16
மனதும், கண்களும் ஒரு சேர மயங்க, இதழோரம் மென்னகை பூத்தது. விழியகற்றாமல் பார்த்திருந்தான். தரையெல்லாம் குளிரும் தை மாதத் தொடக்கத்தின் முன் பனிக்காலம். உடலை ஊசியாய்த் துளைக்கும் அதிகாலைப் பனி. தைத் திருநாளாம் தமிழர் திருநாள் முடிவடைந்ததற்கு அடையாளமாக வாசலெங்கும் போட்டு வைத்த வண்ணக் கோலங்களின் மிச்சங்கள், குழந்தை கலைத்த ஓவியம் போல் வீதி முழுவதும் இறைந்து கிடந்தது.
கார் உள்ளே கொண்டுவர முடியாது என்பதால், ஓரங்கட்டி நிறுத்திவிட்டு… சீனியும், அவனது கேமரா நண்பனும் மட்டும் இறங்கி நடந்து வந்தனர். அவனது உதவியாளர்கள் காரிலேயே இருந்து கொள்ள, திருமணத்திற்கு முன் புகுந்த வீடு வரக்கூடாதென்பதால் ரஞ்சனியும் கார் ஏசியை ஆன் செய்துவிட்டு அங்கேயே இருந்து கொண்டாள்.
நடந்து வந்தவன் வீதி திரும்பியதுமே அவளைக் கண்டு கொண்டான்.
தை மாதக் குளிரிலும் அந்நேரத்திற்கே, தலைக்குக் குளித்து, ஈரத்தலையில் துண்டைக் கட்டியவாரு கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் பழனி. வீட்டிற்குள் ஆட்கள் நடமாடும் அரவம் வெளிவரை நன்றாகவே கேட்டது.
இன்னும் வெளிச்சம் பாவாத மென்னிருட்டு. தெருவிளக்குகள் கூட அணைக்கப்படவில்லை. சிமெண்ட் தளமிட்ட வீதியில், வீட்டு வாசல் முன்பு கோலமிட்ட கோதையை ரசித்துக் கொண்டேதான் நடந்து வந்தான். சிவப்புமல்லாத, ஆரஞ்சுமல்லாத அந்திவானத்துக் கலரில் மைசூர் சில்க் புடவை உடுத்தியிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை. அவள் கவனம் முழுவதும் புள்ளிகளைக் கோர்த்து கம்பியிழுப்பதிலேயே இருக்க, புடவை மண்ணில் புரண்டது. இதை உள்ளிருந்தே கலையரசி கவனித்திருக்க வேண்டும்.
“புடவைய தூக்கிச் சொருகிட்டு வேலையைப் பாரு பழனி! புதுச்சேலை மண்ணாகுது பாரு! புடவை வீணாகுதேன்னு கொஞ்சமாவது அக்கறையிருக்கா?” உள்ளிருந்தே அதட்டுவது வெளிவரை கேட்டது.
“நானே குளிர்ல நடுங்கிட்டு கோலம் போட்டுட்டு இருக்கேன். அந்த அக்கறை கொஞ்சமாவது உங்களுக்கு இருக்கா? புடவை வீணாகுதாம். இன்னும் ஒரு வாரத்துல நானும் தான் கல்யாணப் பொண்ணு. என்னமோ உங்க மகனுக்கு மட்டும் தான் கல்யாணம்கற மாதிரி, காலங்காத்தால எழுப்பிவிட்டு, வாசலக் கூட்டு, கோலம் போடுன்னு கொடுமை பண்றீங்கம்மா! என் வாயப் புடுங்காதீங்க!” இவளும் வெளியே இருந்தே சூடாக பதில் கொடுத்தாள்.
நடுங்கும் குளிரில் எழுப்பிவிட்டு கோலம் போடச் சொன்ன கடுப்பு பேச்சில் தெரிந்தது. மார்கழி மாதம் முழுவதும் இதே கதைதான். அப்பொழுதெல்லாம் வீதி முழுவதும் இவள் வயதுப் பெண்களோடு உன் கோலம் பெரிதா, என் கோலம் பெரிதா என போட்டி போட்டுக்கொண்டு சிரிப்பும், கேலியுமாக கோலம் போட்டதில் குளிர் பெரிதாகத் தெரியவில்லை. தைபிறந்து ஒரு வழியாகப் பொங்கல் முடிந்ததே என பெருமூச்சு விட்டவளை, இன்று ஐந்தாம் நாள்… முகூர்த்தக்கால் ஊன்றுதல் என, அவளை மட்டும் வெள்ளன எழுப்பிவிட்டு, குளிக்கச் சொல்லி, சொந்த பந்தமெல்லாம் வர்ற நேரம் எனப் புதுப்புடவை கட்டவைத்து, கோலப்பொடியை கையில் கொடுத்துவிட்டார் கலையரசி. அந்நேரத்தில் தெருவே வெருச்சோடியிருக்க அவள் மட்டும்தான் வாசல் முன்பு.
“போற எடத்துல இழுத்துப் போத்திட்டு தூங்கு. கட்டுனவன் எந்திரிச்சு கோலம் போட்டுட்டு, காபியோட வந்து எழுப்புவான்!” உள்ளே முகூர்த்தக் கால் ஊன்றத் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டே, மகளை அர்ச்சிக்கவும் தவறவில்லை.
“நானெல்லாம் எங்க எப்படி வாக்கப்பட வேண்டியவ. எங்கெரகம், கருப்பட்டி காபிதான்னு நம்ம தலையில எழுதியிருக்கு” இதை மட்டும் கலையரசிக்கு கேட்காத வண்ணம் வாய்க்குள்ளேயே முணங்கினாள்.
“என்னடீ அங்க மொணங்குற?”
“நீங்க சொன்னாலும், சொல்லாட்டியும் அதுதான் நடக்கும்னு சொல்றேன். அதுக்கு தோதாத்தானே காபிக் கடை வச்சுருக்குற மாப்பிள்ளையப் பாத்துருக்கீங்க! நானெதுக்கு ஆளுக்கு மொத எந்திரிச்சு காஃபி போடணும். நமக்கெல்லாம் பெட் காஃபி வருமாக்கும்!” கை லாவகமாகக் கம்பியிழுப்பதில் கவனமாக இருந்தாலும், வாய் வாசலில் இருந்தபடியே அம்மாவிற்கும் ஜம்பமாக பதில் கொடுத்தது.
“ஆமா… வரும்… வரும்… நீயும் கனவு கட்டுட்டிரு!”
அதைக் கேட்டவனுக்கும் சிரிப்பு வந்தது. திரும்பி நண்பனைப் பார்க்க அவனும் சிரித்தான். அவனுக்குப் புரிந்தது. வாசலில் கோலம் போட்டுவிட்டு கையில் காபியோடு தன்னை கற்பனை செய்து பார்த்திருக்க வேண்டும். அதைக் கண்டு கொண்டவன் முகத்தில் மெலிதாக நாணப்படலம்.
“அப்படியே இருடா! இப்படி ஒரு ரியாக்ஷன் கிடைக்காது!” சட்டென கழுத்தில் தொங்கிய கேமராவை எடுத்து அவனது நாணம் படர்ந்த முகத்தை, அதிகாலைப் பனியோடு அழகாகக் கிளிக்கினான். எடுத்ததை சீனியிடம் காட்டியவன் “செமையா இருக்கடா, கல்யாணக்கலை வந்துருச்சு உனக்கு” என புகழாரம் வேறு சூட்டினான்.
சட்டென, “வினீத்… இதையும் கேப்சர் பண்ணிக்கலாமா? நம்ம ரெடி பண்ணி, ஃபோட்டோ ஷுட் எடுத்தாலும் இப்படியொரு சீன் நேச்சுரலா அமையாது!” அவளை ரசித்தவன், சடுதியில் தனக்குத் தோன்றிய யோசனையைக் கூற,
“அதெப்படி… அவங்களுக்குத் தெரியாம?” யோசித்தான் வினீத்.
“இதுதான் நேச்சுரலா இருக்கும் வினீத்!”
“ஆனா, யாராவது பாத்துட்டா வம்பாயிரும் சீனி. சொல்லிட்டே எடுக்கலாமே!” என்றவனுக்கும், அதிகாலையில் இப்படியொரு காட்சியைத் தவறவிட விருப்பமில்லைதான்.
ஆனால், இந்நேரத்தில் வாசலில் கோலமிடும் பெண்ணை ஃபோட்டோ எடுப்பதை யாராவது பார்த்துவிட்டால், என்ன ஏது என்று விசாரிக்கும் முன் தர்ம அடி நிச்சயம். அந்தப் பயத்தில் வினீத் தயங்க,
“ம்ஹும்… சொல்லிட்டு எடுத்தா சரிவராது. ஃபேட்டோ எடுக்கறாங்கனு தெரிஞ்சாலே ஸ்பான்டினிட்டி (Spontaneity) போயிறும்! இந்த ஃபீல் ஃபேஸ்ல வராது. லைட்டாவாவது செயற்கைத் தன்மை வந்துறும்!”
அவனது யோசனையைக் கேட்டவன், “பேசாம நீ காஃபிக் கடை போட்டதுக்குப் பதிலா ஃபேட்டோ ஸ்டுடியோ வச்சுருக்கலாம்!”
“இப்பவும் ரெண்டுக்கும் பெருசா ஒன்னும் வித்யாசம் இல்லடா. ரெண்டுலயும் காபிதான் போடுறோம்!” நண்பனின் சிலேடையில் வினீத்துக்கும் சிரிப்பு வந்தது.
இவன் சம்மதிக்க, கேமராவை ஆன் செய்து, கண்ணில் வைத்து கோணம் பார்த்தான் புகைப்படக்காரன்.
அவள் கோலம் போடும் அழகை பல கோணங்களில் நிமிடத்தில் கிளிக்கியவன், அதை சீனியிடமும் காட்டினான்.
கண்களில் வியப்பு அவனையும் மீறிப் பளிச்சிடட்து. அப்பொழுதுதான் புலரும் காலைக் கதிரவனின் பொன்னொளி பாவையவள் முகத்தில், ஒரு பக்கம் மட்டும் படர்ந்திருக்க, எவ்வித அலங்காரமும் இன்றி, மஞ்சள் பூசிய முகம்,(அய்யம்மாவின் உத்தரவு. கல்யாணப் பொண்ணு முகத்துல மஞ்சளில்லாம இருக்கக் கூடாதென்பது) நெற்றியில் அரக்கு சிவப்பில் சிறிய ஒட்டுப் பொட்டு, அதற்குமேல் மெலிதான திருநீர்க்கீற்று, காலைக் கதிரொளி பட்டு மின்னும் பேரழகு என பார்த்தவன் விழிகளில் ரசனையைக் கூட்டினாள் பழனி. முகம் மலர, மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
“யாருப்பா அது? பொம்ளப் புள்ளய போட்டோ புடிக்கிறது?” நான்கு வீடு தள்ளி இவர்கள் நின்றிருந்த வாசலின், வீட்டின் கதவு அப்பொழுதுதான் திறக்கப்பட்டு அந்த வீட்டுக்காரம்மா, வாசல் தெளிக்க, வாளியில் தண்ணீரோடு வெளியே வந்தார்.
அவர் போட்ட சத்தத்தில் தான் அவளே நிமிர்ந்து பார்த்தாள். குளிருக்கு இருவரும் தலையில் ஹுடி டீ சர்ட் அணிந்திருக்க, மங்கலான வெளிச்சத்தில் சட்டென அடையாளம் தெரியவில்லை. ஆனால், கையிலிருந்த கேமராமட்டும் தெரிய, அவளுக்கும் கோபம் வந்தது. அதற்குள் கோலத்தையும் முடித்திருந்தாள். அவளுக்கே தெரியாமல் யாரோ தன்னை படம்பிடிப்பது தெரிய, நம்ம ஊர்ல, நம்ம தெருவுக்குள்ள, நம்ம வீட்டுப்பக்கத்துல வந்து, நம்மையே போட்டோ எடுக்க, எவ்வளவு தைரியம் என நினைத்தவள்,
“யாரு அத்தை அது?” என்று கேட்டுக் கொண்டே வேகமாக எழ, எழுந்த வேகத்தில், தலையில் கட்டியிருந்த துண்டு அவிழ்ந்ததில், துண்டை எடுத்து திண்ணையில் வீசிவிட்டு, ஈரக்கூந்தலை முன்பக்கமாக வழியவிட்டு, இடக்கையால் கொசுவத்தை தூக்கிப் பிடித்து, கோபமாக இவர்களை நோக்கி வந்தவளைப் பார்த்த புகைப்படக்காரனுக்கு பதட்டம் வந்தது. இந்த நேரத்தில் கத்தி ஊரைக் கூட்டிவிட்டால், அவன் எதிர்பார்த்த தர்ம அடி நிச்சயம் என்றது உள்மனது.
வினீத் பயத்தோடு பக்கத்தில் இருந்தவனை திரும்பிப் பார்க்க, அவனோ கண்களில் ரசனையோடு, எதிரே வருபவளை பார்வையால் அள்ளிக் கொண்டான். யார் என்று தெரியாமல்தான் பக்கத்து வீட்டுப் பெண்மணி கேள்வி கேட்கிறார் என்பதால் அவன் தைரியமாகத்தான் இருந்தான்.
“டேய்… இப்பக்கூட உனக்கு ரொமான்ஸ் கேக்குதாடா?” என்றான் பயந்த பாவத்தோடு.
“ஏம்ப்பா… பதிலே சொல்லாம நின்னா என்ன அர்த்தம்? வீட்டு ஆம்பளைகளக் கூப்பிடணுமா?” என்று அதட்டுவது போல் கேட்க, அதற்குள் அவளும் அவர்களை நெருங்கிவிட,
“பழனி… அப்பாவையும், அண்ணனையும் வரச்செல்லுடீ. அவங்க வந்து நாலு போடட்டும். எங்க வந்து பொட்டப்புள்ளைய படம்பிடிக்குறாங்க. மொதல்ல கழுத்துல தொங்கறதப் புடுங்கி என்ன எடுத்துருக்காங்கனு பாரு!” என்று சொல்ல, கேமராக்காரனுக்கோ ரெண்டு அடி வேண்டுமானாலும் அடித்துக் கொள்ளுங்கள். என் செல்லத்தை விட்டுவிடுங்கள் என்பது போல் கேமராவை இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அதற்குள் இவர்களை சமீபத்திருந்தவள் வேகம் மெல்ல மெல்லக் குறைந்தது. இவ்வளவு கோபமாக வருபவளை சற்றும் அசராமல் பார்ப்பவன் யார் என்ற எண்ணத்தோடு வந்தவள், அவர்களை நெருங்கிவிட, ‘அட… நம்ம கருப்பட்டி! இல்ல… இல்ல… சீனி!’ என்றுதான் தோன்றியது.
விழியோரம் சிரிப்பு கசிய அவளையே பார்த்திருக்க, அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்தது. இப்பவும் இருட்டுக்குள்ள யார்னு தெரியல போல என்பது போல் அவன் கண்களில் குறும்பு கசிய பார்த்து வைக்க, அவளும் பொங்கிய சிரிப்பை அடக்க படாதபாடு பட்டாள்.
அவன்தான் என கண்டு கொண்டபின் அவளுக்குள் மெலிதாக ஒரு படபடப்பு. தூக்கிப் பிடித்திருந்த கொசுவத்தை சட்டெனக் கீழே விட்டாள். பார்வையின் வீச்சு அவளை வசியம் செய்ய, இவ்வளவு நேரமாகக் குளிரில் நடுங்கிய தேகம் அனலடிப்பது போல் ஒரு உணர்வு. மெலிதாக மேனியெங்கும் ஒரு சிலிர்ப்பு ஓட, அது குளிரால் அல்ல என்பது மட்டும் நிச்சயம்.
ஒரு கணம் தயங்கி நின்றவள், “வாங்க!” என அழைத்த குரல் அவளுக்கே கேட்கவில்லை. அவள் எழுந்து வந்த வேகத்தையும், வேகத்தைக் குறைத்து நடை தளர்ந்ததையும், நிமிர்ந்து பார்க்காமல் வார்த்தை வெளிவராமல் அவள் வரவேற்றதையும் பார்த்தவனுக்கு வரிசைப் பற்கள் பளீறிட புன்னகை விரிந்தது.
அன்று, நேருக்கு நேராக நின்று அவனைக் கேலி செய்தவளுக்கும், இவளுக்கும் ஏழாம் பொறுத்தம் என்பது போல் இருந்தது. இவனைக் கண்டதும் அவளுக்குள் எழுந்த தடுமாற்றம் பிடித்திருந்தது.
இன்று இவர்கள் வருவார்கள் எனத் தெரியும். இவ்வளவு சீக்கிரம் எதிர்பார்க்கவில்லை. இங்கே வந்து சேர்ந்து கொடைக்கானல் போவதாகத் திட்டம்.
பழனி அவனை வரவேற்றதில்,
“யாருடீ இது!” என்று கேட்க, என்ன சொல்லப் போகிறாள் என இவன் ஆர்வமாகப் பார்க்க,
“பொண்ணு வீட்டுக்காரவுங்க அத்தை. சென்னைக்காரவுங்க!” என்றாள் சாமர்த்தியமாக.
“அப்போ உனக்கும் மாப்பிள்ளை வீட்டுக்காரவுங்க தானே! அதுக்குன்னு வயசுப் புள்ளய… வீதியில வச்சு போட்டோ புடிப்பாங்களாமா?” என்றவர் குரல் இப்பொழுது தணிந்து ஒலித்தது.
இவரிடம் பேச்சுக் கொடுத்தால், கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தன் வாயாலாயே இன்று கொடைக்கானல் செல்வது முதற்கொண்டு விஷயத்தைக் கறந்து, கல்யாணத்திற்கு முன்பு என்னடியிது, இல்லாத புதுப்பழக்கம். எங்க காலத்துல எல்லாம் இப்படியா என அங்கலாய்க்க ஆரம்பித்து விடுவார்.
அது தெரிந்தே, “நல்ல நேரம் முடியறதுக்குள்ள பந்தக்கால் நடணும் அத்தை. நீங்க என்ன இப்பதான் எந்திரிச்சே வர்றீங்க. நேத்தே அம்மா சொன்னாங்களா இல்லையா?” என்று அவரையே கேள்வி கேட்க,
“இதோ வர்றேன் பழனி. லேட்டாச்சுனா உங்க அம்மாகிட்ட முகம் கொடுத்துப் பேச முடியாது” என்றவர் அடுத்து வாசல் தெளிக்க ஆரம்பிக்க,
“அப்பாடா தப்பிச்சோம்டா சாமி. இன்னைக்கி தர்ம அடி நிச்சயம்னு நெனச்சேன் சிஸ்ட்டர். காப்பாத்திட்டீங்க!” என்றான் தப்பித்த ஆசுவாசத்தோடு.
“எப்படி சீனி! இவங்க கிட்ட பெர்மிஷன் வாங்கின?” என்று ரகசியமாகக் கேட்க சிரிப்பு மட்டுமே அவனிடம்.
“ஒரு நாள் மட்டும் தான்னு சொல்லி கேட்டுருக்கேன். இருட்டறதுக்குள்ள கொண்டு வந்து விட்டுறனும்னு கண்டிஷன்!”
“ஒரு நாள் மட்டுமா? ரெண்டு ஜோடிக்கும் எப்படி?” என்று கேட்க,
“அங்க போய் பாத்துக்கலாம் வா! இப்பவே சொன்னா அனுப்ப மாட்டாங்க!” என்றான் சன்னக்குரலில்.
அதற்குள் பந்தக்காலுக்கான பொருட்களை எடுத்து வைக்க வெளியே வந்த கலையரசி, மகளை வாசலில் காணாமல் தேட, பக்கத்து வீட்டில் நிற்பது தெரிந்தது.
“பழனி! இங்க வேலை கெடக்கு. காலங்காத்தால அங்க என்னடீ பண்ற!” என குரல் கொடுத்தவர், யாரது பக்கத்துல என்று கண்கள் ஆராய, சீனியைக் கண்டு கொண்டார்.
“வாங்க தம்பி!” என்றார் அவசரமாக.
அதற்குள் பள்ளம் எடுக்க பந்தல்காரர் வந்துவிட்டார். அவருக்குத் தேவையான பொருட்களை எடுத்து கொடுத்துவிட்டு, இவர்களை உள்ளே அழைத்துச் சென்றார்.
இவர்களைப் பார்த்ததும் தணிகைவேல் முதற்கொண்டு வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வந்து வரவேற்றனர்.
தண்டபாணியும் எழுந்து, குளித்து, வேட்டி சட்டையில் தயாராகி வந்தான். வந்தவர்களுக்கு காஃபி உபச்சாரம் நடந்தது.
“என்னடா இது! பாரதிராஜா படம் மாதிரி வீடே ஆட்களா இருக்காங்க?”
“இங்க எல்லாமே இப்படித்தான் வினீத். அதுவும் இவகிட்ட ஒரு கும்பல் இருக்கு. சரியான வாலுங்க!” என்றான் மலர்ந்த முகத்தோடு.
“மாமா… சௌக்கியமா? எப்படி இருக்கீங்க?” பழனிக்கு சித்தப்பா மகள் அவனை வரவேற்று நலம் விசாரிக்க,
“இந்தா வந்துட்டாங்க பாரு!” என்றவன்,
“எப்படி இருக்கேன்னு கொளுந்தியா நீதான் பாத்து சொல்றது” என்றான்.
“கருப்பட்டி காபியை விட்டீங்களா?”
“நான் விடறதா இல்ல. வேணும்னா உங்க அக்காவ கருப்பட்டி காஃபிக்கு பழகிக்கச் சொல்லு!”
“அக்கா, உங்களுக்கு கல்யாணம் பேசுனதுலருந்து வரக்காபி தான் குடிக்குது. எப்படியும் கல்யாணத்துக்குள்ள உங்களுக்கு மேட்ச் ஆகிறும்! இவங்க தான் கேமரா மேனா?” எனக் கேட்க,
“ம்ம்ம்…” என்றான் புன்னகை படர்ந்த முகமாக.
“எங்க மாமாக்கு லைட்டிங் நல்லா வச்சு ஃபோகஸ் பண்ணுங்க. இல்லைனா ஆல்பத்துல எங்க மாமாவ நாங்க லைட் போட்டுத் தேடணும்!” அசால்டாக பேசி விட்டுச் செல்ல,
எப்படி என்பது போல் சீனி பார்க்க, “சமாளிக்கறது ரொம்பக் கஷ்ட்டம்டா” என்றான் வினீத்.
நல்ல நேரம் நெருங்க, அதற்குள் அக்கம் பக்கத்து சொந்தங்களோடு, அண்டை வீட்டாரும் வந்து சேர்ந்துவிட்டனர்.
“ம்மா… ரஞ்சனியும் கார்ல இருக்கா! கூப்பிடலாமா?” ரகசியமாக மகன் அம்மாவிடம் கேட்க,
“கல்யாணத்துக்கு முன்ன எப்படிடா? பெரியவங்க என்ன சொல்லுவாங்களோ?”
“அதான் இன்னும் ரெண்டு நாள்ல மண்டபம் வரத்தானே போறா! அது இன்னைக்கி வந்தா என்னம்மா. பந்தக்காலுக்கு அவளும் இருந்த மாதிரி இருக்கும்!”
மகன் அவளும் இருக்க வேண்டுமென ஆசைப்படுகிறான் எனப் புரிந்தது. சென்னையில் இருந்தால் கூட விட்டுவிடலாம். இரண்டு தெரு தள்ளி காருக்குள் இருப்பவளை எப்படி அழைக்காமல் தனியே விடுவது.
இதை அய்யம்மாவிடம் தெரிவிக்க, “அதுக்கென்ன கலை. இப்ப என்ன எல்லாம் அந்தக்காலம் மாதிரியா நடக்குது. வரச்சொல்லு. இவ்வளவு தூரம் வந்த பிள்ளை, பந்தக்காலுக்கும் வரட்டும்” என்று சொல்ல, சித்தப்பா பிள்ளைகளைவிட்டு, காரில் இருப்பவளை அழைத்து வரச் சொன்னார்.
பிள்ளைகள் ஓடிச் சென்று அழைத்து வந்தனர். அவள் வரும்பொழுதே ‘ஆத்தே… இவ கார்லயே இருந்திருக்கலாமே’ என்றிருந்தது கலையரசிக்கு. வாசலில் நின்றவர்கள், வந்தவர்கள், வீதியில் அப்பொழுதுதான் எழுந்து கோலம் போட வந்தவர்கள் கண்ணெல்லாம் அவள் மீதுதான்.
முழங்காலுக்குக் கீழே அங்கங்கு கிழித்து விடப்பட்ட, சாயம் போன வெளிர் நீலக்கலரில் பேடட் ஜீன்ஸ், கருப்பு கலர் டீசர்ட்டில் இருந்தாள். அரையடி உயரத்தில் குதிவைத்த செருப்பு. தலையை விரித்து விட்டிருக்க, அப்பாடா என கலையரசியும், தண்டபாணியும் ஆசுவாசப்பட்ட ஒரே விஷயம் கழுத்தைச் சுற்றி அவள் போட்டிருந்த கருப்பு வெள்ளையில் உல்லன் ஸ்கார்ஃப் மட்டுமே. அதுவும் ஸ்டைலுக்காகப் போட்டிருந்தாள். அப்பொழுதும் யாருடனோ ஃபோனில் பேசியபடியே தான் நடந்து வந்தாள்.
கலையரசி மகனைத் திரும்பிப் பார்க்க, தண்டபாணியைப் பொருத்தவரை அவள் உடுத்தியிருப்பது சாதாரண உடைதான். அது சென்னையில் இருக்கும்வரை. ஆனால், இங்கு அனைத்து கண்களும் அவளையே மொய்ப்பதுபோல் இருக்க தர்மசங்கடமாக இருந்தது.
சாதாரணமாக கல்யாணப் பொண்ணுனாலே எல்லார் பார்வையும் அவள் மீதுதான் இருக்கும். இவள் வேறு, ஐந்தாம் நாள் முகூர்த்தக்காலுக்கே, நவநாகரீக மங்கையாக குதிரை போல் நடந்து வந்தால் சொல்லவா வேண்டும்.
“இதுதான் கல்யாணப் பொண்ணாம்!” வாய் மறைத்து பேசிக் கொண்டார்கள்.
எல்லாரும் தன்னைப் பார்ப்பது தெரிந்ததும் அவர்கள் பார்வையை புருவம் சுழித்து அலட்சியமாக எதிர் கொண்டாள்.
“வாம்மா… நல்லா இருக்கியா?” அய்யம்மா விசாரிக்க,
“ஃபைன் பாட்டி!” என்றாள் ஒட்டவைத்த புன்னகையோடு.
எல்லார் பார்வையும் அவள் மீது படிவதைப் பார்த்தவர்,
“முகூர்த்த நேரம் முடியப்போகுது… சட்டுபுட்டுனு வேலையப் பாருங்க!” என ஆளுக்கொரு வேலையை ஏவி, அவர்கள் கவனத்தை திசைதிருப்பிவிட்டார்.
முகூர்த்த நேரம் முடிவதற்குள் பந்தக்கால் நட ஏற்பாடுகள் நடக்க, இவளை கண்டுகொள்ளவில்லை. அவளும் ஆட்களோடு சேர்ந்து நின்று கொண்டாள்.
அப்பொழுதுதான் காஃபி குடித்துவிட்டு வெளியே வந்த சீனியும் தங்கையை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது முகமே காட்டிக் கொடுத்தது. இதுவரை அவனுக்கும் ஒன்றும் தெரியவில்லை. ஆனால், இவர்களோடு சேர்த்துப் பார்க்க தங்கையின் தோற்றம் அவனுக்கே சங்கடத்தைக் கொடுத்தது. அதுக்குதான் ஊருக்குத் தகுந்த வேஷம்னு அந்தக் காலத்துலேயே சொல்லி வைத்திருக்கிறார்கள் போல என்று நினைத்துக் கொண்டான். இன்று பந்தக்கால் எனத் தெரிந்திருந்தால் சுடிதாரிலாவது அழைத்து வந்திருப்பான். அதை அவள் கேட்பாளா மாட்டாளா என்பது அடுத்த விஷயம். என் உடை. என் இஷ்ட்டம் என்பாள். ஆனால், இப்படிப் பார்வைப் பொருளாக ஆகவிட்டிருக்க மாட்டான்.
பந்தக்கால் வைபவத்தையும் படம் பிடித்துக் கொண்டனர்.
“பழனி… உங்க அண்ணிய அத்தை வீட்டுக்கு அழச்சுட்டுப் போ. அங்க வச்சு சாப்பாடு கொடுக்கலாம்!” கலையரசி மகளிடம் சொல்ல, பழனி ரஞ்சனியை அழைத்துக் கொண்டு பக்கத்து வீட்டிற்குள் சென்றாள்.
“சீனி… இங்கேயே நேரம் போயிறும் போலயே!” அவசரப்பட்டான் வினீத்.
“அதுவும் நல்லதுக்கு தான் விடு!” என்றான் சிரிப்போடு.
“டேய்… நீ எதுவும் வேற ப்ளான்ல இருக்கியா?”
“இல்லையே!”என்றான் தோள்களை குலுக்கி.
“ரெண்டு நாள் தான் கால்ஷீட் கொடுத்திருக்காங்க. அதுல இவங்களே பாதி எடுத்துக்கிட்டா, எப்படிடா முடிக்கறது? நாம அங்க போறதுக்குள்ள லைட்டிங் போயிறுமேடா!”
“அவங்க ப்ளானும் அதுதான் வினீத். முடிஞ்சளவுக்கு நேரத்தைக் கடத்துறாங்க!”
“ஆனாலும் இந்தக் காலத்துலயும் இதெல்லாம் ஓவர்டா சீனி. வழக்கமா ஒரு மாசத்துக்கு முன்னாடியே ப்ளான் பண்ணிறுவோம். உங்க வீட்டுக் கல்யாணம் தான் இவ்வளவு நெருக்கத்துல ஃபோட்டோ ஷுட் பண்றது. இதுல இவங்களுக்கு ஃபேட்டோ வேற பேனரடிக்க உடனே அனுப்பனுமாம். சோதனைடா சாமி!” என அலுத்துக் கொண்டான்.
ஒருவழியாக காலை சாப்பாட்டை முடித்து, இவர்கள் கிளம்ப, கார் வரை வந்தபிறகுதான் தெரிந்தது தண்டபாணி மட்டும் தான், ப்ரீ வெட்டிங் ஷுட்டிற்கு அவனது காரில் கொடைக்கானல் வருகிறான் என்பது.
“முதல்ல இவங்கள வச்சு ஃபேட்டோ ஷுட் பண்ணுங்கப்பா. ஏற்கனவே லேட்டாயிருச்சு. நாளை காலையில வெள்ளனா பழனிய அனுப்பி வைக்கிறோம்! சாயங்காலம் திரும்பிருங்க! மூனாம் நாள் மாப்பிள்ளைக்கு நலுங்கு வைக்கணும். நலுங்கு வச்சபின்னாடி எங்கேயும் வெளியே போகக்கூடாது” என்று அவர்கள் சித்தப்பா ஒருவர் சொல்ல, வினீத் வந்த சிரிப்பை வாய்க்குள் அடக்கியவாறு சீனியைப் பார்க்க, அவனுக்கோ கோபம் சுறுசுறுவென தலைக்கேறியது.
அவ்வளவு தூரத்தில் இருந்து தங்கையை அழைத்து வந்த நான் கேனையனா என்பது போல் தோன்றியது. ஒரு வேளை தங்கையின் உடை அப்படி நினைக்க வைத்ததோ. நவநாகரீதமாகத் தோற்றமளித்தால், எங்கு வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும், நேரங்காலம் பார்க்காமல் சுற்றுவாள் என்ற நினைப்பா. இவர்கள் தான் கண்ணும் கருத்துமாக பிள்ளையை வளர்க்கிறார்கள். நாங்க எல்லாம் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என தண்ணீர் தெளித்தா விட்டிருக்கிறோம்.
இவர்கள் பிள்ளை உத்தமன். என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறதாம் என்றவனுக்குள் வேறொரு திட்டமும் எழுந்தது.
விளையாடிப் பார்க்கத்தான் நினைத்தான். ஆனால் விளையாட்டு வினையாகுமென்பது அவனே எதிர் பார்க்காதது.
