மாமா! மாப்ளே! 10

அவளுக்கு அதிர்ச்சி கொடுத்து அவள் மனநிலையை மாற்ற நினைக்க, அவள் கொடுத்த அதிர்ச்சியில் இவன் தான் தன்னிலை மறந்து சிலையாக சமைந்து நின்றான். 

உணர்ச்சி மேலிட அவசரப்பட்டு கைபேசியில் முத்தத்தை அனுப்பி விட்டாளே ஒழிய அவளுக்கும் அங்கே படபடத்தது. மேனியெங்கும் உதறலெடுத்தது. முகம் செம்பருத்தியாய் பூத்து சிவந்து விட்டது. அவன் ஏதாவது தவறாக எண்ணிவிட்டால் என்னாவது என்ற பயம் வேறு உள்ளுக்குள் அலைக்கழிக்க, எங்கிருந்து இவ்வளவு துணிச்சல் வந்தது என்று அவளுக்கே தெரியவில்லை. 

அவளே அறிந்திறாத அவள் மனதை அவன் கண்டுகொண்டானே என்ற உவகையில் தன்னையும் மீறி‌ முத்தத்தை அனுப்பிவிட்டாளே ஒழிய அதன் பின்தான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது. என்னவோ நேரிலேயே தந்துவிட்டவளைப் போல் கண்களை இறுக மூடி, “அச்சோவென” தலையில் தட்டிக் கொண்டாள். இப்பொழுது அதை நினைத்து கூச்சம், தப்பாக எண்ணி விடுவானோ என்ற அச்சம், அவனை எப்படி நேரில் எதிர்கொள்வது என்ற தயக்கமென இவள் பலதரப்பட்ட உணர்ச்சி குவியலில் சிக்கித் தவிக்க,

இவனோ, முற்றிலும் மாறாக வேறொரு மனநிலையில் இருந்தான். காற்று வழி அனுப்பிய முத்தமே அவனைப் பித்துப்பிடிக்க வைத்தது. அனுப்பிய அடுத்த நொடி அழைப்பைத் துண்டித்திருந்தாள். அவளது செயலை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்

ஒண்தொடி கண்ணே உள.

கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

வதனத்தில் மந்தகாசம் பொங்க, கண்களிலும் ரசனை ஊற்றெடுக்க கையிலிருந்த ஃபோனையே கண்ணகற்றாமல் பார்த்திருந்தான். அதில், பூவைத்த அன்று இருவரும் தோளுரச நின்று பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும் நிழற்படம். தங்கைகள் இவனுக்கு அனுப்பி வைத்தது. 

மெல்லிய தேகம் தான் அவளுக்கு. இவன் பக்கத்தில் மேலும் ஒடிசலாகத் தெரிந்தாள். வயதெல்லாம் பெரிய வித்தியாசமில்லை. இப்போ நான் உடம்பைக் குறைக்கணுமா? இல்ல… இவ உடம்பை ஏத்தணுமா? ஏற்கனவே அங்கிள் கேட்டகிரின்னு வேற சொல்லிட்டாளே?” என்ற யோசனைதான் உள்ளுக்குள் ஓடியது. 

விழியோரம் புன்னகை கசிய, இதழ் கடித்து, தலை கோதி திரும்பினான். கைகளைக் கட்டியபடி அவனையே பார்த்து நின்றான் பார்த்தசாரதி. 

அவனைப் பார்த்து அசட்டு சிர்ப்பொன்றை உதிர்க்க,

“தாத்தா கண்டத்துலருந்து தப்பிச்சுட்ட. அடுத்த கண்டம் வந்திருக்கு. வாடா!” என்றான். அடுத்து ஏதோ வில்லங்கம் போல என்று தெரிந்தது. 

அசராமல், “பாத்தாக்கலாம் வா! நாம பாக்காததா?” சிரிப்போடு தோளில் கை‌போட, சந்தேகமாகப் பக்கவாட்டில் திரும்பிப் பார்த்தான் பார்த்தி. 

“ஒன்னும் சரியில்லையே… பிரச்சினை வந்திருக்குன்னு சொல்றேன். இவ்ளோ எனர்ஜடிக்கா இருக்க!” அவனை ஓரப்பார்வை பார்த்துக் கொண்டே கேட்டவனுக்கு எங்கே தெரியும் எல்லாம் ஒற்றை முத்தம் செய்த மாயம் என்பது.

 கன்னியர் கடைக்கண் பார்வைக்கே மாமலையும் ஓர் கடுகாகும் பொழுது, இங்கு முத்தமே காற்றில் வந்திருக்கிறது. சொல்லவா வேண்டும்.

“யாரு வந்துருக்கா… அதுக்கும் முதல்ல இங்கிருந்து மாலதி சித்திய அனுப்பனும்டா. ஏதாவது ஒரண்டை இழுத்து விட்டுறுது” என்று இலக்கியாவிடம் ஃபோனில் பேசியதை கூற,

“அந்த அத்தைக்கு கமிஷன் போச்சேனு கவலையா இருக்கும்டா” என்றான். 

“எதுக்குடா கமிஷன்?” புரியாமல் கேட்க,

“உனக்கு தெரியாதா… அவங்க இப்ப வெட்டிங் மீடியேட்டர் வேலை பாக்குறாங்க. நம்ம குடும்பத்தைப் பத்தி பொண்ணு வீட்ல ஆஹா ஓஹோன்னு சொல்லி வச்சுருப்பாங்க. நல்ல கமிஷன் எதிர் பாத்திருக்கும். அது இப்ப கிடைக்காதுல்ல!” 

“இது வேறயா?” அலுத்துக் கொண்டான்.

“எனக்கும் கூட ரெண்டு மூனு‌ சம்பந்தம் சொல்லி வச்சுருக்கு. பொண்ணுக்கு எத்தனை‌ பவுன் நகை போடுறாங்களோ‌ அதுக்கு ஏத்த மாதிரி மாப்பிள்ளை வீட்ல கமிஷன். மாப்பிள்ளை சம்பளத்துக்கு தகுந்த மாதிரி பொண்ணு வீட்ல கமிஷன். அதை அப்பறம் பாக்கலாம். ப்ரஸ்டீஜ் குக்கர் ஃபுல் ப்ரெஷர்ல வந்திருக்கு. வந்து என்னானு பாரு!” என்று அழைத்து வந்தான்.

“ஏன்டா அவங்களுக்கு என்ன? போனதடவையே சமாதானம் பண்ணியாச்சே!” என்று கேட்டுக் கொண்டே இருவரும் உள்ளே வந்தனர். 

“என்ன அண்ணி, நீ மட்டும் வந்திருக்க. அண்ணன எங்க?” கலையரசியும் அப்பொழுதுதான் கேட்டுக் கொண்டே வேலாயுதம் இருந்த அறையை விட்டு வெளியே வந்தார். 

அவர் கண் விழிக்க, அவரவர் மற்ற வேலைகளைப் பார்க்க கிளம்பிவிட்டனர். வேலாயுதம் முடியாமல் படுத்ததில் எல்லா வேலைகளும் போட்டது போட்டபடி கிடந்தது விருந்து வைத்த வீட்டில். ஆளுக்கொன்றாக ஒதுங்க வைத்தனர். 

கொண்டு வந்த பையை ஓரமாக வைத்துவிட்டு, “வருவாரு!” என்றவரிடமிருந்து குரலே வெளிவராமல் இழுவையாய் வந்தது பதில். 

இவர் தண்டபாணிக்கு ஒன்றுவிட்ட அத்தை முறை. அது எப்படினா… சுத்தி வழச்சு சொல்லணும். புரியுதான்னு பாருங்க. அப்பா கூடப் பொறந்த அத்தை இல்லை. அப்பாவுக்கு பெரியப்பா பேத்தி. அதாவது இவரும் தணிகைவேலுக்கு ஒரு அண்ணன் மகள். போன தலைமுறையில் மூத்த வாரிசு. பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்து பேரன் பேத்தியெல்லாம் எடுத்துவிட்டார். ஆனாலும் இன்னமும் மருமகன் மரியாதை இம்மி கூட குறையக் கூடாது இவர் கணவருக்கு. அதனாலே இவர் குடும்பத்திற்கு பிரஸ்டீஜ் குக்கர்னு பேர். எப்போ வந்தாலும் ஏதாவதொரு பிரச்சினை வெடிக்கும். 

“என்னண்ணி நீட்டி இழுக்குற. முன்ன நின்னு காரியத்த எடுத்து நடத்த வேண்டாமா?” உரிமையாய் கலைரசி சடைக்க,

“அதான் பெரியவங்க எல்லாம் இருக்காங்கல்ல. அவங்க எடுத்து நடத்துவாங்க. அவரு பந்தியில இலையெடுக்க வந்தா பத்தாது!” உள்குத்து வைத்து நக்கலாகப் பதில் சொல்ல,

பார்த்தசாரதியும் தண்டபாணிக்கு கண்களால் சாடை காட்டினான். 

“இது அடுத்த கண்டம் போலடா. சித்தி இழுவையே சரியில்ல.” மெதுவாக கிசுகிசுத்தான். 

“எனக்கும் அதுதான்டா யோசனையா இருக்கு. எல்லாருக்கும் மாதிரி ட்ரெஸ்ஸெல்லாம் கொடுத்து, பணம், பாக்கு, வெத்தலையோட தானே பத்திரிக்கை வச்சோம். எந்த விசேஷம்னாலும்‌ அவருதானே முன்னால நிப்பாரு” என்றான். 

தாய்மாமான், சம்பந்த வழி மாமன், மாச்சானுகளுக்கு பத்திரிகையோடு பணமும், பாக்கு, வெற்றிலையும்‌ வைப்பதுதான் மரியாதை. அந்தக்காலத்தில் வெற்றிலை, பாக்கோடு ஒன்னே கால் ரூபாய். இப்போதெல்லாம் நூற்றி ஒன்னு. இவருக்கும் அதே மாதிரி தான் மரியாதை செய்து பத்திரிகை வைத்து வந்தார் தணிகைவேல். பத்திரிகை பார்த்தவுடனே முகம் மாறிவிட்டது வீட்டின் மூத்த மருமகனுக்கு. 

“பாக்கலாம்… என்ன நடக்குதுன்னு. ஆனா உன் கல்யாணம்னாலே ஏதாவது ஒரு ஏழறைய கூட்டுறாங்க.”

“பாக்கலாம்டீ மாப்ளே! நீ பண்ணும் போது எத்தனை பிரச்சினை கிளம்புதுன்னு!”

“அதெல்லாம் ஆல்ரெடி கிளம்பிருச்சு. சைலன்ட்‌ மோட்ல போட்டிருக்கேன். வைப்ரேஷன் மட்டும் வருது.”

“என்னடா சொல்ற?” அதிர்ந்து கேட்டான். 

“லவ் பண்ணா உங்க மாமா ஆரத்தியா எடுப்பாரு.” தாடையைத் தடவியவாறே முகட்டைப் பார்த்து கூற,

தண்டாபாணி, “யாரு… நீயாடா..?” கண்கள் விரியக் கேட்டான்.

“ஷாக்க கொற… ஷாக்க கொற… ஏன் நாங்கெல்லாம் லவ் பண்ண மாட்டோமா?” மலர்ந்து சிரித்தான் பார்த்தசாரதி.

“மாமாவுக்குத் தெரியுமாடா?” அதிர்ச்சி விலகாமல் இவனும் கேட்க,

“தெரியும்னுதான் நினைக்கிறேன். ஆனா காட்டிக்கல!” 

“எப்படிடா? 

“அம்மாவுக்கு டவுட் வந்துருச்சு‌. கேட்டதுக்கு ஆமான்னு ஒத்துக்கிட்டேன். எப்படியும் உங்க மாமா காதுக்கு விஷயம் போயிருக்கும். மனுஷன் சைலன்ட்டா இருக்கறதப் பாத்தா ஏதோ பெருசா ப்ளான் போடுறார்னு நினைக்கிறேன்! இந்த மாலதி சித்தி சாதகக் கட்டோட அடிக்கடி வீட்டுக்கு வந்துட்டு போகுது. நம்மகிட்டதான் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்க. ஆனா பாக்குறப்ப எல்லாம் முறைக்குறாரு.”

“ஆனாலும் சைலன்டா இருக்கறவங்களை நம்பக் கூடாதுங்கறது சரியாத்தான்டா இருக்கு! ஊமக்குசும்பனுகடா.”

“யாரு… நாங்களா… வீட்டுக்கு விசேஷத்துக்கு வந்த புள்ளைய ரெண்டே நாள்ல கரெக்ட் பண்ண நீயெல்லாம் பேசுற?”

“டேய்… அப்படி எதுவுமில்ல. பழனி வீட்டுக்காரர் தான் இலக்கியாவுக்கு அம்மாச்சிகிட்ட மாப்பிள்ளை பாக்க சொன்னாப்ல. நாம கேட்டா என்னானு‌ தோணிச்சு! அம்மாச்சிகிட்ட சொன்னேன். அவ்ளோதான்” மலர்ந்த முகமாக கூற,

“சரி… சரி… நம்பிட்டோம்… கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் ஆம்பளைக்கும் கன்னம் சிவக்கும்ங்கறதே எனக்குத் தெரியும்.” மாமன் மகன் கேலி மீண்டும் அவளது முத்தத்தை நினைவூட்ட, சட்டென முகம் மலர்ந்து விட்டது. நாணத்தின்‌ சாயல் தண்டபாணி முகத்தில். 

புன்னகை தாராளமாய் விரிய, “டேய் போதும்டா… புது மாப்பிள்ளை தான். அதுக்குன்னு இப்படியா?” மேலும் அவனை‌ ஓட்டி கலாய்க்க, 

“முதல்ல பரமு‌ அத்தை பஞ்சாயத்து என்னானு கவனிப்போம்!” பேச்சை மாற்றினான்.

போன முறை தண்டபாணி திருமணத்தில் ஆரம்பித்த பஞ்சாயத்து இவர்களது. அது வேறொன்னும் இல்லீங்க. பத்திரிக்கையில பெயர் போடும் பொழுது இவரது வீட்டுக்காரர் பெயரை பெரியப்பா மருமகனுக்கு அடுத்து போட்டுட்டாங்க. இதெல்லாம் ஒரு விஷயமான்னு கேக்கப்படாது. பத்திரிக்கையில பெயர் போடுறது மட்டுமில்ல. அந்த பேரு எந்த எடத்துல வருதும்கறதும் முக்கியம். 

நான் தானே வீட்டுக்கு மூத்த மருமகன். எனக்கடுத்து தானே அவன்‌ பெயர்‌ வரவேண்டும் என்ற சீனியாரிட்டி பிரச்சினை. இவர் வீட்டுக்கு மூத்த மருமகன். இன்னொருவரோ வீட்டுக்கு மூத்தவரோட மருமகன். இதில் யார் பெயர் முன்னால் போட்டால் என்னவென்று இவர்கள் போட்டுவிட, அப்பொழுதே நான் கலியாணத்திற்கு வரமாட்டேன் என பிரச்சினை பண்ணியவர். எப்படியோ சமாதானம் செய்து அழைத்து வந்தார்கள். அந்தக் கல்யாணமே நின்று போனது வேறொரு(சீனி, பழனி) கதை. 

இப்பொழுது எதற்கு வீம்பு புடிக்கிறார் எனத் தெரியவில்லை. 

“வாங்கத்தை… எங்க மாமவக் காணோம்.” அப்பொழுதுதான் பார்த்தது போல் இவனும் வரவேற்று மாமனை விசாரிக்க,

“தல நாள்ல இந்த வீட்டுக்கு வந்த மருமகன். அவருக்கு என்ன மரியாதை கொடுத்தீங்க. மொத ஆளா வர்றதுக்கு?” நொடிப்பாய் பதில் சொல்ல,

“ஏன் அத்தை. இந்த தடவைதான் யார் பேருமே போடலையே?” என்றான். 

போனமுறை இவர்கள் கிளப்பிய பிரச்சினையில் இந்த முறை யார்‌ பெயரும் பத்திரிக்கையில் போடவில்லை. மணமக்கள் பெயர், பெற்றோர் பெயர், இடம், நேரம் இவற்றோடு முடித்துக் கொண்டனர்.

“அதுதான் அவருக்கு கோபம் மருமகனே. அதென்ன ஒருத்தரும் இல்லாதவனாட்டம் பத்திரிகை அடிச்சிருக்கான். அப்போ நமக்கெல்லாம் என்ன மரியாதைன்னு வரல. நீ வந்தா வா… வரலைனா போனுட்டு நான் வந்துட்டேன். அவருக்காக பொறந்த வீட்ட விட்டுக் கொடுக்க முடியுமா? நாளைக்கு என்னோட விருந்துதானே. என் பிள்ளைக எல்லாம் உனக்கு மூத்தவளாப் போய்ட்டாளுக. இல்லைனா உன்னை விட்டுறுப்பேனா. சபையில வச்சு‌ மாப்பிள்ளைய மறுச்சுறுக்க மாட்டே. ஆகாத மனஷனக் கட்டி என்னத்தக் கண்டே!” வராத கண்ணீரை முந்தானை கொண்டு துடைத்துக் கொண்டார். 

ஒட்டன்சத்திரத்தில் பெரிய அளவில் மொத்த காய்கறி மண்டி வைத்து நடத்துபவர் இவருக்கு ஆகாத மனஷனா போய்ட்டாரு. அவர் கொஞ்சம் சோமபானப் பிரியரும் கூட. குடித்துவிட்டால் சலம்பல் ஓவராக இருக்கும். அதைத்தான் அப்படி சொன்னார். 

‘நல்ல வேளைடா நீ தப்பிச்ச’ எனும்படி பார்த்தி, இவனை ஓரக்கண்ணால் பார்த்து வைத்தான். 

“என்னத்தை… பொண்ணழைக்க உங்களையும் மாமாவையும் தான் அனுப்பலாம்னு நெனச்சேன். நீங்கதானே வீட்டுக்கு மூத்தவங்க. மாமாவும் வரல. இனி வேற யாரையாவதுதான் ஏற்பாடு பண்ணனும். சரி… விடுங்க பாத்துக்கலாம்” கவலையாக யோசிக்கும் பாவனையில் முகத்தை வைக்க, மருமகன் கவலையைப் பார்த்த அத்தைக்கு மனசு தாங்கவில்லை. 

“நான் இருக்கையில என் மருமகன் எதுக்கு மருகி நிக்கணும். வேற யாரை அனுப்ப போற. இப்பவே இந்த மனுஷன வரச் சொல்றே.” உடனே‌ போனில் வீட்டுக்காரை அழைத்து என்ன பேசினாரோ தெரியாது. அடுத்த பஸ் பிடித்து வருவதாக ஒப்புக் கொண்டார். 

“என்னடா இவங்களையா பொண்ணழைக்க போகச் சொல்லப் போற‌? நாத்தனாரா பழனியும், சீனியும் தானே போகணும்! அது தானே முறை!” 

“ஆமாடா… ஆனா கைக்குழந்தைய வச்சுட்டு அவ்ளோ தூரம் போய்வரணும்ல. ஆறேழு மணி நேரமாகும். குகனுக்கு வேற சளி, காய்ச்சல்டா. என்ன பண்றதுன்னு யோசிச்சேன். இவங்களையே அனுப்புவோம்.”

ஒரு வாரமாகவே சீனியின் மகனுக்கு சளி, காய்ச்சல் என யாரையும் தூங்க விடாமல் படுத்தி எடுக்கிறான். கலையரசி‌ கூட இவனை வைத்துக் கொண்டு எப்படி பெண்ணழைப்பிற்கு பழனி போகமுடியும் என கவலைப் ‌பட்டுக் கொண்டிருந்தார். பழனிக்கும் குடும்பக் கட்டுப்பாடு செய்த உடம்பு. நான்கு மாதம்கூட முடியவில்லை. இந்த நிலையில் அதிகமாக அலட்டவேண்டாம் என்று நினைத்தார். 

“டேய் மாப்ளே! கில்லாடிடா… ஏழறையக் கூட்டுற மனுஷனோட ப்ரஷர ஒரேடியா புடுங்கி விட்டுட்டு” 

“என்னடா பண்றது. சொந்த பந்தம்னா அப்படித்தான்! அதுக்காக நீ வராதே, அப்படியே இருந்துக்கோன்னா சொல்ல முடியும். அத்தை வர்றதே இந்த மாதிரி நல்லது, கெட்டதுக்கு தான். இவங்களுக்குப் பின்னாடி யாரு வரப்போறா சொல்லு. இல்ல நாமதான் இவங்க பிள்ளைகளை தேடிப் போய் சொந்தம் கொண்டாப் போறோமா? நல்லது கெட்டதுனா சொல்லிவிடப் போறோம். அதுவும் ஃபோன்ல ஒரு அழைப்பு. அவ்வளவுதானடா. இவங்களுக்கே அம்பது வயசாகப்போகுது. இன்னும் பிறந்த வீட்ல சின்ன உரிமையைத்தானே எதிர்பாக்குறாங்க. சொத்தையா கேக்குறாங்க?”

நான் பிறந்து வளர்ந்த வீட்டில் இன்னும் என்னுடைய இடம் எது என்பதுதானே இவர்களது எதிர்பார்ப்பு. உடன் பிறந்த அண்ணன், தம்பிகள் இருக்கும் வரைதான் இந்த உரிமைப் போராட்டம் எல்லாம். அவர்களுக்குப் பிறகு அடுத்த தலைமுறையிடம் அந்த உரிமையைக் காட்ட முடியாதல்லவா. நானும் இந்த வீட்டில் தான் பிறந்து வளர்ந்தேன் என்ற உரிமை மீறல்தான் பெண்ணடி மக்களிடம். கட்டிக் கொடுத்து வேறு வீடு சென்ற பிறகும், அந்த வீட்டிற்கு உரிமையாக இன்னொருத்தி வந்த பிறகும் அந்நியப்பட்டுப் போன பிறந்த வீட்டின் மீது வரும் பிடிவாதமான உரிமை‌ (possessiveness). எந்தவொரு விசேஷத்திலும் தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என பிரச்சினை பண்ணும் கட்டிக்கொடுத்த அத்தை, அக்கா, தங்கைகளெல்லாம் இந்த கேட்டகிரி தான். ஒரு சிலர் அளவுக்கு மீறி உரிமை எடுத்துக் கொண்டு டாக்சிக்காக மாறுவதுண்டு‌. இவரைப்போல. 

“பரவாயில்லடா… இதே மாதிரி உங்க மாமாவையும் சமாளிச்சு என் காதலுக்கு பச்சைக் கொடி காமிக்கச் சொல்லுடா. மச்சான் தயவுல நானும் மலையேறிக்கிறேன்!” பார்த்தி கெஞ்சும் பாவனையில் மன்றாட,

“முதல்ல பொண்ணு யாருன்னு சொல்லு” என்றபடியே தோளோடு அணைத்து வெளியே அழைத்து சென்றான். 

அவன் சொன்னதைக்கேட்டு, “ஒரே இனம்னாலே உங்க அப்பாவ சரிக்கட்டுறது கஷ்ட்டம். இதுல வேற ஸ்டேட்டேவா. ரொம்பக் கஷ்ட்டம்டா!”

இருவரும் கேலி பேசியபடியே மற்ற வேலைகளைக் கவனிக்க செல்ல, இன்னும் கணவரை ஃபோனில் அதட்டி உருட்டிக் கொண்டிருந்தார் பரமு அத்தை. 

தாத்தா கண் முழித்ததும் அய்யம்மா அவரை பிளுபிளுவென பிடித்துக் கொண்டார். இனிமேல் கொட்டாவி விடக்கூட வாயைத் திறக்க மாட்டார் வேலாயுதம். தண்ணீர் கூட அளந்துதான் குடிப்பார் பேரன் திருமணம் முடியும் வரை.

*****

டீசர்…

“பழனி… இதெல்லாம் நமக்கு நடக்கவேயில்லடீ!” கழுத்தில் தொங்கிய பூச்சரத்தோடு பாவமாய் முகத்தை வைத்து அவளிடம் முறையிட,

“எதெல்லாம்…” என்றவள் கேட்ட தோரணையே வேற மாதிரி என்றது. 

“இதோ இதெல்லாம் தான்” அலங்கரிக்கப்பட்ட கட்டிலைக் காட்டியவனை, வெட்டவா குத்தவா என, இடுப்பில் கைவைத்து முறைத்துப் பார்த்தாள். 

“ஃப்ரூட்டி… கொடைக்கானல் பக்கம் தானே… ஒரு ட்ரிப் போய்ட்டு‌ வரலாமா?” கண்களில் சில்மிஷம் கொஞ்ச அவன் கேட்க,

“இருங்க… உங்க மச்சான்கிட்டயும், மாமியார்கிட்டயும் கேட்டுச் சொல்றேன்!” என்றவுடன் கையிலிருந்த பூச்சரத்தை கட்டிலில் போட்டுவிட்டு, “தெய்வமே!” என கையெடுத்துக் கும்பிட,

“அது… அந்த பயம் இருக்கணும்!” என்றாள் கெத்தாக. 

இருவரும் சேர்ந்து மணமக்களுக்கான அறையை அலங்கரிக்க, இந்த மாதிரி தமக்கு நடக்கவில்லையே என்ற ஏக்கம் நம்ம சீனியப்பனுக்கு. இருக்கும் தானே!

11 thoughts on “மாமா! மாப்ளே! 10”

  1. Padma Rajamani

    அந்த குறையை போக்க இப்போ வைச்சுட வேண்டியது தானே

    1. 😂😂😂😂😂
      அவனுக்கு கசக்குமா என்ன??
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  2. Irukum irukum,ekkam irukum….mundrikotaiya ellathum mudichitu….pana vellaiku thodapathala adikama vitathe persu..adhuvum unga ammavum thongachiyum patha velaiku vera yaravathu irunda katham katham than.

    1. 🤣🤣🤣🤣🤣 ரெண்டு பிள்ளையே பெத்துட்டான். இன்னுமா அவன் மேல இருக்க கோபம் போகல… டூ மச் மஞ்சுமா… மன்னிச்சு விடுங்க பொழச்சு போகட்டும்…
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

    1. ஆமாமா… ரொம்ப பாவம் தான்… 🤣🤣

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top