15
ஏற்கனவே பார்த்த பெண்தான். அதனால் பெண் பார்க்கும் படலம் இல்லாமல் போயிற்று. ஏற்கனவே பார்த்த மாப்பிள்ளை வீடுதான். அதனால் மாப்பிள்ளை வீடு பார்க்கும் வைபவமும் அவசியமில்லாமல் போயிற்று.
இரு வீட்டுப் பெண்களுக்கும் அரைமனதாகவும், சொந்த பந்தங்களின் மனத்தாங்கலோடும், இருபக்கத்து ஆண்களின் முழு விருப்பத்தோடும் சீனியப்பன், பழனியம்மாள் திருமணம் உறுதி பேசப்பட்டது.
அவர்கள் அப்படி நேரடியாகக் கேட்ட பிறகு என்ன சொல்வதென்று புரியாமல் தணிகைவேல் யோசனையில் இருந்தார். தண்டபாணி, சென்னை சென்று விசாரித்த பிறகு முடிவு செய்யலாமென மறுநாள் கிளம்பியிருந்தான்.
ஏற்கனவே சொந்தத்தில் இவள் படிப்பிற்கும், இவர்கள் வசதிக்கும் தோதாக இருந்த மாப்பிள்ளை பார்த்தீபன் தான். இருவருக்கும் பொருத்தம் பார்த்ததில், சாதகப் பொருத்தம் சாதகமாக அமையாததில் இருவீட்டாருக்கும் வருத்தமே. குறிப்பாகத் தண்டபாணிக்கு. அவனுக்கு முழு மனதாக பார்த்தீபனுக்கு தங்கையைக் கொடுக்கவே விருப்பம். சிறுவயதில் இருந்தே அவனைப்பற்றி தெரியும் என்பதால்.
அவனுக்கும் பழனி மீது அபிப்ராயம் இருப்பது, இலைமறை காயாகத் தெரியும். தங்கையும் உள்ளூரில் பெற்றவர்கள் கண் முன்னாலே இருப்பாள் என்ற எண்ணம் தான்.
மற்ற சொந்தத்தில் இருந்த வரன்களும் இவர்கள் எதிர்பார்ப்பிற்கு இல்லை. வசதி இருந்தால் படிப்பில்லை. படிப்பு இருந்தால் வசதியில்லை. இரண்டும் இருந்தால் பொருத்தம் இல்லை. இத்தனை இல்லைகளுக்கு நடுவில் தங்கள் குடும்பத்தின் மதிப்பு தெரிந்து, மாப்பிள்ளை வீடு பார்க்க வந்த இடத்தில் பெண்ணும் கேட்டுச் சென்ற பொதிகாச்சலம் குடும்பத்தைத் தட்டிக்கழிக்க தணிகைவேலிற்கு தயக்கமாக இருந்தது.
முன்னப்பின்ன அனுசரித்து பார்த்திருந்தால் ஏதோ ஒரு வரன், எப்பொழுதோ தகைந்திருக்கும். அவர்தான், மகளுக்கென சல்லடை போட்டு மாப்பிள்ளை தேடினாரே?
“என்னமோ உங்க அப்பா சீமையிலில்லாத மாப்பிள்ளை பாக்குறாரு. எங்க அப்பா எல்லாம் இப்படியா பாத்தாங்க. அழுத்தக்காரனுக்கு புழுத்த கத்திரிக்காய்னு சொல்லுவாங்க!” என்று கலையரசி கூட நீட்டி முழக்கினார்.
குடும்பத்தையும், பெண்ணையும் மட்டுமே பார்த்து, வசதியைப் பார்க்காமல் தணிகைவேல் குடும்பத்தினர் கலையரசியைப் பெண் கேட்டதும், தங்கள் மகளின் பூர்வ ஜென்ம பாக்கியம் என பூரித்துப் போய், மறுபேச்சின்றி வேலாயுதமும், அய்யம்மாவும் பெண் கொடுக்க சம்மதித்தது வேறு விஷயம். அதெல்லாம் இப்பொழுது பேசமுடியுமா? பேசினால் எனக்கென்ன குறைச்சல் என வரிந்துகட்டுவார்.
எப்பொழுதும் பெண்கள் கண்ணோட்டம் வேறு. ஆண்கள் கண்ணோட்டம் வேறு. பொதிகாச்சலம் பெண் கேட்டதும் கலையரசி யோசித்தது காந்திமதியை மட்டும்தான். தணிகைவேல் யோசித்தது மாப்பிள்ளையைப் பற்றி மட்டும்தான். மகள் வாழப்போவது அவனுடன்தானே என்று மட்டும்தான் யோசித்தார்.
என்னதான் பொதிகை சூப்பர் மார்க்கெட், இன்று பல கிளைகள்விட்டு பிரிந்து பெருகியிருந்தாலும், அது மட்டுமே போதுமென்று இருந்துவிடாமல் தனக்கென தனி அடையாளமாக கருப்பட்டி காபிக்கடையும் திறந்து தனி ஒருவனாக, குறுகிய காலத்தில் பிரபலமாகி இருந்தான்.
அன்று போல், ஒரு தொழில் தொடங்கி, படிப்படியாக வளர்ந்து, அடுத்த தலைமுறைதான் அதில் சொகுசு காணவேண்டும் என்பதெல்லாம் இன்று இல்லை.
இளம்பிராயத்தில் பொதிகாச்சலம் ஆரம்பித்த பொதிகை மளிகைக் கடை, அப்படித்தான் சிறிது சிறிதாக பொதிகை சூப்பர் மார்க்கெட்டாக வளர்ந்தது. கிட்டத்தட்ட அவரது நடுத்தர வயதைக் கடந்து சாதித்ததை, மகன் இருபதுகளின் மத்திமத்திலேயே சாதித்திருந்தான். அதற்கு இன்றைய படித்த இளைஞர்களுக்கு, தொழில் முனைவோருக்கான, கடன் வசதிகளை, பல சலுகைகளோடு அரசாங்கமே செய்து தருகிறது.
இன்னொரு பலம் சமூக வலைத்தளங்கள். உபயோகப் படுத்தத் தெரிந்தவனுக்கு அது ஒரு மந்திரக்கோல். தெரியாதவனுக்கு, நம் நேரத்தை நமக்கே தெரியாமல் விழுங்கி, ஏப்பம்விடும் மாயப்பிசாசு.
எந்தவிதமான சௌகர்யங்களும் இல்லாத காலத்திலேயே, அத்தனையும் தானாகவே செய்ய மனிதனுக்கு நேரம் இருந்தது. இன்றும் அதே இருபத்தி நான்கு மணிநேரம்தான். எதைச் செய்வதற்கும் நாமே மெனக்கெட வேண்டும் என்கிற அவசியமில்லை. உட்கார்ந்த இடத்திலேயே அனைத்தையும் வரவைக்க முடியும். கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் மின்விசிறியைத் தட்டக்கூட ரிமோட் கண்ட்ரோல். ஆனாலும் நேரம் போதவில்லை. நம் உயபோகிக்கும் ஃபோன் ஸ்டேட்டஸ் சொல்லும், ஒரு நாளில் எத்தனை மணி நேரத்தை அது விழுங்கியிருக்கிறது என்பதை. விழித்துக் கொண்டால் மட்டுமே பிழைத்துக் கொள்ளமுடியும்.
இன்று ஒரு தொழிலைத் தொடங்குவதை விட, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் முக்கியம். விளம்பர யுகம். அதற்கு சமூக வலைத்தளங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. காலமாற்றத்திற்குத் தகுந்த மாதிரி எல்லாம் மாறிக்கொள்ள வேண்டியதுதான்.
தொழிலைத் தொடங்கிய பிறகும், தனது இருப்பை நிலை நிறுத்த, தன்னை ஏதாவதொரு வகையில் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். மூளை, மூலதனத்தோடு சந்தைப்படுத்துதலும் முக்கியம். அது நன்றாகவே தெரிந்திருந்தது சீனியப்பனுக்கு. அதனால்தான் எத்தனை போட்டிக் கடைகள் அதே சாயலில் தொடங்கப்பட்டாலும், குறுகிய காலத்தில் இருந்த இடம் தெரியாமல் போயின. (மிகப்பெரிய வணிகச்சந்தை நம் இந்தியா. அதை இப்பொழுதைய நாட்டின் நடைமுறை நன்கு உணர்த்தும்.)
அவனுக்கு பொதிகாச்சலம் என்ற பின்புலமும் பக்கபலமாக இருந்தது. அவன் எதிர்பார்க்கும் இடத்தில் கடைக்கான இடத்தை நிர்ணயிக்க முடிந்தது. அதற்கு பொதிகாச்சலத்தின் முந்தைய ரியல் எஸ்டேட் வட்டாரம் கைகொடுத்தது. விலை பற்றியெல்லாம் யோசித்தது கிடையாது. இடம் வைத்திருப்பவர்களை யோசிக்க விட்டதும் கிடையாது. அவர்கள் நினைத்தே பாத்திராத தொகையைக் கொடுத்தாவது, தான் நினைத்த இடத்தில் இடம் பிடித்துவிடுவான்.
தண்டபாணி தனக்குப் பெண் பார்க்கும் பொழுது கூட சென்னையிலேயே இருந்தும் பெண்ணைப்பற்றி விசாரிக்கவில்லை. தங்கைக்கென வந்தபிறகு, அவனுக்குத் தெரிந்த வகையில் நாலா பக்கமும் விசாரித்தான்.
இதே போல் பெண்ணைப் பற்றியும் கொஞ்சம் அவன் விசாரித்திருக்கலாம். அதை அநாகரீகம் என நினைத்து விட்டுவிட்டான். விசாரித்திருந்தால் பின்னால் அவன் குடும்பத்திற்கு ஏற்படவிருக்கும் மானக்கேட்டை ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம். அவன் வாழ்க்கையோடு சேர்த்து தங்கையின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்டது. பெரியப்பா வரதராஜன் சொன்ன சம்பந்தம் என மேம்பேக்காக இருந்துவிட்டான். வரதராஜனுக்கும், பொதிகாச்சலம் குடும்பத்திற்கும் நேரிடைத் தொடர்பு கிடையாது. அவருக்குத் தெரிந்தவர்தான் இவர்களுக்கு இந்த சம்பந்தத்தை அறிமுகப்படுத்தினார்.
சீனியப்பனைப் பற்றி விசாரித்த வகையில், பொதிகாச்சலத்தோடு சேர்த்து அனைவரும் நல்லவிதமாகவே கூறினர். ஆனால், தொழில் என வந்துவிட்டால், இருவரும் கொஞ்சம் கறார் பேர்வழி என்றனர். அது சொந்தத் தொழில் செய்பவர்கள் எல்லாருக்கும் இருப்பதுதான். ஏற்கனவே ரியல் எஸ்டேட்டும் செய்தவர். எத்தனையோ பார்த்திருப்பார். அதில் நல்லவர்களை மட்டுமே சந்தித்திருப்பார் என சொல்லமுடியாது. வளைய வேண்டிய இடத்தில் வளைந்திருப்பார். நிமிர வேண்டிய இடத்தில் நிமிர்த்திருப்பார்.
ஏற்கனவே வசதி பற்றித் தெரியும். இவர்கள் குடும்பம் மாதிரி பாரம்பர்யமான வசதி இல்லை எனினும், பொதிகாச்சலம் சொந்த உழைப்பில் முன்னேறியவர். தந்தை வழியிலேயே தமையனும். அப்பா சம்பாதித்து வைத்ததை மேற்பார்வை மட்டும் பார்த்தால் போதுமென்று இருந்துவிடவில்லை.
அடுத்த வாரமே வீட்டிற்கு வந்திருந்தான் தண்டபாணி. அவன் விசாரித்த வகையில் முழு திருப்தி எனக்கூற, சாதகமும் பொருந்தி வர, கலையரசிதான் சற்று சுணங்கினார்.
“ம்மா… உள்ளூர்ங்கறதாலதான் பார்த்திக்கு கொடுக்கலாம்னு ஆசைப்பட்டேன். இப்ப என் கண் முன்னாடியே இருப்பாம்மா!” என்றான் தண்டபாணி.
“ஆமாடா… இன்னும் அப்பாவும், அண்ணனும் அவளை இடுப்புலயே தூக்கி வச்சுக்கோங்க. என்னமோ பண்ணுங்க. எனக்கு அந்த அம்மாவ நெனச்சா தான் இருமனசா இருக்கு. அவங்க பொண்ணு கேட்டப்ப அந்தம்மா முகம் போன போக்கே சரியில்ல” என்று கவலையாகக் கூற,
“மாமியான்னு வந்தா அப்படித்தான் கலை. ஏன், உனக்கும் உன் மாமியாவுக்கும் சண்டையே வந்தில்லையா? இல்ல… நாளைக்கி உனக்கும் உன் மருமகளுக்கும் பிரச்சினையே வராதா? தலைன்னு இருந்தா ஈரும், பேனும் இருக்கத்தான் செய்யும். அரிக்குதேங்கறதுக்காக தலையவா வெட்ட முடியும்? மொதல்ல இதுல பழனிக்கு சம்மதமான்னு கேளுங்க. வாழப்போறது அவதான். நீயோ நானோ இல்ல!” வழக்கம்போல் பெரிய மனுஷியாய் மகளுக்கு எதார்த்தத்தை எடுத்துரைத்தார் அய்யம்மா. அதற்கு மேல் கலையரசியும் வாய் திறக்கவில்லை.
ஆண்கள் இருவரும் இவ்வளவு ஆர்வமாக இருக்கும் பொழுது காந்திமதியை மட்டுமே நினைத்து ஏன் கவலைப்பட வேண்டும். எங்கு பெண் கொடுத்தாலும் மாமியார் இருப்பார் தானே. ஆரம்பத்தில் இனிக்க இனிக்கப் பேசிவிட்டு, போகப்போக கழுதையான கதையெல்லாம் எத்தனையே பார்த்திருக்கிறார் தான்.
மகனும் நன்றாக விசாரித்திருக்கிறான். மகளும் யாரையும் சமாளிப்பாள் என்று தோன்றவே, ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தவர், தேவையில்லாமல் வாய் வைக்கவேண்டாம், எல்லாம் அந்த பழனிமலை முருகன் விட்டவழியென கடவுள் மேல் பாரத்தைப் போட்டு அமைதியாகிவிட்டார்.
“ஆயா!” தணிகைவேல் அழைப்பது கேட்டது பழனிக்கு. தன் சம்மதம் கேட்கத்தான் அழைக்கிறார் என புரிந்தது.
அவளுக்கும் ஒரு வாரமாக வீட்டில் இந்தப் பேச்சு அடிபடுவது தெரிந்துதானே இருந்தது. பிள்ளைகளுக்குத் தெரியாமல், எதுவும் இதுவரை ஒழித்து மறைத்தெல்லாம் கலையரசியோ, தணிகைவேலோ பேசியதில்லை. அதுவுமில்லாமல் அவர்கள் எல்லார் முன்பும்தானே பெண் கேட்டார்கள். இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது? அன்று, திடீரென அவர்கள் பெண் கேட்டதில் ஒரு கணம் அதிர்ந்து அப்படியே நின்றுவிட்டாள். கிளம்பும் முன் அவனது கண்கள் ஆர்வமாகத் தன்னை தேடுவது தெரிந்தது. எல்லாருக்கும் பின்னால் கடைசியாக நின்றவளைக் கண்டு விட்டவன் இதழோரம் சட்டென சிறு முறுவல் பூத்தது. கண்கள் அவளை ஆழ்ந்து பார்க்க, அந்தப் பார்வை அவளை ஏதோ செய்தது. நெஞ்சைத் துளைக்கும் பார்வை. அடிவயிற்றில் என்னவென்று அறியமுடியாதொரு நூதனப் போராட்டம் அவளுக்குள். அனுபவம் புதுமை எனும் வகையில், அவளுக்கே அந்த உணர்வு அச்சத்தைத் தோற்றுவிக்க, சட்டென அவன் பார்வையிலிருந்து, தலையைக் குனிந்து மறைந்து கொண்டாள்.
தனக்கும், பார்த்திக்கும் திருமணம் பேசிய பொழுது கூட, எத்தனையோ முறை அவனை நேரில் பார்த்திருக்கிறாள். ஒருகணம் கூட இதுபோல் ஒரு உணர்வு அவளுக்குள் தோன்றியதில்லை. சாதாரணமாகவே மாமா என அழைத்துப் பேசினாள்.
ஆனால், ஒரே நாளில் இவன் பார்க்கும் பார்வை அவளுக்குள் ஓராயிரம் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இப்பொழுது நினைத்தாலும் கன்னம் சூடேறி, தனக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடுவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒரு வேளை அவன் கவனத்தைத் திருப்பும் வகையில் அதிகப்படியாக நடந்து கொண்டோமோ? தன்னைப் பற்றி என்ன நினைத்திருப்பான் என்ற எண்ணமே அவளுக்குள் சஞ்சலமூட்டியது. அப்படியொன்றும் அவன் முன் வளைய வந்ததாக அவளுக்கு நினைவில்லை. வீட்டு விசேஷங்களில் முறைமைப் பெண்கள் வழக்கமாகச் செய்யும் கலாட்டதான். அதுவும் சித்தப்பா பிள்ளைகள் செய்தது. கலையரசிக்குப் பயந்து, அன்று கூட பொறுப்பாகத்தான் நடந்து கொண்டாள். காஃபியை கொடுத்தது மட்டும்தான் அவள்.
தண்ணீர் கேட்டு வந்தபொழுதுதான் நேருக்கு நேராகவே பார்த்தாள். அப்பொழுது கூட அவன் பார்வையில் எந்த வித்யாசத்தையும் கண்டதாகத் தெரியவில்லை. ஒரு வேளை நமக்குதான் கண்டுபிடிக்கத் தெரியவில்லையோ என மனம் மீண்டும் ஒரு முறை, அன்றைய சம்பவங்களை ஓட்டிப் பார்க்க, துப்பட்டாவை அவசரமாக விசிறிப் போட்ட பொழுது அவனது கண்கள் ரசனையாக மின்னியது போல் இப்பொழுது தோன்றியது. அம்மா சொல்வது மாதிரி நாலாபக்கமும் பெண்களுக்கு கவனம் இருக்க வேண்டுமோ? இது அம்மாவிற்குத் தெரிந்தால் அவ்வளவுதான் என்ற அச்சத்தில் சப்த நாடியும் அடங்கியது.
கண்களை மூடி ஒருதரம் ஆழ மூச்செடுத்தவள், எல்லாம் அப்பா சொல்வதுதான் என தனக்குள் உருப்போட்டுக் கொண்டே வெளியே வந்தாள்.
அய்யம்மா ஆலோசனைப்படி முதலில் மகள் சம்மதம். மற்றதெல்லாம் பிறகு பார்க்கலாம் என மகளிடம் சம்மதம் கேட்க,
“எனக்கு நீங்களும், அண்ணனும் பாத்து என்ன முடிவு பண்ணினாலும் சம்மதம் தான்ப்பா. என்ன ஒன்னு… உங்க மகன் வாழ்க்கையையும் யோசனை பண்ணிப் பாத்துக்கோங்க. என் தொல்லை கல்யாணம் பண்ணாலும், அவனுக்குத் தீராது. இலவச இணைப்பா என்னையும் சேத்துக்கறான்” கேலி போல் சொன்னாலும், அண்ணனையோ, பிறந்த வீட்டையோ முற்றிலுமாகப் பிரிய வேண்டிய அவசியம் இருக்காது என்ற சந்தோஷமும் ஒருபக்கம் இருந்தது.
வேறு பக்கம் கொடுத்தால் பெற்றவர்கள் இருக்கும் வரைதான், பெண்களுக்கு பிறந்த வீட்டு உறவென்பது. அதுவும் தாய் இருக்கும் வரைதானே?
“ஏன்டீ… மாப்பிள்ளை புடிச்சுருக்கான்னு கேட்டா, அண்ணனைப் பத்தி பேசுற?”
“அம்மாவை கட்டிக் கொடுக்கும் போது கேட்டீங்களா அம்மாச்சி!”
“அது அந்தக் காலம். பெரியவங்க சொல் கேட்டு பிள்ளைங்க நடந்துச்சுங்க. இப்ப அப்படியா?”
“ஏன், உங்க காலத்துல யாருமே, லவ் பண்ணி பெரியவங்க பேச்சை மீறி இழுத்துட்டு ஓடினதே இல்லையா?”
“ஏன் இல்லாம? அதெல்லாம் இருந்துச்சே! சாதிவிட்டு சாதி ஓடினதும் இருந்துச்சு. புருஷனவிட்டு ஓடினது, பிள்ளையவிட்டு ஓடினது, கொழுந்தியாள இழுத்துட்டு ஓடினதுன்னு எல்லாம்தான் அந்தக் காலத்துலயும் நடந்துச்சு!”
மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே, தோன்றியது தானே பொருந்தாக் காதலும். இல்லையென்றால் தொல்காப்பியத்திலேயே ஏழாம் திணையாகப் பெருந்திணை பற்றிப் பேசவேண்டிய அவசியமென்ன வந்தது?
“அப்பறமென்ன அம்மாச்சி! அந்தக்காலம், இந்தக் காலம், எந்தக் காலம்னாலும் பெரியவங்க சொல்படியும் நடந்துக்கிட்டாங்க, பெரியவங்க பேச்சை மீறியும் நடந்துக்கிட்டாங்க. என்னமோ உலகம் தோன்றின காலம் முதற்கொண்டு, எல்லாம் கட்டுப்பாடா இருந்த மாதிரியும், இந்தத் தலைமுறை தான் கெட்டுச் சீரழியுற மாதிரியும் பேசக் கூடாது. அந்தந்த கால கட்டத்துல ஒளிவு மறைவா இருந்துச்சு. இன்னைக்கி சோஷியல் மீடியாவால வெளியே தெரியுது. அவ்வளவுதான். எனக்கு இந்தக் காலத்துலயும் எங்க அப்பா சொன்னா சரித்தான். போதுமா?” பட்டென தன் மனதில் பட்டதை உரைத்தவள்,
“போதாக்குறைக்கு தண்டம் வேற துப்பறியும் சாம்புவா மாறி டிடெக்டிவ் எல்லாம் பண்ணிருக்கான். என்னைப் பத்தி இத்தனை பேர் கவலைப்படையில நான் எதுக்கு என்னைப் பத்தி தனியா யோசிக்கணும்.”
தன் மனதில் இருப்பதை தெளிவாகச் சொல்ல,
தணிகைவேலின் உள்ளம் மகளின் பேச்சில் பூரித்துப் போனது. இப்படிப்பட்ட மகளுக்கு எப்பேற்பட்ட ராஜகுமாரனையும் கொண்டு வருவேன் என்பது போல் வாஞ்சையாக மகளைப் பார்த்தார். ஆனால், இதே மகள் வாழ்க்கையை நினைத்து, கூடிய சீக்கிரம் நெஞ்சைப் பிடித்து சாய்வார் என நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.
“அதுவுமில்லாம, நான் யாரையாவது லவ் பண்ணி இழுத்துட்டு ஓடிட்டா, இதுதான் சாக்குன்னு, கலையரசி சேத்துவச்சுருக்குற அத்தனை பவுனையும் எனக்கில்லைன்னு சொல்லிட்டு, மருமகளுக்கே கொடுத்துட்டா என்ன பண்றது அம்மாச்சி. அதுக்காகவேணும் நல்ல பிள்ளையா நடிக்க வேண்டாமா?” வழக்கம் போல் அம்மாச்சியிடம் ரகசியமாகச் சொல்லி சிரிக்க,
“ஞானம், இழுத்துட்டு வேற ஓடுவியா நீ? ம்மா… கேட்டீங்களா?” தண்டபாணி அம்மாவிடம் தங்கையை மாட்டிவிட,
“ஏன் ஓடமாட்டா? தோசைக் கரண்டிய பழுக்க காயவச்சு உள்ளங்கால்ல நாலு இழுப்பு இழுத்தா ஓடுவா?” கலையரசி வழக்கம்போல் அடுக்களையில் இருந்தவாக்கிலேயே இவளை வறுத்தெடுக்த,
“இப்ப சந்தோஷமா? அதுக்கெல்லாம் வாய்ப்பில்ல ராஜா, அவங்க சேத்துவச்சுருக்குற அத்தனை பொற்குவியலும் எனக்குதான்” என்றவள்,
“அதான் மாப்பிள்ளை பத்தின காண்டக்ட் சர்டிஃபிகேட் உங்க தங்கமகனே கொடுத்துட்டானே? அப்புறமென்ன ஆகவேண்டியதை, சட்டுபுட்டுன்னு பாருங்க! நமக்கும் லைஃப் போரடிக்குது. நம்ம லைஃப்லயும் ஒரு அட்வென்ச்சர் வேணாமா?” என்று விளையாட்டாய் பேசிவிட்டு எழுந்து செல்ல, அவள் வாழ்வில் எதிர்பார்த்த அட்வென்ச்சர் எத்தகையது என்பதை விதிதானே தீர்மானிக்க வேண்டும். அதுதான் சிறப்பாகச் செய்ய நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறதே!
எதை ஒன்னும் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளும் தங்கையை சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் தண்டபாணி. கேலியும், கிண்டலுமாகவே தான் இவளது திருமணம் பெற்றொர்களால் பேசி முடிக்கப்பட்டது.
பெண் கொடுப்பது என முடிவானதும், சென்னையில் நடப்பதாக முடிவு செய்யப்பட்ட, தண்டபாணி நிச்சயதார்த்தம் ஒத்தி போடப்பட்டது. முதலில் பெரியவர்கள் மட்டுமே சென்று சம்பிரதாயமாக பெண்ணிற்கு பூ வைத்து வருவது. திருமணத்திற்கு முதல் நாள், மண்டபத்தில் வைத்து இரண்டு திருமணங்களும் ஒரே மேடையில் நிச்சயதார்த்தம் மட்டும். மறுநாள் தண்டபாணி, ரஞ்சனி திருமணம் பழனி முருகன் கோவிலில்.
அடுத்த முகூர்த்தத்திலேயே, சென்னையில் வைத்து, முதல் நாள் மாலை… தண்டபாணி, ரஞ்சனி திருமண வரவேற்பு. மறுநாள் காலை… சீனியப்பன், பழனியம்மாள் திருமணம் என முடிவானது.
ஒப்புத்தாம்பூலம் வைக்க, பெரியவர்கள் மட்டுமே சென்னை வர சீனியப்பனுக்கு ஏமாற்றமே. திருமணத்திற்கு முன் பெண்ணை எப்படி, மாப்பிள்ளை வீடு அழைத்து வருவது என நாத்தனார் முறைக்கு சித்தப்பா மக்களையே அழைத்து வந்தனர். இரண்டு திருமணத்திற்கும் சேர்த்தே பத்திரிக்கை அடிக்கக் கொடுத்தனர். ஆனால் தனித்தனி பத்திரிகைதான்.
திட்டமிட்டபடியே வேலைகள் மளமளவென நடந்தேறின. மார்கழி குறுக்கே வர, கார்த்திகையிலேயே முகூர்த்தப் புடவை முதற்கொண்டு அனைத்தும் எடுக்கப்பட்டது. தை முதல் முகூர்த்தத்திலேயே திருமணம்.
இன்னும் இவர்களுக்கு நிச்சயம் நடத்தவில்லை என்றாலும், இரண்டு பத்திரிக்கையும் சேர்த்தே வைத்தனர்.
“ப்பா… ஃபேட்டோ ஷுட்டுக்கு என் ஃப்ரெண்ட்கிட்டப் பேசியிருக்கேன். சினி ஃபீல்டுல இருக்கான். வெட்டிங் ஷுட்டும் பண்றான். அவன் டேட் கிடைக்கறது கஷ்ட்டம். அதனால ப்ரீ வெட்டிங் ஷுட் கல்யாணத்துக்கு முன்னாடி அங்க கொடைக்கானல்லயே, எங்களுக்கும் சேத்து வச்சுக்கலாம்னு சொல்றான்.”
“இன்னும் நிச்சயம் பண்ணல. அதுக்குள்ள ஃபேட்டோ ஷுட்டா?” இதெல்லாம் தேவையா என்பது போல் பொதிகாச்சலம் கேட்க,
“ப்பா.. இன்னும் நீங்க அந்தக் காலத்துலேயே இருங்க. காலம் எவ்வளவு மாறியிருக்கு. இதெல்லாம் இப்பதான் என்ஜாய் பண்ண முடியும்.” ரஞ்சனி வாயைத் திறந்தாள்.
“அதெல்லாம் உங்க அப்பாவுக்கு புரியாது ரஞ்சு! இன்னும் தள்ளுவண்டி தள்ளி காய்கறி வித்த காலத்துலயே இருக்காரு.” மகளுக்கு ஒத்து ஊதினார் காந்திமதி.
“நீ என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ. அவங்க பொண்ண அனுப்பறது சந்தேகம்தான்! அவங்க யோசிப்பாங்கன்னுதான் தோணுது. ஏதொன்னுக்கும் கேட்டுக்கோ. இல்லைனா கல்யாணத்துக்கு முன்னாடி இங்க வச்சு உன்னோட வெட்டிங் ஷுட் வச்சுக்கோ!”
“ஏம்ப்பா… கொடைக்கானல பக்கத்துல வச்சுக்குட்டு எவனாவது வெட்டிங் ஷுட் இங்க ப்ளான் பண்ணுவானா? அதெல்லாம் நான் பேசிக்கிறேன்.”
“இதுக்கு தான் முதல்லயே அந்த ஊர் பொண்ணெல்லாம் செட்டகாதுன்னு சொன்னேன். என் பேச்சை யாரு கேட்டா. ஏன், நம்ம பொண்ணும் தானே ரெண்டு நாளைக்கு முன்னாடியே போகணும்! இன்னும் வீட்டுக்குள்ளேயே பொண்ணுகள பூட்டி வைப்பீங்களா?” பெண்ணியம் பேசினார் காந்திமதி.
“அப்பா… இதெல்லாம் இப்ப எல்லாரும் பண்றதுதான். நான் தண்டபாணிகிட்ட பேசிக்கிறேன். ரெண்டு கல்யாணமும் ஒன் வீக் கேப்லதான் நடக்கப்போகுது. பழனிக்குப் பக்கத்துல கொடைக்கானல். இது இன்னும் வசதி. ரெண்டு ஜோடியுமே ஒரே தடவையா ஃபேட்டோ ஷுட் முடிச்சுட்டு இறங்கி வந்து, அப்படியே கல்யாணத்துக்கும் கண்டினியூ பண்ணிக்கலாம். அப்படித்தான் ப்ளான் பண்ணியிருக்கு. இங்கதான் அவங்க அனுப்ப யோசிக்கணும்.” சீனி இவ்வளவு விளக்கமாக சொல்லிய பிறகு அவருக்கும் சரியெனத்தான் பட்டது.
இப்பொழுது எல்லாரும் ப்ரீ வெட்டிங் ஷுட் பண்ணுவதுதானே? காலத்தோடு ஒத்துப் போகவேண்டும் என நினைத்துக் கொண்டவர், அதுக்கு மேல உங்க இஷ்ட்டம் என்று எழுந்து கொண்டார்.
காலம் எவ்வளவோ மாறிருச்சு. ப்ரீ வெட்டிங் ஷுட் தான் பண்ணனுமா என்ன? ஏன்… ப்ரீ ஹனிமூன் பண்ணக்கூடாதா? அதான் காலம் மாறிப்போச்சே!
விதி மட்டுமல்ல விரகமும் வலியது! இரண்டும் கைகோர்த்தால்…
