மதன மாளிகையில் 33

33

“உங்களை யாரு இந்த வேலை பார்க்கச் சொன்னது” கோபமாகக் கேட்டவள் கண்கள் கலங்கிச் சிவந்தது. 

தன்னிடம் கூடச் சொல்லாமல் இவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்கிறான். வீட்டில் எல்லாரும் அமைதியாக இருப்பதைப் பார்த்தால் பெரியவர்களிடம் கூட எதுவும் சொல்லிக்கொண்டது போல் தெரியவில்லை. அப்பத்தாவிற்குத் தெரிந்திருந்தால் கட்டாயம் விட்டிருக்க மாட்டார். 

“இப்ப என்னடீ? இதுல உனக்கென்ன பிரச்சினை?”

“என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமா?”

“சொல்லியிருந்தா என்ன பண்ணிருப்ப?”

“வேண்டாம்னு சொல்லிருப்பேன்! பெரியவங்ககிட்ட சொல்லி, உங்களை போகவிட்டிருக்க மாட்டேன்.”

“அதனாலதான் சொல்லல!”

“இப்பப் பண்ணவேண்டிய அவசியம் என்ன வந்தது?” என்றவள் பேச்சும், பார்வையும் அனலடித்தது.

“வரவர சும்மா கும்முன்னு ஆகிட்டுப் போறடீ. பாத்துட்டு என்னால கம்முனு இருக்க முடியல. அதனால தான்!” என்றவன் பார்வையில் சரசம் கொட்டிக்கிடக்க,

“இதெல்லாம் ஒரு காரணமா? அடுத்து ஒரு பொம்பளப் பிள்ளை வேணும்னு எவ்வளவு ஆசையா இருந்தேன். இப்படி என் ஆசையில மண்ணள்ளிப் போட்டீங்களே?” 

“ஏன்டீ… இதுதான் பிரசவ வைராக்கியமா? இதுக்கு மேல குழந்தைகள்னா கம்பெனிக்குக் கட்டுபடியாகாதுடீ. எல்லாரும் என்னை தாராள பிரபுன்னு கேலி பண்ணாங்க. ஆனா, நீதான்டீ வள்ளல் மன்னியா இருந்திருக்க. இவனுக ஒவ்வொருத்தனையும் பாரு. பொள்ளாச்சி தேங்கா, கேரளா தேங்கா, கொழும்பு தேங்காங்கற மாதிரி ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு ரகம். இதுலருந்து என்ன தெரியுது?” என்று‌ புருவம் தூக்கி வினவ,

“பிள்ளைகள கண்ணுவைக்கறீங்கணு தெரியுது! தேங்கா மரத்தையே புடுங்கி சுத்திச் போடணும்னு தோணுது!”

“அதில்லடீ… இவனுங்க ஐடென்டிகல் ட்ரிப்லட்ஸ் (Identical Triplets) இல்லைனு தெரியுது!”

“அதுக்கு…” 

“வழக்கமா பெண்களுக்கு, ஒரு மாசத்துக்கு ஒரு முட்டைதானே உருவாகும். ஒரே நேரத்துல உனக்குதான்டீ மூனு முட்டை உருவாகியிருக்கு. அதனால இன்னொரு தடவை ரிஸ்க் எடுக்க விரும்பல!”

“அதுக்குனு இதெல்லாம் டூ மச்!”

“டூ மச், த்ரீ மச் ஆனதாலதான்‌ இந்த முடிவே. அதுவுமில்லாம பெண்களுக்கு பண்றதைவிட, ஆண்களுக்குப் பண்றதுதான்டீ ரொம்ப ஈஸி. இப்ப பாரு ஒரே நாள்ல வந்துட்டேன். அரைமணி நேரங்கூட ஆகல. போனதும் தெரியல, வந்ததும் தெரியல!” என்றவனை‌ முறைத்துப் பார்க்க,

“நாங்க ஒரு நல்லது பண்ணா பொறுக்காதே. சுயநலவாதிடீ இந்த பொம்பளைங்க எல்லாம்!” என்றான்.

“இதுல எங்க சுயநலம் வந்துச்சு. அவங்கவங்களுக்கு கிழிச்சு, தச்சாத்தானே தெரியும்?”

“இதேதான்டீ! பிள்ளைக முன்னாடி, நீ பொறந்திருக்கும் போது, அப்படிக் கஷ்ட்டப்பட்டேன், இப்படிக் கஷ்ட்டப்பட்டேன்னு சொல்லிக் காட்டியே உங்களுக்கெல்லாம் அன்னை ஓர் ஆலயம், குடியிருந்த கோவில்ங்கற மாதிரி தியாகச் செம்மல் பட்டம் வாங்கணும். அவனுங்க, எங்களுக்காக நீயென்ன பண்ணினங்கற மாதிரி எங்களை‌ வில்லனாட்டம் பாக்கணும். நாங்களா எதுவும் பண்ணி கிரெடிட் வாங்கிறக் கூடாது. அதுதானே பொம்பளைங்க ப்ளான்” என்று வியாக்யானமாகக் கேட்டவனை ஆ வென பார்த்து நின்றாள். 

“ஏன் என்கிட்ட சொல்லலைனு கேட்டதுக்கு இவ்ளோ பேசுவீங்களா?” என்று வாயில் கைவைத்தாள்.

“மேகி… உனக்குனா மறுபடியும் கிழிச்சு, தச்சு, பெட்ரெஸ்ட், அப்படி இப்படின்னு அடுத்த ஆறு மாசத்துக்கு நீ பேஷன்டாவே திரியணும். அதுவுமில்லாம நம்மால அவ்ளோ நாள் தாக்குப் பிடிக்க முடியும்னு தோனலடீ. அதனால தான் இந்த முடிவு. இனிமே அய்யா பயமில்லாம சும்மா பூந்…” என்றவன் அவள் பார்வை அனலைக் கக்க பாதியிலேயே நிறுத்திக் கொண்டான். 

“பயமில்லாம இருக்கலாமேனு சொல்ல வந்தேன்” என்றான் அப்பிராணி போல் முகத்தை வைத்து. 

“செய்யறதெல்லாம் ‌செஞ்சிட்டு இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்குற மாதிரி பாக்குறதைப் பாரு!”

“இந்தப் பூனை பால் குடிக்காது. ஜுஸ் தான் குடிக்கும்!” என்று கண் சிமிட்ட, அதற்குமேல் அவளால் கோபத்தை இழுத்துப் பிடிக்க முடியவில்லை.

வேறொன்னுமில்லீங்க… இவகிட்ட சொல்லாமலே குடும்பக்கட்டுப்பாடு ஆப்ரேஷன்(vasectomy) பண்ணிட்டு வந்துட்டான். அதுதான் அவளுக்கு அத்தனை ஆத்திரம். 

இவளிடம் சம்மதம் கேட்டுத்தான் செய்ய வேண்டுமென்றால் அது இந்த ஜென்மத்தில் நடக்காது. 

என்னதான் படித்திருந்தாலும், பெண்களுக்கு செய்வதைவிட ஆண்களுக்கு கருத்தடை செய்வதுதான் வெகு சுலபம், எளிது, ஓபன் சர்ஜரி பண்ணத் தேவையில்லை, Non Scalpel Vasectomy / NSV முறையில் தையல் கூடத் தேவையில்லை, எனத் தெரிந்தாலும் கூட, சில விஷயங்களை மனம் ஏற்றுக் கொள்வதில்லை. இவளுக்கே இப்படியென்றால் மூத்த தலைமுறைக்கு சொல்லவே வேண்டாம். இவர்களுக்கு பாடம் நடத்தி, விளங்க வைப்பதற்குள், ஆப்ரேஷனை‌ முடித்து வந்து சொல்லிக் கொள்ளலாம் என விட்டுவிட்டான்.

குழந்தைகள் ஆரோக்கியமாகத் தேறி வரட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம் என பிரசவ நேரத்தில் மாதங்கிக்கு குடும்பக் கட்டுப்பாடு பண்ணவில்லை.‌ 

ஏற்கனவே ஆப்ரேஷன் செய்த உடம்பு. அவளது உடல் நிலை தேறி விட்டாலும், மீண்டும் அந்தச் சூழ்நிலைக்கு அவளைத் தள்ள, அவனுக்கும் கொஞ்சம் பயம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். அதனால் தான் மருத்துவரின் ஆலோசனைப்படி அவனே கருத்தடை செய்து கொண்டான். அவளுக்கும் அவன் எண்ணம் புரிந்ததால் தான் இந்தக் கோபமே. இன்னும் தன்னை நம்பவில்லை என்று. 

“வீட்ல பெரியவங்களுக்குத் தெரிஞ்சா என்னைத்தான் பேசுவாங்க” என்று முகத்தைத் தூக்கினாள்.

“இதுல அவங்க பேச என்ன இருக்கு மதி! அதுவுமில்லாம அப்பத்தாவுக்கு மட்டும் தெரியும். தாத்தாவே அந்தக் காலத்துல பண்ணவர்தானாம்” என்றான் ரகசியம் போல் குனிந்து. 

முதலில் அந்தக் காலத்தில் ஆண்களுக்கு தான் கருத்தடை பரிந்துரைக்கப்பட்டது. எளிது என்பதனால்.‌ ஆனால் அதைப் பற்றிய முழு விபரம் தெரியாததாலும், தோல்வியடைய வாய்ப்புகள் அதிகமாக இருந்ததாலும் அது வெற்றிகரமாக செயல்படுத்தப்படவில்லை. ஆண்களுக்கு கருத்தடை செய்தாலும் ஆறு மாதங்கள் வரை, உரிய பாதுகாப்பின்றி உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க வாய்ப்புகள் அதிகம். குடும்பங்களுக்குள் பிரச்சினையை உண்டு பண்ணியதால் ஆண்கள் கருத்தடை திட்டம் வெற்றியடையவில்லை.

ஆனால், ஆண்கள் இப்பொழுது தானாக முன் வருவதாக ஆய்வறிக்கை கூறுகிறது. 

“மேகி… இப்பதான் உடம்பும், மனசும் தேறி வந்திருக்க. மறுபடியும் ஆப்ரேஷன், பெட்டுன்னு உன்னை சிரமப்படுத்த விரும்பலடீ!” என்றவன் குரல், உனக்காகத்தான் இதெல்லாம் என சொல்லாமல் சொல்லியது. அவனையே கண்ணெடுக்காமல் பார்த்தாள். அதில் கோபம் மறைந்து, காதல் கரைபுரண்டோட,  

“அப்படிப் பாக்காதடீ. இன்னும் ரெண்டு வாரம் போகட்டும்‌” என்று கண்சிமிட்டியவன் மீது காதலின் அளவு எல்லை கடந்து போனது மதனின் மணாட்டிக்கு. ஓடி வந்து கட்டிக் கொண்டாள். இறுக்கி அணைத்துக் கொண்டவள்‌ கண்கள் மெலிதாக நீர்ப் படலம் பூத்தது.

“பாத்தியா… ஆசையிருந்தும், இத்தனை நாளா நீயும் பயந்துட்டுதானே தள்ளியிருந்திருக்க. இப்பப் பாரு எப்படி ஓடிவந்து கட்டிக்கிட்ட. ஆப்ரேஷன் பண்ணிட்டு வந்த புருஷனுக்கு பழம், ஜூஸ் ஏதாவது கொண்டு வந்து கொடுப்போம்னு இல்ல.” சலிப்பாய் பேச்சு, சலுகை கொஞ்ச,

“நான் கொடுக்க ரெடிதான். ஆனா நீங்க அதுக்குத் தயாரா இல்லையே. இன்னும் ரெண்டு மாசத்துக்கு அசையக் கூட முடியாதே!” என்றவள் குரலில் கேலியும், கண்களில் குறும்பும் சரிவிகிதத்தில் விரவியிருக்க,

“அதெல்லாம் பொம்பளைங்களுக்கு. நல்லா விசாரிச்சுட்டேன். ரெண்டே வாரம். ஒன்லி டூ வீக்ஸ். ஜுஸ் குடிக்க நான் ரெடி!” என்று தாய்மையின் பூரிப்பில், தளதளவென மெருகேறியிருந்தவளை இறுக்கியணைக்க,

“ப்பா… ம்மா… மாமா… அக்கா என கலவையான‌ குரல்கள். தடதடவென ஓட்டமாக ஓடி வந்தது சிறு படையொன்று.‌

ஞாயிறு விடுமுறைக்கு  மிதுன், சஷ்ட்டிகா மற்றும் இனியன் (ஜெகனின் மகன்) வந்திருக்க அவர்களுக்கு கைகால் முளைத்த பொம்மைகள், இப்பொழுது தான் தத்தித்தத்தி நடக்க ஆரம்பித்திருக்கும் த்ரீ கைலாஷஸ். 

கால் முளைத்ததில் இருந்து வீடு ரெண்டு படுகிறது மூவரின் மாரத்தான் ஓட்டத்தில். கீழிருந்த எல்லா பொருட்களுமே அரண்டுபோய், பரண் ஏறி‌ உட்கார்ந்து கொண்டது. 

கட்டிக் கொண்டு நின்றவர்கள், “ம்ஹும்… சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்கணும்ல?” என்று பட்டென விலகி நிற்க,‌ அறுவரின் ஆக்கிரமிப்பில் அறை போர்க்கோலம் பூண்டது. 

“தேவையில்லாம ஃபேமிலி ப்ளானிங் பண்ணிட்டேன்டீ. ராத்திரிக்கும் வாய்ப்பில்ல. பகல்லயும் வாய்ப்பில்ல. இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லயே இருந்திருக்கலாம்” என்று கடுப்பாக தலையில் கைவைத்தவன் கட்டிலில் உட்கார, அவனின்‌ புலம்பலைப் பார்த்து வாய்விட்டு சிரித்தவளை, ‘சிரிக்கிற’ என்று முறைத்துப் பார்ப்பது இம்முறை இவன் முறையாயிற்று. 

அவன் ஓய்வெடுக்கட்டும் என, 

“பிள்ளைகளா ஜுஸ் வேணுமா?” என்று கேட்க,

“ஆமாஆஆ!” என கோரசாகக் குரல்கள். 

“உங்களுக்கு மட்ட்ட்டும் போட்டுத்தர்றேன். எல்லோரும் வெளியே வாங்க!” என்றவள் மட்டும் என்பதில் அழுத்தம் கொடுத்து, பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவனை ஓரக்கண்ணால் பார்த்துச் செல்ல,

‘என்கிட்ட சிக்குற அன்னைக்கு உனக்கு இருக்குடீ’ என்று அம்பு விட்டது மதனின் மன்மத பார்வை. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top