முக்கனியும் சக்கரையும் 25

25 

“அங்கிள், மூவ் ப்ளீஸ்!” ஆங்கிலத்தில் மிழற்றிய கிள்ளை மொழி கேட்டு குனிந்து பார்த்தான். அவனை அண்ணார்ந்து பார்த்து பளிச்சென சிரித்தவள் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டு, முகத்திலும் பிரதிபலித்தது.

தலைமுடி பறக்காதளவிற்கு இளஞ்சிவப்பு நிறத்திலான ஹெட் பேன்ட், இளஞ்சிவப்பு டீ சர்ட்டிற்கு மேலே, முட்டிவரை இருந்த நீலக்கலர் டெனிம் டங்காரியில், மெழுகில் செய்த பார்பி டால் போல் மனதை கொள்ளை கொண்டது பூஞ்சிட்டு.

“கிட்ஸ் செக்ஷன் நெக்ஸ்ட் ரோ ஸ்வீட்டி!” என்றான் மலர்ந்த முகமாக.

ஆண்கள் ஆடையகப் பிரிவில், ஹேங்கரில் வரிசையாக தொங்கும், சட்டையை எட்டி எடுக்க முடியாமல் எக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து.

“ஐ க்னோ அங்கிள். ஐ’அம் லுக்கிங் ஃபார் மை அங்கிள்!” என்று மழலை மாறாமல், நுனி நாக்கில் அவள் பேசிய ஆங்கிலம், அவனை வியப்பில் ஆழ்த்தியது.

சட்டைகளைப் பார்ப்பதும், எட்டி எடுக்க தாவி முயற்சி செய்வதுமாக இருக்க, இவனும் அவளைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ிறுபிள்ளை என விற்பனைப் பெண்களும் கண்டு கொள்ளவில்லை. 

“உன் கூட வந்த பெரியவங்க எங்கே? தனியா விட்டுருக்காங்க!” என்றான் சுற்றும்‌ முற்றும் பார்த்துவிட்டு. 

“மம்மி அன்ட் அங்கிள் ஆர் தேர்!” என்றவள், 

“ஹெல்ப் மீ ப்ளீஸ்!” மழலையில் கண்களைச் சுருக்கிக் கொஞ்சினாள். இந்த பாவனை அவனுக்கு எங்கேயோ பார்த்த ஞாபகம். முகம் கூட நன்கு பரிச்சயமானது போல் இருந்தது. சிலரைப் பார்க்கையில் அப்படித்தான் மிக நெருக்கமாகத் தோன்றும் போல. அதுவும் குழந்தைகள் என்று வரும்பொழுது மனதைக் கொள்ளையடிக்கவில்லை என்றால்தான் ஆச்சர்யம். 

“உங்க அங்கிள் சைஸ் தெரியுமா?” என்றான். 

சற்று‌ நேரம் நாடியில் தட்டி யோசித்தவள், அவனை ஒரு‌முறை‌ பார்த்துவிட்டு, 

“ஹீ லுக்ஸ் ஜஸ்ட் லைக் யூ” என்றாள். இந்தக் காலத்துப் பிள்ளைங்க வெரி ஸ்மார்ட் என நினைத்தவன், உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான். 

“அப்போ இது ஸ்மால் சைஸ்.  லார்ஜ் சைஸ்ல வேற ஷார்ட் காமி. எடுத்துத் தர்றேன்!”

“நோ அங்கிள். ஐ லைக் திஸ். ஐ வான்ட்‌ திஸ்!” குரலில் அத்தனை தெளிவு. அத்தனை‌ அழுத்தம். அவனுக்கு சிரிப்புதான் வந்தது. 

அவளுக்குப் பிடித்த சட்டையின், லார்ஜ் சைஸைத் தேடி, அவனே எடுத்துக் கொடுக்க, 

“தாங்க்ஸ் அங்கிள்!” என்று அவசரமாக சொல்லிவிட்டு, அம்மாவிடம் காட்ட ஓடினாள். தலையை ஆட்டி சிரித்துக் கொண்டான்.

“ஃப்ரூட்டி!”

“…”

“ஃப்ரூட்டி!”

“…”

“திரும்பப் போறீயா இல்லையா?”

“திரும்ப மாட்டேன் போடீ!” என்று வீம்பாக இருந்ததில், 

“ம்மாஆஆஆ…” என தொண்டை கிழிய அலறியதில், அங்கே இருந்த சிலர் இவளைத் திரும்பிப் பார்த்தனர். 

“ஏன்டீ‌ கத்தி மானத்தை வாங்குற!” பல்லைக் கடித்தவள், வேகமாகத் திரும்பி பிள்ளையின் வாயைக் கப்பென அடைத்தாள்.  

கையை வலுக்கட்டாயமாகப் பிரித்து எடுத்துவிட்டு, “ஹவ் மெனி டைம்ஸ் டூ யூ கால் மா?” என்றாள். 

“நானும் அப்படிக் கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன் அம்மு!” என்றாள் கோபம் துளிர்க்க. 

“தேட்ஸ் யுவர் ஸ்வீட் நேம் மம்மி!” தோளைக் குலுக்கி சட்டம் பேசிய மகளை இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றாள். அவளும் அம்மாவைப் போலவே முறைத்து நிற்க, 

“எதுக்குடீ கூப்பிட்ட?” அதிகாரமாகக் கேட்க, 

“இது எப்படியிருக்கு. பாத்து சொல்லு!” ஆணையிட்டாள் மகள்‌.‌ 

“நல்லால்ல…” என்று பார்க்காமலே திரும்பிக் கொண்டாள்.

“பாக்கவே இல்ல…” 

“பார்க்காமலே தெரியும்!”

“தண்டம் மாமாவுக்கு நான் செலக்ட் பண்றதுதான் பிடிக்கும்!” 

“எங்க அண்ணனுக்கு நான் எடுக்கறதுதான் பிடிக்கும்!” 

“ஐ’ஆம் கொன்னா ஆஸ்க் மை தண்டம் மாமா!” (I’m gonna ask my uncle.) தான் எடுத்த சட்டையை அவனிடம் காண்பிக்க ஓடினாள் அமிர்தா‌.‌ 

“அகராதி புடிச்சவ… அடங்கமாட்டா!” செல்லமாய் திட்டிக் கொண்டே, மகளின்‌ அழிச்சாட்டியத்தில் முகத்தில் புன்னகை விரிய, அடுத்து ஹேங்கரில் தொங்கிய சட்டைகளை ஆராய்ந்தாள். 

ஃப்ரூட்டி என அவள் அழைத்துக் கொண்டு ஓடும் பொழுதே, ஏதோ ஒரு உணர்வு அவனுக்குள் உந்த, தன்னிச்சையாக அவனது தலை நிமிர்ந்து, பிள்ளையைப் பின் தொடர்ந்து, பெற்றவளிடம் நிலைத்த பார்வை, அதிர்ந்து நிலைகுத்தி நின்றது. 

ஒரு கணம் கனவோ என்று கூட நினைத்தான். இல்லை என்றது நிதர்சனம். இதயம் துடிப்பது அவனுக்கே கேட்டது. எதிர்பாராத அதிர்ச்சி. அதிர்ச்சி என்றாலும் உங்க வீட்டு அதிர்ச்சி, எங்க வீட்டு அதிர்ச்சியெல்லாம் இல்லை. உலக வல்லரசு நாடுகள் அனைத்தும், வெளியே தெரியாமல் தயாரித்து, பதுக்கி வைத்திருக்கும் அத்தனை நியூக்ளியர் அணுகுண்டையும் அவன் காலடியில் வைத்து, வெடிக்க வைத்து சோதனை செய்தால் எப்படியிருக்கும் அப்படியொரு அதிர்ச்சி. மெல்ல பூமி நழுவியது அவனது காலடியில்.

அவன் பார்த்த பழனி இல்லை அவள். சாம்பல் நிற ஃப்ளார்டு ஜீன் மற்றும் அடர் நீலநிற காட்டன் குர்தாவில் இருந்தாள். இடை தாண்டியிருந்த கூந்தல், பாதி முதுகளவிற்கு தான் இருந்தது. தாய்மையின் பரிசாக, பூசினாற் போல் சற்றே சதைப்பிடிப்பான தோற்றம் வசீகரித்தது. வட்ட முகத்தில், சற்றே கன்னங்கள் வடிந்து, அதுவும் தனி அழகைக் கொடுத்தது. தோலில் தனித்துவமானதொரு மினுமினுப்பு. மொத்தத்தில் பழனியில் பார்த்த பழனி இல்லை அவள். 

அவனையும்‌ மீறி‌ கண்கள் அவளது கழுத்தை ஆராய்ந்தது. கண்ணெடுக்காமல் அவளையே பார்த்து நின்றவன் பார்வையில் தவறாமல் பதிந்தது கழுத்தில் கிடந்த மெல்லிய ரோஸ் கோல்ட் ஜெயின், அதே வைர பென்டன்டோடு. 

புருவம் இடுங்கியது. உடம்பு நடுங்குவது போலானது. மெல்ல உள்ளுக்குள் ஒரு பிரளயம் வெடிக்கத் தயாராகியது. மீண்டும் ஒரு முறை‌ பிள்ளையின் முகத்தை ஆராய்ந்தன கண்கள். முகஜாடை யாரையோ நினைவூட்டியது. பளிச்சென ஒரு‌ மின்னல் வெட்டி, இடியாய் மூளைக்குள் இறங்கியது அவனது கணிப்பு. 

பெங்களூர்… *** மால். 

தண்டபாணி, பழனி மற்றும் அமிர்தாவை வெளியே அழைத்து வந்திருந்தான். வரதராஜன், வந்தனாவோடு இவர்கள் இந்தியா திரும்பி ஒரு மாதமாகிறது‌. சென்னையில் எங்கும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தவளை, தன்னுடன் பெங்களூர் அழைத்து வந்திருந்தான்.

இன்னும் அமிர்தாவைப் பள்ளியில் சேர்க்கவில்லை. விஜயதசமிக்கு பள்ளியில் சேர்க்கத் திட்டம். அதற்கு முன் தங்கையையும், மருமகளையும் பெங்களூர் அழைத்து வந்தவன், அமிர்தா வீட்டிலிருக்க போரடிப்பதாகச் சொல்ல, மாலிற்கு அழைத்து வந்திருந்தான். இன்று அவளுக்கான ஸ்பெஷல் டே. 

ஷாப்பிங் என்ற பெயரில் அம்மாவும் மகளும் மாலில் ஒரு கடை விடாமல் அலசி எடுத்தனர். ஏற்கனவே அவர்கள் இருவருக்கும் ஆடைகள் எடுத்து, ஆளுக்கொரு பிக் ஷாப்பரை நிறைத்துக் கொண்டு, மாமனை சுமைதூக்கி ஆக்கிவிட்டு, அங்கிருந்த ஆண்கள் ஆடையகத்தில் தண்டபாணிக்கு ஒரே ஒரு சட்டை எடுக்க இருவருக்கும் போட்டா போட்டி. 

பழனி‌ ஒரு பக்கம் தேட, இவள் ஒருபக்கம் தேடிக் கொண்டிருந்தாள். 

சீனியும் பெங்களூரில் இருந்த, அவனது கருப்பட்டி கஃபேயை மேற்பார்வையிட வந்திருந்தான். அப்படியே நண்பன்‌ ஒருவனை சந்திக்க மாலிற்கு வந்தவன், நண்பன் வரத் தாமதமாக, பொழுது போகாமல் நின்றவன், உள்ளே வந்து துணிகளைப் பார்வையிட்டவனைத்தான், சற்று நேரத்தில் சேல்ஸ் மேனாக்கிச் சென்றிருந்தாள் அமிர்தா. 

இவள் எடுத்து வந்த சட்டையைப் பார்த்த தண்டபாணி, “செலக்ஷன் சூப்பர், சைஸ் பக்கா!” எனச் சொல்லிக் கொண்டே, “நீயும் தான் இருக்கியே. என்னோட ப்யூட்டி எப்படி செலக்ட் பண்ணியிருக்கா பாரு!” என்று தங்கை மகளை தூக்கிவைத்து மெச்சினான். 

“அவ கந்தத்துணிய எடுத்துவந்து கொடுத்தாக் கூட நீ சூப்பர்னுதான் சொல்லுவ. வா, பில் போட்டு போலாம். பசிக்குது!” என்று அண்ணனை அழைத்தாள்.‌ 

“உங்க அம்மாவுக்கு பசி வந்திருச்சு அம்மு. பசி வந்தா உங்கம்மா, அம்மாவா இருக்கமாட்டாங்க. மம்மாவா மாறிருவாங்க!” தங்கையை கேலி செய்து கொண்டே, மூவரும் பில் போட்டுவிட்டு வெளியேறும் வரை, அந்த இடத்தை விட்டு நகரவில்லை சீனியின் கால்கள். பார்வையும், பாதமும் உரைந்து போய் நின்றன.‌ அவர்கள் வெளியேறுவது தெரிந்ததும்தான், சுமரணை வந்து, கையிலிருந்த சட்டையை எரிந்துவிட்டு அவர்களைப் பின் தொடர்ந்தான். 

வெளியே வந்து தேட, பக்கத்தில் இருந்த கேக் ஷாப்பில் அவர்கள் நிற்பது தெரிந்தது. 

“பேபி குட் நேம் ப்ளீஸ்!” என்று‌ கேட்க, 

“அமிர்தவர்ஷினி!” அழகாய்ச் சொல்லியது கிள்ளை.

“இனிஷியல் மேம்?” என்று கேட்க,

“அதெல்லாம் வேண்டா…” என்று அவள் முடிக்கும் முன்,

“எஸ்.அமிர்தவர்ஷினி!” என்று முந்திக் கொண்டு சொல்ல, பக்கத்தில் நின்ற அண்ணனை முறைத்துப் பார்த்தாள் பழனி. 

“என்னை ஏன்‌ மொறைக்கிற?” என்றான். பட்டென முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“பெரியவங்க பண்ணினது பழனி. நீ கோபப்பட்டு, அவ மூட‌ ஸ்பாயில் பண்ணாதே!” என்றான் அமிர்தாவிற்கு கேட்காத வகையில். 

இவள் பிரசவ வேதனையில் இருக்க, மருத்துவமனையில் குழந்தை பற்றிய அனைத்து விபரங்களையும் சேர்க்கை படிவத்தில் நிரப்பியது, இவளுடனிருந்த வந்தனாதான். தந்தை பெயர் உட்பட. 

அவர்கள் பேசுவது கேட்கவில்லை எனினும் ஏதோ பழனிக்குப் பிடிக்காத விஷயம் என்று மட்டும் அவளது முகபாவனையில் தெரிந்தது எட்டத்தில் நின்று பார்த்தவனுக்கு.

அடுத்து என்னவென அவன் பார்த்து நிற்க, அவன்‌ முகம் சடுதியில் கலையிழந்து போயிற்று.

தண்டபாணி, தங்கை மகளை இடக்கையில் தூக்கிக் கொண்டு அங்கிருந்த வட்ட மேஜையில் கேக்கை வைத்தவன், நடுவில் மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்து, “கோ ஆன் ப்யூட்டி!” என்றான் அவன்‌ குனிந்து கொண்டு. 

மாமனின் கைகளில் இருந்தவள், முகம் கொள்ளா சந்தோஷத்தோடு ஊத, கேக் ஷாப்பில் இருந்தவர்களும், கைதட்டி, வாழ்த்துப் பாடி அந்த சந்தோஷத்தில் பங்கெடுத்துக் கொண்டனர். 

பார்த்துக் கொண்டிருந்தவன்‌ முகம்தான் இருளடைந்து போயிற்று. மகளின் ஜனனதினம்‌ இன்று. யாருமற்றவள் போல் எங்கோ ஓரிடத்தில் இருவர் முன்னிலையில் மட்டுமே கொண்டாடப்படுகிறது. வெறும் பார்வையாளராக மட்டுமே பெற்றவன் நிற்கும் கொடுமை‌. 

கொடைக்கானல் சென்றது டிசம்பர் மாதம். இது செப்டம்பர்‌ மாதமாக இருக்க, அப்படியானால் என அவன் மனம்‌, ஜனித்த தினத்தை கணக்குப் போட, இந்த சூழ்நிலையில் தன்னை எப்படி உணர்கிறான் என்றே அவனுக்குத் தெரியவில்லை. மனதை ஏதோ ஒன்று இறுக்கிப் பிடித்தது. இலேசாக கண்கள் கூட வெறுமையில் கலங்குவது போல் ஆயிற்று. 

கேக்கை கட் பண்ணி, அங்கிருந்தவர்களுக்குக் கொடுக்க, 

கண்களில் வெப்பம் தகிக்க அவர்கள் முன் வந்து ‌நின்றான் சீனி.‌ அவனுக்குள் ஓடிய கோபத்தின் அதிர்வை, நடுங்கிய அவன் உடல் மொழியே காட்டிக் கொடுத்தது. சட்டென தங்கள் முன்‌ வந்து நின்றவனைப் பார்த்து சடுதியில் அதிர்ந்தது பழனியின் முகம். அடுத்த கணமே தன்னை மீட்டுக் கொண்டாள். அந்தளவிற்கு பக்குவப்பட்டுவிட்டாள். 

“ஹாய் அங்கிள்! டுடே இஸ் மை பெர்த் டே!” என்று அவனிடமும் காகிதத் தட்டிலிருந்த கேக்கை நீட்டியவள், “ம்மா… இந்த அங்கிள்தான் ஷர்ட் எடுக்க எனக்கு ஹெல்ப் பண்ணினாங்க!” 

அம்மாவிற்கு அப்பனை அறிமுகப்படுத்தி வைத்தது பிள்ளை. 

*****

“அம்மாஆ…” 

பெங்களூரில் இருந்து எப்படி காரை செலுத்திவந்தான் என்பது அவனுக்கே  தெரியாது. புயலென வந்திருந்தான். வீடே ரெண்டு பட்டது அவன் கத்தியதில். கண்கள் சிவந்து தலைமுடி களைந்து பார்க்கவே அகோரமாகக் காட்சியளித்தான்.

அடித்துப் பிடித்து வெளியே ஓடிவந்தார்‌ காந்திமதி என்னவோ ஏதோவென. அங்கு சோஃபாவில் அமர்ந்து கைபேசியில் கவனம் வைத்திருந்த ரஞ்சனிக்கும் அண்ணனின் கோபம் கொஞ்சம் பயம் கொடுக்கத்தான் செய்தது. உள்ளே வந்ததும் வராததுமாக இரைந்து கத்தவேண்டிய அவசியம் என்ன வந்ததென அவளும்‌ பார்க்க, 

“தண்டபாணி இங்கே வந்தாப்டியா?” என்றான்‌ எந்த முகாந்திரமும் இன்றி.‌

“யாரு சீனி தண்டபாணி?” என்றார்‌ சட்டென நினைவு வராததுபோல். அடிபட்ட புலி போல், மகன் வந்து நின்ற தோற்றமே ஏதோ சரியில்லை என உள்ளுக்குள் கோடாங்கி அடித்ததில், மெல்ல குளிரெடுத்தது. வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அண்ணனின் முகத்தைப் பார்த்த ரஞ்சனிக்கும் மிதமிஞ்சிய பயம். 

“அவ்வளவு சீக்கிரம் மறக்குற பேரில்லையேம்மா. முறைப்படி எல்லாம் நடந்திருந்தா இந்த வீட்டு மாப்பிள்ளை அவர். அதுக்குள்ள மறந்திருச்சா?” கேலியாகவே கேட்டான்.

“நடக்காததெல்லாம் எதுக்கு ஞாபகம் வச்சுக்கிட்டு?” விட்டேத்தியாக வந்தது பதில். 

“அதை விடுங்க. தண்டபாணி இங்க, எப்போ வந்தாப்ல? வந்து என்ன‌ சொன்னாப்டி. நீங்க அதுக்கு என்ன பதில் சொல்லி அனுப்புனீங்க?” குரலில் அழுத்தத்தோடு, அவன்‌ ஒவ்வொரு கேள்வியாக நிறுத்திக் கேட்ட விதமே, காந்திமதிக்கு ஈரக்கொலை நடுங்கியது. மகனுக்கு ஏதோ தெரிந்திருக்கிறது என்று விளங்கியது. 

“என்ன சீனி! ஏன்‌ இவ்வளவு கோபம்?” கேட்டுக் கொண்டே வெளியே வந்தார் பொதிகாச்சலம்.

“நீங்களும் என்கிட்ட மறச்சுட்டீங்கப்பா!” என்றான் ஆற்றமாட்டாமல். 

“எதை மறச்சேன் சீனி? எனக்கொன்னும் புரியல?”

“பழனியோட அண்ணன்‌ வந்ததை!” என்று சொல்ல மகனை புரியாமல் பார்த்தார். 

“தண்டபாணி ஏன் இங்க வரணும். நான் எதுக்கு அதை உன்கிட்ட மறைக்கணும்?” 

“அப்போ உங்கிட்டயும் சொல்லல?” என்றவன் முகம் கருத்து சிவந்துவிட்டது கோபத்தில். 

“இப்போ என்னடா? என்னவோ சிதம்பர ரகசியத்தையா மறச்சாங்க. ஆமா… அஞ்சு வருஷத்துக்கு முன்ன ஒரு நாள் வந்தான். நீ பெங்களூர் போனவன், கொரானோ லாக் டவுன்ல சிக்கிக்கிட்ட. தங்கச்சி குழந்தை உண்டாகியிருக்கான்னு வந்து சொன்னான். அதை ஏன் இங்க வந்து சொல்றேன்னு கேட்டேன். அவ இருக்கறது வெளி‌நாட்லயாம். அங்க எவனுக்கோ புள்ளையப் பெத்துட்டு இங்க வந்து சொல்றதுன்னா என்ன அர்த்தம்னு வேண்டாம்?” 

அவள் அந்த நேரத்தில் வெளிநாட்டில் இருந்தாள் என்பதே இவனுக்கு புதிய செய்தி. இப்பொழுது தான் பிள்ளையின் ஆங்கில உச்சரிப்பு உரைத்தது அவனுக்கு. அடுத்த வாரம் எனக்கும், எங்க மாமா பையனுக்கும் கல்யாணம் எனச் சொல்லிவிட்டு, கோபத்தில் இவனது கைபேசி எண்ணை தடை செய்ததில் இவனும், தனது ஈகோவை விட்டு இறங்கி வராமல் அவளை அதற்கு மேல் தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை. மண்டபத்திலேயே அவளுக்கும் பார்த்தசாரதிக்கும் திருமணம் செய்து வைக்கப் போவதாக இவன் முன்னாடியேதானே பேச்சு அடிப்பட்டது. 

புதிய கிளை ஒன்றை பெங்களூரில் திறப்பது விவரமாகச் சென்றவன், சிறிய விபத்து ஒன்றில் சிக்கியதில், கொரோனா லாக் டவுனில் அங்கேயே தங்கவேண்டியதாய்ப் போயிற்று. 

அந்த சமயத்தில்தான் தண்டபாணி இங்கு வந்தான். வீடுவரை வந்தவனைப் பார்த்து முதலில் அதிர்ந்தாலும்‍, அவனைப் பார்த்த காந்திமதி பார்வையில் இளக்காரம். பொதிகாச்சலமும் வீட்டில் இல்லை. அன்றும், இன்று போலவே ஃபோனைப்‌ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ரஞ்சனி. கணவனோடு பிணக்கில் சடவாக பிறந்த வீடு வந்திருந்தாள். அப்பொழுது விவாகரத்து ஆகவில்லை. கழுத்தில் புதுத்தாலி. 

இவனைப் பார்த்ததும் அதிர்ந்து எழுந்துவிட்டாள். இவன் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. 

இவனைப் பார்த்து காந்திமதிக்கும் அதிர்ச்சியே. எல்லாம் முடிந்து, எந்த தொடர்புமில்லாமல் பிரச்சினை அடங்கிவிட்டது. இப்பொழுது வீடு தேடி வரவேண்டிய அவசியமென்ன என்ற யோசனையோடு அவனைப் பார்த்தார். 

வரவேற்கக் கூட இல்லை. அவனும்‌ அதை எதிர்பார்க்கவில்லை. 

என்னதான் தவறு முழுக்க அவர்கள் பக்கம்தான் என்றாலும், இப்பொழுது சொல்லவந்த செய்தியை சொல்ல முடியாமல் தயங்கி நின்றான். 

உலகமே லாக் டவுனில் ஸ்தம்பித்திருந்த காலகட்டம். கடல் கடந்து சென்ற தங்கை குழந்தை உண்டாகியிருக்கிறாள். புயலடித்து ஓய்ந்தது போல், எல்லாம் கடந்து வந்தாயிற்று என்று எண்ணி நிம்மதியாக மூச்சுவிடக்கூட முடியவில்லை. அதற்குள் அடுத்த இடி தாக்கியது. 

“என் மகளோட வாழ்க்கை. நானே நேரில் பேசுகிறேன்” என்று தணிகைவேல்தான் கிளம்பினார். தந்தை அவர்கள் முன் போய் நிற்பதா என தண்டபாணிக்கு சுயகௌரவம் தடுத்தது. ஊரடங்கும் அதற்கு ஒத்துழைத்தது. அவரால் வரமுடியவில்லை.

மானத்தை விட்டு அப்பாவிற்காக இறங்கி வந்தான் தண்டபாணி. அப்பொழுது அவன் சென்னையில்தானே இருந்தான். தானே நேரில் போய் பேசுவதாக அப்பாவிடம் சொல்லிவிட்டானே ஒழிய, இவர்கள் முன் வந்து நிற்கவே கூசியது. 

மனதைக் கல்லாக்கிக் கொண்டு விபரத்தை கூற, அவன் சொன்ன செய்தியில் காந்திமதி முதலில் அதிர்ந்தாலும், உடனே முகத்தத்தில் இளக்காரம் குடிகொண்டது.‌ உங்க குடுமி என் கையில் என்பது போலொரு பாவனை. அன்று மண்டபத்தில் தன்னையும், மகளையும் என்னவெல்லாம் பேசினார்கள் என்று நினைத்து இன்று எக்காளம் செய்தது. 

“ஏம்ப்பா… நீயும்தானே கூடப்போன. அப்படியிருந்துமா? உன்னையே விளக்குப் புடிக்க வச்சுட்…” என்று சொல்லி முடிக்கவில்லை, 

“வார்த்தையை அளந்து பேசுங்க. வயசுக்கு கூட மதிப்பு கொடுக்க மாட்டேன். மரியாதை கெட்டுறும்” விரல் நீட்டி எச்சரித்தவன் உடல் அதீத கோபத்தில் நடுங்கியது. ஒரு‌ அண்ணனிடம்‌ கேட்கும் கேள்வியா இது! கேட்டது வேறு யாருமாக இருந்தாலோ, இல்லை வயதில் இளையவராக இருந்திருந்தாலோ நடக்கிறதே வேறு. 

ஆத்திரத்தை பல்லைக் கடித்து அடக்கியவன், “ஏன்… உங்க மகளுக்கு புடிச்சேன்னு சொன்னா என்ன பண்ணுவீங்க. அவளும்தானே அவனோட அங்க வந்திருந்தா?” கோபத்தில் அவனுக்கும் வார்த்தைகள் வரம்பு மீறியதில், ரஞ்சனி முகம் இருண்டது.

“எம்மக காதலிச்சாலும் கண்ணியமா இருந்தா. இப்படி வயித்துல வாங்கிட்டு வரல!”

“சாட்சி இல்லைங்கறதுக்காக தப்பு நடக்கலைன்னு அர்த்தமில்ல” என்றவன் திரும்பி ரஞ்சனியை தீப்பார்வை பார்க்க, அவளுக்கு சப்தநாடியும் அடங்கிப் போயிற்று. அன்று, யாருமில்லாத இவர்கள் ரிசார்ட்டிலிருந்து தீனதயாளன் வெளியேறியதைத்தான் பார்த்தானே?

“நீங்க கண்ண்ண்ணியமா பிள்ளை வளத்ததாகவே இருக்கட்டும்” என்று கண்ணியத்தில் கேலியாக சற்றே அழுத்தம் கொடுத்தவன், அதே கண்ணியத்தை உங்க மகனுக்கு சொல்லி வளக்கலை போலயே?” என்றான். அவனது கேலி காந்திமதியைச் சீண்டிவிட,

“ரொம்ப துணிச்சல்தான் உன் தங்கச்சிக்கு! வெளிநாட்டுல இருக்காளாம். பிள்ளை உண்டாகியிருக்கா உங்க புள்ளதான் அப்பான்னு வந்து நீயும் வெக்கமில்லாம நிக்கிற. இருந்தது ஒரே நாள்தானே? இப்பதான் ஏதேதோ டெஸ்ட்டெல்லாம் வந்துருச்சே. புள்ள பொறக்கட்டும் பாக்கலாம்!” பேசச்சொல்லியா கொடுக்க வேண்டும் காந்திமதிக்கு. நாக்கில் விஷம் தோய்த்துப் பேச, அதற்கு மேல் அங்கு நிற்கமுடியாமல் வெளியேறிவிட்டான் தண்டபாணி.

அவன் எதிர்பார்த்து வந்தது பொதிகாச்சலத்தையோ, சீனியையோ. ஊரடங்கு இல்லாமலிருந்தால் சூப்பர் மார்க்கெட்டிற்கே போயிருப்பான். வீடுவரை வந்து இவர்களிடம் அவமானப்பட்டுத் திரும்பியிருக்க மாட்டான். 

“இவ்ளோ நடந்த பின்னாடியும், அவங்க தங்கச்சிக்கு குழந்தை உண்டாகியிருக்கறதை, இங்க வந்து சொல்லியிருக்கார்னா என்ன அர்த்தம்னு கூடவாம்மா புரியல?” பெற்றவளிடம் இதற்கு மேல் இதை எப்படி பேசுவது என்றவன் குரலில் கட்டுக்கடங்காத ஆதங்கம். 

தனக்கு ஒரு குழந்தை இருப்பதையே நான்கு வருடங்களாகக் தெரியாமலிருந்த இயலாமை, அம்மாவிற்கு தெரிந்தும் தெரியப்படுத்தாமலிருந்த ஆத்திரம் உள்ளுக்குள் தீயாய் கனன்றது. 

இன்று மாலில், தன் முன் வந்து நின்றவனைப் பார்த்து முதலில் இருவரும் அதிர்ந்தாலும், “எது கேக்கறதா இருந்தாலும் உன் அம்மாகிட்ட போய் கேட்டுக்கோ!” என்று,

அவனை பிள்ளை முன் ஒரு வார்த்தை கூடப் பேசவிடாமல், அமிர்தாவைத் தூக்கிக் கொண்டு அவசரமாக வெளியேற, “பை… அங்கிள்!” என கையாட்டிச் சென்ற பிள்ளையை கண்களில் வலி பொங்க பார்த்து நின்றான். கையில் இனிப்பாய் அவள் கொடுத்துச் சென்ற கேக் துண்டைப்‌ பார்த்தவன்‌ முகத்தில் கசப்பாய் ஒரு முறுவல். அதே வேகத்தில் சென்னை வந்திருந்தான்.

“வெளிநாட்டுல இருக்கறவ வயித்துல உம்பிள்ளைன்னா எப்படிடா அவளை நம்புற?” இப்பொழுதும் அதே கேள்வியை மகனிடமும் கேட்க, 

ஒரு கணம் அம்மாவை ஆழ்ந்து பார்த்தவன், அப்பாவை தவிப்பாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “நீங்க இவர்தான் உங்க அப்பான்னு சொன்னதை எந்தளவுக்கு நம்புறேனோ, அதே அளவுக்கு அது என் பிள்ளைங்கறதையும் நம்புறேன்மா!” என்றவன் அப்பாவிடம் கண்களால் மன்னிப்பை யாசித்துவிட்டு சட்டென வெளியேறிவிட்டான்.

*****

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவனை, “அம்மாச்சி!” என்றவளின்‌ அழைப்பு கலைத்தது. காலை நீட்டி அமர்ந்து பிள்ளையை கால் மீது போட்டுத் தூங்க வைத்தவளுக்கு பிள்ளையைத் தூக்கிக் கொண்டு எழ‌ முடியவில்லை. 

ஒரு வாரம் உடனிருந்து மகளையும், பேத்தியையும் சீராட்டி விட்டு, கலையரசியும், தணிகைவேலும் ஊருக்குக் கிளம்பிவிட்டனர். மகளையும் உடன் அழைத்தனர். அவளுக்குப் போக விருப்பமில்லை. 

பிள்ளை கிடைத்ததும் பழனிக்கு அழைத்து வந்து முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டுதல் வைத்திருந்தனர். அதன்படி முடியிறக்கலாம் என்று சொல்ல, இன்னும் பிள்ளைக்கு பிறந்த முடியே இறக்கவில்லை என்பதே அப்பொழுதுதான் தெரிந்தது. தந்தைவழி குலதெய்வக் கோவிலில் வைத்துதானே முடியிறக்க வேண்டும். 

பொதிகாச்சலம், “பரவாயில்லை, பழனி கோவிலில் வைத்தே பிறந்த முடியும் எடுக்கலாம்” என்று சம்மதிக்க, 

அய்யம்மா, ஒரே வேலையாக பிள்ளைக்கு காதும் குத்திவிடலாம் என்றார். 

“இப்பவே வயசு அஞ்சு முடியப் போகுது. இந்தக் காலத்துப் பிள்ளைக பத்து வயசுலயே உக்காந்துறாளுக. அப்பறம் குடிசுக்குள்ள வச்சா காது குத்துவீங்க?” என்று கேட்க எல்லாருக்கும் சரியெனப்பட்டாலும், ஒருத்தர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தாங்கள் நினைப்பதைப் பேச கௌரவம் தடை போட்டது.

ஒரு வாரமாக உடனிருந்து பார்த்தவர்களுக்கு, சீனி அவள் மீதும், பிள்ளை மீதும் எந்தளவிற்கு அக்கறை வைத்திருக்கிறான் என கண்கூடாகத் தெரிந்தது. அவன் வழக்கம் போல் பள்ளி செல்ல ஆரம்பித்துவிட்டாலும், காலையும், பள்ளி விட்டு வந்ததும் முதலில் இங்குதான் வருவான். இரவுவரை மகளுடன் இருந்து, தூங்கவைத்துவிட்டுதான் செல்வது. 

அவன் வர சற்று தாமதமானாலும், பிள்ளையின் கண்கள் அவனைத் தேடுகிறதோ இல்லையோ, பெற்றவள் கண்கள் அவளையும் மீறித் தேட ஆரம்பித்தது. சாப்பிடும் நேரத்திற்கு அவன் வரவில்லை எனில் அவளும் பசியில்லை என சாப்பாட்டை ஒத்திவைப்பது தெரிந்தது. 

அய்யம்மா மகளிடம், “கலை, நடந்ததப் பத்தி யோசிக்காம நடக்க வேண்டியதை யோசிங்க. எல்லாரும் பழசையே புடிச்சுத் தொங்க வேண்டாம். ஒரு நேரத்துல தப்பா தெரியறது, மறு நேரத்துல சரியாத் தெரியலாம். இப்போ இந்த வீட்டையே எடுத்துக்கோ. நமக்கு தலைக்கு மேல கூரையா இருக்கறது, நமக்கு மேல இருக்கிறவங்களுக்கு நடந்து போற தரையா இருக்கு. அதுக்காக என் கூரையில நீ எப்படி நடந்து போகலாம்னா கேக்க முடியும்? நம்ம உடம்பே வலப்பக்கமும், இடப்பக்கமும் ஒன்னுபோல இருக்கறதில்ல. நூலளவாவது வித்யாசப்படும். (இடது கைவிரல் மோதிரத்தை வலது கை விரலில் போட்டுப் பார்த்தால் தெரியும்.) மனுஷங்க ஒன்னு போல இருக்கணும்னா எப்படி? நெட்டையோ, குட்டையோ… பெரியவங்க பேசி ஒரு முடிவுக்கு வாங்க!” என்றார் வீட்டின் பெரிய மனுஷியாக. 

“பாஸ்… பாட்டி பிலோசஃபில பி.ஹெச்.டி. பண்ணிருப்பாங்களோ?” அன்று அவனுடன் வந்திருந்த ராகவன் ரகசியமாக கேலி செய்ய,

“எய்ட்டி ப்ளஸ்ங்கறது அவங்க வயசில்ல ராகவன். அத்தனை வருட அனுபவம்‌. சீனியாரிட்டி இல்ல. சின்சியாரிட்டி!” என்று சொல்ல, “பாஸ்… பிண்றீங்க பாஸ்!” என்றான். 

ஒரு முடிவுக்கு வர முடியாமல் பெரியவர்கள் ஊருக்கு கிளம்பிச் சென்றனர். ஆனால், சீனி ஒரு‌ முடிவுக்கு வந்துவிட்டான். இவர்களை கிளம்பி வரச்சொல்லி விட்டு, அவர்கள் முன்னால் சென்றுவிட்டனர்.

ஒரு வாரத்திற்கு மேலாகிறது பழனியும், அமிர்தாவும் பள்ளிக்குச் சென்று. பிள்ளையை விட்டு ஒரு கணம் கூடப் பிரியவில்லை பழனி. கைக்குள்ளேயே வைத்திருந்தாள். அய்யம்மாவும் சொல்லிப் பார்த்துவிட்டார். கேட்பதாக இல்லை. 

“நீயாவது சொல்லுப்பா!” என்று அவர் ஒதுங்கிக் கொண்டார்.

சீனி, “பிள்ளைய ரொம்ப கைக்குள்ள வைக்காதே பழனி. அவளுக்கு நாமதான் தைரியம் சொல்லி வளக்கணுமே ஒழிய, வெளியவே போகக்கூடாதுன்னு சொல்லி, நீ இன்னும் அவளை பயமுறுத்துற.‌ எத்தனை நாளைக்கு இப்படியே வீட்டுக்குள்ளேயே வச்சுருப்ப. அப்படியே ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தாக் கூட நாமதானே, அவளை அதிலிருந்து மீட்டுக் கொண்டு வரணும். அப்போதானே இந்த சொசைட்டிய தைரியமா ஃபேஸ் பண்ணுவா? இப்ப வரைக்கும் என்ன நடந்ததுன்னே தெரியாத பிள்ளைக்கு நீயே எல்லாத்தையும் காட்டிக் கொடுப்ப போலயே?” என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பேசியே அவளை மீட்டெடுக்க வேண்டியதாய்ப் போயிற்று. நடந்த சம்பவத்தில் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டது பழனிதான். ஏதாவது நடந்திருந்தால் என நடக்காத ஒன்றை நினைத்தே உள்ளுக்குள் உழன்று கொண்டிருந்தாள். 

விலங்குகளால் மனிதனுக்கு ஆபத்து என்றால் விலங்குகளைத்தானே கூண்டில் அடைக்க வேண்டும். ஆனால் இங்கு வக்கிரம் பிடித்த மனித மிருகங்களை வீதியில் உலாவ விட்டுவிட்டு, பாதுகாப்பதாக எண்ணிக்கொண்டு, ஹகிளிகளைத்தான் சிறகொடித்து கூண்டில் அடைக்கிறோம். 

அம்மாச்சியை அழைக்க, “என்ன பழனி?” என்றார்.

“இவளத் தூக்கி பெட்டுல படுக்க வைக்கணும். கால் மறத்துப் போச்சு அம்மாச்சி!” என்றாள் காலை நீவிக்கொண்டு.

“நான்தானா தூக்கக் கெடக்குறே. ஏம்ப்பா சீனி, பிள்ளையைத் தூக்கி படுக்க வச்சுருப்பா. அவளால எந்திரிக்க முடியல போல!” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்றுவிட, 

அதை என்னிடம் சொல்ல அம்மையாருக்கு கௌரவம் தடுக்குது போல என்று முறைத்தபடியேதான் எழுந்து வந்தான். 

மடியில் அசந்து தூங்கிய பிள்ளையைத் தூக்கிச் சென்று கட்டிலில் படுக்க வைத்துவிட்டு வெளியே வர,

சோஃபாவைப் பிடித்துக் கொண்டு எழுந்தவள், நிற்கமுடியாமல் தடுமாற, ஓரெட்டில் ஓடிவந்து தாங்கிப் பிடித்தவன், சட்டென இடையோடு கைகொடுத்துத் தூக்கினான். அவள் அதிர்ந்து விழிக்க, அறைக்குள் சென்று, படுக்கையில் படுக்க வைத்துவிட்டு நிமிற, அவளது இடக்கரம் டீ சர்ட் காலரை, பதட்டத்தில் இறுக்கிப் பிடித்திருந்தது. வெப்பமாய் மூச்சுக்காற்று உரசிச் செல்லும் தூரம். மருண்டு விழித்த விழிகள். உதடு மடித்து சிரித்தவன் பார்வை அவளது கரத்தில் படிய, பட்டென கையை எடுத்துக் கொண்டாள். 

அப்படியே குனிந்தவாக்கில், அவளுக்கு அடுத்து படுத்திருந்த பிள்ளையின்‌ முகத்தில் புரண்டுகிடந்த முடியை ஒதுக்கிவிட்டு, எக்கி நெற்றியில் முத்தம் பதிக்க, இவளுக்குதான் கப்பென மூச்சே நின்றுவிட்டது. முத்தம் வைக்கும் சாக்கில் கிட்டத்தட்ட அவள் மேல் பாதி உடலை சரித்திருந்தான். யோசிக்காமல் குனிந்துவிட்டானே ஒழிய, அதன் பிறகுதான், அவன் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது‌. அவனுக்கடியில் இருந்த நங்கையவள் மெத்தென்ற பூந்தேகம் அவனை சோதித்துப் பார்க்க, மனமேயில்லாமல் எழுந்தே ஆகவேண்டிய கட்டாயம். எழுவதற்காக அவளுக்கும் பிள்ளைக்குமிடையே கையை ஊன்ற, ஊன்றிய கைகளுக்குள் பெண்ணவள் பட்டுமேனி. ‘எந்திரிடா‌ சீனி, இப்பதான் வீடு வரை வர விட்டிருக்கா.  ஏதாவது ஏடாகூடமாப் பண்ணி சொந்தச் செலவுல சூன்யம் வச்சுக்காதே!’ உள்மனம் எச்சரித்தும், சண்டித்தனம் செய்த மனதை இழுத்துப் பிடிக்க பிரம்மபிரயத்தனம் செய்தும், அவள் தன்னையே விழியெடுக்காமல் பார்த்திருக்க, அவனாலும் அவள் முகத்திலிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை. சட்டெனக் குனிந்து அவள் கன்னத்திலும் இதழ் பதித்துவிட்டே எழுந்தான். விதிர்விதிர்த்தவள் அவனையே முறைத்துப்‌ பார்க்க, மீசைக்கடியில் பூத்த கள்ளப்புன்னகையை உதட்டிற்குள் ஒழித்துவிட்டு, விறுவிறுவெனத் திரும்பியும் பாராது, கதவு வரை சென்றவனை,  “உடம்பெல்லாம் கொழுப்பு. அதான் பொறுக்கி மாதி…” என்றவளின் சப்தமில்லாத முணுமுணுப்பு தடுத்து நிறுத்தியதில், மீதி வார்த்தை அவள் தொண்டைக்‌ குழியிலேயே தொக்கி நின்றது. 

‘அச்சோ… பழனி! வாயை வச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கலாமே!’ உள் மனம் எச்சரிக்க,  

மீண்டும் கட்டிலருகே திரும்பி வந்தவனைப் பார்த்தவளுக்கு இதயத் துடிப்பு எகிறியது. 

அவளது கன்னத்தை அழுந்தப் பற்றித் திருப்பி, இதழில் அழுத்தமானதொரு அச்சாரத்தைப் பதித்தவன், “இதுதான் பொறுக்கி பண்ற‌ வேலை, ஸ்வீட் ட்ரீம்ஸ் ஃப்ரூட்டி!” கன்னத்தைத் தட்டி, கண் சிமிட்டி சொல்லிவிட்டு வேகமாக வெளியேறியவன், 

“ஊஃப்ப்… இன்னைக்கு நமக்கு ஸ்வெட் ட்ரீம்ஸ்தான் போல!” தன்னால் புலம்பிச் சென்றது நன்றாகவே கேட்டது அவளுக்கும். 

4 thoughts on “முக்கனியும் சக்கரையும் 25”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top