29
கவிதையாய் விடிந்தது அந்த விடியல் சீனிக்கு. பழனியின் கழுத்தைக் கட்டிக் கொண்டு, இலேசாக செப்பு வாய் பிளந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகளை, வளைத்து அணைத்துப் பிடித்திருந்தது பழனியின் இடக்கரம். பார்த்தவன் முகம் கனிந்து, சிறு புன்னகை விரிந்தது இதழ்களில். மகளைப் பார்த்து ரசித்தவன் மனம் தூங்கும் பிள்ளையை ரசிக்கக் கூடாதென அறுவுறுத்த, பார்வை பக்கத்தில் படுத்திருந்த பாவை முகத்தில் படிந்தது.
தூக்கத்தில் கலைந்த முடி, ஓவியனின் ஒற்றைத் தீற்றலாய் ஆங்காங்கே முகத்தில் படர்ந்து கிடக்க, காதோரம் ஒதுக்கிவிடத் துடித்த மனதை அடக்க வெகுபாடு பட்டான். திருமணத்திற்கு முன்பே அத்தனை தூரம் உரிமை எடுத்துக் கொண்டவன், உடமைப்பட்டவளிடம், இப்பொழுது உரிமையெடுத்துக்கொள்ள அவ்வளவு தயங்கினான். முன் வினைப்பயன், வேறென்ன சொல்வது. இப்போ அதுக்கெல்லாம் அடுத்த ஜென்மம் வரை காத்திருக்கத் தேவையில்லை போல. இன்ஸ்டன்டாக இந்த ஜென்மத்திலேயே பலன் கிட்டிவிடுகிறது.
எல்லாம் கடந்து வந்துவிட்டதாலோ என்னவோ பழனி முகம் நிச்சலனயமாயிருக்க, அப்பொழுதுதான் எல்லாம் அறிந்தவன் மனம் வெகுவாகக் கனத்துக் கிடந்தது. நடந்த எதையும் மாற்ற முடியாது. ஆனால், இனி நடப்பவைகளை நல்லவையாக அமைத்துக் கொள்ள முடியுமே.
அதே நம்பிக்கையில் புதிய விடியலை நம்பிக்கையோடு எதிர் கொண்டான் சீனி.
இரவு, “மன்னிச்சுறுன்னு சொல்லி, ஒரு வார்த்தையில எதையும் சரிக்கட்டிவிட முடியாது பழனி. நானும் மன்னிப்பும் கேட்கப் போறதில்ல. உன்னைப் பாத்த அன்னைக்கே மனசுக்குப் பிடிச்சுப் போச்சு. அது வெறும் பிடித்தமா, காதலான்னு உணர்றதுக்குள்ள எனக்கு நீ ஈஸியாக் கெடச்சுட்டதால, உன்னோட அருமை தெரியாமப் போச்சோ என்னவோ. இன்னும் நமக்கு காலம் இருக்கு பழனி. நீயும், அம்முவும் எனக்கு எவ்வளவு முக்கியம்கறதை வாழ்ந்துதான் காட்டணும்!” என்றவன் வார்த்தைகள் சொல்லொணாத் துயரத்தை சுமந்திருந்தது.
கட்டிலில் அவள் அமர்ந்திருக்க, அவள் முன் கால் மடக்கி, அமர்ந்திருந்தவன் கண்கள் தாங்கொனா வேதனையில் கலங்கிச் சிவந்திருந்தது. சிவப்பேறிய கண்களோடு அவளும் அவனையே பார்த்திருக்க, அவளது கரத்தை அழுத்திக் கொடுத்தவன், மென்மையாக புறங்கையில் இதழ் பதித்தே விடுவித்தான்.
தூக்கத்தில் அமிர்தா புரண்டு படுக்க, அவளை விட்டு எழுந்தவன், “நீ படுத்துக்கோ. அம்மு, எந்திரிச்சுக்கப் போறா! மறுபடியும் முடி எப்போ முளைக்கும்னு ஆரம்பிச்சுருவா” என்றதில், இறுக்கம் தளர்ந்து இருவர் முகத்திலும் சிறிய கீற்றாய் புன்னகை படர்ந்தது.
தெய்வம் கொடுக்கத் தவறிய வரத்தைக்கூட, சில சமயங்களில் குழந்தைகள் கொடுத்து விடுகின்றன. இவ்வளவு நேரமாக அழுது வடிந்தவர்கள் முகத்தில் மகளின் பேச்சு சந்தோஷச்சாரலை தெளித்துச் சென்றது.
மகளுக்கு அணைவாகப் போட்டிருந்த தலையணையை எடுத்து, மகளுக்கு அடுத்துப் போட்டுவிட்டவள், அலமாரியில் இருந்த போர்வை ஒன்றையும் எடுத்து தலையணை மீது போட்டாள். கட்டிலின் மத்தியில் படுத்திருந்த பிள்ளையைத் தன் பக்கமாக இழுத்து, அணைத்துப் படுத்துக் கொண்டாள்.
அவளது செய்கை, அவனுக்கும் அவர்கள் கூட்டிற்குள் இடம் ஒதுக்கிக் கொடுத்ததை உணர்த்தியது. அவனே கட்டிலில் படுத்திருந்தாலும் அவள் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் அவளே அனுமதித்ததில் மனபாரம் குறைந்தவனாக, பக்கத்தில் படுத்து மகளின் முடியற்ற தலையை வருடிக் கொடுத்தவன், எக்கி முத்தம் ஒன்றை வைத்தான்.
தூங்கும் முன்பு கூட கண்ணாடியில் பார்த்து “என் ஹேர் எல்லாம் போச்சு!” என்று சுணங்கிய மகளை, “தூங்கி எந்திரிச்சா முடி மொளச்சுருக்கும். பேசாம படுடீ!” என்று பழனி அதட்டியதற்கு,
“ப்ராமிஸ்!” என்று பழனியிடம், உறுதி மொழி கேட்டவள், சீனியிடமும், “சீனிப்பா… நெஜமா மொளச்சுருக்குமா?” என்று அவளை நம்பாமல் தன்னிடமும் உத்திரவாதம் கேட்ட மகளின் செய்கையை நினைத்துப் பார்த்தவனுக்கு புன்னகை தன்னால் விரிந்தது.
மகளை முத்தமிட்டவன் முகம் மென்மையாக இளகியதை விழியகற்றாமல் பார்த்திருந்தாள். வெகு நெருக்கத்தில் அவனது முகம். மகளை முத்தமிட்ட மூச்சுக் காற்று இவளையும் உரசிச் சென்றது. அவள் பார்வை தன்னையே பார்த்திருக்க, இவனும் பார்வையை அவள் முகத்தில் நிலைக்க விட்டான். பார்வைகள் ஒன்றையொன்று கவ்விக் கொள்ள, மகளை முத்தமிட்டு எழுந்தவன் இதழ்கள் ஒரு கணம் தாமதித்து, பெற்றவள் நெற்றியிலும் அழுந்தப் பதிந்தே எழுந்தது. இதழ் பதிந்த இடம், வெம்மை பரப்பி, புருவ மத்தியில் குறுகுறுத்தது. சட்டென அவனது செய்கை, இறுகிய அவளது உணர்வுகளை மெல்ல கட்டவிழ்க்க, மெல்லிய சிலிர்ப்பு மேனியில் ஓடி மறைந்தது. விழி விரித்து அவனையே பார்த்திருந்தாள்.
“ரொம்ப யோசிக்காமத் தூங்கு! வேணும்னா உனக்கு பெட் டைம் ஸ்டோரி சொல்லவா?” என்று கேட்டவனை, கூடுமானவரை முறைத்து பார்த்து விட்டு, படக்கென கண்களை மூடிக் கொண்டாள்.
சன்னமான சிரிப்பொலி அவனிடம். மனம் இலேசானது போல் இருக்க, பக்கத்தில் படுத்துக் கொண்டான். வெகு நாட்களுக்குப் பிறகு, அலைப்புற்ற மனதிற்கு, நித்ரா தேவி கருணை காட்ட, ஆழ்ந்த உறக்கம் இருவருக்கும்.
விடிந்து வெகு நேரமிருக்கும். பகலவன் ஒளி பளிச்சென அறை முழுவதும் வியாபித்திருந்தது. அப்பொழுது தான் கவனித்தான் தனது கரமும், பிள்ளை மீதிருந்த அவளது கரத்தின் மீது படிந்திருந்ததை. எடுக்க மனமில்லை. இருவருக்கும் நடுவில் பிள்ளை. பிள்ளைமீது அவளது கரம். பெண்ணவள் கரத்தின் மீது இவனது கரம். அக்கணத்திலேயே மனம் லயித்து நின்றது. அமிர்தாவிடம் அசைவு தெரிய, கண்களை மூடிக் கொண்டான்.
இன்னும் பழனி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அமிர்தாவிற்கு விழிப்பு தட்டிவிட்டது.
இருவரது கையையும் எடுத்துவிட்டு எழுந்து கொண்டவள், மறுபடியும் அதே போல், அவனது கரத்தின் மீது இவளது கரத்தை வைத்துவிட்டு எழுந்து கொண்டாள். இவன் மீது கையை ஊன்றி தாண்டிச் சென்று கட்டிலை விட்டு இறங்கியவள், கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்றவள் மறுபடியும் கதவை மூடிவிட்டாள். மகளின் செய்கை சிரிப்பை வரவழைத்தது சீனிக்கு.
கண் திறக்காமல், ‘மை ஸ்வீட் சுகர் பேபி!’ என இதழ் விரிந்த புன்னகையோடு பிள்ளையை மெச்சிக் கொண்டான்.
அம்மாவிற்கு முன்பே எழுந்துவிட்டால், அவளை தொந்தரவு செய்யாமல், சப்தமில்லாமல் வெளியே சென்றுவிடுவாள் அமிர்தா. இது எப்பொழுதும் நடப்பதுதான்.
இப்பொழுது இருவருக்கும் இடையே பிள்ளைகூட இல்லை. இடைவெளி மட்டுமே. கட்டில் இவ்வளவு பெரியதாக இருந்திருக்க வேண்டாம். மனம் வெகுவாக நொடித்துக் கொண்டது.
‘கார் சீட்டளவு இருந்திருந்தா, நமக்கு சௌகர்யமா இருந்திருக்கும்ல?’ என்ற மனசாட்சி அவனை கேலி செய்ய, மந்தகாசமாய் குறு நகை இதழில் தவழ, ‘இருந்தாலும் உனக்கு இவ்வளவு ஆகாதுடா’ என்று குமட்டில் இடித்தது.
தூங்கும் பிள்ளையை ரசிப்பது தவறு என்றால், தூங்கும் பதுமையை ரசிக்கவில்லை என்றால் அது மாபெரும் தவறாயிற்றே. விழியகற்றாமல் பார்த்திருந்தான் வஞ்சியவள் பூ முகத்தை. படுக்கும் முன் நகைகளை கழட்டி வைத்திருக்க, கழுத்தைத் தழுவிக் கிடந்தது அவன் அணிவித்த தாலிக்கொடியும், வாடிய மல்லிச்சரமும் பின்ணிப் பிணைந்து கும்மாளமிட்டபடி. குடை ஜிமிக்கி, கன்னத்தோரம் முத்தமுட்டபடி இவனைப் பார்த்து எள்ளிநகையாடியதில் குடை சாய்ந்தது மன்னவன் மனது. மூச்சுக்காற்று அனலடித்தது. ஒற்றைக்கல் முக்குத்தியோடு மூக்கின் நுனி பளபளக்க, செல்லமாகப் பிடித்து ஆட்டிக் கொஞ்சத் தோன்றியது. காற்றில் முடி அசைந்தாடி கன்னம் வருடியதில் சுழித்த புருவத்தை நீவிவிட மனம் துடித்தது. அவளிடம் அசைவு தெரிய கண்களை படக்கென மூடிக் கொண்டான். அவளுக்கும் விழிப்பு வந்துவிட்டது. கண்களைத் திறந்து பார்க்க, இருவருக்கும் இடையே அமிர்தா இல்லை. எழுந்து கீழே போயிருப்பாள் என்று நினைத்தவள் பார்வை, தன் கண்முன் நெரிந்த அவனது முகத்தில்தான் நிலைத்தது. அவன் கரத்தின் மீதிருந்த தன் கரத்தைப் பார்த்தவளுக்குள் சிறு அதிர்வு. எடுப்பதா வேண்டாமா என்றொரு தயக்கம்.
இரவு, சிறு பிள்ளை போல் இடையைக் கட்டிக் கொண்டு உடைந்தவன் தோற்றம் கண்முன் வர, மெதுவாக கையை வருடிக் கொடுத்துவிட்டே எழுந்து கொண்டாள். வரண்ட தாகத்தில் இருந்தவன் நாக்கின் நுனியில் சிறு துளி நீராய் அவளது செய்கை. இது போதும் என்றிருந்தது அவனுக்கு. முடியை ஒன்று சேர்த்து கிளிப்பில் அடக்கியவள், குளியலறைக்குள் நுழைந்து கொள்ள, திரும்பிப் பார்த்தவன் முகத்தில் உணர்வுக் கலவை.
தூக்கம் கலைந்து விட்டது. ஆனால் எழுந்து கொள்ள மனம் வரவில்லை. அன்று அவள் சொன்ன வார்த்தைகள் எல்லாம் இன்றும் மனதில் எதிரொலிக்கிறது. எப்படி இதை கையாள்வது என்றும் புரியவில்லை. மீண்டும் ஒரு முறை அவள் உணர்வுகளோடு விளையாடிப் பார்க்கும் துணிவும் அவனுக்கில்லை. ஆற்றாமையோடு பெருமூச்சொன்று வெளிப்பட்டது அவனிடம்.
கதவு திறக்கும் சப்தத்தில் அவனும் எழுந்து அமர்ந்தான். முகம் கழுவி வந்தவள், “எந்துருச்சுட்டீங்களா? காஃபி வேணுமா?”
“இல்ல… லேட்டாயிருச்சு. ஒரேடியா குளிச்சுட்டு போய் சாப்பிட்டுக்கலாம். பசிக்குது!” என்றான். நேரம் காலை ஒன்பது மணி.
அலமாரியிலிருந்து துண்டை எடுத்து கொடுக்க, வாங்கிக் கொண்டு, குளிக்கச் சென்றான். குளித்து முடித்து வெளியே வர, “நீங்க கீழே போறதுன்னா போங்க. நானும் குளிச்சிட்டு வர்றேன்!” என்றவளிடம்,
“இல்ல… நீயும் குளிச்சுட்டு வா! இலக்கியா பத்திப் பேசணும்!” என்று சொல்ல புரியாமல் பார்த்தாள். அவளைப் பற்றிப் பேச என்ன இருக்கிறது.
“நல்ல விஷயம் தான். சீக்கிரம் வா!” என்று சொல்ல, குளித்து வந்தவள், நைட்டியில் வெளிவந்தாள்.
அவள் எடுத்து வைத்த புடவை கட்டிலில் கிடந்தது. இப்பொழுதுதான் தன்னை எதற்காக, முன்பே கீழே போகச் சொன்னாள் என்று புரிந்தது.
“நீ ட்ரெஸ் மாத்திட்டு வா! நான் கீழே போறேன்!” என்று எழுந்து கொள்ள, நீ அம்புட்டு நல்லவனாடா என்றது மைன்ட் வாய்ஸ்.
“சாப்பிட்டு வந்து மாத்திக்கிறேன். நீங்க என்னமோ பேசணும்னு சொன்னீங்களே!” என்றவளிடம்,
“ராகவன் அக்காவைப் பத்தி என்ன நினைக்கிற?” என்றான்.
“ஏன் அவங்களுக்கென்ன?”
“தண்டபாணிக்கு கேக்கலாம்னு ஒரு ஐடியா?”
“இந்த வேலை எப்ப இருந்து?” அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்து கேட்க.
“உங்க அண்ணன் அந்தப் பிள்ளைய பாக்க ஆரம்பிச்சதுலருந்து தான்!” என்றான் அவனும் நக்கலாக.
வியந்து பார்த்தவள், “யாரு, தண்டமா?” என்றாள் பட்டென. அவன் சிரிக்க, “எங்க அண்ணன் அப்படியெல்லாம் கிடையாது? அவன் நீங்க நினைக்கிற மாதிரி ஆளில்லை!” என்றாள் உதடு சுழித்து, அவன் ஏதோ விளையாடுவதாக எண்ணிக்கொண்டு. அவளது உதட்டுச் சுழிப்பை பார்வையால் தீண்டிவிட்டு,
“நான் நினைக்கிற மாதிரி ஆள் இல்லைன்னா வேற எந்த மாதிரி! ராகவனை முறைச்சுக்கிட்டே திரியுறாப்லயே, ஒரு வேளை அந்த மாதிரியோ!” அவள் பக்கமாகக் குனிந்து ரகசியக் குரலில் கண் சிமிட்டிக் கேட்க, அவன் செய்கையில் மனம் சிக்கித்தவித்தது ஒரு கணம். படபடப்பாக உணர்ந்தவள், அப்பொழுதுதான் அவன் கேட்டதன் அர்த்தம் புரிய, “உங்களை” என பல்லைக் கடித்து முறைத்துப் பார்த்தாள்.
“எனக்கென்னமோ, தண்டபாணிக்கு இலக்கியா மேல ஒரு கண்ணோன்னு தோணுது!” என்று சொல்ல ஒரு வேளை இருக்குமோ என்ற சந்தேகம் அவளுக்கும்.
நேற்று காலை கூட கோவிலுக்கு கிளம்பும் முன் இவளைத் தேடிவந்தான் தண்டபாணி.
வந்தவன், “பழனி, உன்கிட்ட கட்டாத புதுப் புடவை எதாவது இருக்கா?” என்றான்.
“ம்ம்ம்… இருக்குண்ணா… எதுக்குக் கேக்குற?”
“ராகவன் அக்காவுக்குதான். அவங்க கிட்ட சுடிதார் மட்டும்தான் இருக்கு போல! அதுவும் நார்மலா இருக்கு!” என்றான்.
அவர்கள் சென்னை வந்ததே, ராகவன் அம்மாவின் ஹெல்த் செக்கப்பிற்காக. சுடிதார் மட்டும்தான் எடுத்து வந்திருந்தாள். அதுவும் எளிமையான காட்டன் சுடிதார்தான். வந்த இடத்தில் திடீரென விசேஷத்திற்கு அழைக்க, மறுக்க முடியாமல் வந்து விட்டார்கள். முன்பே தெரிந்திருந்தால் தானே முன்னேற்பாட்டோடு வருவதற்கு. சாதாரண உடையில் இலக்கியா கோவிலுக்குத் தயாராகி நிற்பதை தண்டபாணி கவனித்தான்.
இவன் பக்கத்து சொந்தங்கள் எல்லாம் எப்படி வருவார்கள் எனத் தெரியும். அந்தக் கூட்டத்துள் இவள் மட்டும் தனித்துத் தெரிவாள். அதுவுமில்லாமல் அவளே தன் உடை குறித்து அம்மாவிடம் புலம்பியதையும் கேட்டான். முன்பே தெரிந்திருந்தால் நேற்றிரவே ஏதாவது ஏற்பாடு செய்து கொடுத்திருப்பான். ரெடிமேட் உடைகளுக்கா பஞ்சம்.
பழனி தன்னிடமிருந்த புதுப்படவை ஒன்றை எடுத்துக் கொடுக்க, “நீயே கொடுத்த மாதிரி கொடு. நான் கொடுத்தா நல்லா இருக்காது. ப்ளவுஸ அம்மாகிட்டக் கொடுத்து டைட் பண்ணிக் கொடுக்கச் சொல்லு! இதையெல்லாம் கவனிக்காம இந்த ராகவன் என்னதான் பண்றானோ? இடியட்!” அவனையும் சந்தடி சாக்கில் வறுத்துவிட்டுதான் சென்றான்.
அதையெல்லாம் யோசனை செய்து பார்த்தவளுக்கு ஒரு வேளை இருக்குமோ என்றொரு எண்ணம்.
என்னோட ப்ளவுஸ், அவங்களுக்கு லூசா இருக்கும் என்றளவிற்கு அண்ணன் ஒரு பெண்ணை அளவிடுகிறானா என்பதை பழனியால் நம்பமுடியவில்லை. இது மட்டும் உண்மையா இருந்துச்சு தண்டம் உனக்கு இருக்குடா வெகு நாட்களுக்குப் பிறகு தங்கை மோடிற்கு மாறியிருந்தாள் பழனி.
கூடவே ஒரு முறை கண்ணாடியில் தன்னை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தவள், நைட்டியை இறுக்கிப் பிடித்து தனது செல்லத் தொப்பையை தடவிப் பார்த்தாள்.
‘அம்மு பிறந்த பின்னாடி குண்டாகிட்டடீ பழனி. மொதல்ல உடம்பைக் குறைக்கணும். இந்தக் கருப்பட்டியப் பாரு! அப்படியே இன்னும் ஜிம் பாடிய மெய்ன்டெய்ன் பண்றாரு. நாமதான் பெருத்துட்டே போறோம்!’ காலையில் கண்விழித்ததும், கையில்லாத டீ ஷர்ட்டில், கண்முன் காட்சியளித்த, அவனது கட்டுடல் நினைவிலாடியது.
அவளது செய்கையைப் பார்த்து உதடு மடித்து சிரித்தவன், “இப்படி பாக்கதான் நல்லா இருக்க. கண்ணுக்கு குளிர்ச்சியா குளுகுளுன்னு!” என்றான்.
அண்ணன் செய்கையில் சிந்தனை வயப்பட்டிருந்தவள், தன்னையும் மறந்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தன்னை திருப்பிப் பார்த்ததை இதழோரம் கள்ளப் புன்னகையோடு ரசித்துப் பார்த்தவன், அவளை கேலி பேச, ‘அய்யோ… இவன் இருப்பதையே மறந்துட்டு கண்ணாடி முன்னாடி நின்னு ஷோ காமிச்சுட்டிருக்க பழனி!” கண்களைச் சுறுக்கி, நுனி நாக்கைக் கடித்தவள்,மானசீகமாக தன்னைத் திட்டிக்கொண்டு, வெளிப்படியாகவே தலையில் அடித்துக் கொள்ள, வழக்கம்போல் அவள் பார்வையில் சொக்கி நின்றவன், இப்பெழுது வாய்விட்டே சிரித்தான்.
சட்டென நினைவு வந்தவனாக, “அம்மு பிறந்தது நார்மலா இல்ல, சிசேரியனா?” என்றான்.
“எதுக்குக் கேக்குறீங்க?”
“இல்ல… இன்னும் அது மட்டும்தான் தெரியல” என்றான் வதங்கிய குரலில்.
“நார்மல் தான். அதான் எனக்கு வேற கல்யாணம் பண்ற ஐடியாலதானே இருந்தாங்க. அதனால நார்மல் தான் ட்ரை பண்ணாங்க. அதுவுமில்லாம அங்க எல்லாம் முடிஞ்சளவுக்கு நார்மல்தான் ட்ரை பண்றாங்க. ரொம்ப முடியாதபட்சத்துலதான் சி செக்ஷன் போறாங்க.”
“ரொம்ப கஷ்ட்டப்பட்டியா?” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.
“அழுதழுது பெத்தாலும் அவதான் பெக்கணும்னு அடிக்கடி அம்மாச்சி சொல்லுவாங்க. அதோட அர்த்தம் என்னானு அன்னைக்குதான் தெரிஞ்சது. இதெல்லாம் தேவையான்னு தோணும். அதெல்லாம் குழந்தை முகத்தைப் பாக்குற வரைக்கும்தான். குட்டி குட்டியா கை, காலோட, இத்துனூண்டு முகத்தோட, பூ மாதிரி கசங்கிறுமோங்குற பயத்தோட கையில குழந்தைய வாங்கினப்போ பட்ட வலி, அவமானம் எல்லாம் மந்திரம் போட்டமாதிரி போயிறுச்சு.” இப்பொழுதும் அக்கணத்தை தாய்மையின் பூரிப்போடு லயித்து சொன்னவளை… ஏக்கத்தோடு விழி அகற்றாமல் பார்த்து நின்றான். தாய்மையின் வரம் என்னவென்று சொல்லாமலே புரிந்தது.
“ஸ்ரெட்ச் மார்க்ஸ் கிளியர் பண்ண, லேசர் தெரபி இருக்குன்னு சின்ன அண்ணி சொன்னாங்க. எதுக்குன்னு கேட்டதுக்கு, இன்னொரு எடத்துல உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறதா இருந்தா அதையெல்லாம் க்ளியர் பண்ண வேண்டாமான்னு கேட்டாங்க.!” சீனி முகம் அவள் சொன்ன செய்தியில் கசங்கியது.
“அவங்களுக்கென்னமோ என்னை குத்திக் காமிச்சுட்டே இருக்கணும். ஒரு வேளை இவளுக்கெல்லாம் குழந்தை பிறக்குது. இன்னும் நமக்குப் பிறக்கலையேங்குற ஆற்றாமையோ என்னவோ. இன்னொன்னும் சொன்னாங்க!” என்று பேச்சை நிறுத்தியவள் அவளை ஓரக்கண்ணால் பார்த்தாள். இதற்கே இறுகிப் போய் நின்றிருந்தான். இதையும் சொன்னால் எப்படி எடுத்துக் கொள்வானோ என்று பார்க்க உள்ளூர ஆசை எழுந்தது.
என்னவென்று அவனும் அவளை நிமிர்ந்து பார்க்க, “ஹைமென்ப்ளாஸ்ட்டி பண்ணலாம்னு சொன்னாங்க!” என்றவள் அவன் முகத்தையே உற்றுப் பார்க்க, அவன் முகம் கருத்து, தாடை இறுகியது அப்பட்டமாகத் தெரிந்தது அவளுக்கு.
அவள் சொன்னவிதமே அது என்னவென்று புரிந்து போயிற்று. ஹைமென்ப்ளாஸ்ட்டி(Hymenoplasty அல்லது Hymen Repair Surgery) என்பது கன்னித்திரையை மீண்டும் சீரமைக்க செய்யப்படும் அறுவை சிகிச்சை.
“நானென்ன ஜவுளிக்கடையில வாங்குற ட்ரெஸ்ஸா. ஒருத்தர் டிரையல் பாத்துட்டு, விட்டுட்டுப் போனதை மறுபடியும் அயர்ன் பண்ணி ஹேங்கர்ல மாட்டுறதுக்குன்னு வெடுக்குன்னு கேட்டதுலருந்து, எங்கிட்ட வச்சுக்க மாட்டாங்க” என்று சொன்னவளை, அவனையும் மீறி இழுத்து, இறுக்கிக் கட்டிக் கொண்டான். எத்தனை பேச்சு, அவமானம், இடைக்குத்தல். இத்தனை வருட தவிப்பிற்கும் இந்த ஒற்றை அணைப்பில் ஆறுதல் அளிப்பவன் போல மூச்சு முட்ட இறுக்கிக் கொண்டான். “சாரி ஃப்ரூட்டி” என்றவன் இதழ்கள், பரபரவென நெற்றி, கண்கள், கன்னமென தவிப்போடு வேகவேகமாக ஒற்றியெடுத்தது. ஒவ்வொரு முத்தத்திற்கும், இடைவிடாது ஒரு முறை மன்னிப்பை யாசித்தது. எதிர்பாரா முத்தத் தாக்குதலில் அவளும் நிலை குலைந்துதான் போனாள். நேற்றிலிருந்து அவனும் வெகுவாக உடைந்திருக்கிறான் என்பதை அவனது இறுகிய அணைப்பே உணர்த்தியது. மெல்ல அந்த அணைப்பு அவளையும் இளக்கியது. கண்கள் கசிந்து இறுக்கம் தளர்ந்து, இளகி நின்ற தருணம்,
“ஃப்ரூட்டி… சீனிப்பாவக் கூட்டிட்டு கீழ சாப்பிட வரச்சொன்னாங்க” என்று அமிர்தா மேலே ஓடி வர, பட்டென இருவரும் விலகிக் கொண்டனர். ஒரு நிமிடத்தில் அவளது முகம் செம்மை பூத்துவிட்டது.
முயன்று தன்னை மீட்டுக் கொண்டவள், “அப்படி கூப்பிடாதேடீ!” என்று பல்லைக் கடித்தாள்.
“அப்படிதான் கூப்பிடுவேன்! ஃப்ரூட்டி! ஃப்ரூட்டி! என்று கத்திக் கொண்டே கீழே ஓட, பின்னால் மகளைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.
முகமெல்லாம் பூரிப்பாய் பார்த்து நின்றான். மகள் இப்படி அழைத்தே தன் நினைவுகளை அவளுக்குள் நீர்த்துப் போகாமல் வைத்திருக்கிறாள் எனப் புரிந்தது. அதனால்தான் அப்படி அழைத்தால் கோபம் வருகிறது இவளுக்கு. ‘ஆங்கர் ஃப்ரூட்டி’ கொஞ்சியது மனம். முகமெல்லாம் புன்னகையாக இவனும் கீழே இறங்கிச் சென்றான்.
“வாப்பா!” என்றவர்,
“அடியேய்! உங்க சண்டைய அப்பறம் வச்சுக்கோங்க. தம்பிக்கு சாப்பாடு எடுத்து வை!” மகளைத் துரத்திக் கொண்டு ஓடிய பழனியை, அய்யம்மா அதட்ட, சாப்பாடு மேஜையில் எல்லாமே தயாராக இருக்க, தட்டை மட்டும் கொண்டுவந்து வைத்தாள்.
“உங்க அண்ணனையும் கூப்பிடு பழனி!” என்றான்.
தண்டபாணியும் இவர்கள் வரட்டுமென சாப்பிடாமல்தான் அமர்ந்திருந்தான்.
“ஆச்சி சாப்பிட்டீங்களா? தாத்தா எங்கே?” அய்யம்மாவை விசாரித்தான்.
“மாத்திரை போடணும்னு சாப்பிட்டாச்சுப்பா. நீங்க சாப்பிடுங்க! தாத்தா வெளியே போயிருக்காரு. இங்க வந்தா வீடு தங்கமாட்டாரு. மெட்ராஸ்ல தான் கட்டிப்போட்ட மாதிரி இருந்தாரு” என்றார். இன்னும் மூத்த தலைமுறையினர்க்கு சென்னை, மெட்ராஸ்தான்.
அண்ணனுக்கும், அவனுக்கும் பரிமாறியவளையும் சேர்ந்து சாப்பிடச் சொன்னான்.
“அம்மு… நீயும் வா!” என்று பழனி அழைக்க, “அவ சாப்பிட்டா!” என்றார் அய்யம்மா.
சாப்பிட்டவாறே, “ஆச்சி, நம்ம ராகவன் அக்காவுக்கு நம்ம வழியில நல்ல மாப்பிள்ளை யாராவது இருந்தா சொல்லுங்க!” என்றான், எதிரில் அமர்ந்திருந்த தண்டபாணி முகத்தைப் பார்த்துக் கொண்டே. பழனியும் அண்ணன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சாதாரணமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
‘நம்மதான் தப்பா நெனச்சுட்டோமோ!’ சீனிக்கே உள்ளூர சந்தேகம்.
“நம்ம வழியில… நல்ல மாப்பிள்ளை யாரு இருக்கா?” அய்யம்மா யோசனை செய்ய,
“என்ன பழனி? நல்ல மாப்பிள்ளை யாருன்னு உங்க அம்மாச்சி யோசிக்கிறாங்க. அப்போ உங்க அண்ணன், பார்த்தியெல்லாம் நல்ல மாப்பிள்ளை இல்லையா?” அவள் பக்கமாகக் குனிந்து, சில்மிஷமாக கண்சிமிட்டிக் கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.
“ஏன் அம்மாச்சி! நம்ம பார்த்திக்கு பாத்தா என்ன?” என்று அடுத்த பந்தை வீச, தண்டபாணி பட்டென எழுந்து கொண்டான்.
“என்னண்ணா அதுக்குள்ள எழுந்துட்ட. இட்லி பிடிக்கலைன்னா தோசை ஊத்தவா?”
“எதுவும் வேண்டாம் பழனி!” என்றவன், “பார்த்திக்கு ராகவனோட அக்கா, முறை வராது என்றுவிட்டு கை கழுவச் சென்றுவிட்டான்.
சீனி, “விக்கெட் அவுட்!” என்று சிரித்தான்.
“கூறு கெட்டவன். அவங்க என்ன சொந்தமா? அந்நியம்தானே? இதுல முறை என்னத்தைக் கண்டான்!” பேரனைப் பற்றி தெரியாமல் அய்யம்மாதான் நொடித்தார்.
சாப்பிட்டு எழுந்து கை கழுவி வந்தவனை கைபேசி அழைத்தது. ராகவன் தான் அழைத்திருந்தான்.
“ஆயுசு நூறுடா!” என்றவாறே சீனி, அழைப்பை ஏற்க, “பாஸ், மேடம் வீட்ல பேசிட்டீங்களா?” என்றான் படபடப்பாக.
“இல்லடா… இப்பதான் பேச்சை எடுத்தேன்”
“பாஸ்… அக்காட்ட பேசினேன். அக்காவுக்கு இஷ்டம் இல்லை போல. வேண்டாம்னு…” என்று இழுக்க, இதற்கு மேல் இவன் மட்டும் என்ன செய்யமுடியும்.
“சரிடா… பாத்துக்கலாம் விடு. அந்தப் பிள்ளைக்கி விருப்பமில்லாம கம்ப்பல் பண்ணக் கூடாது!”
“சாரி பாஸ்!” என்று தன் வருத்தத்தை தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்தான்.
பழனி என்னவென்று பார்வையால் கேட்க, கட்டைவிரலைத் தலைகீழாகக் காண்பித்தான்.

Nirmala vandhachu 😍😍😍