மதன மாளிகையில் 19

19

பேத்திக்கு காதுகுத்து என முடிவானதும், நல்ல நாள் பார்த்து, ஈரோட்டிலேயே மிகப்பெரிய மண்டபம் பார்க்கப்பட்டது. விசேஷத்திற்கு வருபவர்களை விட, வருபவர்கள் வரும் வாகனம் நிறுத்தத்தான் அதிக இடம் தேவைப்பட்டது. எனவே பெரிய பார்க்கிங் ஏரியா இருக்கும் மண்டபம் தேடி முன்பணம் கொடுக்கப்பட்டது. விசேஷத்திற்கு இன்னும் ஒரு மாதமிருக்க, இருக்கப்பட்டவர்கள் வீட்டு விசேஷத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அவை அத்தனைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றுதான்‌ ஏதொன்றும் விளம்பரம்‌ தானே? எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று என கொடுத்து எடுத்த வகையில் சொந்த பந்தங்களை விட, வியாபாரத் தொடர்புதான் அதிகம். 

தனசேகரன், இடும்பன், ஜெகன் மற்றும் மதன்கைலாஷ் என எல்லாரும் தங்களோடு வியாபாரத் தொடர்புடைய அனைவரையும் அழைத்திருந்தனர். தங்களிடம் அவசரத்திற்கு கொடுக்கல் வாங்கல் என பணப்பரிவர்த்தனை செய்பவர்கள் எவரையும் விட்டு வைக்கவில்லை. அதுதான் அந்த விசேஷத்தில் முக்கிய அங்கமே. பவித்ராவின் பெரியப்பா மகனுகளுக்கேத் தெரியாமல் ஆப்பை கூர்மையாக செதுக்கி வைத்தான். 

மருதமலை சென்று பிள்ளைக்கு முடியிறக்கிவிட்டு, மண்டபத்தில் வைத்து காது குத்துவதென முடிவானது. முடியிறக்க தாய்மாமன் மடி வேண்டுமே. இடும்பன் வழியில் பங்காளிகள் முறைக்கு எவருமில்லை. அவரும் வீட்டிற்கு ஒரே பிள்ளைதான். அண்ணன், தம்பி கிடையாது. அடுத்து பவித்ரா தாய்வழியில்(அங்காளி வகையில்) இருப்பது கிரிதரன் மட்டும்தான். அதற்கு அடுத்துதான் அம்மாவிற்கு சொந்தம் என்ற வகையில் மாமனாக மதன்கைலாஷ்.‌ முதல் உரிமை கிரிதரனுக்கு தான்.

அவனை அழைக்க வேண்டுமென தனசேகரிடம் இடும்பனே பேச்சை முன்னெடுத்தார். எல்லாரும் எதிர்பார்த்த வழக்கமான பதில்தான் தனசேகரிடம் இருந்துவந்தது.

“நான் செத்தாலும் என் மூஞ்சில வந்து அவன் முழிக்கக் கூடாது!” என்றார் கோபமாக.

“நல்ல காரியம் பேசும் போது ஏன் மச்சான் அச்சானியாமாப் பேசுறீங்க. என்னைக்கிருந்தாலும் நம்ம பிள்ளை இல்லைனு ஆகிறாது.” தன் பொறுப்புணர்ந்து பேச்சை முன்னெடுத்தார் இடும்பன்.

கோபம், அவமானம், ஒரு காலத்தில் தம்பிதான் குடும்ப மானத்தை வாங்கினான் என்றால், இன்று‌ மகனும் இப்படி செய்துவிட்டானே என்ற ஏமாற்றத்தில் இருப்பவரிடம், அதிகாரமோ, குரலை உயர்த்துவதோ செல்லுபடியாகாது. அவன் வேணும்னா அவனை மட்டும் கூப்பிட்டுக்கோங்க. நான் வரமாட்டேன் என முறுக்கிக் கொண்டால் என்ன செய்வது.

தனசேகரன் “எனக்கு பிள்ளைனு மதன் ஒருத்தன் மட்டும் போதும்!” என்று முடித்துக் கொள்ள,

“இன்னைக்கி அவனை மட்டும் ஏத்துக்கறீங்க. ஆனா, அன்னைக்கே அவன் அப்பா செஞ்சதையும் மன்னிச்சு ஏத்துட்டிருந்தா, இன்னைக்கு அவனும் அப்பா, அம்மான்னு குடும்பமா இருந்திருப்பான்ல. போன பின்னாடி ஆத்திரப் பட்டு என்ன பிரயோஜனம் சொல்லுங்க!” இடும்பன் நிதர்சனத்தை எடுத்துச் சொன்னார் தனசேகருக்கு. 

இன்று இந்த வீட்டுப்பிள்ளை என்று‌ தலையில் தூக்கிவைத்து கொண்டாடும் இவன் பெற்றோர்களைத்தான், சாதிவிட்டு சாதி காதல் திருமணம் செய்தார் என்பதற்காக குடும்பமே ஒதுக்கி வைத்தது. 

எல்லாரும் ஹாலில் தான் கூடியிருந்தனர். விசேஷத்தைப் பற்றி பேசுவது போல் ஆரம்பித்து கிரிதரனை அழைப்பதைப் பற்றி பேச்சையெடுத்தார் இடும்பன். 

“ஆளுக்கொரு பிள்ளைனு இருக்கறது மூனே பேருதான் மச்சான். அதுல ஒருத்தனை‌ மட்டும் விட்டுட்டு எப்படி விசேஷம் வைக்கிறது. அடுத்த தலைமுறை வைக்கிற முதல் விசேஷம். ஒன்னாவே வளந்தவனுங்க. அதுவுமில்லாம மாமன் முறைக்கு வந்துதானே ஆகணும்?”

“ஏன்… மாமான்னு மதன் நின்னா ஒத்துக்க மாட்டீங்களா?” 

“எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்ல. எனக்கு கிரியும், மதனும் ஒன்னுதான். ரெண்டு பேருமே மச்சான் மகனுங்க தான். ஆனா முறைன்னு ஒன்னு இருக்குல்ல. அண்ணன், தம்பி எத்தனை பேர் இருந்தாலும் மூத்தவனுக்குத் தானே மாலை போடுறதுலருந்து எல்லா உரிமையும். நியாயமாப் பாத்தா தாய்மாமனுங்கனு பவித்ராவோட அப்பா வழி சொந்தம்தான் நிக்கணும். அங்கேயும் பெரியப்பா மகனுங்க ரெண்டு பேர் இருக்கானுங்க. அவிங்களப் போயி கூப்பிட முடியுமா?” என்று இடும்பன் கேட்க, 

மதன், “அவிங்கள கூப்பிடவே வேண்டாம். தன்னால வருவானுங்க! இல்ல மாம்ஸ்!” என்றான் மெதுவாக அருகில் நின்றிருந்த ஜெகனிடம் குனிந்து‌. பெரியவர்கள் சோஃபாவில் அமர்ந்து பேசிக்க கொண்டிருக்க, சிறியவர்கள் சற்றுத்தள்ளி நின்றிருந்தனர். 

“பேசாம இருடா! நீ பண்ணப்போறத நெனச்சா எம்புள்ள காது குத்துல அவிங்களுக்கு மொட்டையடிச்சு, சந்தனம் பூசாம விடமாட்ட போல?” 

“நான் எதுவும் பண்ணப்போறதில்ல மாம்ஸ். என் விரல் நகம் கூட அவிங்க மேல படாது. ஆனா, எங்க அடிச்சா வலிக்குமோ அங்க அடிக்கணும்! ஆல்ரெடி எல்லாம் பண்ணியாச்சு. நம்ப வீட்டுப் பொண்ணுகள சபைலவச்சுப் பேசிட்டு, அவனுங்க நிம்மதியா இருந்துறலாமா? பாஞ்சாலின்னு சொன்னானுகல்ல? பாஞ்சாலி சேலையத் தொட்ட பங்காளிக கெதி என்னாச்சுனு காமிக்க வேண்டாமா?” பெரியவர்களுக்கு கேட்காமல் தங்களுக்குள் பேசிக் கொண்டாலும் மதன் குரலில் இருந்த கடினமும், அழுத்தமும் ஜெகனைக் கூட கலக்கமடையச் செய்தது. 

வெளிப்பேச்சிற்கு முகம் சாதாரணமாகத் தெரிந்தாலும் அவன் கண்கள் காட்டிய உக்கிரம் ஜெகனை அச்சுறுத்திப் பார்த்தது.

அவன் முகம் இறுகுவதைப் பார்த்தவன், “இவ்வளவு கோபம் ஆகாதுடா! என்றான்‌ ஜெகன். 

எதற்கு அவர்களை சீண்டிவிட வேண்டும் எனத் தோன்றியது. ஏனெனில் மதன் கைவைக்கப் போவது அவர்கள் மீதல்ல. அவர்கள் பரம்பரைச் சொத்து மீது. இவன் கணக்குப் பிரகாரம் பார்த்தால் அவர்களுக்கு கோவணத்துணி அளவுகூட சொத்து மிஞ்சாதுபோல. அதுதான் அவர்களை மிகவும் ஆத்திரமூட்டும். கோபத்தில் எந்த எல்லைக்கும் போகச் சொல்லும். பவித்ரா ஒப்புதல் இல்லாமலே அந்தளவிற்கு கடன் வாங்கியிருந்தனர் சொத்து மீது. 

அடித்தால் கூட அடிதடி, கை கலப்பு என மறைந்து போகும். அன்று துக்க வீட்டில் கூட ஜெகன் அவர்கள் பேசியது பொறுக்க மாட்டாமல் கை வைத்தான்தான். அது பெரிதாகப் பார்க்கப்படவில்லை. ஆனால், இன்று இவன் செய்து வைத்திருக்கும் காரியம் எரியும் நெருப்பில் பெட்ரேல் ஊற்றுவது போல்! அவனுகளுக்கு உச்சி முதல் உள்ளங்கால் வரை எரியும். 

“ஏன் மாம்ஸ் பயப்படுறீங்களா?” என்றான் அப்பொழுதும் சிரித்தவாக்கில்.

“எனக்கென்னடா பயம்? ஆனா பவியும், அத்தையும் பயப்படுறாங்க. அந்த சொத்தே வேண்டாம்கறாங்கடா! பவி கையெழுத்துப் போடவே மாட்டேன்னா. உனக்கே தெரியும்தானே?”

“எப்பவும் பொம்பளைங்க மனசு, வீட்டு ஆம்பளைங்க சிக்கல்ல மாட்டிக்கக்கூடாதுன்னு தான் மாம்ஸ் யோசிக்கும். விடுங்க பாத்துக்கலாம். சட்டப்படிதான் எல்லாம் செய்யப் போறோம். முதல்ல நம்ம வீட்டுல எண்ண நடக்குதுன்னு பாருங்க! உங்க மச்சானை வீட்டுக்கு கூட்டி வர்றதுக்குள்ள எங்க மாமா எப்படியெல்லாம் காவடி தூக்க வேண்டியிருக்கு!” மாமனுக்காக வருத்தப்படுவது போல் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல,

“இதுக்குப் பேருதான் தடி நோகாம பாம்பை அடிக்கறதாடா? அவரை இதுக்குள்ள இழுத்துவிட்டதே நீதானடா?” என்றவன், “அவன் மச்சான்னா நீ யார்றா?” என்ற ஜெகனின் கோபத்தில் சிரிப்பு வந்தது.

“என்ன இருந்தாலும், நான் பவித்ராவுக்கு அப்பா வழியுலயுமில்ல, அம்மா வழில ஏதோ கொஞ்சம் ஒட்டின சொந்தம் தானே? ஒன்னுவிட்ட, ரெண்டுவிட்ட சொந்தம் வகையில கூட இல்ல! ஆரோ தானே?” அவனை வெறுப்பேற்றவேணும் பச்சைப்பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு அப்பாவி போல் கேட்டான். 

“அப்படியே ஒன்னு விட்டேன்னாத் தெரியும்டா. ஒன்னுவிட்ட அண்ணனா, ரெண்டு விட்ட அண்ணனான்னு. எனக்கு உன் மடியில வச்சு எம்பிள்ளைக்கு காது குத்தத்தான்டா ஆசை. நீதான் அந்த நல்லவன் வந்தே ஆகணும்னு ஒத்தக்கால்ல நிக்கிற?”

“இப்ப என்ன மாம்ஸ். ஒரு காது அவன் மடியில வச்சு குத்துவோம். இன்னொரு காது எம்மடியில வச்சு குத்துவோம்! அதான் என் செல்லத்துக்கு ரெண்டு காது இருக்கே?” 

“ஆனா ஒன்ரா… எம்புள்ள விசேஷத்தை வச்சு நல்லா பண்றடா நீ! முதல்ல உங்க பெரியப்பாவ எப்படி மலையிறக்குறதுன்னு கவனி!” என்று பெரியவர்கள் பேச்சில் மீண்டும் கவனைத்தை திருப்பினர்.

இடும்பன், “நம்பலும் சொத்து வெளியே போயிறக் கூடாதுன்னு, ஒன்னுக்குள்ள ஒன்னா கொடுத்து எடுத்துக்கிட்டோம். வெளி சொந்தம்னு யார் இருக்கா சொல்லுங்க!” என்றவர் 

“சொத்தைக் காரணம் காட்டிதானே, குணசேகரன் மாப்பிள்ளை மறுத்ததும், சீதாவ அவிங்களப்பத்தி தெரிஞ்சும் அவங்க அம்மா வழில கொடுத்தாங்க. சொத்து வெளில போயிறக்கூடாதுன்னு பாத்து வாழ்க்கை என்னாச்சு. சொத்துக்கு சொத்தும் போயி வாழ்க்கையும் போனதுதான் மிச்சம். இப்பவும் நமக்குள்ள பாருங்க! வெளி சொந்தமே கம்மிதான். அதுல இருக்குற ஒருத்தனையும் தள்ளிட்டு யாரைவச்சு விசேஷம் பண்ண?” இடும்பன் கேட்டதில் அதிலிருந்த நியாயம் தனசேகருக்குப் புரியாமலில்லை. இருந்தாலும் அன்று‌ பெண்வீட்டார் முன்னும், ஊரார் முன்னும் பட்ட அவமானம் அவரை தன்மானத்தை விட்டு இறங்கிவர மறுத்தது. 

பெரியநாயகியும் மகனிடம், “அன்னைக்கு உங்க அப்பாவும் இப்படித்தான் சேகரா வீம்பு புடிச்சாரு. வேணும்னா அவனே வரட்டும்னாரு. உங்கப்பாவுக்கிருந்த வீம்புதான் உன் தம்பிக்கும். கஷ்ட்டப்பட்டும் கூட கடைசி வரைக்கும் வரவேயில்ல.‌ எதுவா இருந்தாலும் அவனை வரச்சொல்லு சேகரா. வாசுகிய நெனச்சுப் பாரு! ஆம்பளைங்க வீம்புல பொம்பளைகதான் பிள்ளைக்கும், புருஷனுக்கும் எடையில கெடந்து அல்லாடுறோம்” தொண்டையடைக்கப் பேசியவர் முந்தானை எடுத்து கண்களைத் துடைத்துக் கொண்டார். 

தன் பெற்றோரைப் பற்றிப் பேச்சுவர, இவ்வளவு நேரமாக மச்சானிடம் இயல்பாக வாயாடிக் கொண்டிருந்தவன்‌ முகம் சடுதியில் கருத்துச் சிறுத்துவிட்டது. நெஞ்சைப் பாரம் அழுத்த, புருவ மத்தியில் விண்ணென்று வலி தெரித்தது. வலக்கை தன்னால் புருவமத்தியை அழுத்திக் கொடுக்க, ஜெகன் அவன் இடக்கையை ஆதரவாகப் பிடித்துக் கொண்டான். அவனைத் திரும்பிப் பார்த்து வரண்ட சிரிப்பொன்றை உதிர்த்தவன் புன்னகை, கண்களை எட்டவில்லை எனத் தெரிந்தது பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு. 

அவன் மலர்ந்து சிரிக்கையில், கன்னக்கதுப்பு சிவக்க, விழியோரமும் சிரிப்பு விரியும். அந்த வசீகரம் மிஸ்ஸிங் அவள் பார்வைக்கு. அவன் பக்கத்தில் அமர்ந்து ஆதரவாகத் தலையைப் பிடித்துவிட மனம் பரபரத்தது. சிறுபிள்ளை போல் அவன் முகம் வாடினால் தனக்கு ஏன்‌ இத்தனை தவிப்பு என்று மனம் யோசித்தது. அவள் எண்ணம் புரிந்ததோ என்னவோ, அவள் பக்கம் பார்வையைத் திருப்ப, கண்களில் தவிப்போடு, என்ன என்பது போல் புருவத்தைச் சுருக்கி, முகத்தைத் தூக்கி வினவினாள். அவள் கண்களில் தெரிந்த, தனக்கான சிறு கலக்கமே அவனுக்குப் போதுமானதாக இருக்க, ஒன்றுமில்லை என்பது போல் தலையை ஆட்டினான். 

அவள் நம்பாத பார்வை பார்க்க, அந்த ஒற்றைப் பார்வை அவனை எண்ணவோ செய்தது. மூச்சும் முட்டும் அறைக்குள், ஒற்றைச் சாளரத் திறப்பாய் அவளது அக்கறை தென்றலாய் வருடிச் செல்ல,

“நம்புங்க அம்மணி!” என்றான் வாயசைத்து சிறு புன்னகையோடு. 

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ஜெகனுக்குதான் மனம் ஆறுதலாக இருந்தது. 

பெரியவர்கள் சொன்ன ஒற்றைச் சொல்லுக்காக மறுகேள்வி கேட்காமல் திருமணம் செய்தானே… இவர்கள் வாழ்க்கை எப்படியிருக்குமோ என்ற பயம் ஜெகனுக்குள் இருந்து கொண்டேதானிருந்தது. 

பத்து வயதில் தாத்தாவோடு தோப்பு வீட்டிற்கு வந்ததிலிருந்தே எதையும் உரிமையோடு கேட்டு வாங்கமாட்டான். ஒரு ஒட்டாத்தன்மையோடு தான் இருப்பான். இதுதான் நம் வீடு என அவன் உரிமை எடுத்துக் கொள்ளவே கொஞ்ச காலம் பிடித்தது. அவனுக்கு என்ன வேண்டுமென பெரியநாயகிதான் பார்த்துப் பார்த்து செய்வார். இவர்களோடு இயல்பாக ஒட்டவே இல்லை. எல்லாருக்கும் மூத்தவனான அருணகிரியிடம் தான் அண்ணனென முதலில் நெருங்கினான். அதன் பிறகுதான் விடுமுறைக்கு மாமா வீடு செல்லும் ஜெகனோடு பழகினான். ஜெகனுக்கும், அருணகிரிக்கும் சமவயது. அவர்களைவிட இரண்டு வயது இளையவன் கிரிதரன். அவனுக்கும் இரண்டு வயது இளையவன் மதன்.

கிரிதரனுக்கும் இவனுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகாது. புதிதாக தங்கள் கூட்டத்தில் இணைந்த ஒருத்தனை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லையோ, இல்லை அப்பத்தா இவனைத் தனியாக சிரத்தையெடுத்துக் கவனிப்பதோ ஏதோ ஒன்று, அதுவரை கடைக்குட்டி சிங்கமாக இருந்தவன் இடத்திற்கு இவன் வந்துவிட்டதாக எண்ணம் அவனுக்கு. இவனை சீண்டிக் கொண்டேதான் இருப்பான். 

காலச்சக்கரம் உருண்டோட, தன் கூட்டிலிருந்து வெளியேறி இயல்பான குணத்தை வெளிப்படுத்தினான்‌ மதன். பெற்றோரின் இழப்பிலிருந்து மீண்டு, இதுதான் நம்வீடு, குடும்பம், சொந்தமென அனைவரிடமும் கலகலப்பாக பழக ஆரம்பித்தான். எப்பொழுதும் சிரித்த முகமாக வலம் வருபவனிடம் ஏதோ ஒரு வசியமிருந்தது. அதுவே கிரிதரனையும் அவன் மீது பொறாமை கொள்ளச் செய்தது அந்த வயதில். 

நான்கு பேரும் ஒன்று கூடும் சமயங்களில் ஏதொன்றுக்கும் தனக்கே முன்னுரிமை என கிரிதரன் மல்லுக்கு நிற்பான். தனசேகரன் வாங்கி வரும் எந்தப் பொருளானாலும் இவன் எடுத்த பிறகுதான் மதன் எடுக்கவேண்டும். பெரியவர்களாக அருணும், ஜெகனும் அவனுக்கு விட்டுக் கொடுக்க, அவர்கள் வழியில்‌ மதனும், அவனுக்கே விட்டுக் கொடுத்துப் பழகினான். 

அதுவரை வாசுகி கூட இவனிடம் பெரிதாக வேறுபாடு காட்டியதில்லை. அவன் அப்பா, தனது தங்கைக்கு செய்த துரோகத்தை மறக்கவுமில்லை. வேலையாட்கள், பெரியநாயகி என பேரன்களைக் கவனித்துக் கொண்டதால் இவனுக்கெனத் தனியாக மெனெக்கெட வேண்டிய அவசியமில்லாமல் போயிற்று வாசுகிக்கு. அவரும் தனசேகரோடு சேர்ந்து கார்மென்ட்ஸ் சென்றுவிடுவார். 

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அந்த விபத்து நேரும் வரை. இவனைக் காப்பாற்றப் போய், அருணகிரி உயிரைவிட்டு, மதன் மீண்டுமொரு மறு பிழைப்பை சந்தித்து, மனதளவில் பயத்திலிருந்து மீண்டு வருவதற்குள், மீண்டும் ஒரு இடமாற்றம். வாசுகியின் பிறந்த வீட்டிற்கே குடிபெயர்ந்தது குடும்பமே. 

அத்தோடு மகனின் இறப்பிற்கு இவன்தான் காரணமென, வாசுகியின் பாராமுகமும், குத்தல் பேச்சுக்களும் அந்த சிறுவயதில் ஆழமாகப் பதிந்து போயிற்று. இங்கு அவனுக்கு சுத்தமாகப் பிடித்தமில்லை. 

வளர்ந்து வாலிபனான பிறகு, சொத்தும் பிரிந்துவிட, இங்கு வருவதே படுக்கைக்கு மட்டும் என ஆயிற்று. அதுவும் அப்பத்தாவிற்காவும், சீதாலட்சுமி இவன் மீது காட்டும் பாசத்திற்காகவும் மட்டும் தான். 

திருமணமும் செஞ்சோற்றுக் கடனுக்காக என்பது போல், பெரியவர்கள் பேச்சிற்குக் கட்டுப்பட்டு  நடக்க, வேண்டா வெறுப்பாக கல்யாணம் செய்து கொள்கிறானே, இவன் எதிர் காலம் எப்படியிருக்குமோ என்ற கலக்கம் எப்பொழுதும் ஜெகனுக்கு உண்டு. ஆனால், சமீபகாலமாக இவர்கள் நடவடிக்கைகளைக் கண்ணுற்றவனிடம் அந்தக் கவலை இப்பொழுது இல்லை. நிம்மதியாக உணர்ந்தான். 

பழைய நினைவுகளில் இருந்து ஜெகனை மீட்டுக் கொண்டுவந்தது பரிமளத்தின் குரல். 

பரிமளம், “இப்ப என்னண்ணே! நீங்க ஒன்னும் இறங்கிப் போயி அவனைக் கூப்பிட வேண்டாம். இவங்க கூப்பிடட்டும்‌!” என இடும்பனையும், மகனையும் கை காட்ட, 

அம்மா, மச்சான், தங்கை என மும்முனைத் தாக்குதல் நடத்த, மனைவியை பார்த்தார் தனசேகரன். நீ ஏன் எதுவும் பேசாம இருக்க என்பது போல். 

மற்ற நேரமெல்லாம், எதுவாக இருந்தாலும் சட்டென எடுத்தெரிந்து பேசுபவர் இன்று அமைதிகாத்தார். 

வெளியே செல்லும் ஆண்களுக்கு மனப்பாரத்தை இறக்கி வைக்க எத்தனையோ வழிகள். வீட்டைவிட்டு வெளியே போய்விட்டால், தொழில், கணக்கு வழக்கு, கொடுக்கல் வாங்கல் என வீட்டு நினைப்பு மொத்தத்தையும் தொழில் விழுங்கிவிடும். 

ஆனால், வீடு, பிள்ளைகள் என நான்கு சுவற்றுக்குள் சுற்றும் பெண்கள் எங்கு கொண்டு போய் தங்கள் மனபாரத்தைக் கொட்ட. ஏற்கனவே ஒரு பிள்ளையை இழந்து, அதே கவலையில் உருக்குலைந்து போனவளுக்காகத் தன் பிடிவாதத்தை கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் தான் என்னவெனத் தோன்றியது.

கால சுழற்சியில், வாசுகியின் மாத்திரை எண்ணிக்கை கூடிக் கொண்டேதான் போகிறதே ஒழிய‌, உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. மனைவியை எண்ணி பெருமூச்சு தான் வெளிப்பட்டது தனசேகரிடம். 

ஒரு‌ காலத்தில் எப்படியிருந்தவள். பிறந்ததிலிருந்து தெரியும் மாமன் மகளை. பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி ராணியாகத்தான் இருந்தார். வீடு, தோப்பு, வயல், கார்மென்ட்ஸ் என பெரியநாயகிக்கு அடுத்து அதிகாரம்‌ செய்தது வாசுகிதான். புத்திர சோகம்தான் அவரை உருக்குலைத்து, உட்கார வைத்துவிட்டது.‌ போதாக்குறைக்கு சின்ன மகன் செய்த நம்பிக்கைத் துரோகமும் சேர்ந்து கொஞ்ச நாட்களாகவே அவரது உடல்நிலை படுத்திவைக்கிறது. அதன் எரிச்சலும், ஆற்றாமையும் அவர் வார்த்தைகளில் அமிலமாக வெளிப்படுகிறது. அதிக அசைவின்றி ஒரே இடத்தில் உட்கார்ந்துவிடும் மனநிலையில் வரும் மாற்றம். தன்னுடைய அடிப்படைத் தேவைக்கே இன்னொருத்தரை எதிர்பார்க்கும் நிலமை. இன்னும் நம் இறுதிக் காலம் எப்படி செல்லுமோ என்ற எதிர்காலம் பற்றிய பயம். எல்லாம் சேர்ந்து மன அழுத்தத்தை உண்டு பண்ணியிருந்தது.

“உங்களுக்கு முன்னாடி நான் போயிறணும்ங்க. நீங்க இல்லாம, இதுக்காக எல்லாம் இன்னொருத்தரை என்னால எதிர்பாக்க முடியாது!” இரவு கழிப்பறை‌செல்ல கணவரை எழுப்பும் பொழுதெல்லாம், சிறிது நாட்களாகவே இப்படி புலம்ப ஆரம்பித்துவிட்டார் வாசுகி. நாற்பதுகளின் இறுதியில்தான் இருக்கிறார். அதற்குள் வாழ்க்கையில் இறுதிக்கட்டத்தை எண்ணி மிகவும் பயப்பட ஆரம்பித்துவிட்டார். 

இளமையின் இறுதிப் படியில் ஒரு காலும், முதுமையின் முதல் படியில் மற்றொரு‌ காலுமென அல்லாடும் தள்ளாட்ட  மனநிலை. ஐம்பதுகளைத் தொடும் பொழுது எல்லாருக்கும் இயற்கையாகத் தோன்றும் பயம்தான். ஏனென்றால்… நமது அப்பா, அம்மா, அத்தை, மாமா என முந்தைய தலைமுறை உறவுகள் அப்பொழுதுதான் ஒவ்வொன்றாகப் பழுத்து உதிர ஆரம்பித்திருக்கும். அதன் தாக்கம் நமக்குள்ளும் எதிரொலிக்கும். தன் தேவைகளைத் தானே கவனித்துக் கொண்டாலும், அடுத்தவர் உதவியில் வாழும் வாசுகியிடம் அது சற்று கூடுதலாகவே தென்பட்டது. 

என்ன பதில் சொல்வாரோ என மனைவி கண்களில் தெரிந்த ஆர்வம், தனசேகரின் மனதைப்‌ பிசைய,  மனைவிக்காக பரம்பரை வீட்டைவிட்டே வந்தவர், வீம்பை விட்டுக் கொடுக்க மாட்டாரா என்ன? 

“வர்றவங்களுக்கு என்ன பதில் சொல்வீங்க மாப்ள?” என்ற பதிலே அவர் மலையிறங்கி விட்டார் என்பதை மறைமுகமாக உணர்த்த,

“ஒரு நேரம் சாப்பிட்டு, மொய் வச்சுட்டுப் பேறவங்களப் பத்தி நாம ஏன் யோசிக்கணும் மச்சான். பேசுறவங்க எப்பவும் பேசத்தான் போறாங்க!” 

“என்னமோ பண்ணுங்க!” என்று ஆயாசமாக எழுந்து கொண்டதிலேயே அவர் சம்மதம் கிடைத்துவிட, அனைவர் முகத்திலும் அது ஆசுவாசமாக வெளிப்பட்டது. 

மதன், “சக்ஸஸ்” என்றான் பராசக்தி சிவாஜி போல். 

“இவங்க தான் உங்க அண்ணனா?” மதன் காதோரம் சன்னக் குரலில் வினவினாள் மாதங்கி. 

அவளைத் திரும்பிப் பார்த்தவன், “ஏன்… உனக்குத் தெரியாதா?” என்றவன் பார்வை தெரியாமல் கேட்கிறாளா, ஆர்வமாகக் கேட்கிறாளா என ஆராய்ந்தது. 

“நம்ம கல்யாணத்துக்குப் பின்னாடி இப்பத்தானே வீட்டுக்கு வர்றாங்க. நான் எப்படி பாத்திருப்பேன்?”

“லூசா நீ… மாப்பிள்ளை ஃபேட்டோ பாக்கலையா?” எனக் கேட்டவனை விழிகளைச் சுருக்கி முறைத்து விட்டு,

“இந்த லூசுதான் இந்த லூசை லவ் பண்ணுச்சே‌. அப்புறமும் எப்படி எங்கிட்ட மாப்பிள்ளை ஃபேட்டோ காட்டுவாங்க. என்னமோ எல்லாமே என் சம்மதங்கேட்டு நடந்த மாதிரி?” என்றாள் சுள்ளென்ற கோபத்தோடு. அவள் கோபம் பார்த்தவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனாலும் இந்த சூழ்நிலையில் சிரித்தால் அபத்தமாகப் போகும் என்று அடக்கிக் கொண்டான். 

“அப்போ ஃபேட்டோ கூடப் பாக்கலையா?” உள்ளுக்குள் பொங்கிய பரவசம் அவன் கண்களில் அப்பட்டமாகத் தெரிய,

“இதுல என்ன அப்படியொரு சந்தோஷம் உங்களுக்கு!” என்றாள் அவன் குரலில் தெரிந்த குதூகலத்தில். 

“சென்னால் புரியாது!” என்றவனிடம்,

“சுவைத்தால் மறக்காது!” என்றாள். 

புரியாமல் பார்க்க, “டயலாக் கன்டினியூட்டி” என்றாள். 

வாய்விட்டு சிரித்தவன், “தேரிட்ட!” என்றான்.‌

“சேந்த இடம் அப்படி!” என்று மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டு ஒற்றைப் புருவம் தூக்கிச் சொன்னவளை விழுங்குவது போல் பார்த்தான்‌. 

அவனுக்குள் ஒரு எண்ணம் கண்ணில் விழுந்த சிறு துரும்பாய் உருத்திக் கொண்டே இருந்தது. அவன்‌ ஃபேட்டோவைப் பார்த்து, படிப்பு, வேலையெல்லாம் பிடித்துதானே சம்மதம் சொல்லியிருப்பாள் என்று. எப்பொழுதுமே கிரியோடு தன்னை சமன்படுத்திப் பார்த்ததில்லை. அதற்குத் தேவையுமில்லை. ஆனால் அவனைத் திருமணம் செய்ய சம்மதித்த பெண் என்ற வகையில், படிக்காத தன்னை பிடிக்குமா என்று மனம் சஞ்சலம் கொள்ளத்தான் செய்தது. 

“அன்னைக்கி மண்டபத்துல கோபமா மொறச்சுப் பாத்தியா? மாப்பிள்ளை மாறிப் போனதால, என்னைப் பிடிக்காமத்தான் அப்படிப் பாக்குறியோன்னு நெனச்சேன்!” என்றான் சற்றே அசடு வழிய.

“நீங்கனு‌ இல்ல… எந்த ராஜகுமாரன் வந்திருந்தாலும் அப்படித்தான் பாத்திருப்பேன். நீங்க கோயில்ல பண்ண  காரியத்தாலதான் எனக்கு கல்யாணமே முடிவாச்சு. நீங்களே மாப்பிள்ளையா வந்து நின்னா, உங்களை முறைக்காம… கொஞ்சுவாங்களா?” என்றாள்‌ உதட்டைச் சுழித்து‌ ஒழுங்கு காட்டியபடி.

“கொஞ்சலாம் தப்பில்ல!” என்றவனை வெட்டவா குத்தவா எனப் பார்த்தாள்.

“நீ கோபமாப் பாத்தாக்கூட கொஞ்சுற மாதிரித்தானிருக்குங்க அம்மணி!” என்றான். 

“ஏன்டா… இங்க என்ன நடந்திட்டிருக்கு? இப்பவும் உனக்கு ரொமான்ஸ் கேக்குதாடா? பக்கத்துல ஒருத்தன் நிக்கிறது கூடவா கண்ணுக்குத் தெரியல?” என்று ஜெகன் கேட்க, லஜ்ஜையில் இவளுக்கு தான் ஒருமாதிரி ஆகிவிட்டது. இன்னும் யாரும் காஃபி கூட குடிக்காமலிருக்க, காஃபி போடுவதுபோல் அடுக்களை சென்றுவிட்டாள். 

“இப்ப சந்தோஷமா? இது வாலிப வயசு மாம்ஸ்! நீங்க தான் கண்டும் காணாம ஒதுங்கிப் போகணும்!”

“அப்ப, நாங்கெல்லாம் என்ன தடி ஊன்டிட்டாடா திரியுறோம்?”

“ஆமா… பாருங்க! அங்கங்க வெள்ள முடி தெரியுது. என் தங்கச்சிய ஏமாத்தி கல்யாணம் முடிச்சுட்டீங்க. அதுவும் அத்தை மகனாச்சேனு போனாப் போகுதுன்னு வாழ்க்கை கொடுத்திருச்சு!” 

“எல்லாம் எங்கெரகம்டா!” 

“ஒன்பது கெரகமும் ஒரே கோட்ல இருக்கறவங்களுக்குதான் இப்படியெல்லாம் வாழ்க்கை அமையுமாம் மாம்ஸ்” என்று நமட்டுச் சிரிப்பு சிரித்தான். 

இன்று அதிகாலை எழுந்து அவரவர் வழக்கமான வேலையைப் பார்க்க, மதன் எழுந்து பால் கறந்து எடுத்து வந்தான். பின் வாசலில் இருந்து வீட்டின் முன்பக்கம் வர, வீட்டு வாசலில் கார் நிற்கும் சப்தம் கேட்டது. யார் என ஒரு கணம் யோசனையில் நின்றான். காரிலிருந்து இறங்கியவன், முன்னால் வந்து கதவைத் திறந்துவிட யுவதி ஒருத்தி ஒயிலாக இறங்கி நின்றாள். 

“இதுதான் பேபி நம்ம வீடு!” என்றவன். “வெல்கம் அவர் ஹோம்” என வரவேற்பு நிகழ்த்தினான். 

அண்ணார்ந்து வீட்டைப் பார்த்து, “நைஸ்” என ஒற்றைச் சொல் உதிர்த்தவள் கண்களில் ஒருவித அலட்சியம் தெரிந்தது மதனுக்கு. 

அவளது உடையைப் பார்த்தவனுக்குத்தான், அய்யோடா என்றிருந்தது. இந்த மடையனாவது ஊருக்குத் தகுந்த மாதிரி ட்ரெஸ் பண்ணிக் கூட்டி வரக்கூடாதா எனத் தோன்றியது. பெங்களூர்க்கு இது ஓ.கே. ஆனால் ஈரோட்டிற்கு, அதிகப்படி இல்லை. ரொம்பக் கம்மி எனத் தோன்றியது. நாளை மறுதினம் விசேஷம் என்பதால் இடும்பன், பரிமளம் எல்லாம் இங்குதான் இருக்கிறார்கள். 

அடர் சிவப்பில் கையில்லாத டீ சர்ட், காலை இறுக்கிப் பிடித்த த்ரீ ஃபோர்த் ஜெகின்ஸ். அதுவும் பீஜ் ‌கலரில் இருக்க, அவள் நிறத்தோடு ஒன்றிப் போய் காலில் இருப்பதுகூடத் தெரியவில்லை. அதுவும் முக்கால் காலிற்கு கூட இல்லாமல் முழங்காலுக்கு சற்று கீழ்தான் இருந்தது‌. 

கார் டிக்கியைத் திறந்து, ட்ராலியை எடுத்தவன், நாய்க்குட்டி போல் அதை  இழுத்துக்கொண்டு, அவளையும் அழைத்துக் கொண்டு, கேட்டைத் தள்ளி உள்ளே வந்தவர்கள் இருவரையும் பொதுவாக, “வாங்க!” என வரவேற்றது கையில் பால் பாத்திரத்தோடிருந்த மதன்தான். 

“டேய்… இன்னும் நீ மாறவேயில்லையா?” என்றான் வந்ததும் வராததுமாக.

“இப்ப நான் மாறுற அளவுக்கு என்ன நடந்துச்சு. ஒரு நிமிஷம் இங்கேயே நில்லுங்க. பவியை வரச்சொல்றேன்!” என்றவன் உள்ளே செல்ல, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஆரத்தித்தட்டோடு பவித்ரா வெளியே வந்தாள். இருவரையும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றாள். 

உள்ளே வந்தவர்களைப் பார்த்ததும் ஹாலில் அமர்ந்திருந்த தனசேகரன் விருட்டென எழுந்து உள்ளே சென்றுவிட்டார். அது மகன் மீதிருந்த கோபமா, மருமகளின் நடை, உடையா என்பது அவருக்குத்தான் வெளிச்சம்.‌ 

“வாங்க கண்ணு!” என்றார் வழக்கம் போல் சீதாலட்சுமி. 

“என்ன, பேரான்டிக்கு இப்பதான் இந்தப் பக்கம் வர வழி தெரிஞ்சதா?” பெரியநாயகி பேரனை இடித்துரைக்க, 

“சாரி அப்பத்தா… அப்பாவை நெனச்சுப் பயம். அதனால்தான் சொல்லல” என்றான் மேம்போக்காக. அவனைப் பொறுத்தவரை எதுவும் நடவாதது போல், ஏதோ விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தவன் ‌போல் இயல்பாக இருந்தான்.

“அம்மா…” என ஆர்வமாக நெருங்கிய மகனை வாசுகி, வாரி அணைத்துக் கண்ணீர் விடுவார் என அனைவரும் எதிர்‌பார்க்க, சேரில் அமர்ந்திருந்தவர் முன் கிரிதரன் மண்டியிட்டு அமர, அடுத்த நொடி பளாரென அவன் கன்னம் பழுத்துவிட்டது. இத்தனை நாள் மனத்தாங்கலையும், கடைசி நிமிடம் வரை இதோ, அதோ என ஏமாற்றி இறுதி நிமிடத்தில் கல்யாண போட்டோவை அனுப்பி வைத்து பெரிய இடியை தலையில் இறக்கியவனின் மீதிருந்த கோபத்தையும் மொத்தமாக ஒன்று திரட்டி அவன் கன்னத்தில் இறக்கியிருந்தார். 

“சபாஷ்… சரியான அடி!” என்றான் மதன்.

யாரும் ஆத்திரப்படவுமில்லை. தடுக்கவும் இல்லை. பரிமளம் கூட அவன் மீதிருந்த கோபத்தில் வா என்று கூட அழைக்கவில்லை. இடும்பன் தான், “வா மாப்ளே!” என்றிருந்தார் சம்பிரதாயமாக. 

அப்பொழுதான் குளித்து அறையை விட்டு வெளியே வந்தவள் கண்டது அடி வாங்கியவனையும், அதை வேடிக்கை பார்த்து நின்ற குடும்பத்தாரையும் தான். பக்கத்தில் நின்ற பெண்‌ கூட சற்று மிரண்டது போலிருந்தது. 

அவள் உடையைப் பார்த்தவள், ‘நம்ம இந்தமாதிரி ட்ரெஸ் போட்டா எப்படியிருக்கும்?’ என யோசித்தவள் மனம், ‘வாசுதேவன் கையால பெல்ட் அடி வாங்கி ரொம்ப நாளாச்சுல்ல. அதுதான் இப்படியெல்லாம் யோசிக்கறளவுக்கு உனக்கு துணிச்சல் வந்திருச்சு!’ என இடித்துரைத்தது. 

“சூப்பரா இருக்கும். எடுத்துத் தரவா?” அவள் பார்வையையும், முகம்போன போக்கையும் வைத்தே அவளது எண்ண ஓட்டத்தைக் கணித்தவன், கண் சிமிட்டி ரகசியமாகக் கேட்க,  

அவனைத் திரும்பிப் பார்த்தவள் தான் இவங்கதான் உங்க அண்ணனா எனக் கேட்டாள். அந்தக் கேள்வியில் அவனுக்கு அப்படியொரு ஆனந்தம். 

எப்பொழுதும் அவன் எடுத்துக் கொண்டு. ஒதுக்குவதைத்தான் இவனுக்கு கொடுத்துப் பழக்கம். திருமண விஷயத்திலும் அப்படியே என்ற எண்ணம்தான் அவனை இத்தனை நாட்களாக நெருடியது. 

என்று அவளுக்கே இது பிடிக்காத கல்யாணம் என்று தெரிந்ததோ அன்றே பாதி மனபாரம் இறங்கிவிட்டது. இன்று, அவன் ஃபேட்டோ கூடப் பார்த்ததில்லை என்றதில் முழு பாரமும் இறங்கிவிட்டது. காற்றில் மிதக்கும் இறகாய் மனம் விசிலடித்தது. எனக்கே எனக்காக ஒருத்தி என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை. 

எல்லாருக்கும் வந்தவன் மீது கோபமிருந்தாலும், முடிந்த விஷயத்தைப் பேசி பிரயோஜனமில்லை. கோபப்பட்டு நடந்ததை மாற்றவா முடியுமென இயல்பாக இருக்க முயன்றனர். 

“குளிச்சுட்டு வாங்க கண்ணு! சாப்பிடலாம்!” என்றார்‌ சீதாலட்சுமி. 

“எது எங்கிட்டுக் கிடந்தாலும் ‌நம்ம வீட்டு அன்னபூரணிக்கு வந்தவங்க வயித்த நெறச்சாதான் அவங்க மனசு நிறையும்” என்றவன், 

“அப்பறம்… பெரியநாயகி! வராத பேரன் வந்துட்டான். இனி நானெல்லாம் கண்ணுக்குத் தெரிய மாட்டேன்!” தாத்தன் குரலில் பேசி அப்பத்தாவை வம்பிழுக்க,

“போடா படவா!” என்று வழக்கம்போல் தோளில் அடித்துச் சென்றார். 

பெட்டியை இழுத்துக் கொண்டு திரும்பியவன் அப்பொழுதுதான் மதனை ஒட்டி நின்றவளைப் பார்த்தான். 

“ஹேய்ய்! நீ எப்படி இங்க?” என்றான் ஆச்சர்யம் அகலாமல்.  

“மதனோட ஒய்ஃப்” என ஜெகன் அறிமுகப் படுத்தி வைத்தான். 

அவனுக்குத் திருமணம் நின்றிருக்கும் எனத்தெரியும். ஆனால், மதனே அப்பெண்ணைத் திருமணம்‌ செய்திருப்பான் என்பதை எதிர் பார்க்கவில்லை. 

“அதெப்படீடா… நான் வேண்டாம்னு ஒதுக்கறதெல்லாம் உனக்கு சூப்பரா செட்டாகுது!” மாதங்கியைப் பார்த்தவன் கண்களில் தெரிந்த பொறாமை, மதனைக் கோபப்படுத்திப் பார்த்தது.

“என்னைய எப்பவும் உள்ளே இழுத்துவிட்டு, நீ தப்பிச்சுக்கறது தானடா உன்னோட வழக்கமே! அவ உன் தம்பி பொண்டாட்டிங்கற நெனப்பு இருக்கட்டும்!” மதன் குரலில் கொடுத்த அழுத்தத்தில், 

“ச்சே… என்னடா இப்படியெல்லாம் யோசிக்கிற? ஆனாலும் பாரேன்! ஸ்கூல் கூட முடிக்காத, தேங்காய் ஏவாரிக்கு, இப்படிப் படிச்ச, சூப்பரான பொண்ணு ஓவர்தான்டா!” என்றவன் பேச்சில் சுள்ளென கோபம் வர, 

“உனக்கு எப்பவும் எங்கிட்ட இருக்கறதைப் பாத்துப் பொறாமைப் படுறதுதானடா பொழப்பாவே வச்சுருப்பே. என்ன படிச்சு, என்ன வேலை பார்த்து, என்னத்துக்கு ஆகுது. என்னைய மாறவே இல்லையான்னு கேட்ட உன் புத்தி மட்டும் மாறவே இல்லியே!” என்றவனிடம்,

கிரிதரன், “எனிவே கங்கிராட்ஸ்டா” என்று கையை நீட்ட, கையைக் கட்டிக்கொண்டு அழுத்தமாகவே நின்றான் மதன். 

தோளைக் குலுக்கிவிட்டு உள்ளே சென்றுவிட்டான். 

“இவன் மாறவே இல்லடா! கொஞ்சமாவது உறுத்துதா பாரேன் அவனுக்கு?” என்றான் ஜெகன் மதனின் தோளில் கைபோட்டு. 

“நாய் வால் மாம்ஸ். எப்பவும் நிமிராது! அவன் செஞ்சதை நெனச்சு என்னைக்கி ஃபீல் பண்ணியிருக்கான்” என்று‌ சொல்லிக்கொண்டே திரும்ப, அவனை முறைத்துப் பார்த்து நின்றிருந்தாள் மதனின் மாதங்கி. 

“இவ எதுக்கு இப்ப கண்ணகி அவதாரம் எடுத்திருக்கா” என்று யோசனையோடு பார்க்க,

“இப்ப அவர் தப்பிச்சுட்டு, உங்கள உள்ள இழுத்து விட்டுட்டாரு. நீங்க என்கிட்ட மாட்டிக்கிட்டீங்க. அப்படித்தானே?” உச்ச பட்ச கோபத்தில் கேட்க,

“இவ வேற… முன் கதைச்சுருக்கம் தெரியாம சீறுறாளே. வந்து ஒரு மணி நேரம் கூட ஆகல. அதுக்குள்ள ஏழரைய இழுத்து விட்டுட்டான்!” மதன் வாய் விட்டே புலம்ப, 

“எல்லாம் உங்கெரகம் மாப்ளே!” என்ற ஜெகனிடம்,‌

“இப்ப உங்களுக்கு சாலியா இருக்குமே!”

“பின்னே… நாமட்டுமே எத்தனை நாளைக்கி பொண்டாட்டிகிட்ட அடி வாங்குறது. கம்பெனிக்கு ஆள் வேண்டாமா?” எனக் கேட்க, வெடிச்சிரிப்பு தான் மச்சான்கள் இருவருக்கும்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top