பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 11

சரண்யா பேச்சுக்கு பதில் கொடுத்துவிட்டு திரும்பியவள், சித்தனைப் பார்த்துவிட்டு ஒருகணம் விக்கித்து நின்றுவிட்டாள். சற்றுமுன் சரண்யாவிடம் பேசியதை கடகடவென மீண்டும் ஓட்டிப் பார்த்தது மனது. தனிமை எங்களுக்கொன்றும் புதிதில்லை என்றல்லவா சொல்லியிருக்கிறாள். 

‘அழகி…‌ செத்தடீ’ என்றது உள்மனம்.

கண்களில் மின்னல் வெட்ட, கழுத்தைச் சாய்த்து அவன் பார்க்க, அவன் பார்வை சென்ற திக்கைப் பார்த்தவள், தோளுக்குப் பின்னால் தொங்கிய முந்தானையை சட்டென இழுத்து இடுப்பில் இறுக்கிச் செறுகிக்கொண்டு வெளியேறிவிட்டாள். அவளது செய்கையில் அவனையும் மீறி வாய்விட்டு சிரித்துவிட்டான். திரும்பி சரண்யாவை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டான். அந்தப் பார்வையே அவளது அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டித்தது. 

வந்த சுவடு தெரியாமல் வேல்ச்சாமியும் திரும்பிவிட்டார்.

“இது எங்க போய் முடியப்போகுதோ தெரியல? அப்பா பெரிய சம்பந்தம் பேசி வச்சுருக்காரு. அண்ணனப் பத்தி தெரிஞ்சும் பொண்ணு கொடுக்க சம்மதிச்சுருக்காங்க” என அலுத்துக் கொண்டாள் சரண்யா. 

“தெரிஞ்சும் கொடுக்குறாங்கனு சொன்னா என்ன அர்த்தம் சரண்யா? சித்தன் எதுல கொறஞ்சு போயிட்டான்.” புனிதாவிற்கு அத்தனை கோபம் சித்தனை இளக்காரமாகப் பேசியதில். தன் தம்பி போகும் போக்கு நன்றாகப் புரிந்தது. ஆனாலும் அப்பாவை நினைத்து பயம் வந்தது. அவளைப் பொறுத்தவரை தம்பியின் சந்தோஷம்தான் முக்கியம். வாழ்க்கையில் கஷ்ட்டங்களை மட்டுமே பார்த்தவன். இனிமேலாவது மனதிற்குப் பிடித்த வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கட்டுமே என நினைத்தாள். 

“என்னக்கா, நீயும் இப்படி கேக்குற. ஜெயிலுக்குப் போயிட்டு வந்தவருக்கு பொண்ணு கொடுக்க முன் வர்றதே பெருசு. படிப்பும் இல்ல.” அவள்பாட்டிற்கு அடிக்கிக்கொண்டே போக,

“நிறுத்து சரண்யா! உனக்கு அவனப்பத்தி என்ன தெரியும்? கஷ்ட்டம்னா என்னானு தெரியாம வளந்ததால, மனுஷங்கள எடை போடத் தெரியல உனக்கு.‌ சொன்னாலும் புரியாது.” 

அப்பாவைப் போல் எதையும் பணத்தைக் கொண்டு மட்டுமே எடைபோடும் இவளிடம் பேசி பிரயோஜனமில்லை என கோபமாக வெளியேறிவிட்டாள். தன்னையும், தன் கணவனையுமே ஒரு படி கீழாகத்தான் பார்ப்பாள் எனத்தெரியும். 

அன்றைய நிலமைக்கு புனிதாவிற்கு இவள் அளவிற்கு சீர் செய்யவில்லை. இப்பொழுது சரண்யாவிற்கு செய்யும் அளவிற்கு புனிதாவிற்கும் செய்ய‌வேண்டுமென ஆவுடை கூறியதற்கே,‌ தன்‌புகுந்த வீட்டாரோடு ஒப்பிட்டு, அவர்களும், இவர்களும் ஒன்றா எனக் கேட்டவள்தானே? 

அப்படியும் ஆவுடை விட்டுக்கொடுக்காமல், “எங்களுக்கு, நீயும் புனிதாவும் ஒன்னுதான் சரண்யா. பெத்த பிள்ளைகள்ல வேறுபாடு பாக்கமுடியாது. அவங்க ஒன்னும் வசதி பாத்து பொண்ணெடுத்தவங்க இல்ல.  உங்க அக்காவப் புடிச்சுப் போயி வலிய வந்த சம்பந்தம். அன்னைக்கு கவர்மென்ட் மாப்பிள்ளைனு, நம்மவிட பெரிய இடம் பாத்திருக்கலாம். ஆனா உங்களால முடிஞ்சத போடுங்கனு சொன்னாங்க.” சின்ன மகளுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்க முயற்சி செய்தார். புரிந்து கொண்டாளா என்பது கடவுளுக்கே வெளிச்சம். 

*****

“அழகம்ம, இங்க வாம்மா!” வேல்ச்சாமி வந்து அழைக்க,

“சொல்லுங்க மாமா!” என ஆட்களோடு மேடையின் முன் சேரில் அமர்ந்திருந்தவள் எழுந்து வர, பந்தி நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றார் வேல்ச்சாமி. 

“இவங்க முக்கியமான விருந்தாளி. சாப்பிட்டு முடிக்கிறவரை கொஞ்சம் கூட இருந்து பாத்துக்கோம்மா!” என்றவர்,

“நம்ம சொந்தக்கார பொண்ணுதான். உங்கள கவனிச்சுக்கும்” என அவர்களிடமும் சொல்லிக் கொண்டே இலைபோட வந்தவன் கையிலிருந்த இலையை வாங்கி அழகி கையில் கொடுத்தார். 

நடுத்தரவயதில் கணவன், மனைவியும், உடன் அவர்களது மகளும். பார்த்தாலே தெரிந்தது பட்டும் பகட்டும். அவளுக்கு ஒரு இருபது வயதிருக்கும். ‘வீட்ல இவ்வளவுதான் இருந்துச்சா, இல்ல கழுத்துல இவ்வளவுதான் இடம்பிடிச்சதா’ என்ற நினைப்புதான் வந்தது அந்தம்மாவைப் பார்த்ததும் அழகிக்கு‌. கைப்பிடியளவு நகை அந்தம்மா கழுத்தில். மகளுக்கும் குறைவில்லாமல் பூட்டியிருந்தாள்.

“பாத்துக்கோம்மா” என்றவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இலையைப் போட்டு தண்ணீர் எடுத்து வைத்தாள். அடுத்து பரிமாற வந்தவனும் வாளியை அவள் கையில்தான் கொடுத்தான். 

முக்கியமான விருந்தாளிபோல… என நினைத்தவள் பரிமாற ஆரம்பிக்க, 

“இங்கேயும் சாம்பார் கொண்டாம்மா” என குரல் கேட்க பின் வரிசையைத் திரும்பிப் பார்த்தாள். அங்கு புனிதாவின் புகுந்த வீட்டினர் அமர்ந்திருக்க, புனிதா முன்தினம் சொன்னதும் நினைவிற்கு வந்தது. இவர்களும் முக்கிய சொந்தமாயிற்றே என அவர்களையும் சேர்த்தே என்ன வேண்டுமென கேட்டுக்கேட்டு கவனித்தாள். வரிசையில் அமர்ந்திருந்தவர்களும், அவளை சாம்பார், பொரியல், ரசம் என அழைக்க ஆரம்பித்தனர். பந்தியில் அமர்ந்து கொண்டு கேட்பவர்களுக்கு, மறுக்கமுடியாமல் பரிமாறுபவர்களோடு சேர்ந்து அனைவருக்குமே பரிமாற ஆரம்பித்துவிட்டாள்.

பந்தி முடிய, இவள் பரிமாற வந்தவள்தான் என நினைத்துக் கொண்டு,

“ஏம்மா… இந்த இலையெல்லாம் கொஞ்சம் எடும்மா. அடுத்த பந்தி ‌போடணும்” என அழைக்க, சட்டென திரும்பிப் பார்த்தாள். “உன்னத்தாம்மா” என மீண்டும் அழுத்திச் சொல்ல, எடுப்பதா வேண்டாமா என ஒருகணம் யோசனை ஓடியது. ஊரில் எனில் யோசிக்கவே மாட்டாள். ஏன்… சொல்லவேண்டிய அவசியமே இருந்திருக்காது.

கல்யாண வீட்டில் இது சாதாரணம் தான்.  பந்தியில் பரிமாறுவதும், இலை எடுப்பதும் ஊரில் சர்வ சாதாரணம். ஊரில் எந்த வீட்டு விசேஷம் என்றாலும் ஆளும்பேருமாக எடுத்துக்கட்டி செய்துதான் பழக்கம். பந்தி பரிமாறுவது, இலை எடுப்தெல்லாம் ஒன்றுக்குள் ஒன்று எனும் பொழுது அதில் கௌரவம் பார்ப்பது கிடையாது.

பந்தி எழுந்து, அடுத்த பந்திக்கு அமர்ந்தவர்கள் முன் சாப்பிட்டு மூடிவைத்த இலைகளிருக்க, அடுத்து பரிமாற ஆட்கள் தயாராக நின்றனர். இதே கல்யாணம் நம்ம ஊரில் நடந்தால் இப்படி யோசிப்போமா, நம்ம சித்தன் வீட்டுக் கல்யாணம் என தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள். இங்கு எல்லாமே சம்பளத்திற்காக பார்க்கிறார்கள் எனும் பொழுது, ஏதோ ஒரு இடத்தில் மனம் முரண்டத்தான் செய்தது. அடுத்த பந்திக்கு கூட்டம் காத்திருக்க, அதற்கு மேல் யோசிக்காமல், அங்கு ஓரமாக இருந்த மூங்கில் கூடையை எடுத்தவள், இலைகளை எடுதுப்போட ஆரம்பித்தாள். 

கூட்டத்தைப் பார்த்துவிட்டு எப்படியும் சாப்பாடு போதாதென தவசிப்பிள்ளையைப் பார்க்க அடுக்களை சென்றிருந்தான் சித்தன். அவர் மேலும் சில சாமான்கள் வேண்டுமென கேட்க, தேவையான சாமான்களை‌ வாங்கிக் கொடுத்துவிட்டு, மீண்டும் பந்தியை பார்வையிட வந்தவன் இவள் இலை எடுப்பதைப் பார்த்துவிட்டு வேகமாக அங்கு வந்தான். அதற்குள் சாம்பார் வேண்டுமென ஒருவர் அழைக்க, இலையை எடுத்து முடித்திருந்தவள் ஓரமாக வைத்துவிட்டு, சாம்பார் வாளியை எடுக்கவந்தவள் முன் கோபமாக வந்து நின்றான். 

“அழகி! என்ன பண்ற?” பல்லிடுக்கில் வந்து விழுந்தன வார்த்தைகள். அடக்கப்பட்ட குரலில் அத்தனை கடுமை. அவனை நிமிர்ந்து பார்த்தவள் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. எப்பொழுதும் போல் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் உள்ளுக்குள் எப்படி உணர்கிறாள் என அவளுக்கே தெரியவில்லை. பந்தி எனும்‌பொழுது எதையும்‌ முகத்தில் காண்பித்துக் கொள்ளவும் முடியவில்லை. 

ஆனால் அவளை கையில் எச்சில் இலையோடு பார்த்தவனுக்கு கோபம் மூக்கிலேறி அமர்ந்து கொள்ள,‌ அடுத்த பந்திக்கு இவனே அரிசியை உலையில் போடாமலே வேகவைத்துவிடுவான் போல. உள்ளுக்குள் அப்படி ஒரு கொதிப்பு.

முதல் பந்திக்கே ஊர் ஆட்களை எல்லாம் அழைத்துவந்து அவனே முன் நின்று பரிமாறி சாப்பிட வைத்துதான் அனுப்பினான். அதுவும் இன்று துணை‌ மாப்பிள்ளையாக அவனிருந்த தோரணைக்கு, அவன் பக்கத்தில் கல்யாண‌மாப்பிள்ளையே ஒரு நூல் இறங்கித்தான் தெரிந்தான். மேடையின் கீழ் அமர்ந்திருந்தவளுக்கு அவனை விட்டு கண்கள் அகல மறுத்தது. பட்டணம் பொடி கலரில் முழுக்கை சட்டையும், வெள்ளை கலர் பேண்ட்டும், இடக்கையில் எச்.எம்.டி வாட்சும் வலக்கையில் காப்பு (சத்யா பட ஸ்டைல்) என கம்பீரமாக உலா வந்தான். பரிமாறும் பொழுதும் தட்டுத்தடுமாறி அவனைத்தான் அழகியின் பார்வை தொட்டு தொடர்ந்தது.

முருகேசன் கூட, “சித்தா! மாப்பிள்ளை கலை வந்துருச்சுடா. கூடிய சீக்கிரம் மறுபடியும் மெட்ராஸ் வருவோம்னு நினைக்கிறேன்” என கேலி செய்தான். 

“அதெல்லாம் இல்ல. பொண்ணு எந்த ஊரா இருந்தாலும், நம்ம ஊருக்கு அழச்சுட்டு வந்துருங்கண்ணே.  நம்ம ஊர்லதான் உங்க கல்யாணம் வைக்கணும். ஊர் ஆளுக எல்லாம் சேந்து ஜமாய்ச்சுற மாட்டோம்” என சுமதியும் சேர்ந்து கொண்டாள். 

“இந்தாம்மா ஸ்வீட்” என அவளுக்கு மட்டும் ஒன்றை ஸ்பெஷலாக கொண்டு வந்து வைத்தான். 

“என்னடா தங்கச்சிக்கு மட்டும் கவனிப்பு பலமா இருக்கு? உனக்குத் தோதா எங்கிட்ட பொண்ணுகூட இல்லையேடா” என முருகேசன் அதற்கும் எக்காளி பேசினான். திருமணமாகி ஏழு‌வருடங்களாகியும் இன்னும் குழந்தையில்லை முருகேசனுக்கும், சுமதிக்கும். அதற்கே மாமியாரிடம் கேக்காத பேச்செல்லாம் கேட்டுவிட்டாள் சுமதி. ஆனால் எங்கும் மனைவியை விட்டுக் கொடுத்ததில்லை முருகேசன். எங்கு போனாலும் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு  சென்றுவிடுவான். 

“நம்மகிட்ட இல்லேனா என்ன? ஊரு உலகத்துலயுமா பொண்ணில்ல? எப்படிப்பட்ட பொண்ணு வேணும்னு மட்டும் சொல்லுங்கண்ணே. உலக அழகியவே கொண்டுவந்து நிறுத்திற மாட்டோம். அவரு அழகென்ன? அந்தஸ்த்தென்ன? குணத்துக்கே கோடி கொட்டி கொடுக்கணும். எங்க அண்ணனுக்கு பொண்ணு கொடுக்க கசக்குமா என்ன?” சித்தனின் பெருமைகளை அள்ளிவிட்டாள். இங்கு வந்து பார்த்தபிறகுதான் அவனின் உயரம் புரிந்தது. இதே வசதியோடு ஊரில் ஒருத்தன் இருந்தால் அவன் தலையால் தான் நடப்பான். ஆனால் இத்தனை வருடங்கள் கழித்தும் பழைய நட்பையும், ஊர், உறவுகளையும் தேடிவந்ததும், வேல்ச்சாமி செய்யாததை இவன் செய்ததும் அனைவரையும் ஆகர்சித்தது. 

சுமதி பேசப்பேச, விரிந்த சிரிப்போடு அவன் பார்வை சென்றதென்னவோ, சுமதி பக்கத்தில் இருந்த அழகி மீதுதான். 

வாடாமல்லி கலர் புடவையில், நவாப்பழ கலர் பார்டர் போட்ட சேலை, அவள் நிறத்திற்கும், உயரத்திற்கும் எடுப்பாக இருக்க, தலையில் எப்பொழுதும் போல் செவ்வந்தி பூவிற்குப் பதிலாக இன்று பட்டுவண்ண ரோஜா காதோரம் இடம்பிடித்திருந்தது.  சாப்பிடும்போது தான் கவனித்தான். கைகளில் ரப்பர் வளையல். 

ஆனால், அவளுக்கு கை நிறைய கண்ணாடி வளையல் போடத்தான் பிடிக்கும். தீபாவளி, பொங்கலுக்கு இதற்கெனவே வேப்பமுத்து, புளியமுத்தெல்லாம் சேகரித்து, விலைக்குப்போட்டு காசு சேர்ப்பாள் எனத் தெரியும்.‌ ஆடு, மாடு மேய்க்கும் பொழுது அவன் சேகரித்ததையும் அவளிடம்தான் கொடுப்பான். 

கழுத்தில் கோதுமைச்சரம் சங்கிலி. காதில் வெள்ளையும், சிவப்பும் கலந்த வட்ட கல்தோடும், குடை ஜிமிக்கியும், மூக்கில் சிவப்புக்கல் மூக்குத்தி. பெரிய தங்கை, இவள் கல்யாணத்திற்கு மெட்ராஸ் கிளம்புவது தெரிந்து, “நீ சம்பாதிச்சு போட்டதுதாங்க்கா” என தன்னுடையதை வலுக்கட்டாயமாக அக்காவின் கழுத்து, காதில் பூட்டியனுப்பினாள். அவன் பார்வை தன்னை மேலிருந்து கீழாக வருடிச்செல்வது தெரிய, சாப்பாடு தொண்டைக்குக் கீழ்‌ இறங்குவேனா என்றது. 

“நமக்கு உலக அழகியெல்லாம் வேண்டாம்மா. உள்ளூர் அழகி போதும்” என சொல்ல, சட்டென அவளுக்குப் புரையேறியது. கண்களில் நீர்வர இறுமியவள், தண்ணீரை எடுத்து வேகமாக குடித்தாள். 

“யாரு அத்தாச்சி நெனக்கிறது?” என அருகில் இருந்தவள் தலையைத் தட்ட,

“நம்ம ஆட்டுக்கார அலமேல யாரு நெனப்பா? ஆட்டுக்குட்டிக தான் நினைக்கும்” என்றான்‌ முருகேசன்.‌ 

பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவர்கள் இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப வேண்டுமென, பயணத்திற்கு இலகுவாக புடவையை மாற்றிவிட்டு வந்து பேசிக்கொண்டிருந்தவளைத்தான் வேல்ச்சாமி பந்தி‌பரிமாற அழைத்துவந்தார்.

“பாத்தா தெரியலையாடா? பந்தி பரிமாறிட்டு இருக்கு. இதுக்குதான்டா நம்ம ஊர்ப்பிள்ள வேணும்கறது. எப்படி இழுத்துப் போட்டு வேலை பாக்குது பாரு!” சித்தனின் முதுகுக்குப் பின்னால் நின்ற வேல்ச்சாமி பாராட்டுப்பத்திரம் வாசித்தாலும் குரலில் அத்தனை இளக்காரம். உன் நிலை இதுதான் என எத்தனை சூசகமாக அவளுக்கு  சொல்லாமல் சொல்லிவிட்டார்.

“அப்பா! அவ ஒன்னும் இலையெடுக்க வரல” என்றான்‌ சீறும்‌ குரலில். அழகிக்கே அவனது கோபத்தில் பயம் துளிர்த்தது. எங்கே தன்னால் அப்பாவிற்கும், மகனுக்குமிடையே வாக்குவாதம் வந்துவிடுமோ என பயம் வந்தது. அவர்கள் சாப்பிட்டு முடித்ததும் இங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டுமோ என இப்பொழுது யோசித்தாள். 

“நீங்க எங்களுக்கு உக்கார வச்சு பரிமாறலயா சித்தா? அதுமாதிரிதான இதுவும்” என அவன் கோபத்தை குறைக்க முயற்சி செய்ய,

“நான் உங்களுக்கு பரிமாறினதும், நீ ‌இங்க இலை எடுக்கறதும் ஒன்னா?” என கேட்க, வேல்ச்சாமி சுதாரித்தார். 

“இதுல என்னடா இருக்கு? நம்ம ஊரா இருந்தா செய்யாத இந்தப்பிள்ள?”

“அங்க வேறப்பா. இங்கதான் எல்லாத்துக்கும் ஆள் இருக்கே. அவங்களும் இவளும் ஒன்னா?” அத்தனை கோபத்தையும் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு அப்பாவை கேள்வி கேட்க, அவளை மகன் எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என வேல்ச்சாமிக்கு வெட்ட வெளிச்சமாகியது. அழகிக்கு உள்ளுக்குள் கரைபுரண்ட சந்தோஷம் தான் என்றாலும், சற்று முன் வேல்ச்சாமியின் வார்த்தைகளும் ஒரு ஓரமாக உறுத்ததான் செய்தது.

“பரிமாறட்டும்டா!  இலை எடுக்கறது புண்ணியம்டா!” பட்டு அங்கவஸ்த்திரத்தை சரிசெய்தவாறே சிரித்துக் கொண்டு சொன்னவர் சிரிப்பு பக்கா வெள்ளைச்சிரிப்பு. 

“அப்படியா? அப்ப அடுத்த பந்திக்கு நானே இலை எடுக்கறேன். எனக்கும் கொஞ்சம் புண்ணியம் சேரட்டும்” என்றவன் வேகமாக சட்டையின் முன்கையை முழங்கைக்கு ஏற்றியவன், ஓரமாக இருந்த கூடையை எடுக்க, 

“சித்தாஆ!” என இருவருமே ஒரு‌சேர அலறினர்.‌ அழகி வேகமாகச் சென்று அவன் கையிலிருந்த கூடையை வெடுக்கெனப் பிடுங்கினாள். 

“இப்ப‌ எதுக்குப்பா பதர்றீங்க? உங்க புள்ளைக்கு புண்ணியம் வேண்டாமா?” அப்பாவிடம் எகிறியவன்,

“நீ‌ என்ன? எல்லா புண்ணியமும்‌ உனக்கு மட்டும்‌ வேணுமா? எனக்கும் அதுல பங்கிருக்கு” என சூசகமாகச் சொல்லி அப்பனுக்கு தப்பாத பிள்ளை என நிரூபித்தான். 

“நானொன்னும் இலை எடுக்கச் சொல்லலடா. ஏம்மா, நான் இதெல்லாம் உன்னப் பாக்கச் சொன்னேனா” என‌ அவளிடமே கேட்டால் என்ன‌ சொல்வாள். இல்லை என வேகமாகச் தலையாட்டினாள், தன்னால்  இருவரும் எதிரும் புதிருமாக நிற்கும் நிலையறிந்து.

“நம்ம பில்டர் தனசேகரன் ஃபேம்லி வந்திருந்தாங்க‌ சித்தா. நாளைக்கு பொண்ணு கொடுக்க போறவங்களாச்சேனு, அவங்கள மட்டும்தான் கவனிச்சுக்க சொன்னேன்” என‌ அடுத்த அம்பை மறைமுகமாக வீசினார். 

சட்டென சித்தனை‌ ஏறிட்டுப்‌ பார்த்தவள்‌ சற்றுமுன் சித்தனின் பேச்சில் மலர்ந்து பூரித்த முகம், இருள்வதைப் பார்த்தவருக்கு உள்ளுக்குள் ஒரு சந்தோஷம். அவர் எதிர்பார்த்ததும் அதுதானே? தானொரு‌ சிறந்த வியாபாரி என்பதை தன் பேச்சில் நிரூபித்துக்‌ கொண்டிருந்தார். 

“வேணும்னா ஊருக்குப் போகும்போது அம்பதோ, நூறோ கையில கொடுத்து விடுவோம்‌ சித்தா. ஒரு நாள் வேலைய விட்டுட்டுதானே வந்திருக்கும். அங்க போயிருந்தா பத்தோ, இருபதோதான் கூலி கிடைச்சிருக்கும்” என்றவர்‌ பேச்சு இப்பொழுதுதான் சுருக்கென தைத்தது அவளுக்கு. சித்தனை‌ அடிபட்ட பார்வை பார்த்தாள் அழகி. இப்பொழுதுதான் முகத்தை சாதாரணம் போல் வைத்துக் கொள்ள வெகுபாடு பட்டுப்பேனாள்‌

நீ செய்த காரியம் எங்க கொண்டுவந்து நிறுத்தியிருக்கு பாத்தியா என‌ அவளை பொசுக்கும்‌ பார்வை பார்த்தான் சித்தன். 

“போதும்ப்பா!  கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் நம்ம ஊர்ப்பிள்ளைனு‌ பெருமையா‌ சொன்னீங்க. புண்ணி காரியம்னீங்க. உடனே‌ காசு கொடுக்கலாம்னு‌‌ மட்டம்‌‌ தட்டுறீங்க. சிங்காரிச்சு மூக்கறுங்கறதுங்கறத கேள்விப்பட்டிருக்கேன். அதை இப்பதான் நேரிடையா பாக்குறேன்” என்றவன்,

 “இன்னும் என்ன? மீதியும்‌ எடுத்துப் போட்டுட்டு‌ கூலி வாங்கிட்டு கெளம்பு. அதுக்குதானே‌ வந்த” என அவள் செய்த காரியத்திற்கு, அவள்‌ மீதே கோபத்தை காட்டிவிட்டு, இடக்கையில் வைத்திருந்த பொட்டலத்தை விசிறி எறிந்துவிட்டு சென்றான். கீழே சிதறிக்கிடந்ததைப் பார்த்தவள் தொண்டை அடைத்து கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

பத்தாத சாமான்களை வாங்க கடைக்குச் சென்றவன், பேப்பரில் மடித்து வாங்கிவந்த ஆரஞ்சு மிட்டாய்கள் சிதறிக்கிடந்ததைப் பார்தவள், சுற்றம் உணர்ந்து கண்களை சிமிட்டி தன்னை மீட்டு, நிலைப்படுத்திக் கொண்டாள். 

தான் நினைத்ததை ஓரளவிற்கு நடத்திக் கொண்டதில் வேல்ச்சாமிக்கு உள்ளுக்குள் திருப்தியே. மகனின்‌ கோபம் என்ன செய்துவிடும் என நினைத்தார். 

“நாளைக்கு பொண்ணு கொடுக்கப் போறவங்க” என்ற வார்த்தைகளில் தான் அழகியின் மனம் உழன்று‌ கொண்டிருந்தது.

அங்கிருந்து வர, எல்லாரும் கிளம்பி தாயாராக இருந்தனர். “எங்க அத்தாச்சி போன. உன் பையும் எடுத்துட்டு வந்துட்டேன்.” சுமதி சொல்ல சித்தனைத்தான் அழகியின் கண்கள் தேடியது. 

அவர்களை கடந்து சென்றவனை முருகேசன் அழைக்க, கிளம்பி தாயாராக நிற்பதைப் பார்த்தவன்‌ இவர்களிடம் வந்தான். எல்லாரும் சொல்லிக் கொண்டு கிளம்ப, அழகி பக்கம் பார்வையை திருப்பவேயில்லை. இவளும் தன்‌பக்கம்‌ பார்ப்பான் என தங்களோடு வாசல் வரை வந்தவனை, பொம்மைகடை பார்த்த பச்சைப் பிள்ளைபோல் ஏக்கமாக, முகத்தையே பார்த்துக் கொண்டு நடந்தாள்.

“சித்தா!” என தயங்கி அழைக்க, சட்டென அவர்களுக்கு முன் நடந்து சென்றுவிட்டான். அதே வேனை ஏற்பாடு செய்து கொடுத்தான் இரயில் நிலையம் செல்ல. 

“பாரும்மா, எப்படி முகத்த திருப்பிட்டுப் போறான்னு. நீயே பாத்தயில்ல. அந்தப் பொண்ணுக்கு என்னம்மா கொறச்சல். இருபத்தியொரு வயசுதான் ஆகுது. பட்டப்படிப்பு முடிச்சுருக்கு. சரண்யா கல்யாணம் முடியட்டும்னுதான் இவ்வளவு நாளாகிப்போச்சு. இவனுக்காக ஒரு சாம்ராஜ்யத்தையே இங்க உருவாக்கி வச்சுருக்கேன். ராஜா மாதிரி இருக்கறதவிட்டுட்டு, அங்க வந்து மண்ணக் கிண்டறேன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான். அந்த பொட்டக்காட்டுல என்னம்மா இருக்கு? அங்க இருந்தா கொலைகாரங்குற பேரு காலத்துக்கும் போகாது. இங்க வசதி வாய்ப்புனு வரும்போது அது யாரு கண்ணுக்கும் பெருசாத் தெரியாதும்மா. இப்பப்பாரு இவன் கொலைகாரன்னு  தெரிஞ்சும் பொண்ணு கொடுக்க தயாரா இருக்காங்க. இன்னைக்கி பணம் காசுதானம்மா பேசுது. நாலு தங்கச்சிகள கட்டிக் கொடுத்த உனக்குத் தெரியாதா பணத்தோட அருமை. காசிருந்தா நீ ஏன் இத்தனை வயசாகியும் கல்யாணமாகாம வீட்டோட நிக்கப்போற. இதெல்லாம் இவனுக்கு எங்க புரியுது?” அங்கலாய்ப்பாய் சலித்துக் கொண்டவர் பேச்சில் மூக்குப்பொடி தவிர அத்தனை பொடியும் இருந்தது. 

மெதுவாக வாழைப்பழத்தில் ஊசி இறக்கினார் வேல்ச்சாமி. மகனிடம் பேசி பிரயோஜனமில்லை எனத் தெரிந்தது. வெளிப்படையாக கேட்கப்போய், ஒரு வேளை தான் நினைத்த மாதிரி இல்லாமல், தானே தூண்டிவிட்டதாக அமைந்துவிட்டாலோ, அப்படித்தான் என்று விட்டாலோ காரியம் கெட்டுவிடுமே. தோட்டம் விஷயத்திலேயே அவனது பிடிவாதத்தை கண்டு கொண்டவர், எங்கு அடித்தால் மாங்காய் விழும் என்பதை அறிந்த காரியவாதியாக காய் நகர்த்தினார் வேல்ச்சாமி. 

எத்தனை சாதுர்யமாக அவளது தகுதி, படிப்பு, வயது முதற்கொண்டு சுட்டிக்காட்டி, தங்கள் வசதியையும், தகுதியையும் சொல்லாமல் சொல்லிக் காட்டிவிட்டார். 

அவரது பேச்சை முழுதுமாக உள்வாங்கியவள், அவளை பந்தி பரிமாறச்சொல்லி, இலை எடுத்ததற்கு கூலி வாங்கிக் கொள்ளட்டும் என்ற பொழுதுகூட பொறுமை காத்தவள், அவனை வார்த்தைக்கு வார்த்தை கொலைகாரன் என்றதில், 

“யாரு என்ன வேணும்னாலும் சொல்லட்டும் மாமா. ஆனா, உங்க வாயால இன்னொரு தடவ சித்தன கொலைகாரன்னு மட்டும் சொல்லாதீங்க!” என்றவள் வார்த்தைகளில் அத்தனைக்கத்தனை ஆக்ரோஷம். அவள் கண்களைப் பார்த்த வேல்ச்சாமியே ஒரு கணம் திகைத்து நின்றுவிட்டார். இருவரும் ஒருவருக்கொருவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் பேசியது இவ்வளவு நேரமாக தான் போட்ட திட்டம் எல்லாம் வீணோ என வேல்ச்சாமியை நினைக்க வைத்துவிட்டது.

இரயிலேறி இருக்கையில் அமர்ந்தவள் மனமோ பின்னோக்கி அந்த நாளை நோக்கி வேகமாக ஓடியது. 

2 thoughts on “பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top