21
“பழனி!” சீனி, தோள் தொட்டு உலுக்க சிலைக்கு உயிர் வந்தது போல் விலுக்கெனத் திரும்பினாள். தோளில் பதிந்திருந்த அவனது கரத்தை பக்கவாட்டில் பார்த்தவள் கண்களில் வரட்சி மட்டுமே. இனி அதுதான் காலத்திற்கும் என்பதை அப்பொழுது அவள் உணர வாய்பில்லை.
“கையை எடுங்க சார்!” என்றவள் குரலும், முகமும் இறுகிப்போயிருந்தது. அவன் அப்படியே இருக்க,
“கைய எடுங்க சார்! நான் வேற இந்தக் காலத்துப் பொண்ணு. நீங்க தொட்டதும் உருகிப் போவேன்!” பெண்ணவள் வார்த்தைகள் நெஞ்சில் அறைந்தது.
“பழனி! நான் எதையும் மீன் பண்ணல. உங்க அண்ணன் கேட்டதும்…” எப்படி
இதற்கு விளக்கம் கொடுப்பதென்று புரியாமல் அவனும் பாதியில் நிறுத்தினான். இதற்கு விளக்கம் கொடுத்தால் தங்களையே அசிங்கப்படுத்திக் கொண்டது போல் ஆகாதா? நடந்த சம்பவங்களும், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களையும் வைத்துப் பார்க்கும் பொழுது தங்கள் உறவு மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாவது கண்முன் தெரிந்தது. இதில் யோசிக்காமல் தான் வாய்விட்ட வார்த்தைகள், உணர்வு ரீதியாக, உளவு ரீதியாக, உறவு ரீதியாக எத்தகைய சிக்கலை உருவாக்கப் போகிறது என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் அஞ்சியது.
அப்பாவும், அண்ணனும் முன் செல்ல, அசையாமல் அப்படியே நின்றவளை, அவன்தான் தோள்தொட்டு உலுக்கினான்.
மூன்று நாட்களுக்கு முன் அவள் இவனைப் பார்த்த மையல் பார்வைக்கும், மூன்றாம் மனிதரைப் போல் இப்பொழுது அவள் பார்க்கும் அந்நியப் பார்வைக்கும் துளியும் சம்பந்தமில்லை. அதற்கு மேலும் அவள் சொல்லிச் சென்ற வார்த்தைகள் அவனை வெட்டிக் கூறுபோட்டது.
“பழனி! நீயும் அவசரப்பட்டு வார்த்தையை விடாதே! தப்புதான்… சா…” என்றவனை மன்னிப்பைக்கூடக் கேட்க விடாமல் கை அமர்த்தியவள்,
“ஏற்கனவே அவசரப்பட்டு வரம்பு மீறியாச்சு சார். நீங்க சொன்னதுல ஒன்னு மட்டும் உண்மை! நான் இந்தக் காலத்துப் பொண்ணு. கற்பு போச்சேன்னு எந்தக் காலத்துலயும், உங்ககிட்ட வாழ்க்கைப் பிச்சை கேட்டு வரவேமாட்டேன்!” கடினக் குரலில், சபதம் போல் கூறிவிட்டு விறுவிறுவென சென்றுவிட, சிலையாகிப் போவது இப்பொழுது அவன் முறையாயிற்று. இந்தச் சூழ்நிலையை எப்படி கையாள்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கியது.
இன்று நேர்ந்த அவமானம் தணிகைவேல் குடும்பத்திற்கு மட்டுமல்லவே! பொதிகாச்சலம் குடும்பத்திற்கும் இதே அவமானம் தானே?
அடுத்த வாரம் நடக்கவிருக்கும் தனது திருமணமும் கேள்விக் குறியாகி நிற்பது கண்முன் தெரிய, அடுத்து என்ன என்ற சிந்தையற்று நின்றிருந்தான்.
*****
“உள்ளூர்ல வெலை போகாத கத்திரிக்காயத்தான் இங்கவந்து விக்க வந்திருக்காங்க. அப்பவே யோசிச்சிருக்கணும். இம்பூட்டு தொலைவு வந்து எதுக்கு சம்பந்தம் பேசுறாங்கன்னு. நல்லா சபையில வச்சு மூக்கறுத்துட்டாங்க!”
அதற்குள் விஷயம் பரவிவிட, தணிகைவேல் சொந்தங்கள் ஒன்று கூடிவிட்டனர். பொதிகாசலத்தைப் பார்த்து ஆளுக்கொன்றாக கேள்வி கேட்க, அவர் பதில்பேசும் முடியாமல் தலை கவிழ்ந்து நின்றார். அப்பாவை அப்படிப் பார்க்க முடியவில்லை சீனிக்கும். எத்தனை மதிப்பான மனிதர். அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்க நூற்றுக்கணக்கானோர் உண்டு. ஆனால் இங்கு அவரால் ஒரு வார்த்தை பேசமுடியவில்லை. உள்ளுக்குள் கொதித்தது, தங்கையையும், தீனாவையும் நினைத்து. எப்படியும் சென்னைதான் போவார்கள் என்று தெரியும். அங்கிருந்த நண்பர்களிடம் பார்த்ததும் தகவல் சொல்லுமாறு சொல்லி வைத்திருக்கிறான்.
அதற்குள் விஷயம் ஊர்முழுக்கப் பரவிவிட்டது. தண்டபாணி ஃபோன் அடுத்தடுத்து அடிக்க ஆரம்பிக்க, முற்றிலுமாக ஃபோனை அணைத்துவைத்தான்.
நடந்த அதிர்ச்சியில் சம்பந்தப்பட்டவர்கள் வாளாவிருக்க, வந்த சொந்தங்கள் ஆளுக்கொரு யோசனை, ஆளுக்கொரு பேச்சு என பேச, கலையரசி இரண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தையும், குடும்பத்திற்கு நேர்ந்த அவமானத்தையும் நினைத்து முகத்தை மூடி வெடித்து அழுதார்.
“அக்கா! நீ எதுக்கும் கவலைப்படாதே! இப்பவே ஒரு பொண்ணத்தேடி இவங்க கண்ணு முன்னாடியே நம்ம தண்டபாணி கல்யாணத்த முடிக்கிறோம். அதே கையோட பழனிக்கும் ஒரு மாப்பிள்ளை பாத்து அடுத்த முகூர்த்தத்துலயே முடிச்சறலாம். நம்ம சொந்தத்துல இல்லாத மாப்பிள்ளையா? இதோ பெருமாள்சாமியண்ணே மகன் பார்த்தி இருக்கானே. அவனை வரச்சொல்லுவோம்! ஏற்தனவே பேசினதுதானே?” ஆறுதல் என்ற பெயரில் ஆளாளுக்கொன்று பேச, சூழ்நிலை மேலும் இறுக்கமானது.
“எங்க குடும்பத்துக்கு ஏற்பட்ட அவமானத்துக்கு பதில் சொல்லியே ஆகணும். எவ்வளவு நெஞ்சழுத்தமிருந்தா, எங்க ஊருக்கே வந்து பொண்ண இழுத்துட்டுப் போயிருப்பான். மொதல்ல அவங்க ரெண்டு பேரும் இங்க வந்தாகணும்! அதுவரைக்கும் நீங்க ஊரைவிட்டு போகமுடியாது!” கூட்டத்தில் ஒருவர் துள்ள,
பொதிகாச்சலத்திற்கு ஆதரவாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு, அவரது சொந்தமும், “எங்க பொண்ணு மேல கைய வச்சுருவீங்களா? உங்க பயகிட்ட என்ன சொத்தையோ? யாரு கண்டது? நேத்தே வீடியோ பாத்தோமே?” என்று கூட்டத்திற்கு முன் வந்து ஒருவர் பேச,
“எங்க பயலப்பத்தி எங்களுக்கு தெரியும். சேர்க்கை சரியில்ல! இதுவே எங்க வீட்டுப் பொண்ணு தப்பு செஞ்சிருந்தா, இந்நேரம் தேடிப்புடிச்சு வெட்டிப் போட்டிருப்போம். இல்லைனா, நாங்க வெளியே தெரியாம தூக்குல தொங்கியிருப்போம். வந்ததுலருந்து இந்தம்மா என்ன அலட்டு அலட்டுச்சு. பொம்பளப்பிள்ளைய வளத்த லட்சணம் இதுதானா?” கைநீட்டி
காந்திமதியைப் பார்த்து சரமாரியாகக் கேள்விகள் கேட்கப்பட,
இந்த வார்த்தைதள் ஒவ்வொன்றும் பழனிக்கு ஊசியாய்க் குத்தியது. தன்னைப்பார்த்து கேட்பது போலவேதான் தோன்றியது. பார்வை சீனியை வெறித்தது.
வார்த்தைகள் தடித்து பேச்சு முற்றியதில், களேபரம் வெடிக்க, ஒருவன் கூட்டத்தில் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வர, எங்கே கைகலப்பு ஆகிவிடுமோ என்ற பதட்டத்தில் பொதிகாச்சலம் முன்னுக்கு வர, சரியாக கை அவரது நெஞ்சைப் பிடித்துத் தள்ள, அவர் ஓரெட்டு பின்னால் தடுமாறி நின்றார்.
தவறு நமது பக்கம் என்று இதுவரை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கைகட்டி, அமைதியாக, பல்லைக் கடித்து இறுகி நின்றவன், அப்பாவின் நெஞ்சில் கை வைத்ததைப் பொறுக்க முடியாமல், தள்ளியவரைப் பிடித்திழுத்து அறைய, அது பார்த்தசாரதியின் அப்பா. தண்டபாணிக்கு தாய்மாமா உறவு. மாமாவை அடித்ததில் தண்டபாணியும் எட்டி சீனியின் சட்டையைப் பிடித்திருந்தான். பிரச்சினை வேறுவிதமாகத் திரும்பியது. பெரியவர்கள் விலக்கிவிட, சங்கம் வரை சென்றுவிட்டது.
நிலமை தங்கள் கைமீறிப் போவது கண்கூடாகத் தெரிந்தது பழனிக்கும், சீனிக்கும்.
“நடந்த அவமானம் ரெண்டு குடும்பத்துக்கும்தான். அவங்க பொண்ணு பண்ணின காரியத்துக்கு அவங்கள குத்தம் சொல்ல என்ன இருக்கு? இவங்கள இங்க புடிச்சுவச்சா மட்டும், ஓடிப்போன பொண்ணக் கூட்டிவந்து, மறுபடியும் கல்யாணம் பண்ணமுடியுமா? நடந்ததை விட்டுட்டு இனி ஆகவேண்டியதை யோசிங்க. அடுத்த வாரம் ஒரு கல்யாணம் இருக்குல்ல. அதுவும் பொம்பளப்புள்ள விவகாரம். யோசிச்சு முடிவு பண்ணுங்க!” பொது மனிதராய் வந்தவர்கள் யாருக்கும் சாதகமாகப் பேசாமல் பாதகமில்லாமல் நடுநிலையில் நிற்க,
“அதுக்குன்னு, இதே குடும்பத்துல மறுபடியும் எப்படிங்க நம்ம பொண்ணக் கொடுக்கறது?” என்றார் பெருமாள்சாமி.
“அதை பெத்தவங்க சொல்லட்டும்ப்பா. இடையில இருக்குறவங்க பேசாதீங்க!” முடிவை குடும்பத்தாரிடமே விட்டுவிட்டனர்.
இனியும் பேசாமலிருந்தால் எல்லாம் தன் கைநழுவிப் போய்விடும் என்று தெரிந்தது சீனிக்கு. பொதிகாச்சலம் நடந்த அவமானத்தில் எதுவும் பேசும் நிலையில் இல்லை. காந்திமதியும் மகள் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. தானும் அமைதியாக இருந்தால் எல்லாம் கைமீறிப் போய்விடும். தானே பேச்சை முன்னெடுத்தான் சீனி.
“என் தங்கச்சி பண்ணது ரொம்ப பெரிய தப்புதான். எங்க குடும்பத்துக்கும் இது பெரிய இடிதான். அதுக்காக எங்க கல்யாணத்துல எந்த தடையும் வந்துரக் கூடாதுன்னு நினைக்கிறேன். குறிச்ச தேதியில எங்க கல்யாணம் நடக்கும்!” குரலில் அழுத்தத்தோடு பழனியைப் பார்த்துக் கொண்டே சொல்ல, அவள் முகம் பாறையாய் இறுகி இருந்தது. எதையும் கணிக்க முடியவில்லை. அவள் எதுவும் சபையில் பேசவும் முடியாது.
“மண்டபம் வரைக்கும் வந்த கல்யாணமே நின்னுபோச்சு. இங்கவச்சு எங்கள அசிங்கப்படுத்தினது பத்தாதுன்னு, சென்னை வரைக்கும் வந்து அசிங்கப்படச் சொல்றீங்களா? எங்க பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக்கறோம். நீங்க உங்க வீட்டுப் பொண்ணக் கண்டுபுடிச்சு கல்யாண விருந்து வைங்க!” குதர்க்கமாகப் பதில் சொன்னார் பெருமாள்சாமி.
“பெருமாள், நீ கொஞ்சம் அமைதியா இரு! பெண்பிள்ளை விவகாரம். ஊர் முழுக்க பத்திரிக்கை வச்சாச்சு. எடுத்தோம் கவுத்தோம்னு பேச வேண்டாம். யோசிச்சு முடிவு பண்ணுவோம்!” சீனிக்கு ஆதரவாக, வரதராஜன் முன் வந்தார். அவர் பார்த்துச் சொல்லிய சம்பந்தம்தானே. இன்னும் கொஞ்சம் விசாரித்திருக்கலாம் என்று உள்ளுக்குள் உறுத்தல்.
“என்ன மாமா? நீங்க சொன்ன சம்பந்தம்கறதால பூசி மொழுகப் பாக்குறீங்களா? இப்பவே தண்டபாணி மாப்பிள்ளை கல்யாணத்தை முடிச்சுக் காட்டவா?” பெருமாள்சாமி விரலில் சொடக்கிட்டு வேட்டியை மடித்துக்கட்ட,
“பெருமாள்சாமி! கொஞ்சம் பொறு” என்று தணிகைவேல் கை அமர்த்த, பட்டென வேட்டியை இறக்கிவிட்டார்.
“அப்பறம் என்ன மாமா? நம்மல அசிங்கப்படுத்திட்டுப் போன வீட்டுக்கு, நம்ம பிள்ளைய எப்படி அனுப்ப முடியும்? அவங்க பையன் கல்யாணமும் நின்னாதான் அவங்களுக்கும் அசிங்கம்னா என்னானு தெரியும். நம்ம என்ன, அவங்கள மாதிரியா பொண்ண வளத்து வச்சுருக்கோம். நாளைக்கே பார்த்திய வரச்சொல்றேன் மாமா. குறிச்ச தேதியில பழனி கல்யாணம் நடக்கும்!” பெருமாள்சாமியே அனைத்தையும் முன்னெடுத்துப் பேச, எதுவும் பேச முடியாத நிலையில் தாடை இறுகியது சீனிக்கு. அழுத்தமாக பழனியைப் பார்த்தான். யார் பொண்டாட்டிக்கு யாருடா மாப்பிள்ளை என்ற கேள்வி தொண்டை வரை வந்துவிட்டது. சூழ்நிலை கட்டிப்போட்டது.
“முதல்ல எங்க கல்யாணம் நடந்திருந்து, இப்ப இதே மாதிரி நடந்தா அப்பவும் இதையேதான் சொல்லுவீங்களா? தப்பு எங்க பக்கம்கறதாலதான் நானும் பேசாம இருக்கேன். எனக்கு நிச்சயம் பண்ணின பொண்ணு எனக்குத்தான்!” உரிமையோடு சற்று குரலையும் உயர்த்தினான் சீனி.
“அந்தத் தம்பி கேக்குறதும் நியாயாம் தானே? முதல்ல இவங்க கல்யாணம் நடந்திருந்தா என்ன பண்ணியிருப்போம்!” அவனுக்கு சாதகமாகவும் இரண்டுபேர் பேச மீண்டும் கூட்டத்தினரிடையே சலசலப்பு. மகள் செய்த காரியத்தால் மகனுக்கு ஆதரவாதப் பேசமுடியாத நிலையில் இருந்தார் பொதிகாச்சலம்.
“ஆளாளுக்கு பேசறதை நிப்பாட்டுங்க!” தணிகைவேல் சற்று குரலை உயர்த்து, சலசலப்பு சற்றே அடங்கியது.
“இப்ப நடந்தது ரெண்டு குடும்பத்துக்கும் பெரிய தலைகுனிவுதான்!”
மகள் செய்த காரியத்தால், முகம் கருத்து நின்ற பொதிகாச்சலம் பக்கம் கைகாட்டியவர், “என் நிலமைதான் அவருக்கும்! இப்போதைக்கி அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கறதா இல்ல. ஆனா, மறுபடியும் இவங்க கூட சம்பந்தம் பண்றதுல எனக்கு விருப்பமில்லை!” அலுங்காமல், குலுங்காமல் சீனியின் தலையில் குண்டைப் போட்டார் தணிகைவேல். இந்த நிலையிலும் தன்னைப் பற்றி யோசிக்கிறார் என்பதே பொதிகாச்சலத்தை மேலும் சிறுத்துப் போக வைத்தது.
இப்படியொரு அவமானம் தங்கள் மகனுக்கு நேர்ந்த பிறகு, இனியும் மகளைக் கொடுத்து இவர்களோடு உறவை வளர்க்க விருப்பமில்லை தணிகைவேல். அது தலைவாழை இலையில் அறுசுவை விருந்து வைத்து ஓரத்தில் அசிங்கம் வைத்ததைப் போல் காலத்துக்கும் அசிங்கம். இத்தோடு போனதே என நறுக்குத் தெரித்தாற்போல் பேச்சை முடித்துக்கொண்டார்.
சீனிக்குதான் இதை எப்படி கையாள்வதென்று தெரியவில்லை. அவளை விடவும் முடியாது. பெண் எனக்குத்தான் என ஊன்றி நிற்கவும் முடியாத சூழ்நிலை. உண்மையைச் சொல்லவும் முடியாது. இதில் பழனியைப் பார்க்க அவளோ, நடப்பதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் கல்லாக சமைந்து நின்றிருந்தாள். அவளால் மட்டும் இப்போதைக்கு என்ன பேச முடியும். பெரியவர்கள் எடுப்பதுதானே முடிவு.
“அப்படி சொல்லுங்க மாமா! இப்பவே பார்த்திய வரச்சொல்லுவோம். அடுத்த வாரம் இவங்களுக்கு குறிச்ச முகூர்த்தத்துல பழனிக்கும், பார்த்திக்கும் கல்யாணம்!” செருக்கோடு பேசினார் பெருமாள்சாமி.
போதும் கெளம்புங்க எனும்படி தணிகைவேல் கையெடுத்துக் கும்பிட, யாராலும் எதுவும் பேச முடியவில்லை.
ஆளுக்கொரு பக்கமாக கலைந்து செல்ல, அசையாமல் நின்றவனை வினீத் வந்துதான் தோள் தொட்டு திருப்பினான். அவன் கண்களில் வெளியே சொல்லமுடியாத வேதனை. அவன் உள்ளுக்குள் குமுறுவது நன்கு தெரிந்தத. ஆனால் இவனுக்கு சாதகமாகப் பேச ஒருவரும் இல்லை.
“விட்டுப் போகமுடியாதுடா!” என்றான் கண்களில் தவிப்போடு.
“தெரியும் சீனி! ஆனா… சூழ்நிலை சரியில்ல. கொஞ்சம் ஆறட்டும். ரெண்டு நாள் கழிச்சுகூடப் பேசலாம். இப்ப கெளம்புவோம்!”
“எப்படிடா?”
“இப்போதைக்கி இதோட விட்டாங்கனு கிளம்பு. நீ செஞ்சுவச்சுருக்குற காரியம் தெரிஞ்சுது, இருக்குற கோபத்துல உருப்படியா ஊர் போய்ச் சேரமுடியாது. கட்டி வச்சு உதைப்பாங்க!” அன்றிரவு தண்டபாணியை வெகுநேரம் போராடி தூங்க வைத்து வெளியே வந்தவன் கண்டது, அந்த அர்த்தராத்திரியில் காரிலிருந்து இருவரும் இறங்கியதைத்தான். கைகட்டி, காரில் சாய்ந்து நின்று அவள் ரிசார்ட்டிற்குள் செல்லும் வரை, புன்னகை மிளிற பார்த்து நின்றவனைத் திரும்பி, அவள் பார்த்த பார்வையே நண்பனின் செய்கையைச் சொல்லாமல் சொல்லியது வினித்திற்கு. குடியைக் கெடுத்தானே என்றுதான் தோன்றியது. உள்ளே வந்தவனை எரிக்கும் பார்வை பார்த்தான்.
“எல்லாம் தெரிஞ்சும் நீயே இப்படிச் சொன்னா எப்படிடா?”
“எல்லாம் தெரிஞ்சதாலதான் சொல்றேன். தண்டபாணிக்கு மிக்ஸ் பண்ணிக் கொடுத்ததுலயே எல்லாரும் செம காண்டுல இருக்காங்க. ஏதோ சம்பந்தம் பண்ணப் போறோம்னு நேத்து விட்டுட்டாங்க. இப்ப நீ பண்ணது தெரிஞ்சது உசுரோட ஊர் போய்ச்சேர முடியாது. மரியாதையா இப்போதைக்கி கிளம்பு!” என்று சொல்ல மீண்டும் தயங்கி நின்றான்.
ஒருவேளை பழனியிடம் பேசினாலாவது இதற்கு ஒரு தீர்வு கிடைக்குமா என்று பார்க்க, அவளோ இவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.
ஒருத்தரும் குளிக்கக்கூட இல்லை. எழுந்து வரும்பொழுதே பிரச்சினை தொடங்கிவிட்டதே. பந்திக்கு ஆக்கின சாப்பாடு எல்லாம் அப்படியே கிடந்து போயிற்று. தண்டபாணிதான் நண்பர்களிடம் சொல்லி, வண்டி வைத்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு எடுத்துப் போகச் சொன்னான்.
கார் வர, முதலில் தங்கையையும், அம்மாவையும், அப்பாவோடு அனுப்பி வைத்தான். மகனின் முகத்தை கண்கள் பொங்க ஏறிட்டுப் பார்த்த கலையரசியை, தோளில் ஆறுதலாகத்தட்டிக் கொடுத்தவன், காரில் ஏறும்படி கண்களால் மட்டுமே சொன்னான். தங்கை அண்ணனை நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. பார்க்க முடியவில்லை. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது? சூழ்நிலை புரிந்து தண்டபாணிதான் முதலில் தெளியவேண்டியிருந்தது.
வந்த மாதிரியே ஆம்னி பஸ், ஆட்களோடு சென்னை கிளம்ப, தனது காரில் பொதிகாச்சலத்தையும், காந்திமதியையும் அனுப்பிவிட்டு, சீனியின் காரை வினீத் எடுத்துவந்தான்.
“ஏறுடா!” என்றான் இன்னும் மருகி நின்ற நண்பனிடம்.
“ஃபோன்ல பேசுடா! அந்தப் பொண்ணு அவங்க வீட்ல பேசினாலாவது ஏதாவது முடிவு தெரியலாம்ல!”
அவள் திரும்பிக்கூடப் பார்க்காமல் காரில் ஏறியதிலிருந்து அவனும் அதைத்தானே செய்து கொண்டிருக்கிறான். அவள் எடுத்துப் பேசினால்தானே, இவனும் ஏதாவது முடிவு செய்வதற்கு. அவள்தான் பேசியை எடுக்கவே இல்லையே. சைலன்டில் போட்டுவிட்டாள்.
“ப்ச்ச்… ப்ச்ச்…” சலிப்பாகத் தலையை ஆட்டினான்.
இங்கு இரண்டு குடும்பத்தையும் தலைகுனிய வைத்துவிட்டு, இத்தனை களேபரத்திற்கும் காரணமான ஜோடியோ சென்னையில் பதிவாளர் முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டிருந்தது முகம் கொள்ளா பூரிப்போடு. சீனிக்கு தகவல் வந்தது. கோபத்தில் தாடையிறுகி, கண்கள் சிவந்தது.
வீட்டிற்கு வந்த தணிகைவேல் ஓய்ந்து போய் இருக்கையில் சாய்ந்தார். நேற்றுவரை கல்யாணக்கலை கொண்டிருந்த வீடு. இன்று ஏதோ துக்கவீடுபோல் காட்சியளித்தது. எப்பொழுதும் சொந்தபந்தங்களால் கலகலத்த வீடு. இன்று யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. மௌனம் கனத்தது. வந்தனாவும், வரதராஜனும் பின்னாலே வந்துவிட்டனர். கலையரசி ஒரு தூணில் சாய்ந்தவர்தான். நிற்காமல் கண்ணீர் வடிந்தது. எத்தனை ஆசையாக முன்தினம் மண்டபம் கிளம்பிய குடும்பம். இப்பொழுது ஆளுக்கொரு மூலையில்.
தணிகைவேலிற்கு தண்டபாணியைவிட மகளை நினைத்துதான் கவலையே. இந்தக் காலத்திலும், உங்க முடிவுதான் எங்க முடிவும் என பெற்றவர்கள் சொல் மீறாத பிள்ளைகள். அவர்களுக்கு ஆசைப்பட்ட மாதிரி வாழ்க்கை அமைத்துத் தரமுடியவில்லையே என்ற எண்ணம் மனதை பாராங்கல்லாய் அழுத்த, அப்படியே மயங்கிச் சரிந்திருந்தார் தணிகைவேல்.
*****
“அதெப்படீங்க… உங்கள இந்த நிலைமையில பாத்தும், உங்கள இந்த நிலைக்கு ஆளாக்குன குடும்பத்துப் பையன்தான் வேணும்னு சொல்லுவா?” கலையரசி குரல் பிசிறடித்தது. அழுதழுது முகம் வீங்கிப் போயிற்று.
மருத்துவமனையில் படுக்கையில் இருந்தவர், மகளை அழைத்து, “ஆயா! உனக்கு விருப்பம்னா, குறிச்ச தேதியில அந்த மாப்பிள்ளை கூடவே உன் கல்யாணத்தை அப்பா நடித்தி வைக்கிறேம்மா. உன் விருப்பம்தான் முக்கியம்!” என்று சொல்ல, மனதை அழுத்தியது பழனிக்கு. அண்ணனை ஏறிட்டுப் பார்த்தாள். தண்டபாணி இறுகிப் போய் நின்றிருந்தான்.
மயங்கி விழுந்தவரை, வீடு வந்த அதே காரில் மீண்டும் அவசரமாக ஏற்றிவந்து மருத்துவமனை சேர்த்திருந்தனர்.
இரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாக சோதனைகள் சொல்லியது. மாலைதான் கண்ணே திறந்தார்.
மகளைத்தான் முதலில் அழைத்தார் தணிகைவேல். கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. மகன் திருமணம்தான் நின்றுவிட்டது. மகள் மனதில் ஆசை வைத்திருந்தால் என்ன செய்வதென்ற எண்ணம் அவருக்குள். வயதுப் பெண்ணாயிற்றே? நாம் தானே மாப்பிள்ளை பார்த்துக் கொடுத்தோம். அவன் மீது மகள் மனதை வைத்திருந்தால், இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் எனும் பொழுது விருப்பமில்லாமலா இருக்கும்? அவனும் அத்தனை பிடிவாதமாக நின்றானே? இந்தக் காலத்துப் பிள்ளைகள்தான் பேசி முடித்ததும் பேசியில் பேசிக் கொள்கிறார்களே? அந்த மாதிரி பேசி மகள் மனதில் ஆசையை வளர்த்திருந்தால் என்ற யோசனை பெற்றவருக்கு.
மகள் மனதைத் தெரிந்து கொள்ளவேண்டி அருகே அழைத்து கேட்க, கலையரசி குறுக்கே வந்தார்.
“நீ பேசாமயிரு கலை! ஆயா சொல்லட்டும்” என்றவர் மகள் முகம் பார்த்தார்.
அவளுக்குதான் தந்தையின் செய்கை, நெஞ்சை அறுத்தது. இப்பவும் தன் விருப்பம் கேட்கும் தந்தைக்கு தான் செய்த காரியம் தெரிந்தால், இன்று படுக்கையில் கிடப்பவர், ஒரேடியாக படுக்கையில் விழுந்துவிடுவார் என்பது புரிய அவளையும் மீறி கண்கள் பொங்கியது.
“நான் எப்பவும் சொல்றதுதான்ப்பா! நீங்களும் அண்ணனும் எது செஞ்சாலும் எனக்கு சம்மதம்தான்!” என்றாள் தொண்டையடைக்க.
“அப்போ… அடுத்த வாரமே பார்த்திய வரச்சொல்லலாமா?” என்று கேட்க, என்ன சொல்லுவாள் மகள்.
அண்ணனை மேடை வரை கொண்டுவந்து அவமனாப்படுத்திவிட்டு, தந்தையைப் படுக்கையில் விழவைத்த வீட்டுப் பையன்தான் கணவனாக வரவேண்டும் என்றா சொல்லமுடியும்? அதற்காக இன்னொருவன் கைகளில் நானா என்று நினைத்துப் பார்க்கவே உடலும், உள்ளமும் கூசியது. சத்தியமாக அவளால் சாத்தியப்படாது.
“முதல்ல நீங்க குணமாகி வீட்டுக்கு வாங்கப்பா! மத்ததெல்லாம் அப்பறம் பேசிக்கலாம்.” பிடி கொடுக்காமல் பேசிவிட்டு எழுந்து வெளியே வந்தாள்.
இப்பொழுதும் அவள் அலைபேசி ஓயாமல் அழைக்க, எடுத்துப் பார்த்தாள். சக்கரை என்ற பெயர் ஒளிற, ஒரு கணம் ஆழ்ந்த மூச்செடுத்து அழைப்பை ஏற்றவளுக்கு, “ஃப்ரூட்டி!” என்றவன் அழைப்பே கசந்துவந்தது.
கூடலின் மயக்கத்தில் அவன் பிதற்றியது. கூடல் நினைவிற்கு வர, கூடவே அவன் கூறிய, கூரிய வார்த்தைகளும் அம்பெனத் தைத்தது. சட்டென உடல் இறுகியது.
ஆணின் உணர்வுகள் கடல் அலை மாதிரி. ஓய்வின்றி தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். பெண்ணின் உணர்வுகள் ஆழிப் பேரலை மாதிரி எந்தளவிற்கு ஆர்ப்பரிக்கிறதோ, அதைவிடப் பலமடங்கு ஆழ்கடல் போல் உள்ளுக்குள் அடங்கிப்போகவும் முடியும். அவள் மீது அவளுக்கே வெறுப்பு மண்டியது. தனக்குள்ளே இறுகிப் போனாள்.
அப்பாவை ஒரு கணம் நினைத்துப் பார்த்தவள், “எனக்கும், எங்க மாமா பையனுக்கும் அடுத்த வாரம் கல்யாணம் சார். நீங்க கால் பண்றது இதுவே கடைசியா இருக்கட்டும்!” இறுகிய குரலில் சொன்னவள், அடுத்து அவன் குரலைக் கூட கேட்கப் பிடிக்காதவளாக அழைப்பைத் துண்டித்த கையோடு, அவன் பெயரை ப்ளாக் லிஸ்ட்டில் போட்டுவைத்தாள். இனி அவனுக்காக எப்பொழுதும் மனக்கதவைத் திறக்கவே போவதில்லை சீனியின் பழனி.
“பழனிஈ” கோபமாக இரைந்தவன் குரலில், வினீத் காரை ஒரு கணம் தடுமாறவிட்டான்.
தங்கையின் மீதிருந்த ஆத்திரம், இனி சென்னை சென்றபிறகு தன் குடும்பம் எதிர்கொள்ளப்போகும் சூழல், பழனியின் புறக்கணிப்பு எல்லாம் சேர்ந்து அவனுக்குள்ளும் ஆண் என்ற கர்வத்தை தூண்டிவிட்டிருந்தது.
“போடீ” என்றான் உள்ளுக்குள்.
*****
“பழனி…” அய்யம்மா அழைத்ததில் திரும்பிப் பார்த்தவள், நிகழ்காலத்திற்கு வந்திருந்தாள். பாத்ரூம் போக எழுந்து வந்தவர், பேத்தி தனியாக பால்கனியில் நிற்பதைப் பார்த்தார். அவருக்கும் ஆயாசம் எழுந்தது.
“இருட்டுல என்னடீ பண்ற? தூங்கலையா? நாளைக்கு பள்ளிக்கூடம் போகவேண்டாமா?”
“போகணும் அம்மாச்சி!” என்ற பேத்தியிடம் எதுவும் கேட்கவில்லை.
“போய்ப் படு! நீ பக்கத்துல இல்லாம அமிர்தா முழிச்சுக்குப் போறா! என்று அதட்டி விட்டுப்போனார்.
உள்ளே வந்து மகள் பக்கத்தில் படுத்து அணைத்துக் கொள்ள, தாயின் தொடுகை உணர்ந்த பிள்ளை, காலையும் கையையும் மேலே தூக்கிப் போட்டு, கழுத்தோடு இறுக்கிக் கட்டிக்கொண்டது. மனதின் அழுத்தம் அப்படியே வடிந்து போனது மகளின் அரவணைப்பில்.
‘வயித்துக்குள்ள இருக்கும்போதே கண்ணாமூச்சி காட்டியவளாச்சே! மகளின் தலைகோதி உச்சி முகர்ந்தவள், இதழ்களில் விரக்திப் புன்னகை.
இச்சிறு அணைப்பிற்கும், தலை கோதலுக்கும் ஏங்கி அங்கொரு மனம், தனிமையில் தவித்துக் கொண்டிருந்தது தூக்கம் தொலைத்த விழிகளோடு.

Super super super