மதன மாளிகையில் 11

11

“நல்லா தான் சிரியேன். அதை ஏன்‌ அடக்குற. அதான் எல்லாரும் நல்லா சிரிச்சாங்களே! எம்‌ பொழப்பு‌ உனக்கு சிரிப்பா இருக்குல்ல.” இடுப்பில் கையூன்றிக் கொண்டு கோபமாக கேட்டவன் குரலில் அத்தனை ஆயாசமும், அலுப்பும்.

“சாரி…” என்றாள்‌ உண்மையான வருத்தத்தோடு. ஏனோ அவனை அப்படிப் பார்க்கவும் பிடிக்கவில்லை. 

“பாக்கறப்போ எல்லாம் முகத்தை திருப்பிக்கிட்டா பேரை எங்க கேட்டுத் தெரிஞ்சுக்கறது? இதுல அப்பத்தா பேத்தினு கூப்பிடறாங்க. பவி, நங்கையானு, மாமா அதுக்கு மேல சிஸ்டர்னு பாசமலர வளக்குறாங்க. சித்திக்கு எல்லாருமே கண்ணு தான். யாராவது நம்ம வீட்ல உன்னை பேர்‌ சொல்லி கூப்பிட்டாங்களா? இங்க என்னடான்னா, உங்க அம்மா  ராகினின்னு கூப்பிட்டா நீ வந்து நிக்கிற! அப்ப அதுதானே உன் பேருன்னு‌ நினைக்கத் தோணும்!” என்று கோபமாகக் கேட்க அவன் கேட்டதில் இருந்த நியாயம் பிடிபட்டது. கூடவே நம்ம வீடு என உரிமை‌யாக கோடிட்டுக் காட்டியதும் தெரிந்தது. 

“உன் தங்கச்சியக் கூப்பிட்டா, உன்னைய யாரு வெளியே வரச் சொன்னது!” 

“எங்க அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணலாமேனு வந்தேன். என் பேரு கூடவா உங்களுக்குத் தெரியாது?” என்றவளுக்கு எத்தனை மறைத்தும் கன்னக் கதுப்புகள் சிரிப்பில் துடிப்பதை அடக்க முடியவில்லை. மூக்கைத் தேய்ப்பது போல் கைவைத்து மறைத்துக் கொண்டாள். வாய் விட்டு சிரித்தால் எங்கே அவனது கோபம் இன்னும் அதிகமாகி விடுமோ என்ற பயம் உள்ளுக்குள். பயத்தையும் மீறி, மறு வீடு வந்ததில் இருந்து தம்பி, தங்கையிடம் இவன் வாங்கிய பல்புகளை நினைக்கையில் பொங்கும் சிரிப்பை அடக்க வெகு பாடுபட்டாள். 

இங்கு வந்ததிலிருந்து அவனைத் தனியே விட்டதும் அவளது தவறு தானே? முன்ன பின்ன தெரியாதவர்களாக இருந்தால் கூட வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்று அவர்கள் தேவையை கவனிப்பது தானே மரியாதை.‌ நியாயம் கூட. இவனுக்கோ வீடும், வீட்டில் இருப்பவர்களும் புதிது. அவன் பேச்சுத் துணைக்கு தோதான மச்சானும்‌ கிடையாது. அப்ப நாமதானே கவனித்திருக்க வேண்டும். 

அங்கே இவளைத் தனியாக விட்டுப் போனாலும், பவி, அம்மத்தா, சீதாலட்சுமி என அனைவரும் இவளை‌ கவனித்துக் கொண்டார்கள்‌தானே. ஆனால் நாம் இங்கு என்ன செய்தோம்.

கட்டாயப் படுத்தி கல்யாணம் செய்து வைத்தது அப்பாவுடைய தவறு. அதற்கும் இவனுக்கும் சம்பந்தமே இல்லை. கோவிலில் நடந்தது வேண்டுமானால் இவன் தவறாக இருக்கலாம். அது இவனுக்கு நினைவிருக்கா என்று கூடத் தெரியாது. இந்தக் கல்யாணத்தைப் பொறுத்தவரை நம் நிலமை எதுவோ, அதுவே தான் அவனுக்கும். அவனையும் குடும்பம், கௌரவம் என கட்டாயப் படுத்தி தானே அழைத்து வந்திருப்பார்கள். இதில் இவனை நொந்து என்னவாகப் போகிறது. அவளுக்குள் விவாதம் நடத்திக் கொண்டிருக்க, 

“ஸ்ஸ்ப்ப்பஸ்ஸ்.” சத்தம் கேட்டு சிந்தை கலைந்தவள் பார்த்தது, மீண்டும் மேஜையில் காலில் தட்டியிருந்ததைத் தான். 

“பட்ட கால்லயே படும்கறது சரியாத்தான் இருக்கு.” என்றவளும் குனிந்து பார்க்க, காயத்தின் மீதே பட்டதினால் இரத்தம் வடிந்தது. 

“அப்படியே உக்காருங்க!” என்றவள் வேகமாக கைபிடித்து இழுத்து வந்து கட்டிலில் அமரவைத்துவிட்டே வெளியே வந்தாள்.‌

“ம்மா… காயத்துக்குப் போடற ஆய்ன்மென்ட் எங்கருக்கு?”

“யாருக்கு மதி காயம்?”

“உங்க மருமகனுக்கு தான்!” 

“என்ன காயம். எப்படி ஆச்சு. அசால்ட்டா சொல்ற?”

“ம்மா… ம்மா… பதறாதீங்க.‌ ரிலாக்ஸ்… சின்ன காயம் தான். அவங்களே கண்டுக்கல. நானே தான் மருந்து போடலாமேனு கேட்டேன்.‌ கால் விரல்ல நகம் பேந்திருக்கு.” படபடத்த அம்மாவை அலட்டிக் கொள்ளாமல் ஆசுவாசப் படுத்தினாள்.‌ 

“எதுக்கெடுத்தாலும் ஹைப்பராகிட்டு!” என்ற‌ மகளை  சிரிப்போடு பார்த்தார். 

“என்னம்மா!” 

“வந்ததும் காஃபி கொடுக்கச் சொன்னதுக்கு என்ன சொன்ன? உங்கள மாதிரி என்னையும்‌ ட்யூன் பண்ணாதீங்கனு‌ சொல்லல? இப்ப நீ என்ன பண்ற? ம்ம்ம்…” முகம் விரிந்த புன்னகையோடு மகளை‌ கிண்டல் செய்ய,

“அது வேறம்மா. நாதா… சுவாமின்னு… காலடியில உக்காந்து என்னால சேவகம் பண்ணமுடியாது. பதிவிரதைப் பட்டமெல்லாம் எனக்கு வேண்டாம். ஆனா இது மனிதாபிமானம், அடிபட்டவருக்கு செய்ற சின்ன உதவி. அவங்க கூடத்தான் நான் சொல்லாமலே வயித்த வலிக்கு மாத்திரை வாங்கி வந்தாங்கல்ல. அது மாதிரிதான் இதுவும்!” என்ற‌ மகளை ஒரு‌ கணம் ஆழ்ந்து பார்த்தார். வெறும்‌ பேச்சு தான். அடிபட்டவுடன் இயல்பான பதட்டம் மகள்‌ முகத்தில் தெரிந்தது. மகளே‌ உணராதது. பெற்றவளுக்குப் புரிந்தது. மகள் தான் தன் கண்களுக்கு பட்டை கட்டி வைத்திருக்கிறாளே. அந்த மாயத்திரை விலகினால் தான் அவளையே அவள்‌ புரிந்து கொள்வாள். 

“இதுக்கு பேருதான் பரஸ்பர அன்பு மதி. நம்மைச் சார்ந்தவங்க தேவைகளைப் பாத்துப் பாத்து கவனிக்கறது சேவகமில்லை. உங்களோட தேவைகள் என்னென்னன்னு பாத்துப் பாத்து வளக்கலையா? பொறந்தவுடனே நீங்களே உங்க தேவைகளைப் பாத்துக்கிட்டீங்களா? உங்க அப்பாவோட கண்ணோட்டத்துலேயே எல்லா ஆண்களையும் பார்க்காதே மதி! உங்கப்பா மாதிரி ஒரு சிலர் தான். நிமித்த முடியாத குணம்.” மகளின் எண்ணவோட்டம் புரிந்தவராய் கண்டிப்போடு மகளுக்கு விளக்க முயற்சித்தார். 

“ஆமாம்மா… பரஸ்பர அன்புங்கறது ரெண்டு பக்கம் இருந்தும் வரணும். ஒரு கை ஓசையா இருக்கக் கூடாது. நீங்க தானே சொல்வீங்க… முன்‌ கை நீண்டாத்தானே முழங்கை நீளும்னு.” 

“அன்பு எதையும் எதிர்பார்க்காது மதி!”

“ஹன்ட்ரட் பெர்சன்ட் கரெக்ட் மா. அதே மாதிரி தான், வெறுப்பும் எதையும் எதிர்பார்க்காதும்மா!” என்ற மகளை இருபது வருடங்களுக்கு முன் தன்னையே பார்ப்பது போல் இருந்தது பூங்கோதைக்கு. இது மாதிரி பதிலுக்குப் பதில் பேசி கல்லூரி நாட்களில் எத்தனை விவாதங்களை நடத்தியிருப்பார் மேடையேறி. எல்லாம் கைதட்டல்களோடும், சான்றிதழ்களோடு முடிந்து விட்டது. ஏட்டுச் சுரைக்காய். கறிக்கு உதவாது. மேடைப் பேச்சு வாழ்க்கைக்கு உதவாது. அனுபவத்தில் கண்டு கொண்டது.

மனதில் எதிர்பார்ப்புகளை விதைத்துவிட்டு, ஏமாற்றத்தை அறுவடை செய்வதைவிட, மனதை தரிசாக விட்டு விடுவதே மேல் என எல்லாம் கடந்த நிலைக்கு எப்பொழுதோ வந்துவிட்டார் பூங்கோதை. அதனாலேயே வாசுதேவன் செய்வது எதுவும் பொருட்டாகவே படுவதில்லை பூங்கோதைக்கு. 

இதெல்லாம் மேடைப் பேச்சுக்கு தான் லாயக்கு. நிதர்சனம் வேறு என்பது எப்படி மகளுக்கு புரிய வைப்பது. அவள் சொல்வதில் தப்பேதும் இல்லையே! 

அவள் எப்பொழுதும் சொல்வது தான். “உங்கள மாதிரி நான் இருக்க மாட்டேன் மா. எனக்கு கல்யாணமே‌ வேண்டாம்” என்பதுதான் மாதங்கியின் எண்ணமாகவே இருந்தது. 

நோ மேரேஜ்… நோ வொர்ரிஸ் என்பாள். அவளுக்கு அடிமனதில் குடும்ப வாழ்க்கையில் மீது ஒரு வெறுப்புத்தட்டிவிட்டது. கணவன், குடும்பம், குழந்தைகள் எல்லாம் நம்மை சுதந்திரமாக இயங்கவிடாமல் கட்டிப்போடும் மாயச் சங்கிலி என்பாள்.

“விவேக் சார் கூட ஒரு‌ படத்துல சொல்வாரேக்கா… ஒரு கப் காஃபிக்ககாக எஸ்ட்டேட்டவே வாங்கி மெய்ன்டெய்ன் பண்ணக்கூடாதுன்னு. அந்த மாதிரியா? அதுக்கு நீ இங்க பொறந்திருக்கக் கூடாதுக்கா. இந்தியா இன்னும் அந்தளவுக்கு முன்னேறல. இல்லைனா நீ இன்னும் பல வருஷங்கள் பின்தங்கிப் பிறந்திருக்கணும்.” ராகினி அக்காவை கேலி செய்வாள். 

ஏதோ சிறு பிள்ளைகள் பேச்சு என்று‌‌ எண்ணியிருக்க, மகள் இப்படியிருப்பது, தன்னால் தானோ என்ற எண்ணம் பூங்கோதைக்கும் உள்ளுக்குள் நெருடியது. இப்போழுது மகளின் நடவடிக்கைகள் பெற்றவருக்கு பயத்தை உண்டு பண்ணியது.‌ 

அதற்கு இவர்கள் வந்தவுடன் நடந்த சம்பவமும் ஒரு சாட்சியாக மனதை அரித்துக் கொண்டிருந்தது.

திருமணமாகி மூன்று நாட்களாகியும், தாலி கட்டியவன் மனைவியின் பெயர்‌ கூடத் தெரிந்து கொள்ளவில்லை என்றால் பெற்றவள் மனம் பதறாதா?

“பாத்துக்கோ கோதை… மூனு நாளாச்சு… இன்னும் உன்‌ மருமகனுக்கு பொண்டாட்டி பேரு கூடத் தெரியல. ஏற்கனவே மாப்பிள்ளை மாறிப்போச்சு. அவருக்கு மதியப் பிடிக்கலையோ என்னவோ?” குழம்பிய குளத்தில் பூங்கோதையின் அண்ணி கல்லெறிந்து விட்டு சென்றிருக்க, உண்மையில் தவித்து தான் போனார் மகளின் எதிர்காலத்தை நினைத்து. 

“மூனு நாள் ‌தானே அண்ணி ஆகுது…” சமாளிப்பாக பதில் கூற, 

“புதுசுக்கு வெளுக்காதவனா போகப் போக வெளுக்கப்போறான். புத்திமதி சொல்லி அனுப்பு. இந்தக் காலத்துப் பிள்ளைக சறுக்குனா கோர்ட் வாசல்ல போய் நிக்குதுங்க! நானும் வந்ததுலருந்து பாத்துட்டு தானே இருந்தேன். அந்தத் தம்பி என்னமோ வந்ததுலருந்து தனியா வெளிய உக்காந்திருக்கு. அக்காவுக்கும், தங்கச்சிக்கும் உள்ளாற அப்படி என்ன பேச்சு.” அக்கறை என்ற பெயரில் பூங்கோதை அடி வயிற்றை‌ கலங்கடித்தார் அண்ணியார்.‌ 

இதில் ஜெகதாம்பாள் பங்கிற்கும், “உன் நங்கையாவுக்கு பிள்ளைகள எங்க வைக்கோணும்னு சொல்லிக் கொடுத்துட்டுப் போ! பொட்டச்சிகளுக்கு எடம் கொடுத்தா தலையில ஏறி உக்காருவாளுக. இவ நடந்துக்கறதப் பாத்தா மூனா நாளே அப்பன் வீட்டுக்கு வந்துருவா போல!” என்று பேச, சொந்த பந்தங்கள் உதவி என்ற பெயரில் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும் என எண்ணும் அளவிற்கு இருந்தது இருவரது பேச்சும்.‌ பூங்கோதை பல்லைக் கடித்து நின்றிருக்க,

“அந்தக் கவலையே‌ உங்களுக்கு வேண்டாம் அப்பத்தா! எங்க அம்மா எங்கள நல்லா தான் வளத்திருக்காங்க. நீங்க இதை உங்க மகளுக்கு சொல்லி வளக்கல போலியே. சுகந்தி அத்தை மாமாகிட்ட கோவிச்சுட்டு வந்து வருஷத்துல பாதி நாள் இங்கதானே இருப்பாங்க. விகாஸ் மாமா வளந்த பின்னாடி‌தான இங்க வர்றதில்ல.” அடுப்படியில் நின்று இவர்கள் பேசிக் கொண்டிருக்க, பின்னால் வந்தவள் அம்மாவின் முகம் சுண்டியதைப் பார்த்து, அப்பத்தாவிற்கு பதில் கொடுத்தாள். 

“பாரு… பெரியவங்கனு மரியாதை தெரியுதா? இவ நல்லதுக்கு தானே சொன்னேன்.‌ இப்படிப் போன எடத்துலயும் சட்டு சட்டுனு எடுத்தெரிஞ்சு பேசினா, என்ன வளர்ப்புனு‌ உன்னத்தான் பேசுவாங்க!” 

“எங்களுக்கு எது நல்லதுன்னு எங்கம்மாவுக்கு தெரியும். அப்பத்தா” என்றாள்.

ஜெகதாம்பாள் பேசப் பேச, எல்லார் முன்னும் ராகினி என அழைத்தவன் மீது ஆத்திரம் ஊற்றாகப் பெருக்கெடுத்தது மாதங்கிக்கு. அதெப்படி பெயர் தெரியாமல் போகும். கல்யாணப் பத்திரிக்கை கூடப் பாத்திருக்கவில்லையா? என பொங்கித் தீர்த்தாள் உள்ளுக்குள். 

அவனும்தான் என்ன செய்வான். 

அவளது அத்தையும், மாமாவும் சொல்லிக் கொண்டு கிளம்ப காத்திருக்க, அக்காவும், தங்கையும் அறையை விட்டு வெளியே வருவதாகத் தெரியவில்லை. 

‘அப்படியென்ன, புருஷன் இங்கே தனியாக உட்கார்ந்திருக்க, உள்ளே இருவருக்கும் பேச்சு’ என முகம் சுளித்தார் அத்தை. அதை அவளது மாமாவிடமும் மெதுவாகக் கூற, இவன் காதில் நன்றாகவே விழுந்தது. அவர்கள் பார்வையில் தங்களது திருமணம், வேண்டா வெறுப்பாக நடந்த திருமணம் போல் தோற்றம் எழுவதை அவன் விரும்பவில்லை. திருமணம் நடந்த சூழல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இனி‌யும் அதை விமர்சனத்திற்கு உள்ளாக்குவதில் அவனுக்கு உடன்பாடில்லை. 

புதிதாக கல்யாணம் ஆனவர்கள் என்றால் ஒட்டிக் கொண்டேதான் இருப்பார்கள் என்பது அவர்கள் எண்ணம். வந்தவுடன் அறைக்குள் சென்றவள்,‌ என்ன, ஏது என்று கூட கண்டு கொள்ளவில்லை என்றால் அவர்களும‌ என்னதான் நினைப்பார்கள். காஃபி கொண்டு வந்து கொடுத்தவள், இவனும் பழக்கமில்லையென மறுத்துவிட, அத்தைக்கும், மாமாவிற்கும் கொடுத்தவள், வேறெதுவும் வேண்டுமா என்று கூடக் கேட்கவில்லை.‌ மீண்டும் அறைக்குள் சென்று தங்கை, தம்பியோடு ஐக்கியமாகிவிட்டாள்.‌ 

நாமாவது அவளை வெளியே கூப்பிடுவோமே என்ற நல்லெண்ணத்தில், பெயர் சொல்லி அழைக்க, இரண்டாவது அழைப்பில் தான் ராகினி வெளியே வந்தாள். 

“என்னங்க மாமா? ஏதாவது வேணுமா?” கேட்டுக் கொண்டே அருகில் வந்து நின்றவளை ஏறிட்டுப் பார்த்தான். பின்னால் அவள் வருகிறாளா என தலை சாய்த்துப் பார்த்தான். 

புருவம் முடிச்சிட, “நீ எங்க வர்ற. உன் அக்கா எங்க?” என்றான்.

“என்னைத்தானே மாமா கூப்பிட்டீங்க? அதான் நான் வந்தேன்!” என்றாள் அவளும் புரியாமல். அவனுக்கும் தான் புரியவில்லை. இவர்கள் அத்தை வேறு சிரிப்பை அடக்குவது தெரிந்தது. இவனுக்கு முகம் கன்றி விட்டது. முயன்று அடக்கிக் கொண்டான்.

கொளுந்தியாள் பக்கம் குனிந்து, “உங்க அக்கா பேரு தானே ராகினி?” என்று வேறு பல்லிடுக்கில் ரகசியமாகக் கேட்க, 

“என்னாது… அக்கா பேரு கூடத் தெரியாதா?” சத்தமாகவே கேட்டு, அங்கு அமர்ந்திருந்த அப்பாவைத் திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் மகள். 

இவங்கதான் யாருக்கும் தெரியாம, லவ் பண்ணி, திருட்டுக் கல்யாணம் பண்ணப் போன ஜோடி என்பது போல் பார்த்தாள். வாசுதேவனுக்கு உலக மகா நடிப்புடா சாமி எனத்தான் தோன்றியது.‌ தன்னைப் போலத்தானே மற்றவர்களையும் எண்ணத் தோன்றும். 

அதற்குள் மாதங்கியும் வெளியே வர, 

“வா மதி… உன்ற வீட்டுக்காரருக்கு உன் பேரு கூடத் தெரியல!” அத்தை மேலும் சிரித்துவைக்க இவனுக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது. 

கிளம்பும் பொழுது அடுப்படி வந்து அறிவுரை என்ற பெயரில் பூங்கோதையிடம் வளவளத்து செல்ல, எல்லாவற்றையும் சேர்த்து வைத்து மகளைத்தான் பிடித்துக் கொண்டார். “எல்லாம் உன்னாலதான். வீட்டுக்கு வந்தவங்க யாரா இருந்தாலும் அவங்களைத் தானே முதல்ல கவனிக்கணும். நீ உன் வேலைய ஒழுங்கா செஞ்சிருந்தா ஏன் இவங்க எல்லாம் பேசப் போறாங்க‌.” என்று பேச தன் தவறு புரிந்தது அவளுக்கும்‌. 

அதன் பிறகு சாப்பிடும் வேளையிலும், மற்ற நேரத்திலும் அவன் கூடவே இருந்தாள். 

மதிய விருந்து முடிந்திருந்தது. வழமையான மறுவீட்டு விருந்து மாப்பிள்ளைக்கு, அசைவத்தில் அத்தனை வகைகளும் சாப்பாட்டு மேஜையை நிறைத்திருந்தன. அவர்கள் வீட்டு வழமைக்கே காரசாரமாக இருந்தது. இவனுக்கு முகமே சிவந்து விட்டது சாப்பிட்டு முடிப்பதற்குள். 

“அக்கா… மாமவப் பாரு… எப்படி சிவந்து போயிட்டாங்க. உனக்கு கூட முகம் இப்படி சிவக்காது போ!” பரிமாறிய தங்கையின் கிண்டலில் தான் அருகில் இருந்தவனை திரும்பிப்‌ பார்த்தாள். இன்று தான் இருவரும் ஒன்றாக அமர்ந்து உணவு‌ உண்கின்றனர்.‌ பூங்கோதை உத்தரவு. தனியே விட்டுச் செல்லக் கூடாதென்பது. அதுவுமில்லாமல் மறுவீட்டு விருந்து, மணமக்கள் சேர்ந்து தானே அமரவேண்டும். 

“என்னாச்சு!” என்றாள் அவன்‌ பக்கமாக குனிந்து. 

“ஒன்னுமில்ல… கொஞ்சம் காரம்!” என்றான் மூக்கை உறிஞ்சியபடி.‌ இதுவா என்பது போல் பார்த்தாள். அப்பொழுதுதான் அங்கும், வீட்டில் எல்லாமே காரம் குறைவாக இருந்தது நினைவிற்கு வந்தது. 

சாப்பிட்டு முடிக்க சற்று நேரத்திற்கெல்லாம்‌ வயிறு எரிய‌ ஆரம்பித்தது, அவனுக்கு காரம் பழக்கமில்லை என்பதால். வயிற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனாலும் பேரனுக்கு காரம் ஆகாதென சிறுவயதில் இருந்தே அப்படியே‌ பழக்கிவிட்டார்‌ பெரியநாயகி. வெளியே சென்று இளநீர் குடித்து வருவோம் என கிளம்பினான். தனியே செல்வானேன் என்று மச்சானையும் தூக்கிக் கொண்டான். வந்தவுடன் அவனிடம்‌ செல்ல மிரண்டவன், அவன் வாங்கி வந்த ஸ்வீட் பாக்ஸ், சாக்லேட்டை அவனிடம் கொடுத்து, இழுத்து வைத்துப் பேச, சிறுபிள்ளை தானே சட்டென ஒட்டிக்கொண்டான். 

மதியம் தூங்கிப் பழக்கமில்லை என்பதால், சும்மா உட்கார்ந்திருக்கவும் முடியவில்லை. வெளியே சென்று வரலாம் என கிளம்பி விட்டான். வீட்டில் கார் தான் இருந்தது. டூவீலர் இல்லை. 

பக்கம் தானே என மச்சானை கைபிடித்து நடக்க ஆரம்பித்தான். ஆட்டோ ஒன்று வர, கைகாட்டி ஏறிக்கொண்டான். சற்று தூரம் சென்றதும் நரேனுக்கு ஃபோனில் அழைத்து, தோப்பில் நின்ற அவனது வண்டியை கருங்கல்பாளையம் எடுத்து வரச் சொன்னான். 

வரும் வழியெங்கும் அவனது கண்ணில் தட்டுப்பட்ட சுவரொட்டிகள் சொல்லியது, பெரியப்பா மற்றும் சித்தியின் முகமாற்றத்திற்கான காரணத்தை. ஏன் தன்னை அவசரமாக கிளப்பினார்கள் என்பதும். இறந்தவர் ஒரு காலத்தில் ஈரோடு வட்டாரத்தில் பெரிய குடுமியாயிற்றே. அவர் மரணத்தை சுத்துப்பட்டு முழுவதும் போஸ்ட்டர் அடித்து ஒட்டியிருந்தனர். 

அவனுக்கு இளநீரும், மச்சானுக்கு ஐஸ் க்ரீமும் வாங்கிக் கொண்டு, மரநிழலில் நின்றிருக்க, நரேன் வண்டி எடுத்து வந்துவிட்டான். வண்டியை வாங்கிக் கொண்டு அவனை பஸ்ஸில் போகச் சொன்னான். 

“அதானே… ஆட்டோவுக்கா காசு கொடுத்துறப் போற? ஆனா மச்சானுக்கு மட்டும் ஐஸ்க்ரீம்!”

“சின்னப் பய திங்கறதப் பாக்குற. பஸ் ஏறிப்போ. ஆனா, தோப்புக்கு இல்ல!” என்றவன் அவன் சொன்ன இடத்தை கேட்டவனுக்கு முகம் யோசனையில் சுருங்கியது. 

“ஏன்டா மதன்! அங்க எதுக்கு?” என்றான்

“அங்க நடக்கறது அப்படியே என் காதுக்கு வரணும். வீட்ல யாரும் சொல்ல மாட்டாங்கனுதான் உன்னை அனுப்பறேன். நீயும் மறைக்கணும்னு நெனச்ச தோலுரிச்சுப்புடுவேன்!” 

“சரிடா… நீ மச்சானைக் கவனி… வரட்டுமா மச்சான்ஸ்!” என அவனுக்கும் ஒரு வணக்கத்தை வைத்தான். 

அவன் செல்லவும், மச்சானை வண்டியில் முன்னால் உட்கார வைக்க அவனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. இதுவரை காரில் தான் சென்றிருக்கிறான். வண்டியைப் பார்த்ததும் ஏகபோக குஷி அவனிடம். சந்தோஷமாக வண்டியில் ஊரைச்சுற்றினார்கள் மாமனும் மச்சானும். 

“மதி… அவங்க ரெண்டு பேரும் வெளியே போயி, ரொம்ப நேரமாச்சு. கால் பண்ணி எங்க இருக்காங்கனு கேளு!” மகன் தூங்குவானே. தூங்குபவனைத் தூக்கிக் கொண்டு மருமகன், சிரமப் படுகிறாரோ என்னவோ என் மாமியார் கவலையில் கேட்க, 

“எனக்கு அவங்க ஃபோன் நம்பர் தெரியாதேம்மா!” என்ற மகளை யோசனையாகப் பார்த்தார் வாசுதேவன். 

*****

“இவ்ளோ ப்ரைஸ் வாங்கியிருக்க. படிப்ஸ்தான் போலயே. அப்பறமும் ஏன் படிக்கல?” என்றவனை ஒரு கணம் நின்று, நிதானமாக ஏறிட்டுப் பார்த்தாள். அவள் வாங்கியிருந்த சான்றிதழ்களும், மெடல்களும், கோப்பைகளும் அலமாரியையும், சுவற்றையும் அலங்கரித்திருந்தன.

அவளது வீடு. அவளது அறை என்பதால் இயல்பாக இருந்தாள் மாதங்கி.

அவனது கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனையே பார்த்து நிற்க, “என்ன பார்வை. கேட்டா பதில் சொல்லணும்!” என்றான். 

“அதுக்குள்ளதான் எனக்கு, இந்த காதல் கருமாந்திரம் எல்லாம் வந்திருச்சே! அப்பறம்‌ எங்க படிக்கறது.” அலட்டிக் கொள்ளாமல் அவள் சொல்ல, என்ன என்பது போல் அதிர்ந்து பார்த்தான். ஆனாலும் நம்பாத பார்வை பார்க்க,‌

“நம்புங்க பாஸ். திருட்டுத் தனமா கல்யாணம்‌ பண்ண முடிவு பண்ணி,‌ கையும் களவுமா மாட்டிக்கிட்டேன். படிச்சது போதும்னு உடனே மாப்பிள்ளை பாத்து கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டாங்க!” எந்தவித மேற்பூச்சும் இல்லாமல் அவள் வெளிப்படையான பதிலில் குழப்பம் தான் மிஞ்சியது அவனுக்கு. உண்மையாகவே காலித்திருந்தாலும், இரண்டு நாட்களில் எந்தப் பெண்ணும் இப்படி வெளிப்படையாக கட்டியவனிடம் ஒத்துக் கொள்ளமாட்டால்‌. அதுவும் தன்னால் முன் வந்து.‌ 

மருந்தை எடுத்து வந்திருந்தாள். கூடவே சுடு தண்ணீரும். காயத்தைக் கழுவ.‌ பாத் ரூமில் வைத்து கழுவி வந்தவனுக்கு, அவளே மருந்தையும் போட்டும் விட்டாள். 

ஏற்கனவே இன்னொருத்தனுக்கு நிச்சயம் செய்தவள் என்ற எண்ணமே நெருடிக் கொண்டிருக்க, இப்பொழுது என்னடாவென்றால் இன்னொருத்தனை விரும்பியவளா? அதுவும் கல்யாணம்வரை சென்றிருக்கிறாள். நம்மைவிட அதிகம் படித்தவனோ? என்று யோசிக்க, நம்மதான் பள்ளிப்படிப்பையே தாண்டவில்லையே. ப்ளஸ் டூ படித்தவனாக இருந்தாலுமே நம்மைவிட அதிகம் படித்தவன் தான். 

குடும்பம், தோற்றம், வசதி எனப் பார்த்தால், யாரும் அவனிடம் நெருங்கக்கூட முடியாது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற, எலிஜிபிள்‌ பேச்சுலர் தான். எந்தப் பெண்ணும் கண்ணை மூடிக் கொண்டு தலையாட்டுவாள். ஆனால் படிப்பு என்று‌ வந்தால் மட்டுமே கல்யாணச் சந்தையில் பின்தங்குவான். பள்ளி படிப்பு கூட முழுதாக முடிக்கவில்லையே. 

அப்பொழுது தானே அந்த விபத்தும் நடந்தது. தன் கண் முன்னால் ஒரு‌ மரணம். அதுவும் தன்னை முன்னிட்டு நடந்த மரணம். தனக்காக நேர்ந்த மரணம். தனக்கு நிகழ்ந்திருக்க வேண்டிய மரணம். அந்த இடத்தில் தன்னை நிறுத்தி அரண்டு போனது சிறுவன்‌ மனது. 

அதில் பயந்து, அரண்டு, நடுங்கி நாள் கணக்கில் தூங்க முடியாமல் தவித்தவனை, என் பேரன் உயிரோடிருந்தால் போதும் என பெரியநாயகி, பறவை தன் குஞ்சை இறகால் மூடி அடைகாப்பது போல, தன்‌ கைக்குள்ளேயே வைத்துக் கொண்டார். 

இப்பொழுதும் அதை நினைக்கையில் தலை விண்ணெனத் தெரித்தது. கண்களை மூடி, புருவ மத்தியில் விரல் வைத்து அழுத்திக் கொண்டான். 

“தலை வலிக்குதா? தைலம் வேணுமா?” தான் பேசியதைக் கேட்டுதான் அவனுக்கு தலைவலியோ என்ற எண்ணம் அவளுக்கு. மதியம் நடந்தது அவன் மீது அனுதாபத்தை உண்டு பண்ணியிருந்து. அதனால் தான் இத்தனை கரிசனம் அவன் மீது. 

“இல்ல வேண்டாம். அப்பத்தா இருந்தா தலையப் பிடிச்சு விடுவாங்க. சரியாப்போகும்!”

“இங்க தான் அப்பத்தா இல்லையே? நான் வேணா புடிச்சு விடவா?” எனக் கேட்க கண்களை திறந்து பார்த்தான். மெலிதான புன்னகை அவனிடம். சாதாரணமாகத்தான் கேட்டாள்.‌

‘இவ என்ன தெரிஞ்சு கேக்குறாளா? தெரியாம கேக்குறாளா?’ என்ற யோசனையோடு‌ பார்த்தான்.‌

அங்கு வீட்டிலும் இருவரும் தனிமையில் இருந்தார்கள் தான். ஆனால் அவன் வருவதற்கு முன் தூக்கம் வருதோ இல்லையோ கண்களை மூடிப் படுத்து விடுவாள். இத்தனை இலகுவான பேச்சுக்கள் இல்லை. அவள் வீடு என்பதாலோ இயல்பாக இருந்தாள். அல்லது இரண்டு நாட்களாக எவ்விதத்திலும் தன்னை தொந்தரவு செய்யாத அவனது கண்ணியமாகக் கூட இருக்கலாம்.‌

“இன்னும் நீங்க, நான் யாரை லவ் பண்ணேனு கேக்கவே இல்லையே பாஸ்! அதுக்குள்ள தலைவலியா? யாருன்னு‌ தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!” என்றாள் பெருமையாக கையை மேலே உயர்த்தி.‌ 

அவ்ளோ பெரிய அப்பாட்டக்கரா என்ற நினைப்பு வர, 

“ஆடி போறதும், ஆவணி போறதும் அப்பறம் பாக்கலாம். முதல்ல யாருன்னு சொல்லு!” அத்தனை வெறுப்பு அவன் குரலில். 

“அட… நக்கலெல்லாம் சர்வ சாதாரணமா வருதே!”

“இன்னும் நீ யாருன்னு சொல்லல!” குரலில் அத்தனை இறுக்கம். 

“கண்டிப்பா தெரிஞ்சே ஆகணுமா… தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க?”

“சந்திரபாபு மாதிரி, நானும் என் பொண்டாட்டிய அவ லவ்வரோட‌ சேத்து வைப்பேன்.” எரிச்சல் மேலிட கூற, 

“அந்த சிரமம் உங்களுக்கு வேண்டாம். அதை எங்க அப்பாவே செஞ்சுட்டாங்க!” 

லூசா என்பது போல் பார்த்து வைத்தான். 

“என்ன லுக்கு… இன்னும் யார்னு தெரியலையா?”

“…” 

“நீங்க தான் பாஸ். நான் லவ் பண்ணது உங்களைத்தான். நாம‌ தான் வீட்டுக்குத் தெரியாம கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!” 

இது தான்டா மதனா, உண்மையான பல்பு! இதெப்படி‌ இருக்கு! பதினாரு வயதினிலே பரட்டை பாணியில் கைதட்டி கேட்ட மனசாட்சி, 

‘வாங்கிய பல்பெல்லாம் பல்பல்ல உன்மணாட்டி கொடுப்பதே பல்பிற்கெல்லாம் தலை!” 

வள்ளுவருக்குப் பதிலாக மாற்றுக் குறளும் படித்தது.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top