மதன மாளிகையில் 21

21

“டேய்…‌ குழந்தைப் பிள்ளைகிட்ட ஏச்சுத் திங்கிற? வெக்கமாயில்ல?”

“நல்லாப் பாருங்க மாம்ஸ்! உங்க பிள்ளைதான் இவ்ளோ பெரிய பையனை ஏச்சு புடிங்கித்திங்கிறா? அவங்க அப்பாவாட்டம்!” என்றவன் சோஃபாவில் நீட்டி நெடுஞ்சாண்கிடையாக நிமிர்ந்திருந்தான். மாமன் வயிற்று மீது இரண்டு பக்கமும் கால் போட்டு ஜம்மென அமர்ந்திருந்தாள் சஷ்ட்டிகா. 

அடிக்கும் வெயிலுக்கு வீட்டிற்கு வந்தவுடன் பட்டுப் பாவாடையை கழற்றிவிட, “இன்னும் சுத்திப் போடலப்பு. கொஞ்ச நேரம் இருக்கட்டும்!” என்றார் பெரியநாயகி.

“பிள்ளைக்கு தானே சுத்திப்போடணும். அவ போட்டிருக்க ட்ரெஸ்ஸுக்கு இல்லைல. என் டார்லிங்கப் பாக்கையில எனக்கே அவியுது அப்பத்தா. இந்து வெயிலுக்கு இவளுக்கு எப்படி இருக்கும்” என்றவன் ஆடையிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தே விட்டான். 

வெறும் ஜட்டியோடு சுற்றிவந்தவள், ஆரஞ்சுப் பழத்தை எடுத்து வந்து உரித்து தரச்சொன்னாள். அவளைத் தூக்கி வயிற்றின் மீது உட்கார வைத்துக்கொண்டான். மார்பு மீது ஆரஞ்சு சுளைகள் உரித்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு சுளையை வாயில் எடுத்து வைத்து உதட்டால் பாதியைக் கவ்விக் கொள்ள, தாய்ப்பறவையின் அலகிலிருந்து இரை எடுப்பது போல், குனிந்து பாதி சுளையை கடித்து எடுத்தது கிள்ளை. மீண்டும் அவளே ஒரு சுளையை மாமன் வாயில் எடுத்து வைத்து, பாதியை கடித்து எடுத்தாள். இப்படியே நீ பாதி, நான் பாதி விளையாடிக் கொண்டே காக்கா கடி கடித்து பழத்தை மாற்றி மாற்றி இருவரும் ஊட்டிக் கொண்டனர். இது இருவருக்குள்ளும் அடிக்கடி நிகழ்வதுதான்.

மண்டபத்திலிருந்து எடுத்துவந்த பொருட்கள் எல்லாம் வண்டியிலிருந்து இறக்கிவைத்து, ஹால் முழுக்க பரப்பிக் கிடந்தது. இங்கிருந்து எடுத்து செல்லப்பட்டு, மீண்டும் இங்கேயே திரும்பி வந்தது. 

“இந்தப் பருத்தி மூட்டை குடவுன்லயே இருந்திருக்கலாம்” என்றான் எல்லாவற்றையும் மீண்டும் இறக்கி வைக்கும் பொழுது. 

ஆரஞ்சுப் பழம்‌ முடிய, இறங்கிப் போய், திராட்சைக் கொத்தை எடுத்து வந்து அதே போல் மாமன் நெஞ்சில் வைத்து ஏறி உட்கார்ந்து கொண்டது. 

“என்னைப் பார்த்தா டைனிங் டேபிள் மாதிரி இருக்காடீ உனக்கு!” என்றான் சிரித்துக் கொண்டே. 

கொத்திலிருந்து ஒவ்வொன்றாகப் பிய்த்து பிள்ளைக்கு கொடுக்க, 

“நானும்” என்று மாமனுக்கும் ஒவ்வொன்றாகப் பிய்த்து  ஊட்டிவிட்டது. பிய்த்து எடுக்கும் பொழுதே சாறுபிழிந்து, தோல் தான் அவன் வாய்க்குப் போனது. அவன் டீசர்ட் முழுக்க சாறாக்கியது.  

காதில் மாமன்காரன் எடுத்துக் கொடுத்த காதணி சந்தனத்தோடு மின்னியது. ஒற்றைக்கல் வைரத் தோடு. மதனின் மாமன் சீர். 

‘எவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு. எதுவுமே நடக்காத மாதிரி எப்படி இவனால் சாதாரணமா இருக்க முடியுது?’ என்ற யோசனைதான் பட்டுச் சேலையை மாற்றிவிட்டு, ரிஃப்ரெஷ்ஷாகி வெளியே வந்தவளுக்கு. அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றாள். இன்னும் அவர்கள் பார்த்துச் சென்றதை நினைத்தால் மனம் சில்லிட்டுப் போனது மாதங்கிக்கு. பிள்ளையோடு விளையாடிக் கொண்டே அவளது பார்வையையும் கிரகித்துக் கொண்டான். 

‘அப்பாவுக்கும், மகளுக்கும் நம்பல லவ்வாங்கியாப் பாக்குறதே வேலையாப் போச்சு. கல்யாணத்தப்போ பாத்தாரு. அதுல ஒரு நியாயம் இருந்துச்சு. இன்னைக்கும் எதுக்கு அப்படிப் பாத்தாருன்னு தெரியலியே?’ என்ற யோசனைதான் மதன் மண்டைக்குள் நண்டாய் ஊறியது. 

வந்தவர்கள் நினைத்து வந்த காரியம் தோல்வியில் முடிய, எதுவும் செய்யமுடியாத கையாலாகாத்தனத்தோடு மண்டபத்தைவிட்டு வெளியேறினர். 

அவள் கண்களில் கலக்கத்தைப் பார்த்தவன், “அம்மணி… அங்க என்ன பார்வை?” என்றான் அருகே வந்து. 

“ஒன்னுமில்லை” என்று வாய்தான் சொல்லியே தவிர உள்ளுக்குள் உதறல்தான். 

அவனுக்கும் அங்கங்கே சிறு‌ கீறல்கள். அவன் நிறத்திற்கு நன்றாகவே சிவந்து தெரிந்தது. அவள் பார்வை தன் காயத்தை ஆராய்வதை உணர்ந்தவன்,‌ “உங்க அம்மாவும், அப்பாவும் வந்துட்டாங்க பாரு. அவுங்களப் போய்க் கவனி” என்றான்.

கலவரம் நடக்கும் பொழுதே வந்துவிட்டனர் சம்பந்தி வீட்டு விசேஷத்திற்கு. கலவரம் ஓய்ந்த பிறகுதான் அவர்களை கவனித்தனர். 

தனசேகரனும், இடும்பனும் சென்று அவர்களை வரவேற்றனர். மாதங்கி அவர்களைப் பார்க்கவே இல்லை. 

அவள் சிந்தனை முழுவதும் வந்து சென்றவர்கள் மீதுதான். இவன் சொன்னபிறகுதான் கவனித்தாள். 

“நீங்களும் வாங்க!” என்று அழைக்க, இருவரும் சென்று வரவேற்றனர். 

மிதுன் இவனைப் பார்த்ததும், “மாமா” என பூங்கோதை கையைவிட்டு ஓடி வந்தான். 

“டேய்… மச்சான்!” என தூக்கிக் கொள்ள, பூங்கோதைக்குதான் மருமகன் கையில் மகனைப் பார்த்தவருக்கு சங்கோஜமாகப் போயிற்று. 

“இறக்கிவிடுங்க தம்பி… ட்ரெஸ் கசங்கிறும்” என்றார்‌ சமாளிப்பாக. அவன் உடை ஏற்கனவே‌ கசஙகித்தான்‌ இருந்தது. சண்டைனா‌ சட்டை கூட கசங்கலைனா எப்படி?

“மாமா…‌ வண்டில போலாமா?” என்றான் ரகசியமாக அவன் காதருகில் குனிந்து. அப்பாவிற்குப் பயந்து தெரியாமல் கேட்கிறான்‌ எனப்‌ புரிந்தது. ஆனால் அவன் கேட்டது எல்லாருக்கும் கேட்டது. 

இப்பொழுதும் மாமனார், மருமகனை லவ்வாங்கியாகத்தான் பார்த்தார். ராகினி கல்லூரி சென்றிருக்க, ஜெகதாம்பாளோடு நால்வரும் வந்திருந்தனர். ஜெகதாம்பாள் பார்வையும் சரியில்லை.

மூன்று நாள் சாம்பாரை முகர்ந்து பார்த்ததுபோல் முகத்தை வைத்திருந்தார். மதன் கண்டுகொள்ளவில்லை. ஏனென்றால் மறு வீடு சென்றபொழுதே அப்படித்தான் பார்த்தார். மாதங்கிதான் என்னவாம் இந்த அப்பத்தாவுக்கு என்று யோசித்தாள். 

“ஓ.கே. சாப்பிட்டு பைக்ல போலாம்!” மச்சானைப் போலவே ரகசியமாகச சொன்னவன், கீழே இறக்கிவிட்டான்.

வந்தவர்களை அமரச் சொன்னவன், “நீ மேடைக்குப் போ! பவி தனியா நிக்கும்!” என்றான். 

“நீ போ மதி! வந்தவங்களக் கவனி!” என்று ‌பூங்கோதையும் சொல்ல, அவளும் மேடைக்கு சென்றாள். என்ன செய்யவேண்டும் என்பதெல்லாம் தெரியாது. பவித்ரா சீர் தட்டுக்களை‌ எடுத்துக் கொடுக்க, வாங்கி மேடையில் வைத்தாள். 

சங்கர், அஜய், நரேன் மூவரையும் பந்தி ஏற்பாட்டைக் கவனிக்க அனுப்பிவிட்டு, மதன் மேடைக்கு வர, அவனைப் பார்த்ததும் குழந்தை கை நீட்டினாள். ஜெகன் வந்த முக்கியஸ்தர்களைக் கவனிக்க, இடும்பனும் பரிமளமும் சொந்தங்களை வரவேற்றனர். அதுதானே முக்கியம்.‌ இளைய தலைமுறையினர்க்கு யார் யார் எந்தவகையில் சொந்தம் எனத் தொரியாதே. 

பிள்ளையைத் தூக்கிக் கொண்டு கிரிதரன் மேடையில் நின்றான். கலாட்டாவில் பிள்ளை சற்று மிரண்டு அழுதது. தூக்கிவைத்து சமாதானப் ‌படுத்தினான். இருந்தும் அம்மாவைத் தேட, “பவி நீ வா! மதன் ஒய்ஃப் எடுத்து வைக்கட்டும்!” என்றான். அப்பவும்‌ தன்னருகே நின்ற சுபாஷினியைப் போகச் சொல்லவில்லை.‌ 

இப்பொழுதும் மாதங்கியைப் பார்த்தவன் கண்களில் பொறாமைதான். தப்பர்த்தம் இல்லை. இருந்தாலும் இவனுக்கா என்ற எண்ணம்தான். இது மதன் மீது வந்த பொறாமை. சிறுவயதில் இருந்தே அவன் தோற்றம், வசீகரம் மீது தன்னை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வான். இப்பொழுது மனைவியோடு ஒப்பிட்டான். அவளும் அழகிதான். இல்லையெனில் காதலில் விழுந்திருப்பானா? சுபாவின் நவநாகரீகம், திறமை இவளுக்கு வராது என தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். பின்னே… இப்பொழுதே இவனைவிட சில ஆயிரங்கள் சம்பளம் சுபாஷினிக்கு அதிகம். அந்த வகையில் தான்தான் மதனைவிட ஒருபடி அதிகம் என சந்தோஷப்பட்டுக் கொண்டான். 

“நானும் தூக்கித் தானே வச்சுருக்கேன்!” என்றான். மதனைப்பார்த்ததும் கைநீட்டியதில் சிடுசிடுவென. 

“பிள்ளைகிட்ட எப்படி பேசணும்னு தெரியுதா? கொண்டாடா?” எனக் கைநீட்ட, மதன் கைக்கு வந்தவளுக்கு அழுகை சற்று மட்டுப்பட்டது. தேம்பலோடு கழுத்தில் முகம் வைத்துப் படுத்துக் கொள்ள, கிரிக்கு முகம் சத்தில்லாமல் போயிற்று. வீடாக இருந்தால் இந்நேரம் பிள்ளை சாப்பிட்டு குட்டித் தூக்கம் போடும் நேரம். 

தினமும் தூக்கி, கொஞ்சி விளையாடுபவனுக்கும்,‌ தீபாவளி, பொங்கல் என வந்து செல்பவனிடம் பிள்ளை ஒட்டுவதற்கும் உள்ள‌ வித்யாசம் புரியவில்லை. பிள்ளை முகங்களை அடையாளம் வைக்க ஆரம்பித்த பிறகு நான்கு தடவை கூட வந்து சென்றிருக்கமாட்டான். 

“பவி… இங்க வா! அப்பத்தா சொல்லச் சொல்ல மதியும், நானும் எடுத்து வைக்கிறோம். குட்டிக்கு ஏதாவது சாப்பிடவச்சு கொண்டுவா!” என்றான்.‌ 

பிள்ளையை வாங்கிக் கொண்டு பந்தி நடக்கும் இடம் சென்றாள். 

‘நானும் முதல்ல இதைத்தானே சொன்னேன். அவன் சொன்னதும் போறா!’ 

மதியும், தானும் எடுத்து வைப்பதாகச் சொல்லிவிட்டுத்தான் பவித்ராவை அழைத்தான் என்பது தெரியவில்லை.‌

இங்கு காது குத்துவதற்கான ஏற்பாடு நடக்க, விசேஷத்திற்கு வந்தவர்கள் தங்களுக்குள் இவர்களது கால் நூற்றாண்டு குடும்ப வரலாற்றைப் பின்னோக்கிச் சென்று புரட்டிக் கொண்டிருந்தனர். 

குணசேகரன், சீதாலட்சுமி திருமணம் நின்றது, குணசேகரின் காதல் திருமணம், குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்தது, சீதாலட்சுமி கணவன் இறந்து, பிறந்த வீட்டோடு வந்தது, அவர்கள் சொத்து தர மறுத்தது, இப்பொழுது வந்து கலாட்டா செய்தது வரை, இருபத்தைந்து வருடத்திற்கு முன் நடந்த கதையை உப்பு, காரப்பொடி தூவி  மூக்கில் நெடியேற, தொண்டை கமறப்‌பேசி மறு ஒளிபரப்பு செய்து கொண்டனர். மதன் திருமணம் உட்பட. 

கிரிதரனையும், சுபாஷினியையும் கூட கை காட்டி பேசிக் கொண்டனர். இவர்கள் குடும்பத்தில் விசேஷம் என்றால் கலாட்டாவிற்கு நான் கேரண்டி என கமுக்கமாக சிரித்துக் கொண்டனர். எந்தப் பிரச்சினையும் இல்லாத பவித்ரா, ஜெகன் கல்யாணம் முதற் கொண்டு, பெரியப்பா மகன்கள் வம்பில்தானே முடிந்தது. 

இவை அனைத்தும் வாசுதேவன் காதில் விழத்தான் செய்தது. 

“நம்ம முன்னாடியே நம்ப பிள்ள மேல என்ன அதிகாரம் பாரு வாசு! நம்மகிட்ட மறச்சுட்டாங்க. கடைசில சாதிகெட்ட பயலல்ல நம்ம தலைல கட்டிட்டாங்க!” கனகச்சிதமாக தன் வேலையைப் பார்த்தார் ஜெகதாம்பாள்.‌ 

“அத்தை… வந்த எடத்துல என்ன பேசறீங்க? அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை!” என்றார் பதறிப்போய்… யார் காதிலாவது விழுந்து விடுமோ என்று அஞ்சி. 

“எம்பட‌புள்ளையே விஷயம் தெரிஞ்சு இடிஞ்சு போயி உக்காந்திருக்கு. மாப்பிள்ளையாம் மாப்புள்ள! நாளைக்கு நம்ம உறமொறைக்கெல்லாம் தெரிஞ்சா, அசிங்கமா பேசமாட்டாங்க! என்னத்த விசாரிச்சு சம்பந்தம் பண்ணீங்கனு. இன்னும் என்ன என்னத்த மறச்சாங்களோ? இப்ப இழுத்துட்டு வந்ததும் என்ன சாதியோ… கருமமோ? கை நனைக்கிற சாதியா இருந்தாக்கூட பரவாயில்ல. வேற சாதியா இருந்தா?” என்ற அங்கலாய்ப்பு ஜெகதாம்பாளுக்கு. 

“நாளைக்கு ராகினிய கேட்டு வர்றவங்க, பெரிய பொண்ண கொடுத்த இடம் இப்படின்னு தெரிஞ்சா, எம்மகனுக்கு தானே‌ அசிங்கம்! இப்படியா வீட்டு விசேஷத்துல கூட அடிச்சுப்பாங்க?” ஈரைப் பேனாக்கி, பேனை‌ பெருச்சாளி‌யாக்கினார்.‌ இவர் தேரை இழுத்து தெருவில் விட்டு விடுவார் போலயே எனப்‌ பயந்தார். 

“அவங்க என்ன சாதியா இருந்தா நமக்கென்னத்தை. அவங்க அப்பா‌ நம்ப சாதிதானே? இதோட விடுங்க. அவங்களுக்கு இல்லாதது நமக்கென்ன?” மகள் வாழ்க்கையில் பிரச்சினையை உண்டுபண்ணி விடுவாரோ என்ற பயம் பூங்கோதைக்கு.‌ ஏதோ மகளைப் படிக்க அனுப்பி வைத்ததில் மாமியாருக்கு, மருமகன் மீது நல்ல அபிப்ராயம் வந்துள்ளது.

குணசேகரன் கலப்பு திருமணம் என்ற விஷயம் தெரிந்ததில் வாசுதேவன் முகமும் அதிருப்தியில் தான் இருந்தது.. அன்றைக்கு ஏதோ அவசரத்திற்கு மாப்பிள்ளை, அதுவும் அவர்கள் வீட்டுப் பிள்ளைதானே என்று கொடுத்தாயிற்று. அதுமட்டுமா காரணம். மகள் மீதிருந்த நம்பிக்கையின்மையும் தான். மதனின் பெற்றோர்‌ இப்படி எனத்தெரியாதே. 

வந்தவுடன் கிரியும், சுபாஷினியும் அவர் பார்வையில் பட அவ்வளவு கோபம் வாசுதேவனுக்கு. இறுகிப் போய் அமர்ந்திருந்தார். அன்று குடும்ப மானத்தை வாங்கிய அதே மகனையும், மருமகளையும்,‌ இன்று… மேடையில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். என்ன குடும்பமோ என்ற ஏளனம் வாசுதேவன் முகத்திலும். அதற்காக பெற்ற பிள்ளை இல்லையென உறவை முறித்துக் கொள்ள, திருமணமா என்ன? விவாகரத்து வாங்கி உறவை வெட்டிவிட. இரத்த பந்தம் ஆயிற்றே. இந்தப் பிறவிக்கு அவன் தான் மகன். இவர்கள் தான் ‌அவன் பெற்றொர். படைத்தவனே நினைத்தாலும் மாற்ற முடியாத படைப்பாயிற்றே.‌

“விளஞ்ச நெலத்தப் பாக்காதே… விதைய மட்டும் பாருங்கற? எப்பருந்து நீ எம்மகன எதுத்துப் பேசக் கத்துக்கிட்ட?” என்று‌ மகன்‌ பக்கமாக பேச்சைத் திருப்பினார்.‌ 

அவரெங்கே வாசுதேவனை எதிர்த்துப் பேசினார். மாமியார் பேச்சுக்கு தானே பதில் கொடுத்தார். மிரட்சியோடு கணவரைப் பார்த்தார் பூங்கோதை.

பேசினால் இன்னும் வம்பை‌ வளர்ப்பார் என அமைதியாகிவிட்டார்.

அதற்குள் அங்கே காது குத்தும் ஏற்பாடும் நடந்தது. 

கிரிதரன் மடியில் பிள்ளையை அமரவைத்து, மாலை போட்டு, வாசுகி எடுத்துவந்த காதணியைத்தான் ஆசாரியிடம் கொடுத்தனர். 

ஆசாரி, “சின்னப்பிள்ளை காதுக்குத் தக்கன எடுக்கக் கூடாதுங்களா” எனக் கேட்டார். பெருமையைக் காட்டவேணும் இரண்டு பவுனிற்கு பெரிய தோடாக தொங்கட்டானோடு எடுத்திருந்தார். கூடவே தோட்டிற்கு இணையாக ஆரம்,‌ நெக்லஸ் என்று பத்து பவுனிற்கு செட்டாக எடுத்திருந்தார்.

தனிப்பட்டு கிரிதரன் எதுவும் செய்யவில்லை. அதுதான் அம்மா செய்கிறாரே? எல்லாம் தாங்கள் கொடுத்தது தானே என்ற பரந்த எண்ணம் எப்பொழுதும் கிரிதரனுக்கு உண்டு. படிப்பை முடித்ததில் இருந்து, ஜெகனும் கார்மென்ட்ஸ்க்காகத் தானே உழைக்கிறான்‌ என்பதே‌ மறந்து போயிற்று அவனுக்கு. 

பரம்பரை சொத்து என்றாலும் அதையும் முன்னோர்கள் எடுத்து வைத்த பெயர் கெடாமல் கொண்டு செலுத்துவதென்பது சின்னக்காரியம் அல்லவே. இது ஒன்றும் அசையாச் சொத்தில்லை. வியாபாரம். இன்றைக்கு இருக்கும் போட்டி உலகில் அதைத் துவழவிடாமல் தூக்கிப் பிடிப்பதென்பதே தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பதற்குச் சமம்.

இன்று வளர்ந்து நிற்கும் பெரிய பெரிய தொழில் சாம்ராஜ்யங்கள் எல்லாம் ஒரே நாளில், ஒரே தலைமுறையில் வளர்ந்தன அல்லவே. விதை யாரோ ஒருவர் போட்டது. அடுத்தடுத்து வந்த வம்சாவளிகள் அதை விருட்சமாக்கி வளர்த்து வருகிறார்கள். அதே போல் எத்தனையோ தலைமுறைகள் கோலோச்சிய சாம்ராஜ்யங்கள் எல்லாம் ஒரே தலைமுறையில் தரைமட்டமானதும் உண்டு. 

உழைப்பும், திறமையும் ஜெகனுக்கு உண்டு என்பதால் தான், அடுத்து இந்த கார்மென்ட்சை வழிநடத்தும் வாரிசாக, மகனான கிரிதரனைத் தேர்ந்தெடுக்காமல் மருமகனான ஜெகனைத் தேர்ந்தெடுத்தார் தனசேகரன். கிரிதரனின் பொறுப்பற்ற தன்மை நன்கு தெரியும். பொறுப்பற்ற தன்மை என்பதைக்காட்டிலும் எதொன்றிற்கும் அர்ப்பணிப்பு பாங்கு அவனிடம் சுத்தமாக இல்லை. உறவுகளானாலும்‌ சரி. தொழிலானாலும் சரி. 

பாதிப் பங்கை சீதாலட்சுமி பெயரில் எழுதிவைத்தவர், கிட்டத்தட்ட ஜெகனை ஒர்க்கிங் பார்ட்னராகத்தான் இன்னும் வைத்திருக்கிறார்.‌ எது ஒன்றும் எளிதாகக் கிடைத்துவிட்டால் அதன் மதிப்பு தெரியாது என்பதற்காக.‌

“தொங்கட்டான எடுத்துட்டுக் குத்துங்க!” என்றார் வாசுகி. 

“பச்சைப்புள்ள காதுங்கம்மா… சின்னதா இல்லீங்களா” எனக்கேட்க, 

ஜெகன்தான் மதன் வைத்திருந்த சீர் தட்டிலிருந்து காதணியை எடுத்துக் கொடுக்கச் சொன்னான். மதன் தயங்கினான். மதனும் மாமன்‌சீர்‌ அத்தனையும் அடுக்கியிருந்தான்.‌ 

“வேண்டாம் மாம்ஸ். பெரியம்மா எடுத்ததையே குத்துங்க. மூனாம் நாள் கழட்டிட்டு வேணா இதைப் போட்டுக்கோங்க!” என்றான்.‌ அவர்களுக்குத்தானே முதல் உரிமை என்ற எண்ணத்தில். 

“இவ்ளோ பெரிய தோடு போட்டா எம்புள்ள‌ காது என்னத்துக்குடா‌ ஆகும்?” என்றான்.‌ என்னமோ அவனுக்கே‌ காது குத்தப் போவது போல் பயந்து. 

மதன் எடுத்திருந்தது பூ வடிவத்தில் ஒற்றைக்கல் வைத்த சிறு கம்மல். எப்பொழுதும் போட்டுக் கொள்வது போல.‌

“இதுல என்னடா‌ இருக்கு. நீ எடுத்ததையே குத்தட்டும். இது பவித்ரா போட்டுக்கற மாதிரிதான் உங்க பெரியம்மா எடுத்தா. குழந்தை காதைப்பத்தி யோசிக்கல!” என்றார்‌ தனசேகரன். 

மதன் வாசுகியைப் பார்த்தான். அவர் மறுக்கவும் இல்லை. ஒப்புதல் அளிக்கவும் இல்லை. உங்க இஷ்ட்டம், நான் வைக்க வேண்டியதை சபையில் வைத்தாயிற்று என்பது போல் இருந்து கொண்டார்.  எதுவும் சொல்லவில்லை. 

தங்கைக்காகவும், தங்கை மகளுக்காகவும் சற்று முன்‌, பவித்ரா பெரியப்பாவோடும், பெரியப்பா மக்களோடும் அவன் மல்லுக்கட்டியதைத்தான் பார்த்தாரே? சொத்துக்காக எவ்வளவு மெனக்கெட்டிருக்கிறான். அதற்காக எல்லாம் அவன் மீது பாசம் என்றெல்லாம் இல்லை. அவன் எடுத்ததையே குத்தட்டம் என‌ப் பெரிய மனது பண்ணி விட்டுக்கொடுத்தார். 

“இவனை மாதிரி மூக்குத்தி சைஸுக்காப்பா எடுக்கச் சொல்றீங்க?” என்றான்‌ இளக்காரமாக மதன் எடுத்திருந்த காதணியைப் பார்த்து. 

“அது வைரம்டா. சிங்கிள்‌ சாலிட் ஸ்டோன். ஒவ்வொன்னும் ஒன்றரை லட்சம்!” என்றார். 

கஞ்சப்பய இவ்ளோ சம்பாதிக்கிறானா என வியந்து பார்த்தான். 

மதன் எடுத்ததையே காதில் குத்த, அழுத பிள்ளைக்கு வாழைப் பழம் கொடுத்து சமாதானம் செய்தான் மாமன்காரன்.‌ 

பந்தி முடித்து, வந்தவர்கள் கிளம்பி, மண்டபத்தை கணக்கு முடித்து, மச்சானுக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றி, வீடு வந்துசேர, மாலையாகிவிட்டது. 

“இப்ப எதுக்குங்க அம்மணி மொறச்சுட்டுத் திரியறீங்க?” 

இரவு படுக்கைக்கு வந்தும், முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளிடம் கேட்க,

“உங்கள யாரு அவுங்க மேல கைவைக்கச் சொன்னது?” என்றாள் கோபமாக நெஞ்சை நிமிர்த்தி. 

“அதுதான் கோபமா? நாங்கூட அன்னைக்கி கெழவி மேல வந்த பொறாமை, இன்னைக்கி குட்டிம்மா பாத்து வந்துருச்சோன்னு நெனச்சேன்” என்றான் அப்பொழுதும் விளையாட்டாக. 

“குட்டிம்மாவைப் பார்த்து பொறாமைப்பட என்ன இருக்கு?” என்று‌ யோசிக்க அவள் அமரந்திருந்ததும், இருவரும் பழம் சாப்பிட்டதும் நினைவிற்கு வர, முகம் கோவைப்பழமாய் சிவந்து விட்டது. வெட்கத்தில் என்று நினைத்தால் அது உங்க தப்பு. 

“நான் எவ்வளவு டென்ஷன்ல இருக்கேன். நீங்க என்னடான்னா விளையாடுறீங்க? இன்னும்‌ அவனுங்க பாத்ததை நெனச்சா குலை நடுங்குத!” என்றவள் கண்கள் அப்பட்டமாக பயத்தைக் காட்டியது. நன்றாகப் பயந்திருக்கிறாள் என்பது புரிந்தது. தனக்கு ஏதாவது‌ ஆகிவிடுமோ என்ற‌வள் பதட்டத்தை பார்த்தவன் மனம் உல்லாசமாக விசிலடித்து. 

“அடிபட்ட பாம்பு கடிக்கத்தான் செய்யும்!” என்றான் சற்றும் பயமின்றி. 

“அவனுங்க மேல கைவைக்கக் கூடாதுன்னு தான் நானும் வந்த கோபத்தை அடக்கிட்டு கையக்கட்டி நின்னேன். நீயே பாத்தயில்ல. மாம்ஸ அடிக்க வரவும் தான் நான் ஊடால போனேன். அவரை அடிக்கவிட்டு வேடிக்கை பாக்கச் சொல்றியா?” 

“மொதல்ல அண்ணா தானே அடிச்சாங்க!”

“அவிங்க பேசுனது அப்படி! என்னைப் பேசவும் அடிச்சாரு!” 

“இருந்தாலும் அவங்க உங்களைப் பார்த்த பார்வையே சரியில்ல. எனக்கென்னவோ பயமாருக்கு!” என்றவள் குரல் இப்பொழுது ஸ்வாதீனமாக உள்ளிழுத்தது.  

“இதுக்கெல்லாம் பயந்தா ஆகுமா?”

“இப்ப அந்த சொத்தை வாங்கியே ஆகணுமா? பெரியவங்களே அதைக் கண்டுக்கல. அவங்களுக்கில்லாத அக்கறை உங்களுக்கு என்ன? உங்களுக்குத் தேவையா இதெல்லாம்? சட்டப்படி போனா கொடுத்து தானே ஆகணும்!” என்றவள் குரல் இப்பொழுது சற்று ஓங்கி ஒலித்தது. அவளது பயத்திலும்,‌ கோபத்திலும் சிரிப்பு வந்தது மதனுக்கு. அவனது சிரிப்பு அவளை மேலும் கோபப்படுத்திப் பார்த்தது.  

“நான் எவ்ளோ டென்ஷன்ல இருக்கேன். உங்களுக்கு சிரிப்பு வருதா?” என்றவள் ‌கண்கள்‌ அனலைக்கக்கியது.

“கேஸ் போட்டு, சொத்து கைக்கு வர்றதுக்குள்ள குட்டிம்மாவுக்கு வயசாயிடும்! இங்க சொத்து இல்ல பிரச்சினை. பவித்ரா அந்த வீட்டுப் பொண்ணுங்கற அங்கீகாரம்தான் முக்கியம்” என்று குரலில் அழுத்தம் கொடுத்தவன், 

“அவனுங்க பேசினதெல்லாம் உனக்குத் தெரியாது. அப்படியிருந்தும் நான் அவனுங்களுக்கு நல்லதுதான் செஞ்சுறுக்கேன். கடன்காரன்கிட்ட விட்டிருந்தா வட்டிக்கு வட்டி, குட்டியெல்லாம் போட்டு சொத்தை மொத்தமா முழுங்கி ஏப்பம்‌ விட்டிருப்பாங்க. இப்ப கடன் போக கொஞ்சமாவது அவங்களுக்கு மிஞ்சும்!” என்றான். 

“எனக்கு அது அநாவசியம். தேவையில்லாத ஆணி. இப்ப எனக்கு நீங்கதான் முக்கியம்‌.‌ உங்களுக்கு ஏதாவது ஆகிறுமோன்னுதான் பயந்து வருது. நீங்க செஞ்சது அவிங்களுக்கு புரியவா போகுது” என்றவள் கண்கள் சிவந்து நீர்ப்படலம் பூத்தது.‌  

உண்மையிலேயே பயந்து விட்டாள் என்பது புரிய, 

“இங்க வா!” என கைநீட்டி அழைத்தான். 

அருகே வந்தவளை, தோள் பிடித்து கட்டிலில் அமரவைத்து, தானும் அமர்ந்து கொண்டான்.

“இது அவங்களுக்காக செய்யலை மதி!” என்றான் ஆழ்ந்த குரலில்.

“எனக்காக, என் மன நிம்மதிக்காக. எங்க அப்பாவையே மனசார நம்பியிருந்தவங்க சீதா சித்தி. எங்க அப்பாவாலதான் அவங்களுக்கு அவசரக் கல்யாணம். அவங்க வாழ்க்கையும் வீணாப்போச்சு. இந்த குற்ற‌உணர்வுதான் எங்க அப்பாவுக்கும். என்னதான் காசு பணம் பெரிசில்லைனு சொன்னாலும், அது சம்பாதிக்க முடியாதவங்க சொல்ற சப்பைக்கட்டு. அவங்களும் அது பின்னாடி ஓடி தன் கைக்கு சிக்கலேங்கற விரக்தியில சொல்றது. பொருளாதாரம் தான் வாழ்க்கையோடு பலம். அதுவும்‌ பெண்களுக்கு ரொம்ப முக்கியம். சொத்தையும் இழந்து, வாழ்க்கையும் இழந்து கைப் பிள்ளையோட நின்ன சீதாலட்சுமி சித்திய நெனச்சுப் பாரு. பெரியப்பா சொத்து கொடுத்தாங்கதான். அவங்க பிறந்த வீட்டு சொத்துதான். இருந்தாலும் இந்த கிரிப்பய எங்க அம்மா சொத்து தானேன்னு சித்தியக் கொஞ்சம் எளக்காரமாத்தான் பாப்பான்.‌ ஜெகன் மாமா அவனைக் கண்டுக்க மாட்டாங்க. ஏன்னா, அவங்க இந்த சொத்தை நம்பியில்ல. அவங்க சொத்தே இன்னும் நாலஞ்சு தலைமுறைக்கு உக்காந்து திங்கலாம். இடும்பன் மாமாவும் இன்னும் அதை பெருக்கிட்டுத்தான் இருக்காங்க. ஆனா… சீதா சித்திக்கு ஒரு தாழ்வுமனப்பான்மை. என்னதான் அக்காவா இருந்தாலும் வாயும் வயிறும் வேறதானே. பெரியம்மா எதுவும் சொல்லாட்டியும் கூட, நாளைக்கே கிரி‌யோ, அவன் மனைவியோ ஏதாவது பவித்ராவையோ, சித்தியவோ ஒருவார்த்தை சொல்லிட்டா. அதுக்குதான் இத்தனை மெனக்கெடலும். இது எல்லாம் என் மனதிருப்திகாககவும் தான். இப்ப பவித்ராவுக்கும் அப்பா வழி சொத்தும் வந்துறும். யாரும் எதுவும் சொல்லமுடியாது பாரு” என்றவனைக் கண்கள்‌ ஆதுரமாகத்‌ தழுவிக் கொண்டன. 

‘ஒவ்வொருத்தருக்காகவும் எவ்வளவு யோசிக்கிறான்?’

“என்னங்கம்மணி பார்வையிது?” என்று‌ ஒற்றைப்‌‌ புருவம்‌ உயர்த்த,‌

“எல்லாத்தையும் யோசிக்கறீங்க. உங்களைப் பத்தியும் கொஞ்சம் யோசிக்கலாம்ல. இவ்வளவு ரிஸ்க் தேவையா. அவிங்களப் பார்த்தாலே வெட்டு குத்துக்கு அஞ்சாதவங்க மாதிரித் தெரியுது!”

“என்னைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு. அதுதான் நீ யோசிக்க ஆரம்பிச்சிருக்கியே? பத்தாதா?” என்றவனையே வைத்த கண் வாங்காமல் பார்க்க, 

“அம்மணி பார்வை ஒன்னும் சரியில்ல. அப்பறம்‌ குறுக்கால தலயணை வைக்கவேண்டிய அவசியமில்லாமப் போகும்!” என்றவன் உதட்டோரம் குறுஞ்சிரிப்பு. கண்ணோரம் கள்ளத்தனம். 

“ம்க்கும்… இப்ப‌மட்டும்‌ என்ன வாழுது. வைக்கிற தலைகாணி இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமாத் திரியணும்னு‌, விடிஞ்சதும் மானங்கெடப் பேசுது!” நொடிப்பாய் முகத்தை வெட்டிச் சொல்ல, பல் வரிசைப் பளிச்சிட, வாய்விட்டு சிரித்தவனை வாஞ்சையாகப் பார்த்தாள். 

அவன் காரியக்காரனாக இருந்திருந்தால் எப்பொழுதோ அவன்‌ காரியத்தை சாதித்திருப்பான். அதற்கான சாத்தியக் கூறுகள்‌ இந்த அறைக்குள் அதிகம். அவளும்‌ மறுக்க முடியாது. அவள் தன்னையே பார்க்க, என்ன என்பது போல் புருவம்‌ உயர்த்த, 

“இல்ல… எதையும் சூட்டோடு சூடா முடிக்கணும்னு சொல்றவங்க, இதை மட்டும் ஆரப்போடும்போது ஏதோ காரணம் இருக்குன்னு புரியுது” என்று‌ சொல்ல, அவள் சொன்னதன் அரத்தம்‌புரிய மலர்ந்து சிரித்தான். எப்பவும் போல அந்தச் சிரிப்பு வசீகரித்து பெண்ணவளை. 

சில கணங்கள் கழிய,

“உங்க அப்பா அம்மாவை ரொம்ப மிஸ் பண்றீங்களோ?” என்றாள் ஆழ்ந்த குரலில். 

சட்டென சிரிப்பு நின்று கணத்த அமைதி பரவியது அறையெங்கும். நிச்சலணமாய் அவளைப் பார்த்தவன் தொண்டையில் அழுத்தமானதொரு வலி. தலை விண்ணென்று தெரிக்க ஆரம்பித்தது. கண்கள் சிவந்து விட்டது. 

அவளது முக மாற்றத்தைக் கவனித்தவள், அவனை ஒட்டி நகர்ந்து அமர்ந்தாள். அவன் தலையைத் தாங்கி மடியில் படுக்க வைத்துக் கொண்டாள். அன்னை மடி தேடும் பிள்ளையாய் சுருண்டு படுத்துக் கொண்டான். நெற்றியை வருடிக் கொடுத்தவள், இதமாகப் பிடித்துவிட்டாள். கண்களை மூடிக்கொள்ள, ஆழ்மனதில் புதைந்த நினைவுகள் மேலெழும்பின.‌ கடைக்கண்ணில் கண்ணீர் வளிந்து காது மடல் நனைத்தது. தொண்டைக்குழி ஏறியிறங்கியது. 

“என்னங்க!” என்றவள் குரலும் கரகரக்க,

“ப்ளீஸ் மேகி… பேசாதே!” என்றவன் குரல் தொண்டையடைத்துக் கமறியது.‌ 

பெற்றவர்கள் இறுதிக் காரியம் முடிந்தது கூடத் தெரியாமல், சுயநினைவின்றி உயிருக்குப் போராடிய பத்து வயது சிறுவனா‌க மாறி, மடியில் முகம் புதைத்துக் கொண்டவனை, நெஞ்சோடு அணைத்துக் கொண்டவள்‌ கண்களும் குளம்‌ கட்டியது.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top