மதன மாளிகையில் 12

“சீக்கிரம் மாங்கல்யத்தை கட்டுங்கோ! இன்னும் நிறைய‌ ஜோடி நிக்கறா! முகூர்த்தம் முடியப் போறது. பொண்ணு மூஞ்சியவே பாத்தா எப்படி? அதான் வாழ்நாள் முழுக்க பாக்கப் போறேளே!” 

ஐயரின் பேச்சில் சுயம் பெற்றவன் வேகமாக தலையை உலுக்கிக் கொண்டான். பாராதிராஜா படத்தில் வருவது போல், ஆகாயம், கடல், காற்று, உயிரினங்கள் என சகலமும் சட்டென தன் இயக்கத்தை நிறுத்திவிட்டது போல் ஒரு‌ பிரமை. 

‘என்னடா மதனா பண்ணி வச்சுருக்க!’ அரண்டு போய் மீண்டும் பக்கத்தில் நின்றவள் மீது பார்வையைப் பதித்தான். ‘ப்ப்பா… என்னா பொண்ணுடா?’ அவன் வயதிற்கே உரிய ரசனை எட்டிப்பார்த்தது.  

அவனுக்கு மேல் அதிர்ச்சியில் மயக்கம் போடாத குறையாக, கண்கள் தெரித்து விழும் அளவிற்கு விழித்துப் பார்த்தாள்  பக்கத்தில் நின்றிருந்தவள். பயத்தில் முகம் வெளிறியிருப்பது அப்பட்டமாகத் தெரிந்தது. இருவரது கழுத்திலும் பூ மாலை. இவன் கழுத்தில் ஐயர் போட்டது. அவள் கழுத்தில் இவன் போட்டது. இமைக்கும் நொடிக்குள் நிகழ்ந்துவிட்டது. 

மூச்சு முட்டிய கூட்ட நெரிசலைவிட்டு வெளியேறினால் போதுமென, பக்கத்தில் யார் என்று கூடப் பார்க்காமல் பட்டென்று மாலையைப் போட்டுவிட்டு, பிரசாதத்திற்காக இடக்கை மீது, வலக்கை வைத்து நீட்ட, பிரசாதமாக உள்ளங்கையில் விழுந்தது என்னவோ ஈரமான புது மஞ்சள் தாலிக்கயிறு. அதைப் பார்த்தபிறகுதான் அதிர்ந்தவனாக, அருகில் யார் என பார்வையைப் திருப்பினான். 

எப்பொழுது கோவிலுக்கு வந்தாலும், பவித்ராவை வெறுப்பேற்றவேனும், ஐயர் கொடுக்கும் மாலையை முதலில் ஜெகன் கழுத்தில் இவனே போட்டுத்தான் பழக்கம். அதே பழக்கத்தில், இவன் கழுத்தில் மாலையை ஐயர் போட்டுவிட்டு, அடுத்த மாலையை பெண் கழுத்தில் போடச் சொல்லிக் கொடுக்க, இது நமக்கு வழமைதானே என, ஜெகன் என நினைத்து சரியாகத் தலையைக் கூடத் திருப்பாமல், பக்கவாட்டிலேயே மாலையைப் போட்டு விட்டான். போட்ட வேகத்தில், கையை பிரசாதத்திற்கு நீட்டி விட்டு, ஏதோ நெருட பட்டெனத் திரும்பிப் பார்த்தான். அதற்குள், தாலிக்கயிறு கையில் விழுந்திருந்தது. 

ஏற்கனவே யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பதட்டம் அவளுக்குள். கூட்ட நெரிசலில் வியர்த்து நிற்க, கழுத்தில் மாலை விழ பதட்டத்தில் தலை கிறுகிறுத்துவிட்டது. இத்தனை கூட்டம் இருக்குமென்று இவளும் எதிர்பார்க்கவில்லை. தெரிந்திருந்தால் வந்திருக்கவே மாட்டாள். அப்பாவிற்கு தெரியாமல் முதன் முதலாக வெளியே தோழிகளோடு, அதுவும் கோவிலுக்குதானே என்று வந்துவிட்டாள். கல்லூரியில் மூன்று நாட்களுக்கு கல்ச்சுரல்ஸ். இவர்கள் துறைக்கு நேற்றே முடிந்து விட்டது. இன்று வேறு துறை. இவர்களுக்கும் முக்கிய வகுப்புகள் எதுவும் நடக்காது. எனவே வெளியே எங்கேயாவது போகலாம் என மற்ற தோழிகள் திட்டம் வகுக்க, தன்னால் முடியாதென மறுத்துவிட்டாள். 

“இதுதான் மதி, நமக்கு லாஸ்ட் இயர். இனிமேல் இப்படியொரு சான்ஸ் கிடைக்காதுப்பா… இந்த வயசுல ஃப்ரென்ட்ஸ்களோட போகாம உங்க அப்பத்தா வயசுலயா போவ. படிப்பு முடிஞ்சதும் கல்யாணம், குடும்பம்னு கட்டிப் போட்டுருவாங்க மதி!” சர்ஃப், ஏரியல், டைட் எல்லாம் போட்டு சலவை செய்ய, அவளுக்கும் மனதினில் ஆசை துளிர்த்தது. பிள்ளையார்‌ போல் வீடே உலகமாகச் சுற்றும் அம்மாவின் நிலை நினைவிற்கு வந்தது. ஒரு நாள் தானே? அதுவும் கோவில் தானே? தோழிகளோடு போய்ப் பார்த்தால்தான் என்ன? துணிந்து வந்துவிட்டாள். 

வந்த பிறகுதான் தெரிந்தது, மற்ற இருவரும் அவர்களுடைய ஆட்களோடு ஊர் சுற்ற திட்டம் போட்டு வந்திருப்பது. அவர்கள் போதைக்கு இவளை  ஊறுகாயாகத் தொட்டுக் கொண்டனர். “மதியும் வர்றா!” என்றவுடன்‌ மற்றவர்கள் வீட்டில் மறுப்புச் சொல்லவில்லை. 

“வாசுதேவன் பொண்ணுகூடயா? அப்ப தாராளமா‌ போய்ட்டு வாங்க!” டபுள் ஓகே சொல்லிவிட்டனர். அவர் எப்படி பிள்ளைகளை வளர்க்கிறார் என்றுதான் எல்லாருக்கும்‌ தெரியுமே? கோவிலுக்குள் நுழைந்தது தான் தெரியும். அவரவர் ஜோடிகளோடு பிரிந்து விட்டனர். 

“ஹேய்ய்… தனியா விட்டுப் போகாதீங்க ப்பா!” என்றாள் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு. 

“இவ்வளவு கூட்டம் இருக்கு. நீயென்ன பச்சப்பிள்ளையா திருவிழாவுல தொலைஞ்சு போக! உங்கூட லாவண்யா இருக்கா.”

“அடிப்பாவிங்களா… உங்கள நம்பி வந்தேன் பாருங்க… என்னைச் சொல்லணும்!” 

“உன் கூடன்னு சொன்னதாலதான் எங்க வீட்லயே விட்டாங்க.”

“பொய் சொல்லிட்டு வந்த நீங்க எல்லாம் தைரியமாத்தான்டீ இருக்கீங்க? அம்மாகிட்ட உண்மையச் சொல்லிவிட்டு வந்த நான் தான் யார் கண்லயாவது பட்ருவோமோன்னு பயந்து சாகுறேன்! உயிர் போயி உயிர் வருது.” புலம்ப மாட்டாமல் புலம்பித் தவித்தாள். திரும்பித் திரும்பி வேறு பார்த்துக் கொண்டாள் முதல் முறையாகத் திருட வந்தவள்‌ போல. இவளே காட்டிக் கொடுத்து விடுவாள் போல. 

“நீங்க ரெண்டு பேரும் அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்க. அதனாலதான் உங்கள விட்டுப் போறோம். மார்னிங் ஷோ முடிஞ்சதும் நேரா கோவிலுக்குதான் வருவோம். எப்படி சேந்து வந்தோமோ அப்படியே சேந்து போயிறலாம்!” அவர்கள் திட்டம் தெளிவாகத்தான் இருந்தது. இவள்தான் தெரியாமல் தலையைக் கொடுத்து மாட்டிக்கொண்டாள். 

சும்மா வெறும் பேச்சு பேசி அப்பத்தாவை வெறுப்பேற்றுகிறோமே. ஒரு‌நாள் போய்‌ பார்த்தால் தான் என்ன என்ற அசட்டு‌த் துணிச்சல். 

எல்லாரும் இந்த வயதில் என்னென்னவோ செய்கிறார்கள். நாம் என்ன கோவிலுக்கு தானே போகிறோம். இந்த வயதில் இதெல்லாம் செய்யாமல் எந்த வயதில் செய்வது என்ற வேதாந்தம் வேறு தனக்குத் தானே‌ படித்துக் கொண்டாள். இத்தனைக்கும் அம்மாவிடம் ஒரு வாரமாக அனுமதி‌ கேட்கிறாள்.‌ நச்சியெடுத்து விட்டாள். போய்த்தொலை என பூங்கோதை அனுமதி தரும்வரை விடவில்லை. அதற்கே அவளுக்கு அவ்வளவு‌ ஆர்வம் உள்ளுக்குள். 

“வெளியே வந்துட்டு கால் பண்ணுங்க மதி!” என்ற உத்தரவோடு மாயமாய் மறைந்து விட்டனர் மற்ற இருவரும்.

இப்ப வீட்டுக்கும் போகமுடியாது. கல்லூரிக்கும் போக முடியாது. 

“வந்தது வந்தாச்சு. முருகனுக்கு ஒரு‌ கும்பிடப் போட்டு போவோம் வா!” வரிசையில் நின்றுவிட்டனர் இருவரும்.‌  

கேவிலுக்கு என்பதால், பட்டு பாவாடையும், தாவணியும், தலை நிறைய‌ பூவுமாக அனுப்பி‌ வைத்தார் பூங்கோதை. அது கொஞ்சம் சேலை மாதிரியும் தோற்றம் தரும் பாவாடை, தாவணி. பழைய மாடல் பட்டுப்புடவை என,‌ பீரோவில் சும்மா கிடந்த அவரது பட்டுச்சேலையைத் தான் மகளுக்கு தாவணி, பாவாடையாக உருமாற்றியிருந்தார். அதனால் சேலைக்கும், தாவணிக்கும் பெரிய வித்யாசம் தெரியவில்லை. கோவிலெங்கும் ஜனக்கூட்டம் என்றாலும், சந்தனம், திருநீரு, குங்குமம், பூ, மற்றும் பத்தி, சூடம் வாசனை கலந்து கட்டி, எங்கும் சுகந்தமாய் மணத்தது. பிரசாத பொங்கல் வாசனை வேறு நாசி தீண்டி நாக்கில் நீர்வர வைத்தது. 

“போகும்போது பொங்கல் வாங்கிட்டுப் போகணும் லாவண்யா!” 

உன் வாழ்க்கையே இன்னைக்கு பொங்கலோ பொங்கல் ஆகப்போகுது.‌ இதுல உனக்கு பொங்கல் கேட்குதோ? விதி கைகொட்டிச் சிரித்ததுவோ? 

வரிசை நகர, சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்த்தாள்‌. லாவண்யாவைக் காணவில்லை. கூட்டத்துள் எட்டிப் பார்த்தாள். பத்து பேர் தள்ளி அவள் தலை தெரிந்தது. அவளும் இவளைத்தான் தேடுவது தெரிய கையை உயர்த்தி காண்பித்தாள். “நீ போ, நான் வருகிறேன்!’ பதிலுக்கு கையசைத்து சாடை காட்டினாள். 

இவளும் வரிசையோடு நகர ஆரம்பித்தாள். 

ஈரோடு தண்டல் முருகன் கோவில். இன்று வளர்பிறை‌ முகூர்த்த நாள்.‌ கல்யாணக் கூட்டம் மூச்சு முட்டியது. 

யார், எந்தக் கல்யாணத்திற்கு வந்தோம் என்பதே தெரியாமல் கலந்துகட்டி நின்றனர். மணமக்களையே தேடித் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது. தாங்கள் வந்த திருமணம் இல்லை என்றால் கூட, யார் மணக்களாக இருந்தால் என்ன என, கைக்கு வந்த அட்சதையை‌ப் போட்டு வாழ்த்திச் சென்றனர்.‌ எங்கு திரும்பினாலும், மாலையும் கழுத்துமாக, கழுத்தில் புது மஞ்சள் தாலிச்சரடு மின்ன, கூட்ட நெரிசலில் தங்கள் ஜோடியவே தேடி அலையும் மணமக்கள். தங்கள் சொந்தங்களைத் தேடி அலையும் மணவீட்டார்.‌

போதாக்குறைக்கு இன்று ஏதோ ஒரு அரசியல்வாதி பரிகாரத்திற்கு செய்து வைக்கும், இருபத்தி ஐந்து ஜோடிகளுக்கான திருமணமும் அதே கோவிலில். எங்கு திரும்பினாலும் மாலையும், கழுத்துமாக மணமக்கள் காட்சிதான்.‌ 

“மாம்ஸ்…” என அழைத்து தனக்கு முன்னால் பேசிச் சென்றவனைப் பார்த்தாள். முதுகுதான் தெரிந்தது. ‘கோவிலுக்குள்ள வந்தும் ஃபோனா?’ அவன் தனியே பேசிச் செல்ல, ப்ளூடூத்தில் பேசிச் செல்வதாக நினைத்தாள். அவனோ பின்னால் ஜெகன் வருவதாக நினைத்து பேசியபடி சென்றான். 

இன்று ஜெகன், பவித்ரா திருமண நாள். இங்குதான் அவர்கள் திருமணமும் நடந்தது‌. அதனால் வருடா வருடம், இந்தக் கோவிலுக்கே வருவது வழக்கம். எப்பொழுதும் சிறப்பு பூஜைக்கும் சொல்லிவிடுவார் தனசேகரன். சிவகைலாசம், பெரியநாயகி குடும்பம், கோவில் கமிட்டியில் முக்கிய அங்கம் வகிக்கும் குடும்பம். அதனால் எப்பொழுது வந்தாலும், வழக்கமான மாலை மரியாதையோடு, பூரண கும்ப மரியாதையும் வழங்கப்படும்.

இந்த வருடம் முகூர்த்த நாள், மற்றும் கிருத்திகை என வந்து மாட்டிக் கொண்டனர். கூட்டத்தில் குழந்தை அழ, அவளை சமாதானப்படுத்த வெளி பிரகாரத்தில் பின்தங்கிய பவித்ராவை, பார்த்த ஜெகன், மனைவியோடு நின்றுகொண்டான். மதனையும் அழைக்கத் திரும்பிப் பார்த்தான். அதற்குள் உள் பிரகாரத்திற்குள் இருந்த கம்பி வரிசைக்குள்‌ மதன் நுழைந்து விட்டான். அவனை அழைக்க முடியவில்லை ஜெகனுக்கு.‌ 

பின்னால் ஜெகன் நிற்பதாக எண்ணிக் கொண்டு அவனும், சாமி முன் சென்று நிற்க, உள்ளிருந்த ஐயர்‌ இவனைக் கண்டு கொண்டு, இவன் கழுத்தில் போடச்சொல்லி, பிரசாதம் கொடுக்க, முன் நின்றிருந்த  ஐயரிடம் மாலையைக் கொடுத்தார். கூட்டம் அதிகம்‌ என்பதால், கோவில் ஐயர்கள் தவிர, வெளியிலிருந்தும் ஐயர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். அதாவது பயிற்சி ஐயர்கள் போல், இளவயதில் இருந்தனர்.

அவர்களுக்கு இவனைத் தெரியவில்லை. கற்பகிரகத்திற்குள் இருந்தவர் இரண்டு மாலையைக் கொடுத்து போடச் சொல்ல, இவனை ஒட்டி‌ நின்றவளைப் பார்த்த ஐயர், அடுத்த திருமண ஜோடி என நினைத்துக் கொண்டார். பெரியநாயகியும் ஜெகனோடு சேர்த்து, மதனையும் வேட்டி, சட்டையென மாப்பிள்ளை கோலத்தில் தான் அனுப்பியிருந்தார். 

இவன் கழுத்தில் ஐயரே போட்டுவிட்டு, பக்கத்தில் போடும்படி மாலையைக் கொடுக்க, மாமன் என நினைத்து சரியாகக் கூடத் திரும்பாமல், பக்கவாட்டிலேயே, வேகமாக கழுத்தில் போட்டுவிட்டு, பிரசாதத்திற்கு கையேந்த, அவரோ தாலிக்கயிற்றை உள்ளங்கையில் வைத்தார். அப்பொழுதுதான் அதிர்ந்து பக்கத்தில் திரும்பி பார்த்தான். பட்டுப் பாவாடை, தாவணியில் வந்திருந்தாள்.

இப்பொழுதும் கூட்டம் தள்ளியது. 

அப்படியொரு கல்யாணக் கூட்டம் அந்த இடமெங்கும். 

கூட்டத்தில் திரும்பி அங்குமிங்கும் பார்வையை அலைய விட்டான். தெரிந்த தலைகளிலெல்லாம் ஜெகனும், பவித்ராவும் தென்படவேயில்லை. கூட்டத்திற்குள் பவித்ராவும், குழந்தையும் சிக்கி கொள்ள, அவர்களுடன் அவன் எப்பொழுதோ பின்தங்கிவிட்டிருந்தான். 

“இன்னும் யாரைத் தேடுறேள்? கூட்டத்துக்குள்ள சொந்தக்காரவா வர்றதெல்லாம் ஆகாத காரியம். நல்ல நேரத்துல தாலியைக் கட்டிட்டு, வெளியே போய் தேடுங்கோ!” என்ற பிறகுதான், தன் கையில் இருந்த மஞ்சள் கயிற்றை, அவசரமாகத் தட்டிலேயே மீண்டும் போட்டான். 

“என்னாச்சு? திருட்டுக் கல்யாணமா? தாவணி பாவாடையில இருக்கறப்பவே நெனச்சேன். இல்ல… இருபத்தி அஞ்சுல ஒன்னா? கணக்குக்கு கூட்டியாந்தாளா? அந்தக் கல்யாணமெல்லாம் ஒட்டுக்கா நடக்கும். மண்டபத்துக்கு போங்கோ.” ஐயர்‌ பாட்டுக்கு தன் கற்பனை சிறகை விரிக்க, கூட்டத்தில் சட்டென விலகிச் செல்லவும் முடியவில்லை இருவருக்கும். இன்னும் ஒட்டி உரசி‌ நிற்க வேண்டியிருந்தது. 

அந்த மஞ்சள் கயிற்றுக்கான திருமண ஜோடியும் வந்துவிட்டது. அந்தக் கூட்டத்தில் ஒரு ஜோடி கண்கள் இவளை கண்டு கொண்டது. அவளது தெருவில் வசிப்பவர். உறவினர் திருமணத்திற்கு வந்திருந்தார். நெருக்கமாகத் தோளை உரசிக் கொண்டு மாலையும், கழுத்துமாக மதனும், மாதங்கியும். 

கூட்டத்தில் அவளை யாரோ தள்ளிவிட, விழாமல் இருக்க, கை அனிச்சையாய் அவன் சட்டையை‌ முதுகுப் புறமாகப் பற்றியது.  தடுமாறியவளை, சட்டென அவனும் தோளோடு அணைக்க வேண்டியதாயிற்று. 

தோளைக் குலுக்கி, கையைத் தட்டிவிட்டாள். தாவணி வேறு கூட்டத்திற்குள் எங்கே உருவிக் கொள்ளுமோ எனப் பயமுறுத்தியது.‌ கண்கள் கலங்கிவிட்டது. 

அவளது கலங்கிய முகத்தைப் பார்த்தவன், 

கூட்டத்தில் இரு கை கொடுத்து ஊடுறுவி, எப்படியோ அவளை வெளிபிரகாரம் அழைத்து வந்துவிட்டான். வந்த பின்புதான் இழுத்து மூச்சே விட்டாள். வேகமாக கழுத்தில்‌ கிடந்த மாலையைக் கழட்டி, குப்பைத் தொட்டியில் எரியப் போனவள், என்ன நினைத்தாளோ, அங்கிருந்த தூண் அருகே வைத்துவிட்டு வேகமாக அகன்றுவிட்டாள். 

படிகளில் தடதடத்த நெஞ்சோடு ஓட்டமும் நடையுமாக இறங்க, அவள் தலை மறையும் வரை, அவளையே தான் பார்த்து நின்றான். முதுகில் பார்வை துளைக்க, சட்டென நின்று திரும்பிப் பார்த்தாள். மங்கையவள் பார்வை பொசுக்கியது மாலையிட்டவனை. கோபத்தில் சிவந்த முகம் பச்சை குத்தியது போல் பச்சக்கென ஒட்டிக் கொண்டது மன்னவன் மனதில். 

அவள் அப்படி திரும்பி நின்று பார்க்கவும், சட்டென புருவம் உயர்த்தி என்ன என்று கேட்டான். பட்டெனத் திரும்பிக் கொண்டாள். ஏனோ அவனையும் மீறி இதழ்களில் இதமாய் புன்னகை அரும்பியது.

இவளை அடையாளம் கண்ட பிறகு, வாசுதேவன் மகள்தானா என்ற சந்தேகத்தில் அவளையே பின் தொடர்ந்த நாரதமுனிக்கு இது அத்தனையும் தெள்ளத்தெளிவாக காட்சியாகியது. இவர்கள் இருவரது செய்கையும், பார்வை பரிமாற்றங்களும் அவருக்கும் சுவாரஸ்யம் கூட்டியது. எவ்வளவு பெரிய சங்கதி இது. யாருக்கா இருந்தாலும் ஒரு ஆர்வம் உள்ளுக்குள் கரைபுரளும் தானே. அவருக்குள்ளும் கரை புரண்டது. 

சின்ன பிள்ளைல ஒரு விளையாட்டு விளையாடுவோம். நினைவிருக்கா? பிள்ளைகள் ஒன்று சேர்ந்து காதுக்குள்ள ஒரு பெயர்‌ சொல்லி, அடுத்தடுத்து பத்து பிள்ளைகள் கடந்து வரும்‌ போது அந்தப் பெயரே மாற்றம் பெற்று வரும். அதே போலத்தான், திருமணத்திற்கு வந்தவர், பந்தியைக் கூட எதிர்பார்க்காமல், வீட்டிற்கு வந்தவுடன் அவர்  மனைவியிடம் சொல்ல, மனைவி அக்கம்பக்கம் சொல்ல, கண், காது, மூக்கு வைத்து வாசுதேவன் காதுக்கு ஒரே நாளில் வந்து சேர்ந்துவிட்டது. 

வாசுதேவன் மகள் யாருக்கும் தெரியாம, கோவில்ல வச்சுக் கல்யாணம்‌ முடிச்சுட்டாளாம்.‌ 

சோலி முடிஞ்ச்! 

“மதீஈஈஈ” வீட்டிற்குள் வரும் பொழுதே கர்ஜனையோடு தான் வந்தார். காரை உள்ளே கூட ஏற்றவில்லை. தெருவிலேயே நிறுத்தியிருந்தார். வந்த வேகத்தில் சாப்பாட்டுப் பையும், அலுவலகப் பையும் மூலைக்கொன்றாகப் பறந்தன. கை இடுப்பு வாரை உருவியது. 

“இன்னைக்கி எங்க போன?” கேட்ட அடுத்த நொடி,

சப்த நாடியும் அடங்கி விட்டது மாதங்கிக்கு. 

வார்த்தைகள் தந்தியடிக்க, பல்லுக்கிடையில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டது. 

தொண்டையைவிட்டு சத்தம் எழாமல், “காலேஜ்க்கு…” சொல்லி முடிக்கவில்லை கன்னம் பழுத்துவிட்டது. அவர் அடியைத் தாங்கும் சக்தி இல்லை. ஏற்கனவே கோவிலில் நடந்த சம்பவத்தில், யாராவது பார்த்திருப்பார்களோ என தனக்குள் உழன்று கொண்டிருந்தவள், ஒரே அடியில் தொய்ந்து விழுந்து விட்டாள். மகளை தாங்கிப் பிடிக்க வந்தார் பூங்கோதை.

“பெண்ணை வளர்க்கும் லட்சணம் இதுதானா?” பூங்கோதைக்கு தண்டனை பெல்ட்டால் விலாசப்பட்டது.

“யார்‌ அவன்?” என்ற கேள்வியில் விக்கித்துப் போனாள். கல்லூரி செல்லாமல் கோவில் போனதுதான் தெரிந்திருக்கிறது என்றுதான் நினைத்திருந்தாள். வழக்கமான அடியோடு முடிந்துவிடும் என மனதைத் தேற்றி வைத்திருந்தாள். 

“எவ்ளோ தைரியம் இருந்தா கல்யாணம்‌ வரை போயிருப்ப? யாரு… எந்த ஊரு?” எனக்கேட்க, 

“எனக்குத் தெரியாதுப்பா!” என்று நடந்ததை அழுகையோடு திக்கித் திணறி எவ்வளவோ சொல்லியும் நம்பும்‌ நிலையில் இல்லை. இது மாதிரி கண்முன் எத்தனை பார்க்கிறார். மகளை‌‌ மட்டும் நம்பி விடுவாரா என்ன? 

அடுத்து வீட்டில் நடந்ததெல்லாம் வழக்கமான அவசரகாலப் பிரகடணங்கள். முதல் வேலையாக இவளிடமிருந்த ஃபோன் பறிக்கப்பட்டது. படிப்பு தடை‌ செய்யப்பட்டது. தரகருக்கு தகவல் சொல்லப்பட்டது. படிப்பு முடியும் முன் ஏன் என்ற கேள்விக்கு சாதகம் சாதகமாக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. மகளின் அழுகை, உண்ணாவிரதம் எல்லாம் நாட்டு மக்களின் கோரிக்கை மனு மாதிரி, கண்டு கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டது. படிப்பை மட்டுமாவது முடித்துக் கொள்கிறேன் என்ற வேண்டுதல் தள்ளுபடி செய்யப்பட்டது. 

இத்தனை பட்டதுகளுக்கு நடுவில், கோவிலில் வைத்து மாலை போட்டவன் கையாலேயே மாதங்கி கழுத்தில் தாலி முடிக்கப்பட்டது! 

விதி வாசுதேவனைப் பார்த்து வாய் பொத்தி சிரித்தது.‌

*****

வாழ்நாளில் அப்படி ஒரு சிரிப்பு அவன் சிரித்ததே இல்லை எனும்படி வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான். விடாமல் சிரித்தான். கண்களில் முத்துக் கோர்த்துவிட்டது‌. கன்னக் கதுப்பு, காது மடல் கூட சிவந்து விட்டது.

விழுந்து விழுந்து சிரித்தானோ இல்லையோ கட்டிலில், தலையணையை இறுக்கிப் பிடித்துக்கொண்டு, உருண்டு பிரண்டு அடக்கமாட்டாமல் சிரித்தான். 

கைகளை மார்பின் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவனையே கொலை வெறியோடு பார்த்து நின்றாள். கோவிலில் அன்று பார்த்த அதே பொசுக்கும் பார்வை. 

முதலில் மொத்தக் கதையும் கேட்டவனுக்கு, தன்னால் ஒரு‌ பெண்ணின் படிப்பு பாதியில் நின்றதோடில்லாமல், விருப்பமே‌ இல்லாமல் திருமணம் வேறு நிகழ்ந்து விட்டதே என்ற குற்றவுணர்வு தான் எழுந்தது. அவளுக்கும் எவ்வளவு அவமானமும், அசிங்கமும் எல்லார் முன்னும். இப்படி எல்லாமா நடக்கும் என்று அவனால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியவில்லை. தனக்குத் துளியும் சம்பந்தமில்லை. ஆனால், எல்லாம் இவனால்தான் எனும்படியிருந்தது. 

அன்று, அவள் தலை மறையும் வரை, பார்த்து நிற்க, “இங்க என்னடா பண்ற?” தோளில் கைவிழ‌ திரும்பிப் பார்த்தான். 

ஜெகனும், பவித்ராவும் நின்றிருந்தனர். ஜெகன் தோளில் தூங்கும் சஷ்ட்டிகா. 

“சாமி கும்பிடப் போகலயா?”

“எங்க… குட்டிம்மா கூட்டத்துல ஒரே அழுகை. அழுதே டயர்டாகித் தூங்கிட்டா. அதான் நீ போயிட்டு வந்துட்டல்ல! பிரசாதம் எங்கடா?” குங்குமம், திருநீறாவுது இட்டுக் கொள்வோம் எனக் கேட்க, அவன் எங்கே அதை வாங்கினான். அதற்கு கை நீட்டப்‌ போய்தானே தாலிக் கயிறு வந்து விழுந்தது. 

அவனது அமைதியைப் பார்த்த

ஜெகன், “கூட்டத்துக்குள்ள நீயும் வாங்கலியா? சரி… வா! வீட்டுக்கு வந்துரும்!” என்றான். 

அவள்‌ தூண் அருகே வைத்துவிட்டுச் சென்ற‌ மாலையை அப்படியே விட்டு வர மனதில்லை. தன் கழுத்தில் கிடந்த மாலையை கழட்டியவன், அதையும் எடுத்து இரண்டையும் சேர்த்து இடக்கையில் போட்டுக் கொண்டான்.‌ அதன் பிறகு அவன் கனவில் கூட அந்த சம்பவம் நினைவிற்கு வரவில்லை.‌ 

நடந்ததை முழுதாகக் கேட்டவன், “நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன். நடந்ததை எல்லாம் சொல்றேன்!” என்றான் உண்மையான வருத்தத்தோடு.

அதற்கு அவன்‌ மனைவியாகப்பட்டவள், எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், முத்தாய்ப்பாக ஒன்று சொன்னாளே, அதைக் கேட்டவனுக்கு தான் பொங்கிய சிரிப்பை அடக்க முடியவில்லை. அவளை சங்கடப் படுத்தும் எனத் தெரிந்தும் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. 

“எம் பொழப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்குல்ல?” சற்று முன் அவன் கேட்ட அதே கேள்வி தான். இப்பொழுது இவள் கேட்கிறாள். 

“ரியலி சாரி…” இப்பொழுதும் பொங்கும் சிரிப்போடு தான் மன்னிப்பும் கேட்டான். அவளைப் பார்க்க பாவமாகவும் இருந்தது. இவன் சிரிக்க, சிரிக்க அவளுக்கும் கண்கள் கலங்கிவிட்டது. அன்று அவள் அப்பா முன் எவ்வளவு அவமானப்பட்டு நின்றாள்.‌ 

“சாரி…” என்றான் மீண்டும் சிரமப்பட்டு கட்டுக்குள் வந்து. 

“உங்கப்பாகிட்ட நான் பேசுறேன். அன்னைக்கி மாமா பக்கத்துல நிக்கிறார்னு நெனச்சுதான், திரும்பிக் கூடப் பாக்காம போட்டேன். அவரும் நான் மாலைபோட வந்தா டக்குனு தலை குனிஞ்சு வாங்கிப்பாரு! அதனால்தான் திரும்பிக் கூடப் பாக்கல!” உண்மையாகவே அவன் குரலில்  வருத்தத்தோடு விளக்கம் கொடுத்தான். வாசுதேவனிடம் பேசுவதாகச் சொன்னான்.‌

“பேசிப் பிரயோஜனமில்லை” என்றாள் விரக்தியாக.

“ஏன்… சம்பந்தப்பட்டவன் நான்தானே… நான் சொன்னாக்கூட நம்பமாட்டாரா?”

“உங்க அண்ணன் மாப்பிள்ளையா வந்திருந்தா நம்பியிருக்க வாய்ப்பிருக்கு. ஆனா… இப்ப நம்பமாட்டார்!” என்றவளை புருவம் சுருக்கிப் பார்த்தான். 

“அவனுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

“அவருக்கு சம்பந்தமில்லைதான். ஆனா, அவர் வராததுல சம்பந்தம் இருக்கு.”

“இருக்கு… ஆனா இல்லைனு குழப்புற!” 

“இதெல்லாம் நீங்களும், நானும் சேந்து, எங்க அப்பாவை ஏமாத்தப் போட்ட ப்ளான் அப்படிங்கறது அவரோட எண்ணம்!”

புரியாமல் சில கணங்கள் யோசித்தவன், பளிச்சென முகம் மின்ன,

“வர்ரே வாவ்… அதாவது அவனுக்கு பொண்ணுப் பாக்குற மாதிரி பாத்து, உன்னைப் பொண்ணுப் பாக்க வச்சுருக்கேன். அதனால தான், அவன் பொண்ணு பாக்க வரல. நிச்சயம் பண்ணவும் வரல. கல்யாணத்துக்கும் வரல. அதனால சப்ஸ்டியூடா வர்ற மாதிரி நானே வந்திருக்கேன். இது நாம போட்ட திட்டம்‌! அப்படித்தானே?” 

“ம்ம்ம்…” என்றவள் குரலில் அத்தனை வலி. 

ஆனால், இதைக் கேட்டவனுக்கு தான் இவ்வளவு நேரமாக இருந்த குற்றவுணர்வு மறைந்து அடக்கமாட்டாத சிரிப்பு.

கண்டிப்பாக வெளியே வரை கேட்டிருக்கும் இவனது சிரிப்பு சத்தம். 

தண்ணீர் குடிக்க எழுந்து வந்த ஜெகதாம்பாளுக்கும் கேட்டது. 

“வீட்ல இன்னொரு வயசுப் பொண்ணு இருக்குங்கற நெனப்பிருக்கா பாரு! எல்லாம் அவன் எண்ணம்பிரகாரம் நடத்திக்கிட்ட கெக்களிப்பு!” அவர் பாட்டிற்கு புலம்ப, அங்கு அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவன் காதிலும் இவரது புலம்பல் விழுந்தது. பட்டென டீவியை அணைத்துவிட்டு எழுந்துவிட்டார். 

“ஆக மொத்தம் ஒரு பச்சப்புள்ள‌ வாழ்க்கையில உங்க இஷ்ட்டத்துக்கு விளையாடியிருக்கீங்க?” கை விரல்களை கோர்த்துப் பிரித்துக் கொண்டே கேட்டான்.‌

“யாரு‌ நாங்களா?”

“இல்லையா பின்ன? நாம் பாட்டுக்கு என் தோப்புண்டு, துரவுண்டு, தேங்காய் உண்டுன்னு சூசுவான்னு இருந்தேன். எனக்கே தெரியாம என் வாழ்க்கையில இவ்வளவு பெரிய திரைக்கதை எழுதி, அதுல அவனை வேற சைலன்ட் கேரக்டராக்கியிருக்கீங்க. மெயின் கேரக்டரே‌ அவன் தான்ங்கறது தெரியல? நான் கூட உங்கப்பா மொறச்சுட்டே திரியவும், அவர் பாத்த மாப்பிள்ளை‌ நாம இல்ல. அதனால பிடிக்கலையோன்னு நெனச்சேன். இப்ப தானே முழு‌ விபரம் தெரியுது” என்றான் விளையாட்டுத் தனத்தை விடுத்து. 

“அப்போ, உண்மையச் சொன்னாலும் நம்பப் போறதில்ல?”

“ம்ம்ப்ப்ச்ச்… ம்ம்ப்ப்ச்ச்” என்றாள் கண்களை மூடித் திறந்து, இடவலமாகத் தலையாட்டி. 

“இப்ப உன் ஃபோன் எங்க?”

“அப்பாகிட்டதான் இருக்கு! ஏன் கேக்குறீங்க” என்றாள்.

தன் ஃபோனை எடுத்தவன், அவளது அலைபேசி எண்ணைக் கேட்டான்.

“எதுக்கு?”

“நம்பரையாவது சொல்லு! இல்லைனா அதுக்கும் ஒரு நாள்‌ மொக்கை வாங்கப் போறேன்” அலுத்த குரலில் சொல்ல அவளுக்கும் சிரிப்பு வந்துவிட்டது. அவளையும் அறியாமல் சிரித்து விட்டாள். நிமிர்ந்து முகம் பார்க்க, கைவைத்து மறைத்துக் கொண்டாள்.‌

“சிரிப்பு ஒன்னும் கொலைக் குத்தமில்ல. தாராளமா‌ சிரிக்கலாம்!” கைபேசியின் தொடுதிரையில் விரல்களை நடமாடவிட்டுக் கொண்டே, நக்கல் கலந்து சொன்னவனிடம்,  கோபம் மறந்து சிரித்தாள்.

“நம்பர்… நம்பர்…” கண்களை மட்டும் உயர்த்தி இருமுறை கேட்க, தனது கைபேசி எண்ணைச் சொன்னாள். 

அதை தனது கைபேசியில் சேகரித்து, வாட்சப்பில் இணைத்தான். உடனே‌ ஒரு குறுஞ்செய்தி அவளது அலைபேசிக்கு அனுப்பி வைத்தான். 

“என்ன பண்றீங்க?” நின்ற இடத்திலிருந்தே எட்டிப் பார்க்க, “நீயே பார்!” என உட்கார்ந்த படியே‌ அவளிடமே‌ கொடுத்தான். 

அவன் அனுப்பிய செய்தியைப் படித்தவள், “ஆத்தீ! என்ன இப்படி பண்ணிட்டீங்க. அதுவும் இமேஜோட!” அரண்டுபோய் நெஞ்சில் கைவைத்து விட்டாள். 

“எப்படியும் நம்பப் போறதில்லைல… அப்படியே மெயின்டெய்ன் பண்ணுவோம்!” என்றானே பார்க்கலாம், மெய்மறந்து வாய் தன்னால் திறந்து கொண்டது. 

“ஷாக்க குறை… இனிமே ஷாக்காக வேண்டியது என்னோட மாமனார் தான்.‌ 

“இப்பவாவது என் பேரு தெரியுமா?” அதிமுக்கிய கேள்விக்கு இப்பொழுதுதான் வந்தாள்.‌

“அதான் ஃப்ரேம் போட்டு மாட்டி வச்சுருக்கியே. என் பேருக்குள்ளதான் உன் பேரு இருக்கு. உன் பேருக்குள்ளதான் என்‌ பேரு இருக்கு” என்றவனை புரியாமல் பார்க்க, 

கட்டிலைவிட்டு எழுந்து வந்தான். மேஜை‌ மீது பென் ஸ்டான்டில் இருந்த மார்க்கரை எடுத்து மாதங்கி பெயரில் இருந்த எழுத்துகளில் (Madhan)ki மதன் எனும் எழுத்துக்களை மட்டும் அடைப்புக் குறிக்குள் இட்டான்.‌ அதே போல் அவனது ‌பெயரை ஆங்கிலத்தில் எழுதி (Madhanki)lash எனும் பெயரில் மாதங்கியை மட்டும் அடைப்புக் குறிக்குள் இட்டுக் காண்பித்தான். ஒருவருக்குள் ஒருவர் அடக்கம் என்பது போல் அடைப்புக் குறியிட்டுக்காட்ட, வினாக்குறியிட்டவள் புருவங்களில் அப்பட்டமாக வியப்புக்குறி. 

எப்படி என்பது போல், ஒற்றைப் புருவம் உயர்த்தி அமர்த்தலாகக் கேட்க, மதி முகமெங்கும்‌ செம்மைக் குறி. 

“பெயரைப் பார்த்ததும் தோணிச்சு. வந்ததும் இந்த ரூம்க்கு கூட்டி வந்திருந்தா, ஊருக்கே வெளிச்சம் போடுற அளவுக்கு உன் தங்கச்சிகிட்ட பல்பு வாங்கியிருக்க மாட்டேன்” என்றான், மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்து தலையணை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு. அடிபட்ட கால் வலிக்குமென அவன் கட்டிலில் அமர்ந்திருக்க, எதிர்ப்புறம் இருந்த மேஜை மீது அவள் சாய்ந்து நின்றுதான் இவ்வளவு நேரமும்‌ பேசிக் கொண்டிருந்தனர். 

“சாரி…” என்றாள்‌‌ மீண்டுமொருமுறை வருத்தம் தோய்ந்த குரலில்.

“ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சாரி கேட்டுட்டே இருக்கப் போறோமா? தூங்குற ஐடியா‌ இல்லையா?” 

அவன் கேட்டவுடன் தான், இவ்வளவு நேரமாக இருந்த இளக்கம் மறைந்து, புருவ முடிச்சில் படபடப்பு ‌வந்து ஒட்டிக்கொண்டது பெண்மைக்கே உரிய இயல்பில். 

‘எங்கே படுப்பது? அவன் ஏற்கனவே கட்டிலில் தான் அமர்ந்திருக்கிறான்.‌ கீழே இறங்கச் சொன்னால் மரியாதை இல்லை. காலில் வேறு அடிபட்டிருக்க, கீழே படுத்து,‌ பழக்கமில்லாத அறையில் எது எங்கே இருக்கிறது எனத் தெரியாமல் மீண்டும் தட்டிக் கொண்டால், வேற வினையே‌ வேண்டாம். அவங்க வீட்ல அவங்க தானே கீழ படுத்தாங்க. அப்ப, நம்ம வீட்ல நாம கீழபடுக்கறதுதானே நியாயம்.‌’ நடுவிரல் நகம் வாயில் அரைபட, தலையணை‌மீது விரல்களைக் கோர்த்து, முழங்கை ஊன்றியபடி, நொடிக்கொருதரம் மாறும் மதி வதனத்தின் வர்ணஜாலங்களை ரசித்துக் கொண்டிருந்தான் புன்னகை சிந்தும் முகத்தோடு.‌ அவனுக்கு மட்டும் அவளிடம் நாளுக்கு நாள் சுவாரஸ்யம் கூடிக்கொண்டேதான் போகிறது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top