3
“பாஸ்! இங்க வாங்க பாஸ்!” ஆர்வமாக அழைத்தது அக்கவுன்டன்ட் ராகவ். தனது பக்கவாட்டு இருக்கையை நகர்த்திப் போட, அதில் உட்காராமல் எதிர்புற இருக்கையில் அவனுக்கு நேரெதிரே அமர்ந்தான் சீனியப்பன். மதிய உணவு இடைவேளை. சாப்பிட கேன்டீன் வந்திருந்தான்.
இவர்கள் சுவற்றோரமாக போடப்பட்டிருந்த இருக்கைகளின் வரிசையில் அமர்ந்திருக்க, நடுப்புற வரிசையில், அவனுக்கு எதிர் இருக்கையில் தான் பழனியும், அமிர்தாவுடன் அமர்ந்திருந்தாள். மகளுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள்.
“பேரைப் பாத்ததும், ஒரு நாப்பது, அம்பது வயசுல ஒரு பி.டி சார் வருவார்னு எதிர் பார்த்தேன். ஆனா, இப்படி எதிர்பாக்கல பாஸ்!” சக தோழமையோடு ராகவ் சொன்னதைக் கேட்டு அழகாய்ச் சிரித்தான் சீனியப்பன்.
“அதென்ன பாஸ்னு. பேர் செல்லியே கூப்பிடுங்க மிஸ்டர்…” என்று இழுக்க,
“ராகவ்” என்றவன்.
“போங்க பாஸ். நமக்குன்னு ஒரு ஆள் வராதான்னு எத்தனை நாள் ஏக்கம் தெரியுமா?” என்றவனை, ‘எதே’ என விசித்திரமாய்ப் பார்த்தான்.
“ச்சே… ச்சே… நீங்க நினைக்கிற மாதிரி இல்ல! இங்கே எல்லாருமே லேடீஸ் பாஸ். பேச்சுத் துணைக்கு கூட ஒரு ஆம்பளை இல்ல. இவங்க கிட்டயும் ஒரு வரம்புக்கு மேல பேசமுடியாது. போன வருஷம் வரைக்கும் ஒரு லேப் இன்சார்ஜ் இருந்தாப்ல. இந்த வருஷம் அதுக்கும் ஒரு லேடீ இன்சார்ஜ் வந்துட்டாங்க. என் கஷ்ட்டம் சொன்னா புரியாது பாஸ். உங்களப் பாத்ததும் எவ்வளவு சந்தோஷப் பட்டேன் தெரியுமா?” என்று புலம்ப சுற்றிலும் பார்வையை ஒட்டியவனுக்கும் அவனது கஷ்ட்டடம் புரிந்தது. இத்தனை பெண்கள் மத்தியில் ஒரு ஆண் மகனாக வேலை பார்ப்பது எத்தனை சங்கடமென.
மற்ற அலுவலகம் மாதிரி சகஜமாகப் பேசவிட முடியாது பள்ளியில் ஆசிரியைகளிடமும், மாணவிகளிடமும். ஒரு வரம்பிற்குள் தான் நிற்க முடியும்.
சாப்பிட்டுக் கொண்டே, இவனது பார்வை எதிர்புற இருக்கை மீதே இருந்தது. போதும் என்ற மகளை கொஞ்சி, கெஞ்சி, மிரட்டி ஊட்டிக் கொண்டிருந்தாள் பழனி.
“ம்மா… நானே சாப்பிட்டுக்கறேன். அப்பறம் நீ டைமாச்சுன்னு சாப்பிடாம க்ளாஸ்க்குப் போவ!”
“அதெல்லாம் டைம் இருக்கு. நீ சாப்பிடு. எப்படிடா எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறது!” மகளை செல்லமாக அதட்டி ஊட்டிவிட்டாள். பழனி சாப்பாட்டை மகளுக்கு ஊட்ட, பக்கத்திலிருந்த உருளைக்கிழங்கு வறுவலை எடுத்து மகள் அம்மாவிற்கு ஊட்டிவிட்டாள். அவனுக்கது கவிதையாய் இருக்க, அதைப் பார்த்தவன் முகத்தில் புன்னகை அரும்பியது.
“பாஸ்… அங்க பாக்காதீங்க. என்னமோ நாம அவங்கள ஃப்ளர்ட் பண்ற மாதிரி முறைப்பாங்க. அதனாலதான் நான் இந்தப்பக்கம் பாத்து உக்காந்திருக்கேன்!” எதனால் வந்ததும் தனக்கு பக்கவாட்டு இருக்கையை இழுத்துப் போட்டான் என இப்பொழுது புரிந்தது.
“அப்போ… நீங்க அவங்கள அப்படிப் பாத்திருக்கீங்க.” மெலிதாக அவன் கேள்வியில் கோபம் கனன்றது.
“நீங்கவேற ஏன் பாஸ் காமெடி பண்றீங்க! நானெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் பாஸ்! நானே இங்க சேந்ததுலருந்து வயசுப் பொண்ணாட்டம் குனிஞ்சதலை நிமிராம வந்துட்டுப் போறேன். நான் கொஞ்சம் ஷை டைப். அதிகம் பேசமாட்டேன்!”
“அதுசரி… பார்த்தாலே தெரியுது!” என்றவன் பார்வை நக்கலாக அவனை அளக்க,
“அது… பேச ஆள் கெடச்ச சந்தோஷத்துல இன்னைக்கி கொஞ்சம் அதிகமாப் பேசறேன் பாஸ்!” என்றான் ராகவ். அவனை அளந்தது சீனியப்பன் பார்வை. அவனுக்கு ஒரு இருபத்தைந்திற்குள் தான் வயதிருக்கும். பி.காம் முடித்திருக்கிறான். கூடவே எஸ்ஏபி(SAP FICO)யும் முடித்திருக்கிறான். கொஞ்சம் பால்வடியும் முகம்தான்.
வங்கித் தேர்விற்குப் படித்துக் கொண்டே இங்கு வேலை பார்க்கிறான். இயற்கையிலேயே பெண்களிடம் அதிகம் பேச மாட்டான்.
இதில், அவனது அம்மாவும், “டேய் ராகவா! நீ போறது ஸ்கூலுக்கு. மத்த ஆஃபீஸ் மாதிரி இல்ல. பொம்பளைங்களும், வயசுப் புள்ளைங்களும் அதிகமாப் புழங்குற இடம். வேட்டி மேல முள்ளு விழுந்தாலும், முள்ளு மேல வேட்டி விழுந்தாலும் சேதாரம் வேட்டிக்கு தான்டா” என பயமுறுத்தி அனுப்பியிருக்க, யாரிடமும் நிமிர்ந்து கூடப் பேசமாட்டான். அவனது வேலையும் அப்படி. தனியாக ஒரு கேபினுக்குள். காலையில் வந்து கம்ப்யூட்டருக்குள் தலையை விட்டால், மாலை பள்ளி முடிந்து தான் தலையை வெளியே எடுப்பான்.
பரஸ்பர அறிமுகத்திற்கு பிறகு பொதுவாக இருவரும் பேசிக் கொண்டாலும் சீனியப்பனது பார்வை அவ்வப்பொழுது அமிர்தாவை தொட்டு மீண்டது. அதைக்கவனித்தவன், “பாஸ் அங்கே பாக்காதீங்க. நீங்க பாக்குறது தெரிஞ்சது பழனி மேம் மலையேறிருவாங்க! அப்பறம் ஒளவையாரே வந்து ஞானப்பழம் கொடுத்தாலும் மலையிறக்க முடியாது!” அதைக்கேட்டு வாய்விட்டு சிரித்தவன்,
“சிங்கிள் பேரன்டா இருந்தா அப்படித்தான் ப்ரோ! கடுகடுன்னுதான் இருப்பாங்க.”
“இன்னைக்கிதான் வந்தீங்க. அவங்க சிங்கிள் பேரன்டுதான்னு எப்படி சொல்றீங்க. எனக்கே தெரியாதே!” என்று அவனை சந்தேகமாய்ப் பார்க்க,
“நீங்க சொன்னதை வச்சுத்தான் ப்ரோ. வந்ததுலருந்து அங்க பாக்காதீங்கன்னு தான் திரும்பத் திரும்ப சொல்றீங்க. அப்போ ஏற்கனவே பாத்து வாங்கிக் கட்டியிருக்கீங்கனு தானே அர்த்தம்!” என்று சொல்ல,
“அது சும்மா… சின்னப் பொண்ணு க்யூட்டா இருக்காளேன்னு பாத்தது பாஸ். அதுக்கே ஒரு முறை, முறைச்சாங்க பாருங்க, அப்பத் திரும்பி சுவத்தப் பாத்து உக்காந்தவன் தான். மறந்துகூட அந்தப் பக்கம் திரும்புனதில்ல!”
“இனியும் திரும்பிடாதீங்க ப்ரோ!” என்று சிரித்துக் கொண்டே சொன்னவன் குரலில் அத்தனை கண்டனம்.
*****
“காலங்காத்தால மூனு பேரும் எங்க போய்ட்டு வர்றீங்க. கோவிலுக்கா?” அவர்கள் நெற்றியிலிருந்து சந்தனமும் குங்குமமும் அப்படி கேட்க வைத்தது.
“மணி என்னாகுது. உனக்கு இது காலங்காத்தாலயா? சூரியன் சுள்ளுன்னு உச்சிக்கு வந்துருச்சு!”
“இன்னைக்கு ஒரு நாள்தான் லீவு. அதுலயும் தூங்கக்கூடாதுன்னா எப்படி? நீங்களே சொல்லுங்க தாத்தா!” மத்தியஸ்த்தம் பண்ண தாத்தாவை அழைக்க,
“உங்க பஞ்சாயத்துல என்னை இழுக்காதீங்க!” என்று வேலாயுதம் அப்பீல் செய்யாமாலே வாய்தா வாங்கிக் கொண்டு, “அந்த ஃபேனைப் போடு பழனி!” என்றவாரே, விசிராந்தையாய் சோஃபாவில் உட்கார்ந்தார்.
இன்று வார விடுமுறை என்பதால், தாமதமாகத்தான் எழுந்து வெளியே வந்தாள். சில சமயங்களில் பெரிய வகுப்பு பிள்ளைகளுக்கு சிறப்பு வகுப்பு இருக்க, இந்த வாரம் இவளுக்கும் வார விடுமுறை ஒரு நாள் மட்டும் என்றானது. அமிர்தாவை பாட்டி, தாத்தாவிடம் விட்டுச் சென்றாள்.
இவள் எழுந்து வந்த பொழுது வீடே அமைதியாக இருந்தது. இந்நேரத்தில் டீவியில் செய்தி கேட்டுக் கொண்டிருப்பார் வேலாயுதம். “காலையிலயே இந்த தெண்டக் கருமாந்திரமெல்லாம் பாக்காட்டி என்ன. எவ, எவனோட போனா, எவன் எவனை வெட்டி கொலை பண்ணுனியான், குத்தினான்னு எந்திரிச்சதும் கேக்குற சேதியா இது. ஊர் ஒலகத்துல வேறெதுவுமே நடக்காத மாதிரி, இன்னைக்கு முழுசும் மாத்தி மாத்தி இதையேதான் சொல்லப்போறானுக. பின்னும் பொறவு கேட்டுக்கிட்டா ஆகாதா. காலையில ஒரு சாமிப்பாட்டு, சோக்கெல்லாம் வச்சா என்ன?” அய்யம்மா ஒரு பக்கமும், டீவி ஒரு பக்கமும் கத்திக் கொண்டிருக்கும்.
“நீ மட்டும் அந்தக் காலத்துலருந்து மாறாத மாமியா, மருமக சண்டைய வச்சு ஓட்டுற நாடகத்தை எல்லாம் வரிசையாப் பாக்குற. நான் ஏதாவது சொன்னேனா. நான் செய்தி கேட்டா மட்டும் ஒனக்குப் பட்டுக்கிறும்!” தாத்தாவும் பதிலுக்கு எகிறுவார். இந்த வயதிலும் எலியும் பூனையும் போல் இவர்கள் அடித்துக் கொள்வதைப் பார்க்க இவளுக்கு தான் வேடிக்கையாக இருக்கும்.
ஆனால், சிறிது நேரம் டீவி இயங்காமல் வீடு அமைதியாக இருந்தால், “எங்க, உங்க தாத்தனைக் காணோம்” எனத் தேட ஆரம்பித்து விடுவார் அய்யம்மா. அதுவே தான் வேலாயுதமும். திட்டிக் கொண்டே மனைவி கண்முன் நடமாட வேண்டும். இது எந்தவகைப் பிணைப்பு என்று தோன்றும். இதற்கெல்லாம் ஆராய்ச்சிக் கட்டுரையா எழுத முடியும்? கவிஞர் சொன்னமாதிரி வாழ்ந்து பார் என்றுதான் சொல்லமுடியும்.
வீட்டின் அமைதி, மூவரும் வீட்டில் இல்லையென்பதை கட்டியம் கூறியது. சாவகாசமாக காஃபியைக் கலந்து எடுத்துக் கொண்டு பால்கனி பக்கம் வந்தாள். கொடியில் காயப்போட்ட துணி ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது. அதற்குள் துவைத்து, குளித்து எங்கு சென்றார்கள் என்ற யோசனையோடே காஃபியை துளித்துளியாய் மிடறினாள். முதல் தளத்திலேயே அவர்களது ஃப்ளாட். பால்கனி கம்பியில் முழங்கை ஊன்றிக் கொண்டு,
அங்கிருந்தே பூங்காவில் இருக்கிறார்களோ என பார்வையைச் சுழற்றினாள்.
வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. அதற்குள் அங்கிருக்கும் சக ஃப்ளாட்வாசிகளில் முக்கால்வாசி பேர் அறிமுகம் அய்யம்மாவிற்கு.
இவர்கள் தளத்தில், பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களே யாரென்று தெரியாது இவளுக்கு.
ஒரு கல்லூரி செல்லும் பையனும், பெற்றோரும் இருப்பதாகக் கேள்விப்பட்டாள். சரியாக முகம் கூடத் தெரியாது. அவனது பெயர் கூட யஷ்வந்தோ, ஜஷ்வந்தோ. இவளைப் பார்க்கும் பொழுதெல்லாம் மரியாதையாக வணக்கம் வைப்பான். அவன் அம்மாதான் எப்பொழுதும் கடுகடுவென இருப்பதாகத் தோன்றும்.
வந்த புதிதில் அமிர்தா அவர்கள் வீட்டிற்குள் போனாலே, “இங்கெல்லாம் வராதே!” எனக் கண்டித்து அனுப்புவார். அந்தப் பையன்தான் சாக்லேட் கொடுத்து அனுப்புவான். அதற்கே மகனை முறைத்துப் பார்ப்பார் அப்பெண்மணி. அதற்கெனவே அவர்களிடம் பேசியதில்லை. பெரியம்மா இருந்தவரை ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவார். அவர்தான் அவனது பெயரையும், கல்லூரி செல்கிறான், மரியாதையான பையன் என்றும் கூறினார்.
பெரியம்மாவைப் பற்றி நினைத்ததும் ஃபோன் வந்தது அவரிடமிருந்து.
புன்னகை மிளிற, “உங்களப்பத்தி நெனச்சுட்டே இருந்தேன். கூப்புட்டீங்க! ஆயுசு நூறு!” என்றாள்.
“இன்னைக்கி சன்டேவாச்சே. இப்பதான் எந்திரிச்சிருப்பேன்னு தெரியும். அதே மாதிரிதான் காபியும் கையுமா நிக்கிற!” என்று சொல்ல இவளும் அசட்டு சிரிப்பு சிரித்தாள். அடுத்தடுத்து வழக்கமான நலம் விசாரிப்புகள்.
“பாட்டியும், தாத்தாவும் வந்திருப்பாங்க போல. ஜாலிதான் உனக்கு!” என்று கூறி கிண்டல் செய்ய,
“உங்கம்மாவை நீங்க தான் மெச்சுக்கணும்” என்று நொடித்தாள்.
“சின்னப்பிள்ளை இருக்குற வீட்ல பெரியவங்க இருக்கறது எவ்வளவு ஒத்தாசை தெரியுமா?” என்று கேட்க, அவளுக்கும் எது எந்தளவிற்கு சரியெனப்பட்டது. இல்லையென்றால் முன்தினம் அமிர்தாவையும் கூடவே அழைத்துச் சென்றிருக்க வேண்டும். இவர்கள் இருந்ததால் தான் அவளால் நிம்மதியாக வீட்டில் விட்டுச் செல்ல முடிந்தது. அவரது அம்மாவும், அப்பாவும், சென்னை வந்ததில் வந்தனாவிற்கும் நிம்மதிதான். ஒத்தையில் விட்டுச் செல்கிறோமே என உழன்று கொண்டிருந்தார். எல்லாம் அக்காவும், தங்கையும் முன்னமே பேசி முடிவெடுத்திருப்பார்கள் என இவளுக்கும் தெரியும்.
அமிர்தா ஃபோன் செய்யவில்லை என்றாலுமே மகளுக்கும், பேத்திக்கும் துணையாக இவர்களை ரயிலேற்றி விட்டிருப்பார் கலையரசி. மகளிடம் பேசுவதுதான் இல்லையே ஒழிய, பேத்தியிடம் பேசும் பொழுதெல்லாம், “என்ன பண்றா உங்கம்மா” பட்டும்படாமல், விட்டேத்தியாக மகளைப்பற்றிய விசாரிப்பு இல்லாமலிருக்காது.
பெரியம்மாவிடம் அண்ணனுக்குப் பிறந்த குழந்தையை நலம் விசாரிக்க, ஸ்கைப்பில் காண்பித்தார் வந்தனா. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தது. தெய்வீகச் சிரிப்பு என்பதுபோல் தெய்வம் துயில் கொண்டால் இப்படித்தான் இருக்குமோ என எண்ணவைத்தது குழந்தையின் ஆழ்ந்த உறக்கம். சின்ன அண்ணி மிருதுளாவிடமும் பேசினாள். அவள்தான் இவளிடம் சரியாகப் பேசவில்லை. என்னமோ பெரிய தியாகி மாதிரி உன் குழந்தையை கொடுப்பதாகச் சொன்னாயே? இப்ப எனக்கே குழந்தை வந்துவிட்டது பார் எனும்படி இருந்தது அவள் பேச்சும், தோரணையும். இவள் கண்டுகொள்ளவில்லை. அவளா கொடுப்பதாதச் சொன்னாள்.
அன்றைய சூழ்நிலையில் இவள் பேசும் நிலையில் இல்லை. பெரியவர்கள் கேட்கும் நிலையிலும் இல்லை. இவள் வாழ்வை சிறக்க வைக்க வேண்டும் என்பதே ஒரே குறிக்கோளாக இருந்தது அவர்களுக்கு. அதுக்கு இடையூறாக இருந்தது அவளது குழந்தை. பெரியவர்களாகத் தங்களுக்குள் பேசி எடுத்த முடிவு, திருமணம் முடிந்து சில வருடங்கள் கடந்தும், சிகிச்சைகள் பல மேற்கொண்டும், பிள்ளை தங்காத சின்ன அண்ணனுக்கு தத்துக் கொடுப்பதாக.
பேசிக் கொண்டே சிந்தனை வலையில் சிக்கியவள், காஃபியை குடித்து முடித்தாள்.
பெரியம்மாவும் அவர்களை எங்கே எனக் கேட்க, தெரியவில்லை என்றாள்.
“சிட்டிக்குள்ள எங்கேயாவது வழி தெரியாமப் போயிறப்போறாங்க பழனி” என்று வந்தனா கவலையாய்க் கேட்க,
“கவலைப் படாதீங்க பெரியம்மா! உங்க அம்மாவும், பேத்தியும் சென்னையவே பேரம் பேசி, யாருக்காவது கூறுபோட்டு வித்துட்டுத்தான் வீட்டுக்கு வருவாங்க. நான் ஆயக்குடிகாரியாக்கும்னு சொல்லியே வீடு வந்து சேந்துருவாங்க. எங்க தாத்தாவை தொலைக்காம பத்திரமா கூட்டியாறணும். அதுதான் என்னோட ஒரே கவலை” என்று சொல்ல,
“இரு.. உங்கம்மாச்சிகிட்ட சொல்றேன்!”
“சொல்லுங்க எனக்கென்ன பயமா?” என்று சிரித்தாள். சிறிது நேரம் மற்ற விஷயங்களைப் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.
வெளியே சென்றவர்கள் வரும்போது வரட்டும் என்று குளிக்கச் சென்றாள். அவர் வரும் வரை குளிக்காமல் இருந்தால், அதற்கும் ஒரு பாட்டு விழும் அய்யம்மாவிடமிருந்து.
அவள் குளித்து வரவும், வெளியே சென்றவர்கள் வீடு வருவதற்கும் சரியாக இருக்க, ‘ஜஸ்ட் மிஸ்’ மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.
மூவர் நெற்றியிலும் சந்தனம், குங்குமம் இருக்க, இன்று என்ன விசேஷம் என சிந்தனை ஓடியது அவளுக்குள். இவர்களது பிறந்தநாளும் இல்லை. வருடக் கடைசியில் தான் தாத்தாவிற்கு எண்பது வயது பூர்த்தியாக பழனி கோவிலில் வைத்து சதாபிஷேகம் நடந்தது.
வேறு யாருடைய பிறந்த நாளும் இல்லை. ஆடிமாதமென்பதால் எவருக்கும் திருமண நாளும் இல்லை. வேறென்ன விசேஷம் என கைபேசியை எடுத்து ஏதாவது ரிமைன்டர் தவறிவிட்டதா என அவசரமாகப்பார்த்தாள். அப்படி எதுவும் இல்லாமல் போக, அடுத்து, தமிழ் நாட்காட்டியைத் திறந்து பார்த்தாள். பண்டிகை நாளாக இருந்து அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டதோ என்றொரு அங்கலாய்ப்பு தான். வேறென்ன?
எதுவும் விசேஷமாக இல்லை. அசோசியேஷன் க்ரூப் சாட்டை திறந்து பார்க்க, அதிலும் எந்த அறிவிப்பும் இல்லை. என்னவோ இருந்துட்டுப் போகட்டும். பெருசுக ரெண்டும் ரொம்பத்தான் பண்றாங்க. அவங்களோட சேந்துக்கிட்டு இந்த பொடுசு அட்டகாசமும் தாங்கல. மனதிற்குள் பொறுமிவிட்டு,
“தாத்தா! காலையில சாப்பிட என்ன பண்ணட்டும். இட்லியா, தோசையா?” எனக் கேட்டுக் கொண்டே அடுக்களை செல்ல முயல,
“நாங்கெல்லாம் இட்லி, பொங்கல், வடை, கேசரியோட விருந்தே சாப்பிட்டாச்சு!” ஜம்பமாகச் சொன்னார் அய்யம்மா.
“அடப்பாவிங்களா? இங்க ஒருத்தி இருக்கிறதே மறந்துட்டு விருந்துக்குப் போயிட்டு வந்துருக்கீங்க அப்படி எங்கதான் போனீங்க? ஆமா… இதென்ன?” அவர்கள் கையில் கொண்டு வந்த கேரியரை வாங்கி திறந்தாள். ஒவ்வொரு அடுக்கிலும் இட்லி, பொங்கல், சாம்பார், வடை கேசரியோடு தனித்தனியாய் இருக்க, திறந்தவுடன் வாசனை, வயிற்றை புதுப் புருஷன் போல் செல்லமாய் நிமிண்டியது.
“இதென்ன எனக்கும் வாங்கிட்டு வந்தீங்களா? ஏன் பாட்டி இப்படி அசிங்கப் படுத்தறீங்க. நீங்க போனா நீங்க மட்டும் சாப்பிட்டு வரவேண்யது தானே? அப்படி என்னதான் விசேஷம். யார் வீட்ல?”
“நீ மட்டும் வரலைன்னு அக்கறையாக் கொடுக்கும் போது வேண்டாம்னு சொல்ல முடியுமா?”
“என்ன விசேஷம்னு தெரியாது. எங்க போனீங்கன்னும் தெரியாது. அப்படி யாரு, என்னைக் கூப்பிடாம உங்களை மட்டும் ஸ்பெஷலா அழச்சது? எம்மேல அக்கறைப்பட்டு கொடுத்துவிட்டது யாரு?” என்று அய்யம்மாவைப் பார்க்க, அவர் வேலாயுத்தைப் பார்க்க, நீயாச்சு, உம்பேத்தியாச்சுனு இவர் பக்கம் திரும்பவேயில்லையே மனுஷன். அவர் உசுரு அவருக்கு முக்கியமா இல்லையா?
மகள் முகத்தைப் பார்த்து, ‘எங்கே போனீங்க?’ எனும் பாவனையில் புருவம் சுருக்கி, முகத்தை மட்டும் தூக்கி வினவ, அமிர்தா தன் கொள்ளுப்பாட்டியைப் பார்க்க, அவரோ சொல்லாதே என கண்ணைக் காட்ட,
“பாட்டி இதென்ன கெட்ட பழக்கம். சின்னப் பிள்ளைகிட்ட சொல்லக் கூடாதுன்னு ஜாடைகாட்டி பொய் சொல்லச் சொல்றது?” பொறுமை பறந்தது அவளிடம்.
“சொல்லாதேன்னு சொல்றதும், பொய் சொல்றதும் ஒன்னா?” அவரும் எகிற,
“மறைக்கறதும், பொய் சொல்றதும் ஒன்னுதான்!”
“அதை நீ சொல்றியா? முழு பூசணிக்காயை சோத்துல… இல்லயில்ல வயித்துல மறைச்சவளாச்சே!” அய்யம்மாள் குதர்க்கமாய் இடித்துரைக்க, சுர்ரென கோபம் தலைக்கேறியது. சாப்பிடாத வெறும் வயிறு வேறு, இன்னும் கொஞ்சம் சாம்பிராணி போட்டது.
“நான் எதையும் மறைக்கல! என்னமோ தெரிஞ்சு பண்ணதாட்டம் எல்லாரும் என்னையே குத்தம் சொல்றீங்க. உங்க மக என்னடான்னா, நானா தேடிப்போனதாட்டம், இன்னும் எங்கிட்ட பேசக்கூட மாட்டேங்குறாங்க. எல்லாம் பெரியவங்கதானே ஒவ்வொன்னும் பாத்துப்பாத்து ஏற்பாடு பண்ணீங்க! கடைசில மொத்தமா எந்தலையில ஏத்திட்டீங்க!” படபடவென பொறிந்தவளுக்கு அதற்குமேல் தாளமுடியாமல் தொண்டை அடைத்தது.
எல்லாம் அவளை மீறி நடந்த செயல். அவளை மட்டும் குற்றம் சுமத்தி இத்தனை வருடம் சென்ற பிறகும் தன்னொடு அம்மா பேசுவதில்லையே என்ற ஆதங்கம். உடல் வேதனையும், மனவேதனையும் ஒரு சேர அனுபவித்தது அவள்தானே. ஏதோ கொலைக்குற்றம் செய்தது போல் தன்னையே சாடினால் எப்படி? முகம் கன்றிச் சிவந்து, இப்பவோ அப்பாவோ என கண்ணீர் முட்டிக் கொண்டு நிற்க, அதைப் பார்த்த மகள் ஓடிவந்து அம்மாவின் காலைக் கட்டிக் கொண்டாள்.
பெரியவர்கள் வந்ததிலிருந்து சாடைமாடையாக ஆற்றமாட்டாமல் ஏதாவது சொல்வதும், அதற்கு அவளையும் மீறி பழனி கண்கலங்குவதும் பார்த்தவளுக்கு, எதுவும் புரியவில்லை என்றாலும், இவர்கள் பேசினால் அம்மா கண் கலங்குது கூடவா புரியாமல் போகும். கண்ணீர் முகத்தை மகளுக்கு காட்ட விருப்பமில்லாமல் முயன்று இமைகளைச் சிமிட்டி உள்ளிழுத்துக் கொண்டாள். அப்படியிருந்தும் மகள் கண்டு கொண்டாள்.
அவர்களுக்கும் அவளைப் பேச வேண்டும் என்று ஆசையா என்ன? பேத்தி இந்த வயதில் தனித்திருப்பதைப் பார்க்க, தாளமாட்டாமல் அவரையும் மீறி வார்த்தைகளில் வெளிப்பட்டு விடுகிறது.
“பாட்டீ! நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு போங்க. வந்ததுலருந்து ஏதாவது சொல்லி அம்மாவை அழவச்சுட்டே இருக்கீங்க!” என்றவள்,
“டோன்ட் க்ரை ம்மா!” என்று எக்கி கண்ணீரைத் துடைக்க முயல, அவளுக்கு எட்டவில்லை.
மூச்சை இழுத்து, தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவள் தன் பலவீனமான முகத்தை மகளுக்குக் காட்ட விரும்பாமல், மகள் முன் மண்டியிட்டு அமர்ந்து, கண்ணடித்து, நுனி நாக்கை ஆட்டி, உல்லலாய்க்கு என்று சொல்ல,
“சீட் பண்றியாம்மா!” என்றாள் ரகசியமாக.
பழனியும் அதே போல் சன்னக்குரலில், “ஆமா அம்மு! சும்மா உங்க பாட்டி வஞ்சுக்கிட்டே இருக்காங்களா? அதான், அவங்கள பயமுறுத்த அம்மா அழற மாதிரி ஆக்ட் பண்ணேன். நீயும் ஏமாந்துட்டியா?” எனக் கேட்டு கண்சிமிட்டி சிரிக்க, கண்கள் எட்டாத அந்த வெற்றுச்சிரிப்பு மகளுக்காக மட்டுமே எனத் தெரியாதா என்ன? இதைப் பார்த்த அய்யம்மாவுக்கும் மனம் தாளாமல் கண் கலங்கியது.
அத்தனை எளிதில், இப்படி உடைபவள் இல்லை பழனி. இந்த ஒரு வாரமாகத்தான் அவளது உறுதி சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணம் அவன் ஒருவனாக மட்டுமே இருக்க முடியும். இத்தனைக்கும் இவள் பக்கம் தன் பார்வையைக் கூடத் திரும்பவில்லை. தான் உண்டு தன் வேலையுண்டு என்றுதான் இருக்கிறான். இவள்தான் அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம், தன் உணர்வுகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் தவித்துப் போகிறாள். சட்டையைப் பிடித்து உலுக்கும் அளவிற்கு ஆத்திரமும், கோபமும் கழுத்து வரை இருக்கிறது. அந்தக் கோபமும், ஆற்றாமையும் அவளையும் மீறி அழுகையாக வெடித்து விடுகிறது. மகளிடம் காட்ட விரும்பாமல், இரவு தனிமையில் தலையணையிடம் மட்டுமே ஆறுதல் தேடுகிறாள்.
காலிங் பெல் அடிக்க, முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு, எழுந்து சென்று கதவைத் திறந்தாள். செக்யூரிட்டி கையில் ஃப்ளாஸ்க்கோடு நிற்க, என்னவெனப் பார்த்தாள்.
“பாட்டி ஃப்ளாஸ்க்க மறந்து வச்சுட்டு வந்துட்டாங்களாம். சார் கொடுத்து விட்டாங்க மேடம்!” என்று கையில் கொடுக்க, அதைப் பார்த்த அய்யம்மா,
“போச்சு… கெரகம் புடுச்ச நாரை கெளுரப்புடிச்சு முழுங்குச்சாம். வேண்டாம்னு தானே வச்சுட்டு வந்தேன். இப்ப வேப்பிலையில்லாம ஆடுவாளே!” என உள்ளுக்குள் பதற, ஃப்ளாஸ்க்கை திறந்து பார்த்தவளுக்கு, இவர்கள் எங்கு சென்று வந்திருக்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லியது ஃப்ளாஸ்க்கில் இருந்த சூடான, மணமான கருப்பட்டி காஃபி. திறந்து பார்த்தவுடன், அதைவிட அதிகமாக கொதித்தவள், திரும்பிச் சென்ற செக்யூரிட்டியை எட்டி வேகமாக அழைத்தாள்.
அவரும் திரும்பி வர, “சாப்பிட்டீங்களா செக்யூரிட்டி?” என்று கேட்க,
“நானும் இப்பத்தான் சீனி சார் வீட்ல சாப்பிட்டேன் மேடம்!” என்று கூற,
“இந்தாங்க… சூடா பொங்கல், வடையெல்லாம் இதுல இருக்கு. வெளியே கேட்டுக்(gate) கிட்ட யாராவது தானம் கேக்குறவங்க இருந்தா கொடுத்திருங்க!” கேரியரை எடுத்துக் கொடுத்தவள், ஃப்ளாஸ்க்கையும் கையோடு கொடுத்துவிட்டாள்.
பேத்தியின் செய்கையைப் பார்த்தவர், “பழனி என்னடியிது? இன்னும் எத்தனை நாளைக்கி இப்படியே…” என்று முடிக்குமுன்,
“நீங்க எதுக்கு வந்துருக்கீங்கன்னு நல்லா புரிஞ்சு போச்சு. கருப்பட்டி காபிக்கு ஸ்கூல்ல என்ன வேலைன்னு அப்பவே நெனச்சேன். உடனே ஊருக்கு கெளம்புங்க” என்றவள் வேகமாக மகளை உள்ளே இழுத்துச் சென்று கோபமாக, கதவை அடித்துச் சாற்றினாள்.
வேலாயுதம் மனைவியைப் பார்க்க, உடனே ஃபோனில் அழைப்பு விடுத்தார் அய்யம்மா.
எதிர்முனை அழைப்பை ஏற்க, “நான்தான் எதுவும் கொடுக்க வேண்டாம்னு சொன்னேனேப்பா. இப்பப் பாரு. எங்களை ஊருக்கு போகச் சொல்லிட்டு கதவைச் சாத்திக்கிட்டா. சாப்பிடக்கூட இல்ல. இன்னைக்கு முழுசும் சாப்பிடமாட்டா. வீம்பு புடிச்சவ சீனி! ஒரு சொல் பொறுக்கமாட்டாப்பா” என்று சொல்லும் பொழுதே தொண்டை கமறியது அய்யம்மாவிற்கு.
அதுதான் அவனுக்கே தெரியுமே! தனது ஒற்றைச் சொல் தானே அவனிடமிருந்து அவளை விலக்கி வைத்திருக்கிறது.
மனம் கனக்க, “ஏற்கனவே ரொம்ப லேட்டாயிருச்சு பாட்டி. கண்ணுல படாம இருந்தவரைக்கும் எப்படியோ? இனியும் என் பிள்ளையை விட்டு இருக்க முடியாது!” என்றவன் பதிலும் ஆயாசமாக வந்தது.
“இப்பவும் உன் பிள்ளையைப் பத்தி மட்டும்தானே யோசிக்கிற. எங்க வீட்டுப் பிள்ளையைப் பத்தி யோசிக்கல பாத்தியா?”
“அதுதான் பாட்டி நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு. காலமும், சூழ்நிலையும் அப்படி அமஞ்சு போச்சுன்னு, காலத்து மேல பழி போட விரும்பல. அதுக்கு அவ என்ன பனிஷ்மென்ட் கொடுத்தாலும் ஏத்துக்கத் தயாராத்தான் இருக்கேன்!”
“அவ கண்ல மட்டும் பட்டுறாதே. பொசுக்கிறுவா!”
“ஒரே அபார்ட்மெண்ட்ல இருந்துக்கிட்டு, ஒரே ஸ்கூல்ல வேலை பாத்துக்கிட்ட கண்ல பட்றாதேன்னா எப்படி பாட்டி? டீச்சர்கிட்ட அடி வாங்க நான் ரெடியாத்தான் வந்திருக்கேன்!” என்றவன் வாய்விட்டு சிரித்தான்.
அன்று, வண்டிச் சாவியை எடுத்துக் கொடுத்த பொழுது நன்றி சொல்லி புன்னகைத்த பிள்ளையின் தலை கோத விழைந்த கைகளை, உனக்கு என்ன உரிமையிருக்கு என்று மனசாட்சி குட்டுவைக்க, முயன்று அடக்கிக் கொண்டான். அன்று மதியம் மகள், அம்மாவிற்கு ஊட்டிவிட்ட உருளைக்கிழங்கின் சிறு வில்லைக்கு அவன் மனம் எத்தனை ஏங்கியதென்று அவனுக்குத்தானே தெரியும். கை சேர்ந்த சொர்க்கத்தை நழுவ விட்டவனின் வலி அவன் கண்களில் நீர்ப்படலமாக.
“ஆன்கர் ஃப்ரூட்டி!” என்றது மனம் உள்ளுக்குள் வலியோடும், முகத்தில் புன்னகையோடும்.
நிலவு தூங்கும் நேரம்
உன் நினைவு தூங்கிடாது
உறவுகள் தொடர்கதை
தினம் தினம் வளர்பிறை…

Super
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫