28
“ஹை… ஜாலி! என்று குதூகலித்தவள்,
“ம்மா, இனிமே சீனிப்பா நம்ம கூடத்தான் இருப்பாங்களா?” அவன் சொன்னதை உறுதிப்படுத்திக் கொள்ள அம்மாவிடம் வாக்குமூலம் கேட்டது பிள்ளை.
“ம்ம்ம்…” பட்டும் படாமல் வந்தது பதில்.
“ப்ராமிஸ்!”
“ம்ம்ஹ்ஹ்ம்…” இப்பொழுது அந்த ம்ம்மில் அழுத்தம் கூடியது. சீனிக்கு சிரிப்பை வரவழைத்தது. வாய்விட்டு சிரித்தால் முறைப்பாளே. உதட்டை மடக்கி சிரிப்பை அடக்கினான்.
“அப்போ… சீனிப்பா நம்ம கூடத்தான் பெட்ட ஷேர் பண்ணிப்பாங்களா?” அடுத்த கேள்வியில் அதிர்ந்து பார்த்தனர் இருவரும். அவனது விழியோரம் குறும்பு மின்ன, இவளது பார்வையில் அனல் பறந்தது.
‘இவளுக்கு, ஆயக்குடி அய்யம்மாவே தேவல’ என பல்லைக் கடித்தாள் பழனி. இப்பொழுது பட்டென சிரித்துவிட்டான்.
“படுத்தாம தூங்குடீ!” அவஸ்த்தையாய் அதட்டினாள்.
“அப்போ பெட் டைம் ஸ்டோரி சொல்வீங்களா? என்னோட ஃப்ரண்ட்க்கு அவளோட அப்பாதான் சொல்வாராம். அதான் இப்ப ஃப்ரூட்டிக்கு ஹஸ்பன்ட் ஆகிட்டீங்கள்ல. இனிமே நீங்க சொல்லுவீங்களா?” எனக் கேட்டதில், மலர்ந்த முகம் சடுதியில் கருத்துவிட்டது சீனிக்கு. தன்னை அம்மாவின் கணவன் எனும் உறவில்தான் வைத்திருக்கிறாள்.
அவனின் முக மாற்றம் புரிந்தது அவளுக்கும். இதற்கு எப்படி எதிர்வினை ஆற்றுவதென்று இருவருக்கும் தெரியவில்லை. எப்படி சொல்லி புரியவைப்பது. அப்பா என்றால் இத்தனை நாள் ஏன் நம்ம கூட இல்லை என்ற கேள்வி அதைத் தொடர்ந்து வருமே.
ஆனது ஆகட்டுமென, “இவர்தான்டி உங்க அப்பா!” என்றாள் வெடுக்கென. நல்ல அறிமுகம் என நினைத்தவனால், தன் நிலையை நினைத்து நொந்து கொள்ளாமலும் இருக்க முடியவில்லை. பெருமூச்சு மட்டுமே அவனிடம்.
“அப்போ ஏன் நீங்க எங்க கூட இல்ல?”
சில சமயம் தேர்வில் நாம் எதிர்பார்த்த கேள்வியே வந்திருந்தாலும், பதில் தெரியாத நிலை இருவருக்கும்.
சமாளியேன் என்பது போல் அவளையே சீனியின் பார்வை இறைஞ்சுதலாகப் பார்த்திருக்க “நாமதான் ஃபாரின்ல இருந்தோம்ல அம்மு. அதனால தான்டீ!” என்றாள்.
“ஹாசினியோட அப்பாதானே ஃபாரின் போயிருக்காரு. நாம ஏன் போனோம்?” தோழியின் அப்பா வெளிநாட்டில் இருப்பது தெரிந்தவள், அடுத்த சந்தேகத்தை முன் வைக்க.
“இன்னும் உன் ஃப்ரென்ட்செல்லாம் என்னதான்டி சொல்லி வச்சுருக்காங்க? அவளுக்கு அப்பா போனாரு. இங்க நாம போனோம். போதுமா? இப்ப தூங்கப் போறீயா இல்லையா?”
வழக்கமாக குழந்தைகள் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதபட்சத்தில் கையிலெடுக்கும், கோபமெனும் ஆயுதத்தை அவளும் பிரயோகிக்க, அவள் கேட்ட தோரணையே, இதற்கு மேல் கேள்வி கேட்டால் அடிதான் எனப் புரிந்து போயிற்று பிள்ளைக்கும்.
“அப்ப… பெட் டைம் ஸ்டோரி?” பழனி அதட்டியதில், முகத்தை உம்மென வைத்துக் கொண்டு கேட்க,
“ம்ம்ம்… உங்க அப்பாகிட்டயே கேளு. அவர் நல்லா சொல்லுவாரு… பெட்ட்ட்ட்டைம் ஸ்டோரி!” நொடிப்பாய் சொல்லிவிட்டு, ‘சிரிக்கவா செய்ற? உம்மகளை நீயே சமாளி!’ என எழுந்துகொண்டாள்.
அமிர்தாவும் அவனைத் திரும்பிப் பார்க்க, கதைக்கு நானெங்கே போக என்பது போல் பாவமாகப் பார்த்தான். முன்னபின்ன கதை சொல்லி பழக்கமில்லையே. எந்த கதையைச் சொல்லுவது. வந்த கதையைச் சொல்வானா? வாழ்ந்த கதையைச் சொல்வானா? (இந்த டயலாக் எத்தனை பேர் கேட்டிருக்கீங்க மக்களே! கதை கேட்டா, வயசானவங்ககிட்டருந்து வர்ற முதல் வசனம் இதுவாகத்தானிருக்கும். எனக்கும் கொசுவத்தி சுத்திருச்சு😉)
மண்டபத்தில் மதிய விருந்து முடித்து வீடு வந்ததும், அமிர்தா தூங்கி எழுந்துவிட்டாள். இனி இவளை தூங்க வைப்பது ஒன்றும் லேசுப்பட்ட காரியமல்ல என்பது பழனிக்குத் தெரியும். எப்படியும் நடுச்சாமத்தைக் கடத்திவிடுவாள். அதுவும் இந்தியா வந்த புதிதில், தூக்க நேரம் மாறாட்டத்தில் இவளைப் படுத்திவைத்தது கொஞ்ச நஞ்சமல்ல.
‘சிரிக்கவா செய்ற… அனுபவி ராஜா! அனுபவி!’ என்று எழுந்து சென்றுவிட்டாள். இன்று முழுவதும் வெளியே இருந்ததால் அமிர்தா சரியாக சாப்பிடவுமில்லை. பால் எடுத்து வரலாம் என கீழே இறங்கிவந்தாள்.
அப்பொழுதுதான் தண்டபாணி, ராகவன் குடும்பத்தை ரயிலேற்றிவிட்டு வந்தான். ஆட்டோ பிடித்து நாங்களே இரயில் நிலையம் போவாதாகச் சொல்லியும், தண்டபாணி கேட்கவில்லை.
“ஊருக்கு புதுசும்மா! அவங்க பையன், ஆளுதான் வளந்திருக்கானே ஒழிய பொறுப்பில்ல. நானே போய் ட்ரெய்ன் ஏத்திவிட்டு வர்றேன்.” ராகவனுக்கும் கேட்கும்படிதான் சொன்னான். அழாத குறையாக சீனியைப் பார்க்க, “விர்றா… விர்றா… நமக்கும் ஒரு காலம் வரும்!” என தோளில் தட்டிக்கொடுத்து அனுப்பிவைத்தான்.
உடன் பொதிகாச்சலமும், காந்திமதியும். உறவு என வந்தபிறகு பகை பாராட்டி யாருக்கு என்ன லாபம். கலையரசி முகத்தை காட்டவில்லையே ஒழிய, அதிகமாகக் குழையவும் இல்லை. ஒட்டிக்கவும் வேண்டாம், கட்டிக்கவும் வேண்டாமென எட்டி இருந்து கொண்டாலும், சம்பந்தி மரியாதையோடுதான் அனுப்பி வைத்தனர். சீனி, ஓட்டுனர் போட்டு காரை எடுத்துப் போகத்தான் சொன்னான். பொதிகாச்சலம் தான் இரயில் எங்களுக்கு சௌகர்யம் என்றுவிட்டார். ராகவன் உடன் செல்வதால், அனைவருக்கும் தட்கலில் குளிர்சாதன வசதிகொண்ட, முதல் வகுப்பே புக் செய்து அனுப்பிவைத்தான்.
“நல்லபடியா போய்ட்டாங்களாப்பா!” மகனிடம் விசாரித்தார் கலையரசி.
“போய்ட்டாங்கம்மா! சாப்பிட என்ன இருக்கு?”
“கை கழுவிட்டு வா! தோசை ஊத்தறேன்!” கலையரசி அடுக்களை செல்ல, தண்டபாணி குளித்து, உடை மாற்ற அவன் அறைக்கு சென்றுவிட்டான்.
இறங்கி வந்தவள், பாலை எடுத்து சூடு பண்ண, “அதான் போகும் போதே, கையோட எடுத்துட்டு போகச் சொன்னேன்!” என்றார் அய்யம்மா. அவரை முறைத்துப் பார்த்தாள். அவர் சொன்னது வேறொரு அர்த்தத்தில்.
தோசைக்கல் சூடேறுவதைப் பார்த்தவள், “நான் ஊத்தறேன். நீங்க உக்காருங்க!” என்றாள் அம்மாவிடம்.
அவள் இறங்கி வரும்பொழுதே தண்டபாணி குரல் கேட்டதில் அண்ணனுக்கு எனத் தெரிந்தது. இன்று அலைச்சலில் கலையரசிக்கும் கால் வலிதான். இது போல், அம்மாவை உட்கார வைத்து, அவள் வேலை பார்த்து வருடங்கள் ஆகிவிட்டது.
“நீ பால் எடுத்துட்டு போ. அவ தூங்கிறப் போறா!”
“இன்னைக்கு அவ தூங்க லேட்டாகும்மா. வந்ததும் தூங்கிட்டா!”
“அப்படின்னா… எங்கிட்ட கொண்டு வந்து விடு பழனி. அவளுக்கு கதை சொன்னா தூங்கிறுவா!” என்று சொல்ல, ஆயக்குடி அய்யம்மா ஏன் சொல்கிறார் எனத் தெரியாதா என்ன?
வந்தவர்களை வழி அனுப்பிவிட்டு, சீனி கீழேயே இருக்க, தூங்கும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு மேலே படியேறியவளிடம், “பிள்ளைய தம்பிகிட்ட கொடு பழனி. தம்பியும் மேல வந்து உடுப்ப மாத்திக்கட்டும். காலையிலிருந்து வேட்டி, சட்டையிலேயே இருக்கு!” என்று அய்யம்மாதான் அவனை மேலே அழைத்துப் போகச் சொன்னார்.
இவ்வளவு நேரமாக அவனும் எப்படி கேட்பதென தயங்கிக் கொண்டிருந்தான். அவனும் பிள்ளையை வாங்கிக் கொண்டு படியேற,
“அவ எந்திரிச்சதும், எங்கிட்ட கொண்டு வந்துவிட்டுடு!” என்று அப்பொழுதே சொல்லியனுப்ப, திரும்பி அவள் பார்த்த பார்வையில் முகத்தை வெட்டினார் அய்யம்மா. இதழில் எட்டிப்பார்த்த சிரிப்பை அடக்கிக் கொண்டு படியேறினான் சீனி.
இப்பொழுதும் அதையே சொல்ல, “கதை சொல்லி அவளைக் கெடுத்து வச்சிருக்கறதே நீதான் அம்மாச்சி!” என்றாள் பல்லைக் கடித்துக் கொண்டு.
“ரொம்ப வாய் பேசறால்ல. வந்ததும் தூங்கிட்டா. இப்பவாவது சுத்திப் போடணும்!” கலையரசி பேத்தியை சிலாகிக்க,
“இதெல்லாம் என்ன வாய். இன்னும் உம் பேத்தி பேசறதெல்லாம் நீ கேட்டதில்ல கலை. ஒருத்தியவே சமாளிக்க முடியலியே… இதுல இன்னொன்னும் இருந்திருந்தா தெரிஞ்சுருக்கும் உம் மகளோட சங்கதி!” பேச்சுவாக்கில் அய்யம்மா அலுத்துக் கொள்ள, தோசை மாவை எடுத்தவள் கை அப்படியே நின்றுவிட்டது,
இன்னொன்றும் என்ற வார்த்தையில்.
இப்பொழுது அதை நினைத்தாலும் மனம் அதிர்ந்து நடுங்கியது. எத்தனை வலி, வேதனை, அவமானம் அத்தோடு சேர்ந்து ஒரு உயிரின் இழப்பு. அந்த ஒரே நாளில். எல்லாம் இப்பொழுது நடப்பது போல் இருக்கிறது.
அன்று பெரிதாகத் தோன்றவில்லை. பிரச்சினை தீர்ந்தால் போதும் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
ஆனால், அமிர்தாவைப் பார்க்கும் பொழுதெல்லாம், இன்னொரு குழந்தையின் ஏக்கம் தோன்றாமல் இல்லை. அதுவும் பிறந்திருந்தால் யாரை மாதிரி இருந்திருக்கும். ஆணா, பெண்ணா… அவனை மாதிரியா, என்னை மாதிரியா… இவளை மாதிரி சுட்டியாவா, இல்லை… அம்மாவைப் பாவம் பார்த்து சமத்தாகவா? ஆயிரம் எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடும். உயிர் வதை அது.
ஒன்றுக்கு இரண்டு திருமணம் ஒரு சேர தடைபட்டது, வீட்டிற்கு வந்ததும் தணிகைவேல் மயங்கி விழுந்து மருத்துவமனை தூக்கிக் கொண்டு ஓடியது, அவரை தேற்றி, வீடு வந்து சேர்ந்ததும், எல்லாம் ஓரளவிற்கு மனதைத் தேற்றிக் கொண்டு, அவரவர் அளவிற்கு வேலையைப் பார்க்கத் தொடங்க, அடுத்த சில நாட்களில்… பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்பது போல, இடியாய் இறங்கியது அடுத்த அதிர்ச்சி. யாரும் கனவில் கூட நினைத்துப் பார்க்காதது.
கீழே போனவள் வரத் தாமதாமாக, அம்மாவைக் காணாமல் கீழே போகவேண்டுமென அடம்பிடித்த பிள்ளையை தூக்கிக் கொண்டு வந்தவன் காதிலும் அய்யம்மா சொல்லியது அட்சரம் பிசகாமல் விழுந்தது. இன்னொன்றும் என்றால்… அப்படியே ஒரு கணம் இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டது சீனிக்கு. தனக்கு ஒரு குழந்தை இருப்பதே இப்பொழுதுதான் தெரிய வந்திருக்கிறது. இன்னொன்றும் என்றது அவனுக்கு சுத்தமாகப் புரியவில்லை. ஒரு வேளை இரட்டையோ. ஒன்று இறந்துவிட்டதோ. கண்ணில் பார்க்காத குழந்தைக்காக இதயம் துடித்தது.
அமிர்தா இறங்கி அம்மாவிடம் ஓட, இவன் அப்படியே வந்த சுவடு தெரியாமல் மேலே ஏறிவிட்டான். அண்ணனுக்கு தோசையை ஊற்றி வைத்துவிட்டு, பாலைக் காய்ச்சி ஃப்ளாஸ்க்கில் ஊற்றி எடுத்துவந்தாள். அவனும் சாப்பிட்டு வெகு நேரமாகிறது. எப்படியும் தூங்க நேரமெடுக்கும். அவனுக்கும் பசிக்குமே என்ற எண்ணத்தில்.
இவ்வளவு நேரமாக கட்டிலில் படுத்து மகளோடு வாயாடிக் கொண்டிருந்தவன் பார்வை, இப்பொழுது சன்னல் பக்கமாக நின்று இருளை வெறித்து நின்றது.
மகளுக்கு பாலை ஆற்றிக் கொடுத்து, அவளே கதையெல்லாம் சொல்லி ஒரு வழியாகக் தூங்கவைத்தாள். அதுவரை அவனும் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை. இவ்வளவு நேரமாக ஒரே இடத்தில் அசையாமலா? ஏன் என்ற சிந்தனை முடிச்சுகள் அவளுக்குள்.
இவ்வளவு நேரம் நன்றாகத்தானே இருந்தான். மகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய பொழுது கூட கேலியாகப் பார்த்தான்தானே.
எப்படி கேட்பது? இதுவரைக்கும் மகளை மத்தியில் வைத்து பொதுவாகப் பேசிக் கொண்டார்கள்தான். இன்னும் நேரிடையான பேச்சுவார்த்தை கிடையாது. இப்பொழுது வெகு நேரமாக அசைவின்றி நிற்பவனிடம் காரணம் கேட்க அத்தனை தயக்கம்.
“என்னாச்சு!” என்றாள் குரல் வெளிவராமல். எழுந்து கெண்டால் மகள் விழித்துக் கொள்வாளோ என கட்டிலில் படுத்தபடியேதான் கேட்டாள்.
“இன்னும் என்னவெல்லாம் என்கிட்ட மறச்சிருக்கீங்க?” திரும்பிக் கூடப் பார்க்காமல் இறுகிய குரலில் கேட்க,
“எதை?” என்றாள் புரியாமல்.
“அப்படி நான் செஞ்ச தப்பு என்ன பழனி? ஒரு குழந்தை இருக்கறதே மறச்சீங்கன்னா, இன்னொன்னு இல்லாம போனதையும் மறச்சிருக்கீங்க” என்றவன் வார்த்தைகளில் உயிர் வேதனை. அய்யம்மா சொன்னதை கேட்டிருக்கிறான் எனப் புரிந்தது. மகளது கைக்கு தலையணையை அண்டக் கொடுத்து போட்டுவிட்டு கட்டிலைவிட்டு எழுந்து வந்தாள்.
திரும்பி நின்று அவளை உறுத்துப் பார்த்தவன், “அன்னைக்கி கல்யாணம் நின்னு போனது உங்களுக்கு மட்டுமில்ல பழனி. எங்க பக்கமும்தான் ரெண்டு கல்யாணம் நின்னு போச்சு. உங்களுக்கு ஏற்பட்ட அதே அவமானம்தான் எங்களுக்கும். அதுலயும் தப்பு முழுக்க எங்க பக்கம், ரஞ்சனி செஞ்சுவச்ச காரியத்தாலன்னும் போது, உங்க பக்கம் ஆதரவாப் பேசக்கூட நாலுபேர் இருந்தாங்க. எங்களுக்கு அதுவும் இல்ல. உங்களுக்குக் கெடச்ச சிம்பதி கூட எங்களுக்கு கிடைக்கல. எல்லாரும் எங்களைத்தானே பேசினாங்க? கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியாம, அப்பா கிட்டத்தட்ட வீட்டாளாவே போய்ட்டாங்க. எங்களுக்கும்தான் அடிமேல அடி. நான்தான் எல்லாம் பாக்க வேண்டியதாப் போச்சு. இதுல ரஞ்சனியும் போன வேகத்துல வீட்டுக்கு வந்தாச்சு. இப்படி பண்ணிட்டியேன்னு, நானும், அப்பாவும் அவகிட்ட பேசறதே இல்ல. இப்ப தண்டபாணி உன்னைக் கவனிக்கறதை பாக்கும் போதெல்லாம், நானும் கொஞ்சம் அவமேல அக்கறை எடுத்து அவளைக் கவனிச்சுருக்கலாமோன்னு தோணுது. அப்படிக் கவனிச்சிருந்தா இந்தளவுக்கு போயிருக்க மாட்டா. இல்லைனா, ஆரம்பத்துலயே எனக்கும் அவனை விரும்பின விஷயமாவது தெரிஞ்சிருக்கும். எடுத்தெரிஞ்சு பேசுவாதான். நானும் விட்டிருக்கக் கூடாது. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் பெருசா ஒட்டல. அதனால அம்மா போக்குலயே அப்பா விட்டுட்டாங்க. அவளையும் விட்டது தப்பாப்போச்சு. அதென்னமோ சின்னபிள்ளையிலிருந்தே அப்படியே பழகிருச்சு.”
“நான் என்னமோ உன்னை, காதலிச்சு ஏமாத்தி கைவிட்டமாதிரி இமேஜ் உருவாகிப் போச்சுல்ல. ரெண்டு பக்கமும் சம்மதிச்சு, ஊரறிய கல்யாண ஏற்பாடு பண்ணி, ஒரு வாரத்துல மனைவியாகப் போறவகிட்ட உரிமை எடுத்துக்கிட்டது எனக்கொன்னும் தப்பாத் தெரியல. ஒரு வார்த்தை விட்டது தப்புதான். நீயும் தானே சொன்ன? எனக்கும் எங்க மாமா பையனுக்கும் ஒரு வாரத்துல கல்யாணம். இனிமே கால் பண்ணாதீங்கனு. அடுத்தடுத்து ஃபோன் பண்ணியும் எடுக்கலதானே? உனக்கு இவ்வளவு இருந்தா, எனக்கு எவ்வளவு இருக்கும்னு யாராயிருந்தாலும் தோணத்தானே செய்யும்? எனக்கும் அப்போ இருந்த சூழ்நிலையில அப்படித்தான் தோணிச்சு. அதுக்காக ஒரு குழந்தை பிறந்ததையே மறச்சது எவ்வளவு பெரிய தப்பு. அதுலயும் இன்னொரு குழந்தைய வேற மறச்சுருக்கீங்க. பிள்ளை இறந்தது கூடத் தெரியாமப்போறளவுக்கு அப்படி என்ன குத்தம் பண்ணிட்டேன் பழனி.” உயிர் வதையோடு அவன் கேட்ட ஒவ்வொரு வார்த்தையும் அவள் நெஞ்சை அறுத்தது.
இப்பொழுதும் உன் சம்மதமில்லாம எதுவும் நடக்கவில்லையே என்று அவனால் ஒரு நிமிடத்தில் கேட்டுவிட முடியும். அப்படிக் கேட்டுவிட்டால் என்ன பதில் சொல்ல முடியும் இவளால்.
தப்பு இரண்டு பக்கமும். அவமானமும் இரண்டு பக்கமும் எனும் பொழுது, இழப்பும் இரண்டு பேருக்கும்தானே? அவனுக்கு அவன் குழந்தை பற்றித் தெரிந்து கொள்ள உரிமை இல்லையா?
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ஹெடரோடோபிக் ப்ரெக்னென்சி! (Heterotopic Pregnancy)” என்றாள் வலியோடு.
அவன் புரியாமல் பார்க்க, கட்டிலில் படுத்திருந்த மகளை ஒரு முறை திரும்பிப் பார்த்தவள் கரம் மகளின் தலையை மென்மையாக வருடிக் கொடுத்தது.
“இப்போ அம்மு, நம்ம கூட இருக்கான்னா, அதுக்கு அந்த கருதான் முக்கிய காரணம். இல்லைனா, அன்னைக்கிருந்த சூழ்நிலைக்கி கர்ப்பம்னு தெரிஞ்சதும் பெரியவங்க என்ன வேணா முடிவு பண்ணியிருக்கலாம். நானும் உங்க மேல இருந்த கோபத்துல அதுக்கு உடன்பட்டிருப்பேன்” என்று சொல்ல அவனுக்குதான் தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. தன் மீதிருந்த வெறுப்பை குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுதே சுமந்திருக்கிறது என்ற நினைப்பே மனதைக் கவ்விப் பிடித்தது.
“நான் உங்ககிட்ட கோபத்துல சொன்ன மாதிரிதான் உடனே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணினாங்க. அப்பாவுக்கு உடம்பு சரியில்லாம போனதாலதான் தள்ளிப்போச்சு!” என்றாள்.
அவள் சொன்னதும் ஃபோனை எடுத்து, ஹெடரோடோபிக் ப்ரெக்னென்சி என கூகுள் செய்து பார்த்தவன், அவளை அதிர்ந்து பார்த்தான்.
*****
தணிகைவேல், மருத்துவமனையிலிருந்து வீடு வந்தவுடனே, பெண் பிள்ளை திருமணம் தடைபடக் கூடாது, தண்டபாணிக்கு கூட பிறகு பார்த்துக் கொள்ளலாம், பழனிக்கு முதலில் முடிக்க வேண்டுமென உறவுகள், ஆலோசனை கூற, தணிகைவேல்தான் எதுவாக இருந்தாலும் ஆறப்போட்டு பண்ணுவோம் என்றுவிட்டார். நடந்த சம்பவத்தால் யாருக்குமே நிதானமாக யோசிக்கும் சிந்தனையில்லை. இப்பொழுது எடுக்கும் முடிவு சரிவராதென நினைத்தார்.
வருத்தம் தெரிவித்தவர்கள் ஒரு பக்கம், வருத்தம் போல் துக்கம் விசாரித்தவர்கள் ஒரு பக்கமென நாட்கள் கழிய, அவரவர் இயல்புக்குத் திரும்ப முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
ஒரு மாதம் கடந்திருக்கும். பழனிக்கு காய்ச்சலும், வாந்தியும் பாடாய்ப்படுத்தியது. உடன் திடீர் அடிவயிற்றுவலி வேறு. துடித்துப் போனாள். மாதாந்திர நாட்களில் கூட இப்படி துடித்ததில்லை. அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தனர். வயிற்றுவலியில் துடிப்பதைப் பார்த்து முதலில் குடல் வால் பிரச்சினையோ (appendix) என்ற ஐயம்தான் அனைவருக்கும்.
அவளைப் பரிசோதித்த பெண் மருத்துவர் வயதான பெண்மணி. அய்யம்மா காலத்து மறுத்துவர். பழுத்த அனுபவசாலி. வெளுத்த முகத்தைப் பார்த்ததுமே அவருக்கு சந்தேகம். இரத்தப் பரிசோதனையில் அவரது சந்தேகமும் ஊர்ஜிதமாக, வயிற்று வலிக்கான காரணம் மட்டும் புரியவில்லை. ஸ்கேனிற்கு உடனடியாக எழுதிக் கொடுத்தார். சோதனை முடிவும் வந்தது. ஒன்று அவர் எதிர்பார்த்தது தான். மற்றொன்று எதிர்பாராத இக்கட்டான சூழ்நிலை.
“உங்க பொண்ணு கர்ப்பமா இருக்கா. கரு ட்யூப்ல நின்னுருக்கு. உடனே ஆப்ரேஷன் பண்ணினாதான் ரெண்டு உசுருல ஒன்னையாவது காப்பாத்த முடியும்!” கலையரசி தலையில் இடியை இறக்கினார் மருத்துவர். படபடத்து வர, நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார் கலையரசி.
அதிர்ச்சியில் அவர் சொன்னதை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் நிலையில் யாருமே இல்லை. இரண்டு உயிர் என சொன்னதும் பெரிய உயிரும், சின்ன உயிரும் என நினைத்துக் கொண்டனர்.
இப்பொழுதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டிருக்கும் குடும்பம் மீண்டும் ஒரு அதிர்ச்சியில், திக்பிரமை பிடித்தது போல் செயலற்றுப் போக, வந்தனா தான் அன்றைய சூழ்நிலையைக் கையாண்டார்.
உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பாதுகாப்பாக கருக்குழாயில் இருந்த கருமட்டும், வெடிக்கும் தருவாயில் வெட்டி நீக்கப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு முன் பழனியின் உடமைகள் கலையரசியிடம் கொண்டுவந்து கொடுக்கப்பட்டது.
“இந்தாங்கம்மா… பத்திரம். நல்லா பாத்துக்கோங்க!” என்றார் செவிலி.
மகளையே பத்திரமாகப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இதைப் பத்திரப்படுத்தி என்ன செய்யவென, பக்கத்தில் தூக்கிப் போட,
“என்னம்மா வைரத்தை இப்படி போடுறீங்க? தொலஞ்சு போச்சுன்னா எங்களுக்குதான் கேள்வி வரும். பத்திரமா எடுத்து வைங்க!” என்றார்.
கலையரசி அதிர்ந்து பார்க்க, “இது வைரம் மாதிரி இருக்கு, பத்திரமா கொடுன்னு டாக்டர்தாம்மா சொன்னாங்க!” என்று சொல்லிச் செல்ல, அதுவரை அதை ஏதோ கவரிங் செயின், மகள் ஆசைப்பட்டு கொடைக்கானலில் வாங்கியிருப்பாளாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தார்.
ரோஸ் கோல்டில், மெலிதாக இருந்ததால் அவர் அதை தங்கமென நினைக்கவில்லை. அதுவும் வைர டாலரோடு. யார் வாங்கிக் கொடுத்திருப்பார் என யூகிக்க முடிந்தவரால், நடப்பது எதையும் ஜீரணிக்க முடியவில்லை.
சிகிச்சை முடிந்து, வீட்டிற்கும் அழைத்து வந்தாகிவிட்டது.
மகளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை கலையரசி. திருமணம் நின்றது ஊருக்கே தெரியும். மருத்துவமனையில் இருந்த நர்ஸ் மூலமாக விஷயம் வெளியே கசிந்துவிட்டது. கேட்கவா வேண்டும்?
கலையரசி உக்கி உலர்ந்து போனார்.
கலையரசியின் எத்தனையோ வசவுகளை காதில் இரத்தம் வருமளவிற்கு வாங்கிக்கட்டியவளால், அம்மாவின் இந்த அமைதியான புறக்கணிப்பைத் தாங்க முடியவில்லை. எத்தனையோ முறை அம்மாவிடம் விளையாட்டாக, எவனையாவது இழுத்துட்டு வந்து நிக்கப்போறேன் பாருங்க என்று வம்பிழுத்திருக்கிறாள். அப்படி மட்டும் செஞ்சு பாரு, காலை உடைச்சு மூலையோட உக்கார வைக்கிறேன் என ஆத்திரத்தைக் கொட்டுவார். ஆனால், இவ்வளவு நடந்த பிறகும், மகளிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.
வாயாறத் திட்டியிருந்தால் கூட, இல்லை எப்பொழுதும் சொல்வது போல் விளக்குமாற்றாமல் நாலு சாத்து சாத்தியிருந்தால் கூட, இவளுக்கும் மனது ஆறியிருக்குமோ என்னவோ. அண்ணன், அப்பா என யார் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்க முடியவில்லை.
இதைவிட தண்டபாணிதான் மிகவும் உக்கிப் போனான். நீயும் கூடப் போனாயே என்று, மகனிடம் கலையரசி வாய்விட்டு கேட்கவில்லை. அவ்வளவுதான். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் நரக வேதனை அது.
அவளால் அதற்கு மேலும் அழுத்தத்தைத் தாங்க முடியவில்லை. அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள் பழனி.
அவள் எழுந்து சென்ற வேகம், அய்யம்மாவிற்கு ஏதோ பொறி தட்டியது. உடனே எழுந்து சென்று கதவைத் தட்ட திறக்கவில்லை. பேரனை கத்தி அழைத்தார். அய்யம்மா, கதவைத் தட்டிக் கொண்டே அழைத்ததில், அவசரமாக வந்தவன், கதவை எட்டி உதைத்து திறக்க, தங்கை இருந்த கோலம், உயிரே போய்விட்டது பார்த்தவனுக்கு. ஓடிப்போய் தங்கையின் கால்களை தாங்கிப் பிடித்துக் கொண்டான். அவசரமாக சுருக்கிட்ட சேலையை அவிழ்த்து வீசிவிட்டு, தங்கையைக் காப்பாற்றினான்.
“வந்தனா! இவ பேசாம இருந்தே எம்பேத்தியக் கொன்னுபுடுவாடீ. கொஞ்ச நாள் இவ கண்ணுல படாம எங்கேயாவது கூட்டிப் போயிருடீ. உனக்கு புண்ணியமா போகும்!!” பெரிய மகளிடம் வேண்டாத குறையாக கோரிக்கை வைத்தார் அய்யம்மா.
கல்யாணத்திற்கென இந்தியா வந்தவர், மீண்டும் போகும் பொழுது பழனியை உடன் அழைத்துக் கொண்டுதான் சென்றார்.
தண்டபாணி, தனக்கு பாஸ்போர்ட் எடுக்கும் பொழுதே தங்கைக்கும் எடுத்து வைத்திருக்க, டூரிஸ்ட் விசாவில் பழனியை அழைத்துச் சென்றுவிட்டார் வந்தனா.
இவள் வெளிநாடு சென்ற நேரம் கொரனாவின் ஆரம்ப காலகட்டம். ஏதோ சிறிது நாட்கள் மனமாற்றத்திற்கென வந்தவளால் அடுத்தடுத்து வந்த ஊரடங்கு, விமானப் போக்குவரத்து தடையென திரும்ப முடியாமல் போயிற்று. அதன் பிறகு அவளுக்கே இந்தியா திரும்பும் எண்ணமில்லை.
அங்கு சென்ற பிறகுதான்… அடுத்த இடி தாக்கியது.
நான்கைந்து மாதங்கள் வரை ஒன்றும் தெரியவில்லை. ஆப்ரேஷன் நடந்ததால் மாதாந்திரத்தில் ஏதோ மாற்றம்போல என்று கண்டு கொள்ளவில்லை. மேலும் அதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் மனநிலையிலும் அவள் இல்லை.
ஐந்து மாதங்கள் கடந்து வயிற்றுக்குள் ஏதோ ஒரு மாற்றம். பனிக்கட்டி நழுவவுது போல. முன்னபின்ன அனுபவம் ஏது. இல்லையெனில், கர்ப்பம் என்று தெரிந்திருந்தாலாவது, குழந்தை அசைவு தெரிந்திருக்கும். இவளுக்குதான் அந்த மாதிரி எந்த சந்தேகமும் இல்லையே. கருக்குழாயில் தங்கிய கருவையும் எடுத்தாகிவிட்டது. கர்ப்பப்பையில் இருந்த, மற்றொரு கரு ஜம்மனெ வளற ஆரம்பித்துவிட்டது. கர்ப்பப்பையில் இருந்த கருவிற்கு எந்தப் பாதிப்பும் வராமல் தான் அறுவைசிகிச்சை நடந்திருந்தது. அதுதான் கருவை எடுத்துவிட்டோமே என்றுதான் அனைவரும் நினைத்திருந்தனர்.
“என்ன அத்தை… ஆப்ரேஷன் பண்ணதுல பழனிக்கு தொப்பை வந்திருச்சு போல! ப்ரெக்னென்ட்டா இருக்குற மாதிரி இருக்கு!” வந்தனாவின் சின்ன மருமகள்தான் சந்தேகத்தைக் கிளப்பியது.
அப்பொழுதுதான் வந்தனாவும் உற்றுக் கவனித்தார். இரண்டு பிள்ளைகளைப் பெற்றவருக்கு தெரியாதா? பிள்ளை வயிற்றுக்கும், தொப்பை வயிற்றுக்கும் உள்ள வித்யாசம். அவசரத்திற்கு மருத்துவமனைகூட அழைத்துச் செல்ல முடியாத கொரானா நெருக்கடி காலகட்டம்.
தனக்குத் தெரிந்த இந்திய நாட்டு மருத்துவரின் வீட்டிற்கே அழைத்துச் சென்று காண்பிக்க, அவர் ஐந்து மாத கர்ப்பத்தை உறுதி செய்தவர், இனி எதுவும் செய்யமுடியாது என்றுவிட்டார்.
அப்படியே செய்வதாக இருந்தாலும் மருத்துவமனையில் கொரானா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மட்டுமே அனுமதி. அதுவும் கர்ப்பிணிகளுக்கு வெளியே செல்லவே அனுமதி கிடையாது. இடிந்து போனார் வந்தனா.
இதை எப்படி கலையரசிக்கு தெரிவிப்பது. முதலில் இதை எப்படி விளக்குவது? கருவை நீக்கியது எல்லாருக்கும் தெரியும். இப்பொழுது ஐந்து மாதமென்றால் எத்தனை பேருக்கு புரியும். வேறு விதமாக பேச்சுவராதா? இதை எப்படி வெளியே தெரியாமல் மறைப்பது என்றுதான் வந்தனா யோசித்தார். எவ்வளவு நாட்கள் மறைக்க முடியும்? என்னதான் மகளை அனுப்பிவிட்டாலும், கோபம் குறைந்த பிறகு மகளைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை கலையரசிக்கு. அக்காவிடம் பேசுவது போல் வீடியோ காலில் வந்தவருக்கு, மகளின் தோற்றம் சந்தேகத்தைக் கொடுத்தது.
வந்தனா, தயங்கி தங்கையிடம் விஷயத்தை தெரிவிக்க, வந்தனாதான் வேண்டுமென மறைத்துவிட்டதாக அக்காவிடமும் சண்டைபிடித்தார் கலையரசி. இதையும் மகள் தன்னிடம் மறைத்து விட்டாளே என்ற கோபம் மீண்டும் தலைதூக்கியது.
அதன் பிறகுதான், தண்டபாணி, காந்திமதியை சந்தித்து பேசியதும், அவர் அவமானப்படுத்தி அனுப்ப, இப்படியொரு வீட்டிற்கு மகளை அனுப்பமாட்டேன், இனி அவர்களிடம் இதைப் பற்றி, வலிய பேசவேண்டாம். அதுதான் தகவல் கொடுத்தாகிவிட்டதே. இனி அவர்களே வந்தால் வரட்டும் என்று தணிகைவேல் மகனிடம் கண்டிப்போடு கூறிவிட்டார்.
குழந்தையில்லாத சின்னமகனுக்கு தத்து எடுத்துக் கொள்வதாக வந்தனா குழந்தையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பழனிக்கு கிட்டத்தட்ட சித்தபிரமை பிடித்த நிலை. பெரியவர்கள் பேச்சு, முடிவு எதுவும் சிந்தையில் பதியவில்லை. கர்ப்பகால மன ஊசலாட்டமோ என்னவோ, அவளுக்குமே குழந்தை மீது பெரிதாக ஈடுபாடு வரவில்லை. குழந்தை மீது எப்பொழுது பிடித்தம் வரும். கண்ணுக்கினிய கணவனோடு, மனதிற்கினிய வாழ்க்கை வாழும் பொழுதுதானே?
இதெல்லாம் குழந்தை பிறந்து குழந்தையின் முகத்தை பார்க்கும் வரைக்கும் தான். அதன் பிறகு யாருடைய பேச்சும் பழனியின் கருத்தில் பதியவேயில்லை. தன் வாழ்க்கையின் பற்றுக் கோலாக பிள்ளையைப் பற்றிக்கொண்டாள் பழனி. அவளது மொத்தம் உலகமே அமிர்தாவிற்குள் சுருங்கிப் போயிற்று. தனது மழலை சிரிப்பாலும், பேச்சாலும், சேட்டையாலும், அம்மாவின் கவனம் மொத்தத்தையும் தன்பால் வாரி சுருட்டிக் கொண்டது பிள்ளை.
ஆண் மகன் அழக்கூடாதென யார் சொன்னது? அவளது இடையை இறுக்கி கட்டிக் கொண்டு, முகத்தை அடிவயிற்றில் புதைத்துக் கொண்டவன் முதுகு வெகு நேரமாகக் குலுங்கிக் கொண்டிருந்தது.
*****
கருக்குழாயில் கர்ப்பம் இரண்டு வகை:
1. எக்டோபிக் ப்ரெக்னென்சி. (Ectopic Pregnancy)
2.ஹெடரோடோபிக் ப்ரெக்னென்சி. (Heterotopic Pregnancy)
- எக்டோபிக் ப்ரெக்னென்சி:
பெண்களின் முட்டை கருக்குழாயில் (Fallopian tube) உருவாகி கர்ப்பப்பை சென்றடையாமல் அதே குழாயில் கரு வளர ஆரம்பிப்பது. இது பாதுகாப்பான கர்ப்பம் அல்ல, ஏனெனில் கருக்குழாய் கருவை தாங்கக்கூடியது அல்ல. குழாய் சேதமடைந்து இரத்தப்போக்கு ஏற்பட்டால் உயிருக்கே கூட ஆபத்தாக முடிய வாய்ப்பிருக்கிறது.
அறிகுறிகள்:
- அடிவயிற்றில் ஒரு பக்கம் கடும் வலி
- மயக்கம் அல்லது தலைசுற்றல்
- ரத்தப்போக்கு (சில நேரங்களில் மிகக் குறைவாக இருக்கும்)
- தோள்பட்டையில் வலி (அதிக அவசரநிலையில்)
காரணங்கள்:
- முந்தைய கருக்குழாய் தொற்று
- குழாய் அடைப்பு
- முந்தைய அறுவை சிகிச்சை
- சில சமயம் எந்த காரணமும் இல்லாமலுமே நடக்கலாம்
சிகிச்சை:
கருக்குழாயில் கற்பம் கண்டுபிடிக்கப்பட்டவுடன் மருந்து (Methotrexate) மூலம் கருவை நீக்குவார்கள்.
சில சமயங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படும்.
உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும். தாமதமானால் குழாய் கிழிந்து உயிருக்கு ஆபத்துஏற்படும்.
*ஹெடரோடோபிக் கர்ப்பம்: (Heterotopic Pregnancy)
ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் கரு வளருவது ஆகும்.
ஒன்று கருப்பையில் (Uterus) இயல்பாகவும்,
மற்றொன்று கருக்குழாய் (Fallopian Tube) அல்லது பிற இடங்களில் (எக்டோபிக்) அசாதாரணமாகவும் உருவாகும் நிலை.
இது மிகவும் அரிதான ஒரு நிலை.
ஆனால் IVF (In Vitro Fertilization) அல்லது பிற பிள்ளைப்பேறு சிகிச்சை முறைகளில், இதன் வாய்ப்பு அதிகரிக்கலாம்.
காரணங்கள் (Causes)
- கருக்குழாய் சேதம் அல்லது அடைப்பு
- பிள்ளைப்பேறு சிகிச்சைகள் (IVF, IUI)
- பல முட்டைகள் வெளிவருதல் (superovulation)
- முந்தைய எக்டோபிக் கர்ப்ப வரலாறு
அறிகுறிகள் (Symptoms)
கருப்பை கர்ப்பத்தின் சாதாரண அறிகுறிகளுடன் சேர்ந்து,
எக்டோபிக் கருவின் அறிகுறிகளும் காணப்படும்.
- ஒரு பக்க வயிற்று வலி
- காய்ச்சல் அல்லது மயக்கம்
- யோனியில் இரத்தப்போக்கு
- சில நேரங்களில் திடீர் வயிற்று வீக்கம் அல்லது வலி (tube rupture ஏற்பட்டால் ஆபத்து)
கண்டறிதல் (Diagnosis)
அல்ட்ராசவுண்ட் (Ultrasound scan) மூலம் இரு இடங்களிலும் கரு இருப்பதை கண்டறிவது முக்கியம்.
சில நேரங்களில் ஆரம்பத்தில் கருப்பை கரு மட்டுமே தெரிந்தாலும், பின் சோதனைகளில் இரண்டாவது (எக்டோபிக்) கரு தெரியும்.
சிகிச்சை (Treatment)
கருப்பையில் உள்ள கருவை பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, கருக்குழாயில் உள்ள கருவை சிகிச்சையால் அல்லது அறுவை முறையால் நீக்குதல்.
அறுவைச் சிகிச்சை (laparoscopy / laparotomy) வழியே செய்கிறார்கள்.
கர்ப்பம் என்று முன் கூட்டியே தெரிந்தால் மட்டுமே, இதை கண்டுபிடிக்க அதிக வாய்ப்பிருக்கிறது மக்களே! கதையோட்டத்திற்காக இங்கு இதை முன்பே கண்டு பிடிப்பதாக எழுதியிருக்கிறேன். அதனால்தான் மருத்துவர் வயதானவர், அனுபவஸ்த்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கமலா செல்வராஜ் ஒரு தடவை நேர்காணல்ல சொல்லியிருந்தாங்க. ஸ்கேனிங் எல்லாம் பரவலாக வர்றதுக்கு முன்னாடி எத்தனை வாரம்னு கண்டுபிடிக்க கையளவும், கண்ணளவும்தான்னு. அந்தளவிற்கு அனுபவம் பேசும். கண் அளக்காததையா கையளக்கப் போகுது.
ஊர்ல அந்தக் காலத்து கெழவிங்க நம்ம முகத்தைப் பாத்தே இன்னும் எத்தனை நாள்ல குழந்தை பிறக்கும்னு சொல்லிருவாங்க. கையூன்றி எந்திரிக்கறதை வச்சே வயித்துல இருக்கறது ஆண் குழந்தையா, பெண்குழந்தையாங்கறது மொதக் கொண்டு கண்டுபிடிச்சுருவாங்க. தொன்னூறு சதவீதம் பொய்க்காதுங்க.

Nirmala vandhachu 😍😍😍