“இவங்க என்ன சும்மாவா கேக்குறாங்க. இன்னைக்கி இத்தன பஸ்ஸு ஓடுதே… இவங்க கொடுத்ததுதான? நாங்க ஒன்னும் இப்பவே பிரிச்சுக் கொடுக்கச் சொல்லலயே? எங்க பிள்ளைய கட்டப்போறவனையும் உங்க கூட சேத்துக்கதான சொல்றோம். அப்பதான அவனுக்கும் நிர்வாகம் புடிபடும்.”
சின்னப்புள்ளைக விளையாட்டில் இன்னொருத்தரை ஒப்புக்கு சேர்த்துக் கொள்ளச் சொல்வது போல செல்லப்பாண்டி சொல்ல.
“மாப்பிள்ளை பாத்துட்டீங்களா?” வேந்தன் கேட்க,
“எங்க அக்கா மகனுக்குதான் பேசி வச்சுருக்கோம். வெளி ஆளெல்லாம் இல்ல.” செல்வி தனது எண்ணத்தையே குடும்பத்தினர் முடிவாகச் சொல்ல,
‘செல்லபாண்டி துள்றது இதுக்குதானா?’ என அம்மையப்பனும்,
‘அந்த அவசரக்குடுக்கையா?’ என வேந்தனும் ஒரு சேர நினைத்தனர். இவ்வளவு நேரமாக செல்வியின் பேச்சை வைத்தே மங்காவின் நிலமை அவனுக்குப் பட்டவர்த்தனமானது.
தமிழ்ச்செல்வி திருமணம் முடித்து வந்தநாள் முதல் கல்யாணி பிள்ளையோடு பிறந்த வீட்டில்தான் இருந்தாள். கல்யாணத்திற்கு வந்தவள்… போவாளாயிருக்கும் என நினைக்க, அதன் பின்தான் கல்யாணி புருஷன் வீட்டிலிருந்து சடவில் வந்திருப்பது தெரிந்தது. புகுந்த வீட்டினரோடு மனஸ்தாபத்தில் கோபித்துக் கொண்டு வந்திருந்தாள்.
தங்கை வீட்டில் இருக்க, ரெங்கநாதன் மனைவியோடு சிரித்துப் பேசவே தயங்கினார். அறைக்கு வெளியே நீ யாரோ நான் யாரோ என்பது போல்தான் நடந்து கொள்வார். எல்லாம் அவர்களது அறைக்குள் மட்டும்தான். வெளியே சின்ன சிரிப்பு கூட இருக்காது. ஒரு கோவிலுக்கோ, சினிமாவிற்கோ இருவரும் போகவேண்டும் என்றாலும் தங்கையை காரணம் சொல்வார். அதுவே நாத்தனார் மீது செல்விக்கு வெறுப்பு வர முதல் காரணமாயிற்று.
தமிழ்ச்செல்வியை விட சிறுவயது கல்யாணிக்கு. பதினாறு வயதில் கல்யாணம். பதினாரு முடிவதற்குள்ளேயே குறை பிரசவத்தில் குழந்தை. பேருகாலம் முடிந்தே ஒரு வருடம் முடியும் தருவாயில் தான் கணபதி வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
“குழந்தை ஊறாம இருக்கு. உங்க மகளுக்கும் கூறுவாறு பத்தாது. எனக்கும் முடியாது. நீங்களே பிள்ளைய தேத்தி விடுங்க!“ நீட்டி முழக்கிய கனகம் மருமகளையும், பேத்தியையும் ஒரு வருடம் வரை அழைத்துச் செல்லவில்லை.
அப்பொழுது ரெங்கநாதனுக்கு திருமணமாகவில்லை. அதனால் மாரியம்மாளும் மகளையும், பேத்தியையும் வீட்டில் வைத்து சீராட்டினார். பிறந்தமுடி எடுக்கத்தான் பதினோராம் மாதக் கணக்கிற்கு, அதுவும் செய்யவேண்டிய சீர் வரிசைக்கு அனுமார் வாலாட்டும் ஒரு லிஸ்ட் கொடுத்துச் சென்றனர் கணபதி வீட்டார். பிறந்த முடி எறக்கவே இம்புட்டா என மாரியம்மா ஆத்துப்போனார். எல்லாம் இந்த வீட்டு ஆம்பளைகளால. சாதியக் காப்பத்தறேனு எம்பிள்ளைய பாழும் கெணத்துல தள்ளிட்டாங்க. கிளிய வளத்து பூனை கையில கொடுத்துட்டேன். புலம்ப மட்டும்தான் முடிந்தது மாரியம்மாவால்.
ஏதாவது பிரச்சினை என்றால் கல்யாணி கோபித்துக் கொண்டு தாய்வீடு வருவதும், இவர்கள் மறு வீட்டுச் சீர் அளவிற்கு சீர் செய்து சமாதானம் செய்து விட்டுவருவதும் வாடிக்கையாயிற்று. போகும்போது இங்கிருந்து உப்பு, கடுகு தவிர (பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கக் கூடாது என்பதற்காக) அத்தனையும் மகளுக்கு பொட்டலம் கட்டுவார் மாரியம்மாள்.
இது எல்லா பெற்றவர்களும் செய்வதுதானே என எடுத்துக் கொண்டாலும், கூடவே காய்கறிக்கு கொசுறாக கறிவேப்பிலை இனுக்கு மாதிரி தனது சிருவாட்டுக் காசிலிருந்து பணமாகவோ, நகையாகவோ எடுத்து கொடுத்தனுப்புவார். அடுத்த ஆறேழு மாதத்தில் மீண்டும் இதே கதை தொடரும். கொண்டு போவது சின்ன மகளுக்குப் போகும் மாயம் கல்யாணிக்கே தெரியாது.
ரெங்கநாதன் கல்யாணத்திற்குப் பிறகு, செல்வியும் கணவர் காதில் இதைப் போட, “நம்மல செய்யச் சொல்லலயில்ல விடு” என கண்டு கொண்டதில்லை. ரெங்கநாதனும் தங்கை இருக்கும் பொழுது ஒரு மாதிரியும், தங்கை இல்லாத பொழுது ஒரு மாதிரியும் மனைவியிடம் நடந்து கொள்வார். அடுத்து சாதாரணமாக கல்யாணி பிறந்தவீடு வந்தால்கூட செல்வி மூஞ்சியைக் காண்பிக்க ஆரம்பித்தார்
“இப்படி இனிமே அடிக்கடி வராத கல்யாணி. இந்த வீட்டுக்கு இன்னொருத்தி வந்துட்டா. உனக்கு மரியாதை இருக்காது. எதுனாலும் அங்கேயே இருந்து சமாளிச்சுப் பொழைக்கப்பாரு.”
வழமையாக எல்லா அம்மாக்களும் சொல்லும் படிப்பினையை மகளுக்கு போதித்து, கொண்டு விட்டுவந்தனர். பதினாறு வயது சிறுமிக்கு எந்த நிலையில் திருமணம் செய்து கொடுத்தோம், ஏன் அடிக்கடி கோவுச்சுட்டு வர்றா, அவளுக்கு அங்கு என்ன பிரச்சினை என பெற்றவர்களும் யோசிக்கவில்லை.
ஏன் அடிக்கடி உங்க அம்மா வீட்டுக்குப் போற? உனக்கு இங்கு என்ன பிரச்சினை என்று கட்டினவரும் கேட்காத ஆற்றாமையில், இனி பிறந்து வீட்டிலும் தனக்கு ஆதரவு கிடைக்காதென தன் வழியைப் பார்த்துக் கொண்டு ஒரு நாள் கிளம்பிவிட்டாள்.
கல்யாணி தன் வழியைப் பார்த்துக் கொண்டு போய்விட, பிள்ளையையும் அவர்களிடம் விடாமல் இவர்கள் வைத்துக் கொள்ள, தாயில்லாப் பிள்ளை என தங்கை மகளை ரெங்கநாதன் தாங்க, தன் நிலமை தான் அடுத்து தன் பிள்ளைகளுக்கும் என்ற எண்ணம் வேரூன்றி விட்டது. அதுவே எதுவாகயிருந்தாலும் என் பிள்ளைகளுக்கு அடுத்து தான் இவளுக்கு என்ற எண்ணம் செல்வி மனதில் ஆழமாய் பதிந்து போனது. தன் பிள்ளைகள் மட்டும் உரிமையும், சொந்தமும் கொண்டாட வேண்டிய வீட்டில், அவர்களுக்கிணையாக மங்கையும் கொண்டாடப்படுவது அறவே பிடிக்கவில்லை.
பெற்றவர்கள் உயிரோடு இல்லையென்றால் கூட தாயில்லாப் பிள்ளை என்ற கரிசனம் பிறந்திருக்குமோ என்னவோ. பெற்றவளும் குடும்பத்திற்கே அசிங்கத்தை ஏற்படுத்திவிட்டு சென்றுவிட, பெற்றவரும் யாருக்கு வந்த விருந்தோவென பிள்ளையைக் கண்டுகொள்ளாமல் இருக்க, எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா என செல்வி தன் ஆதங்கம் முழுமையும் வெறுப்பாக மங்கையின் மீது மடை திருப்பினார். அது தான் அவரை இங்கு வரை இழுத்து வந்திருக்கிறது. உன் பிள்ளைக்கு நீ செய். நாங்க ஏன் செய்ய வேண்டுமென நிற்கிறார்.
எப்படியும் தன் மாமியாரோ, கணவனோ கணபதியைத் தேடிப்போய் சொத்து கேட்கப் போவதில்லை. எனவேதான் அவர்கள் வந்த இடத்தில் பிடித்து வைத்துக் கொண்டார். நாணயத்தின் இருபக்கம் போல் அவரவர்களுக்கென்று ஒரு நியாயம் வகுத்து வைத்திருக்கிறோம். அந்த நியாயத்திற்கு நாமே வாதியும், பிரதிவாதியும் கூட. ஆனால் தீர்ப்பு மட்டும் எப்பெழுதும் நமக்கு சாதகமாக மட்டுமே. செல்வியைப் பொறுத்தவரை தான் செய்வது எப்பொழுதும் சரியென்பதே.
“என்னமோ பசு மாடு வாங்கிக் கொடுத்த மாதிரி சொல்றீங்க. குட்டி போட்டு குட்டி போட்டு பெருகுன மாதிரி. ஒரு பஸ்தான நீங்க வாங்கிக் கொடுத்தது. ஒரு பஸ் ஓடுனா பத்தாதுன்னு எங்க அண்ணன் ஒரு பஸ் வாங்கி விட்டுத்தானே இந்தளவுக்கு வளந்துருக்கு. கடத்தேங்காய எடுத்து வழிப்புள்ளையார்க்கு ஒடச்ச மாதிரி எங்ககிட்டப் புடுங்கி எவனுக்கோ கொடுப்பீங்களா? அத்தனையும் எங்க அண்ணன், அண்ணன் மகனோட உழைப்பு.” அம்மையப்பனின் சின்னத்தம்பி ஆவேசமாக பொங்கிக் கொண்டுவந்தார்.
ரெங்கநாதனுக்கும் தெரியும். கணபதிக்கு அத்துனை சாமர்த்தியம் பத்தாது. சரியான நிர்வாகத்திறன் இல்லாமல் பஸ் கம்பெனியை இத்தனை காலம் வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை அனுபவப் பூர்வமாக கண்டு கொண்டுள்ளாரே. அம்மையப்பனின் நிதானம் கலந்த சாதுர்யமும், வேந்தனின் வேகம் கலந்து விவேகமுமே விநாயகம் பஸ் கம்பெனியின் வெற்றி ரகசியம்.
கணபதி எடுப்பார் கைப்பிள்ளை. அம்மா சொன்னாலும் சரி, அக்கா, தங்கைகள் சொன்னாலும் சரி.
‘போட்டா திம்பேன்… வச்சா சுமப்பேன்’ எனும் சொந்தமாக சிந்திக்கத் தெரியாத வகையறா. அம்மாவின் கைக்குள் வளர்ந்த சவளைப்பிள்ளை. முரட்டு குணம்.
அப்பொழுதே சாதிச் சங்கம், சாதிக் கட்சி என்றுதான் சுற்றுவார். தாமரை மட்டும்தான் தம்பியை நீ செய்வது சரியில்லையென குட்டிக்கொண்டே இருப்பார். வித்யாவதி அம்மாவோடு சேர்ந்து கொண்டு வந்தளவிற்கு லாபம் என பார்ப்பவர். அடுத்த சாதிக்காரன் எப்படி நம்ம சாதிப் பொண்ணுமேல ஆசைப்படலாம் என அந்த சாதியை தூக்கிப் பிடிக்கத்தான்… கணபதி, கல்யாணியை கல்யாணம் செய்ததே.
கல்யாணியை மணம் செய்து கொடுக்கும் பொழுது ஒரு பஸ் வாங்கிக் கொடுப்பதாகப் பேச்சு. அவர்களும் அதற்கு சம்மதித்து தான் பெண் எடுத்தனர். கணபதியின் அப்பா செல்வவிநாயகம் பெயரில் ஏற்கனவே ஒரு பஸ் ஓடிக்கொண்டிருந்தது. ரெண்டு நாட்கள் ரோட்டில் ஓடினால் நான்கு நாட்கள் மெக்கானிக் ஷெட்டில் ஓய்வெடுக்கும். அதை மாற்றிவிட்டு உயரமான குஷன் இருக்கைகள், பளபளக்கும் வண்ணங்களோடு, டீ.வி, பாட்டு கேட்க நல்ல சவுண்ட் சிஸ்டம் என டீலக்ஸ் பஸ் தரத்தில் வத்தலக்குண்டு டூ மதுரை ரூட் பஸ் விடப்பட்டது.
அப்பொழுது அம்மையப்பன் குடும்பத்தில் பாத்திரக்கடை பொதுவில் இருக்க, தம்பிகளும் அரசாங்க வேலையில் தனித்து அமர்ந்துவிட, தனக்கென ஒரு தொழில் வேண்டுமென அம்மையப்பனும் மச்சானோடு கூட்டு சேர்ந்தார். ஒரு பேருந்து மட்டும் ஓட்டினால் கைக்கும் வாய்க்கும் என்றுதான் வரவுக்கும் செலவுக்கும் சரியாகப் போகுமென இவரது பங்காக ஒரு பேருந்து, விநாயகம் பேரிலேயே வாங்கப்பட்டது. அக்கா கணவரும் கூட்டு சேர்ந்ததில் மெத்தனம் வந்தது கணபதிக்கு. அவர் பொறுப்பில் விட்டுவிட்டு சாதிக் கூட்டம், கட்சி என்றே சுற்ற ஆரம்பித்தார்.
அம்மையப்பன் நிர்வாகம்தான் ஒரு பேருந்து பல பேருந்துகளாக வளர்ச்சி அடைந்தது. எந்த நேரத்தில் பயணிகள் கூட்டம் சேரும் என கணித்து அதற்குத் தகுந்தவாறு கால அட்டவணை தயாரித்தார். அந்த நேரத்தில் தங்கள் பேருந்துக்கு நேரம் ஒதுக்கவே அரசுப் பேருந்து டைம் கீப்பரிடமிருந்து பல பேரை சரிக்கட்ட வேண்டியிருந்தது. ஒரு வழித்தடம் மட்டும் காணாதென, சுற்று வட்டார கிராமங்கள் அணைத்து வழித்தடங்களிலும் பேருந்து இயக்க பெர்மிட் வாங்கினார். எல்லாமே கணபதி பெயரில்தான்.
தந்தை மறைவிற்குப் பின் பாத்திரக்கடை அம்மையப்பன் பொறுப்பிற்கு வர, மகனுக்கும் பஸ் கம்பெனியில் தான் நாட்டம் என்பதால் இதை மகனிடம் ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார். இதற்கிடையில் எல்லா உரிமமும் அம்மையப்பன் பெயருக்கு மாற்றித் தருவதாக கணபதி கூற, வாழ்க்கையில் தோற்ற நிலையில், விரக்தியில் இருப்பவரிடம் இதையும் வாங்கிவிட்டால் மொத்தமாக மனம் விட்டுப் போகுமென அப்போதைக்கு வேண்டாம், பின்னும்பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
வேந்தன் பொறுப்பெடுத்த பிறகுதான் ஆம்னி பஸ் சர்வீஸ் தொடங்கினான். இன்று விநாயகம் ட்ராவல்ஸ் ஆலமரமாய் கிளை பரப்பி வேரூன்றி நிற்பதற்குக் காரணம் கணபதியில்லை என்பது ரெங்கநாதனுக்கு நன்றாகத் தெரியும். அதற்காக மகளுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாதே.
ஆளாளுக்கு ஒரு பேச்சு என வளர்ந்து கொண்டே போனதே ஒழிய முடிவுக்கு வரவில்லை.
“இவங்க வீட்டுப் பொண்ணு எங்க அண்ணனுக்குப் பண்ணுன அசிங்கத்துக்கு இவங்கல்லாம் எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு சபைல நின்னு பேசுறாங்கனு தெரியல.” இடைக்குத்தலாக வித்யாவதி பேச,
“உங்க அண்ணே ஆம்பளையா நடந்திருந்தா எங்க பொண்ணு ஏன் இன்னொருத்தன தேடப் போறா?” செல்வி வெட்டிப்பேச,
“ஆம்பளையா இல்லாமத்தான் புள்ளயப் பெத்தாளா?”
“இதே வாய்தான் அன்னைக்கி எங்க அண்ணே புள்ளயான்னு சந்தேகமா இருக்குனு சொல்லுச்சு.” செல்வராணியும் இடைபுகுந்தார்.
“ஏற்கனவே சோரம் போனவளத்தானே எங்க தலையில கட்டுனீங்க?”
“வரும்படி வாங்கலாம்னுதான, தெரிஞ்சும் பொண்ணக்கட்டுனீங்க. நாங்க ஒன்னும் மறைச்சு பொண்ணு கொடுக்கலியே. உங்க வீட்ல அவள என்ன பாடு படுத்துனீங்கனு தெரியல. யாரும் வேணாம்னு அவ வழியப் பாத்துட்டுப் போயிட்டா. எங்களுக்கும் தான் அவளால வெளிய தலைகாட்ட முடியாமப் போச்சு” என செல்வராணி அங்கலாய்க்க, வித்யாவதியின் முகம் ஒரு கணம் இருண்டு தெளிந்தது.
செல்வியை கட்டிக் கொடுப்பதற்கு முன்பே ரெங்கநாதன் குடும்பத்தில் நடந்ததெல்லாம் செல்வராணிக்கு நன்கு தெரியும். முன்னோடும் கருப்பாக செல்லப்பாண்டி தானே கல்யாணியின் திருமணத்தில் மாப்பிள்ளை முதற்கொண்டு பார்த்து நாட்டாமை செய்தது.
சபை நாகரீகமின்றி பெண்கள் வார்த்தைகள் வரம்பு மீற, ஆறி வடுவாகிப்போன புண் மீண்டும் கிளறிவிடப்பட்டது கணபதிக்கு. பதினைந்து வருடங்களுக்கு முன் நடந்த அவமானம் மீண்டும் அரிதாரம் பூசி சபையேறுகிறது. எத்தனை வருடங்கள் போனாலும் இந்த அவமானம் தீராது. கட்டை காடு போய்ச்சேரும் வரை துரத்தும்.
வேந்தன், வேதனை கலந்து மாமன் முகம் பார்க்க, அவமானத்தில் முகம் கன்றிப்போயிருந்தது கணபதிக்கு. யார் பக்கம் நியாயம், அநியாயம் என்பது இங்கு பேச்சல்ல. மனைவி பாதை தவறும் பொழுது அது கணவனை எந்தளவிற்கு பாதிக்கிறது என்பதை மாமனைப் பார்த்து கண்கூடாகக் கண்டவன். வீட்டை விட்டு வெளியே செல்லாமல் பல காலம் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தார். மெள்ள போதை அவரை ஆட்கொண்டு ஆறுதல் அளிக்க அதிலேயே மூழ்கிப் போனார்.
வேந்தனுக்கும் அன்று அவன் கண்ட காட்சி மனதில் நிழலாட, பத்துவயது சிறுவனுக்கு அன்று புரியவில்லைதான். ஆனால், விபரம் தெரிந்த பிறகு அன்று நடந்ததன் முகாந்திரம் எது எனப்புரிய அவனால் மாமனையே சில நேரங்களில் மன்னிக்க முடியாது. இவர் மட்டும் தன்னை நம்பிவந்த பெண்ணிற்கு ஆறுதலாக, உறுதுணையாக இருந்திருந்தால் இன்னொருத்தனுக்கு எதற்கு கொடுக்கு முளைக்கப்போகிறது. அன்றும் சின்னமகள் வாழ்க்கைதான் முக்கியம் என இவன் அம்மாச்சி கனகம் செய்த காரியம் தான் கல்யாணி தன் வாழ்க்கைப் பாதையை மாற்றத் தூண்டியது.
“ஏம்மா, பொம்பளைகள பேசவிட்டா பழசெல்லாம பேசி குப்பையக் கெளருவீங்க. நாங்க பேசறதா இல்லையா?” மூத்தவர் ஒருவர் அதட்டல் போட, சற்றே இருவரும் வாயை தற்காலிகமாக மூடிக் கொண்டனர்.
மங்காவிற்கு அழைத்த ஆர்த்தி இங்கு நடப்பதைச் சொல்ல, மங்காவும் பதட்டமாக அம்மாச்சியிடம் கூற,
“கல்யாண வீட்ல போயி இந்த வீட்டு சிரிக்கி என்ன ஏழரையக் கூட்டுறாளோ தெரியலையே.? நாம்போயி ஒரு எட்டுப் பாத்துட்டு வர்றே மங்கா!” என அவசரமாகக் கிளம்பினார்.
“அம்மாச்சி வெயிலா இருக்கு. தீபன தொணைக்கி கூட்டிப்போங்க!”
மாமன் மகனை துணைக்கி அனுப்பி வைத்தாள். அடிக்கிற வெயிலுக்கு வயதான காலத்தில் எங்கும் மயங்கி விழுந்துவிட்டால் என்ற பயம். அவளும், கார்த்திகா மட்டுமே வீட்டில் இருந்தனர்.
அதற்குள் மாப்பிள்ளை வீடு சென்ற மணமக்களும் அங்கு விளக்கேற்றி சாமி கும்பிட்டு பால், பழம் சம்பிரதாயம் முடித்து, மண்டபம் திரும்ப, கூட்டம் குழுமியிருக்க, என்னமோ ஏதோவென அனைவரும் அங்கு வந்தனர்.
“இதுக்குதான் இந்த ஊர் சம்பந்தம் வேண்டாம்னே. ஏற்கனவே அண்ணனுக்குப் பொண்ணெடுத்து நல்லா வெளங்கிருச்சு. இந்த லட்சணத்துல நீ பொண்ணக் கொடுத்துருக்க?” வித்யா தாமரையிடம் வாய்விடவும், பாக்கியம் இவர்களை அணுகவும் சரியாக இருந்தது.
சட்டென அவர் முகம் கருத்துவிட்டது. அதைப் பார்த்த தாமரைக்கும் மனம் படபடத்தது. இந்தப்பேச்சு மகளின் வாழ்க்கையில் எத்தகைய பின் விளைவை ஏற்படுத்துமோ என பயம் மனதைக் கவ்விக்கொண்டது.
‘இப்ப என்ன லட்சணம் கெட்டுப் போச்சு. தரங்கெட்ட குடும்பத்துல சம்பந்தம் செஞ்சதப் போலல்ல இந்தம்மா பேசுது’ என பாக்யலஷ்மி முகம் சுண்டியது.
‘எப்படினாலும் ஒன்டிக்கட்டையான அண்ணனின் பங்கு பொதுச் சொத்துதானே. நாளைக்கு நம்பிள்ளைகளுக்கும் ஏதாவது கிடைக்கும்’ என எண்ணியிருந்த வித்யாவின் நினைப்பில் மண், கல் எல்லாம் விழுந்த ஆத்திரம் அவர் பேச்சில்.
அங்கு வந்த மாணிக்கமும் எதுவும் பேசும் நிலைமையில் இல்லை. பிரச்சினை அவர்களுக்குள் தான் என்றாலும் மாணிக்கம் வீட்டு கல்யாணத்துல பிரச்சினையாம் என்றுதானே ஊர் பேசும். தனக்கு சம்பந்தமே இல்லாத ஒன்று தன் வீட்டு விசேஷத்தில் எனும் பொழுது முகம் இறுக அமர்ந்திருந்தார்.
தன் மகனின் கல்யாணம். எத்தனை ஆடம்பரம். சீரும் சிறப்புமாக நடந்தது. திருஷ்ட்டி பட்டதுபோல் ஆயிற்று செல்வி செய்த காரியம். இதே எண்ணம் தான் அம்மையப்பன் குடும்பத்தினருக்கும். தனது செல்ல மகளின் திருமணம். எத்தனை எதிர்பார்ப்போடு நடந்தது. இந்தப் பேச்சு காலத்திற்கும் மகளுக்கு புகுந்த வீட்டில் ஒரு பேச்சு வாங்கிக்கொடுக்கும்.
இதுவரை பொறுமையாக அனைவரின் பேச்சையும் அவதானித்தவன், மணமக்கள் வரவும் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நினைத்தான் வேந்தன்.
“இப்ப முடிவா என்ன சொல்றீங்க?” குரலை அழுத்தமாக உயர்த்த,
“எங்க பிள்ளைக்குச் சேரவேண்டியத கொடுக்கச் சொல்றோம்.”
“எப்படி? பணமாவா… சொத்தாவா?”
குரலில் இம்மியளவும் தீவிரம் இல்லாமல் கேட்க, செல்லப்பாண்டி குறுக்குப் புத்தி வேலை செய்தது. நகைக்கடை சம்பந்தம் தான் கைவிட்டுப் பேயிற்று. மகனையாவது பஸ் கம்பெனிக்கு முதலாளியாக்கிப் பார்க்கும் ஆசை வந்தது.
“பணமான்னா எப்படிக் கொடுப்பீங்க? கம்பெனி மதிப்பு போட்டா?”
“அதெப்படி கொடுக்க முடியும்? மாமா இன்னும் உயிரோடுதான இருக்காரு. அவருக்குப் பின்னாலதான அவரு வாரிசுக்கு. இதொன்னும் தாத்தன் சொத்து இல்லயே?”
“அப்பறம் எப்படி சொத்து தர்றதா உத்தேசம்?”
“கல்யாணச் செலவு பண்ணனும். சீர் செய்யணும். அவ்வளவு தானே? அதுதான முறையும் கூட. அவருக்குப் பின்னாடி இருக்கறத எடுத்துக்கட்டும்.”
“அது எப்படி நம்புறது. நீதானே நிர்வாகம் பண்ற. நாளைக்கு எதுவும் இல்லைனுட்டா, நாங்க என்ன பொறங்கைய நக்கிட்டுப் போறதா? என கேட்க வேந்தனுக்கு கோபம் கண்ணைக் கட்டியது. கையைக் கட்டிக்கொண்டு நின்றவன் தாடை இறுகியது.
“எங்க வந்து என்ன பேசுற? பெரிய மனுஷனாச்சேனு அண்ணே வேணா மரியாதை கொடுக்கலாம். செவுலு பேந்துரும். வார்த்தைய அளந்து பேசு” என செழியன் வேட்டியை மடித்துக் கட்ட, அவனை சமாதானப் படுத்துவதற்குள் போதும் போதும் என ஆயிற்று.
நடப்பவைகளைப் பார்த்து, திவ்யா அரண்டு போய் மதியழகனைத்தான் கலக்கத்தோடு பார்த்தாள். அவன் அமைதியாகவே நிற்க இவளால் ஒன்றும் கணிக்க முடியவில்லை. சற்றுமுன் வரை இருந்த புதுமணத் தம்பதிகளுக்கான இதமான மனநிலை இருவருக்கும் இப்பொழுது இல்லை.
“செல்லபாண்டி! நாலு பேரு இருக்கற எடத்துல வார்த்தையப் பாத்து பேசுப்பா. பொம்பளப் புள்ளைக இருக்குல்ல. என்ன வேணும்னு தெளிவாச் சொல்லுங்க. அவங்க ஆகும், ஆகாதுன்னு முடிவு சொல்லட்டும்” எனக் கேட்டுக் கொண்டிருக்க, மாரியம்மாவும் பேரனோடு வந்துவிட்டார்.
“எம்மகனுக்குதான் பொண்ணு கொடுக்கப் போறாங்க. அதனால அவனையும் பஸ் கம்பெனியில சேத்துக்கச் சொல்லுங்க! மேலே பார்த்துக் கொண்டே செல்லப்பாண்டி சொல்ல,
‘கரியும் சோறும் ஆக்கிப் போட்டாலும், ராத்திரி எந்தப்பக்கம் ஓட்டப் பிரிச்சு எறங்கலாம்னு முகட்ட பாக்குற திருட்டுப்பய. இவன் மகனுக்கு எம்பேத்தி கேக்குதோ?’ மாரியம்மாள் மனதிற்குள் பொரும,
“இப்ப கண்டக்டர், டிரைவர் வேல எதுவும் காலியில்லையே. க்ளீனர் வேலகூட காலியில்ல. வேணும்னா டிக்கெட் ஏஜன்டா வரச்சொல்லுங்க. அதுக்கு ஒரு பஸ் கம்பெனிலதான் பாக்கணும்னு இல்ல. கூவிக்கூவி ஆளு கூட்டியாந்தா, டிக்கெட்டுக்கு இவ்வளவுன்னு கமிஷன் போட்டுக் கொடுக்கலாம்.”
தாடையைத் தடவிக் கொண்டே குரலில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கூற,
“பொண்ணக் கட்டுறவனுக்கு அந்த வேலதான் கொடுப்பீங்களா?”
செல்லப்பாண்டி சேரைவிட்டு அவசரமாக உதறி எழ,
“வேல கொடுக்கறோம்னு தான் சொன்னேன். அதுவும் உங்க மகன் டிக்கெட் சேக்குறதப் பொறுத்து. பொண்ணு கொடுக்கறோம்னு யாரு சொன்னது?” நக்கல் தெறித்தது குரலில்.
“அத நீயென்ன சொல்றது?” செல்வி குறுக்கே வர,
“நான் சொல்ல முடியாது. ஆனா, எங்க மாமா சொல்லலாம்ல. அவருதான பொண்ணப் பெத்தவரு. அவரு மகள யாருக்குக் கொடுக்கணும்னு அவருதானே முடிவு பண்ணனும்?” என கேட்க, வேந்தன் போகும் ரூட்டு தம்பிக்கும், மச்சானுக்கும் பிடிபட்டது.
“இத்தன நாளா விட்டுப்புட்டு இப்ப மட்டும் எங்கேருந்து உரிமை வந்துச்சு?”
“அவரு அப்பவே புள்ளயக் கொடுங்கனுதான் கேட்டாரு. இவனும், இவங்க அப்பாவும் சேந்துகிட்டுதான் புள்ளயக் கொடுக்கல” என மாரியம்மாள் மகனைக் கை காட்டினார்.
நம் வீட்டு வாரிசு. நம்ம வீட்லதான் வளரனும் என தம்பியோடு வந்து தாமரை பிள்ளையைக் கேட்டார்.
“எம்மகளையே ஒழுங்கா வச்சு உன் தம்பிக்கு வாழத் துப்பில்ல. நாளைக்கே அவன் புது மாப்பிள்ளை ஆயிருவான். எம்பேத்திய உங்ககிட்ட கொடுக்க முடியாது!” என அவமானப்படுத்தி பேசி அனுப்பிவிட்டார். தாமரை தான் வளர்ப்பதாகக் கேட்டும் கொடுக்கவில்லை.
இவை அனைத்தையும் ஆர்த்தியின் கைபேசி வாயிலாக மங்கா கேட்டுக் கொண்டிருந்தாள்.
“இப்ப என்னதாம்ப்பா முடிவு சொல்றீங்க? அதான், பொண்ணுக்கு கல்யாணச்செலவு பாத்துக்கறாங்களாம். சொத்து கணபதி காலத்துக்குப் பின்னால தன்னால வரப்போகுது. இதோட பிரச்சினைய முடிச்சுவிடுங்கப்பா!”
“அப்படியே பெரியவங்க இதையும் பேசி முடிச்சுவிட்ருங்க!” வேந்தன் அடுத்து அடிப்போட,
“எதை தம்பி?”
“என் மாமன் பொண்ணு எனக்குதான்னு.”
“டேய்! உனக்கு யார்றா இங்க பொண்ணு தர்றேனு சொன்னது?” செல்வி ஆங்காரமாக துள்ளி எழுந்தார்.
“சித்தி! உங்களுக்கு மரியாதைதான் தெரியாதுனு நெனச்சேன். உறவுமுறையுமா தெரியாது? நான் உங்ககிட்ட எப்படி கேக்க முடியும்? எம்மாமங்கிட்ட தான் கேக்குறே. என்ன மாமா! எனக்கு உங்க மகளத்தர சம்மதமா?” என கணபதியிடமே நேரிடையாகக் கேட்க,
அப்பொழுதுதான் தங்கையின் விபரமறிந்து அப்பாவை அழைத்துச் செல்ல கொலைவெறியோடு உள்ளே வந்தான் விமல். வேந்தன் பெண் கேட்டதில் வந்த வேலையை மறந்து நின்றுவிட்டான்.
“தம்பி கேக்குறது சரிதானே? வேந்தனுக்குதானே முதல் உரிமை. அத்தை வீடு பொண்ணெடுக்க விருப்பமில்லைனாதானே வெளில கொடுக்க முடியும்?”
பெரியவர்கள் தங்களுக்குள் பேச, அப்பொழுதுதான் செல்லபாண்டி கைபேசிக்கு அழைப்பு வர, மகள் எனத் தெரிய கோபமாக மனைவியிடம் கொடுத்தார்.
இவர்கள் சப்தத்திலும், ரேடியோ இறைச்சலிலும் பேச முடியாமல் எழுந்து மண்டபம் விட்டு வெளியேவந்தார் செல்வராணி. ஒரு காதை கையால் மூடிக்கொண்டு, மறு காதில் வைத்து அழைப்பை ஏற்க, அவர் கேட்ட செய்தியில்,
“யாத்தே! பாவிமக எங்குடியக் கெடுத்துட்டாளே!” என நெஞ்சில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.
வேந்தன் பெண் கேட்டதையும், பெரியவர்கள் அவனுக்கு சாதகமாகப் பேசியதையும் கேட்டவன் கோபமாக மண்டபம் விட்டு வெளியே வர, செல்வராணி அழுதபடி உள்ளே வர,
“என்னம்மா! ஒன்னுமே தெரியாத மாதிரி ஒப்பாரி வைக்கிற? உனக்கு எல்லாம் தெரியும்னு உம்மக சொல்லிட்டா. கண்ட சாதிப்பய கையால தாலிகட்டிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன் போயிட்டா. போயி நீயும் உம்புருஷனும் ஆசீர்வாதம் பண்ணி கூட்டி வாங்க!” எகத்தாளமாக பேசிவிட்டு வேகமாக நடையைக்கட்ட,
“நீ எங்கடா போற?”
“என்னமோ அவன் பொண்ணு கேக்குறான். எல்லா பெரிய மனுஷனும் அவனுக்குத்தான் முதல் உரிமைனு நியாயம் பொளக்குறாய்ங்க. அப்ப நானென்ன ***ட்டுப் போறதா?”
பேசுவது பெற்றவளிடம் என்று கூட நினைப்பில்லாமல், வார்த்தை தறிகெட்டு வந்தது தருதலைக்கு.
“பெத்தவகிட்ட பேசுற மாதிரியாடா பேசுற? உங்க சித்தி பேச்சக் கேட்காதேனு அன்னைக்கே சொன்னேன்லடா? அதுக்கு இப்ப என்னடா பண்ணப் போற?”
“எப்படி அவன் வந்து பொண்ணு கட்டுறான்னு பாக்குறே?” என மங்கையின் வீடு நோக்கி வண்டியை வேகமாகத் திருப்பினான். சப்தத்தில் சரியாகப் பேச முடியாமல் வெளியே வந்த ஆர்த்தி, விமல் அம்மாவிடம் பேசிவிட்டு வேகமாக கிளம்பியதைப் பார்த்து மண்டபத்தினுள் விரைந்தாள்.
மகனைப் பார்ப்பதா, மகளைப் பார்ப்பதா என புரியாமல், இப்போதைக்கு இதை கணவனிடம் சொல்ல வேண்டும் என உள்ளே வந்தவர், மகள் திருமணம் முடித்து காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்திருப்பதைச் சொல்ல, அதிர்ச்சியில் பிர்ச்சினை வேறுபக்கம் திசை திரும்ப, பெரியவர்கள் அனைவரும் காவல் நிலையம் கிளம்பினர்.
இப்பொழுது கல்யாண வீட்டார் மட்டுமே இருக்க யார் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கும் நிலையில் பெண் வீட்டார் இல்லை.
விமல் தங்கை பிரச்சினையைக் கூட கண்டு கொள்ளாமல், அவசரமாக மங்கையைத் தேடிச் செல்வதை ஆர்த்தி, வேந்தனிடம் சொல்ல, அவனது அவசரப்புத்தி அறிந்தவன்,
தங்கையை மறு வீடு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாட்டை செழியனைப் பார்க்கச் சொல்லிவிட்டு, காரை எடுத்துக் கொண்டு, மாமனோடு வேகமாக கிளம்பிவிட்டான் தன் கூண்டுக்கிளியைத் தேடி.
கணபதிக்கும் வந்து பலவருடங்கள் ஆனதால் தெருக்கள் மாறியிருக்க, இரண்டு மூன்று தெருக்கள் சுற்றியே வீட்டைக் கண்டுபிடித்தனர். வீடு தெரிந்தவர்களை அழைத்து வராததை நினைத்து நொந்து கொண்டான்.
அங்கு அவன் கண்ட காட்சி பத்து வயதில் தான் கண்ட காட்சியை மீண்டும் வேந்தன் கண்முன் நிறுத்தியது. அன்று அத்தை. இன்று அத்தை மகள். அன்று மங்கை நடுங்கிக் கொண்டு நின்றது போல் இன்று கார்த்திகா நடுங்கிக் கொண்டு நின்றிருந்தாள். ஆனால் அன்று போல் அவனுக்கு பத்து வயது அல்லவே.
அடுத்த நொடி சிவனின் ருத்ர தாண்டவம் எப்படி இருக்கும் என விமலுக்கு உயிரோட்டமாகக் காட்டிவிட்டு அவனின் உயிரை மட்டும் விட்டுவைத்தான் வேந்தன்.

Best platform for local players. The registration was easy and I started playing within minutes. Definitely visit 168jllogin.
Such a friendly community and the rewards are generous. I feel like a valued player every time I log in. Cheers! ph22jili
[9679]nustarph Login Link – Legit na Online Casino App at Slots,Gamitin ang nustarph login link para sa mabilis na access. Mag-download ng APK at mag-enjoy ng online slots gamit ang GCash. Mag-register na rito! visit: nustarph
The speed of the site is amazing, just like the name suggests. No glitches and the graphics are sharp. I am really enjoying my time at idturbo88.