“உன் மகன் என்னடீ நெனச்சுட்டிருக்கான்?” என்றார் தோளில் கிடந்த துண்டை உதறி நாற்காலியில் எரிந்தவாறே.
“அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கெப்படி தெரியும்?” என்றவரிடம்,
“காசென்ன இங்க மரத்துல காய்க்குதா?” என கேட்க,
“இப்ப என்ன பண்ணிட்டான்னு வானத்துக்கும் பூமிக்கும் இப்படி குதிக்கிறீங்க?” என்ற ஆவுடையின் அசட்டையான பேச்சு மேலும் கோபமூட்டியது வேல்ச்சாமியை.
பாலைக்காய்ச்சி இறக்க, பூஜையறையில் வைத்து சாமி கும்பிட்டுவிட்டு, டம்பளர்களில் ஊற்றி கொடுக்க, அழகி வெளியே வேல்ச்சாமியோடு பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு எடுத்துக் கொண்டு போய் கொடுத்து வந்தாள். உள்ளே வந்தவளுக்கும், மகனுக்கும் ஆவுடை டம்ளரில் பாலைக் கொடுக்க வாங்கி குடித்தவள், நடவுக்கு செல்வதாக வயலுக்குக் கிளம்பிவிட்டாள். சற்று நேரத்தில் சித்தனும் கிளம்பிவிட, பால் காய்ச்சிய அடுப்பில் சோற்றுக்கும், அதை ஒட்டியிருந்த கொடி அடுப்பில் பருப்பிற்கும் உலையைப் போட்டுவிட்டு அறுவாமனையில் காய் நறுக்கிக் கொண்டிருந்தார் ஆவுடை. உலை கொதிக்கும்முன், உள்ளே வந்த வேல்ச்சாமி கொதித்துக் கொண்டிருந்தார்.
இவரைப் பார்த்துச் செல்லவந்த பழைய தோழமைகளிடமும், உறவுகளிடமும் இவ்வளவு நேரமாக நேரம் போவதே தெரியாமல் தற்பெருமையை அள்ளி வீசிய வேல்ச்சாமியிடம் சித்தன் இந்த ஊருக்கு செய்து தருவதாகச் சொன்ன நற்பணிகளை பெற்றவரிடம் புகழ்ந்து அவனை உயர்த்திப் பேச, பெரிதுவக்கும் நிலையில் வேல்ச்சாமி இல்லை. உள்ளே வந்து ஆவுடையை காய்ச்சிக் கொண்டிருக்கிறார்.
“பள்ளிக்கூடத்துக்கு ஓடு போட்டுத் தர்றேனு சொல்லியிருக்கான்டீ. போர் போட்டு மந்தையில தண்ணித்தொட்டி வேற கட்டித்தரப்போறானாம். இவனுக்கு எதுக்கிந்த வேண்டாத வேலை. போதாக்குறைக்கு கோயில் திருப்பணியவேற ஆரம்பிக்க சொல்லியிருக்கான். இதெல்லாம் அரசாங்கம் பாக்காதா?” என்றவரிடம்,
“புண்ணிய காரியம்தான பண்றான். தர்மம் தலை காக்கும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க!” என வேதாந்தம் பேச,
“அதே பெரியவங்கதான் தனக்குப் பின்தான் தானமும் தர்மமும்னும் சொல்லியிருக்காங்க. இப்படிதான் எங்க பாட்டன், முப்பாட்டெனெல்லாம் கூறுகெட்டத்தனமா அள்ளி எறச்சுட்டு போயிட்டாங்க.”
“நீங்களே சொல்றீங்க கூறுகெட்டத்தனமான்னு. உங்க பாட்டன் பூட்டனெல்லாம் அப்படியிருந்தா எம்பிள்ளையுமா அப்படி இருப்பான்.” சந்தடி சாக்கில் ஆவுடையும் இடித்துரைத்தது மேலும் கோபமூட்டியது.
“ஆத்துல போட்டாலும் அளந்து தான்டீ போடணும். அந்த பள்ளிக்கூடம் கட்ட இடம் கொடுத்ததே எங்க முப்பாட்டன் காலத்துலதான். கடைசில இந்த ஊர்ல கையகல எடம்கூட நமக்குனு இல்லாமப் போச்சு. உம் புள்ளயும் அப்படித்தான் ஏமாளி பொழப்பு பொழைக்கப்போறான்.”
எங்கே தன் முன்னோர் செய்த தவறை மகனும் செய்துவிடுவானோ என்ற பயம் அவருக்கு. மூன்று தலைமுறைக்கு முன்புவரை கூட இந்த ஊரில் பெரிய மிராசுதாரர் குடும்பம்தான் இவர்களுடையது. கட்டிக் காப்பாற்றத் தெரியவில்லையோ என்னவோ, காற்றில் வைத்த கற்பூரம் போல, நிலம் நீச்செல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுப் போக, வேல்ச்சாமி தலைமுறையில் மிஞ்சியது காரைவீடும், பெரியதனக்குடும்பம் எனும் வெற்றுக் கௌரவம் மட்டும்தான். அதை வைத்து என்ன செய்யமுடியும். மீசையை நீவிக்கொண்டு பஞ்சாயத்தில் வேண்டுமானால் கெத்தாக நியாயம் வளக்கலாம். பரம்பரையாக வாழ்ந்த காரை வீடும், கடைசியில் மகனின் வழக்கு செலவிற்கென கைவிட்டுப் போயிற்று. அப்படியிருக்க இப்பொழுது மகனும் தன் முன்னோர் வழியைப் பின்பற்றி பள்ளி, கோவில் என சொத்தை விரயம் செய்வதாகப்பட்டது.
“அன்னைக்கி அவங்க பண்ணின புண்ணியம் தான் இன்னைக்கி நாம நல்லாருக்கோம். என்ன பண்ணனும்னு உங்களைவிட அவனுக்கு நல்லாவே தெரியும். காரணமில்லாம அவன் எதையும் செய்ய மாட்டான். ரெண்டு போகம் நல்லா வெளஞ்சா போதும். ஊருக்கே படியளப்பான் என் மகன்.” மகனுக்கு ஆவுடை வீசிய வெண்சாமரத்தில் வேல்ச்சாமி கோபம் கொழுந்துவிட்டு எரிந்தது.
“நல்லா அளப்பான் உம்மகன். உழுதவன் கணக்குப் போட்டா உழக்கு கூட மிஞ்சாது. இதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகும்னு தெரியுமா? இன்னும் மோட்டார் கரண்டு வாங்காம இருக்கு. அதுக்கு வேற டெபாசிட் கட்டிவைக்கணும்” என எகிறிக் கொண்டிருக்க, டீசல் மோட்டாரை ஸ்டார்ட் பண்ண சாவியை மறந்துவிட்டுச் சென்றவன், அதையெடுக்க வீடுவர, வந்தவன் காதுகளில் அவர் கேட்டது தெளிவாக விழுந்தது.
“என்னப்பா தெரியனும்?” என கேட்டுக்கொண்டே உள்ளே வந்தான்.
இதுவரை மனைவியிடம் வேப்பிலை இல்லாமலே சாமியாடியவர், மகனைக் கண்டதும் மலையேறிய சாமியாடி போல கப்சிப்பென அடங்கிவிட்டார். தலைக்கு மேல் வளர்ந்த பிள்ளை என்ற மரியாதை மட்டுமில்லை. இத்தனை வருடங்களாக சிறையில் வாழ்நாளை கழித்துவிட்டு வந்த மகனின் ஆசை எதற்கும் அவரால் குறுக்கே நிற்க முடியவில்லை. அதட்டி மறுத்துப் பேசமுடியாத பிள்ளை பாசமும் தான். பாசம் கழுத்தளவு இருந்தாலும், கௌரவம் தலைக்கு மேல் விஞ்சி நிற்கிறது. அதனால் தான் அழகி விஷயத்தைக் கூட, வேலியில் போட்ட சேலையைப் போல் நாசுக்காக கையாள நினைக்கிறார். அவரால் உறுதிப் படுத்தவும் முடியவில்லை. மகனின் நடவடிக்கைகளை வைத்து அப்படியெல்லாம் இருக்காதென தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. பின்புறமாகக் கையைக்கட்டிக் கொண்டு விரைப்பாக முகட்டுவலையைப் பார்த்து நின்றவரிடம், பள்ளிக்கூடம் கூரைமாற்றும் செலவு, தண்ணீர் டேங்க் கட்டும் செலவு என நீள, அகலம், உயரம் என கணக்குப் போட்டு, அவர் இன்ஜினியரிடம் கொடுத்து வாங்கும் தோராய செலவு மதிப்பீட்டை வாய் கணக்காகவே சித்தன் சொல்ல மகனைப் பார்த்து மலைத்து நின்றார் வேல்ச்சாமி. இன்ஜினியரே இரண்டு நாட்கள் காலக்கெடு கேட்பார். கணக்குப்போட்டு சொல்ல. மூன்று வருடமாக தன்னுடன் வந்தும் தொழில் புரியாமல் இருக்கிறானே என வேல்ச்சாமி தனக்குள் நொந்து கொண்டிருக்க, அவனுக்கு தொழில் பிடிபடாமல் எல்லாம் இல்லை. பிடித்தமில்லாமல் இருந்திருக்கிறான் என இப்பொழுது தான் புரிந்தது. மணல், ஜல்லி, சிமெண்ட் கலவையை விட, கலப்பையிலும், செம்மண் புழுதியிலும், கரிசல்மண் சேற்றிலும் தான் தன்னோட உயிர்ப்பு என காட்டினான். அதற்கும் மேலாக அவன் மீது ஒருத்தி வைத்திருந்த அளவில்லா நேசம், மீண்டும் இவ்வூருக்கு அவனை கட்டியிழுத்து வந்ததோ என்னவோ?
வேல்ச்சாமிக்கு, ஆகாத மருமக கை பட்டா குத்தம். கால் பட்டா குத்தம் எனப்பார்க்கும் மாமியார் மனநிலையில் தான் மகனைப் பார்த்தார். அவருக்கு கோபம் மகன் மீதோ, மகன் செய்யும் செயல்கள் மீதோ இல்லை. இன்னும் ஊருக்காக எது செய்தாலும் அவருக்கு சம்மதமே. மகனின் எண்ணப்போக்கு மீது தான் வெறுப்பு. லட்சங்கள் கொட்டிக் கொடுக்கும் தொழிலை கவனிக்காமல், இங்கு வந்து எதற்கு மண்ணைக் கிண்ட வேண்டுமென்ற ஆத்திரம். அவருக்கடுத்து அவன் தானே தொழிலை எடுத்து நடத்த வேண்டும். அதற்கு மெட்ராஸில் இருந்தால் தானே சரிப்பட்டு வரும். மேலும் அவனின் விருப்பம் வேறு உறுதிப்படுத்த முடியாமல் பூடகமாக அவருக்கு தெரிகிறது. அவரது எதிர்பார்ப்பிற்கு துளியும் பொருந்தாத இடம். மகனின் விருப்பத்திற்கு மறுத்துப் பேசவும் முடியாது. என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். அவனே முன்வந்து ஏதாவது சொல்லும் முன் இவனுக்கு கல்யாணத்தை முடித்துவிட வேண்டும் என முடிவு செய்தார்.
முதலில் இவனை இங்கிருந்து கிளப்ப ஏதாவது வழி கிடைக்குமா என ஆராயத் தொடங்கியது வேல்ச்சாமியின் வியாபார மூளை.
“அப்பா… நான் பள்ளிக்கூடம் கூரை மாத்துறதையும், தண்ணி டேங்க் கட்டித்தர்றேனு மட்டும் தான் சொல்லியிருக்கேன். அதுக்கும் பஞ்சாயத்து மூலமா மனு எழுதிப் போட்டிருக்கு. அது வர்றப்ப வரட்டும். கோவில் காரியம் ஒருத்தர் மட்டுமே எடுத்துப் பண்ணக்கூடாது. ஊர்ல வசூல் பண்ணி உங்களால முடிஞ்சதப் பாருங்க. பத்தும் பத்தாததுக்கு நான் தர்றேனுதான் சொல்லியிருக்கேன்.”
என்றவன், சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட, இந்த விளக்கம் போதுமா எனும்படி ஆவுடை பார்த்துவிட்டு வேலையைத் தொடர கையறு நிலையில் வேல்ச்சாமி நின்றார்.
***
“ஆவுடை!”
யானை கண்ட சிறுபிள்ளைபோல் குதூகலமாக வாசலிலிருந்தே அழைத்துக் கொண்டு பொன்னுத்தாயி உள்ளே வர, அவரைப் பார்த்த ஆவுடையும் துள்ளாத குறையாத ஓடிவந்து கைகளைப் பிடித்துக் கொண்டார். ஆவுடை வந்திருப்பது கேள்விப்பட்டு பொன்னுத்தாயி ஆர்வமாக பார்க்க வந்தவர், வீடு பால் காய்ச்சுவதால் உப்பும் மஞ்சளும் வாங்கி வந்திருந்தார்.
“என்னடீ இப்படி ஆகிட்ட?” தோழியைப் பார்த்த சந்தோஷத்தில் கண்கலங்க,
“எனக்கென்ன… எப்பவும் போலத்தான் இருக்கேன்” என்றார் வாயெல்லாம் பல்லாக. இருவருக்கும் ஒரு வயதுதான். மனதிற்குள் மகனைப் பற்றிய கவலை இருந்தாலும், நாளுக்கு நாள் வளர்பிறை கண்ட வசதியும் அந்தஸ்த்தும் ஆவுடையை இன்னும் கட்டுக்கோப்பாகக் காட்ட, வறுமையும், கவலையும் பொன்னுத்தாயின் வயோதிகத்தை வயதுக்கு மீறி காட்டியது.
இத்தனை வருடம் கழித்து பார்த்துக்கொண்ட பால்ய கால சிநேகிதிகளுக்குள் பேச மலையளவு விஷயங்கள். பேச்சு எங்கெங்கோ சுற்றி அழகியிடம் வந்து நின்றது.
“கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத. அதென்ன பெரியவள வீட்ல வச்சுக்கிட்டு சின்னவளுக எல்லாத்துக்கும் கல்யாணம் முடிச்சுருக்க?” மனது பொறுக்க மாட்டாமல் கேட்டவரிடம்,
“என்னை என்னடீ பண்ணச்சொன்ன? கழுத்துப் புருஷனும் போயி, வயித்துப் புருஷனும் போயி கொஞ்ச நாளா புத்தியும் பேதலிச்சு போயி திரிஞ்சேன். எம்பிள்ள மட்டும் இல்லைனா நாங்கெல்லாம் நாதியத்துப் போயிருப்போம்டீ” என்றவர் கண்கள் கலங்க முந்தானை எடுத்து துடைத்துக் கொண்டார்.
ஊருக்கே கறுப்பு தினமான அன்று, யார் நிலமை எப்படி என கண்டுகொள்ளும் நிலையில் யாரும் இல்லை. யார் யாரை துக்கம் விசாரிப்பது. ஆவுடைக்கும் பிள்ளையும் இழந்து, மகனும் கொலைகாரனாக சிறை சென்றுவிட, அந்த கவலையிலேயே ஊருக்குள் நடந்த விஷயங்கள் கவனத்தில் வராமல் போயிற்று. பொன்னுத்தாயிக்கு அதிர்ச்சியில் நிதானமிழந்து புத்திபேதலித்துப் போனது ஆவுடைக்கு தெரியாது. பிறகு ஏதேதோ வைத்தியம் செய்த பிறகே கொஞ்சம் புத்தி தெளிந்தது.
“இதுல கடன் வேற ஏறிச் போச்சு ஆவுடை. எல்லாம் பென்னம்மா அத்தைகிட்ட வாங்குனதுதான். ஒனக்குதான் அதப்பத்தி தெரியுமே?” என அங்கலாய்க்க,
ஆவுடை, “அறுத்த கைக்கு சுண்ணாம்பு தரமாட்டாளே மகராசி?” என்றார் தன் தோழியின் நிலையறிந்து ஆற்றமாட்டாமல்.
“என்ன பண்றது. அந்த மாதிரி ஆளுககிட்டதானே காசு பணம் சேருது. கடனையும் அடைக்கணும். பிள்ளைகளையும் பாக்கணும். துணி விலகுற நிதானம் கூட இல்லாமக்கிடந்த எனக்கும் பெத்தவளாயிருந்து அழகுதான் எல்லாத்தையும் கரையேத்தினா. நானும் வீட்டாளாப் போயிட்டே. எம் புத்தியும் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்கறதில்ல. என்னையும் வேலைக்கும் போகவேண்டாம்னுட்டா. ஆம்பள மாதிரி அத்தனையும் தாங்கினா ஆவுடை” என்றதை கேட்டவருக்கும் மனம் கணத்துப் போயிற்று. அந்த வயதில் அத்தனையும் தாங்கிப் பிடிப்பதென்றால் எத்தகைய நெஞ்சுரம் வேண்டும். அதனால் தான் அத்தனை இறுகிப் போனாளோ என்னவோ?
தோழி என்ற உரிமையிலும், அழகி மீது கொண்ட பாசத்திலும், “அதுக்குன்னு அப்படியே விட்டுருவியா? கன்னிப் பொண்ண இப்படி வீட்ல வச்சுருக்கலாமா?” உரிமையாக கேள்வி கேட்க,
“நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன் ஆவுடை. பாவிமக என்னத்த மனசுல வச்சுருக்காளோ தெரியல. ஒரேடியா மறுத்துட்டா. எதுக்கும் சரி கொடுக்கல. வந்த நல்ல மாப்பிள்ளைகளை எல்லாம் தங்கச்சிகளுக்குப் பேசி முடிச்சு வச்சுட்டா. இப்ப இத்தன வயசுக்குப் பின்னாடி ரெண்டாம்தாரமாத்தான் வருது. கூனோ, குருடோ… நொண்டியோ, மொடமோ… ஏதாவாதொன்னு நமக்குன்னு இருந்தா தான் மரியாதைன்னு எவ்வளவோ கெஞ்சிப் பாத்துட்டேன். எதுக்கும் அசைவேணாங்கறா” என்ற பொன்னுத்தாயை,
“அழகிக்கு என்னடீ கொறச்சல். அன்னைக்குப் பாத்த மாதிரியே தான் இன்னைக்கும் செப்புச் சிலையாட்டமிருக்கா. அவளுக்குப் போயி கூனோ குருடோ கட்டி வக்கணும்கற” என அதட்ட,
“என்ன பண்ணச்சொன்ன? இப்ப தான் கொஞ்ச நாளா அவகிட்ட ஒரு மாற்றம் தெரியுது ஆவுடை. அவங்க அப்பா போன நாள்லருந்து அழகி இப்படி சிரிச்சுப் பேசி நான் பாத்ததேயில்ல. மல்லுக்கட்டினாலும் புதுசு கட்டாதவ, இந்த வருஷம் தீபாவளிக்கு புதுச்சேல எடுத்திருக்கான்னா பாத்துக்கோயேன். எனக்கென்னமோ இப்ப கல்யாணப் பேச்செடுத்தா சம்மதிப்பானு தோணுது. நீயும் கொஞ்சம் அவகிட்ட பேசிப்பாறேன்” என தோழியை தன்மகளிடம் பேசச் சொல்ல, அதற்குள் பேசிக் கொண்டே சமையலும் முடிந்திருந்தது.
சீக்கிரம் சமையல் முடிய, வெளித்திண்ணைக்கு வந்தனர் இருவரும். நடுவில் காலியிடம் விடப்பட்ட அந்தக்காலத்து ஓட்டுவீடு. திண்ணையில் தூக்குச்சட்டியைப் பார்த்தவர், யாருக்கென கேட்க, அழகி காலையில் சாப்பாடு எடுத்து வரவில்லை என கூற, என்ன சாப்பாடென திறந்து பார்த்தார் ஆவுடை.
“பொன்னுத்தாயி, நீச்சத்தண்ணியும் சோறுமா?” என ஆர்வமாகக் கேட்க,
“என்னடீ… கரிகஞ்சியக் கண்டதாட்டம் இப்படி பறக்குற”
“அதெல்லாம் வெறுத்துப் போச்சு. இன்னைக்கு நான் இந்த கஞ்சியக் குடிச்சுக்கறேன். அழகிக்கு சுடு சோறு கொண்டு போ!”
“என்னடீ பழைய சோத்துக்கு ஆளா பறக்குற?” என சிரித்தார் பொன்னுத்தாயி.
“என்ன பண்றது குக்கர் சோத்துல இந்த ருசி வராதுல. என்னதான் சொல்லு வடிச்ச கஞ்சி வெளாவின நீச்சதண்ணி சோறு மணமே தனிதான்” என்றவர், தூக்கு வாளியிலிருந்த கஞ்சியை வேறு கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு சுடு சோறும் குழம்பும், வெஞ்சணத்தோடு போட்டுக் கொடுத்தார்.
மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தான் சித்தன். அவனைப் பார்த்தவர், “எல்லாரும் சாப்பாட்டுக்கு வந்துட்டாங்க போல” என தூக்கு வாளியை எடுத்துக்கொண்டு எழ, பொன்னுத்தாயையும் மல்லுக்கட்டி சாப்பிட வைத்தே அனுப்பினான் சித்தன்.
“இதென்ன பொன்னுத்தாயி பானையோட வந்திருக்க?” என கேட்க,
“நல்ல தண்ணி இங்கிருந்து தான் எடுத்துட்டு போகணும் ஆவுடை.” என்றார்.
“ஏன்? ஊர் பொதுக்கேணி என்னாச்சு? எம்பூட்டு தூரம் சுமக்கறது. உன்னால முடியுமா?” கரிசணையாய் கேட்க,
“நம்ம நல்லம்மா கெழவியிருக்கே அதுக்கு எத்தன வயசிருக்கும்? எம்பதாவது இருக்கும்ல. அதுவே இங்கிருந்து தான் தண்ணி சுமக்கும். பொதுக்கெணறு யாரும் தண்ணியெடுக்காம தூந்து போச்சு தெரியாதா?”
“ஏன்?” என புருவம் சுருக்கினார் ஆவுடை.
“என்ன இப்படி கேக்குற? அன்னைக்கு பூச்சி மருந்து கலந்து, மீந்து போன மாவ அந்த கெணத்துலதானே கொட்டினாங்க. அதுலருந்து யாரும் அதுல தண்ணி எடுக்கறதில்ல. கிணறும் புதரு மண்டி தூந்து போச்சு. நல்ல தண்ணி கிணறுன்னா, இந்த கரட்டடிவாரம் தான். பொதுக் கெணத்தையும் சித்தன் தான் தூரு வாரினாப்ல. ஆனா இம்புட்டு நாளா பொழங்காத கெணறு. தண்ணி உப்புத்தண்ணியா போச்சு. வீட்டு பொழக்கத்துக்கு வேணா ஆகும். குடிக்க, சமைக்க கரட்டடிவார தோட்டத்து கெணறுதான். இதுல பருப்பு வேகப்போட்டா தான் வேகும். எல்லாரும் இம்புட்டு தூரம் தண்ணி சுமக்குறதப் பாத்துட்டு சித்தன் தான், தண்ணி டேங்க் கட்டி, ஊருக்குள்ள நல்லதண்ணி கொண்டுவர ஏற்பாடு பண்றேனு சொல்லிருக்காப்ல” என பொன்னுத்தாயி சொன்னதைக் கேட்டவருக்கு இப்பொழுதுதான் சித்தன் ஊருக்கு டேங்க் கட்டிக் தருவதில் மும்முரமாக இருப்பது ஏனெனப் புரிந்தது.
தாயைப் பழித்தாலும் தண்ணீரை பழிக்கக் கூடாது. ஊருக்கே தாகம் தீர்த்த கிணறு, தூர்ந்து போனதில் ஆவுடைக்கும் மனம் அடித்துக் கொண்டது. அவர்களுக்கும் அதற்கும் எந்த வகையிலும் சம்பந்தமில்லைதான். இருந்தாலும் மனம் கேட்கவில்லை. எவனோ வைத்த தீயில் இவர்கள் வீடும் தானே பற்றி எறிந்தது. இருந்தாலும் மகன் செய்ய நினைத்த நல்ல காரியத்தை எண்ணி பூரித்துப் போனது ஆவுடைக்கு. இவர்கள் பேசியதை கேட்டு கொண்டிருந்த வேல்ச்சாமியை அர்த்தத்தோடு திரும்பிப் பார்த்தார். எம்மகன் காரணமில்லாமல் எதையும் செய்யவில்லையென.
“எப்பவும் அழகி வரும்போது தண்ணியெடுத்துட்டு வருவா. இன்னைக்குதான் அங்கதானே போறோம்னு நானே எடுத்துட்டு வந்தேன்” என்றவர் சாப்பாட்டை எடுத்துக் கொண்டு வயலுக்கு சென்றார்.
***
மதியம் மூவரும் சாப்பிட்டு முடிக்க, “சரண்யாவுக்கு தலதீபாவளி சீர் கொடுக்கணும். நீயில்லாம எப்படி சித்தா. நீயும் எங்ககூட வா!” என சித்தனை தங்களோடு ஊருக்கு அழைத்தார்.
“நானெதுக்குப்பா. இங்க வேலையிருக்கு!”
“தீபாவளி நேரத்துல என்னடா வேல.”
“அப்பதான் கெணத்துக்கு வெடி வைக்கலாம்னு இருக்கோம்ப்பா.”
“அதெல்லாம் வந்து பாத்துக்கலாம். தீபாவளி சீர் கொடுக்க மச்சான் வேணாமாடா?” என அவனை இங்கிருந்து கிளப்புவதில் மும்மரமாக, ஆவுடையும் மகனிடம் வரச்சொல்லி கட்டாயப் படுத்தினார். இத்தனை வருடங்களாகத்தான் திருநாள் எல்லாம் மகனில்லாமல் வெறும்நாளாகப் போயிற்று. இப்பொழுது கூட மகன் உடனில்லாமல் போனால் எப்படி? அதுவும் சரண்யாவிற்கு தலைதீபாவளி. மகனில்லாமல் எப்படி என கேட்க அவர்களுடன் மெட்ராஸ் வர சம்மதித்தான்.
அடுத்து இரண்டு நாட்களில் கிளம்ப வேண்டும் என வேல்ச்சாமி நிற்க, நீங்க முன்னாடி போங்க, இந்தவாரம் கூலி கொடுத்துவிட்டு தான் வருவதாகச் சொல்லியும் கேட்கவில்லை.
எப்படியும் இன்னும் ஒருவாரம் நடவு வேலையிருக்கும்.
வயலுக்கு வருபவள் ஆவுடையைப் பார்த்து பேசிவிட்டுதான் செல்வாள். அன்றும் அதே போல் நடவு முடிந்து பொழுதுசாய, வீட்டிற்கு கிளம்பியவள், பானை, குடத்தோடு கிணற்றடி வர, ஒரு பையை சித்தன் அவள் கையில் கொடுத்தான். என்னவென பிரித்துப் பார்த்தவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய, அவனை கேள்வியாக ஏறிட்டுப் பார்த்தாள்.
“நாளைக்கி ஊருக்குப் போறோம். இந்த வாரம் கூலி. நீயே கணக்குப் பாத்து எல்லாருக்கும் கொடுத்துரு!” என்றவனிடம்,
“இவ்ளோ பெரிய தொகை. நானெப்படி?” என தயங்க,
“பழகிக்கோ!” என்றவனை கேள்வியாக ஏறிட்டாள்.
“…”
“நீ தானே கங்காணி. அப்ப நீதானே எல்லாத்தையும் பாக்கணும்” என அவளது பார்வைக்கு பதில் சொல்ல,
‘ஹோஓஓ… கங்காணியா’ என்றது உள்மனம்.
“அதில்ல… முருகேசன்கிட்டயே கொடுக்க வேண்டியதுதான?” என தயங்கி இழுக்க, அவளுக்கு இவ்வளவு பெரிய தொகையை தானெப்படி கையாளுவது என தயக்கம் ஒருபுறம். சித்தன் ஊருக்கு வரும் முன் முருகேசன்தான் கணக்குப் பார்த்து கூலி கொடுத்தது. அவன் ஏதாவது நினைத்துக் கொள்வானோ என்ற சங்கட்டம் ஒருபுறம்.
இதுநாள் வரை ஆள் கூட்டிச் செல்பவள் தான் கூலியும் கணக்குப் பார்த்து வாங்கிக் கொடுப்பாள். அதெல்லாம் பத்து, இருபது ஆட்களுக்குள். இந்த மாதிரி ஐம்பது, நூறு என்றெல்லாம் ஆட்களுக்கு கணக்குப் பார்த்து கூலி கொடுத்ததில்லை.
“ஏன் கணக்குப்பண்ணத் தெரியாதா?”
என நக்கலாக கேட்டவனை, முறைத்துப் பார்க்க,
“இல்லயில்ல… கணக்கு பாக்க தெரியாதான்னு கேட்டேன். அவசரத்துல நாக்கு உழறிருச்சு” என வில்லங்கமாக சிரித்து வைத்தான்.
“நாவடக்கம் முக்கியம். அதுவும் பொம்பளைகிட்ட பேசும்போது.”
“பொம்பளையா… யாரிங்க?” என சுற்றும்முற்றும் பார்த்தவன், “யாரிருக்காங்கனு கூட அக்கம்பக்கம் பாக்காம பேசறவங்க எல்லாம் நாவடக்கம் பத்தி பேசக்கூடாது” என நையாண்டி செய்ய, அன்று இவள் பேசியதைத்தான் கிண்டல் செய்கிறான் எனப் புரிய,
“இல்ல… முருகேசன் ஏதாவது நெனச்சுக்கிட்டா…” என பேச்சை மாற்றினாள்.
“அவனெல்லாம் ஒன்னும் நினைக்க மாட்டான். உங்கிட்ட கூலி கொடுக்கச் சொன்னேன்னு தெரிஞ்சா இன்னும் சந்தோஷப்படுவான்” என்றவன் முகத்தில் கள்ளப்புன்னகை. “முருகேசனும், சுமதியும் என்னோட மெட்ராஸ் வர்றாங்க. எத்தனை நாளைக்குதான் கோயில், குளம், அரசமரம்னு விரதம் இருப்பாங்க. ஆஸ்ப்பத்திரியில பாக்கலாம்னு நான் தான் ரெண்டு பேரையும் மெட்ராஸ் கூட்டிப் போறேன்.” சித்தன் கூறியதை கேட்டவளுக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி.
“ஆஸ்ப்பத்திரியில பாத்தா சீக்கிரம் அவங்களுக்கு கொழந்தை பொறக்குமா?” ஆர்வமாக கண்கள் விரிய, சிரிப்போடு கேட்டவளிடம்,
“சிகிச்சை பாத்தா கண்டிப்பா பொறக்கும். மொதல்லயே பாத்திருக்கணும். இதுவே லேட்டு.”
“எங்க… சுமதி மாமியா ஒரு வருஷம் கூட அவங்கள நிம்மதியா விடல. கோயில், குளம்னு இழுத்தடிச்சிருச்சு. அவங்களுக்கு மட்டும் குழந்தை பிறந்தா அத்தை சீர் முதல்ல நான்தான் செய்வேன்னு முருகேசன்கிட்ட சொல்லியிருக்கேன்.” இப்பவே அவர்களுக்கு குழந்தை உண்டானதைப்போல, சிறு பிள்ளையாக குதிக்காத குறையாக முகம் மலர சிரித்தவளிடம்,
“அப்ப கண்டிப்பா மாமன் சீர் நான்தான்” என்றவனை உதடு சுழித்துப் பார்க்க, அந்த உதட்டு சுழிப்பில் தொக்கி நின்றது சித்தனின் பார்வை. அவன் பார்வை போகும் போக்கைப் பார்த்தவள், பணப்பையை குடத்திற்குள் போட்டுவிட்டு, பானையில் மட்டும் பம்ப் செட்டில் தண்ணீர் பிடித்துக் கொண்டவள், இடுப்பில் சொருகியிருந்த முந்தானையை எடுத்து சும்மாடு சுருட்ட,
“துண்டெல்லாம் வச்சுக்க மாட்டியா? எப்ப பாரு முந்தானையவே சும்மாடு சுருட்டுற?”
“ஏன், அதுல உங்களுக்கென்ன கஷ்ட்டம்?” என கழுத்தை வெட்டி நொடிக்க,
“அது சுமக்க வேண்டியது பானைய இல்ல” என்றவன் பார்வையில் குறும்புத்தனம் கொட்டிக் கிடந்ததைப் பார்த்தவளுக்கு படபடத்து வந்தது. கருக்கல் பொழுது. வயல் தழுவி வந்த ஈரக்காற்றில் மேனி சிலிர்க்க, மயிலிறகாய் அவன்பார்வை பின் கழுத்தை வருட, எதிர்காற்றில் விர்ரென சுற்றும் பனங்காத்தாடியாய் மனம் பரபரக்க, உள்ளங்கையில் சுற்றும் பம்பரமாய் அடிவயிற்றில் பிரளயம் கிளம்ப, சீக்கிரம் இங்கிருந்து கிளம்ப வேண்டுமென உள்மனம் எச்சரிக்க, வேகமாக பானையைத் தலைக்குத் தூக்கியவள் தடுமாற, பானைக்கடியில் கைகொடுத்து தலைக்கு தூக்கி விட்டவன், பணமிருந்த வெறும் குடத்தையும் எடுத்து இடுப்பில் வைத்துவிட, நுனி விரல் இடை தீண்டியதில் சடுதியில் கொதித்துப் போனாள் பாதகத்தி.
இத்தனை வருடம் கட்டிக்காத்த பெண்மைக்கே உரிய எச்சரிக்கை உணர்வில், வேகமாகத் திரும்பியதில், பானைத் தண்ணீர் தளும்பி சிதறியதில், நனைந்தவன் மனம் குளிற, தொண்டை வரண்டு அவளையே புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தான் தணிக்க முடியாத தாகத்தோடு.
செப்புக்குடம் தூக்கிப்போற
செல்லம்மா ஆ..ஆ..
நான் விக்கிப்போறேன்
தாகத்திலே நில்லம்மா
நான் விக்கிப்போறேன்
தாகத்திலே நில்லம்மா..
கக்கத்தில வைச்ச குடம்
செல்லையா ஆ ஆ..
இது கண்டவங்க
தாகத்துக்கு இல்லைய்யா
இது கண்டவங்க
தாகத்துக்கு இல்லைய்யா ஆஆ..
இருவரும் சிரித்துப் பேசியதையும், அவன் பணம் கொடுத்ததையும், பானை தூக்கிவிட்டதையும் விஷமத்தோடு பார்த்து நின்றன இரண்டு கண்கள்.

Semma interesting ha irukku
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫