26
“சீனிப்பா… எங்க ரூம்லயா?” வியப்பாகக் கேட்டது பிள்ளை.
இருவரது பார்வையும் ஒருதரம் மோதி மீண்டது மகளது கேள்வியில். சென்னையில் இவர்கள் வீட்டிற்கு தினமும் வருபவன் அம்மாவும், மகளும் படுக்கையறை செல்லும் வரை அங்கிருந்துவிட்டு, அவனது ஃப்ளாட்டிற்கு சென்றுவிடுவான். அதுவும் அந்த சம்பவம் நடந்த பிறகுதான்.
இன்று, அவன் தங்களோடு, அதுவும் ஒரே அறையில் என்றதும், அப்பா என்ற உறவு அறிமுகப்படுத்தப் படாததாலோ என்னவோ, இதுவரை அவளும், அம்மாவும் மட்டுமென இருந்த அவளது கூட்டுக்குள்… மகள் தன்னை எப்படி இணைத்துக் கொள்ளப் போகிறாளோ என்ற சஞ்சலம் அவனைப் பாடாய்ப்படுத்தியது. அறைக்குள் தன்னை எப்படிப் பார்க்கிறாள் என்று அவனுக்கே புரியவில்லை. சந்தோஷப்படுவாளா? இல்லை அம்மாவுக்கு தனக்கும் இடையில் இவனுக்கென்ன வேலையென சந்தேகப்படுவாளா?
அவளது கேள்விக்கு, “ம்ம்ம்!” மட்டுமே கொட்டினான்.
“ஏன்… உங்களுக்குத் தனியா ரூம் இல்லையா. கீழ எக்ஸ்ட்ரா ரூம் இருக்கும். கலை அம்மாச்சிகிட்ட பேசி வாங்கிக்தரவா? ம்மா… கீழ ரூம் இருக்கும்தானே?” ஏதோ அவனுக்குத் தனியாக அறை கொடுக்கவில்லையோ என்ற எண்ணம் அவளுக்கு. பழனியோ தலையணையை மாற்றிப் போடுவது போல், மகளின் கேள்வியை கண்டுகொள்ளாமல் இருக்க,
“வேண்டாம் அம்மு! இனிமே நான் உங்க கூடத்தான் எப்பவும் இருப்பேன். விட்டுப் போகவே மாட்டேன்!” மகளின் கைகளை கூட்டிப் பிடித்து முத்தம் வைத்தவாக்கில் சொல்ல, அம்மாவை திரும்பிப் பார்த்தாள். அவளும் ஆமோதிப்பாய் தலையசைக்க,
“அம்மாவுக்கு நீங்க மாலை போட்டதால உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் ஆயிருச்சா? ரெண்டு பேரும், ஹஸ்பன்ட் அன்ட் ஒய்ஃபா?” இந்தக் கேள்வியை இருவருமே எதிர்பார்க்கவில்லை, என்பதை இருவரின் அதிர்ந்த முகமே காட்டிக் கொடுத்தது.
பெற்றவள் கேட்ட அத்தனை கேள்விகளையும் ஒன்றுமே இல்லை என்றாக்கியது பிள்ளையின் ஒற்றைக் கேள்வி. அவளைப் பொறுத்தவரை இன்று காலையில் அம்மாவிற்கும், சீனிப்பாவிற்கும் திருமணம் முடிந்தது. அவ்வளவே!
இந்த இரவு இத்தனை கனமானதாகவும், அடர்த்தியானதாகவும் இருக்கும் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இதே அறையில் முதன் முதலாக, அவளை கண்களில் நிரப்பிக்கொண்டு, சன்னல் கம்பியில் பட்டுத் தெறித்த மழைத்துளியை ரசித்து நின்றதை மனம் அசை போட்டது. இப்பொழுதும் அந்த உணர்வு சில்லெனத் தாக்கியதில் முகம் கனிந்தது.
இன்றும் அதே அறைதான். ஆனால், மனம் முழுவதும் புழுக்கமாய். மூச்சடைப்பது போன்றதொரு உணர்வு. அமைதியின் கனம் கூடிக்கொண்டே போனது. இவ்வளவு நேரமும் வளவளத்த மகளின் குரல் மட்டுமே அறையை நிறைத்திருந்தது. அவள் உறங்கியதும் அறைக்குள் அழுத்தமானதொரு அமைதி. கட்டிலில், மகளின் பக்கத்தில், இடக்கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்து ஒருக்களித்து படுத்திருந்தான் சீனி.
சந்தனம் உதிர்ந்த மொட்டைத் தலையுடன், காதில் சந்தனம் அப்பிய புதுக் கம்மலோடு மகள் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பதையே வாஞ்சையாகப் பார்த்துக் கொண்டிருந்தான். எதைப்பற்றியும் சிந்தனையற்ற, நிச்சலனமானதொரு ஆழ்ந்த உறக்கம்.
காலமிது… காலமிது…
கண்ணுறங்கு மகளே…
காலமிதை தவறவிட்டால் தூக்கமில்லை மகளே…
பாடல்தான் நினைவிற்கு வந்தது. கன்னத்தை வருடிக் கொடுத்தவன் முகத்தில் வரண்ட புன்னகை. தூங்கும் முன் எத்தனை கேள்வி. அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அவனைக் குத்திக் கிழித்தது.
எல்லாக் குழந்தைகளுக்கும் இயல்பான ஒன்று, தன் மகளுக்கு மட்டும் கேள்விக்குறிய ஒன்றாகிப் போனதில் தன்னையே நிந்தித்துக் கொண்டான். இப்பொழுதும் அவளைப் பொறுத்தவரையில் அவன், இந்த வீட்டு விருந்தாளியே. தந்தை என்ற உறவுக்குள் அவனைக் கொண்டு வரவேயில்லை.
இன்று காலையில் அவனை இங்கு பார்த்ததிலிருந்தே, சந்தோஷத்தோடு ஆயிரத்தெட்டு கேள்விகள்.
முதல் நாளே, அய்யம்மா, வேலாயுதத்தோடு அவர்களுக்குத் துணையாக பழனியையும், அமிர்தாவையும் இரயிலில் அனுப்பிவைத்தான். கார் பயணம் அவர்களுக்கு சிரமம் என்று. அவர்களோடு ராகவன், அவனது அம்மா மற்றும் அக்கா இலக்கியாவும்.
ராகவனின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில், முழு உடல் பரிசோதனைக்கு அம்மாவை சென்னை வரவைத்திருந்தான் ராகவன். பரிசோதனை முடித்து, ஊருக்குக் கிளம்பியவர்களை சீனிதான், மகளுக்கு விசேஷமென அவர்களையும் பழனி மலைக்குப் போகலாமென கட்டாயப்படுத்தி இருக்கவைத்தான். அவன் சார்பில் அவர்கள் மட்டுமே.
பழனி வந்தவர்களை, இரயில் நிலையம் சென்று தண்டபாணிதான் காரில் அழைத்துவந்தான்.
“என்னப்பா முடிவு பண்ணியிருக்க?” கிளம்பும் முன் அய்யம்மா கேட்ட கேள்விக்கு,
“எல்லாம் நல்ல முடிவுதான் ஆச்சி. கவலைப்படாம போங்க!” என்று அனுப்பி வைத்தவன் பதில் அவளுக்கும் கேட்கத்தான் செய்தது. பார்வையைத் திருப்பவில்லை. இருவருக்குமிடையே இன்னும் ஊமை நாடகமே. பேச வேண்டியதெல்லாம் பேசியாயிற்று. கொட்ட வேண்டியதெல்லாம் கொட்டியாகிவிட்டது.
இவர்கள் இரயிலில் கிளம்ப…
சீனி, பொதிகாச்சலம் மற்றும் காந்திமதியோடு காரில் கிளம்பினான். காந்திமதிக்கும் மறுபடியும் அந்த ஊருக்கா என அரை மனதுதான். ரஞ்சனி வர மறுத்துவிட்டாள்.
காந்திமதி, இதை காரணம் காட்டி மகளை மீண்டும் எப்படியாவது தண்டபாணி தலையில் கட்ட திட்டம் தீட்டினார். அதற்கு அப்பாவும், மகனும் ஒத்து வரவேண்டுமே!
“வேணும்னா நீயே பேசிக்கோ!” என்றுவிட்டார் பொதிகாச்சலம். எந்த முகத்தோடு பேசுவார். மகனிடம் இதைப் பற்றி பேசவே முடியாது. அன்று கோபத்தோடு வெளியேறியவன்தான். இன்னும் வீட்டுப் பக்கமே வரவில்லை. எப்படி அவனிடம் பேசமுடியும். பேத்திக்கு விசேஷம். வந்தா வா என்று பொதிகாச்சலமும் மூன்றாம் மனுஷியைப் போல்தான் அழைத்தார். கடனே என்றுதான் கிளம்பிவந்தார்.
மறுநாள் வந்துசேர்ந்த சீனி குடும்பத்திற்கு, தண்டபாணி, ஹோட்டலில் அறை எடுத்துக் கொடுத்துவிட்டான். அவர்கள் அங்கேயே குளித்து உடை மாற்றி கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
வரும்பொழுதே பட்டு வேட்டி, சட்டையில்தான் வந்தான்.
பழனிமலை அடிவாரத்தில், குடி கொண்டுள்ள ஆவினன்குடி பாலமுருகன் கோவில். பட்டுச் சேலை, தலை நிறைய மல்லிச்சரம், கழுத்தில் அளவான நகை அலங்காரத்தில் இருந்தவள் முகம் ஒருவிதமான இறுக்கத்தோடுதான் காணப்பட்டது. எதுவும் தன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு உணர்வு. மறுதலிக்க முடியாத நிலை. எல்லாம் பிள்ளைக்காக. எல்லோரது முடிவும் ஒருமித்த கருத்தாக அதுவாகவே இருக்க, அப்போ… எனக்காகவென்று எதுவும் இல்லையா? எத்தனை அவமானங்கள், கேள்விகள், கேலிகள்.
ஊருக்குக் கிளம்பும் முன் அவனிடமும் எல்லாமே ஆத்திரத்தோடும், ஆற்றாமையோடும் பேசிவிட்டாள்தான். இருந்தும் ஏனோ முரண்டியது மனம். அன்று எல்லாருக்கும் தவறாகத் தெரிந்தது, இன்று ஒரு மஞ்சள் கயிறு எல்லாவற்றையும் சரிக்கட்டி விடுமா?
இங்கு வரும்முன், அவனும் அதைத்தானே சொன்னான்.
இவர்கள் இருவரும் பேசி ஒரு முடிவிற்கு வரட்டுமென, அமிர்தாவை அழைத்துக் கொண்டு அய்யம்மாவும், வேலாயுதமும் கீழே பார்க்கிற்கு சென்றுவிட்டனர்.
எப்படி ஆரம்பிப்பதென்று அவனும், அவனே ஆரம்பிக்கட்டுமென இவளும் சில கணங்கள் அமைதியிலேயே கழிந்தது. நீள் சேஃபாவில் இவன் அமர்ந்திருக்க, பக்கவாட்டு ஒற்றை சோஃபாவில் அமர்ந்திருந்தவள் பார்வை அதிமுக்கிய வேலை போல் கைவிரல் நகத்தையே ஆராய்ந்து கொண்டிருக்க, அவனோ வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தான்.
இத்தனை நாட்களாக வருவான், போவான். பேச்சு பெரியவர்களை வைத்தோ, அமிர்தாவை வைத்தோ பொதுவில் இருக்கும். இந்தத் தனிமை சற்றே அசௌகர்யத்தைக் கொடுத்தது இருவருக்கும். காற்றாடி சுழலும் சப்தமும், ஃப்ரிட்ஜின் மெல்லிய இரைச்சல் மட்டுமே அங்கே நிறைந்திருந்தது.
ஆழ்ந்து மூச்செடுத்தவன், “பழனி!” என்று அழைத்து மௌனத்தை உடைக்க, விழி மட்டுமே உயர்த்தி பார்த்தாள். நிமிர்ந்து அமர்ந்தவன், சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
“மனசு ஒன்னு சேந்தா போதும். தாலிங்கறது ஊருக்காகத்தான்னு சொன்னது நான்தான். அந்த வயசு, அந்த நேரம், அப்படித்தான் யோசிச்சது. சமூகம் பத்தின அக்கறையில்லாத வயசு. நான், எனக்கு மட்டும்னு யோசிக்கிற வயசு. ஆனா நீயும், நானும் அமிர்தாவோடு அப்பா, அம்மாவா இருக்கறதுக்கு அடையாளம் அவசியம் பழனி. சீனியப்பனுக்குதான் வரட்டுக் கௌரவம், வீம்பு, கோபமெல்லாம். அமிர்தாவோட அப்பாவுக்கு அதெல்லாம் இல்ல. இப்பதானே ஒரு பிள்ளையப் பெத்திருக்கேன். போகப்போக இதெல்லாம் பழகிக்குவேன். கற்பு போச்சு, வாழ்க்கை கொடுன்னு, என்னைக்கும் நீ என்னைத் தேடி வரமாட்டேன்னு சொன்ன. இப்பவும் நீயா என்னைத் தேடி வரல. காலத்துக்கும் சகுந்தலைதான் பிள்ளையத் தூக்கிட்டு துஷ்யந்தனைத் தேடி வரணுமா என்ன? துஷ்யந்தனும் பிள்ளைக்காகத் தேடி வரலாம். இத்தனை நாள் தேடி வராதது என்னோட தப்புதான். அதுக்காக என்ன தண்டனை கொடுத்தாலும் வாங்கிக்கறேன். அதுக்காகவாவது நீ என்கூட இருக்கணும் பழனி! இத்தனை வருஷம் எங்க போனேன்னு நீ கேக்கலாம். குழந்தை பற்றி தெரிஞ்சிருந்தா, நீ எங்க இருந்திருந்தாலும் கண்டிப்பா தேடி வந்திருப்பேன்” என்றவனை வெற்றுப் பார்வை பார்த்தவள் இதழோரம் கேலியாய் ஒரு புன்னகை.
அந்தப் பார்வைக்கும், அந்தச் சிரிப்புக்குமான அர்த்தம் புரியாமலில்லை. கடந்த காலத்தை மீட்டுக் கொண்டுவரும் சக்தி யாருக்கும் இல்லையே! வடுக்களை கீறாமல் இருப்பதே உத்தமம். ஆனால், இங்கு இன்னும் பச்சை ரணமாக அல்லவா இருக்கிறது.
உள்ளார்ந்து அவன் சொன்ன வார்த்தைகளை காதளவில் மட்டுமே கேட்டுக் கொண்டாளே ஒழிய, எந்தப் பதிலும் சொல்லவில்லை. இறுகிப் போய்தான் அமர்ந்திருந்தாள்.
அவளின் அமைதி, அதற்கு மேல் என்ன பேசுதென்று தெரியவில்லை அவனுக்கும்.
“ஏதாவது பேசும்மா! ஏன் தேடி வரலைன்னு சட்டையப் புடிச்சாவது கேளு!” என்றான் வலி நிறைந்த குரலில். எப்படியாவது அவளைப் பேச வைக்க வேண்டும் எனும் ஆதங்கம்.
ஒரு கணம் அவனை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தாள். அந்தப் பார்வையில் எந்த தடுமாற்றமும் இல்லை. இவன்தான் அவளது பார்வையின் தீட்சண்யத்தில் தடுமாறினான்.
தொண்டையைச் செருமியவள், விரல் நுனியை ஆராய்ந்து கொண்டே, “இந்த அஞ்சு வருஷத்துல உங்களுக்கு கல்யாணம் ஆகியிருந்தாலோ, இல்லை… எனக்கு வேற யாரு கூடயாவது கல்யாணம் ஆகியிருந்தாலோ இதையே கேப்பீங்களா?” நிதானமாகக் கேட்க, முகத்தில் அறைந்தது அவளது கேள்வி.
உண்மைதானே! பொதிகாச்சலமும் எத்தனை முறை இவன் திருமணப் பேச்சை எடுத்தார். அதே போல் அவளுக்கும் வீட்டில் அழுத்தம் கொடுத்திருப்பார்கள்தானே? யாருக்காவது ஒருத்தருக்கு நடந்திருந்தாலும் இந்த பேச்சிற்கே அவசியமில்லைதானே? அப்படியானால்… இப்பொழுது மட்டும் எதற்கு இதைப்பற்றி பேசவேண்டும். அவளது கேள்வி நியாயம் புரிய அவனிடம் பதிலில்லை.
“அமிர்தா பிறக்கறதுக்கு முன்னாடியே, அவளை யு.எஸ்.ல இருக்குற எங்க சின்ன அண்ணனுக்கு (வந்தனா மகன்) தத்துக் கொடுத்துட்டு, எனக்கு வேற கல்யாணம் பண்ணிவைக்கிற ஐடியாலதான் பெரியவங்க இருந்தாங்க. அவங்களுக்கும் ட்ரீட்மென்ட் எல்லாம் எடுத்தும் ரொம்ப நாளா குழந்தை பிறக்கல” என்றவளை அதிர்ந்து பார்த்தான்.
“எனக்கும் அமிர்தா பிறக்கும் வரைக்குமே, இதைவிட்டு அடுத்து மூவ் ஆனாப் போதும்னுதான் இருந்தது. அண்ணா உங்க அம்மாவைப் பார்த்து பேசினதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் அப்போ இங்க இல்ல. அதனால என்கிட்ட யாரும் சொல்லல. எனக்குத் தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அண்ணனை, உங்க வீட்டுக்குப் போக விட்டிருக்க மாட்டேன்” என்றவள் நிமிர்ந்து அவனை ஒரு பார்வை பார்த்தாள். அவனுக்குதான் தெரியுமே. கண்டிப்பாக வாழ்க்கைப் பிச்சை கேட்டு வரமாட்டேன் என்று மண்டபத்தில் வைத்தே சொன்னவளாயிற்றே?
இருவரும் காலம் காலமாக கசிந்துருகி காதல் செய்தவர்கள் இல்லை. வருடக்கணக்கில் தன்னை மனதில் வைத்து, நினைவே ஒரு சங்கீதமென வாழ்வதற்கு. ஒருநாள் பார்த்து, பார்த்ததும் பிடித்தம் வந்து, இவன் விருப்பத்தை வெளிப்படுத்தும் முன், அதிர்ஷ்ட்டவசமாக கல்யாணத்தில் வந்து நின்றது. அப்படியிருக்க தன்னை நம்பி, தன்னை ஒப்படைத்தவளுக்கு தான் செய்தது என்ன? அவனே அவனை மன்னிக்க முடியாதளவிற்கு மனசாட்சி அவனைக் குத்திக் கிழித்தது.
“பெரியம்மாகிட்ட அண்ணே ஸ்கைப்ல பேசும்போதுதான், உங்க அம்மாவைப் பார்த்து பேசியதையும், அவங்க ப்ரூஃப் கேட்டதையும் அண்ணன் பேச்சுவாக்குல கோபமா சொல்ல, வீடியோ கால்ல இருந்ததால எனக்கும் கேட்டுச்சு. அப்பவே எனக்கும் செம கோபம். எனக்காக யார்கிட்டேயும் வாழ்க்கை கொடுங்கன்னு கேட்டுப் போகாதே, இன்னொரு தடவை யாராவது இதைப் பத்திப் பேசினா, கடல் கடந்து வந்தவ, கண்காணாமப் போயிருவேன்னு கோபமா சொல்லிட்டு வச்சுட்டேன்!” என்றவளையே பார்த்திருக்க,
“இதுக்கு மேல மூவ் பண்ணத் தெரியாமலோ, முடியாமலோ இல்ல. நீங்க சொன்ன மாதிரி இந்தகாலத்துப் பொண்ணுக்கு அதொன்னும் பெரிய விஷயமில்லை! ஆனா… பட்ட அவமானம் எல்லாம்” என்றவள் ஆயாசமாய் மூச்சை இழுத்துவிட்டாள். அன்று அந்த சூழ்நிலையில் கோபத்தில் சொல்லியது. இன்னும் அதே வார்த்தைகளைச் சொல்லி இவனை நிந்திப்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
“பழனி!” என்றான் பரிதவிப்பாய். “அது ஏதோ… அந்த நேரத்துல…” என்றவனை கை உயர்த்தி தடுத்தாள்.
அவனுக்கும் அவள் நிலமை புரிந்தது. ஃபோட்டோ எடுத்து அனைவரும் பார்க்கும்படியாக ஃப்ளெக்ஸ் வைப்பதையே விரும்பாதவள். என் அந்தரங்கம் எனக்கு மட்டுமே என்றவள். கல்யாணத்திற்கு முன்பே கட்டுப்பாடு மீறியிருக்கிறாள் எனத்தெரிந்த பிறகு எந்தளவிற்கு அவளது அந்தரங்கம் ஊரார் வாயில் அரைபட்டிருக்கும். எத்தனை கூனிக்குறுகிப் போயிருப்பாள். நினைத்துப் பார்க்கவே மனம் நடுங்கியது அவனுக்கு. அந்தச் சூழ்நிலையை எதிர் கொண்டவள் நிலை, அதை எப்படி கடந்து வந்திருப்பாள். முத்தம் கொடுக்கும் ஃபோட்டோவை வீதியில் வைத்துவிட்டு, என் அப்பா முகத்தில் எப்படி முழிக்க முடியும் என்று கேட்டவள், அதன் பிறகு அப்பாவையும், அண்ணனையும் எப்படி எதிர் கொண்டிருப்பாள். அதனால்தான் யாரும் வேண்டாம் என கடல் கடந்து போயிருப்பாளோ? இப்பொழுது நினைக்க நினைக்க மனம் கிடந்து தவித்தது. அப்பொழுது உடன் நின்றிருக்க வேண்டியவன். அப்பொழுது துணைக்கு நில்லாமல் இன்று குழந்தைக்காக என்று வந்து நின்றால், எவளால்தான் ஏற்றுக் கொள்ளமுடியும்?
“எங்க அம்மா, எங்கிட்டப் பேசவே அஞ்சு வருஷம் ஆகியிருக்கு. அந்தளவுக்கு அவங்களும் அவமானப்பட்டிருக்காங்க. ஒரு நாள்தானே இருந்தாங்கன்னு உங்க அம்மா மட்டுமில்ல, எல்லாரும் கேட்டதுதான். அதனால அவங்க கேட்டதொன்னும் எனக்குப் பெருசாத் தெரியல.”
“ஒரே நாள்ல எப்படி… டாக்டர் கொடுக்குற டேட்ஸ்ல கூட எங்களுக்கு சக்சஸ் ஆகமாட்டேங்குதுன்னு, அவங்களுக்கு எத்தனையோ டரீட்மென்ட் பாத்தும், நமக்கு குழந்தை இல்லையே… இவ பிள்ளைய தத்தெடுத்துக்கச் சொல்றாங்களேங்குற ஆதங்கத்துல, விளையாட்டுப்போல எங்க சின்ன அண்ணியும் கேட்டாங்க. வீதியில நிக்க வச்சு, சேலைய உருவின மாதிரி இருந்துச்சு!” இத்தனை வருடங்கள் கழித்தும் இன்று அவமானப்பட்டது போல் ரணமாக வந்து விழுந்தன வார்த்தைகள். சட்டென முகம் கருத்துவிட்டது அவனுக்கு. கேட்டவளுக்கு எப்படி இருந்திருக்கும்.
“பழனி!” அதிர்ந்து அழைத்தவன் வார்த்தையில் உயிர்ப்பே இல்லை. இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. இன்று துடித்து யாருக்கு என்ன பிரயோஜனம். வலியெல்லாம் அனுபவித்தது அவள் மட்டும்தானே?
“இதே கேள்வியை, இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணி, அவனும் ஒரு நாள்தான் தங்கியிருந்தீங்கலாமே… அதெப்படின்னு சரசமா கேக்குற மாதிரி கேட்டு… வார்த்தையாலே கத்தி இறக்கிட்டா, அதைத் தாங்குற சக்தி சத்தியமா எனக்கில்ல. ஏன்னா, முதல்ல தாராளமா வாழ்க்கை கொடுக்குறேன்னு, தியாகி மாதிரி வருவாங்க. பொம்பளைங்க அவங்க கற்பை லாக்கர்ல வச்சு பாதுகாத்து கொண்டு வரணும்கற ஆம்பளை புத்தி என்னைக்காவது வெளியே வந்திடும். வாட்’ஸ் யுவர் நம்பர்னு ஒரு ஆம்பளைகிட்ட கேட்டா, நம்ம நாட்டுல அது ஆம்பளைத்தனம். அதுவே ஒரு பொம்ளைகிட்ட கேட்டா *சித்தனம்.”
அவள் பேசப்பேச, அவனுக்குள் அழுத்தம் கூடிக்கொண்டே போனது.
“கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள அப்படி நடந்தப்போகூட எனக்குள்ள குற்ற உணர்வோ, தப்பு பண்ணிட்டோமோங்குற எண்ணமோ துளிகூட வரல. அந்தளவுக்கு மனசளவுல உங்க மனைவியா நான் தயாராகிட்டேன். ஆனா, நீங்க அப்படிக் கேட்டதுக்கப்பறம், இனிமே எப்படி உங்க கூட என்னால இயல்பா இருக்க முடியும் சொல்லுங்க? நீங்கதானே சொன்னீங்க, அது ஒரு அழகான சங்கமம்னு. இனி அப்படி ஒன்னு நமக்குள்ள நடக்க வாய்ப்பேயில்லை.”
“உடலோடு, உணர்வும் கலந்த ஆத்மார்த்தமான சங்கமமது. இனிமே நமக்குள்ள உடல்கள் வேணா சங்கமிக்கலாம். உணர்வுகள் சங்கமிக்க வாய்ப்பேயில்லை. அது எனக்குள்ள என்னைக்கோ செத்துப் போச்சு. ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல, நான் முன்னெடுத்துட்டாக்கூட, கல்யாணத்துக்கு முன்னாடியே ஆர்வம் காட்டினவதானேங்குற நெனப்பு உங்களுக்குள்ள வந்துருமோ, தப்பா நெனச்சுருவீங்களோன்னுதான் மனசு கெடந்து தவிக்குமே ஒழிய, அந்தளவுக்கு இனிமே உங்ககூட என்னால சத்தியமா முடியாது. ஒவ்வொரு நாளும் என்னால உணர்வுகளால பொசுங்கி தீக்குளிக்க முடியாது” என்றவள் அதற்கு மேல் பேசமுடியாமல் தொண்டையடைக்க, முகத்தை மூடி வெடித்து அழ, அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும், அவனைக் கூறிய வாளாய்க் குத்திக் கிழித்தது.
அதிர்ந்து சிலையாய் சமைந்துவிட்டான். இத்தனை வருட அழுத்தத்தையும் அவனிடம் வார்த்தை எனும் சாட்டை கொண்டு விளாசித் தள்ளிவிட்டாள். தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தவள் எரிமலையாய் கொட்டித் தீர்த்துவிட்டாள்.
*பெண் மனசு ஆழமென்று
*ஆம்பளைக்கு தெரியும்
*அது பொம்பளைக்கும் தெரியும்
*அந்த ஆழத்துல என்ன உண்டு
*யாருக்குதான் தெரியும்
*அது யாருக்கு தான் தெரியும்
*அதில் முத்திருக்கா
*முள்ளு குத்திருக்கா
*அது யாருக்குத்தான் தெரியும்…
இனி தொடரப் போகும் பாதை முள் பாதைதான் என்பது கண்கூடாகக் தெரிந்தது அவனுக்கும். உணர்வுகளால் மறித்துப்போன ஒருத்தியை உயிர்ப்போடு மீட்டுக் கொண்டுவருவதொன்றும் அத்தனை எளிதல்லவே!”
*****
இப்பொழுதும், “உன் முடிவு என்ன ஆயா? எதுவா இருந்தாலும் அப்பா இருக்கேன்!” என்றவருக்கு சம்மதம் என்பதைத் தவிர, வேறு என்ன பதில் சொல்லமுடியும்? இத்தனை வருடம் அலைக்கழித்தது போதும் என்றுதான் தோன்றியது.
பெற்றவர்கள் நிம்மதி என்ன? பிள்ளைகளின் அமைதியான எதிர்காலம் மட்டுமே. இதுவரை கூட எதற்காகவும் தன்னை வற்புறுத்தியதில்லை.
மறுபடியும் பார்த்தசாரதி பற்றிய பேச்சை எடுத்தது கூட தண்டபாணிதான். அப்பொழுதும் யாரும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றுதான் மகனையும் கண்டித்தார். அவனும் தனக்காக என்றுதானே இன்னும் தனக்கென ஒரு முடிவிற்கு வராமலிருக்கிறான். இத்தனையும் யோசித்தவள் மனமும் ஒரு நிலைக்கு வந்து நின்றது.
இதோ எல்லோரது விருப்பப்படி, ஆவினன்குடி பாலமுருகன் கோவிலில் வைத்து, இரண்டு குடும்பத்தாரின் முன்னிலையில் மட்டும், மாலை மாற்றி, பொன் தாலிச்சரடை, அணிவித்தவன் கண்கள் அவளையே பார்த்தது. இப்பொழுதும் அவள் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் செவிக்குள் எதிரொலித்தது.
கலையரசிதான் உடைந்து அழுதார். எப்படியெல்லாம் நடத்த ஆசைப்பட்ட, மகளின் திருமணம். எப்படி நடக்கிறதென்று.
தண்டபாணி கையிலிருந்த அமிர்தா, அம்மாச்சி அழுவது காரணம் புரியாமல் பயந்து பார்க்க, “அம்மா!” என்றான் அடக்கிய குரலில். கண்களை துடைத்துக் கொண்டு, பேத்தியை கையில் வாங்கிக் கொண்டார்.
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, அமிர்தா, “நானும்!” என்று கலையரசி கையிலிருந்த அட்சதையை வாங்கி தலையில் போட,
“கொடுத்து வச்சவர் பாஸ் நீங்க. இப்படியொரு ஆசீர்வாதம் யாருக்கு கிடைக்கும்!” ராகவன் கிண்டல் பண்ண, மெல்லிய முறுவல் மட்டுமே அவனிடம்.
“டேக் இட் ஈஸி பாஸ். சீக்கிரம் எல்லாம் சரியாகும். நான் புலம்பறப்ப எல்லாம் இப்படித்தானே சொல்வீங்க!” அவனது எண்ணவோட்டம் என்னவெனப் புரிந்தவன் கேலி செய்து மனதை மாற்ற முயற்சி செய்தான்.
அவனது கேலி புரிந்து சிரித்தவன் சிரிப்பு உதட்டளவில்தான் நின்றது. கண்களை எட்டவில்லை.

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
ThaThank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫