பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 6

“செவல… நீ சொல்றத மொதல்ல சொல்லு. பிராது கொடுத்தவன் நீதான?” வழக்கு தொடுத்தவனுக்கு முதல் உரிமை வழங்கப்பட்டது. 

ஊரே வேடிக்கை பார்க்க கூடியிருக்கிறது. இதுவரை பனைமட்டையாய் சலசலத்த கூட்டம் பஞ்சாயத்தார் வாய் திறக்க, சட்டென அமைதி காத்தது. 

பஞ்சாயத்தார்க்கு மரியாதை கொடுத்து வலக்கை கொண்டு இடக்கை மணிக்கட்டை பிடித்தவாறு அமைதியாக நின்றிருந்தாள் அழகம்மை. அந்த நிலையிலும் முகத்தில் ஒரு அழுத்தமும், நிமிர்வும்.

அது முதலாளி பொழுதென்பதால் மேல் திசையில் அவ்வளவு சீக்கிரம் போகமாட்டேனென்று அடம்பிடித்து நின்று அழிச்சாட்டியம் பண்ணியது சூரியன். நீ போகலைனா எனக்கென்ன? நான் வந்தே தீருவேன் என வளர்பிறை நிலவும் வந்துநின்றது கீழ்வானத்தில் ஒரு ஓரமாக வேடிக்கை பார்க்க. யார் வரவை எதிர்பார்த்து இரண்டும் காத்துக்கிடக்கிறதென்பது அந்த கடவுளுக்குதான் வெளிச்சம். 

“எம்பொண்டாட்டிய தள்ளி வைக்கிறே நாட்டாமைய்யா!” காலையிலிருந்து போதை தெளியாமல் மேலும் மேலும் ஏற்றிக்கொண்டிருந்தான் போல. இப்பொழுதும் அரை‌போதையில் தள்ளாட்டத்தோடுதான் இருந்தான். சட்டை மேல்பட்டன் இரண்டு கழன்று, இடுப்பில் இருக்கவேண்டிய வேட்டி நெஞ்சுக்கு ஏறியிருந்தது.

காலையிலேயே குடித்துவிட்டு வந்து வீட்டின் முன் சலம்பியவனை, கால் தூசிக்கு கூட மதிக்கவில்லை அழகம்மை. உன்னைப்போல ஆயிரம்பேரை பாத்திருப்பேன் என்றது அவளது எகத்தாளப் பார்வை. நிதானத்தில் இருந்திருந்தால் பதிலுக்கு பதில் கொடுத்திருப்பாள். குடிகாரன்கிட்ட எனக்கென்ன பேச்சு. எனக்கு ஊர்ப்பட்ட வேலையிருக்கு, உன்னைப்போல் வெண்ணெய்வெட்டி நானில்லை என்பவள் போல், முன்தினம் போட்ட குட்டிகளை பால் குடிக்கவிட, அவைகளுக்கு பக்குவம் பண்ண, கொட்டத்து ஆடுகளுக்கு குழை அள்ளிப்போட, தண்ணி வைக்க, கோழிகளுக்கு இறைபோட என வேலையாக இருந்தாள். அவன் தான் வீதியில் நின்று வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருந்தான். குடிமகன்கள் பேசினால் பேசவிட்டு வேடிக்கை மட்டும்தான் பார்க்க வேண்டும். பதில் பேசினால் பேச்சுக்கு பேச்சு வளரும். கொஞ்ச நேரம் சலம்பிவிட்டு சென்றுவிடுவான் என அவள் நினைத்திருக்க,

ஒருகட்டத்திற்கு மேல் பச்சை உடம்புக்காரி என்றுகூடப் பாராமல், திண்ணையில் அமர்ந்து பிள்ளைக்கு பசியமர்த்திக் கொண்டிருந்த அன்னக்கிளியை அடிக்கவர, பிள்ளைகள் இரண்டும் பயத்தில் அலறியது. மார்போடு இறுக்கிப் பிடித்ததில் அன்னக்கிளி கையிலிருந்த ஒருமாதக் கைக்குழந்தையும் வீரிட்டது. 

பின்பக்கம் சட்டைக்காலரோடு இழுத்துப்பிடித்தவள் வீதியில் தள்ளிவிட, போதையில் தள்ளாடி நிற்க முடியாமல் தரையில் விழுந்தான். 

அக்கம்பக்கத்தார் ஓடிவந்து, “இதென்ன கேக்க யாருமில்லாத ஊருன்னு நெனச்சியா? அதான் பஞ்சாயத்துக்கு சொல்லியிருக்கையில்ல. பொழுசாய அங்கவச்சு பேசிக்கோ. அதென்ன ஆம்பளையில்லாத வீட்ல வந்து சலம்பறது.” ஊரார் அதட்டி விலக்கிவிட, எல்லார் முன்னும் கீழே விழுந்ததில் இல்லாத மானம் பங்கப்பட, 

“அதான்‌ பொம்பளைகளா சேந்து நாட்டாமை பண்றாளுகளே? ஜெயிலுக்கு போனவன் அப்படியே போயிறுவேன்னு நெனச்சாளுக போல?” 

“போயிருந்தா நானாவது‌ நிம்மதியா இருந்திருப்பே. பொழச்ச பாடுமில்லாம, செத்தபாடுமில்லாம நாய்ப்பொழப்பு.” அன்னக்கிளி கண்ணீரும் கம்பளையுமாக ஆதங்கத்தைக் கொட்டினாள். 

“இருப்படி… இருப்ப! உங்க இஷ்டத்துக்கு முடிவெடுத்து என் வம்சத்தையே கருவருத்துட்டீங்களேடீ! ஏய்… அழகம்ம! என்னையவா இழுத்து வீதியில தள்ளுற? அடங்காத கொண்டிமாட்ட, மூக்கணாங்கயிறு போட்டு அடக்கி, கொட்டத்துல கட்டல… நான் ஆம்பளையில்லடீ! உங்கள சும்மாவிடமாட்டே.‌ எங்க ஊரு ஆளுகளோட வர்றே!” அவிழ்ந்து முழங்காலுக்கு தொங்கிய வேட்டியை மீண்டும் ஏனோதானோவென இடுப்பில் சுற்றியவன், தள்ளாடி‌ நடந்தான் மீண்டும் சாராயம்‌ காய்ச்சும் இடத்தை தேடி. 

வாயில்லாப் பூச்சியாக பொன்னுத்தாயி கண்ணீர் வடிக்க, “போய் சோத்த வடிம்மா! இன்னைக்குதான் புதுசா பாக்குறியா? கொலைக்கிற நாய் என்னைக்கு கடுச்சுருக்கு. பஞ்சாயத்துல பாத்துக்கலாம்.” என அதட்ட மறுபேச்சில்லாமல் எழுந்து சென்றார். 

காடு கழனிக்கு சென்றவர்கள், காக்கா குருவிகளோடு மீண்டும் கூடு வந்தடைய, கஞ்சி காய்ச்சி குடித்த கையோடு மந்தைக்கல்லில் கூடிவிட்டனர் பஞ்சாயத்து பார்க்க. 

ஒரு பெண், நான் உழைக்கிறேன். நான் சம்பாதிக்கிறேன். யாரையும் அண்டிப்பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை எனும்‌பொழுது அவளிடம்‌ ஒரு தனி நிமிர்வு வரும். அந்த நிமிர்வு ஆம்பளையிடமிருந்தால் ஆம்பளைத்தனம். அதுவே பெண்ணிடமிருந்தால்‌ கொண்டித்தனம்.  அது எல்லார் கண்களையும் உறுத்துவது மனித இயல்புதானே. ரப்புக்காரி, ராங்கிபுடிச்சவ, கொட்டுக்காளி என பலவாறு பட்டங்கட்டப்படும். அழகம்மைக்கும் இதுமாதிரி பலபட்டங்கள் கைவசமுண்டு பல்கலைக்கழகம் சேராமலே.

மனிதனுக்கு ஒரு அல்ப ஆசைங்க. எப்பொழுதும் கெட்டுப்போனவர்கள் கெட்டுப் போனவர்களாகவே இருக்க வேண்டும். எப்பொழுதும் பரிதாபத்திற்குரியவர்களாகவே தெரியவேண்டும். நான் உன்னைப்‌பார்த்து அனுதாபப் படுகிறேன்‌ என சொல்லிக் காட்டவேண்டும். கொஞ்சம் நல்லா இருந்தா இவள கையிலயே பிடிக்கமுடியாது… அதான் ஆட்டுக்கு வால அளந்து வைத்திருப்பதாக எகத்தாளம் பேசவேண்டும்.

அதுவே தாழ்ந்தவர்கள் கொஞ்சம் நன்றாக வந்துவிட்டாலோ, யார் தயவுமில்லாமல் சுயமாக நின்றுவிட்டாலோ, இருந்த இருப்பு தெரியாதா? இவளுக்கு வந்த பவுசைப் பாரென்று அதற்கும் தூற்றும். வாழ்ந்தாலும் ஏசும். தாழ்ந்தாலும் ஏசும். 

“ஆம்பளையாட்டம் அவளா முடிவெடுத்து, சட்டமாத் திரிஞ்சால்ல. அதான் வந்திருக்கியான் ஆப்பு வைக்க!”

“ஒத்த பொம்பளையா அத்தனையும் கட்டியிழுத்து வர்றா. குடிச்சுட்டு கூத்தடிக்கிறவனுக்கு பொம்பள கஷ்டம்‌ எங்க புரியப்போகுது!” 

ஆளாளுக்கு ஒன்றாக பேசிக்கொண்டனர் மந்தையில் கூடியவர்கள். 

“இவ என்‌ வம்சத்தையே தழையவிடாம பண்ணிப்புட்டா நாட்டாமைய்யா. நீங்கதான் இதுக்கு ஒரு‌ தீர்ப்பு சொல்லணும்!” போதையில் மெப்பனையாக ஊரார் முன் அழுதான் செவலக்காளை. அவனது ஊரிலிருந்தும் அவன்‌பக்கம் பேச ஒரு‌ பத்துபேருக்கு சாராயம் வாங்கிக்கொடுத்து அழைத்து வந்திருந்தான்.

“இப்ப எதுக்குடா பொட்டச்சி மாதிரி அழற? அந்த வீட்டுக்கே ஆம்பள ராசியில்ல. ஓரே நாள்ல பெத்தவனையும், பிறந்தவனையும் தூக்கி முழுங்குனவளுகன்னு சொன்னேனே. எம்பேச்ச எங்க கேட்ட. விடியாதவ வீட்ல பொண்ணெடுத்து என் வீடும் வம்சம் தழையாமப் போச்சு!” 

செவலக்காளையின் ஆத்தா குஞ்சம்மா எட்டுக்கட்டைக்கு குரலை உயர்த்தினாள். 

“குஞ்சம்மா! ஏன் இப்படி பேசுற? அதான்‌ ஒன்னுக்கு மூனுன்னு தங்கமா பொம்பளப்பிள்ளைக இருக்கே. அதுகளும் உன் பேத்திகதான?” பஞ்சாயத்தார் பதில் கேள்வி கேட்க,

“பொட்டகோழி கூவியா பொழுது விடியப் போகுது நாட்டாமைய்யா? நாளைக்கு எனக்குனு பேருசொல்ல ஒரு பேரன் வேண்டாமா?” முந்தானைய எடுத்து நீலிக்கண்ணீரை துடைத்தாள் குஞ்சம்மா.

“நான் இன்னொரு கல்யாணம் பண்ணனும். அதுக்கு இவள தீத்து விட்ருங்க? இல்லைனா இந்தப்பஞ்சாயத்த எங்க ஊர்ல வச்சுக்கறே!” கையை ஆட்டி ஆட்டிப்பேசி செவலக்காளை சொன்னதையை மீண்டும் சொல்ல, வேடிக்கை பார்த்தவர்களிடையே சலசலப்பு. 

“அதுக்கு எதுக்கு செவல ரெண்டாங்கல்யாணம்‌ பண்ணனும். அடுத்து ஆம்பளப்புள்ள பொறக்காமலா போகும்?” 

“அதுக்குதான் வழியில்லாம பண்ணிட்டாளுக நாட்டாமய்ய. குடும்பக்கட்டுப்பாடு பண்ணிட்டாளுக. எனக்கு வம்சமில்லாம பண்ணிட்டாளுக. வாரிசில்லாம பண்ணிட்டாளுக. ஆம்பளப்புள்ள வேணும். அதுக்கு நான் ரெண்டாங்கல்யாணம் பண்ணணும்!” நிற்க நிலையில்லாமல் தள்ளாடிக் கொண்டே தன் முடிவில் ஊன்றி நின்றான். 

“இவன் சம்மதிக்காம பண்ணிருக்காங்க. முறைப்படி பாத்தா போலீஸ்டேசன் போயிருக்கனும். எங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்லனு பெரிய மனுசங்க சொல்லிறதக்கூடாதுன்னு தான் உங்க ஊர்ல பஞ்சாயத்து கூட்டினோம்.” அவனோடு வந்தவர்கள் அவனுக்கு சாததமாகப் பேச, இவர்களாலும் ஒன்றும் பேசமுடியவில்லை. அவர்கள் நியாயத்தை அவர்கள் பேசுகிறார்கள். ஆண்பிள்ளை வேண்டுமென இரண்டாம் திருமணம் செய்வதொன்றும் புதிதில்லையே!”

கணவன் அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்தது தவறுதானே‌. இவன் புகாரளித்தால் பிரச்சினை இன்னும் பெரிதாகும். 

மருத்துவமனையில் வேலை செய்த பெண், இவன் ஊர்க்காரி. இவன் ஜெயிலிலிருந்து வந்தவுடன் வத்தி வைத்துவிட்டாள். கேள்விப்பட்டவன் உடனே சாமியாட ஆரம்பித்துவிட்டான்.

“அவன் சொல்றதும் சரிதான? கட்டுனவனக் கேக்காம எப்படி கட்டுப்பாடு பண்ணலாம்?” வேடிக்கை பார்த்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள,

“அதுவும் புருஷன் ஓடிப்போயிட்டான்னு சொல்லியிருக்காளுக நாட்டாமய்யா. புருஷ ஓடிப் போயிட்டா என்னத்துக்கு ஆப்ரேசன் பண்ணனும்கறே. ஆப்ரேசனப் பண்ணிப்புட்டு இவ அக்காகாரி மாதிரி கொண்டிமாட்டாட்டம் ஊர் மேயலாம்னு பாத்தாளா?” குஞ்சம்மா பேச்சில் சேற்றைவாரியிறைக்க, பொங்கிய கோபத்தை பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு பல்லைக் கடித்து அடக்கி நின்றாள். ஆனால் பதில் கொடுக்காவிட்டால் எப்படி?

“இப்ப எந்த அரண்மனைக்கு பட்டங்கட்ட வாரிசில்லைனு ஆத்தாளும், மகனும் ஆம்பளப்புள்ள கேக்குறீங்க? இருக்கறது உலுத்துப்போன ஒத்த ஓட்டு வீடு.‌ அத செம்ம பண்ணக்கூட முடியல. கட்டிக்கொடுத்து பாதி நாள் எந்தங்கச்சி எங்க வீட்லயும், உம்மகன்‌ செயில்லயும் தான்‌ இருக்கான்.‌ என்னைய கேட்டுச்சே இந்தம்மா? புருசன் செத்தப்பின்னாடி இந்தம்மா குடும்பக்கட்டுப்பாடு பண்ணுச்சாமே? புருசனே போனப்பின்னாடி எதுக்கு பண்ணுச்சாம்?” குஞ்சம்மாவை‌ பதிலுக்கு தாக்கினாள். 

“என்ன தெகிரியமிருந்தா என்னப்பாத்து இந்த வார்த்தை கேப்ப? நான் ஒருத்தனுக்கு முந்திவிரிச்சு ஒழுக்கமா புள்ள பெத்தவடீ!” குஞ்சம்மா சேலையை இழுத்துச் செருகி வம்புசண்டைக்கு தயாராக, 

“இந்தாம்மா… உங்க சண்டையப் பாக்கவா கூடியிருக்கோம்.‌ பேசாம நில்லுங்க!” பஞ்சாயத்தார் குஞ்சம்மாவை அடக்கினர். பஞ்சாயத்தாகப் போயிற்று. இல்லையென்றால் குஞ்சாம்மாவை நார்நாராக் கிழித்து தோரணம் தொங்கவிட்டிருப்பாள். 

அன்றைக்கிருந்த பஞ்சப்பாட்டிற்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணியவர்களுக்கு கொடுக்கப்படும் நூற்றைம்பது ரூபாய்க்காக குஞ்சம்மாவும் கட்டுப்பாடு செய்து கொண்டாள். அவர் கணவன் அப்பொழுது உயிரோடே இல்லை. பிள்ளைகளெல்லாம் சிறு பிள்ளைகள்.

“இந்தா பாரு குஞ்சம்மா! உன் மருமகளுக்கு கட்டுப்பாடு பண்ணதப்பத்தி பேசத்தான் பஞ்சாயத்து. அழகம்மையப் பத்திப்பேச இல்ல. அந்தப் பிள்ளைய சிறுசுலருந்து பாக்குறோம். இன்னும் ஒருவார்த்தை அப்படி இப்படி கேள்விப்பட்டதில்ல. வாய்க்கு வந்ததப் பேசாத!” பஞ்சாயத்தார் தன் ஊர் பெண் பிள்ளையை அடுத்த ஊரார்முன் விட்டுக்கொடுக்காமல் கண்டித்து நியாயம் பேசினர். 

கோவக்காரி, திமிர் புடிச்சவ, ராங்கிக்காரி‌, ரப்புக்காரி என‌ பெயர்‌ வாங்கியிருக்கிறாளே‌ ஒழிய,‌ இத்தனை வயதிற்கு அவள் நடத்தைபற்றி ஒருத்தர் ஒரு சொல் ஊருக்குள் பேசியதில்லை. நெருப்புதான் அழகம்மை.‌ இல்லையென்றால், சரசப் பேச்சுகளையும்,‌ சல்லாப பார்வைகளையும்‌ சமாளித்து நிமிர்ந்து நிற்க முடியுமா?

“நீ சொல்லு அழகம்ம! கட்டுனவனக் கேக்காம நீ செஞ்சது தப்புதான? இப்ப தள்ளி வைக்கிறேங்குறான். என்ன பண்ணப் போற?”

“மாமா… நான் ஒன்னு கேக்குறே. புள்ள பொறந்து ஒரு மாசத்துக்கு மேலாச்சு. இத்தன நாளா எங்க போனாப்டினு‌ கேளுங்க?” 

“அது தெரிஞ்சதுதான அழகம்ம. நேத்துதான வெளிய வந்திருக்காப்ல?” 

“அவந்தான் இல்ல. அவங்க ஆத்தா எங்க போச்சு?”

“மரியாதை கொடுக்குறாளா பாரு? உன் வீட்டுக்கு ஆடு மேய்க்கவா வந்தான். அவன்‌ங்கற? மூனாவதும் பொட்டக்கழுதைய என்னத்தவந்து பாக்க? அதுக்குன்னு அவன் வர்றதுக்குள்ள இஷ்ட்டத்துக்கு ஆடுவாளுகளா?”

“இதுக்குதான்‌ மாமா இவன் வர்றதுக்குள்ள பண்ணனும்னது. வெளிய வருவான். வயித்துல கொடுத்துட்டு சாராயக்கேசுல உள்ளபோயி உக்காந்துக்குவான். என்னால எத்தனைய பாக்கமுடியும்? அடுத்து ஆம்பளப்புள்ளதான்னு எழுதியா வாங்கமுடியும்? அதான்… நானே இந்த முடிவு எடுத்தேன். எனக்கு புள்ள பெத்துக்க விருப்பமில்லைனு பெத்துக்கறவ கையெழுத்து போட்டாக்கூட செல்லுபடியாகும். குடும்பகட்டுப்பாடு பண்ணுவாங்க.” அழுத்தம் திருத்தமாக தன்‌பக்கத்து நியாயத்தைச் சொல்ல,

“அவன் ஆம்பளடீ. எத்தன பிள்ள வேணாலும் பெத்துவளக்க திராணியிருக்கு. உனக்கென்ன?”

“பன்னிகூடத்தான் பலகுட்டி போடுது? அப்ப அதுவும்தான் ஆம்பளை?” பதிலுக்கு பதில் பேச்சு வளற சற்று நேரம் பஞ்சாயத்து சலசலத்தது. 

“இப்ப எதுக்கு ஆகாத போகாத பேச்செல்லாம்? ஆனது ஆச்சு. இனிமே ஒன்னும் பண்ணமுடியாது. பொம்பளப்புள்ள பாவம் நமக்கு வேண்டாம் செவல. முடிவா என்ன சொல்ற? வச்சு வாழ்ற வழியப்பாருப்பா! அத்துவிடறதுங்கறது ஆகாத பேச்சு.” பெரிய‌மனிதர்களாய் நியாயாத்தை எடுத்துச் சொல்ல அவன் கேட்பதாக இல்லை. 

“எனக்கு ஆம்பளப்புள்ள வேணும். அதுக்கு ரெண்டாங் கல்யாணம் பண்ணனும். வேணும்னா நான்‌ ஒரு யோசனை‌சொல்றே.” என பேச்சை நிறுத்தினான். 

“அத்துவிடறதத் தவிர வேற யோசனையிருந்தா சொல்லு! அதுக்கு நாங்க சம்மதிக்கிறோம்.”

“அத்துவிட வேண்டாம். அக்காகாரியே சக்களாத்தியா வந்துட்டா ஒத்து இருந்துட்டு போறாளுக?” செவலக்காளை வாயெல்லாம் பல்லாக அழகம்மையைப் பார்த்தான். 

கடைசியில் இவன் அங்க சுத்தி, இங்க சுத்தி எதுக்கு இத்தனை கலவரம்‌செய்தான் என புரிந்து போனது. பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி இரண்டாம் தாரமாக அழகம்மையை பெண் கேட்பதுதான் அவனது நோக்கம். 

“நானும் சும்மா சொல்லல. அதுவும் எத்தனை

நாளைக்குதான் மொகட்டுவளையப்பாத்துட்டு படுத்திருக்கும். அழகுக்கும் வாழ்க்கை கொடுத்த மாதிரியும் ஆச்சு. அக்கா தங்கச்சிகளுக்குள்ள பிரச்சினையும் வராது. வந்தாலும் ஒத்துப் போயிருவாளுக.” 

அவன் கேட்டு வாய் மூடவில்லை,

“நானும் காலையிலருந்து பாக்குறேன். ஏதோ பொண்ணெடுத்தவனாச்சேனு அமைதியா போனா, கேக்க ஆளில்லைனு நெனச்சியா? உன் இஷ்ட்டத்துக்கு மந்தையிலவச்சு பொண்ணு கேக்குற? என்ன மாமா! நீங்களும் பேசவிட்டு வேடிக்கை பாக்குறீங்க. நம்ம ஊருப்பொண்ணு அவனுக்கு கிள்ளுக்கீரையா? பஞ்சாயத்துக்கு மரியாதை கொடுத்து அழகு அமைதியா நிக்கிது. இல்லைனா இந்நேரம் ஆட்டுக்கு குழையறுக்கறமாதிரி அறுத்துப் போட்டு போயிருக்கும்!” முருகேசன் ஆவேசமாக துள்ளிக்கொண்டு வந்தான். சிறுவயதிலிருந்து ஒன்றாகவே வளர்ந்த பிணைப்பு. எப்பொழுதும் இவள்‌மீது ஒரு‌ தனி‌ வாஞ்சையுண்டு. 

இறுக்கமாகவே நின்றிருந்தாள்‌ அழகம்மை. குமுறிக்கொண்டிருந்தாள் கொட்ட முடியாமல். அத்தாச்சி என்ற சொல்லுக்கு அடுத்த சொல் சொல்லாதவன். அழகு என வாய் கூசாமல் பெயர் சொல்கிறான். எங்கிருந்து வந்தது இம்பூட்டு தைரியம். சட்டென அநாதரவாய்‌ நிற்பது போல் உணர்ந்தாள் அழகி. 

யார் கொடுத்த இடம். ஆண்பிள்ளை என்கிற திமிரா? தங்கை வாழ்க்கையைப் பணயமாக்கி தன்னை விலைபேச எவ்வளவு திண்ணக்கம் இவனுக்கு. அவ்வளவா இளக்காரமாகப் போய்விட்டேன். சட்டென ஓய்ந்து போனதொரு உணர்வு. கண்கள் சிவந்து விட, ஊரார் முன் தன் பலவீனத்தைக் காட்ட விருப்பமில்லாமல், ஆழ்ந்து மூச்செடுத்து உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்தாள். 

தன் மகள்களின் நிலையை நினைத்து, குழந்தையை கையில் வைத்துக் கொண்டு ஓரமாக கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார் பொன்னுத்தாயி. அவனை சபிக்கக்கூட முடியாத தன் கையாலாகாத்தனத்தை எண்ணி. அவனை சபித்தால் அதில் தன் மகளோட வாழ்க்கையுமல்லவா அடங்கியிருக்கிறது. அடிச்சாலும் புடிச்சாலும் அவனோடுதானே வாழ்ந்தாக வேண்டும். பேருக்காகவாவது புருஷன்னும், பிள்ளைகளுக்கு அப்பன்னும் ஒருத்தன் தேவைப்படுகிறானே. ஆண் துணையில்லாமல் தன் பிள்ளைகள் படும்பாட்டைத்தான் கண்முன்னே பார்க்கிறாரே? 

பஞ்சாயத்தார் பேசுவதற்குள் அன்னக்கிளி, “ஈனப்பயலே! அவ உன்னவிட அஞ்சுவருஷம் மூத்தவடா! கடைசியில அடிமடியிலயே கை வைக்கிறீயா? நீ என்ன என்னை அத்துவிடறது. நானே உன்ன அத்துவிடுறே!‌ உன் சங்காத்தமே வேண்டாம். அறுத்ததா நெனச்சுக்கறே! கல்ல கடஞ்சாவது கஞ்சி ஊத்தி எம்பிள்ளைகள ஆளாக்கிருவே!” ஆங்காரமாய் எழுந்து வந்தவள் கழுத்தில் கிடந்த தாலிக்கயிற்றில் கைவைக்க,

“விருந்தாளி மாதிரி அப்பப்ப ஜெயிலுக்கு போயிட்டு வர்ற‌ நீ, நிரந்தரமா வருஷக்கணக்குல போய் உக்கார்றதுன்னு‌‌ முடிவு பண்ணிட்ட போல?” 

அத்தனை‌பேர் சத்தத்தையும் மீறி‌‌ அந்த அந்தி மயங்கிய‌ வேளையில் கணீரென‌ சம்மட்டி அடியாய் ஓங்கி ஒலித்தது ஒரு குரல். அத்தனை‌பேர்‌ பார்வையும் யாரென திரும்பிப் பார்க்க, ஒருத்தி மட்டும் சிலையென அசையாமல் அப்படியே நின்றாள். அவளுக்குள் ஒரு பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது. அண்டசராசரமும் திடீரென தன் இயக்கத்தை நிறுத்திவிட்டதைப் போல் அவளுக்குள் ஒரு பிரமை. நகர்ந்தாலே காணும் காட்சி கலைந்து விடுமோ என்ற பயம். கேட்ட குரல் பொய்யாகிவிடுமோ என்றொரு அச்சம். தனக்குள் தினமும் தனக்காக வாஞ்சையாக ஒலித்த குரல். ஆனால் இப்பொழுது கணீரென! என்னதான் கால்களை தரையில் அழுந்தப் பதித்து நின்றாலும், அடிவயிறு குழைந்து கால்கள் வலுவிழப்பதுபோல் ஒரு உணர்வு. பேரிளம் பருவத்தை தொட்டுவிடும் தூரத்தில் இருப்பவளுக்கு மனதை இறுக்கிப் பிடிக்க, இன்னதென இனம் காணமுடியா உணர்வது. மீண்டும் பதினாறு வயது குமரியானது போல், இத்தனை‌ நாட்களாக மரத்துவிட்டதாக அவளே நினைத்திருக்க, பூட்டி வைத்த உணர்வுகள் பேயாட்டாம்‌போட்டது அவளுக்குள். 

“வந்துட்டான்டீ ஆத்தா! இனி நீயாச்சு! அவனாச்சு!” வேடிக்கை பார்த்து நின்ற அந்தி‌ சூரியன் அவளிடம் விடைபெற, ஆயிரம் நிலவு அவள்‌ கண்முன் தோன்றி ஒளி வீசியது. 

ஏறெடுத்துப் பார்க்கத்தான் பாதகத்திக்கு தெம்பில்லை. இத்தனை நேரமிருந்த திமிர், துணிச்சல், வீம்பு, வீராப்பெல்லாம் தாய் மடி‌தேடும் குழந்தையனெ சட்டென துவண்டு போனது. 

“யாருப்பா அது? உள்ளூர் பஞ்சாயத்துல அசலூர்க்காரன்? தம்பிக்கு எந்த ஊரு?” நாட்டாமை கேள்வி கேட்க, 

யாரது… ஆபிசரா! மாட்டுக்கு ஊசி போடுறவனா! இல்ல மனுஷனுக்கு ஊசி போடுறவனா! ஆடுமாட்டுக்கு லோனு கொடுப்பவனா! அவுகளுக்கெல்லாம் இந்த நேரத்தில் வேலையில்லையே? ஒரு வேளை… போன மூனாம் வருஷம் சினிமாப்படம் எடுத்தாகளே? அது மாதிரி சினிமாப்புடிக்க வந்த ஹீரோவா? என தங்களுக்குள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க,

“யாரு அத்தாச்சி இது?” வெளியூரிலிருந்து வாக்கப்பட்டு வந்த ஒருத்தி, அங்கேயே பிறந்து உள்ளூரிலேயே வாக்கப்பட்ட ஒருத்தியிடம், வாயில் கைவைத்து ஆச்சர்யமாகக் கேட்க, அவளுக்கும் தெரியவில்லை என உதடு பிதுக்கி கையை விரித்தாள். 

“என்ன மாமா? தெரியலியா?” என முருகேசன் நாட்டாமை முன் வந்தான். 

“நம்ம ஊருக்குள்ள ப்ளெசர் கார்ல வர்றளவுக்கு யாரு முருகேசா? என கேட்டு தலை தூக்கிப் பார்த்தார். அவருக்கு முன் ஊர்ச்சனமே அவனைத்தான் வேடிக்கை பார்த்தது. 

“ஏன்டீ! நம்மூர்ல சினிமாப்படமேதும் எடுக்கப்போறாகளா?” ஊரே சலசலத்தது.

அம்பாசிடர் காரின்‌ முன்பக்கம் ஒரு காலை மடக்கி வைத்து, கைகளைக் மார்பின் குறுக்காக கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றிருந்தான். வெள்ளைகலரில் பேண்ட்டும், அரைக்கை சட்டையும். சட்டையை டக் இன் செய்திருந்தான். கழுத்தைச் சுற்றி சிவப்பு கலரில் கையகலத்தில் மஃப்ளர். அலையடிக்கும் கேசத்தோடு கிராப் வெட்டிய சிகை. மளமளவென வழித்த பளபளத்த செழுமையான கன்னம். காலில் லெதர் ஷு. அளவாக நறுக்கிய அடர்ந்த மீசை. ஊரே அவனை வேடிக்கை பார்க்க அவன் பார்வை மட்டும் ஒருத்தி மீதுதான். 

“யாரு முருகேசா?” வழக்கு மறந்து வந்தவன் யாரென்று ஆராய்ச்சி தொடங்கியது. 

“நம்ம வேல்ச்சாமி மாமா மகன் சித்தாதான் மாமா!” என வாய்மூடுமுன்,

சாவடியில் இருந்து பளிச்சென குதித்து இறங்கினார் நாட்டாமை பத்து வயது குறைந்தவராக. 

“அடேய்! நம்ம சித்தனா இது? வாப்பா! வாப்பா!” என சரிந்த துண்டை சரி பண்ணிக்கொண்டே அவனை நோக்கி வேகமாக முன்னேற, அதற்குள் ஊர்ச்சனமும் அவனை‌ச்சுற்றி மொய்த்துக் கொண்டது. ஆளாளுக்கு கேள்வி கேட்டனர். அவனால் யாருக்கும் பதில் சொல்ல முடியவில்லை. பதில் சொல்ல விட்டால்தானே! 

பெற்றவர்களை நலம் விசாரிப்பவர்கள் ஒரு‌பக்கம், உடன்‌ பிறப்புகளை நலம் விசாரிப்பவர்கள்‌ ஒரு‌ பக்கம், அவனை நலம் விசாரிக்கும் அவன் சோட்டு ஆட்கள் என சுற்றி நின்று மொய்த்துவிட்டனர்.

மணிக்கட்டைப் பிடித்திருந்தவள் கையின்‌ பிடி இறுகியது. அவளையும் மீறி‌ கண்கள் கண்ணீர் சொறிய, உதடு கடித்து அடக்க முற்பட, அவள் கண்முன் வந்துவிட்டான் அவளது சித்தன். 

அன்று அவளிடம் சம்மதம் கேட்டு நின்ற ரெண்டும் கெட்ட விடலைப்பையனில்லை.

முப்பது வயதிற்குரிய முழு ஆண்மகனாக, கம்பீரமாக, களையாக, வாலிபமாக, வனப்பாக. 

*****

பொழுதுகளில் பெரும்பொழுது ஆறு. சிறுபொழுது ஆறு. இயற்கை கொண்டு ஐந்திணை வகுத்தது. 

சூரியன் உதிப்பதைக் கொண்டு முதலாளி‌ பொழுது, கூலிக்காரன் பொழுது என்பது மனுஷன் வகுத்தது. சூரியன் வெள்ளென உதிச்சு, தாமதமா அடையற பொழுது முதலாளிகளுக்கு சாதகமான பொழுது (பகல் நேரம் அதிகமென்பதால்). அது முதலாளி பொழுது. 

சூரியன் சோம்பலாக எழுந்து, அவசர அவசரமாக அடையற பொழுது (பகல் பொழுது குறைவு). தொழிலாளிகளுக்கு சாதகமான பொழுதென்பதால்‌ அது கூலிக்காரன் பொழுது.

எப்பொழுதோ சிறுவயதில் கேட்டது. 

commend pls

3 thoughts on “ பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 6”

    1. இலை, தழைன்னு சொல்ற மாதிரி ஆட்டுக்கு போடுற தீனி தாம்மா அது. அகத்தி குழை, வேப்பங்குழைன்னு சொல்றது. அகத்தி கட்டுன்னு சொல்வோம்ல அந்த மாதிரி
      Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top