14
இவர்களும் மழை விடட்டும், கிளம்பலாம் என்றிருக்க, மழை ஓய்ந்தபாடில்லை. இந்த மழை மட்டும் சற்று தாமதித்திருந்தால் இந்நேரம் கார் திருச்சியைத் தாண்டியிருக்கும். வேறொரு நேரமாக இருந்திருந்தால், நினைத்த நேரத்தில் கிளம்ப முடியாமல் போனதற்கு சீனியின் முகம் எரிச்சலைத் தாங்கியிருக்கும். மாறாக, இன்று அவன் முகம் மந்தகாசம் குடி கொண்டிருந்தது. சன்னல் பக்கம் நின்று, காரிருளில் மழையை ரசிக்கும் சீனி அவனுக்கே புதியவன்.
முன்னால் விழுந்த சடையைத் தூக்கி பின்னால் விசிறிவிட்டு, உட்கார்ந்து தரையில் சிந்திய காஃபியைத் துடைத்துக் கொண்டிருந்தவளை, மாடிப்படி வளைவு ஏறித் திரும்பி மறையும் வரை பார்த்துக் கொண்டேதான் படியேறினான்.
கண்டதும் காதலா என மனம் கேள்வி எழுப்ப, அவனுக்கே அது சந்தேகம் தான். மாப்பிள்ளையின் தங்கை எப்படியிருப்பாள் எனும் ஆர்வத்தில்தான் அவளைத் தேடினான். இரண்டு, மூன்று முறை தன் முன் வந்து சென்றவளைப் பார்க்காமல் போய்விட்டதில் ஆர்வத்தின் அளவு சற்று கூடிப்போயிற்று. ஆனால் பார்த்தவுடன் அவனுக்குள் தோன்றிய மாற்றம் அவனே இதுவரை உணராதது.
பதின் பருவத்தில், பருவம் உணர்ந்ததிலிருந்து அவன் பார்க்காத பெண்களா? அந்தந்த வயதிற்கே உரிய ஆர்வமும், ரசனையுமான சைட் சீயிங் தான். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் காலத்தில், பெண்களைப் பார்க்கையில் மனதோரத்தில் எழுந்த குறுகுறுப்பு கூட, வளற, வளற, பக்குவம் வந்ததும் தன்னால் குறைந்துவிட்டது.
ஆனால், சற்றுமுன் பழனியைப் பார்த்தவனால், அவனுள் தோன்றிய நூதன உணர்வை, அப்படி சாதாரணமாகக் கடக்க முடியவில்லை.
மீண்டும் பதின்பருவத்தினனாக அவனுக்குள் ஒரு பரவசத்துள்ளல். மனதுக்குள் குறுகுறுப்பு. எப்படியும் இங்கு தங்கமுடியாது. கிளம்பும் முன் மீண்டும் ஒரு முறை அவளைப் பார்த்துவிட வேண்டும் என மனம் பரபரத்தது. அண்ணன் நிச்சயத்திற்கு சென்னை வருவாள்தானே என நினைக்கையில் அதற்கு இன்னும் எத்தனை நாட்களோ என மனம் சிறுபிள்ளையாய் சுணங்கியது.
கீழேயே இருந்திருக்கலாம் என மனம் நொந்து கொண்டது.
‘அடேய் என்னடாயிது. என்னமோ இப்பதான் அரும்பு மீசை மொளச்சு, வயசுக்கு வந்தவனாட்டம் இப்படித் தவிக்கிற?’ மானக்கேடாய் திட்டியது மனசாட்சி.
பார்த்தது ஐந்து நிமிடம் கூட இருக்காது. பாவை விளக்கொளியில், பாவையைப் பார்த்தவன் மனதில், பச்சைகுத்தியது போல் பதிந்து போயிற்று பூவையவள் முகம். இத்தனைக்கும் பெரிய அலங்காரம் எதுவும் இல்லை. ஆட்கள் வீடு முழுவதும் இருக்க, வேலை பார்த்ததில், வாடிய மல்லிச்சரத்தோடு கூடிய கலைந்த தலையும், கசங்கிய சேலையுமாகத்தான் இருந்தாள். முகம் கூட சற்று மை கலைந்து, களைத்துத் தெரிந்தது. ஒரு வேளை பொய்மை கலக்காத, சோபையான இந்தத் தோற்றம்தான் அவனை வீழ்த்தியதோ என்னவோ. சன்னலுக்கு வெளியே பெய்த மழைச்சாரல் இவனுக்குள்ளும் சில்லென சிலிர்ப்பூட்டியது பெண்ணவள் நினைப்பில்.
நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை
நீருக்குள் மூழ்கிடும் தாமரை
சட்டென்று மாறுது வானிலை
பெண்ணே உன் மேல் பிழை
நில்லாமல் வீசிடும் பேரலை
நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை
பொன்வண்ணம் சூடிய காாிகை
பெண்ணே நீ காஞ்சனை…
“வாப்பா!” என இவனது, தாய்மாமா அழைத்ததில் திரும்பிப் பார்த்தான். தண்டபாணி தான் கையில் ஃப்ளாஸ்க்கும், டம்ப்ளருமாக நின்றிருந்தான்.
தாய்மாமன், “மழைக்கு சூடா டீ குடிச்சா நல்லாருக்கும்னு நெனச்சேன். கொண்டு வந்துட்டீங்க!” என்றார் சிரித்த முகமாக.
பின்னாலே கொலுசு சப்தம் கேட்டது.
ஆர்வமாகப் பார்த்தான் சீனி. சிறு ஏமாற்றம் சுமந்தது கண்கள். சூடாக வடை, பஜ்ஜி என, ஒரு பாத்திரத்தில் எடுத்து வந்தது தண்டபாணியின் சித்தப்பா மகள். சிறு பெண். அங்கிருந்த மேஜை மீது வைத்துவிட்டு, இவனைப் பார்த்து வாய் பொத்தி சிரித்துச் சென்றது. புரியாமல் பார்ர்த்தவன் புருவங்கள் முடிச்சிட்டன.
“எதுக்குப்பா, இந்த மழையில கடைக்குப் போய்ட்டு வந்தீங்களா?” என்றார் பொதிகாச்சலம். வடை, பஜ்ஜி கடையில் வாங்கி வந்ததாக எண்ணிக்கொண்டு.
“இல்லீங்க… இப்பதான் வீட்லயே, சூடா போட்டுட்டு இருக்காங்க. அதான் டீயோட எடுத்துட்டு வந்தேன்!” என்றான். மழை பெய்யவும் டீயோடு சேர்த்து, பஜ்ஜியும், மசால் வடையும் போட்டனர். மசால் வடைக்கு அரைமணி நேரம் ஊறினாலும் போதுமே. பருப்பை தண்ணீரில் போட்டுவிட்டு பஜ்ஜி சுட்டெடுப்பதற்குள் பருப்பு ஊறிவிட்டது.
“பஜ்ஜி, வடை சாப்பிட்டு, டீ ஊத்திக்கோங்க. மழைக்கு சீக்கிரம் ஆறிப் போயிறும்!” என்று ஃப்ளாஸ்க்கையும், டம்ப்ளர்களையும் மேஜை மீது வைத்தவன், வேறெதுவும் வேண்டுமா எனக் கேட்டான்.
சட்டென, “குடிக்கத் தண்ணி வேணும்!” என்று சீனி சொல்ல,
“கீழ போய் கொடுத்து விடறேன்!” என்றவனிடம்,
“அட, என்னங்கப்பா ரெண்டு பேரும் இப்படி மொட்டையா பேசிக்கறீங்க. படிச்ச பயலுக இல்ல. அதுதான் சட்டுனு மாமன், மச்சான்னு கூப்பிட மாட்டேங்கறீங்க!” என்றார் தாய்மாமன்.
இருவருக்குமே இன்னும் சட்டென உறவு சொல்ல வரவில்லை. பின்னொரு காலத்தில், மூச்சுக்கு முன்னூறு தடவை அவனை மச்சான் என அழைத்து வெறுப்பேற்ற வேண்டிவரும் என்பதால்தான் இப்பொழுது மச்சான் என அழைக்க வரவில்லையோ என்னவோ! யாருக்குத் தெரியும்?
சீனி, “இல்ல… நானே கீழ வர்றேன். நீங்க எதுக்கு அலையறீங்க?” என்றான் கரிசணையாய்.
‘அட… நல்லகுடி நாயகமே! உனக்கு எதுக்கு இப்ப தண்ணி தாகம் எடுத்துச்சுன்னு எங்களுக்குத் தெரியாதா?’
“வாங்க!” என்று அழைத்துச் சென்றான் தண்டபாணி.
அவனோடு கீழே செல்ல, அங்கிருந்த பதின் பருவ சிறுசுகள் இவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க, எதற்கு எனத் தெரியாமல் குழம்பிப் போனான்.
அதற்குள் தண்டபாணிக்கு அலைபேசியில் அழைப்பு வர, எடுத்துப் பார்த்தவன்,
“ஆஃபிஸ் கால்!” என்றான்.
“நீங்க பேசுங்க!” என்று சொல்ல,
“ஞானம்… தண்ணி எடுத்துட்டு வா!” எனத் தங்கைக்கு குரல் கொடுத்துவிட்டு, ஃபோன் அழைப்பை ஏற்று தள்ளிச்சென்றான்.
மனம் பொக்கென போயிற்று யாரோ ஒரு ஞானத்தை நினைத்து. ஞானத்தைப் பார்க்கவா இல்லாத தாகத்திற்கு தண்ணீர் கேட்டு கீழிறிங்கி வந்தான். மீண்டும் திரும்ப எத்தனிக்க, மெல்லிய கொலுசொலியில் கால்கள் தாமதிக்க, செம்பில் தண்ணீர் எடுத்துவந்தாள் பழனி. அப்பொழுதுதான் சுடிதாருக்கு மாறியிருப்பாள் போல. முகம் கழுவி, துப்பட்டாவில் முகம் துடைத்தபடியே வந்தாள். கண்களில் மெலிதாக மை கரைந்து, காதோரம் சிலிப்பி நின்ற முடிக்கற்றையில் ஈரம் சொட்ட வந்து நின்றாள். தண்டபாணிக்கு என நினைத்து வந்தவள், இவனைப் பார்த்ததும் சட்டென துப்பட்டாவைத் தோளில் போட்டுக் கொண்டாள்.
இவளையும் பார்த்து சித்தப்பா பெண்கள், வாய் பொத்தி சிரிக்க, யாரும் உணராத வகையில், தலையை மறுப்பாக ஆட்டி, அவர்களை முறைத்துப் பார்த்துக் கண்களால் கண்டித்தவள், இவனிடம் செம்பை நீட்டினாள்.
இவர்களுக்குள் நடந்த பரிபாஷை புரியாமல் குழம்பி நின்றான்.
தண்ணீர் செம்பை வாங்கிக் கொண்டே, “சாரிங்க… காஃபி குடிக்காம வச்சது நான்தான். அதனால உங்களுக்கு தான், க்ளீனிங் வேலை எக்ஸ்ட்ரா ஆகிடுச்சு!” ஏதாவது பேசி அவளைப் பிடித்து வைக்கும் எண்ணத்தில் பேச்சு கொடுத்தான்.
இவன் பேச்சைக் கேட்டு சிறியவர்கள் கலகலத்து சிரிக்க,
“ஓடுங்க எல்லாரும். நீங்க பண்ணது உங்க கலை பெரியம்மாவுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். எனக்குதான் வெண்சாமரப் பூஜை விழும்!” என விரட்டினாள்.
“எதுக்குங்க அவங்களை விரட்டுறீங்க? இப்ப மாடிக்கு, டீ கொடுக்க வந்தப்பவும் அந்தப் பொண்ணு இப்படித்தான் என்னைப் பார்த்து சிரிச்சது?” என்றான் நடப்பது புரியாமல்.
“அக்கா, இப்பவாவது, டீத்தூள் போட்டு டீ கொடுத்தீங்களா? இல்ல, மதியம் கொடுத்த மாதிரியேதானா?” என்று கேட்டு ஓடிவிட,
‘போச்சு… குட்டிப் பிசாசு போட்டுக் கொடுத்துருச்சு!’ உள்ளுக்குள் மிரண்டவள், இடக்கண்ணைச் சுருக்கி, நாக்கின் நுனி கடித்து, அசடுவழியப் பார்த்து நின்றவளை, பார்த்தவன் மனம் ஒரு கணம் தடுக்கிவிழத்தான் செய்தது. கடிவாளமின்றி தறிகெட்ட மனதை இழுத்துப் பிடிக்க அரும்பாடுபட்டான்.
‘சீனி! ஸ்டெடியா இர்றா… மானத்தை வாங்கிறாதே! ஏற்கனவே அதுங்க உன்னைக் காமெடி பீஸ்ஸாக்கி என்னமோ பண்ணிவச்சுருக்குதுங்க. அதை என்னானு முதல்ல விசாரி!’ என்று உள்மனம் எச்சரிக்க,
இவர்கள் பேசிக் கொள்வதைப் பார்த்தால், எல்லாருமாகச் சேர்ந்து, ஏதோ சில்மிஷம் செய்திருப்பது புரிந்தது அவனுக்கு.
“ஏங்க… என்னை வச்சு காமெடி ஏதும் பண்ணலையே?” என்று வடிவேல் பாணியிலேயே கேட்க,
“ச்ச்சே… ச்ச்சே… என்னங்க நீங்க? எங்க அண்ணனோட வருங்கால மச்சான் நீங்க. உங்ககிட்டப் போயி… அப்படியெல்லாம் இல்லீங்க!” என்றவள் பேச்சு, ஒரு சதவீதம் கூட நம்பும்படியாக இல்லை.
“அப்பறம் ஏங்க என்னைப் பாத்து சிரிக்கிறாங்க. தெரியலைன்னா மண்டையே வெடிச்சுரும்ங்க! கிளம்பறதுக்குள்ள சொல்லிறுங்க!” அவன் காரணம் தெரிந்தே ஆகவேண்டும் என்பதுபோல், இறைஞ்சும் குரலில் கேட்டதில், போனால் போகுதென்று,
“அதொன்னுமில்லீங்க! நீங்க வந்து இறங்கியதும், இந்தப் பனைமரம் நமக்கு என்ன முறை வேணும்னு கேட்டாளுங்க” என்றவளை,
“என்ன?” என்பது போல் அதிர்ந்து பார்த்தான். ஆரம்பமே அமர்க்களமா இருக்கேடா சீனி.
அவன் அப்படிப் பார்க்க, “அவங்க கேட்டதை அப்படியே சொல்றேன். அவ்வளவுதான். வேண்டாம்னா எடிட் பண்ணி சொல்லவா?” எனக் கேட்க,
“இல்ல, எனக்கு தியேட்டர் காபி(copy) வேணாம். அன் சென்சார்ட் காபியாவே சொல்லுங்க!” என்றான், இப்பொழுது அவளை நேராக நிமிர்ந்து பார்த்து கைகளைக் கட்டிக் கொண்டு.
“நம்ம அண்ணனுக்கு பொண்ணு கொடுக்கறாங்கன்னா, நமக்கெல்லாம் மச்சான் முறைன்னு சொன்னேன்” என்றதில் அவன் இதழோரம் சிறு முறுவல் பூத்தது.
“அப்போ விளையாடிப் பாக்கலாம்னு…” என்று நிறுத்தினாள்.
“விளையாடிப் பாக்கலாம்னா…” என இழுத்தவன் கண்களின் ஓரம் இப்பொழுது சுவாரஸ்யம் எட்டிப் பார்த்தது.
“நீங்க என்ன பண்றீங்கனு கேட்டாளுங்க. கருப்பட்டி காஃபிக்கடை வச்சுருக்கறதா சொன்னேன்!”
“கஃபேங்க!” என்று உடனடியாகத் திருத்தினான்.
“அதே தாங்க! காஃபி குடிச்சுட்டு பில் கொடுத்தா, நம்ம லோக்கல் கஃபிக்கடை. பில் கொடுத்துட்டு காஃபி குடிச்சா கஃபே. அவ்வளவுதானே?” என்று சொல்ல, இதைவிட யாரும் தன்னை மொக்கையாக்க முடியாது என நினைத்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“சரி… நான் கருப்பட்டி காஃபிக்கடை வச்சுருக்கறதுக்கும், இவங்க சிரிக்கிறதுக்கும் என்னங்க சம்மந்தம்?” என்று கேட்டவனிடம்,
“சொன்னா கோவிக்கக் கூடாது!” என்று முன்ஜாமீன் வாங்கினாள்.
“ச்ச்சே… ச்ச்சே… கோபமா… உங்ககிட்டயா… சான்ஸே இல்லீங்க!”
‘தொடச்சுக்கடா சீனி!’ என்றது வேற யாருமல்ல. நம்ம மனசாட்சியார் தான்!
“அப்போ நாம இவருக்கு ஸ்பெஷலா காஃபி போடுவோம்னு சொன்னாளுகங்க. இவளுங்கதான் பால் அதிகமாவும், டிகாக்ஷன கம்மியாவும் ஊத்தினாளுகங்க!”
“இதுல என்னங்க இருக்கு?” என்றான் வெகு சாதாரணமாய். காஃபில டிகாக்ஷன கம்மியா ஊத்தினதுல என்ன விளையாட்டு இருக்கு?
“வேண்டாம்ங்க… சொன்னா உங்க மனசு கஷ்ட்டப்படும்ங்க!” பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டாள். அட… அட… நீ ரொம்ப நல்லவம்மா!
“சொல்லலைன்னா மண்டையே வெடிச்சுறும்! சொல்லுங்க” என்றவனுக்குள்ளும் அதீத ஆர்வம்.
‘வேண்டாம்டா சீனி! தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப்போற. ஏதோ ஏடாகூடமா சொல்லப்போறா. தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்க வந்துட்டு, நீ மொக்க வாங்கிட்டுப் போகப் போற!’
“இனிமே டிகாக்ஷன் கம்மியா ஊத்தி, கருப்பட்டி போடாம, சீனி போட்டு காஃபி குடிங்கன்னு சொல்லச் சொன்னாளுகங்க! அம்புட்டுதாங்க நடந்தது!” என்று அலட்டாமல் சொல்லி முடிந்தவளிடம்,
“எதுக்குங்க?” என்றான் புரியாமல்.
“அதனாலதான் கரண்ட் போனப்ப நீங்க நின்னது தெரியாம, உங்க மேல மோதி. காஃபி டம்ளர தட்டிவிட்டாளுங்கலாம்ங்க!” முகத்தில் எவ்வித உணர்ச்சியுமின்றி, இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்ற பாவனையில் அவள் சொல்லி முடித்ததில்,
“இல்லையே, அதுக்குள்ளதான் கரண்ட் வந்துருச்…” என்று சொல்ல வந்தவன், அவளது பேச்சில் இருந்த மறைபொருள் உணர்ந்து, சட்டென பேச்சை நிறுத்தினான். முதலில் அதிர்ந்தவன், அடுத்த கணமே அவளை பொய்யாய் முறைத்துப் பார்த்தான். இருட்டில் இவன் நின்றது தெரியவில்லை என்றால் என்ன அர்த்தம்.
இவளைக் கண்களால் தேடிக் கொண்டே காஃபியை எடுக்க வந்தவன் கைகளில், இவன் எடுக்கும் முன்னமே, காஃபி டம்ப்ளர் அவசரமாகத் திணிக்கப்பட்டு, நிமிர்ந்து பார்க்கும் முன் திரும்பியது இப்பொழுதுதான் அவனுக்கும் ஞாபகம் வந்தது.
‘அடிப்பாவி… ப்ளான் பண்ணித்தான் வெறும் பாலக் கொடுத்தாங்களா? நான் கூட ஏதோ சின்ன பிள்ளைக்கு கலந்தது மாத்தி கொடுத்துட்டாங்கனு நெனச்சு ஏமாந்துட்டேனே?’
“பாத்தீங்களா? உங்க மனசு கஷ்ட்டப்படும்னு தான் முதல்லயே, நான் எடிட் பண்ணி சொல்லவான்னு கேட்டேன்!” அப்பாவி போல் அவள் கேட்டதில் உலகமகா நடிப்புடா சாமி, என நினைத்தவன், அடுத்த நொடி பட்டென வாய்விட்டு சிரித்துவிட்டான்.
இவள் தான் அக்கம் பக்கம் அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள்.
கோபப்பட்டு, ஆத்திரமாக கத்தப்போகிறான் என்று இவள் பார்த்திருக்க, அவன் வாய்விட்டு சிரித்தில் லூசாப்பா நீ எனப் பார்த்தவள்,
“அய்யோ சிரிக்காதீங்க! கலையரசிக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்!” இப்பொழுதுதான் அவள் முகத்தில் அப்பட்டமாகப் பயமே தெரிந்தது.
“இது, சின்னப் பிள்ளைக சொன்னமாதிரி தெரியலையே? நீயே சொல்ற மாதிரியில்ல இருக்கு!” சட்டென உரிமையாய் ஒருமைக்குத் தாவியிருந்தான்.
“நான் சொல்றதா இருந்தா நேரடியாவே சொல்வேங்க. எனக்கென்ன பயம். நீங்க வந்து எறங்கினதும் யூரியா போட்டு வளத்தாங்களான்னு, எங்கம்மாகிட்டயே கேட்டேன். வேணும்னா அவங்ககிட்டயே கேட்டுப் பாருங்க!” என்று சிரிக்காமல் சொல்ல,
“இது வேறயா?” என்றவன்,
“சரி வா, கேட்டுறலாம்!” என்று அவளைக் கடந்து உள்ளே செல்ல முயன்றவனுக்கு, அவளை சீன்டிப் பார்க்கும் ஆசை வந்தது.
“பொண்ணு வீட்டுக்காரவுங்களுக்கு இப்படித் தான் மரியாதை கொடுப்பீங்களா. வா… உங்க அம்மாகிட்டயே நியாயத்தைக் கேக்கலாம்!” என்று முன்னால் செல்ல,
“அய்யய்யோ… என் சோலிய முடிச்சுருவீங்க போலயே! இதெல்லாம் சும்மா கேலிக்கு பண்றதுங்க!” என்று பதற ஆரம்பித்துவிட்டாள். கலையரசிக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். தோலை உறித்துத் தோரணம் கட்டிவிடுவார்.
“ப்ளீஸ்ங்க… நான் வேணா அவளுக சார்புல சாரி கேட்டுக்கறேன். வேணும்னா நீங்களும் உங்க வீட்டுக்கு நாங்க வரும்போது இதே மாதிரி வெறும் பால் மட்டும் கொடுங்க. ஈக்வல் பண்ணிக்கலாம். எங்கம்மாகிட்ட மட்டும் மாட்டி விட்டுறாதீங்க!” அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே அவள் சன்னக் குரலில் இறைஞ்ச,
அவளது பயம் இவனுக்குள் சுவாரஸ்யம் கூட்டியது. கண்களிலில் குறும்பு கசிய, இதழ் மடித்து சிரித்துக் கொண்டான். அவன் ரகசியமாக சிரிப்பதை கண்டு கொண்டவள், அவன் தன்னை மிரட்டி பார்க்கிறான் எனத் தெரிந்ததும் தைரியம் துளிர்விட்டது.
“இது யாரோட ஐடியா!” என்றான் சிறு முறைப்போடு, கைகளைக் கட்டிக் கொண்டு.
“இதெல்லாம் ஐடியா பண்ணலைங்க. சும்மா ஃப்ளோல பண்ணது. நாங்க ஐடியா பண்ணிருந்தா, வேற லெவல்ல இருந்திருக்கும்” என்று சொல்ல,
“இன்ட்ரஸ்ட்டிங்!” என்றவன் இதழ்கடையில் குமிழ் சிரிப்பு.
“அண்ணா… அக்கா மாட்டிக்கிட்டாங்க!” என்று தண்டபாணியிடம் ஒரு பொடுசு சொல்லிவிட்டு ஓடிவிட, ஃபோன் பேசிக்கொண்டே திரும்பிப் பார்த்தான்.
இவன் மிரட்டும் தோரணையில் நிற்பதும், பழனி பயந்த பாவனையில் நிற்பதும் கண்டு, தங்கையைப் பற்றி அறிந்தவன்,
“என்ன ஞானம்… எல்லாரும் சேந்து என்ன பண்ணி வச்சீங்க?” என்று கேட்டுக் கொண்டே தண்டபாணியும் வர,
“இப்படிக் கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். நீன்னு நெனச்சுதான் தண்ணி கொண்டு வந்தேன். என்னை மாட்டிவிட்டு எல்லாரும் ஓடிட்டாளுங்க. போன மாசம் நடந்த, நம்ம பெரியப்பா வீட்டுக் கல்யாணத்துல பண்ண அளவுக்கெல்லாம் பண்ணல.” இவ்வளவு நேரமாக அமைதிப் பூங்காவாக இவனிடம் பேசிக் கொண்டிருந்தவள், அண்ணனிடம் பாய்ந்து கொண்டு சென்றாள்.
அதற்குள், தாய்மாமன் கீழிறங்கி வந்தவர், “டேய் சீனி… தண்ணி கெணத்துலருந்து எறச்சு எடுத்துட்டு வர்றியாடா? எவ்வளவு நேரம்” எனக் கேட்டுக் கொண்டே வந்தார்.
“அண்ணன் கேட்டான்னு நெனச்சுதான் செம்புல எடுத்துட்டு வந்தேன். உங்களுக்கு பெரிய பாத்திரத்துல எடுத்துட்டு வர்றேன்” என்று திரும்பிச் சென்றவள்,
“உன்னை அப்பறம் பேசிக்கிறேன்” என அண்ணனை மிரட்டிச் செல்ல,
“போச்சுடா… உங்க முன்னாடி எப்பவும் போல அவளை, பட்டப்பேர் சொல்லிக் கூப்பிட்டேன்னு கோபம். ஏதாவது ஏடாகூடமா அப்பாட்ட போட்டுக் கொடுத்துறுவா. ஹேய்… பழனி! அப்பாகிட்ட மாட்டிவிட்டுறாதே” என பின்னாலே ஓடினான் தண்டபாணி.
அம்மாவிற்குப் பயந்த பொறுப்பான பெண்ணாக, அண்ணனை வம்பிழுத்து, அப்பாவிடம் சலுகை கொஞ்சும் இவளைப் பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம்.
இருவரையும் பார்த்து நின்றவனுக்கு நம்ம வீட்டில் இது போல் தங்கையோடு எப்பொழுது, சீண்டி விட்டு, கோபப்படுத்தி விளையாடினோம் என்று நினைத்துப் பார்க்க ஒரு நாளும் இல்லை என்றுதான் தோன்றியது. இவன் ஏதாவது சொன்னாலே முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு, ஒரு வாரத்திற்கு பேசமாட்டாள். இவனும் கண்டு கொள்ளமாட்டான்.
இங்கே, தங்கை பின்னாலே தாஜா பண்ண தண்டபாணி ஓடுவதைப் பார்த்து அவனுக்கும், இது போல் ஏன் நம் வீட்டில் எல்லோரும் சகஜமாக இல்லை என்று தோன்றியது.
கல்யாண வயதிலும், இருவரும் சிறுபிள்ளை போல், சண்டையிட்டுக் கொள்வதைப் பார்க்கையில், அந்த மகிழ்ச்சி அவனுக்குள்ளும் முகிழ்த்தது. இவளுக்கு அம்மாவிடமும், அவனுக்கு அப்பாவிடமும் பயம் கலந்த மரியாதை எனத்தெரிந்தது.
அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றவன்,
“டேய் சீனி!” என்று தாய்மாமன் தோளைத் தொட,
திரும்பிப் பார்த்து சிரித்தான்.
“மாமா, பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறதப் பத்தி என்ன நினைக்கறீங்க?” என்று கேட்டவனை மேலும் கீழும் பார்த்தார்.
அடுத்து அங்கே இரவு சமையல் ஆரம்பித்துவிட்டது. ஒருத்தர் தேங்காய் துருவ, ஒருத்தர் வெங்காயம் உரிக்க, ஒருத்தர் இட்லி ஊற்ற என நொடியில் சட்னி, சாம்பார், இட்லி எனத் தாயாராகிவிட்டது.
அதுதான் திருமணம் முடிவாகி விட்டதே, கை நனைக்கலாம் என தணிகைவேல் வந்து, இவர்களை சாப்பிட அழைத்தார். பொதிகாச்சாலம் யோசனையாக, மைத்துனன் முகம் பார்த்தார்.
“என்னைய ஏன் மாமா பாக்குறீங்க? பெரியவங்க நீங்க முடிவு பண்ணினா சரித்தான்!” என்று சொல்ல,
“இப்போதைக்கி, எங்க பக்கத்துப் பெரிய மனுஷன் நீதான் மாப்ள! அதை மதிச்சு உங்கிட்ட அபிப்ராயம் கேட்டா, நீங்களே முடிவெடுங்கன்னு சொல்ற?”
“நிச்சயம் பண்ணாம எப்படி மாமா கை நனைக்கிறது? அதான் நீங்களே முடிவு பண்ணுங்கன்னு சொன்னேன்!” என அவரும் இழுக்க, தயக்கமாக நின்றார் தணிகைவேல்.
மழை இல்லை எனில், பேச்சு வார்த்தை முடிந்ததும் கிளம்பியிருப்பார்கள். இவர்களை வைத்துக்கொண்டு, வீட்டில் இருப்பவர்கள் மட்டும் எப்படி சாப்பிடுவது என அவருக்கும் யோசனை. இரவு சாப்பாட்டு நேரமும் வந்துவிட்டது.
தணிகைவேலிடம், பொதிகாச்சலம், “நீங்க போங்க. பேசிட்டு வர்றோம்!” என அனுப்பிவைத்தார்.
அவர் இறங்கிச் செல்ல, பொதிகாச்சலம் தன் மைத்துனனிடம், “எனக்கு இன்னொரு யோசனையும் தோணுது மாப்ள! ஆனா, வந்த எடத்துல எப்படிக் கேக்கறதுன்னு யோசனையாவும் இருக்கு. நல்ல காரியத்த தள்ளிப் போடக் கூடாதுன்னும் தோணுது!” என்று ஆரம்பித்தார்.
“என்ன மாமா கேக்கப் போறீங்க? பீடிகையெல்லாம் பலமா இருக்கு!”
“குடும்பம் நல்ல குடும்பமாத் தெரியுது. நம்ம சீனிக்கும் அப்படியே இவங்க வீட்டுப் பெண்ணை கேட்டா என்ன மாப்ள?” என்றார்.
‘சரித்தான்… அப்பாவும், மகனும் ஒரு முடிவுலதான் இருப்பாங்க போல!’ என்று நினைத்தவர்,
“நல்ல யோசனைதான். நம்ம சீனிகிட்டயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க மாமா. அவனுக்கு இந்த ஊர்ப் பொண்ணு ஓகேவான்னு தெரியணும்ல” என்று அவனைப் போட்டு வாங்க, அங்கிருந்தவனுக்கோ பழம் நழுவி கருப்பட்டி காபிக்குள் விழுந்த நிலை.
இதைக் கேட்ட, காந்திமதிக்கோ வெண்கலப் பூட்டை உடைத்து விளக்குமாறு திருடிய நிலை. அவர் நினைத்து வந்ததென்ன. இங்கே நடப்பதென்ன? மகளுக்கே யோசனை செய்யலாம் என வந்த இடத்தில் மகனுக்கும் சேர்த்து சம்பந்தம் பேசினால் எப்படியிருக்கும்?
“டேய்… சீனி! நானே தட்டிக் கழிக்கலாம்னு வந்தேன்டா. உங்க அப்பா என்னடான்னா உனக்கும் சேத்து பொண்ணு பேசுறார்டா. இந்த ஊர் பொண்ணெல்லாம் நமக்கு சரிப்பட்டு வரமாட்டா. நீயும் மாட்டேன்னு சொல்லிர்றா!” மெதுவாக மகனிடம் கிசுகிசுத்தார்.
“அக்கா… அவன் பழனி மலையேறி பலமணி நேரமாச்சு. நீ இப்ப வந்து இறங்கச் சொல்ற. இனிமே அது கொஞ்சம் கஷ்ட்டம் தான். வேணும்னா இதை அந்தப் பிள்ளைகிட்ட வேணா சொல்லிப்பாரு. உங்க மகன் எனக்கெல்லாம் செட்டாகமாட்டான்னு சொல்லிறும்மான்னு. சண்டைக்காரன் கால்ல விழறதைவிட சாட்சிக்காரன் கால்ல விழுந்துறு!” என்றதில்,
“ஏன்… என் மகனுக்கு என்ன கொறச்சல். வேண்டாம்னு வேற சொல்லுவாளா?” கர்வம் தலைதூக்கியது காந்திமதிக்கு.
“ஏற்கனவே அந்தப்பிள்ள, உம்மகன கருப்பட்டியழகன்னு சிம்பாலிக்கா சொல்லிருச்சு!” என்று கிண்டலாகச் சொல்ல, அவள் சொன்னவிதத்தை நினைத்துப் பார்த்தவனுக்கு அவனையும் மீறி சிரிப்பு மூண்டது.
“பாத்தியா… உம்மகன் தனியா சிரிக்க ஆரம்பிச்சுட்டான்.” என்று கண்ணைக் காட்ட,
“ஒரே நாள்ல சொக்குப் பொடி போட்டு, இவன மயக்குறளவுக்கு அப்படியென்ன அழகியா அவ? கொஞ்ச நேரத்துக்குள்ள என் மகனையே மயக்குறவ எப்படிப்பட்ட கைகாரியா இருப்பான்னு..!” காந்திமதி சொல்லி முடிக்கும் முன்,
“அம்மா!” என சீனியின் குரல் அதட்டலாக, அடக்கப்பட்ட குரலில் ஒலித்தது. இருக்கும் இடம் உணர்ந்து அடக்கி வாசிக்க வேண்டிய நிலமை.
“என்னம்மா பேச்சு இது. மயக்குறது, கைகாரி இதெல்லாம் வயசுப்பிள்ளையப் பாத்து பேசற பேச்சா? நம்ம வீட்லயும் வயசுப் பொண்ணு இருக்கு. எனக்கு மட்டுமில்ல, அப்பாவுக்கும் நல்ல குடும்பமா தோணுது. அதனாலதான் அவரும் பொண்ணு கேக்கலாம்னு முடிவுக்கு வந்திருக்காரு!” சட்டென கோபம் மூண்டது காந்திமதி பேச்சில்.
இத்தனை பேர் இருக்கும் வீட்டில் யாருடைய காதிலாவது காந்திமதி வார்த்தைகள் விழுந்து தொலைத்தால், அது எவ்வளவு பெரிய அனர்த்தமாக முடியும். அதுவும் அவர்கள் வீட்டில் வைத்தே, அவர்கள் வீட்டுப் பெண்ணை பேசினால், வேற வினையே வேண்டாம். தங்கைக்கு அமைய வேண்டிய நல்ல வாழ்க்கையும் குலைந்து போகும்.
“உங்கம்மாவுக்கு உரைக்கிற மாதிரி நல்லா எடுத்து சொல்லுடா!” என்றவர்,
“முதல்ல அவங்க பொண்ணு கொடுக்குறாங்களான்னு கேட்டு பாப்போம். கொடுத்தா உன் மகனோட அதிர்ஷ்டம்னு நெனச்சுக்கோ!”
“ஏன்… நாமலும் தான் பொண்ணு கொடுக்குறோம். அப்ப என் பொண்ணு இந்த வீட்டுக்கு அதிர்ஷ்டக்காரி இல்லையா?” இப்பொழுதும் விட்டுக் கொடுக்காமல் வீம்பாக பேசினார்.
“அது வந்த பின்னாடிதானே தெரியும். இன்னும் சொல்லப் போனா, நான் இங்க பெண் எடுக்கலாம்னு யோசிச்சதே ரஞ்சனிய நெனச்சுதான். அவங்க பொண்ணு நம்ம வீட்டுக்கு வாழ வந்தாலாவது, நம்ம பொண்ண அனுசரிச்சுப் போவாங்கல்ல. அதை நெனச்சுதான்! முதல்ல கிளம்புங்க. கீழ போகலாம்!” என்றார் கோபமாகவே.
இவர்கள் கீழே இறங்கி வந்தனர். மழை ஓய்ந்திருந்தது. மெல்லிய தூவானம் மட்டுமே.
தணிகைவேலுக்கு, இவர்களை சாப்பிட்டுக் கிளம்புமாறு அழுத்திச் சொல்லவும் முடியவில்லை. தயங்கியே நின்றார்.
இவர்கள் கிளம்புவது தெரிந்து, மற்றவர்களும் வழியனுப்ப வந்து நின்றனர்.
“தண்டபாணி, வண்டிக்காரவுங்கள வரச்சொல்லுப்பா! கார் வரைக்கும் கொண்டு போய் விடட்டும்!” என்று சொல்ல, தண்டபாணி ஃபோனை எடுத்து, குதிரை வண்டிக்காரருக்கு அழைப்பு விடுத்தான்.
“நாங்க கிளம்புறோம். கை நனைக்கலைன்னு நினைக்காதீங்க. உங்களுக்கே தெரியும். எல்லாரும் கூடியிருக்கப்பவே எனக்கு இன்னொன்னும் கேட்டுறலாம்னு தோணுது” என்றவர் மைத்துனனைப் பார்த்தார்.
இனி பேச வேண்டியது பொது மனிதர்தானே? இது சபையில் தாய்மாமனை முன்னிருத்தி, மைத்துனருக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவமும் கூட.
“அதொன்னுமில்லீங்க… உங்க குடும்பத்த எங்களுக்கு ரொம்பப் புடிச்சுருக்கு. அதனால, எங்க சீனிக்கும் உங்க வீட்டுப் பொண்ண கேக்கலாம்னு தோணுது. இப்படி வந்த எடத்துல கேக்குறதா தப்பா நினைக்கக் கூடாது. உங்களுக்கு இஷ்ட்டம்னா மேற்கொண்டு பேசலாம். ஒன்னும் அவசரமில்ல. எல்லாரும் பேசி முடிவு பண்ணிட்டு சொல்லுங்க! நாங்க இப்ப கிளம்புறோம்!” பொது மனிதராய், தாய்மாமன் தன்மையாக தங்கள் வீட்டுப் பையனுக்கு அவர்கள் பெண்ணை கேட்க, அதற்குள் குதிரை வண்டி வாசலில் நிற்கும் சப்தம் கேட்டது.
இதை எதிர்பார்க்காததால், தணிகைவேல் குடும்பத்தினர், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
கலையரசி முகம் காந்திமதியை மட்டுமே பார்த்தது.
பெரியவர்கள் அனைவரும் முன்னால் நிற்க, சீனியின் கண்கள் மட்டும் ஒருத்தியைத் தேடியது.
