10
“மளிகைக் கடைக்குப் போனோமா, சிட்டையைக் கொடுத்தோமா, அவன் பேப்பர்ல பொட்டலம் போட்டு, சரட்டுல கட்டித்தர்றத வாங்கிட்டு வந்து டப்பால போட்டு வச்சோமான்னு இருந்த காலமெல்லாம் மலையேறிப் போச்சு. அரிசி, பருப்பு, பயிருபச்சையெல்லாம் சொந்தக் காணியில வெளையும். இன்னைக்கி என்னடான்னா, வண்டியத் தள்ளிக் கிட்டே, எடுத்தெடுத்து போடுறாங்க. பல்லுக் குத்துற குச்சிலருந்து, காது கொடையற பஞ்சு மொதக் கொண்டு காசு கொடுத்து வாங்கவேண்டியதாப் போச்சு!”
பொதிகை சூப்பர் மார்க்கெட் திறப்பு விழாவிற்கு சென்றுவந்த அய்யம்மா, சேஃபாவில் உட்கார்ந்து அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.
காலையில் சென்றவர்கள், மதியம் சாப்பாட்டு வேளையும் கடந்த பிறகுதான் வீடு வந்தனர். இதுதான் மரியாதைக்குத் தலையைக் காட்டிட்டு வர்றதா எனக் கேட்காமல் கேட்டது பழனி, அய்யம்மாவைப் பார்த்த குத்தல் பார்வை.
“அதுக்காக போனோமா வந்தோமானா வரமுடியும். அங்க பாக்குறதுக்கு எத்தனை இருக்கு. நீதான் எதுவும் வாங்கிட்டு வரக்கூடாதுன்னு வேற சொல்லிட்ட. வேடிக்கையுமா பாக்கக் கூடாது. நாலு மக்கமனுஷ மொகத்தப் பாக்காம என்னான்னு வீட்டுக்குள்ளேயே அடஞ்சு கெடக்கறதோ?” நொடிப்பாய் முகத்தை வெட்டி கூற, ஆயக்குடி அய்யம்மாவுக்கு பேசவாச் சொல்லித் தரணும் என்பது போல் பார்த்துவைத்தாள். அவருக்கும் ஆன்ட்ராய்டு ஃபோன் யூஸ் பண்ணத் தெரிஞ்சிருந்தா வீட்டுக்குள்ளேயே, அதுவும் நாலு சுவத்துக்குள்ளேயே வாழ்றது எப்படின்னு தெரிஞ்சிருக்கும். அது தெரியாமல் எஞ்சிப்போன கடைசித் தலைமுறை பரிதாபங்கள்.
அமிர்தாவிற்கு உடையை மாற்றிவிட அழைக்க, “ம்மா… எனக்கு இந்த ட்ரெஸ் ரொம்பப் புடிச்சிருக்கு. அப்பறமா ட்ரெஸ் சேன்ஞ்ச் பண்ணிக்கவா?” இரண்டு பக்கமும் பாவாடையைத் தூக்கிப் பிடித்து வட்டமிட்டு நடுவில் உட்கார்ந்து, பாவாடையில் கூடாரம் அமைத்துக் காட்டி சந்தோஷப்படும் பிள்ளையையும் மறுதலிக்க மனம் வரவில்லை.
பட்டு ரோஜா வண்ணத்தில், பச்சைக் கலரில் பார்டர் வைத்த பட்டுப் பாவாடை சட்டையில் கொலு பொம்மை போல் காட்சியளித்தாள் மகள். எத்தனை மனதிற்குள் உழன்றால் என்ன, இன்னும் வற்றாத பால்கன்னத்தோடு, நவாப்பழ கண்களைச் சுருக்கி, கெஞ்சி கேட்கும் மகளின் அழகில் லயித்தவள் முகத்தில் புன்னகை தன்னால் விரிந்தது.
‘ஒரு எடத்துல நின்னுருக்க மாட்டா. கால்ல சக்கரத்தை கட்டின மாதிரி, ஒவ்வொரு செக்ஷனா சுத்திச்சுத்தி வந்திருப்பா. எத்தனைபேர் கண் பட்டதோ. அம்மாச்சிகிட்ட படுக்கறதுக்கு முன்னாடி சுத்திப் போடச் சொல்லணும்!’ தனக்குள் நினைத்துக் கொண்டாள்.
அமிர்தாவிற்கு இந்த மாதிரி விசேஷங்களுக்கு அலங்கரித்து, அழைத்துச் சென்று பழக்கமில்லை. இந்தியா திரும்பியதிலிருந்து கோவில் சென்றால் கூட இந்த மாதிரி பட்டுப் பாவாடை என வண்ணமயமாக உடுத்தி பழக்கமில்லை என்பதால் அவளுக்கு அது பிடித்துப் போயிற்று போல. நான்கு வயதென்ன நாற்பது வயதென்ன ஆடை அலங்காரத்தில் நானும் பெண் என நிரூபித்தாள்.
காலையில் சீனியப்பன் வந்து சென்றபிறகு, அய்யம்மாவே பேத்தியையும், தாத்தாவையும் எழுப்பிவிட்டார்.
மகளுக்கு பாலும், தாத்தாவிற்கு காஃபியையும் எடுத்து வந்து கொடுத்தாள்.
அதற்குள் அய்யம்மா குளித்து ரெடியாகி வர, அடுத்து வேலாயுதமும் குளிக்கச் சென்றார்.
அமிர்தா மட்டுமே தயாராக வேண்டும். பழனியிடம் பிள்ளையைக் கிளப்பிவிடும் முகாந்திரம் முற்றிலும் இல்லை. ஃபோனில் மூழ்கியிருந்தாள். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டாள்.
“பழனி, அம்முவ கிளப்பி விடுடி!” சிறிது நேரம் பொறுமை காத்தவர், அவரே முன்வந்து சொல்ல, கண்களை மட்டும் உயர்த்தியவள்,
“அன்னைக்கி மட்டும் நானா கிளப்பிவிட்டேன். நீங்களாத்தானே கூட்டிப் போனீங்க. அதுவும் என்னைக்கூட கேக்காம. இப்ப மட்டும் நான் கிளப்பிவிடணுமா?” யாருக்கு வந்த விருந்தோவென பட்டும் படாமல் இருந்தது அவளது பார்வையும் பேச்சும்.
அவளுக்கு கோபமும், ஆற்றாமையும் நெஞ்சு முழுக்க இண்டு இடுக்கு விடாமல் வியாபித்து நின்றது. என் பிள்ளை என்று ஊருக்கு அறிவிப்பானாமே. பெற்றவள் இல்லாமல் பிள்ளை மட்டும் வந்துவிடுமா? உள்ளுக்குள் அவிந்து, புழுங்கிக் கொண்டிருந்தவளை சிறிது நேரம் நின்று பார்த்தார். அதற்குள் வேலாயுதம் வேட்டி, சட்டை, கழுத்தில் அங்கவஸ்த்திரம் என கிளம்பி வந்துவிட்டார்.
அவரைப் பார்த்த அய்யம்மா, “அதுக்குள்ள கெளம்பியாச்சா? ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்னு கெளம்பிருவீங்களே! நம்ம பேத்திக்கே ஆகாதுங்கும் போது, நமக்கு மட்டும் என்னாத்துக்கு. ஏதோ வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்கோமே. எதுத்தாப்ல தானே, பெரிய மனுஷன் வீடுதேடி வந்து அழச்சுட்டுப் போனாரே. மரியாதைக்கு ஓரெட்டுப் போய்ட்டு வருவோமேன்னு நெனச்சேன். நீங்க போய் கைலிய மாத்துங்க. நானும் சேலைய மாத்துறே. வெந்ததத் திண்ணுட்டு விதி வந்தா போய்ச்சேர்ற வயசுல, விசேஷம் ஒன்னுதான் கொறச்ச. காலைக்கி என்னடீ பண்ணப்போற. அங்கபோகணும்னு வெள்ளனா எந்திரிச்சது வேற, வயிறு கார்கார்ங்குது. இன்னும் செத்த தூங்கி எந்திரிச்சிருக்கலாம்.” மஞ்சள் முகமாக, நெற்றி நிறக்க குங்குமம் வைத்து, பட்டுச் சேலை கட்டி, முன் தினமே பூக்காரம்மாவிடம் சொல்லிவைத்து வாங்கிய, வாடாத குண்டு மல்லியை கொண்டையில் சுற்றி, விசேஷத்திற்கென முதல் ஆளாய் கிளம்பி நிற்பவர், உனக்கு வேண்டாம்னா எங்களுக்கும் வேண்டாமென, அங்கலாய்த்து சிறுபிள்ளையாய் முகம் திருப்ப, அவளையும் மீறி, இறுக்கம் தளர்ந்து சிரித்துவிட்டாள்.
அவளுக்கு அமிர்தாவும், அய்யம்மாவும் ஒன்று போல்தான் தோன்றியது. வயதாகிவிட்டாலே வீம்பு பிடிப்பதில் இருந்து, முரண்டு பண்ணுவது வரை அவர்களும் குழந்தைகள்தானே.
“அம்மாச்சி நீங்க இருக்கீங்களே…” என்றவள், மகளை தூக்கிக் கொண்டு குளியலறை சென்றுவிட்டாள்.
வீட்டிலிருந்தால் இன்று முழுவதும் அன்லிமிடெட் டாக்கிங் டைம்தான். பேசியே காதில் இரத்தம் வரவைத்து விடுவார் என்றுதான் தெரியுமே.
“நீ எதுவும் பண்ணவேண்டாம் பழனி. பிள்ளைக்கி மேலுக்கு தண்ணிய மட்டும் ஊத்திவிடு. நான் பிள்ளையை கிளப்பிக்கறேன்.” இது அடுத்த அடி. அதாவது நீ ஒன்னும் அந்த வீட்டு விசேஷத்திற்காக மெனக்கெட்டு பிள்ளையை தயார் செய்யவேண்டாம். குளிக்க மட்டும் வைத்து விடு. மீதியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற மெப்பனைப் பூச்சு.
விடுமுறை தினம் என்றாலே இருவரது குளியலும் வேறுமாதிரி இருக்கும். குளியலறையே அல்லோகலப்படும் இருவரது அலப்பறையில். மாற்றி மாற்றி தண்ணீரை அடித்து விளையாண்டு, ஆட்டம் போட்டு களைத்து முடித்த பிறகுதான் பேருக்கு குளியலே நடக்கும்.
விநாயகர் சதுர்த்தி என்பதால் இன்று பள்ளியும் விடுமுறை.
இன்றும் மகள் அதே பாணியில் ஹேன்ட் சவரைக் கையிலெடுக்க, “அம்மு, இன்னைக்கி நோ கேம்” என்று சொல்லி வாய்மூடும் முன், அவள் மீது தண்ணீர் அடிக்க ஆரம்பித்துவிட்டது பிள்ளை. கைகளை குறுக்கே வைத்து மறைத்து, “அம்மு வேண்டாம்” என திரும்பத் திரும்ப சொல்லியும், இரவு உடையில் இருந்தவளை முற்றிலும் தொப்பலாக நனைத்த பிறகுதான் விட்டது.
“நாந்தான் வேண்டாம்னு சொன்னேன்ல அம்மு!” என்று யார் மீதோ இருந்த எரிச்சலில், காண்டெடுத்துக் கத்த, அவளது அரட்டலில் பிள்ளை பயந்து பின்வாங்கியது.
ஏதோ தவறு செய்துவிட்டதாக எண்ணிக் கொண்டு, “சாரி ம்மா” என்று பிள்ளை முகம் சுண்ட, ஆசையாக விளையாடிய பிள்ளையின் வதங்கிய வதனம் பெற்றவள் மனதை வதைத்தது. யார் மீதோ இருக்கும் கோபத்தை பிள்ளை மீது காட்டினால் பிஞ்சு மனம் என்ன செய்யும். பிள்ளையை குஷிப்படுத்த வேண்டி இவள் ஷவரைக் கையிலெடுத்தாள். பிறகென்ன, வழமைபோல் இருவரும் குளியல் என்ற பெயரில் விளையாடி முடித்து, மகளுக்கு தலை தேய்த்து குளிக்க வைத்து, துண்டை இடுப்பில் கட்டிவிட்டு எழும் முன், கடைசியாக ஒரு கோப்பை தண்ணீரை எடுத்து பழனியின் தலையோடு ஊற்றிவிட்டு வெளியே ஓடி வந்தவள், பக்கத்தில் இருந்த அய்யம்மா அறைக்குள் சென்று வேகமாக கதவை அடைத்துக் கொண்டாள். ஓடி வந்ததில் துண்டு அவிழ்ந்து கீழே விழுந்துவிட்டது.
“அடியேஏஏய்… நில்லு டீ…. கையில சிக்கின, இன்னைக்கி நீ தொலஞ்ச” எனக் கத்திக் கொண்டே குளியலறைவிட்டு வெளியே துரத்தி வந்தவள், டைல்ஸ் தரை வழுக்கியதில்,
“முருகா!” என கத்திக் கொண்டே கண்களை இறுக்க மூடி விழப்போக, அழைத்த குரலுக்கு ஆபத்பாந்தவனாக, வலிய கரமொன்று தாங்கிப் பிடித்திருந்தது.
அவளும் விழப்போன பதட்டத்தில் கை தானாக, இடையைத் தாங்கிப் பிடித்திருந்தவன் தோளை வளைத்துப் இறுக்கிப் பிடித்திருந்தது.
உடல் முழுவதும் நனைந்து, ஈரம் சொட்ட, கூந்தல் கலைந்து, முகம் நலுங்கி, பதட்டத்தில் பெருமூச்சு வாங்க, தன் கை வளைவில் இருந்தவளின் வதனத்தை விழியகற்றாமல் பார்த்து நின்றவனுக்குள் ஏதேதோ எண்ணச் சிதறல்கள் அவனை எங்கெங்கோ இழுத்துச் சென்று சிந்தனையை சிதறடித்தது. சில்லிட்டிருந்தவள் மேனியை வளைத்துப் பிடித்திருந்தவன் உள்ளத்துள் வியர்வை ஊற்றுகள். அவனையும் மீறி இடையை வளைத்திருந்தவன் கை அழுத்தமாகப் பதிய,
“அய்யோ… சீனிப்பா!” என்ற பிள்ளையின் குரலில் சட்டென கண் திறந்தவள், பட்டென அவனை விலக்கித் தள்ளிவிட்டாள். இதை எதிர்பாராதவன் ஒரு கணம் தடுமாறி நின்றான்.
துரத்தி வந்தவளின் அரவமே இல்லாமல் இருக்க, கதவோரம் அமைதியாக ஒழிந்து நிற்கிறாளோ எனப் பார்க்கவேண்டி, கதவை இலேசாகத் திறந்து தலையை மட்டும் எட்டிப் பார்த்தாள் அமிர்தா. இவனைப் பார்த்ததும், வெறும் மேனியோடிருந்த பிள்ளை வேகமாக கதவை அடித்து மூடிக்கொண்டது. தன் கோலம் நினைத்து வெட்கிய பிள்ளைக்கு இவர்கள் நின்ற கோலம் பதியவில்லை.
அப்பொழுதுதான் விலகி நின்றவள் அவன்மீது பார்வையை பதித்தாள். பட்டு வேட்டி சட்டையில், தயாராகி வந்திருந்தான். கண்டிப்பாக தன்னை சீண்டிப் பார்க்க வேண்டுமென்றுதான் இந்த உடையில் வந்திருக்க வேண்டும் என்று எண்ணியவளுக்குள்ளும் உணர்வுப் பிரளயங்கள். ஆறடிக்கு நிமிர்ந்து நின்றவனை தலை முதல் கால் வரை ஆராய்ந்தது பார்வை. ஹேர் ஜெல் போட்டு அடங்காத தலை முடியைப் படிய வைத்திருந்தான். அழுத்தமான புருவம், அதன் கீழ் அவளை எப்பொழுதும் வீழ்த்தப் பார்க்கும் அதே வசியப் பார்வை.
எடுப்பான மூக்கு, எடுத்த வைத்த அழுத்தமான உதட்டில் இவளது பார்வையோட்டத்தை உணர்ந்து ரகசியப்புன்னகை. நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவனாக்கும் என்பதை பறைசாற்றும் கச்சிதமான முகவெட்டு கொண்ட இறுகிய தாடை. அவளது பார்வை கீழிறங்க அப்படியே அங்கே நிலைத்து நின்றது அவன் கழுத்தில் இருந்த தடித்த சங்கிலியைப் பார்த்து.
‘இன்னும் இதை வைத்திருக்கிறானா’ என்ற சிந்தனையோட்டத்தை கலைத்தது,
“ம்மா… நான் ரெடி!” என்ற பிள்ளையின் குரல்.
இருவரும் ஒரு சேரத் திரும்ப, பட்டுப் பாவாடை சட்டையில் பிள்ளையின் அழகு கொள்ளை கொண்டது பெற்றவர்கள் இருவரையும்.
“வாப்பா சீனி. நேரமாச்சா?” என்று கேட்டுக் கொண்டே வேலாயுதம் வர,
“இல்ல தாத்தா… இன்னும் டைம் இருக்கு. அப்பா வந்துட்டாங்க. அவரு பாத்துப்பாரு. சீஃப் கெஸ்ட் வர நேரமிருக்கு!”
“யாருப்பா கெஸ்ட்டு” என்று கேட்க, பிரபலமான நடிகை பெயரைச் சொன்னவன்,
“சீஃப் கெஸ்ட்ட இன்வைட் பண்ணப்போற பெரிய சீஃப் கெஸ்ட் எம் பொண்ணுதான் தாத்தா!” என்றவன் குரலில் பெருமை அபரிதமாகப் பொங்கிவழிந்தது. அதைப் பார்த்தவள் கேலியாய் உதடு வளைத்தாள்.
“பழனி… இந்தா! இதை பிள்ளைக்கி தலையைச் சீவி வச்சு விடு!” என்றபடி பூவை எடுத்து வந்தவர், “என்னடீ இப்படித் தொப்பலா நிக்கிற. உனக்கு ஈரம் சேராதுல்ல. போய் ட்ரெஸ் மாத்திட்டு வா!” என்று அய்யம்மா கூறிய பிறகே சுரணை வந்து சட்டென தன்னைக் குனிந்து பார்த்தாள்.
அவள் அணிந்திருந்ததோ கிளி மூக்குச் சிவப்பில் சாடின் நைட்டி. ஈரத்தில் உடலோடு ஒட்டி உறவாடி நின்றதைப் பார்த்தவள், பதறிப்போய் வேகமாக நிமிர்ந்து அவனைப் பார்க்க, நான் ரொம்ப நல்லவனாக்கும் எனும்படி அவனது பார்வை விட்டத்தில் ஒட்டியிருந்த பல்லியை ஆராய்ந்தது.
முறைத்துப் பார்த்தவள், வேகமாகச் சென்று உடை மாற்றி வந்தாள். பிள்ளைக்கு இரண்டு பக்கம் குடுமி போட்டுவிட்டு, குடுமியை இணைத்து மல்லிச்சரத்தை வைத்துவிட்டாள்.
அவளிடம், “இதையும் அம்முக்குப் போட்டுவிடு!” என்று சீனி சிறு நகை பெட்டியை நீட்ட,
“சின்னப்பிள்ளைக்கு தங்கமெல்லாம் போடக்கூடாது அம்மாச்சி! இன்னைக்கி தங்கம் விக்கிற விலைக்கு சேஃப் இல்ல!” அவனிடம் வாங்காமலே மறுத்துப் பேசினாள்.
“அதெல்லாம் பாத்துக்கலாம் பாட்டி. நாம கூடவே தானே இருப்போம். அப்பா பேத்திக்குனு ஆசையா எடுத்து கொடுத்துவிட்டாரு!”
“போட்டுவிடு பழனி. நான் பாத்துக்கறேன்” என்றார் அய்யம்மாவும்.
மறுக்க முடியாமல் வாங்கி திறந்து பார்த்தாள். வளையல், கொலுசு, ஜெயின் என எல்லாமே சிறு பிள்ளை அளவிற்கு தங்கத்தில் இருந்தது காதணி தவிர. இன்னும் காது குத்தவில்லை. எடுத்து போட்டுவிட்டவள், கையோடு கைபேசியில் மகளின் கன்னத்தோடு கன்னம் வைத்து செல்ஃபி எடுத்துக் கொண்டதைப் பார்த்தவன் கண்களில் ஏக்கத்தின் ஏகபோக ஆட்சி.
“தாத்தா, பாட்டி கூடவே இருக்கணும். அங்கிட்டும் இங்கிட்டும் ஓடக் கூடாது. சாக்லேட், ஐஸ்க்ரீம் சாப்பிடக்கூடாது, யார் கூப்பிட்டாலும் போகக்கூடாது! எங்கே… அம்மா ஃபோன் நம்பர் சொல்லு!” எனக்கேட்டு, ஆயிரம் பத்திரம் சொல்லி அனுப்பிவைத்தாள்.
சீனியோடு சேர்ந்து மூவரும் வெளியேற, தனித்து நின்றவளை ஒருதரம் தழுவி மீண்ட மன்னவன் பார்வையில் என்னவென்று அறியமுடியாதொரு உணர்வு.
அவனுக்கு அவளையும் அழைத்துச் செல்ல ஆசைதான். வரமாட்டாள் என்பதையும் தாண்டி எந்த அங்கீகாரத்தில் அழைத்துச் செல்வது என்று மனம் கேள்வி எழுப்ப பெருமூச்சே பதிலாகக் கிடைத்தது.
“சீனிப்பா… வெய்ட் பண்ணுங்க” என்று செருப்பை கால்களில் போட முயற்சி செய்த பிள்ளைக்கு, குனிந்து காலணியை மாட்டிவிட்டு நிமிர்ந்தவன், பிள்ளையை கைகளில் தூக்கிக் கொள்ள, சட்டென வெறுமை படர்ந்தது அவளுக்குள்.
ஏனோ கண்ணைக் கரித்துக் கொண்டுவந்தது. மூத்த பிள்ளைக்குதான் இளைய பிள்ளை பிறக்கும் முன் சவலைபாயுமா என்ன? தன்னை ஒதுக்கிவிட்டு அப்பாவோடு செல்லம் கொஞ்சும் மகளைப் பார்த்த அம்மாக்களும் ஒரு வகையில் சவலைப் பிள்ளைகள்தான். எப்படி இவ்வளவு சீக்கிரம் அவனோடு ஒட்டிக் கொண்டாள். ஒரு வேளை இதுதான் இரத்த சொந்தம் என்பதா? இல்லை, மகளது வாழ்வில் தந்தைக்கான இடம் காலியாயிருக்க எளிதில் இட்டு நிரப்பிவிட்டானா? மகளும் தன்னை விட்டு தூரம் போய்விடுவாளோ என்ற எண்ணம் தலைதூக்க, கண்ணீர் கரை மீறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
வெகு நேரம் அப்படியே நின்றிருந்தாள்.
*****
அமிர்தாவைத் தூக்கி வந்த மகனைப் பார்த்த பொதிகாசலத்தின் முகத்தில் சந்தோஷம் அப்பட்டமாகத் தெரிந்தது. அவருக்கும் உள்ளுக்குள் சந்தேகம் தான். என்னதான் நேரில் சென்று அழைத்து வந்தாலும் பேத்தியை பழனி அனுப்பிவிடுவாளா என்று.
“தாத்தாகிட்ட வா தாயி!” என்று ஆர்வமாய் கைநீட்ட, அவரைப் பார்த்ததும், அன்று போல் இன்றும் அமிர்தா மிரண்டாள்.
“நம்ம தாத்தாடா அம்மு!” என்று சீனியப்பன் சொல்லியும் அவரிடம் செல்லாமல், அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, தோளில் முகம் புதைத்தாள்.
என்னயிருந்தாலும் அம்மா சொல்லும் பொழுது வரும் நம்பிக்கை அடுத்தவர் சொல்லும் பொழுது பிள்ளைகளுக்கு வருவதில்லை. இதுவே பழனி சொல்லியிருந்தால், தாத்தா என நம்பிப் போயிருப்பாளோ என்னவோ?
“புதுசுல்ல… பழகினா சரியாகப் போகும்!” அய்யம்மா ஆறுதலாகச் சொல்ல, அப்பொழுதுதான் அவர்கள் பக்கம் கவனத்தை திருப்பியவர், “வாங்கம்மா… வாங்கய்யா!” என வேகமாக வரவேற்றார். இன்னும் சிறப்பு விருந்தினர் வர நேரமிருந்ததால், அய்யம்மா, வேலாயுதத்தை அலுவலக அறையில் உட்கார வைக்கச் சொன்னார்.
ராகவனும் அங்குதான் இருந்தான். பொதிகாசலத்தை அவனும் அப்பா என அழைத்துக் கொண்டு வேண்டிய உதவிகளைச் செய்தான். இதையெல்லாம் கவனித்தவனுக்கு இவர்கள் பழக்கம் சாதாரண சக குடியிருப்புவாசிகள் போல் அவனுக்குத் தெரியவில்லை.
பழனியின் தாத்தா உடல்நிலை சரியில்லாமல் போன அன்று இவன் உதவியதால், பெரியவர்களோடு இவனுக்கு வந்த நெருக்கம், அது கொண்டு பிள்ளையோடும் நெருங்கிப் பழகுவதாக எண்ணியிருந்தான்.
ஆனால், இன்று பொதிகாசலத்தின் நடவடிக்கைகள் அப்படியல்ல எனக் காட்டியது. நேரில் சென்று இவர்களை அழைத்தது, அமிர்தாவுக்கு நகை, உடையென வாங்கிக் கொடுத்துவிட்டது எல்லாம் அவனுக்குள் சந்தேகத்தை விளைவித்தது.
‘ஒரு வேளை சீனி சார்க்கு பழனி மேடத்தை பேசுவாங்களோ?’ எனத் தோன்ற, ‘ச்சே…. என்ன நம்ம புத்தி இப்படிப் போகுது. இவருக்கு என்ன குறைச்சல்னு குழந்தையோட இருக்கறவங்களப் போய் கல்யாணத்துக்குப் பேசப் போறாங்க?’
‘ஒரு வேளை இவருக்கும் ஏற்கனவே மேரேஜாகி, டிவோர்ஸ் ஆகியிருந்தா பேச வாய்ப்பிருக்கு தானே? இன்னைக்கு தான் ஆயிரங்காலத்துப் பயிரெல்லாம் ஹைப்ரீட் பண்ணி மூனு மாசம், நாலு மாசத்துலேயே அறுவடை பண்ணிர்றாங்களே? அதனாலதான் பிள்ளைகூட இவ்ளோ க்ளோஸ் ஆகுறாரோ? அதுவும் அங்கிள்னு கூப்பிடாம சீனிப்பான்னுதான் கூப்பிடுது!’ தனி உலகத்தில் ராகவன் சஞ்சரிக்க,
சீனி, “ராகவ்!” என ஓங்கி அழைத்த பிறகே சுயத்திற்கு வந்தான்.
“சொல்லுங்க பாஸ்!” என்றான் வேகமாக.
“எந்த லோகத்துலடா இருக்க! கெஸ்ட் வந்துட்டாங்க. நான் அங்க போறேன். நீ கவுன்டருக்குப் போ!”
‘எல்லாம் உங்களைப் பத்தின சிந்தனைதான் பாஸ்!’ என சொல்ல வாயெடுத்தவன், நமக்கெதுக்கு அடுத்தவங்க வம்பு என தலையை உலுக்கிக் கொண்டான்.
ஏதோ நல்ல எண்ணத்தில் தன்னை உடன் தங்கவைத்துக் கொண்டால் அதற்காக அவரது குடும்ப விவகாரமெல்லாம் ஆராய்வது நாகரீகமல்ல என்று ஒதுக்கித் தள்ளியவன், மற்ற வேலைகளை கவனிக்கச் சென்றுவிட்டான்.
இவனைத்தான், வங்கித் தேர்வில் தேர்ச்சி பெறும் வரை, வார இறுதி நாட்களில் பார்ட் டைம் அக்கவுன்டன்ட்டாக நியமித்திருக்கிறான். அவனுக்கும் சிறு உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில்.
“எனக்கும் உங்க சூப்பர் மார்க்கெட்ல கெஸ்ட் ரோலா பாஸ்!” என அப்பாவியாய் கேட்க.
“மிஸ்டர் காட்(God) டைரக்ஷன்ல எல்லாருமே கெஸ்ட் ரோல் தான் ராகவன்! எப்ப நம்ம வாழ்க்கையில காமெடி சீன் வைப்பாரு, எப்ப ட்ராஜிடி சீன் வைப்பாருன்னு நமக்கே தெரியாது. ஆக்ஷன் சொன்னா நடிச்சுட்டு, கட் சொன்னதும் பேக் அப் பண்ணி பொட்டியக் கட்ட வேண்டியதுதான்” என்று சொல்ல,
“கொட்டுற தத்துவ முத்துக்களைப் பாத்தா சொம்பு ரொம்ப அடிவாங்கியிருக்கும் போலயே பாஸ்!” என்று கேட்டு சிரிக்க,
“ரெம்ப… ரொம்ப…” என்றவனும் வாய்விட்டு சிரித்தான்.
*****
அமிர்தா, பெரியவர்களோடு ஒரு இடத்தில் உட்காராமல் சுற்றிக் கொண்டு வர, தான் பார்த்துக் கொள்வதாக சீனி, தன்னிடமே வைத்துக் கொண்டான்.
“பிள்ளை சூதானம்ப்பா. எங்களக் கொண்டே போடுவா!”
“எனக்கும் அவ பிள்ளைதான் பாட்டி!” என்றான் அவர்களது அச்சமறிந்து.
“இப்படியே பிள்ளை, செட்டியார்னு மாத்தி மாத்தி சொந்தம் கொண்டாடுறீங்களே ஒழிய, அடுத்த வேலை நடக்க மாட்டேங்குதே!”
“கூடிய சீக்கிரம் அதுக்கு ஏற்பாடு பண்றேன் பாட்டி. அதுக்கு முதல்ல உங்க பேத்திய மலையிறக்கணுமே. அவளுக்கு மேல உங்க பேரன். இவளக் கூட கால்ல விழுந்தாவது சமாளிச்சுருவேன். மச்சானை நெனச்சாதான் அள்ளுவிடுது. மலையேறப் போனாலும் மச்சான் தயவு வேணும்பாங்க. என் மச்சான் என்னடான்னா அவன் தங்கச்சிய மலையிறங்கவே விடமாட்டான் போல!” என்று சொல்ல, அவன் சொன்ன பாவனையில் அய்யம்மாவே சிரித்துவிட்டார்.
“என்னமோ போப்பா. கல்யாணத்துக்கு முன்னாடியே அப்பா அம்மா விளையாட்டு விளையாண்டா இப்படிதான். எல்லாம் நாகரீகம் படுத்தும் பாடு. சும்மாவா சொல்லி வச்சாங்க, நாடு நல்லா இருந்தாலும் இருக்கும் பாழும் நாகரீகம் ஓடிவந்து கெடுக்கும்னு. எல்லாம் கலிகாலம். எங்க காலத்துல இப்படியா எதுக்கெடுத்தாலும் போட்டோ புடிச்சோம். இப்பதான் என்னமோ, கல்யாணத்துக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே போட்டோக்காரன கூடவே கூட்டிட்டித் திரியறீங்க” என்று அலுத்துக் கொண்டார்.
“ஏம்ப்பா சீனி! இப்படியா கால்ல விழறதெல்லாம் வெளிப்படையா சொல்லுவ. நானெல்லாம் சொல்லிக்கிட்டா இருக்கேன்” வேலாயுதமும் அவர் பங்கிற்கு அவனை கேலி பேச,
“அப்படியே விழுந்துட்டாலும்” அய்யம்மா கழுத்தை வெட்டியதில்,
“பாத்துடீ… சுளுக்கு கிளுக்கு புடிச்சுக்கப் போவுது. சுளுக்கெடுக்க இங்க எங்க போயி ஆளுப்புடிக்கறது.”
“ஏன், நீங்கதான் சுளுக்கெடுத்து விடுறது!”
“எனக்கு தான் தெம்பில்லையே!” என்ற சொல்ல வாய்விட்டு சிரித்தான்.
“நீ போப்பா! இப்படித்தான் இந்த மனுஷன் கூறுகெட்டத்தனமா பேசுவாரு!” என்று சொல்ல,
தலையை ஆட்டி சிரித்துக் கொண்டே அமிர்தாவோடு வெளியேற,
“யாருக்குடீ கூறு கெட்டுப் போச்சு!” வெளியே வந்தும் அவர்கள் சண்டை தொடர்வது கேட்டது.
*****
“யாருடீ இந்தக் குட்டி. துறுதுறுன்னு ஒரு எடத்துல நிக்காம!”
“எனக்கென்னம்மா தெரியும்? நானும் உங்க கூடத்தானே வந்தேன். உங்க மகன் வெல்கம் கேர்ள்ஸ்க்குப் பதிலா வெல்கம் பேபி கூட்டி வந்திருக்கானோ என்னவோ?”
“சின்ன வயசுல உன்னைப் பாத்த மாதிரியே இருக்குடீ ரஞ்சு!”
தனக்கு வேலையிருப்பதாக முன்னாடியே பொதிகாசலம் கிளம்பி வந்துவிட்டு, காரை அனுப்பி வைத்தார்.
சிறப்பு விருந்தினர் வருவதற்கு சற்றுமுன்தான் வந்திறங்கிய காந்திமதி மற்றும் ரஞ்சனியின் பார்வை, அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்த அமிர்தாவையே சுற்றி வந்தது.
சிறப்பு விருந்தினராக அழைத்திருந்த நடிகையும் வந்திறங்க, சீனி வந்து வரவேற்று அழைத்துச் சென்றான். இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வாசல் முன்பே பெரிய பிள்ளையார் சிலை அலங்காரமாக வைத்திருந்தான்.
குறித்த நேரத்தில் ரிப்பன் வெட்டி கடை திறப்புவிழா இனிதே நடந்தேற, அமிர்தாவை கையில் தூக்கி கொண்டு அவருக்கு பூங்கொத்தை கொடுக்கச் செய்தான்.
“க்யூட் பேபி!” என்று கன்னம் கிள்ளிக் கொஞ்சிவிட்டு,
“உங்க பேபியா சார்?” என்று கேட்க,
“இல்ல… நான் ஃப்ரூட்டியோட பேபி!” என்றாள் அவனை முந்திக் கொண்டு. அவளுக்கு தாய் மட்டும்தானே தெரியும். தந்தை உறவு தெரியாதே.
அமிர்தா முந்திக் கொண்டு சொல்லியது, அவனுக்கு சுருக்கென தைத்தாலும் இந்த நிலைமைக்கு தான் தானே காரணம் என தன்னைத் தானே தேற்றிக் கொண்டான்.
“ஃப்ரூட்டிங்கறது, அவங்க அம்மாவுக்கு, அவ வச்சுருக்கிற பெட் நேம் மேம்!” என்று புன்னகையோடு சொன்னான். நடிகை கேட்ட கேள்விக்கு பொதுவாக அமைந்தது இவனது பதில்.
“ச்சோஓஓ ஸ்வீட்!” மீண்டும் ஒரு கிள்ளலும், முத்தமும் பிள்ளைக்கு. கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் அமிர்தா.
இதில் ரகசியமாக அவன் பக்கம் குனிந்து, “சீனிப்பா… லிப்ஸ்டிக் ஒட்டியிருக்கா பாருங்க? லிப்ஸ்டிக் மார்க் இருந்தா, எதுக்கு அடுத்தவங்கள கிஸ் பண்ண விட்டேன்னு ஃப்ரூட்டி திட்டும்!” என்று வேறு கேட்க, வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு இல்லை என தலையை மட்டும் ஆட்டினான்.
‘அவ கூட இல்லைனாலும் பிள்ளைய ஆட்டி வைக்கிறா!’ செல்லமாய் அலுத்துக் கொண்டது பெற்றவன் மனது.
முதன் முதலாக ஒரு உப்பு பாக்கெட்டை எடுத்து வந்து மகனிடம் கொடுத்து, பில் போட்டு காந்திமதி வியாபாரத்தைத் துவக்கி வைத்தார். அவர் கையால் முதன் முதலில் வியாபாரம் தொடங்குவது தான் எப்பொழுதும் வழமை. தங்களுக்குள் எத்தனை பிணக்கிருந்தாலும், இன்றும், தாயை விட்டுக் கொடுக்கவில்லை தனயன்.
அதற்குள் அய்யம்மாவும், வேலாயுதமும் வந்தவர்கள் ஒரு பருப்பு பாக்கெட்டும், சர்க்கரைப் பாக்கெட்டும் எடுத்து வந்து பில் போடச் சொல்லிக் கொடுக்க, அப்பொழுதுதான் அவர்களைப் பார்த்த காந்திமதி, ரஞ்சனி முகத்தில் உச்சபட்ச அதிர்ச்சி.
இருவரது கண்களும் சட்டெனத் திரும்பி பார்த்தது, பில் கவுன்ட்டரில், சீனியப்பன் இருக்கைக்குப் பக்கத்தில் ஒரு இருக்கை போட்டு அமரவைக்கிப் பட்டிருந்த அமிர்தாவை.

Super super super