பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 17

மனம் ஒரு குரங்கு, குள்ளநரி புத்தி, ஓநாய்ப்பார்வை, கழுகு கண்ணு, பச்சோந்தி இப்படி மனிதனை விலங்குகளோடு ஒப்பிடும் அளவிற்கு விலங்குகள் ஒன்றும் தரம் தாழ்ந்து போய்விடவில்லை. வேண்டுமானால் ஏதாவதொரு விலங்கு மனிதன் மாதிரி வக்கிரம் புடிச்ச பைய, அவன்கிட்ட சாக்கிரதையா இரு என தன் சகவிலங்கை தற்சமயம் எச்சரித்துக் கொண்டிருக்கலாம். 

“அடேய்…. செவல… இனிமே நீ இப்படி வந்து போலிசுக்குப் பயந்து பயந்து சாராயம் காச்ச வேண்டாம்டா.”

“ஏன் சாராயம் காச்சுறத சட்டபூர்வமாக்கிட்டாங்களா?”

“அட… உன் மதினியா இருக்குற வரைக்கும் உனக்கு கவலையே இல்லைனு சொல்லவந்தேன்டா.”

“இப்ப மட்டும் என்ன? இவனா குடும்பத்தப் பாக்குறான். அழகிதான பாக்குது நடேசா.” நக்கலோடு நாக்கு குழறியது உடனிருந்தவனுக்கு.

“அதனாலதான் இவன சட்டபண்ணாம இவன் பொண்டாட்டிக்கு குடும்பக்கட்டுப்பாடு பண்ணி நீ ஆம்பளையே இல்லைனு சொல்லாம சொல்லிட்டா.” போதையில் கண்கள் சிவந்து, வன்மம் தெரித்தது நடேசனுக்கு.

“யாரப் பாத்து ஆம்பளையே இல்லைனே?” என எட்டி சட்டையைப் பிடித்தான் செவலக்காளை. 

“எஞ்சட்டைய ஏன்டா பிடிக்கிற. அடக்க ஆளில்லைனு தானே கொண்டிமாடாட்டம் திரிஞ்சா. அவளையும் ஒருத்தன் அடக்கி தொழுவத்துல கட்டிட்டான்டா. ஆம்பளையா‌ இருந்தா உன் மதினியாள அடக்கிவை பாக்கலாம். இருந்திருந்து புடிச்சாலும் புடிச்சா புளியங்கொம்பால்ல புடிச்சுருக்கா. உனக்கு காலத்துக்கும் கவலையில்ல. ராசாவாட்டம் காலாட்டிட்டே சாப்பிடலாம்.” எகத்தாளத்தோடு எள்ளி நகையாடியது வார்த்தைகள். 

“அழகி மதினியப்பத்தி தப்பா பேசாதே. அது நெருப்பு.” 

“போடா போக்கத்தவனே. உனக்கும் எனக்கும் தான்டா அவ நெருப்பு. ஆனா அந்த நெருப்புல ஒருத்தன் சுகமா குளிர் காயுறான்டா?” பேசுவது தன் குடும்பத்தைச் சார்ந்தவளை, தனக்கு வாக்குப்பட்டு வந்தவளின் அக்காவை என்ற சூடுசுரணை கூட இல்லை அந்த மானங்கெட்டவனுக்கு. எப்படி என் குடும்பத்துப் பெண்ணை தரக் குறைவாகப் பேசலாமென வெகுண்டு எழ வேண்டாம். ஆம்பளையே இல்லை எனும் பொழுது சட்டையைப் பிடித்தவன், அழகியை தரம் கெட்டவள் எனும் பொழுதும் அதைச் செய்திருக்க வேண்டாமா? 

“வேண்டாண்ணே… தப்பா பேசாதே!‌ நா மனுஷனாவே இருக்கமாட்டேன்.” தலைக்கேறிய போதையில், நடேசனின் பேச்சில் விரல் நீட்டி எச்சரித்தான்.

“உன்னைய அங்க ஒருத்தி நாயாக்கூட மதிக்கல. நாலு கொளுந்தனுக இருக்கானுகன்னு நெனச்சுருந்தா இப்படி குளிர் விட்டுப் போயி திரிவாளாடா? உங்களுக்கெல்லாம் எதுக்குடா மீச?”

“நீயே ஒரு ஊக்காளி. நீ சொல்றத எப்படி நம்புறது?”

“நானே கண்ணால பாத்தேன்டா செவல. என்னைக்காவது அழகி சிரிச்சுப் பேசி நீ பாத்திருக்கியா? ஆனா அவன்கிட்ட சிரிக்கறதென்ன? குழையறதென்ன? பசப்பரதென்ன? அதுவும் மோட்டார் ரூம் மறைவுல. அவன் குடம் தூக்கிவிடறதென்ன? பசையிருக்குற எடத்துல தானடா ஒட்டும். உங்கிட்டயும், எங்கிட்டயும் என்ன இருக்கு ஒட்டறதுக்கு.” 

சாராயம் குடிக்கவந்த இடத்தில் நடேசன் ஊறுகாயாய் அழகியையும், சித்தனையும் சேர்த்து வைத்துப் பேச, போதையில் கண்கள் சிவக்க கேட்டுக் கொண்டிருந்தான் செவலக்காளை. 

எத்தனை நாட்களாக அவனும் கழுகாய் அவளை வட்டம் போட்டிருப்பான். தொரட்டிக்கம்பை தரையில் ஊன்றி நின்று அவள் திரும்பிப் பார்த்தாலே இவனுக்கு, தொண்டைக்குழி வரண்டு தொடை நடுங்கிவிடும். அப்படியிருந்தும் அவள்‌ மீதுள்ள ஆசையை அடக்க முடியாமல், பஞ்சாயத்தில் வைத்து ஆண்பிள்ளைக்கெனபகிரங்கமாக பெண்ணும் கேட்டுவிட்டான். அப்பொழுதெல்லாம் அவனை ஈனப்பையல் போல் என் கால்தூசிக்கு ஆகமாட்ட எனப் பார்த்தவள் இன்னொருத்தனுக்கு மடிந்து விட்டாள் என்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. 

இதே எண்ணம் தான் நடேசனுக்கும். அவள் பாவாடை சட்டையிலிருந்து தாவணி போட்ட காலம் முதல் ஒரு கண்ணை மட்டுமல்ல இரண்டு கண்ணையும் அவள் மீது வைத்திருப்பவன். துணிந்து கல்யாணம் பண்ணவும் கேட்டவன். அவள் கல்யாணம் ஆகாமல் வீட்டோடு இருக்க, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் சாடை காட்டிப் பார்த்தவன். 

அவன் மட்டுமல்ல…

ஊரில் நேற்று மீசை முளைத்த இளந்தாரி முதற் கொண்டு மீசை நரைத்த கெழடுவரை நோட்டம் விட்டவர்கள் தான். வேலியில்லா பயிராக மேயப் பார்த்தார்கள்தான். அவர்களை எல்லாம் முறைத்துப் பார்ப்பது கூட அதிகப்படி என்றெண்ணி, அசிங்கத்தைப் பார்ப்பது போல் அருவருத்த பார்வையிலேயே எட்டி நிறுத்தியவள். அவளை நெருங்கும் தைரியம் யாருக்கும் வந்ததில்லை.

அதையும் மீறி தைரியமாக நெருங்கியவர்களை முச்சந்தியில் வைத்து சந்திசிரிக்க வைத்துவிடுவாள். யார் எவரென்ற தயவு தாட்சண்யம் என்பது மருந்துக்கும், வார்த்தையில் கண்ணியம் கடுகளவும் இருக்காது. அவளிருக்கும் திசைக்கே கும்பிடு போட வைத்துவிடுவாள். 

கெடை போடும் பொழுதெல்லாம் இரவில் ஆடுகளோடு காட்டில் தனியாக தங்கவேண்டி வந்தாலும், அரிக்கேன் விளக்கும், தொரட்டிக் கம்பும், இடுப்பில் சொருகியிருக்கும் கருக்கறிவாளும், ஒச்சாயி மட்டும் தான் துணைக்கு. “அவளுக்குள்ள பேயி புகுந்திருக்கு. அதான் பேயோட பேயா ஊரச்சுத்தி வர்றா!” ஊருக்குள் இதுவரை இப்படித்தான் அழகியைப் பற்றி பேச்சு ஓடுகிறது. 

ஆனால் இன்று குடிமகன்கள் கூடுமிடத்தில், ஒழுக்கசிகாமணிகள் முன் அழகியைப் பற்றி நடேசன் பற்றவைக்க, செவலக்காளை அதில் சாராயத்தை ஊற்றி கொழுந்துவிட்டு எரியச் செய்தான். 

சித்தன் ஊரில் இல்லையெனத் தெரிந்து கரட்டடிவாரத்தில் ஊரல் போட்டு சாரயம் காய்ச்சி விற்றுக்கொண்டிருந்தான். அவனிருந்தால் அங்கு சாராயம் காய்ச்ச முடியாது. 

“தோட்டம் தான் உனக்கு சொந்தம். கரடு(குன்றைவிட சிறியது) ஊருக்கு பொது என வீம்பு பேசியவனை, ஊரல் பானைகளை அடித்து நொறுக்கி விட்டு, நிரந்தரமாக உள்ளே இருக்கும் படி செய்து விடுவேன் என மிரட்டி வைத்திருந்தான். சித்தன் வர ஒரு வாரமாகும் எனத்தெரிந்து, தீபாவளிக்கென கரட்டடியில் ஜரூராக சாராயம் காய்ச்ச துவங்கிவிட்டான். வேலை முடித்துவந்த குடிமகன்களும் கடமையாற்ற வந்துவிட்டனர் நேரம் தவறாமல். அவனை சாராயம் காய்ச்சவிடாத கோபத்தைவிட, அழகியை வளைத்துவிட்டான் என்ற கோபமும் ‌சேர்ந்து கொண்டது செவலைக்கு.

இது எதையும் அறியாமல், மறுநாள்‌ கூலி கொடுக்க, தங்கை மகளின் சிலேட்டை எடுத்து வைத்து கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள் அழகி. 

ஆண்கள் கூலி, பெண்கள் கூலியெனத் தனித்தனியாக எழுதி, அதிலும் உழவுக்கு வந்தவர்கள், பார் போட வந்தவர்கள், நடவுக்கு வந்தவர்கள் என பிரித்து கணக்கெழுதினாள். 

ஒரு நாளைக்கு குறைந்தது நூறிலிருந்து நூற்றைம்பது பேர். ஏழு நாட்களுக்கென மொத்தமாக கணக்குப் போட, ஆயிரம் பேரைத் தாண்டியது. 

வேலை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து வந்தவர்களுக்கு தீபாவளி‌ முன்பணமாக ஒரு வார கூலியை கொடுக்கச் சொல்லியிருந்தான். அவன் சொன்னதைக் கேட்டு எதற்கிந்த தேவையில்லாத வேலை எனும் படி கேள்வியாகப் பார்த்தாள்.

அவள் பார்வையின் பொருளறிந்து, “என்ன பாக்குற?” என கேட்டவனிடம்,

“எதுக்கு இப்ப தீபாவளிக்கு பணம்?” என்றாள்.

“ஏன்… கொடுத்தா சந்தோஷப்படுவாங்கள்ல. உழைக்கறவங்களுக்கு கொடுக்கலாம். கண்டிப்பா கொடுக்கணும். அங்க கட்டிட வேலை பாக்குறவங்களுக்கும் அப்பா ட்ரெஸ் எல்லாம் எடுத்துக் கொடுப்பாரு!”

“அதில்ல…” என தயங்கியவளை,

“பரவாயில்ல… எதுவாயிருந்தாலும் சொல்லு!” என ஊக்குவிக்க,

“தேவையில்லாத பொல்லாப்பு வரும்.”

“இதுல என்ன பொல்லாப்பு வரப்போகுது?”

“நம்ம குடுத்தோம்னா, இதே மாதிரி மத்த தோட்டத்துக்காரவுங்ககிட்டயும் எதிர் பாப்பாங்கள்ல. இல்லாத பழக்கத்த, புதுசா நம்ம உருவாக்குன மாதிரி இருக்கும்.”

“நானொன்னும் எல்லாருக்கும் கொடுக்க சொல்லலையே. தொடர்ந்து வந்தவர்களுக்கு மட்டும் தானே கொடுக்க சொன்னேன். ஏன்னா தொடர்ந்து வர்றவங்களுக்கு எட்டணா கம்மியான கூலிதான?”

“அது அவங்களுக்கு தெரியாது. தீபாவளிப் பணமா கொடுத்தா அது புதுப்பழக்கம். அதுவுமில்லாம ஏற்கனவே தண்ணி டேங்க், அது இதுன்னு செலவு வேற. உங்க அப்பா வேற சடச்சாரு தான. இதுவும் நாம கொடுத்தா புதுப் பணக்காரன் பவுசு காட்டுறான்னு நாலு பேரு வாய்ல விழ வேண்டியிருக்கும். அது எதுக்குன்னு தான். வேணும்னா அடுத்த வருஷம் கூட பாத்துக்கலாம். இந்த வருஷமே கொடுத்தா கைக்காசத்தான் கொடுக்கணும். அடுத்த வருஷம்னா வெளச்சல கூட கொடுக்கலாம். அது யாருக்கும் பெருசா தெரியாது. காசா கொடுத்தா அடுத்தவங்க கண்ண உறுத்தும்.” ஊராரின் எண்ணமறிந்து அவள்‌ மனதில் பட்டதைச் சொன்னாள். இதுவரை இல்லாத புதுப்பழக்கம். அரசாங்க உத்யோகம் மாதிரி போனசெல்லாம் கொடுத்தால், அதுவே மற்ற தோட்டத்துக்காரர்களிடமும் எதிர்பார்ப்பார்கள். சிறு பண்ணையம் பார்ப்பவர்களால் முடியாது. பெரும் பண்ணையம் செய்பவர்களும் இதென்ன யாரும் செய்யாத புது வழமையென சடவு வரும். 

ஏற்கனவே பத்து இருபது ஏக்கர் வைத்திருப்பவர்கள் எல்லாம் ஆட்கள் மொத்தம் மொத்தமாக இங்கு வந்து விடுவதால் ஆள்கிடைக்காமல் புகைச்சலில் இருக்க, இன்னும் இவன் தீபாவளி பணம் வேறு கொடுத்துப் பழக்கினால் தேவையில்லாத சடவுதான் வந்துசேரும். 

“நீ சொல்றதும் சரிதான். எதுவும் காரணமில்லாம செய்யல. இதெல்லாம் கொடுத்து வைக்கிறதுக்குச் சமம். நேரம் வரும் போது உனக்கே புரியும். நாலூரு சனத்தோட ஆதரவு இப்ப நமக்கு தேவை. நீ உங்கையாலயே கொடு!” இவள் சொல்வது எதையும் காதில் வாங்காமல் அவன் முடிவிற்கே பேச, அவன் எதையோ மனதில் வைத்து பேசுகிறான் என்பது மட்டும் புரிந்தது.

அதற்கு மேல் மறுத்துப்பேச முடியவில்லை. அவளைப் பொறுத்தவரை அவளும் கூலிக்கு வந்தவள் தான். இதுக்கு மேல் உரிமையெடுத்து பேச முடியாது. ஆனால் இவளை கொடுக்க சொல்லியது மட்டும் உறுத்தியது.

“வேற வினையே‌ வேண்டாம். தீபாவளி காசையாவது நீங்க உங்க கையால கொடுத்துட்டுப்‌ போங்க!”  முடிவாகச் சொல்ல,

“உம் பேச்ச எப்ப கேக்கணுமோ அப்ப கேக்குறேன். இப்ப நான் சொல்றத மட்டும் நீ கேளு. வார்த்தைக்கு வார்த்தை நாமன்னு மட்டும் சொல்ல தெரியுதுல்ல” என சிரிப்போடு கேட்க, இது எப்ப இருந்து என மூளை யோசித்தது. அவன் கவனித்தது அவள் பேச்சில் இருந்த நம்ம எனும் பதத்தை மட்டும் தான். அவனிடம் பேசிய அத்தனையும் பொதுவில் தான் பேசினால். நீங்க, உங்கதோட்டம் என தனித்துப் பேசவில்லை. 

அவனிடம்‌ பேசியவற்றை அசை போட்டவாறே கணக்குப் போட, இந்தக் கணக்கிற்கு, சிலேட் பத்தாதென, பள்ளிக்கூடம் போகும் பக்கத்து வீட்டுப் பையனிடம் பழைய நோட்டும் பேனாவும் வாங்கி வந்தாள். 

பிள்ளையார் சுழி‌ போட்டுவிட்டு, கரட்டடி‌ தோட்டம் என எழுத வந்தவள், சித்தநாதன் தோட்டம் வரவு, செலவு என திருத்தி எழுதியவள் முகம் பூரிப்பில் விகசித்தது. எழுத்து வடிவிலிருந்த சித்தன் பெயர் கூட அச்சுவெல்லமாய் இனித்தது வாசித்துப் பார்த்தவளுக்கு.‌ மெலிதாக உள்ளம் முழுவதும் பரவசம் மேவிட, இலேசாக கீழுதடு கடித்து புன்னகைத்தாள். அவன் நினைப்பில் அடிவயிறு குழைய இத்தனை வருட தனிமை தவத்தை சோதித்துப் பார்த்தது சித்தநாதன் எனும் ஆறெழுத்து மந்திரம். 

இத்தனை வருடங்களாக அவன் நினைவு மட்டுமே போதுமென வாழ்ந்தவளுக்கு அவனில்லாத இந்த இரண்டு நாட்களே நெட்டித்தள்ளியது. பதினான்கு வருடங்களாக காத்திருந்தவளுக்கு பத்து நாட்களை கடத்துவதை எண்ணிப்பார்க்க மலைப்பு தட்டியது.

கிளம்பு‌முன் அவன் சொல்லி சென்றதை இப்பொழுது நினைத்தாலும் நினைவெல்லாம் மந்தாரமாய் பூ பூத்தது.  

வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சிறு வயல் ‌மட்டும் உழுதவாக்கிலே இருக்க மற்ற வயலெல்லாம் நெல் நடவு போய்க்கொண்டிருந்தது. அந்த வயல் பற்றி எதுவும் சொல்லவில்லை. 

அவன் கிளம்பும் பொழுதுதான் வீரம்மா “இந்த வயல் மட்டும் உழுதவாக்குலயே  இருக்கே தம்பி. வயலடிக்கலையா?” என அதைப்பற்றி கேட்க,

“அதுல வேற நடனும் பெரியம்மா” என்றான்.

“ஐப்பசி மாசத்துல நெல்லு நடாம வேற என்னத்தப்பா நடப்போற?”

“அதுல செவ்வந்தி பூ நடணும் பெரியம்மா.” அவருக்கு பதில் சொல்லிவிட்டு, இவளைப் பார்த்தான். 

“செவ்வந்தி வேர் விசாரிச்சு வை அழகி. தீபாவளி முடிஞ்சு வந்ததும் நீயே நட்டுவிட்டுரு!” என அவளைப் பார்த்துச் சொல்ல, 

“ஒரு வயல் மட்டும் நட்டு என்னய்யா பண்றது?” என்றார்‌ வீரம்மா மீண்டும்.

“இது ஏவாரத்துக்கு இல்லத்தை. பூஜைக்கு மட்டும் போதும்த்தை” என்றான் கண்கள் சிரிக்க. 

“ஓ… சாமிக்கா” என்றார் அவரும் இழுவையாய். 

“ஆமாத்தே!” என்றவன் பார்வை அவளைத் தழுவி மீண்டது. 

சிம்னி விளக்கின் வெளிச்சத்தில், கண்கள் மின்ன, பேனா முனையை வாயில் வைத்துக்கொண்டு, தன் சித்தனின் நினைவில் லயித்து மோன நிலையில் கரைந்துகொண்டிருந்தாள். 

“என்னக்கா பண்ற?” அன்னக்கிளி பிள்ளையை தொட்டிலில் போட்டுவிட்டு வந்து திண்ணையில் அவளோடு உட்கார, சித்தன் தலைமை தாங்கிய அழகியின் ஏகாந்த சபை கலைக்கப்பட்டது. 

“நாளைக்கி கூலிக்கணக்கு எழுதி வைக்கிறேன் அன்னம்” என்றவளிடம்,

“இந்த குடிசைக்கு வந்த மவுசப் பாரேன்க்கா. என்னைக்காவது இம்பூட்டு‌பணம்‌ நம்ம வீட்ல இருக்கும்னு கனவாவது கண்டிருப்போமா?” தாவாயில் கைவைத்து அதிசயித்தாள் அன்னக்கிளி. (அணா‌ பைசாவுக்கெல்லாம் மதிப்பிருந்த காலகட்டம். ஆண்கள் கூலி (உழவு மாட்டோடு) பத்து ரூபா, பெண்கள் கூலி களையெடுக்க எனக்குத் தெரிந்து எண்பதுகளின் மத்தியில்‌ மூனு ரூபாயே அதிகம். பதிவா வேலைக்குப் போற இடத்துல இரண்டரை ரூபா. தொடர்ந்து வேலை தர்றதால. ஒரு‌ மூட்டை‌ (கிட்டத்தட்ட ஐம்பது கிலோவிற்கு மேல்) வெங்காயமோ, வேர்க்கடலையோ ஆய்ந்தால் கூலி அஞ்சு ரூபா. தங்கம் விலை ஒரு‌ பவுனு 1300னா பாத்துக்கோங்க பணத்தோட மதிப்ப.)

“அடி போடீ! இவ அந்தக்காச வாங்கிட்டு வந்தாலும் வந்தா, கண்ணுல ஒரு பொட்டுத் தூக்கமில்ல. ஒன்னுக்கு, ரெண்டுக்கு கூட போகாம புதையல பூதம் காத்த மாதிரி காக்க வேண்டியிருக்கு.” கிண்டிய கேப்பைக் கழியை அகப்பையில் அள்ளிப்போட்டு, கருவாட்டுக் குழம்போடு சுடச்சுட தட்டில் எடுத்து வந்தார் இரண்டு மகள்களுக்கும். 

எல்லாம் ஒரு‌ ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் கட்டுகள். அரிதாக பத்து ரூபாய் கட்டு. அதை மொத்தமாக ஆயிரக்கணக்கில் பார்க்க திக்குமுக்காடிப் போனார் பொன்னுத்தாயி. 

அன்னக்கிளி, “ஆமாக்கா… அம்மாவோட அலும்புதாங்கல. மூனு வேள சாப்புடுதோ இல்லையோ, நாலு வேளையும் அடுக்குப் பானைய தொறந்து தொறந்து பாத்துக்குதுக்கா.”‌ கேலி பண்ணி சிரிக்க,

“நாலூரு சனத்தோட காசுடீ. பொல்லாப்பு இல்லாம கொடுக்கணுமே. வயசுப்புள்ளய மடியில கட்டின மாதிரி இருக்குடி. உங்களக்கூட இப்படி காபந்து பண்ணல” என அலுத்துக் கொள்ள மகள்கள் இருவருக்கும் சிரிப்பு தாளவில்லை. 

குடத்தில் தண்ணீர் இல்லாமல் பணத்தோடு வந்ததிலிருந்து துளியளவு தூக்கம் இல்லை பொன்னுத்தாயிக்கு. எப்படா அதை கொடுத்து முடிப்போம் என்றிருந்தது. 

இவர்கள் சாப்பிட்டு முடிக்க, தொட்டிலில் போட்ட பிள்ளை கால் கொலுசை உதறி சிணுங்க, 

“இந்தா முழிச்சுட்டா. கோழி கூட செத்த சேத்து தூங்கும்.” அலுத்துக் கொண்டே எழுந்து சென்று பொன்னுத்தாயி பேத்தியைத் தூக்கிவர, அழகி‌ சாப்பிட்ட தட்டிலேயே கை கழுவிவிட்டு, கையைநீட்ட தாவிக் கொண்டு வந்த பிள்ளை, பொக்கைவாய் திறந்து உலக சந்தோஷம் மொத்தமும் என் சிரிப்பிற்குள் என அகண்ட வாய்க்குள் அகிலம் காட்டியது உலகளந்த பெருமாளாய்.

“நல்லா சிரிக்க ஆரம்பிச்சுட்டாம்மா!”

“மூனு மாசமாச்சுல்ல. முகம் பாத்து சிரிக்காதா?” மழலையின் சிரிப்பு மூவரையும் தொற்றிக்கொண்டது. இன்று ஏதோ அக்கா நல்ல மனநிலையில் இருப்பதாகப் பட,

“அக்கா…” என தயங்கி ஆரம்பித்தாள்.

பிள்ளைக்கு முத்தம் கொடுத்துக் கொண்டே என்னவென்று பார்க்க,

“இதே மாதிரி உன்னையும்‌ பிள்ளையும், கையுமா பாக்கணும்க்கா” என பயந்து பயந்து சொல்ல, பிள்ளையின் வயிற்றில் வாய் வைத்து ஊதி அது கிளுக்கி சிரிப்பதை பார்த்து அகமகிழ்ந்திருக்க, அன்னக்கிளிக்கே ஆச்சர்யம். மற்ற தங்கைகள் எல்லாம் தனக்கு வழிவிட்டால் போதுமென, இவளை ஒதுக்கிவிட்டு, ஒதுங்கிப் போய்விட, இவளும் இரண்டாவது தங்கை மட்டும் அடிக்கடி அக்காளிடம் கல்யாணப் பேச்சை எடுத்து வாங்கிக் கட்டிக் கொள்வார்கள். இதற்கு முன் எத்தனையோ‌ முறை எத்தனையோ விதமாய் கேட்டிருக்கிறாள். உன் வேலையை மட்டும் பார்‌ என ஒரே வாக்கியத்தில் முடித்துக் கொள்வாள்.

இன்று இவள் கோபப்படாமல் இருப்பதே நல்ல சகுணமாகப் பட பொன்னுத்தாயும், “அழகு… வேல்ச்சாமி அண்ணே கூட மப்பிள்ள பாக்குறேன்னு சொன்னார்டீ” என மெள்ள ஆரம்பிக்க‌ முகம் யோசனையாக திரும்பியது. 

“நல்ல சாதகம் வந்தா, முருகேசன் கிட்ட கொடுத்துவிடறேன்னு சொன்னாரு. அவருக்கு உம்மேல ரொம்ப அக்கறை. ஏன் இன்னும் காட்டிக்கொடுக்காம வச்சுருக்கனு, உங்க அப்பா‌ பேரச்சொல்லி, அவன்‌ இருந்தா இப்படி விட்டிருப்பானானு கோவிச்சுக்கிட்டாரு அழகு.”

“அந்தக்காலத்துல உங்க தாத்தாவுக்கே அவுங்க அப்பாதான் கல்யாணம்‌ முடிச்சுவச்சாராம். உங்க அப்பா எடத்துல இருந்து அவரே எல்லாம் பண்றேன்னு சொன்னார்டீ. ஆவுடை கூட என்னை ரொம்ப சடச்சா. உம்மேல அவங்களுக்கு ரொம்ப அக்கறை.” என வெள்ளந்தியாய் சொல்ல சட்டென அழகி முகம் இருண்டது அந்த அரையிருட்டில் இருவர் கண்ணிலும் படவில்லை.

 எத்தனை சாதுர்யமாக உங்க மூதாதையர் எங்க வீட்டில் பண்ணைக்கு இருந்தவர்கள் என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார். அது புரியாமல் பொன்னுத்தாயி பூரித்துப் பேச, அத்தியாவசியத்துக்கு கூட அடுத்தவர்களிடம் கை நீட்ட கூடாதென நினைப்பவள். அவர் எதார்த்தமாகக் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் மெட்ராஸ் சென்றிருந்த பொழுதே அவர் பார்வையிலிருந்து இளக்காரத்தை பார்த்திருந்தாளே?

“ஏம்மா‌ யாராவாது உங்கிட்ட கல்யாணம் கேட்டாங்களா? அவரு எதுக்குமா எனக்கு மாப்பிள்ளை பாத்து முடிச்சு வைக்கணும். யாரும் இங்க சீந்துவாரில்லாம இல்ல. நாலு தங்கச்சிகளுக்கு பாத்து முடிச்சு வைக்கத் தெரிஞ்சவளுக்கு, எனக்கு முடிச்சுக்கத் தெரியாதா?” என படபடவென பொறிய‌ ஆரம்பித்துவிட, போச்சுடா! மறுபடியும் முருங்கை மரமேறியாச்சா. இனி எந்த விக்கிரமாதித்தன் வந்து இவள இழுத்துட்டுப் போக என மானசீகமாக தலையில் கைவைத்துக் கொண்டனர் பெற்றவளும், பிறந்தவளும். 

இவ்வளவு நேரமிருந்த இளக்கம் மாறி‌ மீண்டும் இறுகிவிட்டாள். அது வேல்ச்சாமி மீதிருந்த கோபமா வேறு மாப்பிள்ளை பார்ப்பதாகச் சொன்னதால் வந்த கோபமா என யாமறியோம் பராபரமே. 

மகனிடம் இதைப் பற்றி பேச விரும்பாதவர், அன்று தோழிகள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட வேல்ச்சாமி, தானே அழகிக்கு மாப்பிள்ளை பார்த்து முடித்து வைப்பதாக கூறிச் சென்றார். மகனுக்கு தான் முதலில் முடிக்க வேண்டுமென்பதில்லையே. இவளுக்கு முடித்தாலும் அவர் பிரச்சினை தீர்ந்தது தானே. அது அவளது தன்மானத்தை தூண்டிவிட பொங்கி தீர்த்துவிட்டாள்.

மறுநாள் பொழுது விடிய, குடத்தோடு சித்தன் தோட்டம் கிளம்பிவிட்டாள். ஊர்வாரியாகப் பிரிந்து வரச்சொன்னாள். 

அவரவர் பெயருக்கு நேராக கூலியை எழுதி வைத்திருந்தாள் நாள் கணக்கோடு. 

கொடுத்துவிட்டு கையோடு கைநாட்டோ, கையெழுத்தோ வாங்கிக் கொண்டாள். 

“என்ன அழகி… ஆஃபிஸ் சம்பளமா போடுற. கையெழுத்து கேக்குற.”

“ஆபீசு வேலை மாதிரி தீபாவளி போனஸ் வாங்கும் போது இதக் கேக்கல. அடுத்தவங்க காசுக்கா. கணக்கு கணக்கா ஒப்படைக்கனும்ல?”

“உங்கிட்ட யாரு கணக்கு கேக்கப்போறா?” அவளை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு சென்றவர், “எல்லாம் வெள்ளத்தோலு பண்ற மகிமை.” அவள் காதில் விழாதவாறு சொல்லிச் சென்றாள் இவள் வாய்க்குப் பயந்து. விழுந்தால் கட்டி ஏறி காதை அறுத்துவிடுவாள் என்கிற பயம்‌தான்.

இன்று தொகை பெரிது. ஆட்கள் எண்ணிக்கையும் அதிகம். அதனாலேயே இந்த எழுத்துப் பூர்வ கணக்கு வழக்கு. 

பெண்கள் வந்து வாங்கிச் செல்ல, ஆண்கள் ஒருசிலர் பார்வை வாழ்வுதான் என இவளை ஏளனமாகப் பார்த்தது.‌ 

“கேட்டியா சங்கதி” என பெண்களும் கூடி கூடி பேசிக் கொண்டனர். 

எப்பொழுதும் இவள் கணக்குப் பார்த்து கொடுப்பது தான்.‌ இத்தனை நாட்களாக பத்து, இருபது பேருக்கு, அஞ்சு‌, பத்து என கொடுக்கும் போது அவர்களுக்கொன்றும் பெரிதாகத் தெரியவில்லை. இவள் வீட்டுக்கே வந்து கூட வாங்கிப் போனதுண்டு. 

நான்கு ஊர் சனம், ஆணும் பெண்ணுமாக அவள் கையால் சம்பளம் வாங்கும் பொழுது எங்கோ  புகையத்தான் செய்தது. இதுவே பேனவாரம் முருகேசன்‌ கையால் வாங்கும் பொழுது தெரியவில்லை. ஆயிரக்கணக்கில் இவள் கையால் எண்ணிக் கொடுப்பது சற்று எல்லாருக்கும் பொசுபொசுவென வந்தது. அதில் நடேசன் பற்ற வைத்தது வேறு, ஈர விறகடுப்பாய் பார்த்தவர்கள் கண்ணெல்லாம் காந்தியது. 

“போக்கத்தவனுக்கு வாக்கப்பட்டு அவனுக்கு எடுப்பா இருக்கறதவிட, இருக்கப்பட்டவனுக்கு தொடுப்பா இருந்துட்டு போயிறலாம். இப்ப என்ன அதுல கொறஞ்சு போச்சுங்கற. எண்ணி எண்ணி செலவழிக்காம காணிக்காரி மாதிரி எண்ணி எண்ணி சம்பளம் கொடுக்கலாம்ல.” 

குடிகாரனைக் கட்டி நொந்து போன ஒருத்தி அலட்சியமாக சாடை பேசிச் செல்ல கணக்கு வழக்கில் கவனமாக இருந்தவளுக்கு கவனத்தில் பதியவில்லை. ஆனால் காதில் விழுந்தவர்கள் நக்கலாக சிரித்துக் கொண்டனர்.

செவலை அங்கேயே வந்து போதையில் சலம்பும் வரை அவளுக்கு எதுவும் கவனத்தில் பதியவில்லை. 

நாம நெனச்சது நெனச்ச நேரத்துல நடந்துட்டா வாழ்க்கையில சுவாரஸ்யம் என்பதேது. அப்பறம் விதி விதின்னு ஒன்னு விதிச்சு வச்சுருக்கோமே அதுக்கு இங்கு என்ன வேலை.

விதியேன்னு விதிவிட்ட வழி போவாளா? விதியை வெல்லும் விதி வாங்கி வந்திருக்கிறாளா? பார்க்கலாம் பாதகத்தியை…

2 thoughts on “பாதகத்தி நெஞ்சுக்குள்ளே 17”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top