முக்கனியும் சக்கரையும் 1

வேலுண்டு! வினையில்லை! 

1

வேலிருக்க வினையுமில்லை.

மயிலிருக்க பயமுமில்லை

அடைவோம் கந்தன் சேவடி 

என ஆசை கொண்டு 

எடுத்தோம் இந்தக் காவடி… 

ஆடிக் கிருத்திகை என முருகன் கோவிலில் பாடல் ஒலிக்க, அத்தனை அவசரத்திலும், நெரிசலிலும் கோவிலைக் கடக்கும் பொழுது, ஆக்சிலேட்டரை முறுக்குவதை விட்டுவிட்டு, அனிச்சையாய் கை, கன்னத்தில் போட்டுக் கொண்டதில் சற்றே வண்டி தடுமாற, 

“ம்மாஆ,‌ கேர்ஃபுல்!” என அதட்டிய குரல், கூடவே,

“சீக்கிரம் மா!” எனவும் அவசரப் படுத்தியது.

“தெரியும் வாடீ! நானே டென்ஷன்ல வண்டிய எங்கேயாவது விட்டுறப் போறேன்!” கங்காரு போல் இரண்டு கால்களுக்கு நடுவே காபந்து பண்ணிய நான்கு வயதுப் பிள்ளையிடம் கடிந்தாள்.

ஒருபக்கம் பள்ளிசெல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் நெரிசல். மறுபக்கம் கோவிலில் அன்னதானம்‌ நடைபெற பக்தர்கள் நெரிசல். அதில் நீந்தி வருவதே பெரும்பாடாயிருந்தது. கோவில் அன்னதான வாசனை‌வேறு‌ வயிற்றில் அமிலம்வார்த்தது. கோவில் சாப்பாடு. இறங்கி சாப்பிட்டுப் போய்விடலாமா என்று கூட மனம் யோசித்தது.

“உன்னாலதாம்மா லேட்! ப்ரேயர் சாங் போட்டாங்கம்மா!” 

“எனக்கும் கேக்குது அம்மு! கிளம்பி டோர் லாக் பண்ணங்குள்ள, மறுபடியும் பாத்ரூம் போனது நீதானே? உன்னாலதான் எனக்கும் லேட்டு.” நான்கு வயது மகளிடம் எசலி போட்டாள். 

“கீழ இறங்கி வந்த பின்னாடி ஃபோன் மறந்து வச்சுட்டு மறுபடியும் எடுக்கப் போனது நீங்கதானே?” அவள் மறந்ததை மறக்காமல் மகள் உன்னால் தான் தாமதம் என நினைவூட்ட, 

“எங்கிட்ட என்ன குத்தங்குறைன்னு கண்டுபிடிக்கலாம்னே இருடீ! எங்கம்மாவுக்கு மேல!” 

“இன்னைக்கி வெறும் சீரியலும் (cereal), மில்க்கும் தான். அதுக்கே லேட்டு. வந்து பாட்டியிருந்தா, கீ தோசையும், க்ரீன் சட்னியும் செஞ்சு கொடுத்திருப்பாங்க!” 

வந்தனா என்ற பெயர்‌தான் தாத்தா அழைப்பது போலவே பேரன்,‌ பேத்திகளிடமும் வந்துவாக சுருங்கிவிட்டது. 

அவரும் பிள்ளைகள் முன் அப்படி கூப்பிடாதீங்கனு எத்தனையோ தடவை சொல்லிப்பார்த்துவிட்டார். அவர்தான் கேட்ட பாடில்லை. 

“இதுல எல்லாம் ரைமிங்கா பேசுடீ. ஒரு ரைம்ஸ் சொல்லச் சொன்னா மட்டும் வராது. அது க்ரீன் சட்னி இல்ல. கொத்தமல்லிச் சட்னி. உனக்கு நல்லா நாக்க வளத்து விட்டிருக்காங்க உங்க வந்தூ பாட்டீ!” நீட்டி முழக்கி நொடித்துக் கொண்டவளுக்கும், சூடான இட்லி, தோசை, பூரி, பொங்கலுக்கு நாக்கு ஏங்கத்தான் செய்தது. 

எத்தனை நாட்கள் அம்மாவிடம் இதே இட்லி, தோசையா என வம்பளந்திருப்பாள். இப்பொழுது மூன்று வேளையும் இட்லி, தோசை கொடுத்தாலும், வெறும் இட்லி பொடி மட்டும் போதும், சட்னி, சாம்பார் எதுவும் வேண்டாமென வாயை மூடிக்கொண்டு சாப்பிடுவாள். அந்தளவிற்கு நாக்கு மர்கயா. (உடனே வாயை‌மூடி‌ சாப்பிடுவது எப்படின்னு கடிக்காதீங்க மக்கா!) 

இன்று கெலாக்சில் பாலை ஊற்றி நாவிற்கு வஞ்சனை செய்த பொழுதே, தொண்டையைவிட்டு இறங்க அத்தனை‌ சண்டித்தனம் செய்தது. ஐந்தரை அடி உடம்பில் இந்த நாலு இன்ஞ்ச் நாக்கையே நம்மால திருப்தி படுத்த முடியலையே. மனம் உள்ளுக்குள் அலுத்துக் கொண்டது.

பெரியம்மாவிற்கு மகன்வயிற்றுப் பேரன் பிறந்திருக்க, பேரனைக் கவனிக்கவென பெரியம்மாவும், பெரியப்பாவும் யு.எஸ்‌ சென்று முழுதாக ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் நாக்கும், மனமும் அம்மாவின் கைச்சாப்பாட்டிற்கு ஏங்க ஆரம்பித்துவிட்டது. இன்னும் குறைந்தது ஆறு மாதமோ ஒரு வருடமோ, மீண்டும் இருவரும் தாயகம் திரும்ப.

இதெல்லாம் இந்த பெரியம்மாவால்தான். தன்னை ஒரு‌ வேலையும்‌ செய்யவிடாமல் சோம்பேறி‌யாக்கிவிட்ட பெரியம்மாவை மனதிற்குள்ளே திட்டியும் கொண்டாள். 

இதுவே இவளது அம்மா கலையரசியாக இருந்திருந்தால், கடிகாரமுள் ஆறு‌மணியைத்தாண்டி‌ கொஞ்சம் சாய்ந்தாலே போதும். படுக்கைவிட்டு எழாமல் இருந்ததற்கே, காது தீயுமளவிற்கு ஒரு பாட்டு‌ பாடியிருப்பார். 

“அவளைக் கெடுக்கறதே நீதான்க்கா” என்று‌ இவளோடு சேர்த்து பெரியம்மாவிற்கும் பாட்டுவிழும். 

“விடு கலை! நம்ம வீட்லதான் சொகுசா இருக்க முடியும். போறவீட்லயுமா இப்படித் தூங்கமுடியும்?”

“உன் கூடவே வச்சுக்கோக்கா. இவ நல்லாத் தூங்கி தூங்கி எந்திரிக்கட்டும்!” எந்த வாய் முகூர்த்தத்தில் கலையரசி சொன்னாரோ தெரியாது. பெரியம்மா யுஎஸ் சென்றபோதும் சரி, சென்னை திரும்பி வந்தும் கூட, தன்னுடனேதான் வைத்துக் கொண்டார். நினைவுகள் ரூட் மாறியதில் வண்டியின் வேகம் பின்தங்க, 

“ம்மா… செக்யூரிட்டி அங்கிள் கேட் க்ளோஸ் பண்ணப்போறாங்க பாரு!” என மகள் அதட்டியதில், பாஸ்ட்டிலிருந்து, ப்ரெசென்டிற்கு வந்தவள், 

‘இவ எங்கம்மாவோட மறுவுருவம் போல. எங்கம்மா முன்னாடி‌ குரல உசத்தினா, அன்னைக்கே வீட்டுக்கு புது வெளக்குமாறு கேரன்டி. இவ என்னடான்னா‌ என்னையவே அதிகாரம் தூள் பறத்துறா!’ மனம் அங்கலாய்த்தது. 

“உனக்கெல்லாம் பிள்ளையப் பெத்து வளத்துப் பாத்தாதான்டீ பெத்தவ அருமை புரியும்.” அவள் அம்மா சொன்னது நூற்றில் கூட இல்லை, ஆயிரத்தில், கோடியில் ஒரு வார்த்தை என இப்பொழுது புரிந்தது. மகளுக்காகத் தானே படித்த படிப்பிற்கும் பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமேயில்லாமல் ஆசிரியை வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள். 

இதுவரை சொகுசாக இருந்த உடம்பு. இனி எல்லா வேலைக்கும் பழகிக் கொள்ள வேண்டும். தனக்காக இல்லை எனினும், நான்கு வயதில் தனக்கென வாய்த்திருக்கும் இந்த மாமியார்க்காகவேணும் அனைத்தும் பழகித்தானே ஆகவேண்டும். 

சிந்தனை ஓட்டத்தை தடை செய்வது போல், பள்ளி மணியடிக்க, கோட்டை வாயில் மூடும் முன் முற்றுகையிடும், கேடயம் தாங்கிய போர் வீரர்களைப் போல், முதுகுச் சுமை பின்னால் இழுக்க, சீருடை‌ அணிந்த பள்ளிச் சிட்டுக்கள், இறுதி நேர பரபரப்பில் பள்ளி கேட்டிற்குள், அரிபரியாக ஓடிக் கொண்டிருந்தனர். 

இதுவரை தான் சுமந்து வந்த தோள் பையை‌, இல்லையில்லை புத்தக மூட்டையை, அவசர அவசரமாக, பிள்ளைகளின் முதுகிற்கு இடம்‌ மாற்றிவிட்டு, கையில் சாப்பாட்டு பையை திணித்து விட்டு, அம்மாக்கள் எல்லாம் அவசரமாக கையை‌ ஆட்ட, சில சிட்டுகள் மலர்ந்த சிரிப்போடு பதில் வினை‌ புரிய, பெரும்பாலான பிள்ளைகள்‌ உம்மென கடனே‌ என கையாட்டிச் செல்ல, பள்ளி திறந்து இரண்டு மாதமாகியும் இன்னும் அழுது‌கொண்டே வரும் பாலகர்களை வகுப்பறை வரை வந்து சமாதானம் செய்து விட்டுப் போகும் அம்மாக்கள் என காலை நேர பரபரப்பில், மூச்சுவிடக்கூட நேரமில்லாமல் திளைத்திருந்தது கலாஷேத்ரா சர்வதேசப்பள்ளி. 

அதைப் பார்க்கையில் தன் மகள் ஒருநாள் கூட இப்படி அழுததாக அவளுக்கு நினைவில் இல்லை. சமர்த்தாக வகுப்பறைக்குள் சென்று கைகாட்டுவாள். இவள்தான் மகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள் என்ற அதீத கற்பனையில் தனியே விடப்பயந்து, மகளுக்கு அட்மிஷன்‌ போட்ட பள்ளிகளுக்கெல்லாம், தனக்கும் சேர்த்து வேலைக்கு அப்ளிகேஷனும் ஒரு‌ சேரப் போட்டாள். 

உன்னோட எதிர்காலக்கனவு என்னவென்று கேட்டதற்கு எல்லாரையும் போல சிறுவயதில் அவளுக்கும் ஆசிரியை ஆகவேண்டும் என்ற கனவுதான் இருந்தது. நமக்கெல்லாம் முதல் ரோல் மாடல் அவர்கள் தானே. அதுவும் எண்பதுகளில் பிறந்தவர்களுக்கு, ஆசிரியை என்றாலே தடித்த கண்ணாடி, தலையில் கொண்டை, கையில் குடை, மடிப்பு கசங்காத சேலை. இதுதான் பெரும்பாலானோர் கனவாக இருக்கும். 

தொன்னூறுகளில் பிறந்த இவளுக்கும் அதுதான் கனவாக இருந்தது. பத்தாவது வந்த பிறகு, பள்ளியில் மருத்துவ கேம்ப் நடந்த பொழுது, ஆசிரியர் கனவு தெளிந்து, டாக்டர் கனவு வந்தது. கழுத்தில் ஸ்டெதஸ்கோப் தொங்க, வெள்ளை கோட்டில் கையைவிட்டு ஸ்டைலாக நடந்து பார்த்தாள். அதற்கு நிறைய‌ படிக்க வேண்டும் எனத் தெரிந்த பிறகு, ச்ச்சீ… ச்ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள். 

அவளுக்கு ஐந்து வயது மூத்த உடன் பிறப்பு பொறியியல் படித்து, சென்னையில் ஐடி துறையில் கால்பதிக்க, அவளுக்குள்ளும் அண்ணனைப் போல் ஐடி கனவு விரிந்தது. பெரியம்மா மகன்களும், மென்பொருள் படித்து, வெளிநாட்டில் செட்டிலாகி விட, பனிரெண்டாவது முடிப்பதற்குள் என்ஜினியரிங் என மனதில் பதிந்து கொண்டாள். ஆனால், தற்சமயம் பார்ப்பதோ மகளுடனே இருக்க வேண்டும் என்பதற்காக, ஆசிரியை பணி. பள்ளிக்கே தனித்துவிட மனமில்லாமல் கூடவே வருகிறோமே, எப்படி இவளைப் பிரிந்து இருந்துவிடலாமென முடிவெடுத்தோம் என்பதை நினைத்துப் பார்த்த பொழுது அவளுக்கே சிரிப்பு வந்தது. 

தனக்குத் தெரிந்தவர்களை வைத்து அவளது பெரியப்பா வரதராஜன் தான், கொளப்பாக்கத்தில் பிரபலமான இந்தப் பள்ளியில் இருவருக்கும் ஒரு‌சேர அட்மிஷன்‌ வாங்கிக் கொடுத்தார். அதன் அருகிலேயே கேட்டட் கம்யூனிட்டி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில், வீடு வாங்கிக் கொண்டும் வந்துவிட்டனர். வண்டியில் வரும் அளவிற்கு தூரம் இல்லைதான். ஆனால், இவர்கள் குடியிருப்பு வளாகத்தை விட்டு வெளியே வரவே சற்று தூரம் நடக்க வேண்டியிருக்கும். முன்னாடியே கிளம்பினால் நடந்நே வந்துவிடலாம். இதைவிட தூரமாக நடந்து பள்ளிக்கு சென்றவள் தான். இப்பொழுது எதற்கெடுத்தாலும் வண்டியென உடம்பு வளைய மறுக்கிறது. 

தினமும் மகளிடம், “அம்மு, நாளையிலிருந்து நடந்தே ஸ்கூலுக்குப் போகணும்டீ. உடம்பு வெயிட்‌ போடுற‌ மாதிரி இருக்கு!” உடை மாற்றும் பொழுது, கண்ணாடியில் முன்னும், பின்னும் திரும்பிப் பார்த்து சொல்வதோடு சரி. ஆனால், ஒரு நாள் கூட செயல்படுத்தியது கிடையாது. 

இவளது பெரியம்மா வந்தனாவிற்கு இரண்டும் ஆண் பிள்ளைகள். அவரது தங்கையான கலையரசிக்கு ஆண் ஒன்று. பெண் ஒன்று. பெண் பிள்ளை ஆசையில் தங்கை மகளான இவள் மீதும், பேத்தி மீதும் அதீத பாசம். பிறந்ததிலிருந்தே வந்தனாவின் மூத்த மகன் பிள்ளைகளோடு யுஎஸ் ஸில் வளர்ந்ததாலோ என்னவோ, நான்கு வயதிற்கே சற்று அதிகப்படியான துடுக்குத்தனம் அமிர்தாவிடம். ஆங்கிலமும் சரளமாக வந்தது.

மகன்கள் இருவருமே குடும்பத்தோடு யுஎஸ்ஸில் செட்டிலாகி விட, இவர்களுக்குதான் தாய் நாட்டுப் பற்றோ, மண் வாசனையோ ஏதோ ஒன்று அயல் நாடு ஒத்துவரவில்லை. சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமான்னு பாடாத குறையாக, அவ்வப்பொழுது சென்று மகன்களோடு தங்கி வருவதோடு சரி. கொரானோ காலகட்டத்தில் தான், திரும்ப முடியாத சூழ்நிலையில், தொடர்ந்து நான்கு வருடங்களாக மகன்களோடு தங்கிவிட்டு, அமிர்தாவைப் பள்ளியில் சேர்க்கும் வயது வர, சமீபத்தில் தான் இந்தியா திரும்பினர். வெகு வருடங்கள் கழித்து சின்ன மகனுக்கு குழந்தை பிறந்திருக்க, அதைக் கவனித்துக் கொள்ள இருவரும் மீண்டும் யுஎஸ் சென்றுவிட்டனர். 

அது மாணவர்கள் தங்கிப் படிக்கும் விடுதி வசதியும் கொண்ட (boarding school) பள்ளியும் கூட. உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் என அங்கேயே‌ தங்கி படிக்கும் சர்வதேசப்பள்ளி. அதனால் எப்பொழுதும் கேன்டீன் வசதியும் உண்டு. 

பள்ளி கட்டணத்தோடு, உணவுக் கட்டணமும் சேர்த்து கட்டிவிட்டால், பிள்ளையைக் கிளப்பி‌ பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டால் மட்டும் போதும். காலை உணவு முதற்கொண்டு, சிற்றுண்டி, ஜுஸ், மதிய உணவு என அனைத்தும் பள்ளி‌ பொறுப்பு. இவளது சோம்பேறித்தனம் தெரிந்தே தான், உணவிற்கான கட்டணத்தையும் சேர்த்தே கட்டிவிட்டார் வரதராஜன். 

“நான் சமாளிச்சுப்பேன் பெரியப்பா.‌ முடியலைனா கேன்டீன்ல வாங்கிக்கறேன். எதுக்கு மொத்தமா கட்டுறீங்க” என்றதற்கும், 

“உன்னைப் பத்தி உங்க பெரியப்பாவுக்கு நல்லா தெரியும். அதனாலதான்!” என்றார் வந்தனா.

அந்த தைரியத்தில் தான் இவளும் தாமதமாக எழுந்து, பிள்ளையைக் கிளப்பி, அவளும் கிளம்பி வருவது. இன்று காலையும் மகள்தான் அவளை எழுப்பியதே. அவசரமாக எழுந்து ஒரு குளியலைப்போட்டு, இன்று ஆடிக்கிருத்திகை… பெரியம்மா இருந்திருந்தால் பூஜை செய்திருப்பாரே என, முருகனுக்கும் சிறு பூஜையைப் போட்டு, மகளை கிளப்பி, தானும் கிளம்புவதற்குள் தாமதமாகிவிட்டது.

என்னதான் பள்ளியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்றாலும், இவளது பெரியம்மா வந்தனா இருந்தவரை ஒரு தோசையாவது, சலம்ப நெய்விட்டு முறுகலாகச்சுட்டு, பேத்திக்கு வயிற்றை நிரப்பிதான் அனுப்புவார். இந்த ஒரு வார காலமாக நூடுல்ஸ், ப்ரெட், மற்றும் கெலாக்ஸ் என காலைப் பொழுது கழிகிறது அம்மாவிற்கும், மகளுக்கும். 

பள்ளி வாகனம் ஒரு பக்கம், சைக்கிளில் வரும் மாணவர்கள் நெரிசல் ஒருபக்கமென, வண்டி இஞ்ச் இஞ்சாக நகர, ஒருவழியாக காலை ப்ரேயர் முடியும் முன் உள்ளே வந்துவிட்டாள். 

இன்னும் தூக்கம் கூட கலையாத பிள்ளைளை பள்ளி வாகனத்தில் இருந்து, உதவிப்‌பெண் இறக்கி விட்டு, வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். 

அவசரமாக வண்டியை அதனிடத்தில் நிறுத்திவிட்டு, தோள்ப்பையை எடுத்து வலது தோளில் போட்டுக் கொண்டு, இடக்கையில் பிள்ளையையும் பிடித்திழுக்காத குறையாக அலுவலக அறை நோக்கி செல்ல,

“ம்மா, கீ!” என்று மகள் நினைவூட்ட, வண்டியில் விட்டுச் சென்ற சாவியை எடுத்துக் கொண்டு மீண்டும் திரும்பினாள். மகள் இடுப்பில் கைவைத்து முறைக்க,

“வாடீ! பெரிய மனுஷி மாதிரித்தான்!” என்றவள், 

அலுவலக அறை சென்று கைரேகை பதித்து, தன் வருகையைப் பதிந்துவிட்டு வெளியே வந்து, “ஹப்பா!” என கண்களை மூடி ஆசுவாசமாக பெருமூச்செடுத்தாள். 

“ம்மா… இன்னைக்கி ரொம்ப லேட்! ப்ரேயரே முடிஞ்சுருச்சு மேம் திட்டுவாங்க!” பிள்ளை முகம் சுருங்கியது. 

“நான் சொல்லிக்கிறேன். வா‌ அம்மு!”

“உங்க முன்னாடி எதுவும் சொல்ல மாட்டாங்க. நீங்க போன பின்னாடி வார்ன் பண்ணுவாங்க!”

“சாரி அம்மு. டீச்சர்ஸ்னா அப்படித்தான் இருப்பாங்க. என் செல்லம்ல. நாளைக்கு சீக்கிரம் கிளம்பி வந்துறலாம். மூஞ்சியத் தூக்காம வாடீ. எனக்கும் க்ளாஸ்க்கு லேட்டாச்சு.” மகளை நாடியைப் பிடித்து அவசரமாக, அரைகுறையாக கொஞ்சிப் பேசி‌ சமாதானம் செய்து, அவளது வகுப்பின் முன் விட்டுவிட்டுத் திரும்ப,

“ஃப்ரூட்டி…” மகள் மீண்டும்‌ அழைத்ததில்,‌ சட்டென நடை தடைபட்டு, கோபமாகத் திரும்பினாள்.‌

“பை…” என்று கைகாட்டிய சிட்டு, பறக்கும் முத்தம் ஒன்றை காற்றில் ஊதிவிட, 

“உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இப்படி கூப்பிடாதேன்னு!”

“லேட்டா அழச்சிட்டு வந்தேல்ல. அதனாலதான்” என்றவள்‌ ஆட்காட்டி விரலை மடக்கி கொக்காணி காண்பித்து விட்டு உள்ளே ஓடிவிட, 

“ஈவ்னிங் பாத்துக்கிறேன்டீ உன்னை!” என வாய்க்குள் முனங்க, 

“என்ன, மேம். உங்க‌ பேரவச்சு உங்க பொண்ணே உங்கள கலாய்க்கறாளா?” சிரித்த ஆசிரியைக்கு அசட்டு சிரிப்பை வழங்கிவிட்டு அவளது வகுப்பறை நோக்கி அவசரமாகச் சென்றாள். 

அவளது அடாவடியைப் பார்க்கும் பொழுதெல்லாம் யாரை மாதிரி என குழம்புபவள், ஃப்ரூட்டி‌ என அழைக்கும் பொழுது மட்டும் யாரைப்போல் என்ற சந்தேகமே வந்ததில்லை. 

பெயர் பழனியம்மாள். வயது இருபத்தியாறு. கணித ஆசிரியை. படித்தது மென் பொறியியல். அதுக்கும் கணித ஆசிரியைக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கக்கூடாது. இன்று பெரும்பாலான இன்ஜினியர்களுக்கும் அவர்கள் பார்க்கும்‌ வேலைக்கும் சம்பந்தமேது. 

ஐந்தடியைத்தாண்டிய சராசரி உயரம். வசீகரிக்கும் தென்னகத்து தேன் நிறம். பெரியம்மாவோடு நான்கு வருடங்கள் யூ.எஸ் சென்று வந்ததில் தேன் நிறம் மெருகேறி பளபளத்து, புது நிறம் கண்டு மேலும் வசீகரித்தது. அந்த வயதிற்கே உரிய, வளத்திக்கு ஏற்ற, அளந்து அச்சில் வார்த்தாற் போன்ற உடல்வாகு. 

பிறந்த ஊரும் பழனி. அவளது அப்பா ஆசையாக வச்ச பேரும் பழனி. விபரம் தெரிந்த நாள் முதல் இதற்காக அப்பாவிடம் சண்டை போடாத நாளில்லை. 

“பேரு வைக்கும் போதே சொன்னேன் வேண்டாம்னு. இந்தக் காலத்துல யாரு இந்த மாதிரி பேரு வைக்கிறாங்கனு. அம்மா பாசத்தை இப்படியா காட்டுவாங்க. பள்ளிக்கூடத்துலயாவது வேற பேரு கொடுங்கனு சொன்னா எம்பேச்ச, எங்க கேட்டாங்க!” கலையரசி இன்னும் கொஞ்சம் மகளுக்கு தூபம் போடுவார். எல்லாம் மாமியார் மீதான பாசம்தான். வேறென்ன. 

ஆனால், “ஆயா… பழனி!” என அப்பா தணிகாசலம் வாய் நிறைய ஒவ்வொரு முறையும் அழைக்கும் பொழுதெல்லாம், அதில் தெரிந்த ஏதோவொரு சொல்லத் தெரியாத உணர்வில், நாளடைவில் அந்தப் பெயர்‌ மீது அவளுக்கேப் பிடித்தம் வந்துவிட்டது. 

அண்ணன்காரன் தான் “பழனியம்மா… ஞானப்பழனியம்மா” எனப்பாடி, இருவருக்கும் சண்டை  வரும் பொழுதெல்லாம் வெறுப்பேற்றுவான். அவன் பெயர் தண்டபாணி. 

மாணவர்கள் மத்தியில் டெர்ரர் பீசாகத் தெரிய வேண்டும் என்பதற்காகவே காட்டன் சேலைதான், அவளது அன்றாட‌ உடையென ஆகிவிட்டது. ஆனால், அவள் கட்டும் காட்டன் புடவையே அவளை வசீகரமாகக் காட்டுகிறது என்பதைத்தான் உணர மறுக்கிறாள். உணர வைக்கவும் ஒருத்தன் வர வேண்டுமே. ஏற்கனவே உணர்ந்தவரை‌ போதுமென்று தான் இரும்புத் திரை போட்டு உணர்வுகளைப் பூட்டி வைத்திருக்கிறாள்.

“டேய்… இன்னைக்கி மேத்ஸ் மேம் வரல போல. டூ ஃப்ரீ பீரியட்ஸ் இருக்கு!” வகுப்பறை செல்ல சற்றே தாமதமாக,  குதூகலித்தவன் சந்தோஷம் ஐந்து நொடி கூட முகத்தில் நிலைக்கவில்லை. வாய்‌ மூடும் முன் பதிவேட்டோடு வகுப்பறைக்குள் நுழைந்தாள் பழனியம்மாள்.‌ 

சட்டென எழுந்து நின்ற மாணவர்கள், “குட்மார்னிங் மேம்!” 

கோரசாக ராகம்‌ இழுக்க, 

பதிலுக்கு முகமன் கூறி, மாணவர்களை‌ அமரச் சொன்னவள் பார்வை வகுப்பறையை‌ ஒரு‌ தரம் வலம் வந்தது. பதிவேட்டைத் திறந்து மாணாக்கரின் வருகைப் பதிவை எடுத்தவள், 

“ஹு ஹேவ்ன்ட் ஃபினிஷ்டு தியர் ஹோம்வொர்க்?” எனக் கேட்டு நிமிர, 

முதல் இருக்கை மாணாக்கர், “ஐ ஆம் டன் மேம்!” என்று‌ அவள் கேட்கும் முன், வலிய நோட்டுகளை எடுத்து மேஜை மீது வைக்க, முடிக்காத மாணாக்கர் முகமே காட்டிக் கொடுக்க, “நாளைக்கு எல்லாரும் முடிச்சுட்டு வந்திருங்க!” என்று எச்சரிக்கை விடுத்து, சாக்பீஸை கையில் எடுத்தாள். அவர்களை எழுப்பி, நிற்கவைத்து, தண்டனை கொடுத்து என்று அதற்கெல்லாம் நேரமேது. குறிப்பிட்ட கால கெடுவிற்குள்‌ பாடத்திட்டத்தை முடிக்க வேண்டுமே. 

“லிசன், ஸ்டூடன்ட்ஸ்” என்று போர்ட் பக்கமாகத் திரும்பியவள் முழு சந்திரமுகியாக மாறிவிட்டாள். 

*****

அடுத்த எபி… 

“பழனி மேம்… இனிமே நீங்க பி.டி பீரியட் எடுத்துக்க முடியாது. பிடி சார் அப்பாய்ட்மென்ட பண்ணிட்டாங்கலாம். நேம் கூட உங்க நேம் மாதிரி தான். சீனியப்பன்.” 

மதிய உணவு இடைவேளையின் போது சக ஆசிரியை அவளுக்கு தகவல் கடத்தினார். 

2 thoughts on “முக்கனியும் சக்கரையும் 1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top