23
“அம்மணி இங்க வாங்க!” என்றான் கண்ணாடி முன் நின்றிருந்தவன். ஈரக்கூந்தலைத் தட்டிக்கொண்டே அவனைத்தான் பார்த்திருந்தாள்.
அந்தப் பார்வை அவனை வெறுப்பேற்ற, “இவள…” என்று பல்லைக் கடித்தவன் தன் முன் அழைத்தான்.
அவனும் தோப்பிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். சட்டையைப் போட்டு கீழிருந்து பட்டன்களைப் பூட்டிக்கொண்டே அழைக்க, அவனருகில் வர, கைபிடித்து இழுத்து தன் முன் கொண்டு வந்தவன், தன்னைப் பார்த்து நிற்க வைத்தான். சற்றுமுன்தான் அவளும் குளித்துவிட்டு வெளியே வந்தாள். இளம் சிவப்பு வண்ண சுடிதாரில் குளித்துவந்த புத்துணர்ச்சி மாறாமல் பன்னீர் ரோஜாவாய் பரிணமித்தாள். அவள் மீதிருந்து வந்த நறுமணம் நாசியைத் தீண்டி, நாடியை சோதித்துப் பார்த்தாலும், அவளது பார்வை அவனை அதற்கு மேல் யோசிக்க விடவில்லை. இவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்ததும் குபுக்கென கண்ணீர் பொங்கியது.
‘ப்ச்ச்… இவள என்ன பண்ணினாத் தகும்! கண்ல டேம்தான் வச்சுருப்பா போல’ என்று நூறாவது முறையாக நொந்து கொண்டான்.
பல்லைக் கடித்துக்கொண்டு, “மேகி!” என்றான் அடக்கப்பட்ட குரலில்.
“இல்ல… அழல…” என்றவள் குரல் இப்பொழுதும் கரகரத்தது. அவன் முகத்தை பரிதாபமாக ஏறிட்டுப்பார்த்தாள்.
“இன்னொரு தடவை இப்படிப் பாத்தேன்னு வை. கடிச்சு வச்சுருவேன்” என்றான் எரிச்சலும், கோபமும் கலந்து.
“எப்படிப்பாத்தா?” என்றாள் கண்களை புறங்கையால் துடைத்துக் கொண்டே தொண்டையடைக்க.
“ஏதோ பாவப்பட்ட ஜீவனப் பாக்குற மாதிரிப் பாக்குற!”
“நானொன்னும் அப்படிப் பாக்கலியே!” என்றவள் பார்வையை வேறு புறம் திருப்பினாள்.
தாவாய் பிடித்து தன்னை நோக்கி அவள் முகத்தைத் திருப்பியவன், “நம்பிட்டேன்… நீ மொறச்சுப் பாக்குறது தான் பிடிச்சிருக்கு. இன்னொரு தடவை பாவமாப் பாத்தே… என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது?”
“என்ன பண்ணுவீங்க!”
“அதான் தெரியாதுன்னு சொல்லிட்டேன்ல. இனிமேதான் யோசிக்கணும்!”
“யோசிச்சு சொல்லுங்க!” என்றவள் அங்கிருந்து நகர முற்பட,
“மேகி…” என்ற ஆழ்ந்த குரலில் தேங்கி நின்றாள்.
இறைஞ்சும் குரலில், “இந்த மாதிரிப் பாக்குறது பிடிக்கலைடீ. நானே எல்லாம் கடந்து வந்துட்டேன். மறுபடியும் இப்படி என்னை ஏதோ பாவப்பட்ட ஜீவனைப் போல பாக்காதே!” என்றான் ஆயாசமாக.
அவனுக்கும் நேற்று இவளிடம் பேசியதிலிருந்து, இவளை சமாதானப் படுத்துவதே பெரும்பாடாகிப் போனது. அப்படியொரு அழுகை. கண்ணீர் வடிய வடிய, விடிய விடிய. தூங்கவே இல்லை.
பிள்ளைக்கு மாத்திரை கலந்த பாலைக் கொடுக்கும் பொழுது, அந்த நேரத்தில் பெற்ற மனதிற்குள் என்னவெல்லாம் நினைப்பு ஓடியிருக்கும். மனைவியும், மகனும் இனிமேல் தன்னுடன் உயிரோடில்லை என்று நினைத்து அவன் அப்பாவின் மனது அந்த நேரத்தில் என்ன பாடுபட்டிருக்கும். எப்படித் துடித்திருக்கும் என்று திரும்பத் திரும்பக்கேட்டு, விடாமல் அழ, ஏன்டா இவளிடம் சொன்னோம் என்று நொந்து கொண்டான். அவன் கடந்து வந்தபிறகும் அக்கணத்தைவிட்டு அகல மறுத்து அதிலேயே அல்லாடியது அவளது எண்ணங்கள்.
அம்மாவை நம்பித்தானே பாலை வாங்கிக் குடித்திருப்பான். பெற்றவளை நம்பாமல் பிள்ளை யாரை நம்பும்? உங்க நிலமை யாருக்கும் வரக்கூடாதுங்க என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள்.
“இங்க பாரு மதி… சின்ன வயசுலருந்து இது மாதிரி நிறையப் பாத்து, கேட்டு நொந்து போயிட்டேன். அப்பத்தா, சீதா சித்தி எல்லாரும் என்னை பாசமாப் பாத்தாலும், ஜெகன் மாம்ஸ், அருண் அண்ணா, கிரி இவங்கள பாக்குறதைவிட என்னை ஒரு படி மேலதான் பாப்பாங்க. தாத்தாவுக்குப் பெத்த மகன் செஞ்ச காரியத்தையும் மீறி எம்மேல பாசம் வரக்காரணமே பெத்தவங்க இல்லைங்கிற பரிதாபம்தான். சீதா சித்திக்கும் எம்மேல தனிப்பட்ட பாசம் வரக் காரணம் என்னனு நினைக்கிற?” என்று கேட்டவனிடம்,
“அவங்க ஆசை வச்சுருந்தவரோட பிள்ளைனு தானே?” என்றவளை ஒரு கணம் உற்றுப் பார்த்தான்.
“ச்சே… ச்சே… தப்பா எல்லாம் ஒன்னும் சொல்லல” என்றாள் அவசரமாக.
“எங்கப்பா அவங்களுக்குக் கொடுத்த ஏமாற்றத்தையும் தாண்டி எம்மேல பாசமிருக்குன்னா, அது பெத்தவங்க ரெண்டு பேரையும் ஒரே சமயத்தில் இழந்ததும், எனக்கு நேர்ந்த அசம்பாவிதமும் தான். இதுவே, எங்க அப்பா, அம்மாவோட நான் இங்க வந்திருந்தா இவங்களுக்கெல்லாம் இதே மாதிரி பாசம் வந்திருக்குமாங்கறதே சந்தேகம் தான். மத்த பேரன்களைப் பாக்குற மாதிரிதான் என்னையும் பாத்திருப்பாங்க. இவங்க பாசத்தை குறை சொல்லல. ஆனா, எதொன்னுலயும் யாரும் இல்லாதவன்னுதான் ஒரு ஸ்பெஷல் கவனிப்பு. அதுவே என்னை மத்தவங்ககிட்டருந்து பிரிச்சுக் காண்பிக்குது. பாசத்தை மிஞ்சிய பச்சாதாபம் தான் அதுல தெரியுது.”
“கிரிக்கும் அதனாலதான் எம்மேல சின்ன வயசுல கோபமே. அவன் மட்டும் என்ன அப்படி ஸ்பெஷல்ன்னு. சின்ன வயசிலருந்து பெத்தவங்க இல்லாத பயன்னு கேட்டுக் கேட்டு எனக்கும் அலுத்துருச்சுடீ. நீயும் நேத்துலருந்து அப்படி பாக்குறது எனக்குப் பிடிக்கல. முறைச்சுப் பாத்து, முறுக்கிட்டு நின்னாத்தான் என்னோட மேகி!” என்றவன் வார்த்தைகள் அவளை என்னவோ செய்தது.
சின்ன வயதில் சிறியதாக அடிபட்டால் கூட, வீட்டில் இருப்பவர்களில் இருந்து, தோப்புக்கு வேலைக்கு வருபவர்கள் வரை, பெத்தவுக இல்லாதவன் என்றுதான் அதிகப்படியாக அக்கறை காண்பித்தனர். அதுவே அவனுக்கு ஒரு நிலமைக்கு மேல் அலுப்புத் தட்டியது. தன்னை இறக்கத்தோடு பார்ப்பது பிடிக்கவில்லை. உரிமையாகக் கோபப்படக்கூட நமக்கு யாருமில்லை என்றுதான் தோன்றியது. அதுவே ஒரு அந்நியத் தன்மையைத் தோற்றுவித்தது. எல்லாரும் பாசத்திற்க்காக ஏங்க, இவனோ உரிமையெடுத்து நம் மீது கோபம் காட்ட ஆளில்லையென ஏங்கினான். அந்த வகையில் வாசுகி தேவலை என்று தோன்றும். அவன் அப்பா தங்கைக்கு செய்த நம்பிக்கைத் துரோகத்தை மறக்காமல் அவ்வப்பொழுது அவன் மீது காண்பிப்பார். மகன் இறந்த பிறகு கேட்கவே வேண்டாம். பரம எதிரியாகவே மாறிப்போனான்.
“அவ்வளவுதானே… இனிமே பாருங்க நீங்க போகும் போதும், வரும் போதும் எப்படி எம் மூஞ்சியிலேயே எள்ளும் கொள்ளும் வறுக்குறேன்னு!” என்றாள் ஜம்பமாக. அவள் சொன்ன விதத்தில் சிரிப்பு வந்தது.
இரு கைகளுக்குள் அடங்கி நின்றவளிடம், “மேகி… என்ன சோப் போடுற?” என்று ஆழ்ந்து மூச்சை இழுக்க, இவ்வளவு நேரமாக அவன் கைச்சிறைக்குள் இருக்கிறோம் என்பதே இப்பொழுதுதான் உரைத்தது.
சட்டென கண்கள் விரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“இத… இதைத்தான் எதிர்பார்த்தேன். விட்டா குபுக்குனு கண்ணுமுழி ரெண்டும் வெளியே வந்து விழுந்துரும் போல? அன்னைக்கி கோயில்ல மாலை போட்டதும் இப்படித்தான் பாத்த. என்னைக் கோபமாப் பார்த்த முதல் பார்வை” என்றவன் சின்னதாய்ச் சிரிக்க, அவள் தான் அவன் கைப்பிடிக்குள் நிலைகொள்ள முடியாமல், தவிக்க ஆரம்பித்தாள்.
அவனது பார்வை பூ முகத்தை வட்டமிட, என்ன இது பார்வை என்பது போல் உள்ளுக்குள் குளிரெடுத்தது. உயிர் வரை ஊடுருவி, ஊனை உருக்கும் பார்வை. குளித்த ஈரம் இன்னும் கன்னியவள் கன்னத்தோர முடிக்கற்றையில் மிச்சமிருக்க, இதழொற்றியெடுக்க ஆவல் கொண்டது மன்னவன் மனம்.
அவனது ஊடுருவும் பார்வையில் இதயத்துடிப்பின் டெசிபல் எகிற,
“கைய எடுங்க! ப்ளீஸ்” என்றவள் பேச்சு அவளுக்கே கேட்கவில்லை. தொண்டையிலேயே தொக்கி நின்றது. கண்களால் களவாடியவன், உதட்டுக்குள் சிரித்துக் கொண்டே,
“கேக்கல” என்றான்.
“கைய எடுங்க” என்றாள் மீண்டும் வாய்க்குள்.
“இப்பவும் கேக்கல” என்றவன் சற்று நெருங்கி முகத்தை பக்கவாட்டில் திருப்பி அவள் வாயருகே கொண்டு செல்ல, சரியாகக் கன்னம் அவள் இதழ் உரசி நின்றது.
இன்னும் சட்டைப் பட்டன்களை முழுதாகப் போடாமல் மார்பு திறந்து கிடக்க, மெலிதாக ட்ரிம் செய்திருந்த தாடி பச்சையாய் கரை கட்டியிருந்தது அவனது சிவந்த கன்னத்தில். அலையடித்த நெற்றி முடி கிச்சுக்கிச்சு மூட்டியது பெண்ணவள் கன்னத்தில்.
மூச்சுக் காற்று உரசும் தூரத்தில், மூச்சடைத்தது பெண்ணவளுக்கு. சட்டென எக்கி பின் செல்ல, பின்னேற முடியாமல் ட்ரெஸ்ஸிங் டேபிள் தடைபோட்டது. ஆசை பாதி, அச்சம் மீதியென மிரண்டு விழித்தவளை, சட்டென இடையோடு இழுத்தணைத்து கைகளால் பிண்ணிக்கொண்டான். ஈரக்கூந்தலை எடுத்து முன்பக்கமாக போட்டான்.
ஆளுயரக் கண்ணாடியில் அவள் பின்னழகும், அவளை ஒட்டி உரசி நின்றவனுக்கு முன்னழகும் ஒரு சேர கண்களுக்கு விருந்தாக தொண்டைக்குழி ஏறியிறங்க, இளமை தன் இருப்பை உணர்த்தியது இளையவனுக்கு. இம்சையாய் மூச்சுக் காற்றில் டெம்ப்ரேச்சர் எகிற, தொண்டையைச் செறுமிக் கொண்டு,
“மேகி…” என்று அழைத்தவன் இதழ்கள் செவி மடல் தீண்டியிருந்தது. மூச்சுக்காற்று அனலடித்தது செவியோரம். கழுத்து வளைவில் முகம் புதைக்க, அவளுக்குள்ளும் இதயமத்தளம் இசை கூட்ட, மெல்லிய தந்தி மீட்டலாய் உணர்வுப் பிரவாகம் ஊற்றெடுக்க ஆரம்பித்து அவளுக்குள் பிரளயமே நடத்தியது. அவள் விலக முயற்சிக்கவில்லை. கால்கள் துவழ, திறந்திருந்த அவன் சட்டையை எட்டிப் பிடித்தவள், கண்களை இறுக மூடிக் கொண்டாள். வார்ட் ரோப்போடு இணைந்த ட்ரெஸ்ஸிங் டேபிள் அது. துவண்டவளை இடையோடு தூக்கி அதில் ஏற்றிவைத்தவன் இடக்கை இடை வளைத்துக்கொள்ள, வலக்கை வாகாக பின்னந்தலையை உள்ளங்கையில் தாங்கிக் கொண்டது. சின்னதாய் செவிமடல் ஒற்றியெடுத்த இதழொற்றல், கன்னத்தின் மென்மையை சோதித்து, இதழ் தீண்ட கொதித்துப் போனாள் மதனின் மாதங்கி. மொத்தமாகக் கொள்ளை கொள்ள விளைந்தவன் கைகள், இடையில் கட்டுப்பாடுகளை மீறி எல்லை மீறியது. சட்டையை இறுக்கிப் பற்றியவள் நகம் மார்பில் அடையாளமிட்டது மெல்லிய கீறலாக.
என்னதான் கடந்து விட்டேன் என்றவனுக்குள்ளும், முன்தினம் கிளறப்பட்ட பழைய நினைவுகளின் தாக்கம் வடுக்களை கீறி விட்டிருக்க, ரணப்பட்ட மனதிற்கு ஆற்றுப்படுத்துதல் அவசியமாயிருந்தது.
அவளது விழிகளில் கலந்து, இதழ்களில் புதைந்தவன், மொத்தமாய் தொலைந்து போனான். சிறகின்றி ஆகாயத்தில் மிதக்க ஆரம்பித்தான். கணங்கள் இனிமையாய்க் கரைந்து கொண்டிருந்தது.
“மாமாஆ” என்ற மழலையின் குரல் சட்டென தரையிறக்கியது விண்ணில் மிதந்த இருவரையும். அப்பொழுதுதான் கதவு திறந்திருந்தது நினைவுக்கு வர, மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டனர் இருவரும்.
சட்டென இருவரும் விலக, அவன் முகத்தையே நிமிர்ந்து பார்க்காமல், பிள்ளையைத் தூக்கிக் கொண்டு கிட்டத்தட்ட வெளியே ஓடிவிட்டாள். தலை கோதிக்கொண்டே கண்ணாடி பார்க்க அவளை விட இவன் முகம் சிவந்து விகசித்திருக்க, பார்த்திருந்தவன் முகத்தில் துளியாய் சிறு வெட்கம். வாய்வழியே பெருமூச்சொன்றை இழுத்துவிட்டு ஆசுவாசப் பட்டவன் வெளியே வர,
அனைவரும் ஹாலில் கூடியிருந்தனர். பவித்ரா சோஃபாவில் சோர்வாக அமர்ந்திருந்தாள். அனைவர் முகத்திலும் சந்தோஷத்தின் சாயல். என்ன என்பது போல் ஜெகனைப் பார்த்தான்.
அவன் நாணிக்கோணினான். அவனருகில் சென்றவன் தாழ்ந்த குரலில்,
“மாம்ஸ்… இதெல்லாம் பாக்குறளவுக்கு எனக்குத் தெம்பில்ல. பிஞ்சு மனசு. என்னானு சொல்லுங்க மாம்ஸ்!” என்றான் இறைஞ்சும் பாவனையில்.
“அது வந்து… செகன்ட் ப்ராஜெக்ட் சக்சஸ் ஆயிருச்சுடா மாப்ள” என்றான் மதன் சட்டைப் பட்டனைத் திருகிக் கொண்டு.
“என்ன ப்ராஜெக்ட்… என்ன சக்சஸ் ஆச்சு… அதுக்கு ஏன் என் சட்டைப்பட்டணை பிச்சு எடுக்கறீங்க?” என்று கையைத் தட்டிவிட்டான் எரிச்சல் மேலிட.
“பிச்சு எடுக்கல பக்கி. தொறந்து போட்டு வந்திருக்க. பட்டனைப் போட்டு விடுறேன். அதுல முடிவேற. விழுப்புண்ணும் பட்டிருக்க” என்று சன்னக்குரலில் சொல்ல, அவசரமாக எல்லா பட்டன்களையும் போட்டுக் கொண்டான். கழுத்துப் பட்டன் முதற்கொண்டு.
நாணிக்கோணுவது இப்பொழுது இவன் முறையாயிற்று.
“வளியுது தொடச்சுக்கோ!” என்றான் ஜெகன்.
‘இவிங்க ரொமான்ஸ் தாங்கலடா சாமி!’ கவுண்டமணி மாடுலேஷனில் தலையில் அடித்துக் கொள்வது இவர்களின் மனசாட்சி முறையாயிற்று.
“இப்ப சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று அதட்ட,
“நான் அப்பாவாகப் போறேன்டா” என்றான் சிரிப்போடு.
“அதான் ஆல்ரெடி ஆகிட்டீங்களே!”
“அடேய்! ரெண்டாவது தடவை அப்பாவாகப் போறேன்!”
சஸ்ட்டிகாவுக்கு தம்பியோ, தங்கச்சியோ வரப்போகுது!”
“அய்யோ மாம்ஸ்… இப்பத்தானே சீர் செஞ்சோம். அதுக்குள்ள மறுபடியுமா? கொஞ்சம் கேப் விட்டுருக்கலாம்ல” என்று அழாத குறையாக அலறினான்.
“என்னடா இவன் இப்படிச் சொல்றான்… வயசுக்கு வந்தானா இல்லையா? பத்து மணி டாக்டர ஏதும் பார்க்கணுமாடா!”
“மாம்ஸ்… நீங்க வேற! அவன் ஏதோ வேற ப்ளான்ல இருக்கான்.”
“இதுல என்னடா ப்ளான் வேண்டிக் கிடக்கு. குழந்தையைப் பத்திப் பேசுனா அதுக்கு இன்னும் தயாராகலைனு சொல்றாங்க. நேத்து நைட்டுகூட மாடியில தான் படுத்திருந்தான். ஏன்டான்னு கேட்டதுக்கு ஏதேதோ சொல்லி மலுப்புறான்டா. ஏதோ சேஃப் டேட் இல்ல அது இதுன்னு. இப்பதான் அவன் என்ன சொல்ல வர்றான்னு புரியுது. லூசாடா இவன்!” ஜெகன் ஆத்துப் போனான் மாமன் மகன் பேச்சைக் கேட்டு.
“அவனா லூசு. காரியக்காரன் மாம்ஸ். பொறுங்க என்ன சொல்றான்னு பாப்போம்!” என்றான் மதன்.
பவித்ரா இரண்டாம் முறையாக கருவுற்றிருப்பதை அறிந்து குடும்பமே மகிழ்ச்சியில் இருக்க, பெரியநாயகி, “அடுத்து நீங்க எப்படா சந்தோஷ செய்தி சொல்லப்போறீங்க?” என்றார் சின்ன பேரன்களிடம்.
“இங்க ஒருத்தன் ஆன் தி வே ல இருக்கான்” ரகசியாமாகச் சொன்னான் மதனைப் பார்த்து கள்ளச்சிரிப்புடன்.
“சான்சே இல்ல பாட்டிம்மா. கேரியரே வேஸ்ட்டாயிரும்” என்றாள் பட்டென அப்பொழுதுதான் படுக்கை அறையைவிட்டு எழுந்த வந்த சுபாஷினி. அனைவர் முகத்திலும் அதிர்ச்சி என்றால் மதன் முகத்தில் மட்டும் அசட்டை. எதிர்பார்த்தது தான் என்பது போல்.
“என்னம்மா சொல்ற. இதுல எங்கே கெரியர் எஃபெக்ட் ஆகும்?” என்று ஜெகன் கேட்க,
“நீங்களே பாருங்க ப்ரோ… உங்குளுக்கு கல்யாணமாகி எத்தனை வருஷமாகுது?” என்று கேட்டாள்.
“மூனு வருஷம்மா!” என்றான்.
“மூனு வருஷத்துல ரெண்டாவது பிள்ளை. லைஃப் என்ஜாய் பண்ணவே இல்ல நீங்க ரெண்டு பேரும். இதுல பவித்ரா ஃப்யூச்சரையும் வீட்டோட அடச்சு வச்சு ஸ்பாயில் பண்ணிட்டீங்க. மன்னன் படத்துல அத்தனை ஆளுமையான விஜயசாந்திய கடைசில டிஃபன் கட்டிக்கொடுக்குற டிஃபிக்கல் ஒயிஃபா மாத்திருப்பாங்க. இதுதான் இன்டியன் மென்டாலிட்டி.” அவள் சொல்வதை ஆட்சேபிப்பதா, ஆமோதிப்பதா என்று ஒரு நிமிடம் குடும்பமே குழம்பிப் போயிற்று.
“அதுக்கும் நீங்க குழந்தை பெத்துக்கறதுக்கும் என்னம்மா சம்பந்தம்?” என்று பெரியநாயகி கேட்க,
“குழந்தை பெரிய கமிட்மென்ட் பாட்டிம்மா. அதுக்கு நாங்க இன்னும் தயாராகல. இன்னும் ஒன் மன்த்ல, ஆன்சைட் போற ப்ளான் இருக்கு. அதுக்கு ஹார்ட் வொர்க் போடணும். குழந்தையெல்லாம் வந்துட்டா கரியர்ல ரெண்டு மூனு வருஷம் பேக்ல போயிருவோம்! இத்தனை வருஷ எக்ஸ்பீரியன்ஸூம் குழந்தைக்கு டயப்பர் மாத்துறதுலயே போயிறும்.”
“அப்படி ஓடி ஓடி சம்பாதிச்சு யாருக்கு சேத்து வைக்கப் போறீங்க? இங்க என்ன ஒன்னுமில்லாமையா கிடக்கு?” இப்பொழுது வாசுகி வாயைத் திறந்தார் மருமகளிடம்.
“எங்க லைஃப் என்ஜாய் பண்ணுவோம் ஆன்ட்டி!” என்று
சுபாஷினியும், வாசுகியும் பேச்சைத் தொடர, இதுதான் சமயம் என கிரிதரன் வாயைத்திறந்தான்.
“ம்மா… நாங்க அடுத்த மாசம் வெளிநாடு போறோம். அதை சொல்லிட்டுப் போகலாம்னு தான் விசேஷத்துக்கே வந்தோம்!” என்றான்.
அப்பொழுதும் மகன் அனுமதி கேட்க வரவில்லை. தகவல் சொல்லத்தான் வந்திருக்கிறான். அதுவும் விசேஷம் என்று இவர்களே வலிய அவனை அழைக்கவும். இல்லையென்றால் சொல்லாமல் கூட சென்றிருப்பான். மகன் தன் கையைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டது புரிந்தது வாசுகிக்கு.
இவர்களுக்கென்று இருப்பது இவன் ஒருத்தன் தான். அப்படியே எப்படி விடமுடியும்?
வாசுகி, “போய்ட்டு எப்படா வருவீங்க?” என்றார் சற்று கோபமாகவே.
“இப்ப போறது மூனு வருஷ அக்ரீமென்ட் மா. அங்கேயே செட்டிலாக வாய்ப்பு கெடச்சா நல்லதுன்னு யோசிக்கிறோம்” என்றான் எவ்வித சலனமுமின்றி.
மகன் கூறியதைக் கேட்ட வாசுகி தவிப்பாக கணவரின் முகம் பார்த்தார். நீயாச்சு உன் மகனாச்சு என்பது போல் எழுந்து சென்றுவிட்டார் தனசேகரன். அவர்… வேண்டாம், இங்கிருந்தே கார்மென்ட்சைப் பார்க்கட்டும் என்றதற்கு, வாசுகி தான் மகன் ஆசைப்படுகிறான். அவனாசைக்கி ஒரு ரெண்டு வருஷம் வேலை செய்து வரட்டும் என கணவரிடம் அனுமதி வாங்கிக் கொடுத்தார். நீ தானே அனுப்பின. நீயே பேசு என ஒதுங்கிக் கொண்டார்.
“நீ போயிட்டா வயசான காலத்துல, எங்களுக்குப் பின்னால இங்க இருக்கறதெல்லாம் யாருடா பாக்குறது?” என்றார் ஆற்றமாட்டாமல். அதில் எங்களை யார் பார்ப்பது என்ற கேள்வியும் உள்ளடக்கம். மகனின் செய்கையில் சுத்தமாக ஒப்புதலில்லை. அனுமதி கேட்டால் மறுக்கலாம். தகவல் சொல்பவனிடம் என்ன பேசுவது.
“அதான் தோப்பு, வயலெல்லாம் மதன் பாத்துக்கறான். கார்மென்ட்ஸ் ஜெகன் பாத்துக்கறாப்ல. உங்களுக்கான ஷேர் ஆட்டோமேட்டிக்கா வரப்போகுது. வயசான காலத்துல ஜம்முனு இருக்க வேண்டியதுதானேம்மா?” என்றான்.
“அப்படி வெளிநாடு போய்த்தான் சம்பாதிக்கணும்னு அவசியம் என்னடா. இங்கிருந்து இதெல்லாம் நீயே பாக்கலாம்ல. அடுத்தவனுக்கு கீழ வேலை பாக்கணும்னு என்ன அவசியம் வந்தது. ஏதோ ஆசைப்படுறேன்னு தான் உன்னை அனுப்பி வெச்சேன். நீ ஒரேடியா வெளிநாடு போறேங்குற? எங்களுக்குனு இருக்கறது நீ ஒருத்தன் தான்டா?” என்றவர் கண்கள் கலங்கியது.
“ம்மா… இந்த மாதிரி சென்டிமென்ட்டா பேசி எம்மனச மாத்தப் பாக்காதீங்க. இதுக்குதான் போயிட்டு தகவல் சொல்லலாம்னு நெனச்சேன். நீங்கதான் விசேஷத்துக்கு மாமனா வந்தே ஆகணும்னு சொன்னீங்க. உங்களுக்காகத்தான் வந்தேன். இப்ப என் முடிவைச் சொல்லிட்டேன்” என்று பட்டென முடித்துக் கொள்ள,
ஜெகன், மதனைத்தான் கொலைக்காண்டாகப் பார்த்தான். இவன் வரணும்னு நீதானடா அத்தனை ஏற்பாடும் பண்ணின என்பது போல்.
“விடுங்க மாம்ஸ். நாம பண்ணவேண்டியதைப் பண்ணோம். இப்ப வந்ததால தானே நரியோட சாயம் வெளுக்குது. இப்பவும் இவன் திறமைக்கெல்லாம் இந்த ஆஃபர் வந்திருக்காது. அந்தப் பொண்ணு தலைமையில இவன் போவானா இருக்கும். போன மச்சான் திரும்பி வந்தான் பூ மனத்தோடன்னு போன வேகத்துல திரும்பி வர்றானா இல்லையான்னு மட்டும் பாருங்க!” என்றான் ஜெகனுக்கு மட்டும் கேட்கும் குரலில்.
“எப்படிடா சொல்ற?”
“இவன் இந்தப் பொண்ணப் புடிச்சதே அதுக்காகத்தானிருக்கும். இன்னும் இவன் கல்யாணம் பண்ணினானாங்கற சந்தேகம் இருக்கு. இப்பக்கூடப் பாருங்க! அவங்க கழுத்துல தாலிக் கொடியில்ல. தூங்கும் போது கழட்டி வைக்கிறது சாதாரணமாயிருச்சுன்னு வச்சுக்கிட்டாலும், எந்திரிச்சு வரும்போதாவது போட்டுவரலாம்ல. அன்னைக்கி பெரியம்மா எவ்வளவு சொன்னாங்க. அது அவுங்க காதுலயே ஏறல போல?” என்று சொல்ல அப்பொழுதுதான் ஜெகனும் சுபாஷினி கழுத்தைப் பார்த்தான். வெறுமையாக இருந்தது.
ஜெகன், “அப்படீங்கற!” என சந்தேகமாக கேட்க,
அப்படித்தான் என்பது போல் கண்களை மட்டும் மூடித்திறந்தான் மதன்.
வாசகி அதிர்ச்சி விலகாமல் அமர்ந்திருக்க, சுபாஷினி, “ஆன்ட்டி எனக்கொரு காஃபி” என்று சீதாவிடம் சட்டமாகக் கேட்டுக் கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்து ஃபோனில் மூழ்கிப் போனாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பெரியநாயகிக்கு பொசுபொசுவென வந்தது. “அவ இந்த வீட்டு எஜமானி. உனக்கு வேணும்னா நீ போட்டுக் குடி. சீதா, பட்டம்மா காலையிலிருந்து கத்துது. மதனக் கூட்டிப் போயி என்னானு பாரு!” என்றவர், “போங்கடா போய் அவங்கவங்க வேலையப் பாருங்க. வாய் பாத்துட்டு நிக்காம. பவி என்ன வேணும்னு சொல்லு. வாய்க்கு ருசியா ஆக்கித் தர்றே” என்று அதட்டிவிட்டு அடுப்படி சென்றுவிட்டார்.
அன்றிரவு மாடியில் தனியே படுத்திருந்த கிரியை இருவரும் பிடித்துக் கொண்டனர். “உண்மையைச் சொல்றியா? இல்ல… எங்களுக்கு வந்த சந்தேகத்தை எல்லாரிடமும் சொல்லவா?” எனக் கேட்க கிரி உண்மையை ஒத்துக் கொண்டான் இரண்டு வருடங்களாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக.
“டேய்… நீ பெங்களூர் போயே ரெண்டு வருஷம் தான்டா ஆகுது. போனவுடனேயேவாடா” என்று அதிர்ச்சியானான் ஜெகன்.
“இப்ப என்ன… அதான் மருதமலைல வச்சு கல்யாணம் நடந்ததே. அது போதாதா?” என்றான் விசிராந்தையாக. இவன் அதை மதிக்கிறான். ஆனால் சுபாஷினி அதை கல்யாணாக மதிக்கிறாளா என்று தெரியவேண்டுமே.
கிரிக்கு வெளிநாட்டு மோகம் அதிகம். வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாட்களிலேயே, சீனியரான சுபாஷினிக்கு அந்த வாய்ப்பு அதிகம் எனத் தெரிந்துதான் அவளோடு பழகவே ஆரம்பித்தான். வேலையில் மட்டுமல்ல, வயதிலும் இரண்டு வருட சீனியர் அவள். இவன் காதல் என முன்னெடுக்க, காதலுக்கும் நமக்கும் காத தூரமென பின்னடித்தாள். இவனும் விடாக்கண்டனாய் முயற்சிக்க, முதலில் ட்ரையல் என லிவ் இன் ரிலேஷன்ஷிப்பிற்கு அழைப்பு விடுக்க, இவனும் சம்மதித்தான். அவளது டீமின் கீழ் இவனும் இரண்டு முறை வெளிநாடு சென்று வந்தான். இப்பொழுது ஒப்பந்த அடிப்படையில் செல்ல சுபாஷினிக்கு வாய்ப்பு வர, அவளைப் பின் தொடர்ந்து இவனும் செல்ல முடிவெடுத்து விட்டான்.
“இது அவன் கல்யாணம் முடிச்சதா ஃபேட்டோ அனுப்பும் போதே தெரியும் மாம்ஸ்!” என்றான் மதன்.
எப்படியென கேள்வியாக ஜெகன் அவனைப் பார்க்க,
“அவன் அனுப்பின ஃபேட்டோல ரெஜிஸ்டர் ஆஃபிஸ் முன்னாடி மாலையும் கழுத்துமா நின்னமாதிரி அனுப்பியிருந்தான்ல. அதுல பின்னாடி ஒரு காலண்டர் தொங்குச்சு. அது இருபத்தி ரெண்டாவது வருஷக் காலண்டர் மாம்ஸ். அப்ப இவன் பெங்களூரே போகல. ஆன்லைன்லருந்து ஃபேட்டோ டவுன்லோட் பண்ணி ஏ.ஐ வச்சு கிரியேட் பண்ணிருக்கான். இவன் கம்ப்யூட்டர் மூளைய அதுல காமிச்சிருக்கான்” என்று விளக்கம் கொடுக்க அடப்பாவி என்று வாயில் கைவைத்தான் ஜெகன்.
அன்று கல்யாண பரபரப்பில் யாரும் அதை கவனிக்கவில்லை. மதனுமே பிறகுதான் அதைக் கவனித்துப் பார்க்க அது எ.ஐ பிக்சர் எனத் தெரிந்தது. ஜெகனால் இவனது செய்கையை ஜீரணிக்க முடியவில்லை.
“இவன் ஏதோ அங்க பண்றான்னு தோணிச்சு மாம்ஸ். அதான் விசேஷத்துக்கு வரவச்சேன்!”
“பெரிய சி.பி.ஐ. பெருசா துப்புத் துலக்கி கண்டுபிடிச்சுட்டான். என்னையும் உங்களை மாதிரி குண்டுச்சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டச் சொல்றீங்களா?” என்றவன் பேச்சில் எகத்தாள நெடி தூக்கலாக இருந்தது.
“எங்களுக்கு என்னடா குறைச்சல். நல்லாத்தானே சம்பாதிக்கிறோம். சொத்தில்லையா? வசதியில்லையா? இவன் கூட வைரத்தோடு சீர் செஞ்சான்டா. மாசம் லட்ச ரூபாய்க்கு மேல சம்பளம் வாங்குற நீ என்ன பண்ணின? இதை நீ சீர் செய்யணும்கறதுக்காக கேக்கல. இங்கிருந்தே நல்லா சம்பாதிக்கலாம்னுதான் சொல்றேன்” என்றான்.
“என்ன பெருசா செஞ்சுட்டான். இன்னைக்கி இவன் பண்ணினா நாளைக்கி அவன் பிள்ளைக்கு நீ பதிலுக்கு பண்ணப் போற. அதைக் கணக்குப் போட்டுத்தானே செஞ்சுருப்பான். இதெல்லாம் ஒரு கொடுக்கல் வாங்கல் தானே? உங்களை மாதிரி தேங்கா, போர்வை, ஜமுக்காளம்னு விக்கச் சொல்றீங்களா?” என்பவனிடம் பேசிப் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தது இருவருக்கும்.
பெற்றவர்கள் கைகளுக்குள் ஈரோட்டில் வளர்ந்தவன், வேலை என சிலிக்கான் சிட்டி செல்ல, காணாததைக் கண்டதுபோல் கார்ப்பரேட் எனும் மாயையில் சிக்கிக் கொண்டான் எனப் புரிகிறது. எது சொன்னாலும் சொல்பவர்கள் கேணையனாகவும், சொல்லுவது அபத்தமாகவும் தான் தெரியும். பட்டால் தான் இவனுக்கு புத்தி வரும்.
ஜெகன், “அதுக்கு எதுக்குடா பெத்தவங்கள இப்படி ஏமாத்தணும்? அதுவும் கல்யாண இக்கட்டுல நிக்கவச்சு. நீ எங்கேடோ கெட்டுப் போ. இன்னொரு பொண்ணு வாழ்க்கைய நெனச்சுப் பாத்தியா? இவனையும் வலுக்கட்டாயமா கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சுன்னு எத்தனை கஷ்ட்டம் அன்னைக்கு” என்று கோபமாகக் கேட்டான். கிரியை அடிக்கும் அளவிற்கு கோபம் பொங்கியது ஜெகனுக்கு அன்று குடும்பம் இருந்த நிலமையை எண்ணி. கட்டுப்படுத்திக் கொண்டான்.
“அதனால என்ன? இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்கலைனா, டென்த் கூட கம்ப்ளீட் பண்ணாத இவனுக்கெல்லாம் இப்படியொரு பொண்ணு எப்படி கிடைக்கும்” என்றான் மதனை இளக்காரமாகப் பார்த்து.
‘நீ பேசு ராசா!” என்பது போல் கைகளைக் கட்டிக் கொண்டு பாத்திருந்தான் மதன்.
“அவன் படிப்பை முடிக்காததுக்கு யாருடா காரணம்? உன்னால ஒரு உயிர் போச்சு அன்னைக்கு. அந்த உறுத்தல் கொஞ்சமாவது இருக்கா?”
மதன், “இவன் என்னைக்கி மாம்ஸ் அதெல்லாம் நெனச்சுப் பாத்தான்” என்றான் எரிச்சல் மேலிட.
“நீயும் வெளிநாடு போயிட்டா கடைசி காலத்துல பெத்தவங்கள நெனச்சுப் பாத்தியாடா?” கோபமாக ஜெகன் கேட்க,
“இதுதான் ஜெகன், இந்த சிஸ்ட்டத்துல புடிக்காதது. கல்யாணம் பண்ணனும். குழந்தை பெத்துக்கணும். அவங்கள வளக்கணும். கடைசி காலத்துல பெத்தவங்கள பாத்துக்கணும். இன்னும் எந்தக் காலத்துல இருக்கீங்க. இதுக்கு தான் வெளி உலகமும் கொஞ்சம் பாக்கணும்கறது. லக்ஸரி சீனியர் சிட்டிசன் ஹோம்ஸ் எத்தனையோ இருக்கு. வயசானவங்க அவங்கவங்க வயசுக்குத் தகுந்தவங்களோட இருந்தா தான் ஹேப்பியா இருப்பாங்க. நம்ம கூட இருந்தா சும்மா ஏதாவது சொல்லுவாங்க. இப்பக்கூட பாருங்க. ட்ரெஸ்ல இருந்து, தாலி வரை கண்டிஷன் போடுறாங்க. நமக்கெல்லாம் இது செட்டாகாது!” தோளைக் குலுக்கிச் சொன்னவனை விசித்திர ஜந்துவைப் போல் பார்த்தனர் மச்சான்கள் இருவரும்.
“உனக்கு செட்டாகலையா… உன் ஒய்ஃப்க்கு செட்டாகலையா?” என்று நக்கலாகக் கேட்டான் மதன்.
“இது அவங்க வீட்டுக்குத் தெரியுமாடா?”
“அவங்க எல்லாம் ரொம்ப ஜோவியல். ஓபன் டைப்!” என்றான். மகளிடம் பேசி பிரயோஜனமில்லை என சுபாஷினி வீட்டில் தண்ணீர் தெளித்துவிட்டது இவனுக்குத் தெரியாதே!
“மாம்ஸ்… இவனெல்லாம் பெத்த பிள்ளைக்கு ப்ளே ஸ்கூல், பெத்தவங்களுக்கு சீனியர் சிட்டிசன் ஹோம்னு போற கலாச்சார சீர்திருத்தவாதி. நாம எது சொன்னாலும் முட்டாள்தனமாத் தான் தெரியும். நாம எதுக்கு தூக்கத்தை கெடுத்து இவன் கூட வாதாடணும். கீழ வாங்க போகலாம்” என்று அழைக்க, மதன் சொல்வதுதான் சரியென இருவரும் கீழே சென்றுவிட்டனர்.
அறிவாளிகள் முன் பேசாதே. முட்டாள்கள் முன் பேசவே பேசாதே எனும் தாரக மந்திரத்தை கையில் எடுத்துக் கொண்டனர் மச்சான்ஸ் இருவரும்.
