மாமா! மாப்ளே! 8

8

“டேய்‌ ராகவா!” சன்னக் குரலில் ரகசியமாக அழைத்தான் சீனி.

“சொல்லுங்க பாஸ்!” என்றான்‌ அவனைப்‌ போலவே ரகசியமாக.

“என்னடா‌ இன்னும் சொல்லுங்க எசமான்ற மாதிரி சொல்லுங்க பாஸ்னு சொல்ற?” உரிமையாய் சடைத்துக் கொண்டான். 

“பழகிருச்சு பாஸ். எதுக்கு கூப்புட்டீங்க?”

“நம்ம மச்சானப் பாத்தியா?” கண்ணை‌ மட்டும் காட்டினான். நீள் சோஃபாவில் தண்டபாணிக்கு ஒரு புறம் அமிர்தாவும், மறுபுறம் அய்யம்மாவும் அமர்ந்திருந்தனர்.

“அவருக்கென்ன பாஸ்… சும்மா ஹீரோ மாதிரி நச்சுன்னு இருக்காரு! எனக்கே அவரப் பாத்தா சைட்டடிக்கணும்னு தோணுது.” மாமனின் மாப்பிள்ளை தோரணையில் மச்சான்‌ மயங்க,

“சத்தமா சொல்லித் தொலைக்காதடா. கேக்குறவங்க தப்பா நெனைக்கப் போறாங்க” என்றவன் கூடவே முறைத்தும் பார்த்தான். அப்போ நாங்க எல்லாம் ஹீரோ மாதிரி இல்லையா என்ற கேள்வி தொக்கி நின்றது சீனியின் பார்வையில்.  

“பாஸ் இப்பவும்‌ சொல்றே… இந்த இடத்துல இவர்தான் ஹீரோ. நீங்க சீஃப் கெஸ்ட்! அதுவுமில்லாம ரெண்டு பிள்ளைகளுக்கு அப்பா!” என்றான் அப்பாவியாய்.

“இப்ப அதுவாடா முக்கியம்?” என்றான்.

“உண்மையச் சொன்னா ஒத்துக்க மாட்டீங்களே!

அங்க பாருங்க உங்க மகனை சமாளிக்க முடியாம அண்ணி படுற அவஸ்த்தையை” பழனியை கண் காண்பித்தான்.

 காரில் வரும்வரை தூங்கிக் கொண்டு வந்தவன், இறங்கியதும் தூக்கம் கலைந்ததில் சிணுங்க ஆரம்பித்திருந்தான் குகன். மடியில் போட்டு தட்டிக் கொடுத்து சமாளித்துக் கொண்டிருந்தாள் பழனி. அடங்கியபாடில்லை. குப்புற விழும் பருவம். மடிக்குள் அடங்காமல் முறுக்கிக் கொண்டு மடியை விட்டு எழப்பார்த்தான். மூனு‌மாசங்கூட ஆகல.‌ அதுக்குள்ள சேட்டையப் பாரு என மகனின் சாகசத்தை பார்த்து புன்னகைத்தவாறே

“டேய் அதில்லடா… நம்ம மச்சான் பார்வையப் பாத்தியா?”

“பாத்தேன் பாஸ். அக்காவையே வச்சகண் வாங்காம பாக்குறாரு. இப்ப அவர் மைன்ட்ல இளையராஜா நம்தனன்ன…. வாசிச்சுட்டிருப்பார்ல.” அவனது கனவில் இவன் மிதக்க, 

“டேய்… அப்படி பாக்கவிடலாமா?” என்றவன் குரலில் வில்லத்தனம். 

“ஏன் பாஸ். பொண்ணு பாக்க வந்தா பொண்ணதானே பாப்பாங்க.”

“ஏன் இலக்கியாவ பாத்ததே இல்லையா? இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் பாக்குறாப்லயா என்ன?”

“அதானே… இப்ப என்ன பாஸ் பண்றது?”

“உன்னையும் என்னையும் என்ன பாடு படுத்தியிருக்காப்ல‌. சென்னைக்கு வந்ததே அவர் தங்கச்சிய ஒழுங்கா பாத்துக்கறேனான்னு என்னை வேவு பாக்கத்தான். பொண்ணு கொடுத்தவுங்கதான் பயப்படணும். இங்க என்னடான்னா எல்லாம் தலை கீழா இருக்கு!”

அவனை ஒரு முறை‌ மேலும் கீழும் பார்த்தவன், “நம்ம செஞ்ச சம்பவம் அப்படி பாஸ். அவரா இருக்கவும் இதோட விட்டாரேன்னு சந்தோஷப் பட்டுக்கோங்க! நம்மலா இருந்தா என்ன பண்ணியிருப்போம்!” என்று கேட்க அதுவும் வாஸ்தவம் தான் என்றது உள்மனம்.‌ 

ஏனோ அந்த சம்பவத்திற்குப் பிறகு தான் தண்டபாணி தனக்குள் இறுகிப் போனான் என்றும் சொல்லலாம். 

தன் திருமணம் நின்ற பொழுது கூட பெரிதாக கவலைப்படவில்லை. 

தங்கையின் நிலையறிந்த பிறகுதான் உள்ளுக்குள் மிகவும் உடைந்து  போனான். வெளியே காட்டிக் கொள்ளாமல் அப்பா, அம்மா மற்றும் தங்கையென அனைவரையும் தாங்கிப் பிடிக்க வேண்டிய நிலை. அழுத்தம் கொடுப்பது எதுவும் இறுகித்தானே போகும். 

சீனியைப் பார்க்கும் பொழுதெல்லாம் பழையது எல்லாம் நினைவிற்கு வரத்தான் செய்தது. இரண்டு குழந்தைகள் பிறந்து பிறகும் அவனால் சகஜமாக முடியவில்லை. தான் உடன் இல்லாமல் இருந்திருந்தால் கூட ஓரளவிற்கு மச்சானை மன்னித்திருப்பானோ என்னவோ. அன்று அவன் போதையில் இருந்ததைத்தான் அவனாலே தன்னையும், மச்சானையும் மன்னிக்க முடியவில்லை. தேவைக்குப் பேசுவதோடு சரி. 

“அதெல்லாம் இருக்கட்டும்டா. உன்னையும் என்னையும் படுத்தின பாட்டுக்கு கல்யாணம் முடியுற‌ வரைக்கும் நம்ம மச்சான் குடுமி நம்ம கைல” என்றான்.

“அப்படீங்கறீங்க!” என்று இருவரும் கண்களைச் சுருக்கிப் பார்க்க, நம்பியார் பாணியில் உள்ளங்கையைத் திருகாத ஒன்றுதான் பாக்கி.

“அம்மாகிட்டச் சொல்லி இலக்கியாவ உள்ள கூட்டிப் போகச் சொல்லு!”

“அதெப்படி பாஸ் ‌நான் சொல்ல முடியும். வந்திருக்கறது‌ பொண்ணு பாக்க. பாக்காதீங்கன்னா சொல்ல முடியும்!” இவர்கள் இருவரும் யாருக்கும் கேட்காமல் ரகசியமாகப்‌ பேசிக் கொண்டிருக்க, தண்டபாணி பார்வை‌ அசராமல் இலக்கியா மீதுதான். 

உள்ளே வரும் முன் அவன் கொடுத்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் பெண்ணவள் மீளவில்லை என்பது தெரிய, அவனது கண்களில்‌ குறும்பு குடி கொண்டது. 

அவனை தெரியாமல் ஃபேட்டோ எடுத்ததைப் பார்த்துவிட்ட படபடப்பு அடங்குவதற்குள் சுகந்தி மகளை அழைக்க வந்து விட்டார்.‌ மேலுதட்டில் பூத்த வியர்வையை ஒற்றி‌ எடுத்துவிட்டு மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். பஞ்சாமிர்தம் பக்காவா வந்திருக்காரே. நாம ஓகேவா என அந்த ஒரு நிமிடத்திற்குள் ஓராயிரம் முறை தன்னை கண்ணாடியில் பார்த்திருப்பாள். கண்ணாடிக்கே அலுத்துவிட்டது. 

மகளை அழைக்க வந்த சுகந்தியிடம், “அம்மா… ஓகேவா! பூ வாடின மாதிரி‌ இருக்குல்ல. சீக்கிரமாவே வச்சுட்டோம். அவங்க வந்த பின்னாடி ஃப்ரிட்ஜிலருந்து எடுத்து வச்சுருக்கலாம்.” முந்தானையை சரிபார்த்து, பூவை ஒழுங்குபடுத்தி, கண்களில் கசிந்த மையை சரிபண்ணியவாறே படபடத்த மகளை வாஞ்சையாகத் தழுவி நின்றது சுகந்தியின் கண்கள். இவள் தான் எனக்கு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம் என்றவள் என்ற எண்ணமும்‌ ஓடாமல் இல்லை. பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.

காலை எழுந்ததிலிருந்து அவளை கவனித்துக் கொண்டுதானே இருக்கிறார். வாசலில் போடும் கோலத்திலிருந்து தன்னுடைய கோலம் வரை அத்தனை கவனிப்பும், பரபரப்பும். 

ஒரு வாரமாக புடவை தேர்வு, அதற்கேற்றாற்போல் பூ, நகை தேர்வு என இவளது ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து, “ம்மா… இங்க யாரோ இப்போதைக்கி கல்யாணம் வேண்டாம். மான்டசரி ஸ்கூல் ஆரம்பிக்கணும் அது இதுன்னு சிங்கப்பெண் லெவலுக்கு பேசுனாங்க. அவங்க யாருன்னு தெரியுமா?” ராகவன் அக்காவை கேலி பேசியே சிவக்க வைத்தான். 

இவர்கள் பக்கம் அதிக ஆட்களை‌ கூட்டவில்லை. நாளைக்கு ஒரு சொல் வந்துவிடக்கூடாது என்பதற்காக இலக்கியா தாய் வழி மாமன் குடும்பத்தை மட்டுமே அழைத்திருந்தனர்.‌ உள்ளூர் தான் என்பதால் இவர்கள் வந்தது தெரிந்த பிறகுதான் அவர்களே வந்தனர். 

எங்கே நாத்தனார் மகளை நம்ம மகன் தலையில் கட்டிவிடுவார்களோ என முன்பெல்லாம் வழியில் பார்த்தால் கூட ஒதுங்கிப் போனவர்கள், இப்பொழுதெல்லாம் அப்படி போவதில்லை. அவர்களுக்கும் கல்யாண வயதில் ஒரு பெண்ணும், பையனும் இருக்கிறார்கள். இலக்கியாவிற்கு முறை மாப்பிள்ளையும் கூட. எங்கே இவர்களோடு ஒட்டி உறவாடினால் பெண்ணெடுக்கச் சொல்லிவிடுவார்களோ என்ற அச்சம். மகனுக்கு சமீபத்தில் தான் மணம் முடித்தனர். 

ராகவனுக்கு பேங்க் உத்யோகம் கிடைத்தது தெரிந்த இந்த இரண்டு மாதங்களில் தான் இத்தனை ஒட்டு உரசல். தங்கள் பெண்ணிற்கு ராகவனை கேட்கலாமே என்ற எண்ணம். 

அக்கம் பக்கத்திலும் ஒரு சிலரை அழைத்திருந்தனர்.

ஒப்புத்தாம்பூலத்திற்கே இத்தனை காரில் வந்து இவ்வளவு பேர் இறங்குவார்கள் என்று இலக்கியாவின் மாமா குடும்பத்தினர்‌ எதிர்பார்க்கவில்லை‌ என்பதை அவர்கள் முகமே காட்டிக் கொடுத்தது. ஏதோ இவர்கள் வசதிக்கேற்றார் போல், மாப்பிள்ளை வீட்டார் வாடகைக் காரிலோ அல்லது வேனிலோ பேருக்கு ஐந்து பேரோ ஏழு பேரோ வருவார்கள் என எதிர்பார்த்தார்கள் போல.

வந்தவர்கள் தோற்றமும், தோரணையுமே பார்த்தவர்கள் கண்களில் பெப்பர் ஸ்ப்ரே அடிக்காமலே காந்தியது.

பூ, பழம், புடவை அடங்கிய வரிசைத் தட்டுக்களை தங்கைகளும், அத்தை, சித்திகளும் ஹாலில் பரப்பினர். ஒரு அடுப்பங்கரை, இரண்டு படுக்கையறையுடன் கூடிய பழைய காலத்து சீமை ஓடு வேய்ந்த வீடுதான். ஆனால் விசாலமான பட்டாசாலை. கிணற்றடியோடு கூடிய கொல்லைப் புறம்.

வந்தவர்களை வரவேற்று அமரவைத்தவர், உள்ளே சென்று மகளை அழைத்து வர, அறையை விட்டு வெளியே வரும் முன் மாமன் மனைவி வேகமாகச் சென்று இலக்கியாவை கை பிடித்து அழைத்து வந்தார். 

“என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே அண்ணி. நீங்கதான் அழச்சுட்டு வரணுமா” என்றதிலேயே நல்ல காரியத்தில் சுகந்தியை ஒதுங்கி நிற்கச் சொல்லியது மறைமுகமாக தெரிந்தது. அவரும் உலக வழமை இதுதானே என ஒதுங்கிக் கொண்டார். 

வந்தவர்களுக்கு பொதுவாக வணக்கம் வைத்தவளை, கலையரசிதான் அருகே அழைத்து அமர்த்திக் கொண்டார். 

ஏற்கனவே அறிமுகமானவர்கள். நல்ல பழக்கமும் கூட. அதனால் கலையரசி அழைக்க அவருடன் சென்று அமர்ந்து கொண்டாள்‌. 

முதன் முதலாக சென்னையில்‌ பார்த்த பொழுது எப்படி தோள் பையை மார்போடு இறுக்கிப் பிடித்து நின்றாளோ, அதே போல் தான் இப்பவும் அமர்ந்திருந்தாள். என்ன ஒன்று அணைத்துப் பிடிக்க தோள் பை மிஸ்ஸிங். கலையரசி ஏதோ கேட்க அதற்கு பதில்‌ சொல்லிக் கொண்டிருந்தாள். 

வழக்கமான சம்பிரதாயப் பேச்சுக்கள் என நேரம் கடக்க, அதற்குள் குகனின் சிணுங்கல் அதிகமானது. அரைகுறைத் தூக்கமும் பசியும் வேறு.

“அக்கா… அண்ணிய உள்ள கூட்டிப்போ. அவனை பசியமத்தி தூங்க வைக்கட்டும்” என்று சொல்ல இலக்கியா எழுந்து கொண்டாள். 

இன்னும் பூ வைக்கும் முகூர்த்தத்திற்கு நேரமிருப்பதால், பழனியை உள்ளே அனுப்பும் சாக்கில் அக்காவையும் உள்ளே போகச் சொல்லிவிட்டு சீனியை மெப்பனையாகப் பார்த்தான். 

அவன் கட்டை விரலை உயர்த்திக் காண்பிக்க ‘அட பக்கிகளா. என்னதிது சின்னபுள்ளத்தனமா இருக்கு’ என்றது இவர்களது மனசாட்சி. 

பெரியவர்கள் அமர்ந்து மற்ற விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க, ஒரே இடத்தில் உட்கார முடியாமல் தண்டபாணி சித்தப்பா பெண்கள்‌ எழுந்து வீட்டின் பின் பக்கமாகச் சென்றனர்.‌ 

அதற்குள் சுகந்தி அனைவருக்கும் காஃபி, பலகாரம் எடுத்து வர, ராகவன் எழுந்து சென்று அம்மாவிடம் வாங்கி அனைவருக்கும் கொடுத்தான். 

“ராகவா… பிள்ளைங்க எல்லாம் பின்னால இருக்காங்கப்பா. அவங்களுக்கும் கொடுத்துட்டு வா!” சுகந்தி சொல்ல, காஃபி ட்ரேயோடு பின்பக்கமாகச் சென்றான். 

காஃபி டம்ப்ளர்கள் அடங்கிய தட்டை கையில் ஏந்தியபடி, பின்வாசல் படிக்கட்டில் பொறுமையாக இறங்கிவருபவனைப் பார்த்து பெண்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர். காஃபியை பெண்களிடம் நீட்டினான். 

உதடுமடித்து சிரித்தவாக்கில் ஜானகி டம்ப்ளரை‌ எடுக்க, “பரவாயில்லக்கா மாப்பிள்ளை சுமார் தான். இருந்தாலும் ஒகே பண்ணலாம்” என்றது பக்கத்தில் இருந்த இன்னொரு பருவச்சிட்டு. 

என்னவென்று புரியாமல் பார்த்தான். கண்களில் குறும்போடு நமட்டுச் சிரிப்பு அவர்களிடம். அவர்கள் முகத்தில் தெரிந்த கேலியில் காஃபி எடுத்து வந்த தன்னைத்தான் மாப்பிள்ளை என கேலி செய்கிறார்கள் என்பது தாமதமாகத்தான்‌ புரிந்தது ராகவனுக்கு. 

“எனக்கெல்லாம் இந்த வெள்ள பனியாரம் வேண்டாம்” என்றது‌ ஜானகி. 

“அப்ப நான் ஓகே பண்ணிக்கறேன்!’

“அடியேய் நீ இன்னும் ஸ்கூலே முடிக்கல!”

“நீ மட்டும்‌ என்ன… இப்பதானே காலேஜ் போற. ஆர்டர் போட்டு வைக்கலாம். வேணாம்னா கேன்சல் பண்ணிறலாம்!”

“அப்படீங்கற!”

“ஆமாக்கா… பேங்க்‌ உத்யோகம்னா‌ சும்மாவா? ஃபைவ் ஸ்டார் ப்ராடக்ட். ரிவ்யூ எல்லாம் பாக்கவே வேண்டாம். எத்தனை வயசு வித்யாசம்னாலும் எனக்கு ஓகே தான்.”

“அப்போ நானும் புக் பண்ணி வைக்கிறேன்.”

“இப்ப தானே வேண்டாம்னு‌ சொன்ன!” அவர்களுக்குள் எசலி போட,

‘அடிப்பாவிகளா… நானென்ன ஆன்லைன்ல ஷாப்பிங் பண்ற பொருளா? இஷ்டத்துக்கு ஆர்டர் போட்டுட்டு வேண்டாம்னதும் கேன்சல் பண்றதுக்கு. விட்டா எக்ஸேன்ஜ் ஆஃபர் இருக்கான்னு கேப்பாளுக போல!’ 

“தெய்வங்களா… உங்க விளையாட்டுக்கு நான் ஆளில்ல” என்றான் அரண்ட குரலில்.

அதற்குள் அமிர்தாவும் ஒரு இடத்தில் உட்கார முடியாமல் மாமனை பின்பக்கமாக இழுத்து வந்தாள். அவனிடமிருந்து கை பேசியை வாங்கிக் கொண்டாள். கார்ட்டூன் பார்க்க. அண்ணனைப் பார்த்த தங்கைகள் முகம் சடுதியில் மாறியது. இந்த பூனைகளும் பால் குடிக்குமா எஃபெக்ட்டில் பால் வடியும் முகம். 

“என்னம்மா பண்றீங்க?”

“சும்மா பேசிட்டிருக்கோம்ண்ணா!” ஒரே மாதிரியாக கோரசாக குரல் எழுப்ப, அடடா இவர்கள்தான் சற்று முன்‌ ராகவனை ஏலம் போட்டவர்கள் என்பதை சத்தியம் பண்ணி சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள். 

“பேங்க் எக்ஸாம்க்கு எப்படி பிரிபேர் பண்றதுன்னு இவங்ககிட்ட டீடெய்ல்ஸ் கேட்டிட்டிருக்கோம்ண்ணா” என்றது ஜானகி. 

‘உலகமகா நடிப்புடா சாமி. உலக நாயகன் தோத்தாரு. நல்லா வருவீங்கம்மா!’ என்றது ராகவன் மைன்ட்‌ வாய்ஸ். 

*****

“இந்த வீடு எங்க இலக்கியாவுக்கு தான். இலக்கியா அம்மாவுக்கு சீர் கொடுத்தது. அதெல்லாம் பேசிட்டீங்கல்ல?” சீர் பற்றி யாரும் எதுவும் கேட்கும் முன் மாமன் மனைவி தானாகவே தலை கொடுத்தார். 

“அம்மா பேர்ல இருந்தாலும் மகனுக்கும் தானே?” வந்தவர்கள் விளக்கம் கேட்க,

“அப்படியெல்லாம் இல்ல. இவங்க எங்க இலக்கியாவுக்கு சித்தி தான்! ராகவன் சித்தி மகன். அவனுக்கு இதுல பங்கில்ல. இதெல்லாம் பேசிக்கலையா?” என்று‌ சொல்ல இவ்வளவு நேரமாக மகிழ்ச்சியில் பூரித்திருந்த சுகந்தி முகம்‌ சட்டென சிறுத்துவிட்டது. 

இலக்கியா, அம்மா முகம் பார்க்க, சிவந்து கலங்க தயார்‌ நிலையில் இருப்பது தெரிய இவளுக்கும் மனம் உள்ளுக்குள் பதைபதைத்தது. 

அவள் அத்தைக்கு பதில் பேச வாயெடுக்க, சுகந்தி மகளின் கையை இறுகப்‌ பற்றிக் கொண்டார். வந்தவர்கள் முன் எதுவும் வேண்டாமென.‌ பல்லைக் கடித்து அமைதியாக நின்றாள். 

ஒரு தடவை அவரை சித்தி என சொல்லிவிட்டு அவள்‌ பட்டபாடு அவளுக்குதானே தெரியும். 

தன் ஆசை நிறைவேறாது எனத் தெரிந்து தனக்குள்ளே எழுந்த ஆற்றாமை. அவனை‌ மீண்டும் பார்க்க முடியாதே என்ற ஏக்கம். அவர்களே கேட்டும் மறுப்பு சொல்ல வேண்டிய அந்தஸ்த்து பேதம். அதோடு சேர்த்து‌ வீட்டை விற்று திருமணம் செய்யலாம் என இவளை மட்டும் ஒதுக்கியது போல் இவர்கள் பேசியது என மன உளைச்சலில் கோபத்தில் தான் சித்தி என்றாள். 

அதன் பிறகு சுகந்தி முகம் பார்த்து இயல்பாக பேசவே முடியவில்லை. அவளை அவர் பார்க்கும் போதெல்லாம் சித்தி மாதிரியா உன்னை வளர்த்தேன் என கேட்பது போலவே தோன்றும். பலமுறை மன்னிப்பும் கேட்டுவிட்டாள்.

ராகவன் தான் அக்காவை தேற்றினான். 

அன்று மூவருக்குள்‌ மட்டுமே சித்தி என்றதற்கே சுகந்தி முகம் வாடிவட்டது. இன்று‌ சபையில் வைத்து சொன்னதும் கண்கள் கலங்கும் நிலைக்கு வந்துவிட்டார். 

முகூர்த்தம் எப்பொழுது, திருமணம் எங்கே, மாப்பிள்ளை வீட்டார் சார்பில் பெண்ணுக்கு தாலி கொடி எத்தனை பவுன் போன்ற தெரிந்த விபரங்களை மீண்டும் ஒரு‌முறை சபை முன் தெரியப்படுத்த, நாங்களும் எங்க பொண்ணுக்கு வீடு கொடுக்கிறோம் என இலக்கியா மாமன் மனைவி தானாகவே வீட்டைப் பற்றி பேச,

“என்னக்கா, என்னமோ வீட்டுக்காக பொண்ணெடுக்கற மாதிரி பேசுறாங்க. இவங்களும் சித்தி தானாமே. நாளப்பின்ன நம்ம மகனுக்கு மச்சான்னு தம்பிக்காரன் வந்து நிப்பானா. இல்ல கடமை முடிஞ்சதுன்னு கை கழுவிறுவாங்களா? நம்ம பொறவாசலுக்கு பெறுமா இந்த வீடு? நமக்கென்ன பொண்ணா கிடைக்கல. இப்படி வந்து விழுந்துட்டீங்களே?” எல்லோர் முன்னும் கலையரசியிடம் படபடத்தது அவரது‌ சித்தப்பா மகள் தான். 

ஒரு பக்கம், தான் சொன்ன பெண்ணை பார்க்காமல் அப்படி எந்த ஒசத்தியான எடத்துல பெண் எடுக்கிறார்கள் என்று பார்ப்பதற்காகவே உடன் வந்த சித்தப்பா மகள். 

மறுபக்கம், இவளுக்கு இப்படியொரு இடத்தில் சம்பந்தமா என்ற புகைச்சலில், நாங்களும் எங்க பெண்ணிற்கு வீடு கொடுக்கிறோம் என்று பெருமையாகச் சொல்லிக்காட்டிய மாமன் மனைவி. 

ஆக மொத்தம் மெயின் கேரக்டர் எல்லாம் அமைதியை கடைபிடிக்க, சைடு கேரக்டர் எல்லாம் ஓவர் ஆக்டிங் செய்து கொண்டிருந்தது.

இதற்கு தான் இந்த சம்பந்தம் வேண்டாம் என்றேன் என்பது போல் இலக்கியா அய்யம்மாவைப் பார்க்க, சுகந்தி முகமும், ராகவன் முகமும் தொய்ந்தது. 

சீனி கேட்ட பொழுது இவள் மறுப்பு சொல்லியதால் அதைப் பற்றி அவன் மேற்கொண்டு இவர்களிடம் பேசவில்லை. ராகவனிடம் இலக்கியாவை கேட்டது கூட இவர்களுக்கு தெரியாது.

கலையரசியோ மகள் கணவனோடு சேர்ந்துவிட, மகனுக்குத் தீவிரமாக பெண் தேட ஆரம்பித்தார். 

தண்டபாணியும் பெங்களூர் கிளம்பும் முன் அய்யம்மாவிடம், “ராகவன் அக்காவுக்கு நம்ம பக்கத்துல மாப்பிள்ளை பாக்க சொன்னாங்கல்ல அம்மாச்சி” என்றான்.

“அவங்களுக்கு தோதா நம்ம பக்கம் எந்த மாப்பிள்ளைடா இருக்கு” என்று‌ யோசிக்க,

“ஏன், என்னைப் பாத்தா மாப்பிள்ளையாத் தெரியலையா?” என்றதில் அய்யம்மாவும், கலையரசியும் அதிர்ந்து தான் போனார்கள். இவனுக்குள் இப்படியொரு எண்ணமிருக்கும் என்று யோசித்துக் கூட பார்க்கவில்லை. 

இலக்கியாவிற்கு என்றதும் அவரும் அவர்கள் வசதிக்கேற்ற மாப்பிள்ளை நம்ம வழியில் யாரென்று‌ யோசித்தாரே ஒழிய, தண்டபாணியோ, பார்த்தசாரதியோ அவருக்கு நினைவிற்கு வரவில்லை.

அம்மாச்சிக்கு கோடு போட்டுதான் காட்டினான். அய்யம்மா அதில் ரோடே போட்டுவிட்டார். 

முதலில் பழனியிடம் உங்க அண்ணன் இப்படி என்று சொல்ல, “பூனை வெளியே வந்துருச்சா? எங்களுக்கு ஏற்கனவே உங்க பேரன் மேல சந்தேகம்தான். அந்த சந்தேகத்துல தான் இலக்கியாகிட்ட கேட்டதுக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ற ஐடியா இல்லைன்னு சொல்லிட்டாங்க!” என்றாள்.

இது போதாதா அய்யம்மாவிற்கு. பழனி‌ தண்டாயுதபாணிக்கு அண்ணன் விநாயகம் தூது போனார் என்றால், இந்த தண்டபாணிக்கு அய்யம்மா தூது. 

நேரிடையாக அய்யம்மாவே களம் இறங்கி விட்டார். 

சுகந்தியிடம் மறுப்பு சொல்லியவளால் அய்யம்மாவிற்கு மறுப்பு சொல்ல இயலவில்லை. இன்னும் தம்பி வங்கித் தேர்வு முடிக்கவில்லை. தனக்கும் நர்சரி ஸ்கூல் ஆரம்பிக்கும் ஆசை என்று பலவாறாக சப்பைக்கட்டு கட்டினாள்.

இறுதியாக சுகந்தி தனக்கு சித்தி என்பதையும் மறைக்காமல் சொன்னவள், உங்க அளவிற்கு அவர்களால் முடியாது என்பதையும் வெளிப்படையாகவே பேசிவிட்டாள். 

“இப்ப என்ன உன் தம்பி பேங்கு ஆபிசரான்னா கல்யாணம் பண்ணிக்கறியா. நாங்களும் பேங்கு ஆபிசர் சம்பந்தம்னு சொல்லிக்கிறோம்‌. போதுமா?” என்று கேட்க, அவளுக்கும் அதற்கு மேல் மறுக்கும் தைரியமும் இல்லை. அவனை மறக்கும் மன உறுதியும் இல்லை. 

பின்ன… பழனி‌ கோவிலில் வாங்கிய தண்டாயுதபாணி படத்தை பூஜையறையில் பார்க்கும் பொழுதெல்லாம் இந்த தண்டபாணியும் தானே மனக்கண்ணில் வந்து போகிறான். எல்லாம் தண்டாயுதபாணி மகிமை. 

அந்தஸ்த்து பார்த்து அவர்கள் மலைப்பதாக அய்யம்மா பேரனிடம் கூற, ஒர்க் ஃப்ரம் ஹோம்‌ கேட்டு சென்னைக்கே வந்துவிட்டான் தண்டபாணி. ராகவன் கூடவே இருந்து அவனை தேர்வில் தேர்ச்சி பெறச் செய்துவிட்டான். 

இதோ திருமண நிச்சயம் வரை வந்தாயிற்று. 

இவர்கள் பேச்சைக் கேட்டு இலக்கியா முகம் சுணங்க, “இப்போ என்னம்மா இந்த வீடு இலக்கியாவுக்கு. அவ்வளவுதானே?” என்று அய்யம்மா பட்டென கேட்க,

மாமன் மனைவிக்கு அச்சோ என்றானது. 

இவரது பேச்சைக் கேட்டு, எங்க பிள்ளைக இங்க வந்தா இருக்கப்போறாங்க, உங்க வீடெல்லாம் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வார்கள், ராகவனுக்குப் பெண்ணைக் கொடுத்து அது வழியாக, இலக்கியா அம்மாவிற்கு சீராகக் கொடுத்த வீட்டையும் தங்கள் வசப் படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவருக்கு. 

“மத்த பேரன் பொண்டாட்டியெல்லாம் நகையோடதான் வந்தாங்க. இந்த பேரன் பொண்டாட்டி வீட்டோட வர்றது எங்களுக்கும் சந்தோஷம் தான். அப்போதான் அவளுக்கும் மரியாதையா இருக்கும்! கலை… நல்ல நேரம் போகறதுக்குள்ள தட்டு‌ மாத்திக்கோங்க.” ஒரே போடாகப் போட மாமன் மனைவிக்குதான் முகம் கருத்துவிட்டது. எதுவும் பேச முடியவில்லை. 

கலையரசியும், தணிகைவேலும் பூ, பழங்களோடு, பட்டுச்சேலை அடங்கிய நிச்சயத்தட்டை எடுத்துக் கொடுக்க, 

மாமனும், மாமன் மனைவியும் வாங்க முன் வர,

“கொஞ்சம் பொறுங்கப்பா!” என்றான் தண்டபாணி. மகனை கேள்வியாக நோக்க,

“நிச்சய தட்டை இலக்கியா அம்மாகிட்டயே கொடுங்க!” என்று சொல்ல,

“அவங்க எப்படி தம்பி” என்றார் மாமன் மனைவி. 

“அவங்க தானே அம்மா. அப்பா ஸ்தானத்துக்கு தம்பி இருக்கான். ராகவா, நீயும் உங்க அம்மாவுமே சேந்து தட்டை வாங்குங்க!” என்று சொல்ல மாமன் பேச்சிற்கு மறு பேச்சு ஏது மச்சானிடம். வேகமாக வந்து அம்மாவுடன் நின்று கொண்டான். 

இவ்வளவு நேரமாக எல்லார் முன்பும் அத்தை பேச்சிற்கு மறுப்பு பேச முடியாமல் தவித்து நின்ற இலக்கியா, கண்களில் நன்றி பெருமிதத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள். 

“நாளைக்கு மேடையிலயும் இவங்கள வச்சுதான் கன்னிகாதானம் பண்ணுவீங்களா?” முகத்தை சுழித்து கேட்க,

“பண்ணினா என்ன?” என்றான். 

“அதெப்படி பண்ண முடியும். ஏன் நாங்க இல்ல. தம்பதியா தாரை வார்த்து கொடுக்க?”

“உள்ளூர்ல தானே இருக்கீங்க. அன்னைக்கி ராகவன அரெஸ்ட் பண்ணப்போ ஒருத்தரும் அவன் கூட சென்னைக்கி வரலையில்ல. அவங்க அம்மாவுக்கும் உடம்பு சரியில்லைன்னு‌ தெரியும். ஆம்பளையில்லாத வீடுதானே. அன்னைக்கி எங்க போனீங்க? இப்ப கூட நீங்களே நாங்க வந்த பின்னாடி தானே வந்தீங்க.” 

“நல்லதோ கெட்டதோ எதுனாலும் இலக்கியாவுக்கு பாக்கப்‌ போறது அவங்க தான். அதனால அவங்களே தாரை வார்த்து கொடுப்பாங்க. அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம். இத்தனை வருஷம் வளத்தவங்க கையால பெண்ணை தாரைவார்த்துக் கொடுக்கறதுல என்ன தப்பு?” என்றான் வெடுக்கென. 

“அதெல்லாம் என் பேரன் சொன்னா சரியாத்தான் இருக்கும். பழனி, உங்க அண்ணிய உள்ள கூட்டிப்போயி சேலை மாத்தி கூட்டிவா. பூ வைக்க நேரமாச்சு!” அய்யம்மா உத்தரவிட, அதோடு மாமன் குடும்பம் எதிலும் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. முகத்தில் அடித்தார் போல் இருந்தது அவன் சொன்னது. 

அவன் பேசப் பேச இலக்கியா மனம் குளிர்ந்து போயிற்று. கண்கள் பனிக்க அவனை ஒரு‌முறை நிதானமாக பார்த்துச் சென்றாள். அந்த ஈரத்தில் நன்றி என்ற பதம் கசிந்து நின்றது.

இலக்கியாவின் மினுக்கும் தேன் நிறத்திற்கு எடுப்பாக மயில் பச்சை வண்ண நிச்சய புடவையைக் உடுத்தி, பழனி கைபிடித்து அழைத்து வர, வெளியே வந்தவளை‌ தழுவி நின்றது தண்டபாணி பார்வை. முன்பு போல் தலையை தாழ்த்திக் கொள்ளவில்லை. அவளும் கண்ணோடு கண் நோக்கி இக்கணத்தை மனதினுள் இரசித்து நின்றாள்.  

பழனி‌யிடம் பூச்சரத்தை கலையரசி எடுத்துக் கொடுக்க, இலக்கியாவிற்கு தலை நிறைய வைத்துவிட்டாள். சுற்றி நின்ற பாசமலர்கள் அதனை கை பேசிகளில் படம்‌ பிடித்தனர். பூ வைத்து முடிய இருவருமே ஜோடியாக பெரியவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டனர். 

நிச்சயம் முடிந்ததால் அடுத்து விருந்து ஆரம்பமானது.  

ஆர்டர் கொடுத்திருந்த சாப்பாடும் வந்து இறங்கியது. 

ராகவன் வீட்டில் ஒற்றை ஆம்பளை. சீனியும் அவனோடு சேர்ந்து கொண்டு விருந்து பரிமாறுவதை கவனித்துக் கொண்டான். 

அனைவரும் கிளம்பினர். கொண்டு வந்த பை, தட்டுகளை எல்லாம் டிக்கியில் வைத்துவிட்டு மூடியவன் பார்வை ஒரு‌முறை‌ சன்னலில் படிய, அவனை ஏமாற்றவில்லை அவளும். அவனையே தான் பார்த்திருந்தாள். இம்முறை முகத்தை உள்ளே இழுத்துக் கொள்ளவில்லை. 

அவள் கை பேசியை உயர்த்திப் பிடிப்பதைப் பார்த்தவன், சட்டையில் மாட்டியிருந்த கண்ணாடியை எடுத்து கண்களுக்கு கொடுத்தான். கலைந்த கேசத்தை  கோதிவிட்டு, இடக்கையை இடுப்பில் ஊன்றி‌ தோரணையாக அவளை நேராகப் பார்த்து நிற்க, அவனது முழு தோற்றத்தையும் கைபேசி கேமராவில் கைது செய்தாள். 

அவனும் கட்டை விரலை உயர்த்தி ஓகேவா என கேட்க, இதழில் முறுவல் பூக்க, சிறு தலையசைப்பு அவளிடம். 

காரில் ஏறி மறையும் வரை பார்த்திருந்தாள். 

*****

“டேய் ராகவா!”

“சொல்லுங்க பாஸ்!”

“மச்சான் வண்டி யூ டர்ன் போடுதுடா. எனக்கென்னமோ மறுபடியும் இலக்கியாவப் பாக்க வர்றாப்லைன்னு நினைக்கிறேன்!”

“நான் பாத்துக்கறேன் பாஸ்!” என்றவன் வாசலிலேயே அவனுக்காக காத்திருந்தான். 

பெரியவர்கள் ஏறிய வேன் முன்னால் செல்ல, தண்டபாணியும் தங்கைகளும் ஏறிய கார் நடுவிலும், சீனி கார் பின்னாலும் சென்றது. சிறிது தூரம் சென்றதும் ஜானகி, பழனிக்கு ஃபோன் செய்து ஏதோ விபரம் கேட்க, அவள் அமிர்தாவிடம் கேட்டாள். 

அமிர்தா சொன்ன பதிலில், உடனே தண்டபாணி கார் மீண்டும் வந்த வழியே திரும்பியது. அதைப் பார்த்தவுடன் ராகவனுக்கு அழைத்துவிட்டான். 

எதிர்‌பார்த்த மாதிரியே தண்டபாணி கார் போன சிறிது நேரத்திற்கெல்லாம் திரும்பி வாசல் வந்தது. 

“வாங்க மாமா! இதுக்கு தானே வந்தீங்க?” கையிலிருந்த அலைபேசியை‌ அவன் கேட்கும் முன் அவனிடம் நீட்டினான்.‌

தண்டபாணி அவனை வியப்பாய் பார்க்க, ‘இவரு ஃபோன மறந்த மாதிரி வச்சுட்டு போவாராம். மறுபடியும் எடுக்குற சாக்குல பொண்ண பாக்க வருவாராம். யார்கிட்ட…நாங்களும் பொண்ண பொத்தி பொத்தி தான் வளத்திருக்கோம்!’ காலரைத் தூக்கிவிட்டு தெனாவெட்டாய்ப் பார்க்க, வாங்கிக் கொண்டு திரும்பியவன் கால் இடறியதில் இலேசாகத் தடுமாறினான்.

பதறிய சுகந்தி, “தம்பி உள்ள வாங்க. உக்காந்துட்டு தண்ணி குடிச்சுட்டு போங்க. ஏற்கனவே ஃபோன் வேற மறந்துட்டு போயிருக்கீங்க!” என்றவாறே…

“இலக்கியா தண்ணி கொண்டாம்மா!” என்று அவசரமாக குரல் கொடுக்க, இப்பொழுது தண்டபாணி பார்வை கித்தாய்ப்பாய் மச்சானைப் பார்த்து புருவம் உயர்த்தியது. 

உண்மையில் அவன் ஃபோனை மறந்து தான் சென்றிருந்தான். அவனிடம்‌ கார்ட்டூன் பார்க்க ஃபோனை வாங்கிய அமிர்தா சோஃபாவில் போட்டிருந்தாள். அதை எடுக்கத்தான்‌ மீண்டும் அவன் வந்ததே. ராகவன் பேச்சு தான் அவனை‌ தூண்டிவிட்டது. இலேசாக கால் இடறியது போல் தடுமாற அவன் நினைத்தது போலவே சுகந்தி உள்ளே அழைத்துவிட்டார். 

“தள்ளுடா… தம்பி உள்ள வரட்டும்” வழி‌ மறித்து நின்றவனை சுகந்தி அதட்ட, வழி விட்டு விலகியவன்,

“பா….ஸ்!” என்றான் சீனியிடம் ஃபோனில் அழாத குறையாக. 

“என்னாச்சுடா” என்றவனிடம் நடந்ததைக் கூற, 

“விர்றா… விர்றா… கல்யாணம் வரைக்கும் நமக்கு டைமிருக்க. பாத்துக்கலாம்” என்று வாய்விட்டு சிரித்தவனை பழனி‌ முறைத்துப் பார்க்க, பேசிக்கொண்டே சட்டென உதடு குவித்து, கண்சிமிட்டினான். கார் ப்ளூ டூத்தில் பேசியதால் பழனிக்கும் இவர்கள் பேசியது கேட்டது. 

சற்று நேரம் அமர்ந்தவன், அவளிடம் தண்ணீர் வாங்கிப் பருகிவிட்டு, கார் கிளம்பிய அடுத்த சில நிமிடங்களில் இலக்கியாவின் கை பேசி அழைத்தது. 

தண்டபாணி தான் அழைத்திருந்தான். 

“அவங்க தாம்மா” என்றாள். 

“அதுக்குள்ள உன்னை யாரு நம்பர்‌ கொடுக்க சொன்னது?” என்றான் தம்பிக்காரன் அதட்டலாய். பொறுப்பை நிரூபிக்கிறானாக்கும்.

“நான் கொடுக்கல பக்கி. நீதான் அன்னைக்கி நாங்க கோவில்ல மிஸ் ஆனப்ப என் நம்பரக் கொடுத்திருக்க!” என்று தம்பியைக் கடிந்துவிட்டு பேசியை காதிற்கு கொடுத்து,

 “சொல்லுங்க!” என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.

“போச்சா! ம்மா, இனி சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கான்ற கதைதான்!” தலையில் கை வைக்காத குறையாக அலுத்துக் கொள்ள சுகந்தி முகத்தில் விரிந்த சிரிப்பு. 

6 thoughts on “மாமா! மாப்ளே! 8”

  1. Semma seeni ,raghava combo…. excellent writing…very interesting…janaki and ragav mapillai parkum tharnungal, kalataa ellam super.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top