முக்கனியும் சக்கரையும் 2

2

“மேம்… நெக்ஸ்ட் ஹவர் (hour) பிடி பீரியட் மேம்!” 

அவளது கணித வகுப்பிற்கான நேரம்‌ முடிந்தும் வகுப்பெடுத்துக் கொண்டிருக்க, வகுப்பு ‌தலைமை மாணாக்கன் எழுந்து நினைவூட்டினான்.

“அதான் இன்னும் பிடி டீச்சர் அப்பாயின்ட் பண்ணலையே.‌ சீக்கிரம் சிலபஸ் முடிச்சுட்டா உங்களுக்கும் படிக்க நிறைய டைம் கிடைக்கும்ல?” 

மற்ற பாடங்கள் மாதிரி கணக்குப் பாடத்தை வாசித்துவிட்டு செல்லவும் முடியாது. மாணாக்கர் முகத்தை வைத்தே புரிந்து கொண்டார்களா இல்லையா என கவனித்து பொறுமையாகத்தான் விளங்க வைக்க வேண்டியுள்ளது. இதில் குறிப்பிட்ட கால கெடுவிற்குள் பாடத்திட்டத்தை முடிக்கவும் வேண்டும். அடுத்தடுத்து சுதந்திரதின விழா, ஸ்போர்ட்ஸ் டே, வருடாந்திர ஆண்டுவிழா, குடியரசு தினம் என வரிசை கட்டி நிற்கும். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். பிள்ளைகளை அடிக்கக் கூடாது. கடிந்து பேசக் கூடாது. தண்டனை வழங்கக் கூடாது. ஆனால் படிக்க வைக்க வேண்டும். பள்ளிக்கு, நூறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி என்று விளம்பரப் பதாகையில் போடவேண்டும். இதன் மொத்த அழுத்தமும் ஆசிரியர்கள் மீதும் மாணவர்கள் மீதும்தான் ஏற்றப்படுகிறது.

கண்ணை மட்டும் விட்டுவிட்டு எங்க வேணும்னாலும் அடிங்க வாத்தியாரே என சொன்னதெல்லாம் ஒரு காலம். என் பிள்ளையை நீ எப்படி அடிக்கலாம் என்றுதான் இன்று கேட்கப்படுகிறது. அடியாத பிள்ளை படியாது. உங்க வாத்தியார்கிட்ட சொல்றேன் என பிள்ளைகளை‌ மிரட்டியதும்‌ ஒரு காலம். பிள்ளைகளைப் பார்த்து ஆசிரியர்கள் மிரள்வதுதான்‌ இக்காலம். மாதா, பிதாவிற்கு அடுத்த ஸ்தானத்தில் இருக்கும் குருவிற்கென தனி மதிப்பும், மரியாதையும் இருந்தது‌. நட்பு ரீதியான அனுகுமுறையென (friendly approach) வாத்தியார் எப்பொழுது வாத்தியானதோ அப்பொழுதே அந்தப் பணிக்கான மதிப்பும், மரியாதையும் குறைந்துவிட்டது. 

இன்னும் விளையாட்டு ஆசிரியர், நியமனம் செய்யப்படாமலிருக்க, அதை தனக்கு சாதகமாக எடுத்துக்கொண்டாள் பழனி. ஒரேயொரு‌ பெண் விளையாட்டு ஆசிரியை இருக்கிறார். அவர் ஐந்தாம் வகுப்பு வரைதான். ஆண் விளையாட்டு ஆசிரியருக்கு அரசாங்க பள்ளியில் பணிநியமனம் கிடைத்துவிட, சென்ற மாதம் தான் இப்பள்ளியில் இருந்து விடைபெற்றுக் கொண்டார். 

“ப்ளீஸ் மேம்… அவுட்டோர் கேம்ஸ் தான் விளையாட முடியாது. கேரம், செஸ்னு இன்டோர் கேம்ஸ் விளையாடுவோம் மேம்!”

“எஸ் மேம்… ப்ளீஸ் மேம்!” என அனைவரும் ஒருமித்த குரல் எழுப்பி, எப்படியாவது இந்த வகுப்பை விட்டு அவளை அனுப்பும் முனைப்பில் இருப்பது தெரிந்தது.

அதற்குள் அட்டென்டர் வந்து, “பழனி மேம்… உங்களுக்கு நெக்ஸ்ட் ஹவர்‌ ஃப்ரீ தானே. இந்தக் கிளாஸை‌ சத்தம் போடாம கவனிச்சுக்குவீங்களாம். ஸ்டூடன்ட்ஸ் இன்டோர் கேம்ஸ் விளையாடட்டும்னு கோ ஆர்டினேட்டடர் மேடம் சொல்லிவிட்டாங்க!” என்று சொல்ல, 

“போச்சா!” என்ற முகபாவம் தான் மாணாக்கரிடம். ஒரு சிலர் வாய்விட்டே அதைச் சொல்ல, அதை கேட்டவளுக்கும் உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டாள்.

உள் விளையாட்டு அரங்கிற்கு வரிசையில் செல்லுமாறு பணிக்க, “ஹேஏஏ…” என்ற சிறு கூச்சல் அவர்களுக்குள். 

“நீங்க மட்டும் இந்த ஸ்கூல்ல இல்ல. மத்த க்ளாஸ் நடக்க வேண்டாமா? மூவ் கொயட்லி! (moove quietly)” சற்றே கண்டிப்பு தொனி காண்பிக்க,

“யெஸ் மேம்!” என்றனர். அவர்களை முன்னே அனுப்பிவிட்டு, சில வீட்டுப்பாட நோட்டுகளை, திருத்துவதற்கு கையில் எடுத்துக் கொண்டு அவர்கள் பின்னே‌ சென்றாள். 

அங்கு பெரிய ஹாலில் வரிசையாக சதுரங்கம் மற்றும் கேரம் பலகைகள் எதிரெதிர் நாற்காலிகள் போடப்பட்டு, மேஜைகளில் வைக்கப்பட்டிருந்தது. அவரவர் விருப்பத்திற்கேற்ப அணி சேர்ந்து விளையாட ஆரம்பித்தனர். 

நோட்டுக்களை எடுத்து வந்துவிட்டாளே ஒழிய திருத்தும் மனநிலை இல்லை. காலையில் இத்துணூண்டு வயிற்றுக்கு ஈந்தது. சத்தமிட்டு ஊரைக்கூட்டாத குறையாக வயிற்றுக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியது பசி. 

நோட்டை மூடி வைத்துவிட்டு, ஒரு கேரம் பலகை முன் மூவர் மட்டுமே அமர்ந்திருக்க, ஆட்டத்திற்கு நானும் வரலாமா எனக் கேட்டாள்.

“ஷ்யூர் மேம்!” அவ்வளவு சந்தோஷம் அவர்களுக்கு. எப்பொழுதும் ஆசிரியை தங்களோடு இணங்கி வருவது மாணாக்கருக்கு அவ்வளவு பிடிக்கும். டீச்சர்ஸ் பெட் என பெயரெடுக்க மெனக்கெடாதார் யார்?

இது மொழி ஆசிரியைகளுக்கு மிகவும் எளிதாக நிகழ்ந்துவிடும். ஆனால் மற்ற பாட ஆசிரியைகளுக்கு சற்று கடிணம் தான். அதுவும் கணிதம் என்றாலே பாடமும், ஆசிரியரும் எட்டிக்காய்தான் பிள்ளைகளுக்கு. 

கேரம் ஸ்டிரைக்கர் இவள் கைக்கு வர, வரிசையாக கருப்பு, வெள்ளை என காய்ன்களை அடித்தவள், “மேம்…” என்ற இறைஞ்சும் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தாள். 

“எங்களுக்கும் ஏதாவது விட்டு வைங்க!” என்றனர் பாவமாக முகத்தை வைத்து. வெகு வருடங்கள் கழித்து கேரம் முன் உட்காருவதாலோ என்னவோ தன்னை மறந்த எல்லா காய்னும் பாக்கெட் போட, பிள்ளைகளோடு விளையாடுகிறோம் என்பதே அப்பொழுதுதான் நினைவிற்கு வந்தது. 

நுனி நாக்கைக் கடித்து, தலைசாய்த்து, “ஷ்ஷ்ஷ்…” என இடக்கண்ணை சுருக்கினாள். அவளது அசட்டு பாவனை அத்தனை அழகாக இருக்க,

“க்யூட் மேம்” என்றாள் ஒரு மாணவி. 

சன்னல் வழியாக இதைப் பார்த்தபடி சென்றவன் கால்கள் ஒரு கணம் தாமதித்தது. நின்று கவனித்தான். அவனது கண்களில், இவளது செய்கை ரசனையாகப் பதிய, புன்னகை விரிந்தது இதழ்களில். நின்று பார்த்தால் அபத்தமாகப் படுமென, அவசரமாக அகன்று விட்டான் அவ்விடத்தை விட்டு மனமேயில்லாமல்.

“இருக்கறதே ஒரு பீரியட் மேம். அதுல நீங்களே எல்லா காய்ன்ஸும் பாக்கெட் பண்ணிட்டா நாங்க எப்போ விளையாடறதுன்னு தான்” என இழுக்க, 

“யூ ஆல் கேரி ஆன்” என எழுந்து கொள்ள‌‌ முனைய, 

“நோ மேம்… நீங்களும் உக்காருங்க!” என்றனர். அடுத்து பிள்ளகளுக்குத் தகுந்த மாதிரி விட்டுக் கொடுத்து விளையாட வெகு வருடங்கள் கழித்து மனம் இலேசான உணர்வு. பெரும்பாலான நேரங்களில் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மனநிலை தான் நம் மனநிலையையும் தீர்மானிக்கிறது. 

அவர்களது முகம் காட்டிய சந்தோஷம் அவளது முகத்திலும் பிரதிபலித்தது. பள்ளிகள் கொடுக்கும் அழுத்தத்தில் பிள்ளைகளை இறுக்கிப் பிடிக்கவேண்டியிருப்பதை நினைத்து அவளுக்கும் மனம் உறுத்ததான் செய்தது. அதற்காக என்ன பண்ண முடியும். செல்லமாக அடித்துக் கொண்டும், விட்டுக் கொடுக்காமல் விளையாட்டாக சண்டை போட்டுக்கொண்டும் விளையாடுபவர்களைப் பார்க்க, அவளுக்கும் தன் பள்ளிக்காலங்கள் நினைவு வந்தது. கவலைகள் ஏதுமின்றி, பட்டாம்பூச்சியாய் சிறகடித்த காலமது. தனக்குள் எழுந்த ஆயாசத்தை பெருமூச்சாக வெளியேற்றினாள். 

வகுப்பு முடிய, அடுத்து உணவு இடைவேளை. மாணவர்களை அனுப்பி விட்டு, மகளின் வகுப்பிற்கு சென்று அழைத்துக் கொண்டு கேண்டீன் வந்தாள். தனக்கும் மகளுக்குமான உணவை வாங்கிக் கொண்டு இருக்கையில் அமர, சக ஆசிரியைகள் சிலர் அவளுடன் இணைந்து கொண்டனர். பல்வேறு பேச்சுகளோடு உணவு வேளை நகர, 

“பழனி மேம்… உங்களுக்கு ஒன்னு தெரியுமா?” என்றார் சக ஆசிரியை. 

“சொல்லுங்க மேம், தெரிஞ்சுக்கறேன்!”

“இனிமே நீங்க பிடி பீரியட் எடுத்துக்கு முடியாது. பிடி சார் அப்பாயின்மென்ட் பண்ணிட்டாங்க. பேரு கூட தேனப்பனோ, சீனியப்பனோ. சரியாத் தெரியல. ஆனா… ஆளப்பாத்தா மட்டும் பொண்ணுங்க எறும்பா மொய்க்கப் போறாளுங்கனு தெரியுது!” அவர்பாட்டிற்கு சொல்லிக் கொண்டே போக, அவளது கவனம் முழுதும் கர்மசிரத்தையாய் மகளுக்கு சாப்பாட்டை ஊட்டுவதிலேயே தான் இருந்தது. 

“பழனி மேம், கேட்டுச்சா?”

“என்ன சொன்னீங்க?’’ என்றாள் மகளுக்கு தண்ணீர்‌ குடிக்க கொடுத்து, வாயை துடைத்துக் கொண்டே. 

“சரியாப் போச்சு. எந்த லோகத்துல இருக்கீங்க?” என்றவர் எழுந்து கொள்ள, அதன் பிறகு இவள் ஒரு வாய் கூட சாப்பிடவில்லை. அப்படியே மூடி வைத்துவிட்டு எழுந்து கொண்டாள்.

“ம்மா… நீ சாப்பிடல?”

“பசிக்கல அம்மு! க்ளாஸ்க்கு டைமாச்சு. எந்திரி!”

“ம்கூம்… நீயும் சாப்பிடு. வந்து பாட்டி சொல்லியிருக்காங்க. நீ சாப்பிடலைனா, கலை பாட்டிக்கு ஃபோன் பண்ண‌னும்னு! நான் வேணா ஊட்டி விடவா?” இவளைப் பற்றி தெரிந்து தான், பெரிய மனுஷியிடம் தனது பொறுப்பை விட்டுச் சென்றுள்ளார் எனத் தெரிய, மென் புன்னகை பெரியம்மாவை நினைத்து. 

எப்பொழுதும் தன்னை விட்டுக் கொடுக்காதவர். “அவ முடிவுக்கே விடு கலை. பாத்துக்கலாம்” என தனக்காகப் பேசி தங்கையின் மனத்தாங்கலை சம்பாதித்துக் கொண்டவர். 

“ஏன்டீ! எங்கிட்டயே, எங்கம்மாவைச் சொல்லி மிரட்டுறியா?” 

“ஆமா… கலை பாட்டீ எப்பவும் டெர்ரர்! வந்து பாட்டிதான் ஸ்வீட்!”

மகள் சொன்னதைக் கேட்டதில் அது எந்தளவிற்கு உண்மை என்று அவளுக்குதான் தெரியுமே. தன் வளர்ப்பு தப்பாகிவிட்டதே என, இன்னும் இவளிடம் சரியாக பேசக்கூட பேசமாட்டார் கலையரசி. மகள் தன்னிடமே மறைத்து விட்டாளே என்ற ஆதங்கம் வேறு. இன்னும் வீம்பு காட்ட வைத்தது. 

“நீ பெத்த பிள்ளைனா இப்படித்தான் மறச்சுருப்பியாக்கா! பொம்பளப் பிள்ளையைப் பெத்திருந்தாதானே தெரியும்” எனக் கேட்டு, அக்காவையே வெளுத்து வாங்கியவராயிற்றே கலையரசி. கோபம் வந்துவிட்டால் வார்த்தைகள் நெருப்பு துண்டம்தான் கலையரசியிடம்‌. யார், எவரென்று பார்க்காமல் பொசுக்கி விடும். ஆனால், அதில் ஒரு நியாயம் இருக்கும். 

அவள் ஏதோ சிந்தனையில் இருக்க, இவளது கைபேசியை எடுத்த அமிர்தா, லாக்கை ஓபன் செய்து,

“கால் அம்மா” என கூகுள் அசிஸ்டன்ட்டிடம் அழைப்பு விடுத்தாள் கலையரசிக்கு. அமிர்தா செயலில் சிந்தனை கலைந்தவள்,

“ஏய்… எதுக்குடீ எங்கம்மாவுக்கு கால் பண்றே?” எனப்பதற,

“சாப்பிடலைல்ல… அம்மாச்சி கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணத்தான்!”

“அவங்கதான் எங்கிட்ட பேசமாட்டாங்களே!” மகளிடம் விளையாட்டுபோல் சொன்னாலும், சொல்லி முடிக்குமுன் தொண்டையில் அழுத்தமாய் ஒரு வலி. 

“ஆனா… எங்கிட்ட பேசுவாங்களே!”

“ஆடு பகை குட்டி உறவாடீ?” எனக் கேட்டுக் கொண்டிருக்க, அதற்குள் எதிர் முனை அழைப்பை ஏற்றது. 

“ஹலோ… அம்மாச்சி!”

“அமிர்தா குட்டீ… எப்படீ இருக்க?” 

கலையரசியின் முகம் பேத்தியின் குரல் கேட்டு மத்தாப்பாய் பூரிப்பது இங்கே மனக்கண்ணில் தெரிந்தது பழனிக்கு. கண்டிப்பாக வாயெல்லாம் பல்லாக விரிந்திருக்கும். கன்னத்திற்கு கை‌ முட்டுக் கொடுத்து, சிரிப்போடு பார்த்திருந்தாள் இருவரின் சம்பாக்ஷனையை. பெற்ற பிள்ளையை விட பேத்தி ஒசத்தியாகப் போய்விட்டது. 

“உங்க பொண்ணு சாப்பிட மாட்டேங்குது. பூச்சாண்டி கிட்ட புடுச்சுக் கொடுக்கவா?”

“விடு… அப்படியாவது கொழுப்பு கொறையுதான்னு பாக்கலாம்!” 

இதுதான் கலையரசி. மானே, தேனே, கண்ணு, பொன்னு டைப் அம்மா கிடையாது. ஏதாவது தப்பு செய்தால் “எடு அந்த வெளக்கமாத்த!” என்பது தான் அவரது ஆஸ்த்தான டயலாக். பொம்பளைப் பிள்ளைனா‌ இப்படித்தான் இருக்கணும் என வழிவழியாக வந்த சட்டதிட்டங்களோடு இருப்பவர்.  

“வந்து பாட்டி போனதிலருந்து, டெய்லி லேட்டா ஸ்கூலுக்கு கூட்டி வர்றாங்க!” அடுத்த புகார் வாசிக்க, இருவரின் பேச்சில் வாய்விட்டே சிரித்தாள். 

“உங்கம்மாவே ஏழு தடி போட்டாதான் எந்திரிப்பா. அவ எந்திரிச்சு உன்னைய எங்கே சீக்கிரம் கெளப்பப் போறா. அவ அம்மாச்சி, தாத்தாவை அனுப்பி வைக்கிறேன்னு சொல்லு! அவளுக்கு அவங்கதான் சரி” என்று‌ பேத்தியிடம் கூற, 

வேகமாக வேண்டாம் என சொல்லச் சொல்லி, மறுப்பாக கையை ஆட்டி சைகை செய்தாள் பழனி. 

அவள் சொல்ல வருவது புரியாமல், “என்னம்மா?” என்று சத்தமாக அமிர்தா கேட்க,

“வர வேண்டாம்னு சொல்லுவா! வேற என்னத்த சொல்ல போற. நீ ஃபோனை வை தங்கம். அடுத்த வாரம் அவங்கள ட்ரெயின் ஏத்தி விடுறேன்!” பேத்தியிடம் சிறிது நேரம் அளவளாவி விட்டு அழைப்பு துண்டிக்கப்பட, 

“அம்மாச்சி, தாத்தா வர்றேன்னாங்க!” அமிர்தா அவளது அம்மாச்சியும், தாத்தாவும் வருவதாக விளங்கிக் கொள்ள,

“வர்றது என்னோட அம்மாச்சி, தாத்தாடீ! நான் பாட்டுக்கு சாப்பிட்டிருக்கலாம்டீ. நீ ஒரு பெரிய மனஷின்னு‌ உங்கிட்ட சொல்லிட்டுப் போனாங்க பாரு உன் வந்தூ பாட்டி!” தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள் பழனி. 

*****

“என்ன அண்ணே! அதுக்குள்ள கேட் மூடிட்டீங்க? இன்னும் செகன்ட் பெல் அடிக்கலையே” 

“ஃபர்ஸ்ட் பெல் அடிச்சதும் கேட் க்ளோஸ் பண்ண சொல்லிட்டாங்க மேடம்!”

“யாரு…. பிரின்சிபல்‌ மேடமா?”

“இல்ல மேடம்! புதுசா வந்திருக்கற பிடி சார்தான் சொன்னாங்க! இனிமே இதுதான் ரூல்ஸாம்! எல்லாருக்கும் குரூப்ல மெசேஜ் வந்துச்சே மேடம்!” என்று சொல்லிக் கொண்டிருக்க ப்ரேயர் தொடங்கியது. காலையில நடந்த கலாட்டாவில் அதையெல்லாம் எங்கு கவனித்தாள். 

“டீச்சர்ஸுக்குமா. ஸ்டூடன்ட்ஸ் மட்டும்தானே வெளியே நிக்கணும்!”

“எல்லாருக்கும் தான் ரூல்ஸ்னு சொன்னாங்க மேடம்.”

இவளிடம் சொல்லிக் கொண்டிருக்க, பள்ளி வாகனம் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டது. 

அதைப் பார்த்தவள், “ஸ்கூல் ட்ரான்ஸ்போர்ட்ஸ்க்கெல்லாம் உங்க பிடி‌ சார் ரூல்ஸ் போடலியா?” என்றாள் எரிச்சலோடு. 

“எங்கிட்ட ஏன் மேடம்‌ கோவிக்கறீங்க? எங்கிட்ட என்ன சொல்றாங்களோ அதைத்தானே செய்ய முடியும்?” என்று அவளுக்கு பதில் சொல்லியவர்,

‘இவங்க லேட்டா வந்துட்டு நம்மகிட்ட எகிர்றாங்க. அவங்க சொல்றதைக் கேக்கறதா? இவங்க சொல்றதைக் கேக்குறதா?’ மனதிற்குள் பொறுமினார் செக்யூரிட்டி. 

மகள் முறைத்துப் பார்க்க, அய்யய்யோ இவ வேற பாக்குறாளே… பாக்குறாளே… மொறைக்கிறாளே… மொறைக்கிறாளே! எங்கம்மாவுக்கு கூட இவ்ளோ பயப்படலடீ. சில்வண்டுக்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கு என நினைத்தவள்,  “என்னடீ, நீயும் ஏதாவது சொல்லேன்!” என்றாள் மிதப்பமாக. 

“எல்லாம் உன் பாட்டி, தாத்தாவாலதான் இன்னைக்கும் லேட்டு!” என்றாள் கைகளைக் கட்டிக் கொண்டு. 

‘பேச்சும் தோரணையும் பாரு. சின்னப்பிள்ளையாட்டமா இருக்கு. எல்லாம் என் நேரம்’ மகளின் செய்கையில் ஆனந்தமாய் அலுத்துக் கொண்டது மனம். 

(நாலு வயசுப் பிள்ளைக்கு இவ்வளவு தெளிவான்னு கேட்காதீங்க மக்கா. இன்றைய தலைமுறை நிலாவைக் காட்டி சோறூட்டப்பட்டு வளர்க்கும் தலைமுறை கிடையாது. பிறக்கும் பொழுதே ஆன்ட்ராய்டும் கையுமாகத்தான் பிறக்கிறார்கள். அதீத தெளிவும், அதிகப்பிரசங்கித் தனமும் சற்று கூடுதல் தான். மீடியாக்களில் வரம்பு மீறி பேசுவதும், அதை பெற்றோர் கைதட்டி ரசிப்பதும் பார்க்கும் பொழுது குழந்தைகளின் பேதை பருவத்தை அனுபவிக்காமலே கடந்து வருகிறார்களோ என்றொரு‌ ஐயம். ரசிக்கும்படியாக இருந்தாலும், பத்து வயதில் தெரிந்து கொள்ள வேண்டியதை ஐந்து வயதில் தெரிந்து கொண்டால், இருபத்தி ஐந்து வயதிலேயே, இனி தெரிந்து கொள்ள, இந்த வாழ்க்கையில் என்ன இருக்கு என வாழ்க்கை சலிப்புத் தட்டிவிடாதா? கால் நூற்றாண்டிற்குள் வாழ்க்கையின் சுவாரஸ்யம் மட்டுப்பட்டுப் போக, அடுத்து என்னவென புதிதாக தேடச் சொல்லும். புதிது, புதிது என்பது எந்த எல்லைக்கும் இட்டுச் செல்லும். இன்று அந்தத் தேடலுக்கு தீனி போட்டு, மூளையை மழுங்கடிக்க வலைத்தளங்கள் தயாராக இருக்கின்றன.)

“பெரியவங்கள அப்படி சொல்லாதே அம்மு! வயசானவங்க நமக்கு உதவிக்கு தான் வந்திருக்காங்க!” என்றவளுக்கும் காலையில் நடந்தது மனக்கண்ணில் விரிந்தது. 

அலாரம் அடித்தும் மீண்டும் மீண்டும், ஸ்னூஷைத் தட்டிவிட்டு தூக்கத்திற்கு சென்றாள். அந்த ஐந்து நிமிடத் தூக்கத்தில் அப்படி என்னதான் சுகமோ? 

அடுத்தடுத்து அழைப்பு வர, அலாரம் என்ற நினைப்பில் அணைத்துவிட்டு மீண்டும் கும்பகர்ணனுக்கு கம்பெனி கொடுக்க, “ம்மா… செக்யூரிட்டருந்து ஃபோன் மா!” ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவளை‌ மகள் உலுக்கி எழுப்பினாள். 

“என்னனு கேளு அம்மு!” என புரண்டு படுத்துக் கொண்டாள். 

“ம்மாஆ…” என்று கத்தியவள், அழைப்பை ஏற்று அவள் காதருகில் வைக்க,

“மேடம், உங்க வீட்டுக்கு கெஸ்ட்‌ வந்திருக்காங்க. விசிட்டர் பாஸ் இல்ல. பேரு அய்யம்மா, வேலாயுதம்னு சொல்றாங்க, ஃபோட்டோ அனுப்பவா?” என்று உறுதிப் படுத்திக் கொள்ள‌ கேட்க, அரைத்தூக்கத்தில் இருந்தவள், 

“அப்படி யாரும் எனக்கு தெரியாது. திரும்ப போகச் சொல்லுங்க!” என்றாள் எரிச்சல் மேலிட. வரவேண்டாம்‌ என்று அவ்வளவு சொல்லியும் கிளம்பி வந்த கோபத்தில். 

“அப்படி யாரும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்கம்மா. உங்கள உள்ள விட முடியாது!”

“என் மக வீட்டுக்குப் போக நீயென்ன அனுமதி கொடுக்கறது?” அய்யம்மா காவலாளியிடம் எகிறிக் கொண்டு போக,

“இது இங்க ரூல்ஸ் பாட்டீ! அவங்களே சொல்லணும். இல்லைனா உங்ககிட்ட விசிட்டர் பாஸ் இருக்கணும். அப்பதான் உள்ளே விடமுடியும். எல்லாம் உள்ளே இருக்கறவங்க பாதுகாப்புக்காகத்தான். அவங்க அப்படி யாரும் தெரியாதுன்னுட்டாங்க.”

“அதென்ன.. எங்களப் பாத்தா, கொள்ளக்காரி மாதிரியா இருக்கு. திருட வர்றவதான் இத்தனை மூட்டை முடிச்சோட, இத்தனை பவுன் நகையோட வர்றேனாக்கும். ஆயக்குடிகாரியாக்கும். ஆஞ்சுபுடுவேன் ஆஞ்சு. தெரியாதுன்னா சொன்னா?” 

அவரைப் பார்த்த காவலாளிக்கும் அதே சந்தேகம் தான். இந்த வயதான காலத்தில், கழுத்து நிறைய‌ இத்தனையைப் போட்டுக் கொண்டு எந்த தைரியத்தில் வந்தார் என்று. 

“ஆமா… பாட்டீ அப்படித்தான் சொன்னாங்க. அவங்களே வந்து சொன்னாதான் உள்ளே விடமுடியும்!” அதற்குள் என்னவென கேட்டு, அங்கே இருந்த பூங்காவில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த ஃப்ளாட் செக்ரெட்டரி அங்கு வர, காவலாளி நடந்ததைச் சொன்னார். 

ஃப்ளாட் செகரெட்டரி, அவளுக்கு அழைப்பு விடுக்க, எடுத்தவள் விஷயம் தெரிந்து, இரவு பைஜாமாவோடே எழுந்து அவசரமாக கீழே வந்தாள்‌. 

“வாங்க அம்மாச்சி, வாங்க தாத்தா!” என வரவேற்க, அய்யம்மாள் பேசாமல் முகத்தை வெட்ட, செக்யூரிட்டியிடம் மூட்டைகளை எடுத்து வரச் சொல்லிவிட்டு இருவரையும் மின் தூக்கியில் அழைத்துச் சென்றாள்‌. 

பின்னாலே வந்த காவலாளி, கட்டைப் பைகளை இறக்கி வைக்க, ஒரு பையைப் பிரித்தவர், பஞ்சாமிர்த டப்பா ஒன்றை எடுத்து அவரிடம் கொடுத்தார் அய்யம்மா. 

“நீங்க பழனிலருந்து வர்றீங்களா? அப்பறம் ஏன் தெரியாதுன்னீங்க மேடம். வயசானவங்கள இப்படி பண்ணலாமா?” என்று கேட்க, அவருக்கு இரண்டு தேங்காயும், இரண்டு மாம்பழமும் சேர்த்து எடுத்துக் கொடுத்தார் அய்யம்மா. 

“தேங்க்ஸ் பாட்டீ!” என வாயெல்லாம் பல்லாக வாங்கிச் சென்றார். 

“பாட்டீ எனக்கும் ஜாம்!” என்று அமிர்தா கேட்க, 

“ப்ரஷ் பண்ண வாடீ! அப்பறம் எடுத்துக்கலாம். எங்கேயும் ஓடிப்போகாது!” என்றாள் பழனி. 

“உங்கம்மாவுக்கு கொடுக்கலைன்னு கோபம்!”

“ஆமாமா… பழனிக்கே பஞ்சாமிர்தமா? உங்களத்தான் இந்த வயசான காலத்துல அலைய வேண்டாம்னு சொன்னேனே!” 

“எம்மக வீட்டுக்கு வர நான் யாரைக் கேக்கணும்!” என்றார். 

வந்தனா மற்றும் கலையரசியைப் பெற்றவர்கள். 

மகளை பாத்ரூம் அழைத்துச் சென்றாள். பல் துலக்கி, கைகழுவி விட  வெளியே வந்து உள்ளங்கையில் பஞ்சாமிர்தத்தை வாங்கிக் கொண்டு, நாவால் சுழற்றியெடுத்து, “ம்ம்ம்… வெரி ஸ்வீட் பாட்டி” என்றாள் இடக்கை ஆள்காட்டி விரலையும், கட்டைவிரலையும் சேர்த்து.‌

தணிகை விலாஸ். விபூதி, பஞ்சாமிர்தம் என பழனி அடிவாரத்தில் பிரசாதக் கடை. பல தலைமுறைகளாக இதுதான் அவர்களது வியாபாரம் தணிகைவேல் குடும்பத்தினருக்கு. உலகம் முழுதும் தணிகை விலாஸ் விபூதி, பஞ்சாமிர்தம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தலைமுறைக்கு ஒரு தணிகைவேல் இருப்பார் மூதாதையர் பெயர் விளங்க. 

வீட்டு வாரிசுகளுக்கு, குலதெய்வப் பெயரும், மூதாதையர் பெயரும் வைப்பது நமது வேர்களை மறந்து விடாமல் இருக்கவும், முன்னோர்களுடனான கண்ணி அறுபட்டுப் போகாமலிருக்கவும் தான். இன்று பலபேருக்கு குலதெய்வப் பெயரோ,‌ மூதாதையர் பெயரோ எதுவென்றே தெரிவதில்லை. 

இன்று‌ வீட்டிலேயே சமைத்து, சாப்பிட்டு தான் இருவரும் பள்ளி செல்ல வேண்டும் என உத்தரவைப் போட்டுவிட்டு, குளிக்க சென்றுவிட்டார் அய்யம்மாள்.‌

வேறு வழியில்லை. தனக்காக இல்லை என்றாலும், வயதானவர்களுக்காகவேணும் சமைத்தே ஆக வேண்டிய கட்டாயம். மாவு இல்லாமலிருக்க, செக்யூரிட்டியிடம் மாவு வாங்கி வரச்சொல்லியவள், சட்னிக்கு ஏற்பாடு செய்தாள். அவர்களுக்கு இட்லி ஊற்றி ஹாட்பாக்சில் போட்டுவிட்டு, மகளுக்கு நெய் தோசை ஊற்றி வைத்துவிட்டு, இவள் குளித்து, மகளை கிளப்பிவர, இன்று அதிசயமாக முதல் பெல் அடித்தவுடன் வந்துவிட, அப்படியிருந்தும் இவள் வருவதற்குள் கேட் பூட்டப்பட்டது. வாரத்தின் முதல் நாள். க்ரவுன்ட் அசெம்ப்ளி‌ வேறு. கொடி வணக்கத்தோடு ப்ரேயர் முடிய நேரமெடுக்கும். 

ஓங்கி ஒலித்த விசில் சத்தத்தில் தான் சிந்தனை கலைந்தாள். ப்ரேயர் முடிந்திருந்தது. பிள்ளைகள் வரிசையாக பின்புறமாக கைகளைக் கட்டிக் கொண்டு வகுப்பறை சென்று கொண்டிருந்தனர். 

கேட் திறந்து விடப்பட, எல்லாரும் அவசரமாக உள்ளே செல்ல,  இறுக்கமான வெள்ளை டீ சர்ட் மற்றும் கருப்பு ஸ்போர்ட்ஸ் ட்ராக் பேன்ட்டில் அவர்களை நோக்கி வந்தான் சீனியப்பன். விளையாட்டு ஆசிரியருக்கான அத்தனை பொருத்தமும் அம்சமாய்‌ பொறுந்தியிருந்தது. கழுத்தில் விசில் தொங்க இவர்களை நோக்கி தான் வந்தான். 

‘எறும்பா மொய்க்கப் போறாளுங்க!’ பார்த்தவுடன் சென்ற வாரம் சக ஆசிரியை சொன்னது தேவையில்லாமல் நினைவில் வந்து தொலைத்தது‌ 

அவனுக்கு முதல் நாள் என்பதால், இன்று ஒரு நாள் மட்டும் சலுகை வழங்கி மாணக்கரை எச்சரித்து அனுப்பினான். 

அவள் அங்கு நிற்க வேண்டிய அவசியமில்லாததால், வேகமாக வண்டியை அதனிடத்தில் நிறுத்துவிட்டு, மகளை கைபிடித்து இழுத்துச் சென்றாள் அலுவலக அறை நோக்கி. 

“மேம்… கீ!” என்று முதுகிற்குப் பின் குரல் கேட்க, சட்டென நடை தடைபட்டு, உடல் இறுகியது. 

ஒரு நொடி தான். எவ்விதமான உணர்வுகளுக்கும் உனக்கும் சம்பந்தமில்லையென உள்மனம் எச்சரிக்க, பிள்ளையின் கைப்பிடியை தளர்த்த, ஓடிச்சென்று சாவியை வாங்கியவள், “தேங்யூ சார்!” என்றாள் பூஞ்சிரிப்போடு. 

மீண்டும் அம்மாவிடம் ஓடி வந்தவள், “ம்ஹும்…” என்ற உறுமலோடு, கை நீட்டிய  பழனியிடம் சாவியைத் திணித்தாள். உனக்கு இதே வேலையாப் போச்சு என சொல்லாமல் சொல்லியது மகளின் சிறு‌ உறுமல். 

“ம்மா இந்த அங்கிள் தானே…” என அமிர்தா ஏதோ கூற விழைய,

“வாடீ டைம் ஆச்சு!” அதட்டி மக்களை கை பிடித்து இழுத்து சென்றாள்.

பார்த்துக் கொண்டிருந்தவன் முகம், புன்னகை பூசிக் கொள்ள, “சுகர் பேபி!” என்றான் வாய்க்குள். 

4 thoughts on “முக்கனியும் சக்கரையும் 2”

  1. பஞ்சாமிர்தம் ருசியுடன் கதை ஆரம்பம், அந்த பழனி ஆண்டவன் பழனியம்மாளை என்னவெல்லாம் ஆட்டுவிப்பானொ , ஈஸ்வரியின் தயவிருந்தால் வென்றிடலாம் பார்ப்போம் என்ன நடக்கும் என.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top