முக்கனியும் சக்கரையும் 31final

31 

இவளின் குத்தல் பேச்சில் சினம் துளிர்க்க, வேகமாக அடுக்களைவிட்டு வெளியேறியவனின் பசையிழந்த முகத்தைப் பார்த்தவளுக்கும் மனதைப் பிசைந்தது. 

அடுக்களை வாசலில் நின்று இவர்களையே பார்த்து நின்றாள் அமிர்தா. மகளைப் பார்த்ததும் இறுகிய முகத்தை சட்டென இயல்பிற்கு கொண்டுவந்தான். அரைகுறை தூக்கத்தில் இருந்தவளை காரிலிருந்து தூக்கி வந்து சோஃபாவில் படுக்க வைத்திருந்தான். தூக்கம் கலைந்து எழுந்தவள் அம்மாவைத் தேடிக்கொண்டு அடுக்களை வந்திருந்தாள். 

மகளை தூக்கிக் கொண்டவன், திரும்பி பழனியை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தான். அதில், மகள் ‌முன் இனிமேல் பார்த்துப் பேசு என்ற அர்த்தம் தொக்கி நின்றது.  

அவளுக்கும் தான் பேசியது அதிகப்படி எனத் தெரிய முகம் சுண்டிப் போயிற்று. அவன் எவ்வளவோ இருவருக்குள்ளும் சுமூகமாக கொண்டு செல்லத்தான் முயல்கிறான் எனத் தெரிந்தாலும், தன் பேச்சு அங்கிங்கு தொட்டு, அவளையும் மீறி அவனைக் காயப்படுத்திவிடுகிறது. நடந்தது எதையும் மாற்றமுடியாது எனும் பொழுது, அதைக் குத்திக்காட்டிப் பேசுவானேன். 

அவளுக்கும் அவளது நிலமை புரிகிறது. உடல் ஒத்துழைக்கிறது. மனம் முரண்டு பிடிக்கிறது. சற்றே இழைந்தாலும் அவனது பார்வையில் தாவறாகிப் போகுமோ என்று பதட்டம் சூழ்ந்து கொள்கிறது. 

அதற்கு அவள் கடந்து வந்த வலிகள்தான் காரணம் எனப் புரிந்தது அவனுக்கும். 

“அப்படியென்ன அவசரம்? ஒரு‌ வாரம் கூடத் தாக்குப்புடிக்க முடியாதளவுக்கு?” நேரிடையாகவும், மறைமுகமாகவும் இவள் காதுபடவே கேலி போல் பேசிச் சிரித்ததைக் கேட்டவளுக்கு, முதல் அனுபவமேவேப்பங்காயாய் கசந்து போயிற்று. அப்படியென்ன தேவை வேண்டிக் கிடக்கு என்ற எண்ணம் ஆழப்பதிந்துவிட்டது. அதைத்தாண்டி அவளால் யோசிக்கக்கூட முடியவில்லை. 

முதல் அனுபவம் என்றாலும் அச்சம், கூச்சம், நாணம்‌ களைந்து உள்ளமும், உடலும் ஒருசேர, அவனது கைகளில் பூ மாலையாய் துவண்டு, குழைந்து, இளகியவளை நினைக்கையில் இன்றும் அவனுக்குள் உணர்வுப் பிரவாகம் ஆழிப் பேரலையாய் கிளர்ந்து எழும். 

ஆனால், இன்று எதேச்சையாத அவளை நெருங்கினாலோ, கடந்து சென்றாலோ கூட சட்டென தனக்குள் இறுகிப் போகிறாள். அந்த நேரத்தில் தனது ஆதங்கத்தை சட்டென வார்த்தையாக வெளிப்படுத்தியும் விடுகிறாள். அதில் காயப்படுவது அவன் மட்டுமல்ல‌, அவளும் தான். ஆறிய ரணத்தை கீறிவிட்டு சந்தோஷப்பட்டுக்கொள்வது போல.‌

மகள், மனைவியென இருப்பதே போதுமென இருப்பது எத்தனை நாட்களுக்கு‌. வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை இருவரும் தொட்டுதானே ஆகவேண்டும். இல்லறம் நல்லறமாக தாம்பத்யமும் ஒரு அங்கம்தானே. அதை நினைக்கையில் அவளுக்குதான் மூச்சு முட்டியது. 

மகளுக்கு இரவு உடையை மாற்றிவிட்டு, இரவு உணவை முடித்துக் கொண்டார்கள். உப்புமாவே தான். ஆயக்குடி அய்யம்மா அங்கிருந்தே பேத்தியை ஆட்டி வைத்தார்.

மகளைத் தூங்கவைக்கும் வரை பொறுமையாக அவளையே பார்த்திருந்தான். காரிலேயே தூங்கியதாலோ என்னவோ அமிர்தா தூங்கவும் நெடு நேரம் எடுத்துக்கொள்ள, அவனது பார்வை, குறுகுறுப்போடு குற்ற உணர்வும் சேர்ந்து கொள்ள அவளுக்குதான் என்னவெல்லாமோ செய்தது. 

அவனும் தூங்காமல் காத்திருக்கிறானே? என்னவாக இருக்கும். ஒரு வேளை… பலவித சிந்தனை உள்ளுக்குள் ஊற்றெடுக்க, சற்றே படபடப்பு கூடியது. ஒரு வழியாக மகளை அரைகுறையாக கதை சொல்லி தூங்க வைக்க, அமிர்தா அயர்ந்துவிட, சீனி மெதுவாக எழுந்து கொண்டான். 

அவன் எழுந்ததும், இவளுக்கு இதயம் எகிறிக் குதிக்காத குறை. தூக்கம் வருவது போல் கண்களை இறுக மூடிக்கொள்ள, “உன்கிட்ட கொஞ்சம் பேசணும். வெளியே வா!” என அழைத்தான். 

“இல்ல… தூக்கம் வருது!” தொண்டைக்குள்ளேயே முணங்கிவிட்டு, போர்வையை இழுத்துப் போர்த்த,

“இன்னைக்கி ஒருநாள் தூக்கம் கெட்டாப் பரவாயில்லை!” இறுகிய குரலில் அழுத்திச் சொல்லிவிட்டு வெளியே சென்றுவிட்டான். அவனது உள்ளிறங்கிய தொணியே, ‘உன்னை சரசம் பண்ணக் கூப்பிடல’ என்றது. 

எழுந்து வெளியே வந்தவளிடம், சோஃபாவைக் கை காண்பித்தான். ஜீரோ வோல்ட்டின் மெல்லிய வெளிச்சம் மட்டுமே.‌ இருவரும் அமர்ந்து கொள்ள, அவள் பக்கமாகத்திரும்பி அவளை நேருக்கு நேராக பார்த்தபடி, ஒரு காலை மடக்கி அமர்ந்தவன் பார்வை, அவளை ஊடுருவியது.

அவளுக்கோ அன்றொரு நாள் இதேபோல் காரில், நடுங்கும் குளிரில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவன் இவளைப் பார்த்து அமர்ந்ததுதான் நினைவிற்கு வந்தது. அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியாமல் பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது.

“பழனி!” என்றழைத்தவன்‌ குரல் பாறையாய் இறுகியிருந்தது. 

“…”

“உனக்கு என் மேல கோபம்னு நல்லாத் தெரியும். ஆனா, வெறுப்பு இல்லைங்கறது மட்டும் நிச்சயம்” என்று சொல்ல, அர்த்தப் பார்வையோடு அவனை ஏறிட்டாள். 

“நாம ஒன்னும் காலம்காலமா உருகியோ, நீயில்லைனா நானில்லைனு சினிமா வசனம் பேசியோ, காதலிச்சு ஒன்னு சேந்தவங்க இல்ல. அதே மாதிரி, எனக்கு உன் மேல இருந்த அளவுகடந்த விருப்பத்தையும், உனக்கு என் மேல இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையையும், வெறும் பார்வையாலும், வார்த்தையாலும் மட்டுமே பகிர்ந்துக்கிட்டவங்களும் இல்ல. அதையும் தாண்டி வேறொரு எல்லையைத் தொட்டவங்க நாம” என்று சொல்ல அந்த நாள் நினைவில் பெண்ணவள் உதடு, அவளையும் மீறி பல்லிடுக்கில் கடிபட்டது. 

“உன்னோட நம்பிக்கையை காப்பாத்தாமப் போனதுதான் நான் செய்த மிகப்பெரிய தவறு. கல்யாணத்துக்கு முன்னாடியே அத்து மீறியதுதான் கல்யாணத்துக்கு பிறகும் ரெண்டு பேரும் நெருங்கறதுக்கும் பெரும் தடையா இருக்கு. நெருங்கவும் முடியாம, விலகவும் முடியாமத் தவிக்கிற உன்னோட தவிப்பும் புரியுது. எனக்கும் எப்படி ஹேண்டில் பண்றதுன்னு சத்தியாமத் தெரியலம்மா. இன்னும் நமக்கு காலம் இருக்குன்னு சொன்னாலும், கண்ணிமைக்கிற நேரத்துல நேரமும் காலமும் ஓடிறும். இந்த வாழ்க்கையில, இதெல்லாம் எனக்கு கிடச்சிருக்குன்னு, இருக்கிறதை நினைச்சு சந்தோஷப்படுறவங்கள விட, இதெல்லாம் இழந்திருக்கேன்னு போனதை நினைச்சு நொந்துக்கறவங்கதான் அதிகம். நமக்கும் அப்படித்தான்‌. அதுலயும் குறிப்பா நான் அம்முவோட அஞ்சு வருஷ குழந்தைப் பருவத்தை இழந்திருக்கேன். எத்தனை விலை கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காது. அவளுக்கும் அதே மாதிரிதான். இன்னும் நான் சீனிப்பாதான். அம்மாவோட ஹஸ்பன்ட்தான். காலப்போக்குல அவளுக்கும் விபரம் புரியும். அப்போ அவளோட நினைவுல நம்ம கடந்தகாலத்தை எப்படிப் பதிய வைக்கிறோம்கறது தான் இப்போதைக்கி ரொம்ப முக்கியம்.”

“அந்தக்காலம் மாதிரி வராதுன்னு அலுத்துக்கிறவங்ககிட்ட, அந்தக் காலத்துல சந்தோஷமா இருந்தீங்களான்னு கேட்டா, பதில் இல்லைனுதான் வரும். இப்ப நம்மலப் பத்தி யோசிக்கிற நிலையைக் கடந்து, அம்முவோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்கிற எடத்துல இருக்கோம். அதனால அவ முன்னாடி எதுனாலும் பாத்துப் பேசு. எதையும் ரொம்ப போட்டுக் குழப்பிக்காதே! என் வாழ்க்கையில நீங்க ரெண்டு பேருமே முக்கியம்!” என்றவனை கண்கள் பொங்க ஏறெடுத்துப் பார்த்தாள். உதடு துடித்து மனம் விம்மியது. 

வெடிக்கக் காத்திருக்கும் உள் உணர்வுகளை அடக்க வெகுபாடு படுவது, அவள் உதடு‌ கடித்து இறுகுவதிலேயே தெரிந்தது. அவள் படும்பாட்டைக் காணப் பொருக்கமாட்டாமல், இரு கரம் விரித்து, கண்களால் அழைக்க, தாவிச் சென்று கைகளுக்குள் சரண் புகுந்தாள். அடக்கிய அழுகை விம்மலாக வெடித்தது. அவனுக்கும் கண்கள் கலங்கியது. இறுக்கியணைத்துக் கொண்டவன், முதுகு தடவி, உச்சி முகர்ந்தான். 

“நீங்க வருவீங்கன்னு அந்தளவுக்கு எதிர்பார்த்தேன்” என்றாள் விம்மிய குரலில். இடி தாக்கிய உணர்வு அவனுக்குள். தொண்டையில் அழுத்தமாய் ஒரு வலி. கண்கள் சிவக்க, அவளை தாடை நிமிர்த்திப் பார்த்தான்.

“அண்ணன் வந்து உங்க வீட்ல பேசினதும், உங்களுக்கும் விஷயம் தெரிஞ்சுருக்கும். கொரோனா காலகட்டத்துல, உங்களால வரமுடியாட்டியும் கூட ஃபோனாவது பண்ணுவீங்கன்னு அவ்வளவு எதிர்பார்த்தேன். ஒவ்வொரு தடவை ஃபோன்ல ரிங்டோன் கேக்கும் போதும் நீங்களா இருப்பீங்கன்னு தான் மனசு துடிக்கும். ஆனா, கடைசிவரை நீங்க கால் பண்ணவே இல்ல. ஒரு தடவை ஆத்திரத்துல ஃபோனை எடுத்து சுவத்துல அடிச்சு உடைச்சுருக்கேன்” என்றவளை இறுக்கிக் கட்டிக் கொண்டவன் கண்களும் கரையுடைத்தது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. விதியோடு சேர்ந்து காந்திமதியும் சேர்ந்து செய்த சதி.

“சாரிம்மா… எனக்குத் தெரியவே இல்லை!” மன்னிப்பு மட்டுமே பிராயச்சித்தம் இல்லை என்று தெரிந்தும் கேட்டான். இப்போதைக்கு அது மட்டுமே அவனால் முடிந்தது. 

எத்தனை சோதனையான காலகட்டம். திருமணமாகாமல், வயிற்றுப் பிள்ளையோடு, வாழ்க்கையில் அடுத்து என்ன என்ற கேள்விக்குறியோடு, பெற்றவர்களை விட்டு, வெளி தேசத்தில் இருந்தவள் தன்னை எவ்வளவு எதிர்பார்த்திருப்பாள் என்று நினைக்க, நினைக்க நெஞ்சு அடைத்தது. 

எத்தனை தன்னை எதிர் பார்த்திருக்கிறாள் என அவளது வாய்வழியாக கேட்டவனுக்கும் உள்ளம் வெதும்பித் தவித்தது. அவனையே அவனால் மன்னிக்க முடியாது. அவள்தான் ஏதோ ஒரு‌ கோபத்தில் ஃபோனை எடுக்கவில்லை என்றால், மீண்டும் மீண்டும் முயற்சி செய்திருக்கலாமே. ஒரு தடவை நேரில் சென்று பார்க்க முயற்சி செய்திருந்தால் கூட இத்தனை இன்னல்களை அவள் மட்டுமே அனுபவித்திருக்க மாட்டாள். உள்ளம் விம்மி வெடிக்க இறுக்கியணைத்தவன், உச்சியில் அழுந்த இதழ் ஒற்றியெடுத்தான். 

“எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏமாந்ததால, இனிமே நீங்க என்னைத் தேடி வந்தாலும், எனக்குத் தேவையே இல்லைன்னு ஒரேடியா முடிவு கட்டிட்டேன். மறக்கணும்னு நெனச்சாலும் முடியல. அதான் இருட்டுல நடந்ததுக்கு நடமாடும் சாட்சியா, உங்க ஜெராக்ஸ் காப்பியா கண்ணு முன்னாடியே அம்மு இருந்தாளே. எப்படி மறக்கறது? அஞ்சு வருஷம் கழிச்சு அதுவும் அம்முவுக்காக வந்தேன்னு சொன்னதும், அப்போ நான் யாரு உங்களுக்குன்னு ஒரு கோபம். என்னால அதை மட்டும் கட்டுப்படுத்தவே முடியல!” மார்பில் முகம் புதைத்தவளுக்கு, சிறுபிள்ளைபோல் விசும்பலோடு அழுகை வெடித்துக் கிளம்பியது.

“ப்ளீஸ் பழனி… சாரிடீ… போதும்” என்று தலைகோதியவனுக்கும் தொண்டையடைத்தது. மீண்டும் அழுகை அதிகமாகியதே ஒழிய குறையவில்லை. எத்தனை வருடத்தின், கோபம், ஏக்கம், ஆற்றாமை, தவிப்பு‌. ஒரு நாள் அழுகையில் கரைந்துவிடுமா என்ன? 

நெஞ்சில் சாய்ந்திருந்தவளை, நிமிர்த்தி தலை கோதி விட்டான். முதுகு தடவி ஆற்றுப்படுத்தினான். இமை மீறிய கண்ணீரை, இதழ் கொண்டு ஒற்றியெடுத்தான். போதாது என்பது போல் இறுக்கிக் கட்டிக் கொண்டாள். 

இதழொற்றல் இமை தாண்டி, சிவந்த மூக்கின் நுனி தீண்டி, கன்னம் உரசி, ஒரு கணம் தயங்கி இதழ் கவ்வியது. இத்தனை வருட கோபத்தையும், தாபத்தையும் சரிகட்டுவது போல் நீண்டதொரு இதழணைப்பு இருவருக்கும். 

விழி நீர் கன்னம் வழிய, “ஃப்ருட்டி… ஸ்வீட் கிஸ்க்குப் பதிலா சால்ட்டி கிஸ்டீ” என்றான் குறைபட்டவன் போல். 

“உப்பிட்டவரை உள்ளளவும் மறக்காம இருக்கணும்ல… அதுக்குதான்” என்றாள் சற்றே தெளிந்த முகத்தோடு. மீண்டும் இறுக்கிக் கொண்டான். நெஞ்சத்தில் நாடி பதித்து அவனையே அண்ணார்ந்து பார்த்திருந்தாள். 

“நான் உன்னை மறக்கவே இல்லைன்னு பொய் சொல்லமாட்டேன். ஆனா, அப்பப்போ நெனச்சுக்குவேன். நீ சொன்ன மாதிரியே, உங்க வீட்ல வீம்பா உனக்கு கல்யாணம் முடிச்சி வச்சிருந்தா, அடுத்தவன் பொண்டாட்டிய நினைக்கக் கூடாதுடா சீனின்னு தோணும்” என்றவனை நறுக்கெனத் தொடையில் கிள்ளினாள்.‌

“ஷ்ஷ்ஷ்… வலிக்குதுடீ!” என்றான் கிள்ளியை இடத்தை நீவிக் கொண்டு. 

“சொன்னா கோபிக்கக் கூடாது!” என்றான்‌ பீடிகையோடு. 

என்ன என்பதுபோல் புருவம் சுருக்கிப் பார்த்தாள். தனது கைபேசியை எடுத்தவன், கடவுச் சொல் போட்டு வைத்திருந்த கேலரியை திறந்தான். அசட்டுச் சிரிப்போடு அவள் பக்கமாகத் திருப்பினான். 

பார்த்தவளுக்கும் குப்பென முகம் சிவந்துவிட்டது. கோபத்தில்தான்.

இப்பொழுது இருவரும் இருக்கும் நிலைதான். பனி‌ போர்த்திய காருக்குள், மெல்லிய வெளிச்சத்தில், அவனது நீண்ட கைகளுக்குள், பூனைக்குட்டியாய் அடங்கி, கண்கள் மயங்க மார்பின் மீது மஞ்சம் கொண்டிருந்த நிலை. ஆனால் அன்றிருந்த கோலம்! அதை நினைத்துப் பார்த்தவளுக்கு, நாணம் அவளைப் பிடிங்கித் திண்ண அவனை முறைத்துப் பார்த்தாள்.

“அடப்பாவி… என் கண் முன்னாடிதானே இதெல்லாம் டெலிட் பண்ணீங்க‌. மறுபடியும் எப்படி?” என்றாள் கோபத்தில் சிவந்த முகத்தோடு.‌ 

“இது க்ளவுட்ல சேவ் பண்ணது. எப்ப வேணும்னாலும் ரீ கலெக்ட் பண்ணிக்கலாம்! அந்த தைரியத்துலதான் டெலிட் பண்ணேன்” என்றான் கள்ளப்பார்வையோடு கண் சிமிட்டி. 

“ஃபிராடு…” என்றவள், சோஃபாவில் கிடந்த குஷனை எடுத்து சகட்டு மேனிக்கு மொத்த, குறுக்கே கைவைத்து தடுத்துப்பார்த்தவன், முடியாது போக, அவளது இரண்டு கைகளையும் சேர்த்துப் பிடித்தவன், இழுத்து அணைத்து, இறுக்கிக் கட்டிக் கொண்டான். திமிற‌ முடியாமல் அவளுக்குதான் மூச்சு வாங்கியது. சூடான மூச்சுக்காற்று மார்பு உரசி அனல் மூட்டியது அவனுக்குள். இருவருக்குமே எதையோ கடந்து வந்த உணர்வு. மனம் வெகுவாக இளகியிருந்தது‌. 

“ஃப்ரூட்டி!” 

“ம்ம்ம்!”

“நமக்கு இந்த பெட்ரூம் எல்லாம் சரிப்படாது போலடீ. பெட்ரூம்ல பேசி முடிக்க முடியாதது, சோஃபா வந்ததும் சால்வ் ஆகிடுச்சு பாரேன்!” என்றவன் குரலில் குறும்பு அபரிமிதமாகப் பொங்கி வழிந்தது‌. இக்கணத்தை இழக்க விரும்பாதது போல் அமைதியாக இருவரும் சற்று நேரம் அணைத்துப் படுத்திருந்தனர். தேடுதலற்ற, ஆழ்ந்த, ஆசுவாசமான, அமைதியான அணைப்பு. 

சில கணங்கள் கடந்திருக்க, “இன்னும் ரெண்டு நாள்ல நான் பெங்களூர் போக வேண்டியிருக்கும்” என்றான். கேள்வியாக தலை தூக்கிப் பார்த்தாள். 

“இதுவரைக்கும் ஃப்ரான்சைஸ் கொடுக்குற ஐடியா இல்லை. இனிமே கொடுக்கலாம்னு இருக்கேன். அது சம்பந்தமா போனா, வர எப்படியும் ஒரு வாரத்துக்கு மேலாகும். கல்யாணத்தாலதான் தள்ளிப்போட வேண்டியதாப் போச்சு!” 

இதுவரை தனது கிளை உரிமையை மற்றவர்களுக்கு கொடுக்கும் எண்ணம் இருந்ததில்லை. ஆனால், ஃப்ரான்சைஸ் உரிமம் கேட்டு (franchise) சிலர் இவனை அணுக, இதுவரை அப்படியொரு யோசனையில்லாமல் இருந்தவனுக்கு, இப்பொழுது கொடுக்கலாமே என்றொரு எண்ணம். அடுத்த கட்டத்திற்கு தனது தொழிலை விரிவுபடுத்த எண்ணினான். 

பள்ளிக்கும் பண்டிகை விடுமுறை தொடர்ந்து வருவதால், பிள்ளையோடு தனியே இருக்க வேண்டாம், வேண்டுமானால் பழனிக்குச் செல்லுமாறு கூறினான். அது சரிப்படாது என மறுத்துவிட்டாள். 

இப்பொழுதுதான் திருமணம் முடிந்து, கணவனோடு வந்திருக்கிறாள். அந்த அலையே இன்னும் அரசல் புரசலாக அங்கு ஓய்ந்திருக்காது. மீண்டும் பிள்ளையோடு தனியே சென்றால் கேட்கவே வேண்டாம். வெறும் வாய்க்கு அவல் கொடுத்த மாதிரி. இத்தனை வருடம் பிறந்து வளர்ந்த வீட்டிற்குச் செல்வதற்கு கூட ஆயிரத்தெட்டு யோசனை செய்யவேண்டியிருக்கிறது.‌

“பத்து நாளைக்கு அங்கே எங்க தங்குவீங்க? அண்ணனுக்கு ஃபோன் பண்ணிட்டுப் போங்க!” என்றவளிடம்,

“ஏன்டீ உனக்கு இந்த கொலைவெறி! பனிஷ்மென்ட் கொடுக்கறதா இருந்தா நீ என்ன பனிஷ்மென்ட் வேணும்னாலும் கொடு. புலி கூண்டுக்குள்ள தள்ளிவிடாதே!” என்று பொய்யாய்ப் பதற,

“ரொம்பத்தான்” என்று நொடித்துக் கொண்டவளும், அவன் காட்டிய பாவனையில் கலகலத்து சிரித்தாள். அவளது சிரிப்பு அவனையும் தொற்றிக் கொண்டது. இதழோரம் புன்னகை கசிந்தது. 

வேற வழி… பொண்டாட்டி கட்டளை! பெங்களூரில் இருந்த  பத்து நாட்களும் தண்டபாணியுடன் தான் தங்கிக் கொண்டான். 

*****

“வந்து தூங்குடீ!”

“ம்ஹும்… சீனிப்பா வரட்டும்!”

“அவர் வர லேட்டாகும் அம்மு!”

“இட்ஸ் ஓகே ம்மா… சீனிப்பா வரட்டும்!”

“அவர் எப்போ வந்து நீ எப்போ தூங்கி… இன்னைக்கி சிவராத்திரிதான்!” கட்டிலில் படுத்துவாறே அலுத்துக் கொண்டாள் பழனி. 

நேரம் இப்பொழுதே மணி பதினொன்றைத் தொட்டிருக்க, “பெட் டைம் ஸ்டோரி சொல்லவா?” என்றாள். 

“ம்ஹும்… சீனிப்பா வரட்டும்! உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு ஃப்ரூட்டி!” அம்மாவைப் பக்குவமாய் தூங்கச் சொன்னது பிள்ளை. 

“அது சரி…” என அலுத்துக் கொண்டவள், 

“ஆத்தா வையும், சந்தைக்குப் போகணும், காசு கொடுன்னு சப்பாணி டயலாக் ஆரம்பிச்சுட்டா! இனி அவங்கப்பா வராம தூங்கமாட்டா” என்று தனக்குள் முணங்கியவள், 

“என்னமோ பண்ணு. நான் தூங்கப் போறேன்!” மல்லாக்கப் படுத்துக் கொண்டு சும்மாவேணும் கண்களை மூட,

“ஓகே ம்மா… குட் நைட்!” என்றது பிள்ளை. 

வேகமாகத் திரும்பியவள், “அடிப்பாவி… நான் வந்தாதான் தூங்குவேன்னு இத்தனை நாளா அடம்புடிச்சுட்டு, இப்போ குட் நைட்டா?” மகளை முறைத்துப் பார்க்க, அழைப்பு மணி சப்தத்தில் வேகமாக எழுந்து கதவைத் திறக்க ஓடினாள் அமிர்தா. 

“பையப் போடீ! மொதல்ல யாருன்னு பாக்கலாம்!” படுக்கை அறைக் கதவைத் திறந்து அமிர்தா வெளியே ஓட,  அதட்டிக் கொண்டே பின்னால் வேகமாக எழுந்து வந்தாள். 

பிள்ளையைவிட பெற்றவள்தான் அவனை அதிகமாகத் தேடியது போல் இருந்தது அவளது நடையின் வேகம். மனம் முந்தியதோ, விழி முந்தியதோ போன்றதொரு துள்ளல் அவளது நடையில்.

கதவின் மேஜிக் மிர்ரர் வழியாக பார்த்தவள், கதவைத் திறந்துவிட, அவன் உள்ளே வரும் முன், “சீனிப்பா…” என்று ஓடிச் சென்று காலைக் கட்டிக் கொள்ள, பிள்ளையை வாரித் தூக்கிக் கொண்டான். கழுத்தைக் கட்டிக் கொண்டு இருவரும் கொஞ்சிக் கொள்ள அங்கே ஒருத்தி கண், காதெல்லாம் புகைய பார்த்துக் கொண்டிருந்தாள்.

“போதும்… கொஞ்சுறதை உள்ளே வந்து கொஞ்சுங்க ரெண்டு பேரும்!” என்றாள் கதவைப் பிடித்தவாக்கில்‌. அவளும் அவனைத்தான் முறைத்து நின்றாள். 

“வொய், ஃப்ரூட்டி‌ இஸ் ஆன்கிரி?” ரகசியமாய் மகளிடம் கேட்டுக் கொண்டே உள்ளேவர, கதவைச் சாத்திவிட்டு பின்னால் வந்தாள். 

“என்னை சீக்கிரம் தூங்கச் சொன்னாங்க. நான் சீனிப்பா வரட்டும்னு சொன்னதுக்கு!” அப்பனைப்போலவே ரகசியமாய் அவன் காதருகே குனிந்து சொல்ல, இவளை ஓரக்கண்ணால் பார்த்தவன் பார்வையில் குறும்பு‌ கூத்தாட, சட்டென புருவத்தை உயர்த்தி, கண்சிமிட்டினான். உதட்டைச் சுழித்து பழிப்பு காட்டினாலும், பத்து நாட்களாக அவனைப் பார்க்காத ஏக்கம் அவளுக்குள்ளும்‌. வெளிப்படையாகக் காட்டத்தான் வீம்பு இடம் கொடுக்கவில்லை. 

ஐந்து வருடம் இல்லாத பிரிவுத் துயரை இந்த ஒரு வாரத்தில் அனுபவித்துவிட்டாள் என்று சொல்லும்படி இருந்தது அவளது தவிப்பு. முதலிரண்டு நாட்கள் சாதாரணம் போலத்தான் கடந்தது. ஒரு வாரம் தானே என்றுதான் தோன்றியது. ஆனால், அடுத்தடுத்து வந்த நாட்களின் வெறுமை அவனது இன்மையை உணர்த்தியது. 

கைபேசி அழைப்பின் போதெல்லாம், “சீனிப்பா எப்போ வர்றீங்க?” மகளின் கேள்வியில் இவளுக்குள்ளும் அதே கேள்விதான் தலைதூக்கும். 

மகளுக்குதான் தெரியாது. தனக்கு ஒரு வாரம் ஆகும் எனத் தெரியுமே. ஆனாலும் சீக்கிரம் வாங்க சீனிப்பா என்று மகள் முடிக்கும் முன், மங்கையவள் மனமும் அதையே சொல்லும். இன்னும் ஃபைவ் டேஸ், ஃபோர் டேஸ், த்ரீ டேஸ் என அப்பனும், மகளும் கவுன்டவுன் சொல்லி வைக்கும் பொழுதெல்லாம் இன்னும் மூன்று நாட்களா, இரண்டு நாட்களா என இவளுக்குதான் மலைப்பு தட்டும். 

‘கருப்பட்டி வரட்டும் வச்சுக்கறேன்!’ என உள்ளுக்குள் கருவிக் கொள்வாள். வந்தால் என்ன செய்வாய் என்று புருவம் உயர்த்திக் கேட்பது போல் மனக்கண்ணில் தோன்றும். என்னை ரொம்பத்தான் ஆட்டுவிக்கிறான். மனம் நொடித்துக் கொள்ளும். 

அதுவும் அவன் கிளம்பிவிட்டேன் என கைபேசியில் தகவல் அனுப்பிவிட்டு வைத்த நிமிடம் முதல், வந்து சேர்ந்த இந்த நிமிடம் வரை நேரத்தை நெட்டி முறிப்பதே மலையைப் புரட்டுவது போல் ஆயிற்று. நிமிடத்திற்கு ஒரு முறை நேரம் பார்த்தே கடிகாரமுள் தேய்ந்தது‌.

படுக்கும் முன் தினமும், அப்பாவும், பொண்ணும் வீடியோ காலில் கொஞ்சிக் கொண்டாலும் போதவில்லை மகளுக்கு. எப்போ வருவீங்க‌ சீனிப்பா என்று கேட்டே அனத்திவிட்டாள். 

அதில் பழனிக்கு கொஞ்சம் என்ன நிறையவே காண்டு எனச் சொல்லலாம். இத்தனை வருடங்களாக கைக்குள் வைத்து வளர்த்த தன்னைவிட, இந்த பத்து நாட்களில் பார்க்காத அப்பா மீது அவ்வளவு பாசமா என. இருவரும் கொஞ்சிக் கொள்ளும் பொழுது ரொம்பத்தான் எனும்படி பார்த்து வைத்தாலும், அப்பாவையும், பிள்ளையையும் வாஞ்சையாய்த் தழுவி நின்றது பெண்ணவள் பார்வை. இத்தனை வருடங்களாக மகளுக்குக் கிடைக்காத தந்தை பாசம். அவனும் அன்று அதைத்தானே சொன்னான். நான் இழந்துவிட்ட காலங்கள் எனக்குத் திரும்பக் கிடைக்காதென்று.

“அம்முக்குட்டிக்கு தான் அப்பா வேணும் போலயே. இன்னும் அம்முவோட அம்மாவுக்கு தேவையில்லை போல?” மகளோடு பேசுவது போல் பேசினாலும், சரசமாக பெற்றவளையும் வம்பிழுப்பான். 

இரவு, மகளிடம் பேசும் பொழுதெல்லாம் அவனது பார்வை பக்கத்தில் இருந்தவளைத் தான் ஆராய்ந்தது. படுக்கையில் படுத்துக் கொண்டு, முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்தபடிதான் அமிர்தா பேசுவது. பார்க்காதது போல் பார்த்து வைப்பாள். 

இருவரும் முத்தம் கொடுத்து பேச்சை முடிக்கும் முன், “சீனிப்பா… ஃப்ரூட்டிக்கும்!” என்று‌ தொடு‌ திரையை, இவள் வேண்டாமென மறுக்கும் முன், அம்மா‌ பக்கம் திருப்புவாள் மகள். 

வெகு அருகில் கண் முன்‌ தெரியும் அவனது‌‌ காந்தப் பார்வை எப்பவும் போல் அவளைக் கட்டிப்போடும். நிலைதடுமாறச் செய்யும்‌. உதட்டில் புன்னகையைத் தேக்கி சட்டென கண் சிமிட்டுபவனை,  நாணத்தில் சிவந்த முகத்திற்கு, கோபச்சாயம் பூசி அப்படியே கண்ணெடுக்காமல் முறைக்கிறேன் என்று பெயரில் பார்த்து வைப்பாள். 

‘வரவர கருப்பட்டி முகத்துல வசீகரம் கூடிட்டே போகுது’ ஆசையாக இல்லை என்றாலும், அலுப்பது போல் சலித்துக் கொள்வாள். அவனது பார்வையும் இவளைத்தான்‌ ஆராயும். சரியான அமுக்குணி. கண்ல கொஞ்சமாவது ஆசை தெரியுதா பாரு. அத்தனை அழுத்தம். இருந்தாலும் தனது அழைப்பை எதிர்பார்த்தே, தினமும் இரவு உடைக்குக் கூட மாறாமல் காத்திருப்பது புரிந்தது அவனுக்கும்.

“அதான் ரெண்டு பேரும் கொஞ்சியாச்சுல்ல. வச்சுட்டுப் படுடீ!” தனக்குள் எழுந்த தடுமாற்றத்தை கோபமெனும்‌ போர்வை கொண்டு மூடப்‌ பார்ப்பாள். அவனது கள்ளப்பார்வை‌ அவளை‌க் கண்டுகொண்டு கல்மிஷமாய் சிரிக்கும். பதிலுக்கு முறைப்பு மட்டுமே அவளிடம். 

*****

“பழனி… செம பசி!” என்றுவிட்டு, மகளோடு படுக்கையறை செல்ல, அவன் கொண்டுவந்த பேக்கை எடுத்து வைத்துவிட்டு, அடுக்களை சென்றாள். தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றிவிட்டு, சட்னி, சாம்பாரை, சாப்பாட்டு மேஜையில் எடுத்து வைக்க, அடுத்த பத்து நிமிடத்தில் குளித்துவிட்டு, உடை மாற்றி வெளியே வந்தான். சரியாகத் துவட்டாத தலையின் ஈரத்தைக், கைகளால் சிலுப்பியபடி வந்து அமர்ந்தான். முகத்தில் சிதறிய நீர்த்துளிகள் இவளுக்குள் அனல்‌ மூட்டியது. 

மகளைப் பக்கத்தில் இருத்திக் கொண்டு, அவளுக்கும் ஊட்டிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான். கையும், வாயும் வேலை பார்த்தாலும், மன்னவன் பார்வை மங்கையவள் பாதாதிகேசம் வருடியது. அவளது ஓரப்பார்வை தன்மீது படிவது தெரிந்தது. கண்டு கொண்டால் உள்ளுக்குள் சுருங்கிக் கொள்வாள் எனத் தெரியும். 

வெள்ளிக்கிழமை என மகளோடு கோவில் சென்று வந்தவள், வெகுநாட்கள் கழித்து இன்றுதான் புடவை கட்டியிருந்தாள். வெங்காயச் சறுகு நிறத்திலான ஷிஃபான் புடவை பாந்தமாய் பாவையவள் பளிங்கு மேனியைத் தழுவியிருந்தது‌. தலையிலிருந்த சாதிமல்லிச் சரம் வாசனை நாசி நிறைத்தது. 

இப்பொழுதுதான் அதை கவனித்தான். அவன் உள்ளே‌ வரும்பொழுது அவளது தலையில் பூ‌ இல்லை. இப்பொழுதுதான் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்து வைத்திருக்க வேண்டும். பூச்சரம் வாடாமல், வதங்காமல் அப்படியே இருந்தது. பார்த்தவன் விழியோரம் சல்லாபம் குடிகொண்டது. வயிற்றுப் பசி போன இடம் தெரியவில்லை. 

சாப்பிட்டு முடித்து வந்து படுத்தவன், பத்து நாள் கதையை வாய் ஓயாமல் வளவளத்த மகளிடம், “அம்மு… தூக்கம் வரலியா? காலையில பேசிக்கலாமே. நாளைக்கு லீவு தானே?” பாவமாய்க் கேட்க, 

“உங்களுக்கு பெட் டைம் ஸ்டோரி சொல்லவா? தூங்குறீங்களா?” என்று கேட்க, கலகலத்து சிரித்தவளை முறைப்பது இப்பொழுது அவன் முறையாயிற்று. 

*****

“என்ன பண்றீங்க?”

“ஷஷ்ஷ்… கத்தாதே! அம்மு முழிச்சுக்கிட்டா மறுபடியும் நீதான் பெட் டைம் ஸ்டோரி சொல்லி தூங்க வைக்கணும்!”

“இப்போ எங்க தூக்கிட்டுப் போறீங்க?” அவள் கிசுகிசுப்பாய் கேட்டதே அவனுக்குள் கிளுகிளுப்பை மூட்டியது.

“உனக்கு பெட் டைம் ஸ்டோரி சொல்ல!”

“என்னையும் தூங்க வைக்கப் போறீங்களா?” கன்னத்துள் நாவினைத் துழாவி, இதழ் மடித்து சிரிக்க, 

“ஏத்தம் தான்டீ உனக்கு! அது அம்முவுக்கு நீ சொல்ற ஸ்டோரி. இது நீ தூங்காம  இருக்க, நான் சொல்ற ஆன் தி பெட் ஸ்டோரி! கணக்கு டீச்சருக்கு இன்னைக்கி நான் கணக்கு சொல்லித் தர்றேன்!” கண்கள் மின்ன, குரலைத் தழைத்து, சரசம் கொஞ்ச அவன் சொன்ன தொணியே அவளுக்குள் சில்லிப்பூட்ட, 

“கணக்குத் தப்பாச்சுன்னா பனிஷ்மென்ட் பலமா இருக்கும் பரவாயில்லையா! விடிய விடிய க்னீ டவுன் பண்ணணும்!” கண்டிப்பும் சரசமுமாய் அவள் சொன்னதைக் கேட்டு ஒரு மார்க்கமாய் பார்த்தவன்,

“பேச்சு மாறமாட்டியே?” என்றான் விழியோரம் கள்ளச்சிரிப்போடு. 

‘கருப்பட்டிக்கு இதுல என்ன சந்தோஷம். ஏதோ வில்லங்கமா இருக்கும் போலயே’ என யோசித்தவள், சட்டென அவனைப் பார்த்து, “கரப்டட் ப்ரைன். எஸ்.ஜே. சூர்யா மாதிரி எல்லாமே டபுளா யோசிக்குது. விஷம்… விஷம்…” என எட்டுமளவிற்கு எக்கி தலையில் குட்ட, 

“இந்த நேரத்துல இப்படி யோசிக்கலைன்னாத் தான்டீ தப்பு. ஆனா சொல்லாமலே புரிஞ்சுது பாத்தியா. அங்க நிக்கிற. நீதானே வாய் கொடுத்த. பேசாம கதவைத் திறடீ!” கைகளில் ஏந்தியவாக்கில் கட்டளையிட,‌

இவ்வளவு நேரமாக அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்தவள், “ம்கூம்… மாட்டேன்” என்றாள் கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு. 

“அப்போ இங்கேயே… சோஃபாவுல… எனக்கொன்னும் பிரச்சினை இல்ல. கார் சீட் அளவுக்கு இதுதான் எனக்கு வசதி!” என்று சில்மிஷமாய் கண்சிமிட்ட, 

“கருப்பட்டி!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு, தோளில் நறுக்கெனக் கிள்ள,

“ராட்சசி… டீச்சர்ங்கறதை அடிக்கடி நிரூபிக்கிறடீ. கதவைத் திற. வெய்ட் ஓவரா இருக்க!” என்றவனை முறைத்துவிட்டு கதவைத் திறந்துவிட, 

அறைக்குள் சென்றவன், அப்படியே திரும்பி, கதவு தாழ்ப்பாளைப் பார்த்து சில்மிஷமாய் கண் காண்பிக்க, மறுப்பாகத் தலையசைத்தாள். 

“டைம் வேற கரெக்டா ஒரு மணி! இப்ப நீ டோர் லாக் போட்டாதான் கரெக்டா இருக்கும்!” விழியோரம் குறும்பு கசிய, கள்ளச்சிரிப்பு சிரித்தவனை வெட்டவா குத்தவா என கொலைக்காண்டாக முறைத்தவாறு, அவன் கைகளில் இருந்தவாறே எக்கித் தாழ்ப்பாளைப் போட்டாள். 

கையில் ஏந்தியவளை படுக்கையில் கிடத்தியவன் அவள் முகம் பார்க்க, அவள் விழியோரம் கண்ணீர் கோடுகள். 

இவ்வளவு நேரமாக சரசம் கொஞ்சியவனின், “ஃப்ரூட்டி!” என்ற வார்த்தைகள் தொண்டையைத் தாண்டவில்லை. 

“இப்பவும் நானாத்தான் வலிய வந்தமாதிரி…” என்றவள் இதழ் மீது விரல் வைத்தவன், 

“எது, இந்தப் புடவை, பூவெல்லாம் வச்சிருக்கறதா? போடீங்… ஏதாவது சொல்லிறப் போறேன்!” கோபமாகக் கேட்டவனை முறைத்துப் பார்க்க,

“இதே தான்டீ… இந்தப் பார்வை தான்டீ.. நீ எனக்குக் கொடுத்த சிக்னல். இங்க வந்த நாள்லருந்து நீ என்னை இப்படித்தான் பாக்குற. நான்தான் இது தெரியாம இத்தனை மாசம் வேஸ்ட் பண்ணிட்டேன். இல்லைனா நம்ம அம்முகூட விளையாட, இந்நேரம் ஒரு குட்டி அம்மு ரெடி‌ பண்ணியிருக்கலாம்” என்றவனை ஆழ்ந்து பார்த்தாள். 

அவளது பார்வை உணர்ந்தவன், அவளது பக்கத்தில் சரிந்து படுத்து இதமாக அணைத்துக் கொண்டான். 

“ஒரு தடவை சூடு பட்டாச்சு பழனி. அதனாலதான் உன்னை நெருங்க பயம். உன் உணர்வுகளோட விளையாட விரும்பல. உனக்கு டைம் கொடுக்கலாமேனுதான் பத்து நாளா விலகி இருந்தேனே ஒழிய, உன்னை விலக்கி வைக்கணும்னு இல்லடீ! இப்படி‌ ஒருத்தியைப் பக்கத்துல வச்சுக்கிட்டு விரதம் இருக்கறது எவ்வளவு கஷ்ட்டம் தெரியுமா? அதனாலதான் பெங்களூருக்கு ஓடிப்போனேன். இருந்தாலும் ரொம்ப சோதிச்சுட்டடீ! பைத்தியம் பிடிக்காத குறை.” கழுத்து வளைவில் முகம் புதைத்து அவன் பேசப் பேச, அவன் உதடு செய்த மாயத்தில், மங்கையவள் மேனியெங்கும் மெல்லிய சிலிர்ப்பு ஓடி மறைந்தது.

“வந்தவுடனே உங்க மகளைத்தானே கொஞ்சுனீங்க! போங்க… போங்க… அவளையே கொஞ்சுங்க‌. அவளுக்கும் சீனிப்பாதான் வேணும்! நான் வேண்டாம்!” சொல்லும் பொழுதே, எதற்கென்று தெரியாமலே தொண்டை அடைத்தது. மகளிடம் காட்ட முடியாத மனத்தாங்கலை மன்னவனிடம் காட்டினாள். 

மகளோடு போட்டி போட்டுக்கொண்டு சிறுபிள்ளை போல் சிணுங்கியவளை இறுக்கியணைத்தவன் வாய்விட்டு சிரித்தான். குறையாய் அவனை விலக்கித்தள்ள முற்பட, மீண்டும் அவனது பிடி, வஞ்சியவள் இடையை வளைத்து இறுக்கியது. 

முத்தத்தை ஆயுதமாகக் கொண்டே, கட்டில் களத்தில் அவன் களமாட, தோற்பது போல் தோற்றே அவனை‌ வென்று கொண்டிருந்தாள் பாவை. கழுத்து வளைவில் முகம் புதைத்து வாசம் பிடித்தவனது கைவிரல்கள், தடைகளைத் தாண்டி மாயங்கள் பல புரிய, திவ்யமாய் திகம்பரி தரிசனம் கண்டவனுக்கு சித்தம் கலங்கி, பித்துப் பிடிக்காத குறை. 

அவள் முரண்டும், பிடிவாதமும் இவனுக்குள்‌ மோகத்தையும், தாபத்தையும் கூட்ட, ஆலிங்கனம் உடும்புப் பிடியாய் வலுப்பெற, ஒரு கட்டத்திற்கு மேல் திமிற முடியாமல், அவனது ஆளுமைக்குள் அடங்கிப் போனாள் பெண்.‌ 

குரலில் மோகம் குழைத்து, தாபம் தளும்பி வழிய, மயங்கிக் கிறங்கியவனின், “ஃப்ரூட்டி!” என்ற‌ ஒற்றை அழைப்பு போதுமானதாக இருந்தது அவளுக்குள் இறுகிப்போன உணர்வுகளுக்கு உயிர் கொடுக்க. முத்தமிட்டே, முத்தமிட்டே மோகப்பூ பூக்களை வெடிக்கச் செய்தவன், பூத்த பூக்களை விடியும் வரை வாசம் குறையாமலும் பார்த்துக்கொண்டான். முதல் முறை வராத அச்சம், கூச்சம், தயக்கம், தடுமாற்றமெல்லாம் இப்பொழுது வந்து தொலைத்து இனிமையாய் இம்சித்தது இருவருக்கும்‌. 

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா

ஐயோடி ஐயோடி மயங்கி மடியினில் பூக்கவா

யம்மாடி யம்மாடி நீ தொடங்கத் தொலைந்திடவா

இழந்ததை மீட்கவா ஓ ஓ இரவலும் கேட்கவா ஓ ஓ

ஹே ஹே…ஹே ஹே…

என்னை நான் பெண்ணாக 

எப்பொழுதுமே உணரல

உன்னாலே பெண்ணானேன் 

எப்படி எனத் தெரியல

விலகி இருந்திடக் கூடுமோ 

பழகும் வேளையிலே

விவரம் தெரிந்தபின் மூடினால் 

தவறுதான் இதிலே

ஏனடா இது ஏனடா…

கள்வனே பதில் கூறடா

ஹே ஹே…ஹே ஹே…

6 thoughts on “முக்கனியும் சக்கரையும் 31final”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top