மாமா! மாப்ளே! 1

1

“அக்கா… நல்லா யோசிச்சுக்கோ! இப்பவும் ஒன்னும் அவசரமில்ல! பெட்ரோமாக்ஸே தான் வேணுமா?”

கண்ணாடி முன் அமர்ந்து தலையிலிருந்த பூவை சரிபார்த்துக் கொண்டிருந்த இலக்கியா முன் அலுத்தபடியே வந்து நின்றான் ராகவன். 

தம்பியைப் திரும்பிப் பார்த்தாள்  இலக்கியா. அவனது ஒரு கையில் வருபவர்களுக்கென வாங்கி வைத்த மைசூர்பாகும், மறுகையில் ஜிலேபியும் இருப்பதைப் பார்த்து சிரித்தாள்.

“அக்கா ஃபைனலா ஒரு தடவை நல்லா யோசிச்சுக்கோ!”

“ஏன்டா இப்படிக் கேக்குற?” மகளின் அலங்காரத்தை  சரிபார்த்துக் கொண்டே, சுகந்தி மகனை அதட்ட,

“அந்த ஆளு சிரிக்கக்கூட காசு கேப்பாரும்மா!” என்றான் அழும் தோரணையில்.

 “டேய்… என்னடாயிது அந்த ஆளு, இந்த ஆளுன்னுட்டு. மரியாதையில்லாம?” மகனின்‌ தோளில் பட்டென ஒன்று வைத்தார் சுகந்தி. கையிலிருந்த மீதி மைசூர்பாகை வாயில் போட்டுவிட்டே தோளை தேய்த்துவிட்டான். 

“போம்மா, அவரைப் பத்தி உங்களுக்குத் தெரியாது! தினமும் புலிக்கூண்டுல புலிகூட குடியிருக்குற மாதிரியே இருக்கு‌. பாத்தீங்களா… அவரைப் பத்தி பேசினாக்கூட எனக்கு அடிவிழுது. அவரோட வைப்ரேஷன் கூட வேலை செய்து! இதுல அவரே எனக்கு மச்சான்னா, என்னால முடியாதும்மா!”

 பள்ளி செல்ல அடம்பிடிக்கும் சிறுபிள்ளை போல் காலை உதறி அடம்பிடிக்க, இலக்கியா மேலும் மலர்ந்து சிரித்தாள் தம்பியின் சேட்டையில். மகளின் சிரிப்பில் ஒரு கணம் லயித்த சுகந்தி, கன்னம் வழித்து நெட்டி முறிக்க,

“நான் இங்க ஒருத்தன் கழுதையா கதறிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா உங்க மகளை ரசிச்சு கொஞ்சறீங்க! இளைய பிள்ளைனாலே எல்லாத்துக்கும் எளக்காரமான பிள்ளைன்னு தான் அர்த்தம் போல.” 

“என்ன இலக்கியா இவன். என்னமோ இவனைப் பொண்ணு கேட்டுவர்ற‌ மாதிரியில்ல அலுத்துக்கறான்!” சுகந்தியும் மகளோடு சேர்ந்து சிரிக்க, 

“கிட்டத்தட்ட நான்‌ ஏற்கனவே அவரோடதான் குடித்தனமே பண்றேன். தாலிகட்டாதது ஒன்னுதான் பாக்கி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக் கழியுது. கல்யாணமாகுற‌ வரைக்கும் தானேன்னு நானும் பல்லைக் கடிச்சிட்டு இருக்கேன்.” ராகவன் பேச்சில் பெண்கள் இருவரும் மலர்ந்து சிரிக்க

அக்காவைப் பார்த்தவன், “வொர்க் ஃப்ரம் ஹோம் வாங்கிட்டு பழனிக்கு தானே போகணும். சென்னையில வந்து உக்காந்துகிட்டாருக்கா!” 

தங்கச்சிய நாய் கடுச்சிருச்சுப்பா என்ற ஜனகராஜ் மாடுலேஷனில் மறுபடியும் ஆரம்பிக்க வாய்கொள்ளா சிரிப்புதான் இரு பெண்களுக்கும். 

“நல்லா சிரிங்க!” மகன் கடுப்பாகிவிட்டான் எனத் தெரிந்தது.

“அவரு அப்படி வந்ததால தான் நீயும் எக்ஸாம் பாஸ் பண்ணி, இன்னைக்கி பேங்க் ஆஃபிசரா இருக்க! உனக்கெல்லாம் அப்படி ஒருத்தர் தான்டா கரெக்ட்.” 

“நீங்கதான் மெச்சிக்கணும். என்னமோ ஸ்கூல் பப்ளிக் எக்ஸாம்‌ எழுதப் போறவனுக்காட்டம், அலாரம் வச்சு எழுப்பிவிட்டு, டைம் டேபிள் போட்டுக் கொடுத்து, டீ போட்டு கொடுத்துன்னு மனுஷன் ஒரு நிமிடம் கூட என்னை நிம்மதியா தூங்கவிடல. கூடவே‌ பிரம்பு வச்சுக்கிட்டு வாத்தியார் மாதிரி நின்னார்க்கா!”

மறுபடியும் தங்கச்சிய நாய் கடிச்சுருச்சுப்பா மாடுலேஷன். 

சீனி அவனைத் தோளில் தட்டிக் கொடுத்தான் என்றால், தண்டபாணி முதுகில் தட்டினான் என்று சொல்லுமளவிற்கு இருந்தது ராகவன் மீதான அவனது கண்டிப்பு. 

கிட்டத்தட்ட சுகந்தியும், இலக்கியாவுமே அவனை அப்படித்தான் தடவிக் கொடுத்து வளர்த்திருக்க, இவனுக்கு தேவை சற்றே கண்டிப்புடன் கூடிய அக்கறை எனப் புரிந்தது தண்டபாணிக்கு. 

தேர்வு நேரத்தில் தங்கைகளை எழுப்பி படிக்க வைத்தது போலத்தான் அவனையும் எழுப்பி படிக்கவைத்தான். 

பின்னே இலக்கியா திருமணத்திற்கு மறுத்ததே இவனை நினைத்து தானே. இன்னும் விபரமில்லாமல் சிறுபிள்ளை போல் நடந்து கொள்ள, இவனுக்கு வேலை கிடைத்த பிறகுதான் தனக்கு திருமணம் என்பதில் தானே அவளது முடிவும் இருந்தது‌.

அவனது அப்பா இறக்கும் பொழுது ராகவனுக்கு சரியாக விபரம் கூடத் தெரியாது. கூடத்தில் அவரை கிடத்தியிருக்கும் பொழுதும் தவழ்ந்து வந்து அம்மாவிடம் பாலுக்கு அழுத பாலகன். 

இலக்கியாவிற்கு ஓரளவிற்கு விபரம் தெரியும் எனினும் அப்பாவின் இழப்பை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் பக்குவம் வராத சிறுமிதான் அவளும். அப்பா இறந்துவிட்டார் என்றளவில் மட்டுமே புரிந்தது. 

சுகந்தியும், சுற்றத்தாரும் இவர்களது அப்பாவின் இறப்பிற்கு அழுததைவிட, இரண்டு பிஞ்சுகளைப் பார்த்து அழுதது தான் அதிகம். 

சுகந்திக்கு சுற்றத்தார் முயற்சியில் உள்ளூர் தபால் நிலையத்திலேயே அவரது கணவரது வேலை வாங்கித்தரப்பட்டது. உறவினர்களுக்கு எங்கே மூன்று பேரும் தங்கள் தலையில் விழுந்துவிட்டால் என்ன செய்வதென்ற நல்ல எண்ணமாகக் கூட இருக்கலாம்.

வெளி உலகம் தெரியாத சுகந்திக்கும் அந்த வேலையே மலையளவு தைரியம் கொடுத்தது. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன், கிராமத்தில், தபால் அலுவலகத்தில் எவ்வளவு சம்பளம் வந்திருக்கும். 

வீடு சொந்த வீடாக இருக்க, சொற்ப சம்பளத்தை வைத்தே அரசு பள்ளியில் படிப்பு, குடும்பச் செலவு அத்தனையும் பார்த்துக் கொண்டனர். பெண்பிள்ளை என்பதால் இலக்கியா விரைவில் வீட்டுச் சூழல் புரிந்து பொறுப்பிற்கு வந்துவிட, சிறுபிள்ளை, தகப்பனில்லாதவன் என்ற கூடுதல் சலுகையோடு அம்மாவிற்கும், அக்காவிற்கும் செல்லப்பிள்ளையாகிப் போனதில், இரண்டு பெண்கள் வளர்ப்பில் வெகுளித்தனமும், விளையாட்டுத்தனமும் சற்று ராகவனிடம் அதிகப்படி. விளையாட்டுத் தனமிருந்தாலும் படிப்புதான் பற்றுகோல் என்று பற்றிக்கொண்டவர்கள். 

இவர்கள் காட்டத் தவறிய கண்டிப்பை தண்டபாணி ததப்பனின் அக்கறையோடு அவனிடம் காட்டியதில், உடன் வந்து தங்கிய ஆறே மாதத்தில் அடுத்து வந்த வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று பதவியும் கிடைத்தது. இப்பொழுது பயிற்சி காலம். அது முடிந்த பிறகுதான் வேலை நியமனம் எங்கு என்று தெரியவரும். 

“டேய், நீ இப்போ பேங்க் ஆஃபிசர். அது ஞாபகம் வச்சுக்கிட்டு பேசு. இன்னும் சின்ன பிள்ளையாட்டம் நடந்துக்கற!”

“இத இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வருவாருல்ல. அவர்கிட்ட சொல்லுங்க ரெண்டுபேரும். என்னமோ ஸ்கூல் பையனாட்டமே என்னை ட்ரீட் பண்ண வேண்டியது. கழுத்துல டை கட்டிவிட்டு, பாக்கெட்ல கர்சீஃப் குத்திவிடாததுதான் பாக்கி! விட்டா மூக்கும் துடைச்சு விடுவார் போலக்கா! 

“அப்பா இல்லாத பையன்னு அவர்‌ பொறுப்பா பாத்துக்கறார்டா. இல்லைனா நீ பாஸ் ஆகிறுப்பியா?” என்று கேட்க அதுவும்‌ உண்மைதான் என்றிருந்தது ராகவனுக்கு. 

அப்பா உயிரோடிருந்து கண்டிப்பு காட்டி வளத்திருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று‌ ராகவனே பல நேரங்களில் உணர்ந்திருக்கிறான். அறியாமல் கண் கலங்கியிருக்கிறான். ஆனால் ஒத்துக் கொள்ளத்தான் மனமில்லை. 

“அவருக்காக எல்லாம் நான் பாஸ் பண்ணல. அக்கா சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்னு தான் நான் பாஸ் பண்ணினேன்!” அம்மா சொல்வதும் மறுப்பதற்கு இல்லை எனினும், மீசையில் மண் ஒட்டவில்லை என்றளவிற்கு பேசிய தம்பியை ஆதுரமாகப் பார்த்தாள் இலக்கியா.

வந்தனாவும், வரதராஜனும் வயது முதிர்வின் காரணமாகவோ, அல்லது பேரப் பிள்ளைகளை விட்டு வரமுடியாமலோ, அவர்களை‌ கவனித்துக் கொள்ள ஆளில்லாமலோ ஏதோ ஒன்று வெளிநாட்டில் மகன்களோடே தங்கிக் கொள்ள முடிவெடுத்த பிறகு, பழனிக்கே அவர்களது ஃப்ளாட்டை கிரயம் முடித்துக் கொடுத்துவிட்டனர். சூப்பர் மார்க்கெட், ஜிம் மற்றும் பள்ளி என அனைத்திற்கும் போக்குவரத்திற்கு சௌகர்யமாய்ப்‌ போயிற்று. 

தண்டபாணி பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டான். சீனி வாடகைக்கிருந்த ஃப்ளாட்டில் தண்டபாணியும் வந்து தங்கிக் கொள்ள, புலி கூண்டிற்குள் மாட்டிய‌ கதைதான் ராகவனுக்கு. 

சிலர் தான் பன்முகத்திறன்‌ கொண்டவர்களாக இருப்பார்கள். இவனைப் பார்த்ததும் தண்டபாணிக்குப் புரிந்து போயிற்று. இவன் ஒரு நேரத்தில் ஒரு வேலையில் கவனம் வைத்தால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் என்பதே. வேலை பார்த்துக் கொண்டே தேர்விற்கும் முயற்சித்ததால் தான் இன்னும் தேர்ச்சிபெற முடியவில்லை.

மகளுக்கு ஆபத்து, எங்கிருக்கிறாள் எனத் தெரியாத இக்கட்டான சூழலிலும், தன்னை நம்பிய சீனிக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்ற பெயரில் முழு நேரமும் சூப்பர் மார்க்கெட்டிலேயே கவனம் செலுத்தினான் ராகவன்.

சூப்பர் மார்க்கெட்டிற்கு அக்கவுண்ட் பார்த்துக் கொண்டே படித்தவனை முதல் வேலையாக, வேலைக்குப் போவதைத் தடை செய்தான் தண்டபாணி. குடும்பத்தை சமாளிக்க அவனது அம்மா, மற்றும் இலக்கியா இருவரது வருமானம் அந்த கிராமத்தில் அவர்களுக்குப் போதும்தான். ஆனால் இவனது வாடகை, மற்ற செலவுகளுக்கும் அவர்களை எதிர்பார்க்க முடியாதே. 

தண்டபாணி, தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல ராகவனுக்குதான் தன்மானம் தடுத்தது. 

இதுவரை சீனிதான் பார்த்துக் கொண்டான் என்றாலும், ராகவன் அவர்கள் சூப்பர் மார்க்கெட்டில் தானே வேலை பார்த்தான். 

“உங்க எம்ப்ளாய்ஸ்க்கு நீங்கதான் பாஸ் ரென்ட்டல் அலவன்ஸ், பஞ்சப்படி எல்லாம் கொடுக்கணும்” என்று கெத்தாகச் சொல்லிவிட்டு இவனால் முடிந்தளவிற்கு வாடகையும் கொடுத்தான். அவன் செலவிற்கு அம்மா, அக்கா கையை எதிர்பார்க்காமல் சம்பளமும் வந்தது. 

ஆனால் இப்பொழுதோ முழுதாக தண்டபாணி எனும் பொழுது ராகவன் ரொம்பவே யோசித்தான். 

கிட்டத்தட்ட இலக்கியாவை தண்டபாணிக்கு பேசி முடித்தது போல் தான். முதலில் மறுத்த இலக்கியா ஒரு நாள் அய்யம்மா கைபேசியில் பேசியதில் என்ன மாயமந்திரம் போட்டாரோ தெரியாது, மறுகணமே சம்மதம் சொல்லிவிட்டாள். 

அதன் பிறகுதான் பெங்களூரிலிருந்து சென்னைக்கு, வந்துவிட்டான் தண்டபாணி. 

*****

வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது. 

“அவங்க எல்லாம் வந்துட்டாங்க போலம்மா. சீக்கிரம் வாங்கம்மா!” 

இவ்வளவு நேரமாக அழுது வடிந்தவன், கார் சப்தம் கேட்டதும், வந்தவர்களை வரவேற்க சிறு பிள்ளைபோல் வாசலுக்கு பாய்ந்து ஓட, அவனது ஆர்வம் பார்த்து சிரிப்பு வந்தது இருவருக்கும். 

“இன்னும் இவன் வளரவே இல்லடி. அந்தத் தம்பி சொல்றது சரிதான் போல!” சுகந்தியும் வந்தவர்களை வரவேற்க மகன் பின்னாலே சென்றார். 

மீண்டும் ஒரு முறை முழுவதுமாக தன்னை‌ கண்ணாடியில்‌ சரிபார்த்துக் கொண்டாள் இலக்கியா. கார் வந்து நின்றது தெரிந்தது. சன்னல் வழியாக வாசல் பக்கம் பார்வை‌ சென்றது. 

முதலில் வந்த காரிலிருந்து சீனியும், பழனியும் இறங்கினர். பழனி கையில் ஆறு மாதம் கூட முழுமை பெறாத அவர்களது மகன் குகன். பட்டுப் பாவாடை சட்டையணிந்து, சீனியின் கைபிடித்து இறங்கி நின்றாள் அமிர்தா. அவர்களோடு பொதிகாச்சலமும் வந்திருந்தார். தண்டபாணிக்கு ஒரு நல்ல காரியம் எனும் பொழுது மனிதர் முதல் ஆளாகக் கிளம்பிவிட்டார். 

சீனி கூட முதலில் யோசித்தான். அப்பா வந்தால் அவர்கள் பக்கத்து சொந்தங்கள் ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று. ஆனால் அதைப் பற்றியெல்லாம் அவர் யோசிக்கவில்லை. 

“ஊருக்கு மாவு இடிக்கணும்னா‌ முத ஆளா கிளம்பிற வேண்டியது. நம்ம வீட்டுலயும் வாழ வேண்டிய வயசுல ஒரு பொண்ணு இருக்கறது கண்ணுக்குத் தெரியல!” 

காந்திமதி பொடுபொடுக்க, காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை பொதிகாச்சலம். அவர் மகளால் அந்த குடும்பத்திற்கு நேர்ந்த அவமானம். இத்தனை வருடங்களாக தடைபட்ட தண்டபாணி திருமண வாழ்க்கை. அதுதான் அவர் கண்முன் நின்றது. சம்பந்தி முறைக்கு வந்துதான் ஆவேன் என விடாப்பிடியாக நின்றுவிட்டார். 

பின்னால் வந்த காரில் கலையரசி, தணிகைவேல், தண்டபாணியோடு அவனது சித்தப்பா பெண்கள் இருவர் என இறங்கினர். அதன் பின்னாலே இன்னொரு வேனில் அவரது சித்தப்பா, பெரியப்பா, அத்தைகள் குடும்பங்களிலிருந்து எல்லாரும் வரமுடியாத பாட்டிற்கு குடும்பத்திற்கு ஒருவரென கிட்டத்தட்ட இருபது பேருக்கு மேலிருக்கும். ஏற்கனவே சொன்னதுதான் என்பதால் இவர்களும் அனைத்திற்கும் தயாராக இருந்தனர்.

இன்று இலக்கியாவை பெண் பார்க்க வருகிறார்கள். கிட்டத்தட்ட நிச்சயம் மாதிரி தான். ஏற்கனவே பேசி முடிவு பண்ணியாயிற்று. பெண் பார்க்கும் சம்பிரதாயமும், கூடவே பூ முடித்து ஒப்புத் தாம்பூலமும். 

தங்கைகளோடு இறங்கியவன் பின்னால் வந்து கார் டிக்கியைத் திறந்து தட்டு மற்றும் பூ, பழம் அடங்கிய பைகளை ஒவ்வொன்றாக எடுத்து தங்கைகளிடமும், பெரியம்மா, சித்தி, அத்தைகளிடமும் கொடுத்தான். 

பாசிப்பயறு பச்சையில் முழங்கைவரை மடித்துவிடப்பட்ட  சட்டையும், ஆற்று மணல் கலரில் கால்சட்டையும் அணிந்திருந்தான். வலக்கையில் தங்கத்தில் கைச்செயின், இடக்கையில் வாட்ச், கழுத்தில் மெல்லிய பட்டையான ஓம் டாலரோடு கூடிய தங்கச் சங்கிலி போட்டிருந்தான். கண்களை மறைத்து குளிர் கண்ணாடி. அளவாக நறுக்கிய மீசை. சுத்தமாக மழிக்கப்பட்டு பளபளக்கும் கன்னம். 

“என்னடாயிது… எப்ப பாத்தாலும் ரெண்டு நாள் தாடியோட. ஒழுங்கா மாப்பிள்ளையா லட்சணமா ஷேவ் பண்ணிட்டு வா!” தணிகைவேல் போட்ட உத்தரவில் மழமழவென மழித்த கன்னம் பளபளத்தது. 

அவன் பைகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுக்க ஒவ்வொருவராக வாங்கிக் கொண்டு வீட்டினுள் சென்றுவிட்டனர். 

தனது கைபேசியை‌ எடுத்தவன், ஏதோ டைப்‌ செய்து யாருக்கோ குறுந்தகவல் அனுப்ப அடுத்த நொடி இலக்கியா கைபேசிக்கு தகவல் வந்ததற்கான ஒலி எழுப்பியது. 

கையிலிருந்த கைபேசி பதட்டத்தில் சட்டென நழுவப் பார்க்க இறுக்கிப் பிடித்தாள். மேலோட்டமாகவே அவனிடமிருந்துதான் என்பதைப் பார்த்தவளுக்கு உள்ளுக்குள் படபடத்தது. இருவரது எண்ணும் இருவரிடம் இருந்தது தான். இதுநாள் வரை ஒரு தடவை கூட பேசியது கிடையாது. ஏன்… ஒரு மெசேஜ் கூட இல்லை. 

இன்று தான் முதன் முதலாக மெசேஜ் வந்ததற்கான சமிக்ஞை ஒலி. சட்டென கைகள் வியர்த்து ஃபோன் நழுவியது. படபடப்போடு எடுத்துப் பார்த்தவள், கண்கள் ஆச்சர்யத்தில் எக்ட்ஸ்ட்ரா லார்ஜ் அளவிற்கு விரிய, மீண்டும் வெளியே பார்வையை ஓட்ட, ஓகேவா என்பது போல் கட்டை விரலை உயர்த்தி கேட்க, மாட்டிக் கொண்ட உணர்வில் மூச்சடைத்தது. 

அவள் எதிர்பார்க்கவில்லை. அதுவும் இவனிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. திரும்பக்கூட இல்லையே. எப்படி கண்டுபிடித்தான் என்ற சிந்தனைதான் அவளுக்குள். தெரியாமல் அவனை  ஃபோட்டோ எடுத்தது வரை கண்டுகொண்டானே. 

‘ஃபோட்டோ எடுத்தது போதுமா. உள்ளே வரலாமா?’ என்று தான் கேட்டிருந்தான். 

இந்தப் பக்கமாகத் திரும்பிய மாதிரி கூட இல்லையே. அவள் எடுத்த ஃபோட்டோக்கள் எல்லாமே அவனது முதுகும், பக்கவாட்டுத் தோற்றம் மட்டுமே. அதுவும் தங்கைகளின் மறைவில் அறையும் குறையுமாக அவசரமாக எடுத்து வைத்திருந்தாள். எப்பொழுது நம்மை பார்த்தார். 

அவள் அதிர்ந்து அப்படியே நிற்க, அடுத்த மெசேஜ் டோன். 

‘இப்போ எடு’ என்பது போல் அவளையே‌ பார்த்து நிற்க, ஃபேட்டாவாவது ஒன்னாவது. இவளுக்கு தான் அதற்கு மேல் எங்கே அவனைப் பார்ப்பது. ஃபோட்டோ எடுப்பது. 

அடுத்த மெசேஜ் டோன். 

ஓபன் பண்ணாமலேயே மேலோட்டமாகவே தெரிந்தது. 

‘சாரி(saree) செம!’

இவள் அதிர்ந்து விழிப்பதைப் பார்த்து, கண்ணாடியைக் கழற்றி சட்டையில் மாட்டியவன் கண்களில் குறும் புன்னகை. சட்டென புருவம் உயர்த்த படக்கென முகத்தை உள்ளிழுத்துக் கொண்டவள், சுவற்றில் சாய்ந்து படபடத்த நெஞ்சின்‌ மீது கைவைத்து கொண்டாள். முகம் சடுதியில் செங்குழம்பை அப்பிக் கொண்டது. 

மீண்டும் ஒரு முறை தன்னை கண்ணாடியில் சரி பார்த்துக் கொண்டவளுக்கு, சென்னையில் அவனை முதன் முதலாக சந்தித்த நாள் கண்முன் காட்சியாக, வதனம் புன்னகையில் பூவாய் மலர்ந்தது. 

23 thoughts on “ மாமா! மாப்ளே! 1”

  1. ஆஹா தண்டபானி பொண்ணு பாக்க வந்தாச்சா. சூப்பர். வந்த உடனே பொண்ணுக்கு ரொமாண்டிக்கா ஷாக்(?! சர்ப்ரைஸ்)லாம் கொடுக்கறாரே!

  2. திலகா

    நீங்க story start பண்ண போறது தெரியாதே mam…
    But அட்டகாசமான ஆரம்பம்….
    Super…🥰😍😍😍

  3. நல்லா இருக்கு ராகவன் சேட்டை தண்டபாணி இவ்ளோ நாள் இந்த ரொமான்ஸ் எங்க வச்சிருந்தான் ரெண்டு மூணு இடத்துல போட்டோ ஸ்பெல்லிங் மிஸ்ட்கே இருக்கு பார்த்துக்கோங்க

  4. அடேய் தண்டபாணி நீயடா இது. அது என்ன கடு கடுன்னு இருக்குறவங்கல்லாம் ரொமான்ஸ்ல பின்றாங்கன்னு தெரியலையே

    1. Welcome ma 🥰 sunday disturb panna ventamennu thaan. Nalaikkum varalainna kathavai thattiruppom.

      Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫 o

    1. முக்கனியும் சக்கரையும் தொடர்ச்சி மா🥰

      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  5. Vatsala Ramesh

    ராகுவின் அலப்பறை…👍
    தண்டபாணி ரொமான்ஸ்..பின்னியடுக்கிறாரே..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top