மாமா! மாப்ளே! 5

என்னடா, இவ்வளவு சீக்கிரமா அடுத்த அப்டேட்னு தானே பாக்குறீங்க. அவசரத்துக்கு கை மாத்து வாங்கற மாதிரி முக்கனியும் சக்கரையும் கதையிலருந்து இந்த சீன உருவிட்டேன். இந்தக் கதையோட தொடர்ச்சிக்கு இந்த சீன் இருந்தா நல்லாருக்கும்னு தோணுச்சு. அம்புட்டுதான் மக்களே! மத்தபடி இன்னும் நான் அதே சுரைப்பழம்‌ தான். 🫣🫣🫣🙈🙈🙈

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க…

காத்கிருந்த காட்சி இங்கு காணக்கிடைக்க… 

திரு ஆவினன்குடி பாலமுருகன் கோவில் முன் வந்து நின்ற வேனிலிருந்து ஒலித்த பாடல் காற்றில் கலந்து வர, வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றான் தண்டபாணி. அவனையும் மீறி‌ கண்களில் சுவாரஸ்யம் குடிகொண்டது. பிர்மம முகூர்த்தத்தில் திருமணம் என்பதால் இன்னும் பொழுது புலரவில்லை. கருக்கலாகவே இருந்தது. கடைவீதியெல்லாம் வெறுச்சோடிக் கிடந்தது. ஒரு சில கடைகள் மட்டும் திறந்து வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது தான் வேனிலிருந்து வீட்டு ஆட்கள் எல்லாம் இறங்கினர். அவர்களுடன் இலக்கியாவும் இறங்க அதிகாலையில் சேலையில் சோலைப்‌பூவாய் அவளைப் பார்த்தவன் தான் தன்னிலை மறந்து நின்றான். 

அரக்கு கலர் பார்டர் வைத்த, மரகதப் பச்சை நிறத்து மென் பட்டுச்சேலையில் தோள் வழிந்த மல்லிச்சரத்தை பின்னால் ஒதுக்கியவாறே இறங்கி நின்றாள். அவளை விட்டு கண்ணை அகற்ற முடியாமல் சுற்றம் மறந்து பார்த்திருந்தான். அவனையும் அறியாமல் அவன்‌ மனம் அவள்பால் சென்றது.

முன்தினம் இரவு சுகந்தி மகளுக்கு சேலை எடுத்து வரவில்லையே எனப் புலம்பியது காதில் விழ, அடுத்து அவன் தேடிச் சென்றது தங்கையைத்தான். 

“பழனி… உன்கிட்ட புதுப் புடவை எதாவாது இருக்கா” எனக் கேட்ட அண்ணனை எதற்கென புரியமால் பார்த்தாள் பழனி. 

“ராகவன் அக்கா சேலை எடுத்துட்டு வரல போல. நாளைக்கு நம்ம வீட்டு பொண்ணுங்க எல்லாம் எப்படி வருவாங்கன்னு தெரியும்தானே. அவங்க மட்டும் காட்டன் சுடிதார்ல துண்டா இருக்குற மாதிரி இருக்கும்” என்று சொல்ல,

“புதுப் புடவை இருக்குண்ணா. இரு எடுத்துட்டு வர்றேன்!” என்று திரும்ப,

“இல்ல… இல்ல… இப்ப வேண்டாம். காலையில அம்மாட்ட கொடுத்து அவங்க அம்மாகிட்ட கொடுக்க சொல்லு. நான் கொடுத்தா நல்லா இருக்காது” என்றான்.

இப்பொழுதே கொடுத்தாலோ அல்லது பழனி‌ கொடுத்தாலோ அவள் மறுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அவள் அம்மாவிடம் பேசியதை கேட்டான் தானே. சுயகௌரவம் பார்ப்பவள் எனத்‌ தெரிந்தது. கண்டிப்பாக வாங்க மாட்டாள். கலையரசி கொடுக்கும் பொழுது மரியாதைக்காகவேணும் மறுக்காமல் வாங்கிக் கொள்வாள் என நினைத்தான். 

“அப்படியே ப்ளவுஸையும் டைட் பண்ணி கொடுக்க சொல்லு. உன் அளவு அவங்களுக்கு லூசா இருக்கும்” என்றுவிட்டு தங்கை பதிலைக்கூட எதிர் பார்க்காமல் சென்றுவிட்டான். 

அவள் இருந்த மனநிலையில் அதற்கு மேல் அண்ணனைப் பற்றி யோசிக்கவில்லை.‌ தங்கள் வீட்டுப்பெண்கள் மீது காட்டும் அக்கறையாகவே பட்டது.

அவன் சொன்னது போலவே கலையரசிடம் கொடுத்து இலக்கியாவிடம் கொடுக்க அவளாலும் மறுக்க முடியவில்லை. 

திருமண முன்னேற்பாடுகளைக் கவனிக்க இவன் ராகவனையும், அப்பொழுதுதான் வந்து சேர்ந்த பார்த்தீபனையும் அழைத்துக் கொண்டு முன்கூட்டியே கோவில் வந்து விட்டான். வீட்டு ஆட்களுக்கெல்லாம் கோவில் வர வேன் ஏற்பாடு செய்திருந்தான். 

இவர்கள் வருமுன்பே சீனி, காந்திமதி மற்றும் பொதிகாசலத்துடன் கோவிலுக்கு வந்துவிட்டான். ராகவன்‌ சீனியோடு இணைந்து கொண்டான். 

அதிகாலை ஐந்து மணியைப்‌போல் மற்றவர்கள் வேனில் வந்து‌ இறங்கினர். இலக்கியா முதலில் இறங்கிவிட சுகந்தியும், அய்யம்மாவும் கடைசியாக இறங்க அவர்களுக்காக காத்து நின்றாள். மற்றவர்கள் இறங்கி முன் சென்றுவிட்டனர்.

தண்டபாணி அவளையே பார்த்துக் கொண்டு வர, அவளுக்கும் அவன் பார்வை குறுகுறுத்தது. அவன் பார்வையில் என்னவென்று உணரமுடியாதொரு மாற்றம். அவனும் வேட்டி சட்டையில் தான் கம்பீரமாக நடந்து வந்தான். 

முதன் முதலாக சென்னையில் முக்கால் ட்ரவுசர், டீசர்ட், நேற்று வரை கைலி, சட்டை என இயல்பாக பார்த்தவனை வேட்டி சட்டையில் தோரணையாகப் பார்த்தவளுக்கும் அவனை விட்டுப் பார்வையை அகற்ற முடியவில்லை. ரசனையாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் இவளை நோக்கியே வருவதைப் பார்த்தவள் அக்கம் பக்கம் பார்வையை சுழற்றினாள். இவளை நோக்கிதான் வருகிறான் என்பது தெள்ளத்தெளிவாக தெரிய, இதயத் துடிப்பு வேகமெடுத்தது. உள்ளங்கை சில்லிட்டது.

“இலக்கியா… ஆச்சிய இறக்கி விடு” சுகந்தியின் குரலில் பட்டென கலைந்தாள். இழுத்து மூச்சுவிட்டு ஆசுவாசப் பட்டவள், மெதுவாக கை பிடித்து அய்யம்மாவை வேனை விட்டு இறக்கிவிட, அதற்குள் அவனும் இவர்களை அனுகியிருந்தான். 

இவன் வருவதைப் பார்த்த வேன் டிரைவரும் வேனின் பின்னால் பொருட்கள் வைக்கும் பகுதியைத் திறந்துவிட, வேட்டியை மடித்துக் கட்டியவன் பின்னாலிருந்து கல்யாண மாலைகளை எடுத்தான். அடுத்து பூஜை சாமான்களையும் எடுக்க முயன்றவன், கையிலிருந்த மாலைகளை கொடுக்க தங்கைளைத் தேட, அவர்களெல்லாம் முன்னே சென்றுவிட்டனர். 

அவனது பார்வை உணர்ந்து சட்டென கை நீட்டினாள். இரண்டு மாலைகளையும் அவளிடம் கொடுக்க, குழந்தையைப் போல் கைகளில் ஏந்திக் கொண்டாள். 

மற்ற சாமான்களை எடுத்துக் கொண்டு அவன் முன்னே செல்ல, அய்யம்மா நடைக்கு ஈடு கொடுத்து மெதுவாக அவரோடு நடந்து கோவில் சென்றாள். 

மிக எளிமையாக வீட்டார் மட்டும் கூடியிருக்க பழனி, சீனி திருமணம் முடிந்தது. அடுத்து அமிர்தாவிற்கு சரவணப் பொய்கை சென்று முடி காணிக்கை செலுத்தி, காதும் குத்திவிட்டு தண்டாயுதபாணியைத் தரிசிக்க மலையேறினர் அனைவரும்

பெண்களோடு ஒன்றாக சேர்ந்துதான் ராகவனது அக்காவும், அம்மாவும் படியேறினர். ராகவன், சீனியோடு சேர்ந்து பேசி சிரித்துக் கொண்டே படியேறினான். அவர்களை கவனிக்கவில்லை. 

சற்று தூரம் சென்றதும் தண்டபாணிதான் ராகவனிடம் அக்காவும், அம்மாவும் எங்கே எனக் கேட்டான். 

அவர்கள் பெண்களோடு சேர்ந்து வருவதாகச் சொல்ல,

“அவங்களோட இல்லைனுட்டுத்தானே உங்கிட்ட கேக்குறேன்!” சுள்ளெனக் கடித்தான். அவனும் கண்ணுக்கு எட்டிய வரை முன்னும் பின்னும் தேடிவிட்டுதான் ராகவனிடம் வந்தான். 

ராகவனும் சுற்றிமுற்றிப் பார்க்க அக்காவும், அம்மாவும் மிஸ்ஸிங்‌. கண்களில் பதட்டம் தொற்றிக் கொண்டது. புது இடம். எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. 

“கூட வர்ற பொண்ணுங்க வர்றாங்களா‌ இல்லையான்னு திரும்பிக் கூடப் பாக்கமாட்டியா?” என்று கேட்க ராகவன் முகம் தொங்கிப் போயிற்று. 

எல்லாம் ஒன்று சேர்ந்து கும்பலாகத்தான் மலையேறினார்கள். சுகந்தி மெதுவாகப் படியேற, அம்மாவிற்காக மெதுவாக ஏறிய இலக்கியாவும் பின்தங்கிவிட்டாள். 

முன்பே அவரை அய்யம்மா, வேலாயுதத்தோடு, வின்ச்சில் (மின் இழுவை ரயில்) தான் வரச்சொன்னான்‌ தண்டபாணி. அவர்தான் முதன் முதலாக பழனி‌ வந்திருப்பதால், படியேறி வருகிறேன், இறங்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார். 

மகளின் திருமண ஏற்பாடு ஆரம்பமே தடைபட்டதில் மனதிற்குள் ஒரு சஞ்சலம். வேண்டுதல் போல் மலையேற ஆசைப்பட்டார். அம்மாவின் மனமறிந்து சரியென ராகவனும் விட்டுவிட்டான். 

வள்ளி சுனையருகே வந்த பிறகுதான் அனைவரும் வருகிறார்களா எனத் திரும்பிப் பார்த்தவனுக்கு இவர்கள் கும்பலில், அவர்கள் மட்டும் இல்லை என்பதே தண்டபாணிக்குத் தெரிந்தது. 

ராகவனும் பதட்டத்தில் அங்குமிங்கும் தேட, இடுப்பில் கைவைத்து அவனை‌ முறைத்துப் பார்த்தவன், “கையில ஃபோன் இருக்குல்ல… கால் பண்ணு” என்று‌ இரைந்தான். 

பதட்டத்தில் அது கூடத் தோன்றவில்லை ராகவனுக்கு. அவனைப் பார்க்கவும் பாவமாய் போயிற்று.‌ புது இடம், அவனுக்கும் என்ன தெரியும்? பெரிதாக எங்கும் இப்படிக் கிளம்பி வந்ததில்லை. இவ்வளவு நீண்டதூரப் பயணம் என்பது இதுவே முதன் முறை மூவருக்கும். அதில் அம்மாவும், அக்காவும் காணவில்லை என்றதும் அவனுக்குமே கண்கள் கலங்குவது போல் ஆயிற்று. கோவிலில் கனிசமான கூட்டம் வேறு.‌

“பயப்படாம கால் பண்றா. பெருசா‌ எங்கேயும் போயிருக்க மாட்டாங்க. அம்மாவுக்கு முடியாததால மெதுவா ஏறி வருவாங்களா இருக்கும்.” ஆறுதலாக தோள் தொட்டான் சீனி. 

இரண்டு மூன்று‌முறை முயற்சித்தும் அலைபேசி அழைப்பு எடுக்கப்படவில்லை. அவர்களோடு காவடி பக்தர்கள் அரோகரா போட்டுக்கொண்டு படியேறியதில் இலக்கியாவிற்கு அலைப்போசை கேட்கவில்லை.‌

“நம்பர் கொடு. நான் ட்ரை பண்றேன்!” என்று இலக்கியா கைபேசி எண் வாங்கிய தண்டாபாணியும் ஒரு முறை முயற்சித்தான்.  

இவர்கள் வந்து சேரட்டுமென‌ மற்றவர்கள் அங்கேயே அமர்ந்துவிட்டனர். 

சீனியின் கண்கள் தண்டபாணியைத்தான் ஆராய்ந்தது. அவ்வப்பொழுது அவனது பார்வை இலக்கியா பக்கம் தொட்டுத் திரும்புவதை, காலையில் கோவிலுக்கு வந்ததிலிருந்தே கண்ணுற்றான். இல்லையென்றால் அவர்கள் மட்டும் இங்கில்லை என்பது இவனுக்கு மட்டும் எப்படித் தெரியும்? அவனது கண்களிலும் பதட்டம். 

ராகவன் பதட்டப்பட்டால் அதில் ஒரு நியாயம் உண்டு. புது இடம். எங்கு  சென்றார்களோ எனத் தவிக்க வாய்ப்பிருக்கிறது. பிறந்து வளர்ந்த ஊரில் இண்டு இடுக்கெல்லாம் தண்டபாணிக்குத் தெரியும். அனைவருடனும் மலையேறியவர்கள் வேறெங்கும் தவறிப்போக வாய்ப்பில்லை. சிறுபிள்ளைகளும் இல்லை. கையில் ஃபோன் இருக்கிறது. அதை நினைத்தே சீனி தைரியமாக இருக்க, தண்டபாணி கோபம் அவனுக்குள் சுவாரஸ்யமூட்டியது. 

தொடர்ந்து முயற்சித்த ராகவனது அழைப்பை எடுக்க, “எங்கக்கா இருக்கீங்க?” என்றான் படபடப்பாக.

“…”

“எங்க கூட இல்லையே? நீங்க எங்க இருக்கீங்க? நாங்க வள்ளி சுனைகிட்ட இருக்கோம்” என்றான்.

இலக்கியா, “அது எங்க ராகவா இருக்கு?” என்று கேட்க, 

“பக்கத்துல யார்கிட்டயாவது இருக்குற எடத்தை விசாரிச்சு சொல்லச் சொல்லு!” என்றான் தண்டபாணி.

“நீங்க இருக்குற எடத்தை யார்கிட்டயாவது கேளுக்கா” என்று‌ சொல்ல, அவளும் படியேறுபவர்களிடம் விசாரித்தாள். 

என்ன சொல்லப்பட்டதோ, சில கணங்கள் தாமதத்திற்குப் பிறகு, “அவங்க மெயின் படி வழி ஏறி வர்றாங்களாம்” என்றான்.

“அறிவிருக்கா உனக்கு. கூட வர்றவங்கள நின்னு‌ கூட்டி வரத்தெரியாதா? உடம்பு‌ சரியில்லாதவங்க. அதுல எப்படி ஏறி‌ வருவாங்கன்னு வேணாம்!” அதற்கும் கண்டமேனிக்குக் கத்தினான். 

பெண்களோடு சேர்ந்து வருவார்கள் என்றுதான் இவனும் ஆண்களோடு சேர்ந்து ஏறிவந்துவிட்டான். 

மலையேற ஆரம்பித்ததும், சற்று தூரத்தில்… இடப்பக்கம் யானைத்தடம் ஒரு பக்கமும்,‌ பிரதானப் படிவழி ஒரு பக்கமும் என பாதை இரண்டாகப் பிரியும். 

யானை தடத்தில் மலையேறுவது எளிது. படி மற்றும் சமதளமென மாறி மாறி வரும். இன்னொரு பாதை முற்றிலும் படியாகவே இருக்கும். வயதானவர்களுக்கு சற்று கடினம். பின்தங்கி வந்தவர்கள், காவடிக்‌ கூட்டமொன்று படியேற, இடப்பக்கமாகத் திரும்பாமல், அவர்களோடு சேர்ந்து நேரே மேலே ஏறிவிட்டனர்.‌ 

இனி திரும்பி வருவதற்கு, அதிலேயே ஏறி வந்துவிடலாம். 

அவர்கள் இருக்கும் இடம் தெரிந்ததும் ஆசுவாசப் பட்டவர்கள் மீண்டும் மலையேறினர். 

தண்டபாணி பார்த்த பார்வையில் ராகவன் பஸ்பமாகாததுதான் பாக்கி. 

பத்து படிகளுக்கு ஒரு தடவை, எங்கிருக்கிறார்கள் என்று கேட்டு கால் பண்ணச் சொன்னான். அடுத்து தண்டபாணி, இவனைப் பார்த்தாலே ராகவன் கை தன்னால் ஃபோனை எடுத்தது. அந்தளவிற்கு அவனைப் பார்த்தாலே மிரண்டு போனான். 

சீனி, இவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரிக்க, அவன் பாவமாய்ப் பார்த்தான். 

மேலே சென்று சற்று நேரம் காத்திருக்க அவர்களும்‌ வந்து சேர்ந்தனர். 

மிகவும் களைத்திருந்தார் ராகவனின் அம்மா. இருந்தாலும் மலையேறி வந்த திருப்தி முகத்தில். மேல் படியிலேயே நின்று இவர்கள் வருகிறார்களா என்று கவனித்தவன் இவர்களைப் பார்த்ததும் இலக்கியாவை முறைத்துப் பார்க்க, அவளுக்கும் காரணம் புரியவில்லை. சேர்ந்து வரத்தெரியாதா என்ற கேள்வி தொக்கி நின்ற பார்வை. 

அதையே ராகவன் அக்காவிடம் கோபமாகக் கேட்க, “நீ அவங்களக் கவனிக்காம விட்டுட்டு கேள்வி மட்டும் கேளு. சுரைப்பழமாத்தான் வளந்திருக்க” என்று வெடுவெடுத்தான்.

அதற்குள் வின்ச்சில் வந்தவர்களும் வந்து சேர்ந்து கொள்ள அனைவரும் தரிசனத்திற்கு சென்றனர். 

“அதென்ன பாஸ் சுரைப்பழம்?” தண்டபாணி அகன்றதும் சீனியிடம் கேட்க, 

“யாருக்குடா தெரியும். ஆனா ஒன்னு‌ மட்டும் நிச்சயமாத் தெரியுதுடா. கூடிய சீக்கிரம் மறுபடியும் நீ பழனிக்கு வரவேண்டியிருக்கும்டா!” 

“வந்தாலும் இவர் கூட மலையேற மாட்டேன் பாஸ்!” சிறுபிள்ளை போல் முகத்தை தூக்கினான். 

“டேய்… மச்சான் தயவுலதான் நீ மலையே ஏறப்போற!” என்று சிரித்தான்.

மற்றவர்கள் பார்வைக்கு தாண்டபாணி செயல் வித்யாசமாகத் தெரியவில்லை. அக்கா, தங்கைகளை வெளியே எங்கு அழைத்துச் சென்றாலும் இப்படித்தான் அக்கறையாக கவனித்துக் கொள்வான். ஆனால், அவன்‌ பார்வையின் வித்தியாசத்தை சீனி கண்டுகொண்டான். ‘வாடீ மாப்ளே!’ எக்களிப்பு செய்தது சீனியின் மனம். 

அனைவரும் ஒன்று சேர்ந்து தண்டாயுதபாணி தரிசனம் முடித்தனர். அவ்வப்போது கூட்டத்துள் இருக்கிறாளா என பார்வை இலக்கியாவையே வட்டமிட்டது. வெளியே வந்தவர்கள் கோவில் பிரகாரத்திலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பேசி சிரித்துக் கொண்டிருந்தவர்களை கடந்து சென்றவன், இப்பொழுதும் ராகவனைப் பார்த்து முறைத்தே செல்ல, 

“பாஸ், இதெல்லாம் நல்லா இல்ல. நான் மட்டுமென்ன பழனிக்கு பத்தாயிரம் தடவையா பாதயாத்திரை வந்திருக்கேன். நானும் ஊருக்கு புதுசுதான். உங்க மச்சான் என் மேலயே கண்ணா இருக்காரு. சொல்லி வைங்க. ஏதோ ஒரு‌ தடவை வழி மாறிப் போயிட்டாங்க. என்னோட அம்மாவையும், அக்காவையும் எனக்கு பாத்துக்கத் தெரியாதா?” அழாத குறையாக அலுத்துக் கொண்டான். 

‘அவருக்கு கண்ணு உம்மேல இல்லடா ராகவா!’ என நினைத்தவன், 

“இப்ப என்ன, அவரு உன்கிட்ட மொறைக்காம இருக்கணும். அவ்வளவுதானே?”

“ஆமா… பாஸ்?”

“விடு, மூக்கணாங்கயிறு போட்டுறுவோம்! உங்க அக்காவுக்கு நான் மாப்பிள்ளை பாத்தா உனக்கு ஆட்சேபனை ஏதும் இல்லையே?”

“என்ன பாஸ் இப்படி கேக்குறீங்க‌? ஆனா, எங்க வசதியையும் மனசுல வச்சுக்கிட்டு ஏழைக்கேத்த எள்ளுருண்டையா பாருங்க பாஸ்!”

“ஏன், இந்த பொறி உருண்டையெல்லாம் வேண்டாமா? எள்ளுருண்டையே தான் வேணுமா? அதெல்லாம் பாத்திறலாம் விடு. உன்னையும், என்னையும் மிரட்டுற மச்சானுக்கு ஒரே தீர்வு. பழனியை விட்டுப் போறதுக்குள்ள, என் மச்சானுக்கு, இல்ல.. இல்ல… நம்ம மச்சானுக்கு மூக்கணாங்கயிறுக்கு ஏற்பாடு பண்ணிட்டுதான் போறோம்.”

“அண்ணன் கேரக்டரை ரொம்ப உள்வாங்கி பண்றாரு பாஸ். சிவாஜிகணேசன் தோத்தாரு போங்க!” 

“அவரை ஜெமினிகணேசன் கேரக்டருக்கு ட்யூன் பண்ணனும் அவ்வளவு தானே!”

“முடியுமா பாஸ்!”

“அவர் ஆல்ரெடி‌ ட்யூன் ஆகிட்டாரு. இருந்தாலும் விறைப்ப, விட்டுக் கொடுக்காம மெய்ன்டெய்ன் பண்றாரு!”

“பாவம் பாஸ் அவரைக் கட்டிக்கப் போற பொண்ணு.” 

“பாவம் அந்த பொண்ணில்லடா. அந்தப் பொண்ணு கூடப் பிறந்தவன்.”

“யார் சார் அந்த அபாக்கியசாலி?”

“நீதான்!” என்றவனை அதிர்ந்து பார்த்தான்.

அவன் மறைமுகமாக உறைத்தது புரியாமலில்லை. இங்கு வந்து பார்த்தபிறகு தண்டபாணி குடும்ப வசதி என்னவென்று அவனுக்கும் கண் கூடாகத் தெரிந்தது. எதற்கு வீண் மனக்கோட்டை கட்டுவானேன்.

“எதுக்கு பாஸ், தேவையில்லாத பேச்சு‌!” என்றான் உள்ளிறங்கிய குரலில். 

“அதெல்லாம் நான் பாத்துக்கறேன். உங்க அக்கா சம்மதம் மட்டும் போதும்!”

“அவங்க குடும்பம் ஒத்துக்கணுமே!” 

இப்படியொரு இடம் கனவிலும் கிடைக்காதுதான். நேற்று வந்ததிலிருந்து பார்க்கிறானே. ஏற்கனவே அய்யம்மாவையும், வேலாயுதத்தையும் சென்னையிலேயே தெரியும். அம்மாவிடமும், அக்காவிடமும் எப்படிப் பழகினார்கள் என்று. 

“நல்ல குடும்பமா இருக்குடா ராகவா. பகட்டே இல்லாம பழகுறாங்க” என்று முதலில் இங்கு வர தயங்கிய சுகந்தி கூட சிலாகித்து சொன்னார். 

தண்டபாணியை நினைத்தால்தான், ராகவனுக்குக் கொஞ்சம் கருக்கென்றது. 

தெய்வீகமாக சிரித்தார் பழனி தண்டாயுதபாணி.  

8 thoughts on “மாமா! மாப்ளே! 5”

  1. சீனி பழனி ஆவலா எதிர்பார்த்த மாதிரி தண்டமும்
    கோபமாவே இருந்தாலும் எதிர்பார்க்க வைக்கிறார்.. இவரா?ரொமான்ஸா ?எப்படி இருக்கும்??? காத்திருக்கிறோம்

    1. எனக்கும் ஆவலாத்தான் இருக்கு. இவன் என்னத்த லவ் பண்ணி…😂
      Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫

  2. சிவாஜி கணேசன் டூ ஜெமினி கணேசன் மாற்றத்தை பார்க்க ஆவலாக இருக்கிறேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top