இருந்த பொண்ணுக்குத் தகுந்த மாப்பிள்ளைங்கிற மாதிரி அழகிக்குனே வந்த மாதிரி வந்திருக்கான் என ஊரே ஒருபுறம் சிலாகித்துப் பேசிற்று என்றால், அடிச்சாலும் யோகம் இப்படியில்ல அடிக்கணும். கங்காணியா இருந்தவ காணிக்காரியாகிட்டா. இதுக்குதான் கருவேப்பிலை விக்கப்போனாலும் கெரகக் கோளாறு வேணுங்கறது. அவ பொறந்த நேரம் அப்படியிருக்கு என வயதுப் பெண்களை வைத்திருப்பவர்கள் வயிற்றெரிச்சலில் ஊரே குளிர் காய்ந்தது. போதாக்குறைக்கு பஞ்சாயத்து தேர்தல் அறிவிப்பும் சேர்ந்து கொள்ள கேட்கவே வேண்டாம். அடுத்து வந்த நாட்கள் எல்லாம் திண்ணை, தெருமுக்கு, தண்ணிக்கிணறு என ஊரில் எங்கும் ஒரே பேச்சுதான் வாய் ஓயாமல்.
அழகி எவ்வளவோ மறுத்தும் வலுக்கட்டாயமாக வேட்பு மனு தாக்கல் செய்யவைத்தான்.
“நீதானே ஊருக்குள்ள சாரயத்தை ஒழிக்கணும்னு சொன்ன? அப்ப நீதான் அந்த பொறுப்ப எடுக்கணும்! எதையும் இருக்குற எடத்துல இருந்து சொன்னாத்தான் மதிப்பு!” என முடித்துக் கொண்டான்.
“எனக்கெல்லாம் யாரு ஓட்டுப் போடுவா?” என சலித்துக் கொண்டவளிடம்,
“உனக்குப் போடாம யாருக்குப் போடுவாங்க. அது என் பொறுப்பு!” பட்டென முடித்துக் கொண்டான். வயல் வேலை, தேர்தல் வேலையென நாட்களும் ரெக்கை கட்டிப்பறந்தன.
பொன்னுத்தாயிக்கு சந்தோஷமும், பூரிப்பும் ஒரு புறமென்றால், ஊர் வாயில் விழக்கூடாதே என மனம் ஒரு புறம் அடித்துக்கொள்ள, பேத்திக்கு சுற்றிப் போட்டாரோ இல்லையோ, தினமும் மகளுக்கு உப்பு, மிளகாயோடு முச்சந்தி மண்ணெடுத்தும் சுற்றிப் போட்டார். மறக்காமல் வாசலில் சாம்பல் கோடு வேறு. காத்து கருப்பு அண்டாமலிருக்க… காலில் கம்பளிக்கயிறு, மகளின் சிக்கு முடியில் அவரே திரித்து கட்டிவிட்டார் அழகிக்கு.
“நாலு மகளுகள கட்டிக் கொடுத்தியே? ஒரு நாளாவது இதெல்லாம் எங்களுக்கு செஞ்சுருப்பியா?” வாசலில் கல் அடுப்பு கூட்டி, அண்டாவில் நெல் அவித்துக் கொண்டே, அன்னக்கிளி அம்மாவை வம்பு பேசியே கடுப்படித்தாள்.
புதுப்பெண் என தினமும் பூவைத்து மகளை அழகு பார்த்த பொன்னுத்தாய்க்கு,
தீபாவளி, பொங்கல் எல்லாம் ஒரு சேர வந்தது போல் இருந்தது.
அழகம்மை ஏற்கனவே அழகு. உள்ளுக்குள் பீறிட்ட பூரிப்பில், திரியின் சுடரில் பிரகாசிக்கும் விளக்கின் முகம் போல தகதகவென பட்டொளி வீசியவளை, கண்ணில் படும் பொழுதெல்லாம் கண்களால் விழுங்கி பித்துநிலை எய்தினான் சித்தநாதன். முன்பெல்லாம் கண்டும் காணாமல் கடந்து வந்தவளுக்கு இப்பொழுது அவனது உரிமையான மோகனப் பார்வையின் குறுகுறுப்பு தாளாமல் சில்லிட்டுப் போகிறது பாதகத்தி நெஞ்சம்.
ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்
ஏ பூ வச்சேன் பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல சேரத்தான்
ராசாவே ராசாவே ராசாவே
ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு உசிரிருக்கு
ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி
பூத்தது வாடுது நீ வரத்தான்…
*****
அதற்கு நேர்மாறாக இருந்தது மெட்ராசில் வேல்ச்சாமியின் வீடு.
“அப்பாவைத்தான் மதிக்கல. வீட்டுக்கு வந்த மருமகனையும் மதிக்கலைனா என்ன அர்த்தம். பொறந்த வீட்லயே என்னை மதிக்கலைனா எப்படி என் மாமியார் வீட்ல மதிப்பாங்க.”
தன்னையும், தன் கணவனையும் எதிலும் கலந்து கொள்ளாமல் பேசி முடித்துவிட்டது தெரிந்து ஆவுடையிடம் ஒருமூச்சு ஆடித் தீர்த்தாள் சரண்யா. அவளுக்கு அவளை கலந்து கொள்ளாததைவிட… அக்காவும், அக்கா வீட்டுக்காரரும் இருந்தது தான் உறுத்தியது. எங்கும் எதிலும் தனக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனும் சரண்யாவின் குணம் தெரிந்ததால் புனிதா அவள் பேச்சை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டாள். அவளுக்கு அந்தப் பக்குவமிருந்தது என்பதை விட இவளிடம் வாய் கொடுத்து தன் மரியாதையை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை.
வேல்ச்சாமி வழக்கம் போல் தன் வீம்பை விட்டுக் கொடுக்காமல் முறுக்கிக் கொண்டு திரிந்தார்.
‘ரெண்டும் ஒரே குட்டையில ஊறின மட்டைக’ என ஆவுடை தானுண்டு தன் வேலையுண்டு என இருந்தார். மகன் பேச்சிற்கு மதிப்பு கொடுத்து மெட்ராஸ் திரும்பியிருந்தார்.
செல்வமணியின் விடுப்பும் முடிய, பிள்ளைகள் படிப்பை காரணம் காட்டி மெட்ராஸ் திரும்ப வேண்டிய கட்டாயம் புனிதாவிற்கு. அவர்களோடு சேர்த்து அம்மாவையும் அனுப்பிவிட்டான்.
“உங்கப்பா கொஞ்ச நாள் தனியா இருக்கட்டும்டா! கல்யாணத்த முடிச்சுட்டு போறேன்” என்றதற்கு,
“கோவிச்சுட்டு வர்ற வயசாம்மா? சக்கரைவியாதிக்காரர் ம்மா. நீங்களும் கூட இல்லைனா வாயக்கட்ட மாட்டாரு. எதையாவது இழுத்துவிட்டுக்கிட்டா நீங்கதான் அவஸ்த்தைப்படணும்! அவரில்லாம கல்யாணத்த முடிச்சா ஊரு என்னம்மா பேசும். அவருக்கான மரியாதையே போயிடும்மா.” பக்குவமாய் மகன் எடுத்துச் சொல்லியதும் ஒரு வகையில் சரியெனப்பட்டது. வீம்பு புடிக்கும் வயசுமில்லை. பிள்ளைகள் சொல்லுமளவிற்கு வைத்துக் கொள்ளக்கூடாது. நெட்டையோ குட்டையோ உடனிருந்தால் தான் பேசி அவரை சரிக்கட்டமுடியுமென, வேண்டா வெறுப்பாக மகளோடு கிளம்பி வந்துவிட்டார்.
“கல்யாணத்துக்காவது சொல்வீங்களா? இல்ல அதையும் முடிச்சு வச்சுட்டு வந்துட்டீங்களா?” என எகத்தாளமாக கேட்டவளிடம், அதுவரை வாய்க்கு பூட்டுப் போட்டிருந்தவர்,
“எங்க நோக்கத்துக்கு விட்டிருந்தாதான் இந்நேரம் கல்யாணத்த முடிச்சுருப்போமே. ஆனா ரெண்டு பேரும் அப்பா வந்தாதான் கல்யாணம்னு சொல்லிட்டாங்க. அவரில்லாம முடிச்சா ஊருக்குள்ள அப்பாவுக்கிருக்கிற மரியாதை என்னாகுறதுன்னு ரெண்டு பேரும் யோசிக்கிறாங்க. வயசாகி என்ன பிரயோஜனம். அவங்க வயசுக்கு இருக்குற பக்குவம் கூட வயசானவங்களுக்கு இல்லையே! அவன் வயசுப்பயலுக எல்லாம் புள்ளகுட்டினு ஆயிட்டாங்க. எம்பிள்ளைக்கு வயசுதான் போகுது. அது யாருக்கு இங்க தெரியுது?” தனது ஆற்றாமையை புலம்பித்தீர்த்தார் ஆவுடை.
“எல்லாம் பாசாங்கும்மா. அப்பா சொத்து இல்லைனு சொல்லிட்டா என்ன பண்ணுவாங்க? அந்த பயம்.” இளக்காரமாகக் கேட்ட மகளை பதரென அற்பமாகப் பார்த்தார் ஆவுடை.
“நீ ஒன்னு மறந்துட்ட சரண்யா. சொத்தெல்லாம் என் பேர்லதான் இருக்கு. இந்த வீடு கூட. தோட்டம் வாங்கினதே உங்க அண்ணன் பேர்லதாங்கறத மறந்துட்டியா? நான் பாத்து இப்பக்கூட அவனுக்கு கையெழுத்துப் போட்டு கொடுக்க முடியும்! ஆனா, எம் புருஷன மீறி எதையும் செய்யமாட்டேன். ஏன்னா, எம்பிள்ளைக்கும் அவங்க அப்பாவ மதிக்காம எது செஞ்சாலும் பிடிக்காது! இப்பக்கூட அவன் சொன்னதாலதான் திரும்பி வந்தேன்” என சொன்னதில்,
‘அப்ப எனக்காக வரல’ என வேல்ச்சாமிக்கு ஒரு ஓரமாக தன்மானம் தலைதூக்கியது. என்ன இருந்தாலும் இந்த பொம்பளைங்க தாலிக்கொடியா தொப்புள் கொடியானு வந்தா தொப்புள் கொடி உறவுக்கு தான் முக்கியத்துவம் கொடாக்கறாங்க’ என உள்ளுக்குள் அங்கலாய்த்தவர் மனம்,
‘இவ செஞ்சாலும் செய்வா. மகன்தான் பெருசுன்னு நம்பல நட்டாத்துல விட்டாலும் விட்டுறுவா!” என கூடவே எச்சரிக்கவும் செய்தது.
சபையில் மகன் தனக்கு கொடுத்த முக்கியத்துவத்தை எண்ணி மனதின் ஒரு மூலையில் கர்வம் தலை தூக்கியதுதான் என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ஆவுடைக்கு, “எம்மருமக பஞ்சாயத்து தலைவராக்கும்!” என்ற பெருமைபீற்றல் வேறு.
“ஆமா… இவங்களுக்கு ஓட்டுப்போடத்தான் வரிசை கட்டி நிக்கறாங்களாக்கும்?”
”அவளுக்கென்னடீ? அவன் வருங்காலப் பொண்டாட்டிய பஞ்சாயத்து தலைவராக்கிட்டுத்தான் எம்மகன் தாலியே கட்டுவான்!” கழுத்தை வெட்டி சவால் போல் சொல்லிச் சென்ற அம்மாவைப் பார்க்க பொசுபொசுவென வந்தது சரண்யாவிற்கு.
வசதியில்லாத மருமகள் வந்தால் தனக்கு கீழ்தான் இருப்பாள் என மனப்பால் குடிக்க, அண்ணன் பேரில் இருக்கும் சொத்து, பஞ்சாயத்து பிரெசிடென்ட் என அவள் கை ஓங்குவதில் முகம் கறுத்துவிட்டது.
*****
“சுமதி என்னாச்சு?” தனக்குப் பின்னால் கேட்ட குரலில் வேகமாகத் திரும்பியவள்,
“நீதானா அத்தாச்சி?” என மூச்சை இழுத்து விட்டவள், தொட்டி தண்ணீரை கைநிறைய அள்ளி முகத்தில் அடித்துக் கழுவினாள். முழங்கால் அளவு வளர்ந்துவிட்ட நெல்வயலுக்கு களையெடுப்பு நடந்துகொண்டிருந்தது. பச்சைப் பட்டு விரித்தது போல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பசுமை கொஞ்சியது.
தண்ணீர் வளமிருக்கும் நன்செய் நிலமெங்கும் வாழையும், கரும்பும் நடவு போய்க்கொண்டிருந்தது.
நூற்றைம்பது ஏக்கர் சொச்சமும் நன்செய் நிலமாகவே இருக்காதே. மழைநீரை மட்டும் ஆதாரமாகக் கொண்ட புன்செய் நிலமும் இருக்கும். அதிலெல்லாம் காட்டு வெள்ளாமையாக கம்பு, சோளம் அவற்றிற்கு ஊடு பயிராக மொச்சை, கானப்பயறு, பச்சைப்பயறு, தட்டாம்பயறும், வேர்க்கடலைக்கு ஊடு பயிராக உளுந்து எனவும் பயிரிடப்பட்டு அதன் நடுவில் உயரமாக பரணும் போட்டு வைத்தான் பார்வையிட. கரட்டை ஒட்டிய பகுதிகள் செம்மண் வயலாக இருக்க பருத்தி விதைக்க ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது.
களையெடுப்பிற்கு வந்தவள் அடிக்கடி சுணங்கி வரப்பில் உட்கார, சுமதியை கவனித்துக் கொண்டுதானிருந்தாள் அழகி. முகம் வெளுத்து உதடெல்லாம் வரண்டு போயிருந்தது.
“ஒன்னுமில்ல அத்தாச்சி! ஏதோ சாப்பிட்டது சேரல போல?” முகத்தை முந்தானையால் துடைத்தவாறே கூறியவளை ஊன்றி கவனித்தாள்.
“உண்மையச் சொல்லு. நாலு தங்கச்சிகளப் பாத்தவ!” அவளை உறுத்துப் பார்த்து அதட்ட,
“தெரியல அத்தாச்சி. எதிர்பார்த்து ஏமாந்துட்டா என்ன பண்றது?” சொல்லி முடிக்கும் முன் தொண்டையடைத்து கண்கள் குளம் கட்டிவிட்டது சுமதிக்கு. விரக்தியாகப் பேசுபவளை கனிவாகப் பார்த்தாள். எத்தனை வருடங்களாக எதிர்பார்த்து, ஏமாந்த துக்கம் அவள் கண்களிலும், வார்த்தைகளிலும் நிராசையாக வெளிப்பட்டது.
“எத்தன நாளாகுது?”
“விடிஞ்சா வெள்ளியோட வெள்ளி இருபத்தியொன்பது நாளாச்சு அத்தாச்சி.”
“அடிப்பாவி! கிட்டத்தட்ட ஒரு மாசம். எல்லாரும் எவ்வளவு ஆசையா எதிர்பாத்துட்டு இருக்கோம். மறைக்க கூடிய விஷயமாயிது. முருகேசனுக்காவது தெரியுமா?” உரிமையோடு அதட்ட,
“அவங்ககிட்டதான் சொல்லக்கூடாது. ஆசையா எதிர்பார்த்து பொக்குனு போயிருவாங்க. உறுதியா தெரியாம சொல்லி அவங்களும் ஆசைய வளத்துக்க கூடாதுல்ல. வரவர அவங்களுக்கும் சலிப்பு தட்டிருச்சு போல. இந்த ஒரு மாசமா சரியா பேச்சுவார்த்தை வச்சுக்கறதில்ல!” என்றவள் கண்கள் மேலும் ஊற்றெடுக்க, அவள் சொல்லும் பேச்சு வார்த்தையின் உள்ளர்த்தம் என்னவென்பது அழகிக்குப் புரியாமலில்லை.
பிள்ளையில்லை என்ற விரக்தியில் பொண்டாட்டியை கண்டு கொள்ளாமல் விடும் ஆளில்லையே முருகேசன். மெட்ராஸ் சென்றுவந்த இந்த மூன்று மாதத்தில் முன்பு போல் இல்லாமல், இந்த மாதம் மனைவியிடம் நெருக்கம் குறைந்தது போல் இருந்தது சுமதிக்கு. ‘அவருக்கும் சலிப்பு வந்துருச்சு போல’ என நினைத்தவளுக்கு மனம் வெறுமையாகிப் போக நாள் தள்ளிப் போனதைக்கூட சொல்லாமல் வைத்திருக்கிறாள். ஒரு வேளை நாம் நினைத்தது போல் இல்லாவிட்டால், ஏமாற்றம் என்னோடு போகட்டும் என்ற எண்ணம்தான்.
“எனக்குத் தெரியும் சுமதி. இது கண்டிப்பா பிள்ள வாந்திதான். பித்த வாந்தியில்ல! முருகேசன் அப்படி ஒதுங்குற ஆளுமில்ல. தேர்தல் விஷயமா அலையறதால உன்ன சரியா கவனிக்காம விட்டுருக்கும்.” ஆறுதல் வார்த்தைகளை இட்டு நிரப்பி அவள் வெறுமையை நிரப்ப முயற்சி செய்தாள் அழகி.
அடுத்த வாரம் தேர்தல். முருகேசனும் தேர்தலில் வார்டு உறுப்பினராகப் போட்டியிடுகிறான்.
அவனுக்குப் போட்டியிடும் எண்ணமில்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. உதவிப் பஞ்சாயத்து தலைவராக நடேசன் போட்டியிட அவனை தோற்கடிக்க வேண்டிய கட்டாயம்.
வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பவர் தானே உதவி பஞ்சாயத்துத் தலைவராக முடியும். வீம்புக்காகவேணும் ஏதாவது குடைச்சல் கொடுப்பான்.
அதனாலேயே அவனை எதிர்த்து முருகேசனை நிறுத்தினான் சித்தன்.
“எதுனாலும் நம்ம வீரம்மா அத்தை கைபுடிச்சுப் பாத்தே சொல்லிறும். நீ வா! எம்மருமகனுக்கு நான்தான் அரணாக்கொடியோட அறைக்காசும், குஞ்சுமணியும் எடுத்து போடுவேன்” என கேலிப் பேச்சோடு வம்படியாக அழைத்துச் சென்றாள்.
****
“என்னக்கா நீ வரலியா?”
“வரணும்டீ…”
“சீக்கிரம் வாக்கா! நேரமாச்சு… போட்டுறப்போறாங்க!”
“இந்த மனுஷனுக்கு சோத்தப் போட்டுட்டு வர்றேன்டீ!”
“இதுக்கு தான் எங்க வீட்டு ஆம்பளைக்கு வெள்ளனா சோத்தப்போட்டு சாவடிக்கு பத்தி விட்டுட்டே!”
“எங்கடீ… நமக்கு என்னைக்கு விடிஞ்சுருக்கு. நீ முன்னாடி போய் எடம்போட்டு வை. பின்னாலயே வந்துர்றே!”
“வா! வா!” வாசலில் நின்று அழைத்தவள் வேகமாக நடையைக் கட்டினாள்.
சாப்பிட்டு முடித்ததும் படுக்கையைப் போடும் ஊர்சனம் இன்று சாவடி நோக்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஊருக்குப் புதிதாக பஞ்சாயத்து சார்பில் தொலைக்காட்சிப் பெட்டி வந்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை. ஊர்ச்சனமே அங்குதான் கூடியிருக்கிறது. இரண்டு மூன்று வருடங்களாக எங்க ஊருக்கும் டிவி வேண்டுமென அலைந்துபார்த்தார்கள். இதுவரை பக்கத்து ஊர்க்காரர் தான் பஞ்சாயத்து தலைவராக இருந்ததால் வந்த டிவியை அவர்கள் ஊருக்கு வைத்துக் கொண்டார்.
சித்தன் கொடுத்த முதல் வாக்குறுதியே ஊருக்கு தொலைக்காட்சிப் பெட்டி வரவைத்து தருவேன் என்பதுதான். இரண்டாவது, தங்கள் திருமணத்தன்று தான் தண்ணீர் டேங்க் திறப்பு விழாவும், தெருக்குழாய் இணைப்பும். மூன்றாவது ஆண்கள் வயிற்றில் நெருப்பையும், பெண்கள் வயிற்றில் பாலையும் ஒரு சேர வார்த்த, ஊருக்குள் சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் தடை செய்யப்படும் என்பதும். டி.வி, தண்ணீர் வசதி, சாராய ஒழிப்பு… இது போதாதா? பெண்கள் ஒட்டு மொத்த ஓட்டும் அழகிக்கு தான் என்பதற்கு.
அவர்கள் எதிர்பார்த்த மாதிரியே அழகி அமோக வெற்றி பெற, முருகேசனும் வார்டு உறுப்பினராக வெற்றி பெற்றிருந்தான்.
அந்த வெற்றியைக் கொண்டாடத்தான் ஊருக்கு சித்தன் சார்பிலேயே தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிவைத்தான். இரண்டு பக்க கதவு, சாவியென பாதுகாப்போடு கூடிய டையனோரா தொலைக்காட்சி பெட்டி. ஊர் கோவிலில் ஆண்டெனாவை மாட்டி, இன்று முதன் முதலாக ஒளியும், ஒலியும் பார்க்கத்தான் அத்தனை பேரும் ஊர் மத்தியில், வெள்ளென சோற்றை ஆக்கித் தின்றுவிட்டு கோவில் முன் கூடியிருந்தனர்.
வாஷிங் பவுடர் நிர்மா முதல் கொண்டு ரீகல் சொட்டு நீலம் டோய், கிராம்பு தைலமுள்ள பிராமிஸ் டூத் பேஸ்ட், கொம்பு முளைத்த ஒனிடா டிவி பூதம் என அனைத்து விளம்பரங்களும் வந்த பிறகு, திஸ் ப்ரேக்ராம் இஸ் ஸ்பான்சர் பை என விளம்பர அறிவிப்பு வர நிமிர்ந்து அமர்ந்தது ஊர்ச்சனம் அன்று போடப்படும் ஐந்தே ஐந்து பாடல்களுக்காக. (அதெல்லாம் ஒரு காலம். வயலும் வாழ்வும் கூட விடாம பார்த்த காலகட்டங்கள்.)
சுமதி, முருகேசனுக்கு வேறொரு செய்தி வைத்துக் காத்திருந்தாள்.
அவள் ஆசையாக சந்தோஷச் செய்தி சொல்ல, ஆர்வமாக வாரிக்கட்டிக்கொள்வான் என ஆவலோடு எதிர்பார்க்க, அதற்கான எதிர்வினை எதுவுமின்றி எனக்குத் தெரியும் என்பது போல் புன்சிரிப்போடு பார்த்து நின்றான்.
பொங்கிய சந்தோஷம் பொசுக்கென போக, முகத்தை உம்மென வைத்துக் கொண்டவளைப் பார்க்க சிரிப்பு வந்தது. “போன மாசமே நீ திண்ணையில ஒதுங்கல. ஏழு நாளும் எல்லா கோயிலுக்கும் போன. அடிக்கடி சுருண்டு சுருண்டு படுத்துக்கிட்ட. எப்பவும் புளிக்குழம்புதான் வச்ச. வீட்ல அண்ணிகளப் பாத்திருக்கேன். அதைவச்சே எனக்கு சந்தேகம் வந்துச்சு. உறுதியாத் தெரியாம, உன் மனசுல ஆசையத்தூண்ட வேண்டாமேனு தான் நான் எதையும் கேட்டுக்கல.”
சுமதி என்ன நினைத்து அவனிடம் சொல்லாமல் விட்டாளோ அதே காரணத்தை அவனும் சொல்ல, பகல் நேரம் என்று கூடப்பாராமல் ஓடி வந்து கட்டிக்கொண்டவள் கண்களில் கண்ணீர் கோடுகள். மென்மையாக அணைத்துக் கொண்டவனை, அண்ணார்ந்து பார்த்தவள்,
“பிள்ளையில்லாததால உங்களுக்கு சலிப்புத் தட்டிட்டேனோன்னு நெனச்சேன்” என்றவள் தொண்டை கரகரத்தது.
ஒரு கணம் புருவம் சுருக்கி யோசித்தவன், “ஹோஓஓ… உங்கூட வாய்க்கு வாய் பேசாததச் சொல்றியா?” எனக்கேட்டு வாய்விட்டு சிரித்தவனை முறைத்துப் பார்த்தாள்.
“ஒரு வேளை குழந்தையா இருந்தா சூதானமா இருக்கனும்ல. அதுக்கு தான் பேச்சு வார்த்தைய கொறச்சுக்கிட்டே” என்று கண்சிமிட்டிச் சொல்லிவிட்டு இறுக்கிக் கட்டிக் கொள்ள, சலுகையாக சாய்ந்து கொண்டவள் முகத்தில் இப்பொழுது மகிழ்ச்சியின் பூஞ்சாரல்.
“அதான் தண்ணியெல்லாம் தூக்கவிடலையா?”
“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்ட போ! சித்தனுக்குதான் நாம நன்றி சொல்லணும். அவன்தான் மல்லுக்கட்டி ஆஸ்பத்திரி கூட்டிப்போனான். நானும் மாத்திரை சாப்பிட்டதாலதான் இத்தனை வருஷமா தங்காத குழந்தை தங்கியிருக்கு.”
“அதெல்லாமில்ல. உங்ககிட்ட குறையிருக்காது. நானும் மாத்திரை சாப்பிட்டதால தான் தங்குச்சு!” இந்த விஷயத்தில் மட்டும் பெண்கள் என்றுமே தன் கணவனை விட்டுக் கொடுத்ததில்லை என்பதை சுமதியும் நிரூபித்தாள். ஆனால் உண்மை என்னவென்று முருகேசனுக்குத் தெரியுமே.
“சரி விடு. நம்மதான் மெம்பராகிட்டோம்ல. நம்ம பஞ்சாயத்து தலைவர ஒரு வழி பண்ணி, தெருக்குழாய வீட்டுக் குழாயா போட வச்சுருவோம்! தண்ணி சுமக்க வேண்டிய அவசியமிருக்காது.”
“ஆமாங்க… அத்தாச்சிக்கு கல்யாண வேல வேற தலைக்கு மேல இருக்கு. தங்கச்சிகளுக்கும் அதுதான் பாத்துச்சு. அது கல்யாணத்துக்கும் அதுதான் அலையணும் போல.”
“அதெல்லாம் சித்தன் பாத்துக்குவான். நாம கூடமாட இருந்தா போதும்! ஊரே மெச்சுற அளவுக்கு எப்படி நடக்கப் போகுது பாரு இவங்க ரெண்டுபேரு கல்யாணமும்!”
சுபயோக சுபதினத்தில்… திருவளர்ச்செல்வன் சித்தநாதனுக்கும், திருவளர்ச்செல்வி அழகம்மைக்கும் திருமணம் நடைபெற இருப்பதால் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து மணமக்களை மனதார வாழ்த்தியருள வேண்டுகிறோம்.
வசந்தத்தில் ஓர் நாள்
மணவறை ஓரம்
வைதேகி காத்திருந்தாளோ தேவி
வைதேகி காத்திருந்தாளோ தேவி
பாதகத்தி காத்திருந்தாளோ…

SUPER -O- SUPER
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫