“இளா…” கல்யாணியின் அழைப்பிற்கு,
“எலா…” என இடுப்பில் கைவைத்து ஒத்தூதினாள் ஐந்து வயது நிரம்பாத மங்கையர்க்கரசி.
“என்னங்கத்த…”
“என்னங்கத்த…” இப்பொழுது அவனுக்கு.
“பாப்பாக்கு சோப் தீந்துருச்சு.”
“பாப்பாக்கு சோப்பு தீந்துருச்சு.”
“குளிக்க வைக்கணும்.”
“குளிக்க வைக்கணும்.”
“செத்த சும்மா இருடி. முழுசா சொல்லவிடு!” மக்களை அதட்டிவிட்டு,
“கடைக்குப் போயிட்டு வர்றியா?” வேந்தனிடம் கேட்க,
“சரிங்கத்தை!” என்றவனிடம் காசைக் கொடுக்க,
“ம்மா! நானும்.” மங்கை காலை உதற,
“வேண்டாம் பாப்பா. மாமா மட்டும் போட்டும். நீ போனா சாக்லேட் கேப்ப. ஓவரா இனிப்பு திங்கிறடி.” தானும் போவதாக அடம்பிடித்தவளை கண்டிக்க,
வேந்தன், “வாங்கிக் கொடுக்காம கூட்டிட்டு வர்றேன்த்தை” என,
“நீயாடா! அவ கேக்கறதுக்கு முன்னாடியே வாங்கித் தந்துருவியே?” என சிரிக்க,
“இல்லைனா என்னய நகர விடமாட்டாத்தை. ஆனா, காசு இல்லைனா உண்டியல்ல காசு எடுத்துட்டு வரலாம்னு கம்முனு வந்துருவா” என்றான்.
வேண்டாமென்றாலும் எப்படியும் அழுது அடம்பிடிப்பாள். பள்ளி செல்லும் நேரம் தவிர வேந்தன் எங்கு சென்றாலும், இவளும் உடன்போக்கு நிகழ்த்த வேண்டும். விட்டுவிட்டு நண்பர்களுடன் விளையாட போய்விட்டால் அவன் வரும்வரை அழுது பிரண்டு வீட்டையே ரெண்டாக்கி விடுவாள். சமாளிக்க முடியாதென காசைக் கொடுத்து இருவரையும் அனுப்பி வைத்தாள்.
இன்னும் தேறாமல் ஒல்லியாகத்தான் இருந்தாள். அதனால் எப்பொழுதும் அத்தை மகன் முதுகில் உப்பு மூட்டை சவாரிதான் எங்கு சென்றாலும். வேந்தன் முதுகில் ஏற்றிக்கொள்ள கழுத்தைக் கட்டிக் கொண்டாள். காலுக்கடியில் கைவிட்டு கோர்த்துப் பிடித்துக்கொண்டான்.
பொட்டச்சிக்கு இம்புட்டு அடம் ஆகாதென கனகமும் முகம் சுழிப்பதுண்டு. மகனுக்குத் தெரியாமல்தான். பொண்டாட்டியை எது பேசினாலும் மாமியார் மருமகள் பிரச்சினை என ஒதுங்கிச் செல்பவர் மகளை ஒரு சொல் சொல்லவிடமாட்டார். கல்யாணிதான் உனக்கு நான் விட்டவளா என கனகத்திற்கு சரிக்குசரி நிற்பாளே.
குழந்தை பிறந்த அன்று, மருத்துவமனை வரை சென்று தன் அம்மாவும் தங்கையும் நடத்திய கூத்தை அறிந்த தாமரை, அம்மாவை பிலுபிலுவென பிடித்துவிட்டார்.
“அவனே இப்பதான் கொஞ்சம் பொறுப்பா இருக்கான். அது பொறுக்கலையா ஒனக்கு? வாழ்ற புள்ளய தாயே கெடுத்த மாதிரினு சொல்லுவாங்க. உன் விஷயத்துல சரியா இருக்கு. தெரிஞ்சுதானம்மா எல்லாத்துக்கும் சம்மதிச்சு பொண்ணெடுத்த. கட்டிட்டு வந்து வச்சுக்கிட்டு பேசுனா என்ன அர்த்தம். மொதல்ல கெளம்புங்க. போயி புள்ளையப் பாத்துட்டு வருவோம். வீட்டுக்கு மொத வாரிசு, கொற மாசத்துல வேற பொறந்துருக்கு. அது நல்லா கைகால் சொகத்தொட வர வேண்டாமா?”
அம்மாவையும், தங்கையையும் சகட்டுமேனிக்கு வைத்து வாங்கியதில், மறுபடியும் தாமரையோடு அனைவரும் குழந்தையைப் பார்க்க கிளம்பினர்.
பத்து நாட்களாயிற்று. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டனர். எனவே இவர்களும் வீட்டிற்கே செல்ல வேண்டியதாயிற்று. தன் பிள்ளைகள் மூவரோடும் தம்பி மகளைப் பார்க்க, கனகம், மற்றும் கணபதியோடு தாமரை வந்துவிட்டார். அவர்கள் பஸ்ஸில் வந்துதான் நிலக்கோட்டையில் இறங்கிக் கொண்டனர்.
மாரியம்மாள், தாமரையோடு சேர்த்து பொத்தாம் பொதுவாக அனைவரையும் வரவேற்றாரே ஒழிய, தனியாக கனகத்தையோ, மருமகனையோ வரவேற்கவில்லை. வித்யாவைப் பேசியதால் அவள் இவர்களோடு வரவில்லை.
கட்டிலில் கல்யாணி முன் கிடந்த குழந்தையை அறைக்குள் சென்று தாமரைதான் வெளியே தூக்கிவந்தார். அப்படியே கல்யாணியை உரித்து வைத்துப் பிறந்திருந்தது.
தூக்கி வந்து தம்பி கையில் கொடுக்க, எடை குறைவாக இருந்ததால் கணபதி இரண்டு கைகளையும் கூட்டிப் பிடிக்க, அவரது உள்ளங்கைக்குள் இருந்தது பத்துநாள் சிசு. அக்கா பிள்ளைகளை தூக்கிப் பழகிய பழக்கம், வாட்டமாகப் பிடித்துக் கொண்டார்.
“என்னக்கா! இத்தூணூன்டா இருக்கு?” கவலை தோய்ந்த முகத்தோடு அக்காவைப் பார்க்க,
“கொறமாசம்லடா… முட்டு வீட்டுப்புள்ள அம்புட்டுத்தா இருக்கும். முப்பதுநாள் சென்டா தன்னால ஊறிக்கும்.” தம்பிக்கு தெம்பு சொன்னார்.
தாமரையின் மூன்று பிள்ளைகளும் ஆசையாக சுற்றி நின்று பார்த்தனர் மாமன் மகளை. கண் திறக்காமல் தூங்கிக் கொண்டே இருந்தது. தொட்டுத்தொட்டுப் பார்த்தனர்.
“ம்மா! எம்மருமக உன் வம்சக் கலரையே மாத்திப்புட்டாம்மா!” முகம் கொள்ளாச் சிரிப்போடு தம்பி மகளுக்கு எடுத்துவந்த சங்கிலியை வேந்தன் கையில் கொடுத்து போடச்சொன்னார். பெண்களுக்கே உரிய பிறந்த வீட்டு சம்பந்த நப்பாசையில்.
நடக்கும் நடக்காது என்பதை பின்னும்பிறகும் பார்த்துக் கொள்வோம். இருந்தாலும் அச்சாரம் போடுவதை போட்டுவைப்போம் எனத்தான் இருக்கும் நம் பெண்களின் உரிமைப் பேச்சும், செயலும். எப்படியாவது பிறந்து வீட்டோடு மீண்டும் உறவை ஒட்டவைக்க கிடைக்கும் வாய்ப்புதானே பிறந்த வீட்டோடு சம்பந்தம் செய்வது. தலைகீழாக நின்றாவது நடத்திக் கொள்வார்கள். மருமகளே என வாய் நிறைய அழைத்தே ஆசையை தீர்த்துக் கொள்வார்கள்.
“என்னக்கா! இப்பவே மகன வச்சு பரிசம் போடுறியா?” கணபதியும் சிரிக்க, சிரித்த மகனைப் பார்த்து கனகத்திற்கே ஆச்சர்யம்.
“அவனுக்கில்லாத உரிமை யாருக்கு இருக்கு. ஏன்… ஒம்மகள எம்மகனுக்கு கொடுக்க மாட்டியா?” உரிமைக்குரல் கொடுக்க,
“அதுக்கு எம்மக சம்மதிக்கணுமே?” பத்து நாள் பிள்ளையை கையில் வைத்துக் கொண்டு கணபதி கெத்து காண்பிக்க,
“அவ என்ன சம்மதிக்கிறது? உம் மருமகன் தூக்கிட்டுப் போயி தாலி கட்டுவான்.”
தாமரையும் விடாப்பிடியாக போர்க்கொடி பிடிக்க, கேலியும் கிண்டலுமாக சற்று நேரம் கலகலத்தது. கனகம் எதிலும் பட்டுக்கொள்ளவில்லை.
என்னதான் மனச்சடவாக இருந்தாலும், வந்திருப்பது மருமகனும், சம்மந்தியும் ஆயிற்றே. இவர்கள் வந்தது தெரிந்து சீனியப்பன் கறி வாங்கி மகனிடம் கொடுத்துவிட்டார். எப்பவும் போல் விருந்து தயாரானது. தாமரையும் மாரியம்மாளுக்கு ஊடமாட ஒத்தாசை செய்தார்.
காலையிலேயே குழந்தை பெற்றவளுக்கு சுடச்சுட நாட்டுக் கோழிக் குழம்பில், நல்லெண்ணெய்விட்டு கொடுத்தாகிவிட்டது.
மதியச் சாப்பாட்டை தாமரையே தட்டில் போட்டு கல்யாணிக்கு எடுத்துச் சென்றார். அவளுக்கு தையல் போட்டிருந்ததால் எழுந்து உட்கார சிரமப்பட, மூன்று பிள்ளைபெற்ற அனுபவத்தில் தாமரையே உதவிசெய்தார். கல்யாணி சாப்பாட்டில் கை வைக்க, அது சத்துக்குத் தக்கன குரல் கொடுத்தது குழந்தை.
“நாம சோத்துல கை வைக்கிறது எப்படித்தான் தெரியுமோ? சரியா அந்த நேரம்தான் இதுகளுக்கும் பசிக்கும். நீ சாப்பிடு கல்யாணி., நாம்பாத்துக்கறேன்.”
அவளை சாப்பிடச் சொல்லிவிட்டு வெளியே வந்து தம்பி கையிலிருந்த குழந்தையை வாங்கினார். ஈரம் பண்ணியிருக்க, துடைத்துவிட்டு துணியை மாற்றியவர், அம்மாவை கண் ஜாடை காட்டி அழைத்தார். மாரியம்மா வேலையாக அடுப்படியில் இருந்தார்.
கனகம் மகளிடம் வர, “ஒம்மகன் கருவாயனுக்கே இந்த மச்சம் எப்படித் தெரியும்? ஒம்பேத்தி சங்கம்பழம் மாதிரி வெளேர்னு இருக்கா. அவ கலருக்கு இந்த மச்சம் எப்படித் தெரியுது பாரு.”
தாமரை கண்பித்த இடத்தை கனகமும் பார்த்தார். வலது தொடையில் கரும்பச்சையில் அமீபா மாதிரி எட்டணா அளவிற்கு ஒழுங்கற்று இருந்தது. கணபதிக்கு உலக வரைபடம் மாதிரி உள்ளங்கை அளவிற்கு இருக்கும்.
“வீட்டுக்கு வாழ வந்த புள்ளைய வாய் புளிச்சதோ, மாங்கா புளிச்சதோனு பேசாத! நீயும் ரெண்டு பொண்ண கட்டிக் கொடுத்துருக்க. எல்லாம் எங்க தலையில வந்து விடியும்.”
அடக்கிய குரலில் அம்மாவை கடிய, அரைகுறை மனதோடு பேத்தியைப் பார்க்க வந்தவருக்கு, மச்சத்தைப் பார்த்ததும்தான் மனது மேவியது.
“கலர வச்சு என்னத்தப் பண்ண? தலநாள்ல பொறந்தது ஆம்பளப்புபுள்ளயா பொறந்திருக்கலாம்?” அதற்கும் முகத்தைத் தூக்கிச் சடைக்க,
“தப்பைவச்சுக் கட்டுனாலும் உன்ன நிமித்த முடியாதும்மா.” பல்லைக் கடித்தார் தாமரை வந்த இடத்தில் வாய்திறக்க முடியாமல். பசிக்கு மீண்டும் சிணுங்க, உள்ளே தூக்கிச் சென்றார்.
பாதிச் சாப்பாட்டில் கல்யாணி கை கழுவ முற்பட, “நீ சாப்பிடு கல்யாணி. நா வேணா கொடுக்குறே. என்ன, இது வயித்துக்கு ஒரு சங்கு குடிக்குமா?”
திவ்யாவிற்கு இன்னும் ஒரு வயது கூட முடியாததால் பால் கொடுத்துக் கொண்டிருந்தார் தாமரை.
அந்தக் காலங்களில் அப்படித்தான். கூட்டுக் குடும்பங்களில் இரண்டு, மூன்று தொட்டில்கள் கூட ஒரே சமயத்தில் ஒரு வீட்டில் ஆடும். குளிக்கும்பொழுது, சாப்பிட உட்காரும் போழுதுதான் அழுது ஊரைக் கூட்டும். தண்ணியெடுக்க, மாடு பிடிக்க என வெளியே சென்றுவிட்டால் வீட்டில் இருக்கும் பிள்ளை பெற்ற அத்தையோ, பெரியம்மாவோ, சித்தியோ யாராக இருந்தாலும் எந்தப் பிள்ளை அழுதாலும் தூக்கி பசியமர்த்துவர். சில நேரங்களில் தாய்ப்பால் பற்றாக்குறையானாலும் யார் வேண்டுமானாலும் மாற்றிக் கொடுப்பதுண்டு. அந்தக் காலத்துப் பிள்ளைகள் அம்மா பால் மட்டுமல்ல, அத்தை, சித்தி என பலர்பால் குடித்து வளர்ந்த குழந்தைகள். அந்த வழமையில் தாமரையும் கேட்க,
“வேண்டா மதினி. இப்பவே நாட்டுக்கோழி, கருவாடுன்னு சாப்புட்டு பால் கட்டிக்குது. தூங்கினாலும் சுண்டிவிட்டு எழுப்பிதான் கொடுக்க வேண்டியிருக்கு. கொடுங்க” என வாங்கி பசியமர்த்த ஆரம்பிக்க, ஐந்து நிமிடம் கூட இருக்காது. மீண்டும் தூக்கத்திற்கு சென்றுவிட்டது. அவ்வளவு தான் பத்துநாள் சிசுவின் பசி.
“இப்ப அப்படித்தான் இருக்கும். முப்பது செல்லட்டும். ரவ்வும் பகலும் தூங்கவிடாதுக.” பசியமர்த்தித் தர, மீண்டும் வெளியே தூக்கிவந்தார்.
“அக்கா! எப்ப நாம கூட்டிப் போறதுன்னு கேளுக்கா.” கையில் ஏந்திய பூக்குவியலை விட்டுச்செல்ல மனமில்லாமல் கணபதி கேட்க,
“பிள்ள இன்னும் ஊறாம இருக்கு. இவளுக்கும் அந்தளவுக்கு கூறுவாறு பத்தாது. ரொம்ப சின்னதா இருக்கு. என்னாலயும் குளிக்க வைக்க முடியாது.” மாரியம்மாள் பதில் சொல்லும் முன் கனகமே மறுதலிக்க,
“நீங்க கூப்பிட்டாலும் பச்ச ஒடம்புக்காரிய நான் இப்போதைக்கு அனுப்புறதா இல்ல.” மாரியம்மாள் பட்டென பதில் கொடுத்தார்.
இப்படியே ஒரு வருடம் செல்ல, அடிக்கடி கணபதி மட்டும் வந்து பிள்ளையைப் பார்த்து சென்றார். மகள் சீக்கிரம் எடை பிடிக்க வேண்டுமென எடைக்கு எடை சில்லரை போடுவதாக வேண்டுதல் வைத்தார்.
இந்த ஒரு வருட இடைவெளி கல்யாணிக்கும், கணபதிக்கும் இருந்த ஒட்டாத்தன்மையை மீண்டும் அதிகப்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும்.
பிறந்த முடியிறக்க மனைவியையும், பிள்ளையையும் கணபதி அழைக்க வர, பிறந்த வீட்டைவிட்டு வர மனமேயில்லாமல் தான் மீண்டும் பிள்ளையோடு புகுந்த வீடு வந்தாள் கல்யாணி. புருஷன் வீடு செல்லும் சந்தோஷம் துளி கூட இல்லை. பிள்ளை பெற்ற உடம்பு, பிறந்தவீட்டு கவனிப்பு என இப்பொழுது இன்னும் வனப்பு கூடியிருந்தாள்.
கணபதி மனைவியை ஆசையாக நெருங்க, ஒட்டமுடியாமல் கல்யாணி தவிக்க, சட்டென குழந்தை வீரிட்டு அழ, அதைச் சாக்கிட்டு கணவனைத் தவிர்க்க, அதுவே வாடிக்கையாகத் தொடர, சந்தேகம் வந்தது கணபதிக்கும். அவர் நினைத்தது சரிதான். அவர் நெருங்கும் பொழுதெல்லாம், பக்கத்தில் உறங்கும் பிள்ளையை கிள்ளிவிட, அது வீரிட்டு அழ, இவரது ஆசைக்கு அணை போடப்பட்டது.
தன் மீது விருப்பமில்லை என அப்பட்டமாகத் தெரிந்தது. திருமணமான புதிதில் ஆரம்பகட்ட பயம், கூச்சத்தில் பெண்ணின் உணர்வுகள் சரியாக பிடிபடவில்லை. முழுதாக ஒரு மாதம் கூட இருக்காது அதற்குள் கர்ப்பம், ஏழாம் மாதமே பேரு காலத்திற்கு சென்றது, அதன் பின்னர் இங்குவர ஒரு வருடம் என மனைவியை புரிந்து கொள்ள வாய்ப்புகளும், நேரமும் மிகவும் குறைவு. ஆனால் இப்பொழுது அவளது ஒதுக்கம் நன்கு புலப்பட,
“எங்குழந்தைய இம்சை பண்ணாதே!” என இவர் ஒதுங்கிக் கொண்டார். நாட்கள் தன் போக்கில் செல்ல, மங்கைக்கும் வயது ஐந்தாகப் போகிறது. வேந்தன் தான் இங்கு வந்ததிலிருந்து சிறுசிறு தேவைகளுக்கு கல்யாணிக்கு ஒத்தாசை.
உறவுகளைப் பொறுத்தவரை சண்டை சச்சரவில்லாத தம்பதி இவர்கள். கருத்துப் பரிமாற்றம் இருந்தால் தானே மோதலுக்கு வேலை. ஒத்து வராதென ஒதுங்கிய பிறகு மோதலாவது, காதலாவது.
பேச்சு வார்த்தைகளைக் கூட கணபதி குறைத்துக் கொண்டார். இப்பொழுதெல்லாம் கார்த்திகை, தை என எந்த மாதமென்றாலும், அய்யப்பன், முருகன் என எல்லா சாமிக்கும் வருடம் தவறாமல் மாலைபோட்டு மாதக் கணக்கில் விரதமிருந்து கோவிலுக்குச் சென்றுவிடுகிறார். குறை பிரசவத்தில் பிறந்த பிள்ளைக்கென வேண்டுதல் வைத்துப் போட ஆரம்பித்தது. இப்பொழுது தன் ஆசையை அடக்க அவருக்குத் தெரிந்த ஒரே மார்க்கம்.
இதில் கனகம் ஏதாவது சண்டை போட்டால் உடனே கோபித்துக் கொண்டு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அம்மா வீடு சென்று விடுவாள். மீண்டும் சமாதானமாகி வருவாள். அண்ணனுக்குத் திருமணமான பிறகுதான் கோபித்துக் கொண்டு செல்வதை குறைத்துக் கொண்டாள்.
இவர்களுக்குள் நடக்கும் கண்ணாமூச்சி கூடவே இருந்த கனகத்திற்குப் புரிந்ததோ இல்லையோ, அடிக்கடி மாமியார் வீட்டில் வந்து டேரா போடும் சென்றாயனுக்கு நன்றாகவே புரிந்தது.
அவனது கொள்ளிக்கண் பார்வை கல்யாணியை வட்டமிட ஆரம்பித்தது. யாருக்கும் சந்தேகம் வரவில்லை. கல்யாணிக்கே கூட அவனது பார்வையில் வித்யாசம் தெரிந்தாலும் உறவு முறை சந்தேகிக்க இடம் கொடுக்கவில்லை.
பெரும்பாலும் பல நேரங்களில் உறவு முறைதானே சிறு பிள்ளைகள் பழியாக காரணமாகிவிடுகிறது. மாமா, சித்தப்பா, பெரியப்பா, தாத்தா, அண்ணன் முறையிலிருப்பவர்களா நம் பிள்ளைகளிடம் தவறாக நடந்து கொள்ளப் போகிறார்கள் என நாம் மெத்தனமாக நினைத்து விடுகிறோம்.
சென்றாயனுக்கும் அப்படித்தான் உறவு முறை கைகொடுக்க, கல்யாணியே அவனைப் பற்றி ஆரம்பத்தில் தவறாக நினைக்கவில்லை. போகப் போக மாற்றம் பிடிபட்டது. அதிலிருந்து அவன் இங்கு வந்தாலே பிள்ளையைத் தூக்கிக் கொண்டு அம்மா வீடு சென்றுவிடுவாள். தன்னோடு இருக்கப் பிடிக்காததால் தான் அடிக்கடி அம்மா வீடு சென்றுவிடுவதாக கணபதி தானாக ஊகம் செய்து கொண்டதால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவளுக்கே இப்பொழுதுதான் சென்றாயனைப் பற்றி தெரிகிறது. அப்படியிருக்க, தன் மனைவி மீது இன்னொருவன் பார்வை, அதுவும் தங்கை உறவில் இருப்பவள் மீது என சந்தேகம் வரவா போகிறது.
“நாங்க வந்துட்டாலே உம்மருமக அம்மா வீடு போயிர்றா. எங்களுக்கு வேல செய்ய வலிக்கும் போல.” இரண்டாவது பிரசவத்திற்கு வந்த வித்யா நொடித்துக் கொண்டாள்.
“எம்புட்டு நாளைக்கி. பழைய குருடி கதவைத் தொறடின்னு இங்கதானே வந்தாகணும்.” கனகம் மகளிடம் சாடுவார்.
கல்யாணியும் அம்மா வீடு சென்றவள், நாத்தனாரின் பொறுமலில், மாரியம்மாளும் இனிமே அடிக்கடி இப்படி வராதே என்றதில் மனம் வெறுத்துப் போய்தான் வந்திருந்தாள்.
இதற்கிடையில் மனம் வெறுத்து ஒரு நாள் கோவில் சென்றவள் பிரசன்னாவை பார்த்திருந்தாள். படிப்பு, நல்ல வேலை, சம்பளம் என முன்பைவிட இன்னும் வாலிபமும், மிடுக்கும் மெருகேறியிருந்தான். சற்று நேரம் தயங்கியவன் தானே முன் வந்து பேசினான். அவளது முகத்தில் தெரிந்த வெறுமை அவனைப் பேச வைத்தது.
“நல்லாருக்கியா கல்யாணி?” தயங்கித்தான் கேட்டான்.
“இருக்கேன்…” பெருமூச்சோடு எங்கோ பார்த்துக் கொண்டு சொன்ன ஒற்றை வார்த்தை ஆயிரம் அர்த்தங்கள் சொன்னது. மெதுவாக பேச்சுக் கொடுக்க, கணவனிடம் உரிமையாக சொல்லாத அனைத்தையும் அவனிடம் கண்ணீரோடு ஒப்பித்தாள். கணவனிடம் ஒட்ட முடியவில்லை என்பதை முதற்கொண்டு.
“முடியலைனா என்னோட வந்துரு கல்யாணி. இப்பவும் உன்னய என்னால மறக்க முடியல.” தொண்டை கமர சொல்ல, அதிர்ந்து பார்த்தாள்.
மனம் விட்டுப்பேச ஆளில்லாத நிலையில் இவன் கேட்டதும் எல்லாம் சொல்லியது தவறோ என மனம் அடித்துக் கொண்டது. மறுமனமோ உன் கணவனிடம் கூட பகிர முடியாததை இவனிடம் பகிர்ந்தது எந்த உரிமையில் என கேள்வி கேட்டு குட்டு வைத்தது. முரண்டிய மனதோடும், குழப்பத்தோடும் வீடு திரும்பினாள். திருநீறு மடித்த காகிதத்தில் தன் கைபேசி எண்ணை எழுதித் தந்திருந்தான்.
சென்றாயன் குடும்பத்தில் இப்பொழுது பாகம் பிரித்து அவரவர் பண்ணையம் தனித்தனி என ஆயிற்று. பஞ்சாயத்து தேர்தலில் நிற்கிறேன் என அனைத்தையும் அடமானம் வைத்து, ஆடம்பரமாக செலவழித்து கடனில் இருக்கிறது சொத்து முழுவதும். அதை மீட்டுத்தரச் சொல்லி வித்யா அடிக்கடி கனகத்தை தொல்லை செய்வதுண்டு. அதுக்கு நான் எங்கே போவது என கனகம் கைவிரிகக,
“பஸ் மேல பஸ் வாங்கிவிட காசு இருக்கு. எனக்கு கொடுக்க மட்டும் இல்லையாக்கும்.” என்ற அங்கலாய்ப்பு வித்யாவிடம்.
அக்கா கை உயர்ந்து கொண்டே போவது பொறுக்கவில்லை. அவர்களுக்கு இணையாக வரவேண்டும் என்றுதான் பஞ்சாயத்து தேர்தலில் நின்றது. உள்ளதும் போய்விடும் நிலமை இப்பொழுது.
“அது உங்க மாமாவும், அண்ணனும் கூட்டு ஏவாரம் வித்யா. ஏதோ பேங்க்ல லோனு அது இதுன்னு சொல்றாங்க. நமக்கென்ன தெரியும்?”
“ஒனக்கு பெரிய மகன்னா ஒசத்தி தான். அவங்க முன்னாடி நாங்களும் மதிப்பா பொழைக்க வேண்டாமா? நாளைக்கு ஒரே எடத்துல நிக்கும் போது நாங்க மட்டும் கொறச்சு தெரிவோம்.” அக்கா மீதிருக்கும் பொறாமையும் சேர்ந்து கொண்டு கண்ணைக் கசக்க, கல்யாணி வாங்கி வருவதெல்லாம் சின்ன மகளுக்கு கடத்துவார் கனகம்.
பிள்ளைகளை கடைக்கு அனுப்பிவிட்டு கல்யாணி தனியாக இருந்தாள்.
திவ்யாவிற்கு இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. குழந்தைக்கு தடுப்பூசி போடும் நாள். கனகமும், வித்யாவதியும் மூத்தவனையும், குழந்தையையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனை சென்றிருந்தனர்.
குழந்தையைப் பார்க்க சென்றாயன் மாமியார் வீடுவந்தான். வீட்டில் யாருமில்லை எனத் தெரிந்தது. கல்யாணி மட்டும் அறைக்குள் கட்டிலில் அமர்ந்து துணி மடித்துக் கொண்டிருந்தாள். கடைக்குப் போன பிள்ளைகள் வருவார்கள் என்பதால் கதவு திறந்தே இருந்தது. அதுவுமில்லாமல் பகலில் கதவடைத்துப் பழக்கமில்லை. இவன் அறைக்குள் வந்தது தெரியவில்லை. சந்தர்ப்பம் தேடி வரவில்லை. கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள நினைத்தான். எதிர்புறமாகத் திரும்பி, தங்கள் அறைக்குள்தானே என இயல்பாக அமர்ந்திருக்க, இடுப்புச் சேலை நழுவியிருந்தது. சென்றாயன் கண்களில் போதை வேறு.
வேட்டை நாயாய் அவளை பார்வை வெறிக்க, வேகமாய் பின்னாலிருந்து வாரி அணைக்க, விதிர்விதிர்த்து சட்டென திமிரி, உதறி எழுந்தாள் பெண். கணவனையே தொட அனுமதிக்காதவள். உடல் நடுங்க குப்பென வியர்த்துவிட்டது. அதிர்ச்சியில் பேச்சு வரவில்லை. மேல் மூச்சு வாங்கியது. நிற்க முடியாமல் கால்கள் தள்ளாடியது. கண்களில் கோபம் தெறிக்க, உதடு துடிக்க,
“நீயெல்லாம் மனுஷனா. குடிச்சுட்டு வந்தா பொண்டாட்டிக்கும் புள்ளைக்கும் வித்யாசம் தெரியாதா? தங்கச்சிகிட்ட நடந்துக்குற முறையா இது?” ஆத்திரமாகக் கேட்க, அதெங்கே அவன் மண்டையில் ஏறியது.
“என் மச்சான கட்டுனதால தான தங்கச்சி. நீங்களும் நாங்களும் வேற சாமி கும்புடறவங்க தான. பங்காளி மொறையா என்ன?”
இதிலெல்லாம் தெளிவாக வியாக்யானம் பேசியவன், அதிர்ந்து நின்றவள் சுதாரிக்கும் முன் மீண்டும் ஆட்கொள்ள முயல, பெண்ணவள் தடுமாறி கட்டிலில் விழ, மேலே விழுந்து திமிறியவளை அவனது பிடிக்குள் அடக்க முயல, அவனுக்கு கீழே இருந்தவளால் நூலளவுகூட அசைக்க முடியவில்லை. போராட்டத்தில் சேலை முந்தானை ஜாக்கெட்டோடு கிழிந்து விலகிக்கிடக்க,
“அத்தை!”
“அம்மா!” எனும் ஒரு சேர அழைப்பில் சட்டென விலகினான்.
வாசலில் பிள்ளைகள் மிரண்டு நிற்பதைப் பார்த்தவன், வேகமாக வெளியேறி ஓடிவிட்டான். ஆடை கிழித்து அலங்கோலமாக பிள்ளைகள் முன் கிடந்த நிலை உணர, வெடித்து அழுதாள் பெண்.
அந்நியோன்யமான தம்பதிகளாக இருந்தாலுமே பிள்ளைகள் முன்போ, உறவுகள் முன்போ சேர்ந்து கூட அமரமாட்டார்கள் நம்மூர் பெண்கள். அப்படியிருக்க அந்நியனின் பிடிக்குள் பிள்ளைகள் முன் தான் இருந்த நிலை அவளை குறுகச் செய்ய தன் விதியை நொந்து அழுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை அவளுக்கு.
அம்மாவின் அழுகையில், அம்மாவை அவன் அடித்தாக நினைத்து மங்கா மிரண்டு நடுங்கி அழ ஆரம்பிக்க, பத்து வயது வேந்தனுக்கோ சினிமா கற்றுக் கொடுத்ததில் எதுவும் புரிந்தும் புரியாத நிலை. பிள்ளைகளின் பார்வையில் என்ன நடந்தது எனப்புரியாமல், பயம் அப்பட்டமாகத் தெரிந்தது.
வேகமாக வெளியே சென்றவன் வாசலிலேயே மனைவியும், மாமியாரும் எதிர்ப்பட, “என்ன பொண்ணு கட்டிட்டு வந்திருக்கீங்க? அண்ணங்கிட்டப்போயி தப்பா நடக்குது. பதினஞ்சு வயசுலயே புருஷன் தேடினப்பவே அது லட்சணம் தெரியலையா? எம் மச்சான் மூஞ்சில எப்படி முழிக்கிறது?”
நல்லகுடி நாயகமாக கதையை திரித்து சொல்ல, மருமகனை நம்பிய கனகம் மருமகளை நம்பவில்லை.
வீட்டிற்குள் வந்து கல்யாணியைத்தான் வாய்க்கு வந்தபடி வறுத்தெடுத்தார். “கேடு கெட்டவன்னு தெரிஞ்சும் பொண்ணெடுத்தது எந்தப்பு. எம்மகன் வரட்டும் உன் குடுமிய அறுத்து குளிர்காயச் சொல்றேன்.” வாய் ஓயாமல் பேச,
“அம்மாச்சி, சித்தப்பாதான் அத்தைகிட்ட தப்பா நடந்தாங்க” வேந்தன் தன் கண்ணால் கண்டதைச் சொல்ல, கனகத்திற்கு திக்கென்றது.
“பாத்தியாம்மா புள்ளைகளக்கூட மயக்கி வச்சுருக்கா. அவருக்கென்ன தங்கச்சிங்கற நெனப்பு இல்லாமையா போச்சு. இவளப்பத்திதான் ஊரே கேளு நாடே கேளுன்னு கல்யாணத்துக்கு முன்னவே சந்தி சிரிச்சுதே?”
வித்யா கணவனை விட்டுக் கொடுக்காமல் பேச, எத்தனை வருஷம் போனாலும் இந்தப் பெயர் தன்னை விட்டு போகப் போவதில்லை. ஊரைக் கூட்டி அவனை அம்பலப்படுத்தி விடலாம். எத்தனை பேர் நம்புவார்கள். அவன் பக்கம் நாலு கை திரும்பினால் இவள் பக்கம்தான் பத்து கை திரும்பும். தீக்குளித்தால் மட்டும் நம்பவா போகிறது? அப்படி யாருக்கு என்னை நிரூபிக்க வேண்டும்?
ஒருவன் மீது ஆசைப்பட்டதாலேயே அவுசாரிப் பட்டம் வாங்கியாகிவிட்டது. உண்மையாக இருந்து, என்னத்தைக் கண்டோம்? பிடிப்பில்லாத அல்லாட்டமான வாழ்க்கை வாழ்ந்து என்னத்தை சாதிக்கப்போறோம்? எந்த வாழ்க்கையை இழுத்துப் பிடிக்க இந்தப் போராட்டம்?’
தனக்குத்தானே வாதம், பிரதிவாதம் நடத்தியவள் தனக்கு சாதகமாகவே தீர்ப்பும் எழுதிக்கொண்டாள். அன்று கோவிலில் பிரசன்னா எழுதிக் கொடுத்த கைபேசி எண்ணை தேடி எடுத்தாள்.
கனகத்திற்கு மருமகன் மீது சந்தேகம் வந்தாலும், இது மகனுக்குத் தெரிந்தால் என்னவாகும் என்ற நினைப்பில் அவர் ஈரக்குலை நடுங்கியது. தங்கை கணவன் எனவும் பார்க்க மாட்டான். வெட்டிப் போட்டு ஜெயிலுக்குப் போகவும் தயங்க மாட்டான். அவளை தங்கமாகத் தாங்க பிறந்த வீடு இருக்கிறது. ஆனால் இரண்டு பிள்ளைகளோடு சின்னமகள் கெதி என்னாவது. ஏற்கனவே அக்கா மட்டும் மதிப்பாக வாழ, தனக்கும் அதுமாதிரி அமையவில்லை என பொறுமித் தள்ளுபவள். இவள் பெயர் ஏற்கனவே கெட்டது கெட்டதுதானே என விஷயத்தை மகன் வருவதற்குள் மூடி மறைக்கப் பார்த்தார்.
பழனி முருகனுக்கு தைப்பூசம் மாலை போட்டு பாதயாத்திரை சென்றிருந்த கணபதி ஒருவாரம் கழித்து வீடு திரும்ப, அவருக்குக் காத்திருந்தது மனைவி ஓடிப் போய்விட்டாள் என்ற செய்தியும், அவள் பிள்ளை இங்கே இருக்கக்கூடாதென மகளை மாரியம்மாளிடம் ஒப்படைத்து விட்டதும்தான். அக்காவோடு சென்று குழந்தையைக் கேட்க, சீனியப்பன் அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார்.
*****
இன்று…
வீடு கண்டுபிடித்து மாமனும் மருமகனும் உள்ளே வர அன்று மங்கையைப் போல் இன்றும் கார்த்திகா நடுங்கிக் கொண்டிருக்க, பூட்டிய அறைக்குள் மங்கா அலறும் சப்தம் கேட்டது. உள்ளே வந்ததும் வேந்தன் கண்ணில் பட்டது நடு ஹாலில் கிடந்த புது மஞ்சள் கயிறுதான். கட்டாயத் தாலி கட்ட வந்திருக்கிறான் எனப் புரிந்தது.
ஆர்த்தி, ஃபோனில் விமல் கோபமாக அங்கு வருவதை மங்கையிடம் சொல்ல, எப்பொழுதும் வருபவன்தானே? அத்து மீறி எதுவும் செய்யமாட்டான் என அசட்டையாக இருந்தாள். உறவுக்காரன் என்ற நம்பிக்கையில் அன்று அம்மாவைப் போல மகளும் ஏமாந்துதான் போனாள்.
ஒரு ஆண் தனது சொத்தை அபகரித்தால் கூட போனால் போகட்டும் என விட்டுக் கொடுப்பான். தனக்கு சொந்தமென நினைத்திருப்பவளை அபகரித்தால், அங்கு தன் கௌரவம் அடிபட்டுப் போக, எந்த எல்லைக்கும் போவான் என்பது அவள் அறியாத ஒன்று.
வரும்பொழுதே தாலியோடுதான் வந்தான். கார்த்திகாவும், அவளும் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருக்க, வந்தவுடன் அவசரமாக தாலிகட்ட முற்பட, பிடுங்கி வீசி எறிந்தாள் பெண். தன் ஆவேசம் முழுவதையும் திரட்டி அவனை ஓங்கி அறைய, மீண்டும் அவனது ஆத்திரத்தை கிளறிவிட்டது அவள் கொடுத்த அடி.
தங்கை ஓடிப்போன அவமானம், அத்தை மகனுக்குதான் பெண்ணிடம் முதல் உரிமையென வேந்தனுக்கு பெரியவர்கள் முன்னுரிமை கொடுத்தது என எல்லாம் சேர்ந்து அவனை மிருகமாக்கியது.
“காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் தூக்கிட்டுப் போவானா? தாலி கட்டுனாத்தானா. அதுக்கு முன்னாடி உன்னய சொந்தமாடிட்டா அப்பறம் எந்த அத்த மகன் வர்றானு பாக்குறே?”
அதிர்ந்து நின்றவளை இழுத்துச் சென்று கதவை மூட, வேந்தனும் கணபதியும் வர சரியாக இருந்தது.
அந்தக்காலத்து வீட்டின் இரட்டைக்கதவு. கதவை உடைப்பது ஒன்றும் அவ்வளவு கடினமாக இல்லை. உடைத்து உள்ளே செல்ல அன்று அத்தையைக் கண்ட அதே கோலம், அதே காட்சி. அன்று செய்ய முடியாததை இன்று செய்தான். பின்னால் சட்டையைப் பிடித்திழுத்து விமலை கொத்தாகக் தூக்கியவன், உடம்பில் உயிரை மட்டும் விட்டுவைத்தான்.
வெகு வருடங்கள் கழித்து இதே வீட்டில் தன் உள்ளங்கைக்குள் ஏந்திய மகள், இன்று இருக்கும் கோலம் பார்த்து கணபதி நெஞ்சில் இரத்தம் வடியாத குறை. அருகே கிடந்த போர்வையை எடுத்து மகள் மீது போட்டவருக்கும் கோபத்தில் கண்கள் இரத்தமாக, அவர் பங்கிற்கும் வெளுத்து வாங்க, விமலை குற்றுயிராக விட்டவர்கள், மயங்கிக் கிடந்த மங்கையை எழுப்ப முயல கண் திறக்கவில்லை.
தண்ணீர் தெளித்து எழுப்ப, கண்விழித்துப் பார்த்தவள், முகத்தருகே தெரிந்த வேந்தனின் முகத்தத்தில் பலம் கொண்ட மட்டும் கை வைத்துத் தள்ள தடுமாறி நின்றான். பட்டென எழுந்தமர்ந்தவள், என்ன நடந்தது என மூளை கிரகிக்க முயல, அடுத்த நொடி ஓடிச்சென்று குடலே வெளிவரும் அளவிற்கு வாந்தி எடுத்தாள், ஒரு ஆடவன் தன் மீது முழுதாகப் படர்ந்த அருவருப்பு தாங்க முடியாமல். எத்தனை வருடமாக தூக்கத்தை காவு கொண்ட மனப்புழுக்கம் இது. ஒரு நாள் வாந்தியில் வெளியேறி விடுமா என்ன?
ஆறு அது ஆழம் இல்ல
அது சேரும் கடலும் ஆழம் இல்ல
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
ஆழம் எது அய்யா
அந்த பொம்பள மனசு தான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ…

If you are looking for a reliable slot site, this is it. The login is fast and the game variety is impressive. I’m really enjoying the experience so far at gamezoneslotslogin
Best gaming experience I have had in a long time. The rewards are fair and the games are addictive. Join me at idstarwin88.
I had some trouble with my old account but the support team here fixed it in minutes. Love the variety of games on jili01login. Highly recommended!
Great selection of games and the promotions are actually useful. It is my go-to spot for some weekend fun. Try 291jiliph if you want a reliable site.