸ்ட் போட்டாங்க தெரியுமா? திவ்யா வந்ததும் உங்ககிட்ட எல்லாம் எப்படி உரிமையா சலுகை கொண்டாடினாங்க. அது நம்ம வீடுங்கற உரிமையில மட்டும்தான் வரும். அதுக்காக மட்டும்தான் நான் இங்க வந்தேன்.”
“நான் மாமா வீட்லயே இருந்து, யாருக்காவது என்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்தாக்கூட, ஒவ்வொன்னுக்கும் அம்மாச்சி, அத்தைய எதிர்பாக்கணும். பணம் காசுக்காக இல்ல. எடுத்துச் செய்யறதுக்கு. அதுக்குனே அத்தைகிட்ட தணிஞ்சு போவாங்க. என்னால அவங்க தணிஞ்சு போறது பிடிக்கல. எனக்கு யாரும் இல்லாம இல்ல. எங்க அம்மாதானே தப்பு பண்ணினாங்க. ஆனா எல்லாரும் என்னைய விட்டுட்டாங்கள்ல. இங்கேயே வச்சிருந்தா, இடிசோறு சாப்பிட்டாலும் உரிமையான எடத்துல சாப்பிட்டுருப்பேன். இப்ப வந்து, அதுவும் சந்தர்ப்ப சூழ்நிலையால கூட்டிவந்துட்டு உனக்கும் உரிமையிருக்குனா ஒட்ட முடியல. இருந்தும் இல்லாம இருக்கறதோட வலி அனுபவிச்சாதான் தெரியும்.”
அவள் சொல்லச் சொல்ல அவள் வார்த்தைகளை ஆழ்ந்து உள் வாங்கிக் கொண்டு இருந்தவன், உள்ளுக்குள் மெள்ள உடைந்து கொண்டிருந்தான். அத்தனையும் நூற்றுக்கு நூறு உண்மை. தவறு செய்தது பெற்றவள்தானே. ஆனால் தண்டனை இவளுக்கு.
“எத ஒன்னும் குடும்பத்த கேட்டு செய்ற அப்பா, அண்ணன விட்டுக்கொடுக்காத தம்பி, உரிமையா அடம்பிடிக்கிற தங்கச்சி, இப்படிப்பட்ட சூழ்நிலையில வளந்த உங்களுக்கு, என்னோட வலி சொன்னா புரியாது. நான் இங்க வந்ததே எனக்குனு ஒரு படிப்பு, வேலை அதுக்காக மட்டும்தான். யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. அதனாலதான் உங்க மாமா காசு கொடுத்தப்ப வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்கிட்டேன். அது அவரோட கடமை. எனக்கான உரிமை. அதை ஏன் நான் விட்டுக் கொடுக்கணும். இனிமேயும் விட்டுக் கொடுக்க முடியாது.” அவளது பேச்சில் அத்தனை கடினம். வெறுப்பின் உச்சம்.
“உங்க மாமான்னு சொல்றியே தவிர அப்பான்னு வாய்ல வரமாட்டேங்குதே.” எத்தனைக்கெத்தனை தயங்கிக் கேட்க முடியுமோ அத்தனைக்கத்தனை தயக்கமாகக் கேட்டான்.
“தேவைப்படும்போது கிடைக்காத எதுக்கும் மதிப்பில்ல.”
“அரசி!” என ஆரம்பிக்க, அடுத்த நொடி அவளுக்குள் எங்கிருந்து வந்தது அவ்வளவு ஆவேசம் எனத் தெரியவில்லை.
“ப்ளீஸ்! என்னை அப்படிக் கூப்பிடாத! என்னோட இளா மட்டும்தான் அப்படிக் கூப்பிடணும்.”
இதுவரை இருந்த அமைதி அவளிடம் விடைபெற, சட்டென ஒருமைக்குத் தாவி ஆங்காரமாக மாறியது அவளது குரல். வேந்தனே ஒரு கணம் அதிர்ந்து துள்ளி இறங்கினான். மறுகணம் சுதாரித்தவன், ஆரம்பித்தாயிற்று. முழுதாக அவள் கொட்டி முடிக்கட்டும் என நினைத்தவன்,
“அப்ப நான் யாரு?” என்றான், என்ன வெடிக்கக் காத்திருக்கோ என்ற உள்ளூர பயத்தோடு.
“என் நெனப்பு எப்ப உனக்கு வந்துச்சு? உன் நெஞ்சத் தொட்டு சொல்லு பார்க்கலாம்.” அவள் முகத்தில் அத்தனை ரௌத்திரம். நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. அந்த இருளில் அவனுக்கே சற்று பயம் கொடுத்தது அவளது அவதாரம்.
அவன் யோசித்துப் பார்க்க தெரியவில்லை. பஸ்ஸில் முதன் முதலாக ஏறிய பொழுதுதான் மாமன் மகளை அடையாளம் கண்டுகொண்டான். அதற்கு முன் கனகத்தின் இறப்பிலும், வீரபாண்டி திருவிழாவிலும் ஒருதரம் பார்த்தது. அவனுக்கு நினைவில்லை என்பதை அவனது அமைதியே காட்டிக் கொடுக்க,
“தெரியலைல்ல. இங்கிருந்து நான் போனப்ப எனக்கு அஞ்சு வயசு. அம்மா எங்கேனு தெரியல. எப்ப வருவாங்கனு தெரியல. அம்மாவக் கேட்டு அழுதா பதில் சொல்ல ஆளில்ல. வீட்ல எப்பவும் சண்டை. விடிய விடிய அழுதுட்டே படுத்துருப்பேன். சில சமயம் அம்மாச்சியும் என்ன சமாளிக்க முடியாம திட்டுவாங்க. அப்பல்லாம் அம்மாவையும், உன்னையும்தான் அதிகமா தேடினேன். இளா மாமா எப்ப வருவான்னு கேட்டு அடிகூட வாங்கியிருக்கிறேன். ராத்திரி கெட்ட கெட்ட கனவா வரும். அந்தப் பயத்துலயே படுக்கைய நனச்சுருவேன். அதுக்கும் அத்தை திட்டுவாங்க. அதுவும் அவங்க அக்கா பிள்ளைக பத்மா, விமல் முன்னாடியே திட்டுவாங்க. அதுக சிரிக்குங்க. எனக்கு எப்படி இருக்கும் தெரியுமா? இப்ப நெனச்சாக்கூட நாண்டுக்கலாம் போல இருக்கு.”
இன்று எளிதாகச் சொல்லிவிட்டாள். ஆனால் அந்த வயதில் அவள் அனுபவித்த வலி இன்றும் ஆறாமல் பச்சை ரணமாய் இருப்பது அவள் வார்த்தைகளில் தெரிந்தது. முள் குத்தும் பொழுது மட்டுமல்ல. பிடுங்கும் பொழுதும் அதே வலி இருக்கும் தானே.
“அம்மாச்சி இல்லைனா அந்த வயசுல நான்தான் படுக்கைய அலசணும். அதனாலேயே ராத்திரி அடிக்கடி எந்திரிச்சு பாத்ரூம் போவேன். அம்மாச்சி எங்கேயாவது வெளியூர் போயிட்டா, அத்தை என்னைய அவங்ககூட படுக்கவச்சுக்க மாட்டாங்க. தனியாத்தான் படுக்க வைப்பாங்க. எங்கே அசிங்கம் பண்ணிருவோமோன்னு பயந்து தூங்கவே மாட்டேன். அதனாலேயே உங்களவிட நான் ரொம்ப சுத்தம்னு அவங்களுக்கு காட்ட நெனச்சேன். அவங்க தொட்டது எதையும் புழங்க மாட்டேன். எனக்குனு எல்லாமே துண்டா வச்சுக்க ஆரம்பிச்சேன். அதுவே பழக்கமாகி இன்னைக்கி வேற ஒரு அவஸ்த்தையில இருக்கேன். ம்ப்ச்ச்… உங்களுக்கெல்லாம் அது சொன்னா புரியாது. இந்த வயசுலயும் புது இடத்துக்கு வந்தா அந்த பயம் இருக்கு. இப்பக்கூட தூங்க முடியாமத்தான் மேல வந்தேன்.”
“விபரம் தெரியத் தெரிய அம்மா வரமாட்டாங்கனு புரிய ஆரம்பிச்சது. ஆனா, நீயாவது, அப்பாவாவது வந்து கூட்டிப் போவீங்கனு தினமும் எதிர்பார்த்தேன். அப்ப உனக்கும் சின்ன வயசு, நீ வரமாட்டேங்கறது எனக்குப் புரியல. ஆனா ரொம்ப தேடினேன். அம்மாவுக்கடுத்து நான் அதிகமா இருந்தது உன் கூடத்தானே. அப்பாவக்கூட தேடல. ஆனா, ரெண்டு பேரும் எப்ப வந்தீங்க”
அவனை குற்றவாளியாக்கி கூண்டில் ஏற்றினாள் கேள்வியின் நாயகி. அவளின் பேச்சு வேந்தனின் மனதில் பாறாங்கல்லாய் சுமையேற்ற, அதன் பக்கவிளைவாக தொண்டையில் ஒரு இனம்புரியா வலி. தன்னை எந்தளவிற்கு தேடியிருக்கிறாள். பேசவே மாட்டாளா என இவனின் தவிப்பு இவள் வந்த சில நாட்களாகத் தான். ஆனால் அவளது தேடல்.
“….”
“நான் அப்பத்தா செத்ததுக்கு வந்ததே நீ இருப்ப, உன்னய பாக்கலாம்னு தான். அன்னைக்கி நான் இங்க இருந்தது கொஞ்ச நேரம்தான். அதுவரைக்குமே என் கண்ணு உன் பின்னாலயே தான் சுத்துச்சு. நீ கண்டுக்கவே இல்ல. அப்பதான் தெரிஞ்சது. நாமதான் கிருக்கச்சி மாதிரி இவன நெனச்சுக்கிட்டு இருந்திருக்கோம்னு. அப்ப எனக்கு எத்தன வயசுனு தெரியுமா? பதினஞ்சு வயசு. அப்படினா என்ன அர்த்தம். அஞ்சு வயசுல இங்கிருந்து போனவ, உன்ன மறக்கவே இல்லைனு அர்த்தம். நான் பேசப்பேச பதில் சொல்ல முடியாம நிக்கிற பாரு. நீ மறந்துட்டேனு அர்த்தம். அது மட்டுமில்ல. அந்த பஸ் கலாட்டா வீடியோ வந்ததே? எத்தனை தடவ பாத்தேனு எனக்கே தெரியாது. உங்ககிட்ட பேசறதே இல்லைனு குறை சொல்றேல்ல. நான் பேச ஆரம்பிச்சா உங்களால பதில் பேச முடியாதுங்கறதாலதான் நான் பேசறதில்ல.” சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் விறுவிறுவென இறங்க முற்பட,
முதற்படியில் சிலையாய் நின்றிருந்தார் கணபதி. மருமகனைக் காணாமல் மேலே தேடி வந்தவர் மகளின் பேச்சைக் கேட்டு கால்லாய் சமைந்து நின்றார். அவரது கண்களில் கண்ணீர் பளபளத்தது அந்த இருட்டிலும் தெரிய, கண்டுகொள்ளாமல் அவரை ஒதுங்கிக் கொண்டு கீழே இறங்கிவிட்டாள்.
அவளை மனம்விட்டுப் பேசவைக்க வேண்டும் என நினைத்தவனோ பேசும் திராணியற்று வாயடைத்து நின்றான்.
