6
“எங்கேடீ அந்த தம்பி? நீங்க மட்டும் வர்றீங்க?” மூவராகச் சென்றவர்கள், இருவராக வருவதைப் பார்த்துவிட்டு, அம்மாவிற்கு முன்னால் ஓடிவந்து தன்னருகில் உட்கார்ந்த கொள்ளுப் பேத்தியிடம் விசாரிக்க,
“பாட்டீ, அம்மாவும், அந்த அங்கிளும் சண்டை போட்டாங்க!” குனிந்து ரகசியமாய் அய்யம்மாவிடம் சொல்ல, மருத்துவமனையின் அதிகாலை அமைதியில் அது பழனி காதிலும் தெள்ளத்தெளிவாகவே விழுந்தது.
பிள்ளையை வைத்துக் கொண்டு அதிகமாகத்தான் பேசிக் கொண்டோமோ. மூளை காலங்கடந்து யோசித்தது. அப்படி ஒன்னு இருக்கா உனக்கு? குட்டு வைத்தது மனசாட்சி. இருவரும் பேசிக்கொண்டதின் சாராம்சம் புரியவில்லை எனினும், காரசாரமாகப் பேசிக் கொண்டதை புரிந்து கொண்டது பிள்ளை.
சண்டை எனச் சொன்னதும், பழனியை அய்யம்மா முறைத்துப் பார்த்தார். ‘போச்சு… சில்வண்டு அப்டேட் கொடுத்துருச்சே. இப்ப கலையரசிக்கு அம்மாங்கறத ப்ரூஃப் பண்ணுவாங்களே! காது தீயப்போகுது!’ அவளது மைன்ட் வாய்ஸ் அவளை பங்கம் பண்ண, கோபித்துக் கொண்டு அப்படியே கிளம்பிவிட்டான் போல என்று நினைத்துக் கொண்டிருக்க, சற்று நேரம் கழித்து வந்தான் சீனியப்பன்.
இப்பொழுது பிள்ளை அவனை அன்னியப் பார்வை பார்த்து, அம்மாவோடு ஒண்டிக் கொண்டது. அம்மாவைக் கோபித்தவனாயிற்றே. சிறு முறைப்பு கூட பிள்ளையின் பார்வையில் தெரிந்தது. ஆயாசமாக வந்தது சீனிக்கு. மேலும் இங்கிருந்து சூழ்நிலையை இறுக்கமாக்க விரும்பவில்லை.
“பாட்டீ… நான் கெளம்புறேன். மொத நாள். லீவு போடமுடியாது. ஈவ்னிங் கால் பண்றேன்!”
“என்னப்பா பொம்பளைகளா இருக்கோம். நீயும் கெளம்புறேங்குற?”
“அதான் உங்க பேத்தி இருக்காங்களே. அவங்களே எல்லாம் பாத்துப்பாங்க பாட்டீ. அவங்களுக்கு யாரும் தேவையில்லை!” நக்கல் கலந்து குதர்க்கமாக வந்தது பதில். இவ்வளவு பேசிய பிறகு இங்கிருந்து சென்றால் தேவலாம் என்றிருந்தது அவனுக்கும்.
“அவ கெடக்குறா கூறு கெட்டவ. இப்ப நீயிருக்கப் போயிதானே பச்சப் புள்ளையாட்டம் இந்த மனுஷன தூக்கியாந்து சேத்த. இவளா தூக்கி வருவா?” என்ற பாட்டியை முறைத்துப் பார்த்தாள். பாட்டியை பயமுறுத்த வேண்டாமென ஆம்புலன்ஸ்க்கு அழைக்காமல், டாக்சியை அழைக்க, இவன் இருக்கப் போய் தான் எளிதாக கொண்டுவந்து சேர்க்க முடிந்தது. இல்லையென்றால் தூங்கும் பிள்ளையையும், பாட்டியையும் வைத்துக் கொண்டு திண்டாடியிருக்கத்தான் வேண்டும்.
“ஈவ்னிங் வர்றேன் பாட்டி!” என்று சொல்லிக் கொண்டிருக்க,
“பழனி!” என்ற குரல் கேட்க,
‘எவெ அவெ?’ அனைவர் பார்வையும் ஒரு சேரத் திரும்பியது.
‘யார்ரா நீ… இவ்வளவு உரிமையா பேர் சொல்லிக் கூப்பிடறது?’ என்ற யோசனை சீனிக்குள் கோபமாய் உதிக்க,
“வாங்க மாமா!” என்று அழைத்தவள் பார்வை சீனியையும் ஒருதரம் தொட்டு மீண்டது.
“வாடா… பார்த்தி!” என்று அய்யம்மாவும் வரவேற்றார்.
“ஐய்ய்… பார்த்தி சித்தப்பா!” என்று அமிர்தா அவனைப் பார்த்ததும் எழுந்து ஓட, கைளில் தூக்கிக் கொண்டான்.
“பரவாயில்லையே… அம்மு குட்டிக்கு சித்தப்பாவ ஞாபகமிருக்கா?” என்று கேட்டு மலர்ந்தான்.
இவர்கள் சஷ்ட்டியப்த பூர்த்தி அன்று தண்டபானியோடே, சுற்றித் திரிந்த பார்த்தசாரதியை நன்கு நினைவிருந்தது பிள்ளைக்கு. இவனுக்கும், தண்டபானிக்கும் சம வயது. சிறு வயதிலிருந்தே பள்ளி விடுமுறை, விசேஷம், போக்குவரத்தென ஒன்றாகவே வளர்ந்தவர்கள். முதலில் தண்டபானிக்கும், இவனுக்கு தங்கையை கொடுக்கத்தான் முழு விருப்பம். ஒரே ஊர். ஒன்றுக்குள் ஒன்று. தங்கைக்கும் ஆதரவாக இருக்கும் என்று யோசிக்க, சாதகம் அது, இது என்று பெரியவர்கள்தான் உழட்டிவிட்டனர்.
பழனி மீது அவனுக்கு ஏற்கனவே விருப்பம்தான். இப்பொழுது வெளிநாட்டிலிருந்து, புது மெருகேறி, தளதளவென வந்திருப்பவள் மீது பித்தம் கூடிப்போயிற்று பார்த்தசாரதிக்கு. தண்டபாணி மூலம் நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டவன், பழனிக்கு தான் வாழ்க்கை கொடுப்பதாக வாக்கு கொடுத்தான்.
“எனக்கொரு கால்(call) பண்ணமாட்டீயா? இங்க பக்கத்துலதானே இருக்கேன். தண்டபானி சொல்லித்தான் தெரியும். அவசரமா கிளம்பி வந்தேன். தாத்தாக்கு எப்படி இருக்கு?” அதிகாரமாய் அதட்டிக்கொண்டே, பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு, அய்யம்மா பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான்.
அய்யம்மாவின் ஒரு பக்கம் பழனியும், மறுபக்கம் பிள்ளையை வைத்துக் கொண்டு ஒரே குடும்பம் போல் இவனும் அமர்ந்து கொள்ள, இங்கே தான் தான் அதிகப்படியோ எனும்படி தோன்றிற்று சீனியப்பனுக்கு.
என் பிள்ளைக்கு என்னைத் தவிர எல்லோரும் முன்னபின்ன தெரிந்தவர்கள் தான் போல. மனம் வெறுமையாய் அலுத்துக் கொண்டது. நல்ல உயரமாக, மாநிறத்தில் வசீகரமாகவே இருந்தான் பார்த்தசாரதி. மான் மார்க் (allen solly) டீசர்ட், மற்றும் ப்ளூ கலர் ஸ்லிம் ஃபிட் ஃபேடட் ஜீன்ஸில் வந்திருந்தான்.
கிளம்பும் முனைப்பில் இருந்தவன் கைககளைக் கட்டிக்கொண்டு, சுவற்றில் சாய்ந்து நின்றான்.
“இப்ப நல்லா இருக்காரு மாமா! சாதாரண ஃபுட் பாய்சன் தான்!” அவன் கேட்டதற்கு பதில் உரைத்தாள்.
“இவன், தாத்தாவோட அண்ணன் பேரன் சீனி. பழனிக்கு ஒன்னுவிட்ட தாய்மாமா மகன். இங்க தாம்பரத்துலதான் இருக்கான். நீங்க காஃபி குடிக்கப் போயிருந்தப்போ தண்டபானி ஃபோன்ல கூப்பிட்டிருந்தான். அவன் கிட்ட சொல்லவும், உடனே பார்த்திக்கு ஃபோன் போட்டான் போல.” அவன் வந்த விபரத்தை எடுத்துரைத்தார் அய்யம்மா.
எப்பொழுதும் பாட்டிக்கு எழுந்தவுடன் ஒரு அட்டென்டன்ஸ் போட்டுவிடுவான் தண்டபானி. நேற்று தங்கை வேறு கோபத்தில் இருந்தாளே! நிலவரம் என்னவென்று அறிந்து கொள்ள, இன்றும் வழமை போல் அழைக்க, மருத்துவமனையில் இருக்கும் விவரத்தை பேரனிடம் கூறினார். உடனே மாமன் மகனுக்கு அழைத்து தண்டபாணி தகவல் கொடுக்க, அடுத்த அரைமணி நேரத்தில் கிளம்பி வந்துவிட்டான் பார்த்தசாரதி.
‘காஃபி குடிக்கப் போன கேப்ல ஒருத்தனாடா? நான் வேற நாலு வருஷம் கேப் விட்டுவச்சிருக்கேனே?’ என்னதான் முயன்றாலும் அலுத்துக் கொள்ளாமல் இருக்கமுடியவில்லை.
“உனக்கு இந்தத் தம்பியத் தெரியும்ல பார்த்தி…” எனக்கேட்டு அவனிடம் பெயர் சொல்லும் முன்,
“ம்ம்ம்… ம்ம்ம்… தெரியும் அப்பத்தா!” என்று இடை வெட்டியவன் மூஞ்சி இஞ்சி தின்ற குரங்கு போலாயிற்று.
“சரி பாட்டீ… நீங்க பாருங்க. நான் கெளம்புறேன்.” சீனியப்பன் சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
அதான் ஆண் துணைக்கு ஆள் வந்துவிட்டதே. சொந்தம் வேறு. இனி தான் இங்கிருப்பது தேவையில்லாத ஆணியாகப்பட்டது. சற்று முன்புதானே அய்யம்மாவும் சொந்த பந்தத்தை தேடினார். இனி நம் உதவி தேவைப்படாதென, அவன் கிளம்ப எத்தணிக்க,
“இருப்பா… பழனியையும், பிள்ளையையும் கூட்டிப்போ. நைட்டு உடுப்போட இருக்கா. குளிச்சிட்டு, தாத்தனுக்கு கஞ்சி வச்சு கொண்டாரட்டும்!” என்று அவளையும் உடன் அழைத்துப் போகச் சொன்னார். அவளும் அவசரமென இரவு பைஜாமாவிலேயே வந்திருக்க, அவளையும் அவனோடு அனுப்பும் முனைப்பில் அவர் இருந்தார்.
பார்த்தி, “பழனிய நான் அழச்சுட்டுப் போறேன் பாட்டீ! அவர் கெளம்பட்டும்!” என்றான் வேகமாக.
“நீ எனக்குத் தொணைக்கு இரு பார்த்தி! தாத்தா கண்ணு முழிச்சதும் உன்னப் பாத்தா ரொம்ப சந்தோஷப் படுவாருல்ல!” என்று சொல்ல அவனது முகம் சுண்டைக்காயாய் சுருங்கியது.
‘எமகாதகப் பாட்டி!’ சீனி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
‘வர்றியா… இல்ல, நான் கிளம்பவா?’ என்பது போல் அவன் அவளையே பார்த்து நிற்க,
“கிளம்புடீ… தம்பியும் பள்ளிக்கூடம் போகணும்ல? அதுவும் நம்ப அவசரத்துக்கு டவுசர், பனியனோடையே வந்துருச்சு!” என்று ஒரு அதட்டல் போட, படக்கென எழுந்து கொண்டாள். ஷார்ட்ஸும், கையில்லா டீசர்ட்டும் என இருந்தவனைத்தான் அப்படிச் சொன்னார்.
ஏற்கனவே இருவருக்கும் சண்டை என மகள் போட்டுக் கொடுத்ததில், அய்யம்மாவின் அர்ச்சனையிலிருந்து பார்த்தி வந்து காப்பாற்றியிருக்க, இப்போதைக்கு தப்பித்தால் போதுமென எழுந்து கொண்டாள்.
அவன் முன்னே நடக்க, மகளை கையில் பிடித்துக் கொண்டு, அவன் பின் சென்றாள்.
மூவரும் வாகனம் நிறுத்தம் வர, கார் லாக்கை மட்டுமே ஓபன் பண்ணிவிட்டான். எந்தப் பக்கம் ஏறுகிறாள் எனப் பார்க்கலாம் என நின்று கொண்டிருக்க, முன் பக்கக் கதவைத் திறந்தே ஏறிக் கொண்டாள். இருவருக்குள்ளுக்கு எப்படியோ, ஆனால்… மகளுக்கு அவன் மீது தப்பான அபிப்ராயம் உருவாவதை மனம் விரும்பவில்லை. கேன்டீன் சென்று வந்ததிலிருந்து மகள் அவனை முறைப்பதைத்தான் பார்த்தாளே. மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்து கொண்டாள்.
மருத்துவமனை விட்டு கார் வெளியே வர, காலை ஏழு மணிதான் என்ற போதும் சாலையில் நெரிசல் ஆரம்பித்துவிட்டது. பூந்தமல்லி சாலை மெட்ரோ பணி நடைபெறுவதால் ஊர்ந்துதான் வர வேண்டியிருந்தது. அவனது கவனம் சாலையில் இருக்க, இவளது கவனம் பக்கத்தில் இருந்தவன் மீதுதான்.
அடிக்கடி காலின் பக்கமாக வந்து கியர் மாற்றிய திரண்ட கையின் வாலிப்பில் தொடங்கிய பார்வை, அப்படியே மேலேறி திமிறிய புஜத்தில் சில கணங்கள் இளைப்பாறி, இரண்டு நாட்கள் ஷேவ் செய்யாத தாடியோடிருந்த இறுகிய தாடையில் நிலைத்தது.
இந்த வலிய கரங்களின் இறுக்கிய பிடிக்குள் அடங்கிய கணங்களும் தேவையில்லாமல் வந்து தொலைத்து இம்சித்தது. கற்றை மீசை, கூர் நாசி, தடித்த புருவம், அகலமான நெற்றியை பாதி மறைத்த அடர்ந்த கேசமென அவனது பக்கவாட்டுத் தோற்றம் எப்பவும் போல் இப்பொழுதும் அவளை ஈர்க்க, அன்றைக்கும் இன்றைக்கும், முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்தவன் கம்பீரம் கூடித்தான் தெரிந்தது. அவனது உயரத்திற்கு காரின் டேஷ் போர்டில் இடிப்பது போல் அமர்ந்திருக்க, ஷார்ட்ஷ் முழங்காலுக்கு மேலேறி ரம்பம்பம் என்றது.
அவனது பார்வை இயல்பாக இடப்பக்க சைடு மிர்ரரைத் திரும்பிப் பார்க்க, படக்கென பார்வையை திரும்பிக் கொண்டவள் இதயம் படபடத்தது. ‘ச்சே… இப்படியா பாத்து வைப்ப!’ மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவள், அடுத்து சாலையை விட்டு கண்ணெடுக்கலையே.
நெரிசலில் ஊர்ந்து வீடு வந்து சேர மணி எட்டு.
இவர்கள் ப்ளாக் முன் காரை நிறுத்த, அதற்குள் மடியிலேயே மீண்டும் தூக்கத்திற்கு சென்றிருந்தாள் அமிர்தா. காரை விட்டு இறங்கி, முன் பக்கமாக சுற்றி வந்தவன், கதவைத் திறந்து பிள்ளையைத் தூக்கிக் கொள்ள, இவளும் இறங்கிக் கொண்டாள்.
இறங்கியவள் மீண்டும் கை நீட்ட, மறுபேச்சின்றி பிள்ளையைத் தந்துவிட்டு, காரை ஓட்டிக் கொண்டு பார்க்கிங் ஏரியா சென்றுவிட்டான். இருவரும் இதுவரை ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. பேசியவரை போதுமென்று நினைத்தார்களோ என்னவோ, இருவரும் சைலன்ட் மோடிற்கு சென்றுவிட்டனர்.
பிள்ளையைத் தோளில் போட்டு லிஃப்ட் வழியாக, ஃப்ளாட்டிற்கு வந்தாள். அப்பொழுதுதான் சாவி அவனிடம் இருப்பதே நினைவிற்கு வந்தது. மருத்துவமனைக்கு இவள் முன்னே சென்றுவிட, அவன் தானே பாட்டியையும், பிள்ளையையும் அழைத்துக்கொண்டு வீட்டைப் பூட்டி வந்தான்.
இப்பொழுது என்ன செய்வது. கைபேசி எண்ணும் இல்லை அழைத்துக் கேட்க. மீண்டும் கீழே இறங்க வேண்டுமா என அலுத்துக் கொண்டிருக்க, எதிர் ஃப்ளாட்டிலிருந்து வெளியே வந்தான் யஷ்வந்த்.
கல்லூரி செல்ல கிளம்பி வந்தவன், “ஹாய் ஆன்ட்டி… குட்மார்னிங்!” புன் சிரிப்போடு அவளுக்கு காலை வணக்கம் வைத்தவன். “ஸ்லீப்பிங் பியூட்டி” என, தோளில் கிடந்த பிள்ளையின் முதுகை தடவிக் கொடுத்தான். அப்படியே பிள்ளை மீதிருந்த அவளது கையையும் வருடியது போலிருக்க, ஏதேச்சையாகப் பட்டதா, இல்லை வேண்டுமென்றே தடவினானா எனும்படி இருந்தது அவனது செய்கை.
“என்ன ஆன்ட்டி… ஏன் வெளியவே நிக்கறீங்க?” சகஜமாகக் கேட்க, ‘ச்சே… தப்பா எல்லாம் தொட்டிருக்க மாட்டான். சின்னப்பிள்ளைய கொஞ்சும்போது கை எதேச்சையா பட்டிருக்கும்.’ அதற்கு மேல் யோசிக்கும் முன்,
காலடிச் சத்தம் கேட்டுத் திரும்ப, சீனி வருவது தெரிந்தது.
“ஹாய் ஆங்கிள்!” என அவனுக்கும் ஒரு வணக்கத்தை வைத்தவன், “பை.. ஆன்ட்டி!” என கையாட்டிவிட்டு கிளம்பிவிட்டான்.
“எரும மாடாட்டம் இருக்கான். அங்கிள், ஆன்ட்டியாம்! இந்த அக்கா, அண்ணா எல்லாம் அகராதியிலருந்து எடுத்துட்டாங்களா?” என்று கடுப்படிக்க, வந்த சிரிப்பை உதட்டிற்குள் ஒழித்தாள். பாட்டி சொன்னதுபோல், இன்னும் டவுசர், பனியனோடிருப்பவனைப் பார்த்து அங்கிள்னு சொன்னா, யாருக்குத்தான் கோபம் வராது.
சாவியை எடுத்து கதவைத் திறந்து விட்டவன், ஒரு வார்த்தை கூடப் பேசாமல் அப்படியே திரும்பிச் செல்ல, இவளுக்கு தான் ஏதோ மாதிரியாக இருந்தது அவனது அலட்சியம். என்ன எதிர் பார்க்கிறோம் என்ற யோசனை எழுந்தது, உள்ளுக்குள் வந்து மகளை கட்டிலில் போட்டவளுக்கு. கட்டிலில் படுக்கவைக்க அமிர்தா விழித்துக் கொண்டாள்.
“ம்மா… ஸ்கூலுக்கு டைமாச்சா?” என்றாள் எழுந்தவுடன். கடமை கண்ணாயிரத்துக்குப் பிறந்தவங்கறத கரெக்டா நிரூபிக்கிறா!’
அங்கலாய்த்தவள் மனம், மகளை கிளப்பி, பள்ளியில் விட்டுவர நேரமிருக்குமா என யோசித்தது. அவளுக்கும் சேர்த்து விடுப்பு சொல்லி விடலாமா? மீண்டும் அவளையும் மருத்துவமனை அழைத்துச் செல்ல வேண்டுமே. எவ்வளவு நேரம் அங்கிருக்க வேண்டுமெனத் தெரியாது. முன்தினம் இரவு என்பதால் தூங்கிவிட்டாள். பகலில் ஒரு இடத்தில் இவளைப் பிடித்து வைப்பதும் சிரமம். பள்ளிக்கே அனுப்புவோம் என்ற முடிவிற்கு வந்தவள். அவள் விடுப்பிற்கு மெயில் போட்டுவிட்டு, வாட்சப்பிலும் தகவல் அனுப்பிவிட்டாள்.
தான் குளித்து உடைமாற்ற நேரமிருக்காது எனத் தெரிய, மகளை மட்டும் குளிக்க வைத்து, அவசரத்திற்கு பாலும், கெலாக்ஸும் கலந்து, “இன்னைக்கி மட்டும் அம்மு. அட்ஜஸ் பண்ணிக்கோடீ” என்று தாடை பிடித்துக் கொஞ்சி, சாப்பிடவைத்து, யூனிஃபார்ம் போட்டுவிட்டு, தலை சீவி, வண்டிச் சாவியை எடுத்துக் கொண்டு அவசரமாக கீழே வர, அவனும் கிளம்பி எதிர் ப்ளாக்கிலிருந்து வண்டியை எடுத்துக் கொண்டு வர சரியாக இருந்தது.
அதற்குள் க்ளீன் ஷேவ் செய்து, குளித்து முடித்து, இறுக்கிய வெள்ளை டீசர்ட் மற்றும் கருப்பு ஸ்போர்ட்ஸ் ட்ராக், ஸ்போர்ட்ஸ் ஷு என பக்காவாகக் கிளம்பி வந்துவிட்டான்.
இன்னும் இரவு உடையிலேயே இவள் இருக்க, அவன் பார்வை இப்படியேவா எனும்படி, மேலும் கீழும் அளந்தது.
“நீ அங்க டீச்சரா இருக்க!” என்றவன் பார்வை அழுத்தமாய் அவள் உடை மீது பதிந்தது. மேலுக்கு ஷால் மட்டும் போட்டிருந்தாள்.
ஆபத்துக்கு தோஷமில்லை, அவசரத்திற்கு ரோஷமில்லை என புதுவாக்கியம் படித்தவள், “அம்மு… இன்னைக்கு மட்டும் அந்த வண்டியில ஸ்கூலுக்குப் போறியா? இன்னைக்கு அம்மா லீவ். ஹாஸ்பிடல் போய் தாத்தாவக் கூட்டிட்டு வரணும்ல!” என்று கேட்க, அவனை ஒருமுறை திரும்பி பார்த்தவள்,
“அவங்க தான் உம்மேல கோபமா இருந்தாங்கல்ல, நான் போகல!” என்று அம்மாவிற்கு மேல் வீம்பு காட்டினாள் மகள்.
“நீதான் தெரியாதவங்க கூடப் போகக் கூடாதுனு சொல்லியிருக்கியே. இப்ப நீயே போகச் சொல்ற!” வியாக்யானமாய் வினாத் தொடுத்தது.
இந்த வயதிலேயே குட் டச், பேட் டச் முதற்கொண்டு சொல்லிக் கொடுத்து, முன்னபின்ன தெரியாதவங்க எது கொடுத்தாலும் வாங்கக் கூடாது, அவங்க கூட போகக்கூடாது, யாரையும் ஹக் பண்ணவிடக் கூடாது என அத்தனையும் சொல்லிக் கொடுத்திருக்க, சரியாக நினைவு வைத்து கேட்டது பிள்ளை.
முன் தினம்தான் போகக் கூடாது என்றாள். இன்று போகச் சொல்கிறாள். இதுவும் பிள்ளைகளை குழப்பத்தானே செய்யும். வழி நடத்துபவர்கள் நாமாக இருக்கும் பொழுது, காட்டும் வழியும் சரியாக இருக்க வேண்டுமல்லவா. இனிமேல் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை குறிப்பெடுத்தவள்,
“அது வந்து, நாம ஸ்கூலுக்கு டெய்லி லேட்டா போறோம்ல. அவங்க தானே பி.டி சார். அதனால திட்டினாங்க! இன்னைக்கி அவங்க கூடவே போய்ட்டா லேட்டாகாதுல்ல. அதனால திட்டமாட்டாங்க!” என்று சொல்ல,
வண்டியின் இரண்டு பக்கமும் கால்களை ஊன்றி கைகளைக் கட்டிக் கொண்டு இவர்கள் சம்பாஷனையை வேடிக்கை பார்த்து நின்றவன், ஒரு முறை மணிக்கட்டைத் திருப்பி நேரம் பார்த்தான்.
அவனது செய்கையைப் பார்த்தவள், ரொம்பத்தான் என உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள். “டைம் ஆச்சு அம்மு. இப்ப நான்தானே போகச் சொல்றேன்” என்று சமாதானம் செய்ய,
“ஓ.கே!” என பெரிய மனது வைத்து வரம் கொடுத்தாள் மகள்.
ஆம்! அவனுக்கது வரம்தான். கிடைத்தற்கரிய வரம்.
சற்று முன் மூவர் மட்டுமே காரில் வந்த சந்தோஷத்தில் திளைத்திருந்தவன் மனம், அவள் பேசிய பேச்சையெல்லாம் காற்றோடு பறக்கவிட்டிருந்தது. இப்பொழுது மகளையும் தன்னோடு அனுப்பி வைக்க, சர்வம் பழனி மயம் என்ற சரணாகதி தான்.
லேட்டஸ்ட் ட்யூக் பைக். டேங்க் பெரிது என்பதால் மகளைத் தூக்கி பின்னால் அமரவைத்தவள், கைகளை எடுத்து அவனது இடுப்பில் படறவிட்டு, “இறுக்கிப் புடிச்சுக்கோ அம்மு!” என்று சொல்ல, அவளது குட்டி கைக்கு எட்டியளவிற்கு வளைத்து, டீசர்ட்டை மட்டும் இறுக்கிப் பிடித்து உட்கார்ந்து கொண்டது பிள்ளை.
பேக்கை வண்டியின் டேங்க் மீது வைத்துவிட்டு,
“அம்முக்கு பின்னாடி உக்காந்து பழக்கமில்ல. இந்த வண்டியும் பின்னால தூக்கிட்டிருக்கு. பிள்ள பத்திரம்!” என்பதை உன் மண்டை பத்திரம் என்று எச்சரிப்பது போலவே சொன்னாள்.
அவனும், “ஏதாவது அவசரம்னா கால் பண்ணு. அப்பவும், இப்பவும், எப்பவும் அதே நம்பர் தான். நான் மாத்தல. நீயும் மறந்திருக்க மாட்டேன்னு நம்புறேன்” என்றவன்,
தாழ்ந்த குரலில், “அப்பறம்…இந்த மாமன ரசிக்கறதா இருந்தா தாராளமா ரசிக்கலாம். உன்ன மாதிரி அதுக்கெல்லாம் உனக்கென்ன உரிமையிருக்குன்னு வம்புக்கு நிக்க மாட்டேன்! ஐ’ஆம் ஆல்வேஸ் யுவர்ஸ்” கண் சிமிட்டிச் சொல்லியவன், வண்டியை முறுக்கிச் செல்ல,
‘அடப்பாவி! இதுக்கு பேருதான் இடத்தக் கொடுத்தா மடத்தைப் பிடிக்கறதா?’ என அப்பாவியாய் வாய்பிளந்து பார்த்து நிற்க,
‘என்னமோ இனிமே தான் புதுசா இடங்கொடுக்கப் போறீயாக்கும். ஏற்கனவே நீ கொடுத்த எடத்துலதான் பட்டா போடாமலே, விதைய ஊனிட்டுப் போயிட்டானே?’ மானவாரியாய் இடித்துரைத்தது மனசாட்சி.
“அமிர்தாம்மா… தாத்தா எப்படி இருக்காரு? இப்பதான் செக்யூரிட்டி சொன்னாரு.” சக குடியிருப்புவாசி விசாரிக்க, இயல்புக்குத் திரும்பியவள்,
“நல்லாருக்காங்க… ஈவ்னிங் வந்துருவாங்க!” என்றவள்,
கேட்டைவிட்டு வண்டி திரும்பும் வரை, மகளைப் பார்த்திருந்தாள். மகளை வைத்துக் கொண்டு கேட்டைத் தாண்டியவன் பார்வை, எதிரே பச்சை திரையிட்டு மறைக்கப்பட்டிருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தை அண்ணார்ந்து பார்த்தது. மேலே, புதுக் கட்டிடத்திற்கு தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த காவலாளி இவனைப் பார்த்ததும், கை தூக்கி வணக்கம் வைக்க, இவனும் தலையாட்டிச் சென்றான்.
இருவரது செய்கையையும் கண்ணுற்றவள்,
‘கருப்பட்டி காஃபி காரியமாத்தான் இங்க குடி வந்திருக்கா? நாமதான் நமக்காகன்னு தப்பா நெனச்சுட்டோம் போல!’ என்றவள் பார்வையும் எதிர்புறக் கட்டிடத்தை அண்ணார்ந்து பார்த்தது.
அந்தக் கட்டிடத்தின் முன், க்ரான்ட் ஓபனிங் சூன் எனும் விளம்பரப் பதாகை வண்ணமயமாய்த் தொங்கியது.

Super super super