20
அனைவரும் மண்டபத்திற்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். இவர்களை கிளம்பி வரச்சொல்லிவிட்டு முன்கூட்டியே இடும்பனும், பரிமளமும் கிளம்பிச் சென்றுவிட்டனர் ஏற்பாட்டைக் கவனிக்க. பத்து மணிக்கு மேல்தான் முகூர்த்தம் என்பதால் அவசரமின்றி கிளம்பினர். கல்யாணமா என்ன? மணப்பெண் தயாராகத் தாமதமாகப் போகிறது? முதலில் அப்படித்தான் நினைத்தனர். ஆனால் மணப்பெண்ணே தேவலாம் என்றிருந்தது வீட்டிலிருந்து மூன்று பெண்களை கிளப்புவதற்குள்.
இவர்களுக்கு மேல் ஆனது விழா நாகியான குட்டி இளவரசியைத் தயார்படுத்த. பட்டுப்பாவாடை சட்டையில், மொட்டைத் தலையுடன் பார்க்க அத்தனை அழகு, அந்தக் கால்முளைத்த பூஞ்சிட்டு.
மதன், “லட்டுக் குட்டிடீ நீ” என்றான் மொட்டையடித்து சந்தனம் தடவிய தலையை அடிக்கடித் தடவி.
முதல் நாள்தான் மருதமலை சென்று குழந்தைக்கு முடியெடுத்துத் திரும்பினர். இலவச இணைப்பாக இன்னொரு சம்பவமும் நடந்தேறியது. அதாங்க… கிரிதரன், சுபாஷினி திருமணம் மருதமலை முருகன் சன்னிதியில் பெரியவர்கள் ஆசீர்வாதத்தோடு மீண்டும் ஒரு முறை சம்பிரதாயப் பிரகாரம் நடந்தேறியது.
முடியெடுக்க கோவிலுக்குக் கிளம்பும் பொழுது, அவர்களுக்கென எடுத்த புது உடையைக் கொடுத்து உடுத்தி வரச்சொல்ல, சேலை உடுத்தி வெளிவந்த பிறகுதான் தெரிந்தது சுபாஷினி கழுத்தில் தாலி இல்லாதது. மெல்லிய செயின் மட்டும். விசாரிக்க, பதிவுத் திருமணம். மாலை மட்டும் மாற்றிக்கொண்டதாகச் சொல்ல,
“புரட்சித் திருமணமாக்கும்!” என்றார் பெரியநாயகி.
“இல்ல அப்பத்தா… இப்ப எல்லாம் யாரு தாலி போடுறாங்க. ஆஃபீஸ் போகையில கழட்டி வச்சுட்டுத்தானே போகவேண்டியிருக்கு. இப்பெல்லாம் கோல்ட் கழுத்துல போடுறது அவ்வளவு சேஃப் இல்ல அப்பத்தா! அதான்…” என இழுத்தான்.
நீயே உன் மகன்கிட்டப் பேசிக்கோ என்பது போல் வாசுகியை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார் பெரியநாயகி. இந்த தலைமுறைப் பிள்ளைகள். நாம் எது சொன்னாலும் கட்டுப் பெட்டியாகத் தெரியும். என்னதான் முற்போக்காகப் பேசினாலும் இன்னும் இந்த மாதிரி விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை மூன்றாம் தலைமுறை பெரியநாயகிக்கு.
இவன் திருமணத்திற்கென எடுத்த தாலிக்கொடி தான் வீட்டில் இருக்கிறதே. போவதும் மருதமலை. அங்கேயே வைத்து கழுத்தில் போட்டு விடலாம் என்று முடிவு செய்து வீட்டாரிடம் கூற, எல்லாருக்குமே சரியெனப்பட்டது.
“சுபாகிட்ட கேக்குறேன் மா” என்றான்.
“இதுல கேக்கறதுக்கு என்னடா இருக்கு. நீங்க இருக்குற எடத்துல எப்படி வேணா இருங்க. ஆனா, எங்க கண்ணு முன்னாடி ஊருக்குத் தகுந்த மாதிரி இருந்து பழகுங்க!” என கறாராக முடித்துக் கொண்டார். அது உடை விஷயத்திலும்தான் என்றார் கூடுதலாக. கூடிய சீக்கிரம் இவனை இங்கேயே அழைத்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணமும் உதித்தது. ஏதோ வெளியே சென்று வேலை செய்ய ஆசைப்படுகிறானே. கொஞ்சநாள் பார்க்கட்டும் என விட்டதில், கை மீறிப் போய்விட்டான் எனப்புரிந்தது.
மதனையும் யோசனையாகப் பார்த்தார் பெரியநாயகி. எதற்கு அப்படிப் பார்க்கிறார் எனப் புரிய, அவர் எதுவும் சொல்வதற்குள், மற்ற வேலைகளைக் கவனிப்பது போல், கோவிலுக்கு செல்லத் தேவையான சாமான்களை வண்டியில் எடுத்து வைப்பது போல் நகர்ந்துவிட்டான். அவர் முன் நின்றால் அடுத்த கேள்வி எப்பொழுது தாலி பிரித்துக் கோர்க்கலாம் என்பதாகத்தானிருக்கும். அதை எண்ணியே மதன் நழுவிவிட,
அம்மத்தாவைப் பார்த்த ஜெகன், “விடுங்க… அம்மத்தா! அவனைப்பத்தி தெரியும்ல. ஏற்கனவே முடிவு பண்ணியிருப்பான். உங்ககிட்ட சொல்லுவான்!” என்றான்.
“இவன் மட்டும் ஏன்டா இப்படியிருக்கான். என் காசு வேற… அவன் காசு வேறயாடா? நான் எடுத்துக் கொடுக்கக் கூடாதா?”
“இப்ப அவங்கிட்ட காசு இல்லாமலா வேண்டாங்கறான். அதெல்லாம் உங்க பேரன் தேங்கா குடுமி வித்தே… நல்லாத்தான் சம்பாதிக்கிறான். இப்ப என்ன… உங்ககிட்ட இருக்க பணத்தை செலவு பண்ணணும். அவ்ளோ தானே… எங்கிட்ட கொடுங்க… எப்படி செலவு பண்றேன் மட்டும் பாருங்க? சும்மா அருணாச்சலம் படத்துல ரஜினி பண்ற மாதிரி தூள் பறத்துறேன்” என்றான் விரலால் சொடுக்கிட்டு,
“எங்கிட்ட இருக்கறதெல்லாம் உங்களுக்கு தானடா!” என்றார் பேரனிடம்.
“எங்க… வாய்தான் அப்படிச் சொல்லுது. ஆனா, ஒத்தப் பைசா ட்ரங்குப் பெட்டியவிட்டு வெளியேற மாட்டேங்குதே!” என்று கிண்டல் செய்தான்.
இரண்டு மகன்களுக்கும் சொத்தைப் பிரித்து உயில் எழுதி வைக்கும் பொழுதே மனைவிக்கும் இறுதி காலத்திற்கென்று ஒரு பங்கைப் பிரித்து எழுதிவிட்டார் சிவகைலாசம். அது மனைவிக்குப் பிறகு மகள் பரிமளத்திற்கு. அதற்கும் குத்தகை தொகையைத் தனியே அப்பத்தாவிடம் கொடுத்து விடுவான் மதன். அதில் தான் பேரன் பேத்திகளுக்கு ஆசை தீர செய்து அழகு பார்ப்பார். மதன் திருமணம் முடிய அப்பொழுதிலிருந்தே தாலிக்கொடி தான் எடுத்துத் தருவதாக மல்லுக்கட்டுகிறார். இவன்தான் மறுத்துக் கொண்டே இருக்கிறான்.
தனித்தனியாக காரில் செல்ல வேண்டாமனெ, குடும்பமாக மருதமலை செல்ல ஏ.சி. வேன் ஏற்பாடு செய்திருந்தனர்.
பெரியவர்கள் எல்லாம் முன்னிருக்கைகளில் அமர்ந்து கொள்ள, கடைசி இருக்கையில், மதன், ஜெகன் ஜோடி ஆக்கிரமிக்க, இவர்களுக்கு முன் இருக்கையில் கிரிதரனும், சுபாஷினியும். தோளில் கை போட்டவாறே, ஃபோனைப் பார்த்து பேசிச் சிரித்துக் கொண்டே அவர்களுக்கென தனி உலகத்தில். சஷ்ட்டிகா பெரியவர்களிடம். பெண்கள் இருவரையும் ஜன்னலோரம் விட்டு, மதனும், ஜெகனும் நடுவில் அமர்ந்திருந்தனர்.
“ஏன் பவி… இன்னைக்கும் ரூம் ரெடி பண்ணனுமா?” என்றான் பவியிடம் குனிந்து ரகசியமாக.
“எதுக்கு” என்பது போல் புரியாமல் பார்க்க,
“இல்லடீ… கிரிப்பய இன்னைக்கி மறுபடியும் கல்யாணம் பண்ணப்போறான்ல… அதுதான் மறுபடியும் ரூம் ரெடி பண்ணனுமான்னு” என்று இழுக்க, அவள் முறைத்துப் பார்த்ததில் கப்பென வாயை மூடிக்கொண்டான்.
“கோயிலுக்குப் போகும் போது பேசுற பேச்சாயிது?” என்றாள் பல்லைக் கடித்துக்கொண்டு.
“கல்யாணமே கோயில்ல தானடீ பண்றோம். ஆனா, அதைப்பத்தி மட்டும் பேசக்கூடாதுன்னா எப்படி? முருகனே ரெண்டு பொண்டாட்டிக்காரர் தானே?”
“அய்யோ… உங்கள வச்சுக்கிட்டு என்னால முடியல!”
“அடியேய்! தாலி கட்டியிருக்கேன்… வச்சுக்கிட்டுன்னு அசிங்கமாப் பேசுற? ஏதோ அவங்களுக்கு ரெடி பண்ணினா… நெல்லுக்குப் பாயறது புல்லுக்கும் பாயுமேன்னு நெனச்சா…” என இழுத்தவன் முடிக்காமல் கண்சிமிட்ட,
மதன், “மாம்ஸ்… நாங்களும் இங்க இருக்கோம்!” என்று தாங்கள் இருப்பதை நினைவூட்ட,
“உனக்கும் ரெடி பண்ணனுமாடா? பண்ணிட்டாப் போச்சு! மச்சான் எதுக்கு இருக்கேன்” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.
பவித்ராதான் இவன் அலும்பு தாங்காமல், “அய்யோ” என முன் தலையில் தட்டிக்கொண்டாள்.
அவன் சொன்னதைக் கேட்டு மதன், “மாம்ஸ்… உங்களோட முடியல!” என்றான் அவனும் அடக்கமாட்டாத சிரிப்போடு.
பவித்ரா, “உங்களால என் மானமே போகுது. பேசாம வாங்க!” என்றாள் அடக்கப்பட்ட குரலில்.
இவர்கள் பேச்சு காதில் விழுந்தாலும், கேட்காதது போல் சன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள் மாதங்கி. ஆனால், அவள் முகத்திலும் புன்னகை விரிந்திருந்தது. கூடவே கிளம்பும் முன் நடந்த செயலை நினைத்தும். அப்பொழுத பயந்து வந்தாலும், இப்பொழுது நினைக்க சிரிப்பை அடக்க முடியவில்லை. தனியாகச் சிரித்தால் அபத்தமாக இருக்குமென, வேடிக்கை பார்ப்பது போல் திரும்பி வாயைக் கைவைத்து மறைத்தாள். அது ஏசி வேன் என்பதால் சன்னல்கள் மூடியிருக்க, கண்ணாடியில் அவள் சிரிப்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
அவள் எதை நினைத்து சிரிக்கிறாள் என்பதை நினைத்துப் பார்த்தவனுக்கும் இதழ்களில் கீற்றாய் புன்னகை நெழிந்தது சிறு நாணம் இழையோட. அத்தனை அழகாக அவன் முகம் விகசித்தது.
காலையில் இவள் குளித்து முடித்து நைட்டியோடு வெளியே வர, ஃபோனைப் பார்த்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தான் மதன்.
“புடவை மாத்தணும்!” என்றாள்.
“மாத்து… அதை ஏன் எங்கிட்ட சொல்ற. இதுக்கெல்லாம் புருஷன்கிட்ட பர்மிஷன் கேக்கணும்னு அவசியமில்ல!” என்றவனை முறைத்துப் பார்க்க,
“நானும் குளிக்கதான் போறேன். நீ புடவைய மாத்து!” என்று எழுந்து கொண்டவன்,
வாய்க்குள்ளேயே, “இன்னொரு கவிதை சொல்ல சான்ஸ் கிடைக்காமலா போகும்!” என்றவாறு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்தான். குளியலறையை வெளிப்பக்கமாகத் தாழ் வைத்தவளுக்கும் முறுவல் பூத்தது முகத்தில், அவன் அன்று எழுதியிருந்த மொக்கக் கவிதையை நினைத்து.
புடவை கட்ட ஆரம்பித்தவள், தலையையும் சீவிக் கொண்டு, கிளம்பும் பொழுது நகைகளைப் போட்டுக் கொள்ளலாம் என அப்படியே வெளியேறிவிட்டாள், கதவைத் திறந்துவிட மறந்து.
கோவிலுக்குத் தேவையானதை சீதாலட்சுமியும், பெரியநாயகியும் எடுத்து வைக்க, பூஜை அறையில் தாலியை வைத்து சாமி கும்பிட்டனர் பரிமளமும், வாசுகியும்.
ஃப்ரிட்ஜில் இருந்த பூவை எடுத்து தலையில் வைத்துக் கொண்டு வந்தவளிடம்,
பவித்ரா, தூங்கியெழுந்த மகளைத் தூக்கி வந்து, கவுனையும் கொடுத்து போட்டுவிடச் சொல்லிவிட்டு அவள், சேலை மாற்றச் சென்றுவிட்டாள். முடியிறக்கிய பிறகுதான் குளிக்க வைத்து பட்டுப் பாவாடை உடுத்தவேண்டும் என்பதால், உறுத்தாத இலகுவான ட்ரெஸ்ஸை பிள்ளைக்கு கொடுத்துச்சென்றாள்.
குழந்தைக்கு உடைமாற்றி விட்டவள், குளியலறைக் கதவைத் தாழ் வைத்ததை சுத்தமாக மறந்தே போனாள். மறுநாள் முகூர்த்தம் என்பதால் அதே தெருவில் இன்னொரு விசேஷமும் நடக்க, தெருவில் ஸ்பீக்கர் வைத்து பாட்டு அலறியது. அறைக்கதவும் சாத்தியிருக்க, அவன் குளித்து முடித்து பாத்ரூம் கதவைத் தட்டுவது வெளியே சுத்தமாகக் கேட்கவில்லை. இவள்தான் இங்கே பிள்ளையோடு ஐக்கியமாகி விட்டாளே!.
வேட்டி, சட்டை மாற்றிவிட்டு வெளியே வந்த ஜெகன், “மாப்ள கெளம்பிட்டானா சிஸ்ட்டர்?” எனக் கேட்கவும் தான் அவளுக்கு ஞாபகமே வந்தது அவனை குளியலறையில் வைத்துப் பூட்டியது.
“அச்சோ…” என்றவள் பதற்றமாக எழுந்து ஓட, பாத்ரூமிலிருந்து கதவைத் தட்டும் சப்தம். ஓடிச் சென்று கதவைத் திறந்துவிட்டாள்.
இடுப்பில் துண்டோடு வெளியே வந்தவன், இடுப்பில் கையை ஊன்றி, இவளை முறைத்து நிற்க, உண்மையிலேயே பயந்து போனாள். எதுவும் திட்டுவானோ என்று அரண்டுபோய் பார்த்தவள் அடிப்பானோ என்று கூட யோசித்தாள். சிறு தவறு செய்தாலும் வாசுதேவனுக்கு மனைவி, மக்கள் மீது கை நீட்டித்தான் பழக்கம்.
இவள் அவசரமாக எழுந்து ஓடி வந்ததைப் பார்த்து என்னவோ என ஜெகனும் பின்னாலே வந்தான். அவள் குளியலறைக் கதவைத் திறந்துவிடவும், அறைக்கு வெளியே நின்றவன் நடந்ததை ஊகித்து சிரித்துக் கொண்டே திரும்பிவிட்டான்.
“சாரி… சாரி… சாரி… “ என்று காதைப் பிடிக்காத குறையாக, தொடர்ந்து மன்னிப்பு கேட்டாள். உண்மையிலேயே பயத்தில் கண்கள் கூட கலங்குவது போல் ஆயிற்று. குறைந்தது அரை மணி நேரமாக கதவைத் தட்டியிருக்க வேண்டும். இப்பொழுதும் ஜெகன் கேட்கவில்லை என்றால், பிள்ளையோடு விளையாடிக் கொண்டு சுத்தமாக மறந்திருப்பாள்.
“சாரிங்க… சஷ்டி கூட விளையாண்டுட்டே மறந்துட்டேன்” என்றவள் குரல் கம்மி கரகரத்தது.
அவனுக்கும் கோபம் தான். அவனைப் பார்த்ததும் சிரித்திருந்தால் அவனும் ஏதாவது திட்டியிருப்பான் இருந்த எரிச்சலில். அவளது பயந்த முகத்தையும், தவிப்பையும் பார்த்தவனுக்கு பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் கோபம் அடங்கிவிட்டது.
வழியை மறித்து நின்றவளை, ஒதுங்கு என சாடையில் சொல்ல கையை உயர்த்த, விலுக்கெனப் பயந்து, பின்னோக்கி நகர்ந்தவள்,
“சாரிங்க… மறந்துட்டேன்” என அவசரமாக சொல்லிவிட்டு, கையை குறுக்கே வைத்து மறித்தவாறு கண்களை இறுக மூடிக் கொண்டாள், கோபத்தில் அடிக்கப் போகிறானோ என.
“ஹேய்ய்…” எனப் பதறியவன், அவள் கையைப் பிடித்து இறக்கிவிட, உண்மையிலேயே அவள் கைகள் வெடவெடத்ததை அவனால் உணர முடிந்தது.
இதுக்கெல்லாமா இவ்வளவு பயப்படுவாங்க என்ற எண்ணம் தான் அவனுக்குள்.
அவனுக்கும் கோபம் தான். அரைமணி நேரத்திற்கும் மேலாகக் கதவைத் தட்டியதில். ஸ்பீக்கர் சப்தத்தில் கேட்காது என்று கூடத் தெரியும். இருந்தாலும் கோபத்தை மிஞ்சி எரிச்சல்தான் அவனுக்கு. குளித்தவன் மீண்டும் வியர்த்திருந்தான் கதவைத் தட்டியே. அதிசயமாக இன்றுதான் மதி என மனைவி பெயரைச்சொல்லி அழைத்திருந்தான் குளியலறைக்குள் இருந்தாவறே.
அவள் படபடப்பையும், கை உதறுவதையும் உணர்ந்தவன், அழைத்து வந்து கட்டிலில் உட்கார வைத்தான். கண்கள் கலங்கியிருந்தது. பக்கத்தில் இருந்த தண்ணீர் சொம்பை எடுத்துக் கொடுத்தான். குடித்துவிட்டு கொடுக்க, வாங்கி மேஜை மீது வைத்தவன்,
“நீ அடிக்கடி மொறைக்கிறதப் பாத்தா தைரியசாலின்னு நெனச்சேன். நீ என்னடான்னா இந்தப் பயம் பயப்படுற?” எனக் கிண்டல் செய்தான் அவளை இலகுவாக்கும் பொருட்டு.
“எங்க அப்பாவா இருந்திருந்தா இந்நேரம் பெல்ட் பிஞ்சிருக்கும்!” இன்னும் பயம் விலகாமல், குரலில் நடுக்கத்தோடு சொல்ல, எந்த நிலையில் திருமணத்திற்கு சம்மதித்திருப்பாள் என்பதை அவனால் நன்கு ஊகிக்க முடிந்தது. சிறுபிள்ளை போல் அடிக்குப் பயந்து அரண்டு விழிப்பதைப் பார்க்கையில் அவனுக்கும் என்னவோ போல் ஆயிற்று.
அவள் கைகளை விடாமல் அழுத்திக் கொடுத்தவன், “ஒரே ஒருநாள் மொக்கை கவிதை சொன்னேன். அதுக்கு பாத்ரூம் அரெஸ்ட் பண்ணுவேன்னு நெனச்சுக் கூடப் பாக்கல!” என்று சொல்ல, பயத்தையும் மீறி சிறு புன்னகை அவள் முகத்தில்.
“சரி, இப்ப நீ சொல்லு!” என்றான் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு.
என்னவென்று புரியாமல் பார்க்க, “அன்னைக்கி உன்னைப் பார்த்து கவிதை சொன்னேன்ல. இன்னைக்கி என்னப் பாத்துட்டல்ல. சொல்லு!” என்றதும் தான், கட்டிலில் இவள் அமர்ந்திருக்க, கண் எதிரே, இடுப்பில் துண்டு மட்டும் கட்டித் தன் முன் நிற்பவன் தோற்றம் கண்ணில் பட்டது.
பார்வை மெல்ல மேலே உயர்ந்தது அவளையும் அறியாமல்.
மார்பின் குறுக்கே கட்டியிருந்த கைகளின் இறுக்கம், அவள் பெண்மையை அசைத்துப் பார்த்தது. பார்வை மேலே உயர, தலையிலிருந்து ஈரம் காதோரம் வழிந்து, கழுத்துவழி இறங்கியதில் தொண்டைக்குழி உலர்ந்துவிட்டது இவளுக்கு.
கண்கள் மேலே உயர, அவளது பார்வையோட்டத்தைத் தொடர்ந்தவன் கண்கள், கள்ளச்சிரிப்பை மீசைக்கடியில் ஒழித்து, சட்டென ஒற்றைப் புருவத்தை உயர்த்த, விசைப்பந்தென விருட்டென எழுந்தவள் அவன் மீதே மோதி நின்றாள். தடுமாறியவளை, இடையோடு வளைத்துப் பிடித்துக் கொண்டான். சரியாக அவன் இதழ்கள், இவள் நெற்றி மீது. வெற்று மேனியில், ஈரத்தின் சில்லிப்பில், அவன் மீதிருந்த வந்த சோப்பின் வாசனையில் பெண்ணவள் மனம் தடுமாற, மன்னவன் பார்வை வேறு கதை சொன்னது.
பட்டுப் புடவை, தோள் வழிந்த சாதிமல்லிச் சரமென, கலங்கிச் சிவந்த கண்கள், தடித்த தாலிக்கயிறு மட்டும் இழைந்த வெற்றுக் கழுத்து என, பெண்ணவள் தோற்றமும் மன்னவனை சோதித்துப் பார்க்க, இடையோடு இதமாக அழுத்திப் பதிந்தன விரல்கள். குனிந்து தோளில் இதழ் பதித்தவன், மச்சம் நம்பர் த்ரீ என எண்ணிக் கொண்டான் கழுத்து வளைவின் இறக்கத்தில் அவனைப் பார்த்து கண்சிமிட்டிய மச்சத்தைப் பார்த்து.
“மேகி…” என்றவன் குரல் கரகரத்தது. அத்தனைக்கத்தனை மயக்கமும், தாபமும் அந்தக்குரலில்.
“ம்ம்ம்” என்ற சிறு முனகல் மட்டும் பெண்ணிடம். அடங்கிய படபடப்பு மீண்டும் அதிகரித்தது நெஞ்சாங்கூட்டில். அவளையும் மீறி கைகள் வெற்று முதுகில் படற, அவளது உள்ளங்கைச் சூட்டில், தகிக்க ஆரம்பித்தான் மாதங்கியின் மதன்.
“மேகி… ஆறிப்போனா நல்லாருக்காது. சூடா சாப்டறலாமா?” குரலில் குறும்பைக் குழைத்து வினவ, சட்டென பெண்ணவள் நினைவு தன்னிலை திரும்ப, வேகமாக நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள்.
அவள் தள்ளிய வேகத்தில், அவசரமாகக் கை இடுப்போடு சேர்த்து துண்டைப் பிடித்துக் கொள்ள, அடுத்த நொடி அவள் அறைக்கு வெளியே சிட்டெனப் பறந்துவிட்டாள்.
வாய்விட்டு சிரித்தவன் மனம், ‘நல்லவேளை துண்டு விழுகல. விழுந்திருந்தா… ஆத்தாடி பாவாடை காத்தாடதான்’ என்று துப்பாத குறை.
அதை நினைத்து இப்பொழுது தனக்குள் சிரித்துக் கொண்டவள்,
“இதெல்லாம் நல்லா இல்ல” காதோரம் ஒலித்த குரலில் விதிர்த்துத் திரும்பிப் பார்த்தாள்.
“காலையில என்னைப் பப்பி ஷேம்ல பாத்தத நெனச்சுதானே சிரிக்கிற?” என்றான் கள்ளச்சிரிப்போடு.
“அய்யோ… நான் பாக்கல!” என்றாள் பதற்றமாக. அவள்தான் அவனைத் தள்ளிய அடுத்து நொடி பறந்துவிட்டாளே.
“இந்த அய்யோ… பாக்காததுக்கா… பாக்காம விட்டுட்டோமேங்கறதுக்கா?” எனக் கேட்டு கண் சிமிட்டியவனைப் பார்க்க முடியாமல் சன்னல் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கோவில் போகும் வரை கழுத்தே வலிச்சாலும் பரவாயில்ல, இவன் பக்கம் திரும்பியே பார்க்கக் கூடாதென்ற முடிவோடு. இருந்தாலும் அவன் பார்வையிலும் கள்ளச்சிரிப்பிலும் கழுத்தோரம் குறுகுறுக்க, “மேகி…” என்ற குரல் காதுக்குள் கிசுகிசுப்பாய் ரீங்காரமிட, ஒருவித பரவசமின்னல் மேனியெங்கும்.
‘டேய்… கோவிலுக்கு வர்றீங்கடா… என்னையும் கொஞ்சம் நெனச்சுப் பாருங்கடா!” முருகனே வேலாயுதத்தோடு மருதமலைவிட்டு இறங்கி வந்துவிட்டார் கடுப்பாகி கண்ணைக்குத்த.
“அவ அப்பனுக்கு நீ பொறந்தியா? உன் அப்பனுக்கு அவ பொறந்தாளாடா? என்னமோ ஒட்டிட்டுப் பொறந்தவனாட்டம் தாய்மாமன்னு உம்பேரையும் போட்டு, ஊர் முழுக்க போஸ்ட்டர் அடிச்சு ஒட்டியிருக்க?”
மாமன் வீட்டு சீர் வரிசை சபை நிறைத்திருக்க, சுற்றமும், நட்பும் நிறைந்து வழிந்த மண்டபத்தில் அவர்கள் பேச்சு நாராசமாய் ஒலித்தது.
எல்லாம் தங்கள் கைவிட்டுப் போகும் ஆத்திரம் அவர்கள் பேச்சில் அப்பட்டமாகத் தெரிந்தது. வாய்க்கு வந்ததை கோபத்தில் குப்பையாய் அள்ளி வீசினர்.
வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு, “வாங்கடா பங்காளிகளா!” விசேஷத்திற்கு அழைக்காமலே, தன்னால் தேடி வந்தவர்களை வரவேற்க களமிறங்கினான் மதன்கைலாஷ்.
காதுகுத்திற்கு நல்லநாள் பார்த்து ஜெகன் பத்திரிக்கை அடிக்கக் கொடுக்கும் முன், பேனர் அடிக்க ஏற்பாடு செய்துவிட்டான் மதன்.
இன்னார் வீட்டு பேத்தியின் விசேஷம் என சீதாலட்சுமி, அவர் கணவர் பெயர் புருஷோத்தமன் பெயரோடு அவர்கள் மூன்று தலைமுறைத் தாத்தா, பாட்டிகள் பெயரையும் சேர்த்து பவித்ரா, ஜெகன் மற்றும் குழந்தை சஷ்ட்டிகா பெயர்தளையும் போட்டு இன்னார் குடும்பத்து வாரிசு என ஊர் முழுக்க பேனர் கட்டி தெரியப்படுத்தியிருந்தான் வண்ண வண்ண நிழல் படங்களோடு.
முக்கியமாக பவித்ராவின் பெரியப்பாக்களுக்கு கடன் கொடுத்த வீட்டார் முன் எல்லாம் இண்டு இடுக்குவிடாமல் ஒட்டியிருந்தான் விசேஷ அழைப்பிதழை போஸ்ட்டராக. இந்த வீட்டுப் பெண்தான் பவித்ரா என்பதை நினைக்க மறந்தவர்களுக்கும், மறுத்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் மீண்டும் நினைவுப் படுத்தியிருந்தான்.
ஏதோ காது குத்திற்கு எல்லாரும் வழக்கமாகப் பண்ணுவதுதானே என முதலில் பவித்ராவின் பெரியப்பா குடும்பம் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் அதன் பின் கசிந்த விபரங்கள் அவ்வளவு உவப்பானதாக இல்லை.
இவர்களுக்கே அழைத்து, “உங்களுக்கு தம்பி மக ஒன்னு இருக்குதாமே? அதுவும் நம்ம தனசேகரன் குடும்பத்துக்கு நெருங்கிய சொந்தம் போல? நம்ப இடும்பன் வீட்டு மருமகளாமே? என்று விசாரிக்க ஆரம்பித்தனர்.
“அப்போ… அந்தப் பிள்ளைக்கும் சொத்துல பங்கு இருக்குல்ல… அதைப்பத்தி சொல்லவே இல்ல!” என விசாரித்தவர்களுக்கு,
“அந்தப்பிள்ளைக்குத் தேவையானதை கல்யாணச்செலவு, சீர்வரிசையென செட்டில் பண்ணியாச்சு” என்று பூசி மொழுகினர்.
“அதெப்படி… சொத்து வில்லங்கம் போட்டதுல அண்ணன், தம்பி மூனு பேர் பேரும் இருக்கே. மொதல்ல வாங்கின பணத்தைக் கொடுக்கப் பாருங்க!” என கழுத்தை நெறிக்க ஆரம்பித்தனர் கடன் கொடுத்தோர்.
கடன் கொடுத்தவர்கள் எல்லாம் நியாயம், தர்மம் பார்த்து சட்டப்படி வசூல் செய்பவர்கள் கிடையாது. எல்லாம் கட்டப்பஞ்சாயத்து தான். பேருக்கு தான் கையெழுத்து எல்லாம். மஞ்ச நோட்டீஸ் கூட கொடுக்க முடியாது. கடன் வராது எனத் தெரிந்தால் வட்டிக்கு வட்டியெல்லாம் போட்டு கோவணம் முதற்கொண்டு உருவிவிடுவர்.
இப்பொழுது யாரைக் கேட்டு கடன் கொடுத்தீர்கள் என பவித்ராவால், சொத்து மீதும் கைவைக்க முடியாதபடி செய்ய முடியும். அவர்கள் கடன் கொடுத்ததே பரம்பரைச் சொத்தை நம்பித்தான். அதுவும் நான்குவழிச் சாலையோரம் இருந்த அவர்களது நிலம் வெகு நாட்களாக அவர்கள் கண்ணை உருத்தியது. வாங்கித் துண்டு போட்டு விற்றால், வேட்டி அள்ள லாபம் பார்க்கலாம். அதை நம்பித்தான் இவர்கள் கேட்டபொழுதெல்லாம் கடன் கொடுத்தனர். அவர்களைப் பொறுத்தவரை கடனல்ல. சொத்தைக் கைப்பற்ற கொடுத்துவைத்த முன்பணம்.
ஆனால், இப்பொழுது சொத்திற்கு உரிமையான நேரடி வாரிசாக இன்னொரு வாரிசு இருக்கும் பொழுது அதில் கை வைப்பது அவ்வளவு சுலபமில்லை எனத் தெரிந்தது. தனசேகரைப் பற்றியும் தெரியும். இடும்பனைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். அவர்களைப் பொறுத்தவரை நியாயத்திற்கு நியாயம். அநியாயத்திற்கு அநியாயம். உன் வழி எதுவோ என்வழியும் அதுவே என நடப்பவர்கள். இல்லையென்றால் வியாபாரம் பண்ண முடியாது.
பவித்ராவின் பின்புலம் தெரிந்தவர்கள்,
பவித்ராவின் பெரியப்பா வீட்டார்க்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர்.
அவர்களுக்குத் தெரிந்தவர்கள் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் இந்த விசேஷத்திற்கு பவித்ரா அண்ணன்மார்களின் திக் விஜயம். அதுவும் சும்மா வரவில்லை. காதுகுத்திற்கு மாமன் வீட்டு சீர்வரிசையோடு வந்திறங்கினர்.
எதிரியே ஆனாலும் வந்தவர்களை வரேவேற்பதுதானே நம் பண்பாடு. அதைத்தான் இப்பொழுது மதனும் செய்தான்.
காது குத்துவதற்ககாக கிரிதரன் மடியில் குழந்தையை உட்கார வைக்க, நாங்கள் தான் தாய்மாமன்கள் என மல்லுக்கு நின்றனர், பெரியப்பா மக்கள் இருவரும்.
“என்னங்கப்பா இது? இத்தனை நாளா இல்லாம இப்ப வந்து வம்பு பண்றீங்க?” வந்திருந்த பெரிய மனிதர்கள் கேள்வி கேட்க,
“எங்களுக்குத் தாய்மாமன் உரிமையா? இவிங்களுக்கா?” என்ற கேள்வி எழ,
“உங்களுக்குதான். ஆனா இத்தனை வருஷமா எங்க போனீங்க? உங்க அம்மா வழி சொந்தம் தானே?” என்றனர் பெரியப்பாக்களிடம்.
“எதுக்கும் எங்களைத் தேடல. அதனால நாங்களும் கண்டுக்கல. இப்பதான் நாங்க வந்துட்டோம்ல. இவங்கள ஒதுங்கிக்கச் சொல்லுங்க. எங்க வீட்டுப் பிள்ளைக்கி என்ன பண்ணனுமோ இனிமே நாங்க செய்றோம். இவங்க பண்ணின கல்யாணச் செலவைக்கூட கொடுத்துர்றோம். இனிமே பண்ண வேண்டிய, பிறந்த வீட்டுச் சீரெல்லாம் நாங்களே பாத்துக்கறோம்” என்றனர்.
இடும்பன், “காரணமில்லாம உங்க குடுமி ஆடாது. இப்ப வந்த காரணத்தை மட்டும் சொல்லுங்க!” என்றார் வந்தவர்கள் லட்சணம் தெரிந்து.
“பெருசா என்ன கேக்கப் போறோம். சொத்தை ரெண்டா பிரிக்கணும். பத்திர ஆஃபிஸ்ல வந்து… உங் ஒவ்வொருத்தருக்கும் க மருமகள கையெழுத்துப் போடச் சொல்லுங்க!”
“அதெப்படி அண்ணன், தம்பி மூனுபேரு இருக்கையில சொத்தை ரெண்டா பிரிப்பீங்க? செத்துட்டார்ங்கறதுக்காக வாரிசில்லைனு ஆயிறுமா?” பொது மனிதர் ஒருவர் கேள்வி கேட்க,
“பொம்பளைப் பிள்ளைக்கு சீர்தானே மாமா? சொத்துக் கொடுத்துப் பழக்கமில்லையே?” எனக் கேட்டனர்.
அதைக் காரணம் காட்டித்தான் அவர்கள் சீர் செய்ய வந்ததே. தாங்கள் கல்யாணச் செலவு முதற்கொண்டு செய்திருக்கிறோம் என கணக்குக் காட்டி சொத்தை அவர்கள் பெயருக்கு மாற்றும் திட்டம்.
பெரியவர்கள் பேசி முடிக்கட்டும் என சிறியவர்கள் நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தனர்.
“பல ஏக்கர் சொத்து. மூனாப்பிரிச்சு, அடிமாட்டு வெலைக்கு வித்தாக்கூட ஒவ்வொருத்தருக்கும் கொறஞ்சது ரெண்டு கோடி வருமே! நீங்க சீர் மட்டும் செய்யறோம்கறீங்க?” ஏரியா நிலவரம் தெரிந்த ஒருத்தர் நியாயமாகப் பேச,
“பரம்பரைச் சொத்து பங்காளிகளுக்குத்தானே. கட்டிக் கொடுத்த பின்னாடி மாமன் மச்சானுகளுக்கு எப்படி பாத்தியதை ஆகும். பங்காளித் தீட்டு இருக்கறவனுக்குதானே சொத்தும். எங்க தாத்தா செத்து வருஷம் திரும்பல. எங்களுக்குதானே சாவுத் தீட்டு. அடுத்த வீட்டுக்குப் போன இந்தப் பிள்ளைக்கி இல்லாதப்ப, சொத்து மட்டும் எப்படி கொடுக்கச் சொல்றீங்க?” என்று தொல்பொருள் காலத்து வியாக்யானம் படித்தனர்.
அடுத்த வீட்டிற்குச் செல்பவள் பெண் மக்கள். அதனால் அவர்களுக்கு நகை, பண்டபாத்திரம், ஆடு, மாடென அசையும் சொத்துக்கள். பிறந்த வீட்டுத் தொடர்பு அற்றுப் போகக் கூடாதென, பேரு காலம், காது குத்து, மஞ்சத்தண்ணீர் என தொடர்ந்து கோடித் துணி வரை பிறந்தவீட்டு சீர் செய்யப்பட்டது. இதுவே காலப் போக்கில், வரதட்சணை என்ற பெயரில் கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. ஆண் பிள்ளைகளுக்கு சொத்து இருக்கிறதோ இல்லையோ பெண் மக்களுக்கு சீர் செய்தே ஆகவேண்டிய கட்டாயம்.
ஒரே இடத்தில் வசிப்பவன் ஆண் மக்கள். பரம்பரைப் பெயரை ஊரில் வழி வழியாக நிலைநாட்டுபவன். அதானால் அசையாச் சொத்துக்களான நிலம், வீடு எனப் பிரித்தனர். ஆனால் கால மாற்றத்தில், பெண்களுக்கும் சொத்தில் சம உரிமையென சட்டமே வந்த பிறகும் கூட, இன்னும் சீர் வரிசைகளோடு முடித்துக் கொள்ளும் பழக்கம் தான் பல இடங்களில் நீடிக்கிறது.
ஊரார் முன் நாங்களும் சீர் செய்கிறோம். அதனால் சொத்து கொடுக்க முடியாது என்பதைக் காட்டத்தான் அவர்கள் சீரோடு வந்ததே.
“காலத்துக்கும் நாங்க சீர் செய்றோம்ங்க. வந்து கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லுங்க!” வந்தவர்கள் காரியத்தில் கண்ணாயிருக்க,
“மொதல்ல நீங்க கையெழுத்துப் போடுங்க” என்று பத்திரத்தை நீட்டினான் மதன்கைலாஷ்.
“இதென்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா? உன்னைய யாரு நாட்டாமை பண்ணக் கூப்பிட்டது? சாதி கெட்ட பய எல்லாம் வந்துட்டான், எங்க குடும்பத்துப் பிரச்சினைக்கு தீர்ப்பு சொல்ல!” கேட்டு வாய் மூடும் முன் தாவாயில் இரத்தம் ஒழுகியது மதனைப் பார்த்து சாதி கெட்டவன் என கேட்டவனுக்கு. சாமி சத்தியமாக மதன் அடிக்கவில்லை. மாமன் மகனைப் பார்த்துக் கேட்ட கேள்வியில், ஜெகன் தான் சேரைத் தூக்கி அடித்திருந்தான் பேசியவன் மீது.
“எதுக்குடா இவ்வளவு கோபம்?” என அவனைப் பார்த்து அடிக்கடி கேட்பவன், சபைக்காக மதன் கோபத்தை அடக்கி, கண்கள் சிவந்து நிற்க, ஜெகனால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
அடுத்த அடி ஜெகன் மீது விழும் முன், மதன் குறுக்கே வந்தான். அடிக்க ஓங்கியவன் கையைத் திருப்பி முறித்திருந்தான். உழைத்து கைகளின் பலத்தின் முன், பாட்டன் சொத்தை உக்கார்ந்து திண்பவனின் கை சடக்கென வலுவிழந்துவிட்டது.
“எங்க வந்து யார் மேல கை வைக்கிற? அன்னைக்கி மாதிரி ஈஸியா பேசிட்டுப் போகலாம்னு நெனச்சீங்களோ?” என்றவன், அன்று அவர்கள் துக்க வீட்டில், சீதாலட்சுமியைப் பேசியதற்கும் சேர்த்து வைத்து, ஆத்திரம் தீரும் மட்டும் விலாசித் தள்ள, பெரியவர்கள் வந்து பிரித்து விடும் முன் சடசடவென சங்கர், அஜய், நரேன் மூவரும் இவர்களோடு சேர்ந்து கொண்டனர். வந்திருந்தவர்கள் வலிந்து பிரித்து விட்டார்கள். கைகலப்பு ஆனதில் சற்று கூச்சல் குழப்பம் மண்டபத்தை நிறைத்தது.
சிறியவர்களை விலக்கிவிட்டு தனசேகரும், இடும்பனும் முன்னுக்கு வந்தனர். இதுவரை இது சிறியவர்கள் பிரச்சினை. இனி குடும்பப் பிரச்சினை என முன்னெடுத்தனர்.
ஏற்கனவே மதன், பெரியப்பாவிடமும், மாமனிடம் தனது ஏற்பாட்டை முன் கூட்டியே சொல்லிவிட்டான். இடும்பன்தான் துணிந்து ஊக்கம் கொடுத்தார். கடன் கொடுத்தவர்களுக்கு பணத்தை தான் ஏற்பாடு செய்வதாகச் சொல்லிவிட்டார். அவர் கொடுத்த துணிச்சலில் தான் அவர்கள் வாங்கிய கடனை இவர்கள் அடைத்து, பத்திரத்தை மீட்டு வைத்துக் கொண்டனர்.
“சின்னப் பயல்கள அடிக்கவிட்டு வேடிக்கை பாக்குறீங்களா?” பவித்ராவின் பெரிய பெரியப்பா விசும்பிக் கொண்டு வந்தார்.
“அன்னைக்கு நீங்களும் தானே சின்னப் பயல்களப் பேசவிட்டு வேடிக்கை பாத்தீங்க. இன்னைக்கி எங்க வீட்டுப் பிள்ளைனு வர்றீங்க. அன்னைக்கும் உங்க வீட்டுப் பொண்ணுகளத்தானே பேசினாங்க. நீங்க எதுவும் கேக்கலைல. நாங்க அமைதியா வந்தது, உங்க ஊருன்னு பயந்துக்கிட்டு இல்ல. செத்தவருக்கு மரியாதை கொடுத்து தான். உங்களைப் பத்தி தெரிஞ்சுதான் அந்த மனுஷன் சாகறவரை சொத்தப் பிரிக்காம இருந்திருக்காரு. பரம்பரைச் சொத்துன்னு பேசத்தெரியுது. ஆனா அதைக் கட்டிக் காப்பாத்தத் தெரியல. ஒழுங்கா கையெழுத்துப் போட்டுக் கொடுத்துட்டு இருக்குற மீதி சொத்தையாவது காப்பாத்திக்கோங்க” என்றார் தனசேகரன்.
“அது எங்க சொத்து. எப்படிக் காப்பாத்தறதுன்னு தெரியும்?” சின்ன பெரியப்பாவும் துள்ள,
“முதல்ல வாங்கின கடனைக் கட்டுங்க. அப்பறம் சொத்தை காப்பாத்தலாம்!” என்றார் இடும்பன்.
இப்பொழுது சொத்து முழுவதுமே பவித்ரா வசம். அதாகப்பட்டது வெவரம் என்னான்னா, கடன் கொடுத்தவர்தளுக்கெல்லாம் கடனை அடைத்து விட்டு, அவர்களிடம் வாங்கிய அடமானம் பத்திரத்தை மறு அடமானம் போட்டு பவித்ரா பெயரில் பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டனர், கடன் கொடுத்தோர்.
இப்பொழுது அவர்கள் கடனைத் திருப்பித் தரவேண்டியது பவித்ராவிற்கு.
இது வாராக் கடன் என்பது முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியும். இப்பொழுது தனசேகரன், இடும்பன் தலையிட்டப் பிறகு நிலத்தின் மீதும் கைவைக்க முடியாது. கொடுத்த பணம் கேசேர்ந்தால போதுமென, பவித்ரா பெயருக்கு கடனை கை மாற்றி விட்டனர்.
அவர்கள் வெற்றுப்பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டுதான் கடன் கொடுத்தனர். எனவே அவர்களே கடனை பவித்ராவிடம் கை மாற்றிவிட்டனர். இப்பொழுது பவித்ரா பெரியப்பா குடும்பம் கடன் வாங்கியது பவித்ராவிடமே. அவர்கள் கடன் அடைக்க வேண்டியதும் பவித்ராவிற்கே. அதுவரை சொத்தும் பவித்ரா வசமே!
அவளுக்கு சொத்தைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, கடனிற்கு ஈடாக நிலத்தை கொடுத்துவிட்டு, மீதி இருப்பதைத்தான் பெரியப்பாக்கள் இருவரும் பிரித்துக் கொள்ள வேண்டும்!
எப்படி வச்சான் பாத்தீங்களா ஆப்பூ!
(இதில் சட்ட நுணுக்கங்கள் கிடையாது. கட்டப் பஞ்சாயத்து செய்து கடன் வசூலிப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் வசூலிப்பார்கள். கொடுப்பது ஒன்றும் சிறு தொகை கிடையாது. சட்டப்படி போனால் கொடுத்த பணம் திரும்பாது ஆளைத் தூக்கி பணயம் வைத்து வசூலிப்பது போலத்தான், நம்மால் வசூல் பண்ண முடியாதெனில், அதற்கென இருப்பவர்களிடம் கடனை கை மாற்றி விடுவதும்.)
வந்தவர்கள் இங்கு நமது பாச்சா பலிக்காதெனத் தெரிய, மனம் முழுக்க வஞ்சத்தோடு திரும்பினர். மதனைக் கொலை வெறியோடு பார்க்க, ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவன், போங்கடா என்றான் தலையை ஆட்டி.
அவர்கள் பார்வையைப் பார்த்த மாதங்கிக்குதான் அடிவயிறு கப்பென தீப்பிடித்தது.
