மாமா! மாப்ளே! 7

7

“டேய் ராகவா நெசமாவாடா?” சட்டென யானை பார்த்த சிறுபிள்ளை போல் அத்தனை மலர்ச்சி சுகந்தியிடம்.

“எப்படிடா… விசேஷத்துக்கு வந்த அவங்க வீட்டுப் பொண்ணுகளை எல்லாம் பாத்தேயில்ல” என்றவர் குரல் மறுகனமே சோர்ந்து உள்ளிறங்கியது. 

அவனும் தான் பார்த்தானே. அவர்கள் பட்டும், நகையுமென ஜொலித்ததை.‌

“ஆமாம்மா.. அதுல கூட ஒரு பொண்ணு என்னை வெள்ளைப் பனியாரம்னு‌ சொல்லுச்சும்மா!” என்று சிறுபிள்ளை போல் சினுங்க,

“இப்ப அதுவாடா முக்கியம்? உங்கிட்ட யார்டா‌ சொன்னது?”

“சீனி ப்ரோ பேசறேன்னு சொல்லியிருக்கார்மா. அக்கா சம்மதிச்சா மட்டும் போதும்!” நம்பிக்கையாய் வந்து விழுந்தன வார்த்தைகள்.

“நீ சொல்றதையெல்லாம் பாத்தா எனக்கும் ஆசையாத்தான்டா இருக்கு. நல்ல குடும்பமாத்தான் தெரியுது. ஆனா அவங்க வசதிக்கும் நம்ம வசதிக்கும் ஏணி வச்சாலும் எட்டாதேடா!” ஏக்கமாய் ஒலித்தது குரல். 

“அக்காவுக்கு புடிச்சுருந்தா போதும்மா. தலைய அடமானம் வச்சாவது நடத்திறலாம்மா!” 

ராகவனுக்கு இந்த சம்பந்தம் அக்காவுக்கு அமைந்தால் சிறப்பாக இருக்குமே என்ற எண்ணம். எப்பாடுபட்டாவது நடத்திவிட ஆசைப்பட்டான். அதற்கு சீனி கொடுத்த வாக்குறுதியும் முக்கிய காரணம். அவருக்கு ஏதோ அனுமானம் தோன்றியிருக்கிறது. இல்லை என்றால் அவ்வளவு உறுதியாகச் சொல்வானேன் என்று உறுதியாக நம்பியவன் அதே நம்பிக்கையைத் தான்‌ அம்மாவிற்கும் கொடுத்தான்.

“எது… உன்னோட தலையவாடா. ரெண்டு வருஷமா பேங்க் எக்ஸாமே முடிக்காத தலைய யாருடா வாங்குவா?”

“இந்த வருஷம் எப்படியும் முடிச்சுருவேம்மா!” சிறுபிள்ளை போல் முகம் சுணங்க,

“இன்னும் ஸ்கூல்‌ ரிப்போர்ட் கார்ட் வர்றப்ப கொடுக்கற ரியாகஷனே கொடுக்கறடா. டயலாக் கூட மாத்தமாட்டேங்குற!” கேலியாய் சுகந்தி மகனை குட்ட,

“அம்மா ஒரு ஐடியா!” என்றவன் முகம் சட்டெனப் பிரகாசமானது.

“என்னடா.‌ இப்போ எதை அடமானம் வைக்க ஐடியா கொடுக்கப்போற? அடமானம் வைக்கற அளவுக்கு நம்மகிட்ட எதுவும் இல்லடா ராகவா.”

“அடமானம் வைக்க இல்ல. நம்ம வீடு எவ்வளவுக்கும்மா போகும்?” என்றான்‌ யோசனையாய். 

“அந்த பட்டிக்காட்டுல எவ்வளவுக்குடா போகும்! அது என்ன சென்னை போயஸ் கார்டன்லயா இருக்கு. கோடிக்கணக்குல போக.”

“உங்களுக்கும் நக்கல் தாம்மா. போயஸ் கார்டன்ல வீடிருந்தா நாம ஏன் இப்படி புலம்ப போறோம். போற விலைக்கு கொடுத்துறலாம்மா. அது அக்காவுக்குனு பேசினதுதானே? இந்த சம்பந்தம் மட்டும் அக்காவுக்கு அமைஞ்சுட்டா அது வாழ்க்கை நல்லா இருக்கும்ல” என்ற மகனை வாஞ்சையாக வருடியது சுகந்தியின் கண்கள்.

“அப்பறம் நீ என்னடா பண்ணுவ?” 

“நானென்னம்மா ஆம்பளப்பையன் தானே? எக்ஸாம் பாஸ் பண்ணி எங்க வேலை கிடைக்குதோ அங்க போய்க்கலாம்மா? ஒரு வேளை‌ அக்காவுக்கும் அவரப் பிடிச்சிருந்து வசதி இல்லைங்கறதுக்காக அது மனசுவிட்டுப் போகக் கூடாதுல்லம்மா. ஒரு வேளை பெத்தவங்க இருந்திருந்தா நம்ம ஆசை நிறைவேறியிருக்குமோன்னு நெனச்சுறக் கூடாதுல்ல? அப்பறம் தம்பின்னு ஒருத்தன் இருந்து என்ன பிரயோஜனம் சொல்லுங்க”

“டேய்… அப்ப நான் யாருடா? என்ன இருந்தாலும் நீயும் உங்க அக்காவும் ஒரே ரெத்தம். என்னை ஒதுக்கி வைக்கிறீங்க.” சுகந்தி பேச்சில் செல்லக் கோபம் துளிர்க்க,

“அய்யோ இல்லம்மா. சாரிம்மா… அந்த வீட்டை விக்க உங்களுக்கு சம்மதம்மா?” அத்தனை ஆர்வமாகக் கேட்ட மகனிடம்,

“என்னடா என்னமோ நாளைக்கே எல்லாம் முடிவாகிட்ட மாதிரி பேசுற?”

“சீனி ப்ரோ பேசினா முடிவான‌ மாதிரி தாம்மா!” 

“எதுனாலும் உங்க அக்காகிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்டா!”

“எனக்கென்னமோ அக்காவுக்கும் புடிக்கும்னு தாம்மா தோணுது” என்றவன் இப்பொழுதே கல்யாணம் முடிவாகிவிட்ட மாதிரி கற்பனைக் கனவில்‌ மிதக்க ஆரம்பிக்க, கனவில் மிதக்க வேண்டியவளோ கடைக் கண்ணில்‌ நீர்வழிய படுத்திருந்தாள். 

இரயிலில் இவர்கள் இருவரும் கீழ் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, மேல் இருக்கையில் படுத்திருந்தவள் இவர்கள் பேசியதை முழுவதும் கேட்டாள். 

இவள் தூங்கிவிட்டதாக நினைத்துக் கொண்டு இருவரும் பேசிக் கொண்டு வந்தனர். 

கூடவே கலையரசி பேசியதும் செவியில் வந்து மோதியது. இரயில் சத்தத்திற்கு இணையாக அவளது இதயமும் துடித்தது. 

இவர்கள் பேசுவது போல இவர்கள் வீட்டில் பெண்ணெடுத்தால் கலையரசி சொன்னது உண்மையாகிவிடுமே. அவனுக்கு திருமணம் நின்றதாலும், பழனி தடுமாறியதாலும், இத்தனை வருடங்களாக பெண் அமையாததாலும் வேறு வழியில்லாமல் பெண் கிடைத்தால் போதுமென சம்மதித்தது போல் அல்லவா ஆகிவிடும்.

இதைத்தானே கலையரசியும் கூறினார். 

அவருக்கு வசதி வாய்ப்பெல்லாம் ஒரு பொருட்டல்ல. ஏற்கனவே சூடுபட்டது. நல்ல குடும்பம் அமைந்தால் போதும் என்பதுதான் அவரது எண்ணமும்.‌ ஆனால் பெண்ணிருப்பதாக தகவல் சொன்ன சித்தாப்பா மகள், தண்டபாணிக்கு வயசாகுது ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்து சீக்கிரம் முடிக்கப் பாரு. நகை நட்டை எதிர் பார்க்காதே என்றது அவருக்கு சுருக்கென பட்டது. ஏற்கனவே திருமணம் நிறைத்தால்தான் இன்னும் இவனுக்கு சம்பந்தம் கூடி வரவில்லை என்பது போல் இருந்தது அவரது பேச்சு.

 உள்குத்து வைத்துப் பேசியதற்குதான் கலையரசி பதிலடி கொடுத்தது. அதே கோபத்தில் தான்‌ அய்யம்மாவிடமும் அப்படி‌ பேசினார். அது இலக்கியாவிற்குள்‌‌ தாழ்வு மனப்பான்மையை தோற்றுவித்தது. அவளது ஆசையும்‌ துளிர்த்தவுடன்‌ கருகிவிட்டது. 

வீட்டில் போய் பேசும் அளவிற்கு கூட ராகவனுக்குப் பொறுமையில்லை. சீனி, தண்டபாணிக்கு இலக்கியாவைப் பேசலாம் என்று சொல்லியதிலிருந்தே பரபரவென அதுதான் இவன் மண்டைக்குள் ஓடுகிறது. அம்மாவிடம் இதைப் பற்றி உடனே பேசவேண்டும் என்ற ஆர்வம். அவர்கள் வீட்டில் இருக்கும் வரை வாய்க்கவில்லை. அதுவும் அங்கு வைத்து பேசவும் முடியாது. முதலில் அம்மாவிடம் பேசி ஒரு‌ முடிவிற்கு வந்த பிறகுதான் அக்காவிடம் பேச வேண்டும் என நினைத்தவன், இரயிலில் ஏறி திருச்சியைத் தாண்டியதுமே அம்மாவிடம் விபரத்தை கூறினான். 

சுகந்திக்கும் ராகவன் சொன்ன தகவல் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் வசதி தான் சற்று யோசிக்க வைத்தது. 

சம்பந்தம் முடிவானால் வீட்டை விற்றுக்கூட கல்யாணத்தை முடிக்கலாம் தான். அது இலக்கியாவிற்கு சேர வேண்டியதுதானே என்ற எண்ணமும் வலுப்பெற்றது. 

அதிகாலை செங்கல்பட்டில் இரயில் நின்றது. மூவரும் இறங்கினர். இம்முறை மறக்காமல் அம்மாவையும் அக்காவையும் முன்னால் இறங்கவிட்டே பின்னால் இறங்கினான். 

அங்கிருந்து பஸ் பிடித்து ஊருக்கு வரவேண்டும். இலக்கியா முகம் சோர்ந்திருந்ததைப் பார்த்த சுகந்தி பயணக் களைப்போ என எண்ணிக் கொண்டார். 

வீடு வந்ததும் தனது அறைக்குள் சென்று விட்டாள்.‌ 

ராகவன் வந்ததும் வராததுமாக அம்மாவிற்கு கண்ணைக் காட்டினான். 

“அவசரப் படாதடா! இப்பதானே வந்திருக்கோம்!”

“இல்லம்மா… சீனி ப்ரோவும் இன்னைக்கி சென்னைக்கி கெளம்பிருவாங்க. நாம முடிவச் சொன்னா அவங்ககிட்ட பேச தோதுப்படும்ல!” 

“சரிடா… அவ முகமெல்லாம் கழுவிட்டு வெளியே வரட்டும். நீ போய் பால் வாங்கிட்டு வா. மெதல்ல காஃபி போடுவோம்!”

“ஏம்மா… எவ்வளவு பெரிய விஷயம் சொல்லியிருக்கேன். இப்போ காஃபியா முக்கியம்?” அவனது ஆர்வம்‌ எல்லை கடந்து கொண்டிருந்தது. 

“அட என்னடா இவன். சுடுது மடியப் புடின்னு‌ நிக்கிற. அதுக்குன்னு சோறு தண்ணியில்லாம இருக்கச் சொல்லுவ போல!” மகனின் அலும்பு தாங்காமல் அலுத்துக் கொண்டார். 

“இத்தனை நாள் விரதம்னு அதைத்தானே செஞ்சீங்க. இன்னைக்கி ஒரு நாளும் அதையே செய்ங்க!”

“டேய்… ராகவா… ட்ரெயின்ல தூக்கமே இல்லடா. தலை வலிக்குது. பால் வாங்கிட்டு வாடா. உங்க அக்கா கல்யாணம் பண்றதுக்குள்ள என்னை ஒரு வழி ஆக்கிறுவ போலயே!” அழாத குறையாக மகனிடம் வேண்டுதல் வைக்க அலுத்துக் கொண்டே பால் வாங்க சென்றான். 

அறைக்குள் வந்தவள் கண்கள் சுவற்றில் மாட்டியிருந்த பெற்றவர்கள்  போட்டோ மீது படிந்தது. அவளையும் மீறி‌ கண்கள் கண்ணீரை உகுத்தது. ஒரு நாள் கூட பெற்றவர்கள் படத்தைப் பார்த்து கண் கலங்கியதில்லை. ஒரு‌கணம் கூட அவர்கள் இல்லை என்ற குறை தெரியவிட்டதில்லை சுகந்தியும். 

‘நீங்க இருந்தாக்கூட எனக்காக இவ்வளவு யோசிப்பீங்களான்னு தெரிலம்மா. தம்பியப் பாத்தீங்களாப்பா. வீட்டை வித்து இந்த அக்காவுக்கு கலியாணம் பண்ணப் போறானாம். ரொம்ப பெரிய மனுஷனாயிட்டான்ப்பா. அந்தளவுக்கு அவங்களப் புடுச்சுப் போச்சு போல. யாருக்குதான் புடிக்காது’ இதழ்கள் விரக்தி புன்னகையில் விரிந்திருக்க தனக்குள் பேசிக் கொண்டவள் மனக்கண்‌முன் வந்து சென்றான் முன்தினம் இரவு இவர்களை இரயிலேற்றிவிட வந்த தண்டபாணி. அவன் நினைப்பு வர இதழோரம் சிறு புன்னகை துளிர்விட்டது. 

கலையரசி கூட வேறு யாரையாவது வழியனுப்ப அனுப்பி வைக்க சொன்னார். தண்டபாணி அந்தளவிற்கு கலைத்து தெரிந்தான். காலையிலிருந்து கோவில், மண்டபம், வீடு என ஓய்வு ஒழிச்சல் இல்லாத அலைச்சல். அவன் முகத்தில் களைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அவர்கள் வீட்டில் ஆட்களுக்கா பஞ்சம். பெரியப்பா சித்தப்பா பிள்ளைகள் என அத்தனை பேர் இருந்தனர். பார்த்தசாரதி கூட இருந்தான். அவனும் ராகவனுக்கு நல்ல பழக்கம்.‌ 

அப்படியிருந்தும், “அவங்க மகனுக்கு சரியா விபரம் பத்தாதும்மா. நானே போய்ட்டு வர்றேன்” என்று இரயில் நிலையம் வரை வந்து வண்டி வரும் வரை காத்திருந்து இரயில் ஏற்றிவிட்டுதான் சென்றான். 

சுகந்தி கூட, “நீங்க போங்க தம்பி. நாங்க போய்க்கறோம்” என்று‌ சொல்ல பரவாயில்லை என இரயில் வரும் வரை உடனிருந்தான்.

இவளுக்கோ எங்கே அம்மா சொன்னதும் போய்விடுவானோ என மனம் கிடந்து அடித்துக் கொண்டது. சிறிது நேரமாவது அவனுடன் இருக்கலாமே என்ற எண்ணம் தான். இனி‌ மீண்டும் ஒரு‌ முறை அவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற தவிப்பு. 

*****

“அக்கா நீ கீழ படு. நான் மேலே ஏறிக்கிறேன். இதை தண்டபாணி சார் பாத்தார்னு வை. ஏன்டா பொம்பளப் பிள்ளைய‌ மேலே ஏறிப் படுக்கவிட்டு நீ கீழ படுத்தியான்னு கேப்பாருக்கா!” பயந்த தோரணையில் கேலியாகப் பேசி சிரிக்க, இவளுக்கு தான் தொண்டை அடைத்துக் கொண்டு வந்தது. 

இப்படி சின்ன‌சின்ன‌ விஷயங்களில் கூட கவனித்து அக்கறை காட்டியதால் தான் தன் மனம் அவன்‌பால் சென்றதோ. சற்று முன் கூட அதை நிரூபித்தானே. இரயில்வர நேமிருக்க, இவர்களை உட்கார வைத்துவிட்டு வெளியே சென்றவன் அடுத்த பத்து நிமிடத்தில் ஒரு கவரோடு வந்தான். 

ராகவனிடம் கொடுத்து, “இதுல வாமிட்டிங் டேப்ளட்டும், தலைவலி மாத்திரையும் இருக்கு ராகவா. உங்க அக்காகிட்ட கொடுத்து போடச் சொல்லு. வாமிட்டிங் வராது” என தண்ணீர் பாட்டிலோடு கொடுத்தான். 

முன் தினம் வந்து‌ இறங்கியதும் அவள் பட்ட அவஸ்த்தையைப் பார்த்தானே. அதை நினைவில் வைத்து மறக்காமல் வாங்கி வந்து கொடுப்பவனை‌ யாருக்கு தான் பிடிக்காது. எண்ணங்கள் நெஞ்சை அழுத்தியது. 

அதற்கு‌ பயந்தே இப்பொழுது சாப்பாடு கூட வேண்டாமென வெறும்‌ வயிறாகவே கிளம்பினால். அதனால் உணவை வெறுத்தாளா, அல்லது மனதை அழுத்திய பாரம் உணவை வெறுக்க வைத்ததா. யாமறியோம்‌ பராபரமே. 

அவனுக்கும் இவள் மீது நாட்டம் என்பதை பார்வையும், செயலும் உணர்த்துகிறது. ஆனாலும் அந்தப் பார்வையில் கண்ணியம் தவறவில்லை. 

இரயில் வந்ததும் ஏறும் முன் சுகந்தியும், ராகவனும் அவனிடம் சொல்லிக்கொண்டு விடை பெற, இவளையும் அவனது கண்கள் ஆர்வமாகப் எதிர் பார்த்தது. ஒரு கணம் நின்று அவனை ஆழ்ந்து பார்த்து, கண்களில் நிரப்பிக் கொண்டவள் எதுவும் சொல்லாமலே இரயிலில் ஏறினாள். அவன் பார்வை முதுகைத் துளைத்தது. 

இருக்கையில் அமர்ந்ததும் அவனும் இவர்களிடம்‌ சொல்லிக் கொண்டு கிளம்பினான்.‌ அதுவரை அவனை ஏறெடுத்தும் பார்க்காதவள் இரயில் கிளம்பியதும் அவன் முதுகு மறையும் வரை எட்டிப்பார்த்து வந்தாள்.

எத்தனை தான் கட்டுப் படுத்தியும் விழி‌ நீர் கரை கடப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. 

எத்தனைதான் கண்களை சிமிட்டி மறைத்தும் சுகந்தி கண் சிவப்பதைக்  கவனித்துவிட்டு காரணம் கேட்க, தலைவலி என மலுப்பிவிட்டு, தூக்கம் வருவதாக மனதில் ஏறிய‌ பாரத்தோடு மேலே ஏறிப் படுத்துவிட்டாள். 

அப்பொழுதுதான் இவள் தூங்கிவிட்டதாக நினைத்து தம்பியும், அம்மாவும் பேசிக் கொண்டு வந்தது காதில் விழுந்தது. 

*****

“இலக்கியா… காஃபி போட்டாச்சு!” சுகந்தி வெளியே இருந்து குரல் கொடுக்க, முகம் கழுவியவள் வெளியே வந்தாள். 

அவள் கண்கள் சிவந்து தடித்திருக்க, “தலை ரொம்ப வலிக்குதா இலக்கியா. காஃபி குடிச்சுட்டு மாத்திரை‌ போடு. அந்த தம்பி வாங்கிக் கொடுத்த மாத்திரை கூட இருக்குல்ல! அந்த தம்பி கூட நல்ல குணமாத்தான் தெரியுது. குடும்பமும் நல்ல குடும்பம். முன்னபின்ன பழக்கமில்லாதவங்களையே எப்படி கவனிச்சுக்கிட்டாங்க. அந்த தம்பியும் ரயில்வே ஸ்டேஷன் வரை வந்து வழியனுப்பி வச்சாப்டி.” சுகந்தி எதற்கு இப்படி சுற்றி வளைக்கிறார்‌ என்பது தெளிவாகப் புரிந்தது.‌ 

மீண்டும் மீண்டும் எண்ணங்கள் அவனைச் சுற்றியே பின்னப்பட மூச்சு முட்டியது. 

ராகவன் இன்னும் அம்மாவிற்கு சாடை காண்பிக்க, பொறுடா‌ என கண்களை மூடி அமைதிப் படுத்தினார்.‌

சேஃபாவில் அமர்ந்தவளிடம் காஃபியை‌ நீட்டியவர், “இலக்கியா, தண்டபாணி தம்பியப் பத்தி உன்னோட அபிப்ராயம் என்னம்மா?”

“அம்மா அவருக்கு தம்பியெல்லாம் இல்லம்மா?” அவசரமாக ராகவன் இடையில் வர,

“அட நீ வேற… ஒரு‌ மொறைக்கு சொன்னேன்டா!”

“இப்ப எதுக்கும்மா அவரைப் பத்தி கேக்குறீங்க. நல்ல குடும்பம். நல்ல வசதி.” மேம்போக்காக பதில் சொன்னாள்.

“அதான் இலக்கியா… உனக்கு விருப்பம்னா‌ சொல்லு. மேற்கொண்டு பேசலாம்னு சீனி தம்பி சொன்னாப்லயாம்.” என்று அவள் முகத்தையே கூர்ந்து பார்க்க,

“இப்போதைக்கி கல்யாணம் பண்ற ஐடியா இல்லம்மா” என்றாள். ஒரு கணம் கூட அதைப்பற்றி யோசிக்கவில்லை. ஏற்கனவே யோசித்து வைத்திருந்தது போல் உடனே பதில் வந்தது. 

முதல் தடவையாக பெண் பார்க்க ஏற்பாடு நடந்த பொழுது கூட எல்லாம் உங்க இஷ்ட்டம் என்றவள் இப்பொழுது சற்றும் தாமதிக்கவில்லை. பட்டென தன் முடிவை கூறினாள்.

ராகவனுக்கு தான் முகம் சத்திழந்து போயிற்று. சுகந்திக்கும் குரல் சுரத்தை இழந்தது. நல்ல சம்பந்தம். இப்படி பட்டென மறுத்துவிட்டாளே என இருந்தது. 

“ஏன் இலக்கியா… ஏற்கனவே பாக்க ஆரம்பிச்சாச்சுல்ல. இது நல்ல சம்பந்தமா தெரியுது. ஏன் தட்டிக் கழிக்கணும்?”

“இல்லம்மா… எனக்கு மான்டசரி ஸ்கூல் ஆரம்பிக்கணும்னு ஆசை. அதுக்கு முதல்ல ஏற்பாடு பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு முதல்ல ட்ரெயினிங் போகணும். இப்ப பாக்குற ஸ்கூல்லயே அதுக்கு க்ளாஸ் எடுக்குறாங்க”

“என்னது ஸ்கூலா… அக்கா அதுக்கு எவ்வளவு முதலீடு வைக்கணும் தெரியுமா? முதல்ல இடம் வேண்டாமா? அதுவும் இந்த ஊர்ல மான்டசரி ஸ்கூல் எடுபடுமா?” 

“ஏன் இந்த ஊர்லதான் வைக்கணுமா என்ன? சென்னையில கூட ஆரம்பிக்கலாம். இந்த வீடு எனக்குதானே? வித்து ஸ்கூல் ஆரம்பிப்பேன். இதுல உங்களுக்கு ஏதும் ஆட்சேபனையா சித்தி!” 

சுகந்தியை கூர்ந்து பார்த்துக் கேட்க, இருவரும் விக்கித்துப் போயினர். சுகந்தியின் கண்கள் சட்டென கலங்கி சிவந்தது. 

“அக்கா!” என்றவன் குரலில் அதிர்ச்சியும்‌, கண்டனமும்‌ ஒரு‌ சேர தெரிந்தது. அவனுக்கு விபரம் தெரிந்து இலக்கியா சித்தி என அழைத்ததில்லை. அதற்கு முன்பும் அழைத்திருக்க வாய்ப்பில்லை. இவர்களே சொன்னால் தவிர இலக்கியாவிற்கு சுகந்தி சித்தி என்பதும், அவளது அப்பாவிற்கு இரண்டாம் தாரம் என்பதும் யாருக்கும் தெரியாது. 

“என்னடா அக்கா. நீ அவ்வளவு பெரிய மனஷனாயிட்டியா. வீட்டைவித்து எனக்கு கல்யாணம் பண்ற அளவுக்கு. வீட்டை வித்திட்டு நீ‌யென்ன நடுத்தெருவுல நிப்பியாடா?” ஆங்காரமாகக் கேட்க, தாங்கள் பேசியதை கேட்டிருக்கிறாள் எனப் புரிந்தது. சுகந்தி மகனை முறைத்துப் பார்த்திலேயே மகனை அவசரக் குடுக்கையென உள்ளுக்குள்ளேயே திட்டினார்.  

“அக்கா வீடு உனக்குதான்னு…” என்று ஆரம்பித்தவன் இலக்கிய முறைத்ததில் அப்படியே நிறுத்தினான்.

“எனக்குதான்னு என்னைக்கோ பேசி முடிச்சுட்டு போனாங்கன்னா… உனக்கு இந்த வீட்ல பங்கில்லையா?”

“அது இல்லக்கா… வீடு உங்க அம்மா பேர்லதானே இருக்கு!” என்றவன் குரல் உள்ளிழுக்க,

“அப்போ இவங்க யாருடா? இப்ப நீங்க ரெண்டு பேரும் இரத்த உறவு. நான் யாரோ தானே உங்களுக்கு?” 

‘ஒன்னுவிடாம கேட்டிருக்கடா’ என்றது சுகந்தியின் பார்வை.

“என்னக்கா இப்படியெல்லாம் பேசுற. நம்ம ரெண்டு பேர் உடம்புலயும் ஒரே ரெத்தம் தானக்கா!”

“அது தெரிஞ்சுருந்தா வீட்டைவித்து எனக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணிருக்க மாட்டீங்க.”

“அய்யோ அக்கா‌ திரும்பத் திரும்ப அதையே சொல்லாத. நல்ல இடம். அது விட்டுப் போகக் கூடாதுன்னு தான்.”

“ஏன் நல்ல வசதியான இடம்கறதையும் சேத்து சொல்லேன்.”

“ஆமா… இப்படி ஒரு சம்பந்தம் நமக்கு கனவுலயும் கிடைக்குமா?”

“நான் கனவுல வாழ விரும்பல ராகவா. நிதர்சனத்துல வாழ விரும்பறேன். இதுக்கு முன்னாடியெல்லாம் எப்படிப்பட்ட மாப்பிள்ளை பாத்தீங்க?”

“நமக்கேத்த மாதிரி பாத்தோம்!” சுகந்திக்கு சத்தமே வரவில்லை அவள் சித்தி என அழைத்ததில் இருந்து. 

“இப்ப மட்டும் என்னவாம்? நம்ம வசதிக்குத் தகுந்த மாதிரியே பாக்கலாம். அதுவும் இப்ப இல்ல. நான் சொன்ன மாதிரி எனக்கு மான்டசரி ஸ்கூல் ஆரம்பிக்குற ஆசை இருக்கு. நீயும் எக்ஸாம் பாஸ் பண்ற வழியப்பாரு. அதுக்கு பின்னால எதையும் யோசிக்கலாம். இப்போதைக்கு எந்தப் பேச்சும் வேண்டாம். முக்கியமா வீட்டைப் பத்தி” என்று சொல்லிவிட்டு வேகமாக எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.

அம்மாவின் முகத்தைப் பார்த்தான்‌ ராகவன். 

“என்னைய சித்தின்னு சொல்லிட்டாளேடா! குரல் தளுதளுத்தது.

“ம்மா… ஏதோ கோபத்துல சொல்லிட்டுப் போகுதும்மா. நம்ம மேல உள்ள பாசத்துலதான் இப்படியெல்லாம் பேசுது.” என்றவன் சுகந்தியை தோளோடு அணைத்துக் கொள்ள,

“எல்லாம் உன்னாலதான். பொறுமையா‌ வீட்ல வந்து பேசியிருக்கலாம். ட்ரெயின்லயே பேசி எல்லாத்தையும் கெடுத்துட்ட. அவசரக் குடுக்கை!” என்று அவனை தோளில் அடிக்க… “அம்மா… வலிக்குது!” என்றான் அழும் பாவனையில். 

இத்தனை வாக்குவாதத்திற்கு காரணம் வீடு இலக்கியாவின் அம்மா பெயரில் இருப்பதுதான். இலக்கியாவின் அப்பாவிற்கு சுகந்தி இரண்டாம் தாரம். இலக்கியா வயிற்றில் இருக்கும் பொழுதே அவளது அம்மாவிற்கு மஞ்சள் காமாலை. அவள் பிறப்பதற்குள் முற்றிவிட்டது. குழந்தையை மட்டுமாவது காப்பாற்ற வேண்டி, அறுவை‌சிகிச்ச செய்து இவளை எடுத்தனர்.

இவளை வளர்க்கவே சுகந்தியை இரண்டாம் திருமணம்‌ செய்து கொண்டார் அவளது அப்பா. 

ராகவன் பிறந்த சில மாதங்களிலேயே அவளது அப்பாவும் இறந்துவிட, இலக்கியாவிற்கோ தாயும் தந்தையுமற்ற அனாதரவான நிலை. 

அவரது அப்பா வேலையை சுகந்திக்கு வாங்கிக் கொடுத்த சொந்த பந்தங்கள், அவர் வேலையை வைத்து நீயும் உன் மகனும் பிழைத்துக் கொள்ளுங்கள். இலக்கியாவிற்கு இந்த வீடு என பேசிவைத்தனர். 

சுகந்தி இரண்டாம் தாரம் எனும் பொழுது, அதுவும் கணவரும் இறந்த பிறகு இலக்கியாவின் பொறுப்பை தட்டிக் கழித்துவிட்டால், பெண் பிள்ளைக்கு ஒரு பிடிமானமாக வீடு இருக்கட்டுமே என பேசி முடித்தனர்.

ஆனால் ஒரு நாளும் சுகந்தி, இலக்கியாவை மாற்றான் தாய் கண்கொண்டு பார்த்ததில்லை. ராகவனும், இலக்கியாவும் இரு கண்களே அவருக்கு. 

அதனால் தான் வீட்டை விற்க வேண்டும் என முடிவெடுத்ததற்கு அவ்வளவு கோபம் வந்தது. அவளது அப்பா இறந்த வீட்டில் பேசி முடித்த சொந்த பந்தங்கள் அடுத்து ஒரு தடவை கூட இவள் எப்படி இருக்கிறாள் என எட்டிப்பார்த்தது கூட கிடையாது. இத்தனைக்கும் அப்பா வழி, அம்மா வழியென இரண்டு பக்கமும் சொந்தங்கள் உண்டு. வழியில் பார்த்தால் விசாரிப்பதோடு சரி. 

அதனால் தானோ என்னவோ அத்தனை சொந்த பந்தங்களையும் அரவணைத்து செல்லும் தண்டபாணி‌ குடும்பம் இவர்களுக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. 

அறைக்குள் வந்தவளுக்கு கண்ணீர் கரகரவென கன்னம் வழிந்தது. என்னதான் இவளைப் பிடித்துப் போய் திருமணம்‌ செய்து கொண்டாலும் ஊரார் பார்வைக்கு கலையரசி சொன்னமாதிரி வேறு வழியில்லாமல் பெண்ணெடுத்ததாகத்தானே அர்த்தப்படும். அதனால் இவளே வேண்டாமென முடிவு கட்டிவிட்டாள்.

இப்போதைக்கு மான்டசரி பள்ளி ஆரம்பிக்கும் ஆசையையும், ராகவன் தேர்வில் பாஸ் பண்ண வேண்டும் என்ற நிபந்தனையுடன் கல்யாண ஏற்பாட்டை தள்ளி‌போட்ட மாதிரி தான்.

கொஞ்ச நாள் போனால் அவனை மறந்துவிடலாம் என்ற எண்ணம். கண்ணில் பட்டால் தானே கருத்திலும் பதியும். ஆனால் இது ஆழ்மனதில் பதிந்ததாயிற்றே. மறைக்க முடியும். அழிக்கவா முடியும்.

*****

அங்கே பழனியில், காலை சாப்பாடு சாப்பிட்டவாறே சீனி, “ஆச்சி, நம்ம ராகவன் அக்காவுக்கு நம்ம வழியில நல்ல மாப்பிள்ளை யாராவது இருந்தா சொல்லுங்க!” என்றான்‌, எதிரில் அமர்ந்திருந்த தண்டபாணி முகத்தைப் பார்த்துக் கொண்டே.‌ 

பழனியும் அண்ணன் முகத்தை ஏறிட்டுப் பார்க்க, அவன் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. சாதாரணமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 

‘நம்மதான் தப்பா நெனச்சுட்டோமோ!’ சீனிக்கே உள்ளூர சந்தேகம். 

“நம்ம வழியில… நல்ல மாப்பிள்ளை யாரு இருக்கா?” அய்யம்மா யோசனை‌ செய்ய, 

“என்ன பழனி? நல்ல மாப்பிள்ளை யாருன்னு‌ உங்க அம்மாச்சி யோசிக்கிறாங்க‌. அப்போ உங்க அண்ணன், பார்த்தியெல்லாம் நல்ல மாப்பிள்ளை இல்லையா?” அவள் பக்கமாகக் குனிந்து, சில்மிஷமாக கண்சிமிட்டிக் கேட்டவனை முறைத்துப் பார்த்தாள்.‌ 

“ஏன் அம்மாச்சி! நம்ம பார்த்திக்கு பாத்தா என்ன?” என்று‌ அடுத்த பந்தை வீச, தண்டபாணி பட்டென எழுந்து கொண்டான்‌. 

“என்னண்ணா அதுக்குள்ள‌ எழுந்துட்ட. இட்லி பிடிக்கலைன்னா தோசை ஊத்தவா?” 

“எதுவும் வேண்டாம்‌ பழனி!” என்றவன், “பார்த்திக்கு ராகவனோட அக்கா, முறை வராது என்றுவிட்டு கை கழுவச் சென்றுவிட்டான். 

சீனி, “விக்கெட் அவுட்!” என்று‌ சிரித்தான்.‌

“கூறு கெட்டவன். அவங்க என்ன சொந்தமா? அந்நியம்தானே? இதுல முறை‌ என்னத்தைக் கண்டான்!” பேரனைப் பற்றி தெரியாமல் அய்யம்மாதான் நொடித்தார். 

சாப்பிட்டு எழுந்து கை கழுவி வந்தவனை கைபேசி அழைத்தது. ராகவன் தான் அழைத்திருந்தான். 

“ஆயுசு நூறுடா!” என்றவாறே சீனி, அழைப்பை ஏற்க, “பாஸ், மேடம் வீட்ல பேசிட்டீங்களா?” என்றான் படபடப்பாக.

“இல்லடா… இப்பதான் பேச்சை எடுத்தேன்”

“பாஸ்… அக்காட்ட பேசினேன். அக்காவுக்கு இஷ்டம் இல்லை போல. வேண்டாம்னு…” என்று இழுக்க, இதற்கு மேல் இவன் மட்டும் என்ன செய்யமுடியும். 

“சரிடா… பாத்துக்கலாம் விடு. அந்தப் பிள்ளைக்கி விருப்பமில்லாம கம்ப்பல் பண்ணக் கூடாது!” 

“சாரி பாஸ்!” என்று தன் வருத்தத்தை தெரிவித்துவிட்டு அழைப்பை துண்டித்தான். 

பழனி‌ என்னவென்று பார்வையால் கேட்க, கட்டைவிரலைத் தலைகீழாகக் காண்பித்தான். 

இனி கதை இவர்கள் திருமணத்திற்கு பின் என நகரும்‌ மக்களே! 

8 thoughts on “மாமா! மாப்ளே! 7”

    1. போட்டாச்சு‌மா… பாத்தீங்களா அப்டேட் போட்டுட்டு ரிப்ளை போடுறேன்… 😉😉🫣

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top