அன்று விடிந்த பொழுதே ஆவாரம்பட்டிக்கு ஆந்தை அலறலில் தான் விடிந்தது போல. எமன் பாசக்கயிறை விடுத்து வலையெடுத்து வாந்தான் போல உயிர் பிடிக்க. சித்திரகுப்தனும் இவன் கையால் இன்று ஒரு உயிர் போகுமென பாவக்கணக்குப் புத்தகத்தில் சித்தனின் பெயர் பக்கத்தில் எழுதிக் கொண்டிருந்தார். அழகம்மை பக்கத்தை வெறுமையாக விட்டுவைத்தார்.
ஊருக்குள் ஓடி வந்தவர்களைத் தொடர்ந்து அழகியும், மாடுகளைப் பிடித்துக் கொண்டு சித்தனும், வேகமாக பின்னாலே ஓடிவர,
கலவரம் மூண்டது போல் ஊரே அல்லோகலப்பட்டது. ஆங்காங்கே கும்பல் கும்பலாக கூடி நின்றனர். காரணம் தான் யாருக்கும் தெரியவில்லை. வயது வித்தியாசம் இல்லாமல், சாதி பாகுபாடில்லாமல் கிட்டத்தட்ட பதினைந்து பேருக்கு மேல் மயக்கமும், வாந்தியும். அவசரமாக மாட்டுவண்டிகள் பூட்டப்பட்டு மயக்கமானவர்களை தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தனர்.
அழகி வீட்டு வாசலிலும் ஒரு வண்டி நிற்க பதட்டமாக ஓடிவந்தாள்.
வண்டியில் ஏற்றும் பொழுதே தலை தொங்கிப் போனது தங்கராசுவுக்கு. என்னவோ எனப்பதறி ஓடி வந்தவள், அப்பாவின் தலையைத் தாங்கிப்பிடித்தாள். இறுதியாக மகளை ஒருதரம் ஆழ்ந்து பார்த்தவர் கண்கள் கடைக்கண்ணில் கண்ணீர் வடிய, நிதானமிழந்து மேலே செருகியது. இரண்டு நாட்களாக காய்ச்சலில் உழன்று, ஆகாரமில்லாமல் வெறும் வயிறாய்க் கிடந்த உடம்பு வேறு. இரண்டு முறை வாந்தியெடுத்ததில் சட்டென துவண்டுவிட்டது. என்ன ஏதென்று உணரும் முன் வாயில் நுரையோடு முதல் உயிர் பிரிந்துவிட்டது.
“அப்பா” என்ற வார்த்தை தொண்டையிலேயே அடைபட்டுவிட்டது அழகிக்கு அதிர்ச்சியில்.
பொன்னுத்தாயி நெஞ்சில் அடித்துக்கொண்டு அழ, பிள்ளைகளும் சுற்றி நின்று கத்த ஆரம்பித்துவிட்டனர்.
காய்ச்சல் வந்தவர் முதலில் இறந்ததால் ஏதோ விஷக்காய்ச்சல் தான் பரவுவதாக எல்லோருக்கும் சந்தேகம். சாமிக்குத்தம் முதற்கொண்டு சாதிக்குத்தம் வரை அலசி ஆராயப்பட்டது. ஆளுக்கொன்றாக காரணம் சொன்னார்களே ஒழிய உண்மையான காரணம் தெரியவில்லை. ஊருக்கே அச்சமேகம் சூழ்ந்தது. தொற்றுவியாதியோ என முதலில் அருகில் வரவும் பயந்தனர். அடுத்தடுத்து இரண்டுபேர் உயிரிழக்க, ஊரே கெதி கலங்கிப்போயிற்று.
ஊர் மந்தையில் ஊர்ச்சனம் மொத்தமும் கூடிவிட்டது. அக்கம் பக்கமும் செய்தி பரவ பக்கத்து ஊர் ஆட்களும் பரிபரியாக வந்து கூடிவிட்டனர். அறுபது வயதிற்கு மேலானவர்கள் முதற்கொண்டு ஒரு வயது குழந்தைகள் வரை. திண்டுக்கல் அரசு மருத்துவமனை தான் கொண்டுசெல்ல வேண்டும்.
தொற்றுவியாதி எனில் அக்கம்பக்கம் ஊர்களிலும் பரவயிருக்க வேண்டுமே. அப்படி எதுவும் கேள்விப்படவில்லை. குடிதண்ணீரில் ஆடு, மாடு எதுவும் விழுந்து செத்து கிடக்கிறதா என ஊர் பொதுக்கிணறை எட்டிப் பார்த்தனர். அப்படி எதுவும் செத்தும் மிதக்கவில்லை.
அரசு மருத்துவமனைக்கும், காவல் துறைக்கும் செய்தி பறந்தது.
எந்த வீட்டு துக்கத்திற்கு அழுவதென்று தெரியவில்லை. என்ன ஏதென்று உணரும் முன் கிட்டத்தட்ட ஏழெட்டு உயிர்களுக்கு மேல் பிரிந்துவிட, மருத்துவர் வந்து ஏதோ விஷம் சாப்பிட்டதால்தான் இறப்பு என சந்தேகப்பட, எப்படி எனப் புரியவில்லை.
ஒரு வீட்டில் துக்கம் எனில் ஊர் முழுதும் அங்கு கூடிவிடும். இங்கு தான் பத்துக்கு ஒன்று துக்க வீடாக ஊருக்கே அன்று துக்க நாளாகப் போயிற்று.
அப்பாவைச் சுற்றி நின்று பிள்ளைகள் அழ, பால் சுரந்து நெஞ்சு கணக்க அப்பொழுதுதான் மகனின் நினைவு வந்தது பொன்னுத்தாயிக்கு.
கழுத்துப் புருஷன் தான் போயாச்சு. வயிற்றுப் புருஷனைப் பார்க்க கண்ணீரோடு எழுந்து வந்தவள் கண்டதும், வாயில் நுரையோடு தொட்டிலில் இறந்து கிடந்த பிள்ளையைத்தான். நெஞ்சிலடித்து கதறிக் கொண்டு, பிள்ளையை வெளியே தூக்கி வந்தாள்.
“எய்யா… ஏஞ்சாமி… இப்ப தானே இட்லி ஊட்டி தூங்க வச்சேன். எம்பிள்ளயும் எனக்கில்லாமப் போயிட்டானே” என தவமிருந்து பெற்ற ஆண்பிள்ளை போனதில் நெஞ்சடைத்து மயக்கம் போட்டுவிட்டார்.
அப்பொழுதுதான் எல்லாரும் காலையில் என்ன சாப்பிட்டனர் என காவலதிகாரி கேள்வி கேட்க, மயக்கமடைந்த அனைவரும் சாப்பிட்டதாகச் சொன்னது வேல்ச்சாமி கடை இட்லிதான். ஊரே கடை முன் கூடிவிட்டது.
மீதமிருந்த மாவுப் பாத்திரத்தை எடுத்து முகர்ந்து பார்க்க அதில் பூச்சி மருந்து வாடை.
ஊர்ச்சனம் மொத்தமும் கடையை முற்றுகையிட்டது. வேல்ச்சாமி மாவில் எதுவுமில்லை என சாதித்தார். ஏனெனில் அவர் சாப்பிட்டதும் அதே இட்லியைத்தான். பசி தாங்கமாட்டார் என, முதல் ஈடு எடுத்ததும் கணவருக்கு சாப்பாடு கொடுத்துவிடுவார் ஆவுடை. அவரோடு சேர்ந்து சாப்பிட்டவர்களும், நாங்களும் இங்குதான் சாப்பிட்டோம் என சொல்ல, எப்படி என குழம்பிப் போயிற்று மீண்டும். ஒரு ஈட்டுக்கு முப்பது இட்லி. அதை சாப்பிட்டவர்கள் எல்லாரும் நன்றாகத்தான் இருந்தார்கள் வேல்ச்சாமி உட்பட.
ஆனால் மாவில் பூச்சி மருந்து வாசம்.
எல்லோரும் முன் வாசலில் கூடியிருக்க, அப்பொழுதுதான் சித்தன் தன் கடைசித்தங்கையைத் தேடினான்.
“அம்மா… பாப்பா எங்கம்மா?”
“இப்பதான்டா சாப்பிட வச்சேன்” என்றவர், “அவளுக்கும் இட்லி தான்டா கொடுத்தேன்” என்றார் பதட்டமாக. வேகமாக பிள்ளையைத் தேட ஆரம்பித்தார்.
மாடு மேய்க்கச் சென்றவன் காலையிலேயே கம்மங்கூழ் தான் குடித்து சென்றான். மற்றவர்களும் அதையே குடித்திருக்க, அவர்கள் கடை இட்லி சாப்பிட்டது வேல்ச்சாமியும், கடைக்குட்டியும் மட்டும்தான். வேல்ச்சாமிக்கு எதுவும் ஆகவில்லை.
தங்கையை தேடியவன், பின் வாசல் செல்ல அங்கு கண்டது, துவண்டு சுருண்டு கிடந்த மூன்று வயது தங்கையைத்தான்.
இவன் பதறிப்போய் தூக்க, அரைமயக்கத்திலும் அண்ணனைப் பார்த்ததும் தூக்கச் சொல்லி கைநீட்டி சிரித்தாள். கைதான் ஒத்துழைக்க மறுத்தது அந்த பூஞ்சிட்டிற்கு. அணையப் போகும் விளக்கின் பிரகாசமாக அந்த சிரிப்பு அவன் நெஞ்சையறுக்க, அப்பொழுதுதான் பின்வாசலில் எச்சில் இலைகளோடு ஓரமாகக் கிடந்த பூச்சிமருந்து டப்பாவும் கண்ணில் பட்டது.
இதை எங்கேயோ, யார் கையிலோ பார்த்தோமே என யோசனை ஓட, எவ்வளவு யோசித்துப் பார்த்தும் பதட்டத்தில் அவனுக்கு நினைவு வரவில்லை. தங்கையைத் தூக்கிக்கொண்டு முன் வாசல் ஓடிவர,
“அய்யோ எம்பிள்ள…” என ஆவுடை பதறி கையேந்த, அதற்குள் அவன் கைகளிலேயே தலை துவண்டுவிட்டது சிறுமிக்கு.
“பாப்பா… பாப்பா…” என பதறிப்போய் மடியில் போட்டு அவசரமாக அவள் கன்னம் தட்ட, அவன் மடியிலேயே உயிர் பிரிந்துவிட்டது.
பூச்சி மருந்து தான் கலக்கப்பட்டிருக்கிறது என தெரிய, சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் உப்புக்கரைசல், புளிக்கரைசல், சோப்பு கரைசல் தண்ணீர் என ஆளாளுக்கு ஒன்றாக கரைத்து குடிக்க கொடுக்கப்பட்டு வாந்தியெடுக்க வைக்கப்பட்டது. முதல் ஈடு சாப்பிட்டவர்கள் முதற்கொண்டு.
இறந்தவர்களையும் மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்சில் ஏற்றச்சொல்ல, தன் தங்கையைக் கொடுக்க மாட்டேன் என மார்போடு இறுக்கிப் பிடித்துக் கொண்டு அழுதான் சித்தன். ஆவுடையும் மகனையும், மகளையும் கட்டிக்கொண்டு அழ, இறந்து போன அப்பாவையும், தம்பியையும் வண்டியில் ஏற்ற அவர்கள் பின்னே அழகி குடும்பமும் அழுது கொண்டே வந்தது.
“ஆவுடை… எம்பிள்ள போய்ட்டான்டீ. தெனமும் இட்லி கொடுத்து விடுவியே. இனி யாருக்குடீ கொடுப்ப” என பொன்னுத்தாயி கதற, ஆவுடையும் அங்கே பிள்ளையை பறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டு தானிருந்தார்.
பொன்னுத்தாயி தினமும் மகனுக்கு இட்லி வாங்கித்தான் ஊட்டுவார். இன்றும் மகனுக்கு மட்டும்தான் இட்லி வாங்கவந்தார். ஆவுடை தான், இரண்டு நாட்களாக தங்கராசுவுக்கும் காய்ச்சல், சாப்பிட முடியவில்லை என அறிந்து அவருக்கும் சேர்த்து இட்லி கட்டி கொடுத்துவிட்டார். அதுக்கு காசு கூட வாங்கவில்லை தன் தோழியிடம். நல்ல எண்ணத்தில்தான் அவர்செய்தது. எமன் எப்பொழுதும் தன் பழி ஏற்காதுதானே.
இறந்தவர்களை எல்லாம் வண்டியில் ஏற்றும் பொழுதுதான் அவனைப் பார்த்தான் சித்தன். ஆட்களோடு சேர்ந்து அவனும் அங்குமிங்கும் ஓடி உதவிக் கொண்டிருந்தான். உள்ளுக்குள் ஒரு குரூர திருப்தி.
அவனைப் பார்த்ததும் சித்தனுக்கு நினைவு வந்தது. நேற்று பள்ளி விட்டு வரும்பொழுது டவுனில் அவனைத்தான் உரக்கடையில் பார்த்தான். அவன் கையில் அதே பூச்சி மருந்து டப்பா இருந்தது.
கண்கள் சிவக்க, தங்கையின் உடலை அம்மாவிடம் கொடுத்தவன், ஆவேசமாக ஓடிச் சென்று அவனின் சட்டையைப் பிடித்திருந்தான்.
“நேத்து நீதானே பூச்சிமருந்து வாங்குன?” என ஆக்ரோஷமாக அவனை கேட்க,
“டேய்… எனக்கென்ன தோட்டமா இருக்கு? நானெதுக்குடா பூச்சி மருந்து வாங்கப்போறேன்?” என்றான் எகத்தாளமாக. அதனால் தான் அவனை நேற்று சித்தன் சந்தேகமாகப் பார்த்தான். ‘இந்த அண்ணனுக்குதான் தோட்டமில்லையே. இவரு எதுக்கு வாங்குறாரு’ என நினைத்தான். யாராவது வாங்கிவரச் சொல்லியிருக்கலாம் என அவனாக யூகித்துக் கொண்டான்.
“இல்ல… நான் பாத்தேன். நீதான் வாங்கின?” என அழுத்திச்சொல்ல, ஆவுடைக்கும் அப்பொழுதுதான் நினைவு வந்தது.
வீட்டை ஒட்டிய காலியிடத்தில் தான் ஓலைக் கொட்டகை போட்டு இட்லி கடை போட்டிருந்தனர். இலை போட சற்று உயரமான டேபிளும், உட்கார ஏதுவாக சற்று உயரம் குறைந்த டேபிளும் நீளவாக்கில் போடப்பட்டிருக்கும். முதல் ஈடு இட்லி ஊற்றி வைத்துவிட்டு, வீட்டில் புனிதா ஆட்டி வைத்திருக்கும் சட்னியை எடுக்க வீட்டிற்கு வந்துவிட்டார். எடுத்துவிட்டு மீண்டும் கடைக்கு வர, அடுப்பு முன் நின்றிருந்தான் கண்ணையன். ஆவுடையைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் ஒரு பதட்டம். கைளிக்குள் எதையோ போட்டு அவசரமாக மடித்துக் கட்டினான். ஆவுடையைப் பார்த்ததும், “எங்க சின்னம்மா போன? வெறகு அடுப்பவிட்டு வெளியே வந்து எரியுது. கூரக்கொட்டகையில் சூதானமா இருக்க வேண்டாமா?” என நல்ல பிள்ளையாக வியாக்யானம் படித்தான்.
அவனது அப்பா தூக்குப்போட்டு இறந்து ஒரு மாதமாகிறது. நேற்றுதான் முப்பது கும்பிட்டு முடித்திருந்தனர். அவனைப் பார்த்ததும் அப்பா இல்லாதவன் என மனம் இறக்கப்பட்டது. அம்மாவும் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அவன் அப்பா இறந்த அன்று துள்ளியவன் தான். அதற்கு பின் அமைதியாகிவிட்டான். அரசல் புரசலாக இவனையும், வேணியையும் இணைத்து பேச்சு அடிபட்டது. அதன்பிறகு ஊருக்குள்ளும் யாரும் எதையும் பெருசு பண்ணவில்லை. இதற்கிடையில் வேறொருவனுடன் வேணிக்கும் அவசரமாக மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிந்திருந்தது.
எல்லாம் அடங்கிவிட்டதாக ஊரார் எண்ணியிருக்க, ஆனால் கண்ணையனோ, அப்பாவின் இழப்பு, காதல் தோல்வி, அவரை பஞ்சாயத்தில் காலில் விழ வைத்தது என எல்லா வஞ்சத்தையும், அணையவிடாமல் சாராயத்தை ஊற்றி உள்ளுக்குள் வளர்த்துக் கொண்டுதானிருந்தான்.
“உக்காருப்பா… இந்த ஈடு எடுத்துர்றேன்” என சொல்ல அவனும்,
“பசிக்குது… சீக்கிரம் எடு சின்னம்மா. வேலைக்குப்போகணும்” என நீளவாக்கில் போடப்பட்ட சாப்பாட்டு மேஜையில் அமர்ந்துகொண்டான்.
முதல் ஈடு எடுத்துவிட்டு, அடுத்து ஊற்றி வைத்தவர், அவனுக்கும் நான்கு இட்லி கொடுத்தவர், வந்தவர்களுக்கு வியாபாரம் பண்ண, இவனுக்கு இட்லி போதவில்லை. அடுத்த ஈடு வெந்து விட்டதாகச் சொல்ல, வேண்டாம் என்றவன், வேலைக்கு நேரமாகிவிட்டதென வேகமாக கிளம்பிவிட்டான்.
அதற்கடுத்து அவித்த இட்லிகளை சாப்பிட்டவர்களுக்கெல்லாம் தான் பாதிப்பும், உயிரிழப்பும்.
“அடப்பாவி… என் வீட்ல கொள்ளிவைக்கணும்னு எத்தன நாளாடா காத்திருந்த? எம்பிள்ள உனக்கென்னடா பாவம் பண்ணுச்சு?” என ஆவுடை பிள்ளையை மடியில் போட்டு ஒப்பாரி வைக்க,
ஊர் ஆட்கள் சேர்ந்து அவனை பிடிக்க முயல, உதறித் தள்ளியவன், இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுக்க, ஆட்கள் விலகிக் கொண்டனர். யாரும் அவனருகில் போகவில்லை.
“எங்க அப்பன கால்ல விழ வச்சப்ப எல்லாரும் வேடிக்கை தானடா பாத்தீங்க. என்னமோ ஐகோர்ட் ஜட்ஜாட்டம் தீர்ப்பு சொன்னீங்கள்ல. சனிப்பொணம் தனியா போகாதுடா. இப்ப எல்லாரும் அனுபவிங்கடா! எவனாவது கிட்ட வந்தீங்க வகுந்துருவேன் வக்காளிகளா” சாராய போதையில் சிவந்த கண்களில் வன்மம் தெறிக்க பேசினான் கண்ணையன். போலீஸ் கூட அவன் அருகில் போகத்தயங்கி நிற்க, அசந்த நேரம் வேல்ச்சாமி அவனை எட்டிப் பிடிக்க, போதையில் திமிறியவன், கோபமாக அவரை உதறித்தள்ளினான். பக்கத்தில் கிடந்த உரலில் தலை மோதி கீழே விழுந்தவர், இரத்தம் வடிய எழுந்து பார்த்தது, தலை தொங்க இரத்தம் பீறிட நின்ற தலையில்லாத கண்ணையன் முண்டத்தைதான்.
எடுத்தது கண்டனர். அடுத்த கணம் இற்றது கேட்டனர் என்றொரு உவமை இராமன் நாணேற்றி வில் முறித்ததுற்கு உண்டு. ஆனால் இங்கு அரிவாள் எடுத்ததையும் யாரும் பார்க்கவில்லை. வெட்டியதையும் யாரும் பார்க்கவில்லை.
கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ஊர்ச்சனமே ஒருகணம் விக்கித்து நின்றுவிட்டது.
அப்பாவைத் தள்ளியதைப் பார்த்த வேகத்தில், விறகு வெட்டிவிட்டு, அங்கேயே போட்டிருந்த அரிவாளை கையில் எடுத்தது தான் தெரியும் சித்தனுக்கு. அவனுக்கே அடுத்து என்ன நடந்ததெனத் தெரியாது. இரத்தம் வடிந்த அரிவாளோடு காவல் தெய்வம் கருப்பண்ணசாமி மாதிரி உடல் விரைக்க, கண்களில் ஆவேசம் பொங்க மந்தையில் நின்றிருந்தான்.
விஷத்தால் செத்தது ஒன்பது, வெட்டுப்பட்டு செத்தது ஒன்னு என அன்று ஆவாரம்பட்டி மக்கள்தொகையில் குறைந்த கணக்கு ஆகமொத்தம் பத்து.
“போச்சே… ஏ வம்சம் சீர்கொலஞ்சு போச்சே” பெற்ற வயிறு பதற, நெஞ்சிலடித்து ஆவுடையின் கிரீச்சிட்ட ஒப்பாரிதான் காற்றில் கலந்து அக்கம்பக்கம் ஊருக்கெல்லாம் துட்டி சொல்லியது. ஒட்டுமொத்தமாக ஒரே நாளில் அழுது தீர்த்துவிடுங்க மக்கா என விதியும் கைகட்டி வேடிக்கை பார்த்தது.
ஊர்ச்சனமே கூடிவிட்டது. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலமையில் இல்லை. பாவம் ஓரிடம் பழி ஓரிடம் என்றாகிப்போனது. கைகள் துண்டால் கட்டப்பெற்று போலீஸோடு சென்றவனை நெஞ்சு விம்ம, கண்களில் ஈரம் வற்றிப்போக, கண் பார்வையிலிருந்து தலை மறையும் வரை பார்த்து நின்றாள் பாதகத்தி ஒருத்தி.
எதற்கென்று அழுவாள். தந்தை இழப்பிற்கா. தம்பி இழப்பிற்கா. இன்னதென பிரித்தரிய முடியா நேசம் ஒரே நாளில் பூத்து, ஒரே நாளில் வாடிப்போனதற்கா?
அன்று மந்தையில் தன்னை விட்டு, அவளை எடுத்துச் சென்றவன் மீண்டும் மந்தையில் வைத்துதான் அவளைப் பார்த்தான்.
எல்லாம் ஆய்ந்து ஓய்ந்து, மகனுக்காக இருக்கும் ஒரே பரம்பரை வீட்டையும், மாடுகளையும் அடிமாட்டு விலைக்கு விற்று வழக்குக்காக செலவழித்தது போக மிஞ்சியதை எடுத்துக்கொண்டு இரவோடு இரவாக வேல்ச்சாமி குடும்பம் கண்ணீரோடு ஊரைவிட்டு வெளியேறியது.
“அத்தாச்சி… இறங்க வேண்டிய இடம் வந்துருச்சு. இறங்கு!” சுமதி உலுக்க, யாரும் பார்க்கும் முன், அவசரமாக முந்தானை கொண்டு கண்களை துடைத்தவளை ஆழ்ந்து பார்த்தான் முருகேசன்.
சிறுவயதிலிருந்து கூட இருந்து பார்க்கிறானே. போகும்போது இருந்த மலர்ச்சி வரும்பொழுது இல்லை அழகி முகத்தில். மீண்டும் ஒரு இறுக்கம் குடிகொண்டுவிட்டது.
வாழ்ந்து கெட்டவனின்
பரம்பரை வீட்டை
விலை முடிக்கும்போது
உற்றுக்கேள்
கொல்லையில்
சன்னமாக எழும்
பெண்களின் விசும்பலை…
கவிதை மகுடேசுவரன்

Yaarai kutram solrathu, very sad
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫