“என்ன மாமா! பேசவிட்டு வேடிக்கை பாத்தீங்களா?”
மாம்ஸ் என்பது மாமா என திரிந்ததிலேயே அவன் கோபம் புரிந்தது ஜெகனுக்கு. உச்ச கோபத்தில் தான் மாமா வரும். இல்லையென்றால் மாம்ஸ் தான். அதுவும் பவித்ராவை திருமணம் செய்து கொண்டபிறகு வந்த மச்சானுக்குரிய மரியாதை.
“நரேன் வரும்போதே நெனச்சேன்டா. இவனுக்கு இங்க என்ன வேலைன்னு. அப்பவே உன் வேலையாத்தான் இருக்கும்னு தோணிச்சு. வீட்டுக்கு வாடா பேசிக்கலாம்!” ஜெகனும் கோபத்தை அடக்கிக் கொண்டு நிதானமாகவேதான் பதில் சொன்னான். தானும் கோபமாக பேசினால் இன்னும் எகிறுவான் எனத் தெரியும். கல்யாணத்தின் போது சாதாரணமாகப் பேசியவர்களையே துவைத்து தோரணம் கட்டினான்.
துக்க வீட்டில் இன்று அவர்கள் பேசியதெல்லாம் தெரிந்தால் செத்துப்போன தாத்தனுக்குத் துணையாக தட்கல்லையாவது புக் பண்ணி பேரன்களையும் வழியனுப்பி வைத்துவிடுவான்.
நரேனிடமும் சொல்ல வேண்டாம் என்று தான் சொல்லியனுப்பினான். ஆனால் இப்பொழுது ஃபோனில் எகிறுவதைப் பார்த்தால் அவனிடமும் பேசி உண்மையைக் கறந்துவிட்டான் எனத் தெரிந்தது. மாட்டுலருந்து, மனுஷன் வரைக்கும் அவன் பேச்சைத்தான் கேக்குறாங்க. மாமன் மகனுக்கு மனதிற்குள் மெச்சுதல் வேறு.
“வீட்ல இருக்கிறவங்க சொல்லலைனா என்ன? அதான் ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டியிருந்தானுங்களே?”
“துக்க வீட்ல வம்பு வேண்டாம்னுதான்டா பேசல. மாமாவும் அங்கவந்து யார் எது பேசினாலும் பதில் பேசக்கூடாதுன்னு இங்கேயே சொல்லிட்டாங்கடா.”
“பேசவேண்டிய எடத்துல பேசாம வீட்ல வச்சு என்னத்த மாமா பேசப்போறீங்க. என்ன வார்த்தை கேட்டிருக்கான். நான் இல்லாமப் போயிட்டேன்! வகுந்து கூறுபோட்டிருப்பேன்” அவன் கத்திய கத்தலில் இவனுக்கு இங்கே காது, “ங்ங்கொய்” என்றது.
“டேய்… அடிபட்ட நாய் குலைக்கத்தான்டா செய்யும். அதுக்குன்னு நாமும் குலைக்க முடியுமா?” என்ற
ஜெகனுக்கும் கழுத்தளவு கோபம்தான்.
துக்க வீட்டில் மல்லுக்கு நிற்பது அநாகரீகம். அவர்கள் வீம்புக்கென்றேதான் சீண்டிப் பார்க்கிறார்கள் எனத் தெரிகிறது.
ஒருவரது இறுதி ஊர்வலம் அமைதியாகச் செல்வதே இறந்தவருக்கு நாம் செய்யும் இறுதி மரியாதையென தனசேகரன், தங்கை மகனின் கையைக்கட்டிப் போட்டுவிட்டார்.
வேற்று ஆட்களும் இல்லை. எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. சீதாலட்சுமி கணவன் இறந்து, பிள்ளையோடு பிறந்த வீட்டிற்கு வந்துவிட்ட பிறகுதான், நல்லது, கெட்டதுக்குக் கூட, அவர்களும் அழைத்ததில்லை. இவர்களும் சென்றதில்லை. இவர்களது அம்மாவின் இறப்பிற்கு வந்து பிறந்த வீட்டுக்கோடி போட்டதோடு சரி. பத்து, பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது இரண்டு குடும்பங்களுக்கிடையில் போக்குவரத்தை நிறுத்தி. ஆனால் இது அப்படி விடமுடியாது. வாசுகி, சீதாலட்சுமிக்கு தாய்மாமன் என்பதையும் தாண்டி, சீதாலட்சுமிக்கு மாமனார் ஆயிற்றே. ஒதுக்கவும் முடியாது.
மதன் மறுவீட்டு விருந்து முடித்து, தோப்பிற்கு வந்ததற்கான மற்றொரு காரணம் அங்கு நடந்தவைகளை நரேனிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும் தான்.
வீட்டிற்குள் மனைவியோடு காலடி வைத்தவன் நேரே அழைத்துச் சென்றது பூஜை அறைக்குதான். அறை எப்பொழுதும் வெள்ளி, செவ்வாய் துடைத்து சுத்தமாக வைத்து விடுவார் சுப்பாத்தாள். முன்பொரு காலத்தில் இந்த வீடு எப்படி இருந்தது என நன்கு அறிந்தவராயிற்றே. சின்னவயதில் இருந்து இங்கு வேலை பார்ப்பதால் எல்லா அறைக்குள்ளும் செல்லும் சுதந்திரம் சுப்பாத்தாளுக்கு உண்டு.
தீப்பெட்டியை எடுத்து மாதங்கியிடம் கொடுக்க, வாங்கியவள் விளக்கை ஏற்றி வைத்தாள் புகுந்த வீட்டில் முதன் முறையாக. கண்மூடி சிலகணங்கள் வணங்கிவிட்டு, விபூதி எடுத்து பூசிக் கொண்டு இருவரும் வெளியே வர, சங்கர் இளநீரோடு உள்ளே வந்தான்.
வெளியே வந்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்டினாள். விசேஷமே நடத்தலாம் என்பது போலான பெரிய ஹால். ஹாலிலிருந்து மேலே இரண்டு பக்கமும் பிரிந்து ஏறும் வசந்த மாளிகை ஸ்டைல் மாடிப்படி. வாசலுக்கு நேர் எதிரில் கொம்போடு மான் தலை இரண்டு பக்கமும் சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது. முன்னோர்களின் ஆளுயர கருப்பு, வெள்ளை புகைப்படம் முதற்கொண்டு, படிப்படியாக முன்னேறி, இந்த தலைமுறையினரின் கல்யாண புகைப்படங்கள், பேரன்களின் தவழ்ந்த, நின்ற, சிறு வயதுப் படங்கள் என அனைத்தும் வண்ணப்படமாக சுவற்றில் இடம் பிடித்திருந்தது. மதன் மற்றும் இவன் பெற்றோரின் புகைப்படம் தவிர. அவர்கள் படம்தான் சந்தன மாலையோடு தனியே மாட்டப்பட்டிருந்ததே.
பார்த்துக் கொண்டு வந்தவளிடம், சங்கர் ஒரு இளநீரை கொடுத்துவிட்டு, மதனிடம் ஒன்றைக் கொடுத்தான்.
“நரேன் எங்கடா?”
“காரை நிப்பாட்டிட்டு வேலையிருக்குனு போயிட்டான்டா. ஏன்டா பங்கு?” என கேட்டவனிடம்,
“பேசணும்!” என்று மட்டும் சொன்னான்.
அவன் தான் இவன் வந்ததும் என்ன கேட்பான் எனத் தெரிந்து தானே இவன் கேட்கும் முன் வெளியே சென்றுவிட்டான்.
‘ஒருத்தன் சொன்னா அடிப்பான். இன்னொருத்தன் சொல்லலைனா அடிப்பான். நல்ல மாமன், மச்சான். இவனுகளுக்கிடையில குடும்பம் நடத்துறது ரொம்ப குஷ்ட்டமப்பா’ நரேனின் இன்றைய புலம்பல்.
நடந்ததை உள்ளபடி சொல்ல வேண்டும். சொன்னால் கோபத்தில் இவன் என்ன செய்வான் எனத் தெரியாது. அதானாலேயே காரை நிறுத்தியவுடன், கழன்று கொண்டான்.
இளநீரை கொடுத்து விட்டு, சங்கரும் வெளியே சென்று விட்டான்.
ஃபோட்டேக்களை பார்வையிட்டவள், “இதுல உங்க அப்பா, அம்மா ஃபேட்டோ எது?” என கேட்டாள்.
“ஏன்… மாமனார், மாமியாரைப் பாக்க அவ்வளவு ஆர்வமா?” என்றான் சிரிப்போடு. அவள் அமைதியாக இருக்க,
“அங்க இருக்கு பாரு!” என்றான். அவன் முகம் காட்டிய திசையில் திரும்பிப் பார்த்தாள். மாலை போடப்பட்டு இருந்தது. “உங்க அம்மா ரொம்ப அழகா இருக்காங்க. உங்க அப்பா உங்களமாதிரியே!” என்றவளிடம்,
“ம்கூம்… நான் தான் அவர் மாதிரி!” என்றான் ஃபேட்டோவையே பார்த்தபடி. அவன் முகம் மென்மை தாங்கியிருந்தது பெற்றவர்களின் நினைவில். வசதிக்குறைவு என்றாலும், மகன் மீது கொண்ட பாசத்தில் ஒரு போதும் குறை வைத்ததில்லை இருவரும். மனம் நிரம்பித்தளும்பிய காதலில் விளைந்த மகனல்லவா! இருவருக்குமே இளவரசன் தான்.
‘ம்மா… அப்பா…’ என்றவன் மனம் ஊமையாய் அரற்றியது உள்ளுக்குள்.
இறப்பு தேதி இருவருக்கும் ஒரே நாளாக இருப்பதைப் பார்த்தவள், “ஆக்சிடென்டா?” என்றாள்.
“ம்ம்ம்…” என்பது மட்டுமே அவனது பதிலாக வந்தது.
“எப்படி?” ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டே கேட்டவள், பதில் வராமல் போக, திரும்பிப் பார்த்தாள். அவன் முகம் கன்றிச் சிவந்திருந்தது. பெற்றோர்களைப் பற்றி கேட்டதற்கு ஏன் முகம் இப்படி மாறுகிறது என யோசிக்க, அவனது இறுகிய முகமே, இதைப் பற்றி பேசுவது பிடிக்கவில்லை என்பதை தெரிவித்தது.
அவள் இளநீரை கையிலேயே வைத்திருக்க, “குடி…” என்றான், அவன் முகத்தையே ஆராய்ந்தவளை, அதற்கு மேல் ஏதும் கேட்கும் முன்.
“இப்படியேவா?”
“இப்படியேவான்னா… ஏன் இளநீர் முன்ன பின்ன குடிச்சதில்லையா?” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.
“நாங்க ஒன்னும் ஆகாசத்துல இருந்து குதிச்சு வரல. நெல்லு எந்த மரத்துல வெளையுதுன்னு கேக்குற கிரின்ஞ் டைப் இல்ல. ஸ்ட்ரா மாதிரி, இல்லைனா டம்ப்ளர்ல ஊத்தி குடிச்சு தான் பழக்கம்” என்றால் படபடவென.
“இங்க அடுப்படியில டம்ப்ளர் இருக்கும். ஆனா, பலவருஷமா புழங்காத பாத்திரம். வேணும்னா கழுவி எடுத்து வரவா?” என்றான்.
“வேண்டாம்… இப்படியே குடிச்சுக்கிறேன்!” என்றவள் அப்படியே வாயோடு சாய்த்தாள். அண்ணார்ந்து அவள் சாய்த்த வேகத்தில், வாய்க்குள் சென்றதைவிட, கன்னம், கழுத்து வழியாக வழிந்ததுதான் அதிகம். குடித்த வேகத்தில் மூக்கில் ஏறி புரையேறியது.
“ஏய்ய்ய்.. இப்படியா குடிப்பாங்க?” என்றவன் வேகமாக வந்து தலையைத் தட்டினான். கழுத்துவழியாக வழிந்ததில் முன் புறம் முழுவதும் நனைந்துவிட்டது. இறுமியதில் கண்கள் கலங்கி விட்டது.
“கண்ணைத் துடை” என கர்ச்சீஃப் எடுத்துக் கொடுத்தான். இன்னும் விடாமல் இறுமல் தொடர, முதுகை நீவி விட்டான்.
கிட்டத்தட்ட அவளுக்கு முன் பக்கமாக நின்று கொண்டு தான் முதுகை நீவினான். அதுவே அணைத்தவாக்கில் இருக்க, இருவரது முகமும் மூச்சுக்காற்று உரசும் தூரத்தில். இன்று விடிந்ததில் இருந்தே மதனானந்தா சுவாமிகள் பரவச நிலையில்தான் சுற்றிக் கொண்டிருந்தார். இவ்வளவு அருகில் அவள் முகம் பார்த்த மதனானந்தா, இப்பொழுது சுற்றம் மறந்து மோனநிலை எய்திவிட்டார். அவளுக்கு இருமல் நின்றும் கை முதுகை விட்டு அகல மறுத்தது. அவளுக்குள் மெல்லிய நடுக்கம் பரவத் தொடங்கியது. போதும் என்று சொல்லக் கூட நா எழவில்லை.
பார்வை அவள் முகத்தை விட்டு விலக மறுக்க, காலை அவள் தன்மீது படர்ந்திருந்த கோலம் நினைவிற்கு வர, லோகட் ப்ளவுசில், வெற்று முதுகை நீவிய கை தன்னிச்சையாக அவளை முன்னோக்கி அணைத்து இழுத்தது.
கலங்கிய கண்களில் சடுதியில் கலக்கம் அப்பிக் கொள்ள, நுனி மூக்கு சிவந்து, இளநீர் வழிந்த ஈர உதடுகள் அவனுக்கு அழைப்பு விடுக்க,
‘மதனா… கையை எடுடா’ என்றான் அவனுக்குள்ளிருந்த நல்லவன் ஒருவன். அவனும் எடுக்கத்தான் நினைக்கிறான். முயற்சியும் செய்கிறான். ஆனால் நினைத்ததை செயல்படுத்த ஒத்துழைக்க மறுக்கிறது மூளை. முதுகில் காந்தம் போல் ஒட்டிக் கொண்டது கை.
‘நான் ஏன் எடுக்கணும். வேண்டுமானால் அவள் நகர்ந்து கொள்ளட்டும்!’ இதில் சட்டமாய் சால்சாப்பு வேறு.
நாணம் என்னை விட்டுச்சே
மோகம் என்னை தொட்டுச்சே
கையணைக்க கையணைக்க
கன்னி விழி பட்டுச்சே
காளை மனம் கெட்டுச்சே
மெய்யணைக்க மெய்யணைக்க
கள்ளோடும் முள்ளோடும்
தள்ளாடும் செம்பூவை நீயும் அள்ள
அம்மம்மா என்னென்ன ரசிச்சேன்
முன்னாலும் பின்னாலும் முத்தாடும்
இந்நேரம் மோகம் கொண்டு
அப்பப்பா தப்புக்கு தவிச்சேன்…
தோப்பில் வேலை செய்பவர்கள் கைபேசி வழியாக பாடல் கசிந்து காற்றோடு கலந்து வந்து தீ மூட்டிச் சென்றது.
அவனது கை வெம்மை முதுகில் பரவ, அவளுக்கும் நெஞ்சுக்குழி ஏறியிறங்கியது. அவனையே அண்ணார்ந்து பார்த்திருந்தாள். முன்னுச்சியில் அலையடிக்கும் கேசம் அவளுக்குள்ளும் அனல் மூட்டியது. அவன் கண்களில் தெரிந்த மயக்கம் அவளையும் மயக்கியது.
முதுகில் படர்ந்த கரத்தில் அழுத்தம் அதிகரிக்க, தன்னிலை மறந்து குனிந்தவன், மெத்தென்ற கன்னத்தில் கன்னம் வைத்தேவிட்டான். இளநீரின் தித்திப்பு உதடு முழுவதும் ஒட்டிக் கொள்ள, எறும்பாய் ஊர்வலம் தொடங்கியது கன்னத்தில். பஞ்சுப்பொதி மென்மையில் இன்னும் பித்துப்பிடிக்க, உணர்வுகள் தறிகெட்டுத் துள்ள, தன் பயணத்தை மூக்கின் நுனி தொட்டு, இதழ் நோக்கி முன்னேற்ற, தனக்குள் குமிழ் விட்ட உணர்ச்சி கொந்தளிப்பில் பெண்ணவள் கையிலிருந்த இளநீர் நழுவி, கீழே விழுந்து சிதறியதில் மதனானந்தா சுவாமிகள் சட்டென மோனம் கலைந்து தரையிறங்கினார்.
இப்பொழுதுதான் சுற்றம் உரைக்க, சட்டென அவனை நெஞ்சில் கைவைத்துத் தள்ளினாள்.
“இருந்தாலும் நீ ரொம்ப லேட்டும்மா! இதை தலையைத்தட்டும் போதே செஞ்சிறுக்கலாம். இல்லைனா இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு இளநியை கீழ போட்டிருக்கலாம்! சின்க்காகுற(sync) நேரத்துல எல்லாம் நான்சிங்காவே பண்ணிட்டிருக்க. எத்தனை இளநீர் குடிச்சா சூடு குறையுமோ தெரியல!” என்றவன் பிடரியை நீவிக்கொண்டு, ‘’ஊஃப்ப்” என கொள்ளன் துருத்தியாய் வெப்ப மூச்சை வெளியேற்ற, அவளுக்குள்ளும் அனல் அடித்தது.
அவன் இயல்பாய் கடந்து செல்ல, இவளுக்கு தான் அடுத்த அடி எடுத்து வைக்க முடியாமல் கால்கள் தள்ளாடியது. அவளது தள்ளாட்டத்தைப் பார்த்தவன், தோளோடு பிடித்து அழைத்து வந்து சோஃபாவில் அமரவைத்தான்.
அவள் தோள்களைப் பற்றியவாரே, காதோரம் குனிந்தவன், “இளநீரை இனிமே எப்பவும் இப்படியே குடி! வெரி ஸ்வீட்!” ரகசியமாக சொல்லிவிட்டு, நாக்கைச் சுழற்றி உதட்டை துடைத்தவன், ஜிமிக்கியை ஆட்காட்டி விரலால் சுண்டிவிட்டுச் செல்ல,
மின்னல் ஒருகோடி
எந்தன் உயிர் தேடி வந்ததே…
ஓஓ… லட்சம் பல லட்சம்
பூக்கள் ஒன்றாகப் பூத்ததே…
உன் வார்த்தை தேன் வார்த்ததே…
உணர்வுகள் மேலிட சிலையாய் சமைந்துவிட்டாள்.
“ஆத்தா! அவ உள்ளே தனியா இருக்கா… போங்க!” என்றான் வெளியே வந்தவன்.
தனியே இருந்தால் தெளிய மாட்டாள் என சுப்பாத்தாளை உள்ளே அனுப்பிவிட்டு, நரேனிற்கு ஃபோனில் அழைப்பு விடுத்துக்கொண்டே தேங்காய் உரிக்கும் இடத்திற்கு வந்தான்.
இவன் விடமாட்டான் எனத் தெரிந்தே, “வேலை பாக்குறவங்களுக்கு டீ வாங்கத்தான் பங்கு வந்தேன். இதோ வாங்கிட்டேன். வந்துர்றேன்” என்றவன் சிறிது நேரத்தில் டீயோடு வந்து சேர்ந்தான்.
*****
“மென்னு முழுங்காம முழுசாச் சொல்டா. உன்னைய அனுப்பி வச்சதே அதுக்குதான்!” இவனது கோபம் தெரிந்தவன் நடந்ததை பாதி மறைத்தும் மறைக்காமல் சொல்ல, அவனது முகமே காட்டிக்கொடுத்தது.
“அதுக்கில்லடா பங்கு… அவனுங்களுக்கு தங்கச்சிக்கி சொத்து கொடுக்கறதுல சுத்தமா இஷ்ட்டமில்லைனு தெரியுதுடா. ஏதேதோ பேசுனானுங்க. எங்க சித்தப்பாவுக்கு தான் பிறந்துச்சாங்கற அளவுக்கு…” என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் இழுக்க, கேட்டுக் கொண்டிருந்தவனுக்கும், கண்கள் சிவந்து, தாடை இறுகியது. வண்டியில் சாய்ந்து நின்றவனது கை ஹேன்டில் பாரை இறுக்கிப் பிடித்தது.
துக்க வீடு சென்றவர்கள், போட்டிருந்த சேர்களில் ஒரு ஓரமாகத்தான் அமர்ந்து கொண்டனர். அழுத பிள்ளையைத் தூக்கிக் கொண்டு, விளையாட்டு காட்டச் சென்றுவிட்டான் ஜெகன்.
பவித்ராவின் பெரியப்பாக்கள் இருவரும்தான் துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு கை கொடுக்க முன் நின்றனர். சம்பிரதாயமாக, தனசேகரனும், இடும்பனும் கை கொடுத்துவிட்டு வந்து, தங்கள் வீட்டுப் பெண்களோடு அமர்ந்து கொண்டனர்.
இவர்களுக்கு சற்று தள்ளிக்கிடந்த சேர்களில் பெரியப்பா மகன்கள் இருவரும், அவர்களது பரிவாரங்களுடன் வந்து அமர்ந்தனர். அவர்களுக்கும் ஜெகனைவிட சற்றுதான் வயது அதிகம். வயது முப்பதைத் தொடும்.
அவர்களது சிவந்த கண்களைப் பார்த்தாலே தெரிந்தது, தாத்தா இறந்த துக்கம் தாளாமல், துக்க நிவாரணி எடுத்திருப்பது. கல்யாண வீடானாலும், கருமாதி வீடானாலும் போதை என்பது தவிர்க்கமுடியாத சம்பிரதாயம் ஆகிவிட்டது இன்று.
“வாம்மா… தங்கச்சி” என்றான் இழவு வீட்டில் வரவேற்கக் கூடாது என்பது கூடத் தெரியாமல் பெரியவர் மகன்.
“யார்றா தங்கச்சி?” என்றான் சின்னவர் மகன்.
“ஏன்டா, பாத்தா தெரியலையா? நம்ம சித்தப்பா மக பவித்ராடா!”
“நம்ம சித்தப்பா சாடையே இல்லையேடா?” என்றதில், பவித்ரா, சீதாலட்சுமி இருவரது முகமும் ஒரு சேர கசங்க,
“நல்லா பார்றா! ஓடிப்போனவனோட மகனும், இவளும் ஒரு சாடை மாதிரி தெரியல?” என்றதில் தனசேகரும், இடும்பனுமே கோபத்தை கட்டுப்படுத்த வெகு பாடுபட்டார்கள்.
“என்ன மச்சான் இது?” அவர்கள் பேச்சை பொறுக்க மாட்டாமல் இடும்பன் வெகுண்டு எழ,
“பொடிப்பயலுக மாப்ளே! அவிங்களுக்கு சமமா நாமும் பேசமுடியாது? வீம்புக்குன்னே பேசுறானுங்க!” எழுந்தவரை கைபிடித்து இழுத்து அமரவைத்தார்.
“ஓ… நீ அப்படிச் சொல்றியா? அப்ப நம்ம எதுக்குடா சொத்து கொடுக்கணும்?” என்ற கெக்களிப்பு வேறு.
“ஏன்… நம்ம தனசேகர் சித்தப்பா கொடுக்கல. அவர்தானே, நம்ம சித்தியையும், தங்கச்சியையும் வச்சுக் காப்பாத்துறாரு” என்றவன் வச்சு என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்தான்.
அவர்கள் சொத்துதானே என, அக்கா சொத்தில் தங்கையை சமபங்குதாரராக தனசேகரன் சேர்த்துக் கொண்டதைத்தான் அவர்கள் கேலி பேசி குத்திக்காட்ட, அதற்கு மேலும் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியவில்லை, பெண்களால். ஆண்களுக்காகப் பார்த்துக் கொண்டு தங்கள் வாயை அடக்கி உட்கார்ந்திருந்தனர் பரிமளாவும், வாசுகியும். சீதாலட்சுமி எப்பொழுதும் போல வாயில்லாப் பூச்சி. அழமட்டும் தான் தெரியும்.
“எதுக்கு அழற… உம் புருஷன் கேட்க, கேட்க கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேயில்ல. அதான் கண்ட நாயெல்லாம் பேசுது.” அவர்களிடம் காட்ட முடியாத கோபத்தை தங்கை மீது திருப்பினார் வாசுகி.
“அவளை ஏன் பேசுற? அவ என்னைக்கி அதிர்ந்து பேசினா? பிறந்த வீட்லயும் அப்படித்தான். புகுந்த வீட்லயும் அப்படித்தான்.” பெரியநாயகி தம்பி மகளுக்கு பரிந்து பேசினார்.
“எல்லாம் இவ வாங்கி வந்த வரம்!” வாசுகி பொறுமித்தள்ளினார்.
“அப்படியும் இருக்குமோடா… கல்யாணத்துக்கு முன்ன ஒன்னு, கல்யாணத்துக்கு ஒன்னு, கல்யாணத்துக்குப் பின்ன ஒன்னுன்னு பாத்தாலும் அஞ்சுக்கு ரெண்டு குறையுதேடா. ஆனா பேரப்பாத்தியா?” சீதாலட்சுமியைத்தான், பாஞ்சாலியோடு ஒப்பிட்டு சாடை பேசினர்.
இதற்கு மேல் பொறுமையை இழுத்துப் பிடிக்க முடியவில்லை பரிமளத்தால்.
“இவிங்களுக்கு பொம்பளை கையால செருப்படி பட்டாத்தான் புத்தி வரும்” என வேகமாக எழ,
அவரை முந்திக் கொண்டு, அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டு பின்னால் நின்ற ஜெகன், வேகமாக பிள்ளையை பவித்ரா கையில் தள்ளியவன், போட்டிருந்த பிளாஸ்ட்டிக் சேர்களில் ஒன்றை எடுத்து, ஒருவன் முகத்தில் வீச, தாவாய் கிழிந்தது பேசிவனுக்கு.
அவனோடு இருந்தவர்களும் கோபமாக எழுந்து ஜெகனைத் தாக்கவர, ஓரமாக பார்த்துக் கொண்டு நின்றிருந்த நரேனும், ஜெகனோடு சேர்ந்து கொண்டான். கைக்குச் சிக்கியதை எடுத்து அடித்த இருவரது அடியும், கண்ணாபின்னாவென எங்கு படுகிறதெனத் தெரியாமல் விழ, அவர்கள் இருவரும் போதையில் இருக்க, எங்கே இவர்கள் அடியில் செத்துக்கித்து தொலைந்துவிடுவார்களோ என இவர்களைத்தான் பிடித்து இழுக்க வேண்டியதாய்ப் போயிற்று.
சித்தி என்ற உறவுக்கு மரியாதை கொடுக்க வேண்டாம். வயதிற்காவது மரியாதை கொடுத்திருக்க வேண்டாமா? அங்கு வைத்து அவர்கள் சீதாலட்சுமியைப் பேசியதை எல்லாம் கேட்டவனுக்கு முகம் கருத்து சிவந்துவிட்டது கோபத்தில்.
“அங்க விசாரிச்சேன் பங்கு. அவனுகளுக்கு இப்ப வயித்தவலி போல. சொத்தப் பிரிச்சா தான் விக்க முடியும் போலடா. அதுக்கு பவித்ரா கையெழுத்து வேணும். ஏற்கனவே சொத்துக்கு மேல கடன் போயிருச்சு போல. மேல்புறம் சொத்து பெரியவங்களுக்கு, கீழ்புறம் சொத்து சின்னவங்களுக்குனு பாத்து சொத்து பிரிச்சா, பவித்ரா அப்பா கடைசிங்கறதால, ரோட்டோரம் இருக்கறதெல்லாம் நம்ம தங்கச்சிக்கு வருது. அதுதான்டா பங்கு அவிங்களுக்கு காண்டாகுது. அதெல்லாம் நல்ல விலை போகும்ல!”
நரேன் சொல்லியதெல்லாம், கேட்டவன் அதே கோபத்தில்தான் உடனே ஜெகனுக்கு அழைத்து தன் கோபத்தைக் கொட்டினான்.
“அவனுங்கள இப்படியே விடக்கூடாது மாமா? என்ன பண்ணனும்னு எனக்குத் தெரியும்!” என்றான் தாவாயைத் தேய்த்தபடி.
“டேய்… எதுவாயிருந்தாலும் சொல்லிட்டுப் பண்ணுடா!” என்றான்.
“ஊருக்கே சொல்லிட்டுத்தான் பண்ணப் போறோம் மாம்ஸ்! வீட்டுக்கு வந்து பேசிக்கலாம்!” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தான்.
“இதைத்தான்டா நானும் சொன்னேன். வீட்டுக்கு வாடா பேசிக்கலாம்னு” என்று புலம்பியபடியே ஜெகனும் அலைபேசியை அணைத்தான்.
ஜெகனிடம் பேசிவிட்டுத் திரும்ப, சுப்பாத்தாளும், மாதங்கியும் வீட்டைவிட்டு வெளியே வந்தனர். சுப்பாத்தாள் முந்தானை கொண்டு கண்களைத் துடைத்துக் கொண்டே வந்தார்.
மாதங்கியின் பார்வையும் அவனை வாஞ்சையாய் வருடியபடியே வந்தாள். அவளது கண்களும் கலங்கி சிவந்திருப்பது போல் இருக்க, சுப்பாத்தாள் பிழியப் பிழிய தன் முன் கதைச் சுருக்கத்தை கூறியிருப்பார் என்பது திண்ணம் என்றது உள்மனம்.
அந்த பரிதாபப் பார்வையை பார்க்க விரும்பாமல் தானே அவனே பெற்றோர்களைப்பற்றி அவள் கேட்டதற்கு,சொல்லாமல் விட்டான்.
இவள் கண்களில் கோபம், பயம், கலக்கம், குழப்பம், பரிதாபம் கடந்து காதலைப் பார்ப்பது எப்பொழுதென மதனின் மனம் ஏங்க ஆரம்பித்தது.

Super super super
Welcome dear🥰 thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫