மாமா! மாப்ளே! 9

9

“என்ன கலை, தலைக்கு மேல விசேஷத்த வச்சுட்டு இப்படி ஆகிப்போச்சே…”

“நல்லா சாதகத்தைப் பாத்தீங்களா? ஏற்கனவே நின்ன கல்யாணம். இப்பவும் இப்படியாச்சுனா பொண்ணு சாதகத்தை மறுபடியும் ஒரு தடவை பாக்க வேண்டியதுதானே?”

“ஏன் பொண்ணு சாதகம் மட்டும் பாக்கணும். நம்ம தண்டபாணி சாதகத்தையும் தான் பாக்கணும். ஒரு தடவைன்னா‌ ஏதோ நேரங்காலம் சரியில்லைன்னு சொல்லலாம்‌. இப்பவும் இப்படி ஆச்சுனா, என்னான்னு காங்குறது?”

“நேத்து வரைக்கும் நல்லா இருந்த மனுஷன் திடீர்னு படுக்கணும்னா…”

“வயசான காலத்துல வாயக் கட்டணும்!” 

“ஆயக்குடிக்கு எடுத்துட்டு போயிறுவோமா? இங்க வைக்க வேண்டாம்.”

ஆளுக்கொன்றாக பேச கலையரசி அமைதியாகவே இருந்தார். நேற்று காலைவரை நல்லாயிருந்த மனுஷன் திடீர்னு வயிறு சரியில்லாமல் படுக்கையில விழணும்னா. அதுவும் சுயநினைவு இல்லாத அளவிற்கு. அப்பாவிற்கென பார்ப்பதா. மகனுக்கென பார்ப்பதா. அவருக்கும் உள்ளுக்குள் குழப்பம் தான்.

மருத்துவமனைக்கெல்லாம் அழைத்துச் செல்லவில்லை. தெரிந்த மருத்துவரை வீட்டிற்கே வரவழைத்தனர்.

வயதானவர் என்பதால் அவரும் எதையும்‌ அறிதியிட்டுக் கூறவில்லை.

வந்திருந்த சொந்த பந்தங்கள் எல்லாம் வேலாயுதம் படுத்திருந்த கட்டிலைச் சுற்றி தான் அடை காத்தனர். தலைக்கு மேல் மின்விசிறி சுழன்றாலும் அவரது வலதுபக்க தலைமாட்டில் ஒரு டேபிள் ஃபேனும் சுழன்று கொண்டிருந்தது. இடப்பக்க தலை மாட்டில் அய்யம்மா அமர்ந்திருந்தார். இடது கையில் குளுக்கோஸ் ஏறிக் கொண்டிருந்தது. 

உள்ளுக்குள் கவலையும், பயமும் இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. 

இன்னும் ஐந்து நாட்கள் தான் இருக்கிறது திருமணத்திற்கு. இன்று‌ காலை பந்தக்கால் கூட ஊன்றியாகிவிட்டது. 

கிட்டத்தட்ட பத்து பதினைந்து நாட்களாகவே வீடு சொந்த பந்தங்களால் நிறைந்திருந்தது. 

பழனியும் சென்னையிலிருந்து பிள்ளைகளோடு முன்கூட்டியே வந்துவிட்டாள். அவளும் அண்ணனுக்கு நலுங்கு வைத்து விருந்து போட வேண்டுமே. 

“மாமன் முறை அத்தை முறையிலிருக்கும் பெரியவர்கள் எல்லாம் முதலில் நலுங்கு வைக்கட்டும். மூன்றாம் நாள் விருந்தாக நாம் போட்டுக் கொள்ளலாம்!” என மனைவி மக்களை மட்டும் முன்னால் அனுப்பி‌ வைத்திருந்தான் சீனி. 

ஒரு வீட்டில் திருமணம் என்றால் மாமன், அத்தை முறையிலிருப்பவர்கள் மணமக்களுக்கு (அவரவர் வீட்டு சொந்தங்கள்) புதுத்துணி எடுத்துக் கொடுத்து, ஆக்கிப் போட்டு விருந்து வைப்பது வழக்கம்தானே. 

இவர்களுக்கு அத்தை, மாமன்களுக்கா பஞ்சம். போதாக்குறைக்கு கட்டிக் கொடுத்த அக்கா, தங்கைகளும் மாமன் மச்சான் கணக்கில் சேர்ந்துவிட பதினைந்தாம் நாளிலிருந்தே விருந்து அமர்க்களப் படுகிறது. விருந்து வைக்க நாட்கள்தான் போதவில்லை. இறுதியில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து விருந்து வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்ய, வெளியூர்க்காரர்கள் தொடங்கி உள்ளூர் சொந்த பந்தமெல்லாம் ஒன்பதாம் நாள், ஏழாம் நாள், ஐந்தாம் நாளென ஒவ்வொருத்தர் ஒவ்வொரு நாளென நலுங்கும், விருந்தும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

மூன்றாம் நாள் விருந்து தனிப்பட்ட முறையில் அண்ணனுக்கு என்னுடையது என பழனி முன்கூட்டியே சொல்லிவிட்டாள். அன்றே‌ திருமாங்கல்யம் எடுப்பதும் என முடிவு செய்யப்பட்டது. 

அன்று போல் வீட்டில் சமைக்கும் பழக்கம்தான் இல்லையே. 

காலை இட்லி, வடை பலகாரம் முதற்கொண்டு, மதியம் சாப்பாடும் ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொண்டனர். ஆக்குற வேலை தான் இல்லையே ஒழிய, வந்ததை பரிமாறி, எடுத்துப் போட்டு, பாத்திரம் மாற்றி, மீந்ததை வீணாக்க விடாமல் அக்கம் பக்கம் கொடுத்து என வேலை இருந்து கொண்டுதான் இருந்தது. கலியாண வீட்டில் வேலைக்கா பஞ்சம். ஆளும்பேருமாக கூடிச் செய்தனர்.‌ 

அம்மாவிற்கு ஒத்தாசைக்கு என பழனி வந்துவிட்டாலும் அவளை அவன் மகன் வேலை பார்க்க விட்டால் தானே.

தினமும் அப்பளம், வடை, பாயாசம், வகை தொகையாக பொறியல், கூட்டு என சைவ விருந்து தான். அந்தக் காலத்தில் பரிசம் போட்டுவிட்டாலே அசைவம் ஒதுக்கப்பட்டுவிடும். 

இன்று, காலமாற்றத்திற்கு ஏற்ப பத்திரிகை அடித்து குலசாமிக்கு வைத்த பிறகுதான் அசைவம் ஒதுக்கப்படுகிறது. 

இதற்கு அப்படியே எதிர்பதமாக மாறி விடும் திருமணம் முடிந்ததும். இப்பொழுது விருந்து வைப்பவர்களுக்கெல்லாம் திருமணம் முடிந்த மறுநாள் இவர்கள் சார்பில் எதிர்விருந்து‌. அதுவும் கறிவிருந்துதான்.

தினமும் விருந்து நடக்கும் வீட்டில் வேலாயுதமும் எத்தனை நாட்களுக்கு தான் வாயைப் பார்த்துக் கொண்டே இருப்பார். கொஞ்சம் கையும், வாயும் நீண்டுவிட, எண்ணெய்ப் பலகாரம் தன் வேலையைக் காட்டிவிட, இப்பொழுது கட்டிலில் கண்மூடி நீட்டி நிமிர்ந்துவிட்டார். 

படுத்ததும் தான் படுத்தார். ஆளுக்கொன்றாக பேச ஆரம்பித்துவிட்டனர்.‌ விசேஷ வீட்டில் கேட்கவா வேண்டும்.

அய்யம்மா மகளை அழைத்தார். “குலசாமிக்கு காணிக்கை முடிஞ்சு வை கலை. ஒன்னும் ஆகாது!” மகள் அவருக்கு சொல்ல வேண்டிய தைரியத்தை மகளுக்கு இவர் சொன்னார். 

“மாமா…‌ஆயக்குடிக்கே எடுத்துட்டு போயிறலாம். விசேஷ வீட்ல நல்லது கெட்டது ஆகிப்போச்சுனா நல்லா இருக்காது. இந்த தடவையாவது மருமகன் கல்யாணம் நல்ல படியா‌ முடியணும். அங்க போய் ஏதாவது ஒன்னு ஆனாக்கூட மாமன் மச்சான் தீட்டுதான். உங்களுக்கு ஒன்னுமில்ல. நீங்க கலியாணத்தை நடத்தலாம்” பார்த்தசாரதியின் அப்பா பெருமாள்சாமி யோசனை‌ சொல்ல, தணிகைவேலுக்கும் என்ன செய்வதென்று‌ புரியவில்லை. 

பெருமாள்சாமிக்கு அப்பாகூடப் பிறந்த பெரியப்பா தானே வேலாயுதம். மகன் முறைக்கு அவர் தான் எல்லாம் செய்ய வேண்டும். நடைமுறை எதார்த்தத்தை அவர் பேசினார். என்னதான் மகள் என்றாலும் அடுத்த வீட்டிற்கு போனபிறகு தீட்டு அவர்களுக்கு இல்லையே. 

அதற்காக அப்படியே எப்படி விட முடியும்.‌

ஆண்வாரிசு‌ இல்லாதவர்கள். எல்லாம் எடுத்து செய்யுமிடத்தில் இருப்பதும் தணிகைவேல்தான். மூத்த மகளும், மருமகனும் தான் மகன்களோடு வெளிநாட்டில் இருக்கிறாரே. 

தண்டபாணி திருமணத்தன்று காலை தான் இங்கு வருகிறார்கள். அவர்களுக்கும் தகவல் சொல்லியாகிவிட்டது. 

இன்னும் நலுங்கு சந்தனம் தண்டபாணி கன்னத்தில் காயக்கூட இல்லை. முறைப் பெண்கள் எல்லாரும் சேர்ந்து புது மாப்பிள்ளைக்கு நலுங்கு வைக்கும் சாக்கில் சந்தனத்தை அப்பி விளையாடியிருந்தனர். புது மாப்பிள்ளை கோலம் கலையாமல் நின்றிருந்தான்.

“என்ன மாமா சொல்றீங்க‌? எடுத்துட்டு போறதுன்னா என்ன அர்த்தம். இன்னும் தாத்தா உசுரோடதான் இருக்காரு. அவரு முடியாம படுக்கறதென்ன புதுசா?“ என்றான் கோபத்தை அடக்கிக் கொண்டு. 

“அதில்ல மாப்ள! விசேஷ வீடு பாரு. உன்னைய ஒன்னும் சொல்ல மாட்டாங்க. வர்ற பிள்ளையத்தான் பேசுவாங்க!” என்றவர் பேச்சிலும் இருந்த நியாயம் அவனுக்கும் புரியாமலில்லை. ஏற்கனவே வந்த சொந்த பந்தமெல்லாம் இப்பவே பேச ஆரம்பித்து விட்டார்கள். தின்ன சோறு‌ செரிக்க வேண்டாமா?

எப்பொழுதும் படபடக்கும் அய்யம்மா கூட சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டார். இரண்டும் பெண்பிள்ளைகளாகப் போக இருவரையும் சீக்கிரமே கட்டிக் கொடுத்துவிட்டு உனக்கு நான், எனக்கு நீ என வாழ்ந்தவர்கள்.

வேலாயுதத்திற்கு இது ஒன்றும்‌ புதிதல்ல. வயதான காலத்தில் அடிக்கடி இப்படி படுக்கையில் விழுவதும், உடனே‌ சொந்த பந்தங்களுக்கு சொல்லி விடுவதும், அவர்கள் எல்லாம் வந்த ரெண்டே நாளில் எழுந்து உட்கார்ந்து விடுவார். ஒரு முறை‌ எல்லா பேரன், பேத்திகளும் சேர்ந்து பால்வரை ஊற்றியாகிவிட்டது. காலையில் எழுந்து கொண்டார். அப்படி எழுந்து விடுவார் என்ற நப்பாசைதான் எல்லாருக்கும்.‌

அடிக்கடி உள்ளே சென்று பார்த்து வந்தார் பெருமாள்சாமி.‌ பார்த்தசாரதியும் அன்றுதான் வந்திருந்தான். 

“டேய் மாப்ள. வெளிய வாடா” என்றவன், “எல்லாரும் வெளியே போங்க. ஆச்சி மட்டும் இருக்கட்டும். காத்தே வரல. தாத்தாவுக்கு இதுவே மூச்சு முட்டும்” என்று சொல்லி அனைவரையும் வெளியே கிளப்பினான். 

*****

“யாரு மாப்ளே!” 

“உன் தங்கச்சி தான்டா!” என்றான் கைபேசி திரையைப் பார்த்துக் கொண்டே. 

“ம்ம்ம்… நடத்து நடத்து” என்றவனிடம்,

“டேய். அதெல்லாம் இல்ல. இன்னைக்குதான் கால் பண்ணிருக்கா. அதான் யோசனையா‌ இருக்கு!” என்று புருவம் சுருக்கினான். பார்த்தசாரதியும், தண்டபாணியும் பின் வாசலுக்கு வந்திருந்தனர். 

“ஏதாவது முக்கியமான விஷயமா இருக்கப்போகுது. நீ பேசு. நான் போய் தாத்தாவப் பாக்குறேன். விட்டா எல்லாருமா சேந்து அவரை அனுப்பி வச்சுருவாங்க போல. அப்பறம்‌ நீ தப்பிச்சுருவ. எப்பாடுபட்டாவது அவர் உசுர இழுத்துப்‌ புடிச்சு வைக்கணும்” என்று கேலி பேசிவிட்டு நாசுக்காக பார்த்தி கழன்று கொள்ள, யோசனையாகவே அழைப்பை ஏற்றான். 

“இன்னைக்கு மழைதான் போ! அதிசயமா ஃபோன் பண்ணிட்டே?” என்றான் சிறு புன்னகையோடு. 

“…” 

“இலக்கியா… லைன்ல இருக்கியா?” 

“ம்ம்ம்…”

“ஃபோன்‌ பண்ணிட்டு பேசாம இருந்தா என்ன அர்த்தம்? அங்க விருந்தெல்லாம் பலமோ?”

“விருந்தா… எங்களுக்கெல்லாம் யார் விருந்து வைப்பா. இருந்த ஒரே மாமா குடும்பமும் அன்னைக்கி நீங்க போட்ட போடுல வீட்டுப் பக்கமே வர்றதில்ல. ராகவனுக்கு‌ எப்படியாவது பொண்ணு கொடுக்க ட்ரை பண்றாங்கன்னு மட்டும் தெரியுது!”

“ராகவனுக்கா… இப்ப என்ன வயசாகுது. அதுக்குள்ள கல்யாணமா?”

“அதான் வேலை கெடச்சுருச்சுல்ல. இப்பவே பண்ணா தான். முப்பதை நெருங்கிட்டா அங்கிள் கேட்டகிரிக்கு போயிடறாங்க!”‌ சலிப்பாய் அவள் சொல்லியதில் இவனுக்கும் சிரிப்புதான்.

“அப்போ நாங்க எல்லாம் அங்கிளா?” என்றான்‌ விரிந்த சிரிப்போடே.

“அதை விடுங்க. இப்ப தாத்தா எப்படி இருக்காங்க?” என்றவள் குரல் சுரத்தையின்றி ஒலித்தது.

“ஹோஓ… அதனாலதான் மேடம் ஃபோன் பண்ணீங்களா? உனக்கு யார் சொன்னது?” இவனது குரலும் உள்ளிறங்கியது.

“இன்னும் நீங்க பதில் சொல்லல!” என்றாள் கோபமாக.

“இப்போ நல்லா இருக்காரு!”

“பொய் சொல்லாதீங்க. இப்போ தான் ஆச்சிக்கு ஃபோன் பண்ணுனேன். எடுக்கவே இல்ல! அடுத்து அத்தைக்கு போட்டேன். அவங்களும் எடுக்கல. யாரோ ஆச்சி ஃபோனெடுத்து தாத்தாவுக்கு முடியலைன்னு சொன்னாங்க” என்றாள்.‌

கடைசியாகத்தான் இவனுக்கு அழைத்திருக்கிறாள் எனத் தெரிந்தது. அன்று ராகவனை வெறுப்பேற்றிப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் உடனே இலக்கியாவிற்கு அழைத்தானே ஒழிய‌, அதன் பிறகு ஒரு நாளும் இவனும் அழைக்கவில்லை. 

பேசக்கூடாது என்றில்லை. என்ன பேச என்று‌ தெரியவில்லை. ஒரு வேளை அவள் சொன்னது போல அங்கிள் கேட்டகிரிக்கு மூவ் ஆகியாச்சோ என்று கூட இப்பொழுது தோன்றியது. 

ஒரு புராஜெக்ட் முடிக்கும் தருவாயில் இருப்பதால் கல்யாணத்திற்கு முன் அதை‌ முடித்துக் கொடுத்து அதிலிருந்து விடுபட வேண்டும் என எண்ணியிருந்தான். அதனால் முகூர்த்த புடவை எடுக்க கூட இவன்‌ போகவில்லை. 

அவளது சிடுசிடுப்பிலேயே அவள் தன்னை எவ்வளவு எதிர் பார்த்திருந்திருக்கிறாள் எனத் தெரிந்தது. போயிருந்திருக்கலாமோ என காலம் கடந்து யோசனை‌ உதித்தது.

முதல் தடவை அதிகப்படியான எதிர்பார்ப்பை காட்டியதாலோ என்னவோ இந்த திருமணத்திற்கு பெரிதாக ஆர்வம் வரவில்லையோ என்ற சந்தேகம். அப்பொழது இருபத்தி ஐந்து. இப்பொழுது முப்பத்தி ஒன்று. இடைப்பட்ட காலம் எல்லாவற்றையும் நீர்த்துப் போக வைத்துவிட்டது போல. முதிர்ச்சி உணர்ச்சிகளை உள்ளடக்கி விடுகிறது. ஐந்து வயதில் சாக்லேட் பார்த்து வரும் ஆர்வம் ஐம்பதிலும் வருமா என்ன? 

ஆனால் அவளுக்கு அந்த ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருக்கும் தானே.

தினமும் ஆச்சிதான் இவளுக்கு அட்டென்டன்ஸ் போடுவார். 

“எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசிக்கலாமாமே. காசப் போட்டுட்டு எதுக்கு இதை சும்மா வச்சுருக்கணும்” என்று‌ யாருக்காவது அழைத்துவிடுவார். அன்லிமிட்டட் வாய்ஸ் காலைத்தான் அப்படி சொன்னார். 

அவர் வைத்திருப்பதோ பட்டன் செல்(keypad). அதற்கு எதற்கு நெட் பேக்கேஜ் என்று தெரியவில்லை. ஆனால் ரீ‌சார்ஜ் பண்ணிய காசுக்கு பாதகமில்லாமல் எல்லோரிடமும் தினமும் பேசி விடுவார். அவர் தான் தினமும் இவளுக்கு அழைத்து வீட்டில் நடக்கும் விருந்தெல்லாம் பட்டியல் வாசிப்பார். 

அவ்வப்போது கலையரசிக்கும் அழைத்து இவளும், சுகந்தியும் பேசுவதுண்டு. இன்று அய்யம்மா அழைக்காமலிருக்க இவளே அழைத்தாள். 

அவர் எடுக்கவில்லை எனவும் அடுத்து கலையரசிக்கு அழைக்க, அவர் இருந்த மனநிலையில் கைபேசி எந்த மூலையில் கிடக்கிறது என்று கூட கவனிக்கவில்லை.

தொடர்ந்து அழைப்பதைப் பார்த்து அய்யம்மா ஃபோனை எடுத்த யாரோ தான் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதை சொல்லியிருக்க வேண்டும். 

உடனே இவனுக்கு அழைத்துவிட்டாள். இதுதான் இவளது முதல் அழைப்பு. அதுவும் தாத்தாவை விசாரிக்க.

“எனக்கு நீ கால் பண்ணனும்னா தாத்தா முடியாம படுக்கணும் போல?”

“என்னமோ நீங்க மட்டும் தினமும் கால் பண்ண மாதிரி பேசுறீங்க? அங்கிள் கேட்டகிரின்னு சொன்னா மட்டும் கோபம் வருது” அவள் குரலில் கோபம் கொப்பளித்தது.

அவளது கோபம் இவனுக்குள் சில்லிப்பூட்ட, “அப்போ தினமும் ஃபோன் எதிர்பார்த்திருக்க?” என்றவன் குரலில் மந்தகாசம்.

“அதெல்லாம் ஒன்னும் இல்ல!” என்றவள், 

“என்னமோ இவருக்காக ஏங்கிக்கெடக்குற மாதிரி நெனப்பு” வாய்க்குள்ளே முனங்குவது நன்றாகவே கேட்டது. அங்கே அவள்‌ உதடு சுழிப்பது இங்கு இவனுக்கு மனக்கண்ணில் விரிய இவன் உதட்டில் புன்னகை தாராளமாக இடம் பிடித்தது.

“விளையாடதீங்க… இங்க நான் எவ்வளவு பயத்துல இருக்கேன்னு எனக்குதான்‌ தெரியும். என்னோட ராசிதானோ என்னவோ?” என்றாள் ஆதங்கத்தோடு.

“ஆமா… ஜல்லிக்கட்டுக்குப் போற எளந்தாரி முடியமாப்‌ படுத்திருக்காரு பாரு. அவரே நைன்டி‌ டச் ‌பண்ணிட்டாரு. சென்ஞ்சுரி போடாம அவுட் ஆக மாட்டாரு!”

“அதுக்காக இவ்வளவு நாள் நல்லா தானே இருந்தாங்க. இப்போ இப்படி ஆகணும்னா எல்லாரும் என்னைத்தானே பேசுவாங்க.‌ ஏற்கனவே பிறந்த உடனே அம்மாவை முழுங்கிட்டேன். கொஞ்ச நாள்ல அப்பாவும் போயிட்டாரு. பொண்ணு கேட்டு வந்த முதல் சம்பந்தமே தட்டிப்போச்சு. அந்த ராசிநாதன் சுத்தி சுத்தி அடிக்குது போல?”

மிகவும் குழம்பியிருக்கிறாள் என்பது அவள் பேச்சிலேயே தெரிந்தது. 

“பொண்ணு பாக்க வந்தது தட்டிப்போச்சுன்னா அதுல எங்க தப்பும் இருக்கு. அமிர்தா கேஸ்ல ராகவனை‌ சந்தேகப்‌பட்டு அரெஸ்ட் பண்ணதுனால தானே தட்டிப் போச்சு!’

“ஹோஓஓ… அதனால தான் வாழ்க்கை கொடுக்கலாம்னு பாத்தீங்களோ?” பட்டென கேட்க,

“இலக்கியா!” என்றவன் வார்த்தை பல்லிடுக்கில் கடிபட்டது. 

“எதிர்ல நான் இல்லைனு பேசிட்டிருக்க?”

“ஏன், இருந்தா என்ன பண்ணுவீங்க?”

“செவுளு திரும்பியிருக்கும். என்னையும் தான் ஒருத்தி மணமேடை வரைக்கும் வந்து விட்டுப் போயிட்டா. அப்போ என்னோட ராசிய என்ன சொல்றது. வேணும்னா நீ எனக்கு வாழ்க்கை கொடேன்!” என்று கோபமாகவே கேட்க எதிர்‌முனையில் நிசப்த மொழி‌பேசியது. கண்டிப்பாக அழும் நிலையில் இருக்க வேண்டும். 

கிட்டாது என எண்ணி மனதை‌ மறைத்து, மறக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில் அதிர்ஷ்டவசமாக தானாக எல்லாம் கூடி வந்தது. அந்த சந்நோஷத்தை முழுதாக அனுபவிக்க முடியவில்லை.

அவளுக்கும் கண்கள் பொங்கிக் கொண்டு தான் வந்தது. பல்லைக் கடித்து அழுகையை விழுங்கிக் கொண்டிருந்தாள். 

யார் என்ன‌ சொன்னார்கள் எனத் தெரியவில்லை. கண்டிப்பாக ஏதோ நடந்திருக்கிறது. இல்லையென்றால் இப்படி பேசுபவள் கிடையாது.

“ஆச்சி ஃபோன் எடுத்து உனக்கு பதில் சொன்னது யார்?” என்றவன் குரல் இறுக்கமாக ஒலித்தது. 

“தெரியல… ஆனா, வைக்கும் போது கலை அக்கா பொண்ணு சாதகமெல்லாம் நல்லா பாத்தாங்களா இல்லையான்னு தெரியலையே. இந்த கல்யாணமாவது நல்ல படியா முடியுமான்னு புலம்பிக்கிட்டே வச்சாங்க!” என்றாள் அடைக்கும் குரலில். அதற்கு மேல் பேச முடியவில்லை. அழுகிறாள் என்பது தெரிந்தது.

இப்பொழுது தாத்தாவிற்கும் ஏதாவது ஒன்று நடந்துவிட்டால் இது புகுந்த வீட்டிலும் காலத்திற்கும் தொடருமே என்ற அச்சம் அவளை அலைக்கழித்தது. 

சிறுவயதில் இருந்தே பெற்றவர்களை‌ முழுங்கியவள் என கேட்டுப் பழகியதுதான். சுகந்தி அவளுக்கு சித்தி என்பது கூட அவளுக்கு விபரம் தெரிந்தும் தெரியாது. அந்தளவிற்கு சுகந்தி மகனுக்கும், இவளுக்கும் வேறுபாடு காட்டவில்லை. அரசல் புரசலாக சொந்தங்கள் தான் அவர் சித்தி என்பதையே தெரியப்படுத்தினர். வீட்டுக்காகத்தான் உன்னையே அவங்க கூட வச்சுருக்காங்க. சுதாரிப்பா இருந்துக்கோ என்று சொல்லிக் கொடுத்தது. 

“நீங்க எனக்கு அம்மா இல்லையா? தம்பிக்கு மட்டும் தான் அம்மாவா?” அவள் அறிந்த உண்மையின் வீரியம்‌ அவளை அப்படிக் கேட்க வைத்தது. தேம்பிக் கொண்டே கேட்ட மகளை வாரி அணைத்துக் கொண்டார் சுகந்தி. அன்று இரவு முழுவதும் தூங்காமல் அழுதாள். பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கிறார்கள் என்றே பெரும்பாலும் இவளது சொந்தங்களுடன் சேர்க்கவில்லை. 

அவன் கணிப்பு தப்பவில்லை. 

கண்டிப்பாக இது கலையரசி சித்தப்பா மகள் பார்த்த வேலையாகத்தான் இருக்கும். அய்யம்மா ஃபோனில்‌ இரண்டாம் முறை‌ அழைப்பு வர யாரெனப் பார்த்தவர், இவளது பெயர் தெரிய எடுத்துப் பேசி தகவல் சொல்லிவிட்டு, தன்னால் புலம்புவது போல் இவளுக்கும் கேட்க வேண்டுமென்றே சாதகம், ராசி பற்றி பேசி வைத்திருந்தார். 

“ராசின்னு பாத்தா என்னோட ராசியும் தான்‌ நல்ல ராசி. கல்யாணத்தன்னைக்கு பொண்ணு ஓடிப்போனா. நீ மேத்ஸ்ல படிச்சதில்ல. மைனஸும் மைனஸும் சேந்தா ப்ளஸ்தான்னு. அப்படி நம்ம ரெண்டு பேரும் சேந்துக்குவோம். உன் பேர்லயே லக்கி வச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பேசலாமா” கேலி போல் இவன் சமாதானம் சொல்லியும் அவளுக்கு தான் மனம் மேவவில்லை. 

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நீங்க வேற பொண்ணுகூடப் பாருங்…!” என்று‌ முடிக்கு முன்,

“லயாஆ!” என இறைந்திருந்தான். 

“பாத்துக்கலாம்… இதென்ன எனக்கு புதுசா… ஏற்கனவே ஒரு தடவை நின்ன கல்யாணம் தானே. இன்னொரு தடவை நின்னா தப்பில்ல. நீயே எல்லார்கிட்டயும் சொல்லிரு. இந்த கல்யாணம் நடக்காதுன்னு” இவன் பேசப் பேச எதிர் முனையில் விசும்பல் தெளிவாகக் கேட்டது. 

“லயா!” என்றான் ஆற்றமாட்டாமல்.

“உன்னையெல்லாம் வச்சுக்கிட்டு” என‌ சலித்தவன்,

“அப்படியெல்லாம் உன்னை விட முடியாது. ஏன்னா நீதான் என்னை முழுசா…” என்று அவன் அடுத்து சொன்னதைக் கேட்டு எதிர்முனையில் இருந்தவள் விழிகள் அதிர்ச்சியில் தெறித்து விழும் அளவிற்கு விரிந்தது. காரணமேயின்றி சட்டென கன்னம் சிவந்துவிட்டது. அழுகை போன இடம்‌ தெரியவில்லை. 

‘அடப்பாவி’ அதிர்ந்தவள் கையால் வாயை கப்பென பொத்திக் கொண்டாள். 

“என்ன பேச்சையே காணோம். வாயடைச்சு போச்சா?” அவளது நிலையை நேரில் கண்டவன் போல் இவனது குரலில் எக்களிப்பு. கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் சரியாக வேலை செய்தது. 

“அய்யோ… அதுல அப்படியொன்னும் பெருசாத்…” என்றவள் அத்தோடு நிறுத்திக் கொண்டாள். அவளது தடுமாற்றம் கண்டு வாய்விட்டு சிரித்தான். அப்பாவியாய் அவள் முழிப்பது தெரிந்தது. 

“மாப்ளே! தாத்தா முழிச்சுட்டார்டா! நீ மாட்டிக்கிட்ட!” சிரிப்போடு பார்த்தசாரதி வந்து அழைக்க, 

“இதோ வர்றேன்டா!” என்று‌ பதில் கொடுத்தவன் முகமும் மலர்ந்தது. இவன் இன்னும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு அவன் சென்றுவிட,

“கேட்டியா… தாத்தா முழிச்சுட்டாராம். இவருக்கு இது வழக்கம்தான். கொள்ளுப் பேரன் கல்யாணம் வரைக்கும் பாத்துட்டுதான் போவாரு. இவங்க ஓலையெல்லாம் தொலஞ்சு போய் பல வருஷமாச்சு. இன்னும் சித்திரகுப்தன் தேடிக்கிட்டிருக்காராம்!” என்று‌சொல்ல இவ்வளவு நேரமாக இருந்த இருக்கம் தளர்ந்து கலகலத்தது எதிர் முனை. 

“லயா…” 

“ம்ம்ம்…” 

“இவ்வளவு நேரம் பேசின. மறுபடியும் என்ன ம்ம்ம் கொட்ட ஆரம்பிச்சுட்டே?”

“இல்ல..‌.‌நான் அது ஏதோ சின்ன பையன் ஃபோட்டோன்னு தான் பாத்தேன். நீங்கன்னு‌ தெரியாது. அதுவுமில்லாம அந்த ஃபோட்டோல ரெண்டு வயசு கூட இருக்காது!” தயக்கத்தோடு இழுவையாய் சொல்ல.

“ரெண்டு வயசோ இருபது வயசோ… அதுல இருந்தது நான்தானே. நீ பாத்தது பாத்ததுதானே. அதனால…” என்று இடைவெளி விட்டு நிறுத்த, 

“அதனால…” சத்தமே வராமல் கேட்டவளுக்கும் அடிவயிற்றில் குறுகுறுப்பு. உள்ளங்கை சில்லிட்டது. 

“எங்களுக்கும் கற்பு இருக்குமா. நீதான் வாழ்க்கை கொடுக்கணும்!” குரலில் குறும்பு கொப்பளித்தது.

“அய்யோ… என்ன இப்படியெல்லாம் பேசறீங்க?” முகம் கன்றி சிவந்தது‌. 

“இப்படி பேசலைன்னு தானே அங்கிள் கேட்டகிரின்னு சொன்ன?” 

“நான் அதுக்கு சொல்லல. நீங்க ஃபோன் பண்ணல. நீங்க பண்ணாம நானா பேசவும் முடியல. உங்களுக்கு என்னை புடிச்சிருக்கா. இல்ல… கொஞ்ச நேரத்துக்கு முன்ன சொன்ன மாதிரி, நம்ம குடும்பத்தால தான் முதல் சம்பந்தம் தட்டிப் போச்சேனு பாவம் பாத்து வாழ்க்கை கொடுக்கறீங்களான்னு எப்படி தெரிஞ்சுக்கறது?” 

“இத்தனை நாளா இதெல்லாம் தான் யோசனை பண்ணியா? கல்யாணக் கனவெல்லாம் வரலையா?” அவனது குரல் வருடிக் கொடுக்க,

“ம்கூம்…” 

“ஆனா…‌எனக்கு இந்த சந்தேகமெல்லாம் இல்ல. என்னை உனக்குப் பிடிக்கும்னு நல்லா தெரியும். அதனால தான் ஆச்சிகிட்ட சொல்லி பேசச் சொன்னேன்.” 

இவன் பேச்சைக் கேட்டவளுக்கு இன்ப அதிர்ச்சி. மனமெங்கும் சந்தோஷச் சாரல். தன்‌ மனம் எப்படி அவனுக்கு தெரிந்தது என அறிந்து கொள்ள ஆவல்.

“லயா!” என்றான் ஆழ்ந்த குரலில். 

காதோரம் ஒலித்த கரகரத்த குரல் அவளை என்னவோ செய்ய, இப்பொழுதுதான் அவனது அழைப்பே அவளுக்கு உரைத்தது. இதற்கு முன்னும் இரு‌முறை கோபமாக இப்படி அழைத்தான். அவளுக்கிருந்த குழப்பத்தில் அது‌ மூளையை எட்டவில்லை.

லயா எனும் அவனது அழைப்பில் லயித்திருந்தவளை‌, 

“எப்படி தெரியும்னு கேக்க மாட்டியா” என்றவன் குரலில் தெரிந்த பேதத்தில் கீழுதடு கடிபட்டது. பேசும் தொனியே மாறியிருந்தது. இவ்வளவு நேரமாக இல்லாமல் அந்தக் குரல் குழைந்து அவளை இம்சித்தது. செவியோரம் கன்னம் சூடேறுவது போன்ற உணர்வு. 

“எப்படி?” என்றவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை. மீண்டும் தொண்டையைச் செறுமிக் கொண்டு, “எப்படி தெரியும்” என்றாள் சன்னக் குரலில். 

“அன்னைக்கி ட்ரெயின்ல ஏறப்போகும்‌ போது உங்க அம்மா, ராகவனப் போல நீயும் சாதாரணமா போய்ட்டு‌ வர்ரேன்னு‌ சொல்லியிருந்தா எனக்கும் தெரிஞ்சிறுக்காது. நீ சொல்லாம போனதால தான் தெரிஞ்சது. ட்ரெய்ன்ல ஏறும்‌போது திரும்பி ஒரு பார்வை பாத்தயில்ல. அது சொல்லுச்சு உன் மனச. என்னை‌ மனசுல சுமந்துக்கிட்டு போறவள எப்படி விட முடியும் சொல்லு!” என்று கேட்க அவளது கண்களில் கரகரவென கண்ணீர் மழை‌ சொரிய, இதழ்கள் புன்னகை பூத்தது. 

அன்று ஆவலாக இவள் முகம் பார்த்து நிற்க, அவளோ இதுதான் கடைசி என்பது போல் அவன் முகத்தையே பார்த்திருந்தாள். எதையோ சொல்லத் துடித்து, சொல்ல முடியாமல் தவித்த பார்வை அது. சொல்ல முடியாத உணர்வொன்று தொண்டையை அழுத்த, கண்கள் கலங்கும் முன் சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு இரயிலில் ஏறிவிட்டாள். 

கண்டிப்பாக இவளாக யாரிடமும் சொல்லியிருக்க மாட்டாள். துளிர்விட்ட ஆசையை தனக்குள்ளே போட்டு புதைத்திருப்பாள். அவன் கண்டு கொண்டானே‌ என்பதே இவளை‌ சந்தோஷத்தில் திக்குமாக்காட வைத்தது. பேச்சே எழவில்லை. 

“லயா… இப்போ சொல்லு நான் அங்கிள் கேட்டகிரியா?” என்று கேட்க, 

அவள் கொடுத்த பதிலில் இவனுக்குதான் சந்தனம் அப்பியிருந்த கன்னம் சடுதியில் சிவந்துவிட்டது. ஒரு கணம் மூச்சடைக்க வைத்துவிட்டாள். விழியோரம் நாணம்‌ கசிய, மீசையோடு சேர்ந்து மேலுதடும் கடிபட்டது. பதிலை அவள் வார்த்தையால் சொல்லவில்லை. ஓசையில்லா முத்தத்தை அழுத்தமாக இட்டு அனுப்பியிருந்தாள். 

ஒவ்வொன்றாய் திருடுகிறாய்

யாருக்கும் தெரியாமல் திருடுகிறாய்

முதலில் என் கண்களை கண்களை

இரண்டாவது என் இதயத்தை இதயத்தை

மூன்றாவது முத்தத்தை முத்தத்தை 

ஹே ஹே ஹே ஹே முத்தத்தை

16 thoughts on “மாமா! மாப்ளே! 9”

    1. 😂😂😂😂😂
      பொறுத்தது போதும் மனோகரா… மூமென்ட்டா…

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

    1. கண்டிப்பா மா. வாரம் மூனாவது கொடுக்க முயற்சி பண்றேன்.
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top