பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 5

“இதனால ஊரு சனங்களுக்கு தெரிவிக்கறது என்னான்னா… நம்ம காவக்காரர் வீராச்சாமி வீட்ல திருட வந்ததா, சொக்கலிங்கம் மகன் கண்ணையன்‌ மேல பிராது கொடுத்துருக்காங்க. பொழுதுசாய‌ மந்தக்கல்லுல பஞ்சாயத்து. வீடுதவறாம வந்து சேரணும்கறது நாட்டாமக்காரர் உத்தரவு. எல்லாரும் வந்துருங்க சாமியோவ்” என தெரு முழுக்க தமுக்கடித்து சாட்டிச்செல்ல, தோட்டங்காட்டில் வேலை பார்த்தவர்கள் எல்லாருக்கும் செய்தி காட்டுத்தீபோல பரவியது. 

“யாருடீ அது! காவக்காரர் வீட்லயே கைவரிசயக் காட்டுனது? அதுவும் பட்டப்பகல்ல!”

“அதா சொல்றாங்களே! சொக்கலிங்கம் மகன்னு.”

“அந்தாளு ஒரு அப்பராணியாச்சே. எந்த வம்புதும்புக்கும் போகமாட்டாரே.”

“அதுக்கு பதிலாத்தா அவரு மகனிருக்கானே. ஊர்வம்ப வெலகொடுத்து வாங்க.”

சும்மா மெல்ற வாய்க்கு அவல் கெடச்சா சும்மா விடுமா ஊர்சனம்.‌ வேடிக்கை பார்க்கப்போகும் சுவாரஸ்யத்தில் காட்டில் களையெடுப்பு வேகம் கூடியது. காடுகரையெல்லாம் அன்று‌முழுவதும் அந்தப் பேச்சுதான் அலசிவந்தது. 

கடலைச்செடியின்‌ வேரைத்திருகி ஆய்ந்துகொண்டிருந்த வேணியை, புனிதா கேள்வியாகப் பார்க்க, அவள் முகம் பயத்தில் வெளிறிப்போயிருந்தது. கண்ணீர் இப்பவோ அப்பவோ என தளுதளுத்து நின்றது.

“என்னடீ நடந்துச்சு?” சந்தேகமாக புனிதா வேணியைப் பார்க்க,

“தெரியலடீ!” குரல் உள்ளிறங்கியது. 

“எனக்கே காது குத்தாத. கண்ணையன் திருடவா உன்‌ வீட்டுக்கு வந்துச்சு?”

“…”

“ஏதாவது சொல்லுடீ! எங்கிட்டயே அமுக்குணி‌ மாதிரி நடிக்காத!”

“நான் வரச்சொல்லலடீ.”

“ஆனா, வந்தது உன்னப் பாக்கதான?” 

“…”

“மொதல்லயே உங்கிட்ட சொன்னேன். நீதான் கேக்கல. இப்பப்பாரு பஞ்சாயத்து வரைக்கும் வந்துருச்சு. என்ன நடக்குமோனு நெனச்சா எனக்கே ஈரக்கொல நடுங்குது. இதால ஊருக்குள்ள சாதிக்கலவரம் வந்துருமோனு பயமாயிருக்கு வேணி.” 

“நீ வேற பயமுறுத்தாதடீ. நானே பயந்து  போயிருக்கே.” படபடத்து வந்தது வேணிக்கு. என்ன நடக்குமோ என்ற பயத்தில் அடிவயிற்றை இறுக்கிப்பிடித்தது.

“உப்புத்திண்ணவ தண்ணியக்குடிச்சுதான் ஆகணும். இப்ப பஞ்சாயத்துல உன்னப் பாக்கதான் வந்தேனு சொன்னா என்னடீ பண்ணுவ?”

“திரும்பதிரும்ப அதையே சொல்லாத புனிதா. நான் வரச்சொல்லலடீ. ஒரு வாரமா ஆளு ஊர்லயே இல்ல. வந்தவுடனே பாக்க வந்துருச்சு. நான் என்ன பண்றது?” என்றவள் குரல் பயத்தில் நடுங்கியது. 

காதல்… அது கொடுக்கும் அசட்டுத் தைரியம் என்பதைவிட‌ குருட்டுத்தைரியம் வேறெதுவும் கொடுப்பதில்லை. ஆசைப்பட்டவளை‌ ஒரு வாரமாக பார்க்காத ஏக்கம், காலையிலேயே கண்ணையனை வேணி வீடுவரை இழுத்து வந்திருந்தது.‌ 

ஒரே ஊர். அடுத்தடுத்த தெரு. வேறுவேறு சாதி. பருவத்தில் காதல் வரவில்லை என்றால் அந்த பருவத்திற்குதான் என்ன மரியாதை? இவர்களுக்குள்ளும் வீணாப்போன காதல் சாதிபார்க்காமல் வந்து தொலைத்துவிட்டது. 

வேணியை காட்டிற்கு சோறாக்கி எடுத்து வரச்சொல்லி விட்டு, கூலியாட்கள் வருவதற்குள், வீராச்சாமி மனைவியோடு தோட்டத்திற்கு கிளம்பிவிட்டார். இன்று அவர்கள் தோட்டத்தில் கடலை எடுப்பதால் ஆட்கள் வரும்முன், கடலைச்செடி பிடுங்கி வைக்க, மகளை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு வெயிலுக்குமுன் மகன், மனைவியோடு தோட்டத்திற்கு கிளம்பிவிட்டனர். அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியதைப் பார்த்த கண்ணையன், வேணி தனியாக இருப்பாள் எனத்தெரிந்துகொண்டு, அக்கம்பக்கம் பார்த்து உள்ளே சட்டென நுழைந்துவிட்டான். முதலில் அரண்டவள், தனிமை கொடுத்த தைரியத்தில், காதலனை கண்ட மயக்கத்தில், தனை மறந்து இருவரும் மோன நிலைக்கு செல்ல, எதையோ மறந்து வைத்துவிட்டு சென்ற வீராச்சாமி, பொண்டாட்டியையும், மகன்களையும் போகச் சொல்லிவிட்டு வீடு திரும்பிவிட்டார். 

வாசலில் செருப்பு கழற்றும் சத்தத்திலேயே சுதாரித்தவள், கையும் களவுமாக மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் என்ன செய்வதென்று புரியாமல் கைகால்கள் வெலவெலத்துப்போக, கண்ணையன் சுதாரிப்பாக பரணேறிவிட்டான். 

அது பண்டபாத்திரங்கள் போட்டு வைக்கும் பலகையடைத்த பரண். 

“வேணி, நீயும் கெளம்பு. ஆளும்பேருமா சேந்து பிடிங்கிவச்சா சீக்கிரம்  வேலமுடியும்.” மறந்து சென்ற பீடிக்கட்டை எடுத்துக் கொண்டு, மகளையும் உடன் அழைக்க, 

“இன்னும்‌ சோறாக்கலப்பா” என்றாள் உள்வாங்கிய குரலில். 

“சட்னி, சாம்பார் வாங்க தூக்குவாலிய எடுத்துக்க. வேல்ச்சாமி கடையில ஆளுக்கு நாலு இட்லிய கட்டிவாங்கிக்கலாம். வெயிலேறவும் நீ வந்துறு. மதியத்துக்கு சோறாக்கி எடுத்துட்டு வருவியாம்!” 

திருடனுக்கு தேள்கொட்டின கதையாக, என்ன செய்வதென்று தெரியாமல் அப்பனோடு வேணி கிளம்பிவிட, வேளியே வந்து கதவை இழுத்துப் பூட்டிவிட்டார் அவன் உள்ளே இருப்பது தெரியாமல். 

போகும் வழியில் ஆவுடை இட்லி கடையில்  இட்லிகட்டி வாங்கிக் கொண்டனர். 

“இத புனிதாகிட்ட கொடுத்துறு வேணி. உங்க தோட்டத்துப்பக்கம் தான் மாடோட்டிப் போயிருக்கா” மகளுக்கும் சேர்த்து கட்டிக்கொடுத்தாள் ஆவுடை.

கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த ஆவுடைக்கு கர்பப்பையில் பிரச்சினை வந்து நீக்கிவிட, உடம்புதேறும் வரை வேலைக்கு செல்ல முடியவில்லை. 

ஊர்ப்பஞ்சாயத்து, ஊர் நியாயாமென வேல்ச்சாமி எப்பொழுதும் வெள்ளை மங்காத வெள்ளச்சாமிதான். 

வாழ்ந்துகெட்ட குடும்பத்தார்க்கு இருக்கும் ஆகப்பெரிய சங்கட்டம், உள்ளூர்‌, வெளியூர் என எங்கும் கூலி வேலைக்கு செல்லமுடியாது. வேலைக்கு இவர்களை கூப்பிடுபவர்களுக்கும் தயக்கம். யாரிடமும் வேலை கேட்டுப்போகவும் இவர்களுக்கு சங்கட்டம். தன் நிலையிலிருந்து இறங்கி வர வெட்டிக்கௌரவம் இடம் கொடுக்காது. குடிக்கிறது கூழா இருந்தாலும், பகட்டாக பல்குத்திக் கொண்டே வெளிவரும் வெட்டிப்பந்தா வேல்ச்சாமி. அவருக்கு விபரம் தெரிந்தவரைக்குமே ஆடுமாடு‌ மேய்க்க அவர் வீட்டிலேயே கூலியாட்கள் இருந்தனர். சொத்து சேர்றது தான் தெரியும். போறது தெரியாதுங்கறமாதிரி வளற வளற வறுமையும் கூடவே வளர்ந்தது. மாட்டுத்தரகு, நெல் வியாபாரம் போன்ற உடல் வணங்காத வேலைகள்தான் பார்ப்பது. பால் மாடுகள்தான் கைகொடுத்தன. நான்கு புள்ளகுட்டி இருக்குற வீட்ல அதுவும் கைக்கும் வாய்க்கும் தான். 

கூலி வேலைக்கு போகமுடியாத நிலையில் ஆவுடைதான் இட்லி கடை போடலாமென யோசனை கூற, அதுவும் நல்ல யோசனையாகப்பட்டது. அப்பவும் வெள்ளைமங்காமல் கல்லாவில் உட்கார்ந்து கொண்டார். பழைய ஜம்பம் குறையவில்லை என்பதைவிட விட்டு இறங்க கௌரவம் இடம் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. அடுப்படியில் ஆவுடைதான். பள்ளிக்கூடம் விட்டு வந்து சித்தனும்‌, மாடு மேய்த்துவிட்டு வந்து புனிதாவும் சேர்ந்துதான் மாவாட்டி கொடுப்பார்கள். ஓரளவிற்கு கையைக் கடிக்காமல் பொழப்பு‌ ஓடுகிறது. 

இட்லியை வாங்கிக்கொண்டு, வேணி தவிப்போடு காடு வந்துசேர்ந்தாள். பொண்டாட்டியிடம் இட்லியைக் கொடுக்க.

“ஏன்டீ… கஞ்சி காச்சலியா? இந்த வெயிலுக்கு இட்லியத்திண்ணா வெடுவெடுன்னு வருமே?” அய்யம்மா அலுத்துக்கொள்ள, வேணிக்கு நினைப்பு பூராம் பரண் மீதுதான். எப்பொழுது வீடு திரும்புவோம் என்றிருந்தாள்.

கூலியாட்களும் வந்து சேர்ந்தனர். மாடுகளை கட்டி வைத்துவிட்டு புனிதாவும் வந்தாள். கடலை உடைத்து திண்றுகொண்டே வேணியிடம் ஏதேதோ கதை பேச, அவள் கவனம் அவளிடம் இல்லை. 

வெயில் ஏற ஆரம்பிக்க, அய்யம்மாள்‌ வீட்டிற்கு சோறாக்கிவர கிளம்ப, தான் போவதாக அம்மாவிடம் மல்லுகட்டினாள். 

“இல்லடீ… நான் தூரமாயிட்டேன்னு நெனைக்கிறே. தலைக்கு குளிக்கணும். நீ ஆளுகளோடு இரு. நாம பின்தங்குனா நெழிச்சுக் கொடுத்துருவாளுக.” ஆட்களோடு ஆட்களாக நாமும் கைவைத்தால்தான் வேலைநடக்குமென, மகளிடம்‌ சொல்லிவிட்டு வீடு செல்ல, வேணிக்குதான் என்ன நடக்கப் போகுதோ என்ற கலவரத்தில் இருப்பு கொள்ளவில்லை.‌ நெருப்பில் நிற்பவள் போல் தவித்துப் போனாள். 

சற்று நேரத்திற்கெல்லாம் தலையாரி‌ சாட்டுவது காடு வரை எட்டியது. 

புனிதா அவளை கேள்வி மேல் கேள்வி கேட்க நடந்ததை கூறினாள். 

“கூறுகெட்டவளே, இப்ப என்னடீ‌ பண்ணச் போற. பஞ்சாயத்துல உன்னப்பாக்கதான் வந்ததா சொன்னா‌ என்ன பண்ணமுடியும்?” 

அரங்கேறப்போகும் அவமானத்தை நினைத்து உள்ளுக்குள்‌ கதிகலங்கிப்போனாள் வேணி. ஊருக்குள்‌ தெரிந்தால் மானம், மரியாதை என்னாவது. வீராச்சாமி சாதிசனத்திற்குப் பயந்து மகளை‌ வெட்டிப்போட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதைவிட பஞ்சாயத்தார் முன் நிற்கும் நிலைவந்தால், அதை நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கியது. இப்படியே மண்ணிற்குள் புதைந்துவிட்டால் தேவலாம் என்றிருந்தது.

வீராச்சாமியும் பொண்டாட்டியுடன் வீட்டிற்கு திரும்பியவர், அவர்தான் கதவைத் திறந்தார். சட்டென அவரைத் தள்ளிவிட்டு ஒரு உருவம் வெளியே ஓட, யாரென அடையாளம் காணும் முன் கீழே விழுந்துவிட்டார். பின்னால் வந்த அய்யம்மாதான் கண்டுகொண்டார். பதட்டத்தில் திருடன், திருடன் என கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிவிட்டார். 

ஆட்கள் கூடிவிட, யாரெனத் தெரியவும் பஞ்சாயத்தில் பேசிக் கொள்ளலாமென முடிவாகி, சாட்டச்சொல்லிவிட்டனர். 

வீராச்சாமிக்கு சந்தேகம். அவர்தான் கதவைப்பூட்டினார். அவர் தான் கதவைத்திறந்தார். அப்படியானால் பூட்டுமுன் அவன் உள்ளே இருந்திருக்க வேண்டும். மகள் வீட்டில்தான் தனியே இருந்தாள். ஏதோ அவருக்கு உறுத்தியது. அவசரப்பட்டு பஞ்சாயத்திற்கு சொல்லியாகிவிட்டது. பொண்டாட்டி அலறாமல் இருந்திருந்தாலாவது காதும் காதும் வைத்தமாதிரி மகளிடம் விசாரித்திருக்கலாம். இப்பொழுது எல்லாம் கைமீறி போய்விட்டது. 

அவன் திருடவந்ததாகவே இருக்கட்டுமென தனக்கு எழுந்த சந்தேகத்தை மனைவியிடம் கூட சொல்லவில்லை. மீண்டும் காட்டுக்கு சென்று கடலையை மூட்டை கட்டி, வண்டியேற்றி அனுப்பும் வரை எதுவும் தெரிந்தது போல் மகளிடமும் காட்டிக்கொள்ளவில்லை. அவள் முகம்தான் பேயறைந்ததுபோல் எல்லாவற்றையும்‌ சொல்லாமல் சொன்னதே அப்பனுக்கு.

இரவு பஞ்சாயத்து கூடியது. கண்ணையன் ஊரில் இல்லை. ஓடியவன் எங்கு போனான் எனத் தெரியவில்லை. அவனது அப்பாதான்‌ பஞ்சாயத்தில் கைகட்டி நின்றார். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பவர். போஸ்ட் மாஸ்ட்டர்.‌ அடாவடிக்கும் அவருக்கும் ரொம்ப தூரம். மானம் மரியாதைக்கு அஞ்சுபவர். அப்பனுக்கு புள்ள தப்ப பிறந்தவன் கண்ணையன்.‌ மோசமானவன்‌‌ என சொல்லமுடியாது. ஆனால் வெவகாரம் புடிச்சவன்.

கையும் களவுமாக பிடிபட்டதாலும், அவன் ஓடியதை ஊரார் பார்த்ததாலும் திருடவந்தாகவே ஊர்ஜிதம் பண்ணி, மகனுக்குப் பதிலாக அவரை ஊரார்‌காலில் விழுந்து பஞ்சாயத்திற்கு தண்டத்தொகை கட்டச் சொன்னார்கள் ஊர் பெரிய தலைகள். அதோடு விட்டிருந்தால் பின்னால் வரும் பெரிய இடரைத் தடுத்திருக்கலாம். மகன் வரும்வரை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகக் கூற, பூஞ்சை மனதுக்காரரால் இந்த அவமானத்தையும், ஒதுக்கத்தையும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதில் நாட்டாமைக்காரர், வேல்ச்சாமி, கண்ணையன் சாதி ஆட்கள் உள்பட எல்லாரும்தான் அடக்கம். சாதிக்கொருவர்‌ முதன்மைக்காரரென பஞ்சாயத்துகுழுவில் இருப்பர். 

காலில் விழுவதென்றால் சும்மா இல்லை. துண்டை உருமுடி சுருட்டி பஞ்சாயத்தார் முன்னால் வைத்து நெடுஞ்சாண்கிடையாக விழவேண்டும். பெண்கள் மானம், முந்தானையில் என்றால், ஆண்கள் மானம் மேல் துண்டில். அது தோளில் கிடந்தால் மரியாதை. இடுப்புக்கு வந்தால் பணிவு. தலைக்கு ஏறினால் கௌரவம். குறுக்கே போட்டு தாண்டினால்‌ சத்தியம். சட்டை போடாமல் திரிவார்களே ஒழிய, மேல்துண்டில்லாமல் யாரையும் பார்க்க முடியாது. அதே துண்டை சுருட்டி பஞ்சாயத்தார் முன் வைத்து காலில் விழுந்தால், அதன் பிறகு தலை நிமிரமுடியாது. 

வேறு வழியில்லாமல் பஞ்சாயத்தார் சொன்னதை செய்துவிட்டு வீடு வந்தவர், மானம்போன விரக்தியில் தூக்கில் தொங்கிவிட்டார். 

விஷயமறிந்து ஊருக்குள் வந்தவன், அரிவாள் எடுத்து வெட்டுவேன், குத்துவேன் என நின்றான்.‌ அவனுடன்‌ சேர்ந்து கொண்டு இளவட்டங்களும் தடியெடுக்க, சாதிக்கலவரமாகிவிடுமென சொந்தபந்தங்கள் இழுத்துப் பிடித்து அமைதிப்படுத்தினர். இறுதிக் காரியம் முடியட்டும்‌ என்றனர். அப்பனுக்கு வைத்த கொள்ளி அணைந்தாலும் கண்ணையன் நெஞ்சில் விழுந்த தீ அணையவில்லை. 

என் வீட்டில் விழுந்த எழவு எல்லார்‌ வீட்லயும் விழ வேண்டுமென கன்னம் வைத்தான் கண்ணையன். 

சிவன் முதுகில் பட்ட அடி எல்லார் முதுகிலும் விழுந்த கதையாகிப் போனது அடுத்த சில நாட்களில். ஊமையாக இருந்து ஊட்டியறுத்துவிட்டான். 

*****

“அம்மா… அழகம்மைய பொண்ணு கேளும்மா.”

சோளம் இடித்துக்கொண்டிருந்தவளிடம் நடேசன் அழகம்மையை பெண் கேட்கச்சொல்ல, உலக்கையை கீழே போட்டுவிட்டு, 

“எடு‌ அந்த வெளக்கமாத்த! ஒழுங்கா புடுச்சு ஒன்னுக்குப் போகத்தெரியாது. அதுக்குள்ள ஒனக்கு கல்யாணம் கேக்குதா?” கையிலெடுத்த விளக்குமாறின் தூரை திருப்பிப்பிடிக்க,

“அவதான் வயசுக்கு வந்துட்டால்ல?” என்றான்‌ நடேசன் உரலைச்சுற்றி ஓடிக்கொண்டே. 

“அதுக்குன்னு வெறுஞ்சிரிக்கியக் கட்டி என்னடா பண்ணுவ?”

“ஒனக்கு சித்தப்பா பேத்திதானம்மா?” என்றான்‌ நாகம்மாவின் கைகளைப் இறுக்கிப் பிடித்துக்கொண்டு. 

“அண்ணே மகங்கறதுக்காக, வெறும்பய‌ மகள நடுவீட்ல கொண்டுவந்து வச்சு சீராட்டச்சொல்றியா? நுனி மூக்குத்திகூட போட வக்கில்லாமதான, சடங்காகி வருஷமாகியும் வீட்டைவிட்டு வெளியேத்த முடியாம இருக்கா. சீர்செய்ய மாமன்‌மச்சானில்லாத வீட்ல பொண்ணு கட்டப்போறயா?” பெண்ணிற்கு வயது கணக்கில்லை. வயதுக்கு வருவதுதான் கணக்கு. என்னதான் ஒன்னுக்குள்ள ஒன்னு என்றாலும் வசதி வாய்ப்பில்லாத வீட்டில் பெண்ணெடுக்க மனமில்லை நாகம்மாவுக்கு. 

“அதான் மச்சான் பொறந்துட்டானே”

“பால்குடிக்கிறவன்‌ வந்து ஒனக்கு சீர்‌ செய்வானாடா? வெளங்காத வெங்கம்பயலே! இனிமே இந்த மாதிரி ஏதாவது பேசிட்டு திரிஞ்ச…” உலக்கை குத்தும் வேகத்திற்கு‌ எசப்பாட்டு போல, விடாமல் பேச்சும் தொடர்ந்து கொண்டிருக்க, சாப்பிடாமல் கூட மாட்டைப் பிடித்துக் கொண்டு கோபமாக கிளம்பிவிட்டான். 

கருப்பசாமி புண்ணியமோ என்னவோ பொன்னுத்தாயிக்கு ஐந்து பெண் குழந்தைகளுக்கடுத்து ஆண்குழந்தை பிறந்துவிட்டது. மகனை தரையில் கூட விடுவதில்லை. அதான் அஞ்சு இருக்கே.‌ மாற்றி மாற்றி தூக்கிவைத்து கொண்டாடினர். 

மாட்டை மேய்ச்சல் காட்டில் கட்டிவைத்துவிட்டு நேராக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தளிடம் வந்தான். மெருகு போடப்பட்ட தங்கமாய் மின்னினாள்‌ தாவணி போட்ட பருவச்சிட்டு. ‘இவளே தங்கமாட்டமிருக்கா. இதுக்கு மேல தங்கம் வேணுமா?’ நடேசன் புத்திக்குள் நண்டு ஊறியது.

“அழகம்ம! நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? எப்படியும் எங்கம்மா ஒத்துக்காது. ஓடிப்போயி கல்யாணம் பண்ணிக்கலாம்.” 

திடுதிப்பென அழகம்மையிடம் கேட்டு தான் ஒரு அவசரக்குடுக்கை என அவளிடமும் நிரூபித்தான்‌ வயது பத்தொன்பதை தாண்டாத நடேசன்.‌ 

அவன் அப்படி வந்து கேட்டதில் விதிர்விதிர்த்துப் போனாள் அழகி. இது யார் காதிலாவது விழுந்து தொலைத்தால் என்ன நினைப்பார்கள். இட்டுக்கட்டி ஊரே கேளு, நாடே கேளென இவள் பெயரை நாறடித்துவிடுவார்களே? கிராமத்தில் சொல்லவே வேண்டாம். ஊருதுனாலே பறக்குதுன்னு பேசுவார்களே! 

இப்பொழுதுதான் ஒரு பஞ்சாயத்து முடிந்திருக்கிறது. அதோடு ஒரு உயிரும் போயிருக்கிறது. அதற்கே கண், காது, மூக்கு வைத்து, தோடுபோட்டு, பொட்டுவைத்து, பூவைத்து அலங்கரித்து அரசல் புரசலாக பேச்சு வேணியைப்பற்றி ஊர் முழுக்க சுற்றிவருகிறது. 

மகளிடம் எதுவுமே கேட்டுக் கொள்ளவில்லை வீராச்சாமி. ஊர்‌ வாயை மூட முடியாது என அறிந்தவர், கமுக்கமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டார். 

இதற்கிடையில் புனிதாவை தூதுவிட்டு, வேணியை தனிமையில் சந்தித்தவன், அவளை ஊரைவிட்டு எங்கேயாவது ஓடிப்போகலாம் என அழைக்க, அவனோடு தனிமையில் சல்லாபிக்கையில் இருந்த துணிச்சல்… அவனுடன் ஓடிப்போக வரவில்லை. நடந்த கலவரம் அவளை‌ வெகுவாக பயமுறுத்தியிருக்க, முடியாதென அழுது சாதித்துவிட்டாள். அந்த கோபமும் சேர்ந்து கொண்டது கண்ணையனுக்கு. 

நடேசன் திடீரென தன்முன் வந்து கேட்டதில், அழகி கதிகலங்கி, குழம்பி நின்றது சிறிது நேரம்தான். அடுத்த ஐந்தாவது நிமிடம் சண்டைக்கோழியாய் சிலிர்த்து எழுந்துவிட்டாள். அவன் காதை கைவைத்துப் பொத்திக் கொள்ளும்வரை வாய்க்கு வந்ததெல்லாம் இரண்டு மூன்று தலைமுறை வரைக்கும் இழுத்துவைத்து  தீட்டியெடுத்துவிட்டாள். 

“அம்மா தாயே! ஆளவிடு! இதுக்கு எங்கம்மாவே தேவல” என கும்பிடாத குறையாக ஓடியே போனான். 

அவளது சத்தம் கேட்டுவந்த சித்தன் விபரம் கேட்க, “எவ்ளோ தைரியமிருந்தா எங்கிட்டயே வந்து கல்யாணம் பண்ணிக்கலாமானு கேப்பான். அதுவும் ஓடிப்போகலாமானு கேக்குறான்‌ சித்தா!” மூக்கு விடைக்க, கழுத்து நரம்பு புடைக்க, மூச்சு விடாமல் பேசுபவளையே பார்த்தான். 

அவன் அப்படி கேட்டதையறிந்து அவனுக்குமே கோபம் தான். அவனிடம் காட்டமுடியாது. நீ யார் அதைக்கேட்க என கேட்டுவிட்டால் என்ன செய்யமுடியும்? தனக்கு என்ன உரிமையிருக்கிறது. 

“அவனுக்கு உரிமையிருக்கு கேக்குறான். மாமன்‌ மகன்தானே?” வெள்ளோட்டம் பார்த்தான் அவளை. அவள் மனதில் என்ன ஓடுகிறதென தெரிந்துகொள்ள.

“உரிமையிருந்தா என்னவேணா கேப்பானா? நீயும்தான் எனக்கு அத்தை மகன். நீ இது மாதிரி தைரியமா வந்து கேப்பியா?” 

‘அவன் கேட்டது குற்றமா? இவன் கேக்காதது குற்றமா‌? நீ ஏன் அதுபோல் கேக்கவில்லை என கேட்கிறாளா?’ அவனுக்கே சந்தேகம் வந்தது. 

“இதே கேள்விய‌ நான் கேட்டா என்ன அழகி பண்ணுவ?” அலுங்காமல் அவள் கண்பார்த்து கேட்டான். 

தழும்பியகிணற்றுக்குள் மேலிருந்து குதித்து அடியாழம்‌ தொட்டு ஜிவ்வென மேலே‌ எம்புவதுபோல் கப்பென மூச்சடைத்து நின்றுவிட்டாள். நடேசன்‌ கேட்டதும் குலுக்கிய கோலிசோடாவாய் பொங்கிவந்த கோபம் இப்பொழுது பொசுக்கென எங்கே போனதென்று தெரியவில்லை அழகிக்கு. திறந்தவாய் மூடாமல் அப்படியே சமைந்து நின்றாள்‌. இரண்டாம்‌ முறையாக. 

செம்மறி ஆடே செம்மறி ஆடே

செய்வது சரியா சொல்..

ம்..ஹும்..

செவத்த பொண்ணு

இவத்தநின்னு தவிக்கலாமா சொல்

தவிக்கின்ற நெஞ்சம் இன்று

துணை ஒன்று பெறலாமா

துணை இங்கு நீ என்று

ஊர் சொல்ல வேண்டாமா…

*****

“அழகம்ம! உன்‌தங்கச்சி புருஷன் செவலக்காள, உம்மேல பிராது கொடுத்துருக்காப்ல. பஞ்சாயத்துக்கு வந்துரும்மா!” வீதியில் நின்று தாக்கல் சொல்லி சென்றார் தலையாரி. 

2 thoughts on “ பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 5”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top