23
“என்ன சார் இப்படியெல்லாம் கேள்வி கேக்குறீங்க?”
அவரது கேள்வியின் போக்கு அவனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதை அவனது சுழித்து முகமே காட்டிக் கொடுத்தது. ஆத்திரப்படும் நேரமல்லவே. காணாமல் போனது ஐந்து வயதுகூட நிரம்பாத குழந்தை. அதுவும் பெண் குழந்தை. நினைப்பே அவனைக் கொன்று தின்றது. நெருப்பில் நிற்பது போல் தவித்துக் கொண்டிருந்தான்.
“கடைசியா உங்களப் பாக்கத்தானே வந்திருக்கு. நாங்க வேற யாரைக் கேட்கமுடியும்? அந்தப் பையன கான்டாக்ட் பண்ணீங்களா?”
“ராகவன் அந்த மாதிரி ஆள் கிடையாது சார்!” சலிப்பாக சொன்னவனிடம்.
“எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணினா எப்படி? அப்பறம் ஏன் அவசரமா கிளம்பிப் போகணும். கால் பண்ணாலும் எடுக்கல!” என்ற காவலாளியின் கேள்விக்கு சீனியிடம் பதில் இல்லை. அவனும் ஒரு மணி நேரமாக கைபேசியில் முயன்று கொண்டுதானிருக்கிறான். ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. அவனது கைபைசி எண்ணை பின் தொடர (track), அது அபார்ட்மென்ட் வளாகத்திற்குள்ளேயே அணைந்து போனது தெரிந்தது. சந்தேகம் ராகவன் பக்கம் வலுத்தது. சிசிடிவி பதிவுகளும் அவன், அபார்ட்மெண்ட் கேட்டின் முன்னே கடந்து சென்ற ஆட்டோவை அவசரமாகக் கைகாட்டி நிறுத்தி, கைப்பையோடு ஏறிச்செல்வதைக் காட்டியது.
“சார், நீங்க தேவையில்லாம எங்க மேல சந்தேகப்படறதை விட்டுட்டு குழந்தையத் தேடுற வேலையைப் பாருங்க. ரெண்டு மணி நேரமாச்சு. இங்கேயே டைம் வேஸ்ட் பண்றீங்க. நான் வேற உயர் அதிகாரிங்ககிட்ட யார்கிட்டயாவது பேசவா?” என்றவனுக்குள் கடக்கும் ஒவ்வொரு கணமும் தவிப்பு கூடிக் கொண்டேதான் போனது.
மூளைக்குள் கற்பனை கண்டவாக்கில் தறிகெட்டு ஓட, காவலாளியின் மெத்தனப் போக்கு கோபத்தை வரவழைத்தது. உணர்ச்சி வசப்படும் நேரமல்ல என்று புத்திக்கு உரைத்தது. பெற்ற மனதிற்கு அது தெரியவில்லையே. அவர் கடமையைத்தான் செய்கிறார். இவன் அவசரத்திற்கு அது போதாதே. பிள்ளை எங்கே, எந்த நிலையில், யார் கைகளில் என்று நினைத்துப் பார்க்கவே குலை நடுங்கியது.
அந்தப் பதட்டமெல்லாம் இவர்களுக்கு இல்லை போல. பத்தோடு பதினொன்று என்ற கணக்கில் விசாரணை நடந்தது. ஒரு வேளை உணர்ச்சிகளுக்கு இடம் கொடுத்தால் விசாரணை தடம் மாறும் என்ற எண்ணமோ என்னவோ. ஆரம்பகட்டத்தில் இவர்களுக்கும் இதெல்லாம் பதட்டத்தைக் கொடுத்திருக்கும். குற்றங்களுக்கு மத்தியிலேயே உழன்று கொண்டிருப்பதால், போகப்போக மனமும் மறத்துவிட்டதோ என்னவோ.
“அவங்ககிட்ட சொன்னா மட்டும் அவங்களா வந்து தேடப்போறாங்க? எங்களுக்குதான் சார் ப்ரெஷர் போடுவாங்க. குழந்தை தங்கம் எதுவும் போட்டிருந்ததா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்க அவர் சொன்னதிலிருந்த நியாயமும் புரிபட்டதுதான். பல்லைக் கடித்து பொறுமை காத்தான்.
பிள்ளையைக் காணவில்லை எனத் தெரிந்து, இவர்களே அங்குமிங்கும் தேடியதிலேயே ஒருமணி நேரத்திற்கு மேல் கடந்திருந்தது. இனியும் தாமதிப்பது அபத்தமென, அபார்ட்மெண்ட் செக்ரட்டரியே காவல் துறைக்கு அழைத்து தகவல் கொடுத்துவிட்டார். அடுத்த அரைமணி நேரத்தில் போலீஸ் வாகனம் அபார்ட்மென்ட் நுழைந்து தனது விசாரணையைத் துவக்கியது.
“ஆமா சார்! இடுப்புல அரணாக் கொடி மட்டும் கோல்டுல போட்டிருந்துச்சு!” என்றவனை சந்தேகமாகப் பார்த்தார்.
காலை தூங்கியெழுந்த பிள்ளையை அவன்தானே பாத்ரூம் தூக்கிச் சென்று, முகம் துடைத்து அழைத்து வந்தான்.
அதனால் காவலாளி கேட்டதும் அந்த தகவல் கொடுக்க, உனக்கெப்படித் தெரியும் எனும்படி இருந்தது அவரது பார்வை. அவரது விசாரணை செல்லும் போக்கு அவனுக்கே நெஞ்சை அறுத்தது. அது என் பிள்ளைடா. நான் பிள்ளையோட அப்பாடா என சட்டையைப் பிடித்து உலுக்கி கத்திச் சொல்ல வேண்டும்போல் இருந்தது.
அன்று கடை திறப்பு விழா முடிந்து, அமிர்தா போட்டிருந்த நகைகளை பழனி கழட்டி வைக்க, அய்யம்மாதான், கொடி மட்டும் இடுப்புல இருக்கட்டும். வெளியே தெரியவா போகுது? வளந்துட்டா பத்தாது… போடமுடியாது என்றார். பழனியும் இருக்கட்டுமென விட்டுவிட்டாள். பேத்திக்கென அனைத்தும் தங்கத்தில் வாங்கிப் போட்டு, அழகு பார்க்க ஆசைப்பட்டு, அரணாக்கொடியும் தங்கத்தில் வாங்கி வந்திருந்தார் பொதிகாச்சலம்.
“ஏன் சார் தங்கம் விக்கிற விலைக்கி அதெல்லாமா தங்கத்துல போடுவாங்க! தங்கத்துக்காக யாராவது பிள்ளைய கடத்தியிருந்தா?” எனக் கேட்க இவனுக்குதான் பதட்டம் மென்னியை முறித்தது.
அப்படி தங்கத்திற்காக கடத்தியிருந்தால் என் பிள்ளையின் எடைக்கு எடை கூட தங்கம் தருகிறேன். யாராக இருந்தாலும் பிள்ளையை விட்டுவிடு என்று மனதளவில் இறைஞ்சியது பெற்றமனம்
“நீங்க ஆப்போசிட் ப்ளாக்தானே?”
“ஆமா சார்!”
“உங்களைப் பாக்கதானே பிள்ளை வந்துச்சு!”
“ஆமா சார். நான் அப்போ வீட்ல இல்ல. வெளியே இருந்தேன். பிள்ளையக் காணோம்னு கால் பண்ணவும்தான் வந்தேன்!” அலுப்பும் சலிப்புமாக பதில் கொடுத்தான். வந்ததிலிருந்து இதே கேள்வியைத்தான் இவனிடம் மாற்றி மாற்றி கேட்கிறார்.
ஒரே கேள்வியைத் திரும்பத் திரும்ப கேட்கும் பொழுது இவனது பதில் ஏதாவது பிறழ்கிறதா எனக் கவனித்தார்.
அதற்குள் சிசிடிவியை சோதனை செய்துவந்த காவலாளி, “சார், பிள்ளை வெளியே போனமாதிரி எந்த தடயமும் இல்ல. செக்யூரிட்டிகிட்டயும் நல்லா விசாரிச்சாச்சு. அவரும் பிள்ளை வெளியே போன மாதிரி தெரியலைன்னு தான் சொல்றாரு! ஆப்போசிட் ப்ளாக்குக்கு போன வீடியோ ஆதாரம்தான் இருக்கு” என்று சொல்ல, சப் இன்ஸ்பெக்டர் இவனைத் தான் சந்தேகமாகப் பார்த்தார்.
“பிள்ளையத் தேடும்போது நீங்க எங்க போயிருந்தீங்க?”
“எதுத்தாப்லதான் எங்களோட சூப்பர் மார்க்கெட் இருக்கு சார். மேல ஜிம் இருக்கு. கால் பண்ணும்போது அங்கதான் இருந்தேன்!”
“அதோட ப்ரொப்ரைட்டர் பொதிகாச்சலம் சார்தானே!”
“அவர் என்னோட அப்பாதான் சார்!” என்றதும்,
“அப்போ அந்த கஃபே” என இழுக்க,
“என்னுடையது!” என்றவனை, காவலாளி பார்க்கும் பார்வையே இப்பொழுது மாறியது.
காலையில் பிள்ளைக்கு, சாப்பாடும் மருந்தும் கொடுத்து தூங்க வைத்தவன், ஃப்ளாட்டிற்கு செல்லவில்லை. நேரே ஜிம்மிற்கு வந்துவிட்டான்.
சற்று நேரம் தூங்கி எழுந்த அமிர்தா, அம்மாவைக் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிட்டாள். அய்யம்மாவும் ஏதேதோ சொல்லி சமாளித்துப் பார்க்க அவரால் முடியவில்லை. காய்ச்சல் என்பதால் சாக்லேட் கொடுத்தும் சமாதானம் செய்ய முடியாது. சாக்லேட் கொடுத்தால் பழனி சாமியாடி விடுவாளே! அவரும் ஏதேதோ சொல்லி தாக்காட்டிப் பார்க்க, மூப்பு அவளை சமாளிக்க முடியாமல் திணறியது. உடம்புக்கு எதுவும் இல்லையெனில் இத்தனை தொந்தரவு கொடுக்க மாட்டாள். சமத்துப்பிள்ளைதான். உடலின் தொந்தரவு அவளுக்கு அம்மா வேண்டும் என்றது.
அய்யம்மா திண்டாடுவதைப் பார்த்த வேலாயுதம், “உங்க சீனிப்பா வீட்ல இருக்காங்களா பாரு!” என்றார்,
அவனிடம் அனுப்பி வைக்கலாமே என்ற எண்ணத்தோடு. இப்படியே முரண்டு செய்தால், அவளது அடுத்த வஜ்ராயுதம் அழுகைதான். அது இன்னும் கஷ்ட்டம். இருவராலும் ஒன்றும் செய்ய முடியாது.
பால்கனியில் நின்று பார்த்தவள், அப்பொழுதுதான் அவனது வண்டி உள்ளே வருவதைப் பார்த்துவிட்டு, “பாட்டி, சீனிப்பா வந்துட்டாங்க. நான் அங்க போறேன்” என்றவள் வழக்கம்போல் செருப்பு கூடப் போடாமல் ஒரே ஓட்டம்.
அவருக்கும் முழங்கால் வலி. எழுந்து அவசரமாகப் பார்க்க முடியவில்லை.
இவள் குறுக்கே புல்தரை தாண்டி, பூங்காவைக் கடந்து படியில் ஏறிச் செல்லுமுன், அவன் லிஃப்ட் வழியாக மேலே சென்று கதவைத் திறந்திருந்தான்.
“சீனிப்பா… வந்துட்டேன்” என்றபடி, ரன்னிங் கமென்ட்ரி கொடுத்துக் கொண்டே உள்ளே ஓடி வந்தாள். பாத்ரூமில் தண்ணீர் கொட்டும் சப்தம் கேட்டது. பூனை பாதம் வைத்து மெல்ல நடந்தாள்.
*****
“பிள்ளையோட அம்மாகிட்ட விசாரிக்கணும்!” என்றார் உதவி ஆய்வாளர்.
காய்ச்சலின் வீரியமும், சாப்பிடாத மயக்கமும், பிள்ளை காணவில்லை என்ற பதட்டத்தோடும், பயத்தோடும் போட்டி போட முடியாமல் பின்னுக்குச் சென்றிருந்தது. கடந்த ஒரு மணி நேரமாக அபார்ட்மெண்ட் முழுதும் “அம்மு… அம்மு…” என அரற்றிக் கொண்டே, பித்துப் பிடித்தவள் போல், ஓடி ஓடித் தேடிக் கொண்டிருந்தவள் ஓய்ந்து போய் உட்கார்ந்திருந்தாள். அழுதழுது முகமெல்லாம் விகாரமாக வீங்கியிருந்தது. காய்ச்சலின் வீரியம் வேறு. அய்யம்மாவும், வேலாயுதமும் வேண்டாத தெய்வமில்லை. தண்டபாணிக்கு அழைத்து தகவல் கொடுத்துவிட்டார்.
அதற்குள் அங்கு கூடியிருந்த அபார்ட்மென்ட்வாசிகளிடமும் விசாரணை நடத்தியிருந்தார் உதவி ஆய்வாளர். அவர்களும் ஆளுக்கொரு பக்கம் தேடிக்கொண்டுதான் இருந்தனர்.
அவர்கள் பழனியைப்பற்றிக் கொடுத்த விபரங்களின் மொத்த சாராம்சம்…
பழனி எனும் இளம்பெண், பெண் குழந்தையோடு தனித்து
வசிப்பவள். முன்பு அவளது பெற்றோர் உடனிருந்தனர். வந்தனாவும், வரதராஜனும் பழனியின் பெற்றோராகவே அறியப்பட்டனர். இவளுக்கு அவர்கள் பெரியம்மா, பெரியப்பா என்பது பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. இப்பொழுது உடனிருப்பது வயதான பாட்டியும், தாத்தாவும். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவள். பிள்ளையைக் கூட யாரிடமும் தனித்து விட்டதில்லை, சீனி இங்கு குடி வரும்வரை. பழனியின் தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனபொழுது இவன்தான் உதவி செய்தது. அதனால் சீனி என்பவனுடன் மட்டுமே அவர்களும் சகஜமாக பழகி வந்தனர். அவனோடு தனியே குழந்தை வெளியே செல்லுமளவிற்கு நல்ல பழக்கம். அதை அனைவரும் பார்த்துள்ளனர்.
இவள் குழந்தையோடிருக்கும் சிங்கிள் பேரன்ட். கணவனைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை. சீனி வசதியான வீட்டுப் பையன். விசாரணையின் கோணம் இப்படித் திரும்பியது.
அசோசியேஷன் மீட்டிங் என்றால் மட்டும் ஹலோ, ஹாய் சொல்லி முகம் காட்டிவிட்டு, பக்கத்து அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் யார் என்றுகூட அறிந்து கொள்ள ஆர்வம் காட்டாத சகவாசிகள், இதில் அதிகமாக ஆர்வம் காட்டினர்.
“நீங்க எப்போ மேடம் பிள்ளையத் தேட ஆரம்பிச்சீங்க. ஏன் ஸ்கூல் விட்டு வந்ததும் தேடலை?” இப்பொழுது விசாரணை இவள் பக்கம் திரும்பியது. அவளைப் அப்படிப் பார்க்கவே சீனிக்கு மனதைப் பிழிந்தது. முதன் முதலில் தான் பார்த்த பெண் பூ போன்றவள். அதே பூ புயலில் சிக்கி, சின்னாபின்னமானால் எப்படியிருக்கும். அப்படியிருந்தாள் பெண்.
காய்ச்சலோடு வந்தவள், அய்யம்மா சீனியைப் பார்க்க அமிர்தா சென்றதாகக் கூற, அவன் இன்று பள்ளி வரவில்லை எனத் தெரியும். வீட்டில்தானே இருப்பான் என நினைத்துப் படுத்தவளுக்கு, பத்து நிமிடம் கூட அசந்து தூங்க முடியவில்லை. மகளுக்கு மருந்து கொடுக்க வேண்டுமே என்ற எண்ணத்தோடே படுத்தவளுக்கு தூக்கத்திலும் அதே நினைப்பு வர, எழுந்துவிட்டாள்.
“அம்மாச்சி… அவளை அனுப்பச் சொல்லுங்க. மருந்து கொடுக்கணும்!” என்று சொல்ல,
அய்யம்மா, “இந்தா நீயே போட்டுக் கொடு!” என்று பொத்தான் கைபேசியை அவளிடமே கொடுத்தார். அவருக்கு நெருங்கியவர்கள் எண்ணை, அவசர அழைப்பில் போட்டுக் கொடுத்திருப்பதால், பேரனையே, பேத்தியையோ ஒற்றை எண்ணை அழுத்தி அழைப்பது எளிது. மற்றவர்கள் எனில் இவள்தான் போட்டுக் கொடுக்க வேண்டும். அவனது பெயர் தேடி, கால் போட்டே கொடுத்தாள்.
“சீனி… பிள்ளைய அனுப்புப்பா. மருந்து கொடுக்கணுமாம்” என்று சொல்ல,
“ஆச்சி! நான் ஜிம்ல இருக்கேன். அம்மு இங்க இல்ல!” என்றான்.
“உன் வண்டியப் பாத்துட்டுதான் உன் வீட்டுக்குப் போனாப்பா! நானும் பாத்தேனே?” என்றார்.
“என் வண்டிய ராகவன் எடுத்துட்டுப் போனான் ஆச்சி. அவன் வீட்டுக்கு வந்திருப்பான். அம்மு அவன் கூட இருப்பாளா இருக்கும். இருங்க கால் பண்ணி அனுப்பச் சொல்றேன்” என்று அழைப்பைத் துண்டித்தான்.
விபரத்தை பழனியிடம் சொல்ல, “என்னம்மாச்சி! யாரு இருக்காங்கன்னு பாத்துட்டு அனுப்ப மாட்டீங்களா?” என்று சடைத்தாள்.
“உம் பிள்ளை எங்க என் பேச்சைக் கேட்டா. சொல்லிட்டு சிட்டாப் பறந்துட்டா. இப்ப என்ன ராகவன் தம்பிகூடத்தானே இருக்கா. இப்ப வந்துருவா!” என்றார்.
“இந்தக்காலத்துல யாரையும் நம்ப முடியாது அம்மாச்சி!” என்றவள் பால்கனி சென்று பார்க்க, அங்கே கதவு பூட்டியிருந்தது. அம்மாச்சியிடம் சொல்ல, தான் பார்க்கும் பொழுது திறந்திருந்ததாகச் சொன்னார். இப்பொழுது பூட்டியிருந்த கதவு அவளுக்கு பதட்டத்தைக் கொடுத்தது. அவளையும் மீறி அவளுக்குள் ஒரு சஞ்சலம் எழுந்தது.
சற்றும் தாமதிக்காமல் வெளியே வந்து லிஃப்டில் இறங்கி, எதிர் ப்ளாக்கிற்கு விரைந்தாள். அதற்குள் சீனி, கைபேசியில் ராகவனை அழைத்துப் பார்க்க தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றது கணினி குரல். பழனியும் வந்து பார்க்க கதவும் பூட்டியிருந்தது. அப்பொழுதே மனம் பதைபதைத்தது. பிள்ளை சீனியுடனும் இல்லை. இங்கும் கதவு பூட்டியிருக்கிறது. வீட்டிற்கும் வரவில்லை. இருந்தால் ராகவனோடுதான் இருந்தாக வேண்டும். அவன் எங்காவது அழைத்துச் சென்றிருந்தால் மட்டுமே. அப்படியே அழைத்துச் செல்வதாக இருந்தாலும் சொல்லாமல் அழைத்துச் செல்லமாட்டான். போயிருந்தாலும் சூப்பர் மார்க்கெட்தான் போயிருக்க வேண்டும். சீனிதான் அங்கில்லை என்று சொல்கிறானே! இத்தனையும் ஒரு நொடியில் சுற்றி வந்தவள் மனம் மெலிதாக படபடக்க ஆரம்பித்தது. கை, காலெல்லாம் கூட வெலவெலத்தது. அப்படியிருந்தும் தைரியத்தை ஒன்றுதிரட்டி கதவைத் தட்டிப் பார்த்தாள். யாருமில்லாத கதவு எப்படித் திறக்கும்.
உடனே சீனியும் வந்துவிட்டான். செக்யூரிட்டியிடம் விசாரித்துவிட்டே வந்தான். ராகவன் ஆட்டோவில் சென்றதாக தெரிவித்திருந்தார். தன்னிடம் எதுவும் சொல்லவில்லையே என்று கோபம் வந்தது.
அதற்குள் பிள்ளையைக் காணவில்லை என அபார்ட்மென்டே பரபரப்பாகியது.
“இதெல்லாம் நடக்குறதுதான் சார். எத்தனை கேஸ் பாக்குறோம். இவங்க சிங்கிள் மதர். எல்லா கோணத்துலயும்தான் யோசிப்போம். இப்போல்லாம் இல்லீகல் ரிலேஷன்ஷிப்க்கு பிள்ளைக இடைஞ்சலா இருக்குன்னு பெத்தவங்களே பிள்ளைகள ஏதாவது பண்ணிடறாங்க. சமீபத்துல கூட ரெண்டு புள்ளைகள கொலை பண்ண கேஸ்கூட இங்க பக்கத்துல மூன்றாம்**டளையில தானே நடந்துச்சு!” என்றதும், கொந்தளித்த கோபத்தை பல்லைக் கடித்து அடக்கினான்.
பிள்ளை காணமல் தவித்துக் கொண்டிருக்க, இவர் எதை வைத்து சந்தேகப்படுகிறார் என நினைத்தவனுக்கு அந்த நினைப்பே எதுக்களித்தது. இதுவரை சீனியை வேறொரு கோணத்தில் பார்த்தவர், அவனது அப்பா பொதிகாச்சலம் என்று தெரிந்ததும், தன் விசாரணையை பழனியை நோக்கித் திருப்பினார்.
“இவ அப்படி பண்ணியிருக்க மாட்டா சார்!” என்றான் பல்லைக்கடித்து.
“அவங்களப் பத்தி நல்லா தெரிஞ்ச மாதிரி எப்படி இவ்வளோ உறுதியா சொல்றீங்க?”
“அவங்களப் பத்தி தெரிஞ்சதாலதான் சொல்றேன்.” என்றவன் குரல் தீர்க்கமாய் ஒலித்தது.
அவருக்குள்தான் சிங்கிள் மதர், வசதியான பேச்சுலர் என்ற கணக்கு ஓடுகிறதே இருவரைப்பற்றியும். இல்லையெனில் இவன் மட்டும் எதற்கு இத்தனை ஆத்திரப்படவேண்டும். எல்லாரும் தேடினார்கள் தான். அவர்கள் எல்லோரும் பிள்ளை இங்கில்லை என்று தெரிந்ததும், அடுத்து என்ன என வேடிக்கை பார்க்க, இவன் மட்டும்தானே பதறிக்கொண்டிருக்கிறான்.
இவ்வளவு நேரமும் பிள்ளை காணவில்லை என்ற பதட்டத்தில் இருந்தவனுக்கு அவரது விசாரணையின் போக்கு புரிபடாமல் இருக்க, பிள்ளையைக் காணவில்லை என்ற உளைச்சலில் இருப்பவளிடம், தன்னையும், அவளையும் சேர்த்து வைத்து கேள்விகள் கேட்கப்பட, கோபம் சுள்ளென உச்சிக்கு ஏறியது.
“அதான் எந்த வகையில, எந்தளவுக்கு தெரியும்?” இப்பொழுது அவரது கேள்வியின் தொணி மாறியிருந்தது.
ஒரு கணம் கோபத்தை விடுத்து, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்தியவன், “அந்தப் புள்ளைக்கு அப்பாங்கற வகையில” என்றான் தீட்சண்யமான குரலில். கேட்டவர்கள் முகத்தில் வியப்பும், ஆச்சர்யமும், சிலர் முகத்தில் கேலியும். சீனி எதையும் கண்டுகொள்ளவில்லை.
“ஹோஓஓ… கதை அப்படி போகுதோ? அப்பறம் ஏன் சார் தனித்தனியா இருக்கீங்க?”
“அது உங்களுக்கு தேவையில்லாத விஷயம். குழந்தையை கண்டுபிடிக்கிற வேலையை மட்டும் பாருங்க சார். எங்ககிட்டயே கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்காதீங்க.”
இப்பொழுது காவல் அதிகாரி என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை.
“நாங்க என்ன பண்ணனும்னு நீங்க சொல்லத் தேவையில்லை. இவங்க ஆத்திரத்துக்கு பிள்ளையப் பெத்துப்பானுங்க. எங்கிட்டாவது கேர்லெஸ்ஸா இருந்துட்டு நம்ம உசுர வாங்குவாங்க.” இவன் காதுபடவே முனங்க, இயலாமையோடு பல்லைக் கடித்தான்.
அதற்குள் பொதிகாச்சலம் பதறியடித்து ஓடிவந்தார். உடன் போலீஸ் கமிஷனரும். அவனைப் பார்த்தவன் கண்களில் சிறு நம்பிக்கை ஒளிர்விட்டது.
“எனக்கு ஃபோன் பண்ணவேண்டியதுதானே சீனி!” என்றான் வந்தவுடன்.
“நீ எப்படா இங்க வந்த?” என்றான் நண்பனைப் பார்த்து சற்றே ஆசுவாசமாக. பிள்ளையைக் காணவில்லை என்று சீனி தெரிவித்ததும், பொதிகாச்சலம் நேரடியாக உயர் அதிகாரியை அழைத்து உதவி கேட்டார்.
“ஒரு மாசமாச்சு. பேபி மிஸ்ஸிங்க்னு அப்பாதான் கால் பண்ணாரு. இங்க வந்த பின்னாடிதான் அப்பாவைப் பார்த்தேன். காணாமல் போனது உன் பிள்ளைனு சொன்னார். என்ன விபரம்?” என்று கேட்க மீண்டும் ஒரு முறை நடந்ததனைத்தும் அவனிடமும் கூறினான். இருவரும் பள்ளி நண்பர்கள். இதே பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள்.
“இவரு எங்க மேலயே சந்தேகப் படுறாரே ஒழிய பிள்ளையைத் தேடவே முயற்சி பண்ணல!” என்றான்.
“விசாரணை அப்படித்தான் இருக்கும் சீனி. ஒன்னும் பண்ண முடியாது. உன் ஃப்ளாட் காமி. அப்படியே உன் பொண்ணு…” என்றவன் நிறுத்திவிட்டு அவனைஉறுத்துப் பார்க்க,
“என் பொண்ணுதான்டா!” என்றான் தவிப்பாய் அவன் பார்வை உணர்ந்து.
தன் மகளை ஊரார் முன் இப்படியொரு சூழலில் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. உள்ளுக்குள் நொருங்கிப் போனான். ஐந்து வயதில் தனக்கு பிள்ளை இருப்பதே இதுவரை தனக்குத் தெரியாது. தெரிந்த பிறகும் அப்பா என உரிமை கொண்டாட முடியவில்லை. மனைவிக்குரிய ஸ்தானத்தைக் கொடுத்தால்தானே அப்பா ஸ்தானம் கிடைக்கும். அப்பா என்ற உரிமையை மட்டும் எடுத்துக் கொள்வது பெற்றவளுக்கு இழைக்கும் அநீதி அல்லவா? செய்தவரை போதாதா? முதலில் தன்னவள் என்பதற்கான அங்கீகாரம். அதன் பிறகுதான் தனக்குரிய உரிமையை நிலைநாட்ட விரும்பினான். தணிகைவேல் மகள், தண்டபாணி தங்கை, அமிர்தாவிற்கு அம்மா என்ற உறவுச் சங்கிலியில் இடையில் ஒரு கண்ணி விடுபட்டுள்ளதே. அது தனக்கான வெற்றிடம். அதை இட்டு நிரப்புவது அவன் கடமையல்லவா? கடமையைச் செய்யாமல் உரிமையை மட்டும் கோருவது எந்த விதத்தில் நியாயம். அதற்கு அவளும் மனது வைத்தால்தானே முடியும். காலம் கனியட்டும் எனக் காத்திருந்தான். இப்பொழுது எல்லாமும் தலைகீழாக நடக்கிறது. இவன் வாழ்க்கையே அப்படித்தான் கட்டம் கட்டப்பட்டிருக்கிறது போல். தாலிக்கு முன் தாம்பத்யம். கணவன் என்பதற்கு முன் தகப்பன்.
ஒரு இடத்தில் நிற்க மாட்டாள். காலில் சக்கரமில்லாத குறையாகச் சுற்றிவருவாள். கொஞ்சம் காய்ச்சல் சரியானதும் தன்னைத் தேடி வந்திருக்கிறாள். நான் இருப்பேன் என்று நம்பிக்கையில்தானே அவளை விட்டிருக்கிறார்கள் என்ற நினைப்பே கழுத்தை இறுக்கிப் பிடித்தது. இப்பொழுது எங்கே, எப்படியிருக்கிறாளோ?
அடுத்த சில மணி நேரத் தேடலுக்குப் பிறகு, சந்தேகத்தின் பெயரில் செங்கல்பட்டு மருத்துவமனையில் வைத்து ராகவன் கைது செய்யப்பட்டான்.
அமிர்தா மயங்கிய நிலையில், இவர்களது ஃப்ளாட்டிலேயே, பழனியின் படுக்கையறையில், அவளது கபோர்டில், துணிகளுக்கு மத்தியில், போதை வஸ்த்து கொடுக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டாள்.
மகளின் கோலம் பார்த்து தொய்ந்து விழுந்தவளைத் தாங்கிப் பிடித்தவனுக்கும், தன் இதயத்தை உயிரோடு உருவி எடுத்த வலி.
உதவி ஆய்வாளர் பார்வை இப்பொழுது இவனை ஏளனமாகப் பார்த்தது. சந்தேகம் பழனி மீது வலுத்தது.

Aluthamana episode