9
“அம்மாஆ…” எனப் பதறினாள் ராகினி.
அக்காவிடம் பேசிவிட்டுத் திரும்பிப் பார்க்க, பூங்கோதை தலையைப் பிடிப்பது தெரிந்தது. அவளது பதட்டத்தில் தான் ஜெகதாம்பாள் பாராயாணம் தற்காலிகமாக மட்டுப்பட்டது.
வேகமாக வந்து அம்மாவை கைத்தாங்கலாகப் பிடித்தவள், மெதுவாக அழைத்து வந்து சோஃபாவில் அமரவைத்தாள். உள்ளே சென்று தண்ணீரோடு, லோ பிரஷருக்கான, மாத்திரையும் எடுத்துவந்து கொடுத்தாள்.
அவளுக்கு நன்கு தெரியும். மாத்திரை போட்டிருக்க மாட்டார் என. சாப்பிட்டால் தானே மாத்திரை போடுவதற்கு. கல்யாண அலைச்சல், மகளைப் பற்றிய மன உளைச்சல் என தன்னை கவனித்திருக்க மாட்டார்.
அப்பொழுதுதான் மிதுனும் தூங்கி எழுந்து வந்தான். தூக்கக் கலக்கத்தோடு அம்மாவின் மடியில் அமரப்போக, அம்மாவின் கையில் மாத்திரையை கொடுத்துவிட்டுத் தம்பியைத் தூக்கிக் கொண்டாள். அவனை இடுப்பில் வைத்துக் கொண்டே அடுக்களை சென்றவள், மேடையில் அமரவைத்துவிட்டு பால் காய்ச்சி எடுத்து வந்தாள். பாலை தம்பியின் கையில் கொடுத்து அம்மாவின் பக்கத்தில் அமரவைக்க,
அம்மா மாத்திரை போடுவதைப் பார்த்த மகன், “ஃபீவராம்மா…” கேட்டுக்கொண்டே எக்கி, கழுத்தில் கைவைத்துப் பார்த்தவன், “அப்போ உனக்கு இன்னைக்கி ஹாலிடேவாம்மா!” என்றான், அவனுக்குத் தெரிந்த வகையில். அவனுக்கு உடம்பு சரியில்லை என்றால் ஸ்கூலுக்கு மட்டம் போடும் பழக்கத்தில். சிறு புன்னகையோடும், அயற்சியோடும் மகனை அணைத்துக் கொண்டார் பூங்கோதை. அவனுக்கிருக்கும் அக்கறை கூட பெரியவர்களுக்கு இல்லையே என.
“இந்தா ஆரம்பிச்சிட்டா… மயக்கம் போட்டு பசப்பறதுக்கு. இந்த வயசுலயே, சுகர், பிரஷர்னு உடம்புல ஊர்ப்பட்ட வியாதி. எம்மகனுக்கு இவளக் கட்டிவச்சு, அவன் வாழ்க்கையே வீணாப்போச்சு. டாக்டருக்கே பாதி காசு போயிரும்போல.” அதற்கும் அங்கலாய்த்தார் ஜெகதாம்பாள்.
தன் மகன் இவ்வளவு வசதி வாய்ப்போடு வளர்ந்து வருவான் எனத் தெரிந்திருந்தால், இன்னும் நல்ல இடத்தில் பெண்ணெடுத்திருக்கலாமே என்ற ஆதங்கம் ஜெகதாம்பாவிற்கு எப்பொழுதும் உண்டு.
இருபது வருடங்களுக்கு முன்பே, பூங்கோதையும் ஐம்பது பவுன் நகை, பித்தளை, எவர்சில்வர் என இரட்டைச் சீர், கட்டில், மெத்தை, மாப்பிள்ளைக்கு வண்டி என ஊர் மெச்ச சீர்கொண்டு வந்தவர்தான். இருந்தாலும் போதவில்லை ஜெகதாம்பாவிற்கு. வெள்ளத்தோலக் காட்டி எம்மகன மயக்கிட்டாங்க என அங்கலாய்ப்பார்.
சிறுவயதிலேயே பத்திரப் பதிவுத் துறையில் கை குளிர வருமானம் பார்த்தார் வாசுதேவன். ஏக்கர் கணக்கில் நிலங்களை வீட்டு மனைகளாகப் பிரிக்க, பிளானும் வரைந்து கொடுப்பார். அதற்கு பணமாக வாங்காமல் குறைந்த விலையில் வீட்டு மனைகளாகவே வாங்கிக் கொள்வார். அவருக்குத் தெரியும். எந்த ஏரியா எப்படி டெவலப் ஆகுமென்று.
அப்படி அன்று அவர் வாங்கிப்போட்ட வீட்டு மனைகளின் மதிப்பெல்லாம் இன்று உச்சாணிக்கொம்பேறி நிற்கிறது. மகனைப் பற்றிய மமதை எப்பொழுதும் உண்டு ஜெகதாம்பாவிடம். மகனைத் தூக்கி வைத்தே பேசுவார்.
பூங்கோதையைத் திருமணம் செய்யும் பொழுது சாதாரண நடுத்தரக் குடும்பம் தான். சொல்லப்போனால் பூங்கோதை குடும்பத்தளவிற்கு கூட வசதி இல்லை. அரசாங்க உத்தியோகத்தைப் பார்த்துதான், காலத்திற்கும் கவலையில்லையெனப் பெண் கொடுத்ததே. அதன் பிறகுதான் இந்த வசதி வாய்ப்பெல்லாம்.
மாமியார் பேச்சை பூங்கோதை கண்டு கொள்வதில்லை. இன்று மட்டும் என்றால் கண்டு கொள்ளலாம். என்றைக்கும் கண்ட திருநாள் தானே. அவர் பேசப்பேச ராகினிக்குதான் ஆத்திரம் பொங்கியது. வீட்டு நிலவரம் சரியில்லாமல் இருக்க, இப்பொழுது வாய் திறந்தால் அதையே பிடித்துக் கொள்வார் எனத் தெரிய, பல்லைக் கடித்துப் பொறுத்துப் போனாள். கணவனின் ஆதரவு பெண்ணிற்கு இருந்தால் தானே மாமியாரும் கொஞ்சம் அடங்கிப் போவார். அதுதான் இங்கில்லையே.
ஆனால், மாதங்கி அப்படி இருக்க மாட்டாள். அப்பா வீட்டில் இல்லை என்றால், அம்மாவைப் பற்றி ஒரு சொல் சொல்ல விடமாட்டாள். அப்பத்தாவிற்குப் பதிலுக்குப் பதில் கொடுப்பாள். அவளுக்குமே அப்பா இருந்தால் வாய் திறக்க பயம்தான். வாசுதேவன் வீட்டில் இருந்தால் யாருக்கும் பெருமூச்சு கூட வராது.
இல்லாத பொழுது ஜெகதாம்பாளிடம் ஏதாவது சொல்லி வெறுப்பேற்றுவாள்.
அதில் ஒன்றுதான், “நான் லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்ணிப்பேன். உன் மகன் கண் முன்னவே கல்யாணம் பண்ணி உன்னையும், உன் மகனையும் பெருமைப் படுத்துவேன்” என வாய் இருக்க மாட்டாமல், ஜெகதாம்பாளை வெறுப்பேற்ற கோபமாக சவால்விட்டது.
அதையும் அன்றே மகன் வந்ததும் சொல்லிவிட, பெல்ட்டால் மகளை விளாசித் தள்ளிவிட்டார் வாசுதேவன். அடிக்குப் பயந்துதான் எல்லாரும் வாசுதேவனுக்கு அடிபணிந்து போவது. மறுநாளே அப்பாவின், கார் டயரைப் பங்சராக்கி, வேலைக்குக் கிளம்பும் அவசரத்தில் அவர் தவித்து நின்றதைப் பார்த்து தன் மனதை சாந்தப்படுத்திக் கொண்டாள் மாதங்கி. ஒருத்தரை வெறுப்பேற்றிப் பார்க்க வேண்டும் என முடிவெடுத்து விட்டால் எந்த வகையிலாவது நிறைவேற்றிக் கொள்வாள்.
இதையெல்லாம் பார்த்த பிறகு சின்னவளுக்கு எங்கே அப்பாத்தா முன் வாய் திறக்க தைரியம் வரும்.
‘உனக்கும், உன் மகனுக்கும் வயித்த நாலா, மூனா கிழிச்சுத் தச்சிருக்கணும்! அப்பத் தெரியும்’ மனதிற்குள் தான் அப்பத்தாவை வறுத்தெடுக்க முடிந்தது ராகினியால்.
பூங்கோதைக்கு மூன்று பிரசவமுமே சி செக்ஷன்தான். மூன்றாவது குழந்தை முடியவே முடியாது என மருத்துவர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் ஆண் பிள்ளை வேண்டுமென, பிடிவாதமாக நின்றுவிட்டார் ஜெகதாம்பாள். பிரசவம் சி செக்ஷன் எனும் பொழுது அதிகபட்சம் இரண்டு குழந்தைகளுக்கு தான் வாய்ப்பு. அரிதாகத்தான் மூன்றாவது குழந்தை.
“என் மகன் சாதகத்துல மூனாவது தான் ஆம்பளப்பிள்ளை பிறக்கும்னு சொல்லிருக்கு. அதனால குடும்பக் கட்டுப்பாடு பண்ணக்கூடாது என பிடித்த நிலையில் நின்றுவிட்டார்.
பெரும்பாலும் இரண்டு பிரசவம் சி செக்ஷன் எனில், இரண்டாவது பிரசவத்தின் போதே குடும்பக் கட்டுப்பாட்டிற்கான அறுவை சிகிச்சையும் செய்து விடுவர். இரண்டாவதும் பெண் பிள்ளை என்று தெரிந்தபிறகு, வாசுதேவனும், அம்மா என்ன சொல்றாங்களோ அதுதான் என்று பட்டும்படாமல் ஒதுங்கிக் கொண்டார்.
அவர்கள் குடும்பத்தார் சம்மதமில்லாமல் எப்படி ஆப்ரேஷன் செய்வதென பூங்கோதை பிறந்த வீட்டாருக்கும் சம்மதிக்க பயம்.
மருத்துவர்களும் எங்களுக்கென வந்தது என கன்செர்ன் ஃபார்மில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர்.
ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி கிளிக்கூண்டில் இருக்கும் இளவரசியின் உயிரை மீட்டு வருவது போலத்தான், ஒரு சி-பிரிவின் போது, தோல், தோலடி கொழுப்பு, திசுப்படலம், தசை, பெரிட்டோனியம், கருப்பை, இறுதியாக, அம்னோடிக் பை என வயிற்றின் ஏழடுக்குகளை கீறித்தான் ஒரு குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.
பூங்கோதை மூன்றாவது குழந்தையும் கருத்தறிக்க, ஜெகதாம்பாள், தனக்குத் தெரிந்த உறவு வகையில் இருந்த மருத்துவரை அணுகி, பேச வேண்டிய விதத்தில் பேசி, கொடுக்க வேண்டியதைக் கொடுத்து, ஸ்கேன் செய்து பார்க்க மூன்றாவதும் பெண் குழந்தை எனத் தெரியவந்தது.
அதையும் கருக்கலைப்பு செய்த பிறகு பதிமூன்று வருடங்கள் கழித்தே மிதுன் பிறந்தான். அதுவும் ஸ்கேன் செய்து ஆண் குழந்தை என உறுதிப் படுத்தியபிறகே. மூன்று சி செக்ஷன் பிரசவம், ஒரு அபார்ஷன் என இதிலேயே பூங்கோதை உடல் உழன்று போனது. பொதுபொதுவென உடம்பும் வைத்துவிட்டது.
இந்த வயதிலும் வாசுதேவன் வாக்கிங், உடற்பயிற்சி என உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க, பூங்கோதைக்கு தன் உடம்பைப் பற்றி யோசிக்கக்கூட நேமில்லாமல் மூன்று பிள்ளைகள், புருஷன், மாமியார் என அவர்கள் பின்னே ஓடுவதற்கே நேரம் போதவில்லை.
துணைக்கு, சர்க்கரை, இரத்தக் கொதிப்பு என அத்தனையும் தஞ்சம் என ஆனது.
காலநிலையை இயற்கை எப்படி வசந்தகாலம், கோடைகாலம், மழைக்காலம், குளிர்காலம் என வகுத்து வைத்திருக்கிறதோ, அதே மாதிரித்தான் மனிதனுக்கும் மழலைப் பருவம் முதல், முதுமை வரை பல பருவங்களை இயற்கை வகுத்து வைத்திருக்கிறது.
பருவ காலங்கள் முரண் படும் பொழுது எப்படி இயற்கை சீற்றமடைகிறதோ, அதே மாதிரி தான் மனித உடலும். இயற்கையோடு இயைந்து கை குலுக்கிச் செல்லும் வரைதான் உடம்பு உடம்பாக இருக்கும். அதை மாற்ற நினைக்கும் பொழுது அதற்கான எதிர்வினையை சந்தித்தே தீரவேண்டும்.
சரியில்லாத ஒன்றை சரி பண்ணத்தானே மருந்தும் மாத்திரைகளும். சரியாக நிகழும் ஒன்றை மருந்து மாத்திரைகள் கொண்டு மாற்றி அமைக்கும் பொழுது, நான் ஒழுங்காகத் தானே இருக்கிறேன், ஏன் திருத்தி அமைக்கிறாய் என அதற்கான எதிர்வினையை உடம்பும் காட்டத்தானே செய்யும்.
ஒரு பெண் ருது ஆனதில் இருந்து இருபத்தியெட்டு நாட்களுக்கு ஒரு சுழற்சி என, மாதவிடாய் நிகழ்ந்து கருப்பை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும்.
அச்சுழற்சியை நிறுத்தி வைக்கும் பொழுதோ, மாற்றியமைக்கும் பொழுதோ அதற்கான எதிர்ப்பை அது காட்டத் துவங்குகிறது.
பூங்கோதையும் வேலை செய்ய வேண்டுமே என்பதற்காக மாதாந்திரத்தின் போது தொடர்ந்து எடுத்துக் கொண்ட வயிற்றுவலி மாத்திரைகளும், நல்ல நாள், விசேஷ நாள் என வந்துவிட்டால், மாதாந்திரத்தைத் தள்ளிப்போட, மருத்துவ ஆலோசனையின்றி அடிக்கடி எடுத்துக் கொண்ட மாத்திரைகளும் தன் வேலையைக் காட்டியிருந்தன.
கர்பப்பையில் நீர்க்கட்டிகள் சேர்ந்து, ஒழுங்கற்ற மாதவிடாயில் தொடங்கி, அடிக்கடி உதிரப் போக்கு என வந்து நிற்கிறது. நாற்பதின் தொடக்கத்திலேயே மெனோபாஸிற்கான அத்தனை அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்துவிட்டன. ஒழுங்காக முழு வளர்ச்சியடைந்து, வெடிக்காத கருமுட்டைகள் தான் நீர்க்கட்டிகளாக உருமாறுகின்றன.
நீர்க்கட்டிகளை நீக்க ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் எப்பொழுதோ சொல்லிவிட்டனர். இவர் தான் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டு நாள் கடத்திக் கொண்டிருக்கிறார். ஆப்ரேஷன் செய்து படுத்துக் கொண்டால் பிள்ளைகளையும், வீட்டையும் யார் பார்ப்பது என்ற யோசனை.
பிரசவத்திற்கு தான் அம்மா பார்த்துக் கொண்டார். இப்பொழுது அவருக்கும் வயதாகி விட்டது. மருமகள்கள் இருவருமே நீ கொஞ்ச நாள், நான் கொஞ்ச நாள் என எசலி போட்டுப் பார்க்கிறார்கள். இதில் நம்மை யார் பார்ப்பது என, முதலில் பிள்ளைகள் படிப்பு முடியட்டும் என்றார். இப்பொழுது கல்யாணம் முடியட்டும் என்கிறார். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்று மாத்திரை போட்டே சமாளித்துக் கொண்டிருக்கிறார். பெண் பிள்ளைகள் வளர்ந்து விபரம் தெரியவும் தான் அம்மாவுக்காக சற்றே கை கொடுத்தனர். அவர்களுக்கும் பள்ளி, படிப்பு என சரியாகத்தான் இருந்தது.
விடுமுறை நாட்களில் முடிந்தவரை அம்மாவிற்கு உதவியாக இருந்தனர்.
வெகு நேரமாக வீடு அமைதியாக இருக்க, கதவு திறந்து வெளியே வந்தார் வாசுதேவன். அப்பாடா என பெருமூச்சு வாங்கி ஆசுவாசப்பட்டார் பூங்கோதை.
எது எங்கிட்டு கிடந்தாலும் நடக்க வேண்டியது நடந்தாக வேண்டுமே. பொம்பள ஜென்மம் தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துட்டுக் கிடந்தாலும், எந்திரிச்சு வந்து, முடிக்க வேண்டியத முடிச்சு வச்சுட்டு தான் இழுத்திட்டுக் கிடக்கணும். அடிக்கடி பூங்கோதை சொல்லும் வாக்கியம் இது.
கணவரைப் பார்த்ததும் காஃபி போட எழுந்தார் பூங்கோதை.
“ம்மா… நான் போடுறேன். நீங்க உக்காருங்க” ராகினி அடுப்படி செல்ல,
“வேண்டாம் ராகினி. நீங்க போட்டா உங்க அப்பாவுக்குப் பிடிக்காது. அதான் மாத்திரை போட்டாச்சுல்ல. தலை சுத்தாது. நீ போய் காலேஜ் கிளம்பு!” மகள் பின்னாலே அடுப்படி வந்துவிட்டார்.
“இன்னைக்கி லீவு போட்டுக்கறேன் மா. உங்களால முடியாது. தம்பியை ஸ்கூலுக்கு கிளப்பி விடுறேன். அவன் இருந்தா நீங்க ரெஸ்ட் எடுக்க முடியாது. சிம்பிளா ஏதாவது செஞ்சுக்கலாம். இல்லேனா கடையில வாங்கிக்கலாம். அக்கா வேற நாளைக்கு மறுவீடு வர்றாங்க. வேலை இருக்கும்ல.”
“உங்க அப்பாவுக்கு கடையில வாங்கினா பிடிக்காதுன்னு தெரியும்ல ராகினி” என்றார். சைவம் என்றாலும் கூட்டு, பொறியல், ரசமென வகைதொகையாக வேண்டும். அசைவம் என்றாலும் நீந்துவன, பறப்பென எல்லாம் வேண்டும்.
“ஒரு நாள் தானம்மா. உங்களுக்கும் முடியலைல்ல. அவருக்கு சிம்ப்ளா செஞ்சாலும் பிடிக்காது. நாளைக்கும் வேலை அதிகம் இருக்கும்!” என்ற பிறகுதான், அவர்களை மறு வீடு அழைக்கச் செல்வது யார் என்ற யோசனையே ஓடியது.
இதை இவரிடம் இப்பொழுது பேச வேண்டுமே. நாளை விருந்திற்கான ஏற்பாடெல்லாம் பண்ண வேண்டும். விதண்டாவாதம் பிடித்த மனிதனை வைத்துக் கொண்டு எப்படி சமாளிக்க. வாதத்திற்கு தான் மருந்து இருக்கிறது. பிடிவாதத்திற்கு மருந்து ஏது?
நாளைக்கு வீட்டிற்கு வரும் மருமகனிடம் முகம் காட்டாமல் இருக்க வேண்டுமே. திருமணம் வேண்டாம் என அழுது, சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்து, ஆர்ப்பாட்டம் செய்த மகளைத் திருமணம் செய்து கொடுத்து, கடமை முடிந்ததென வந்துவிட்டோமே? மகள் எப்படி இருக்கிறாளோ?
மாப்பிள்ளைக்கும் திடீர் கல்யாணம். இரண்டு பேருக்கும் எப்படி ஒத்துப் போகுமோ? படிக்கவும் இல்லை. மகள் எதிர்காலம் என்ன ஆகுமோ என்று நினைத்த மாத்திரத்தில் தலை மீண்டும் சுற்றுவது போலிருக்க, தலையை உலுக்கிக் கொண்டார்.
“என்னம்மா!” ராகினி பதற,
“ஒன்னுமில்ல… நீ போய் தம்பியக் கிளப்பு. நாளைக்கு லீவு போடு. இன்னைக்கி சமாளிச்சுக்கறேன்” என்றவர் வாசுதேவனுக்கு காஃபி கலக்கினார்.
காஃபியை எடுத்து வந்து கொடுக்க, விளக்கெண்ணெய் குடித்த முகம்போல வைத்துக் கொண்டு தான் கஃபியை வாங்கினார் வாசுதேவன்.
அவர் பேசமாட்டார். இவர்தான் பேசியாக வேண்டும். மானம், ஈனம் பாத்தா வேலைக்காகாது. அது எல்லாம் பொம்பளைக்கு எதுக்கு என ஓரம் கட்டி இருபது வருடங்களுக்கு மேலாகிவிட்டது.
“ஏங்க… நாளைக்கி மறுவீடு அழைக்கப் போகணும்” என்றார் தயக்கமாக. கேட்டும் கேட்காதது போல் அமர்ந்திருந்தார். முதல் முறை, யாராவது போய் தானே மணமக்களை அழைத்து வரவேண்டும். இந்நேரம் சுகந்தியும் அங்கிருந்து கிளம்பியிருப்பார். யார் போவது என்ற கேள்வி.
“அதை ஏன் அவன் கிட்ட சொல்ற. அத்தை முறைக்கு என் மக போயிட்டால்ல. நாளைக்கு மறுவீடு அழைக்க உன் பொறந்தவங்க யாரையாவது போகச் சொல்லு. அப்படியே யாருக்கு வந்த விருந்தோனு மண்டபத்தோடு போயிட்டாங்க. இதுதான் தாய்மாமனுக செய்ற முறையா?” மகன் வெளியே வர மீண்டும் தொண்டையைத் திறந்தார் ஜெகதாம்பாள்.
அவர்கள் போகத்தயார் தான். ஆனால் இவர்தானே அதைச் சொல்லவேண்டும். அண்ணன்கள் எதிர்பார்க்க மாட்டார்கள் தான். ஆனால் அண்ணிகள் மரியாதை எதிர்பார்ப்பார்களே. இவர் ஒருவார்த்தை ஃபோனில் சொன்னால் கூட போதுமே.
“மாப்பிள்ளை வீட்டுக்கும் நாமதாங்க அழைப்பு சொல்லணும். நீங்க சொன்னா தான் மரியாதையா இருக்கும். எங்க அண்ணன்கிட்டக்கூட நான் பேசிக்கிறேன். ஆனா, சம்பந்திகிட்ட நீங்க தானே பேசணும். ஈரோட்டுலேயே எவ்ளோ பெரிய குடும்பம். நீங்க தானே அவங்களைப் பத்தி பெருமையா சொன்னீங்க. அவங்ககிட்ட எப்படி நடந்துக்கணும்னு உங்களுக்குத் தெரியாததா? இதப்பத்தி எனக்கென்னங்க தெரியும்? நான் சொல்லியா உங்களுக்கு இதெல்லாம் தெரியப்போகுது? அவங்ககிட்ட உங்க மரியாதை என்னாகறது? உங்கள வரைமுறை தெரியாதவங்கன்னு நெனச்சுறக் கூடாது பாருங்க! அப்பறம் நீங்க இவ்வளவு செஞ்சும் என்ன பிரயோஜனம் சொல்லுங்க!” மானே, தேனே, பொன்மானே எல்லாம் போட்டு அவரைத் தூக்கி வைத்துப் பேச,
“ஆமா வாசு! என்னமோ சீமையில இல்லாத மகனைப் பெத்திருக்குற மாதிரி, ஆனை மேல அம்பாரி, குதிரை மேல சவாரின்னு பேசினாங்க. கடைசில அவனே வரல. ஒப்புக்கு ஒருத்தன மாப்பிள்ளைனு கூட்டி வந்தாங்க. கடைசியாத்தானே தெரியுது எல்லாம் இவளுக போட்ட திட்டம்னு!” வாசுதேவனே மறந்து சம்மதித்தாலும், இவர் எடுத்துக் கொடுக்க,
‘போச்சு… இவரே இப்ப தான் மலையிறங்கிருக்காரு. இவங்க மறுபடியும் அதையே ஆரம்பிக்கிறாங்களே?’ பூங்கோதைக்கு உள்ளுக்குள் பதறியது.
“அத்தை… கோயில்ல, கல்யாணக் கூட்டத்துல என்ன நடந்ததுன்னு எத்தனை தடவை மாதங்கி சொன்னா. யாரோ சொல்றத நம்புறீங்க. பெத்த பிள்ளைய நம்பமாட்டீங்கறீங்களே!” மனம் ஆற்றமாட்டாமல் கேட்க,
“அதுக்கு தான் காலேஜ் போரேனு பொய் சொல்லிட்டு கோயிலுக்கு போனாளா?”
“எங்கிட்ட சொல்லிட்டு தான் அத்தை போனா!”
“அப்ப… எம்மகனுக்கு இந்த வீட்ல மரியாதை இல்ல. அவன்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல!” எனக்கேட்க, ஆயாசமாக வந்தது பூங்கோதைக்கு. பேசாமல் கணவனின் முகம் பார்க்க,
“மறுவீடு அழைக்க உங்க அண்ணனப் போகச் சொல்லு. நான் சம்பந்தி கிட்டப் பேசிக்கிறேன்.” காஃபி டம்ப்ளரை கையில் கொடுத்து விட்டு எழுந்து கொள்ள, அதுவே அவருக்குப் போதுமென ஆயிற்று.
*****
“பட்டம்மா… கொஞ்சம் ஒதுங்கிக்கோயேன்… ப்ளீஸ்… ப்ளீஸ்.” கெஞ்சியவளை, சாட்டை போல் இருபுறமும் வாலைச்சுழற்றி, முட்டைக் கண்ணைக் காட்டித் திரும்பிப் பார்க்க அவளுக்குதான் அடிவயிறு சொரேன்றது.
அது நாட்டு மாடு என்பதால் நல்ல வளர்த்தியில், வளைந்து கொடுக்காமல் வான் நோக்கி வளர்ந்திருந்த, கூர்மையான கொம்பும் சேர்ந்தே பயமுறுத்தியது.
‘ஆத்தீ’ என்றது உள்மனம்.
“எங்க ஜெகதாம்பா பார்வைக்கே நான் அசறமாட்டேனாக்கும். இன்னைக்கி எங்க வீட்டுக்குப் போகணும். சீக்கிரம் கிளம்பணும். அவங்ககிட்ட மட்டும் எப்படி பொட்டாட்டம் இருக்க. துணிய மட்டும் காயப் போட்டு போயிர்றேனே. ப்ளீஸ்… ப்ளீஸ்… கொஞ்சம் வழி விடேன்.” வழி மறித்து நின்ற மாட்டோடு பேச்சு வார்த்தை நடத்தியவளை, சன்னல் வழியாகப் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது. கூடவே அவள் பேச்சில் துளிர்த்த மரியாதையும்.
நேரம் காலை ஆறு மணி. இந்நேரத்திற்கே எழுந்து, குளித்து, துணி துவைத்து காயப்போட பின்னால் சென்று விட்டாள். மாடு வழி மறித்து நின்றது.
இன்று மறுவீடு அழைக்க வருவதாக நேற்றே வாசுதேவன், தனசேகரனை ஃபோனில் அழைத்து சொல்லியிருந்தார். அதிலிருந்து எப்பொழுதடா பொழுது விடியும் என காத்திருந்தாள். தூக்கமே வரவில்லை. எங்கே அசந்து விடுவோமே என்று கொட்டக்கொட்ட விழித்திருந்தவள் அதிகாலை தனை மறந்து கண் அசந்து விட்டாள்.
அவனிடம் கோபத்தைக் காட்டினாலும், உடை விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. தவறு நம்மிடம் தானே. அவனைக் கோபித்து என்ன பயன் என சொல்லாமலே வயிற்றுவலி மாத்திரையும் வாங்கி வந்தவன் மீது துளியூண்டு கரிசனம் எட்டிப் பார்த்தது. ஆனால் அம்மா படும் அவஸ்த்தையைப் பார்த்தவள் வயிற்றுவலி மாத்திரை எடுத்துக் கொள்ளவில்லை.
எப்பொழுதும் அவள் கோபம் அவ்வளவுதான். அந்த நேரத்திற்கு இருக்கும். தனக்குத் தோன்றியதை யோசிக்காமல் பேசி விடுவாள். கொஞ்ச நேரம் கழித்துக் கேட்டால் என்ன பேசினோம் என அவளுக்கே தெரியாது. மறந்து விடுவாள். தன்னையுமறியாமல் உடை விலகியிருக்க, அப்படியென்ன தூக்கம் என்ற தன் மீதிருந்த ஆத்திரமும் தான் அவன் மீது கோபமாகத் திரும்பியது. கூடவே அம்மாவைப் பற்றிய கவலையும்.
நைட்டியும் இல்லாத நிலையில், அவன் சாப்பிட்டு வருவதற்குள் சேலையை மாற்றிக் கொண்டு, அவன் வாங்கி வந்த இரவு உடையில் படுத்துவிட்டாள். போர்வையையும் தலைமுதல், கால்வரை போர்த்திக் கொண்டுதான்.
இன்றும் வழக்கம் போல் எழுந்தவன் விளக்கைப் போடவில்லை. பழக்கப்பட்ட அறையென்பதால் விடி விளக்கின் வெளிச்சத்திலேயே காலைக் கடன்களை முடித்து வெளியே வந்தவன், இருட்டில் அவனையுமறியாமல் கட்டில் காலில் தட்டிக் கொண்டான்.
“ஷ்ஷ்ஷ்” என அப்படியே கால் மடக்கி அமர்ந்துவிட்டான். சுண்டுவிரல் நுனி கட்டிலில் மோத, நகம் பெயர்ந்து வலி உயிர் போனது.
கட்டிலில் மோதியதால் அந்தச் சத்தத்தில் பட்டென எழுந்து அமர்ந்தாள். ஒன்றும் புரியவில்லை. மதன் காலைப் பிடித்து கீழே குனிந்திருந்தது தெரியவில்லை. தூக்கக் கலக்கத்தோடு கீழே கால் வைத்தவள், அவன் மீதே தடுமாறி விழப் போனவள், சட்டென கட்டிலைப் பிடித்து நிலை கொண்டாள்.
“லைட்டைப் போட மாட்டியா? உன் தலைக்கு மேல தானே ஸ்விட்ச் இருக்கு?” என்றான் கோபமாக.
“இருட்டுல, கீழ நீ என்ன பண்ற?” என்றாள் அவளும் வெடுக்கென.
“ம்ம்ம்… புதையல் தேடுறேன்” என்றான் நக்கலாக அவனுக்கிருந்த வலியிலும்.
எழுந்தவள் கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த சுவிட்சைப் போட்டாள். குனிந்து கீழே என்ன செய்கிறான் எனப் பார்த்தவளுக்கு, நகம் பெயர்ந்து தொடுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அடிவயிறு கூசியது.
“ஷ்ஷ்ஷ்…” என கண்ணையும், மூக்கையும் சுழித்தாள், சுண்டுவிரல் நுனியில் கசிந்திருந்த இரத்தத் துளியைப் பார்த்து.
“ஏய்… என்னதிது… இரத்தம்!” எனப் பதறியவளுக்கு தற்காலிகமாக அவன் மீதிருந்த கோபம் மறந்து போயிற்று.
“லைட்டைப் போடுறதுக்கென்ன?” கோபமாகவே கேட்க,
“நீ எந்தக் கோலத்துல படுத்திருக்கேனு எப்படித் தெரியும்? எனக்கு இன்னொரு மொக்க கவிதை எழுத வராது!” என்றான் அந்த நிலையிலும் நக்கலாக.
“உனக்கு விரல்ல அடிபட்டிருக்கக் கூடாது. வாய்ல அடிபட்டிருக்கணும்” என்றவள்,
“எந்திரி… மருந்து ஏதும் இருக்கா?” என்றாள்.
“எதுக்கு…”
“ம்ம்ம்… நாய் குலைக்கையில குப்பையில போட!”
“காசு கொடுத்து வாங்கி அதை ஏன் குப்பையில போடணும்? அதுவும் நாய் குலைக்கையில?”
“பழமொழி சொன்னா ரசிக்கணும். ஆராயக் கூடாது! முதல்ல எந்திரிச்சு கட்டில்ல உக்காரு!” என்றவளை, அவனது பார்வை உருத்துப் பார்த்தது. அதில் தெரிந்த அழுத்தத்தில்,
“என்ன?” என்றாள் உள்ளிறங்கிய குரலில்.
“மரியாதைக்குப் பெயர்போனது கொங்கு பாஷை.”
“அதுக்கு…” என புரியாமல் புருவம் சுழிக்க,
“ஆனா உங்கிட்ட மருந்துக்கு கூட மரியாதை இல்லையே? மரியாதை… மரியாதை…” சத்யராஜ் பாணியில் சொல்லிக் காட்ட, அப்பொழுதுதான் இவ்வளவு நேரமாக அவனை ஏகவசனத்தில் பேசியதே நினைவுக்கு வந்தது.
“இப்ப அதுவா முக்கியம். எந்திரி” என வாய் வரை வந்து விட, திருத்தி,
“எந்திரிங்கோ… கோ.. கோ…ங்க” என்றாள் நக்கலாக கவுண்டமணி பாணியில் அவளும்.
அவளைப் பார்க்காமலேயே தொடுத்துக் கொண்டிருந்த நகத்தைப் பட்டென்று பிய்த்து எடுத்தான்.
“ஷ்ஷ்ஷ்… என்ன பண்றீங்க” எனப்பதற,
“அப்படியே விட்டா எது பட்டாலும் வலிக்கும்.”
“அதுக்குனு இப்படியா? மருந்திருக்கா? செப்டிக் ஆகப்போகுது!”
“இதெல்லாம் ஒரு காயமா? தோப்புல இந்த மாதிரி அடிக்கடி காயமாகும்! இதப் பாரு!” வலது உள்ளங்கையை விரித்துக் காண்பித்தான். நீளமாய் ஒரு தழும்பு குறுக்குவாக்கில் ஆழமாகப் பதிந்திருந்தது.
“ஷ்ஷ்ஷ்…” என்றாள் முகம் சுழித்து.
“தேங்காய் உரிக்கும் போது பட்டது.” இதெல்லாம் சர்வசாதாரணம் என்பது போல் அவன் பேச, அவனையே பார்த்தாள்.
அவளும் அவன் முன் மண்டியிட்டு, தொடைமீது இரண்டு கைகளையும் ஊன்றி, காயத்தை பார்வையிடும் நோக்கில் முகத்தருகே குனிந்து தான் அமர்ந்திருந்திருந்தாள். இப்பொழுதுதான் அவனை நன்றாக உற்றுக் கவனித்தாள்.
கொங்கு மண்வாகிற்கே உரிய வெளுத்த நிறம், நல்ல உயரம், அடர்ந்த தாடியும், மீசையும். வெள்ளை பனியன் மட்டும் அணிந்திருக்க, முறுக்கேறிய புஜங்கள், உரோமம் படர்ந்த அகன்று விரிந்த மார்பு என பார்வை படற, ஏதோ ஒரு குறுகுறுப்பில் பார்வையை முகத்திற்கு உயர்த்தினாள். அவனும், அவள் தன்னையே பார்ப்பதை அறிந்து கண்கள் சிரிக்கப் பார்த்திருக்க, அந்தப் பார்வை மாதுவை ஏதோ செய்ய, சட்டென எழுந்து கொண்டாள்.
“போய் மருந்து போடு… போடுங்க!” மரியாதையை தவணை முறையில் வழங்கி விட்டு வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.
புன்னகை பூசிய முகமாக, காலை விந்திக் கொண்டே வெளியே வந்தான். பேரன் நடந்து வருவதைப் பார்த்தே, “என்னப்பு?” என்றார் பதட்டமாக.
“இடிச்சுக்கிட்டேன் அப்பத்தா!” என்றான். காயத்தைப் பார்த்தவர், “என்னப்பு, சூதானமா இருக்கக் கூடாதா” என்றவாறே மருந்து எடுத்து வந்தார்.
“பாத்திரத்தை எடுங்க அப்பத்தா! பால் கறந்துட்டு வந்து மருந்து போட்டுக்கலாம். பட்டம்மா வெயிட் பண்ணிட்டிருக்கும்!”
“ஜெகன எழுப்பி விடலாம். இதோட எப்படி சாமி பால் கறப்ப?” என்றவர், பவித்ராவிடம் ஜெகனை எழுப்பிவிடச் சொன்னார். அவளும் கணவனை எழுப்பச் சென்றாள்.
“முதல்ல உட்காரு. எந்திரிக்கும் போதே காயமாகி வந்திருக்க!”
“அப்ப தூங்கும்போது ஆனா பரவாயில்லையா அப்பத்தா!”
“உன் வாயிருக்கே… உங்க தாத்தனாட்டமே நக்கலு” என்றவர்,
“கல்யாணம் முடிஞ்சு ரெண்டு பேத்துக்கும் சுத்திப் போடல. அதான் இப்படியெல்லாம் நடக்குது!” என்றார்.
கண்ணு போடுற அளவுக்கா நம்ம கல்யாணம் சீரும் சிறப்புமா நடந்துச்சு என்ற எண்ணம் அவனுக்குள்.
அதற்குள் ஜெகனும் எழுந்த வந்தான். மதன் காலைப் பார்த்துவிட்டு, “கவனமா இருக்கக் கூடாதாடா” என்றான் அவனும். இன்று அவனே பால் கறந்து எடுத்து வந்தான்.
பவித்ரா, “அண்ணே போயிருந்தா பாத்திரம் பொங்கப் பொங்க பால் வந்திருக்கும்” என்றவாறு பாலை வாங்கிச் சென்றாள்.
“ஆமா… அவன் கதை சொல்லி பிள்ளைக்கு ஏச்சு சோறூட்டுற மாதிரி, பட்டு, சிட்டுனு மாட்டைக் கொஞ்சியே பால் கறந்துருவான். நமக்கெல்லாம் அப்படி வாயில்லா ஜீவன ஏய்க்க வராது!” என்றான் ஜம்பமாக.
“தொப்பைய அழுத்தி உக்காந்து கறக்கு முடியலைனு சொல்லுங்க!” பவித்ரா கணவனை கேலி பேச,
“அடிப்பாவி… எனக்கெங்கடீ தொப்பை இருக்கு?” வேகமாக குனிந்து பார்த்துக் கொள்ள, மதன் வாய்விட்டு சிரித்தான்.
அப்பொழுதே குளித்து முடித்து துணியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள் மாதங்கி.
“இந்நேரத்துக்கே குளிச்சுட்டியாம்மா?” பெரியநாயகி கேட்க,
“ஆமா அம்மத்தா! இன்னைக்கு அம்மா வீட்டுக்குப் போகணும்ல?” என்றாள் முகம் கொள்ளா ஆர்வமாக.
“நங்கையாரே! விடியும் முன்னேவா… அம்மா வீட்டுக்குப் போக ரொம்ப ஆர்வம் போல? நேரங்காலம் பாக்க வேண்டாமா?” பவித்ரா சிரிக்க,
“அதைப் பத்தி உனக்கென்ன தெரியும்? எவ்வளவு ஆர்வம்னு எங்கிட்ட கேளு, நான் சொல்றேன்! அம்மா வீட்டுக்குப் போகணும்னா விடிய விடிய தூக்கம் வராது. இல்லம்மா?” மாதங்கியைப் பார்த்து கேட்க, பவித்ராவின் பொசுக்கும் பார்வை அவனுக்கு தெரியவில்லை.
“மாமா… இன்னைக்கி உங்களுக்கு வாய்ல வாஸ்த்து சரியில்ல!” என்றான் மதன் சிரித்துக் கொண்டே.
“கொண்டைய மறந்துட்டேன்டா மாப்ளே!” என்றவன் பவித்ராவை அசடு வழியப் பார்த்தான்.
“நான் குளிக்கப் போறேன்” மதன் எழுந்து கொள்ள,
“தனியா விட்டுப் போகாதடா!” என்றான் பயந்தது போல்.
“என்ஜாய் மாம்ஸ்!” சிரித்துக்கொண்டே செல்ல,
“அடேய் மதனா!” என்றான் பயந்த தொணியில்.
எழுந்து அறைக்குள் வந்தவன் தான், சன்னல் வழியாக அவள் மாட்டோடு பேச்சு வார்த்தை நடத்துவதை சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான். வந்த ஒரே நாள்ல, நாம கூப்பிடுறத வச்சு மாட்டோட பேரக் கண்டுபிடிச்சுட்டா. இன்னும் இவ பேர் தெரியல!” என்ற நினைப்போடு குளிக்க சென்றான்.
அனைவரும் காலை சாப்பாட்டிற்கு ஒன்றுகூட, “கிரியையும், அவன் மனைவியையும் வீட்டுக்கு அழைக்கணும்!” என்றார் வாசுகி பொதுவில் வைத்து.
“ஏன் அவனுக்கு வீட்டுக்கு வர வழி தெரியாதா?” என்றார் பெரியநாயகி.
“நீங்க உங்க மகனை விட்டமாதிரி, நானும் என் மகனை விடமுடியாது அத்தை! எனக்கென்ன இன்னொரு மகனா இருக்கான். ஒருத்தன் போனா இன்னொருத்தன் இருக்கானேன்னு மனசைத் தேத்திக்கறதுக்கு? இருக்கறது அவன் ஒருத்தன் தானே? அதான் ஏற்கனவே ஒருத்தனை தூக்கிக் கொடுத்துட்டேனே?” என்றார் மதனைப் பார்த்துக் கொண்டே.
அவரது பேச்சில் சாப்பிடாமல் அப்படியே அவன் கை தட்டிலேயே நின்றுவிட்டது. இப்பொழுதும் அவனுக்கு முகம் கருத்து, மூச்சு முட்டியது அந்த நாளை நினைத்த மாத்திரத்தில். பெரியநாயகி, பேரனின் முகம் போன போக்கில் பயந்துதான் போனார்.
“அப்பு!” என கையைப் பிடித்தார்.
‘இந்தா ஆரம்பிச்சுட்டாங்க. இவங்க பேசறது தலையும் புரிய மாட்டேங்குது. வாலும் புரிய மாட்டேங்குது. ஒரு மகன தூக்கி கொடுத்துட்டேன்னா, அவனுக்கு என்ன ஆச்சு? இவங்க அப்பா, அம்மா எங்க? என்ன ஆனாங்க… இவன் வரலாறு தான் என்ன? எல்லாரும் நல்லா படிச்சிருக்காங்க. இவங்க மட்டும் ஏன் படிக்கல? ஒன்னும் புரியமாட்டேங்குது!” மானசீகமாக தலையைப் பிடித்துக் கொண்டாள் மதனின் மாது ஆகப்பட்டவள்.
