“தள்ளிப் போங்க அங்கிட்டு… கொஞ்சங்கூட கூச்சநாச்சமில்லாம!”
“உன்னைய யாருடீ… அங்க பச்சகுத்தச் சொன்னது? எம்பேருக்குதான் முத்தம் கொடுத்தேன். ஒனக்கு கொடுக்கல!”
“ஆமாமா… கீரையில சாறு இறுத்த மாதிரி… பாக்கவேண்டியவங்க மட்டும் பாத்தா போதும்னு குத்தச் சொன்னேன். அதுக்குன்னு இப்படியா!”
“அந்தப் பேருக்கு சொந்தக்காரன்டீ. பேருக்கு மட்டுமில்ல அது இருக்குற இடத்துக்கும்” என கண்சிமிட்டியவனை முறைத்துப் பார்க்க,
“உன் மனசுக்கு சொந்தக்காரன்னு சொல்ல வந்தேன். பூ வாசத்தை விட உம்மேல வர்ற இந்தப்பிள்ள வாசம்தான்டீ ஆள இழுக்குது!”
ஆழ்ந்து மூச்சிழுத்து தன்னை நெருங்கி வந்தவனை நெஞ்சில் கைவைத்து தடுத்தாள். மஞ்சள் வாசத்தோடு, பத்திய மருந்தின் வாசமும், பிள்ளைக்கு ஊற்றும் உரை மருந்தின் வசம்பு வாசமும் சேர்ந்து, முப்பதுகளில் பிள்ளைக்காரிக்குரிய அத்தனை அம்சங்களுடன் மந்தாரமாய் கட்டியிழுத்தாள்.
“இழுக்கும்… இழுக்கும்… நேரங்காலமில்லாம கண்டதையும் பேசிக்கிட்டு, கெளம்புங்க!”
“என்னத்த அப்படி நேரங்காலமில்லாம பேசிட்டாங்க. சூதானமா இருக்கணும்னு தெரியாதா? சரி… சரி… மொறைக்காதே… கெளம்பிட்டேன். நீயும் பின்னாடியே வராதே!”
“சோறாக்கி எடுத்துட்டு வர்றேன்!”
“இப்ப என்ன சொன்னேனு புரிஞ்சுதா? தமிழ்லதானே சொன்னேன். எந்தத் தோட்டத்துல இருப்பேன்னு எனக்கே தெரியாது. மோட்டார் சரி பண்ண ஆளுங்க வர்றாங்க. லேட்டாகும்.”
“அதான் சொல்லிட்டீங்களே மோட்டார் சரி பண்ண வர்றாங்கனு. அப்ப வெங்காயக்காட்டுல தான இருப்பீங்க.”
“வேல முடிஞ்சதும் நானே வர்றேன்டீ. வெயில்ல அலைய வேண்டாம்.”
“ம்ம்ம்… ம்ம்ம்…” அவள் சொன்ன தோரணையே பார்க்கலாம் என்பது போல் இருக்க,
“என்னைக்கு என் பேச்சைக் கேட்ட! இன்னும் மூனு மாசம் கூட முழுசா முடியலடீ.”
“அதெல்லாம் முடிஞ்சுது!”
“நீ என்னமோ பண்ணு! எம்பிள்ளைய வெயில்ல தூக்கிட்டு வராதே!”
அப்பொழுதுதான் உள்ளே வந்த பொன்னுத்தாயி, “நல்லா உரைக்கிற மாதிரி சொல்லுப்பா… குடும்பக் கட்டுப்பாடு பண்ணி மூனு மாசந்தான் ஆகுது. ஊர் கண்ணுல விழுறதுக்குனே அவபாட்டுக்கு புள்ளையத் தூக்கிட்டு காடுமேடுன்னு திரியுறா.”
“ஏம்மா… பெத்து வீட்ல போட்டுட்டு, உடனே வேலைக்குப் போனதெல்லாம் மறந்துடுச்சா? சுடுகாட்டுப் பக்கத்துல கூட தொட்டிகட்டிப் போட்டு வேல பாத்துருக்க!”
“அன்னைக்கி பொழப்பு அப்படி. ஒரு நாள் வீட்ல படுத்தாலும் அடுப்புல பூனை தூங்குமே. என்னமோ நீதான் காணியத் தூக்கி நிமுத்துற மாதிரி ஆளுகளோட வயக்காட்டுல எறங்காட்டி என்ன அழகு?”
தன் பங்குக்கு பொன்னுத்தாயும் மகளை வசைபாடிவிட்டு, தொட்டிலில் கிடந்த பிள்ளை சிணுங்க, பேத்தியை தூக்கச் சென்று விட்டார்.
நாமிருவர் நமக்கிருவர் என சிவப்பு முக்கோணத்திட்டத்தில் சேர்ந்துவிட்டதால் ஆசைக்கு ஒன்றும், ஆஸ்த்திக்கு ஒன்றுமாக இரண்டு குழந்தைகள் பிறந்துவிட, பொன்னுத்தாயி எவ்வளவோ தடுத்தும் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டாள்.
இப்பவோ அப்பாவோ என நிறைமாசமாக இருந்த பொழுதே வீட்டோடு அடங்கவில்லை அழகி. ஆட்களோடு ஆளாக எப்பொழுதும் வயலில் தான். இரண்டு குழந்தைகளும் பிறந்ததே வயல்களுக்கு மத்தியில், ஆட்டுக்கொடாப்பு மறைவில் தான்.
“உங்களுக்கு பரண். உங்க பிள்ளைகளுக்கு ஆட்டுக் கொடாப்பு!” என்று கூட கிண்டல் செய்வாள்.
“அதென்னமோடீ… சகலகலாவல்லவன்ல கமலஹாசன் சொன்னமாதிரி மேல் நிலாவ நீ பாக்க, கீழ் நிலாவ நாம்பாக்கனு, வெட்டவெளியா இருந்தா தான்…” என ஆரம்பித்தவனை,
“போதுமே… உங்க சகலகலா பிரதாபம். இப்ப கெளம்புறீங்களா?” என விரட்டினாள்.
“உண்மையச் சொல்லு… நீ காணியப் பாக்கவா வர்ற. மாமன் மேல யார் யார் கண்ணுப்படுதுன்னு நோட்டம் பாக்காதானே வர்ற!” என சவடாலாய் கேட்டவனிடம்,
“நெனப்புதான்…” என முகவாயைத் தோளில் வெட்டி நொடித்தாலும், முப்பைந்தைந்து வயதிற்கே உரிய, கட்டுமஸ்த்தான உடம்போடு, கம்பீரமாக வெள்ளை வேட்டி சட்டையில், சற்றே பெரிய மனுஷத்தோரணையில் மீசைநுனியை முறுக்கி நிற்பவன் மீது மையல் பார்வையை ஓட்டிக் கொண்டே,
“என்ன பண்றது… கல்யாணமாகி புள்ளகுட்டி பெத்த மனுஷனப் பாக்குற மாதிரியா பாக்குறாளுக. போகும்போதும், வரும் போதும் முழுங்குற மாதிரில பாக்குறாளுக.”
“இப்ப நீதான்டீ முழுங்குற மாதிரி பாக்குற. இருந்தாலும் எம்மேல உனக்கு இம்பூட்டு நம்பிக்கை ஆகாதுடீ!” என சடைத்தும் கொண்டான்.
“அவ அவ காணிய, அவ அவதானே காப்பாத்திக்கணும்” என அங்கலாய்த்தவளைப் பார்த்து வாய்விட்டு சிரித்தான்.
சித்தன் என வந்துவிட்டால் மட்டும் இன்னும் அதே ஐந்து வயதுச் சிறுமிதான் அழகி. சாதாரணமாக அவனிடம் பெண்கள் யாராவது பேசினாலே அன்று முழுதும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வாள்.
இன்னும் முறைப்பெண்கள் எல்லாம் நல்ல நாள், பெரிய நாள் என்றால் வளையல் போட காசு கேட்பதும், வரப்பில் போகும் போதும், வரும் போதும் நிற்கவைத்து வம்பு பேசுவதுமாக இருக்க, அதைப் பார்க்கும் பொழுதெல்லாம் அழகிக்கு பொசுபொசுவென வரும்.
இவளை வெறுப்பேற்றிப் பார்க்கவே, இவனும் வரப்பில் நின்று அவர்களோடு வம்பளந்து, அவளைச் சூடேற்றி குளிர்காய்வதில் அவனுக்கொரு அலாதி பிரியம். நேற்று கூட வரப்பில் ஒருத்தி அவனை நிறுத்திப் பேசியதை பார்த்துவிட்டுத்தான் இன்று இந்த மண்டகப்படி அவனுக்கு.
“போனோமா… வந்தோமான்னு இருக்கணும்!”
“வயசுப் பொண்ணாட்டம் குனிஞ்ச தலை நிமிராமப் போயிட்டு வர்றேன். போதுமா?” என்றவுடன் பக்கென சிரித்துவிட்டாள். அவன் எப்பொழுதும் மயங்கி நிற்கும் சத்தமில்லாத, இதழ் விரிந்த சிரிப்பு. அந்தச் சிரிப்பில் மயங்கியவன்,
உல்லாசமாக அவளை நெருங்கி, “பரண ரெடிபண்ணவா? மேல் நிலாவ நீயும், கீழ் நிலாவ நானும் பாத்து ரொம்ப நாளாச்சுடீ.” குரலில் ஏக்கத்தைக் குழைத்து கேட்டவனிடம்,
“இன்னைக்கி அமாவாசையாம். இன்னும் மூனு நாளைக்கி நிலாவைப் பாக்க வழியே இல்லையாம்” என்றாள் குறுஞ்சிரிப்போடு.
“ம்ஹும்… போச்சா…” அலுத்துக் கொண்டே, காலில் செருப்பை மாட்டியவனிடம்,
“ஆனந்து(புனிதா மகன்) லெட்டர் போட்டிருக்கான். பொங்கலுக்கு வரும்போது, இந்த வருஷமாவது நீச்சல் பழகணுமாம். சுரைக்குடுக்கை ரெடி பண்ணி வைக்கச்சொல்லியிருக்கான்!”
“ஏழு கழுதை வயசாகுது. இன்னும் சுரைக்குடுக்கை வேணுமா அவனுக்கு. வரட்டும் அப்படியே கெணத்துல தள்ளிவிடுறே. நாலு வயசுல எம்பையனே மேல நேக்காவுலருந்து கெணத்துல குதிக்கிறான். இவன் என்னடான்னா நாலு வருஷமா நீச்சல் பழகுறான். அதுவும் சுரைக்காடுக்கையக் கட்டிக்கிட்டு” என அக்கா மகனை நையாண்டி பேச,
“போதுமே உங்க புள்ள பெருமை” என சொல்லிக் கொண்டிருக்க, தூங்கி எழுந்த பேத்தியை வெளியே தூக்கிவந்தார் பொன்னுத்தாயி. இன்னும் தலை கூட சரியாக நிற்கவில்லை. அப்படியே இறந்து போன அவனது கடைக்குட்டி தங்கையின் சாடை. தங்கையே தனக்கு மகளாக வந்து பிறந்திருப்பதாகப் பூரித்துப் போனான்.
அழகியிடம் தேங்காய் எண்ணெய் வாங்கி உடம்பு முழுதும் கை, கால்களை நன்றாக நீட்டி நீவித் தேய்த்துவிட்டு, வெளித் திண்ணையில் துணியை விரித்து, பேத்தியை இள வெயிலில் போட்டுவிட்டார்.
மகளின் அருகே அமர்ந்து சிறிது நேரம் உங்கு பேச, அப்பனை மாதிரியே உதட்டை மட்டும் குவித்து, காற்றோடு கை காலை ஆட்டி குஸ்தி பழகியது கைகால் முளைத்த பூங்கொத்து.
மகன் எப்பொழுது பால்குடி மறந்தானோ அப்பொழுதிலிருந்தே அன்னக்கிளி பிள்ளைகளோடு தான். மூவருக்கும் கிடைத்த பொம்மை அவன். உடன் முருகேசன் மகளும். அக்காள்களுக்கு செல்லத்தம்பி. சித்திக்காரியும் அக்கா மகனை இடுப்பை விட்டு இறக்குவதே இல்லை.
பள்ளிக்கூடம் விட்டு வந்ததும், தோட்டம் வந்து தூக்கிச் சென்றுவிடுவர். இரவும் அவர்களோடுதான். காலையில் பனியாரம் வாங்கி ஊட்டிவிட்டுத்தான் அன்னக்கிளி கரட்டடிவாரம் தூக்கிவருவாள்.
இப்ப தெரியுதா? பத்து பிள்ளைகூட எப்படி அசால்ட்டா வளத்தாங்கனு. பெத்துக்கறதோட வேலை முடிஞ்சது. ஆளும் பேருமா வளத்து விட்டுருவாங்க.
அன்னக்கிளிக்கு பள்ளிக்கூடத்தில் சத்துணவு சமைக்கும் வேலை வாங்கிக் கொடுத்த பிறகு செவலையைக் கண்டு கொள்வதில்லை. சாராயம் காய்ச்ச முடியாததால் உடம்பு வணங்கி எங்கும் வேலைக்கும் செல்வதில்லை. ஆட்களோடு ஆட்களாக இவர்கள் தோட்டத்திற்கு வந்துதான் மேம்போக்காக நெளித்துக் கொடுத்து நிற்பான். பெரிதாகக் கண்டுகொள்வதில்லை.
அலமேலு தன் மகளுக்கு பதினான்கு வயதிலேயே மாப்பிள்ளை பார்க்க, “நான் படிக்கணும் பெரியப்பா” என அழுதுகொண்டு சித்தனிடம் வந்து முறையிட்டாள்.
“படிக்கிற பிள்ளைக்கு எதுக்கு கல்யாணம்” என அழைத்து வைத்துப் பேச,
“இவளப் படிக்க வச்சா அதுக்குத் தக்கன மாப்பிள்ளை பாக்கணும். படிச்சவன் சும்மாவா கட்டுவான்? அதுக்குத் தக்கன சீர் செய்யவேண்டாமா? இங்கென்ன கொட்டியா கெடக்குது. இல்ல அப்பன், ஆத்தா சம்பாதிச்சு வச்ச சொத்து இருக்குதா? சொகுசா உக்காந்து சாப்பிடறதுக்கு” என நீட்டி முழக்க, அதிலிருந்த ஏளனம் புரியாதா என்ன? அலமேலு பேச்சு அழகியைச் சீண்டிப் பார்க்க,
“யாரு சம்பாதிச்சு வச்சாலும், நாமலும் உழச்சாதான் கட்டிக் காப்பாத்த முடியும்! அடுத்தவங்க சொத்துல மஞ்சக் குளிக்க நெனச்சா என்னைக்கும் முன்னுக்கு வரமுடியாது அலமேலு.” சாடை பேசிய தங்கைக்கு அழகி பட்டென பதிலுரைக்க,
“அழகி!” என்றான் கண்டிக்கும் விதமாக.
“பின்ன என்னங்க… இங்க என்னமோ எல்லாரும் காலாட்டிட்டே சாப்பிடற மாதிரில்ல இவ பேசுறா. கூலிக்குப் போனாலும், சொந்தத் தோட்டம்னாலும் உழச்சாத்தான் தட்டுக்கு சோறு வரும். சும்மா இருந்தா தானா வெளஞ்சு வந்துருமா?”
“நான் பேசிக்கிறேன் நீ உள்ள போ” என்றவனிடம்,
“என்னமோ பண்ணுங்க!” என்றவள்,
“இந்தா பாரு அலமேலு. நம்மாலதான் படிக்க முடியல. படிக்கிற பிள்ளைக்கு கல்யாணம் பேசுன, தங்கச்சினு கூடப் பாக்கமாட்டேன். மைனர் பொண்ணுக்கு கல்யாணம் பண்றாங்கனு நானே போலீஸ்ல புடிச்சுக் கொடுப்பே” என தங்கையை எச்சரித்துவிட்டே சென்றாள்.
அலமேலுவிடம், “படிக்கிற செலவ நான் பாத்துக்கிறேன். மொதல்ல பிள்ள ஆசப்பட்டதப் படிக்கட்டும்” என சித்தன் வாக்குக் கொடுக்க, நோகாமல் நோன்பு கும்பிட வலிக்குமா என்ன? ‘நல்லதாப் போச்சு’ என அலமேலு அதற்கு மேல் பேசவில்லை.
மெட்ராசில் இப்பொழுது வேல்ச்சாமிக்கு ஒத்தாசையாக பட்டாளத்தாலிருந்து ஓய்வு பெற்றுவந்த புனிதாவின் கணவனே எல்லாம் பார்த்துக் கொள்கிறான். அவன் பிறந்து வளர்ந்ததிலிருந்தே மெட்ராஸ் வாசி என்பதால் அவனுக்கு பட்டணத்தாரின் நீக்குப்போக்குப் புரிந்தது.
முருகேசனுக்கு ஒரே ஒரு பெண் குழந்தை மட்டுமே. ஐந்து வயது. “இருந்து இருந்து ஒத்தப் பொட்டக்கழுதைய பெத்துவச்சுருக்கா. எம்மகனுக்குப் பேரு சொல்ல பிள்ளை இல்ல” என இப்பொழுதும் சுமதியை அவள் மாமியார் வசைபாடுவதை நிறுத்தவில்லை.
எல்லாருக்கும் ஒரு கவலை என்றால் முருகேசனுக்கு, தன் மகள், சித்தன் மகனை விட ஒரு வருடம் மூத்து விட்டதே என்று கவலை. இதையே சித்தனிடம் சொல்லிச்சொல்லி ஆத்துப்போவான்.
காலையில் கிளம்பும் பொழுதே, சித்தன் அந்தளவிற்கு சொல்லியும், சாப்பாட்டை ஆக்கி எடுத்துக்கொண்டு மகளையும் தோளில் போட்டுக் கொண்டு, மகனை வரப்பில் முன்னே நடக்கவிட்டுத் தோட்டம் வந்துவிட்டாள். வரும் வழியிலேயே முருகேசன் ட்ராக்டர் கொண்டு உழுது கொண்டிருக்க, மாமனைப் பார்த்துவிட்டு அவனிடம் சென்றுவிட்டான். சித்தன் தான் விவசாயக் கடனில் முருகேசனுக்கு டிராக்டர் வாங்கி கொடுத்திருந்தான்.
கையோடு சேலை கொண்டுவந்தவள், மகளுக்கு பாலைக் கொடுத்து வயிற்றை நிரப்பி, வேப்ப மரக்கிளையில் தொட்டில் கட்டிப்போட்டாள். வேப்பமரக்காற்று தாலாட்ட சுகமாய்த் தூங்கியது பூஞ்சிட்டு.
ஓடும் வாய்க்கால் தண்ணீரில் கை, கால் கழுவி வந்தான். வரும்பொழுதே வாழை மரத்தில் இலை அறுத்து எடுத்து வந்தான்.
வயர் கூடையில் இருந்து சாப்பாட்டை எடுத்து வைத்தாள். அவன் முகம் பார்த்தவள் பதறினாள்.
“என்னங்க இது. பூச்சி அடிச்சுதா?”
“இல்ல… நெல்லடிக்கிற பக்கமாப் போனேன்ல. நெல்லு தூத்தும் போது தூசி விழுந்துருச்சு.”
“நல்லா செவந்திருக்கேங்க!” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.
“உறுத்துதுடீ… தண்ணில கழுவியும் போகல” என்றான் மூக்கையும் உறிஞ்சிய படி. முந்தானை எடுத்து வாயில் வைத்து ஊதி ஒத்தடம் கொடுத்துப் பார்த்தாள். அப்படியும் கண்ணீர் வடிந்தது.
“பசிக்குது சோத்தப் போடு! அப்பறம் பாக்கலாம்” என்றான்.
“சரி… மொதல்ல சாப்பிட்டுப் பரணுக்குப் போங்க. நானும் வர்றே!” என்றவளை,
கண் உறுத்தலையும் மறந்து, சிவந்த கண்களால் சரசமாகப் பார்த்தபடி, “எதுக்குடீ… அதுவும் பட்டப்பகல்ல. அமாவாசைனு சொன்னியே? அப்ப பொய் சொன்னியா?” அவள் பக்கமாகக் குனிந்து ரகசியமாகக் கேட்க,
“மனுஷனுக்கு நெனப்பு போகுது பாரு… புல்லு மேய… எப்பப்பாரு அதே நெனப்புதானா? கண்ணுக்கு தாய்ப்பால் விட்டா சரியாகும்ல. அதுக்குத்தான்!” நொடிப்பாகக் கூற, காற்று போன பலூன் போல முகம் சப்பென போயிற்று.
“அம்புட்டுதானா? நாங்கூட என்னவெல்லாமோ நெனச்சேனே.” அலுத்துக் கொண்டவனைப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள். சாப்பிட்டு முடித்து பரண் ஏறினர் இருவரும்.
ஏறும் பொழுதே, “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!” எனப் பாடிக்கொண்டே ஏற, இவளுக்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை.
*****
“சித்தாஆ… சித்தாஆ…”
உலகமே இடிந்து விழுந்ததுபோல், தொண்டை கிழிய கிணற்றுக்குள் திட்டைச் சுற்றி பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாள் அழகி. படபடத்து வந்தது. நெஞ்சுக்கூடு நொடியில் வறண்டு கண்களை இருட்டிக் கொண்டு வர… அரை நொடிக்குள் ஆயிரம் சாமிகளை அழைத்துவிட்டாள்.
உதடுகள் துடிக்க, கண்கள் கண்ணீர் மழை பொழிய, மூச்சே நின்றுவிட்டது. நெஞ்சம் பதற, “சித்தா…” என அலறிக்கொண்டே, கிணற்றையே சுற்றி சுற்றி வந்தவள், உள்ளே குதிக்க எத்தனித்த சமயம் விரால் மீனாய் தண்ணீருக்கள்ளிருந்து துள்ளி வெளிவந்தான் அழகியின் சித்தன்.
நின்ற மூச்சு திரும்பி வர, அடிவயிறு பதற, மேலேறி வந்தவனை, கன்னம் தொட்டு வேகமாக உடல் முழுக்கத் தடவிப் பார்த்தவள், சட்டென இழுத்து இறுக்கிக் கட்டிக் கொண்டாள். உடல் நடுங்கியது. காலெல்லாம் வெடவெடத்து நிற்க முடியாமல் தள்ளாடியவளை, அவசரமாகத் தோள் பிடித்து கிணற்றுப் படியில் உட்கார வைத்தான்.
கீழ் படியில் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், “என்னடீ… பயந்துட்டியா?” பயத்தில் வெளுத்திருந்த முகம் பார்த்தவனுக்கும் அவள் பதட்டம் தொற்றிக் கொண்டது.
“உசுரே போயிருச்சு!” என்றாள் இன்னும் பதட்டம் குறையாமல்.
இதழோரம் சிரிப்பு நெழியப் பார்த்தவன், “பேரே சொல்ல மாட்டேன்ன? இப்ப எப்படி சொன்ன! சொல்லவச்சேன் பாத்தியா? எனக் கேட்டு முடிக்கவில்லை. பளாரெனக் கன்னம் பழுத்துவிட்டது.
அதிர்ச்சியில் கண்கள் விரிய கன்னத்தில் கை வைத்துவிட்டான்.
“மனுஷனா நீங்க? இங்க ஒருத்தி செத்துட்டிருக்கா. உங்களுக்கு எல்லாமே விளையாட்டாப் போச்சுல்ல!” உதடு துடிக்க, கண்ணீர் மல்க கேட்டவளை,
“ஹேய்ய்… சும்மா விளையாட்டுக்கு” என சமாதானமாக இழுத்து அணைக்க முற்பட,
“தொடாதீங்க…” என முரண்டியவள் அவன் பிடிக்குள் அடங்காமல் திமிறினாள்.
பிள்ளைகளை பொன்னுத்தாயிடம் விட்டு விட்டு துணிகளை அள்ளிக்கொண்டு, துவைக்க கிணற்றடி வந்திருந்தாள்.
துவைத்துக் கொண்டிருந்தவளிடம், “அழகி… கெணத்துல முங்கி மண்ணெடுத்து எத்தனை வருஷமாச்சு. இப்ப எடுத்து வரவா?” குளிக்க வந்த இடத்தில் மனைவியிடம் பந்தயம் போட,
“அதெல்லாம் சின்ன வயசுல. இப்பவும் முடியுமா?” என கேலியாகக் கேட்டவளிடம்,
“அப்படியென்ன வயசாயிருச்சு? முப்பத்தஞ்சுதான்டீ ஆகுது. நீ வேணும்னா எண்ணிக்கோ. எவ்ளோ நேரம் உள்ளே இருக்கேன்னு பாக்கலாம்.”
“வேண்டாங்க… தேவையில்லாத வேலை” என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, உள்ளே குதித்து விட்டான். படியில் அமர்ந்திருந்தவளும் விளையாட்டுப் போல் எண்ண ஆரம்பித்துவிட்டாள். நேரம்தான் சென்றதே ஒழிய உள்ளே போனவன் தலை, மேலே வரக்காணோம். சிறுபிள்ளையில் பிள்ளைகளோடு போட்டி போடும் பொழுது அவனே வெற்றி பெறுவான். அந்த நினைப்பில் இவளும் எதார்த்தமாக இருக்க, நொடிகள், நிமிடங்களாகக் கழிய அடிவயிற்றைப் பயம் கவ்வியது.
நெஞ்சு படபடத்து பயத்தில் தொண்டைக்குழி வறண்டு விட்டது.
“என்னங்க…” என்றவள் தொண்டையைவிட்டு வார்த்தை வெளிவர மறுத்தது. அடுத்தடுத்து பதட்டம் அதிகமாக,
“சித்தாஆஆ!” என நெஞ்சு வெடிக்க அழைத்தபின்னே சரேலென வெளிவந்தான்.
பெயர் சொல்ல முடியாததால்தான் பச்சை குத்திக் கொண்டதாகச் சொன்ன நாளிலிருந்து, எத்தனையோ முறை பெயர் சொல்லச்சொல்லி கேட்டிருக்கிறான். அவள் மறுத்துவிட, “பேரு சொல்லிக் கூப்பிட வைக்கல, எம்பேர மாத்திக்கிறேன்” என சவால் விட்டிருந்தான்.
படியில் கோபமாக மேலே ஏறியவளைப் பின் தொடர்ந்து அழைக்க, திரும்பியும் பார்க்கவில்லை. வேக எட்டு வைத்தவன், அவள் கையைப் பிடித்திழுக்க, அவள் உதற முற்பட, அவளையும் சேர்த்து இழுத்துக் கொண்டு கிணற்றுக்குள் குதித்து விட்டான்.
திடீரென உள்ளே குதித்ததில் மூச்சுமுட்ட, நீருக்கு மேலே வந்தவள் வேக மூச்செடுத்தாள்.
“ஏன்டீ… அவ்ளோ சீக்கிரம் உன்னவிட்டுப் போயிருவேனா… அப்படியே போனாலும், கொன்னாவது உன்னையும் சேத்து கூட்டிட்டுப் தான்டி போவேன்” என்று சொன்னவனை, கைவலிக்க, இரண்டு கை கொண்டு மார்பிலேயே மொத்தினாள்.
இருவர் கால்களும் நீரில் அலைந்து கொண்டிருந்தது. முழுக்க நனைந்து, உடை நலுங்கி, கண்கள் சிவந்து, கற்றை கூந்தல் கலைந்து, உதடு துடிக்க நீரில் மிதந்தவளைப் பார்த்தவன் கண்கள் போதை கொள்ள, இரு கைகளையும் சேர்த்துப் பிடித்தவன் கழுத்தோடு மாலையாக சுற்றிப் போட்டு, இறுக்கிக் கட்டிக் கொண்டான் திமிறமுடியாமல்.
“எத்தனை நாளைக்கி நிலாவ பரண்ல இருந்து பாக்குறது. ஒரு மாறுதலுக்கு…” என இழுத்தவன், அவளை நிமிர்த்தி முகம் பார்த்து கண்சிமிட்ட, வெகு நாட்களுக்குப் பிறகு தன்னவன் இறுகிய கைப்பிடிக்குள் அடங்கியவளுக்கும், நீருக்குள் இருவரது நெருக்கத்தில் உடல் சூடேற,
“நாதன் சித்தமே… எந்தன் சித்தம்” என பதிலுக்கு கண்சிமிட்ட,
“அடிப்பாவி… பேரே சொல்லமாட்டேன்னு விதவிதமா சொல்ற!” என்றவனின் பிடியிலிருந்து கெண்டை மீனாய்த் துள்ளி நழுவி, வாளை மீனாய் நீருக்குள் வலம் வந்தவளை, விலாங்கு மீனாய் பின்தொடர்ந்தவனுக்குப் போக்குக் காட்டிவிட்டு, சரேலென நீருக்குள் மூழ்கியவளைப் பின் தொடர்ந்தான் பாதகத்தியின் சித்தன். இம்முறை மண்ணெடுக்க அல்ல… மூழ்கி முத்தெடுக்க.
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோ இது வாசம்..
போவோம் இனி காதல் தேசம்..
பூவோ இது வாசம்..
போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து
அந்தியில் பூத்தது…
வாழ்க வளமுடன்

Wonderful story
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Kathai mudinchiduchey endru irukku, romba azhagana village story, lovely Writerji
தங்களின் தொடர் ஆதரவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி மா 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫