நெஞ்சம் மறப்பதில்லை 17

“ஆன்ட்டி, தாத்தா கண்ணு முழிக்கட்டும். அப்புறமா அவர்கிட்ட சூர்யாவைக் கூட்டிட்டுப் போகலாம். முதல்ல இவனோட ட்ரீட்மெண்ட்ட பார்ப்போம். இவனை இந்த நிலமையில தாத்தா பார்க்க வேண்டாம்.” என்று விஷ்வா கூற,

“அதுவும் சரிதாம்ப்பா! அவரால தாங்கமுடியாது.” என்ற மங்கையர்க்கரசி, 

சண்முகத்திடம், “அண்ணா! இவன் ரிப்போர்ட்ஸெல்லாம் கொடுங்க! ஹாஸ்பிடல் போலாம்!” என்றார்.

தன் மகனை, இவ்வளவு தூரம் பாதுகாத்து வந்தவர்களுக்கு, இவ்வளவு நேரமாக கண்ணீராலும் வார்த்தைகளாலும் நன்றி கூறியவர் அவர்களை உறவு சொல்லியே அழைத்தார்.

“இதோ கொண்டு வர்றேன்மா! டாக்டரும் எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரமா ஆப்ரேஷன் பண்ணனும்னு சொன்னாரு.” என்றவாறு ஆதியாவை அழைத்தார்.

“ஆதியா! கண்ணனோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் கொண்டாம்மா!”

“இதோ எடுத்துட்டு வர்றேன் அங்கிள்!” என்றவள், ரிப்போர்ட்ஸ் அடங்கிய ஃபைலைக் கொண்டுவந்து சண்முகத்திடம் கொடுத்தாள்.

இவர்கள் வந்ததிலிருந்தே கண்ணனும் அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். மயக்கத்திலும் முன்தினம் தன்பெயரை உச்சரித்தவள், இன்று இன்னும் அவன் பக்கம் பார்வையைக் கூட திருப்பவில்லை.

பெரியவர்கள் முன்னிலையில் அவனாலும் எதுவும் செய்ய முடியவில்லை. தன்மீது கொண்ட நம்பிக்கை சிதைந்துவிடுமோ என்ற பயம் ஒருபக்கம் அவனை வாட்டினாலும், காதல் கொண்ட மனமோ அவளின் முக சோர்விற்கான காரணம் தேடி அலைந்தது.

அடுத்து மங்கையர்க்கரசியோ சற்றும் தாமதிக்காமல் மருத்துவமனை செல்ல துரிதப்படுத்த,

சண்முகம் ஆதியாவை அழைத்தார்.

“நீயும் வர்றியாம்மா?” என்றவரிடம்,

“இல்ல அங்கிள்! இன்னைக்கு முக்கியமான கிளாஸ் இருக்கு.” என்றவளை யோசனையாகப் பார்த்தான் அவளவன்.

இருதினங்களுக்கு முன்தான், “இனி செமஸ்டர் ரிவிஷன் மட்டும் தான்.” எனக்கூறியவளாயிற்றே

“நீங்களும் வாங்க ஆதியா! ஆரம்பத்துல இருந்து நீங்கதானே கூட இருந்திருக்கீங்க.” என்று நண்பனின் முகவாட்டம் பார்த்துக் கூறிய விஷ்வாவிடம் மறுத்துப்பேச வாய்திறந்தவள், கையைக்கட்டிக் கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்த, அவளவனின் உக்கிரப்பார்வையில்,

“சரிங்க, விஷ்வா.” என்றாள் உள்வாங்கிய குரலில்.

டாக்டர் நாராயணனனின் காருண்யா மருத்துவமனை. கோவையின் சிறந்த மூளை சிகிச்சை நிபுணர் என்பதால் மங்கையர்க்கரசியும் வேறு மருத்துவமனை செல்ல எண்ணவில்லை. ஏற்கனவே அனைத்து டெஸ்ட்டுகளும் எடுத்திருந்தபடியால், அடுத்தகட்ட சிகிச்சையை ஆரம்பிக்கலாமென மருத்துவர் கூறினார்.

ஆதியாவும் வந்ததிலிருந்து கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்.

பிரகாஷ் அன்ட் க்ருப்ஸ் ஃபேமிலி என்று தெரிந்தபின், கிடைக்கும் மரியாதையும், கவனிப்பும் வெகுவாக மாறியிருந்தது.

அடுத்த இரண்டு நாட்களில் ஆப்ரேஷன் என முடிவு செய்யப்பட, மறுநாளே மருத்துவமனை வரவேண்டுமென‌ கூறப்பட்டது.

“ஆப்ரேஷனுக்கு பின்னால் பழையபடி ஞாபகம் வந்துருமா டாக்டர்.” என்ற மங்கையர்க்கரசியின் கேள்விக்கு,

“நான் ஏற்கனவே சொன்னதுதான்‌ மேடம்! ஆக்சிடென்ட் பாதிப்பால வந்த அம்னீசியா, எப்ப க்யுராகும்னு சொல்ல முடியாது. தெரபி ட்ரீட்மென்ட்ல கொஞ்சம் மீட்டெடுக்கலாம். ஆப்ரேஷனுக்கு பிறகும் திரும்பலாம். பழைய ஞாபகம் வருமா… வந்தாலும் இப்ப இருக்கிற இடைப்பட்ட ஞாபகமும் நினைவிருக்குமானு கரெக்டா சொல்லமுடியாது மேடம்.” என்ற மருத்துவரின் விளக்கத்தில், 

ஆதியா, கண்ணனைப் பார்த்த பார்வையில் அவனால்‌ எதையும் உணர முடியவில்லை. பார்வையை வைத்தே அவளின் மனவோட்டம் அறிந்தவன், இப்பொழுது அவளின் எண்ணவோட்டம் என்னவென்று அறிய முடியாமல் தவித்தான்.

“போகும்போதே சாப்பிட்டு போயிறலாம். ஏற்கனவே ரொம்ப லேட்டாயிருச்சு. ஆத்தாவ எல்லாம் போய் சிரமப்படுத்த வேண்டாம்.” என்று கண்ணன் கூற அதன்படி ஒரு ஹோட்டலின் முன் கார் நின்றது.

அனைவரும் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தனர். ஆர்டர் செய்யப்பட்ட உணவுவகைகள் சற்றுநேரத்தில் எடுத்துவரப்பட்டது. ஆதியா பேருக்கு சாப்பிட்டுக் கொண்டிருக்க, கண்ணன் அவளையே கண்காணித்து கொண்டிருந்தான்.

சாப்பாட்டை கொறித்துக் கொண்டிருந்தவள் இலையை மூடிவிட்டு கைகழுவச் சென்றாள். அவனும் பின்னாலேயே எழுந்து சென்றான்.

குழாயைத்திருகி கைகழுவிக் கொண்டிருந்தவளின் பின்னால் அவன் நின்றிருப்பதை உணர்ந்தவளின் பார்வை எதிரிலிருந்த கண்ணாடியில் பதிந்தது. இவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான். விழிகளைத் தாழ்த்திக் கொண்டு வெளியே செல்ல திரும்பியவளிடம்,

“தியா! மறுபடியும் காய்ச்சலடிக்குதா?” எனக் கேட்டான்.

“இல்ல…”

“அப்புறம் ஏன் டல்லா இருக்க? நான் யார்னு அடையாளம் தெரிஞ்சதுக்கான சந்தோஷம் உன் முகத்துல இல்லியே?”

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல. நீங்க உங்க குடும்பத்தோட சேரப்போறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்தான்.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அடுத்து ஆட்கள் வரவும் வெளியேறினர்.

அவள் தன் பெயரைக் கூட உச்சரிக்கவில்லை என்பதைக் கவனித்தான்.

அனைவரும் வீடு திரும்பினர். சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

“சூர்யா! நம்ம வீட்டுக்கு போலாமாப்பா? தாத்தாவையும் போய்ப் பாக்கணும்.” என்று மங்கையர்க்கரசி கூறினார்.

அனைவர் முகத்திலும் சந்தோஷம் தென்பட்டாலும் சட்டென்ற‌ பிரிவு சற்று கவலை கொடுத்தது அனைவர்க்கும்.

“அம்மா! நீங்க போய் தாத்தாவ பாருங்க! எப்படியும் உங்க கூடதானே வரணும். ஆப்ரேஷனுக்கு போறவரைக்கும் நான் இங்கயே இருக்கேன். இடையில ஒருநாள் தானே?” என்றான். அவனுக்கும் ஆதியாவிடம் பேச வேண்டியிருந்தது.

“சரி சூர்யா! அம்மாவையும், தாத்தாவையும் நான் பாத்துக்கிறேன்.” என்ற விஷ்வா, மங்கையர்க்கரசியிடம் திரும்பி, 

“ஒருநாள் தானே ஆன்ட்டி! இன்னும் அவனால நம்மகிட்ட ஒட்ட முடியல. அவங்களுக்கும் சட்டுனு நம்ம கூட வந்துட்டா கஷ்டமாயிருக்கும். இங்கேயிருந்தே ஹாஸ்பிடல் வரட்டும். நாம போய் மத்த ஏற்பாட்டெல்லாம் பாப்போம்!” என்று கூறவும் மங்கையர்க்கரசியும் சம்மதிக்க வேண்டியதாயிற்று. இருவரும் கிளம்பி சென்றனர்.

       ************

“அண்ணா! பெரிய ஆளுதாண்ணா நீங்க! இன்னமும் எங்களால நம்ப முடியல!” பள்ளி விட்டு மாலையில் மாடிக்கு வந்த சதீஷ், கண்ணனிடம் கேட்க,

“அட… நீ வேற ஏன்டா? நானே உங்க அக்கா மனசுல என்ன ஓடுதுன்னு தெரியாம தவிச்சிக்கிட்டு இருக்கே. அவங்கெல்லாம் வந்துட்டு போனதிலிருந்து இன்னும் என்கிட்ட பேசவே இல்லடா.” என்று சதீஷிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.

“உங்களைப் பிரியப்போறோம்னு கவலையா இருக்கும்ணா!”

“நான் எங்கடா போகப்போறேன்? இதே கோயம்புத்தூர் தானேடா?”

“நான் வேணும்னா அக்காவைக் கூப்பிடட்டுங்களா ண்ணா?”

மாடியறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த சதீஷ், கண்ணனிடம் கூற, “வேணான்டா! நானே பாத்துக்கறே. சின்னப்பையலுகளை எல்லாம் இதுல சேக்கக் கூடாதுடா!”

“இப்பதான் நான் சின்னபையன்கறது தெரியுதா? இவ்ளோ நேரம் புலம்பும்போது தெரியலிங்களா ண்ணா?” என்றவனிடம்,

“என்னடா பண்றது? உங்க அக்கா என்னைய இப்படி ஆக்கிட்டாடா!” என்று சலித்துக் கொண்டான்.

“அவங்க என்னத்தை நினைச்சு குழம்பிகிட்டு இருக்காங்களோ? நீங்க இப்படியே புலம்பிகிட்டிருங்க! நான் கீழே போய் அம்மாவுக்கு எதாவது ஹெல்ப் வேணுமான்னு பாக்குறேன்.” என்று கீழே இறங்கிப் போனான்.

இரவு உணவுவேளை முடிந்து அவரவர் இடத்தில் அடைக்களமாக, வெகு நேரம் கழித்து அறையைவிட்டு வெளியே வந்து பார்த்தான். அவன் நினைத்தது போலவே ஆதியா பவளமல்லி திட்டில் தனியாக அமர்ந்திருந்தாள்.

இறங்கி அவளருகில் வந்தான். கண்களில் கண்ணீர் அவள் அழுததைக் கூற, அவனுக்கோ காரணம் புரியவில்லை.

“தியா…” வார்த்தைக்கும் வலிக்குமோ என்றிருந்தது அவனின் அழைப்பு.

“வாங்க!” என்ற அழைப்பு உணர்ச்சியற்ற குரலில்.

“உன் கண்ணன்கிட்ட எதுக்கு தியா தயங்குறே? நானும் காலையில இருந்து பாக்குறேன். ஏதோ உன்மனசுல கெடந்து உழட்டுது. எதுவாயிருந்தாலும் உன் கண்ணன்கிட்ட சொல்லக்கூடாதா?” ஆற்றாமையாக‌ அவன் ‌கேட்க,

நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்கள் மேலும் கண்ணீர் சொரிய,

“இப்படி சொல்லாம அழுதா எப்படிம்மா? ஒருவேளை நான் என் விருப்பத்தை சொன்னது பிடிக்கலியா?”‌ என்றவாறு அவளருகில் அமர்ந்தான்.

கண்களில் ஏக்கத்தோடு அவள் பார்க்க, 

“சொன்னா தானே தெரியும். இன்னும் என்னை நீ கண்ணானு கூப்பிடல.” என்று குறைபட்டவனிடம்,

“நீங்க கண்ணாவா மட்டும் இருக்கல. சூர்யபிரகாஷாகவும் இருக்கீங்க.” என்றாள், தொண்டை அடைக்க.

“அதுக்கு…” என்றான் யோசனையாக.

“இல்ல… உங்க உயரம் அதிகமாயிருக்கு…” என்று திக்கித்திணறியவளை புருவம் சுருக்கிக் பார்த்தவன்,

“ஆமா… ஆறடிக்கும் மேல. அதுக்கு…” என அவன் கேள்வியாய் நிறுத்த, ஆதியா அமைதியாகவே தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். 

“அதுக்காக நான் இப்ப ஒன்னும் பண்ண முடியாது. இனிமேல் எனக்கு ஈக்வலா நீயும் வளற முடியாது. Y ஆக்ஸிஸ்ல முடியாது. வேணும்னா Xஆக்ஸிஸ்ல ட்ரை பண்ணிபாரு! உனக்கும் அது ஈஸி. நான்வேணா போனா போகுதுன்னு அட்ஜஸ் பண்ணிக்கிறேன்.” என்று அவளை கேலி பேசினாலும், இன்னும் அவள் முழுதாக மனம் திறக்கவில்லை என்பதை உணர்ந்தான்.

“இப்பவும் போனாப்போகுதுன்னு தான் ஏத்துக்க வேண்டியிருக்கும்.” என்றாள் வெறுமையான குரலில்.

“இதுக்கும்மேல எனக்கு பொறுமையில்லை ஆதியா! உன்மனசுல என்ன ஓடுதுன்னு பட்டுனு சொல்லு!” என்று சற்று கோபம் காட்ட,

“தகுதிக்கு மேல ஆசைப்படறேனோன்னு…” என்று அவள்‌ முடிக்கும் முன்,

“யாரோட தகுதிக்கு மேல.” என்றான். குரலில் அவ்வளவு அழுத்தம்.

“இதுல என்ன சந்தேகம் என் தகுதிக்கு மேலதான்!”

“இப்ப… எதுல உன்தகுதி கொறஞ்சு போச்சு?”

“காலையில உங்கம்மா கேட்டதை மறந்துட்டீங்களா? என்னடாயிது பிச்சைக்கார வேஷம்னு கேட்டாங்கள்ல?”

“ஆமா! அதுக்கென்ன?”

“உங்க தகுதி தெரியலியா? இல்ல தெரியாத மாதிரி நடிக்கறீங்களா? இன்னைக்கி ஹாஸ்பிடல்லயும் பிரகாஷ் அன்ட் க்ருப்ஸ் ஃபேமிலிக்கி கிடைச்ச மரியாதையைப் பாத்திங்கள்ல! அதுவும் எல்லாம் வெளிய தெரியாம சீக்ரெட்டா!”

“காசுபணத்தை வச்சு தகுதியை எடை போடுவேன்னு நான் எதிர்பாக்கல ஆதியா? நான் உன்னோட தகுதின்னு நினைக்கிறது அடுத்தவங்களுக்காக அக்கறை காட்டுற உன் மனசை தான். அப்படிப் பாத்தா நான்தான் உனக்கு தகுதி இல்லாதவன்.”

“கண்ணனாக நீங்க இப்படி பேசலாம். சூர்யபிரகாஷும் இதையே பேசுவாரானு தெரியலே. ஏதோ ஒரு வீக்மூவ்மென்ட்ல அவசரப்பட்டுட்டோமோனு நீங்க நினச்சுட்டா என்னால தாங்கிக்க முடியாது கண்ணன்.” என்று தளுதளுத்தவளிடம்,

“நாளைக்கு எவ வர்றானு நானும் பாக்குறே! அப்ப தெரியும்… இந்த ஆதியா யாருன்னு கேட்ட, என்னோட தியா எங்க போயிட்டா? இவ்ளோ நாளும் வேற யாராவது உரிமைப்பட்டவங்க இருப்பாங்களோனு குழம்பிட்டிருந்த. இப்ப தகுதி அதுஇதுனு பினாத்துற. எப்பவும் தெளிவாயிருக்க மாட்டியா?”

“இப்ப நான்‌ எது சொன்னாலும் பினாத்தற மாதிரிதான் இருக்கும்.” என்று கண்ணீர் வடித்தவளின் நிலை கண்ணனுக்கு நன்கு புரிந்தது.

தன்னோட பொருளாதார உயரம் அவளை மிரட்டுகிறது என அறிந்து கொண்டான்.

“சரி… அப்படினா ஆப்ரேஷனை கொஞ்சநாள் தள்ளிபோடலாம்!” என்றான் எதையோ யோசனை செய்தவனாக.

“எதுக்கு தள்ளிபோடணும். ஏற்கனவே லேட்டாயிருச்சுனு டாக்டர் சொன்னது தெரியாதா?” என்று கோபமாய் அக்கறை காட்ட,

“அது எனக்கும் தெரியும். உன்ன இப்படியே விட்டுட்டு போகமுடியாது. நீவேற உன் தகுதிக்கும், என் தகுதிக்கும் செட்டாகாதுன்னுட்ட!”

“அதுக்கு…”

“அதுக்கென்னவா? உன் தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு இன்ஜினியரோ இல்ல கவர்மென்ட் வேலைபாக்குற மாப்பிள்ளையோ பாத்து கல்யாணம் பண்ணிவச்சுட்டு ஆப்ரேஷன் பண்ணிக்கிறேன். உன்னைப் பெத்தவங்களும் அதைத்தானே செஞ்சுறுப்பாங்க!”

“ச்ச்சீ… என்ன தத்துபித்துனு உளர்றீங்க!”

“ஓ! இப்ப இவ்ளோநேரம் அம்மணி பேசுனதுக்கு பேரு என்னவாம். யாருக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு? தன்னோட காதலிக்கு மாப்பிள்ளை பாத்து கல்யாணம் பண்றது!”

“நிப்பாட்டுங்க கண்ணன்! கேக்கவே சகிக்கலை! அதெப்படி உங்க இடத்துல இன்னொருத்தரை நினைச்சுப் பாக்க முடியுது?” என்றாள் ஆவேசமாக.

‘அப்படி வா வழிக்கு.’ என்று நினைத்தவன்,

“ஆமா… நானும் வேணாம். அதுக்காக நீ இப்படியேவா இருக்க முடியும்?”

“அது என்பாடு. நான் பாத்துக்கறே! என் தகுதிக்கு யாரு பொருத்தமானவங்கனு நீங்களே சொல்றீங்க. அப்படின்னா நான் தகுதிக்கு மீறி ஆசை பட்டிருக்கேனுதானே அர்த்தம்.” என்று மீண்டும் அவள் கண்கள் கலங்க,.

இவளுக்கு இருக்கின்ற குழப்பத்திற்கு பேசி புரியவைக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். எங்கே என்னை இழந்து விடுவோமோ என்ற பயமே இவளை வாட்டுகிறது என்பதை புறிந்து கொண்டான். அடுத்த ஒரு இழப்பை தாங்க இவள் தயாராக இல்லை என்பதை தெரிந்தவன்,

“தியா!” என்றான்.

“ம்ம்…” என்றாள் அவன் புறம் திரும்பாமலே.

“என்மேல நம்பிக்கையில்லயா? இல்ல நம்பிக்கை வர்றமாதிரி நான் நடந்துக்கலியா?”

“ஐயோ… இல்ல கண்ணன். உங்கமேல நம்பிக்கை இருக்கு. சூர்யபிரகாஷும் இதையே சொல்லணும்னு நினைக்கிறது தான் பேராசையா தெரியுது.”

மீண்டும் மீண்டும் அவள் அங்கேயே சுற்றி வருவது அவனுக்கு சற்று எரிச்சல் மூட்டினாலும், அவளது பயம் உணர்ந்து மௌனம் காத்தான்.

“சரி… எதுனாலும் ஆப்ரேஷன் முடிஞ்சு பாத்துக்கலாம். இப்பவே எதுக்கு இத்தனை குழப்பம். ரொம்ப லேட்டாயிருச்சு போய் படு.”

“நாளைக்கி ஹாஸ்பிடல் போயிருவீங்கள்ல. அப்படியே உங்க வீட்டுக்கும்…” என்று முடிக்க முடியாமல் மீண்டும் கண்ணீர் வார்க்க,

“நீயும் கூடவே வந்துரு. நாளைக்கே எல்லார்கிட்டயும் சொல்லிடலாம். ஏற்கனவே விஷ்வாவுக்கு தெரிஞ்சுறுச்சு.”

“தெரியும். நீங்க ரெண்டுபேரும் பேசியதை கேட்டேன். உங்களுக்கு மனைவியோ, காதலியோ இருக்காங்களோனு விஷ்வாகிட்ட கேட்டது தெரியும்.”

‘அடிப்பாவி!’ என நினைத்தவன்,

“தெரிஞ்சுதான் என்னைய இப்படி வாட்டி எடுத்துட்டிருக்கியா தியா?” என்றவன், இதழ்க்கடையோரம் சிறு முறுவல் பூக்க, தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் கன்னம் தொட்டு திருப்பினான். 

நேருக்குநேர் முகம் பார்த்தவள், இரவு நேரத்தனிமையில் அவன் பார்வையின் மாற்றம் எதையோ உணர்த்த, புரிந்தவள் கண்தாழ்த்த, “தியா…” எனும் அழைப்பில் நிமிர்ந்து அவளவன் கண்பார்த்தாள்.

“நேத்து காலையில காதல சொல்லிட்டு, இன்னைக்கு பிரிவைப்பத்தி பேசுற இந்த வாய்க்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?” என்று குறும்பு பார்வை பார்த்தவனிடம்,

“வேண்டாம்… ஏதோ வேறமாதிரி போகுது… சரியில்ல…” என்றாள்.

“ஏய்…! நான் எதுமாதிரியும் போகல. நீ சொன்ன பின்னால தான் தண்டனைக்கான ஐடியாவே கிடைச்சுது.” என்று கூறி சிரித்தான்.

“நம்பிட்டேன்.” என்று எழுந்து செல்ல முயன்றவளின் கைபற்றி இழுக்க,

உதறியவளை, எழுந்தவன் பின்னிருந்து இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

அவன் மார்போடு ஒட்டி நின்றவளின், இதயத்துடிப்பு சட்டென்று எகிற…

“பெயரளவுல கண்ணனா இருந்ததால தானே நம்பிக்கைவரல… என் தியா கிட்ட உரிமை எடுத்து கொஞ்சம் லீலையும் பண்ணியிருக்கணுமோ?” என்று காதருகினில் கேட்ட அவனது கரகரத்த குரலில் பெண்ணின் மனம் தன் சுயமிழக்க,

“ப்ளீஸ் கண்ணா!” என்றாள் கெஞ்சலாக,

“ஆமா! நான் சரியா டீல் பண்ணாததுனால தானே எம்மேல நம்பிக்கை வரல.”

“அதுக்கு…”

“இனிமே எல்லாமே அதிரடி முடிவுதான்.”

“உங்ககிட்ட நான் இதை எதிர்பாக்கல கண்ணா.” என்றாள் அவன் பேச்சில் அச்சம் கொண்டவளாக.

“இனிமே எதிர்பாராததை எதிர்பாருங்க அம்மணி.” என்றவன், அவளை சட்டென முன்புறமாக சுழற்றியவன், ஒருகணம் அவனவள் விழி கலந்தான். நிலவொளியின் ஏகாந்தமும், பாவையவளின் பதட்டத்தில் படபடத்த விழிகளும், அவனை கிறங்கடிக, அவளவனின் கண்வீச்சு தாங்காமல் கன்னியவள் கண்மூடிக்கொள்ள,

முதன்முதலாக நீ என்னவள் என்ற முத்திரையை அவள் இதழ்களில் பதித்து, உரிமைப் பத்திரம் பதிவு செய்தான். ஆரம்பகட்ட அரிச்சுவடி பாடத்தில் ஆசிரியனும் மாணாக்கனாய்த் தடுமாற, திமிறியவளோ காளையவன் கைச்சிறையில் கைதியாகிவிட, கன்னியவள் இசைவில்… கணங்கள் கணிசமாய் கரைந்து கொண்டிருந்தது. பெண்ணவளின் உடல்நடுக்கம் சுயம் உணர்த்த, அவளை மெதுவாக விடுவித்தவன், கண்ணீர் கசிந்து மடல்மூடியிருந்த பூவிழிமீது சிறு இதழொற்றல்‌ தந்து அவளை சுயம்மீட்டான்.

விழி மலர்த்தியவளின் விழி நோக்கியவன், புருவம்‌ உயர்த்தி கண்சிமிட்ட, அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள், உள்ளே ஓடிவிட்டாள்.

பவளமல்லி திட்டில் அமர்ந்து, தன் தலைகோதி சுயம் மீட்டவன், சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தான். ஏதோ முடிவு செய்தவனாக முகத்தை அழுந்த துடைத்தவன், பின் படுக்கைக்குச் சென்றான். 

4 thoughts on “நெஞ்சம் மறப்பதில்லை 17”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top