மதன மாளிகையில் 34 final

34

“ஏன்டா… இப்படியே இருக்கப் போறீங்களா?”

“இல்ல பங்கு வேலை முடிஞ்சதும் இந்த வாரம் வீக்கென்ட் செலப்ரேட் பண்ணப் ‌போறோம்!”

“பரதேசிகளா… இப்படியே கூலிக்குப் பாத்துட்டே காலத்த ஓட்டப் போறீங்களா?”

“ஏன் பங்கு? ரெத்த சொந்தமானதால தோப்புல பங்கு பிரிச்சுக் கொடுக்கப்போறீயா பங்கு?” நரேன்‌ நக்கலாகக் கேட்க,

“இந்த வாய்ஜாலத்துக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல!”

“வேற என்ன பங்கு. இத்தனை வருஷமா அப்படித்தானே போயிட்டிருக்கு!” என்று சலித்துக் கொண்டான்.

“பொண்ணு பாக்க வேண்டாமா? பைக் வாங்க வேண்டாமா? நீங்களும் எப்பத்தான்டா‌ பைக்க யூ டர்ன் போட்டுத் திருப்பறது?” என்று‌ கேட்க,‌

“வீட்லயும் பொண்ணு பாக்க ஆரம்பிச்சுட்டாங்க பங்கு!” என்றனர். 

“இப்படியிருந்தா யாருடா பொண்ணு கொடுப்பா. கௌரவமா சொல்லிக்கிற மாதிரி வேலை வேண்டாமா?” 

“அதுக்கென்ன பண்ணமுடியும். நாங்க படிச்ச படிப்புக்கு பில்கேட்ஸ்கிட்டயா வேலை கேக்க முடியும்? ஏதோ‌‌ உங்கூட இருக்குறதால பொழப்பு பிச்சையெடுக்காம போகுது!”

“வாய்லயே போட்டேன்னா தெரியும். இப்படியே இருந்தா வேலைக்காகாது. அடுத்த ப்ராஜெக்ட் ஆரம்பிக்கணும்!” 

“அதுக்குதான் உனக்கு வாய்ப்பில்லையே பங்கு!” என்றவனை முறைத்துப் பார்க்க,

“உண்மையத்தானே சொன்னேன். அடுத்த ப்ராஜெக்ட்னாலே மாம்ஸுக்கும், உனக்கும் வேற அர்த்தம்தானே!”

“இப்ப சீரியசா பேசல வாய்லயே மிதிப்பேன்!”

“பின்ன என்ன பங்கு. எங்களுக்கென்ன தாத்தன்‌ சொத்தா இருக்கு. ஏதோ வர்றதைவச்சு பொழப்பு ஓடுது.”

“தாத்தன் சொத்து இல்லைனு தெரியுதுல்ல. அப்போ உங்க பிள்ளைகளுக்கு நீங்க சேக்க வேண்டாமா?”

“ஏதோ முடிவு பண்ணியிருக்க. என்னானு சொல்லு பங்கு!” அவர்களும் விளையாட்டுத்தனத்தை விடுத்து கேட்க,

“நமக்கே தேங்கா லோட் எடுத்துட்டு வர, லோட் ஏத்திட்டுப் போக லாரி‌ தேவைப்படுது. தேங்காயோட சேத்து வாடகையும்தானே நமக்குப் பில் போடுறாங்க. அதையே நீங்க பண்ணினா என்ன? லாரி வாங்கலாம்ல. நம்மகிட்ட தேங்கா நார், செரட்டையெல்லாம் மொத்தமா வாங்கிட்டுப் போறாங்க. அதை நீங்களே‌ எடுத்து என்ன பண்றதுன்னு பாருங்க. சிறுதொழில் மாதிரி ஏதாவது ஆரம்பிங்கடா!”

“அதுக்கு முதலீடு வேண்டாமா?”

“இத்தனை நாள் வேலைபாத்தது என்னடா பண்ணீங்க.”

“வீட்டுச் செலவு, அக்கா, தங்கச்சிகளுக்கு செஞ்சது, பெத்தவங்க வச்சிருந்த கடன்னு, எதுவும் கையில நிக்கல பங்கு!” ஆளுக்கொரு கடமை இருந்தது. இந்த வயதில் செலவு செய்யாமல் எந்த வயதில் செய்வதென்று கையும் கொஞ்சம் நீளம்தான் நால்வர்க்கும். 

“நீங்களாவது பரவாயில்ல. சங்கருக்கு கல்யாணம் ஆயிருச்சு. இப்படியே இருந்தா எதுவும் நிக்காது. உங்க சிஸ்ட்டரோட அத்தை மகன் விகாஸ், ஆடிட்டரா இருக்காப்ல. இன்னைக்கு வரச்சொல்லியிருக்கேன். நானும் தேங்காய் பவடர், தேங்காய்ப் பால் தயாரிக்கர ஃபேக்டரி சின்னதா ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அடுத்தடுத்து கோகனட் ப்ராடெக்ட்ஸ் எல்லாம் தயாரிக்கிற ஐடியா இருக்கு. ஒவ்வொன்னா ஸ்டார்ட் பண்ணுவோம். விகாஸ்கிட்டயே ஐடியா கேளுங்க. தேவையான விவரமெல்லாம் சொல்லுவாப்ல. நீங்களும் நாலு பக்கம் விசாரிங்க. தொழில் தொடங்க லோனுக்கு ஏற்பாடு பண்ணிக்கலாம். என்ன பண்றதுன்னு மட்டும் யோசிங்க. எடுத்தவுடனே பெருசா எதுவும் பண்ணமுடியாது. சின்னச் சின்னதா ஆரம்பிங்கடா.‌ குடும்பம்னு வந்துட்டா ஒன்னும் பண்ணமுடியாது. இப்பருந்தே சின்னச்சின்னதா ஆரம்பிங்க” என்று சொல்ல அவன் சொல்வதும் சரி என்றே பட்டது. ஆனாலும், இடவசதி, பொருளாதார வசதி வேண்டுமே. எதை நம்பி லோன் கொடுப்பார்கள் என்று யோசனை‌ அவர்களுக்குள். 

“லோனுக்கு நான் ஷுரிட்டி போடுறேன்டா. மத்ததெல்லாம் நீங்க தான் ஏற்பாடு பண்ணனும். வழி தான் காட்டமுடியும்!” என்று சொல்ல,

“அப்போ எங்களை வெளியே போங்கடான்னு சொல்லாம சொல்றியா‌ பங்கு!” அஜய் கண்ணைக் கசக்க, 

“டேய்…‌ இவனை நிறுத்தச் சொல்லுங்கடா. பாக்க சகிக்கல! உங்க வாய் சாமர்த்தியத்தெல்லாம் வியாபாரத்துல காட்டுங்கடா!” என்றான். 

“இப்ப என்ன பங்கு! நாங்களும் தொழிலதிபர் ஆகுறோம். பில்கேட்ஸ்க்கே டஃப் கொடுக்கறோம்!” என்று‌ நான்கு பேரும் கையிலடித்து உறுதி மொழி எடுக்க, 

“டேய்‌ அவர் சாஃப்ட் வேர் கம்பெனி நடத்துறார்டா. இந்த தொழிலதிபர்கள் தொல்லை தாங்கலடா சாமி!” என்று அலுத்துக் கொள்ள,

“அவரு சாஃப்ட் வேர்னா, நாங்க தேங்கா நார்!” என்று சொல்ல, 

மதன், “டேய்ய்ய்!” என்று பல்லைக் கடித்தான் நரேன் கடி தாங்கமாட்டாமல்‌. 

ஐந்து வருடங்கள் கழித்து

“ஏங்க… ஸ்கூலுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க. நீங்க கெஸ்ட்டா போயிருந்தா நம்ம பிள்ளைகளுக்கு ஹீரோவாத் தெரிஞ்சுருப்பீங்க. மத்த பிள்ளைகளுக்கும் நல்ல இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கும்.”

“அதனால்தான் மதி போகல. தப்பான உதாரணம் ஆயிரக்கூடாது பாரு!”

“உழைப்பால முன்னேறினது தப்பான உதாரணமா? ஸ்கூல் மேனேஜ்மென்ட் எவ்ளோ கம்ப்பெல் பண்ணாங்க!”

“உழைப்பால முன்னேறினது நல்ல எக்ஸாம்பிள் தான். ஆனா, முன்னேற்றத்துக்கு படிப்பு தேவையில்லைங்கற எண்ணம் பிள்ளைக மனசுல வந்துறக்கூடாதுல்ல. இப்ப நான் போயிருந்தா என்னைப் பத்தி எப்படி பிள்ளைக முன்னாடி அறிமுகப் படுத்துவாங்க. பத்தாவது கூட முடிக்கல. ஆனா, உழைப்பால சக்சஸ் ஃபுல்லா பிசினஸ் பண்றாருன்னு தானே? அப்போ, சம்பாதிக்கணும்னா படிப்பு அவசியமில்லை. உழச்சா போதும்னு தோணும். எத்தனை பேர் இன்னைக்கு உழைக்கக் தயாரா இருக்காங்க. எத்தனை பேருக்கு சக்ஸஸ் ஆகும். அதுவுமில்லாம இந்த சொத்து மட்டுமில்லைனா பத்தாவது கூடப் படிக்காத என்னால என்ன பண்ணியிருக்க முடியும். மிஞ்சி மிஞ்சிப் போனா, ஹைவேல இளநீர் கடை போட்டிருக்க முடியும்.”

“தலைமுறை‌ தலைமுறையா கட்டிக்காத்துவச்ச சொத்திருந்ததாலதான், என்னால துணிஞ்சு அந்த வயசுலயே தொழில் தொடங்க முடிஞ்சது. அதுவுமில்லாம, சின்ன வயசுலருந்தே, இங்க வியாபாரம் பேச வந்த தேங்கா வியாபாரிகளையெல்லாம் பாத்திருக்கேன். அவங்ககிட்ட தாத்தா எப்படிப் பேசுவாரு, அவங்க எப்படி பேசுறாங்கணு கவனிச்சுருக்கேன். ஒரு தொழில் தொடங்கி முதலாளி ஆகணும்னா அதுக்கு முதல்ல தொழிலாளி ஆகணும்.”

“கிட்டத்தட்ட எனக்கு இந்த இடத்துக்கு வர, பதினஞ்சு வருஷமாயிருக்கு. லாபம் மட்டுமே பாக்கல. நஷ்ட்டமும் பாத்திருக்கேன்‌. விழுந்து தான் எந்திரிச்சுருக்கேன். நான் போயி பிள்ளைகளுக்கு உதாரணமா எப்படி நிக்க முடியும். படிக்கிற பிள்ளைகளுக்கு, படிப்பால முன்னேறினவங்களைத்தான் உதாரணமா காட்டணும்!‌ அதுவுமில்லா மேடையில பேசிப்பழக்கமில்லடீ. நம்ம பயலுக முன்னாடி அசிங்கமாப் போயுறும்!” என்று சிரித்துக் கொண்டே சொல்ல,

“ஆமா… எதுக்கெடுத்தாலும் ஒரு பிரசங்கம் பண்ணிருங்க. ரீல்ஸ் போடுறவங்களையே செலப்ரிட்டினு‌, சீஃப் கெஸ்ட்டா கூட்டி வர்றாங்க. இவர் என்னடான்னா பெருசா பேசவந்துட்டாரு!” வாய்க்குள்ளேயே அலுத்துக் கொண்டு வெளியேறியவளை சிரித்த முகமாக பார்த்துக் கொண்டிருந்தான்.‌ 

இவனது கோகனட் ப்ராடெக்ட்ஸ் ஃபாக்டரியை, பள்ளி மாணவர்களை அழைத்து வந்து பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை விளக்கி கூற, இவனையே இந்த வருட ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்க அழைக்க, அதற்கு மறுத்துவிட்ட கோபம் அவளுக்கு.

இப்பொழுது மதன்கைலாஷ், அந்த சுற்றுவட்டாரத்தில் எல்லாராலும் நன்கு அறியப்பட்ட ஒரு இளம் தொழிலதிபர். 

தேங்காய் ஏற்றுமதி மட்டும் செய்து வந்தவன், இப்பொழுது தேங்காய் எண்ணெயிலிருந்து, தேங்காய் பவுடர், தேங்காய்ப் பால், க்ரீம் (ஹோட்டல் மற்றும் சோப் கம்பெனிகளுக்கு) உலர் தேங்காய் துருவல் (பேக்கரிகளுக்கு) முதலியன தாயார் செய்து உள் மற்றும் வெளிநாடுகளுக்கு வியாபாரமும்,‌ ஏற்றுமதியும் செய்கிறான்.‌ 

பிரான்டட் என நாம் வாங்கும் எண்ணெய்கள் எல்லாம் அவர்களே செக்கில் ஆட்டி எடுத்து, பாட்டிலில் அடைத்து விற்பதில்லை. அவர்களும் மொத்தமாகக் கொள்முதல் செய்து, அவர்கள் பிரான்ட் பெயர் போட்ட பாட்டிலில் அடைத்து விற்பதுதான். பச்சைப் பாட்டிலோ, ஊதா பாட்டிலோ எண்ணெய் ஒன்றுதான். பெயர் தான் வேறு. 

நண்பர்களும் அவர்கள் அளவிற்கு விடா‌முயற்சி செய்து தட்டுத்தடுமாறி‌ முன்னேறியிருந்தனர். தடுமாறிய பொழுதுகளில் நண்பர்களுக்கு ஆலோசனையும், உதவிக்கரம் நீட்டவும் தயங்கவில்லை மதன். ஏற்கனவே உடல் உழைப்பிற்கு அஞ்சாதவர்கள் என்பதால், பொறுப்புணர்ந்து அவர்களும் நடந்து கொண்டனர். தேவையற்ற செலவுகளைச் சுருக்கினர். கஞ்சனிடம் பாடம் படித்த கஞ்சமகா பிரபுகளாகிவிட்டனர்.

வீட்டையும், சிறிது சிறிதாக புணரமைத்திருந்தான். தனசேகரன் உதவுதாகச் சொல்லியும் மறுத்துவிட்டான். இடையில் ஒரு முறை கிரி மட்டும் வந்து பெற்றோரைப் பார்த்துச் சென்றான். அவர்கள் மதன் பொறுப்பில் இருக்க, பொறுப்பு தன் கைவிட்டுப் போனதில் பரம சந்தோஷம் அவனுக்கு.‌ சிலர் அப்படித்தான். வாசுகிக்கு வருத்தம் தான். கைமீறிப் போனவனை என்ன செய்யமுடியும்? அவருக்கு எல்லாமே இப்பொழுது அருண்கைலாஷ் தான். தனசேகரன், மனைவி காலுக்கு எண்ணெய் தேய்த்து நீவிவிட வந்தால், அவனும்‌ இன்னொரு காலுக்கு தேய்க்க உட்கார்ந்து விடுவான். 

கிணற்றையும் மீண்டும் தூர்‌வாறி, சுற்றுச் சுவரெல்லாம் எடுத்துக் கட்டினான்.‌ வருடா வருடம் அருணுக்கு திதி அங்கு வைத்துதான் கொடுக்கப்படுகிறது. 

மாதங்கி பிறந்த வீட்டில்… 

ஜெகதாம்பாளும், வாசுதேவனும் மாறினார்களோ இல்லையோ பூங்கோதை மாற ஆரம்பித்துவிட்டார். மகனை நினைத்துதான். அவனுக்கே இப்பொழுதுதான் பத்து வயது. அவனுக்காகவேணும் தன் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்ற எண்ணம்தான். 

சமைத்து வைப்பதோடு சரி. தங்களுக்கு வேண்டிய நேரத்திற்கு போட்டு சாப்பிட்டுக் கொள்ளுங்கள் என்று டேபிளில் எடுத்து வைத்துவிடுவார். இரவு ஆளுக்கொன்று என்பதெல்லாம் இல்லை. சப்பாத்தியோ, தோசையோ, இட்லியோ எல்லாருக்கும் ஒரே சமையல் தான். தனக்கு முடியாத பொழுது முடியாது என சொல்லப் பழகினார். மகனையும் அவன் அப்பாவைப் போல் இல்லாமல் தன் வேலைகளை தானே செய்யப் பழக்கினார். சிலர் மாறவில்லை என்றால் மாற்ற முயற்சிக்கக் கூடாது. நாம் மாறிக்கொள்ளவேண்டும் என்ற பாடத்தை வெகு வருடங்கள் கழித்து கற்றுக் கொண்டார். வாசுதேவன் மாறவில்லை. ஆனால் மனைவியின் மாற்றத்தை உணர்ந்து கொண்டார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அம்மா பேச்சுக்கு அதிகமாக செவி சாய்ப்பதில்லை. 

நீங்க கேக்கறது புரியுது… அதுக்குதான் வர்றேன்… ராகிணி தானே! படித்தாள்… படிக்கிறாள்… படிப்பாள். இந்த அஞ்சு வருஷத்துல கல்யாணம்‌ முடித்து ஒரு குழந்தைன்னு தானே எதிர் பாத்தீங்க. 

அதுதான் இல்ல…

ஒரு டிகிரி முடித்ததும், இது போதாதென இன்னொரு டிகிரியும் முடிக்க வேண்டுமென கூறிவிட்டான் விகாஸ்.‌ அதுவும் முடிக்க பேங்க் எக்ஸாம்‌ பாஸ் செய்த பிறகுதான் திருமணம்‌ என்று‌ சொல்லிவிட்டான். 

இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து, ரொம்பவே துள்ளினார் தான் வாசுதேவன். அதைவிட விகாஸ் அப்பா. அந்த தலைக்கணம் பிடித்தவன் பெண் வேண்டாமென ஒற்றைக்காலில் நின்றார். வேறு திருமண ஏற்பாடு செய்தால் அவனோடு ஓடிப்போய், உங்க ஆஃபிசிலேயே திருமணம்‌ செய்வேன் என நேரிடையாவே அப்பாவை மிரட்டினாள்‌ ராகினி.

தம்பி மகள் தானே என வீட்டிற்கே பெண் கேட்டு வந்துவிட்டார் சுகந்தி. வாசுதேவனால் ஒன்றும்‌பேச முடியவில்லை. பெரியவர்கள் முடிவு செய்த திருமணம் மாதிரியே தான் ஊரார் கண்ணுக்குத் தெரிந்தது. 

கல்யாணம் மட்டும் பாஸ் செய்த பிறகுதான் என்பதில் உறுதியாக இருக்கிறான் விகாஸ். 

“மேகி ரெடியா? மாம்ஸ் வந்துருவார்டீ” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். 

இன்று அஜய்க்கு கல்யாணம். இவர்கள் கேங்கில் நடக்கும் கடைசிக் கல்யாணம். அஜய்க்கு அடுத்து இரண்டு தங்கைகள் இருந்ததால் கடமை முடித்து கல்யாணம் முடிக்க காலதாமதமாகிவிட்டது. 

ஜெகனும் குடும்பத்தோடு இங்கு வந்து, சேர்ந்து செல்வதாகத் திட்டம். உடன், சீதாலட்சுமியை அழைத்துவந்து இங்கு விட்டுப் போவதாக சொல்லியிருந்தான்.

“நானென்ன டூ மினிட்ஸ் மேகியா. கேட்டவுடனே ரெடியாறதுக்கு?” என்றவளைப் பார்த்து மெலிதாக விசிலடித்தான். 

பச்சை வண்ணப்பட்டுப் புடவையில் பாந்தமாக மிளிர்ந்தாள் மதன் மணாட்டி. பூவை தலையில் வைத்துக் கொண்டே கண்ணாடி வழியாகப் பார்த்தவள், அவன் பார்வை, வெற்றிடையில் பதிய, “கண்ண நோண்டிருவேன்!” என்றாள் முன் பல்லில் ஹைர்பின்னை கடித்தவாக்கில்.

“என்னை சொல்லிட்டு நீங்க இன்னும் கிளம்பலையா?” என்றாள். பூ வைத்துவிட்டுத் திரும்பியவள்.

“ஏன் கேக்க மாட்ட. உன் உத்தமபுத்திரனுகள கிளப்பி‌ விடுறதுக்கே டைம் சரியாப் போச்சு. எங்க என் வேட்டி சட்டை?” என்றவனுக்கு கண்ணால் கட்டிலைக் காட்ட, அவள் காட்டிய கண் ஜாடையில்,

“மேகி… இப்ப எப்புர்றி. நமக்கு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் எல்லாம் பத்தாதே!” என்று ஆர்வமாய் நெருங்கி வர,

“தள்ளிப் போங்க. சேலை கசங்கப்போகுது. ட்ரெஸ் கட்டில்ல இருக்குன்னு சொன்னேன். எப்ப பாரு அதே நெனப்பு!”

“கண்ணைக் காட்டினது நீ. தப்பு எம்பேர்லயா! சேலையே கசங்காத மாதிரி” என்பதற்குள் அப்பா, அம்மா ரெடியா?” என்று‌ மூவரும் கேட்டுக் கொண்டே வர,

“இந்தா வந்துருச்சுங்க உன்னோட வாணரப்படை!” என்று சொல்ல, அவனை முறைத்துவிட்டு, 

“அப்பாதான்டா லேட்டு. வாங்க நம்ம வெளியே போகலாம். உங்கப்பா ட்ரெஸ் பண்ணிட்டு வருவாங்க!” என்று பிள்ளைகளை அழைத்துச் சென்றாள். போகும் பொழுது பிள்ளைகள் அறியாமல்… கண்சிமிட்டி, உதடு குவித்து முத்தம் ஒன்றை பறக்கவிட்டுச் செல்ல, இன்னைக்கு இருக்குடீ உனக்கு என்றது அவனது உள்மனம். 

“என்னடீ ராகி… எப்படிப் போகுது?” 

திருமண வீட்டிற்கு வந்திருந்த தங்கையிடம் நலம் விசாரித்தாள். அஜய், விகாஸையும் அழைத்திருந்தான். மதனுக்கு வருங்கால சகலை என்ற உறவு முறை‌ ஒரு பக்கம். இவர்கள் தொழில் மற்றும் லோன் சம்பந்தப்படட்ட சிறு சிறு சந்தேகங்களுக்கும் ஆலோசனை சொல்வதும் விகாஸே. மொத்தத்தில் இவர்கள் கம்பெனி ஆடிட்டர். உடன் ராகினியையும் அழைத்து வந்திருந்தான்.‌

“ஏன் கேக்க மாட்ட? ஏதோ பேருக்கு ஒரு‌ டிகிரி. கல்யாணம், குடும்பம்னு‌ செட்டிலாக ஆசைப்பட்டவள, படி, படின்னு உசுர எடுக்குறாங்க. படிக்கணும்னு‌ ஆசைப்பட்ட உனக்கு, கல்யாணம் பண்ணிவச்சு செட்டில் பண்ணிவிட்டாங்க. எங்க நாம நெனச்சதெல்லாம் நடக்குது” என்ற தங்கையின்‌ புலம்பலில் வாய்விட்டு சிரித்தாள்.

“சிரிக்காதக்கா… காண்டாகுது. ஆனாலும் மாமாவ சும்மா விடுறதில்ல. மொத எல்லாம் அவர்தானே அர்த்த ராத்திரியிலே டவுட் கேப்பாரு. இப்ப எல்லாம் நான் அவரத் தூங்கவிடறதில்ல. பாடத்துல டவுட்டா கேட்டுத் தள்ளிட்டிருக்கேன். யாருகிட்ட… என்ன தூங்கவிடாம‌ பண்ணிட்டு அவர்‌ மட்டும் எப்படித் தூங்கலாம்?” 

“பாவம்டீ விகாஸ் மாமா. உங்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறாரோ?” 

“க்க்கும்… எனக்கு சொல்ல வேண்டிய டயலாக்க எல்லாம் அவருக்கே சொல்லுங்க!” என்று முகத்தை வெட்டினாள்.

குடும்பம் குடும்பமாக மேடையேறி முதலில் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர். மதன் கல்யாணப்பரிசாக புது பைக் சாவி கொடுத்தான்.

“பங்கு!” என்று கண்களில் ஆச்சர்யமாக அஜய் பார்க்க, 

“யூ டர்ன் போட பைக் வேண்டாம!” என்று ரகசியமாக கண்சிமிட்டிக் கேட்க, அவனைக் கட்டிக் கொண்டவன் கண்கள் சிவந்துவிட்டது. அவனுக்கு பொறுப்புகள் அதிகம் என்று மதனுக்கு தெரியும். அதனால், அஜய் இத்தனை நாட்களாக வண்டி வாங்காமல்தான் இருந்தான். 

“நாங்களும்” என்று மற்ற மூவரும் சேர்ந்து கட்டிக் கொள்ள,

“ஏம்மா, இதெல்லாம் என்னானு கேக்க மாட்டீங்களா! இப்படி மேடையில கட்டிப்புடுச்சு நிக்கிறானுக” என்று பக்கத்தில் இருந்த ஜெகன் அவர்களது மனைவிகளிடம்‌ கேட்க, 

“மாம்சையும் இழுத்து உள்ள போடுங்கடா!” என்று மதன் சொல்ல, நரேன், ஜெகன் கையைப் பிடித்து இழுக்க, அவன் அலற, பார்த்துக் கொண்டிருந்தவர்கள் சிரிக்க என இந்தக் காட்சி அழகாக பதிவானது கேமராவில். 

மதியம் வரை கல்யாண வீட்டில் இருந்துவிட்டு, மதியம் விருந்தையும் முடித்துக்கொண்டு, விகாஸ், ராகினி உட்பட அனைவரும் தோப்பு வீட்டிற்கு வந்துவிட்டனர்.  

இளம் தென்றல் வீசும் இதமான மாலை நேரம்.‌ 

பெரியவர்கள் அனைவரும் வெளியே‌ அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, பிள்ளைகள் விளையாட்டில் மும்முரமாக இருந்தனர். 

அனைவருக்கும் இளநீர் வெட்டிக் கொடுத்தனர் மதனும், ஜெகனும். சிறிது நேரம் இருந்துவிட்டு இருட்ட ஆரம்பிக்கவும், விகாஸும், ராகினியும் கிளம்பிவிட்டனர். 

எல்லாரும் இங்கிருப்பது தெரிந்து பரிமளமும், இடும்பனும் வந்துவிட்டனர். 

வெகு நாட்கள்‌ கழித்து பழையபடி மதனின்‌ மாளிகை அந்த வீட்டு வாரிசுகளால் நிறைந்திருந்தது. 

பெரியநாயகிக்கு கண்கள் கொள்ளவில்லை. 

“என்ன‌ பெரியநாயகி! ரொம்ப சந்தோஷமா‌ இருக்க போல. எப்ப வர்ற?” என்று‌ தாத்தன் குரலில் வம்பிழுக்க,

“நானெதுக்கு வரணும். இன்னும் கொள்ளுப் பேரனுங்க கல்யாணமெல்லாம் பாக்க வேண்டியிருக்கு. அதுவரைக்கும் நீங்க ரம்பா, மேனகையோட சாலியா டான்ஸ் ஆடுங்க!” என்று சொல்ல, சிரிப்பு சத்தம் மாளிகை நிறைத்தது. 

உயிரற்ற செங்கல், மணல்,‌ சிமெண்ட் கொண்டு கட்டப்படும் வெற்றுக் கட்டிடம், சொந்த பந்தங்களால் மட்டுமே உயிரோட்டம் பெறுகிறது. 

புழக்கமில்லாத வீடு மாளிகையாக இருந்தால் என்ன? குடிசையாக இருந்தால் என்ன? புல் மண்டி, சீக்கிரம் உலுத்துப் போகும். 

அது போலத்தான் உறவுகளும். நம்ம மனைவி, நம்ம பெற்றோர், நம்ம குழந்தைகள் தானே என ஏனோதானோவென உறவுகளைக் கையாண்டால் உறவுகளும் வெறுப்புமண்டி உழண்டுதான் போகும். அவ்வப்பொழுது நேசமெனும் வர்ணம் பூசி உறவுகளையும் புதுப்பித்துக் கொண்டே இருந்தால்தான் மனமெனும் மாளிகையும் அன்பு மணக்கும். 

இன்னும் அப்பத்தா மடியில் படுத்துக் கொண்டு, அவரை வம்பிழுத்து, செல்லம் கொஞ்சுபவனையே, கண்களில் காதல் தழும்ப, நெஞ்சமெங்கும் நிறைத்துக் கொண்டிருந்தாள், மதனின் மனமெனும்‌ மாளிகையில் இடம்பிடித்த மதனின் மாதங்கி. அவள் பார்வை உணர்ந்து அவளைப் பார்த்தவன் கண்களும் காதல்மொழி பேசியது யாருமறியாமல். 

“பவி… இன்னைக்கிப் பாரேன். உன்னோட பாசமலர், பிள்ளைகள எல்லாம் நம்ம ரூமுக்கு தாட்டிவிட்டுருவான்!” குனிந்து ரகசியமாக கிசுகிசுத்தான் இவர்களது நயனபாஷையைக் கண்ணுற்ற ஜெகன். 

“ஏன்… நீங்க மட்டும் ஒரு‌ நாள் ஸ்கூல் லீவு விட்டாக்கூட ரெண்டு பிள்ளைகளையும் கொண்டுவந்து, இங்க விட்டுட்டு வர்றதில்லையா?” 

“சரி… சரி… குடும்ப ரகசியமெல்லாம் பப்ளிசிட்டி பண்ணாதே!”

மதன மாளிகையில்

மந்திர மாலைகளால்

உதய காலம் வரை

உன்னத லீலைகளாம்

அன்பே அன்பே

அன்பே அன்பே… 

           வாழ்க வளமுடன் 

3 thoughts on “மதன மாளிகையில் 34 final”

  1. Really nice story Eswari mam…this is your 1st story i read…in audio novel i hear”pathakathi nejukulae”..your writing style is lovelable…i laughed a lot..

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top